குறளின் கதிர்களாய்…(151)
செண்பக ஜெகதீசன்
செய்க பொருளைச் செறுநர் செருக்கறுக்கு
மெஃகதனிற் கூரிய தில்.
-திருக்குறள் -759(பொருள்செயல்வகை)
புதுக் கவிதையில்…
சேர்த்திடு பொருளை,
சிறப்பான வாழ்வினுக்கே..
பகைவரின் செருக்கடக்கும்
படைக்கலமாகும் அது..
அதைவிடக் கூரிய ஆயுதம்,
அதுவன்றி வேறில்லை…!
குறும்பாவில்…
பொருளைச் சேர்த்திடு வாழ்வில்,
பகைவரை அடக்கும் ஆயுதம் அது,
அதைவிடக் கூரியது வேறொன்றுமில்லை…!
மரபுக் கவிதையில்…
பாரில் வாழ்வு வளம்பெறவே
பொருளைத் தேடிச் சேர்த்துக்கொள்,
நேரில் வந்திடும் பகைவரையும்
நசுக்கிடும் ஆயுதம் அதுவேதான்,
கூரிய ஆயுதம் அதனுடனே
கூறிட இணையாய் ஏதுமில்லை,
பாரிதை, படையாம் அதற்கிணையாய்ப்
படையதை யன்றி வேறிலையே…!
லிமரைக்கூ..
வாழ்வில் பொருளைச் சேரு,
எதிரியை யழிக்கும் கூரிய ஆயுதம்
இதனிலும் வேறிலை பாரு…!
கிராமிய பாணியில்…
சம்பாதி சம்பாதி பொருளச்சம்பாதி
ஓடியாடி ஒழச்சி பொருளச்சம்பாதி,
ஒலகத்தில வாழத்தான் பொருளச்சம்பாதி..
அதுதான்
ஒனக்கு வாற எதிரியயே
ஒண்ணுமில்லாம அழிக்க ஆயுதமாவும்,
ஒசந்த ஆயுதமாவும்..
அதவிட கூர்மயான ஆயுதம்
அதப்போல எதுவுமில்ல,
அதமிஞ்சி ஆயுதமில்ல..
அதால,
சம்பாதி சம்பாதி பொருளச்சம்பாதி
ஓடியாடி ஒழச்சி பொருளச்சம்பாதி
ஒலகத்தில வாழத்தான் பொருளச்சம்பாதி…!