டோங்க்ரே மகராஜ் பாகவதத்திலிருந்து….
—————————————————-
அங்கை படுக்கையாய் அதரம் தலையணையாய்
செங்கமலக் கண்ணிமைகள் சாமரமாய் -தொங்குமெழில்
புல்லாக்கு மேல்குடையாய் வல்லா னுடன்வாழும்
புல்லாங் குழலுந்தன் பேறு….கிரேசி மோகன்….!
டோங்க்ரே மகராஜ் பாகவதத்திலிருந்து….
—————————————————-
அங்கை படுக்கையாய் அதரம் தலையணையாய்
செங்கமலக் கண்ணிமைகள் சாமரமாய் -தொங்குமெழில்
புல்லாக்கு மேல்குடையாய் வல்லா னுடன்வாழும்
புல்லாங் குழலுந்தன் பேறு….கிரேசி மோகன்….!
-முனைவர் மு.இளங்கோவன்
‘மாந்தரை மீமிசை மாந்தராக மலர்த்துவன பாடல்களாகும். பாட்டுஉணர்வு உணர்வுகளின் உயர்ச்சிக்கு வழிவகுக்கும். எனவே நம் முன்னோர்கள் சிறந்த பாட்டுணர்ச்சி உடையவர்களாகவும் இசையீடுபாடு கொண்டவர்களாகவும் விளங்கியுள்ளனர்’ என்ற கருத்தினைக் கொண்டவர் பெருஞ்சித்திரனார் ஆவார். மேம்பட்ட பாட்டுணர்வால், இருபதாம் நூற்றாண்டுப் பாட்டிலக்கிய வரலாற்றில் தமக்கெனத் தனித்த இடத்தைப் பெற்றவராக இவர் விளங்குபவர். இவரின் பாடல்களில் பொதிந்துள்ள குமுகச் சிந்தனைகளை இக்கட்டுரை முன்வைக்கின்றது.
பெருஞ்சித்திரனாரின் இயற்பெயர் துரை. மாணிக்கம் என்பதாகும். சேலம் மாவட்டத்தில் பிறந்த இவர் உலக ஊழியர், தமிழ் மறவர் வை. பொன்னம்பலனார், மொழிஞாயிறு பாவாணர் உள்ளிட்ட அறிஞர்களிடம் தமிழ் கற்கும் வாய்ப்பினைப் பெற்றவர். இப்பெருமக்கள் யாவரும் இயல்பிலேயே தமிழறிவும், தமிழ் உணர்வும் தழைத்தவர்களாக விளங்கியவர்கள். இவர்களிடம் கற்ற பெருஞ்சித்திரனார் பின்னாளில் தமிழ் இலக்கிய உலகில் போற்றப்படும் முன்னோடிப் பாவலராக மலர்ந்தவர்.
பெருஞ்சித்திரனார் இளம் அகவையிலேயே பாடல் எழுதவும், பாவியம் புனையவுமான பேராற்றல் கொண்டிருந்தவர். தம் பதின்மூன்றாம் அகவையிலேயே பூக்காரி என்னும் பாவியம் வரைந்தவர். கையெழுத்து ஏடுகள் நடத்தியவர். புதுச்சேரி அஞ்சல் துறையில் பணியில் இணைந்த இவருக்குப் பாவேந்தரிடம் அமைந்த தொடர்பு, பாட்டுத்துறையில் மிகப்பெரிய ஈடுபாட்டை உருவாக்கியது. பணிமாறுதலால் கடலூருக்கு இவர் சென்றபொழுது அங்குத் தென்மொழி என்னும் இலக்கிய ஏட்டினைத் தொடங்கி(1959) நடத்தியவர். இக்காலகட்டத்தில் தென்மொழி ஏட்டிலும் தமிழகத்தில் வெளிவந்த பிற ஏடுகளிலும் தமிழுணர்வு தழைக்கும் பாடல்களை இயற்றி இளைஞர்களுக்கும் பெரியவர்களுக்கும் தமிழுணர்வை ஊட்டும் பணியில் ஈடுபட்டவர்.
பெருஞ்சித்திரனார் ஐயை, கொய்யாக்கனி, பாவியக்கொத்து உள்ளிட்ட பாவியங்களையும், கனிச்சாறு, பள்ளிப் பறவைகள், நூறாசிரியம் உள்ளிட்ட பாட்டுத் தொகுதிகளையும் இயற்றியவர்.
பெருஞ்சித்திரனார் காலத் தமிழக நிலை
பெருஞ்சித்திரனார் பிறந்து (1933) வளர்ந்த காலகட்டம் தமிழகத்தின் குறிப்பிடத்தக்க காலகட்டமாகும். பெரியாரின் தன்மதிப்புச் சிந்தனைகள், பகுத்தறிவுப் பார்வை, ஆரிய, புராண, இதிகாச எதிர்ப்புகள் நாடெங்கும் சுடர்விட்டு நின்றன. தவத்திரு மறைமலையடிகளாரின் தனித்தமிழ்ப் பார்வை தமிழகத்தில் நல்ல வளர்ச்சி பெற்ற சூழல் நிலவியது. பாவாணரின் மொழி, இன மீட்சி ஆய்வுகள் மக்களிடம் பரவலாக அறிமுகம் பொற்றிருந்தன. சமற்கிருத மேலாண்மை, கட்டாய இந்தித் திணிப்பு, ஆங்கில வல்லாதிக்கம் மேலோங்கியிருந்த காலகட்டத்தில் பெருஞ்சித்திரனாரின் இலக்கியப் பணி தொடங்கியது. தமிழகத்தில் நிலவிய இச் சூழலுக்கு ஆதரவாகவும், எதிராகவும் கல்வி உலகத்தில் கருத்துடையோர் இருந்தமையையும் இங்குக் கவனத்தில் கொள்ளுதல் வேண்டும்.
வடமொழிச் சார்பாளர்களும், அம்மொழியிலிருந்தே தமிழுக்கு அனைத்தும் வந்தன என்போரும், வடமொழிச் சார்பின்றித் தமிழ் தனித்து இயங்காது என்போரும் அக்காலத்தில் மிகுந்திருந்தனர். தமிழ்ப் பேராசிரியர்கள் சிலரும் இக் கருத்துகளைக் கொண்டிருந்தனர். மேலும் கொச்சைத் தமிழ்தான் தமிழ் என்றும், தூய தமிழ் காலத்துக்கு உதவாது என்றும், இந்தி படிப்பது நன்மை தரும் என்றும் சில அறிஞர்கள் கருத்தினை முன்வைத்தனர். இவற்றை எதிர்க்கும் போர்முரசமாகப் பெருஞ்சித்திரனாரின் பாட்டுக்குரல் ஒலித்துள்ளது. தமிழீழப் போராட்டம் வேர்விட்டுப் பெரிய அளவில் வளர்ந்து கொண்டிருந்த காலம் பெருஞ்சித்திரனாரின் இயக்கப்பணிக் காலமாகும். இதனால் இயக்க ஈடுபாடுள்ள இளைஞர்களுக்கு ஆதரவுக் குரல் கொடுப்பவராகவும் பெருஞ்சித்திரனார் விளங்கினார்.
பெருஞ்சித்திரனார் தமிழில் நல்ல புலமையும், தமிழியச் சிந்தனையும் கொண்டவராக விளங்கித் தமக்கெனத் தனித்த கொள்கைகளை வகுத்துக்கொண்டு செயல்படத் தொடங்கியவர். தமிழினத்தின் பெருமையையும் அவர்களின் மொழிச் சிறப்பையும் இடைக்காலத்தில் தமிழுக்கு நேர்ந்த கேடுகளையும் வரலாற்று வழியாக உணர்ந்திருந்த பெருஞ்சித்திரனார் தமிழர்களையும் தமிழ்மொழியையும் மேம்படுத்தும் நோக்கில் தம் படைப்புகளை வழங்கத் தொடங்கினார். தம் கொள்கைகளை நிலைநாட்டவும், தம் எதிர்ப்புகளை வெளிப்படுத்தவும் இவர் எழுதிய எழுத்துகள் இவருக்குப் பாராட்டுகளைப் பெற்றுத் தந்தமை போல் எதிர்ப்புகளையும், சிறைத்தண்டனைகளையும் பெற்றுத் தந்துள்ளமையை இவர் வரலாற்றைக் கற்கும்பொழுது அறியமுடிகின்றது.
தமிழ்நாடு என்பது இன்றுள்ள கன்னியாகுமரிக்குத் தென்பகுதியில் இருந்த பெருநிலபரப்பு; பண்டைக்காலத்தில் இது இலெமூரியாக் கண்டமாக விளங்கியது; இந்த நிலப்பரப்பில்தான் முதல் மாந்தன் தோன்றினான்; அவன் பேசியமொழி தமிழ்; இத்தமிழ் மொழியே உலக மொழிகளுக்குத் தாய்; ஆரியத்திற்கு மூலம்; இங்கு வாழ்ந்த மக்களே உலகம் முழுவதும் பரவி வாழ்கின்றனர்; காலப் பழைமையால் இவர்கள் பேசும் மொழிகளில் திரிபுகள் உண்டாயின எனத் தம் ஆசிரியர் பாவாணர் கொள்கைகளை முழுவதும் கொண்டவர் பெருஞ்சித்திரனார். மேலும் மதம் வழியாகப் பின்னப்பட்டுள்ள சமூக இழிவுகளிலிருந்து தமிழர்கள் விடுபட்டு, கலை, இலக்கியப் பண்பாட்டில் மேம்பட்டவர்களாக வாழவேண்டும் என்ற கொள்கையையும் வரித்துக்கொண்டவர்; ‘கெஞ்சுவதில்லை பிறர்பால்; அவர்செய் கேட்டினுக்கும் அஞ்சுவதில்லை; மொழியையும் நாட்டையும் ஆளாமல் துஞ்சுவதில்லை” என்ற நிலைப்பாட்டினைக் கொண்டிருந்தவர். எனவே இக்கருத்துகளை நிலைப்படுத்தவும், பரவலாக்கவும், தம் கொள்கைகளுக்கு முரண்பட்டவர்களை எதிர்த்துக் கருத்துரைக்கவும் அஞ்சாதவராகப் பெருஞ்சித்திரனார் விளங்கியவர். இக்கொள்கைகளை நிலைநாட்ட எழுத்தாலும் பேச்சாலும், இயக்கத்தாலும் பாடுபட்டவராகப் பெருஞ்சித்திரனாரை மதிப்பீடு செய்யலாம்.
பெருஞ்சித்திரனாரின் படைப்புகளில் தமிழ்க் குமூகத்தில் உள்ள சிறுவர்கள், மாணவர்கள், இளைஞர்கள், பெண்கள், பெரியவர்கள், ஆசிரியர்கள், அறிஞர்கள், புலவர்கள் அரசியல் தலைவர்கள், தொழிலாளர்கள், இதழாளர்கள் என அனைவரும் தமிழ்ப்பணியாற்ற வேண்டும், இழந்த பெருமையை மீட்க வேண்டும்; பகையை நீக்குவதற்குப் பாடுபட வேண்டும் என்பன உள்ளடக்கமாக அமைந்துள்ளன. மொழி வழியாகவே குமுகம் கட்டமைக்கப்படுகின்றது. அனைத்துக்கும் ஊற்றுக்கண்ணாக இருப்பது மொழி என்று உணர்ந்து சாதியாலும் மதத்தாலும் பிரிந்துகிடக்கும் தமிழர்களை ஒன்றிணைக்க முனைந்தார். சாதி ஒழிப்புப் பாடல்கள் பலவற்றை எழுதியவர். தமிழர்களை ஒன்றுபடுத்தும் பல பாடல்களும் இவரால் படைக்கப்பட்டுள்ளன.
“என்மொழி என்னினம் என்நாடு நலிகையில்
எதனையும் பெரிதென எண்ணமாட்டேன் – வேறு
எவரையும் புகழ்ந்துரை சொல்லமாட்டேன்! – வரும்
புன்மொழி, பழியுரை, துன்பங்கள் யாவையும்
பொருட்டென மதித்துளம் கொள்ள மாட்டேன்!- இந்த(ப்)
பூட்கையில் ஓரடி தள்ளமாட்டேன்!
என்று கொள்கை வாழ்க்கை வாழ்ந்தவர் பெருஞ்சித்திரனார்.
