கவிதை திறனாய்வு – ஆகாயம் ஆன்மாவைக் காத்திருக்கும் இரவு

0

ரிஷான் ஷெரீஃபின் கவிதை 

ஆகாயம் ஆன்மாவைக் காத்திருக்கும் இரவு

 

     உங்கள் இதழில் ரிஷான் ஷெரீஃபின் கவிதை நவீனத்துவத்தின் வீச்சுடன் பதிவாகி இருக்கிறது. முதலில் கவிதையை வாசிப்போம்:

கறுத்த கழுகின் இறகென இருள்

சிறகை அகல விரித்திருக்குமிரவில்

ஆலமரத்தடிக் கொட்டகை மேடையில்

ரட்சகனின் மந்திரங்கள் விசிறி

கிராமத்தை உசுப்பும்

சிக்குப் பிடித்துத் தொங்கும் நீண்ட கூந்தல்

ஒருபோதும் இமைத்திராப் பேய் விழிகள்

குருதிச் சிவப்பு வழியப் பரந்த உதடுகள்

முன் தள்ளிய வேட்டைப் பற்கள்

விடைத்து அகன்ற நாசியென

நெற்றியில் மாட்டப்பட்ட முகமூடியினூடு

கூத்துக்காரனின் முன்ஜென்மப் பெருந் துன்பம்

சனம் விழித்திருக்கும் அவ்விரவில்

பேரோலமெனப் பாயும்

பச்சைப் பொய்கை நீரின் ரேகைகள்

ஊழிக் காற்றின் வீச்சுக்கேற்ப

மாறி மாறியசையும் அக் காரிருளில்

அவளது உடல்விட்டகழ மறுக்கும்

யட்சியின் பிடியையும் துர்வார்த்தைகளையும்

மந்திரவாதியின் கசையும்

ஆட்டக்காரர்களின் பறையும்

மட்டுப்படுத்தும்

பேரிளம்கன்னியைப் பீடித்துள்ள பிசாசினை

அன்றைய தினம்

குறுத்தோலைப் பின்னல் அலங்காரங்களில்

எரியும் களிமண் விளக்குகளின் பின்னணியில்

அடித்தும் அச்சுறுத்தியும் வதைத்தும் திட்டியும்

துரத்திவிட எத்தனிக்கும் பேயோட்டியைப் பார்த்தவாறு

ஆல விழுதுகளைப் பற்றியபடி காத்துக் கிடக்கும்

பீதியோடு உறங்கச் செல்லவிருப்பவர்களுக்கான

துர்சொப்பனங்கள்

அந்தகாரத்தினூடே

அவர்களோடும் அவைகளோடும்

சுவர்க்கத்துக்கோ அன்றி நரகத்துக்கோ

இழுத்துச் செல்லும் தேவதூதர்கள்

அவளது ஆன்மாவைக் காத்திருக்கிறார்கள்

***

     ஒரு பேரிளம் பெண் திருமண ஏக்கம், உடல் மற்றும் உணர்வுகளின் இயல்பான தாபம், அக்கம்பக்கம், உற்றார் உறவு, சாதி சனம் எல்லோரும் ஏச்சுப் பேச்சு இவற்றால் மன அழுத்தம் அதிகமாகி, ‘சாதாரண’மல்லாத நடவடிக்கைகளைச் செய்யும் போது அவளுக்கு முதலுதவியாக அமைய முடிவது ஆறுதலான ஒரு வார்த்தை. அடுத்ததாக அன்பும் அரவணைப்பும். அதன் பின்னரே தேவைப்பட்டால் மனநல மருத்துவ ஆலோசனை.

     ஆனால் நாம் அவளை என்ன செய்வோம்? அவளுக்குப் பேய் பிடித்து விட்டது என்று போன ஜென்மத்துத் துன்பத்துக்குப் பழி வாங்குகிறானோ இவன் என நாம் மலைக்குமளவு அடித்துக் கொடுமை செய்யும் ஒரு பேயோட்டியிடம் கொண்டு போய் விடுவோம். அவனது அடியில் அனேகமாக அவள் உயிர் நீப்பதே சகஜம். அதன் பின் அவள் சொர்க்கம் போனாலென்ன? நரகம் போனாலென்ன?

     ஒரு பெண் வறுமை, தோலின் நிறம், முகவாகு, உடல்வாகு என எந்தக் காரணத்தினாலும் திருமணம் அமையப் பெறாதவளாக சமூகத்தால் நிராகரிக்கப் படலாம். தனியாக வாழவும் ஒரு பெண்ணுக்கு அனுமதி இல்லை. எனவே அவளைத் திருமணத்திலிருந்து நிராகரித்த அதே சமூகத்தால் சொற்களால் சித்திரவதை செய்யப் படுவாள்.

     விதவையோ பேரிளம் பெண்ணோ அவர்களின் அவலம் நம்மை பாதிப்பதில்லை. அவர்களைப் பற்றிய பொறுப்புணர்வில்லாதோர் தமது மனசாட்சியின் உறுத்தலுக்கு ஆளாவதே இல்லை. அவளுக்கு இன்னும் குரூரமான ஒரு சித்திரவதை மூலம் நிரந்தர மன ஊனமோ அல்லது மரணமோ கூட நிகழ்த்தப்படுவதை நாம் சாட்சிகளாக நின்று பார்க்கிறோம். தேவதூதர்களும் அரூபமாய் அதையே செய்கிறார்கள்.

     பெண்ணின் வலியை ஆண் எழுத்தாளர்கள் ஆழ்ந்த பதிவாக்குவதில் அபூர்வமாகவே வெற்றி பெறுவார்கள். ரிஷானுக்கு அது சாத்தியமாகி இருக்கிறது.

     நவீனக் கவிதையில் ஒரு மந்திரமான பின்புலம் இயல்பாய் விரியும். அதில் நாம் நம்மையுமறியாமல் ஒன்றுமளவு அதன் காட்சிப்படுத்தும் புனைவின் வீச்சு தென்படும். கவிஞர் மறைந்திருக்க கவிதையின் கருவை நாம் மிக ஆழ்ந்தே உள் வாங்குவோம். கவிதையின் காலகட்டத்தைத் தாண்டி அது காட்சிப்படுத்தும் சூழலையும் தாண்டி அது மீறிச் செல்லும்.

     மனித தேவகணங்கள் யாருக்குமே பெண்ணில் வலி அன்னியமானது மற்றும் அலட்சியத்துக்குரியது என்னும் புள்ளியில் கவிதை ஒரு விடைதெரியாத கேள்வியை நமக்கு நினைவு படுத்துகிறது. மானுடத்தின் உள்ளார்ந்த குரூரம் பிரபஞ்சமெங்கும் விரவி நிற்கிறதோ? ஆழ்ந்த கவித்துவ தரிசனமும் கற்பனையும் கொண்ட கவிதையைத் தந்த ரிஷானுக்கு வாழ்த்துக்கள்.

எழுத்தாளர் சத்யானந்தன்

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *