Blog

  • பொங்கலோ பொங்கல்

    ரா.பார்த்தசாரதி 

     

    செங்கதிரோன்  எழுந்திட்டான் செவ்வானம்  வெடித்து 

    செந்தமிழன்  எழுந்திட்டான் செங்கரும்பு ஒடித்து 

    மங்கையரும்,மழலைகளும் புத்தாடை உடுத்து 

    மாக்கோலம் போட்டிடுவார் மணிகரத்தால் தொடுத்து,

     

    உழவர்கள் விளைச்சலை கொண்டாடும் காலம்.

    தை மாதத்தில் காணும் பொங்கல் விழாக் காலம் !

    உழவர்கள்  உவகையுடன் கொண்டாடும் விழா

     பசுவிற்கும், எருதுக்கும் மக்கள் எடுக்கும்  விழா !

     

    உழவன் சேற்றினிலே இறங்கினால்தான்  நமக்கு சோறு

    நகர்வாழ் மக்கள் அறியாமல் உலாவருவதைப் பாரு 

    பசுவும் , எருதும் விவசாயியின்  முதலீடு, என அறிந்ததே 

    வான் பொய்த்தாலும், வாயில்லா ஜீவன் காப்பாற்றுதே !

     

    பழையன கழிதலும், புதியன புகுதலுமே  போகிப்பண்டிகை,

    பிடி வைக்கும் பெண்கள் கொண்டாடும் கணுப் பொங்கல்,

    கால்நடைகளுக்காக  கொண்டாடும்   மாட்டுப் பொங்கல்,

    உறவும், நட்பும், பரிமாற்றம் கொள்ள  காணும் பொங்கல்!  

     

    தைத்திங்கள் வரட்டும், விவசாயிக்கு தன்னம்பிக்கை தரட்டும்,

    விவசாயி தற்கொலை முயற்சியிலிருந்து விடுபட அரசு உதவட்டும்

    கரும்பும், பொங்கலும், இறைவனுக்கு படைப்போமே ,

    குடும்பத்துடன் பொங்கலோ பொங்கல் என கொண்டாடுவோமே ! 

    Share
  • புறச்சூரிய அரங்கத்தின் வால்மீன்கள் ஓரிளம் பரிதியில் பாய்ந்து ஒளிர்ப்பதை ஹப்பிள் விண்ணோக்கி கண்டுபிடித்தது

    aj

    http://spaceinvideos.esa.int/Videos/1994/06/Collision_Comet_Shoemaker_Levy_9

    https://youtu.be/9JpgHUO0qLI

    சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear)

    கனடா

    ++++++++++++

    பூதக்கோள் வியாழன்
    சூரிய குடும்பப் 
    புறக்கோள்களில் பெரியது !
    சூரியன் போலுள்ள வாயுக்கோள் 
    தன்னொளி யின்றி 
    கண்ணொளி குருடாய்ப் போனது !
    கவர்ச்சி மிக்கது !
    பூதக்கோள் இடுப்பில் சுற்றுவது
    ஒற்றை வளையம் !
    கியூப்பர் வளைய வால்மீன்
    பாதை நழுவி
    வியாழக் கோள் ஈர்ப்பு விசையில் 
    விழுந்து தூளாகி
    நீர்க் களஞ்சியம் சிதறி  
    வேர்வை ஆவி யானது !
    வெடிப்பதிர்ச்சி முறிக்கும்
    வியாழனின் ஒற்றை வளையத்தை  !
    புறச்சூரிய அரங்க வால்மீன் 
    ஓரிளம் பரிதியில்
    பாய்ந்து, 
    ஒளிவீச்சு எழுவதைப் 
    படமெடுக்கும்
    ஹப்பிள் விண்ணோக்கி.+++++++

    நமது சூரிய மண்டல வால்மீன்கள் கோள்மீது விழுவதைப் பார்ப்பதிலும், புறச்சூரிய அரங்கத்தின் வால்மீன்கள் [Interstellar Exocomets] தாரகை மீது பாய்வதை நோக்குவதிலும் நாங்கள் அறிந்து கொள்வது, இம்மாதிரி விண்வெளி நிகழ்ச்சிகள், பூர்வ இளம்பரிதிக் காலங்களில் பொதுவாக நேர்கின்றன என்பதே. வால்மீன்களின் பன்முறை உச்சப் பாய்ச்சல்கள், பரிதிகளின் கன்னிப்பருவ இயக்கங்களை எடுத்துக் காட்டுகின்றன.  இந்த நிகழ்ச்சிகளை நோக்கி வரும்போது, நமது சூரிய குடும்பக் கோள்களை, பூமி உட்பட, வால்மீன்கள் பன்முறை தாக்கியுள்ளதற்கு ஆதாரங்கள் கிடைக்கின்றன.  மெய்யாக, இந்தப் பரிதிப் பாய்ச்சல் வால்மீன்களால் [Star-grazing Comets], நீர்வளச் செழிப்புக்கும், உயிரினத் தோற்றத்துக்கும், மற்ற உயிரின வளர்ச்சிக்குத் தேவையான கார்பன் மோன்ற மூலகப் [Life-forming Elements] பொழிவுகளுக்கும் ஏதுவாய் இருந்திருக்கும் என்று உறுதியாகச் சொல்ல முடிகிறது.

    கரோல் கிரேடி [Eureka Scientific Inc. Oakland, California, NASA Goddard Spaceflight Center]

    Hubble Telescope -1

    வெடித்துச் சிதறிய வால்மீனின் வாயுத் துணுக்குகள் குறிப்பிட்ட பரிதியின் [HD 172555 DEBRIS DISK, SURROUNDING THE STAR] விளிம்பிலே எரிந்து ஆவியாயின.  ஹப்பிள் தொலைநோக்கி மூலம் ஆவியாகிப் போகும் தூள்களைக் காண்பது எளிதாக இருந்தது.  பரிதியை மோதியவை வால்மீன் போல் தெரிந்தாலும், ஆவித்தூள்களின் கலவையில் என்ன உட்பொருள்  உள்ளன என்று தெரியாமல், அவை வால்மீன்கள் என்று உறுதி செய்ய முடியாது.  அவற்றைப் பற்றி விளக்கமாய் இன்னும் அறியாமல், அவை பனி போர்த்திய  வால்மீன்களா, அல்லது பாறை நிரம்பிய  முரண் கோள்களா [Asteroids] என்று எளிதாகத் தீர்மானிக்க இயலாது.

    கரோல் கிரேடி [Carol Grady]

    புறப்பரிதி அரங்கில் கண்டுபிடித்து அறிவிப்பு.

    2004 – 2011 ஆண்டுகளில் முதன்முதல் பிரென்ச் வானியல் விஞ்ஞானிகள் இந்த கன்னிப் பருவ விண்மீனைச் [HD 172555] சுற்றிலும் ஈசல்கள் போல் மொய்க்கும் வெளிப்புற வால்மீன்களைக் [Exocomets], ஈரோப்பியன் தென்னக நோக்கத்தின் ஹார்ப்ஸ் வெகு நுணுக்கக் கோள் தேடி மூலம் [HARPS – High Accuracy Radial Velocity Planet Searcher]  [European Southern Observatory] கண்டுபிடித்தார்.  2017 ஜனவரி 6 இல் அமெரிக்க வானியல் விஞ்ஞானிகள் ஹப்பிள் விண்ணோக்கி மூலம் மரண வால்மீன்கள் பாய்ந்து எறிந்துபோய் ஆவியாவதை இருமுறை 6 நாள் இடைவெளியில் பதிவு செய்தார்.  ஒளியில் ஹப்பிள் சிலிகான், கார்பன் மூலகங்களைக் கண்டுபிடித்தது.  வெடித்தெழும் ஆவியின் வேகம் சுமார் : மணிக்கு 360,000 மைல் !

    Comet Shoemaker-Levi

    [Comet Shoemaker Levy colliding with Planet Jupiter]

    வெளிப்புற வால்மீன் பொழிவு [Exocomets Plunge] புறப்பரிதி அரங்கில் [Interstellar Region] தாரகை நோக்கிப் பாய்ந்து ஆவியானதை, நசாவின்  ஹப்பிள்  விண்ணோக்கி கண்டுபிடித்தது முதன்முதலாய்.  அந்தப் பரிதியின் பெயர் [HD 172555]. அந்த பூர்வ கன்னிப் பருவப் பரிதியின் வயது 23 மில்லியன் வருடங்கள்.  அது பூமியிலிருந்து 95 ஒளியாண்டு தூரத்தில் உள்ளது.  சூரிய ஏற்பாடு [HD 172555] மூன்றாம் புறச்சூரிய அமைப்பைச் [Third Extrasolar System]  சேர்ந்தது.  அந்த பரிதியைச் சுற்றிதான் மோதி முறியும் மரண வால்மீன்கள் [Doomed Comets] ஈசல்கள் போல் கனல் நெருப்பில் பாய்ந்து விழுகின்றன.  அம்மாதிரிப் பரிதிகள் யாவும் 40 மில்லியன் ஆண்டுகட்குக் குன்றிய வயதுள்ள இளஞ்சூரியன்கள்.  அந்த மரண வால்மீன்களை கவண் கற்கள் போல் ஈர்ப்பாற்றலில் வீசி எறிவது அருகில் சுற்றும் வியாழன் போன்ற ஓர் பூதக்கோள்.  [முதல் படத்தைப் பார்க்க]. இந்த நிகழ்ச்சிபோல் நமது சூரிய மண்டலம் தோன்றிய ஆரம்ப காலத்தில் நேர்ந்துள்ளன.  பூமிமேல் வீழ்ந்த வால்மீன்கள் கடற்குழியை நிரப்ப நீர் வெள்ளத்தைக் கொட்டி இருக்கலாம் என்று கருத வழியுள்ளது.

    பூதக்கோள் வியாழனுடன் மோதிய சூமேக்கர்-லெவி வால்மீன்

    Cosmic Crash

    பூதக்கோள் வியாழனின் சூழ்வெளி மண்டலத்தில் சுமார் 10 மைல் உயரத்தில் உள்ள ஸ்டிராடஸ்ஃபியரில் [Stratosphere]  தற்போது தெரியும் நீர் மூட்டம், 1994 இல் வியாழன் அருகில் முறிந்து மோதிய வால்மீன் “சூமேக்கர்-லெவி 9” [Shoemaker-Levi 9] சுமந்து கொட்டிய நீர்தான் என்பது இப்போது உறுதிப் படுத்தப் பட்டுள்ளது.

    கோரான் பில்பிராட் [Herschel Project Scientist, ESA] 

    தாக்கிய பளு மிக்க வால்மீன் சூமேக்கர்-லெவியின் குப்பைகள்  வியாழக் கோள் வளையத்தைச் சிதைத்ததையும், அதன் முறிவுத் தூசிகளையும், நீரையும் விஞ்ஞானிகள் விண்ணோக்கியில் முதன்முறையாகக் காண முடிந்தது.

    ஜோ பேர்ன்ஸ், கார்நெல் பல்கலைக் கழகம்

    சூரிய மண்டலத்தில் அப்பால் இருக்கும் நான்கு பூதப்  புறக்கோள்களின் [வியாழன், சனி, யுரேனஸ், நெப்டியூன்]  சூழ்வெளியில் நீர்மை ஆவி காணப் படுகிறது.   அவற்றுக்கு நான்கு வித விளக்கங்கள் இருக்கலாம்.   பூதக் கோள் வியாழனில் 1994 இல் தோன்றிய நீரின் மூலம், வால்மீன் சூமேக்கரெ-லெவியே.  மற்ற முறைகளிலும் சிறிதளவு நீர் வியாழன் பெற்றிருக்கலாம்.

    டாக்டர் காவலி  [Astronomy & Astrophysics Scholar]  

    ஈசாவின் ஹெர்ச்செல் விண்ணோக்கியே, வியாழக்கோளின் சூழ்வெளியில் உள்ள  நீர்த் தோரணப் புதிரை, நமது நேரடிப் பார்வையில் 1994 இல் விழுந்த வால்மீன் சூமேக்கர்-லெவியால் நேர்ந்தது என்பதை இருபது ஆண்டுகளுக்குப் பிறகு தெளிவாகத் தீர்வு செய்துள்ளது.

    கோரன் பில்பிராட்  [ ESA Herschel Project Scientist]

    Comet Levy 9

    ஈசாவின் ஹெர்ச்செல் விண்ணோக்கி வியாழச் சூழ்வெளியில் நீர் இருப்பதை உறுதிப்படுத்தியது.

