Blog

  • 65 மில்லியன் ஆண்டுக்கு முன்பு பூமியில் நேர்ந்த இருட்டடிப்பும், குளிர்ச்சியும் டைனோசார்ஸைக் கொன்றன.

    aj
    சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear) கனடா
     
     
    ++++++++++++++++++

    வக்கிரக் கோள் வழி தவறி
    வையத்தில் மோதிச்
    சுக்கு நூறாகி, சுற்றுவீதி மாறி
    பிரளயம் நேரும், தட்ப வெப்பம்  மாறும்  !
    பரிதிக்கு அப்பால் நகன்று
    பூமி சூடு தணியும் !
    டைனசார்ஸ் மரித்தன
    நீண்ட இருட்டடிப்புக் குளிர்ச்சியில் !
    புதுவித உயிரினம் தோன்றும் 
    முதல் மானிடம் உதிக்கும்
    டைனசார்ஸ் மீண்டும் தோன்றவில்லை !
    பிழைத்தவை பறவை இனம் !
    பூமியின் ஆட்டத்தில்
    பொங்கி எழுந்தன எரிமலைகள் !
    புவியும் தீக்குளிப்பில்
    புத்துயிர் பெற்று மீண்டது !
    புதிய பயிரினங்கள் தோன்றின !
    “புலர்ச்சி” விண்ணுளவி நாசா ஏவியது
    சூரிய மண்டலத் தோற்றம்
    ஆராய் வதற்கு !
    இரு விண்வெளி விமானிகள்
    2025 ஆண்டுக்குள்
    வக்கிரக் கோள் ஒன்றில்
    வைப்பார்  தடம் !
    வையத்தைத் தாக்க வரும்
    வக்கிரக் கோளைத்
    திக்கு மாற்றித்
    திசை திருப்ப முயல்கிறார்  !

    +++++++++++++++++

    Asteroid impact on Earth -1

    முரண்கோள் ஒன்று தாக்கிய பிறகு, மெக்சிகோ சிக்குலப் [Chicxulub] குழி உண்டானது, புவி வரலாற்றில் ஒரு புதிய திருப்பமாகக் கருதப் படுகிறது. கிரிடேசியஸ் யுகத்தின் [Cretaceous Era] முடிவு காலத்தில், தர்க்கத்துக்கு உள்ளான டைனோசார்ஸ் மரிப்புக்கு உறுதியான காரணத்தைப் புரிந்து கொள்ளப் புதிய ஆய்வுக் காட்சியை இப்போது நாம் பகிர்ந்து கொள்ளலாம்.

    ஜூலியா புரூக்கர் [தலைமை ஆய்வாளர், பாட்ஸ்டம் காலநிலைத் தாக்கம் ஆய்வகம்]

    முரண்கோள் [Asteroids] தாக்கி மூன்று ஆண்டுகளாய், சூரிய வெளிச்சம் தடைப்பட்டு நீண்ட இருட்டடிப்பு நேர்ந்து மெய்யாகப் பூமி குளிர்ந்து, கடுமையாய்க் குளிர்ந்து போனது. பூகோளத்தின் ஆண்டுச் சராசரித் தளவாயு உஷ்ணம் 26 டிகிரி செல்சியஸ் அளவுக்குத் தணிந்தது.  வேனிற் தளங்களில் சராசரி 27 டிகிரி C இருந்து 5 டிகிரியாகக் குறைந்தது.  இப்பெரும் குளிர்ச்சி சுமார் 30 ஆண்டுகள் நீடித்தன.  டைனோசார்ஸ் போன்ற வெப்பச் சூழ்வெளி விலங்குகள் செத்துப் புதைந்தன.

    ஜூலியா புரூக்கர் [தலைமை ஆய்வாளர்

    Dinosaur-extinction-theories-top-ten-large.jpg__800x600_q85_crop

    http://www.youtube.com/watch?feature=player_detailpage&v=0EyDd7rZWnE

    http://science.discovery.com/tv-shows/greatest-discoveries/videos/100-greatest-discoveries-chicxulub-crater.htm

    http://www.space.com/19518-asteroid-will-fly-within-18-000-miles-of-earth-video.html

    http://www.space.com/19637-asteroid-s-alarmingly-close-flight-path-depicted-in-animation.html

    +++++++++++++++++

    Image result for fossil dinosaurs

    65 மில்லியன் ஆண்டுகட்கு முன்பு மெக்சிகோவில் நேர்ந்த பூத முரண்கோள் தாக்குதல்

    65 ஆண்டுக்கு முன்பு திடீரென பூத வடிவான டைனோசார்ஸ் யாவும் மரித்து, சிறிய வடிவான பால்குடி விலங்குகள் தோன்றி, முடிவாக மனித இனம் பெருகி வளர்ச்சி அடைய வழி வகுத்தது.  இப்போது அவற்றை மூலமாய் எடுத்துக் கொண்டு காலநிலை விஞ்ஞானிகள், புதிய கணினிப் போலி இயக்க மாடல்களைத் [Computer Simulation Models] தயாரித்து, எப்படி ஓர் முரண்கோள் தாக்கிச் சூழ்வெளி மண்டலத்தில் ஸல்ஃபியூரிக் அமில நுண்ணிய துளிகள் உண்டாகிப் பல்லாண்டுகள் சூரிய ஒளி தடைப்பட்டு, பூமியில் உயிரினம்  பாதிக்கப்பட்டன என்று ஆய்வு செய்கிறார்.

    Image result for darkness cold killed dinosaurs

    முரண்கோள் மோதலில் பயிரினம் அழிந்தன.  உணவு வளங்கள் சீர் கெட்டன.  முதலில் வெளியான அறிவிப்புகள் முரண்கோள் மோதலில் சிறிது காலம் வெடித்துப் பரவிய தூசி, துணுக்குகளைப் பற்றி மட்டும் குறிப்பிட்டன.  இப்போது [ஜனவரி 2017] புதிய கணினிப் போலி இயக்க மாடல்களில் ஆயும் போது, வெடிப்புத் துளிகள் [Droplets] மூன்றாண்டு நீண்ட காலக் குளிர்ச்சியை விளைவித்தன என்று தெரிகிறது.  அதுவே உஷ்ண நிலைப் பூத விலங்குகளான டைனோசார்ஸ் மரிப்புக்குக் காரணம் என்பது புரிகிறது.  அடுத்த கொல்லி என்ன வென்றால் கடல் நீர் வெள்ளம் கொந்தளிப்புடன் கலந்து, மேற்தளக் குளிர்ச்சி அடைந்து, நச்சுப் பாசானம் சேர்ந்து, கடல்வாழ் உயிரினச் சீர்மைகள்  [Marine Ecosystems] பாதிக்கப் பட்டன என்று அறிகிறோம்.

    Image result for fossil dinosaurs

    சூழ்வெளியில் பரவிய ஸல்ஃபேட் வாயுத்தூள்கள் [Sulphate Aerosols] நீண்ட காலப் பெருங்குளிர்ச்சி விளைந்திடச் செய்தன.  இவையே 3 ஆண்டுகள் சூரிய வெளிச்சத்தைத் தடை செய்து, பூமியை நீண்ட இருட்டடிப்பில் தள்ளி விட்டன.  இந்தச் சூழ்வெளிக் கொந்தளிப்பிலிருந்து வெளிவர சுமார் 30 ஆண்டுகள் ஆயின என்று கூட்டு விஞ்ஞானி ஜார்ஜ் ஃபியூல்னர் கூறினார். அத்துடன் கடல் நீர் வெள்ளச் சுழற்சிகள் பாதிக்கப்பட்டு,  மேற்தள நீர் குளிர்ந்து, கனமாகிக் கீழே செல்ல, சூடான நீர் வெள்ளம் மீனின உணவு வளத்தோடு [Food Nutrients] மேல் வந்தது.  அதுவே திரண்டு நச்சுப் பாசானம் [Toxic Algae] ஆகிப், பல்வேறு கடல்வாழ் உயிரினங்கள் [Like Ammonites] பாதிக்கப்பட்டன.  பூமியில் வலுத்த பயங்கர  டைனோசார்ஸ் மரித்து, பால்குடி விலங்குகள் [Mammals] பிறக்க வழி பிறந்தது.  இறுதியாக ஆற்றல் மிக்க ஆறறிவு மனித இனம் பெருக, முரண்கோள் மோதல் விளைவுகள் பாதை இட்டன.

    Asteroid Impact-1

    மெக்ஸிகோ யூகடான் சிக்செலூப் [Chicxulub, Yucatan, Mexico]  பகுதியைத் தாக்கியதாகக் கருதப்படும், ஆறு மைல் விட்டமுள்ள வக்கிரக் கோள்  பெற்ற பேராற்றல் 100 மில்லியன் மெகாடன் டியென்டி [megatons TNT]வெடிப்பு சக்தி கொண்டது என்று கணிக்கப் படுகிறது.   அந்த வெடிப்பு வெளியேற்றிய அண்டத் துணுக்குகள் கக்கிய “வெப்ப வீச்சலை [Heat Pulse] பூகோளம் முழுவதும் தீப்பற்றி,  கடல்நீர், குகைகள் பாதுகாக்காத, உயிரினப் பயிரின வளர்ச்சிகள் அனைத்தையும் எரித்துப் பொசுக்கி விட்டது.   அவற்றில் எழுந்த “இயக்க சக்தி”  [Kinetic Energy] வெப்ப சக்தியாக மாறி, நீல வானம், செவ்வானமாய்ப் பல நாட்கள் நீடித்திருக்க வேண்டும் !

    டக்ளஸ் ராபர்ட்சன் [தலைமை ஆய்வாளர், பூதளவியல் விஞ்ஞானத் துறையகம்]

    Asteroid impact -3

    65 மில்லியன் ஆண்டுகட்கு முன்பு பூகோளத்தில் நேர்ந்த கோரப் பிரளயம்

    65 மில்லியன் ஆண்டுகட்கு முன்பு 6 மைல் விட்டமுள்ள வக்கிரக்கோள் ஒன்று வழிதவறி பூமியின் கவர்ச்சி ஈர்ப்பில் இழுக்கப் பட்டு, பெரு வேகத்தில் மோதி  யுகப் பிரளயம் நேர்ந்திருக்க வேண்டும் என்பதைச் சமீபத்தில் பூதளவியல் விஞ்ஞானிகள் அழுத்தமாய் நிரூபித்துள்ளார்கள்.   அந்தப் பிரபஞ்ச மோதல் [Cosmic Impact] பூகோளத்தில் ஒரு பெரும் பிரளயத்தை ஏற்படுத்தியது மெய்யென்று பௌதிக விஞ்ஞானி லூயிஸ் அல்வாரஸ், அவரது மகன் பூதளவியல் விஞ்ஞானி வால்டர் அல்வாரஸ் இருவரும் முதன்முதல் அறிவித்தார்கள்.  பின்னால் வந்த பூதளவியல் விஞ்ஞானிகள் மோதல் நேர்ந்த இடம், வட அமெரிக்கா மெக்ஸிகோவில் உள்ள யூகடான் பகுதி நகர்ப்புறம், சிக்செலூப் [Chicxulub, Yucatan, Mexico].  என்று கண்டுபிடித்துள்ளார்கள்.   விழுந்த முரண்கோளின் விட்டம் 6 மைல் [10 கி.மீ] என்று ஒருசிலர் மதிப்பிடுகிறார்.   முரண்கோள் 12 மைல் விட்டம் இருக்கலாம் என்று மற்றும் சிலர் கருதுகிறார்.   மோதலின் தாக்க சக்தி சுமார் :  100 டிரில்லியன் டன் டியென்டி [trillion TNT Power] என்று கணிக்கப் படுகிறது.   அதாவது அணுகுண்டு ஆற்றல் மதிப்பீட்டில் ஒரு பில்லியன் மடங்குக்கு மேற்பட்ட ஹிரோஷிமா-நாகசாக்கி அணுகுண்டு களுக்கு நிகரானது !   அந்தப் பேரடித் தாக்கம் பூமியில் பறித்த குழியின் விட்டம் 110 மைல் [180 கி.மீ]

    Chicxulub Seismic Expt

    65 மில்லியன் ஆண்டுகட்கு முன்பு பூமி மிகவும் சூடாக இருந்து குறிப்பிட்ட டைனசார்ஸ் மிருகங்கள் மட்டும் நடமாடி வந்தன.   அப்போது அந்தக் கடும் வெப்ப யுகத்தில் மற்ற உயிரினங்கள், மனித இனங்கள் எவையும் தோன்ற வில்லை.  முரண்கொள் மோதலும், பூத மிருகங்கள் மரிப்பும் ஒரே சமயத்தில் நேர்ந்திருக்கலாம் என்று யூகிப்போரும் உள்ளார்.   மற்றும் சிலர் சிக்செலூப் மோதல் நேர்ந்ததற்கு 300,000 ஆண்டுகள் முந்தியோ அல்லது  180,000 ஆண்டுகள் பிந்தியோ  டைனசார்ஸ் இனப் பேரழிப்பு நிகழ்ந்திருக்க வேண்டும் என்று கணிக்கிறார்.   ஆராய்ச்சியாளர்  சிலர் தர்க்கத்துக் குரிய மோதல் தளம் : இந்தியாவின்  குஜராத் பகுதியில் உள்ள “சிவா பெருங்குழி”  [Shiva Crater] என்று கூறுகிறார்.   2013 பிப்ரவரி புதிய கதிர்வீச்சளவி கணக்குப்படி [Radiometric Dating]  சிக்செலூப் மோதல் நேர்ந்து,  துல்லியமாக 11,000 ஆண்டுகட்கு மேற்படாமல் டைனசார்ஸ் யுகம் மாறிப் புதைந்து போயிருக்க வேண்டும்  என்று பூதளவியல் விஞ்ஞானிகள் சமீபத்தில் வெளியிட்டு அறிவித்துள்ளார்.

    A miracle event

    [Asteroid 2012 DA14 is about half the width of a football field (150 feet, or 45 meters), and will fly within 17,200 miles (27,700 kilometers) of our planet on Friday, Feb. 15, 2013, zooming closer to the planet than the ring of satellites in geosynchronous orbit.]

    Path of Asteroid

    சிக்செலூப்பில் தூண்டப் பட்ட  பிரளயத்தில் டைனசார்ஸ் இனங்கள் மட்டும் அழிந்து போகவில்லை. 6 மைல் விட்டமுள்ள பூத முரண்கோள் பூமியில் வேகமாய் மோதி  பல்கோடி அணுகுண்டு வெடிப்புச் சக்தி ஆற்றலில் பூமியைப் பரிதிக்கு அப்பால் தள்ளி இடம்மாற்றிப் பிரளயத்தில் தட்ப வெப்ப நிலை கொந்தளித்து, ஏறி இறங்கி, முடிவில் உஷ்ணம் தணிந்துள்ளது.    அந்தக் கொந்தளிப்பில் தப்பியவை பெரும்பாலும் பறவைகளும், கடல்நீரில் வாழும் உயிரினங்களும்  என்பது தெரிய வருகிறது. பிரளய முடிவில் பூமி தீக்குளித்து புதிய தட்ப, வெப்பச் சூழ்நிலையில்  [New Ecosytem]  புது யுகம் தோன்றியது.  பிறகுதான் மனித இனங்கள், புதிய உயிரினங்கள் உதித்தன, பயிரினங்கள் முளைத்தன என்று நாம் கருதலாம்.

     Impact Evidence

    தற்போது நம் கைவசம் இருந்து விருத்தியாகும் விண்வெளிப் பொறியியல் நுணுக்கத்தில், ஓராண்டு விண்வெளியில் பயணம் செய்து முரண் கோள் ஒன்றில் மனிதர் இறங்கும் ஒரு குறிப்பணி நிச்சயம் சாதிக்கக் கூடியது.

    மேஜர் டிமதி பீக் (பிரிட்டிஷ் விண்வெளி விமானி)  (Major Tim Peake,  ESA, European Space Agency)

    முரண் கோள்கள் எப்போதும் நமது பூமிக்கருகில் தாக்க வருகின்றன.   ஆனால் நாம் அவற்றைப் பற்றி அபூர்வமாய்த் தெரிந்து கொள்கிறோம்.   சென்ற ஆண்டு முரண்கோள் ஒன்று பூமியின் புவிச்சுற்று  நிலைத்துவ வீதிக்குள்ளே (Earth’s Geostationary Orbit) சில துணைக் கோள்களுக்கும் கீழே வந்து விட்டது. போதிய எச்சரிக்கைக் காலத்துக்குள், நாமோர் சுயத்தாக்கு விண்ணுளவியை (Robotic Impact Spacecraft) அனுப்பி பூமியை நெருங்கும் முரண் கோளை மோதித் திசையைத் திருப்பி, ஏற்படப் போகும் எதிர்பாராத பிரளயத் தீங்குகளைத் தடுக்க  முடியும். முரண் கோளுக்குப் போகும் அவ்விதக் குறிப்பணி செய்ய நான் விரும்புகிறேன்.   இந்த முயற்சி சீராக முன்னேறினால் 2025 ஆண்டுக்குள்ளே என்னாலோ அல்லது வேறு ஈசா (ESA) விண்வெளி விமானி களாலோ அந்தக் குறிப்பணி நிறைவேறும்.

    மேஜர் டிமதி பீக் (ESA விண்வெளி விமானி)

    ஒளிமந்தையில் (Galaxy)  வாழும் அறிவுசார்ந்த உயிரினத்துக்கு பேரிடர் தரும் பயமுறுத்தல் முரண் கோள்கள் மோதுவதால் நேரப் போவதே !

    ஸ்டீஃபன் ஹாக்கிங்.

    “(முரண்கோள்களில் பனிநீர் உள்ளது) என்னும் கண்டுபிடிப்பால் நமது சூரிய மண்டலத்தின் முரண்கோள் வளைய (Asteroid Belt) அரங்கத்திலே பேரளவு நீர்ப்பனி இருந்திருப்ப தாக எதிர்பார்க்கப் படுகிறது. அக்கருத்து முரண் கோள்கள் பூமியைப் பன்முறைத் தாக்கிப் பேரளவு நீர் வெள்ளத்தைக் கடலில் நிரப்பியது என்னும் கோட்பாடுக்கு ஆதாரம் அளிக்கிறது.  புவியில் உயிரினம் தோன்றவும் விருத்தி அடையவும் முரண்கோள்களின் உள்ளமைப்புப் பொருட்கள் மூலச் செங்கற்களாய் இருந்துள்ளன.”

    ஹம்பர்டோ காம்பின்ஸ், மத்திய பிளாரிடா பல்கலைக் கழகம்

    “முரண்கோள்களில் காணப்படும் உலோகப் பொருட்கள் பரிதிக் கோள்கள் தோன்ற கட்டுமானப் பொருட்களாய் உதவியவை.  முரண்கோள் #2 பல்லாஸ் (Asteroid #2 Pallas), முரண்கோள் #10 ஹைஜியா (Asteroid #10) (Hygiea) ஆகிய இரண்டிலும் விஞ்ஞானிகள் நீர்ப்பனியும், கார்பன் அடிப்படை ஆர்கானிக் கூட்டுகளும் இருப்பதாக நம்புகிறார்.”

    கரோல் ரேமண்டு (Dy Principal Investigator, NASA Dawn Mission

    Arizona Crater

    பூமிக்கருகில் நேரப் போகும் ஓர் அற்புதப்  பயங்கர  விண்வெளி நிகழ்ச்சி 

    2013 பிப்ரவரி 15 இல் சிறிய வக்கிரக் கோள் [Asteroid : 2012 DA14] முதன் முறையாக பூமிக்கு அருகில் 17,000 மைல் தூரத்தில் குறுக்கிட்டுக் கடந்தது செல்லப் போவதாய் நாசா முரண்  கோள்  விஞ்ஞானிகள் பிப்ரவரி 6 ஆம் தேதி அறிவித்துள்ளார்கள்.   இந்த வக்கிரக் கோள் நகர்ச்சியை நாசாவின் துணைக்கோள் [WISE (Wide-field Infrared Survey Explorer) Spacecraft]  தொடர்ந்து கண்காணித்து வருகின்றது.   2011 ஆண்டில் நாசாவின் புவிச்சுற்றி  [NASA Orbiter] பூமிக்கு அருகே சுற்றும் 100 மீடர் (300 அடி) பரிமாணத்துக்கு  மேற்பட்ட  சுமார் 20,500 முரண் கோள்களின் போக்கைக்  கூர்ந்து  நோக்கி வருகிறது.   அவற்றில் குறிப்பாக 100 முரண் கோள்களே பூமிக்கு மிக்க அருகில் நெருங்கி வருவதாகத் தெரிகின்றன. சிறிய வக்கிரக் கோள்  [2012 DA14]  பூமிக்கும் நிலவுக்கும் இடையே 17,000 மைல் தூரத்தில் கடக்கப் போவதாக அதன் சுற்றுப் பாதை கணிக்கப் பட்டுள்ளது.  நிலவு சுமார் 239,000 மைல் தூரத்தில் பூமியைச் சுற்றி வருகிறது.   உலக நாடுகளின் பல்வேறு தொடர்புத் துறை,  கால நிலை அறிவிப்புத் துணைக் கோள்கள் 22,200 மைல் [35,800 கி.மீ.] உயரத்தில் பூமியைச்  சுழலிணைப்புச்  சுற்று வீதியில் [Geosychronous Orbit]  வலம் வருகின்றன.  ஆனால் 17,000 மைல் உயரத்தில் குறுக்கிடப் போகும் சிறிய முரண்கோள் நிலவையோ, பூமியையோ, துணைக் கோள்களையோ  மோதப் போவதில்லை என்று நாசா விஞ்ஞானிகள் உறுதியாக அறிவிக்கிறார்.    இது ஓர் அற்புதப் பயங்கர நிகழ்ச்சி.   இதுவரை நேராத  ஓர் ஆபத்து நிகழ்ச்சி.

    WISE Spacecraftசிறிய முரண்கோள்  [2012 DA14] பூமிக்கருகில் குறுக்கிடும் விந்தை விபரங்கள்

    முரண்கோள்  [2012 DA14] 2.7 மில்லியன் மைல் தூரத்தில் உள்ள போது, 2012 பிப்ரவரி 23 இல் ஸ்பெயின் தேசத்து மல்லோர்கா விண்ணோக்கி ஆய்வுக்கூட விஞ்ஞானிகளால் கண்டு பிடிக்கப் பட்டது.  சிறிய முரண்கோள் 150 அடி அகலமும், 130,000 மெட்டிரிக் டன் எடையும் கொண்டது.   அது பூமிக்கு மிக நெருங்கி வரும் நாள் 2013 பிப்ரவரி 15 ஆம் தேதி.  பூமிக்கு ஒப்பாக அதன் வேகம் : வினாடிக்கு சுமார் 5 மைல் [வினாடிக்கு 8 கி.மீ.] அது கடந்து செல்லும் போது, கிழக்கு இந்து மாக்கடலில் சுமாத்ரா தீவுக்கு அப்பால் தென்படும் என்பது தெரிகிறது. அப்போது அது பூமிக்குச் சுமார் 17,200 மைல் [27,700 கி.மீ.] உயரத்தில் சுற்றிச் செல்லும். துல்லியமாகச் சொல்லப் போனால் முரண்கோள் 17,180 மைலுக்குக் [27,650 கி.மீ.] கீழே நெருங்கி வரப் போவதில்லை என்று அதன் வேகத்தை வைத்து நாசா விஞ்ஞானிகள் கணித்துள்ளார். பூமிக்கும் நிலவுக்கும் இடையே அந்தச் சிறிய முரண் கோளின் குறுக்கீடு 33 மணி நேரங்கள்தான் நீடிக்கும் என்று அறியப் படுகிறது. பிப்ரவரி 16 ஆம் தேதி சிறிய முரண் கோள் பூமிய விட்டு அப்பால் சென்றுவிடும். அந்தக் குறுக்கீட்டின் போது, பூமியிலோ, நிலவிலோ எந்த விதக் “ஒளி மறைப்போ” அல்லது “நிழலடிப்போ” [Eclipse] இருக்காது என்று நாசா முரண்கோள் கண்காணிப்பு விஞ்ஞானிகள் அறிவிக்கிறார்.

    Asteriods -1பூமிக்கு அருகில் சுற்றி வரும் [Asteroid 2012 DA14]  போல் பயங்கரச் சிறிய முரண்கோள்களின் எண்ணிக்கை சுமார் 500,000 என்று நம்பப் படுகிறது.   அவற்றில் 1%  கீழ் எண்ணிக்கை முரண் கோள்கள்தான் இதுவரை கண்டுபிடிக்கப் பட்டுள்ளன  என்று தெரிகிறது.   நாசாவின் புவி அண்டக்கோள் திட்ட விஞ்ஞானிகள் சராசரி 40 ஆண்டுக்கு ஒருமுறை இதுபோல் சிறிய முரண் கோள்கள் பூமிக்கு அருகில் நெருங்குவதாய் மதிப்பீடு செய்துள்ளார்.   அந்தச் சராசரி  மதிப்பீட்டின்படி 1200 ஆண்டுக்கு ஒருமுறை ஒரு சிறிய முரண்கோள் பூமியில் மோதலாம் என்றும் ஊகிக்கப்  படுகிறது. அமெரிக்க, ரஷ்ய, கனடா, ஜப்பான் ஆகிய நாடுகளின்  அகில நாட்டு விண்வெளி நிலையம் பூமிக்கு மேல் 240 மைல் உயரத்தில் சுற்றி வருகிறது.   சிறிய முரண்கோள் பூமியைக் குறுக்கிடும் 17,000 மைல் உயரத்தில் எந்த துணைக்கோளும் இப்போது பூமியைச் சுற்றி வருவதில்லை.   இது போன்ற சிறிய முரண்கோள் ஒன்று பூமியின் மீது மோத நேரிட்டால்,  ஏற்படும் பூமி அதிர்ச்சி சுமார் 2.5 மெகா டன் சக்திக்கு  ஒப்பாகும்.   1908 இல் சைபீரியாவின்  துங்கஸ்கா நதிக் காடுகளில் நேர்ந்த சிறிய முரண்கோள் [சுமார் 100- 130 அடி நீளம்] தாக்கம் 750 சதுர மைல் தகர்ப்பை உண்டாக்கி மட்ட மாக்கி உள்ளது.   அது முரண்கோள் குழுவினரால் “துங்கஸ்கா நிகழ்ச்சி”  [Tunguska Event] என்று  குறிப்பிடப் படுகிறது.  நாசாவின் நியோ திட்ட  விஞ்ஞானிகள்  [NEOO – NASA Near Earth Object Observation Program]  பூமிக்கருகே  வரும்  முரண்கோள்களைத்  தொடர்ந்து  கண்காணித்து  எச்சரிக்கை செய்து வருகிறார்.

     

    Asteroid Impact -2

    (தொடரும்)

    ************************

    தகவல்:

    Picture Credits: NASA, JPL, ESA, JAXA

    1. Mars Exploration Rover Mission [http://marsrovers.jpl.nasa.gov./mission/status.html] (Jan 27, 2006)

    2. Space Today Online – Exploring the Red Planet, Future Mars Probes from Earth

    3 Science & Technology: ESA’s Mars Express with Lander Beagle-2 [Aug 26, 2003]

    4 Future Space Missions to Mars By: European Space Agency [ESA]

    5 http://www.thinnai.com/science/sc0925031.html [Author’s Article on Mars Missions]

    5 (a) http://www.thinnai.com/?module=displaystory&story_id=41006061&format=html (Plasma Rocket Engines)

    6 Spacecraft Blasts off to Gather Mars Data By: Associated Press [Aug 12, 2005]

    7 NASA Facts, Mars Exploration Rover By: NASA & JPL [Sep 2004]

    8 From Wikipedia : Phobos (Mars Moon) (June 2, 2010)

    9 Daily Galaxy : The Mystery of Mars’ Moon Phobos Deepens By : Casey Kazan via ESA (June 7, 2010)

    10 From Wikipedia : Moons of Mars (June 9, 2010)

    11. Space Probe Enthralls Japan, as it Heads Home By : Sagamihara (AFP) June 8, 2010

    12 Scientific American Hayabusa Spacecraft Headed Back Toward Earth, Perhaps with Asteroid Dust in Hand By : John Matson (June 11, 2010)

    13 Space Flight Now – Japan Spacecraft will Plunge Back to Earth Sunday By : Stephen Clark (June 12, 2010)

    14 Wikipedia : Missio Type Asteroid Sample Returned to Earth (June 13, 2010)

    15 Space Flight Now : Hayabusa Completes Fiery Return to Earth (June 13, 2010)

    16 Aviation Week – Japan Hayabusu Spacecraft Capsule Successful Landing (June 13, 2010)

    17. Space Daily : Asteroid SampleReturn Capsule Recovered in Outback Australia (June 14, 2010)

    18 Japan Seeks Guiness Record Listing for Space Probe. (June 15, 2010)

    19. BBC News : Successful Launch for NASA Probe (Dawn) (Sep 27, 2007)

    20 Wikipedea : http://en.wikipedia.org/wiki/Asteroid_belt (July 19, 2011)

    21 BBC News : Dawn Probe Orbits Asteroid Vesta By : Jonathan Amos (July 17, 2011)

    22 Space Flight Now : Dawn Asteroid Explorer Moves into Orbit ar Versa By Stephen Clark (July 17, 2011)

    23 BBC News :  Asteroid Vesta Reveals its Scars By : Jonathan Amos (July 19, 2011)

    24 Daily Galaxy : Was Earth’s Original Water Delivered by Ice-covered Asteroids ?  (July 19, 2011)

    25. Wikipedia – http://en.wikipedia.org/wiki/Ceres_(dwarf_planet) (July 20, 2011)

    26. Wikipedia – http://en.wikipedia.org/wiki/Dawn_(spacecraft) ((July 25, 2011)

    27. Wikipedia – http://en.wikipedia.org/wiki/Colonization_of_Ceres (July 29, 2011)

    28. Space Daily – http://www.spacedaily.com/reports/Dawn_Views_Dark_Side_of_Vesta_999.html (July 29, 2011)

    29.  NASA Trains Astronauts to Land on an Asteroid before 2025  (May 16, 2012)

    30.  http://www.smh.com.au/technology/sci-tech/asteroids-earth-flyby-will-enter-satellite-zone-20130208-2e28j.html   [Asteroid’s Earth fly-by will enter satellite zone]  (Februrary 8, 2013)

    31.  http://www.space.com/19518-asteroid-will-fly-within-18-000-miles-of-earth-video.html  [NASA Discusses Asteroid 2012 DA14 Earth Flyby Today: How to Watch Live]  (February 7, 2013)

    32.  http://www.space.com/19653-asteroid-2012-da14-earth-impact-threat.html   [Next Week’s Asteroid Flyby Shows Earth is in ‘Cosmic Shooting Gallery’ ] (February 5, 2013)

    33.  http://www.upi.com/blog/2013/02/05/Asteroid-DA14-February-15th-flyby-Fear-vs-Fact-VIDEO/4191360083623/  (Asteroid DA14 February 15th flyby Fear vs. Fact [VIDEO])

    34.  http://en.wikipedia.org/wiki/Wide-field_Infrared_Survey_Explorer  WISE Spacecraft  [February 1, 2013]

    35. http://en.wikipedia.org/wiki/Chicxulub_crater  [Chicxulub Crater ] [July 17, 2013]

    36  http://news.nationalgeographic.com/news/2013/13/130214-biggest-asteroid-impacts-meteorites-space-2012da14/?rptregcta=join_free_np&rptregcampaign=20130722_lightbox_membership_nonhp_all_1#finished

    37  http://dsc.discovery.com/tv-shows/other-shows/videos/bad-universe-asteroid-impact-simulation.htm

    38  http://www.livescience.com/26933-chicxulub-cosmic-impact-dinosaurs.html  [February 7, 2013]

    39.  https://www.eurekalert.org/pub_releases/2017-01/pifc-htd011317.php [January 13, 2017]

    39.  http://www.dailygalaxy.com/my_weblog/2017/01/the-asteroid-winter-chicxulub-impact-blocked-sunlight-led-to-extinction-of-dinosaurs.html  [January 16, 2017]

    40. http://www.spacedaily.com/reports/How_the_darkness_and_the_cold_killed_the_dinosaurs_999.html   [January 17, 2017]

    ++++++++++++++++++

    S. Jayabarathan (jayabarathans@gmail.com) (January 22, 2017)

    https://jayabarathan.wordpress.com/

    Attachments area
    Share
  • நலம் .. நலமறிய ஆவல் – (40)

    நிர்மலா ராகவன்

    இடக்கைப் பழக்கம்
    தவறான போதனை?

    நலம்-2-1-1-1-1
    பண்டைய ரோமாபுரி ஆட்சி காலத்திலிருந்தே இவ்வுலகம் வலது கைப்பழக்கம் கொண்டவர்களுக்காகவே இயங்குகிறது.

