க. பாலசுப்பிரமணியன்

கற்றலும் பள்ளிச்சூழ்நிலைகளும் (2)

education-2-1-1

பொதுவாக பள்ளிக்கூடங்கள் மாணவர்களுடைய வீடுகளுக்கு அருகாமையில் இருத்தல் அவசியம். வீட்டிலிருந்து அதிகமான தூரத்தில் பள்ளிக்கூடங்களைத் தேர்ந்தெடுத்தால் மாணவர்களுடைய கற்றலுக்கு அது பலவிதத் தடைகளை ஏற்படுத்தக் காரணமாகின்றது.

அவைகளில் சில:

  1. அதிக தூரம் செல்லவேண்டியதால் இருக்கின்ற பாதுகாப்பின்மை
  2. தூரத்தைக் கடக்க தேவையான வாகன வசதிகள்
  3. தூரங்கள் செல்லுபோழுதும் ஏற்படும் உடல் /மன அயர்வு/ சோர்வு
  4. தூரங்கள் செல்லும் பொழுது ஏற்படும் கவனச் சிதைவு
  5. தூரங்களைக் கிடைக்கும்பொழுது ஏற்படும் சீதோஷ்ண மாற்றங்கள்
  6. தூரங்கள் செல்லும் பொழுது மாசுபட்ட காற்று மற்றும் தூசியை நுகர்வதால் ஏற்படும் உடல் மற்றும் மனநல பாதிப்புக்கள்

இத்தனையும் கடந்து மாணவர்கள் பள்ளியறையில் நுழைந்ததும் பாடங்களில் கவனமாக இருப்பது சற்றும் கடினமான செயலாகும்.

பல மாநகரங்களில் சில பெற்றோர்கள் பெயர்பெற்ற சில பள்ளிகளில் தங்களுடைய வாரிசுகளை சேர்ப்பதற்காக அவர்களை சிறு வயது முதலே பல மைல்கற்களை கடக்கவைக்கச் செய்கின்ற பரிதாப நிலையை நாம் காண்கின்றோம். இது சிறார்களுடைய உடல் மற்றும் மனநலனுக்கு உகந்ததல்ல என்று பலவித ஆராய்ச்சிகள் மேற்கோள் காட்டியிருக்கின்றன. பொதுவாக பள்ளிக்காக மாணவர்கள் ஐந்து கிலோமீட்டருக்கு மேலான தூரங்களைக் கடத்தல் அவர்களுடைய கற்றலுக்கு ஏதுவாக அமைவதில்லை.

பல தனியார் பள்ளிகளில் இந்த அலைச்சலையும் சீதோஷ்ண மாற்றங்களிலிருந்தும் மாணவர்களைக் காப்பதற்காக குளிர் சாதனவசதி படைத்த பேருந்துகளை இயக்குகின்றன. ஆனால், இதனால் மட்டும் மேற்குறிப்பிட்ட தடைகளுக்கு பரிகாரம் கிடைத்துவிடும் என்றோ அல்லது மாணவர்களின் கற்றல் மேம்படும் என்றோ சொல்லவதற்கான சரியான  மேற்கோள்கள் இதுவரை இல்லை. மேலும் இந்தியா போன்ற வளரும் நாடுகளில் இந்த வசதிகளை ஏற்றுக்கொண்டு அதற்கான தொகையை செலுத்துவதற்கான வசதி பெரும்பாலோருக்கு கிடைப்பதில்லை.

இதைத்தவிர பல நேரங்களில் மழலையர் பள்ளி மற்றும் ஆரம்பப் பள்ளிகளில் படிக்கின்ற மாணவர்களை சிறிய மூன்று மற்றும் நான்கு சக்கர வண்டிகளில் பள்ளிகளுக்கு அனுப்பும் பழக்கமும் இருந்து வருகின்றது. இது தவிர்க்கமுடியாததாக இருந்தாலும் சில வண்டிகளில் அதிகப்படியான மாணவர்களை அமரச் செய்து நெருக்கமாக அமர்த்தி உடல் நோய்களுக்கான வாய்ப்புக்களும் அதிகரிக்கப்படுகின்றன. இவ்வாறு மன அழுத்தத்துடன் பள்ளி செல்லும் மாணவர்களுக்கு கற்றலுக்கு ஏதுவான மனநிலை இருப்பதில்லை. இந்த நிலைமையை சீர்திருத்தி மாணவர்கள் பள்ளிக்கு ஆரோக்கியமாகவும் தடங்கல்கள் இன்றியும் செல்ல ஏற்பாடுகள் செய்தல் கற்றலின் முன்னேற்றத்திற்கு அவசியம்.