“மூச்சுள்ள வரைக்கும் – உலகத் தமிழின
முன்னேற்றம் ஒன்றே பேசுவேன் – அதில்
ஏச்சுகள் பேச்சுகள் ஆயிரம் வரினும்
எதிர்நின் றிருகை வீசுவேன்…….”
என்று பாடிய இவர்,
“எந்தக் கட்சியில் நீயிருந்தாலும்
இனத்தை மறந்துவிடாதே! தமிழா
இனத்தை மறந்துவிடாதே!’
என்று பிளவுபட்டுக் கிடக்கும் தமிழர்களை ஒன்றுபடுத்த விழைந்து எழுதியுள்ளார்.
தமிழகத்தில் தமிழைக் கற்போரும் கற்பிப்போரும் பேசுவோரும் கணக்கின்றி உள்ளனர். வெற்று ஆரவாரக் கூச்சல்களால் பயன் இல்லை எனவும், ஒவ்வொருவரும் தமிழ்ப்பற்றுடன் விளங்கவேண்டும் எனவும் பெருஞ்சித்திரனார் விரும்பியவர். கல்வி நிலையங்கள் தமிழ்ப்பற்றை ஊட்டும் இடமாக விளங்கவேண்டும்; ஆசிரியர்கள் வகுப்பறைகளில் தமிழ்ப்பற்றை ஊட்டும் பணியைத் திறம்படச் செய்தல் வேண்டும்; மாணவர்கள் தமிழ்ப்பற்றுடன் இருக்க வேண்டும்; நாட்டை ஆளும் தலைவர்கள் தமிழ்ப்பற்றுடன் விளங்கி ஆக்கப்பணிகளில் முன்னிற்க வேண்டும் எனவும் குறிப்பிட்டுத் தமிழ்ப்பற்றுக்கு வழிகாட்டியவர். இத்தகு வைர வரிகளை மனத்துள் தேக்கிய மாணவர்களும், ஆசிரியர்களும், தலைவர்களும் கூடி இந்தி எதிர்ப்புப் போரில் வினையாற்றி வெற்றி வாகை சூடியமையை இங்கு எண்ணிப்பார்த்தல் வேண்டும். இந்தி எதிர்ப்புப்போரில் ஈடுபட்ட அண்ணாமலைப் பல்கலைக்கழகத்து மாணவர்களின் தமிழ்ப்பற்றுக்குக் காரணமாகப் பெருஞ்சித்திரனாரின் பாடல்கள் அக்காலத்தில் விளங்கின.
தமிழ்த்தொண்டு செய்வோரின் கடமையைப் பின்வருமாறு குறிப்பிடுவார்.
“தமிழ்ப்பற்றை ஊட்டாத தமிழ்க்கல்வி
தமிழர்க்குத் தீங்கு செய்யும்!
தமிழ்ப்பற்றை எழுப்பாத கணக்காயர்
தருந்தமிழால் தமிழர் தாழ்வர்!
தமிழ்ப்பற்றை வளர்க்காத மாணவரால்
தமிழ்நாட்டைக் கேடு சூழும்!
தமிழ்ப்பற்றுக் கொள்ளாத தலைவரெல்லாம்
தமிழ்நாட்டுப் பகைவ ராமே!” (1960, கனிச்சாறு, தொகுதி 1)
பேராயக் கட்சியினரும் அக்கட்சியின் கொள்கைகளில் ஈடுபாடுகொண்ட அறிஞர்கள் சிலரும் வடவெழுத்துகளை வகைதொகையின்றிக் கலந்து எழுதினால்தான் தமிழ் வளரும் என்ற கருத்தைக் கொண்டிருந்தனர். தமிழ்ச்சுவையறியாத எளிய நிலை மக்களும் இக்கருத்தை மொழிவது உண்டு. இதனைப் பெருஞ்சித்திரனார்,
“சந்தோஷம் என்பதற்கு ‘ஷ’ வேண்டுமாம்;
ஜனநாயகத்திற்கு ‘ஜ’ தேவையாம்;
சிந்தித்துப் ‘புஸ்கத்’தை ‘அக்ஷரத்’தைச்
சொல்லுங்கால் ‘ஸ’ வேண்டும் ‘க்ஷ’ வும் வேண்டும்!
இந்தவெழுத் தெல்லாம்நம் தமிழில் சேர்ந்தால்,
இந்நாட்டைத் தமிழ்ஆளத் தகுதி யாகும்!
விந்தையல்ல! ஆராய்ச்சி! மொழியாராய்ச்சி!
வெள்ளெலும்பு கண்டார், வெள்ளெலும்பே கண்டார்!
குழுமுடிவைக் கேட்டிருந்த அமைச்சரெல்லாம்
‘கோணல் முடிவல்ல’ ‘நல்ல முடிவே’ என்றார்!…
………………………….. ……………….. நம்மனோர்க்குக்
கழுநீரா ஓடுவது உடலில்! தீங்கைக்
கண்டபின்னும் பிணம்போல இருப்பதற்கே! (1960, கனிச்சாறு, தொகுதி 1)
என்று கடிந்து எழுதியுள்ளார். தமிழ் மொழியில் பிற எழுத்தோ, பிற சொல்லோ கலந்தால் அதன் தூய்மை கெடும் என்பதை அறியாமல் அக்காலத்தில் ஆட்சியில் இருந்தோர் எடுத்த முடிவுகளைப் பெருஞ்சித்திரனார் துணிவுடன் கண்டித்துள்ளதை இந்தப் பாடல் நமக்கு உணர்த்துகின்றது.
தனித்தமிழ் இயக்க அறிஞர்களின் தொடர்ந்த செயல்பாடுகளால் வடவெழுத்து, வடசொற்கலப்பு தடுத்து நிறத்தப்பட்டு எங்கும் தூய தமிழ் நிலைபெற்றமை வரலாறாகும். ‘அபேட்சகர்’ என்பது வேட்பாளர் எனவும், ‘அக்கிரசனாதிபதி’ என்பது தலைவர் எனவும், ‘ஸ்டேஷன்’ என்பது நிலையம் எனவும், ‘வந்தனா உபசாரம்’ என்பது வரவேற்புரை எனவும் வழக்கிற்கு வந்தமைக்குத் தனித்தமிழ் அறிஞர்களின் உழைப்பு பெரிய அளவில் பயன்பட்டுள்ளது.
இளைஞர்களுக்குத் தமிழ்ச்சிறப்பை எடுத்துரைத்து அவர்களைத் தமிழ் மறவர்களாக மாற்றும் பணியைப் பெருஞ்சித்திரனார் பாடல்கள் செய்துள்ளன. தமிழ்ச்சிறப்பு எடுத்துரைத்தல், தமிழ்ப்பகைவர்களை அடையாளம் காட்டல், பகைமுடித்து மொழிகாத்தல் என நெறிப்படுத்தும் பணியைப் பெருஞ்சித்திரனார் பாடல்கள் செய்துள்ளன.
“மொழிப்போர் புரி! செழிப்பாந் தமிழ்
மொழிப்பால் குடிப்பாய்! – இனிப்
பழிப்பார் உனை; அழிப்பார் பினை;
விழிப்பாய் தமிழா!
அறப்போர் புரி! சிறப்பாந் தமிழ்
மறப்போர் புரிவாய்! – உயிர்
துறப்பார்க் கினிப் பிறப்பார் வயின்
இறப்பே தடடா!
சிறுத்தாய் என ஒறுத்தார்; துயர்
பொறுத்தாய் பலநாள்! – உயர்(வு)
அறுத்தார்; குரல் மறுத்தார்; நிலை
நிறுத்தாய் நெடுந்தோள்!” (1963, கனிச்சாறு, தொகுதி 1)
என்று எழுதியுள்ள வரிகள் பெருஞ்சித்திரனாரின் தமிழ்ப்பற்றினையும் இன மேன்மைச் சிந்தனையையும் எடுத்துரைப்பதுடன் அவர்க்கு அமைந்திருந்த யாப்பாளுமையையும் புலமைச்செறிவையும் நமக்குப் புலப்படுத்துகின்றன.
பெருஞ்சித்திரனார் 1965 ஆம் ஆண்டு அளவில் இந்தி எதிர்ப்புப் பாடல்களைத் தம் இதழ்களில் எழுதி மாணவர்களுக்கும் மக்களுக்கும் தமிழ் உணர்வூட்டியதால் அரசால் சிறைசெய்யப்பெற்று, வேலூர்ச் சிறையில் தளைப்படுத்தப்பட்டார். அப்பொழுது மார்கழி மாதம் என்பதால் திருவெம்பாவை, திருப்பாவைப் பாடல்களைப் பெண்டிர் பாடுவதை அறிந்த பெருஞ்சித்திரனார் பாவைப் பாடல்களின் அமைப்பில் பாடல்களை எழுதிப் பெண்குலத்தைத் தமிழ்காக்கும் பணிக்கு அழைத்துத் தம் பங்களிப்பை வழங்கியுள்ளார். 30 பாடல்களைக் கொண்ட இப்பாடல்கள் ‘செந்தமிழ்ப்பாவை’ என்ற தலைப்பில் அமைந்துள்ளது.
“கற்றவரோ செந்தமிழால் காசுபணம் சேர்க்கின்றார்!
மற்றவரைக் கேட்பானேன்! மான்விழியே! நாட்டுநலம்
உற்றசிலர் நின்று உரிமைதரக் கேட்டாலோ
கொற்றவரும் அன்னார் குரலை நெரிக்கின்றார்!
குற்றமென்று கூறிக் கொடுஞ்சிறையுள் தள்ளுகின்றார்!
முற்றும் தமிழரினம் மூங்கையதாப் போகுமுன்
பெற்ற குலத்தோரே பேருரிமை காக்கவல்லார்!
பொற்றொடியே துஞ்சல் புரையேலே ரெம்பாவாய்!
மேற்கண்ட பாடலில் கற்றவர்களின் நிலையையும், அரசாட்சியில் இருப்பவர்களின் நிலையையும் எடுத்துரைத்துத் தமிழினம் அழியும் முன்பாக இவ்வினத்தைக் காப்பதற்குப் பெண்குலத்தோர் முன்வரவேண்டும் என்று குறிப்பிடுவதை இங்குக் கவனித்தல் வேண்டும்.
“செந்தமிழுக்குத் தீதோ? தெளிதேனில் வெங்கசப்போ?
எந்தமிழர் செந்நாவுக் கிந்தியோ? ஏலோம் யாம்!
கந்தை உடுப்போம்! கிழங்குண்போம் கான்செல்வோம்!
இந்தி படிக்க இசையோம் யாம்” என்பதனை
வெந்த உளத்தோடும் வெல்கின்ற வீறோடும்
இந்தத் தமிழ் நிலத்தின் ஏந்திழையார் கூறுவரேல்
வந்து புகுமோ? வடக்குமொழி? வார்குழலாய்!
முந்தி எழுந்தே முழங்கேலோ ரெம்பாவாய்!
இந்தப் பாடலில் பழைய வடிவத்தை எடுத்துக்கொண்டு காலத்தேவைக்கு ஏற்ற கருத்தைப் பொதியவைத்து எழுதியுள்ள திறம் போற்றுதலுக்கு உரியது. குமுகத்தில் பெரும்பான்மைப் பெண்கள் பக்திவயப்பட்டவர்களாக இருப்பதும், சமய, மத நம்பிக்கை கொண்டவர்களாக இருப்பதும் கண்கூடு. இவர்களைச் சென்று சேரவேண்டிய கருத்துகளை இவர்களுக்கு அறிமுகமான வடிவத்தில் பெருஞ்சித்திரனார் வழங்கியுள்ளமை மிகச் சிறந்த உத்தியாகக் கொள்ள வேண்டும்.
மொழியியல் பேராசிரியர்கள் சிலர் எழுதுவதெல்லாம் இலக்கியம் என்று கூறும் கருத்தைப் பெருஞ்சித்திரனார் மறுத்து,
“யாழிசைப்போனுக்கு யாழ்ப் பயிற்சி வேண்டும்!
பாழாய் இசைப்போன் பழிக்கப்படுவான்;
நாட்டியங் கற்பரே நாட்டியம் ஆடலாம்!
பாட்டுப் புலவனும் பண்கள் பயிலுவான்!” (1965, கனிச்சாறு முதல்தொகுதி, பக்கம், 46)
என்று இலக்கியம் எழுதுவோர் நல்லறிவு பெற்றவராகவும் மொழிநலம் பேணுபவராகவும் இருக்க வேண்டும் என்று கடிந்து, அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தின் மொழியியல்துறைப் பேராசிரியரை இடித்து எழுதியுள்ளமை இவரின் மொழிக்காப்பு முயற்சிக்குச் சான்றாக அமைந்துள்ளது.
தமிழகத்தில் வெளிவரும் தாளிகைகள், இதழ்கள் யாவும் தமிழ்ப்பெயரின்றி வருகின்றன; தமிழ்ப் பண்பாட்டுக்கு எதிரான கருத்துகளையும் படங்களையும் தாங்கி வருகின்றன. இதனைக் கண்டித்துப் பல பாடல்களை எழுதியுள்ளார். மிகுதியான மக்கள் படிக்கின்றனர் என்றோ, இதழ் நடத்துபவர்கள் தமிழ்ப்பற்று உடையவர்கள் என்றோ சிறிதும் எண்ணாமல் தம் மொழிக்கு ஊறு ஏற்படுத்தும் வேலைகளை யார் செய்தாலும் அறச்சீற்றம் கொண்ட அரிமாவாகப் பெருஞ்சித்திரனார் பாடியுள்ளார்.
“தமிழரசின் அவைத்தலைவர்
செய்தித்தாள் நடத்துகின்றார்;
‘தினத்தந்தி’ ‘ராணி’ என்றே!
உமிழ்கின்ற கொச்சைநடை;
உடை களையும் புகைப் படங்கள்;
ஊர்கெடுக்கும் உரைகள்; காட்சி!
தமிழ் நாட்டின் இளைஞர்கை
மிளிர் தலெல்லாம் ‘பேசும்படம்’
‘குமுதங்’கள் இழிந்த நூல்கள்! (1967, கனிச்சாறு, தொகுதி 1,பக்கம் 52)
எனவும்,
“அவாள் இவாள் என்னும் ஆனந்த விகடன்
கவர்ச்சி ஓவியக் கழிசடைக் குமுதம்” (கனிச்சாறு, முதல்தொகுதி, பக்கம் 46)
எனவும் தமிழ்ப் பண்பாட்டைக் குலைக்கும் ஏடுகளைப் பெருஞ்சித்திரனார் கண்டித்து எழுதியுள்ளார். இவர் எழுதுவது போன்றே இவ்வேடுகளின் இதழ்ப்பணிகள் இருந்ததை நாம் கவனத்தில் கொள்ள வேண்டும். தமிழ்நாட்டு ஏடுகள் வகைதொகையின்றித் தொடக்கத்தில் சமற்கிருதச் சொற்களைக் கலந்து எழுதுவதையும், தமிழ் மக்களின் அறிவை மழுங்கடிக்கும் செய்திகளைப் பரப்பியதையும், தமிழர் தலைவர்களின் செயல்பாடுகளை வெளியிடாமல் இருட்டடிப்புச் செய்தமையையும் இவண் கவனத்தில் கொள்ளுதல் வேண்டும். பெண்களை இழிவுப்படுத்தும் வகையிலும் இந்த ஏடுகள் அட்டைப்படங்களை வெளியிட்டு வருகின்றமை கவர்ச்சியைத் தந்து வணிகம் செய்யும் இழிசெயல் தொடர்வதை நாகரிகக் குமுகம் தம் ஆதரவு நல்கலைத் தவிர்த்தல் வேண்டும் என்கின்றார்.
‘தமிழ் வாழ்க தமிழ் வாழ்க’ என்று வெற்றுரை முழங்குவதால் தமிழ் வாழாது என்று கண்டு உணர்ந்து, இன்றைய அரசியல், பொதுமக்கள் நிலையினைத் தமிழ் வாழ வேண்டுமா? என்ற தலைப்பில் பெருஞ்சித்திரனார் பதிவு செய்துள்ளார்.
“பட்டிமன்றம் வைப்பதிலும் தமிழ்வா ழாது;
பாட்டரங்கம் கேட்பதிலும் தமிழ்வா ழாது;
எட்டிநின்றே இலக்கியத்தில் இரண்டோர் பாட்டை
எடுத்துரைத்துச் சுவைபடவே முழக்கி னாலும்
தட்டி, சுவர், தொடர்வண்டி, உந்துவண்டி
தம்மிலெல்லாம் “தமிழ் தமிழ்” – என்றெழுதி வைத்தே
முட்டி நின்று தலையுடைத்து முழங்கி னாலும்
மூடர்களே, தமிழ்வாழப் போவ தில்லை!
என்று கூறி தமிழறிஞர்களைப் பாதுகாப்பதன் வழியாகவும், இழந்த பெருமைகளை மீட்பதன் வழியாகவும் தமிழ் வளர்க்க முடியும் என்கின்றார் (1970, கனிச்சாறு,1: 55).
பெருஞ்சித்திரனார் பாடல்களில் தமிழகத்தில் நடைமுறைப்படுத்த வேண்டிய தாய்மொழி வழிக்கல்வி குறித்த செய்திகள், தமிழ் வழிபாடு (கனிச்சாறு 1: 83), தமிழக அரசு செய்யவேண்டிய தமிழ்ப்பணிகள், பொதுமக்கள் செய்ய வேண்டிய தமிழ்ப்பணிகள், மாணவர்கள் ஆசிரியர்கள் செய்யவேண்டிய தமிழ்ப்பணிகள் யாவும் பதிவுசெய்யப்பட்டுள்ளன. கண்ணெதிரே தமிழுக்கு நேர்ந்துவரும் அழிவுகளைக் கண்டு நேர்க்கூற்றாகவும், தாயின் கூற்றாகவும், பிறர்கூற்றாகவும் பாடல்களைத் தந்துள்ளார்.
“கனித்தமிழ் நிலத்தில்
கண்ணெனும் தமிழில்
கற்பதுதானே சரி!
தனித்தமிழ் மொழியைத்
தாழ்த்திய பகையைத்
தணலிட்டே, உடன்எரி !” (கனிச்சாறு, தொகுதி 1, பக்கம்,58)
என்று பாடியுள்ளமை இதற்குக் காட்டாகும்.
சுனிதிகுமார் சட்டர்சி என்னும் வடநாட்டு அறிஞர் சமற்கிருத உதவியின்றித் தமிழ் இனிது இயங்காது என்றும், சமற்கிருதத்தின் தயவில் தமிழ் வளர்ந்தது என்றும் கூறியமையைக் கண்டிக்கும் பெருஞ்சித்திரனார், அறிஞர் தொ.பொ.மீ. உள்ளிட்டோர் இக்கருத்துக்கு உடன்பட்டு இருந்ததையும் கண்டிக்கத் தயங்கவில்லை. (கனிச்சாறு, தொகுதி 1: 60)
ஆங்கில இதழ் நடத்துவோர் அதில் பிழையின்றி நடத்த வேண்டும் என்று கூறிக்கொண்டு, தமிழில் இதழ் நடத்தும்பொழுது அதில் பிழை மலிய எழுதுவதைப் பெருஞ்சித்திரனார் கண்டித்துள்ளார் (கனிச்சாறு 1:62).
தமிழர்கள் கட்சியிலும், சாதியிலும் தம்மை இணைத்துக்கொள்வதை விடுத்து மொழியடையாளம் கொண்டு “தமிழர்” என்று கூற வேண்டுமெனப் பல பாடல்களில் எழுதியுள்ளார் (கனிச்சாறு 1: 62). தமிழ் இளைஞர்களும் பெண்களும் ஒருவரையொருவர் திருமணம் செய்துகொள்ள வேண்டும் எனவும் கூறுகின்றார். தமிழ்ப் பற்றில்லாதவர் எழுதும் நூல்களை ஒதுக்கும்படி வேண்டுகின்றார். தமிழ் நன்கு பயன்படுத்தாத திரைப்படங்கள், வானொலிகளைத் தவிர்க்க வேண்டும் என்கின்றார். தமிழர்களையும் தமிழர் பெருமைகளையும் இழிவுசெய்யும் வரலாற்று நூல்களைத் தவிடுபொடியாக்கி நீக்க வேண்டும் என்கின்றார். பணந்திரட்டும் நோக்கில் நடத்தப்படும் ஏடுகளின் இழிதொழிலை எடுத்துப் பாடியுள்ளார் (கனிச்சாறு1:74). காமச்செய்திகளைக் கவினார்ந்த சொற்களால் வெளிப்படுத்தும் கயவர்களை இனங்கண்டு ஒதுக்க வேண்டும் என்கின்றார் (கனிச்சாறு 1: 71).
தமிழ் எழுத்துச்சீர்திருத்தம் என்னும்பெயரில் தமிழ் அழிப்பு முயற்சி இருபதாம் நூற்றாண்டில் பலரால் முன்னெடுக்கப்பட்டு அவ்வப்பொழுது அறிஞர் பெருமக்களால் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளது. இந்த முயற்சியைக் கடிந்து எழுதும் பெருஞ்சித்திரனார் நாட்டில் சாதி, மதம் காரணமாகவும், இன்னும் பல இழிவுகள் காரணமாகவும் மக்கள் பல்வேறு இன்னல்களை அடைந்து வருகின்றனர். அந்த நிலைகளை மாற்றாமல் எழுத்துச் சீர்திருத்தம் என்ற மாற்றம் வேண்டுகின்றனரே என்று கடிந்து கூறுவதைத்,
“தொத்துபிணி யெனுஞ்சாதி இனுந்தொலைய வில்லை;
தொல்லைமதக் கேடுகளும் வளர்ந்துவரும் நாட்டில்!
செத்துசெத்துப் பிழைக்கின்றார் ஏழையரிம் மண்ணில்;
சிறுகுடிலும் வாய்க்காமல் தெருக்களில்வாழ் கின்றார்.
ஒத்துவராக் கொள்கையினால் உழைப்பாளர் கூட்டம்
ஓயாத தொல்லைகளால் நலிகின்றார்! இன்னும்
எத்தனையோ சீர்திருத்தம் இங்கிருக்கப் பண்டை
எழுத்துக்களைத் திருத்தவந்தார், எளிமையது வென்றே! (கனிச்சாறு 1:79)
என்று பாடியுள்ளார்.
இன்று தமிழ்கற்றவர்களின் நிலையை நினைத்துப் பெருஞ்சித்திரனார் கவலை தோய்ந்து எழுதியுள்ளார். இலக்கண இலக்கியத் தேர்ச்சி இல்லை எனவும், புலமையில்லை எனவும், கொள்கைத் தோய்வு இல்லை எனவும் நேர்மை, ஒழுங்கு, மானம் முதலிய பண்புகள் இல்லை எனவும் கூறி, பெரியோரைச் சேர்தல், கிளையினைப் புரக்கும் இயல்பு யாவும் அற்றவர்களாக உள்ளனர் எனக் கூறி அற்றைநாள் புலவரைப் போல் ஒருவரும் இல்லை என்று குறிப்பிட்டுவிட்டு,
“மண்டுபே ரறிவால் மல்கு
மறைமலை யடிக ளைப்போல்
பண்டித மணிபோல், சோம
சுந்தரப் பாவ லர்போல்
விண்டுசெந் தமிழ்வ ளர்த்த
விறல்மிகு திறமை மிக்கோர்
உண்டெனில் அன்றோ நந்தம்
ஒண்டமிழ் வளரும் கண்டீர்! (கனிச்சாறு 1:81)
என்று நாட்டில் பெரும்புலமை வாய்த்த அறிஞர்கள் இருத்தல் வேண்டும் என்று தம் விருப்பத்தைப் பதிந்துள்ளார்.
நிறைவுரை
தமிழர்களின் உயர்வுக்குத் தமிழ்மொழியே அடிப்படையானது என்று பெருஞ்சித்திரனாரின் பாடல்கள் குறிப்பிடுகின்றன. மேலும் அம்மொழியைக் காப்பதன் வழியாகவும், அம்மொழியினர் ஒன்றுபடுவதன் வழியாகவும் தமிழ்க் குமுகம் மேம்படும் என்ற கருத்தினையும் முன்வைத்துள்ளன. பல்வேறு சிறப்புகளைப் பெற்றிருந்த தமிழ்க் குமுகம் பலநிலைகளில் தாழ்வுற்றிருப்பதைப் பெருஞ்சித்திரனார் பாடல்கள் எடுத்துரைத்துத் தமிழர்களும் தமிழ்மொழியும் மேம்பாடு உறுவதற்கான வழிமுறைகளையும் தீர்வுகளையும் சொல்லியுள்ளன. இருபதாம் நூற்றாண்டில் நிலவிய பிறமொழி வல்லாண்மை எதிர்ப்பு, தனித்தமிழ்க் காப்பு, சாதியெதிர்ப்பு, பெண்ணுரிமை, அரசியல் உள்ளிட்ட குமுகச் சிக்கலை நடுவணாகக் கொண்டு பல பாடல்களைத் தந்த பெரும்பாவலராகப் பெருஞ்சித்திரனார் விளங்கியுள்ளார்.
