-பெருவை பார்த்தசாரதி 

அனைவருக்கும் பொங்கல் நல்வாழ்த்துக்கள்! 

விவசாயத்தையே முழுமையாக நம்பியிருக்கும் விவசாயிகளுக்குத் தைத்திங்களில் வரும் பொங்கல் திருநாளே தலைத்திருநாள். உழுதொழிலுக்கும், ஜல்லிக்கட்டு விளையாட்டுக்கும் பொங்கலுக்குத் தனிப்பெருமை கிட்டியதில் அதிகப் பங்குண்டு.

கொண்டாட்டாட்டத்தின் உச்சக்கட்டமாகவும், குதூகலத்தின் திருப்திக்கும் அடையாளமாக விளங்கிய பொங்கல் திருநாள் இன்று   பெருந்திண்டாட்டத்திற்கு ஆளாகியிருக்கும் நிலை.

இயற்கையாகவே உடலுறுதியும், உற்சாக உள்ளமும்pongal கொண்ட விவசாயிகள், தண்ணீரில்லாமல் பயிர்கள் வாடிக் கருகியதைக் கண்டு இடம்பெயர்வதும், தற்கொலைக்கு ஆளாவதும் நாட்டின் ஆரோக்கியத்திற்குச் சவாலாக அமையும்.

விவசாயத்தை முன்னேற்றப் போராடி முனைந்தாலும், இயற்கைச் சதியும், எங்கிருந்தோ வருகிற அசரீர சக்தியுமொன்று குறுக்கே பாய்ந்துத் தடுத்துக் கொண்டே இருக்கிறது.

தேவைக்கு அதிகமாக மழைபொழிந்தாலும் தேக்கிவைக்க ஆழமான ஏரிகளும், அணைத்தேக்கங்களும் இன்னும் வேண்டும், இருப்பதைச் சீரமைக்க அனைவரும் அரசாங்கத்துடன் ஒத்துழைக்கவேண்டும்.

தமிழ்நாட்டில் 249 ஏரிகள் இருப்பதாகச் சொல்கிறார்கள், ஆனால், மழைபொழியும்போது அத்துணைத் தண்ணீரும் கடலிலே கலக்கிறதே தவிரச் சேகரித்து வைத்ததற்குத் தகுந்த சான்றில்லை.

இன்று நம்முன்னே நிற்கும் விதவிதமான கோரிக்கைகளைப் பார்த்தால், பொங்கலைச் சந்தோஷமாகக் கொண்டாட மனம் வருமா என்பது கேள்விக் குறிதான்.

தமிழகத்தை வறட்சி மாநிலமாக அறிவிக்கவேண்டும்.

விவசாயிகள் செலுத்தவேண்டிய நிலவரி முழுமையாக ரத்து செய்யப்படவேண்டும்.

தண்ணீர் இல்லாததால், பயிர்கள் வாடியதைக் கண்டும், வறட்சியால் பொருட்சேதமானதாலும் தற்கொலை மற்றும் அதிர்ச்சியால் உயிரிழந்த 215 குடும்பங்களுக்கு தகுந்த இழப்பீடு வழங்கவேண்டும்.

விடுமுறைப் பட்டியலில் இருந்து நீக்கப்பட்ட பொங்கல் விழாவை மீண்டும் பட்டியலில் சேர்க்கவேண்டும்.

இத்துணைக் கோரிக்கைகளும் நிறைவடைந்தால்தான், பொங்கலைச் செழுமைப் பொங்கலாக மாற்ற முடியும்.

வந்துவிட்டது பொங்கல்! இனி என்ன செய்யமுடியும், ஜல்லிக்கட்டு நடைபெற வேண்டுமென்ற கோரிக்கைக்காக வீதியிலே போராடிக்கொண்டிருக்கிற மக்கள் நீதிமன்றத்தின் தீர்ப்புக்காக ஏங்கிக் கொண்டிருக்கையில், நல்லதொரு தீர்ப்பு வந்தால் ஒரு சமயம் மற்ற விவசாயிகள் துன்பங்களை மறக்க வாய்ப்புண்டு.

