நுண்கலைகள்படக்கவிதைப் போட்டிகள்போட்டிகளின் வெற்றியாளர்கள்வண்ணப் படங்கள்

படக்கவிதைப் போட்டி 95-இன் முடிவுகள்

-மேகலா இராமமூர்த்தி

 

bullandpeasant

விளைநிலத்தில் நின்றிருக்கும் பாட்டாளி; உடன் அவருடைய இணைபிரியா எருதென்னும் கூட்டாளி! பின்புலத்தில் நெஞ்சையள்ளும் மஞ்சள்வண்ண மலர்கள். இந்த அழகோவியத்தைக் காமிராவில் அள்ளிவந்திருப்பவர் திரு. ராம்குமார் ராதாகிருஷ்ணன். இன்றைய சூழ்நிலைக்கு மிகவும் பொருத்தமான இந்தப் படத்தைப் போட்டிக்குத் தேர்ந்தெடுத்துத் தந்திருப்பவர் வல்லமை ஃப்ளிக்கர் குழுமத்தின் பொறுப்பாசிரியர் திருமதி. சாந்தி மாரியப்பன். இவர்கள் இருவருக்கும் நம் நன்றி உரியது!

பகட்டில்லா இந்த எளிய உழவர் பகட்டோடு (எருது)  இணைந்துநிற்கும் இந்தக் கண்கொள்ளாக்காட்சி படத்தில் மட்டும் காணக்கூடிய காட்சியாக மாறிவிடக்கூடாது. உழுதுண்டு வாழும் உழவரை நம்பியே இவ்வுலகம் சுழன்றுகொண்டிருக்கிறது என்பது வெறும் சம்பிரதாய வார்த்தையன்று! அது சத்திய வார்த்தை!

உழவுக்கு வந்தனை செய்து அதனை அழியாது காத்தல் தமிழரின் தலையாயக் கடனாகும்! 

***

சிந்தனை உழவுசெய்து நம் கவிஞர்கள் விளைவித்திருக்கும் கவிதைப் பயிர்களை வந்தனை செய்துவருவோம் புறப்படுங்கள்!

***

வானம் பொய்த்துப் போனதால் வேளாண்மை செய்ய வாங்கிய கடனை அடைக்க வழியில்லாது உழவர் படும்பாட்டையும், உழுதுண்டு உலகு புரந்தவன் இன்று அல்லற்பட்டு ஆற்றாது அழுதுவிடும் கண்ணீரையும், நம் நெஞ்சை நெகிழ்த்தும் வகையில், இரு கவிதைகளில் பதிவுசெய்திருக்கிறார் திரு. ஜெயபாரதன்.

உழவர் படும்பாடு

போர்முனை வாளெல்லாம்
ஏர்முனை ஆயின
தேர்தல் காலத்தில் !
உழுதுண்டு வாழும் இனம்
இப்போது
அழுது கொண்டு வீழும் !
கஞ்சிக்கு
விளைச்சல் போதா !
காளைக்குத் தீனி யில்லை !
வேளைக்கு ஏற்ற
பருவ மழை யில்லை !
ஏர் இழுத்துச் செல்லும்
ஓர் காளை மாடு
காலொடிந்து போனது !
[…]

காடு தீய்ந்து போனது !
நாடு நரகம் ஆனது !
சூடேறும் நிலத்தில் தானியம்
காய்ந்து போனது !
இப்போது வங்கிக் கடன் பணத்தை
எப்படி அடைப்பது ?
குத்தகைக்கு எடுத்த நிலம்
ஐயோ
மற்ற கைக்கினி
மாறிடப் போவுது !
மாரி ஆத்தா கண்திறப்பாய் !
மாதம் இருபது ஆகுது !
யாரிடம் போய் அழுவது ?
யாரிடம் பணம் கேட்பது ?…

***

உழவரின் கண்ணீர்

போட்ட விதைகள் இந்தப்
பூமியிலே
முளைக்க வில்லை !
மாட்டைக் கட்டி
உழுத நிலத்தில் பருவ
மழையோ பொழிய வில்லை !
[…]
நாட்டு அமைச்சர் நம்மூர் வந்து

கண்ணீர் விட்டார்
கடவுளைச் சபித்து !
எமக்குதவ இங்கு
ஓட்டு வாங்கிய
அமைச்சரும் இல்லை !
மேட்டுக் குடிச்
செல்வந்தரும் இல்லை !
வேளாண்மை செய்ய
இப்புவியில் எம்மைப் படைத்த
பிரம்மாவும் இல்லை !

***

”நாளெல்லாம் சேற்றில் நின்று உழைத்து நமக்குச் சோறிட்ட உழவன் இன்று வாழவழியின்றிச் சாவதை வேடிக்கை பார்த்துநின்றால் நாமெல்லாம் மனிதர்கள் தாமா? ஆதலால், செய்ந்நன்றி மறவாது அவர்களை உய்விக்க வழிகாண்போம்!” என்று வாயில்லாச் சீவன்களாய்க் கதியற்று நிற்கும் உழவருக்காக உரத்து உரிமைக்குரல் எழுப்பியுள்ளார் திரு. பழ. செல்வமாணிக்கம்.

வாயில்லா சீவன்கள்

வாயில்லா சீவன் மாடு மட்டுமல்ல!
அந்த உழவனும் கூடத்தான் !
சோறு போட்ட உழவனுக்கு கிடைத்தது
சேறும் சகதியும் தான்!

உண்டி கொடுத்தோர் உயிர் கொடுத்தோர் என்று நயமாகச் சொல்லிடுவார் !
உலகத்தோர் அனைவருமே உழவருக்குப் பிறகென்று
தேனொழுகப் பேசிடுவார் !
வெளுத்ததெல்லாம் பாலென்று
வெள்ளந்தி உழவரெல்லாம்
உயிர் கொடுத்து உழைத்திடுவார்!
நெல்லை விளைய வைக்க
உடல், பொருள், ஆவி அத்தனையும்
பணயம் வைப்பார் !
வைகறை துயில் எழுந்து
இருட்டும் வரை தினம் உழைப்பார் !
அரை வயிற்றுக்கஞ்சிக்கு
அலுக்காமல் தினம் உழைப்பார்!
கூழைத் தான் குடித்து
நமக்கு சோறிடுவார்!
செய் நன்றி மறவாமை
சிறிதேனும் நமக்கிருந்தால்!
உயிரோடு இருப்பதே அவரால் தான்
என்றுணர்ந்தால்!
உழவர்கள் வாழ்வுயர
நாம் முனைவோம்!
உழவர்கள் குடும்பத்தை தத்தெடுப்போம் !
அடிப்படை தேவைகளை அன்போடு
நாம் கொடுப்போம்!
உழவர்கள் தற்கொலையை உடனே தடுத்திடுவோம் !
உணவு தரும் உத்தமரை
உன்னதமாய் வாழ வைப்போம் !

***

”காளைகள் கோழைகளின் ஆயுதமா? அல்ல… அவை தமிழர் வீரத்தின் அடையாளச் சின்னம்!” என்று பெருமிதத்தோடு பகரும் திரு. செண்பக ஜெகதீசன், ”தானும் ஓர் உழவன் மகனே!” என்று தன்னைப் பெருமிதத்தோடு அறிமுகம் செய்துகொள்கிறார் இக்கவிதையில்!

உழவன் மகனாய்…

‘ஏர்ப்பின்னது உலகு’
என்பதை மீண்டும்
வரலாறு உண்மையாக்குகிறது..

உழவன் மேல்
ஒட்டியிருப்பது சேறல்ல-
உண்ணும் சோறு..

காளைகள்
கோழைகளின் ஆயுதமல்ல,
வீரத்தின் சின்னம்
வெற்றிக்கு வழிகாட்டி..

அதனால்,
நானும் ஒரு
உழவன் மகன் என்பதை
உரக்கக் கூறுகிறேன்…!

****

”பகட்டும் பகல்வேடமும் அறியாத உழவன், பகட்டின் (எருது) துணையோடு செய்யும் விவசாயமல்லவா வையத்தின் மையத்தொழில்! மண்ணைத் தோண்டி மனிதநேயம் காட்டும் உழவனும்  ஒரு சித்தனே” என்று விதந்துரைக்கிறார் பெருவை திரு. பார்த்தசாரதி.

உழவன் எனும்  “சித்தன்”

உழுதொழிலின்னும் நசிக்கவில்லையென உறுதிகாட்ட
உழவனுடன் நுகத்தடிகொண்ட காளையைப் படமெடுத்தாயோ..

மண்ணிலுண்டாம் பலதொழிலதில் சிறப்பென..
அவனியின் அச்சாம் உழுதொழிலே  பிரதானமாம்!

உலகத்துக்கே உணவளிக்கும் உழுதொழிலே..
உழவனிடும் முதலுழைப்பே முதலான உண்மையென்றோ!

[…]

உழவனின் இளைப்பாறா உழைப்புதனை  வியந்துசொல்லும் !

உழவுத்தொழிலுக்கு உயிரான தண்ணீரைத் தனதாக்கி உரிமைகொண்டதொரு அணையில் வீணாகத்தேக்கியதால்…

எங்கள்தேகமென்றைக்கும் சோர்வடையாது!