    2013 ஏப்ரல் மாதத்தில் ஈரோப்பியன் விண்வெளிப் பேரவை [European Space Agency]  அனுப்பிய ஹெர்ச்செல் விண்ணோக்கி ஆய்வகம்  [ESA Herschel Space Observatory]  தற்போது பூதக்கோள் வியாழனின் சூழ்வெளி  மேற்தளத்தில் நீர் இருப்புக் காரணம் பற்றிய   நீண்ட காலப் புதிர் ஒன்றை விடுவித்ததாக அறிவித்துள்ளது.    அதாவது 1994 ஜூலை மாதம் வியாழனில் மோதிய  சூமேக்கர்-லெவி வால்மீனே காரணம் என்பதை இப்போது உறுதிப் படுத்தியுள்ளது.  வியாழனின் தென் கோளப் பகுதியில் ஒரு வாரமாய் நேர்ந்த ஒளிமயமான வெடிப்பு முறிவில் 21 எண்ணிக்கை யுள்ள துண்டுகள் சங்கிலித் தொடர்போல் வால்மீனி லிருந்து வெளியேறி விழுந்தன !   முடிவில் இந்த வெடிப்பு வான வேடிக்கை பல வாரங்கள் நீடித்தன !   விண்ணோக்கி மூலமாக இதுவே விஞ்ஞானிகள் நேராகக் கண்ட முதல் சூரிய மண்டல வால்மீன் மோதல் நிகழ்ச்சி !   வால்மீன் வீழ்ச்சியால் தென் கோள வியாழனில் நீர்மைத் தோரணம் தெரிந்தது என்பதும் முதன்முதல் நிரூபிக்கப் பட்டது.

    இவற்றுக்குப் பேருதவி செய்த விண்ணோக்கிகள் இரண்டு, விண் வெளியில் சுற்றி வரும் நாசாவின் ஹப்பிள் தொலைநோக்கி, அடுத்து ஈசாவின் இசா ஆய்வகம் [ESA Infrared Space Observatory] [ISA].  ஈசாவின் இசா ஆய்வகம் 1995 இல் பூதக்கோள் வியாழனின் மேற்தளச் சூழ்வெளியை ஆராய்வதற்கு ஏவப் பட்டது.  வால்மீன் சூமேக்கர்-லெவி மோதியதால் வியாழச் சூழ்வெளியில் நீர் வெள்ளம் கொட்டி இருக்கலாம் என்றோர் ஊகிப்பு இருந்தாலும், 1995 இல் அது உறுதியாக நிரூபிக்கப் படவில்லை.  20 ஆண்டுகளுக்குப் பிறகு உறுதிப் படுத்த ஈசாவின் ஹெர்ச்செல் விண்ணோக்கி உதவி செய்தது.

    ESA Herschel Telescope

    வியாழக் கோள் சூழ்வெளியில் தோன்றிய நீர்த் தோரணம் எதனால் எழுந்தது ?

    1.   முதலில் பூதக்கோள் வியாழனின் ஆழ்ந்த உட்தளத்திலிருந்து நீர்த் தோரணம் எழுதிருக்க முடியும் என்னும் ஊகிப்பு தவிர்க்கப் பட்டது.  ஏனெனில் அவ்வித உட்தள ஊற்று நீர் “குளிர் அடைப்பு”  [Cold Trap] அரணிலிருந்து மீறி மேற்தளத்துக்கு வர முடியாது.   ஆகவே வெளிப்புறத்தி லிருந்துதான் நீர் விழுந்திருக்க வேண்டும்.  மோதல் நேர்ந்து 15 ஆண்டுகள் கடந்தும், அந்தப் புதிர் விடிவிக்கப் படாமலே நீடித்தது.  2009 இல் ஈசா ஏவிய ஹெர்ச்செல் உட்சிவப்பு  நுணுக்கக் கண்ணே [Herschel Space Infrared Observatory Eye]  வியாழனின் சூழ்வெளியின் செங்குத்து, மட்ட நிலை நீர் ரசாயன அமைப்பைத் தெளிவாகக் காட்டி நிரூபித்தது.

    2.  ஹெர்ச்செல் உட்சிவப்பு நோக்கத்தின் கணிப்புப்படி பூதக்கோள் வியாழனின்  தென்பகுதியில், வடபகுதியை விட 2 அல்லது 3 மடங்கு நீரளவு காணப் பட்டது.   அதுவும் அந்த நீர்த் தோரணம் வால்மீன் சூமேக்கர்-லெவி 1994 இல் விழுந்த இடத்துக்கு அருகிலே தெரிந்தது.

    3.  மூன்றாவது யூகிப்பு, வியாழக் கோளில் காணப்படும் நீர்த் தோரணம், அங்கே படிந்த விட்ட  அகில வெளித் தூசிகளாய் இருக்கலாம் என்பது.  அப்படி யானால் அந்தத் தூசிகள் வியாழக் கோள் பூராவும் சூழ்வெளியில் ஒரே சீராகப்  பரவி இருக்க வேண்டும்.    தணிந்த மட்ட உயரங்களில் வடிகட்டப் பட்டிருக்க வேண்டும்.    அதனால் அந்த யூகிப்பும் தவிர்க்கப் படுகிறது.

    4.  வியாழக் கோளின் பனிமூட்டம் உள்ள ஒரு துணைக்கோளிலிருந்து “பூத நீர்மை வளையம்”  [Giant Vapour Torus] போல் விழுந்து பரவி இருக்கலாம்.   இது போல் சனிக்கோளில் அதன் துணைக்கோள் என்ஸிலாடஸிலிருந்து பனிநீர் வளையம் விழுந்துள்ளதை ஹெர்ச்செல் விண்ணோக்கி காட்டியுள்ளது.  அந்தக் கோட்பாடும் தவிர்க்கப் படுகிறது .  காரணம் அவ்விதம் நேர வெகு அருகில் வியாழனக்குத் துணைகோள் எதுவும் கிடையாது.

    5.  முடிவாக 2009 – 2010  ஆண்டுகளில் நேர்ந்த சிறு மோதல்கள், அவற்றின் விளைவுகளும், உஷ்ண மாற்ற விளைவுகளும் நீக்கப் படுகின்றன.

    6.  ஈசாவின் ஹெர்ச்செல் விண்ணோக்கியே, வியாழக்கோளின் சூழ்வெளி நீர்த் தோரணப் புதிரை, வால்மீன் சூமேக்கர்-லெவியால் நேர்ந்தது என்பதை இருபது ஆண்டுகளுக்குப் பிறகு தீர்வு செய்துள்ளது.

    வால்மீன் வியாழக் கோளில் விழுந்து வளையத்தைக் கலைத்தது !

    1979 இல் ஏவப்பட்ட வாயேஜர் -1 [ Voyager -1 ] விண்கப்பல்  முதன்முதலில் பூதக்கோள் வியாழனில் சனிக்கோள் போல் சில வளையங்கள் இருப்பதைப் படம் எடுத்தது.  சனிக் கோள் வளையங்கள் போல் ஒளிவீச்சின்றி  வியாழனின் வளையங்கள் மிகவும் மங்கியவை. எண்ணிக்கையில் குறைந்தவை.   அவை எல்லாம் தூசிகளே.   அந்த தூசிகள் பல்லாண்டுகள் கடந்து நாளடைவில் வளையம் முழுவதும் வியாழனில் மறைந்து விடும் என்று ஊகிக்கப்படுகிறது.    மேலும் கோள்கள் தோன்றி 5 பில்லியன் ஆண்டுகள் கடந்துள்ள போது,  புறக்கோள்களின் வளையங்கள் தோன்றி சில மில்லியன் ஆண்டு கள்தான் ஆகி யிருக்க முடியும் என்று விஞ்ஞானிகள் கருதுகிறார்.  விண்கப்பல் வாயேஜர் -1 அனுப்பிய முதல் படத்தில் பூதக்கோளின் மங்கிய வளையம்  150,000 மைல் (250,000 கி.மீ) விட்டத்தில் இருப்ப தாகக் காட்டியது.   வியாழன் வளையத்தின் தடிப்பு 20 மைலுக்கும் (30 கி.மீ)  குன்றியதாக இருப்பதாய் அறிய முடிந்தது.   வியாழக் கோளின் கோசமர் (Gosamer) வளையத் தூள்கள் கோளின் இரண்டு துணைக் கோளிலிருந்து  [Thebe and Amalthea] விழுந்திருக்க வேண்டும் என்று விஞ்ஞானிகள் ஊகிக்கிறார்.    அடுத்த முக்கிய, மெலிந்த, ஒடுங்கிய வளையம் வேறிரண்டு துணைக் கோளிலிருந்து [Adrassstea, Metis] விழுந்தி ருக்க வேண்டும் என்று தெரிகிறது.

    வால்மீன் சூமேக்கர்-லெவி 9 [Shoemaker-Levy 9]  பூதக்கோள் மீது விழுந்தது.

    புறக்கோளின் வளையங்களை  பல்லாண்டுகள் ஆராய்ந்து வரும் வானியல் விஞ்ஞானி மார்க் ஷோவால்டர்  [Mark Showalter] சனிக்கோளின் வளையங் களை ஏதோ ஒன்று பாதித்து வருவாய் அறிந்தார்.   சனிக்கோளின் ஈர்ப்பியல் விசை வளையங்களில் அலைகளை எழுப்புவதாய் கருதினார்.   1996 இல் கலிலியோ விண்ணுளவி அனுப்பிய பூதக்கோள் வியாழனின் வளையங்களை நோக்கினார்.   அப்போது வளையங்களில் மர்மமான அதே மாதிரி அலைகள் எழுவதைக் கண்டார்.   அந்த அலைகளின் அசைவு நீளத்தைக் [Oscillation Length]  கணக்கிட்டு இரண்டு நிகழ்ச்சிகள் அதைத் தூண்டியிருக்க வேண்டும் என்று யூகித்தார்.   அதாவது 1990 அடுத்து 1994 ஆகிய ஈராண்டுகளில் ஏதோ ஒரு நிகழ்ச்சி பாதித்திருக்கிறது என்று தீர்மானித்தார்.   வியாழக் கோளை நெருங்கும் வால்மீன் சூமேக்கர்-லெவி [9] 1992 இல் கண்டு பிடிக்கப் பட்டது.   1994 இல் அந்த வால்மீன் வியாழக் கோளில் மோதி நொறுங்கித் தூள் தூளானது.    அப்படி மோதி வியாழனில் பசிபிக்கடல் பரப்பளவில் ஒரு பெரிய கறையை உண்டாக்கியது.   ஷோவால்டர் வால்மீன் முறிவே பூதக்கோள் வளையத்தில் அத்தகைய அலைகளை உண்டாக்கி யிருக்க வேண்டும் என்று அறிவித்தார்.  1994 இல் வால்மீன் தூசிக் குப்பைகள் வியாழனைச் சுற்று வீதியில் சுற்றி, அதன் வளையத்தோடு சேர்ந்து கொண்டன.

    fig-1c-europa-internal-structure

    சூரிய மண்டலத்தின் துணைக்கோள்களில் நீர்க் கடல், வாயுத் திரவம்

    சூரிய மண்டலத்தில் பூமிக்கு அடுத்தபடிப் பேரளவுக் கொள்ளளவு அடித்தளத் திரவக் கடல் உடையவை சூரிய புறக்கோள்களின் இரண்டு துணைக்கோள்கள் : ஈரோப்பா & டைடான் (Europa & Titan).  பூதக்கோள் வியாழனின் சிறிய துணைக் கோள் ஈரோப்பா. சனிக்கோளின் மிகப் பெரும் துணைக்கோள் டைடான்.  டைடான் புதன் கோளை விடப் பெரியது.  பூமியின் நிலவை விடச் சிறியது.  சூரிய மண்டலத்திலே பூமியைப் போல் சுமார் ஒன்றரை மடங்கு (1.6 மடங்கு 60% மிகுதி) வாயு அழுத்தம் கொண்டது டைடான் துணைக்கோள் ஒன்றுதான் !  டைடானின் அடர்த்தியான வாயு அழுத்தத்தை அளிப்பவை ஆர்கானிக் கூட்டுக் கலவைகள் (Organic Compounds).  அதன் வாயு மண்டலத்தில் எல்லாவற்றை யும் விட நைட்டிரஜன் வாயு மிகுதியாகவும், அடுத்தபடி மீதேன் வாயு (Methane) அதிக அளவிலும் உள்ளன.

