Blog

  • கேசவ் வண்ணம் – கிரேசி எண்ணம்

    ‘’கூடாரவல்லி திருவாதிரையன்று….அரி, அரன், அம்பாள் மூவரும் ஒன்று….!

    ’’கூடாரை வெல்வார், கடைசிவரை கூடுபவர்
    வாடாது காத்திடும் வைணவம்: -மூடநெய்
    ஆதிரை ஈசனவர், அக்காரக் கண்ணனவர்,
    பாதியிறைப் பங்கருளம் பாள்’’….கிரேசி மோகன்….!

    பாதி இறை பங்கு அருளம்பாள்….!

     

    ’’ஆண்டாள் -27”….
    ————————————–

    kesav

    ”கூடாரை வெல்லும்சீர் கோவிந்தன் முப்பதைப்
    பாடாத வாயெல்லாம் பாழ்வாயே, -ஆடா(து)
    அசங்கா(து) அவனே அவள்பாடல் கேட்க,
    விஷம்காதுக்(கு) அன்றோஊர் வம்பு”….

    ”கூடாரம் போல்குவிந்து, மூடாத பாத்திரத்தில்,
    சூடாறும் பொங்கலை சேவித்து -கூடார
    வல்லியில் உண்பவர்க்கு, இல்லை டயாபடீஸ்,
    வில்லியூர் செல்வியின் வாக்கு”….கிரேசி மோகன்…

    Share
  • “ஸ்ரீ சிவரமணார்ப்பணம்”

    மீ.விசுவநாதன்

    av

    av1

    பிறப்பே இலாத உனக்காக – ஒரு
    பெரிய விழாவே நடத்துகிறேன்- உன்
    பேரையும் சொல்லிநா(ன்) ஆடுகிறேன்

    பிறப்பாய் எடுத்த ரமணரிடம் – உன்
    பித்தாய் உருகி வணங்குகிறேன் – ஒரு
    பேச்சுமே இல்லைதான் வாயடைத்தேன்

    இறப்பும் இனிதாய் இருப்பதற்கு – உன்
    எளிய பெயரைச் செபிக்கின்றேன் – “நான்”
    என்னிலே என்னையே தேடுகிறேன்

    சிறப்பாய் உனக்குப் பிடிக்கின்ற – ஒரு
    வில்வ இலையாய் இருக்கின்ற – என்
    சிந்தையை உன்னிடம் வைக்கின்றேன்

    துறப்பே சுகமாய் இருக்குமென – அவர்
    சொன்ன உயிர்ச்சொல் சிவமென்றே – தினம்
    சுந்தரச் சூழலில் வாழுகிறேன்

    (இன்று 11.01.2017 “திருவாதிரை”
    ஸ்ரீ சிவன், ஸ்ரீ ரமணரின் திருநட்சத்திரம்)

    Share
  • காற்றின் அலகுகள்

    முல்லைஅமுதன்

     

    காற்று
    தன் அலகுகளால்
    தலையினை
    துளைத்தபடி
    எதையோ தேடியது.
    கிடைத்ததை சப்பி தின்று
    தூர எறிந்தது.
    அவைகள் சுவரில் ஒட்டிக்கொண்டது
    என் கவிதைகளாய்.
    மீதமிருத்த உடலை
    என்ன செய்யலாம் என்று தீர்மானித்த பொழுதின் முடிவாய்
    கட்டித் தொங்கவிட்டு
    தற்கொலை என்றெழுதியது.
    எனி
    கவிதை எழுதாபொழுதுகள்
    அவர்களுக்காய் விடியும்.

    Share
  • மார்கழி மணாளன் 28

     

     

    திரு அயோத்தி – அருள்மிகு இராமன் திருக்கோயில்

    ag

    உறவுக்குப் பொருள் கொடுத்த உத்தமனே

    மரபுக்கு மகுடம் துறந்த மூத்தவனே

    துறவினிலும் அருள்  சேர்த்த தூயவனே

    கருணைக்கு கடலான கதிர்குலக் காவலனே !!

     

    மானுடனோ வானரனோ வேடுவனோ வேதவனோ

    ஊனுடைய உலகினிலே உறவாக்கித் தந்தாய்

    கானகத்து வாழ்வினிலும் கற்புக்குப் பொருளாய்

    தானழித்து தரணிக்கே தருமங்கள் சொன்னாய் !

     

    அன்புக்குப் பாலங்கள் அகத்தினிலே படைத்தாய்

    அன்புடையாள் அழைத்துவர ஆழ்கடலை இணைத்தாய்

    அன்னையென சபரிக்கே அருளமுது அளித்தாய் !

    அரக்கனின் தம்பியையும் அரவணைத்தே  நின்றாய் !

     

    பறவைக்கும் மகனாகிப் பரமபதம் தந்தாய்

    துறவையும் சொத்தாக்கித் தூயவர்கள் பணிந்தாய்

    மறவாமல் நினைக்கின்ற மாருதியின் மனமிருந்தே 

    மறையாகப் பெயர்சொல்ல மறுக்காமல் வருபவனே!

     

    செருக்காலே  மதியிழந்த சிவநேசன் இராவணனை

    வெறுக்காமல் வழிகாட்டி வென்றிட நினைத்தாயே !

    மதிக்காமல் பெண்மையினை பழித்திட்டப் பாதகனை

    புவிகாக்க போர்முனையில் விதிமுடித்த வில்லோனே !

     

    நதிகாத்து நிலம்காத்து மதிகாக்கும்  மன்னவனே

    விதிகாத்து வினைகாத்து  மனைகாக்க வருவாயோ ?

    புவிநாற்று நிலம்பார்த்து வளம்பெருக்கி வருதல்போல் 

    மதிகாத்து மனம்காத்து நலம்பெருக்க வருவாயோ ?

     

     

     

     

     

    Share
  • எதிர்காலம்   

    -ரா. பார்த்தசாரதி

    படிக்கும்  மாணவன்  எதிர்பார்ப்பதோ  நல்ல  மார்க்!
    அறிவை விட மார்க்கை வைத்து எதிர்காலம்
    கணிக்கப்படுகிறதே!

    இளம் பெண்களின் கல்வியே  எதிர்காலத்தைத்
    தீர்மானிக்கிறதே!
    நல்ல ஊதியமும், நற்கணவனும் அமைந்தால்  சிறப்படைகின்றதே!

    மாத  வருமானத்தில்  சேமிக்க வேண்டிய  நிலைமை!
    அதுவே,  பிரச்சனைகளை எதிர்காலத்தில்  சமாளிக்கும்
    திறமை!

    அரசியல்வாதிகளும், அரசு ஊழியரும் எதிர்பார்க்கும்
    பதவி உயர்வு!
    தன் முயற்சியின்றி, பணபலத்தால் அடையும்  இறுமாப்பு!

    நல்ல வேலை கிடைத்தால், நல்ல குடும்பம்
    அமைவதில்லை!
    நல்ல குடும்பம்  அமைந்தால், நல்ல ஊதியம் கிடைப்பதில்லை!

    சோம்பேறியாய்த் திரிபவனுக்கு எதிர்காலம் ஓர்
    இருட்டறைதான்!
    கடின முயற்சியுடன் உழைப்பவனுக்கு எதிர்காலம் ஓர்
    பொற்காலம்!

    எங்கே  சென்றிடும் காலம், அது நம்மையும்  வாழ
    வைக்கும்!
    கடமை, கண்ணியம், கட்டுப்பாடுபோன்றவை  நம்மை
    உயர வைக்கும்!

    எதிர்காலத்தை  நினைந்து  என்றும்  கனவு  காணாதே!
    வருவது  வரட்டும் என்று எண்ணி உழைக்கத் தவறிடாதே!

    நாட்டின் எதிர்காலம் இளைஞர்  கையில்தான்!
    திறம்படச்  செயலாற்றினால் நன்மை நமக்குத்தான்!