நல்லவேளை ஆதவனும் தென்றலையுமடக்க..
இயற்கை யார்கையிலும் அகப்படவில்லையய்யா!

ஓராயிரம் இன்னல்கள் வந்தாலுமெங்கள்..
உழுதொழிலொருபோதும் நில்லாது!

உழவோடு உழவுக்கு உதவுகின்ற ஒவ்வொன்றும்..
வாழ்வோடுவாழ்வுக்கு வேண்டியபல வரலாறுகூறுதுமே!

இணைந்து சோடியாய்  இனிதே இல்லறத்தைநடத்த..
எங்கள் நுகத்தடிதானே யின்றும்பாடம் சொல்லுதுமனிதருக்கே!

கீழ்மண்ணை மேல்மண்ணாக்க மேலும்கீழுமென..
எழுகின்ற ஏர்க்காலாயினு முங்கள்மனதில்…

எதிர்மறை யெண்ணங்கள்மறைய நேர்மறைமேலாகுமன்றோ!
கலப்பையொன்றைக் கையில்  பிடித்தவுடன்!

மண்ணைமட்டுமல்ல உங்கள் மனதையும்…
அல்லவா  சேர்த்துழுமெங்கள்  உழுகலப்பை!

உழுகின்ற உன்னதவேலை ஒருகணம் நின்றால்…
சுற்றும்பூமிகூட சுழலமறுக்குமொரு நொடிப்பொழுது!

எருமையென்கிறை எங்களினத்தின்மேல் வருகின்ற எமனிடம்கூட..
வறுமையில் எங்கள்வாழ்க்கை முடியாதெனச் சூளுரைப்போம்!

உண்டிகொடுக்க மண்டிபோட்டிழுக்கும் எங்களை..
மடுத்தவாயெல்லாம் தாங்கும் பகடென்றானே வள்ளுவன்!

[…]
ஏரோட்டுமெங்கள் சகோதரனின் வீரம்காக்க மெரினாவில்…
போராடுமுங்கள் தீரம் கண்டு கடலலைகூட கரைக்குவரமறுக்கிறதே!

தமிழரின் வீரமும் அறமும் எட்டுதிசையும் பட்டுத்தெரித்ததின்று
தமிழ்காளையினருமை பெருமையும் அலைகடல்தாண்டியது அணைக்கமுடியாநெருப்பாய்…

இட்டதெல்லாம் பயிரா 
பெற்றதெல்லாம் பிள்ளையாவெனக் கேட்க

வானிருந்துகீழ் நோக்கிப்பொழியும் மழையை
கீழிருந்து மேனோக்கும் எங்களுழவர் குடிசிறக்கவேணும்.

ஆயிரம் கவிகள் வந்தனர் போயினராயினுமெங்கள்
ஏருக்கு வலிமைசேர்த்த ஐயன்வள்ளுவன் போல்எவரே?..

அடக்கும் மூச்சினால் அனைத்தையும் அறிந்தவரென்றும்
கடவுளைக் கண்டு தெளிந்தாரை   “சித்தரென” சொல்வார்கள்

தன்னைத்தோண்டி தன்னையரியவைத்த பதினெண்மர்மத்தியில்
மண்ணைத்தோண்டி மனிதநேயம்காட்டும் உழவனுமொரு சித்தனே.

***

ஏற்றின் பெருமையை வரலாற்றின் ஏட்டில் ஏறவைக்கும் மாபெரும் புரட்சியைத் தமிழகம் கண்டுவரும் இன்றைய சூழலில், அதன் தாக்கத்தை இவ்வாரக் கவிதைகளும் எதிரொலிக்கத் தவறவில்லை. உழவின் உயர்வை, உழவனின் உன்னதத்தை எழுச்சியோடு எழுத்தில் வெளிப்படுத்தியிருக்கும் கவிஞர் பெருமக்களைப் போற்றுகின்றேன்!

இவ்வாரத்தின் சிறந்த கவிதை அடுத்து அணிசெய்ய வருகின்றது!

உய்யட்டும் உழவரினம்

களர்நிலத்தில் நீர்ப்பாய்ச்சிக் கவிதையென விதைதூவி
-காய்கனிகள் நெல்மணிகள் காண்பதுவே விவசாயம்
வளம்மிகவே அடிப்படையாய் வாழுமிந்த மானுடத்தில்
  -விவசாயி பெறுவதெல்லாம் வெற்றிலையாய் மதிப்புகளே
தளர்வுறுவார் உழவரெல்லாம் தக்கபடி தம்முழைப்பை
-தன்னாட்டார் உறிஞ்சிவிட்டு சக்கையெனத் துப்புகிறார்
களம்பலவும் இதைப்பேசும் காட்சிகளைக் காணுகிறோம்
-காரியத்தில் வெற்றியெல்லாம் கருத்தாக ஏற்றாலே…