    பூமியின் சூழ்வெளியில் மீதேன் வாயு உயிரினக் கிளை விளைவு வாயுவாய்ச் (Byproduct of Living Organisms) சேர்கிறது.  ஆனால் டைடான் துணைக்கோள் மிக்கக் குளிர்ந்த கோளமாய் (94 டிகிரி கெல்வின்) உயிரினப் பிறவிகள் வாழ முடியாத நச்சு மண்டலமாய்ப் போய்விட்டது.  நீரும் திரவமாய் மேல் தளத்தில் நிலைக்க முடியாது.  ஒரு காலத்தில் பெருத்த மாறுதல் ஏற்பட்டு வெப்ப மிகுதியில் பனிக்கட்டி உருகி நீராகி பூர்வ யுக உயிரினங்கள் (Primitive Life) விருத்தியாகி இருக்கலாம் என்று எண்ண இடமிருக்கிறது.  ஆனால் இப்போது டைடானில் எந்த உயிரினமும் வாழ முடியா தென்று வானியல் விஞ்ஞானிகள் கருது கிறார்கள்.  ஆயினும் பேரளவு மீதேன் வாயுள்ள டைடான் அழுத்த வாயு மண்டலத்தை ஆழ்ந்து ஆராய்ந்து வருகிறார்கள்.

    நாசாவின் எதிர்காலக் கெப்ளர் அண்டவெளிக் கோளாய்வுப் பயணம்

    2009 மார்ச் 4 ஆம் தேதி நாசா அனுப்பவிருக்கும் கெப்ளர் விண்வெளிக் கோள் தேடும் திட்டப் பயணம் சூரிய மண்டலத்தைத் தாண்டி அப்பால் செல்லும்.  அந்த ஆழ்வெளி ஆராய்ச்சியைச் செய்யும் போது சூரிய மண்டலத்துக்குள் செவ்வாய்த் தளத்திலும், பூமியில் வீழும் விண்கற்களிலும் “ஒற்றைச் செல் ஜந்துக்கள்” (Unicellular Life Organisms) உள்ளனவா என்பதற்குச் சான்றுகளைக் கண்டறியும்.  அடுத்து நாசா பூதக்கோள் வியாழனின் துணைக்கோள் ஈரோப்பாவுக்கு விண்ணுளவி ஒன்றை ஏவி அடித்தளத்தில் உள்ள நீர்க்கடலை ஆராயவும், அக்கடலில் உயிரின வளர்ச்சிக்குச் சான்றுகள் உள்ளனவா என்றும் அறியவும் திட்டமிட்டுள்ளது.   சனிக்கோளின் சூழ்வெளியில் நீர்மை இருப்பதுவும்,  அதன் துணைக்கோள் டைடானில் [Titan] பனி மூடிய கடல் இருப்பதுவும்,  அந்த நீர் வகை துணைக்கோள் என்ஸிலாடஸ் [Enceladus] மூலம் கிடைப்பதுவும், சூரிய மண்டலத்தில் நீர் மயம் எப்படி உண்டானது என்னும் வரலாற்றை எடுத்துக் காட்டுகிறது.

    (தொடரும்)

    ++++++++++++++++++++++++++

    தகவல்:

    Picture Credits: NASA, JPL; National Geographic; Time Magazine, Discovery, Scientific American & Astronomy Magazines.

    1. Our Universe – National Geographic Picture Atlas By: Roy A. Gallant (1986)

    2. 50 Greatest Mysteries of the Universe – Is There Life on Mars, Titan or Europa ? (Aug 21, 2007)

    3. Astronomy Facts File Dictionary (1986)

    4. The Practical Astronomer By Brian Jones & Stephen Edberg (1990)

    5. Sky & Telescope – Why Did Venus Lose Water ? [April 2008]

    6. Cosmos By Carl Sagan (1980)

    7. Dictionary of Science – Webster’s New world [1998]

    8. The Universe Story By : Brian Swimme & Thomas Berry (1992)

    9. Atlas of the Skies – An Astronomy Reference Book (2005)

    10 Hyperspace By : Michio kaku (1994)

    11 Universe Sixth Edition By: Roger Freedman & William Kaufmann III (2002)

    12 Physics for the Rest of Us By : Roger Jones (1992)

    13 National Geographic – Frontiers of Scince – The Family of the Sun (1982)

    14 National Geographic – Living with a Stormy Star – The Sun (July 2004)

    15 The World Book of Atlas : Anatomy of Earth & Atmosphere (1984)

    16 Earth Science & Environment By : Dr. Graham Thompson & Dr. Jonathan Turk (1993)

    17 The Geographical Atlas of the World, University of London (1993).

    18 Hutchinson Encyclopedia of Earth Edited By : Peter Smith (1985)

    19 A Pocket Guide to the Stars & Planets By: Duncan John (2006)

    20. http://www.thinnai.com/?module=displaystory&story_id=40805151&format=html

    21. BBC News – Milky Way’s Sweetness Throughout [Nov 25, 2008]

    22 BBC News – Genesis Faulty Battery Probed

    23. Sky & Telescope Magazine – Genesis Finding- Earth Has a Problem (Sep 8, 2004)

    24. BBC News – (Genesis) Crashed Probe  Yields Sun’s Secrets (Mar 15, 2006)

    25 New Scientist – Crashed Genesis Probe Delivers Solar Wind Dust – Genesis Space Probe Mission (Mar 15, 2006).

    26. Wikipedea – Genesis Spacecraft [Dec 2, 2008]

    27 Science Magazine – Genesis Search for Origin -The Sun Under Lock & Key By : Bob Silberg [Updated Nov 14, 2008]

    28. The Daily Galaxy Website -The Biological Universe -A Galaxy Insight Posted By : Casey Kazan [Nov 20, 2008]

    29 The Daily Galaxy – Geysers on Saturn’s Moon Enceladus May Singnal Underground Water & Microbial Life [Nov 29, 2008]

    30 The Daily Galaxy on Biological Universe – “Super Cells” that Eat Radiation, Generate Electricity & Cure Cancer -A Galaxy Classic [Nov 14, 2008]

    31 BBC News – Earth Could Seed Titan with Life By : Paul Rincon 33 Wikipedia – Extra-terrestrial Life

    34 Space Science Reference Guide : Europa & Titan : Oceans in the Outer Solar System By : Walter S. Kiefer Lunar & Planetary Institute, Houston, Texas. [2003]

    35 The Daily Galaxy -Non-Carbon Species : Will We Fail to Detect Extra-terresstrial Life ? [Dec 3, 2008]

    36 http://www.thinnai.com/module=displaystory&story_id=40407085&format=html

    (Cassini-Huygens Space Probe Mission) (July 8, 2004)

    ORIGIN OF JUPITER’S WATER SOLVED –THE MASSIVE 1994 COMET BOMBARDMENT

    40.HTTP://WWW.SPACEDAILY.COM/REPORTS/HERSCHEL_LINKS_WATER_IN_JUPITERS_STRATOSPHERE_TO_1994_COMET_IMPACT_999.HTML [APRIL 25, 2013]

    41. https://phys.org/news/2017-01-hubble-exocomets-plunge-young-star.html  [January 7, 2017]

    42. http://www.spacedaily.com/reports/Hubble_detects_exocomets_taking_the_plunge_into_a_young_star_999.html  [January 9, 2017]

    43. http://www.space.com/35280-exocomets-take-dive-into-young-star.html  [January 10, 2017]

    ******************

    S. JAYABARATHAN (JAYABARATHANS@GMAIL.COM) [JANUARY 13, 2017] [R-1]

    Share
  • வீரத்தமிழனின் ஏறுதழுவல் ஆதரவுப் பேரணி!

    பவள சங்கரி

    சங்கே முழங்கு..
    எங்கள் வாழ்வும் எங்கள் வளமும்
    மங்காத தமிழென்று சங்கே முழங்கு
    எங்கள் பகைவர் எங்கோ மறைந்தார்
    இங்குள்ள தமிழர்கள் ஒன்றாதல் கண்டே
    பொங்கு தமிழர்க்கு இன்னல் விளைத்தால்
    சங்காரம் நிஜமென்று சங்கே முழங்கு

    திங்களொடு செழும்பருதி தன்னோடும்
    விண்ணோடும் உடுக்க ளோடும்
    மங்குல் கடல் வற்றோடும் பிறந்த
    தமிழுடன் பிறந்தோம் நாங்கள்,ஆண்மைச்
    சிங்கத்தின் கூட்டமென்றும் சிறியோர்க்கு
    ஞாபகம் செய் முழங்கு சங்கே

    சிங்களஞ்சேர் தென்னாட்டு மக்கள்
    தீராதி தீரரென் றூது சங்கே
    பொங்கு தமிழர்க் கின்னல் விளைத்தால்
    சங்காரம் நிஜமெனச் சங்கே முழங்கு

    வெங்கொடுமைச் சாக்காட்டில் விளையாடும்
    தோளெங்கள் வெற்றித் தோள்கள்
    கங்கையைப்போல் காவிரிபோல் கருத்துக்கள்
    ஊறுமுள்ளம் எங்கள் உள்ளம்
    வெங்குருதி தனிழ்கமழ்ந்து வீரஞ்செய்
    கின்றதமிழ் எங்கள் மூச்சாம்

    பாவேந்தர் பாரதிதாசன்

    a1
    தமிழர்களின் பண்பாடு மட்டும் பாரம்பரியங்களை வெளிப்படுத்தும் பல்வேறு நிகழ்வுகளில் மிக முக்கியமானது ’ஏறுதழுவல்’ என்ற சல்லிக்கட்டு வீர விளையாட்டு ஆகும். வீரர்கள் காளையை அணைத்து அடக்கும் இந்த வீர விளையாட்டு தமிழக இளைஞர்களின் முக்கியமான அடையாளமாகக் கருதப்படுகிறது.

    பழந்தமிழ் இலக்கியங்கள் மற்றும் சிந்துவெளி நாகரிகத்திலும் ஏறுதழுவல் என்ற காளையை அடக்கும் வீர விளையாட்டுகள் நிகழ்ந்ததற்கான சான்றுகள் உள்ளன. அதாவது வீரர்கள் கோபமான காளையைத் தழுவிப் போரிட்டு அடக்குவதால் ‘கொல்லேறு தழுவுதல்’ என்றும் சிறப்பித்துக் கூறப்படுகிறது. கி.மு. 2000 ஆண்டுகளிலேயே ஏறுதழுவல் எனும் விளையாட்டு வழக்கத்தில் இருந்ததை அறியமுடிகிறது. சங்க இலக்கியமான கலித்தொகையில்,

    கொல்லேற்றுக் கோடஞ்சுவானை மறுமையும்
    புல்லாளே ஆய மகள்.
    அஞ்சார் கொலை ஏறு கொள்பவர் அல்லாத
    நெஞ்சிலார் தோய்ப்பதற்கு அரிய – உயிர்துறந்து
    நைவாரா ஆய மகள் தோள்

    என்றுரைப்பதை அறியலாம்.

    மஞ்சு விரட்டு விழாவின் போது மாட்டின் கழுத்தில் கட்டப்படுகிற வளையத்தினை சல்லி என்று குறிப்பிடுவார்கள். அதுமட்டுமன்றி 50 ஆண்டுகளுக்கு முன்பு ‘சல்லிக் காசு’ என்ற நாணயங்களை ஒரு துணியில் வைத்து, அதை மாட்டின் கொம்புகளில் கட்டிவிடும் வழமை இருந்தது. வெற்றி பெறும் வீரருக்கு அந்த பணமுடிப்பு சொந்தமாகும். இதனாலேயே ‘சல்லிக்கட்டு’ என்ற பெயரும் வந்தது.

    இசுபெயின், போர்ச்சுகல், மெக்சிகோ, சப்பான் போன்ற நாடுகளில் காளைப்போர் முக்கியமான தேசியப் பொழுதுபோக்கு விளையாட்டாக இன்றும் நடைபெற்றாலும், ‘ஏறுதழுவல்’ என்ற தமிழ்நாட்டின் சல்லிக்கட்டு கொல்லாமை எனும் அடிப்படையில் நடப்பதே நிதர்சனம்.

    a2

    a3
    இந்திய விலங்கு நல வாரியம், பெடா (PETA), இந்திய நீலச் சிலுவைச் சங்கம், விலங்குகள் நல ஆர்வலர்கள் போன்ற அமைப்புகளும் ஏறுதழுவல் என்ற இந்த வீர விளையாட்டு விலங்குகளை துன்புறுத்துவதாகக் கருதியும், உயிரிழப்புகளும், காயங்களும் ஏற்படுவதாகக் கருதியும் சில ஆண்டுகளாக இதைத் தடை செய்யக் கோரி நீதிமன்றங்களில் வழக்கும் தொடுத்து வருவதும் குறிப்பிடத்தக்கது. ஒவ்வொரு ஆண்டும் பல்வேறு நிபந்தனைகளுடனேயே சல்லிக்கட்டு நடைபெற நீதிமன்றங்கள் அனுமதி அளித்து வருகின்றன. ஆயினும் இந்த ஆண்டு சல்லிக்கட்டு நடத்த முற்றிலும் தடை விதிக்கப்பட்டுள்ளது தமிழர்களிடையே பெரும் கலவரத்தை ஏற்படுத்தி வருகிறது. தமிழ்நாட்டில் பல ஊர்களில் மக்கள் தங்கள் எதிர்ப்பை பல்வேறு விதமாக பதிவு செய்து வருகின்றனர். இன்று ஈரோட்டில் பெருவாரியான இளைஞர்கள் சல்லிக்கட்டு தடை செய்யப்பட்டதற்கான எதிர்ப்பை பதிவு செய்யும் விதமாக மிக அமைதியான முறையில் இரு சக்கர வாகன பேரணி நடத்தினர்.