    எதிர்காலத்தை நினைந்து வாழ்க்கையில் சேமிக்கக்
    கற்றுக்கொள்!
    உன் குடும்பத்தைத் தாங்கும் தூண் என  ஓத்துக்கொள்!

     

     

    Share
  • மார்கழி மணாளன் 27

     

    திரு துவாரகை – அருள்மிகு கல்யாண நாராயணன் திருக்கோயில்

     ag

     குழலொன்றைக் கையேந்தி கோதையினை மனமேந்தி

    கோபியர்கள் நினைவேந்திக் கோவர்தனம் காத்தவனே!!

    கோலாட்டம் பார்த்திடவே கோவினங்கள் கூடிவர

    குலம்காத்த யாதவனே ! கோபாலா கண்மலர்வாய் !

     

    மந்தாரப் புன்சிரிப்பால்  மங்கையர்கள் உளம்தொட்டு

    மாயைகள் செய்தவனே மதுராவை வாடவிட்டாய் !

    மாளாத துயர்கொண்ட மங்கையர்கள் மனம்தேடி

    மாதவனே! ஆதவனே! மனம்கொண்டார் துவாரகையில்  !

     

    தூவானம் தாலாட்ட துளிர்மலர்கள் கால்போற்ற

    பூங்காற்றுப் போர்வையில் புன்னகை படைப்பவனே!

    தூங்காமல் துவாரகையில் துயர்நீக்கி நிற்பவனே

    மூவுலகும் காத்திடவே முடிகொண்டாய் துவாரகையில் !

     

    சூதாடும் மன்னவர்களின் அவையடக்கம் நீங்கிடவே

    சதிராடும் சபைதன்னில் விதிமுடிக்க வந்தவனே !

    மதிகெட்டுப் பாண்டவர்கள் பாஞ்சாலியைப் பகடையிட

    கதியென்று வந்தவளுக்குக் கைகொடுத்த காவலனே  !

     

    உறியடித் தோழனின் உளமறிந்த கண்ணா

    உவமைக்கு நிகரில்லா உலகாண்ட மன்னா

    ஒருபிடி அவலுக்குப் பொன்னையே தந்தாய் 

    ஒருபிணி இல்லாத மனமென்று தருவாய் ?

     

    வருவினை அறிந்தும் வாதிடும் எண்ணங்கள்

    தருவினை அறிந்தும் தள்ளாடும் செயல்கள்

    கருவினில் அழித்தே காத்திடு  கமலனே !

    கருடனில் வந்தே காத்திடும் கண்ணனே!

    Share
  • எல்லோரும் பொங்கிநிற்போம் !

    எம். ஜெயராமசர்மா …. மெல்பேண் … அவுஸ்திரேலியா

     

    image3

    புத்துணர்வு புதுக்கருத்து

    புறப்பட்டு வந்திடட்டும்

    பொங்கலிட்டு மனம்மகிழ்ந்து

    புதுப்பொலிவு பெற்றிடுவோம்

    பொறுமையெனும் நகையணிந்து

    பொங்கிநின்று மகிழ்ந்திடுவோம்

    இறைநினைப்பை மனமிருத்தி

    எல்லோரும் பொங்கிநிற்போம் !

     

    குறையகன்று ஓடிவிட

    இறைவனைநாம் வேண்டிடுவோம்

    நிறைவான மனதுவரும்

    நினைப்புடனே பொங்கிடுவோம்

    துறைதோறும் வளர்ச்சிவர

    துடிப்புடனே உழைப்பதென

    மனமெண்ணி யாவருமே

    மகிழ்வுடனே பொங்கிநிற்போம் !

     

    சாந்தியொடு சமாதானம்

    சகலருமே பெற்றுவிட

    சந்தோஷம் வாழ்வினிலே

    சகலர்க்கும் நிலைத்துவிட

    மழைபொழிந்து பூமியெங்கும்

    பயிர்செழித்து வளர்ந்துவிட

    வழிவகுக்க இப்பொங்கல்

    வாய்துவிட பொங்கிநிற்போம் !

     

    பால்பொங்கி வருவதுபோல் பண்புபொங்கி வரவேண்டும்

    பச்சரிசி சிரிப்பதுபோல் பலமனங்கள் விரியவேண்டும்

    சுவைபயக்கும் சர்க்கரையாய் சுகங்கள்பல வரவேண்டும்

    இவையாவும் வாழ்வினிலே இருக்கவெண்ணிப் பொங்கிடுவோம் !

     

    புலம் பெயர்ந்த நாட்டினிலும்

    பொங்கல் பொங்கி மகிழ்ந்திடுவோம்

    நலந்திகழும் நாளாக நாமெண்ணிபொங்கிடுவோம்

    நிலம் பெயர்ந்து போனாலும்

    நெஞ்சில் பொங்கல் நிறைத்துவைத்து

    உளம் மகிழக் கூடிநின்று

    உவகைபொங்கப் பொங்கி நிற்போம் !

     

    எல்லோரும் இன்பமுற இப்பொங்கல் அமைகவென

    நல்லெண்ணம் மனமிருத்தி நாம்பொங்கல் பொங்கிடுவோம்

    பொல்லாத குணமெல்லாம் போயகல வேண்டுமென்று

    எல்லாமாய் இருக்கின்ற இறைவனைநாம் வேண்டிநிற்போம் !

    Share
  • வரலாறுகளின் வேர் -4

    அண்ணாமலை சுகுமாரன்

    ans-1-1

    இந்தத் தொடரின் சென்றபகுதியில் பிரின்செப் இந்திய வரலாற்றில் மிக முக்கியமான ஒருவரை அறிமுகப்படுத்திய பெருமைக்குரியவர் எனக் குறிப்பிட்டிருந்தேன் .

    அந்த மிக முக்கிய ஒருவர் வேறு யாரும் இல்லை. அசோகர் தி கிரேட் தான் அவர் . அசோகர் என்று ஒரு அரசர் இருந்தார் என்பதை பண்டைய இலக்கியங்கள் மட்டுமே கூறிவந்தன. ஆயினும் எந்த ஒரு அறிவியல் ஆதாரங்கள் கொண்டும் அந்த வரலாறு அப்போது நிறுவப்படவில்லை .

    அசோகர் என்ற ஒருவர் இருந்தாரா அல்லது வெறும் தொன்மக்கதைகளில் சித்தரிக்கப்படும் கற்பனைப் பாத்திரமா என்ற ஐயம் அந்தக்கால வரலாற்றறிஞர்களிடையே இருந்து வந்தது. அசோகாவதானம் எனும் இரண்டாம் நூற்றாண்டு சம்ஸ்கிருத நூலொன்றும், இலங்கையின் பண்டைய தீபவம்சம், மகாவம்சம் போன்றவை இரண்டும் புராணக்கதைகளின் மிகைப்படுத்தல்களோடு அசோகரின் வாழ்க்கை சம்பவங்கள் பலவற்றை சித்தரிக்கின்றன.

    ஒரு நாடக கதாப்பாத்திரம் போன்று கலிங்கப் பெரும் போரை நிகழ்த்தி பின்னர் போரை வெறுத்து பௌத்த நெறிமுறையின்படி தேசத்தை ஆண்டு வந்தவர் என்று விவரிக்கப்பட்டிருந்தது . ஆயினும் இத்தகைய செய்திகள் வரலாற்றுச் சான்றுகளைக் கொண்டு அந்தக் காலக்கட்டத்தில் நிறுவப்படவில்லை .

    இந்திய வரலாற்றின் கடந்துபோன இந்த இருபது நூற்றாண்டில் ,குறைந்தது பாதி கால அளவில் இந்தியா அடுத்தவர்களின் ஆளுமையிலோ அல்லது ஆக்கிரமிப்பிலோதான் இருந்திருக்கிறது .