வேர்மறந்தோம் உணவுக்கும் வெளிநாட்டான் பழக்கத்தை
-வகையாகக் கைக்கொண்டோம் வயிற்றுக்கும் தெளிவின்றித்
தேர்ந்தெடுத்தோம் தேசத்தின் உணர்வெல்லாம் விளையாட்டாய்த்
-தேடுகிறோம் தேகநலன் பேணாமல் தோற்கின்றோம்
பேர்சிறந்த இனமென்று பெருமைகளைப் பேசுகிறோம்
-பேருக்குப் பேசிவிட்டு பெட்டிக்குள் அடங்குகிறோம்
நேர்மையுடன் சிந்திப்போம் நெஞ்சத்தே உணர்வடைவோம்
      -நெல்லிக்காய் இருக்கையிலே நச்சுக்காய் கொள்வதுமேன்?

விளைநிலமும் விலைநிலமாய் உருமா(ற்)றும் பேராசை
-விவசாயம் சாகுமெனில் வாழ்வெங்கே சாகுபடி?
களைபலவும் கலையெனவே காணுவதன் தொடக்கமென
-கருத்தான பயிரெல்லாம் களைகின்ற பழக்கம்தான்.
அளைவுறுவர் உழவரெல்லாம் அயராமல் போராடி
  -அடைவதுவும் சொற்பமென ஆகின்ற கணக்காலே
வளையொளியும் எலியாக வாழ்வினிலே மற்றவரும்
-விவசாயப் பேருழைப்பை உண்கின்றார் ஏற்பிலையே

மண்வளமே நல்வளமாம் மற்றதெல்லாம் ஓரளவே
-மகத்தான உழவாலே மாநிலமும் உயர்ந்திடுமே
கண்நிறைந்து பயிர்செழிக்கக் காண்பதிலே இன்புறுவோம்
-கைநிறைய பலன்பெற்று களிக்கட்டும் உழவரினம்
விண்வியந்து மழைபொழியும் ஊருலகும் செழிக்கட்டும்
-விதவிதமாய் மலரட்டும் விஞ்ஞானம் உதவட்டும்
பண்பாடி வாழ்த்துகிறேன் பயிரெல்லாஞ் செழிக்கட்டும்
-பரம்பொருளை வேண்டுவமே பேருழவர் வெல்வதற்கே.

உழவினார் கைம்மடங்கின் இல்லை விழைவதூஉம்
விட்டேம்என் பார்க்கும் நிலை” என்றார் செந்நாப்போதார். உழவினார் இல்லையேல் உலகில் எவருக்கும் வாழ்வில்லை. ஆனால் நாமோ உழவரை உதாசீனம் செய்து வெளிநாட்டு வரவுகளுக்கு நம்மை அடகு வைத்திருக்கின்றோம். விளைநிலங்களை விலைநிலங்களாக்கி விவசாயத்தை வேரின்றிக் கொன்றொழிக்கத் துடிக்கின்றோம்!

”வயிற்றுக்குச் சோறிடல் வேண்டும் இங்கு வாழும் மனிதருக்கெல்லாம்!” என்றானே பாரதி. விவசாயம் அழிந்தால் அஃது எங்ஙனம் சாத்தியம்? சிந்திப்பீர்! விவசாயம் தழைக்கச் செய்வீர்! விவசாயி பிழைக்கச்செய்வீர்!” என்று தன் கவிதை வாயிலாக நமக்கு நல்லறிவு கொளுத்தியிருக்கும் திரு. இப்னு ஹம்துனை இவ்வாரத்தின் சிறந்த கவிஞரென அறிவித்துப் பாராட்டுகின்றேன்!

Print Friendly, PDF & Email
Share

Comments (3)

 1. Avatar

  இவ்வார சிறந்த கவிஞரென தேர்வு பெற்ற திரு. இப்னு ஹம்துனை மனதார வாழ்த்துகிறேன்.

 2. Avatar

  மகிழ்வும் நன்றியும்.

  நீண்ட நாள்களுக்குப் பின் வல்லமை தளம் வந்து படக்கவிதைப் போட்டியில் பங்கு பெற்றேன். என் கவிதை தேர்வு பெற்றிருப்பது உற்சாகம் ஊட்டுகிறது. புகழெல்லாம் பெரியோன் இறைக்கே.

 3. Avatar

  இந்த வார சிறந்த கவிஞராக தேர்ந்தெடுக்கப் பட்டிருக்கும் திரு.இப்னு ஹம்துன் அவர்களுக்கு என் உளமார்ந்த பாராட்டுக்கள்.

உங்கள் கருத்துகளைத் தெரிவிக்க