    IMG_20170113_113115144 (1)

    அனைத்து இளம் தமிழர்களும் கட்சி பாகுபாடு, மத பாகுபாடு, இன பாகுபடு என ஏதுமின்றி, பல்லாயிரம் இளைஞர்கள் ஒன்றுகூடி தமிழர்களின் பண்பாட்டையும் வீரத்தையும் வெளிப்படுத்தும் வகையில் ஒன்றுகூடி கட்டுக்கோப்பாக மாபெரும் பேரணியை நடத்திக்காட்டியுள்ளனர். இந்நிகழ்வுகள் இந்திப் போராட்டத்தின்போது தமிழனைத் தட்டி எழுப்பியது போன்று நம் தமிழரின் பண்பாட்டைக் காப்பதற்காக ஒவ்வொரு இளைஞனும், இளைஞியும் முன் நின்றதே தமிழன் என்பவன் தலை நிமிர்ந்து நிற்பவன் என்பதன் எடுத்துக்காட்டாகும். இதையும் மீறி கண்ணில் நீரை வரவழைக்கும் சில நிகழ்வுகளாக, உடல் ஊனமுற்ற சகோதரர்களும் இந்த நிகழ்வில் தமிழனாக நாங்களும் இணையும் கடமை உண்டு என முன்வந்ததுதான். தமிழன் ஒன்றுகூடி விட்டான். இனி தமிழனுக்கு எங்கும் இடையூறோ, இன்னல்களோ இருந்தால் நாங்கள் இருக்கிறோம் தோள்கொடுக்க, துயர் துடைக்க என்று தமிழினம் எழுத்து நின்றுள்ளது. தமிழகத்திற்கு வழிகாட்டும் வகையில் ஈரோட்டிலிருந்து ஒரு பொறி கிளம்பியுள்ளது. பல்லாயிரம் இளைஞர்கள் பங்குகொண்ட இரு சக்கர ஊர்வலமும், அதற்கு முத்தாய்ப்பாக காங்கேயம் காளைகளை வீரர்கள் அடக்குவதுபோல வண்டிகளில் காளைகளையும், வீரர்களையும் முன்னிறுத்தி ஊர்வலத்தைத் துவங்கியிருப்பதும் ஊர்வலத்திற்கு முன்னே மற்றொரு வீர விளையாட்டான சிலம்பாட்டம் விளையாடி வந்ததும் வெற்றியின் துவக்கமாக மிளிர்கிறது. வண்டியின் தொடக்கம் நிறைவிடத்தை அடைந்தபோது அதன் பின்பகுதி தொடங்கிய இடத்தில் இருந்ததென்றால், (கிட்டத்தட்ட 5 கி.மீ. தொலைவு) அத்துனை ஆயிரக்கணக்கான இளைஞர்களும் மிகுந்த கட்டுப்பாட்டோடு இருந்ததையும், நிகழ்ச்சி அமைதியாக நடைபெற்றதையும் பார்த்தபோது அதன் அமைப்பாளர்களையும், காவல் துறையினரையும் பாராட்டப்படவேண்டியவர்கள் என்று தோன்றியது. தமிழ் மரபு அறக்கட்டளை தலைவர் முனைவர் சுபாஷிணி அவர்களும் இப்பேரணியை வாழ்த்தி வரவேற்றுள்ளார்.

    IMG_20170113_112729479

    IMG_20170113_112813672
    இந்த நிகழ்வில் தமிழனின் பண்பாட்டையும், தமிழனின் பாரம்பரியப் பெருமைகளையும் பறை சாற்றக்கூடிய, பவள சங்கரியின் ‘கடைச்சங்கத்தில் கொங்கு கலாச்சாரம்’ என்ற ஆய்வு நூல் வெளியிடப்பட்டது மணிமகுடம் வைத்ததாக அமைந்தது. வரலாற்று ஆய்வாளர் திரு கனியன் பாலன் மற்றும் திரண்டிருந்த இளைஞர் அணியின் சார்பாக திரு கண. குறிஞ்சி , மக்கள் சிவில் உரிமைக் கழகம் மாநிலத் தலைவர் (பி.யூ.சி.எல்) பெற்றுக்கொண்டதும் குறிப்பிடத்தக்கது. தமிழர் பண்பாட்டை மீட்கும் வகையின் தொடர்ச்சியாக பிப்ரவரி 21ஆம் தேதி உலக தாய்மொழி தினத்தில் அடுத்த நிகழ்வும் நடைபெறும் எனவும் அறிவித்துள்ளனர். மாபெரும் எழுச்சி மிக்க இந்நிகழ்வை மிகக்கட்டுப்பாட்டுடன், அமைதியாக, ஒழுக்க முறையைக் கடைபிடித்தவாறு தமிழன் வீரத்தில் மட்டும் சிறந்தவனில்லை, விவேகத்திலும், கட்டுப்பாட்டிலும் அதைவிடச் சிறந்தவன் என்பதை நிரூபித்துள்ளதும் பாராட்டிற்குரியது.

    IMG_20170113_112122804

    “400 வருசத்திற்கு முன்னாடி வாஸ்கோடகாமா அப்படீங்கற தொப்பிக்காரன், கோழிக்கோட்டுல இறங்கி நம்ம தமிழ் நாட்டைக் கண்டுபிடிச்சான் அப்படின்னு சொல்றாங்க.. அப்ப அமெரிக்காக்காரனுக்கு 400 வருசம்தான் சரித்திரம். ஆனால் நம்ம பாட்டன் , முப்பாட்டன் எல்லாம் 1000 வருசத்துக்கு முன்னாடியே தாஞ்சாவூரு கோயில்ல ராசராசசோழன் காலத்துல கட்டுன கோயில்ல இருக்கற கோபுரத்துல தொப்பிக்காரனோட சிலையை வச்சிப்பிட்டாங்க. அப்ப 1000 வருசத்துக்கு முன்னாடியே நாம இங்கிருந்து கடல் கடந்துபோய் அவனை கண்டுகிட்டு வந்துட்டோம்னுதானே அர்த்தம். எதுக்கெடு நாம அமெரிக்காக்காரன்னு சொல்லிக்கிட்டிருக்கோம். ஆனா இன்னைக்கு அவன் மூஞ்சுல கொரியாக்காரன் ராக்கெட்டு உட்டுட்டான். இந்த கொரியாக்காரனுகளுக்கு நாகரீகமும், வீரமும், திங்கற இட்லி தோசையும், கொழக்கட்டையும், அம்மா, அப்பான்னு கூப்பிடறதுக்கும் சொல்லிக்கொடுத்ததும் மறத்தமிழச்சியான நம்ம கொங்கு நாட்டுக்காரிதான்னு நம்ம ஈரோட்டுக்கார அக்கா பவள சங்கரி இத ஆதாரப்பூர்வமா நிரூபிச்சிருக்காங்க. இந்த நூலை வெளியிடுறதுல ஒவ்வொரு தமிழனும் பெருமைப்படலாம்” என்று நெகிழ்ச்சி பொங்க இதன் அமைப்பாளர் திரு பார்த்திபன் மற்றும் பாபா தொலைக்காட்சி உரிமையாளர் திரு சுரேஷ் அவர்களும் உணர்வு பொங்கப் பேசியதும் குறிப்பிடத்தக்கது.

    Share
  • அமெரிக்க ஜனநாயகம்

    நாகேஸ்வரி அண்ணாமலை

    2016 நவம்பரில் அமெரிக்கத் தேர்தல்கள் முடிந்து அமெரிக்கப் பாராளுமன்றத்தின் செனட்டிற்கும் பிரதிநிதிகள் சபைக்கும் புதிதாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட அங்கத்தினர்கள் 2017 ஜனவரி மூன்றாம் தேதி பதவிப் பிரமாணம் எடுத்துக்கொண்டார்கள்.  புதிய ஜனாதிபதியாகத் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கும் டொனால்ட் ட்ரம்ப் ஜனவரி இருபதாம் தேதி பதவிப் பிரமாணம் எடுத்துக்கொள்வார்.  ட்ரம்ப் குடியரசுக் கட்சியைச் சேர்ந்தவர்; புதிய செனட்டிலும் பிரதிநிதிகள் சபையிலும் குடியரசுக் கட்சியினரே பெரும்பான்மை வகிக்கின்றனர். இதனால் தங்களுடைய கொள்கைகளுக்குத் தக்கவாறு சட்டங்களை ஏற்றவும் பழைய சட்டங்களைத் திருத்தவும் முடியும் என்று குடியரசுக் கட்சியினர் நினைக்கின்றனர்.  அவர்கள் உடனடியாகத் திருத்த நினைப்பது ஒபாமாவின் மருத்துவக் காப்பீட்டுத் திட்டம்.  பதவிக்கு வந்த முதல் நாளன்றே இந்தச் சட்டத்தை முழுவதுமாக விலக்கிவிடுவதாக ட்ரம்ப் தன்னுடைய தேர்தல் பிரச்சாரத்தில் சூளுரைத்தார்.  இந்தச் சட்டத்தால் இருபது லட்சம் அமெரிக்கர்களுக்கு மருத்துவக் காப்பீடு கிடைத்திருக்கிறது, அவர்களுக்கு என்ன மாற்று ஏற்பாடு செய்யப் போகிறார் என்ற விபரம் எதையும் சொல்லவில்லை.    ஒபாமா கொண்டுவந்த எல்லாச் சட்டங்களையும் நிராகரிப்பதுதான் குடியரசுக் கட்சியின் பிரதான நோக்கமாக இருக்கிறது.  இப்போது இரண்டு அவைகளிலும் குடியரசுக் கட்சிக்கு பெரும்பான்மை இருப்பதாலும் ஜனாதிபதியே குடியரசுக் கட்சியைச் சேர்ந்தவர் என்பதாலும் அவர்களுடைய இந்த நோக்கம் எளிதாக நிறைவேறலாம்.

    புதிதாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட ஜனாதிபதி அவருடைய அமைச்சரவைக்குத் தேர்ந்தெடுப்பவர்களை செனட் உறுப்பினர்கள் ஆறு பேர் அடங்கிய கமிட்டி – இதை செனட் ஒழுக்க நெறி கமிட்டி என்று அழைக்கிறார்கள் (Senate Ethics Committee)   – அவர்களிடம் பல கேள்விகள் கேட்டு – அவர்களுடைய சொந்த வாழ்க்கை நெறிமுறைகள் பற்றியும் பல கொள்கைகளில் அவர்களின் நிலைப்பாடு பற்றியும் – அவர்களை எடைபோடுவார்கள்.  அதன் பிறகு செனட்டின் ஓட்டெடுப்பிற்கு அவர்களுடைய பெயர்களைப் பரிந்துரை செய்வார்கள்.  செனட் உறுப்பினர்களில் பெரும்பான்மையினர் அவர்களைத் தேர்ந்தெடுத்தால் அவர்கள் ஜனாதிபதியின் அமைச்சரவையில் அங்கம் வகிப்பார்கள்.  நம் நாட்டில்போல் நாட்டின் பிரதம மந்திரியோ மாநில முதல் அமைச்சர்களோ தங்கள் இஷ்டத்திற்கு தங்கள் மந்திரி சபை சகாக்களைத் தேர்ந்தெடுக்க முடியாது.  அமெரிக்காவிலும் ஜனாதிபதியே தேர்ந்தெடுத்தாலும் செனட்டின் பெரும்பான்மையோர் அனுமதி இல்லாமல் அவர்களைத் தன் அமைச்சரவையில் சேர்த்துக்கொள்ள முடியாது.  நம் நாட்டிலும் இப்படி இருந்தால் எவ்வளவோ ஊழல்கள் களையப்படுமே.