    தமிழ் நாட்டை எடுத்துக்கொண்டால் கி. பி. 14ஆம் நூற்றாண்டுக்குப் பின் தொடர்ந்து மாறி மாறி தமிழர் அல்லாத பிறரால் ஆளப்பட்டு வந்திருக்கிறது . 6ஆம் நூற்றாண்டுக்கு முன் சுமார் 300 வருடங்கள் களப்பிரர்கள் ஆளுகையில் இருண்டகாலமாக இருந்தது எனக் கூறப்படுகிறது .இத்தகைய சூழலில் ,இந்தியா எங்கும் தொல்லியல் எச்சங்கள் அந்தக்காலக்கட்டத்தில் மிகுந்து தொகுப்பாரின்றி கிடந்தன ..
    அவ்வாறே அசோகரால் அமைக்கப்பட்ட ஸ்தூபிகளும் ,பாறை கல்வெட்டுகளும் இந்தியாவெங்கும் , தமிழ் நாட்டைத்தவிர இலங்கையிலும் பல இடங்களில் கிடைத்தன. ஆயினும் அந்தக்காலக்கட்டத்தில் அவைகள் அசோகரால் அமைக்கப்பட்டது என யாருக்கும் தெரியாது ,அதில் எழுதப்பட்டிருக்கும் விநோதமான எழுத்துக்கள் அடங்கிய வாசகங்கள் என்பது அப்போது யாருக்கும் புரியவும் இல்லை .

    கி. மு. 273-முதல் 236 வரை ஆட்சி புரிந்த அசோகர் , அவரின் ஆட்சியின் கடைசிப் பகுதியில் புத்த மதத்திற்கு மாறியபின் இந்தியாவில் தமிழ் நாட்டைத் தவிர,மேலும் இலங்கையிலும் புத்த மத கொள்கைகளையும் , இதர தர்ம நீதிகளையும், அசோகர் செய்த மக்கள் தொண்டு விவரங்களையும் கல்லில், தூண்களிலும் , பாறைகளிலும் பொறித்து வைத்திருந்தார் . அசோகரின் கலைபடைப்புகளில் முதன்மையானவை மௌரியப் பேரரசு முழுமையும் அவர் நிறுவிய தூண் சாசனங்கள். 40 முதல் 50 அடி உயரத்தினதாய் வான் நோக்கிய தூண்கள். அவைகள் இரண்டு விதமான கற்களினால் செய்யப்பட்டிருந்தன. தூணின் நடுக்கம்பத்திற்கு ஒன்று ; தூண் சிகரத்திற்கு இன்னொன்று. நடுக்கம்பம் ஒற்றைக் கல்லிலிருந்து வெட்டப்பட்டதாக இருக்கும்.

    பௌத்த சமயக் கொள்கைகளைப் பரப்பும்பொருட்டு நிறுவப்பட்ட தூண்களின் சிகரத்தில் விலங்குகளின் சிற்பங்கள் அமைக்கப்பட்டிருந்தன . பௌத்த சமயத்தின் பரவலான சின்னமாக இருக்கும் தாமரை மலரை தலைகீழாக்கி அதன் மேல் விலங்குகளின் சிலை அமைக்கப்பட்டிருக்கும் ; சிங்கம் அல்லது நின்ற நிலை அல்லது உட்கார்ந்த நிலையில் மாடு ஆகிவையாகும் .

    நான் பள்ளி இறுதி வகுப்பு படித்த போது (1965), எங்களுக்கு சமூகம் என்று ஒரு பாடம் இருந்தது. அதில் இரண்டு பிரிவுகள் உண்டு . ஒன்று சரித்திரம் மற்றது பூகோளம் , ஒவ்வொன்றுக்கும் 50 மதிப்பெண்கள் .
    இதில் சரித்திரம் என்பது மதிப்பெண் எடுக்க எளிதானது என்பது எங்கள் எண்ணம் .ஏனெனில் எப்படியும் அசோகரின் ஆட்சிக்காலம் அல்லது அக்பரின் ஆட்சிக்காலம் அல்லது வேறு ஒரு மன்னரின் ஆட்சிக்காலம் ஏன் பொற்காலம் என்று ஒன்று அல்லது இரு கேள்வி நிச்சயம் அந்தப்பாடத்தில் வரும் என்பது தெரியும் ..

    அதற்கு பதில் என்னவோ ஒரே மாதிரிதான் , நாடு முழுவதும் சாலைகள் அமைத்தார் ,நிழல் தரும் மரங்கள் நட்டார், கிணறுகள் அமைத்தார் ,மனிதர்களுக்கும் ,மிருகங்களுக்கும் மருத்துவ மனைகள் அமைத்தார், இத்தியாதி ,இத்தியாதிகள் .

    இதில் ஒரு வேடிக்கையான உண்மை என்னவென்றால் இத்தனை மக்கள் பணிகளை தான் செய்ததாக அசோகர் தனது சாசனங்களில் பொறித்து வைத்திருந்தார் . இவைகள் அத்தனையும் சுமார் 2500 ஆண்டுகளாக கல்லில் பொறிக்கப்பட்டு ,படிக்க ஆளில்லாமல் காத்துக்கிடந்தது .அசோகரின் சீர்திருத்தங்களையும் கொள்கைகளையும் குடிமக்களுக்கு வழங்கிய அறிவுரைகளையும் நவீன உலகிற்கு பறை சாற்றின. நன்னெறிகளின் அடிப்படையில் ஒரு பேரரசை நிறுவிய ஆற்றல் மிகு பேரரசரின் நல்ல எண்ணத்தை இக்கல்வெட்டுகள் மூலம் நமக்கு அறியவருகிறது .

    அசோகர் ஸ்தம்பங்கள் பிற்காலத்தில் வந்த சில பேரரசர்களின் கவனத்தைக் கவர்ந்தன. அவைகளில் பொறிக்கப்பட்டிருந்தது என்ன என்று அப்போது புரியாவிட்டாலும் அதன் வனப்பு பலரையும் கவர்ந்தது .எனவே அவைகளைப் பெயர்த்தெடுத்து வந்து தாங்கள் விரும்பிய இடங்களில் அமைத்துக் கொண்டனர் . அந்த சமயத்தில் இந்தியா வந்த சீன யாத்திரீகர்கள் பாஹியான் மற்றும் யுவான்சுவாங் அசோகர் ஸ்தூபிகளைப் பார்த்தார்களே தவிர அதில் பொறிக்கப்பட்டிருந்த எழுத்துகளை படிக்கவோ அல்லது படிக்காத தெரிந்த உள்ளூர் வாசிகளையோ பெற இயலவில்லை .எனவே யூகத்தின் அடிப்படையில் தவறான விளக்கங்களைத் தந்து சென்றனர் .

    அலகாபாதின் அசோகா ஸ்தம்பம் போல், தில்லியில் இருக்கும் இரண்டு அசோக ஸ்தம்பங்களும் மீரட் மற்றும் அம்பாலாவில் இருந்து எடுத்து வரப்பட்டவை . 14ஆம் நூற்றாண்டில் தில்லியை ஆண்ட பெரோஸ் ஷா துக்ளக் என்கிற மன்னரால் அவை எடுத்துவரப்பட்டன . . இவ்விரண்டு ஸ்தம்பங்களிலும் சிகரம் இல்லை. புராதன கௌஷம்பி நகரத்தில் நிறுவப்பட்ட ஸ்தம்பம் இன்று அலஹாபாத்தில் திரிவேணி சங்கமத்துக்கு அருகில் முகலாயப் பேரரசர் அக்பர் கட்டிய கோட்டைக்குள் காணப்படுகிறது.