    நூற்றில் பத்துபேருக்கும் குறைவானவர்கள்தாம் இடதுகைப் பழக்கம் கொண்டவர்கள். இவர்களால் உலகை எதிர்க்க முடியுமா? ஒத்துப்போவதைத் தவிர வேறு வழியில்லை.

    `நாம் பிறருக்கு எதைக் கொடுக்கும்போதும், அவர்களிடமிருந்து வாங்கும்போதும், வலது கையைத்தான் பயன்படுத்த வேண்டும்,’ என்று சிறுவயதிலிருந்தே போதிக்கப்படுகிறது. ஆசிர்வதிக்கும்போதும் வலது கைதான். இதையெல்லாம் மத சம்பந்தமானதாக ஆக்கிவிட்டார்கள் — இதனால் விளையும் குழப்பங்களைப் புரிந்துகொள்ளாது.

    கதை :

    `வலது கைதான் உயர்த்தி!’ என்று கதாகாலட்சேபங்களில்கூட நான் அடிக்கடி கேட்டதால், இடது கையை உபயோகிப்பது என்னமோ பாபம் என்ற மனப்பான்மை சிறுவயதிலேயே தோன்றிவிட்டது. அதை உபயோகிப்பதைக் கூடியவரை தவிர்த்தேன். நாளடைவில், ஒரு கோப்பையைக்கூட இடது கையால் தூக்க முடியவில்லை — உபயோகிக்கப்படாததால், அவ்வளவுதூரம் வலுவிழந்திருந்தது.
    நாற்பது வயதுக்குமேல் சுயமாக நீச்சல் கற்க ஆரம்பித்தபோது, `உடல் ஒரு பக்கமாக சாய்கிறதே!’ என்று ஒருவர் விமர்சிக்க, மிகவும் பிரயாசைப்பட்டு, கொஞ்சம் கொஞ்சமாக இடது கரத்தை நீட்டப் பழக்கினேன். ஒரே வலி.

    இயற்கை நமக்கு இரண்டு கரங்கள் கொடுத்திருப்பது ஒன்றை மட்டும் உபயோகிக்க இல்லை என்று புரிந்தது.

    கதை

    என் மகள் இடது கைப்பழக்கம் இயற்கையாக, கருவிலேயே, அமையப் பெற்றவள். அவளுக்கு மூன்று வயதாக இருந்தபோது, எங்கள் வீட்டில், `சாமிக்குப் பூ போடு!’ என்று நான் ஓர் அபிநயம் கற்றுக்கொடுக்க, `இடது கையால போடறா!’ என்று யாரோ வியந்தபோதுதான் நானே அதை உணர்ந்தேன்.

    பாலர் பள்ளிக்கு அனுப்பியபோது, அங்கிருந்த ஆசிரியை அவளை ஒரேயடியாக மிரட்டி, வலது கையால் எழுதச் சொல்லியிருக்கிறார். அது அப்போது எங்களுக்குத் தெரியவில்லை. குழந்தைகளின் சுபாவத்தின்படி, அவளுக்கும் தன் குழப்பத்தை, அவதியை, வெளியில் சொல்லத் தெரியவில்லை.

    முதல் வகுப்பு படிக்கும்போது, எதையுமே குறித்த காலத்திற்குள் எழுதத் தெரியவில்லை என்று பள்ளியிலிருந்து வீட்டுக்குத் தகவல் வந்தது. நெடுநேரம் விசாரித்தபோது, `என்னால எழுத முடியலே!’ என்று கதறினாள்.

    அவளது இடக்கையைத் தூக்கி, `இந்தக் கை முடியுமா? உனக்கு எப்படி சௌகரியமாக இருக்கிறதோ, அப்படி எழுது!’ என்று நானும் என் கணவரும் அனுசரணையுடன் கூற, அவளுடைய அழுகை பலத்தது.
    `இடது கையால எழுதறது ஒண்ணும் தப்பில்லே,’ என்று ஆதரவளித்தேன். `டீச்சர் ஸ்டுபிட்!’
    வருட இறுதியில் வகுப்பில் முதல் மாணவியாக வந்தாள்.

    இப்போது, சாப்பிடுவதைத் தவிர, மற்ற எல்லாக் காரியங்களும் இடது கையால்தான் செய்கிறாள். துரிதமாகச் செய்ய முடிகிறது.

    எதிர்விளைவுகள்

    ஒரு பூட்டைத் திறப்பதோ, மூடியிருக்கும் பாட்டிலைத் திறப்பதோ இடது கையால் முயலுவது முதலில் கடினமாக இருக்கும். கத்தரிக்கோலை உபயோகிப்பதுதான் இம்மாதிரியானவர்களுக்கு மிகக் கடினமானதாம்.

    அப்போதெல்லாம், `என்னால் ஏன் எதுவும் எளிதாகச் செய்ய முடியவில்லை?’ என்று வருத்தமோ அல்லது ஆத்திரமோ எழும். தான் ஏதோ ஒரு வகையில் தாழ்ந்தவன் என்ற அவமானமும், குற்ற உணர்வும்கூட உண்டாகலாம்.

    `முடியாததை ஏற்க வேண்டியதுதான்!’ என்று சிலர் மிகுந்த பொறுமைசாலிகளாக ஆகிறார்கள். வேறு சிலர், `எல்லாமே நமக்கு எதிராக இருக்கிறதே!’ என்று எளிதாக ஆத்திரத்துக்கு உள்ளாகிறார்கள்.

    கதை

    மூன்று வயதிலேயே பாபு என்ற சிறுவன் எல்லாவற்றிற்கும் இடது கையை நாட, அவனுடைய தாய் மாமன் ஒரு கனமான பூட்சை அணிந்து, அக்கையை மிதிப்பார், `இது என்ன கெட்ட பழக்கம்! இனிமே இதை உபயோகிப்பாயா?’ என்று மிரட்டியபடி.

    `நான் செய்வது எல்லாமே ஏன் தவறாகப் போகிறது?’ என்ற குழப்பம் அக்குழந்தைக்கு ஏற்பட்டது. அளவற்ற அச்சமும், ஆத்திரமும் கொண்டு வளர்ந்தான். வலது கையால் எழுதும்போது தெளிவாக இருக்கவில்லை. எழுதுவதே பிடிக்காமல் போயிற்று.

    வளர்ந்தபின், யாராவது அவனிடம் ஏதாவது தப்பு கண்டுபிடித்து விட்டால் ருத்ரத் தாண்டவம்தான்.
    தான் சிறுவயதில் பட்ட துயரத்தைப் பிறருடன் பகிர்ந்துகொள்ள, பாபுவிற்குச் சற்று தெளிவு உண்டாயிற்று. தான் செய்வது எல்லாமே தவறில்லை, அறியாக் குழந்தையிடம் வன்முறை பிரயோகித்த மாமாதான் உண்மையாகவே தவறிழைத்திருக்கிறார் என்று புரிந்தது.

    எல்லாம் நன்மைக்கே

    சிறு வயதிலிருந்தே விளையாட்டுகளில் மிகுந்த ஈடுபாடு கொண்டான் பாபு. அநாவசியமான குற்ற உணர்வும், ஆத்திரமும் சற்று அடங்கின. டென்னிஸ், குத்துச்சண்டை எல்லாம் விரும்பிப் பயின்றபோது, வலது கைப்பழக்கம் கொண்ட எதிராளியை வீழ்த்துவது எளிதாக இருந்தது. `என்னால் சில காரியங்கள் இவர்களைவிடச் சிறப்பாகச் செய்யமுடியும்!’ என்ற பெருமிதம் உண்டாயிற்று.

    இடது கைப்பழக்கம் ஒரு விதத்தில் பெரிய நன்மை. அக்கரம் ஒன்றால் மட்டும் 3,400 வார்த்தைகளை ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய முடியும். அதுவே, வலக்கையை மட்டும் பயன்படுத்தினால், நானூற்று ஐம்பது வார்த்தைகளை மட்டுமே தட்டச்சு செய்ய இயலுமாம்.

    தாம் பார்ப்பது, கேட்பது எல்லாவற்றையும் வித்தியாசமான முறையில் அலசுவார்கள் இவர்கள். அதனால், பிறருக்கு இவர்களைப் புரிந்துகொள்வது எளிதல்ல. சதுரங்க விளையாட்டில் இது மிகுந்த நன்மையை அளிக்கும்.

    கலைநயம்

    இடது கரப்பழக்கம் உள்ளவர்களுக்கு மூளையின் வலப்புறம் நன்கு செயல்படுவதால், அவர்கள் கலைநயம் பொருந்தியவர்களாக இருப்பார்கள். படிப்பது, கேட்பது எல்லாவற்றையும் காட்சியாகப் பார்க்கும் திறன் அமைந்திருப்பதால், சித்திரம் வரைவதில் தேர்ந்தவர்களாக இருப்பார்கள். உதாரணம்: லியானார்டோ டாவின்சி, மைக்கலேஞ்சலோ.

    (என் மகள் வசதி குறைந்த மாணவிகளுக்காக நடத்தும் பரதநாட்டிய வகுப்பில் பெரும்பாலான மாணவிகள் இடக்கைப் பழக்கம் அமைந்தவர்கள். பல சமூக சேவகிகள் இவர்களுக்கு தமிழோ, இசையோ கற்றுக்கொடுக்க முன்வந்து, `இவர்களால் எதையுமே புரிந்துகொள்ள முடியவில்லை! முட்டாள்கள்!’ என்று பின்வாங்கி விட்டனராம் — அப்பெண்களில் ஒருத்தி தொலைகாட்சியில் தெரிவித்த சமாசாரம். `இந்த ஒரு டீச்சர்தான் எங்களைக் கைவிடவில்லை,’ என்று நன்றியுடன் குறிப்பிட்டாள்).

    ஜீனியஸ்!

    நாளடைவில், இயற்கையாக அமைந்த வலது பக்க மூளைத்திறனுடன், இவர்களும் 70% இடது பக்க மூளையைப் பயன்படுத்தப் பழகிவிடுகிறார்கள். இதனால் அறிவுக்கூர்மை மிகுந்து விடுகிறது.

    `இருபது வயதுவரைக்கும் திண்டாட்டமாக இருக்கும். அதன்பின், வலது கைக்கு முக்கியத்துவம் கொடுக்கும் உலக வழக்கத்தைப் புரிந்துகொண்டுவிடுகிறோம். அதனால், எந்த பாதிப்பும் இல்லாமல் எல்லாவிதப் பிரச்னைகளையும் எதிர்கொள்ள முடிகிறது,’ என்கிறார் ஒருவர்.

    தொடருவோம்

    Share
  • இணையமும் நவீன இலக்கியப் போக்குகளும்

    -முனைவர் மு.பழனியப்பன்

         தமிழ் இணைய உலகு பரந்துபட்டது. அதன் விரிவு என்பது ஆஸ்திரேலியா, அமெரிக்கா, ஆசியா, ஐரோப்பா ஆகிய கண்டங்களை உள்ளடக்கி வளர்ந்துவருகிறது.

          சிங்கப்பூர், மலேசியா, இலங்கை, கனடா, பிரான்ஸ், ஜெர்மனி போன்ற பகுதிகளின் தமிழ்வளர்ச்சியை வெளிப்படுத்தும் ஒன்றிணைக்கும் ஊடகம் இணையம் மட்டும்தான். இவ்வகையில் அயல்நாடுகளின் இணையத் தமிழ் வளர்ச்சி ஒரு புறமும், தாயகமான தமிழ்நாட்டின் இணைய வளர்ச்சி ஒருபுறமும்  வளர்ந்து வந்தாலும் இவையிரண்டும் ஒன்றுக்கொன்று சார்ந்தும், இணைந்தும் இயங்கும் நெருக்கத்தை இணையம்சார் போட்டிகள், இணைய இதழ்கள் அமைத்துத் தந்துவிடுகின்றன. இதன் காரணமாக இணையாத தமிழ்உள்ளங்கள் இணைந்து கரம் கோக்கும் புதுஉலகம் பிறந்துள்ளது.

    சவாலே சமாளி

          இருப்பினும் இணையத்தின் வளர்ச்சி ஒரு மூடுபொருளாகவே இருக்கிறது. இதற்கான காரணம் யாதென ஆராய வேண்டும். முக்கியமாக இணைய எழுத்தாளர்கள் தங்களை, தங்களின் தகவல்களை வெளியிடாமை அல்லது வெளிப்படுத்தாமை என்பது முக்கியமான காரணமாக அமைகின்றது. தம் எழுத்துகளை இணைய எழுத்தாளர்கள் கொண்டாடாமையும் ஒரு காரணம். நூல் வெளியீடு, பாராட்டுவிழா, விருதளிப்பு எதுவும் இணைய எழுத்திற்கு இல்லை என்பது மிக முக்கியமான காரணம். யாதாவது ஓர் அமைப்பு இணைய எழுத்துகளைப் பரிசளித்துப் பாராட்டி வெளிப்படுத்தும் நிகழ்வுகளை நடத்தினால் இக்குறை நீங்கும். இணைய எழுத்துக்கான தனித்தன்மை எதுவும் இல்லை என்பது இன்னுமொரு குறை. இணையத்தி்ல் எழுதி அச்சாக்குவது அல்லது அச்சாக்கி இணைய எழுத்தாக்குவது என்ற நிலையில் இணைய எழுத்திற்கான தனித்தன்மை இழக்கப்பெறுகிறது. இற்றைப் படுத்தப்படாமை என்பதும் மற்றொரு குறை. வலைப்பூ, முகநூல். இணைய இதழ், என்று பல பரிணாமங்களிலும் இணைய எழுத்தாளர்கள் கால்பதிக்க வேண்டி இருக்கிறது. இதன் காரணமாக ஒன்றை இற்றைப்படுத்துதல் மற்றதை விடுதல் என்ற நிலை ஏற்பட்டுவிடுகிறது.

    இணைய எழுத்து என்பது ஒற்றைத் தன்மை உடையது அன்று. உடனுக்குடன் பதில் அல்லது விமர்சனம் அல்லது தாக்குதல் பெறத்தக்கது. இதன் காரணாக நேரடித் தாக்குதல் நேர வாய்ப்புண்டு. இதனைத் தாண்டி இணைய இலக்கியம் வளர்க்கப்பட வேண்டும். உருப்பட நூல்கள், இணைய நூல்கள், அகராதிகள் போன்றவற்றை இணையம் அளிக்க வேண்டும். பழமையைச் சேகரிக்க வேண்டும். புதுமையைப் புகுத்த வேண்டும். நிகழ்காலத்திலும் நீந்த வேண்டும். இந்த வித்தைகளைக் கற்றவர்கள் இணைய எழுத்தில் நீந்த இயலும். இணையம் என்பது தொழில்நுட்பம் சார்ந்தது. எழுத்து என்பது மனம் சார்ந்தது. மனம் இருப்பவருக்குத் தொழில்நுட்பம் காலை வாருகிறது. நுட்பம் அறிந்தவருக்கு எழுத்துச் செம்மை தவிக்கிறது. ’நீச்சல்காரன்’ தன் தமிழி்ல் தவறுகளைக் குறைக்கவே சொல்திருத்தியை உருவாக்கிக்கொண்டதாக ஒரு பேட்டியில் குறிக்கிறார். நுட்பம் தெரியாதவர் எத்தனை மாதம் யாரிடம் பயிற்சி பெறுவது?

          மேலும் பெரிய பெரிய அச்சு ஊடக வெளிப்பாடுகள் இணையத்திலும் தனக்கென தனித்த நிலையில் இடம்பிடித்து வைத்திருக்கின்றன.  அச்சு ஊடக எழுத்தாளுமைகளும் இணையத்தில் நிலைக்கப் பயிற்சி பெற்றுவிட்டன. கிடைத்த பெருவெளியையும் வாடகைக்கு விட்டுவிட்டு இணைய உலகம் இழந்தது அதிகமாகத் தெரிகிறது.

          இணையத்தில் எழுத்தாளர்களே வாசகர்கள். வாசகர்களே எழுத்தாளர்கள். எழுத்தின் தகுதியும் வாசகத் தன்மையின் தகுதியும் மிஞ்சாமல் சென்று கொண்டிருப்பது மற்றொரு தடை. எழுத்தின் வாசனை கூட வேண்டும். வாசக மனப்பாங்கு ஒழிய வேண்டும்.