    ஜனாதிபதியாகத் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கும் ட்ரம்ப் தன் அமைச்சரவைக்குப் பெரிய பணக்காரர்களைத் தேர்ந்தெடுத்திருக்கிறார். இவர்களில் பலருக்கு அரசில் அங்கம் வகிக்கும்போது அவர்களுடைய தொழில்களின் நலமும் அரசின் நலமும் முரணும் அளவுக்கு நிறையத் தொழில்கள் உள்ளன.  (ட்ரம்ப்பிற்கே நிறையத் தொழில்கள் இருப்பதால் அந்த மாதிரி நடக்க நிறைய வாய்ப்புகள் இருக்கின்றன.    ஜனாதிபதி மட்டும் தன்னுடைய வணிக நிறுவனங்களை விட்டுவிடச் சட்டத்தின் கட்டாயம் இல்லையாம். ஆனாலும் இது மரபாக இருந்து வருகிறது.  அவற்றை நான் விடத் தேவை இல்லை சொல்லிக்கொண்டிருந்தாலும், பலர் எதிர்த்ததால் அவற்றையெல்லாம் ஒரு ட்ரஸ்டில் வைக்கப் போவதாகக் கூறிக்கொண்டிருக்கிறார்.)  ட்ரம்ப்பால் அவருடைய அமைச்சரவைச் சகாக்களாகத் தேர்ந்தெடுக்கப்பட்டிருப்பவர்களில் பலர் பல தொழில்கள் செய்துகொண்டிருப்பதால் அவர்களுடைய தொழில்களில் அவர்கள் செய்யும் முடிவுகள் அரசின் நன்மைகளைப் பாதிக்காமல் இருக்க வேண்டும் என்பதற்காக ஒரு பெரிய பாரத்தில் அவர்கள் தங்களைப் பற்றிய விபரங்களை நிரப்பிக் கொடுக்க வேண்டும்.  தாங்கள் செய்யும் தொழில்கள் பற்றிக் குறிப்பாக அந்த பாரத்தில் குறிப்பிட வேண்டும்.  தேவையென்றால் தங்கள் தொழில்களை விட்டுவிடவேண்டும்.  மூன்று பேர்தான் அந்த பாரத்தை முழுமையாக நிரப்பிக் கொடுத்திருக்கிறார்கள்.  மற்றவர்கள் அந்த பாரத்தை அரைகுறையாக நிரப்பிக் கொடுத்திருக்கிறார்கள்.  எப்படியாவது செனட் ஒழுக்க நெறி கமிட்டி தங்களைப் பற்றிய முழுவிபரங்களையும் தெரிந்துகொள்ளும் முன் பதவிகளைப் பெற்றுவிட வேண்டும் என்று நினைக்கிறார்கள்.

    இது ஒரு புறம் இருக்க, புதிதாகத் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கும் பிரதிநிதிகள் சபை அங்கத்தினர்கள் பதவிப் பிரமாணம் எடுத்துக்கொள்வதற்கு முந்தைய நாளே ரகசியமாக கூட்டம் கூட்டி ஒரு தீர்மானம் கொண்டுவந்தார்கள்.  இந்த சபையிலும் உறுப்பினர்களின் ஒழுக்க நெறிகளைக் கண்காணிக்க ஒரு குழு (House Ethics Committee) இருக்கிறது.  2008-இல் இது முதன்முதலாக நிறுவப்பட்டது.  ஊழல் புரியும் பிரதிநிதிகள் சபையின் உறுப்பினர்களின் சட்டத்தை மீறும் குற்றங்கள் இந்தக் குழுவின் பார்வைக்குக் கொண்டுவரப்பட்டால் அந்தக் குற்றங்களை விசாரிக்கும்படி ஒழுக்க நெறிகள் அலுவலகத்தைக் (Office of the Congressional Ethics) இந்தக் குழு கேட்டுக்கொள்ளும்.  இந்த ஒழுக்க நெறிகள் அலுவலகம் அந்த உறுப்பினர்கள் பற்றி விசாரித்து பிரதிநிதிகள் சபைக்கு அறிக்கை சமர்ப்பிக்கும்.  உறுப்பினர்கள் குற்றம் புரிந்ததாக ஒழுக்க நெறிகளின் அலுவலகம் தீர்மானித்திருந்தால் ஒழுக்க நெறிகளைக் கண்காணிக்கும் குழு அந்த உறுப்பினர்களுக்குத் தண்டனை வழங்கும்.  பிரதிநிதிகள் சபை உறுப்பினர்கள் மூன்று பேர் இம்மாதிரித் தண்டிக்கப்பட்டுச் சிறைக்குச் சென்றிருக்கிறார்கள்.  அவர்கள் இழைத்த தவறு என்ன தெரியுமா?  அப்படி ஒன்றும் நம் நாட்டு அரசியல்வாதிகள் செய்ததுபோல் ‘மலைமுழுங்கிக் குற்றங்கள்’ இல்லை.  வெளிநாட்டிற்குப் போனபோது அங்கு விலையுயர்ந்த பரிசுப் பொருட்களை அந்த நாட்டின் அரசிடமிருந்து பெற்றார்களாம்.

    தங்களுடைய தவறுகளைக் கண்டுபிடித்துப் பிரநிதிகள் சபை தண்டனை வழங்குவது இந்த அரசியல்வாதிகளுக்குப் பிடிக்கவில்லை.  மேலும் சில சமயங்களில் தங்கள் மீது தவறாக வழக்குகள் போடப்படுவதாகவும் அதை நிரூபிப்பதற்கு தாங்கள் அதிகப் பணம் செலவழிக்க வேண்டியிருப்பதாகவும் பிரதிநிதி சபை உறுப்பினர்கள் அலுத்துக்கொள்கிறார்கள்.  அதனால் இரண்டாம் தேதி இரவோடு இரவாகக் கூடி ஒழுக்க நெறிகளைக் கண்காணிக்கும் குழுவின் அதிகாரத்தைக் குறைக்க வேண்டும் என்று தீர்மானம் போட்டார்கள்.  அதன் பிறகு என்ன நடந்தது என்று நினைக்கிறீர்கள்.  மறு நாள் காலையில் அவர்கள் தங்கள் அலுவலகத்திற்கு வந்தபோது பொதுமக்களிடமிருந்து அத்தனை மின்னஞ்சல்கள் அவர்களுக்கு வந்திருந்தனவாம்.  கூகுளின் வரலாற்றிலேயே அதிகபட்ச அளவில் ‘பிரதிநிதி சபையின் என்னுடைய பிரதிநிதி யார்?’ என்று கேட்டு அத்தனை தேடல்கள் (searches)  வந்திருந்தனவாம்!  தங்களுடைய பிரதிநிதி யார் என்று தெரியாமல்தான் ஓட்டுப்போட்டார்களா என்று கேட்கிறீர்களா?  தீவிர குடியசுக் கட்சி ஆதரவாளர் என்றால் பெயரைக் கூடப் பார்க்காமல் அந்தக் கட்சியின் சின்னத்திற்குப் பக்கத்தில் தன் ஓட்டைப் பதிவு செய்துவிடுவார்.  அதே மாதிரிதான் ஜனநாயகக் கட்சி ஆதரவாளரும்.  சில சமயங்களில் பிரதிநிகளுடைய தொலைபேசி எண்ணை, மின்னஞ்சல் முகவரியைக் கண்டறியவும் இப்படிச் செய்திருக்கலாம்.  இப்படித் தங்கள் பிரதிநிதிகளைத் தொலைபேசியில் அழைத்தவர்கள், மின்னஞ்சல் அனுப்பியவர்கள் ஒழுக்க நெறிகளைக் கண்காணிக்கும் குழுவின் அதிகாரத்தைக் குறைக்க வேண்டும் என்று அவர்கள் போட்ட தீர்மானத்தை உடனடியாக வாபஸ் வாங்க வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்தனராம்.  இப்படி நிறையப் பேரிடமிருந்து வேண்டுகோள் வந்ததால் பயந்துபோய் தங்கள் தீர்மானத்தை உடனேயே வாபஸ் வாங்கிவிட்டார்களாம்.  அது மட்டுமல்ல, செனட் அங்கத்தினர்களும் அவசர அவசரமாக ஆரம்பித்த மந்திரிசபைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டவர்களை விசாரிக்கும் படலத்தை அடுத்த வாரத்திற்குத் தள்ளிப் போட்டிருக்கிறார்களாம்.

    ஆஹா, மக்கள் குரலைக் கேட்கும் இதுவல்லவோ ஜனநாயகம்!  காலில் விழும் கலாச்சாரத்திலிருந்து தமிழ்நாடு எப்போது ஜனநாயகம் பக்கம் திரும்பப் போகிறது?

    Share
  • கேசவ் வண்ணம் – கிரேசி எண்ணம்

    170113 - Tiruppavai 29 - Sitranchirukalé vandunnai

    ’’பாற்கடல் பள்ளி, பரமபத சோபானர்
    நூற்கடல்நா லாயிர நாயகர், -பாற்குடல்
    கன்றுகள் மேய்த்தவர், கண்ணனென் காதலர்,
    என்றுமவர் கேள்வர் எனக்கு’’…..

    கேள்வர் -கணவர்(Eternal Companion)

    எங்கிருந்தோ வந்தென் இதயம் புகுந்தோனை
    சங்கிருக்கும் கையானை சாரங்கனை -திங்கள்நன்
    மார்கழியில் பாடி மணம்புரிந்த ஆண்டாளே
    நேர்வழியில் எம்மை நடத்து….

     
    “பழையன விட்டு புதியன பூண
    மழையன்ன மாலின் மனையாய்-விழைகிறாள்
    புள்ளேறி வைகுந்த புக்ககம் போவதற்கு
    கள்ளுறும் பாசுரத்தாள் காண்”….

     
    “சூடிக் கொடுத்த சுடர்க்கொடி நாச்சியார்
    பாடி இடம்பிடித்தாள் பாற்கடலில்; -ஆடிப்பூ
    ரத்தாள் பதம்பிடித்து ரங்கன் அழைக்கின்றான்
    அத்தாளை அம்மிமிதிக் க “….

     
    “கீதைக்(கு) இணையான ,கோதை திருப்பாவை
    போதை தலைக்கேற புள்ளேறி -தாதை
    பெரியாழ்வார் இல்லம் பறந்துபோய் கேட்டான்
    தரியாஓய்! பெண்ணை தனக்கு”….கிரேசி மோகன்….!

    Share
  • வாழ்த்துகள்!

     

    ’’போகி நாள் வாழ்த்துக்கள்’’….
    —————————————————-

    ”ஆகிறது ஆகட்டும் போகிறது போகட்டும்
    பாகிரதி போலின்பம் பொங்கட்டும் -போகியின்று
    நன்மையை சாக்கிட்டு, தீமையைத் தீக்கிட்டு
    உண்மை கசந்தாலும் உண்”….

    HAPPY PONGAL….
    ———————————

    ”புதியன ஏற்று பழையன போற்றி
    கதிரை குணதிசை காண்போம் – மதிநிறை
    திங்கட் தவம்முடிந்து தைப்பலன் தந்தது
    பொங்கலோ பொங்கலெனப் பாடு’’….
    கிரேசி மோகன்

    Share
  • கேசவ் வண்ணம் – கிரேசி எண்ணம்

    ‘‘ஆண்டாள் திருக்கல்யாணம்’’….
    ————————————————————-

    ’’ஆண்டாள் -30’’….
    ————————————-

    kesav

    ‘’வங்கம் கடைந்தானை, வாழ்த்தித் திருப்பாவை,
    அங்கம் சிலிர்க்க அளித்தவள், -சங்கரன்(அட சங்கராந்தி வந்துடுத்தே)
    மைத்துனன் நம்பியை, மாதவ நோன்பிருந்து,
    கைத்தலம் பற்றினாள்கோ ‘’தை’’(அட தையும் பிறந்து விட்டதே)….கிரேசி மோகன்….

    Share
  • மார்கழி மணாளன் -29

     

     

    திருவிடந்தை – அருள்மிகு நித்தியகல்யாணப் பெருமாள் திருக்கோயில்

    ag

    வாடிடும் மாந்தரின் வேதனை தீர்த்திட

    வேங்கடன் வருவான் வேண்டிய நேரத்தில்

    வேடங்கள் புனைந்தே விண்ணவர் வியந்திட

    வராகனாய் வந்ததும் வேதனை களைந்திட !

     

    அருவோ உருவோ பெரிதோ சிறிதோ

    கருவில் விளைவது கண்ணுக்கு அழகே

    நிறைவாய் மனமே நினைத்தே நின்றால் 

    வந்திடும் நித்தம் வராகன் அருளே !

     

    அறிவும் உணர்வும் அடைக்கலம் கொடுத்தேன் 

    அகத்திலும் புறத்திலும் அனைத்திலும் இருப்பாய்

    அலைகடல் தோண்டியே அகிலத்தைக் கொணர

    அரக்கனை அழித்த ஆனந்தமூர்த்தியே வராகா !

     

    உள்ளத்தின் அழகை உணர்வதே உண்மை

    உணர்ந்த நிலமகள் தன்னையே தந்தாள்

    உலகைக் கொணர்ந்த உத்தமன் மடியில்

    உவகை கொண்டு உடனே அமர்ந்தாள் !