    இவ்வாறு காட்சியளித்த ஸ்தூபிகளை ஒரு முறை குதிரையில் உலா போகும்போது இரண்டு பெரிய உயரமான தூண்களை பிரிசெப் பார்த்திருக்கிறார். அதில் இருந்த விநோதமான எழுத்துகள் அடங்கிய வாசகங்கள் அவரை ஈர்க்கின்றன. இது என்ன மொழி என்று அங்குள்ள மக்களிடமும் அறிஞர்களிடமும் கேட்கிறார். யாருக்கும் சரிவரத் தெரியவில்லை. அவைகள் அலெக்ஸாண்டர் இந்தியாவுக்கு படைஎடுத்து வென்ற பிறகு எழுதி வைத்த கல்வெட்டு என சில புத்திசாலிகள் பிரின்செப்பீடம் கூறினார்கள் அலெக்சாண்டர் எங்கே டில்லி வந்தார்? அவர் பஞ்சாப் பாதி கூட வரவில்லையே என்று அவைகளை நிராகரித்தார் பிரின்செப்.

    பிரின்செப் “ஏஸியாட்டிக் சொசைட்டி” என்று ஆராய்ச்சி சங்கத்தில் இருந்ததாலும் ஆங்கிலேயே அரசில் உயர் பதவியில் இருந்ததாலும் , இது மாதிரி எழுத்துகள் இந்தியாவில் எங்கெல்லாம் இருக்கிறது என்று தேடச் சொல்கிறார்.

    அவரே ஒரு முறை ஒரு ஸ்தூபியின் சிறிய உடைந்த பகுதியை பார்க்கிறார். அதில் மூன்று வாக்கியத்தில் மூன்று இடத்திலும் ஒரே வார்த்தைகள் இருக்கின்றன. அதைப்பார்த்த பிரின்செப்சுக்கு ஒரு வித்தியாசமான எண்ணம் , ஐசக் நியூட்டனுக்கு வந்ததுபோல் இவருக்கும் வந்தது .

    பொதுவாக யாராவது ஒரு தர்மம் ,கொடை இவைகளைக் கொடுத்தால் அதை வாக்கியத்தின் முதலிலோ அல்லது இறுதியிலோ தானம் தந்தது இன்னார் என்று எழுதிவைக்கும் வழக்கம் அன்றே இருந்திருக்கிறது. சமஸ்கிருதத்திலும் “தா,ன,ம்” என்றுதான் அது வரும். அதுமாதிரி இந்த வினோதமான வித்தியாச எழுத்து மொழியில் ஏன் இந்த மூன்று எழுத்துகளும் “தா அல்லது த” , “ன” “ம்” என்பதை குறிப்பதாக இருக்கக்கூடாது என பிடித்து விட்டார். இவ்வாறு தில்லியில் இருக்கும் ஒரு ஸ்தம்பத்தில் பொறிக்கப்பட்டிருந்த வித்தியாசமான பொறிப்பில் மூன்று எழுத்துகளைப் புரிந்துகொண்டது ஒரு முக்கியமான திருப்புமுனையாக அமைந்தது “தேவனாம்பிய” (தெய்வங்களுக்கு பிரியமானவன்) “பியதஸ்சி” (மக்களை அன்புடன் கருதுபவன்) போன்ற பட்டப் பெயர்கள் தில்லி ஸ்தம்பத்தில் மட்டுமில்லாமல் வேறு பல ஸ்தம்பங்களிலும் பொறிக்கப்பட்டிருப்பது மெல்ல மெல்லத் தெரிய வந்தது.

    அந்த எழுத்து எதோ காரணத்தால் பிராமி எழுத்து எனப்பட்டது. பிரம்மன் உண்டாக்கியதால் பிராமி எனப்பெயர் பெற்றது என்பவர்களும் உண்டு. இந்தியாவில் இருந்து எல்லா பிராமி எழுத்துகள் கல்வெட்டையும் பிரதி எடுத்து ஒவ்வொன்றாய் கண்டுபிடித்தார். அந்த பிராமி எழுத்துகளுக்கும் “பாலி” மொழிக்கும் சம்பந்தம் இருப்பதைச் சொன்னார்.

    எல்லா வாக்கியங்களிலும் “தேவாம்சி பியதாசி” என்று ராஜா பேர் சொல்லப்பட்டதால் பிரின்ஸ்செப்புக்கு குழப்பம் வந்தது. ராஜாவின் பேர் “பியதாசி” என்பதா இன்னும்வேறு ஏதாவது இருக்கிறதா என்ற குழப்பம் வந்தது.

    இதற்கிடையே தரவுகளைத் தேடச் சொன்ன ஆணைக்கு பலன்கள் வரத் தொடங்கின . இலங்கையிலிருந்து தகவல் ஒன்று வருகிறது. அங்கே கிடைத்த இலங்கை மன்னன் பற்றிய கல்வெட்டிலும் இலங்கை மன்னன் பேர்” தேவநாம்சி பியதாசி” என்றே போட்டிருக்கிறது. என்பதே அது .

    இன்னொரு தகவல் கர்நாடகம் மைசூரில் மாஸ்கி என்ற இடத்தில் கிடைத்த கல்வெட்டுகளில் மன்னன் பெயர்” தேவநாம்சி பியதாசி அசோகன்” என்று இருக்கிறது.

    எனவே அந்த தேவநாம்சி பியதாசி எனும் சக்கரவர்த்தியின் பெயர் அசோகர் என்பது உறுதியானது. இந்திய வரலாற்றில் இந்த கண்டுபிடிப்பு எத்தனை முக்கியம் வாய்ந்தது என்பது இப்போது நம் அனைவருக்கும் தெரியும். அசோக சக்கரவர்த்தியின் புரிதலுக்குப் பிறகு இந்திய வரலாறு படிப்படியாக உருப்பெற ஆரம்பித்தது .பிராமி எனும் எழுத்து படிக்கக் கூடியதாயிற்று .பல கல்வெட்டுகள் பாதிக்கப்பட்டன .

    சாரநாத்தின் அசோக ஸ்தூபியை அலங்கரித்த நான்கு சிங்கங்களின் சிகரம் அதிக முக்கியமானது. அதுவே நமது இந்திய அரசின் தேசியச் சின்னம் ஆனது . . நான்கு சிங்கங்கள் பின்னுக்குப் பின்னாக நிற்பதை சித்தரிக்கிறது. அந்த சிங்கச் சிலைகள் ஒரு வட்ட சட்டத்தின் மேல் பொருத்தப்பட்டிருக்கின்றன. அந்த வட்ட சட்டத்தைச் சுற்றி செதுக்கப்பட்ட யானை, ஓடும் குதிரை, மாடு, சிங்கம் – இவற்றுக்கிடையிடையே 24 ஆரங்களையுடைய சக்கரங்கள் மணி வடிவ தலைகீழ்த் தாமரையின் மேல் வைக்கப்பட்டுள்ளன.

    அந்த 24 ஆரங்கள் உள்ள தர்ம சக்கரம்தான் நமது தேசியக் கொடியில் நடுவில் இடம்பெற்று பட்டொளி வீசிப் பறக்கிறது. அசோகரின் அத்தனை பாறைக்கல்வெட்டுகளும் ,ஸ்தூபிகளும் சொன்ன கருத்துகள் அத்தனையும் மக்களுக்குத் தெரிய வந்தன .இந்த வகையில் பிரின்செப் செய்த தொண்டு, அவரின் ஆர்வம் இந்திய வரலாற்றின் ஒரு மிக முக்கிய தொடக்கத்தை ஆதாரப்பூர்வமாக அறிவித்தது .

    அசோகர் தி கிரேட் என அசோகர் பெயர் பெற்றார் .தென்னாட்டில் பிரின்செப் மாதிரி ஒரு ஆய்வாளர் நமது ராஜராஜன் போன்றோரை அறிவியல் உலகத்திற்கு ஆதாரங்களுடன் தக்க முறையில் அறிமுகம் செய்யாததால் நமது பேரரசர் ராஜராஜன் , ராஜராஜன் தி கிரேட் என அழைக்கப்படவில்லை .