குறிப்பு: என் கட்டுரையை எடுத்தாள விரும்புவோர் இசைவுபெறுக. நூல் எழுதுவோர், வெளியிடுவோர் எடுத்த இடம் சுட்டுக.
நன்றி: தமிழ்த்துறை, சமால் முகமது கல்லூரி, திருச்சிராப்பள்ளி
பவள சங்கரி
அன்பிற்கினிய நண்பர்களே!
வணக்கம். கண்ணையும், கருத்தையும் கவரும் படமொன்றைக் கண்டவுடன் உங்கள் உள்ளத்தில் கவிதை ஊற்றெடுக்கும் திறமை கொண்டவரா நீங்கள்?

ராம்குமார் ராதாகிருஷ்ணன் எடுத்த இந்தப் படத்திற்கு ஒரு கவிதை எழுதுங்கள். இதனை நம் வல்லமை ஃப்ளிக்கர் குழுமத்தின் பொறுப்பாசிரியர் திருமதி. சாந்தி மாரியப்பன் தேர்ந்தெடுத்து அளித்துள்ளார்.
இந்த ஒளிப்படத்திற்கு ஏற்ற கவிதையை நல்ல தலைப்புடன் பின்னூட்டமாக இடலாம். ஒருவரே எத்தனை கவிதைகள் வேண்டுமானாலும் எழுதலாம். வரும் சனிக்கிழமை (21.01.2017) வரை உங்கள் கவிதைகளை உள்ளிடலாம். அவற்றில் சிறந்த கவிதையை நம் வல்லமை இதழின் ஆசிரியர்குழு உறுப்பினரும், தமிழிலக்கிய ஆராய்ச்சியாளருமான திருமதி மேகலா இராமமூர்த்தி தேர்வு செய்வார். ஒவ்வொரு வாரமும் சிறந்த கவிஞர் ஒருவர் தேர்ந்தெடுக்கப்படுவார். ஒருவரே பலமுறை பங்கு பெறலாம். இவ்வாய்ப்பு சிறந்த கவிஞராகத் தேர்ந்தெடுக்கப்படும் கவிஞர்களுக்கும் உண்டு. 12 மாதமும் தேர்வுபெறும் ஒளிப்படக் கலைஞர் / கவிஞர்களிலிருந்து ஆண்டின் சிறந்த கலைஞரும், கவிஞரும் தேர்வு பெறுவார்கள். ஒளிப்படத்திலிருந்து தாக்கமும் தூண்டுதலும் பெற்று எழும் அசல் படைப்புகளை ஊக்குவிப்பதே இதன் நோக்கம். கவிஞர்களையும் கலைஞர்களையும் கண்டறிந்து ஊக்குவிப்பதற்கான அடையாளப் போட்டி இது; வெற்றி பெறுபவர்களுக்குப் பரிசளிப்பு இருக்காது; பாராட்டு மட்டுமே உண்டு. ஆர்வமுள்ளவர்களைப் பங்குபெற அழைக்கிறோம்.
போட்டியின் நடுவரான திருமதி. மேகலா இராமமூர்த்தி புதுச்சேரி மாநிலத்தின் காரைக்காலில் பிறந்தவர். கணிப்பொறி (MCA) மற்றும் தமிழில் (MA) முதுகலைப் பட்டம் பெற்ற இவர், அமெரிக்க தமிழ்ச்சங்கப் பேரவையின் (FeTNA) 2008, 2009, 2014, 2016ஆம் ஆண்டுகளின் (ஆர்லாண்டோ, அட்லாண்டா & மிசௌரி) கவியரங்கம், இலக்கிய வினாடிவினா நிகழ்ச்சிகளில் பங்கேற்றுப் பாராட்டுகளும், பரிசுகளும் பெற்றுள்ளவர். சங்கப் பாடல்களில் அதிக ஆர்வமும், இலக்கியக் கூட்டங்களிலும், பட்டிமன்றங்களிலும் சுவைபடப் பேசுவதில் வல்லமையும் பெற்றவர். இவருடைய வலைப்பூ – மணிமிடைபவளம்.
மீனாட்சி பாலகணேஷ்
பதம் கண்ணிலெடுத்தணைக்க வருக!

ஒரு பிஞ்சான செல்லக்குழந்தை நம்மோடு இருந்துவிட்டால் போதும்; வாழ்வின் மகத்தான பேரின்பம் அதுவேதான். அதற்கு அலங்காரம் செய்வதும், அழகு பார்ப்பதும், விளையாடுவதும், உணவு ஊட்டுவதும், கொஞ்சுவதுமாக, நேரம் போவதே தெரியாது. நேரம் போதவும் போதாது!
‘மக்கள் மெய்தீண்டல் உடற்கு இன்பம்,’ ‘குழலினிது யாழினிது என்பார் தம்மக்கள் மழலைச்சொல் கேளாதவர்,’ எனவெல்லாம் மக்கட்செல்வத்தைப் பெருமைப்படுத்திப் பேசினார் வள்ளுவர். இந்தக்கருத்தை மிக அழகாக விளக்கும் பிள்ளைத்தமிழ்ப் பாடல் ஒன்று- இதில் திருமலைக்குமரனை, குழந்தை முருகனை செங்கோட்டை கவிராச பண்டாரத்தையா எனும் அடியார், (பக்தர், புலவர்) தாயாகமாறிப் போற்றி மகிழ்கிறார். மெய்தீண்டும் இன்பத்தை மிக நுட்பமாக அனுபவித்து, விவரித்து மகிழ்கிறார்.
“குழந்தாய், உனக்குப் புத்தம் புதுப்பட்டாடை அணிவிப்பேன்,”- புலவர் பெருமான் தோயாத துகில் என்கிறார். அதாவது நீரில் தோய்த்து நனைத்து பழையதாக்காத- தோயாத புதுத்துகில்; தாய்க்கு அதில் ஒரு பெருமகிழ்ச்சி; புத்தாடையைத் தன் கண்போலும் போற்றும் குழந்தைக்கு அணிவிப்பதில் அவளுக்குப் பேரானந்தம் பிறக்கின்றது.
“தோயாத் துகிலும் அரைவடமும் சுற்ற வருக வருகவே.”
“அரையில், அதாவது இடையில் பொன்னரைஞாண் அணிவிப்பேன்.” சின்னஞ்சிறு குழந்தையல்லவா? வாயிலிருந்து எச்சில்நீர் ஒழுகுகின்றது. அதனைத் துடைக்க அன்னையின் கைகள் பரபரக்கின்றன. “கண்ணே, இங்கேவா, உன் வாயைத் துடைத்து விடுகிறேன்,” என ஆசையாக அழைக்கிறாள்.
“சுரந்து வடியும் கடைவாய்நீர் துடைக்க வருக வருகவே.” இங்கு அருவருப்பிற்கே இடமில்லை. இந்த எச்சில்நீர் அவளுக்கு அமுதம் போன்றதல்லவா?
முருகனைத் தாயாக ஈன்றவள் கங்கை; சிவபிரானின் முகத்தின் ஆறுபொறிகளினின்றும் தோன்றிய அறுமுகனை, அக்கினிதேவன் கொண்டுசேர்க்க, அவற்றின் உக்கிரத்தைத் தாயாகப் பொறுத்து, சரவணப் பொய்கையில் ஆறு குழவிகளைக் கொண்டு சேர்த்த முதல் அன்னை கங்கையல்லவா? அதனால்தான், “தாயாய் ஈன்ற கங்கையின் நல்ல நீரில் நீராட்டுகிறேன், வா அப்பா,” என அழைக்கிறாளாம் இந்தத்தாய்.
“ஆயாய் ஈன்ற கங்கைநன்னீர் ஆட்ட வருக வருகவே.”

சிறுகுழந்தைகளின் கையொரு அழகு, கண்ணொரு அழகு, முகமோர் அழகு, பாதமும் ஒரு அழகு அல்லவோ? குழந்தையை உடலோடு அணைத்துப் புல்கும்போது, அந்தப்பூப்போன்ற தாமரைப்பிஞ்சுப் பட்டுப் பாதத்தினை மட்டுமாவது கண்ணோடு எடுத்து அணைத்துக் கொள்ளவேண்டும் (கண்ணில் ஒற்றிக்கொள்ள வேண்டும்) எனும் ஆசை பிறக்கும் அல்லவா? அதைத்தான் சொற்களில் வடிக்கிறார் இங்கு!
“அருமைப் பதம்என் கண்ணிலெடுத் தணைக்க வருக வருகவே.”
அடுத்து முலைப்பால் அருத்துவிப்பதனைக் கூறுகிறார். “தடைப்படாது பெருகும் முலைப்பாலை அருந்த வருக,” எனும்போது, அது எப்போதும் தங்குதடையின்றி மகவிற்குக் கிடைக்கும் அமுதம் என்று பொருள் கொள்ளவேண்டும்.
“வீயாதொழுகும் திருமுலைப்பால் மிசைய வருக வருகவே.” அருமைக்குழந்தையை நினைக்கும்போதே அவளிடம் பால் பெருகி வழியுமே!
“வீணையின் நாதம் தெவிட்டும்; நீ கூறும் மழலைமொழி கேட்கக்கேட்கத் திகட்டாது; ஆகவே அதனைத் தொடர்ந்து என்னிடம் பேசவேண்டி ஓடோடி வருவாயாக. மேலும் அந்த மழலைபேசும் வாயால் எனக்கு அழுத்தமான ஒரு முத்தத்தினைத்தர வேண்டும் (ஆணிமுத்தம்);
“வீணை தெவிட்ட மழலைமொழி விள்ள வருக வருகவே.
வாயால் எனக்கோர் ஆணிமுத்தம் வழங்க வருக வருகவே.”
“இதற்காகவெல்லாம் நீ என்னிடம் வரவேண்டும் அப்பா! அருள்தருவதும், நிலையானதுமான திருமலை மீது உறையும் முருகனல்லவோ நீ! குழந்தாய்! வருவாயாக,” என அன்னைபோன்று வேண்டி நிற்கிறார்.
தோயாத் துகிலும் அரைவடமும்
சுற்ற வருக வருகவே
சுரந்து வடியும் கடைவாய்நீர்
துடைக்க வருக வருகவே
ஆயாய் ஈன்ற கங்கைநன்னீர்
ஆட்ட வருக வருகவே
அருமைப் பதம்என் கண்ணிலெடுத்
தணைக்க வருக வருகவே.
வீயாதொழுகும் திருமுலைப்பால்
மிசைய வருக வருகவே
வீணை தெவிட்ட மழலைமொழி
விள்ள வருக வருகவே.
வாயால் எனக்கோ ராணிமுத்தம்
வழங்க வருக வருகவே
வரதச் சரதத் திருமலையின்
மழலைக் குழவி வருகவே.
(திருமலை முருகன் பிள்ளைத்தமிழ்- வாரானைப்பருவம்- செங்கோட்டை கவிராச பண்டாரத்தையா)

தளர்நடை பயிலும் குழந்தையை இன்னும் ஓடியாடுமாறு ஊக்குவிக்க அழகான சிறுதேர் ஒன்றினைச் செய்வித்து, அலங்கரித்து, பட்டுக் கயிற்றினை அதில்கட்டி, அதனை இழுத்தோடச் செய்வார்கள் அன்னைமார். குழந்தை முருகனின் அன்னையரும் இதற்கு விலக்கல்லவே! அன்னைகொடுத்த அழகுச் சிறுதேரை உருட்டிவருகிறான் அக்குமரன். பார்க்கும் கண்கள் பரவசத்தில் களிக்க, உள்ளம் பூரிக்க, வாயிலிருந்து வாழ்த்துக்கள் பிறந்து சொரிகின்றன.
‘மங்கலம் நிறைந்த மடமைபொருந்திய பிடியாகிய தெய்வயானை இடப்புறமும், குறவர்மகளான கொடிபோன்ற வள்ளியம்மை மற்றொரு பக்கத்திலும் இருந்து சீர்பெற்று வாழ்க!’