     

    நித்திரை கொண்டவன் நித்தமும் மகிழ்ந்திட 

    முத்திரை மணமே மஞ்சத்தில் நித்தம் ! !

    பிறக்கின்ற உயிருடன் பரமனின் ஆட்டம்

    பிறவாப் பயன்தரும் பெருமாளே பரந்தாமா !

     

    மங்கலம் தருவான் மனதினில் வைத்தால்

    மார்கழி மணாளன் மடமைகள் நீக்கியே

    பங்கயச் செல்வியின் பக்கத்தில் நின்றே

    பாரினைக் காப்பவன் பாதங்கள் பணிவோம் !

     

     

     

     

     

     

     

    Share
  • ஐ ஏ எஸ் தேர்வு உறுதி: 1

    திரு. இன்னம்பூரான் அவர்கள் ஓய்வு பெற்ற அரசு வருவாய்த்துறை அதிகாரி. இவர் ஐ.ஏ.எஸ் சேர விரும்பாமல் சேர்ந்தவராயினும், தம்முடைய 22ஆம் வயதில், முதல் முறையே ஐ.ஏ.எஸ். தேர்வில் வெற்றி பெற்று தேர்ந்தெடுக்கப்பட்டவர். ஓய்வு பெற்ற பின் இறுதிச் சுற்றில் ஐ.ஏ.எஸ் மாணவர்களை நேர்காணல் செய்து தகுதியானவர்களை தேர்ந்தெடுக்கும் குழுக்களில் பணியாற்றியுள்ளார். அழகப்பா பல்கலைகழகத்திலும், சென்னை திறந்த வெளி பல்கலைகழகத்திலும் இணை வேந்தர்கள் மூலம் அறிமுகம் செய்துள்ளார். லெக்ஸிஸ்-நெக்ஸிஸ் என்ற உலகப்புகழ் பெற்ற பதிப்பகம் இவரை அணுகி, அவர்கள் இதற்காக எழுதிய உரூ.40 ஆயிரம் பெறுமானமுள்ள நூல்களையும் மனமுவந்து அளித்துள்ளனர். ஐ.ஏ.எஸ். மாணவர்கள் அறிந்து கொள்ளவேண்டிய முக்கியமான தகவல்கள் குறித்த ஒரு கையேடையும் வெளியிட்டுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது. அந்த வகையில் திரு இன்னம்பூரான் அவர்களின் இத்தொடர் மாணவர்களுக்கு மிகவும் பயனுள்ள வகையில் அமையும் என்று நம்புவோம்.

    ஆசிரியர்

    ஐ ஏ எஸ் தேர்வு உறுதி: 1

    இன்னம்பூரான்

    ai

    தைப்பொங்கல் தினம் ஒரு நுழைவாயில் என்க. வாழ்வியலின் நுழைவாயிலில் ஆவலுடன் நிற்பவர்கள் பள்ளி இறுதி வகுப்பு மாணவ மாணவிகள். அவரவரது வாழ்க்கை எவ்வாறு அமையும் என்பது ஒரு புதிராக இருக்கும் . அந்தப் பருவத்தில், மனதை ஆட்கொள்வது குழப்பம். பெண் குழந்தைகளுக்கு மஞ்சள் நீராட்டு விழா திகைப்பையும், இனம் தெரியாத அச்சத்தையும் தருகிறது. தோளுக்கு மிஞ்சிய தனயன், அரும்பு மீசையை கண்ணாடியில் பார்த்து, பார்த்து வியந்து போகிறான். ஆம். வயதுக்கு வரும்போது இருபாலாருக்கும் கலவரம் மிகுந்து வரும். உடல் வலிமையும் மனப்பாங்கும் புத்துணர்ச்சி பெறுவதால், ஆடல், பாடல், உடற்பயிற்சி, விளையாட்டு ஆகியவை மீது அதீத ஆர்வம் வரலாம். பாலியல் பற்றி கசமுசா தான். புரியாத மர்மாகிய அது சதா சர்வகாலமும் மனதை விட்டு அகலாது. படிப்பு வேம்பாக கசக்கலாம்.

    அநேக பெற்றோர்களுக்கு இந்த மென்மையான சூழ்நிலையில், தான் அனுபவித்து வெளியேறிய உணர்வுகளை மறக்காமல், உரிய ஆலோசனையை, திறந்த மனதுடன், வழங்கும் திறன் இருப்பது கூட இல்லை. பொறுமையும் இருப்பதில்லை. ஆடிப்பாடி கறக்கவேண்டிய மாட்டை வசை பாடி, அடித்து, உதைத்துக் கறக்கப் பார்ப்பார்கள். பெரும்பாலும் விளைவு விபரீதமாக அமையும். கட்டாயப்படுத்தி பெண்ணை திருமணம் செய்து கொடுப்பார்கள். அவள் நடத்தும் இல்லறம் பாடாவதியாக அமையக்கூடும். தற்காலம், அசட்டுக்காதல் வயப்பட்டு பெண்கள் ஏமாற்றப்படுவதையும் காண்கிறோம். பையன் ஓடிப்போய் கெட்ட சகவாசம் செய்து கொள்ளலாம். அல்லது வீட்டிலேயே சப்பாணியாக அடைந்து கிடக்கலாம், ஒன்றுக்கும் உருப்படாமல்.

    பள்ளிகளில் பலரை கட்டி மேய்க்கும் ஆசிரியப் பெருமக்களுக்கு ஒவ்வொருவரின் வளர்ச்சி மீதும் தனிப்பட்ட கவனம் செலுத்த முடிவதில்லை. எனக்குத் தெரிந்த சில தலைமை ஆசிரியர்கள் (திருவாளர்கள் குருவில்லா ஜேக்கப், சாரநாதன், கிருஷ்ணமூர்த்தி, பாஃதர் எர்ராட், டி.எஸ்.சர்மா போன்றோர்) உருவாக்கியவர்கள் உலகெங்கும் புகழ் எய்தினர். நான் படித்த கல்லூரியில் ஒரு வகுப்பில் 23 மாணவர்கள். அவர்களில் ஒருவர் தனியார் துறையில் பிரபலமான நிர்வாகி; செல்வந்தர்; எட்டு பேர்கள் அரசு ஐ.ஏ. ஏ. எஸ். வகையறா உயர்பதவி; நான்கு வழக்கறிஞர்கள், ஒரு கல்வி தந்தை. மற்றவர்களும் நல்ல பொறுப்பான உத்யோகம். தற்காலம் கல்வி நிலையங்களை வழி நடத்துபவர்கள் மாணவர்கள் மீது எங்களுக்குக் கிடைத்தமாதிரி அக்கறை எடுத்துக்கொள்வதில்லை என்பது நிதர்சனம். எனவே, மாணவ கண்மணிகளை கவனத்துடன் வழி நடத்த இவர்களுக்கு நேரம் போதாது; அக்கறையில்லை; திறனும் இல்லை. இது பெரும்பாலும் நிலவும் நிலை என்று கூறப்படுகிறது. விலக்குகள் இருக்கலாம். சில மாதங்கள் முன் ஒரு குக்கிராமத்தில் அரசு பள்ளி ஒன்றில் ஆசிரியர்கள் மிகுந்த ஆர்வத்துடன் கடமை ஆற்றியதை கண்டு களித்தேன். அது போதாது.

    ஒன்பதாவது வகுப்பு முதல் மாணாக்கர்கள் மீது தனிப்பட்ட கவனத்துடன், அனுபவம் வாய்ந்தவர்கள் நல்லெண்ணத்துடன் பழகி வந்தாலே போதும். அவர்களின் நுழைவாயில் திறன் பன்மடங்கு பெருகும். அவர்கள் தாங்கள் பெற்ற அனுபவங்களை பகிர்ந்து கொண்டாலே போதும். சூட்டிகையான மாணவ மாணவிகள் அனுபவப்பாடங்களை அமல் படுத்தக் கற்றுக்கொள்வார்கள். திருநின்றவூர் என்றொரு வைணவ தலம். தாயாரின் பெயர், ‘என்னைப் பெற்ற அம்மா’. கருணைக்கடல். அவரைப் போன்ற சான்றோர்கள் சிலர் என்னைக் கட்டிக் காப்பாற்றி, காபந்து பண்ணி, வாழ்க்கைப்பாடங்கள் சொல்லிக்கொடுத்து, நற்பண்புகளைக் கூட்டி, தீயவையை விலக்கியதால் தான், என்னால் இந்த கட்டுரை வரைய முடிகிறது. அவர்களில் முக்கியமானவர், மேன்யுவல் தாமஸ் பைக்கடை என்ற கேரளத்து வழக்கறிஞர். பள்ளி மாணவனாக நான் இருந்த போது எங்கிருந்தோ வந்த இந்த ரோமன் கத்தோலிக்கர் எனக்கு வழித்துணையாக அமைந்தார். ஆங்கிலத்தில் அதை mentor என்பார்கள். அவரை ஆலமரமாக பாவித்தால், நான் ஒரு விழுது. இன்றைய ஆலமரமாக துளிர்க்கும் அன்றைய விழுது. இது நிற்க.

    வல்லமை ஒரு ஆக்கப்பூர்வமாக பயணிக்கும் மின் இதழ். இலவசமாகக் கிடைக்கிறது. மாணவர்களுக்கு வல்லமை இதழ் பயன் தருவதாக அமையவேண்டும் என்பது என் அவா. அதன் ஒவ்வொரு இதழும் மாணவ மாணவிகளை காந்தம் போல் பற்றி, இழுத்து வந்து, அவர்களின் விழிப்புணர்ச்சியை தட்டி எழுப்பி, அவர்களின் ஆர்வத்தைக் கூட்டி, படிப்படியாக அவர்களின் திறனை மேன்மை படுத்தி, ஐ ஏ எஸ் தேர்வு போன்ற சவால்களை திறம்படக் கையாண்டு, இந்த அரசியல் நிர்வாகத்தில், தகுதியின் அடிப்படையில் இடம் பிடித்து கோலோச்சவேண்டும் என்பது என் அவா. அதன் பொருட்டு வல்லமையின் வாயிலாக நமது மாணவ சமுதாயத்தை, ‘ஐ ஏ எஸ் தேர்வு உறுதி’ என்ற இந்த கட்டுரைத்தொடர் மூலம் வரவேற்கிறேன். படித்து வினா விடைகள் எழுப்பி, கருத்துக்கள் அளித்து, மாணவர்களும், பெற்றோர்களும், ஆசிரிய பெருமக்களும் கலந்து கொண்டால் தான், இந்த பணி பரிமளிக்கும். அத்தருணம், இந்த தொடர் ஐ ஏ எஸ் தேர்வில் மூன்று படி நிலைகளிலும் பங்கேற்று வெற்றிகாண வேண்டும் என்று விரும்பும் மாணவ மானவிகளுக்கு மட்டும் படைக்கப்பட்டிருக்கிறது, அவர்களுக்கு mentor ஆக தொண்டு செய்வது என் இலக்கு. மாணவ சமுதாயத்துக்கு இந்த செய்தியை சேர்ப்பது வல்லமை இதழின் பணி. ஒரு கட்டத்துக்கு மேல், இதை ஒரு வினா-விடை தொடராக அமைத்து, இதில் பங்கு பெறும் மாணவ மாணவிகளுக்கு எழுத்து மூலமாகவும், விழியம் மூலமாகவும், பள்ளி/கல்லூரி அமர்வுகளில் நேரில் சந்தித்து ‘ஐ ஏ எஸ் தேர்வு உறுதி’ என்பதை விளக்கி, அவர்களை ஈடுபடுத்தி வெற்றி காண வைப்பது தான் இந்த தொடரின் பின்னனி.

    இன்றைய பாடங்கள்:

    ஒன்பதாவது வகுப்பு படிக்கும் போது, நாட்தோறும் இதற்காக அரை மணி செலவழித்தால் போதும். வெற்றி உறுதி. பின்னர் உழைத்து பலன் பெறலாம்.
    பெண்களுக்கும், மாற்றுத் திறனாளிகளுக்கும் நுழைவு கட்டணம் கிடையாது. மற்றவர்களுக்கு சொற்பம்.
    கல்லூரி நுழையும் வரை படித்ததே கை கொடுக்கும். அதனால், எதை படிக்க வேண்டாம் என்பதை முதலில் உறுதி செய்து கொள்ள வேண்டும் அதற்கு mentorship உதவும்.
    தமிழ் ஒரு பேப்பர். அதை எடுத்துக்கொண்டால், நிறைய மதிப்பெண் வாங்க உதவும். மிகவும் எளிய பாடங்கள்.
    அன்றன்று சிறிதளவு ஆங்கிலம் கற்றுக்கொள்வது விவேகம். சுலபமான வழிகள் உளன.
    இந்த வழிப்பயணத்தில் பங்கு கொள்ளும் சிலர் ஐ ஏ எஸ் தேர்வு நாடாவிடினும், இது வாழ்வியலுக்கு உதவும்.
    இந்த தொடரின் அணுகுமுறை, மற்ற ஐ ஏ எஸ் பள்ளிகள் நடத்துவதிலிருந்து முற்றும் வேறுபட்டது.
    ஐ ஏ எஸ் தேர்வில் பங்கு கொள்ள விருப்பம் உள்ளவர்கள் எழுப்பும் வினாக்களுக்கு அடுத்த பதிவில் விடை அளிக்கப்படும்.
    கருத்துகள், ஆலோசனைகள் வரவேற்கப்படுகின்றன. இது ஒருவர் mentor ஆக பணி புரிவதால், திசை மாற்றம் வேண்டாம் என்று வேண்டுகோள்.
    வல்லமை இதழ் மூலம் நடத்தப்படும் இப்பணி இலவசம்.
    -#-

    சித்திரத்துக்கு நன்றி:
    http://comps.canstockphoto.com/can-stock-photo_csp3914014.jpg

    Share
  • நூல்

    -முல்லை அமுதன்

    ‘அப்பா!’

    கூப்பிட்ட தொனி கோபமா அல்லது அப்பாவின் இயலாமை மீதான கழிவிரக்கமா?

    மௌனமாகத் திரும்பினேன்.

    விழிகளை அகலத்திறந்து அவளைப் பார்க்கையில்..

    என் கேள்வியின் அர்த்தம் பார்வையில் தெரிந்திருக்கவேண்டும்.

    சொன்னாள்.

    ‘ஏனப்பா..உங்களைப் போல நானும் எழுத வேண்டும்…என்னை என் பாட்டில் விட்டுவிடுங்களேன்’

    அதற்கு..?

    அருகில் வந்து அமர்ந்தேன்.அவள் ஏதோ சொல்ல நினைக்கிறாள்.

     சொல்லட்டுமே. அவளின் குரல் வரட்டுமே.

    எத்தனை நாள் பூட்டிவைத்திருக்கும் கேள்வியும் அது எனில் கேட்டுவிட்டுப்போகட்டுமே.

    உங்கள் விருப்பப்படியே படித்தேன். பட்டமும் பெற்றாயிற்று. உங்கள் விருப்பப்படியே நூல் எழுதியும் தந்தேன். போதுமே…நாம் வாழும் சூழலினைப் பாருங்கள். எப்படி தெளிவாகச் சிந்திக்கிறார்கள்; செயல்படுகிறார்கள். நூலை வாங்க நிறுவனம்..வாசிக்கவென வாசகர்கள்…நாம் காணும் அனைவரின் கைகளைப் பாருங்கள்…ஏதாவது வாங்கி வாசித்தபடியே நிற்கிறார்கள். வயது வித்தியாசம் என்றிலை..மடிக்கணினி, கைத்தொலைபேசி, கைக்கடக்கமான கின்டில் என…அவர்களின் உலகம் தனி.

    நீங்கள் சொல்லும் உங்களின் உலகம் எப்படி என்று சொல்லுங்கள். உங்களைப் பார்க்கவே பரிதாபமாக இருக்கும். நண்பர்களும் சொல்கிறார்கள்…உங்களின் உலகம் வேறு…வாசிக்கும் மக்கள் தொகை குறைவு…அதற்குள் போட்டி..பொறாமை…மற்றவர்களின் வளர்ச்சியில் மூக்கு நுழைத்துத் தட்டிப்பறித்தல் அல்லது இல்லாமல் ஒழித்தல்… ஏனப்பா?

    சரி விடுங்கள்..உங்களுக்கு ஆத்ம திருப்தி என்று தப்பிவிடுகின்றீர்கள். காலம் ஒருநாள் திரும்பும் என்பதும் சரி என்றே வைத்துக்கொள்ளுங்கள். பிறகு நீங்கள் இருப்பீர்களா?

    உங்களின் நூல்கள் அப்படியே அச்சிட்டு வீட்டில் தூங்குகின்றனவே..எனது நூலை வெளியீடு செய்தீர்கள். எத்தனை பேர் வாங்கினார்கள்? உங்கள் மனச்சாட்சியினைத் தொட்டு சொல்லுங்கள். இலவசமாக வாங்கிச் சென்றவர்கள் எத்தனை பேர்! நீங்களே சொல்கிறீர்கள்? இதெல்லாம் கடன் திருப்பிக்கொடுக்கவேண்டும் என்று..பிறகு தேவையா? ஏன் உங்கட சனம் இப்படி?

    நாட்டுக்கு என்றும் தப்பிவிடுகிறீர்கள். எல்லாரும் மறந்திருக்க நீங்கள் மட்டும்…சொல்லுங்கள் அப்பா! எல்லாரும் இப்படித் தப்பிவிடுவதனால் தான் எல்லாமே தோல்வி..தோல்வி மனப்பான்மை  தான் எங்களையும் இப்ப அழிக்கிறது.

    வேண்டாம்..விட்டுவிடுங்கள். போலியாய் வாழ்வதில் பலன் இல்லை. உங்களுக்காவேனும் வாழுங்கள். போலிகளுடன் வாழ்கிறோம் என்பதை உணருங்கள்.

    வாழலாம்..

    மகள் சொல்லிவிட்டுத் திரும்பி பார்க்காமலேயே உள்ளே சென்றாள்.

    எச்சிலை என் முகத்தில் எறிந்து செல்கிறாளா?

    Share
  • பொங்குக பொங்கல்!

    -பெருவை பார்த்தசாரதி 

    அனைவருக்கும் பொங்கல் நல்வாழ்த்துக்கள்! 

    விவசாயத்தையே முழுமையாக நம்பியிருக்கும் விவசாயிகளுக்குத் தைத்திங்களில் வரும் பொங்கல் திருநாளே தலைத்திருநாள். உழுதொழிலுக்கும், ஜல்லிக்கட்டு விளையாட்டுக்கும் பொங்கலுக்குத் தனிப்பெருமை கிட்டியதில் அதிகப் பங்குண்டு.

    கொண்டாட்டாட்டத்தின் உச்சக்கட்டமாகவும், குதூகலத்தின் திருப்திக்கும் அடையாளமாக விளங்கிய பொங்கல் திருநாள் இன்று   பெருந்திண்டாட்டத்திற்கு ஆளாகியிருக்கும் நிலை.

    இயற்கையாகவே உடலுறுதியும், உற்சாக உள்ளமும்pongal கொண்ட விவசாயிகள், தண்ணீரில்லாமல் பயிர்கள் வாடிக் கருகியதைக் கண்டு இடம்பெயர்வதும், தற்கொலைக்கு ஆளாவதும் நாட்டின் ஆரோக்கியத்திற்குச் சவாலாக அமையும்.

    விவசாயத்தை முன்னேற்றப் போராடி முனைந்தாலும், இயற்கைச் சதியும், எங்கிருந்தோ வருகிற அசரீர சக்தியுமொன்று குறுக்கே பாய்ந்துத் தடுத்துக் கொண்டே இருக்கிறது.

    தேவைக்கு அதிகமாக மழைபொழிந்தாலும் தேக்கிவைக்க ஆழமான ஏரிகளும், அணைத்தேக்கங்களும் இன்னும் வேண்டும், இருப்பதைச் சீரமைக்க அனைவரும் அரசாங்கத்துடன் ஒத்துழைக்கவேண்டும்.

    தமிழ்நாட்டில் 249 ஏரிகள் இருப்பதாகச் சொல்கிறார்கள், ஆனால், மழைபொழியும்போது அத்துணைத் தண்ணீரும் கடலிலே கலக்கிறதே தவிரச் சேகரித்து வைத்ததற்குத் தகுந்த சான்றில்லை.

    இன்று நம்முன்னே நிற்கும் விதவிதமான கோரிக்கைகளைப் பார்த்தால், பொங்கலைச் சந்தோஷமாகக் கொண்டாட மனம் வருமா என்பது கேள்விக் குறிதான்.

    தமிழகத்தை வறட்சி மாநிலமாக அறிவிக்கவேண்டும்.

    விவசாயிகள் செலுத்தவேண்டிய நிலவரி முழுமையாக ரத்து செய்யப்படவேண்டும்.

    தண்ணீர் இல்லாததால், பயிர்கள் வாடியதைக் கண்டும், வறட்சியால் பொருட்சேதமானதாலும் தற்கொலை மற்றும் அதிர்ச்சியால் உயிரிழந்த 215 குடும்பங்களுக்கு தகுந்த இழப்பீடு வழங்கவேண்டும்.

    விடுமுறைப் பட்டியலில் இருந்து நீக்கப்பட்ட பொங்கல் விழாவை மீண்டும் பட்டியலில் சேர்க்கவேண்டும்.

    இத்துணைக் கோரிக்கைகளும் நிறைவடைந்தால்தான், பொங்கலைச் செழுமைப் பொங்கலாக மாற்ற முடியும்.

    வந்துவிட்டது பொங்கல்! இனி என்ன செய்யமுடியும், ஜல்லிக்கட்டு நடைபெற வேண்டுமென்ற கோரிக்கைக்காக வீதியிலே போராடிக்கொண்டிருக்கிற மக்கள் நீதிமன்றத்தின் தீர்ப்புக்காக ஏங்கிக் கொண்டிருக்கையில், நல்லதொரு தீர்ப்பு வந்தால் ஒரு சமயம் மற்ற விவசாயிகள் துன்பங்களை மறக்க வாய்ப்புண்டு.

    சங்கடமான இத்தருணத்தில், சோகமான பொங்கல் கவிதையொன்றைப் பார்ப்போம்.

    இனிப்பில்லாப் பொங்கல் 

    தமிழென்று சொன்னாலே விறைப்பாய் நிற்கும்பயிரெல்லாம்
    தண்ணீரில்லாமல் தளர்ந்து வாடிநின்றயின்று வேதனையாகும்! 

    பொன்னிறக் கதிர்கள் பூமியை மறைத்ததோர் காலம்
    சாறிழந்த சாவியாயின்று சாய்ந்து நிற்கிற அவலம்
    மழைவேண்டி மன்றாடியதொருபக்கம்
    விளைநிலம் தண்ணீரின்றி விலைநிலமான தொருபக்கம்! 

    காவிரிநீருக்காகக் கெளரவத்தைவிட்டுக்
    கையேந்தி அக்கம்பக்கம்  வேண்டியதொருபக்கம்
    தண்ணீரென்பது உலகுக்கே பொதுவான தானாலும்
    தாகமெடுத்தால்கூட கொடுக்கமறுக்கிறது அண்டைமாநிலம்!

    வெள்ளைப்புரட்சி, பசுமைப்புரட்சி என்றொருகாலம்
    வறட்சிப்புரட்சியென வந்ததிக்காலம்
    உழவர்சந்தையில் உழுதுவிளைந்த பொருளில்லே இப்பஊரார் கொடுத்த பொருளெல்லாம் உருண்டைபாட்டிலிலே! 

    ஆட்டமும் பாட்டமும் ஆதவன் வணக்கமும்
    மஞ்சு விரட்டில்லையென்றவுடன் மங்கிவிட்டதோ?கட்டவிழ்த்துவிட்ட காளையெல்லாம்
    கட்டுக்கடங்காமல் ஓடியகாலம்போய்
    கட்டுத்தறியில் அடங்கியதேன்? 

    வீதி வழியோடிய வீரமுள்ள காளையெல்லாம்
    நீதிமன்ற உத்தரவுக்காக நிலையாக நின்றதிப்போது!ஆடியும் பாடியுங்கூடிய கொண்டாட்டமெல்லாமின்று
    கோரிக்கை நிறைவேறக் கோஷமிடும் பொங்கலானதோ!

    நெல்மணியும் இல்லை, விதைநெல்லும் இல்லை
    பொங்கலோ பொங்கலென்ற கோஷமுமில்லை
    புதுநாத்தில் புதுநெல்லைப் பிரித்தெடுத்துப்
    புதுப்பானையிலிட்டு பொங்குவதுதான் பொங்கல்
    பொங்கலன்று மகிழ்ச்சி பொங்குமில்லமெங்கும்
    பொதுவாக மஞ்சளும் கரும்புமெங்கும் வீதியெல்லாம் நிரம்பும்! 