    சந்திர குப்த மவுரியரின் பேரனான அசோகர் பற்றி அதுவரை வரலாறு கவனிக்கவில்லை. அவரை ஒரு அடையாளம் தெரியாத மன்னர் என்றே நினைத்து வந்துள்ளனர். ஆனால் பிரின்செப்ஸ் என்ற ஆங்கிலேயர்தான் அசோகரை வரலாற்றுக்கு அறிமுகம் செய்துவைத்தார் .

    பிறகு அசோகரின் எல்லா கல்வெட்டுகளையும் படித்து முடித்தார். அவர் படித்து புரிந்து கொண்டதில் சில இவை. எல்லா மன்னர்கள் போல இந்திரன் சந்திரன் என்று மட்டும் அசோகர் தன்னை பற்றி எழுதிவைக்கவில்லை. தன்னை ஒரு அவதாரமாக முன்னிருத்தவே செய்யவில்லை. தான் செய்த பாவங்களையும் கல்வெட்டிலே செதுக்கியுள்ளார். பல இடங்களில் வெட்கத்தை விட்டு மன்னிப்பும் கேட்டிருக்கிறார். அசோகர் காலத்தில் மிருகவதை கடுமையாக தடுக்கப்பட்டுள்ளது.

    தம்மா என்ற தர்ம சக்கரத்தை அடிப்படையாகக் கொண்டு மிகப்பெரிய தர்மம் பற்றிய சிந்தனையுடன் வாழ்ந்திருக்கிறார் அசோகர்.

    இதுபோன்று இன்னமும் நிறைய உள்ளன. ஆயினும் இந்த கட்டுரை அசோகர் பற்றிய கட்டுரை அல்ல. இது வரலாற்றின் வேர்களாக இருந்த பிரின்செப்போன்றவர்களின் வரலாற்றுத் தொடர் .எனவே இந்த கல்வெட்டு கூறும் விபரங்களை இத்துடன் நிறுத்திக்கொள்வோம்.

    அதே சமயம் இது எந்த வகையிலும் நம்மை ஆண்ட ஆங்கிலேயர்கள் நமக்கு செய்து விட்டுப்போன அநியாயங்களை மறந்து விட்டு அவர்களை நியாயப்படுத்தும் முயற்சியும் அல்ல .

    அவர்கள் அந்தக்காலகட்டத்தில் கிடைத்த ஆதாரங்களைத் தொகுத்து அவர்கள் புரிந்து கொண்ட வகையில் அல்லது அவர்களுக்கு அருகாமையில் இருந்தவர்களால் சொல்லப்பட்ட நமது வரலாற்றை இவர்கள் உலகுக்கு அறிமுகம் செய்தனர் .

    அவர்கள் கூறிய வரலாறு அத்தனையும் உண்மையானவை என்று நாம் எடுத்துக்கொள்வது தேவையில்லை . ஆயினும் அதை உறுதியாக மறுக்கும் வகையில் அடுத்த புதிய ஆதாரம் நமக்கு கிடைக்கும்வரை நம்மால் அதை மறுக்கவும் முடியாது .

    இந்தத் தொடர் இந்திய வரலாறு எழும்ப பல ஆதாரங்களைத் தொகுக்க உதவியவர்களை அறிமுகம் செய்யும் முயற்சி மட்டுமே . வரலாறு என்றுமே மாறுதலுக்கு உட்பட்டது . அசோகரின் பல பாறைக் கல்வெட்டுகளை படித்த பிரின்செப் தமிழ் நாட்டின் சங்க காலத்தை உறுதி செய்யும் சில சான்றுகளையும் கண்டெடுத்தார் . அவைகளை அடுத்த வாரம் காணலாம் .

    நன்றி

    Share
  • ஒரு கிளை, இரு மலர்கள்

    நிர்மலா ராகவன்

    “நான் என்ன சொன்னேன், நீ என்ன செய்துட்டு நிக்கறே? ஏண்டி? உனக்கென்ன பைத்தியமா? இல்ல, கேக்கறேன். ஒங்கம்மாவை அடைச்சு வெச்சிருக்கிற இடத்துக்கே நீயும் போயிடணுமா?”

    கண்களில் பெருகிய நீரை அடக்கப் பாடுபட்டாள் சாந்தி. கண்ணீரைப் பார்த்தால், `இப்போ என்ன சொல்லிட்டேன், இப்படி மாய்மாலம் பண்ணறே?’ என்று அதற்கும் திட்டுவாள் பாட்டி.

    “ராமுவுக்கு பெரிய கிளாசில மைலோ குடுத்துட்டு, நீ சின்னதை எடுத்துக்கன்னு சொல்லல?” வசவு தொடர்ந்தது.

    அது ஏன் தான் எது செய்தாலும், பாட்டிக்கு அது தப்பாகவே தெரிகிறது? அந்த குழந்தைக்குப் புரியத்தானில்லை.

    பரிதாபகரமாக விழித்தாள். “அண்ணன்தான் சின்னதை எடுத்துக்கிட்டான்,” ஈனஸ்வரத்தில் அவள் முடிப்பதற்குள் கன்னத்தில் ஓர் அறை விழுந்தது.

    கன்னத்தைத் தடவியபடி, ராமுவைத் தேடி வந்தாள் சாந்தி. “அம்மா எங்கே போயிட்டாங்கண்ணே?”
    பெருமையாக நின்றிருந்தான் பையன். பாட்டியின் தொணதொணப்புக்கு, அவனுடைய ஒவ்வொரு தேவையையும் பார்த்துப் பார்த்துப் பூர்த்தி செய்த பாட்டியின் `அன்பு’க்கு அவன் மட்டும்தான் பாத்திரமானவன்!

    அலட்சியமாகத் தோள்களைக் குலுக்கிக்கொண்டான். “தம்பிப்பாப்பா செத்துப் போச்சில்ல? அன்னிக்கும் அப்பா குடிச்சுட்டு வந்தாரு..!” என்று தனக்குத் தெரிந்த விதத்தில் விளக்க ஆரம்பித்தான்.
    கைக்குழந்தையைத் தன் மார்புடன் அணைத்து, பாலூட்டியபடி அமர்ந்திருந்த மனைவியின் பரவசத் தோற்றம் ஆத்திரத்தைத் தூண்டிவிட, “இந்தப் பிள்ளைமேல அப்படி என்னாடி ஆசை ஒனக்கு? நானும் பாக்கறேன், வர வர, நீ என்னைக் கவனிக்கிறதுகூட இல்லே!” என்று கத்த ஆரம்பித்தான் ரத்னம்.

    இன்று என்ன, அடியா, உதையா, இல்லை பெல்டால் விளாசப்போகிறாரா என்று பயம் எழுந்தது. குழந்தையை மேலும் இறுக அணைத்துக்கொண்டாள் அவள்.

    “அந்தச் சனியனைக் கீழே போடு, சொல்றேன்! புருஷன் இல்லாம, பிள்ளை மட்டும் எப்படி வந்திச்சாம்?” என்று கொச்சையாகத் திட்டியபடி, ஓங்கிய கரத்துடன் அவன் அவளை நெருங்கவும், அவசரமாக எழுந்தவளின் கால் அவிழ்ந்த கைலியில் தடுக்க, அதே தருணம் குறி தப்பாது ரத்னம் விட்ட அறை அவள் கன்னத்தைத் தாக்கியது. நிலைகுலைந்து போனவளாக, குழந்தையைக் கைதவற விட்டாள்.

    அந்த மகவின் தலையில்தான் அடிபட்டதோ, இல்லை, பால் குடித்துக்கொண்டிருந்தபோதே தாயின் இறுகிய அணைப்பில் மூச்சு முட்டிப் போயிற்றோ, குழந்தையை மீண்டும் கையிலெடுத்தபோதுதான் உணர்ந்தாள் — இனி அதற்குப் பாலூட்ட வேண்டிய அவசியமே இருக்காதென்று. அலறவோ, அழவோ இயலாதவளாய், பிரமையாக நின்றாள்.