‘மங்கல மடப்பிடி குறக்கொடி இடத்தினும்
வலத்தினும் இருந்துவாழ்க.’
‘நீ ஊர்ந்துசெல்லும் மாமயிலானது வாழ்க!’ அதன் மேல் முருகன் அமர்ந்துள்ளான். அவனது நூபுரமணிந்த திருவடிகள் அழகுற இலங்க அவையும் வாழ்க!’
‘மாமயிலும் வாழ்கஅதன் மேலிலகு நூபுரம்
வனைந்தசே வடியும்வாழ்க.’
‘அற்புதமான ஒளிபொங்கிடும்வண்ணம் விளங்கும் திருவாபரணமான முப்புரிநூலினைப் புனைந்து சிறக்கின்ற உனது திருமார்பு வாழ்க!’
‘பொங்கொளி தயங்குதிரு ஆபரண முந்நூல்
புனைந்திடுபொன் மார்பும்வாழ்க.’
‘எப்போதும் அன்பர்களைக் காப்பதற்காகப் போர்செய்யத் தயாராக இருக்கும் கூர்வேலும் உந்தன் ஈராறு பன்னிரண்டு திருக்கைகளும் பன்னிரண்டு திரண்ட அழகான தோள்களும் வாழ்க!’
‘போர்வேலும் ஈராறு செங்கையும் பன்னிரு
புயங்கள்சுந் தரமும்வாழ்க.’
‘கருணைபொழிகின்ற கண்கள் ஆறிரண்டு பனிரெண்டும் அழகான ஆறு திருமுகங்களின் அருளும் வாழ்க.’ இங்கு ஒன்றினை நோக்க வேண்டும். ஆறுமுகத்தழகு எனாமல் அருள் என்கின்றார். முகத்தின் அழகு பொலிவது அது பொழியும் அருளினால்தான். ஆகவேதான் அருள் வாழ்க என வாழ்த்தினார்.
‘தங்குகரு ணைக்கண்கள் ஆறிரண் டுந்திருச்
சண்முகத் தருளும்வாழ்க.’
‘காதுகளில் தொங்கித் தாழ்ந்தாடும் குழைகள் முந்நான்கு பன்னிரண்டாம்! அவற்றுடன் பவளவாய் ஆறும் சேர, சிரத்தில் பொருந்தும் திருமகுடமும் இனிது வாழ்க,’ என்கிறார். இங்கு ‘மகுடம் வாழ்க’ எனில் அம்மகுடத்தைப் புனைந்த தலைவன் எனப் பொருள் கொள்ளுதல் வேண்டும்!
‘தாழ்குழைமுந் நான்கினொடு பவளவா யாறுடன்
நடமகுட மினிதுவாழ்க.’
‘நீ ஆளும் திருநாட்டில் மாதந்தோறும் மும்மாரி பொழிந்து பயிர்கள் செழித்து உயிர்கள் மகிழட்டும். உனது கொடியில் பொலியும் சேவல் வாழ்க! இவ்வாறு அனைத்தும் வாழ நீ சிறுதேரினை உருட்டுவாயாக! சிவஞானம் எனும் முத்தியைத் தருபவன் நீயே! ஆறுமுகன் சிவனின் வடிவமேயல்லவா? அதனால் சிவபிரானைப்போன்றே முத்தியையும் அளிக்க வல்லவன் என்கிறார். திருமாமலையில் உறையும் குமரனே நீ சிறுதேரினை உருட்டியருளுக!’
‘திங்கண்மும் மாரிபொழி யச்சேவல் வாழ்கநீ
சிறுதேர் உருட்டியருளே.
சிவஞான முத்திதரு திருமா மலைக்கடவுள்
சிறுதேர் உருட்டியருளே.’
இவ்வாறெல்லாம் வாழ்த்தி தாயின் நிலையில் நின்று திருமலை முருகனைச் சிறுதேருருட்ட வேண்டுகிறார் புலவர்.
மங்கல மடப்பிடி குறக்கொடி இடத்தினும்
வலத்தினும் இருந்துவாழ்க
மாமயிலும் வாழ்கஅதன் மேலிலகு நூபுரம்
வனைந்தசே வடியும்வாழ்க
பொங்கொளி தயங்குதிரு ஆபரண முந்நூல்
புனைந்திடுபொன் மார்பும்வாழ்க
போர்வேலும் ஈராறு செங்கையும் பன்னிரு
புயங்கள்சுந் தரமும்வாழ்க
தங்குகரு ணைக்கண்கள் ஆறிரண் டுந்திருச்
சண்முகத் தருளும்வாழ்க
தாழ்குழைமுந் நான்கினொடு பவளவா யாறுடன்
நடமகுட மினிதுவாழ்க
திங்கண்மும் மாரிபொழி யச்சேவல் வாழ்கநீ
சிறுதேர் உருட்டியருளே.
சிவஞான முத்திதரு திருமா மலைக்கடவுள்
சிறுதேர் உருட்டியருளே.
(திருமலை முருகன் பிள்ளைத்தமிழ்- சிறுதேர்ப்பருவம்- செங்கோட்டை கவிராச பண்டாரத்தையா)
ஒவ்வொரு பிள்ளைத்தமிழ் நூலும் பாடிய புலவரின் கற்பனை, கண்ணோட்டத்திற்கேற்பவும், அவருடைய பக்திப்பெருக்கின் விளக்கமாகவும், அன்பின் வெளிப்பாடாகவும் அமைந்து பயில்வோருக்கு பேரானந்தத்தினை விளைவிக்கின்றது. அதனால்தானோ என்னவோ, முருகன் மேலும் பார்வதி அன்னைமீதும் பலப்பல பிள்ளைத்தமிழ்கள் (வெவ்வேறு தலங்களுக்கானவை) இயற்றப்பட்டபோதும், அவை சொற்சுவை, பொருட்சுவை, கற்பனைவளம் சிறந்து விளங்குவதனால் புதுமைகுன்றாது விளங்குகின்றன. இதுவும் இறையருள் வெளிப்பாடே எனலாம்.
மீனாட்சி க. (மீனாட்சி பாலகணேஷ்)
{முனைவர் பட்ட ஆய்வாளர், தமிழ்த்துறை,
கற்பகம் பல்கலைக் கழகம், கோவை,
நெறியாளர்: முனைவர் ப. தமிழரசி,
தமிழ்த்துறைத் தலைவர்.}
********************************
நிர்மலா ராகவன்
இசை, ஸ்வரங்கள்
இசை கேட்கப் பிடிக்காதவர்கள் யாராவது உண்டா? அதைப்பற்றி கொஞ்சம்.
ஏழு ஸ்வரங்கள்
ஸ ரி க ம ப த நி என்னும் ஏழு ஸ்வரங்கள் அனைத்தும் பறவை மற்றும் மிருகங்களின் ஒலியாகும். இவைகளின் அதிபதிகளுக்கு தனிப்பட்ட உரு இருக்கிறது. பிடித்த ஆடை ஆபரணங்கள், துணைவியர் எல்லாம் உண்டு.
ஸ என்ற முதல் ஸ்வரத்தை ஷட்ஜம் என்பார்கள். இது மயிலின் குரலை ஒத்திருக்கும். மயில் கத்தும்போது கர்ணகடூரமாக இருக்கிறதே என்று யோசித்தேன். ஆனால், உற்றுக் கேட்டபோது அந்த ஸ்வரம் புலனாகியது.
அடுத்து, ரி — ரிஷபம். எருதின் குரல்.
க — காந்தாரம். ஆட்டின் கனைப்பை அடிப்படையாகக் கொண்டது.
ம — மத்யமம். க்ரௌஞ்ச பறவை (நாரை).
ப — பஞ்சமம். குயிலின் கூவல்.
த — தைவதம். குதிரையின் கனைப்பு.
நி — நிஷாதம். யானையின் பிளிறல்.
இவைகளில் ஸ, ப இரண்டும் மாற்றமில்லாது, ஒரேமாதிரி இருக்கும். மற்றவைகளில் இரண்டு அல்லது மூன்று வகைகள் உண்டு. இவைகளை மாற்றி மாற்றி அமைக்கும்போது ராகங்கள் எழுகின்றன. நமது கர்னாடக இசையில் ஐந்து ஸ்வரங்களாவது இருந்தால்தான் அது ராகமாம்.
நான் எழுதுவதா!
`தமிழில் நாட்டியப் பாடல்கள் எழுதிக் கொடேன்!’ என்று என் மகள் கேட்டபோது, `அதெல்லாம் எனக்குத் தெரியாது!’ என்று முதலில் மறுத்தேன். கதை, கட்டுரை வேறு, கடவுள்மேல் பாடலமைப்பது வேறு. இல்லையா?
அவள் விடாமல் தொணதொணக்க, `விடமாட்டியே! எதைப்பற்றி?’ என்று கேட்டேன்.
பிரம்மாவால் உலகம் உருவான கதையை பல பக்கங்களில் தட்டச்சு செய்து, கெஞ்சும் பார்வையுடன் அளித்தாள்.
விக்கினம் எதுவும் வராமல் இருக்கவேண்டும் என்று பிள்ளையாரையும், `நீயே எழுதிக் கொடு!’ என்று கல்விக் கடவுள் சரஸ்வதியையும் வேண்டிக்கொண்டு, குருவையும் மானசீகமாக நமஸ்கரித்தேன்.
இரண்டு மணி நேரத்தில், யாரோ என் கையைப் பிடித்து எழுதுவதுபோல் பாதிப் பாட்டு, ஐந்து ராகங்களில், தயாராகிற்று.
கலைஞர்களின் கர்வமும் இசைத் தேவதைகளும்
எதையாவது கொஞ்சம் கற்றுவிட்டாலே பலருக்கும் கர்வம் வந்துவிடுகிறது. இசையில் ஓரளவு பயிற்சி பெற்றவர்கள் கர்வப்பட்டால் பாதிக்கப்படுகிறவர்கள் இசைத் தேவதைகள்தாம். (கற்க ஆரம்பித்தவர்கள் தவறு செய்வது இதில் சேர்த்தியில்லை).
கற்க ஆரம்பித்த சில வருடங்களிலேயே எனக்கு உணர்த்தப்பட்டது: `யாராவது பாடச்சொல்லிக் கேட்டால், பிகு செய்துகொள்ளாமல் உடனே பாட வேண்டும். சாக்குபோக்கு சொல்வது அகம்பாவம். தலை கனத்துப்போனால், கலை நம்மை விட்டுப் போய்விடும்!’
சற்றே புகழ்பெற்றபின், `எனக்கு எல்லாம் தெரியும்!’ என்ற கர்வத்துடன், அலட்சியமாகப் பாடுபவர்களுக்குத் திடீரென்று ஸ்ருதி இறங்கும். அல்லது தாளம் தப்பும். அதன் விளைவாக, ராகா, ராகினி என்ற பெயர்கொண்ட இசைத் தேவதைகளின் அங்கங்களில் சிறுகச் சிறுகக் குறைபாடுகள் உண்டாகும்.
ராகம், ஸ்வரத்துக்குரிய இசைத் தேவதைகளைப்பற்றிய ஒரு பாடலுக்கான தகவல்கள் ஆங்கிலத்தில் தற்செயலாகக் கிடைக்க, என் மகள் என்னிடம் கொடுத்தாள். `கையின்றி, காலின்றி’ என்று ஆரம்பித்தது நான் எழுத ஆரம்பித்த அப்பாடல்.
சில நாட்கள் கழித்து, கண்ணயர்ந்த உடனே, கண்பார்வை இல்லாது தடுமாறியபடி சிலர் என்முன் தோன்றுவதுபோல் ஒரு பயங்கரமான காட்சி. விழிப்பு வந்தது. இசைத் தேவதைகள்!
மறுநாள் என் மகளிடம் தெரிவித்தபோது, `உடல் குறை என்றால் கை காலில் மட்டும் ஊனம் என்பது கிடையாதே! கண்ணையும் சேர்த்துக்கொண்டிருக்க வேண்டுமே என்று நானே நினைத்தேன்!’ என்றாள்.
அதன்பின், யாராவது அலட்சியமாகப் பாடினாலோ, அரைகுறையாக நாட்டியம் ஆடினாலோ என் மனம் பதற, கண்ணை மூடிக்கொண்டு இந்த தேவதைகளுக்காகப் பிரார்த்திப்பது என் வழக்கமாயிற்று.