    தனித்தனியே பொங்குவாங்க பொங்கலன்று
    சமத்துவமென்று வரும்போது அடுக்குப்பானையில்
    சமமாக ஊர்மத்தியிலொன்றாக பொங்குவாங்க
    பாலும், நெய்யுமுந்திரி பருப்பும் சேர்த்து
    பக்குவமாகச் செய்த(தைப்) பொங்கல்
    இனிப்புப் பொங்கலானாலும், இதுவரைபட்ட
    இன்னல்களை மறக்க நினைக்கும்போது
    ஓரகப்பைப் பொங்கல் வாயினுள்ளே இனிதேசெல்லும்
    ஒருகணம்நாவில் துன்பமெனும்கசப்பு லேசாகத் தெரியும் 

    வாழ்க்கையில் இன்பதுன்பமனைத்துக்கும் இடமுண்டெனினும்
    வாழ்த்துச்சொல்ல ஒருவருக்கொருவர் இசைவதுதான் மனிதஇயல்பு!

    அனைவருக்கும் பொங்கல் நல்வாழ்த்துக்கள்!

     

     

     

    Share
  • இங்கிலாந்திலிருந்து ஒரு மடல். . . (226)

    அன்பினியவர்களே!

    அன்பான வணக்கங்கள். தைத்திருநாளை தன்னுள் அடக்கிக் கொண்ட இவ்வாரத்தில் உங்களோடு மடல் மூலம் உரையாடுவதில் மகிழ்கிறேன். உழவர் தம் திருநாளில், உழைப்பை நல்கி ஊரை உய்விக்கும் உன்னதத் தோழர்கள் உழைப்பின் பரிசினை உவந்து கொண்டாடும் தைத்திருநாளாம், தமிழர் திருநாளாம், தைப்பொங்கல் பொலிவுடன் பூத்திடும் வாரமிது. கடந்த பல வருடங்களாகத் தைப்பொங்கல் பண்டிகையைச் சென்னையில் கழிப்பது எம் வழக்கமாயிருந்தது. தைப்பொங்கல் காலத்தோடு இயைந்து வரும் சென்னைப் புத்தகத் திருவிழாவையும் கன்டு களிப்பதை வழமையாகக் கொண்டிருந்த எமது பிரயாண ஏற்பாடுகள் இவ்வருடம் சிறிது தாமதமாகையால் இம்முறை தைப்பொங்கல் திருநாளை லண்டனில் கழிக்க வேண்டியதொரு சூழல்.

    இன்று அதவாது 12ஆம் திகதி மாலை 5 மணியளவில் பெய்ய ஆரம்பித்த பனிமழை எமது இல்லத்தின் தோட்டத்துப் பச்சையையும் வீட்டின் முற்றத்தையும் வெள்ளைக் கம்பளம் கொண்டு போர்த்தி விட்டது. இலைகளை இழந்து நிர்வாணமாய் நிற்கும் பனிக்கால மரங்களை இயற்கையன்னை பனிமழை எனும் வெள்ளையாடை கொண்டு மூடிவிட்ட அழகிய காட்சி காணுமிடமெங்கும் நிறைந்திருக்கிறது. தமிழர் தாயகமாம் தமிழகத்தில் ஆதவன் தன் கதிர்களால் அனைவரையும் தகித்துக் கொண்டிருக்க லண்டனில் பனிமழையால் மக்களை நடுங்க வைத்துக் கொண்டிருக்கிறது இயற்கை.

    ஐக்கிய இராச்சியத்தின் முக்கியப் பிரதானமான ஒரு பேசப்படும் பொருளாக அனைவருக்கும் பிரமிப்பூட்டும் சாதனையாக இருந்துவருவது இங்கிலாந்தின் தேசியச் சுகாதார சேவையே! வாழ்வில் எத்தகைய நிலையிலிருப்போராகிலும் அவர்கள் பிரித்தானியப் பிரஜைகளாக இருப்பின் அவர்களுக்கு அளிக்கப்படும் வைத்தியம் இலவசமானதாகவே இருக்கும் என்பதுவே தேசியச் சுகாதரச் சேவை ஆரம்பிக்கப்பட்டதன் மைய நோக்கமாகுமானால் இன்றோ அச்சுகாதார சேவை தனது அச்சாணியாகத் திகழும் அவ்விலவசமான வைத்தியத்தை அளிக்கும் முயற்சியில் மிகவும் தள்ளாட்டத்துக்கு உள்ளாகியே இருக்கிறது. இங்கிலாந்து அரசின் பொருளாதாரக் கொள்கை இறுக்கப்பட்டிருப்பதன் காரணமாகப் பொதுச் சேவைகளுக்கு அளிக்கப்படும் நிதித்தொகையின் அளவு குறைக்கப்பட்டிருக்கிறது.

    அதன் காரணமாகவும், ஐக்கிய இராச்சியத்தின் ஜனத்தொகையின் அளவின் அதிகரிப்பாலும், வைத்திய முன்னேற்றங்களின் காரணமாக மக்களின் வாழ்வுக் காலம் நீடிக்கப்பட்டிருப்பதாலும் இன்றைய இங்கிலாந்துத் தேசிய சுகாதாரச் சேவை மிகவும் பாதிப்புக்குள்ளாக்கப்பட்டிருக்கிறது. கடந்த சில நாட்களின் முன்னால் ரெட் குரஸ் என்றழைக்கப்படும் சர்வதேசத் தொண்டு நிறுவனம் தேசிய சுகாதார சேவையின் பாதிப்பு வைத்தியசாலைகளுக்கு வரும் நோயாளிகளின் அடிப்படி மனித உரிமைகள் கூட நிறைவேற்றப்படமுடியாத ஒரு சிக்கலைத் தோற்றுவித்திருக்கிறது என்று தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.

    அதேபோல டாக்டர்களைப் பிரதிநிதிப்படுத்தும் அமைப்பும், இங்கிலாந்தின் பல பகுதிகளின் தேசிய சுகாதாரச் சேவைகளின் நிர்வாகங்களைப் பிரதிநிதிப்படுத்தும் அமைப்பும் இதுவரைத் தாம் கண்டிராத அளவுக்குத் தேசியச் சுகாதார சேவை தனது சேவைகளை நோயாளிகளுக்கு அளிக்கும் முயற்சியில் பல பின்னடைவுகளைச் சந்தித்து வருகிறது என்று கூறியுள்ளார்கள். இக்குற்றச்சாட்டுகள் அனைத்தும் இங்கிலாந்து பிரதமர், மற்றும் தேசியச் சுகாதார சேவையை நிர்வகிக்கும் அமைச்சர் ஆகியோரின் வாசல் கதவுகளைத் தட்டுகின்றன. தொடர்ந்து அறிக்கை வெளியிட்ட பிரதமர் “தேசியச் சுகாதார சேவைக்கு அரசாங்கத்தினால் அளிக்கப்பட்ட நிதித்தொகை அவர்கள் கேட்ட தொகையிலும் பார்க்க அதிகமானது என்றும் ஒரு சில தேசிய சுகாதார அமைப்புகளின் கீழ் வரும் வைத்தியசாலைகளே சிக்கலைச் சந்தித்து வருகின்றன என்றும் அது அவர்களின் நிர்வகாம் சரிவர நிர்வகிக்கப்படாத காரணமே என்றும் கூறியுள்ளார். பிரதமர் முக்கிய பொறுப்பு வகிப்பவர்களின் மனக்கிலேசத்தை கணக்கிலெடுக்காமல் மேலோட்டமாக நடக்கிறார் என்று எதிர்கட்சித் தலைவர் குற்றம் சாட்டியுள்ளார்.

    நாட்டின் ஜனத்தொகை அதிகரிப்பு, அளவுக்கதிகமான வெளிநாட்டவரின் குடியேற்றம், இன்றைய காலகட்டத்தில் ஒருவரின் சராசரி வாழ்வின் காலம் முன்னைய காலங்களை விட அதிகரித்துள்ளது எனும் காரணங்களினால் நிச்சயம் தேசிய சுகாதாரச் சேவையின் தரத்தில் பாதிப்பு ஏற்படுவது தவிர்க்கப்பட முடியாததே! ஒரு நாட்டின் முன்னேற்றம் அந்நாட்டின் மக்களின் அடிப்படைத் தேவைகள் எத்தகைய வகையில் நிறைவேற்றப்படுகிறது என்பதைப் பொறுத்தே தீர்மானிக்கப்படுகிறது. அவ்வகையில் இங்கிலாந்தின் முன்னேற்றத்தின் மீதான அபிப்பிராயத்தைக் கட்டிக் காக்கும் பொறுப்பு அந்நாட்டின் அரசுக்கும், அவ்வரசின் தலைவருக்குமே முக்கியமான பொறுப்பாகும் என்பது நிதர்சனமான உண்மை.

    என் அன்பு வாசக உள்ளங்கள் அனைவருக்கும் எனது அன்பான பொங்கல் வாழ்த்துக்கள்.

    அல்லும் பகலும் உழைத்திடும்
    அன்புத்தோழர் விவசாயிகள்
    கனவுகளைத் தேக்கி வாழ்வில்
    காலமெல்லாம் வாழ்ந்திடுகிறார்

    நாளை தமக்கு நலமாய் விடியும் எனும்
    நம்பிக்கை நெஞ்சில் கொண்டு அவர்கள்
    நாட்டின் உணவு வளம் செழித்திட
    நலிவுற்றே உழைத்து தேய்ந்திட்டார்

    மேடைகள் தோறும் முழங்கிடும் நல்ல
    தலைவர்கள் உண்மையை உணர்ந்திட்டு
    தரமான வாழ்வு விவசாயிகள் பெற்றிட
    தந்திடுவாரோ நலமுள்ள திட்டங்கள்?

    தைமகள் பிறந்திட்ட பொன்னாளில்
    தைத்திருநாளாம் தமிழர் தம் திருநாளில்
    பொங்கிடும் எம் தோழர் வீட்டுப் பானைகள்
    பொழியட்டும் மகிழ்வதனை அவர்தம் வாழ்வினில்

    உழைத்து வாழ்ந்திடும் தோழர்கள்
    உன்னதமாய்ப் பெற்றிடட்டும் வெற்றிகள்
    தைத்திருநாளில் என் அன்பு வாழ்த்துக்கள்
    பொழிகின்றேன் அன்புத் தமிழ்ச் சொந்தங்களுக்கு!

    அன்புடன்
    சக்தி சக்திதாசன்

     

     

    Share
  • கேசவ் வண்ணம் – கிரேசி எண்ணம்

    ”மால்பிடித்தக் கண்ணனின் கால்பிடித்தக் கோதையின்
    நூல்படித்து நோன்பினை நோற்றிடுவோம் : -பால்வடிக்கும்
    ஆவினம் மேய்த்தன்று ஆயர் குலம்காத்த
    வாவிதான் பாலாழி விஷ்ணு’’….கிரேசி மோகன்….!
    ’ஆண்டாள் -28’’….
    ———————————

    kesav

    ‘’பறவைகளும் தூங்கும் பனிமார் கழியில்,
    கறவைகள் பின்சென்று கானச் , -சிறையில்,
    பிறவைகள்(otherthings) விட்டொழித்து, புல்லாங் குழலின்
    சரணத்தில் பல்லவியாய் சேர்’’….கிரேசி மோகன்….

    Share
  • ’’ரமணா”

    av1

    பகவான் ஸ்ரீ ரமணரின் ‘’WHO AM I” படித்து….!

    ’’எண்ணம் உறங்கையில் ஏதுலகம், ஆதலால்
    திண்ணமாய்ச் சொல்லத் திராணியுண்டு: -கன்னம்போல்(பூச்சிக்கு கன்னம்வைக்கும் திருடன்போல்)
    கூட்டுச் சிலந்திதன் கூட்டைஇ ழுப்பதுபோல்
    வாட்டும் நினைவை விலக்கு’’….கிரேசி மோகன்….!

    ’’ரமணா-வே(RAMANA WAY)’’ ஆசிரியர் சாரதா அவர்களின் எடிடோரியலைப்
    படித்து விட்டு’’….!

    ”வலிதாங்கி யாகவாழ், வந்த வலிக்கு
    கிலிகொடுக்கும் யார்க்கென்ற கேள்வி -ஒலிக்கும்
    பதிலதற்கு ஆன்மா, ’’படவா மனஸால்
    எதிரொலிக்கும் மேனி எழவு(ஜடம்)’’….கிரேசி மோகன்….!

    மாயநான் ஆணவம் மாற்றிடும் கோவணம்
    தூயநான் நிர்வாண தெய்வீகம் -நாயனார்
    யோகி ரமணரின் யோசனையைக் கேட்டுணர்வோர்
    சாகிறதை வென்ற சவம்….
    திருவா திரையில் திருச்சுழி ஊரில்
    கருவாய் அழகம்மை கர்பம் -உருவாய்
    பெருந்தவம் செய்த பகவான் ரமணர்
    பிறந்து துறந்தார் பிறப்பு….கிரேசி மோகன்….!

    Share