    “சரோ..!” தன் செய்கையின் பாதகமான விளைவைப் புரிந்துகொண்டு, அந்த அதிர்ச்சியே அவனை நடைமுறைக்கு மீட்டுவர, குழைவுடன் அழைத்தபடி, மனைவியை நெருங்கினான் ரத்னம்.

    “இன்னும் ஒரு அடி எடுத்து வெச்சீங்க, இன்னொரு கொலை விழும் இந்த இடத்திலே!” அவளுடைய ஆங்காரமான குரல் அவனைத் தடுத்து நிறுத்தியது. பயந்து பின்வாங்கியவன், அவசரமாக வெளியே போனான் — இன்னும் குடித்து, தன்னை ஆசுவாசப்படுத்திக்கொள்ள.

    `தம்பிப்பாப்பா இனிமே பெரியவனா ஆகவே மாட்டானா! அவனோட விளையாட முடியாது?’ என்ற சிறியதொரு ஏமாற்றம் எழுந்தது, எப்போதும் தாயின் அருகில் அமர்ந்து, அம்மா பாப்பாவுக்குப் பாலுட்டுவதை பொறாமையுடன் பார்த்துக் கொண்டிருந்த சாந்திக்கு. ஆனாலும், `முன்போல், அம்மாவின் முழுக்கவனமும் இனி தன்மேல் திரும்பும்” என்ற எதிர்பார்ப்பில் மகிழ்ச்சி பிறந்தது.

    தானும் மெல்ல எழுந்து, தாயின் கையைப்பற்றி இழுத்தாள். அவளோ, சுற்றுப்புறத்தையே மறந்தவளாக, வெறிப்பார்வையுடன் நின்றாள்.

    “ரத்னம்! இவளை வெச்சுக்கிட்டு என்னால இனியும் சமாளிக்க முடியாது. அவ கண்ணைப் பாரு! எந்த நேரம் நம்பளை என்ன செய்துடுவாளோன்னு பயமா இருக்கு எனக்கு! இந்த அழுகையும், அலறலும்! பத்தாத குறைக்கு, பாக்கறவங்ககிட்டே எல்லாம், `நான் கொலைகாரி! என் பிள்ளையை நான் கொன்னுட்டேன்!’னு வேற பேத்தல்!” என்ற பாட்டியின் பேச்சைக் கேட்டுத்தான் அப்பா அம்மாவை எங்கோ கொண்டுபோய் விட்டிருக்க வேண்டும்.

    இப்போது அம்மாவின் முகம்கூட சரியாக நினைவில்லை சாந்திக்கு. ஆனால், தன் பருத்த வயிற்றின்மேல் அவளுடைய பிஞ்சுக்கரத்தை வைத்து, `பாப்பா எப்படி குதிக்குது, பாரு!’ என்று சிரித்ததும், `அப்பா கோபமா வர்றாரு போலயிருக்கு கண்ணை மூடிட்டு, தூங்கறமாதிரி படுத்துக்க!’ என்று அவளைப் பாதுகாத்ததும், மறக்கக்கூடிய நினைவுகளா!

    “அம்மாவா?” பாட்டியுடன் பேசிக்கொண்டிருந்தவளைப் பார்த்துவிட்டு, ரகசியக்குரலில் அண்ணனிடம் கேட்டாள் சாந்தி.

    “அவங்க அக்கா. நம்ப பெரியம்மா. அமெரிக்காவில இருக்காங்களாம்!”
    அதற்குள் சிறுமியைக் கவனித்தவள், “சாந்திக் குட்டியா? அப்படியே சரோ ஜாடை!” என்று, அவளை வாரியெடுத்து, அலாக்காகத் தூக்கிக்கொண்ட பெரியம்மாவுடன் ஒன்றிப்போனாள் அன்புக்கு ஏங்கியிருந்தவள்.

    `என்னையும் கவனிக்கலியே!” என்று ராமுவின் முகம் வாடியதை பாட்டி கவனித்தாள். அசுவாரசியமாகச் சூள் கொட்டினாள். “ஒன் தங்கச்சிமாதிரி பைத்தியமா இல்லாம இருந்தா சரிதான்!”
    பெரியம்மா அவசரமாகப் பேசினாள். “ஒங்களுக்குத் தெரியும், எனக்கு ஒரே மகன்தான். அவனும் ஒரு தங்கச்சி வேணும்னு நச்சரிச்சுக்கிட்டே இருக்கான். நாப்பத்தஞ்சு வயசுக்குமேல எனக்கு எதுக்கு இன்னொரு கைப்பிள்ளை? அதான் சாந்தியை தத்து எடுத்துக்கலாம்னு..!”

    ”ஒனக்கில்லாத உரிமையா! அவ நல்லா இருந்தா சரி,” என்றாள் பாட்டி, தன் சுமை குறைந்துவிடப்போகும் மகிழ்வில்.

    “வராதவ வந்திருக்கே! ரெண்டு நாள் தங்கிட்டுப் போகக்கூடாதா!” என்ற பாட்டியின் வாய்சாலகத்தில் பெரியம்மா மயங்கிவிடப்போகிறாளே என்ற பயம் பிடித்துக்கொண்டது சாந்திக்கு.

    ஆனால், பெரியம்மா ஏமாறவில்லை. நாசூக்காக மறுத்தாள்.

    “போயிட்டு வரேண்ணே! அப்புறம் நீயும் வருவேயில்ல?” களங்கமின்றிக் கேட்ட தங்கையை அலட்சியமாகப் பார்த்தான் ராமு.

    “பாட்டி என்னை விடமாட்டாங்க. என்மேல ரொம்ப பிரியம்!” என்று உதடுகள் சொன்னாலும், தன்னுடன் நாலு வார்த்தைகூடப் பேசாது, தானும் அதே அம்மாவுக்குப் பிறந்தவள்தான் என்பதையே உணராதவள்போல், சாந்தியை மட்டும் தன் பக்கத்திலேயே வைத்துக்கொண்டிருந்த பெரியம்மாவின்மேல் ஆத்திரப்படத்தான் அவனால் முடிந்தது. தானும் ஏன் அம்மா ஜாடையாக இல்லை, அப்பாவைப்போல் இருக்கிறோம் என்ற வருத்தம் எழுந்தது.

    அந்த புறம்போக்கு இடத்துக்குப் பொருத்தமில்லாது, வாசலில் நின்ற பளபளப்பான, பெரிய வாடகைக் காரில் அமர்ந்து, குதிக்காத குறையாகக் கையை ஆட்டிய சாந்தியைப் பார்த்தபடி நின்றான் ராமு.

    “ஒன் தங்கச்சிக்கு வந்த வாழ்வைப் பாத்தியா! ஒங்கப்பன் குடிச்சே எல்லாத்தையும் அழிக்கிறான். இல்லாட்டி, நீயும் எப்படி எப்படியோ இருக்கலாம்!” என்றா பாட்டியின் அனுதாபம் அவனுக்கு வேண்டித்தான் இருக்கவில்லை. வளரத் தொடங்கியிருக்கும் மீசையைத் தொட்டுப் பார்த்துக்கொண்டான்.

    வருடங்கள் சில கடந்தன. அவனை இன்னும் சின்னப் பையனாகவே பாவித்து, பாட்டி அவனைத் தானே பள்ளிக்கூடத்துக்குக் கொண்டுவிடுவதும், `கூட்டாளிங்க சகவாசமே வேணாம். நீயும் ஒங்கப்பன்மாதிரி கெட்டுப்போயிடுவே!’ என்று அவன் வயதினர் ஓடியாடும் நேரத்தில், வலுக்கட்டாயமாக அவனை வீட்டிலேயே தங்க வைப்பதும் பிறருடன் ஒட்டாத அவனை ஒரு கேலிப்பொருளாக ஆக்கிய பாட்டியின்மேல் வெறுப்பு கிளர்ந்தது.