ருத்திரன் வந்தான்
அடுத்த வருடம் சிவராத்திரியின்போது அயர்ந்து உறங்கிக்கொண்டிருக்கையில், `ருத்திரன் வந்தான்’ என்ற ஒரே வரி திரும்பத் திரும்ப இசையுடன் மனத்துள் கேட்க, விழிப்பு கொடுத்தது. `புதிய பாடல்!’ என்று உற்சாகத்துடன் எழுந்து, ஒரு நோட்டுப் புத்தக்கத்தை எடுத்து வந்து எழுத ஆரம்பித்தேன். அப்போது இரவு 11.50 மணி.
மின்சாரத் தடை
பத்து நிமிடங்கள் கழிந்து, சரியாக பன்னிரண்டு மணிக்கு எங்கள் பகுதியில் மின்சாரம் தடைபட்டது. பாட்டு என்னவோ வந்துகொண்டிருந்தது. விட்டால், காலையில் எதுவும் நினைவுக்கு வராது. ஆகவே, படுத்தபடி, அடுத்த வரி எங்கே ஆரம்பிக்கும் என்று உத்தேசமாக கட்டை விரலை அந்த இடத்தில் பதித்தபடி எழுதினேன்.
நடுவில் உறக்கம் மீண்டும் அடுத்த வரி. இப்படியே நான் பாட்டை எழுதி முடித்தபின், மின்சாரம் சீராகியது. அப்போது மணி 2.40.
நான் மனத்தெளிவுடன் இருந்தால், `இப்படி எழுதலாமே!’ என்ற எண்ணம் குறுக்கிட்டுக் கெடுத்திருக்கும். அந்த தடங்கல் எதுவும் இல்லாமல் இருக்க, முக்கால் தூக்கத்தில் எழுதியிருக்கிறேன்!
மறுநாள் காலை நான் எழுதியதைப் பார்த்தால் சிரிப்பு வந்தது. ஒரு வரிக்கு மேலேயே இன்னொன்று — என்ன வார்த்தைகள் என்று பிடிபடாமல். சில சமயம் நான்கு அங்குல இடைவெளியில் அடுத்த வரி!
கும்பகோணத்துக்கு அருகிலிருக்கும் நல்லூரில் உள்ள காளி கோயிலில் நான் இதைப் பாடியபோது, `இந்த ஊரில் நடந்ததை யாரோ அப்படியே உங்களுக்குக் குடுத்திருக்கா!’ என்று வியந்தார் அர்ச்சகர்.
அந்தப் பாடலில், எனது பெயரைக்கொண்ட முத்திரை கிடையாது. யாரோ கொடுத்தது அல்லவா?
அடுத்தடுத்து வந்த நான்கு சிவராத்திரிகளில் ஒவ்வொரு முறையும் ஒரு சிவன் பாடல் வந்தது.
முத்திரை
பாட்டு வரும்போது வரும். என்ன ராகம் என்ற யோசனையெல்லாம் அப்போது எழாது. இசையுடன் வார்த்தைகள் தாமே வந்து விழும். `நான் எழுதுகிறேன்!’ என்ற பெருமைக்கே இடமில்லை. அதனால்தான், நான் வீட்டு வாசலில் நின்றிருந்தபோது, `முத்திரை போடு!’ என்று மறைந்த என் குருநாதரின் குரல் கேட்டபோது மிகவும் தயக்கமாக இருந்தது. பெருமையடித்துக் கொள்வது போலிருந்தது. (அவர் சொன்னதிலும் நியாயம் இருந்தது. அவர் இயற்றிய பாடல்களை வேறொருவர் சொந்தம் கொண்டாடிய கதை எனக்குத் தெரியும்).
பிள்ளையாருக்கு PERFECTION வேண்டும்
சிறு வயதிலிருந்தே இந்துக் கடவுள்கள்தாம் எனக்குப் பரிச்சயம். ஒரு பாடலை எழுதி முடிக்க இருபது நிமிடங்கள் ஆகலாம், அல்லது ஒன்றரை மாதங்கள் பிடிக்கலாம்.
என் அனுபவப்படி, முருகன் பாடல் சில நிமிடங்களில் பூர்த்தியாகும். (சமர்த்து!) தமிழ்க்கடவுள் அல்லவா?
அம்மன் பாடல்கள் என்னை அதிகம் யோசிக்கவிடாமல் எளிதாக, ஆனால் மிக நன்றாக அமையும். பதிவு செய்வதும் எளிது. சிவன் பாடல்கள் வேலை வாங்கும். பிள்ளையார்மேல் அமைந்த பாடல்களைத் திருத்தி, பதிவு செய்வதற்குள் போதும் போதும் என்றாகிவிடும். பதினோரு வருடங்களுக்குமுன் எழுதிய விநாயகர் பாடல் ஒன்று இந்த வாரம்தான் சரியாகியது.
முழுப்பாடலும் சரியாக அமைந்தது என்பதற்கு அடையாளமாக மயிர்க்கூச்செறியும்.
புரியாததைப் புரியவைக்க
கோலாலம்பூரிலுள்ள ஒரு பெரிய மளிகைக் கடைக்குப் போயிருந்தபோது நடந்த சம்பவம் அது. யாரோ என்னைப் பின்னாலிருந்து தள்ளியதுபோன்ற ஓர் உணர்வு. திரும்பினேன். யாரும் இருக்கவில்லை. வேகமாக வழுக்கியபடி நகர்ந்து, பின் இடது புறம் திரும்பி அதே வேகத்தில் சற்றுத் தூரம் சென்றபின் கீழே விழுந்து, தரையில் வைக்கப்பட்டிருந்த ஐஸ் பெட்டியின்மேல் நெற்றி மோத, அப்படியே உட்கார்ந்துவிட்டேன். இரண்டு பேர் என்னைக் கைத்தாங்கலாகத் தூக்கி நாற்காலியில் உட்காரவைக்க, கல்லாவில் உட்கார்ந்திருந்த பெண்மணி `ஐஸ் வாங்கிட்டு வா!’ என்று அலறியது கேட்டது.
மூன்று நாட்கள் படுத்த படுக்கை. நெற்றியில் பெரிய வீக்கம். வலி உயிர் போயிற்று. எதுவும் யோசிக்க இயலாத நிலை.
அந்நாட்களில் யாரோ எனக்குச் சொல்லிக் கொடுத்திருக்க வேண்டும். அதன்பின், ஸ்வரங்களின் பேதங்களைப்பற்றி பல விஷயங்கள் புரிந்தன.
இன்னொரு விபத்து
ஒரு முறை லிஃப்டில் ஏறும்போது, திறந்திருந்த அதன் கதவு வேகமாக மூடி, என் நெற்றிப்பொட்டின் இரு புறங்களிலும் இடிக்க, வலி தாங்காது அலறினேன். இன்னும் வடு இருக்கிறது. (சாதாரணமாக, நாம் பாதி ஏறும்போது மூடிக்கொள்ளும் கதவு மீண்டும் திறந்து வழிவிடும்).
விளைவு: இசையைப்பற்றி மேலும் சற்றுத் தெளிவும், ஒரு நல்ல பாடலும் அமைந்தன. ஒவ்வொரு பாடலுக்கு முன்பும் பிரசவ வேதனை போல்தான்.
`இப்படியெல்லாம் என்னைக் கஷ்டப்படுத்தினால், இனிமே எழுத மாட்டேன், பார்!’ என்று முகமோ, உருவமோ அற்ற யாரையோ உரக்கத் திட்டினேன்!
`இப்படித்தான் வரும்!’ என்கிறார்கள், விஷயம் புரிந்தவர்கள்.
மணக்குள விநாயகர்
ஒரு முறை புதுச்சேரிக்குப் போயிருந்த அன்று மத்தியான உணவிற்குப்பின் `மணக்குள விநாயகா’ என்று பாடலொன்று மனதில் எழுந்தது.
அது என்ன வார்த்தை, `மணக்குள’ என்று?
அன்று மாலையே வங்கக் கடலருகே இருக்கும், (பாரதியார் எழுதியிருக்கும்) அந்தக் கோயிலுக்குப் போய் தலபுராணத்தைப் படித்தபோது, மணல், குளம் என்ற இரு வார்த்தைகள் மருவி இப்படி ஒரு புதிய வார்த்தையாக உருவெடுத்திருக்கிறது என்று புரிந்தது.
கதை
சில நூற்றாண்டுகளுக்குமுன்னர், பாண்டிச்சேரியை ஆண்டுகொண்டிருந்த பிரான்சு நாட்டு அதிகாரிக்கு வேலையாட்கள் கோயிலுக்குப் போய் கடவுளைக் கும்பிட்டு வருவதால் வேலைக்குத் தாமதமாக வருகிறார்கள் என்ற ஆத்திரம் எழுந்தது. அருகிலிருந்த கோயிலில் குடியிருந்த விநாயகர் கருங்கல் சிலையை கடலில் எறியும்படி கட்டளை பிறப்பித்தார். ஆனால், பிள்ளையார் மூழ்க மறுத்துவிட்டார்! பல முறை எறிந்தும், அச்சிலை மீண்டும் மீண்டும் மேலே எழுந்ததாம்.
அந்தப் பாடலும் ஜதி, பாதியில் வரும் சிட்டை ஸ்வரங்களுடன் சரியாக அமைய பத்து வருடங்களாகின.
எங்கு, எப்போது
கடற்கரை, பூங்கா போன்ற இடங்களுக்குப் போய் திரும்புகையிலேயே என் மனத்துள் பாட்டு எழும். அனேகமாக நடுநிசியில் அயர்ந்து உறங்குகையில், கனவில்போல் பாடல் கேட்கும். (நானே வலிய எழுதும் பாடல்கள் அவ்வளவு நன்றாக அமைவதில்லை).
புதிய ராகங்கள்
சில சமயம் தெரியாத, நான் கற்காத ராகத்தில்கூட பாடல்கள் அமையும்.
`அதெப்படி குரு சொல்லிக்கொடுக்காத ராகத்தில் பாட்டு எழுத முடியும்?’ என்று இசை வல்லுனர் ஒருவர் அதிசயப்பட்டார்.
யாரோ கொடுக்கிறார்கள். நான் கருவிதானே!
தொடருவோம்
க. பாலசுப்பிரமணியன்
கற்றலும் பள்ளிச்சூழ்நிலைகளும் (1)
வீட்டுச் சூழ்நிலைகள் எவ்வாறு கற்றலின் அளவையும் திறனையும் பாதிக்கின்றதோ, அதேபோல் பள்ளிச்சூழ்நிலைகளும் ஒரு தனிப்பட்ட மற்றும் ஒரு மாணவ சமூகத்தின் காற்றலையும் சிந்தனைகளையும் திறன்களையும் பாதிக்கின்றன. ஆகவே கற்றலுக்கான சூழ்நிலைகளுக்கேற்ப கல்விநிலையங்கள் அமைத்தல் அவசியமாகின்றது. முன்காலத்தில் கற்றல் பொதுவாக இயறக்கையைச் சார்ந்த சூழ்நிலைகளிலும் வெளிப்புறங்களில் வாழ்க்கையோடு இணைந்து காணப்பட்டது. இதனால்தான் சான்றோர்கள் “ஒரு பள்ளி செங்கல் சுண்ணாம்புச் சுவர்களால் காட்டப்படுவதில்லை. அவை மேம்பட்ட குறிக்கோள்களால் கட்டப்படுகின்றன” என்று கூறி வந்தனர்.
பொதுவாக கல்விநிலையங்கள் எங்கே அமைக்கப்படவேண்டும் என்பதற்கான சட்டபூர்வமான விதிமுறைகள் கல்வித்துறைகளிலும் அரசு கண்காணிப்புத் துறைகளிடமும் செயல்வடிவத்தில் முறைப்படுத்துவதற்க்காக உள்ளன. ஆனால் பெரும்பாலான விதிமுறைகள் மீறப்பட்டோ, நடைமுறையிலிருந்து விலக்கப்பட்டோ இருப்பதால் பல இடங்களில் கற்றலுக்கான சரியான சூழ்நிலைகள் இருப்பதில்லை.