மேலும் பள்ளிக்குச் செல்லும் மாணவர்களின் புத்தக மற்றும் பைச்சுமையைப் பற்றி பல ஆண்டுகளாகக் கருத்துக்கள் தெரிவிக்கப்பட்டு விதிமுறைகளும் வகுக்கப்பட்டுள்ளன. அதிகமான புத்தகச்சுமையை ஏற்றுச்செல்லும் மாணவர்களின் முதுகிலும் தண்டுவடத்திலும் பாதிப்புகள் ஏற்படுவது பற்றி ஆராய்ச்சிபூர்வமான மருத்துவத் தகவல்கள் வந்துள்ளன. இந்தச் சுமை வெறும் புத்தகச் சுமையாக இல்லாமல் ஒரு மன அழுத்தமாகவும் நாளடைவில் மாறி கற்றலுக்கு எதிர்மறையான பலன்களை கொடுக்கின்றன.

மத்திய அரசால் நியமிக்கப்பட்ட யஷ்பால் குழுவின் குறிப்பேடுகளில் இதை பற்றிய ஆழ்ந்த கவலை தெரிவிக்கப் பட்டுள்ளது. இதன் காரணமாக மழலையர்களுக்கு புத்தகளின்றி பாடங்கள் கற்பிப்பதற்கும், ஆரம்பக் காலங்களில் ஓரிரு புத்தகங்களை மட்டும் வைத்துக்கொண்டு கற்றலை சிறப்பிப்பதற்குமான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. ஆனாலும் பல பள்ளிகளில் ஆரம்பக் காலங்களிலேயே புத்தகங்கள் மற்றும் நோட்டுப்புத்தகங்களின் வரிசையைப் பார்க்கும்பொழுது ஆச்சரியமாக மட்டுமின்றி வேதனை அளிப்பதாகவும் இருக்கின்றது.

சில நேரங்களில் புத்தகங்களை குறைவாக பள்ளிகள் கொடுத்தாலும் பெற்றோர்கள் ஏதோ அதிகமான புத்தகங்களைப் படித்தால் அறிவு வளரும் என்ற ஒரு பொய்யான கருத்துக்கு அடிமையாகிவிடுகின்றனர். இதை முன்னிறுத்தி பள்ளிகளும் வியாபார நோக்கில் பல புத்தகங்களை வழங்குவது வாடிக்கையாகி விட்டது. புத்தகங்களின் எண்ணிக்கைக்கும் அறிவு வளர்ச்சிக்கும் நேரடியான தொடர்பு இருப்பதாக எந்த ஆராய்ச்சியும் சொல்லியதாகத் தெரியவில்லை.

மகிழ்வான சூழ்நிலையில்தான் கற்றலின் தரமும் வளர்ச்சியும் முதிர்ச்சியும் ஏற்படுவதாக மூளை-நரம்பியல் வல்லுநர்கள் உறுதியாகக் கூறுகின்றனர். ஆகவே பள்ளிகளில் கற்றலுக்கு ஏதுவாக மகிழ்வான சூழ்நிலைகளை ஏற்படுத்துதல் தேவையாகின்றது. பள்ளி அதிக தூரத்தில் இருப்பதால் ஏற்படும் சோர்வு, கவனச் சிதைவு மற்றும் புத்தகச்சுமையின் காரணமாக மகிழ்வான சூழ்நிலைகள் உருவாவதில்லை.

மழலையர் பள்ளிகளில் கற்றலின் நோக்கமே மகிழ்வான சூழ்நிலைகளில் குழந்தை உள்ளங்கள் உறவாடுவதே. விளையாட்டுப் போக்கில் கற்கும் மறைமுகக் கற்றல் இந்த வளரும் பருவத்திற்கு மிக உகந்ததாக இருக்கிறது என கண்டுபிடுக்கப் பட்டுள்ளது. இதை எவ்வாறு சாதிக்க முடியும் என்பதைத் தொடர்ந்து பார்ப்போம்.

(தொடரும் )

உங்கள் கருத்துகளைத் தெரிவிக்க