          இவ்வளவு இடைஞ்சல்களுக்கு இடையில் நல்லதமிழ் வளர்க்க நான்கு பேர்கள் இல்லை…இல்லை நாலாயிரம் பேர்கள் இணையப் பெருவெளியில், பொதுவெளியில் உலா வருகின்றனர். அவர்கள் அனைவரையும் மதிப்பிட அல்லது ஒருங்கிணைக்க இந்தக் கட்டுரையாளனுக்கு இன்னும் தொடர்ந்து இயங்கும் வாய்ப்பு வரவேண்டும்.

    இணைய எழுத்தின் தொகை

          வலைப்பதிவர் சந்திப்புகள் அபூர்வமாக எங்கேனும் நடந்து கொண்டுதான் இருக்கின்றன. புதுக்கோட்டை கணினித் தமிழ்ச்சங்கம் வெளியிட்டுள்ள உலகத் தமிழ் வலைப்பதிவர் கையேடு குறிக்கத்தக்க ஒரு முயற்சி. இதில் மொத்தம் 331 வலைப்பதிவர்கள் பற்றிய குறிப்புகள் கிடைக்கின்றது. இணைய எழுத்தாளர்கள் முன்னூறு பேர் கொண்ட தமிழ்க்குழுமத்தை அது கொண்டு கூட்டுகிறது.

          மின்தமிழ் மடல்குழுமம் ஏறக்குறைய ஆயிரம் மின்னஞ்சல் முகவரிகளை ஒருங்கிணைக்கிறது. இயக்கங்களை ஒருங்கு கூட்டுகிறது.

          தமிழ்மணம். திரட்டி போன்ற வலைப்பூ அரங்கங்கள் தினம் தினம் பலநூறு இடுகைகளை ஒன்று சேர்க்கின்றன.

          விக்கிப்பீடியா ஏறக்குறயை 750 தமிழ் படைப்பாளிகளை அடையாளப்படுத்துகிறது.

          இவற்றின் வழியாக இணையத்தில் எழுதுபவர்கள் தொடர்ந்து இயங்குவதற்கான நிலைக்களன்கள் கிடைத்துள்ளன.

    இணையக் களங்கள்

          இணையக் களங்கள் பல திறத்தினவாகும். வலைப்பூக்கள் (பிளாகர்), இணைய இதழ்கள் (இன்டெர்நெட் மேகசீன்ஸ்), இணையக் குழுமங்கள் (குருப்ஸ்), மின்மடல் குழுக்கள் (இ மெயில் குருப்ஸ்), முகநூல் பதிவுகள். (பேஸ்புக்), கட்செவி (வாட்ஸ்அப் குழுக்கள்), டிவிட்டர் போன்ற பல இணையக் களங்கள் தற்போது விரிந்து வருகின்றன. ஒன்றுக்குள் ஒன்று இணையும் தொடுப்புகள் இவை அனைத்தையும் ஒரு வட்டத்துக்குள் கொண்டு வந்துவிடுகின்றன.

          ஓர் எடுத்துக்காட்டிற்கு வரலாறு.காம் என்ற இணைய இதழை எடுத்துக்கொள்வோம். மிக முக்கியமான அச்சு ஊடகத்தினால் கொள்ளை போகாத பழைய தமிழகத்தின் நினைவுச் சுவடுகளைப் பதிவாக்கி ஆராயும் இதழ்தளம் இதுவாகும். வரலாற்று ஆய்வறிஞர் இராசமாணிக்கனார் வழியில் அவரின் புதல்வர் திரு கலைக்கோவன் அவர்களின் சீரிய வழிகாட்டலில் கமலக்கண்ணன் போன்றோரின்  இணைய உதவியுடன் இயங்கும் இதழ்தளம் இதுவாகும். நேரில் சென்று களஆய்வு செய்து உண்மையை உறுதிப்படுத்தும் மிகச் சிறந்த ஆவணப் பெட்டகம் இதுவாகும்.

          2004ஆம் ஆண்டுவாக்கில் இணையப் பிரவேசம் கண்ட இத்தளம் தனக்கென பல தொடுப்புகளைக் கொண்டு இயங்குகிறது. இதழாக்கம் மிக முக்கியமான மையப்பணி என்றாலும் பழைய இதழ்களைச் சேகரித்தல், காணொளிக் காட்சிகளை இணைத்தல், நிகழ்வுகளைப் பதிதல், முகநூல் தொடுப்பு, ஆய்வாளர்சார் தனித் தொடுப்புகள் என்று பல்வேறு இணைய இணைப்புகளை இதனுள் கொண்டுவந்து பழந்தமிழர் பண்பாட்டிற்கு வலிமை சேர்க்கப்படுகிறது. இதனுள் வரலாற்று அறிஞர்கள் கலைக்கோவன், நளினி, குடவாயில் பாலசுப்பிரமணியம் போன்ற ஆய்வறிஞர்களும், இளம் ஆய்வாளர்கள் பலரும் எழுதி வருகின்றனர்.  ஆனால் இதற்கான அங்கீகாரம், மக்கள் கவனிப்பு என்பது எவ்வளவு விழுக்காடு என்று ஆய்ந்தால் அதன் அளவு பெரும்பாலும் ஐம்பது விழுக்காட்டை எட்டாது. பணி செய்பவர்கள் செய்துகொண்டே இருக்கிறார்கள். கவனியாதவர்கள் கவனியாதவர்களாகவே இருக்கிறார்கள்.

        தமிழக இணைய இதழ்களான திண்ணை, முத்துக்கமலம், வல்லமை போன்றன தமக்கான பணிகளைச் செய்துகொண்டே இருக்கின்றன. அதற்கான வாசகர்கள் எவ்வளவு என்பது எண்ணிக்கை அளவில் குறைவே என்பதில் வருத்தம் எழத்தான் செய்கிறது.

     பதிவுகள், சொல்வனம், சிறகு, தங்கமீன், தடாகம், வல்லினம், வார்ப்பு போன்ற அயல்நாடுசார் இணைய இதழ்கள் அயலகத் தமிழ் எழுத்தாளர்களைத் தமிழகத்திற்கு அறிமுகம் செய்கின்றன. இருப்பினும் இந்த இதழ் தயாரிப்பு, இணையச் செலவு இவற்றிற்கு உதவும் உயர்ந்த உள்ளங்கள் எங்கும் இல்லை. அதற்கு வாய்ப்பும் இல்லை. ’விலையில்லா’ (தமிழகத்தின் நடையில் இலவசம் என்பதை விலையில்லா என்றே குறிக்கப்பெற வேண்டும்) இதழ்களின் விலைமதிப்பில்லா சேவை இதழாசிரியர்களின் நேரத்தை, பணத்தை, மூளையை எடுத்துக்கொள்கின்றன. கிடைத்தது என்ன என்பதற்கான பதில் எதுவும் இல்லை. விலையில்லாமல் இவற்றை விலைக்குக் கொண்டுவந்தால் நிலைமை இன்னும் மோசமாகிவிடும். ஆனால் அச்சுஊடகப் பேரரசுகளான குமுதம், ஆனந்தவிகடன் ஆகியனவற்றை இணையத்தில் விலையில்லாமல் வாசிக்க இயலாது. வாழ்க தமிழ்ச்சமூகம்!

    இணையத்தில் எழுதப்படும் எழுத்துகளைப் பெரும்பாலும் இரண்டு வகையாகப் பகுத்துக்கொள்கின்றனர். ஒன்று விமர்சனப்படுத்துவது. மற்றொன்று சொந்தப்படைப்பு. விமர்சனப்படுத்துவது என்பதில் பார்த்த படம், படித்த புத்தகம், அரசியல் நிகழ்வுப் பகடி போன்றன அமைகின்றன. இவையே இற்றைக்கால இணையக் களன்களில் அதிகம். சொந்தமாக எழுதுதல் என்பது படைப்புலகும் சார்ந்தும் அமைகிறது. திறனாய்வு சார்ந்தும் அமைகிறது. இப்பகுதி சற்று பின்தங்கியே உள்ளது.

          இந்த இன்னல்களையும் கடந்து இணையத் தமிழ் உயிர்வாழ்கிறது. அதன் ஆரோக்கியம் மிக முக்கியமானது. அதிவேகம் அதைவிட முக்கியமானது.

    இணையத்தில் பொதுவான எழுத்து

          இணையத்தில் பொதுவான எழுத்தின் தன்மையை அறிந்து கொண்டபின்னே அதன் நவீனத்துவத்தை அறிந்துகொள்ள இயலும். தமிழ் இணையத்தின் முக்கியப் புள்ளிகள் பலர். இக்கட்டுரையாளர் அறிந்த சிலரை இங்கு அறிமுகம் செய்வது இணையம் தாண்டிய வெளியுலகிற்குப் புதிதாக இருக்கலாம்.

    அறிவியல் தமிழ்

          கனடாவில் வாழ்ந்து வரும் மதுரை திருமங்கலத்துக்காரரான ஜெயபாரதன் அவர்கள் அணுசக்தி விஞ்ஞானி ஆவார். எண்பதை நெருங்கும் வயதுடைய அவர் அறிவியல் பணிகளை செய்துகொண்டே தமிழில் அறிவியல் செய்திகளைத் தரும் நிலையில் தன் படைப்பாக்கப் பணிகளை இணையத்தின் வழியாகச் செய்து வருகிறார்.  நெஞ்சின் அலைகள் என்ற இவரின் வலைப்பூ குறிக்கத்தக்க அறிவியல் தமிழ்ப்பணியைச் செய்து வருகிறது. திண்ணை, பதிவுகள் ஆகியவற்றில் இவருக்கென்று தனித்த இடம் உண்டு. இவருக்கென்று தனித்த வாசகர்கள் உண்டு.

    பதிவுகள் இணைய இதழ்

          2000ஆம் ஆண்டு முதல் கனடாவில் இருந்து வெளிவரும் பதிவுகள் இதழின் ஆசிரியர் வ.ந. கிரிதரன் குறிக்கத்தக்க ஒரு படைப்பாளி. நாவல்கள், கதைகள் போன்றவற்றை எழுதுவதுடன், சிறந்த கட்டுரைகளையும் இவர் எழுதி வருகிறார். இவரின் படைப்புகள் இணைய உலகில் பதிவுகள் இதழில் கிடைக்கின்றன.

    தமிழ் மரபு அறக்கட்டளை

          டி.எச்.எப். என்று சுருக்கமாக அழைக்கப்பெறும் தமிழ்மரபு அறக்கட்டளை பல்வேறு தமிழாக்கப்பணிகளைச் செய்துவருகிறது. குறிப்பாக இதன் நிறுவனர் மலேசியா கண்ணன் அவர்கள் வைணவ இலக்கிய ஈடுபாடு மிகுந்தவர். இவரின் ஆழ்வார்க்கடியான் மிகச்சிறந்த வைணவ இலக்கிய வலைப்பூவாகும். தமிழ்மரபு அறக்கட்டளையின் வளமார் பணிகளுக்கு இவர் மூலகாரணம்.

          திருமதி சுபா (சுபாஷிணி) அவர்கள் ஜெர்மனியில் இருந்து தமிழகம் வந்து பல தமிழ் அமைப்புகளுடன் கலந்துரையாடி மின்தமி்ழ் வளர்ப்பவர். இவர் பல வலைப்பூக்களை வைத்துள்ளார். சுபாஸ்டிராவல் வலைப்பூ இவரின் பயணங்களைப் பதிவு செய்வது. இதுபோல் நூல் விமர்சனங்களுக்கு ஒரு வலைப்பூ, உலகப்பண்பாடு சார்ந்து ஒரு வலைப்பூ போன்றனவற்றை இவர் வைத்துக்கொண்டுள்ளார்.

          தமிழ் மரபு அறக்கட்டளை,  சுவடி மின்னாக்கம், நூல் மின்னாக்கம், மரபுக் காப்பகம் போன்ற பல பணிகளைச் செய்துவருகிறது. பிரித்தானிய நூலகம், தமிழ்ப்பல்கலைக்கழகம் போன்றவற்றுடன் ஒத்திசைவினைப் பெற்றுள்ளது.

          இதன் வழியாகத் தமிழ்மரபு அறக்கட்டளை குறிக்கத்தக்க வளமார் பணிகளைச் செய்து வருகிறது என்பது பரவலாக்கப் பெறவேண்டியது.

    தமிழக இணைய எழுத்தாளர்கள்

          தமிழகம் சார்ந்த வலைப்பதிவர்கள் பலர் எண்ணத்தக்கவர்கள். திண்டுக்கல் தனபாலன், தேவகோட்டை கில்லர்ஜி, புதுக்கோட்டை முத்துநிலவன், தஞ்சை ஜம்புலிங்கம், ஈரோடு கதிர், ஆதிமூலகிருஷ்ணன், செல்வேந்திரன், கார்க்கி, பட்டர்ஃப்ளை சூர்யா, அப்துல்லா, வடகரை வேலன், சஞ்சய் காந்தி, வெயிலான், நாடோடி இலக்கியன், மோகன் குமார், முரளிக்குமார் பத்மநாபன், ஜெட்லி, ஜெய், ஹாலிவுட் பாலா, தராசு இவர்களுடன் கைகோக்கும் பெண் பதிவர்கள் தேனம்மை லக்ஷ்மணன், சும்மாவின் அம்மா, தமிழ்நதி, ரம்யா, வித்யா, லாவண்யா, கலகலப்ரியா, ரோகிணி, ராஜி, விஜி, சந்தனமுல்லை, ப்ரியா, மேனகாசாத்தியா, அனாமிகா, ஹுஸைனம்மா, ராமலட்சுமி  போன்றோர் குறிக்கத்தக்கவர்கள். தமிழ்ப் பேராசிரியர்கள் வரிசையில் மு. இளங்கோவன் (புதுச்சேரி), ந. இளங்கோ (புதுச்சேரி), எம்.ஏ சுசீலா (மதுரை), கல்பனா சேக்கிழார் (அண்ணாமலை நகர்),  எஸ். சிதம்பரம் (காந்திகிராமம்), மணிகண்டன் (திருச்சி), குணசீலன் (காரைக்குடி) போன்றோர் குறிக்கத்தக்கவர்கள்.

          இவ்வாறு பொதுவான நிலையில் இணையத் தமிழை இயக்கும் இவர்கள் தாண்டி நவீன இலக்கியத்திற்கு வழிவகுக்கும் இணைய இணைப்புகள் உண்டு. அவற்றை ஆராய்வது இக்கட்டுரையின் மையம் ஆகின்றது.

    நவீன இலக்கியப் போக்கும் இணையமும்

          இலக்கியம் ஏதேனும் ஓர் இயக்கம் சார்ந்தே இயங்குகிறது. தற்போது பின்நவீனத்துவ காலம் என்று இலக்கியத்திறனாய்வாளர்கள் கருதுகின்றனர். பின்நவீனத்துவப் போக்கு கி.பி. 1950 முதலே தொடங்கிவிட்டது என்று கருதப்படுகிறது.

          பின் நவீனத்துவ இலக்கியம் என்பது கட்டுடைப்பு இலக்கியம். இதற்கு வாகானது இணையதள எழுத்து. ஒரே தளத்தில் கவிதை எழுதலாம். கதை எழுதலாம். பயணம் செல்லலாம். புகைப்படம் ஒட்டலாம். குறும்படம் சேர்க்கலாம். இந்நிலையில் ஒரே மையத்தை நோக்கிப் பயணிக்காத எழுத்து உலகம் இணைய உலகம். இது பின்நவீனத்துவ போக்கிற்கு மிகப் பொருந்துவது.

           பின் நவீனத்துவம் என்பதை மையத்தை சிதறடித்தல், ஒழுங்கை குலைத்தல், யதார்த்த மீறல், எதிர்நிலையாக்கல், கேள்விகளால் துளைத்தல், கேலிசெய்தல், பன்முகமாய்ப் பார்த்தல், சொற்களால் விளையாடுதல், அதிர்ச்சிகளைத் தருதல், கனவுநிலையில் மொழிதல், பேசக் கூடாதனவற்றைப் பேசுதல் என்ற நிலையில் நோக்கியாக வேண்டும். பெண்ணியம், தலித்தியம், பெரியாரியம் போன்றன பின் நவீனத்துவ சிந்தனை பெற்ற இயங்கள் ஆகும். இவை தமிழ்உலகில் தற்போது ஆட்சி புரிந்து வருகின்றன.

          இணையத்திலும் பின்நவீனத்துவப் பாதை திறக்கப்பெற்றுள்ளது. கவிதை, சிறுகதை, நாவல், கட்டுரை, நாடகம், திரைப்படம், தொலைக்காட்சி நிகழ்வுகள் போன்ற பல தளங்களிலும் கட்டுடைப்பு நிமிடந்தோறும் நடைபெற்றுக் கொண்டே வருகிறது.