உதாரணமாக, ஒரு பள்ளியைக் கட்டுவதற்கு இடம் தேடும்பொழுதே விதிமுறைகளை கவனத்தில் கொள்ளுதல் அவசியம். பள்ளிகள் பொதுவாக மருத்துவ நிலையங்களுக்கு அருகிலோ, இடுகாடு/சுடுகாடுக்களுக்கு அருகிலே, சந்தை மற்றும் சினிமா அரங்குகளுக்கோ அருகிலோ இருக்கக்கூடாது. பல இடங்களில் மாணவர்களுக்கு தொற்றுநோய் பரவுவதற்க்கான வாய்ப்புக்கள் இருக்கலாம். அதே போல் ஒளி,ஒலி மற்றும் உடலுக்கும் மனத்துக்கும் ஒவ்வாத நாற்றங்கள் இருக்கும் இடங்களில் கற்றலில் பாதிப்பு ஏற்படுவதுமட்டுமின்றி மாணவர்களின் மனநிலைகளின் வளர்ச்சியையும் பாதிக்க வாய்ப்புக்கள் உண்டு.
திரை அரங்குகள், சந்தைகள், பெரிய அங்காடிகள் அருகில் பள்ளிகள் இருக்கும் பட்சத்தில், மற்றும் அதிகமான போக்குவரத்து இருக்கும் சாலைகளின் அருகில் இருக்கும் பட்சத்தில், அதிகமான ஒலிஅலைகள் கற்றலின் தரத்தை பத்திப்பதுமட்டுமின்றி மாணவர்களுக்கு மன உளைச்சலையும் கொடுக்க வாய்ப்புள்ளதாக ஆராய்சசிகள் தெரிவிக்கின்றன. பொதுவாக போக்குவரத்து அதிகமுள்ள இடங்களில் வெளிப்படும் புகைமண்டலங்கள் மூச்சுக்காற்றோடு கலந்து சுவாசிக்கப்படும் பிராண வாயுவின் தரத்தைக்குறைப்பதால் மூளைக்குச் செல்லும் ஆக்சிஜனின் அளவு குறைவதாலும் கற்றலின் தரம் மற்றும் அளவுகள் பாதிக்கப்படுகின்றன. ஆகவேதான், பள்ளிகளை சுற்றி இயற்கைவளம் இருத்தல் அவசியமாக கூறப்படுகின்றது. பள்ளிகளில் எங்கெங்கு மரங்களை நடுவதற்கு வாய்ப்புக்கள் இருக்கின்றனவோ அந்த இடங்களை இயற்கை வளத்தால் நிரப்புதல் அவசியம்.
வெளிநாட்டில் செய்யப்பட்ட ஒரு ஆராய்சசியில் விமான தளங்களுக்கு அருகில் கட்டப்பட்ட பள்ளியின் மாணவர்கள் செயல்திறன் அதிகமாக பாதிக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர் ஒலிஅலைகளின் தாக்கத்தால் என்று கண்டுபிடிக்கப்பட்டது. கவனக்குறைவு, கவனச்சிதைவு, அறிதலில் காலதாமதங்கள், குறைவான புரிதல் திறன்கள், சோர்வு, தாழ்வு மனப்பான்மை ஆகியவை மாணவர்களிடம் வளருவதற்கான வாய்ப்புக்கள் இருப்பதாக அறியப்பட்டுள்ளது,
இதேபோன்று இரயில் தண்டவாளங்களுக்கருகில் பள்ளிக்கட்டிடங்களை கட்டுதல் கற்றலுக்கு உகந்தது மட்டுமல்ல அது சில நேரங்களில் பாதுகாப்பின்மைக்கு காரணமாகின்றது. பல ஆண்டுகளுக்கு முன் ஒரு இரயில் வண்டி பள்ளிக்கருகில் வேகமாகக் கடந்தபோது அந்தப் பள்ளிக்கு கட்டிடம் கீழே விழுந்து குழந்தைகளின் மரணத்திற்கு காரணமாகவும் அமைந்தது.
சில இடங்களில் தொழிற்சாலைகளை ஒட்டிய ஊழியர்களுக்கான சிறுநகர்ப்புறங்கள் கட்டப்பட்டு அதன் நடுவே அவர்களுக்கு வசதிசெய்யும் வகையில் பள்ளிகள் கட்டப்படுகின்றன. இந்தப் பள்ளிகள் பல நேரங்களில் அந்தத் தொழிற்சாலைகளிலிருந்து வெளிப்படும் புகை மண்டலங்கள், கழிவு நீர் கலப்புக்கள் காரணமாக தீராத நோய்களுக்கு காரணமாக அமைகின்றன. ஆகவே பள்ளிகள் கட்டப்படும் பொழுது இவைகள் கவனத்தில் கொள்ளுதல் அவசியமாகின்றது.
கற்றலில் விளையாட்டிற்கும் உடற்பயிற்சிக்கும் முக்கிய பங்கு இருப்பதால் பள்ளிகளில் அதற்கான தகுந்த இடம் மற்றும் வசதிகள் தேவைப்படுகின்றது. ஆனால் பல பள்ளிகளில், மாணவர்களின் எண்ணிக்கைகள் அதிகமாக, கட்டிடத் தேவையயை முன்னிறுத்தி அந்த இடங்கள் ஆக்ரமிக்கப் படுகின்றன. ஆகவே, மாணவர்களுக்கு கல்வியில் தேவையான ஒரு முக்கிய பகுதி இல்லாமல் போகின்றது. இதை அதிகாரிகள் கவனித்தல் தேவை.
இதே போன்று மலைப்பாங்கான இடங்களில் கற்றலுக்கு மாறுபட்ட சூழ்நிலைகள் தேவைப்படுகின்றன. அந்த இடங்களில் நில நடுக்கங்கள், அதிர்ச்சிகள், மலைச் சரிவுகள், தொடர் மழைகள் ஆகியவற்றை முன்னிருத்திப் பள்ளிக்கட்டிடங்கள் அமைத்தல் அவசியமாகின்றது. நாட்டில் மழை அதிகமாகப் பெய்யும் இடங்களில் நீர் வெளியேற்றத்திற்கான கருத்துகளை மனத்தில் நிறுத்தி கட்டிட அமைப்புகள் வடித்தல் அவசியமாகின்றது.
கற்றலுக்கு பாதுகாப்பான சூழ்நிலைகள் மிக அவசியம். எவ்வாறு பாதுகாப்பில்லாத சூழ்நிலைகள் கற்றலை பாதிக்கின்றன என்பதைத் தொடர்ந்து பார்ப்போம்.
(தொடரும்)
-மேகலா இராமமூர்த்தி
வல்லமை வாசகர்கள் அனைவருக்கும் தமிழர் திருநாள் வாழ்த்துக்கள்!
திரு. வைத்தியநாதன் எடுத்திருக்கும் இந்தப் புகைப்படத்தை இவ்வாரப் போட்டிக்குத் தேர்ந்தெடுத்துத் தந்திருக்கின்றார் வல்லமை ஃப்ளிக்கர் குழுமத்தின் பொறுப்பாசிரியர் திருமதி. சாந்தி மாரியப்பன்.
புகைப்படக் கலைஞருக்கும் தேர்வாளருக்கும் நம் நன்றி உரித்தாகுக!
மக்கள் மெய்தீண்டல் உடற்கின்பம் என்ற வள்ளுவத்தை இந்தப் படம் காட்சிப்படுத்தியிருப்பதாகவே என் கண்களுக்குத் தோன்றுகின்றது.
இக்காட்சி கண்டு நம் கவிஞர்களின் கற்பனை ஊற்று எப்படியெல்லாம் பாய்ந்திருக்கிறது என்பதை ஆய்ந்துவருவோம்!
***
பிள்ளைக்கலி தீர்க்க, வாராதுபோல் வந்த மாமணியான பெண்மகவின் பெருமையைப் பாராட்டி ஒரு பிள்ளைத்தமிழே பாடிவிட்டார் பெருவை திரு. பார்த்தசாரதி.
பாவையொருவள்கை பிடித்தேனானதடி பல்லாண்டு
பலஆண்டாய்ப் பிள்ளை யிலையெனும் கவலையிலே
ஒவ்வொரு ஆண்டும் புத்தாண்டாகப்
பத்தாண்டுகடந்ததடி, பலனொன்றுமில்லையடி!
ஒருவருக்குத்துணை யொருவர் மட்டும்தானா?..
ஏனிந்தக்கொடுமையடா? யெனும்குறையை இறைவன்கேட்பானா!
குழந்தைவேண்டி கும்பிடாத கடவுளில்லை
குழவியொன்றுபிறக்க ஜாதகத்தில் வழியுமில்லை.
அரசமரத்தையொரு ஆயிரமுறை சுத்திவாரு மென்றானொருவன்
ஆடும்தொட்டிலதில் கட்டென்றான் அயலாரொருவன்
மருத்துவரைப் பாரென புத்திசொன்னானொருவன்,
சோதனைக்குழாய் சோதனைக்கு தீர்வாகுமென்றானொருவன்
ஆளுகொரு வழிசொல்லஅத் துணைவழிகேட்டு
அலையாய் அலைந்தேன் அனுதினமும் திரிந்தேன்..
நன்றியுள்ள நாயும், அழுக்கைக்களைந்துண்ணும்
பன்றியையும். . .பரிவோடு பார்க்கும்போதெல்லாம். . .
வாயில்லா ஜீவனுக்கே வாரிவழங்கும் எம்பெருமான்
வாய்விட்டு அலரினாலும் குழவிவரம் கொடுப்பானில்லை!
நாம்கொண்டவிரதமும், நாம்பெற்றஞனமும் எப்பொதும்
நல்வழிக்கே என்பார்கள் பெரியோர்கள்!
வேண்டுவோருக்கு வேண்டுவன பலகொடுக்கும் பரமன்..
எனக்குமொன்று கொடுத்தான் வேண்டுமதைத் தவறாமல்!
நல்லதொரு நன்னாளில் எனக்கொரு மகள் பிறந்தா ளவளெனைத்
தேன்தமிழில் கவிபாடும் திறன்கொடுத்தாள்!
இறைவனிட மிரைந்துயான்பெற்ற இளயநிலாச்சிரிப்பதனில்
இவ்வியதார்த்த வாழ்வனைத்தும் மகிழ்ச்சி பொங்குதடி!
வரம்பெற்று வாராதுபோல்வந்த நித்தம்வளரு மென்னிளமதிக்கு
சிரி(ஶ்ரீமதி) எனப்பெயரிட்டு சீராட்டி அன்பாலே வளர்த்தேனே.
புண்ணியம்பல செய்தேனுனை ஈன்றெடுக்க
புதுப்பிறவி எடுத்தாலும் நீயே எனக்கு மகளாவாய்
சூரியனைப் போன்றயுன்முகம் பார்ப்பின்
தாமரை போன்றுஎன்முகம் விரிந்துமலரும்
பட்டாம்பூச்சியின் இறக்கைபோன்ற மென்மையுன் விரல்களின்
பட்டுப்போன்ற ஸ்பரிசத்தால், உடல்ரத்தம் உறையுதடி
கனிந்த உன்முகம் காணுகையில், கவலையெல்லாம்
காற்றடித்த மேகம்போல் கரையுதடி நொடிப்பொழுதில்
இருகையால் தூக்கியுனை உச்சி மோர்ந்தால்
இருதயமும் மூச்சுமொருகணம் பூரிப்பால்நிக்குதடி
என்னிதயம் துடிக்க அடைப்பிதழேதும் தேவையில்லை
உன்னிமைத்துடிப்பில் என்னிதயம் சீராக இயங்குமன்றோ.
உன்மழலைப் பார்வையொன்றே போதும்
என்நாவி சைக்கும் பலபாக்கள் நொடிப்பொழுதில்
என் நெஞ்சில்தவழ்தாடு முனைப்பார்க்கும் போதெல்லாம்
“என்நெஞ்சில்பள்ளிகொண்டவன்” பாடல் பலமாகக்கேட்குதப்பா!
***
”தோள்கொடுத்து உன்னைப் பலபடி உயர்த்திய தந்தையை முதியோர் இல்லப் படியேற வைத்துவிடாதே தம்பி!” என்று தோள்சாய்ந்திருக்கும் பிள்ளையிடம் வேண்டுகின்ற தந்தையைக் காண்கிறோம் திரு. செண்பக ஜெகதீசனின் கவிதையில்.
வேண்டாம் அந்த விபரீதம்…
தெரிந்துகொள் தம்பி தெரிந்துகொள்,
தோள்கள் இவை உன்னைத்
தூக்கிச் சுமந்த
தந்தையின் தோள்கள்..