சங்கடமான இத்தருணத்தில், சோகமான பொங்கல் கவிதையொன்றைப் பார்ப்போம்.

இனிப்பில்லாப் பொங்கல் 

தமிழென்று சொன்னாலே விறைப்பாய் நிற்கும்பயிரெல்லாம்
தண்ணீரில்லாமல் தளர்ந்து வாடிநின்றயின்று வேதனையாகும்! 

பொன்னிறக் கதிர்கள் பூமியை மறைத்ததோர் காலம்
சாறிழந்த சாவியாயின்று சாய்ந்து நிற்கிற அவலம்
மழைவேண்டி மன்றாடியதொருபக்கம்
விளைநிலம் தண்ணீரின்றி விலைநிலமான தொருபக்கம்! 

காவிரிநீருக்காகக் கெளரவத்தைவிட்டுக்
கையேந்தி அக்கம்பக்கம்  வேண்டியதொருபக்கம்
தண்ணீரென்பது உலகுக்கே பொதுவான தானாலும்
தாகமெடுத்தால்கூட கொடுக்கமறுக்கிறது அண்டைமாநிலம்!

வெள்ளைப்புரட்சி, பசுமைப்புரட்சி என்றொருகாலம்
வறட்சிப்புரட்சியென வந்ததிக்காலம்
உழவர்சந்தையில் உழுதுவிளைந்த பொருளில்லே இப்பஊரார் கொடுத்த பொருளெல்லாம் உருண்டைபாட்டிலிலே! 

ஆட்டமும் பாட்டமும் ஆதவன் வணக்கமும்
மஞ்சு விரட்டில்லையென்றவுடன் மங்கிவிட்டதோ?கட்டவிழ்த்துவிட்ட காளையெல்லாம்
கட்டுக்கடங்காமல் ஓடியகாலம்போய்
கட்டுத்தறியில் அடங்கியதேன்? 

வீதி வழியோடிய வீரமுள்ள காளையெல்லாம்
நீதிமன்ற உத்தரவுக்காக நிலையாக நின்றதிப்போது!ஆடியும் பாடியுங்கூடிய கொண்டாட்டமெல்லாமின்று
கோரிக்கை நிறைவேறக் கோஷமிடும் பொங்கலானதோ!

நெல்மணியும் இல்லை, விதைநெல்லும் இல்லை
பொங்கலோ பொங்கலென்ற கோஷமுமில்லை
புதுநாத்தில் புதுநெல்லைப் பிரித்தெடுத்துப்
புதுப்பானையிலிட்டு பொங்குவதுதான் பொங்கல்
பொங்கலன்று மகிழ்ச்சி பொங்குமில்லமெங்கும்
பொதுவாக மஞ்சளும் கரும்புமெங்கும் வீதியெல்லாம் நிரம்பும்! 

தனித்தனியே பொங்குவாங்க பொங்கலன்று
சமத்துவமென்று வரும்போது அடுக்குப்பானையில்
சமமாக ஊர்மத்தியிலொன்றாக பொங்குவாங்க
பாலும், நெய்யுமுந்திரி பருப்பும் சேர்த்து
பக்குவமாகச் செய்த(தைப்) பொங்கல்
இனிப்புப் பொங்கலானாலும், இதுவரைபட்ட
இன்னல்களை மறக்க நினைக்கும்போது
ஓரகப்பைப் பொங்கல் வாயினுள்ளே இனிதேசெல்லும்
ஒருகணம்நாவில் துன்பமெனும்கசப்பு லேசாகத் தெரியும் 

வாழ்க்கையில் இன்பதுன்பமனைத்துக்கும் இடமுண்டெனினும்
வாழ்த்துச்சொல்ல ஒருவருக்கொருவர் இசைவதுதான் மனிதஇயல்பு!

அனைவருக்கும் பொங்கல் நல்வாழ்த்துக்கள்!

 

 

 

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *