-கவியோகி வேதம்

(கனடாவின் பனிமழை குறித்து எழுதப்பட்ட கவிதை)

சன்னல்வழிப் பார்க்கின்றேன்; சரமழைதான்
பொழிகிறதோ?
என்(று)உற்று நோக்கிநின்றால் இழைஇழையாய்ப்  பனிச்சாறு!

‘முகிற்’–பட்டு. கிழிந்ததுவோ? சரிகைசுக்கு நூறாச்சோ?
தொகைதொகையாய் உதிர்ந்துவந்து வீட்டின்மேல் கூரைமேல்

கார்களின்மேல், சாலையின்மேல், புல்லின்மேல் கதவின்மேல்
கூறுகெட்ட வெங்காயப் பனிஉதிர்ந்து கொஞ்சிற்று!

கூரைஎல்லாம் குல்லா! குளிர்ந்ததரை யில்வெண்‘பாய்’
சாரைசா ரையாய்-விரை சரக்கு(உ)ந்தில்  ஒளிப்போர்வை!

சின்னசெடி, புல்கொத்து – இவற்றைஒரு  ‘பர்தா’-போல்
மின்னியே  மறைத்துபனி அட்டகாசம் செய்கிறதே!

இதற்கிடையில் அரசாங்கக்  கார் ஒன்று இறகைப்போல்
சுதிவிரித்தே  பனிப்பாயைச்  சுருட்டி-ஓரம் தள்ளிற்றே!

என்னவெல்லாம் அதிசயம்! இதுவரை அறியேனே!
பின்னும் வெயில்தவிர சென்னையில் பார்த்திலனே!

என்றுஒரு காட்டான்போல் இளிப்புடனே பார்த்திருந்தேன்!
“சன்னல் திறந்தேநான் சரியாகப் பார்த்திடவா?”-.

என்றேயான் பேத்தியிடம் இளம்-‘மதலை’ போல்கேட்டேன்!
“சன்னலைத் திறந்தால்நீ  சட்டினிதான்!”—அவள்சிரித்தாள்!

 

 

பதிவாசிரியரைப் பற்றி

2 thoughts on “பனித்தூளின் சாகசநடனம்!

  1. பனிப்பூக்களின் நடனத்தை கனடாவில் முதன்முறைத் தேன் கவிதையாய்த் திரட்டி உள்ளார் கவியோகி வேதம்.

    பாராட்டுகள்.

    1969 ஜனவரி குளிரில் என் குடும்பத்தார் கனடா டொரான்டோவில் வந்திறங்கிய போது, ஐந்து வயது மூத்த மகள் ஆச்சரியமாய், “கனடாவின் மண் வெள்ளை” என்று பூரிப்படைந்தாள்.

    சி. ஜெயபாரதன்

  2. மிக்க நன்றி என் அன்பு ஜெயபாரதன் !
    நன்றாக ரசித்து எழுதியுள்ளீர்கள்,
    யோகியார்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.