உலகம் பார்க்க உன்னை
உயர்த்திப் பிடித்து,
உயர்த்திக் காட்டிய தோள்கள்..
உன்னை உருவாக்கிடவே
உழைத்து உழைத்து
உரமேறிய தோள்கள்..
அந்தத்
தோள்சாய்ந்த நீ
தோள்கொடு முதுமையில்
தந்தை தலைசாய்க்க..
ஏற்றிவிட்ட அவரை
எந்தக் காரணம் காட்டியும்
ஏற்றிவிடாதே
முதியோர் இல்லப் படியில்…!
***
தோளில் அன்று சுமந்த பிள்ளை தூரதேசம் சென்றுவிட்டதால் அதன் நினைவுகளைச் சுமந்தபடி நிற்கும் முதுமையைப் படம்பிடித்துக் காட்டியுள்ளார் திருமிகு. ராதா விஸ்வநாதன்.
தோளுக்காக ஏக்கம்
சிரசு மட்டும் பிரதானமில்லை
எண் சாண் உடலில்
இதோ இத் தோள்களும் தான்
தோளுக்குத்தான் எத்தனை பெருமை
தோள் கண்டார் தோளே கண்டார் -என
பேசுகிறது இராம கதை
அண்ணல் இராமன், தம்பி இலக்குவன்
ஏறிச் சென்றதோ அனுமனின் தோளிலே தானே
இன்பச் சுமையை இதயம் தாங்கும்
துன்பச் சுமைக்கென இருப்பது இத்தோளே
காதலி, பிள்ளை, தோழ்ன், தோழி இவர்களை மட்டுமா
பெற்றவர்களையும் சுமக்கவே இத் தோள்கள்
ஆனால் இன்றோ அந்நிய நாட்டிற்கு சென்று விட்டது இத் தோள்
படிப்பு பட்டம் வலிமை கொண்ட தோள்களை
வாரிக் கொடுத்து விட்டு வாசலில்
ஏங்கிக் கிடக்கிறது நம்பிக்கையை கையிலேந்தி
இளமையும் முதுமையும்
வலிமைத் தோளில் சாய்வதற்கும் வழி நடத்தவும்
***
இனி இவ்வாரத்தின் சிறந்த கவிதை…
சுகமான சுமை
அன்னை எனக்கு தந்த சீர் தனமே!
சுமையே தெரியாத ஒரு சுகமே !
அன்புக்கு பொருள் சொன்ன இலக்கணமே!
ஈருயிர் ஓருயிராய் வடிவெடுத்த அதிசயமே !
அன்னை, தந்தையை உருவாக்கிய அழகு பிரம்மாவே !
தோளில் நீ வந்தமர்ந்ததால்
உன் தோழமை புரிந்தது!
தலைக்குமேலிருந்து எனைப் பார்க்கும் பார்வை!
உயிரெழுத்தாய் நீ இருப்பாய் என
உணர்த்தும் பார்வை!
உள்ளுக்குள் தன்னுடல் கொடுத்து
அன்னை சுமந்தது ஒரு பத்து மாதம்!
உலகத்தில் உன்னை ஆளாக்க
தந்தை சுமந்தது இரு பத்து வருடம்!
சுமப்பது சுகமாய் இருந்தாலும்
உன் தோளில் உறங்க மனம் ஏங்குதடா!
நீ நிழல் தரும் காலம் வரை கண்ணை இமை போல! உன்னை காத்திருப்பேன்!
தந்தை என்னும் உறவு தந்து
என் தந்தையின் உயர்வை புரிய வைத்தாய்!
வாழ்வுப் பாடம் கற்றுத் தந்தாய்! நீ தான் எந்தன் தகப்பன் சாமி!
தன்னலமில்லா தியாகத்தினால்
தகப்பன்மார் அனைவரும் அகிலத்தில் சாமியன்றோ!
கணவன் மனைவியாக மட்டும் அதுவரை வாழ்ந்தவர்களைத் தாய்தந்தையாய் உருவாக்குகின்ற, படைக்கின்ற மழலையும் ஒருவகையில் பிரம்மாதான்! அதுமட்டுமா? வாழ்க்கைப் பாடத்தைப் பெற்றோருக்கு வகையாய் விளங்கவைப்பதால் அதனை ஆசானாகக் கொள்வதிலும் பிழையில்லை. அடடா! சின்னஞ்சிறு மழலையொன்று அவனியில் எடுக்கும் அவதாரங்கள்தாம் எத்தனை எத்தனை!
’தகப்பன்சாமி’ என்று தன் கவிதையில் குழந்தையை வாயூறிக் கொண்டாடும் திரு. பழ. செல்வமாணிக்கம் இவ்வாரத்தின் சிறந்த கவிஞராய்த் தேர்வுபெறுகின்றார். அவருக்கு என் பாராட்டுக்கள்!
செண்பக ஜெகதீசன்
செய்க பொருளைச் செறுநர் செருக்கறுக்கு
மெஃகதனிற் கூரிய தில்.
-திருக்குறள் -759(பொருள்செயல்வகை)
புதுக் கவிதையில்…
சேர்த்திடு பொருளை,
சிறப்பான வாழ்வினுக்கே..
பகைவரின் செருக்கடக்கும்
படைக்கலமாகும் அது..
அதைவிடக் கூரிய ஆயுதம்,
அதுவன்றி வேறில்லை…!
குறும்பாவில்…
பொருளைச் சேர்த்திடு வாழ்வில்,
பகைவரை அடக்கும் ஆயுதம் அது,
அதைவிடக் கூரியது வேறொன்றுமில்லை…!
மரபுக் கவிதையில்…
பாரில் வாழ்வு வளம்பெறவே
பொருளைத் தேடிச் சேர்த்துக்கொள்,
நேரில் வந்திடும் பகைவரையும்
நசுக்கிடும் ஆயுதம் அதுவேதான்,
கூரிய ஆயுதம் அதனுடனே
கூறிட இணையாய் ஏதுமில்லை,
பாரிதை, படையாம் அதற்கிணையாய்ப்
படையதை யன்றி வேறிலையே…!
லிமரைக்கூ..
வாழ்வில் பொருளைச் சேரு,
எதிரியை யழிக்கும் கூரிய ஆயுதம்
இதனிலும் வேறிலை பாரு…!
கிராமிய பாணியில்…
சம்பாதி சம்பாதி பொருளச்சம்பாதி
ஓடியாடி ஒழச்சி பொருளச்சம்பாதி,
ஒலகத்தில வாழத்தான் பொருளச்சம்பாதி..
அதுதான்
ஒனக்கு வாற எதிரியயே
ஒண்ணுமில்லாம அழிக்க ஆயுதமாவும்,
ஒசந்த ஆயுதமாவும்..
அதவிட கூர்மயான ஆயுதம்
அதப்போல எதுவுமில்ல,
அதமிஞ்சி ஆயுதமில்ல..
அதால,
சம்பாதி சம்பாதி பொருளச்சம்பாதி
ஓடியாடி ஒழச்சி பொருளச்சம்பாதி
ஒலகத்தில வாழத்தான் பொருளச்சம்பாதி…!
பவள சங்கரி
-கவியோகி வேதம்
(கனடாவின் பனிமழை குறித்து எழுதப்பட்ட கவிதை)
சன்னல்வழிப் பார்க்கின்றேன்; சரமழைதான்
பொழிகிறதோ?
என்(று)உற்று நோக்கிநின்றால் இழைஇழையாய்ப் பனிச்சாறு!
‘முகிற்’–பட்டு. கிழிந்ததுவோ? சரிகைசுக்கு நூறாச்சோ?
தொகைதொகையாய் உதிர்ந்துவந்து வீட்டின்மேல் கூரைமேல்
கார்களின்மேல், சாலையின்மேல், புல்லின்மேல் கதவின்மேல்
கூறுகெட்ட வெங்காயப் பனிஉதிர்ந்து கொஞ்சிற்று!
கூரைஎல்லாம் குல்லா! குளிர்ந்ததரை யில்வெண்‘பாய்’
சாரைசா ரையாய்-விரை சரக்கு(உ)ந்தில் ஒளிப்போர்வை!
சின்னசெடி, புல்கொத்து – இவற்றைஒரு ‘பர்தா’-போல்
மின்னியே மறைத்துபனி அட்டகாசம் செய்கிறதே!
இதற்கிடையில் அரசாங்கக் கார் ஒன்று இறகைப்போல்
சுதிவிரித்தே பனிப்பாயைச் சுருட்டி-ஓரம் தள்ளிற்றே!
என்னவெல்லாம் அதிசயம்! இதுவரை அறியேனே!
பின்னும் வெயில்தவிர சென்னையில் பார்த்திலனே!
என்றுஒரு காட்டான்போல் இளிப்புடனே பார்த்திருந்தேன்!
“சன்னல் திறந்தேநான் சரியாகப் பார்த்திடவா?”-.
என்றேயான் பேத்தியிடம் இளம்-‘மதலை’ போல்கேட்டேன்!
“சன்னலைத் திறந்தால்நீ சட்டினிதான்!”—அவள்சிரித்தாள்!
வேதா. இலங்காதிலகம்.
கழுத்துச் சாய்த்துத் தேடினால் கோடியருத்தம்.
எழுத்து வரிசையில் சரித்திரம் கதைகளாய்
இழுத்தும் கோர்க்கலாம் சந்தப் பாமாலை.
ஒலியால் வல்லின, மெல்லின, இடையினமுண்டு.
ஓரெழுத்துக்கும் அருத்தம் உண்டு – நீ
சுகந்த எழுத்து பூ – பூரிப்பாய்.
மகிழ்ந்து அழைக்கும் எழுத்து வா.
நான்காயிரம் ஆண்டினிறுதி சுமேரியர்களிடையே உருவானது .
பின்னாக எகிப்து, சிந்துப்பள்ளத்தாக்கிலும் தொடர்ந்தது.
மின்னும் உயிரெழுத்துகள் பன்னிரண்டு வகை.
உன்னும் மெய்யெழுத்துகள் பதினெட்டு ஆகும்.
பின்னும் உயிர்மெய் எழுத்துகள் இருநூற்றுப்பதினாறு.
ஓன்றான ஆயுதவெழுத்துமாக இருநூற்று நாற்பத்தேழு.
ஓன்றொன்றாய் சொற்கள் பிரித்து உண்மையறிதல்
இன்னுமுதத் தொடர்பாடல் எழுத்தால் தானே.
நாத (ஒலி) வரி வடிவம் எழுத்து.
மேதகு மொழியை நிலைநிறுத்துவது எழுத்து.
சாதனைக்குரிய எழுத்தின்றேல் மொழி ஏது!
மாதவ எழுத்து தலைமுறைக்கும் காவுகிறது.
ஆதனமாம் இலக்கணம் இலக்கியம் உருவானது.
போதகம் (நல்லுரை) ஐந்தாயிரமாண்டுக்கு முன்னானதாம் சிந்துவெளியெழுத்துகள்.
பேதமற பழந்தமிழெழுத்தும் அன்றே இருந்தது.
ஆயினும் எழுத்துமுறையா குறியீடாவென்பது சந்தேகமே…
பவள சங்கரி
இனிய பொங்கல் நல்வாழ்த்துகள்!
பொங்கட்டும் எங்கும் தமிழ்
பாலுந்தேனும் ஆறாய் ஓடட்டும்
வேலும்மயிலும் துணை நிற்கட்டும்
தரணியெலாம் அமைதி நிலவட்டும்!
சங்கம் வளர்த்தவன் தலைநிமிரட்டும்
வங்கம் கடந்தவன் வளமாகட்டும்
பஞ்சம் பஞ்சாய் பறக்கட்டும்
வஞ்சம் வீழ்ந்து நொறுங்கட்டும்!
உழவன் உயர்ந்து நிற்கட்டும்
உளமெலாம் இன்பம் பெருகட்டும்
உலகெலாம் வியந்து நோக்கட்டும்
சிங்கம் சிறப்பாய் சிலிர்த்தெழட்டும்!
தைமகள் தரணியை மகிழ்விக்கட்டும்
தமிழ் நெஞ்சங்கள் நிறையட்டும்
எழில் வண்ணங்கள் கூடட்டும்
பொழில்சூழ் வளங்கள் பெருகட்டும்!
சர்வமும் அன்பாய் மலரட்டும்!!
வாழ்வெலாம் கரும்பாய் இனிக்கட்டும்!!