          பின் நவீனத்துவப் போக்கின் சாயல் தெரிந்தோ தெரியாமலோ படைப்பு உலகிலும், திறனாய்வு உலகிலும், நடைமுறை வாழ்விலும் என மனித வாழ்வின் அனைத்துப் பகுதிகளிலும் இருந்தே வருகின்றன. இவற்றை ஏற்றே ஆக வேண்டும்.

    சிறுகதை

          இணையத்தில் சிறுகதைகளுக்குத் தனித்த இடம் உண்டு. சிறுகதைகள்.காம், அழியாச்சுடர், எழுத்து போன்ற தளங்களில் பல எழுத்தாளர்களால் சிறுகதைகள் எழுதப்பெற்று வருகின்றன. ஆயிரத்து நூற்றைம்பதிற்கும் மேற்பட்ட எழுத்தாளர்களின் ஏழாயிரத்திற்கும் மேற்பட்ட கதைகளைக் கொண்டுள்ளது சிறுகதை.காம் என்ற தளம். இத்தளம் தற்போது கட்டணம் செலுத்தினால் பார்க்கவேண்டிய நிலையை அடைந்துள்ளது.

          தமிழ்ச்சிறுகதையை தமிழ்நாட்டுச் சிறுகதை, இலங்கைச் சிறுகதை, மலேசியச் சிறுகதை, சிங்கப்பூர் சிறுகதை, ஆஸ்திரேலியா சிறுகதை என்று இனம்பிரித்துக் காணமுடியாமல் ஒரு குடைக்குள் அடக்கியிருக்கிறது இணையம்.  இது அமைதியாக நடந்து வரும் பெருவெற்றி.

          இக்கால இணையச் சிறுகதைகளின் தன்மையை அறிந்துகொள்ள சில சிறுகதைகளை ஆராயவேண்டியுள்ளது. கேபிள் சங்கர் எழுதிய ரமேஷும் ஸ்கூட்டிப்பெண்ணும் கதை சற்று மாறுதலானது. ரமேஜஷ் யாருக்கும் உதவாத யாருக்கும் செலவு செய்யாத கஞ்சத்தனம் கொண்டவன். அவனை அலுவலகம் முடித்தவுடன் தன் இருசக்கர வாகனத்தில் ஏற்றிக்கொண்டு கிளம்புகிறார் அவர். நடுவழியில் ஒரு ஸ்கூட்டியை கிளப்பமுடியாமல் நிற்கிறாள் ஒரு இளம்பெண். நேரம் இரவு நடுநிசியை நெருங்கிக் கொண்டிருக்கிறது. ரமேஷ் அவரை வண்டியை நிறுத்தச் சொல்லி அப்பெண்ணின் வண்டியைக் கிளப்ப முயற்சிக்கிறான். எரிபொருள் இல்லா நிலையில் அவரின் வாகனத்தில் உள்ள எரிபொருளை ஸ்கூட்டிக்கு மாற்றி அப்பெண்ணை வீடுபோக வழி செய்கிறான். ரமேஷ் செய்த இந்தக் காரியத்தால் நான்கு கிலோமீட்டர் அவரும் அவனும் அவர்களின் வண்டியைத் தள்ளிக்கொண்டே வந்து எரிபொருள் நிரப்பினார்கள். ரமேஷுடம் அவர் கேட்டார்… இளம்பெண் என்றால் வலிய வந்து உதவுவீர்களா என்று. அதற்கு ரமேஷ் சென்னா பதில் கதையின் திருப்புமுனையாகிறது. சார்…. இதேஇடத்தில் பல கற்பழிப்புகள் நடந்திருக்க….என் காதலியை நான் இதே இடத்தில் இழந்திருக்கிறேன். இந்தப் பெண்ணை இழந்து இன்னொரு காதலன் தவிக்கக் கூடாது என்றுதான் செய்தேன் என்றான். இதுவரை இது கதை. இதன் பின்குறிப்பாக ஒன்று தரப்பெறுகிறது. நண்பர் ராஜ் சொன்ன ஒரு சம்பவத்தின் தாக்கத்தில் எழுதியது என்பதே நவீனத்துவத்திற்கு இணையச் சிறுகதை நகர்கிறது என்பதற்கு அடையாளம். (கேபிள் சங்கரின் தளத்தில் இருந்து எடுக்கப்பட்ட கதை.)

          க. முருகதாசன் எழுதிய ’ஒரு திருடனும் அவனின் காதலியும்’ என்ற கதை இலங்கை புலம்பெயர் எழுத்து சார்ந்தது. ராஜேஸ்வரன் சந்திரகௌரி ஆகிய இருவரும் பால்யகால நண்பர்கள். அவர்கள் எதிர்பாராத விதமாக இலண்டனில் சந்திக்கிறார்கள். இருவரும் தங்களின் பால்யகால நினைவுகளை மீட்டெடுக்கிறார்கள். எட்டாம் வகுப்பு படிக்கும்போது ராஜேஸ்வரன் சந்திகௌரியின் பென்சில் ஒன்றைத் திருடிவிட இதன் காரணமாக அவனுக்குள் ஒரு திருடன் மறைந்திருந்தான். அதனை ஈடுசெய்ய சந்திரகௌரியின் பிறந்தநாள் அன்று ஒற்றை மஞ்சள்நிறப் பென்சிலை வழங்கி அதனுள் தான் செய்த திருட்டுத்தனத்தையும் எழுதி மன்னிப்பு கேட்டிருந்தான். அவள் அதனைப் பெற்றுக்கொண்டு கவனமாகக் கடிதத்தைப் படித்துவிட்டு அவனை அணைத்து அவள் ஒரு கடிதம் தந்தாள். அது 1966ஆம் ஆண்டு எழுதப்பெற்றது. ராஜேஸ்வரனுக்கு அவள் எழுதிய பழைய காதல் கடிதம் அது. ராஜேஸ்வரன் அக்கடிதத்தைப் படித்துவிட்டு அவளின் தோழியிடம் கேட்டான் இன்னும் சந்திரகௌரி திருமணம் செய்து கொள்ளவில்லையா என்று. அத்தோழி ஆம் என்றாள். இதன் பிறகு நடந்ததை நடப்பதை வாசகர் தாமே அறிந்து கொள்ளட்டும். (அக்னிக்குஞ்சு இதழில் வெளிவந்த கதை.)

          ஒருபக்கக் கதைகள், சிறு சிறுகதைகள் என்பனவாகவும் இணையத்தில் எழுதப்பெறுகின்றன. எழுத்து இதழில் பல சிறுசிறுகதைகள் இடம்பெற்றுள்ளன. ஒரு பெண் தன் கணவனை மருத்துவமனையில் சேர்த்திருந்தார். உடல்நலம் தேறி தன் கணவரை வீட்டுக்கு அழைத்துவரும் நிலையில் மருத்துவர் சில ஆலோசனைகளை வழங்கினார். உங்கள் கணவருக்கு ஓய்வு தேவை. சில தூக்க மாத்திரைகளைத் தந்துள்ளேன் என்றார் மருத்துவர். மனைவியும் அவற்றை வாங்கிக்கொண்டுக் கிளம்ப முயன்றபோது மருத்துவர் சொன்னார் இந்தத் தூக்க மாத்திரைகள் உங்களுக்கு என்று … இதனை ஆடிட்டர் செல்வமணி பதிந்துள்ளார்.

          இவ்வாறு தமிழ்ச்சிறுகதையின் நவீனப் போக்குகளுக்கு இணையம் வழி வகுக்கிறது. பல்லாயிரம் கதைகள் எழுதப்பெற்று வருகின்றன. அவற்றைக் காணவும் ஆராயவும் படிக்கவும் நிறைய நேயர்கள் தேவை.

    இணையதளம் உலாவும் கவிதைகள்

          வார்ப்பு என்ற இணையக் கவிதை இதழ் வாரந்தோறும் புதிய புதிய கவிஞர்களை அறிமுகப்படுத்தி வருகிறது. இதில் எழுநூற்றுக்கும் மேற்பட்ட கவிஞர்கள் இணைந்துள்ளனர். பெரும்பாலானவர்கள் இணையத்தில் எழுதுபவர்கள். அவர்களின் கவிதைகள் இணையதளக் கவிதைக்களத்தில் முன்னிற்பனவாகும். நளாயினி தாமரைச் செல்வன் எழுதிய சிறுகவிதைகளில் நவீனத்துவச் சிந்தனை இருக்கிறது.

    தலையில் காக்கா எச்சம்.
    தற்செயல் நிகழ்வு.
    தடை தாண்டு.

    ***

    மழையில் நனை.
    வழிநீர் கரை.
    புதிதாய்ப் பிற.

    பழைய மரபில் இருந்து விடுவித்துக் கொண்ட சிறுகவிதைகள் இவை. சிபிச் செல்வன் என்பவர் சில பின்நவீனத்துவக் கவிதைகளை மொழிபெயர்த்துத் தன் தளத்தில் தந்துள்ளார்.

    பின் நவீன கவிதைகள் – ஆங்கிலம் வழியாகத் தமிழில் : சிபிச்செல்வன்

    தருணம் :   பெண் / ஆண்

    மூலம்: வங்காளம் : ரத்தின் பந்தோபாத்யாய
    ஆங்கிலம் வழி: அனுஸ்ரீபிரசாந்த்

    மனைவியின் தினசரிப் பழக்கங்கள்

    இனிமேல்
    ( ஆகையால்/எடுத்துக்காட்டாக/மேலும் )
    காலையில் கோல்கேட்
    மெல்லிய பிரிட்டானியா
    சார்மினார்
    நீலநிற ஜீன்ஸ்
    சீர்ப்படுத்த முடியாத பெருங்குடல் வீக்கம்
    சாலையில் வலது இடது புறங்களைப் பார்த்துவிட்டு கடந்துபோதல்

    ***

    வரிக்குதிரை. போக்குவரத்து நெரிசல். வரிக்குதிரை
    கடந்து கொண்டிருக்கிறது வரிக்குதிரை கடந்துகொண்டிருக்கிறது வரிக்குதிரை
    கடந்துகொண்டிருக்கிறது வரிக்குதிரை
    அந்த வரிக்குதிரை குளிர்கால சூரியத் தடுப்பிற்காகத் தொப்பி போட்டு
    உல்லாச பயணம் மேற்கொள்கிறது
    மிருகக்காட்சி சாலையில்
    ஒவ்வொரு வருடமும்……
    இத்யாதி

    தொடர்பற்றுத் தொடரும் இத்தகைய கவிதைகளின் இணைவற்ற போக்கே பின்நவீனத்துவப் போக்காகின்றது, நிசப்தம் அறக்கட்டளை அமைப்பில் செயல்படும் வ. மணிகண்டன் எழுத்தாளர், பொறியாளர், சிந்தனையாளர். அவரது தளத்தில் பின்வரும் ஒரு கவிதை இடம்பெற்றுள்ளது. இதன் நவீனத் தன்மை அசல் நகல் குழப்பத்தில் வாசகனைத் தடுமாற வைப்பதை உணர முடிகின்றது,

    ஸ்ரீமான் ஷண்முகசுந்தரம்

    11/17/2016 06:53:00 PM

    வித்வான் ஷண்முகசுந்தரம் ஒரு தவில் கலைஞர்
    அவர் எல்லோராலும் முட்டாளாக
    மதிக்கப்படுபவரென்றால் அது மிகையாகாது
    குறிப்பாக அவரது மூத்த சகோதரர் பாலண்ணன்
    எவ்வளவு நேர்த்தியாக அடித்தாலும்
    ஒரு அடி பிந்திவிடுவது ஷண்முகத்தின் வழக்கம்
    அப்போதெல்லாம் பாலண்ணன் லாவகமாக
    நாதஸ்வரத்தில் ஒரு இடியிடிப்பார்
    சிலர் இவரை ‘தனித்தவில் கலைஞர்’ என்றும்
    நகைச்சுவையாகக் கூறுவதுண்டு
    அன்று மாவட்ட எல்லையில் ஒரு வரவேற்பு நிகழ்ச்சி
    வாசித்துக் கொண்டிருந்த நூறு வித்வான்களில்
    ஸ்ரீமான் ஷண்முகசுந்தரம்
    ஒன்று, முதலாக இருந்தார்
    அல்லது
    கடைசியாக இருந்தார்
    நிகழ்ச்சி முடிந்து
    செம கடுப்பில்
    அவரை அம்போவென கைவிட்டுக் கிளம்பினர்
    தான் ஒரு முட்டாள் என்பதையறியாத
    ஷண்முகசுந்தரம்
    உண்மையாகவே தனித் தவிலடித்தபடி
    நெடுஞ்சாலையில் நடக்கிறார்
    டாரஸ் லாரியில் வந்த கடவுள்
    நிறுத்தி
    வருகிறீர்களா என்று கேட்டார்
    அப்போது
    ஸ்ரீமான் ஷண்முகசுந்தரத்திற்கு பெருமை பிடிபடவில்லை.

    இதனை எழுதியவர் கவிஞர் கண்டராதித்தன். இவரின் கவிதையை அதன் நவீனத்தன்மையை வ. மணிகண்டன் வியந்துள்ளார்.

          இணையக் கவிதைகள் பல பெரும்பாலும் பழைய பாடுபொருள்களை உடையன என்றாலும் நவீனத்தன்மையைத் தொட்டுப்பார்க்கும் கவிதைகளும் களத்தில உள்ளன.

    பின்நவீனத்துவத் திறனாய்வுகள்

          இணையத்தில் பெண்ணியம், பெரியாரியம், பொதுவுடைமை என்ற நிலைகளில் பல நவீனத்துவ இயத் திறனாய்வுகள் கோலோச்சுகின்றன. இணையத்தில் கிடைக்கும் பேரா பூரணச்சந்திரன், பேரா தமிழவன், பேரா அ. இராமசாமி, அ.மார்க்ஸ், ஜமாலன் ஞானி போன்றோர் தம் எழுத்துகளில் பின் நவீனத்துவப் போக்குகள் காணப்படுகின்றன. பெண்ணியம் சார்ந்து பல இணைய எழுத்துகளை பெண்ணியம் இதழ் வெளிப்படுத்தி வருகிறது. கட்டு்ரைகள், செவ்விகள், செய்திகள் என்று பெண்ணியச்சார்பில் இயங்கும் பெண்ணியம் தளம் குறிக்கத்தக்கது.

          பெரியாரியக் கொள்கைகளை விளக்கும் குடியரசு, தமிழ் ஓவியா போன்றன பின் நவீனத்துவ நிலையில் மாற்றங்களை ஏற்படுத்தி வருகின்றன. மார்க்சிய கொள்கைகளை முன்னெடுப்பதில் ந. ரவீந்திரனின் எழுத்துகள் கவனிக்கத்தக்கன. உளவியல் ஆய்வுகளில் சி.மா இரவிச்சந்திரனின் தளம் முக்கியமானது. இவற்றின் வழியாக பின்நவீனத்துவம் பற்றியும் அதனை ஆராயப்புகுத்தும் பயிற்சி குறித்தும் அறிந்துகொள்ள முடிகின்றது.

          மொத்தத்தில் இணைய எழுத்து என்பது முன்னுக்கும் பின்னுக்கும் வலதிற்கும் இடதிற்கும் வாய்ப்பளிக்கும் ஒளிவுமறைவற்ற கணினித் திரையாகின்றது. இதன் பின்னுள்ளவர்கள் தங்களை வெளிப்படுத்தத் தயங்குவது ஏன் என்று புரியவில்லை. அவர்கள் வெளிப்பட வேண்டும். பழையதை பதிவு செய்யும் முன்னவர்கள் ஒருபுறம் இருக்க, நவீனத்தை நோக்கித் தமிழைநகர்த்த இணையத்தால் மட்டுமே இயலும். இந்தக் கருவியைச் சரியாக பயன்படுத்தவேண்டும். ஒரு நூலை அச்சாக்க ஒரு அச்சகம் வேண்டும். அதனை வெளியிட வெளியீட்டு நிறுவனம் வேண்டும். வண்ண அச்சு என்றால் கூடுதல் செலவு. இது எதுவுமில்லாமல் நாளும் எழுதக் கிடைத்த அற்புத வெளி இணையம். நவீனத்தை நோக்கி இன்றைய நிமிடத்தை நகர்த்துவோம். இணையத்தில் இணைவோம்.