    எப்போதாவது தங்கையின் நினைவு எழும். மூர்க்கத்தனமாக அதைத் தள்ளுவான்.

    `அண்ணனுக்கு என்னை அடையாளம் தெரியுதோ, என்னவோ! அண்ணனும் என்னைப்போல பெரிசா வளர்ந்திருப்பானில்ல!’ என்றெல்லாம் துள்ளிக்கொண்டு வந்த சாந்தி, அதிர்ச்சியில் உறைந்துபோயிருந்தாள்.

    செல்வச் செழிப்பு மின்னிய அவளுடைய உடலைப் பார்த்து ராமு பிரமித்தானோ, இல்லையோ, அவனைக் கண்டதும் சாந்தி அடைந்த ஏமாற்றம், வருத்தம்!

    முகமெங்கும் வியாபித்திருந்த சிறு சிறு கட்டிகளைக் கிள்ளியபடி நின்றிருந்த சோனி உருவமா அவள் அன்புக்குரிய அண்ணன்? அவனுடைய பரட்டைத்தலையும், கலங்கிய சிவந்த கண்ணும்! அருகில் வரும்போதே அது என்ன நாற்றம்?

    நடனமும், நீச்சலும் கற்று, தான் மட்டும் முன்னுக்கு வந்திருப்பது குறித்து அவளுக்குக் குற்ற உணர்வு உந்த, விமானதளத்துக்குப் போகையில், அவள் பக்கத்தில் உட்கார்ந்து, கரிசனத்துடன் அவளையே பார்த்தபடியிருந்த வளர்ப்புத்தாயின் பக்கம் திரும்பினாள் சாந்தி. “அண்ணனையும் நீங்க எடுத்துக்க பாட்டி விட்டிருக்க மாட்டாங்க. இல்லம்மா?” தனக்குத்தானே சமாதானம் செய்துகொள்ளும் முயற்சியில் எழுந்தது அக்கேள்வி.

    “என்னண்ணே இப்படிப் போயிட்டேன்னு கேட்டேன். அண்ணன் சொன்னான்..,” பெரிதாக மூச்சை இழுத்துக்கொண்டாள். “அண்ணன் சொன்னான், `எங்கப்பா குடிகாரரு. அம்மாவோ பைத்தியம்! அது மட்டுமில்ல. நான் எங்கேயாவது என் நிலையை மறந்து, வயசான காலத்திலே அவங்களை விட்டுட்டுப் போயிடுவேனோன்னு பயந்து, இதையெல்லாம் நாள் தவறாம சொல்லிக்காட்டற பாட்டி! நான் வேற எப்படி இருக்க முடியும்?’அப்படின்னு என்னையே திருப்பிக் கேட்டாம்மா!” சாந்தியின் குரல் விக்கியது.
    அவளுடைய இடுப்பில் கைகொடுத்து அணைத்துக்கொண்டாள் பெரியவள். அவர்களுக்கு முன்னால், எவரையோ இறுதி யாத்திரைக்கு அழைத்துச் சென்றுகொண்டிருந்த்து ஒரு கறுப்பு நிற ஊர்தி.

    “அந்த `வேனு’க்குள்ளே பாத்தியா, சாந்தி? அழகழகா, எவ்வளவு மலர் வளையங்கள்!” என்று பேச்சை மாற்றப்பார்த்தாள்.

    சாந்தியின் மனம் வேறு ஏதோ யோசித்த்து. எங்கோ ஒரு பூக்கடையில் மிகுந்திருந்த பூக்கள் இருக்கும். இதோ, இந்த மலர் வளையங்களில் உள்ள மலர்களுடன் ஒரே கிளையில் பூத்தனவாகவும் இருக்கலாம். அவைகளில் சில பூசைக்கோ, அல்லது திருமண விழாக்களுக்கோ உபயோகம் ஆகும்.

    இன்னும் சிறிது நேரத்தில், பெட்டியிலிருக்கும் உயிரற்ற உடலுடன் தாமும் மின்சாரத்துக்கு இரையாகி, சாம்பலாகிவிடப்போவதை அறியாது, கண்கவர் வண்ணங்களுடன் மிளிரும் பூக்களைப் பார்த்து, மெல்ல விசும்ப ஆரம்பித்தாள் சாந்தி.

    Share
  • கேசவ் வண்ணம் – கிரேசி எண்ணம்

    ”ஆண்டாள் -26’’….
    ————————————-

    fullsizerender

    ‘’மாலே மணிவண்ணன் மீதுகந்த முப்பதும்,
    நீலோத் பலர்ஆலில் நீந்தியோன் -தாலேலோ,
    தாலாட்டுப் பாடல், துயிலெழுப்பி வைகுண்ட,
    மேலோட்ட மாய்செல் மழை’’….கிரேசி மோகன்….

    Share
  • சிவபிரதோஷம் – “என்னே நடிப்பு”

    மீ.விசுவநாதன்

    ரவிவர்மா
    ரவிவர்மா

    உன்னை விழுந்து வணங்காமல் – வெறும்
    உதவாக் கரைகளின் கால்களிலே – பெரும்
    உதவிகள் கேட்டே வணங்குகிறேன்.

    தென்னை மரமாய் உயர்ந்தாலும் – பெரும்
    திருட்டுத் தனங்களைச் செய்கின்ற – தேசத்
    திருடரின் முன்னே கிடக்கின்றேன் .

    என்னே நடிப்பு பணத்திற்காய் – இங்கே
    இருக்கும் இழிந்தவர் செய்கின்றார் – இதை
    எப்படி ஈசா ரசிக்கின்றாய் !

    தின்னும் உணவினைத் தெய்வமென – யாரும்
    தெளிந்தே வாழ்ந்தன(ர்) ஓர்காலம் – அது
    திரும்பிட நீதான் அருளாயோ !

    முன்னை வினையின் பயனோசொல் – இந்த
    முட்டாள் மனிதரின் மூர்க்கமெலாம் – ஏன்
    மௌனமாய் இன்னும் இருக்கின்றாய் !

    (இன்று பிரதோஷ நன்னாள் – 10.01.2017 )

    Share
  • மார்கழி மணாளன் 26

     

    திருக்கடல்மல்லை – அருள்மிகு ஸ்தலசயனப் பெருமாள்  திருக்கோயில்

    ag

    புலனடக்கிப் புண்டரீகன் மாமல்லைக் கடலோரம்

    பூப்பறித்துப் புகழ்பாடி புண்ணியனே உனைப்போற்ற

    புவிபோற்றும் தவத்தோனாய் புசித்திடவே வந்தாயே

    பசிமறந்து பாற்கடலாய் நினைத்தங்கே படுத்தவனே !

     

    மாமுனிவன் மனமடக்கிய மாதவத்தில் மகிழ்ந்தாயோ

    மாமல்லை வருகையிலே மற்றதெல்லாம் மறந்தாயோ

    மங்கையினை மார்பினிலே மறக்காமல் வைப்பவனே

    மனமுவந்தே சேடனுக்கோர் ஓய்வினையே தந்தாயோ?

     

    அலைபாயும் கடலோரம் ஆனந்த சயனமன்றோ

    கலைபோற்றும் மாமல்லைக் கரையினிலே கண்மூடி

    மறைபோற்றும் ஆழ்வார்தம் பாயிரங்கள் துணைதேடி 

    இணையில்லாத் தமிழ்க்கேட்கத் தலம் கொண்டாயே !