    Share
  • நான் அறிந்த சிலம்பு – 231

    -மலர் சபா

    மதுரைக் காண்டம் – கட்டுரைக் காதை

    மதுராபதித் தெய்வம் கண்ணகியின் பின்புறம் தோன்றிப் பேசுதல்

    சடையில் இளம்பிறை நிலவைத்
    தாங்கிய தலை உடையவள்;
    குவளை மலரைப் போன்ற
    மைதீட்டிய கண்கள் உடையவள்;      madurapathi
    வெள்ளிய ஒளிபொருந்திய
    முத்தைப் போன்ற முகம் உடையவள்;
    கடைப்பல் வெளியே தோன்றும்
    பவளம் போன்ற சிவந்த வாய் உடையவள்;
    அந்த வாயினில் நிலவினைப் போல் ஒளிரும்
    முத்துப்பல் வரிசை உடையவள்;

    இடப்பாகம் இருளைப்போல் நீலநிறம் என்றாலும்
    வலப்பாகம் தங்கம் போன்று ஒளிரும் மேனியுடையாள்;
    இடக்கையில் பொன்னிறமான தாமரையையும்
    வலக்கையில் கொடிய வாளையும் தாங்கியவள்;
    வலக்காலில் வீரமான கழலும்
    இடக்காலில் சிலம்பும் பூண்டவள்;
    இத்தகைய தோற்றம் கொண்டவள்
    மதுராபதித் தெய்வம்.

    அந்தத் தெய்வம்,
    சிறந்த முத்து மற்றும் துறையையுடைய
    கொற்கை நகரத் தலைவனும்,
    குமரியாற்றுத் துறையை உடையவனும்,
    இமயமலையைத் தம் ஆட்சியின்
    வடக்கு எல்லையாக உடையவனும்,
    பொதிய மலையை உடையவனும் ஆகிய
    பாண்டியர் குலம் தோன்றியது முதல்
    அக்குடியைக் காத்து வருகின்றாள்.

    அத்தெய்வம் இந்த நேரம்
    அக்குடிக்கு நேர்ந்த துன்பம் கண்டு வருந்தினாள்;
    வருந்திய அவள்,
    இடதுமுலை திருகி மதுரையை எரியூட்டிக்
    கணவனை இழந்த துன்பத்தோடு
    மனம் பேதலித்துத் தடுமாறி நடந்த கண்ணகியை
    நேர்எதிரே சந்திக்க அஞ்சி,
    கண்ணகியின் பின்புறம் வந்து,
    “பெண்ணே!
    என் குறையைச் சற்றுக் கேள்”
    எனக்கூறி நின்றனள்.

     

     

     

    Share
  • கற்றல் ஒரு ஆற்றல் 62

    க. பாலசுப்பிரமணியன்

    கற்றலும் பள்ளிச்சூழ்நிலைகளும் (2)

    education-2-1-1

    பொதுவாக பள்ளிக்கூடங்கள் மாணவர்களுடைய வீடுகளுக்கு அருகாமையில் இருத்தல் அவசியம். வீட்டிலிருந்து அதிகமான தூரத்தில் பள்ளிக்கூடங்களைத் தேர்ந்தெடுத்தால் மாணவர்களுடைய கற்றலுக்கு அது பலவிதத் தடைகளை ஏற்படுத்தக் காரணமாகின்றது.

    அவைகளில் சில:

    1. அதிக தூரம் செல்லவேண்டியதால் இருக்கின்ற பாதுகாப்பின்மை
    2. தூரத்தைக் கடக்க தேவையான வாகன வசதிகள்
    3. தூரங்கள் செல்லுபோழுதும் ஏற்படும் உடல் /மன அயர்வு/ சோர்வு
    4. தூரங்கள் செல்லும் பொழுது ஏற்படும் கவனச் சிதைவு
    5. தூரங்களைக் கிடைக்கும்பொழுது ஏற்படும் சீதோஷ்ண மாற்றங்கள்
    6. தூரங்கள் செல்லும் பொழுது மாசுபட்ட காற்று மற்றும் தூசியை நுகர்வதால் ஏற்படும் உடல் மற்றும் மனநல பாதிப்புக்கள்

    இத்தனையும் கடந்து மாணவர்கள் பள்ளியறையில் நுழைந்ததும் பாடங்களில் கவனமாக இருப்பது சற்றும் கடினமான செயலாகும்.

    பல மாநகரங்களில் சில பெற்றோர்கள் பெயர்பெற்ற சில பள்ளிகளில் தங்களுடைய வாரிசுகளை சேர்ப்பதற்காக அவர்களை சிறு வயது முதலே பல மைல்கற்களை கடக்கவைக்கச் செய்கின்ற பரிதாப நிலையை நாம் காண்கின்றோம். இது சிறார்களுடைய உடல் மற்றும் மனநலனுக்கு உகந்ததல்ல என்று பலவித ஆராய்ச்சிகள் மேற்கோள் காட்டியிருக்கின்றன. பொதுவாக பள்ளிக்காக மாணவர்கள் ஐந்து கிலோமீட்டருக்கு மேலான தூரங்களைக் கடத்தல் அவர்களுடைய கற்றலுக்கு ஏதுவாக அமைவதில்லை.

    பல தனியார் பள்ளிகளில் இந்த அலைச்சலையும் சீதோஷ்ண மாற்றங்களிலிருந்தும் மாணவர்களைக் காப்பதற்காக குளிர் சாதனவசதி படைத்த பேருந்துகளை இயக்குகின்றன. ஆனால், இதனால் மட்டும் மேற்குறிப்பிட்ட தடைகளுக்கு பரிகாரம் கிடைத்துவிடும் என்றோ அல்லது மாணவர்களின் கற்றல் மேம்படும் என்றோ சொல்லவதற்கான சரியான  மேற்கோள்கள் இதுவரை இல்லை. மேலும் இந்தியா போன்ற வளரும் நாடுகளில் இந்த வசதிகளை ஏற்றுக்கொண்டு அதற்கான தொகையை செலுத்துவதற்கான வசதி பெரும்பாலோருக்கு கிடைப்பதில்லை.

    இதைத்தவிர பல நேரங்களில் மழலையர் பள்ளி மற்றும் ஆரம்பப் பள்ளிகளில் படிக்கின்ற மாணவர்களை சிறிய மூன்று மற்றும் நான்கு சக்கர வண்டிகளில் பள்ளிகளுக்கு அனுப்பும் பழக்கமும் இருந்து வருகின்றது. இது தவிர்க்கமுடியாததாக இருந்தாலும் சில வண்டிகளில் அதிகப்படியான மாணவர்களை அமரச் செய்து நெருக்கமாக அமர்த்தி உடல் நோய்களுக்கான வாய்ப்புக்களும் அதிகரிக்கப்படுகின்றன. இவ்வாறு மன அழுத்தத்துடன் பள்ளி செல்லும் மாணவர்களுக்கு கற்றலுக்கு ஏதுவான மனநிலை இருப்பதில்லை. இந்த நிலைமையை சீர்திருத்தி மாணவர்கள் பள்ளிக்கு ஆரோக்கியமாகவும் தடங்கல்கள் இன்றியும் செல்ல ஏற்பாடுகள் செய்தல் கற்றலின் முன்னேற்றத்திற்கு அவசியம்.

    மேலும் பள்ளிக்குச் செல்லும் மாணவர்களின் புத்தக மற்றும் பைச்சுமையைப் பற்றி பல ஆண்டுகளாகக் கருத்துக்கள் தெரிவிக்கப்பட்டு விதிமுறைகளும் வகுக்கப்பட்டுள்ளன. அதிகமான புத்தகச்சுமையை ஏற்றுச்செல்லும் மாணவர்களின் முதுகிலும் தண்டுவடத்திலும் பாதிப்புகள் ஏற்படுவது பற்றி ஆராய்ச்சிபூர்வமான மருத்துவத் தகவல்கள் வந்துள்ளன. இந்தச் சுமை வெறும் புத்தகச் சுமையாக இல்லாமல் ஒரு மன அழுத்தமாகவும் நாளடைவில் மாறி கற்றலுக்கு எதிர்மறையான பலன்களை கொடுக்கின்றன.

    மத்திய அரசால் நியமிக்கப்பட்ட யஷ்பால் குழுவின் குறிப்பேடுகளில் இதை பற்றிய ஆழ்ந்த கவலை தெரிவிக்கப் பட்டுள்ளது. இதன் காரணமாக மழலையர்களுக்கு புத்தகளின்றி பாடங்கள் கற்பிப்பதற்கும், ஆரம்பக் காலங்களில் ஓரிரு புத்தகங்களை மட்டும் வைத்துக்கொண்டு கற்றலை சிறப்பிப்பதற்குமான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. ஆனாலும் பல பள்ளிகளில் ஆரம்பக் காலங்களிலேயே புத்தகங்கள் மற்றும் நோட்டுப்புத்தகங்களின் வரிசையைப் பார்க்கும்பொழுது ஆச்சரியமாக மட்டுமின்றி வேதனை அளிப்பதாகவும் இருக்கின்றது.

    சில நேரங்களில் புத்தகங்களை குறைவாக பள்ளிகள் கொடுத்தாலும் பெற்றோர்கள் ஏதோ அதிகமான புத்தகங்களைப் படித்தால் அறிவு வளரும் என்ற ஒரு பொய்யான கருத்துக்கு அடிமையாகிவிடுகின்றனர். இதை முன்னிறுத்தி பள்ளிகளும் வியாபார நோக்கில் பல புத்தகங்களை வழங்குவது வாடிக்கையாகி விட்டது. புத்தகங்களின் எண்ணிக்கைக்கும் அறிவு வளர்ச்சிக்கும் நேரடியான தொடர்பு இருப்பதாக எந்த ஆராய்ச்சியும் சொல்லியதாகத் தெரியவில்லை.

    மகிழ்வான சூழ்நிலையில்தான் கற்றலின் தரமும் வளர்ச்சியும் முதிர்ச்சியும் ஏற்படுவதாக மூளை-நரம்பியல் வல்லுநர்கள் உறுதியாகக் கூறுகின்றனர். ஆகவே பள்ளிகளில் கற்றலுக்கு ஏதுவாக மகிழ்வான சூழ்நிலைகளை ஏற்படுத்துதல் தேவையாகின்றது. பள்ளி அதிக தூரத்தில் இருப்பதால் ஏற்படும் சோர்வு, கவனச் சிதைவு மற்றும் புத்தகச்சுமையின் காரணமாக மகிழ்வான சூழ்நிலைகள் உருவாவதில்லை.

    மழலையர் பள்ளிகளில் கற்றலின் நோக்கமே மகிழ்வான சூழ்நிலைகளில் குழந்தை உள்ளங்கள் உறவாடுவதே. விளையாட்டுப் போக்கில் கற்கும் மறைமுகக் கற்றல் இந்த வளரும் பருவத்திற்கு மிக உகந்ததாக இருக்கிறது என கண்டுபிடுக்கப் பட்டுள்ளது. இதை எவ்வாறு சாதிக்க முடியும் என்பதைத் தொடர்ந்து பார்ப்போம்.

    (தொடரும் )

    Share
  • குறளின் கதிர்களாய்…(152)

    –செண்பக ஜெகதீசன்

    வாளோடென் வன்கண்ண ரல்லார்க்கு நூலோடென்
    னுண்ணவை யஞ்சு பவர்க்கு. (திருக்குறள் -726: அவை அஞ்சாமை)

    புதுக் கவிதையில்…

    வீரமின்றி அஞ்சுபவர்
    வைத்திருக்கும்
    வாளினால் பயனேதுமில்லை… 

    அறிவு மிக்கோர்
    அவையில் செல்ல
    அஞ்சுபவனுக்கு,
    அவனிடமுள்ள நூலினால்
    ஏது பயனுமில்லை…! 

    குறும்பாவில்…

    அஞ்சும் வீரமிலானின் வாளுக்கும்,
    அறிஞர்தம் அவையஞ்சுவோனின் நூலுக்கும்
    அறவே இல்லை பயனே…! 

    மரபுக் கவிதையில்…

    களத்தில் இறங்கி வீரத்துடன்
         -கத்தி யெடுத்துப் போராட
    உளத்தில் அச்சம் கொண்டவரின்
       -வாளினால் ஏதும் பயனில்லை,
    அளவிலா அறிவுடைச் சான்றோர்தம்
      -அவையினில் சென்று பேசுதற்கே
    தளர்வொடு அஞ்சுவோன் நூலதாலும்
      -துளியும் இல்லை பயனதுவே…! 

    லிமரைக்கூ… 

    வாளினால் வெற்றியேதும் வராது
    அஞ்சுவோன் கையிலிருந்தால், அவையஞ்சுவோன் நூலும்
    அதுபோல் பலனேதும் தராது…! 

    கிராமிய பாணியில்…

    பயப்படாத பயப்படாத
    படிச்சவுங்க சபயில பயப்படாத…

    பயனில்ல பயனில்ல
    கொஞ்சங்கூடப் பயனில்ல,
    பயந்துசாவுறவன் கைவாளால
    படயில ஒண்ணும் பயனில்ல… 

    அதுபோல
    படிச்சவுங்க சபயில போகத்தான்
    பயப்படுறவனோட புத்தகத்தாலயும்
    பயனில்ல பயனில்ல
    கொஞ்சங்கூடப் பயனில்ல… 

    அதால,
    பயப்படாத பயப்படாத
    படிச்சவுங்க சபயில பயப்படாத…!

     

     

     

    Share
  • படக்கவிதைப் போட்டி 95-இன் முடிவுகள்

    -மேகலா இராமமூர்த்தி

     

    bullandpeasant

    விளைநிலத்தில் நின்றிருக்கும் பாட்டாளி; உடன் அவருடைய இணைபிரியா எருதென்னும் கூட்டாளி! பின்புலத்தில் நெஞ்சையள்ளும் மஞ்சள்வண்ண மலர்கள். இந்த அழகோவியத்தைக் காமிராவில் அள்ளிவந்திருப்பவர் திரு. ராம்குமார் ராதாகிருஷ்ணன். இன்றைய சூழ்நிலைக்கு மிகவும் பொருத்தமான இந்தப் படத்தைப் போட்டிக்குத் தேர்ந்தெடுத்துத் தந்திருப்பவர் வல்லமை ஃப்ளிக்கர் குழுமத்தின் பொறுப்பாசிரியர் திருமதி. சாந்தி மாரியப்பன். இவர்கள் இருவருக்கும் நம் நன்றி உரியது!

    பகட்டில்லா இந்த எளிய உழவர் பகட்டோடு (எருது)  இணைந்துநிற்கும் இந்தக் கண்கொள்ளாக்காட்சி படத்தில் மட்டும் காணக்கூடிய காட்சியாக மாறிவிடக்கூடாது. உழுதுண்டு வாழும் உழவரை நம்பியே இவ்வுலகம் சுழன்றுகொண்டிருக்கிறது என்பது வெறும் சம்பிரதாய வார்த்தையன்று! அது சத்திய வார்த்தை!

    உழவுக்கு வந்தனை செய்து அதனை அழியாது காத்தல் தமிழரின் தலையாயக் கடனாகும்! 

    ***

    சிந்தனை உழவுசெய்து நம் கவிஞர்கள் விளைவித்திருக்கும் கவிதைப் பயிர்களை வந்தனை செய்துவருவோம் புறப்படுங்கள்!

    ***

    வானம் பொய்த்துப் போனதால் வேளாண்மை செய்ய வாங்கிய கடனை அடைக்க வழியில்லாது உழவர் படும்பாட்டையும், உழுதுண்டு உலகு புரந்தவன் இன்று அல்லற்பட்டு ஆற்றாது அழுதுவிடும் கண்ணீரையும், நம் நெஞ்சை நெகிழ்த்தும் வகையில், இரு கவிதைகளில் பதிவுசெய்திருக்கிறார் திரு. ஜெயபாரதன்.

    உழவர் படும்பாடு

    போர்முனை வாளெல்லாம்
    ஏர்முனை ஆயின
    தேர்தல் காலத்தில் !
    உழுதுண்டு வாழும் இனம்
    இப்போது
    அழுது கொண்டு வீழும் !
    கஞ்சிக்கு
    விளைச்சல் போதா !
    காளைக்குத் தீனி யில்லை !
    வேளைக்கு ஏற்ற
    பருவ மழை யில்லை !
    ஏர் இழுத்துச் செல்லும்
    ஓர் காளை மாடு
    காலொடிந்து போனது !
    […]

    காடு தீய்ந்து போனது !
    நாடு நரகம் ஆனது !
    சூடேறும் நிலத்தில் தானியம்
    காய்ந்து போனது !
    இப்போது வங்கிக் கடன் பணத்தை
    எப்படி அடைப்பது ?
    குத்தகைக்கு எடுத்த நிலம்
    ஐயோ
    மற்ற கைக்கினி
    மாறிடப் போவுது !
    மாரி ஆத்தா கண்திறப்பாய் !
    மாதம் இருபது ஆகுது !
    யாரிடம் போய் அழுவது ?
    யாரிடம் பணம் கேட்பது ?…

    ***

    உழவரின் கண்ணீர்

    போட்ட விதைகள் இந்தப்
    பூமியிலே
    முளைக்க வில்லை !
    மாட்டைக் கட்டி
    உழுத நிலத்தில் பருவ
    மழையோ பொழிய வில்லை !
    […]
    நாட்டு அமைச்சர் நம்மூர் வந்து

    கண்ணீர் விட்டார்
    கடவுளைச் சபித்து !
    எமக்குதவ இங்கு
    ஓட்டு வாங்கிய
    அமைச்சரும் இல்லை !
    மேட்டுக் குடிச்
    செல்வந்தரும் இல்லை !
    வேளாண்மை செய்ய
    இப்புவியில் எம்மைப் படைத்த
    பிரம்மாவும் இல்லை !

    ***

    ”நாளெல்லாம் சேற்றில் நின்று உழைத்து நமக்குச் சோறிட்ட உழவன் இன்று வாழவழியின்றிச் சாவதை வேடிக்கை பார்த்துநின்றால் நாமெல்லாம் மனிதர்கள் தாமா? ஆதலால், செய்ந்நன்றி மறவாது அவர்களை உய்விக்க வழிகாண்போம்!” என்று வாயில்லாச் சீவன்களாய்க் கதியற்று நிற்கும் உழவருக்காக உரத்து உரிமைக்குரல் எழுப்பியுள்ளார் திரு. பழ. செல்வமாணிக்கம்.

    வாயில்லா சீவன்கள்

    வாயில்லா சீவன் மாடு மட்டுமல்ல!
    அந்த உழவனும் கூடத்தான் !
    சோறு போட்ட உழவனுக்கு கிடைத்தது
    சேறும் சகதியும் தான்!

    உண்டி கொடுத்தோர் உயிர் கொடுத்தோர் என்று நயமாகச் சொல்லிடுவார் !
    உலகத்தோர் அனைவருமே உழவருக்குப் பிறகென்று
    தேனொழுகப் பேசிடுவார் !
    வெளுத்ததெல்லாம் பாலென்று
    வெள்ளந்தி உழவரெல்லாம்
    உயிர் கொடுத்து உழைத்திடுவார்!
    நெல்லை விளைய வைக்க
    உடல், பொருள், ஆவி அத்தனையும்
    பணயம் வைப்பார் !
    வைகறை துயில் எழுந்து
    இருட்டும் வரை தினம் உழைப்பார் !
    அரை வயிற்றுக்கஞ்சிக்கு
    அலுக்காமல் தினம் உழைப்பார்!
    கூழைத் தான் குடித்து
    நமக்கு சோறிடுவார்!
    செய் நன்றி மறவாமை
    சிறிதேனும் நமக்கிருந்தால்!
    உயிரோடு இருப்பதே அவரால் தான்
    என்றுணர்ந்தால்!
    உழவர்கள் வாழ்வுயர
    நாம் முனைவோம்!
    உழவர்கள் குடும்பத்தை தத்தெடுப்போம் !
    அடிப்படை தேவைகளை அன்போடு
    நாம் கொடுப்போம்!
    உழவர்கள் தற்கொலையை உடனே தடுத்திடுவோம் !
    உணவு தரும் உத்தமரை
    உன்னதமாய் வாழ வைப்போம் !

    ***

    ”காளைகள் கோழைகளின் ஆயுதமா? அல்ல… அவை தமிழர் வீரத்தின் அடையாளச் சின்னம்!” என்று பெருமிதத்தோடு பகரும் திரு. செண்பக ஜெகதீசன், ”தானும் ஓர் உழவன் மகனே!” என்று தன்னைப் பெருமிதத்தோடு அறிமுகம் செய்துகொள்கிறார் இக்கவிதையில்!

    உழவன் மகனாய்…

    ‘ஏர்ப்பின்னது உலகு’
    என்பதை மீண்டும்
    வரலாறு உண்மையாக்குகிறது..

    உழவன் மேல்
    ஒட்டியிருப்பது சேறல்ல-
    உண்ணும் சோறு..

    காளைகள்
    கோழைகளின் ஆயுதமல்ல,
    வீரத்தின் சின்னம்
    வெற்றிக்கு வழிகாட்டி..

    அதனால்,
    நானும் ஒரு
    உழவன் மகன் என்பதை
    உரக்கக் கூறுகிறேன்…!

    ****

    ”பகட்டும் பகல்வேடமும் அறியாத உழவன், பகட்டின் (எருது) துணையோடு செய்யும் விவசாயமல்லவா வையத்தின் மையத்தொழில்! மண்ணைத் தோண்டி மனிதநேயம் காட்டும் உழவனும்  ஒரு சித்தனே” என்று விதந்துரைக்கிறார் பெருவை திரு. பார்த்தசாரதி.

    உழவன் எனும்  “சித்தன்”

    உழுதொழிலின்னும் நசிக்கவில்லையென உறுதிகாட்ட
    உழவனுடன் நுகத்தடிகொண்ட காளையைப் படமெடுத்தாயோ..

    மண்ணிலுண்டாம் பலதொழிலதில் சிறப்பென..
    அவனியின் அச்சாம் உழுதொழிலே  பிரதானமாம்!

    உலகத்துக்கே உணவளிக்கும் உழுதொழிலே..
    உழவனிடும் முதலுழைப்பே முதலான உண்மையென்றோ!

    […]

    உழவனின் இளைப்பாறா உழைப்புதனை  வியந்துசொல்லும் !

    உழவுத்தொழிலுக்கு உயிரான தண்ணீரைத் தனதாக்கி உரிமைகொண்டதொரு அணையில் வீணாகத்தேக்கியதால்…

    எங்கள்தேகமென்றைக்கும் சோர்வடையாது!

    நல்லவேளை ஆதவனும் தென்றலையுமடக்க..
    இயற்கை யார்கையிலும் அகப்படவில்லையய்யா!

    ஓராயிரம் இன்னல்கள் வந்தாலுமெங்கள்..
    உழுதொழிலொருபோதும் நில்லாது!

    உழவோடு உழவுக்கு உதவுகின்ற ஒவ்வொன்றும்..
    வாழ்வோடுவாழ்வுக்கு வேண்டியபல வரலாறுகூறுதுமே!

    இணைந்து சோடியாய்  இனிதே இல்லறத்தைநடத்த..
    எங்கள் நுகத்தடிதானே யின்றும்பாடம் சொல்லுதுமனிதருக்கே!

    கீழ்மண்ணை மேல்மண்ணாக்க மேலும்கீழுமென..
    எழுகின்ற ஏர்க்காலாயினு முங்கள்மனதில்…

    எதிர்மறை யெண்ணங்கள்மறைய நேர்மறைமேலாகுமன்றோ!
    கலப்பையொன்றைக் கையில்  பிடித்தவுடன்!

    மண்ணைமட்டுமல்ல உங்கள் மனதையும்…
    அல்லவா  சேர்த்துழுமெங்கள்  உழுகலப்பை!

    உழுகின்ற உன்னதவேலை ஒருகணம் நின்றால்…
    சுற்றும்பூமிகூட சுழலமறுக்குமொரு நொடிப்பொழுது!

    எருமையென்கிறை எங்களினத்தின்மேல் வருகின்ற எமனிடம்கூட..
    வறுமையில் எங்கள்வாழ்க்கை முடியாதெனச் சூளுரைப்போம்!

    உண்டிகொடுக்க மண்டிபோட்டிழுக்கும் எங்களை..
    மடுத்தவாயெல்லாம் தாங்கும் பகடென்றானே வள்ளுவன்!

    […]
    ஏரோட்டுமெங்கள் சகோதரனின் வீரம்காக்க மெரினாவில்…
    போராடுமுங்கள் தீரம் கண்டு கடலலைகூட கரைக்குவரமறுக்கிறதே!

    தமிழரின் வீரமும் அறமும் எட்டுதிசையும் பட்டுத்தெரித்ததின்று
    தமிழ்காளையினருமை பெருமையும் அலைகடல்தாண்டியது அணைக்கமுடியாநெருப்பாய்…

    இட்டதெல்லாம் பயிரா 
    பெற்றதெல்லாம் பிள்ளையாவெனக் கேட்க

    வானிருந்துகீழ் நோக்கிப்பொழியும் மழையை
    கீழிருந்து மேனோக்கும் எங்களுழவர் குடிசிறக்கவேணும்.

    ஆயிரம் கவிகள் வந்தனர் போயினராயினுமெங்கள்
    ஏருக்கு வலிமைசேர்த்த ஐயன்வள்ளுவன் போல்எவரே?..

    அடக்கும் மூச்சினால் அனைத்தையும் அறிந்தவரென்றும்
    கடவுளைக் கண்டு தெளிந்தாரை   “சித்தரென” சொல்வார்கள்

    தன்னைத்தோண்டி தன்னையரியவைத்த பதினெண்மர்மத்தியில்
    மண்ணைத்தோண்டி மனிதநேயம்காட்டும் உழவனுமொரு சித்தனே.

    ***

    ஏற்றின் பெருமையை வரலாற்றின் ஏட்டில் ஏறவைக்கும் மாபெரும் புரட்சியைத் தமிழகம் கண்டுவரும் இன்றைய சூழலில், அதன் தாக்கத்தை இவ்வாரக் கவிதைகளும் எதிரொலிக்கத் தவறவில்லை. உழவின் உயர்வை, உழவனின் உன்னதத்தை எழுச்சியோடு எழுத்தில் வெளிப்படுத்தியிருக்கும் கவிஞர் பெருமக்களைப் போற்றுகின்றேன்!

    இவ்வாரத்தின் சிறந்த கவிதை அடுத்து அணிசெய்ய வருகின்றது!

    உய்யட்டும் உழவரினம்

    களர்நிலத்தில் நீர்ப்பாய்ச்சிக் கவிதையென விதைதூவி
    -காய்கனிகள் நெல்மணிகள் காண்பதுவே விவசாயம்
    வளம்மிகவே அடிப்படையாய் வாழுமிந்த மானுடத்தில்
      -விவசாயி பெறுவதெல்லாம் வெற்றிலையாய் மதிப்புகளே
    தளர்வுறுவார் உழவரெல்லாம் தக்கபடி தம்முழைப்பை
    -தன்னாட்டார் உறிஞ்சிவிட்டு சக்கையெனத் துப்புகிறார்
    களம்பலவும் இதைப்பேசும் காட்சிகளைக் காணுகிறோம்
    -காரியத்தில் வெற்றியெல்லாம் கருத்தாக ஏற்றாலே…

    வேர்மறந்தோம் உணவுக்கும் வெளிநாட்டான் பழக்கத்தை
    -வகையாகக் கைக்கொண்டோம் வயிற்றுக்கும் தெளிவின்றித்
    தேர்ந்தெடுத்தோம் தேசத்தின் உணர்வெல்லாம் விளையாட்டாய்த்
    -தேடுகிறோம் தேகநலன் பேணாமல் தோற்கின்றோம்
    பேர்சிறந்த இனமென்று பெருமைகளைப் பேசுகிறோம்
    -பேருக்குப் பேசிவிட்டு பெட்டிக்குள் அடங்குகிறோம்
    நேர்மையுடன் சிந்திப்போம் நெஞ்சத்தே உணர்வடைவோம்
          -நெல்லிக்காய் இருக்கையிலே நச்சுக்காய் கொள்வதுமேன்?

    விளைநிலமும் விலைநிலமாய் உருமா(ற்)றும் பேராசை
    -விவசாயம் சாகுமெனில் வாழ்வெங்கே சாகுபடி?
    களைபலவும் கலையெனவே காணுவதன் தொடக்கமென
    -கருத்தான பயிரெல்லாம் களைகின்ற பழக்கம்தான்.
    அளைவுறுவர் உழவரெல்லாம் அயராமல் போராடி
      -அடைவதுவும் சொற்பமென ஆகின்ற கணக்காலே
    வளையொளியும் எலியாக வாழ்வினிலே மற்றவரும்
    -விவசாயப் பேருழைப்பை உண்கின்றார் ஏற்பிலையே

    மண்வளமே நல்வளமாம் மற்றதெல்லாம் ஓரளவே
    -மகத்தான உழவாலே மாநிலமும் உயர்ந்திடுமே
    கண்நிறைந்து பயிர்செழிக்கக் காண்பதிலே இன்புறுவோம்
    -கைநிறைய பலன்பெற்று களிக்கட்டும் உழவரினம்
    விண்வியந்து மழைபொழியும் ஊருலகும் செழிக்கட்டும்
    -விதவிதமாய் மலரட்டும் விஞ்ஞானம் உதவட்டும்
    பண்பாடி வாழ்த்துகிறேன் பயிரெல்லாஞ் செழிக்கட்டும்
    -பரம்பொருளை வேண்டுவமே பேருழவர் வெல்வதற்கே.

    ”உழவினார் கைம்மடங்கின் இல்லை விழைவதூஉம்
    விட்டேம்என் பார்க்கும் நிலை” என்றார் செந்நாப்போதார். உழவினார் இல்லையேல் உலகில் எவருக்கும் வாழ்வில்லை. ஆனால் நாமோ உழவரை உதாசீனம் செய்து வெளிநாட்டு வரவுகளுக்கு நம்மை அடகு வைத்திருக்கின்றோம். விளைநிலங்களை விலைநிலங்களாக்கி விவசாயத்தை வேரின்றிக் கொன்றொழிக்கத் துடிக்கின்றோம்!

    ”வயிற்றுக்குச் சோறிடல் வேண்டும் இங்கு வாழும் மனிதருக்கெல்லாம்!” என்றானே பாரதி. விவசாயம் அழிந்தால் அஃது எங்ஙனம் சாத்தியம்? சிந்திப்பீர்! விவசாயம் தழைக்கச் செய்வீர்! விவசாயி பிழைக்கச்செய்வீர்!” என்று தன் கவிதை வாயிலாக நமக்கு நல்லறிவு கொளுத்தியிருக்கும் திரு. இப்னு ஹம்துனை இவ்வாரத்தின் சிறந்த கவிஞரென அறிவித்துப் பாராட்டுகின்றேன்!

    Share
  • அமைதிப் போராட்டத்தில் ஈடுபட்டிருக்கும் இளைஞர்களுக்கு தடுமாற்றத்தை ஏற்படுத்தும் நிகழ்வுகள் ..

    பவள சங்கரி

    சல்லிக்கட்டு போராட்டத்தில் பங்குகொண்டு களப்பணியில் ஈடுபட்டுள்ள சில இளைஞர்களையும், மாணவர்களையும் சந்தித்து கலந்துரையாடியபோது, அவர்கள் வருத்தத்துடன் இந்தப்போராட்டத்தின் இறுதிக் கட்டத்தில் அரசியல் கட்சிகள் ஊடுறுவி, தங்களின் நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்தி விடுவார்களோ என்ற அஞ்சுவதாக வருத்தத்துடன் குறிப்பிட்டனர். மாணவர்களின் நிலைப்பாட்டிற்கு மாறாக சில சக்திகள் பயணிப்பதாகவும், அவை தங்கள் ஒழுக்க நெறிக்கு களங்கம் ஏற்படுத்துவதாகவும் வருந்தினர்.  தங்களுக்கு எதிராக செயல்பட்டு அவப்பெயர் ஏற்படுத்துபவர்களின் முகத்திரைகளும் சமூக வலைதளங்கள் மூலம் கிழிக்கப்பட்டுக் கொண்டுதான் உள்ளன என்றும் குறிப்பிடுகின்றனர். நாளை நடைபெறும் சட்டமன்ற நிகழ்வில் அவசர சட்டத்தை மாற்றி நிரந்தர சட்டத்தை கொண்டுவந்தால் நலம் பயக்கும் என்று எண்ணுகிறார்கள். ஒரு சில பகுதிகளில் இளைஞர்களும், மாணவர்களும் விரைவில் தங்கள் போராட்டத்தை விலக்கிக்கொள்வார்கள் என்றும் எதிர்பார்க்க முடிகிறது.

    Share
  • தற்போதைய நிலை..

    பவள சங்கரி

    நான் தற்போது, தீவிரமாகச் செயல்படும் இளைஞர்களில் ஒருவரான பார்த்திபன் அவர்களைத் தொடர்புகொண்டு இளைஞர்களின் தற்போதைய நிலைப்பாட்டைப் பற்றி கேட்டபோது அவர் அளித்த தகவல்களை வார்த்தை மாறாமல் அப்படியே வழங்கியுள்ளேன்…

    1. காட்சி விலங்குகள் பட்டியலிலிருந்து காளை மாட்டை நிரந்தரமாக நீக்கவேண்டும்.

    2. சல்லிக்கட்டு நடத்துவதற்கு மத்திய நிரந்தர சட்டம் தான் வேண்டும்.
    3. டிஜிட்டல் இந்தியா என்பதுதான் நம் பாரதப் பிரதமரின் கனவு. இதன் அடிப்படையிலேயே தொலைத் தொடர்புகளின் உதவியுடனேயே இத்தகைய மாபெரும் கூட்டத்தைக்கூட்டி எங்களால் இப்படியொரு அமைதியான போராட்டத்தை நடத்த முடிகிறது. ஆனாலும் பாரதப்பிரதமர் அவர்கள் எங்களை ஏனோ இந்தியர் என்று பாராமல் தமிழர் என்று ஒதுக்கிவைப்பது போன்று வேதனை ஏற்படுத்துகிறது. பிரதமர் அவர்களின் கனவுகளை முழுமையாக நிறைவேற்றுபவர்கள் நம் தமிழக மக்களே என்பதில் ஐயமில்லை. ஆயினும் அதற்குரிய அங்கீகாரம் தமிழர்களுக்கு கிடைக்கவில்லை என்பதே வேதனையான செய்தி. இதுவரை அனைத்துக் கட்சியினரும் வந்திருந்து எங்கள் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்துச் சென்றுள்ளபோதும், பி.ஜே.பி கட்சியினர் எவரும் இதுவரை எங்களை நெருங்கவே இல்லை.

    Share
  • கேசவ் வண்ணம் – கிரேசி எண்ணம்

     

    கேசவ், ‘’சைதன்யர்’’ காளைக்கு வெற்றித் திலகமிடும் ‘’கைதன்யர்’’ போல் இருக்கு….சபாஷ் கேசவ்….அருமை….!

    kesav

    ’’நிறத்திற்கு நீலம், சிரத்திற்கு கீதை,
    வரத்திற்கு கண்ணன் வருவார், -கரத்தினை
    ஏறுக்கு பொட்டாக்கி, ஏறியதன் மீதமர்ந்தார்
    பாருக்(கு) இவர்ஜல்லிப் பொட்டு’’….கிரேசி மோகன்….!

    பாருக்கு -பூமிக்கு இவர் வெற்றித் திலகம்(ஜல்லிப் பொட்டு)….!

    Share
  • ஐயப்பன் திருப் புகழ்….!

     

    அடியேன் முன்பு வரைந்து முன்பு எழுதிய பாடல்கள்….!

    ஐயப்பன் திருப் புகழ்….!
    ———————————————–

    crazy

    “வீறுபுலி வாகனமு லாவுமுகம் ஒன்று
    வாவருடன் தோழமைகு லாவுமுகம் ஒன்று
    மாறுபடு மோகினிசு மந்தமுகம் ஒன்று
    மேலரவம் பூணுமரன் தந்தமுகம் ஒன்று
    மாறன்வழி போகாமல் மேய்க்கும்முகம் ஒன்று
    ஏறுமடி யார்கள்பயம் போக்குமுகம் ஒன்று
    கூறும்சர ணாகதியை கேளுமுகம் ஒன்று
    கானிலுறை காந்தசப ரீசமணி கண்டா”….கிரேசி மோகன்…..

    ஐயப்பன் வெண்பாக்கள்
    ——————————————-

    ஆணென்றும் பெண்ணென்றும் நானென்றும் நீயென்றும்
    வீணிந்த வித்தியாசம் ஏனென்று – ஆணென்ற
    பெண்மைக்கும் பெண்பாதி ஆண்மைக்கும் சேயானோய்
    உண்மைக்குள் உய்ய உதவு….(1)

    அரிதாரம் பூசி அரிதாரம் ஆனான்
    கரியாடை பூண்டோன் கரத்தில் -அறிவே
    அரனில் அரியை அறிய புரிவாய்
    சரணம் சபரி மலைக்கு….(2)

    சு.ரவி ஓவியம் பார்த்து
    ———————————-

    ஓணமும் ஆதிரையும் ஒன்றிக் கலந்ததில்
    ஞானமாம் நம்பிக்கை நட்சத்ரம் -கானிலே
    உத்திர மானதன் உற்சவ கோலத்தின்
    சித்திரம் கண்டேன் சபாஷ்….(3)

    சந்தன வாசன் சபரி விலாசனை
    வந்தனம் கூறி வழிபட -பந்தள
    ராச குமாரன் ரசனை மிகுந்தவன்
    ஆசுகவி ஆக்குவான் ஆம்….(4)

    வாஸ்த்தவமே, வன்புலி வாகனனே நீலிமலை
    ஆஸ்த்தானம் ஆளும் அரிஹர -சாஸ்தாவே
    வந்துன்னை ஒவ்வோர் வருடமும் காணத்தா
    பந்தளனே தேக பலம்….(5)

    பங்குனி உத்திரத்தன்று எழுதியது
    ———————————————-

    பங்குனி உத்திரா பந்தளப் புத்திரா
    செங்கட் திருமால் சுமந்தவா -இங்குநீ
    தோன்றிய இந்நாளில் தோத்திரம் செய்வோர்க்கு
    ஊன்றிடும் கோலுன் உறவு….(6)

    பிணிகொண்டு கூற்றின் படிவாசல் நிற்போர்
    மணிகண்டன் நாமம் முழங்க -இனிகண்டம்
    இல்லையென்(று) ஆகிடும் ஈரொன் பதாம்படிமுன்
    தொல்லையாம் தேங்காய் தெறித்து….(7)

    மீனாள் திருமணத்தில் மாலோன் அழகுகண்டு
    மான்மழு வாளன் மயங்கினான் -கானில்
    அபரிமித மோஹினியை ஆலிங் கனித்திட
    சபரிகிரி வாசன் ஜனிப்பு….(8)

    அய்யனை அன்பர்தம் நெய்யனை அல்லல்தீர்
    கையனை மாலரன் பையனை -மெய்யனை
    சாமி சரணம் சதாஸ்மரணம் செய்வோரை
    காமிய கர்மமணு கா….(9)
    அத்தனும் பித்தனும் சித்தம் ஒருமித்த
    தத்துவமே தான்தோன்றி தற்பரமே -சத்குரு
    ஈசா சபரிகிரி வாசா சரணமுற்றோர்
    நேசா வணக்கம் நினக்கு….(10)

    வங்கக் கடல்கடைந்த சிங்கனும் சங்கரனும்
    அங்கம் கலக்க அவதரித்த -எங்களின்
    அண்ணா மலைபுர அய்யன்தேர் கண்டதில்
    பண்ணாத பாவமும் போச்சு….(11)

    பிறப்பெனக்கு வேண்டும்நின் பம்பையில் நீராய்
    இறப்பணைந்த கற்பூரத் தீயாய் -மறப்பெனக்கு
    காமக் குரோத உலோபமத மாச்சரியம்
    நாமத் திருநீறோ னே….(12)

    Share
  • கேசவ் வண்ணம் – கிரேசி எண்ணம்

     

    ‘’மாட்டுப் பொங்கல்’’
    ————————-

    kesav

    ”வீட்டுக்கோர் பிள்ளையாய் காட்டுக்கு சென்றாயர்
    கூட்டத் துடன்கலந்த கோபாலா -மாட்டுக்கு
    பொங்கலின்று, மீண்டும்நீ பூமிக்(கு) எழுந்தருள்,
    எங்களைக் கால்நடையாய் ஏற்று’’….கிரேசி மோகன்….

    ஸாரி கேசவ்….பசு என்று எண்ணிவிட்டேன்….காளை என்று தாங்கள் கூறியதால், வெண்பாவில் திருத்தம்….!

    ”வீட்டுக்கோர் பிள்ளையாய் காட்டுக்கு சென்றாயர்
    கூட்டத் துடன்கலந்த கோபாலா -மாட்டுக்கு
    ஜல்லிக்கட்(டு) இன்று, சுதர்ஸன வேகத்தில்,
    ஜல்திஅலங் காநல்லூர் ஜாவ்(ஹிந்தி)’’….கிரேசி மோகன்….

    Share
  • கண்ணியம் காத்த இளைஞர்கள்!

    பவள சங்கரி

    தலையங்கம்

    25,00000 இளைஞர்கள் 500 இடங்களில் அமைதியாக, காந்தீய வழியில் போராடி வெற்றி பெற்று சாதனை படைத்திருக்கிறார்கள். உலகமே உற்று நோக்கி வியந்து நிற்கும் வகையில் வரலாறு படைத்திருக்கிறார்கள். இப்படியொரு தீப்பொறி அவர்களுக்குள் கனன்று கொண்டிருப்பதே வெளியில் தெரியாமல் பொத்தி வைத்திருந்தவர்கள் அதன் எல்லை மீறி இன்று பெருந்தீயாக கொதித்தெழுந்துள்ளார்கள். கங்கு கூட குளிர்த் தென்றலாய் அமைதி காக்கும் என்பதையும் உணர்த்தி, சரித்திரம் படைத்துள்ளார்கள். என் மனச்சாட்சியே எனக்குத் தலைவன், முகமூடியணிந்த எந்த தலைவனும் எங்களுக்குத் தேவையில்லை என்று ஒற்றுமையுடன் கூடி நின்று நினைத்ததை நடத்தி சாதனைப்படைத்து விட்டார்கள். புல்லுறுவிகளாக உள் நுழைய முற்பட்ட சாதி அரசியல்வாதிகளையும், அதனுள் விட்டிலாய் வீழ இருந்தவரையும் அடையாளம் கண்டு நாசூக்காக ஓரங்கட்டிய சடங்குகளும் அழகாக நடந்துள்ளன. வெகு இயல்பாக இளைஞரோடு இளைஞராக கலக்க இருந்த புல்லுருவிகளையும் நிதானமாக திறமையாக வெளியேற்றிய சாதனைகளையும் பாராட்டாமல் இருக்க முடியவில்லை. இலக்கு நேர்மையானதாக, தன்னலமற்றதாக, நாட்டின் நலனை மட்டுமே கருத்தில்கொண்டதாக இருக்கும்பட்சத்தில் வெற்றி நிச்சயம் என்பதை மிக அழகாகத் தெளிவுபடுத்தியுள்ளனர். குப்பை போடாமல், தீய சொற்களையும், தீய செயல்களிலும் ஈடுபடாமல் மனமுதிர்ச்சியுடன் நடந்துகொண்ட இந்த துள்ளிவரும் காளைகள் இன்றைய அரசியல்வாதிகளுக்கு எப்படி நடந்துகொள்ள வேண்டும் என்று பாடம் புகட்டியுள்ளனர். இதற்கு மேலும் திருந்தாவிட்டால் அடுத்து அவர்களின் நடவடிக்கை எப்படியிருக்கும் என்பதையும் தெளிவாகவே உணர்த்தியுள்ளார்கள். அண்டை மாநில இளைஞர்களும் தன்னார்வத்துடன் உதவிக்கு வரத் தயாராக இருந்ததன் மூலம் அவர்களுக்கும் விழிப்புணர்வை ஏற்படுத்தியுள்ள நம் தமிழ்நாட்டு இளைஞர்கள் நம் நாட்டிற்குக் கிடைத்த வரம் என்றே பெருமை பொங்க கூறமுடிகிறது. சில புல்லுறுவிகள் நம் நாட்டுத் தலைவர்களை மரியாதைக் குறைவாகப் பேசியும், தேவையில்லாத செயல்பாடுகளில் இறங்கியும் உள்ளதற்கு இந்த மாணவச் செல்வங்கள் எந்த வகையிலும் காரணம் அல்ல என்பதையும் உணர்த்தியுள்ளார்கள். கூட்டத்தில் குளிர் காய்ந்துகொண்டு தங்கள் காழ்ப்புணர்ச்சியை வெளிப்படுத்திக்கொண்ட சுயநலவாதிகளைப் பற்றி கவலைப்படத் தேவையில்லை. மற்றபடி பாலின பாகுபாடின்றி எல்லோரும் ஓரினம் என்ற அறைகூவலோடு, பெண்களையும் கௌரவமாக நடத்தி, எந்தவொரு அசம்பாவிதமும் நடக்காமல் அமைதியாகப் போராடி வெற்றி கண்டுள்ள இளைஞர்களை/மாணவச் செல்வங்களை எத்துணை பாராட்டினாலும் தகும்.

    அவசரச்சட்டம் மத்திய அரசால் முழுமையாக ஏற்றுக்கொள்ளப்பட்டு, குடியரசு தலைவரும் ஏற்றுக்கொள்வதற்காக அவருடைய பார்வைக்குச் சென்றுள்ளது. இன்று மாலைக்குள் ஆளுநரும் கையொப்பமிட இந்த அவசரச் சட்டமானது மாநில அமைச்சர் குழுக்களால் ஏற்கப்பட்டு அறிவிக்கப்பட உள்ளது. நாளை அலங்காநல்லூரில் சல்லிக்கட்டு வீர விளையாட்டைத் தாமே துவங்கி வைப்பதாக தமிழக முதல்வர் திரு ஓ.பன்னீர் செல்வம் அவர்கள் அறிவித்துள்ளது மகிழ்ச்சியளிக்கிறது. இன்றே அதற்கான பணிகள் தொடங்கி மாவட்ட கலெக்டர் வாடிவாசல் வந்து பார்வையிட்டு நிகழ்ச்சி சிறப்பாக நடைபெறுவதற்கான ஆரம்பப் பணிகள் துவங்கப்பட்டுள்ளன.

    கண்ணியம் காத்த அனைத்து இளைஞர்களுக்கும் தமிழ் பண்பாட்டை உலகிற்கே உணர்த்திய அனைத்து நல்லுள்ளங்களுக்கும் பாராட்டுதல்களும், வாழ்த்துகளும் தெரிவிக்கும் அதே நேரத்தில் மேலும் இதே ஒற்றுமையையும், அமைதியையும் என்றும் காத்து தமிழர் நலம் பேணுவோம் என்று உறுதியெடுப்போம்!

    Share
  • கேசவ் வண்ணம் – கிரேசி எண்ணம்

     

    kesav
    ’’வங்கத்தை(வங்கக் கடலை) பானைக்குள் வைத்துக் கடைகின்றார்
    சிங்கத்தன் பாலாழி சீதரன் -அங்கம்
    கருத்தது வெண்ணைக்கு CONTRASATடாய் உள்ளம்
    நிறத்தில் நவனீதம் நாடு’’….கிரேசி மோகன்….!

    மதிலரங்கக் கோயில் அதிலுறங்கும் மாலே
    விதிநெருங்கும் வேளை வருமுன் -பதிலளிப்பாய்
    தேனடைக்குள் தேனியாய் நீயிருக்க என்னுள்ளே
    நானெதற்கு வீணாய் நவில்….

    நாவல் நிறத்தனே நாலாயிரம் போற்றிடும்
    காவலில் தோன்றிய கண்ணனே -ஆவலால்
    விட்டகன்றாய் அத்வைதம் வந்தாய் விசிஷ்டனாய்
    வெட்டுநீ துண்டுரெண்டா வோம்…
    பள்ள மதைநோக்கிப் பாய்கின்ற வெள்ளமென
    கொள்ளிடத் தானிருகால் கொள்கையாய் -உள்ளமே
    கள்ளமில்லா நம்பிக்கை கண்மூடக் கும்பிடு
    வள்ளலென மாறும்காண் வாழ்வு….கிரேசி மோகன்….!

    Share
  • மகத்தான வெற்றி!

    பவள சங்கரி

    முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் அவர்களின் அறிவிப்பு.. இன்னும் 2 நாட்களில் சல்லிக்கட்டு நடைபெறும். அவசரச் சட்டம் இயற்றப்பட்டு ஆளுநரின் ஒப்புதலோடு குடியரசுத் தலைவரால் அங்கீகரிக்கப்பட்டு செயல்படுத்தப்படும். இளைஞர்கள்/மாணவர்கள் தங்கள் போராட்டத்தை விலக்கிக்கொள்ள வேண்டுகோள்!` மாணவர்களுக்கு மகத்தான வெற்றி!

    மாணவர் / இளைஞர் அமைதிப் போராட்டம் மகத்தான வெற்றி!! வாழ்த்துகள். வாழ்க வளமுடன் செல்வங்களே!!

    Share