     

    குயிலோசைக் குரல்போல கோபியர்கள் குரலசைய

    அலையோசை இசைக்கின்ற குழலோசை இசைபாட 

    இலையசையா அமைதியிலே மயில்தோகை அசைந்தாட

    மனமசையா மாதவனே ! மனமுவந்தே காத்திடுவாய் !

     

    கால்நீட்டிப் படுக்கையிலே கால்பிடிக்க வந்திடவோ?

    கைத்தாங்கல் கொடுத்திடவே கைகளைத் தந்திடவோ ?

    களைப்புற்று  உறங்குகையில் கைவிசிறி வீசிடவோ ?

    கண்ணுறங்கும் வேளையிலும் கனிவுடனே காத்திடுவாய்!

     

    பண்ணறியேன் பாவறியேன் பண்புமொழி தானறியேன்

    கண்ணறியாக் கற்பனையின் காட்டாற்றில் கரையறியேன்

    மனதறியா உயிர்கொண்டு மாயையிலே தவிக்கின்றேன்

    விண்ணுயர்ந்த விக்ரமனே விரைவினிலே காத்திடுவாய் !

     

     

     

     

     

     

     

    Share
  • ’’ரெங்கநாதர்’’….!

     

    ஸ்ரீரங்கநாதரைப் பற்றி(திருச்சி நாடகம் சென்றபோது ஸ்ரீரங்க தரிசனம் ரெயிலில்….ரெயிலில் எழுதியது….!)
    ———————————————————————————————————————

    201612231141081644_srirangam-temple-vaikunta-ekadasi-festival-preparations_secvpf

    நாரா யணாவுந்தன் பேரா யிரம்கூறி
    ஆரா தனைசெய்(து) அறிகிலேன் -போறாத
    வேளையில் கூப்பிட்டால் தோளைக் குலுக்காதே
    காளையே கன்றெனைக் கா….

    சூடிக் கொடுத்தவளை நாடிக் கரம்பிடித்து
    ஜோடிப் பொருத்தமான சீரங்கா -பாடித்
    தொடுத்திடுவேன் வெண்பா தமிழாய்நீ என்பால்
    கொடுத்திடுவாய் கார்முகிலா க….

    அடைக்கலம் நேசம் அரவணைப்பு பாசம்
    கடைவிரித்தக் காட்சியாய்க் காதல் -நடைபிணமாய்
    காரங்க வண்ணன் கழல்கண்டு சேவிக்க
    சீரங்கம் சென்றோர்க்கு சீர்….

    பாம்புல பட்டுப் படுக்கை விரிச்சதுல
    சோம்பலா தூங்குற சொஸ்த்தமா -ஆம்புள
    சிங்கமே அன்னிக்கு சின்னபய சொன்னதுக்கு
    எங்கிருந்தோ வந்த(து) எவரு….

    நாதா திருவரங்க நாதா தரணிகுரு
    நாதா ரமாப்பிராண நாதாவி -னோதா
    துயறருக்கும் பாதாம் புயம்மறந்தேன் தீதாம்
    மயர்வறுக்க நீதான் மருந்து….

    பொன்னையும் பூமியையும் முன்னை மணக்கையில்
    திண்ணமாய்க் கட்டினாய்த் தாலியை -தன்னையே
    தாலியாக்கி உன்னைத் தழுவி மணந்துனக்கு
    வேலியான பொன்னியுன் வாழ்வு….(111)….7-2-2009

    முன்விழித்துப், பின்விழித்துப் பொன்மகள் பார்த்திருக்க
    கண்விழிக்கா யோகமா? கற்பனையா? -தென்னிலங்கை
    பக்கம் தவித்திருக்கும் பத்தினியாள் ஞாபகமா?
    துக்கமென்ன சொல்லிவிட்டு தூங்கு….

    களைப்போடு வீடணன் கைகால் கழுவுகையில்
    மலைக்கோட்டைப் பிள்ளை குறும்பால் -நிலைப்பாடாய்
    கொள்ளிடத் தீவில் கிடக்கும் அயோத்தியின்
    பள்ளிகொண்ட ரங்கனைப் பாடு….

    ஒருத்தி கருத்தரிக்க வேறொருத்தி காத்த
    கருத்தநிறக் கண்ணா கோட்டை – திருச்சியில்
    மாது பிளஸ்டூவில் சாக்லேட் கிருஷ்ணாவில்
    தாதவிழ் பூவாய் மலர்….கிரேசி மோகன்….!

    Share
  • படக்கவிதைப் போட்டி (94)

    பவள சங்கரி

    அன்பிற்கினிய நண்பர்களே!

    வணக்கம். கண்ணையும், கருத்தையும் கவரும் படமொன்றைக் கண்டவுடன் உங்கள் உள்ளத்தில் கவிதை ஊற்றெடுக்கும் திறமை கொண்டவரா நீங்கள்?

    15934442_1202823703105160_1197894185_n

    110834822n04_rவைத்தியநாதன் எடுத்த இந்தப் படத்திற்கு ஒரு கவிதை எழுதுங்கள். இதனை நம் வல்லமை ஃப்ளிக்கர் குழுமத்தின் பொறுப்பாசிரியர் திருமதி. சாந்தி மாரியப்பன் தேர்ந்தெடுத்து அளித்துள்ளார்.

    இந்த ஒளிப்படத்திற்கு ஏற்ற கவிதையை நல்ல தலைப்புடன் பின்னூட்டமாக இடலாம். ஒருவரே எத்தனை கவிதைகள் வேண்டுமானாலும் எழுதலாம். வரும் சனிக்கிழமை (14.01.2017) வரை உங்கள் கவிதைகளை உள்ளிடலாம். அவற்றில் சிறந்த கவிதையை நம் வல்லமை இதழின் ஆசிரியர்குழு உறுப்பினரும், தமிழிலக்கிய ஆராய்ச்சியாளருமான திருமதி மேகலா இராமமூர்த்தி தேர்வு செய்வார். ஒவ்வொரு வாரமும் சிறந்த கவிஞர் ஒருவர் தேர்ந்தெடுக்கப்படுவார். ஒருவரே பலமுறை பங்கு பெறலாம். இவ்வாய்ப்பு சிறந்த கவிஞராகத் தேர்ந்தெடுக்கப்படும் கவிஞர்களுக்கும் உண்டு. 12 மாதமும் தேர்வுபெறும் ஒளிப்படக் கலைஞர் / கவிஞர்களிலிருந்து ஆண்டின் சிறந்த கலைஞரும், கவிஞரும் தேர்வு பெறுவார்கள். ஒளிப்படத்திலிருந்து தாக்கமும் தூண்டுதலும் பெற்று எழும் அசல் படைப்புகளை ஊக்குவிப்பதே இதன் நோக்கம். கவிஞர்களையும் கலைஞர்களையும் கண்டறிந்து ஊக்குவிப்பதற்கான அடையாளப் போட்டி இது; வெற்றி பெறுபவர்களுக்குப் பரிசளிப்பு இருக்காது; பாராட்டு மட்டுமே உண்டு. ஆர்வமுள்ளவர்களைப் பங்குபெற அழைக்கிறோம்.

    போட்டியின் நடுவரான திருமதி. மேகலா இராமமூர்த்தி புதுச்சேரி மாநிலத்தின் காரைக்காலில் பிறந்தவர். கணிப்பொறி (MCA) மற்றும் தமிழில் (MA) முதுகலைப் பட்டம் பெற்ற இவர், அமெரிக்க தமிழ்ச்சங்கப் பேரவையின் (FeTNA) 2008, 2009, 2014, 2016ஆம் ஆண்டுகளின் (ஆர்லாண்டோ, அட்லாண்டா & மிசௌரி) கவியரங்கம், இலக்கிய வினாடிவினா நிகழ்ச்சிகளில் பங்கேற்றுப் பாராட்டுகளும், பரிசுகளும் பெற்றுள்ளவர். சங்கப் பாடல்களில் அதிக ஆர்வமும், இலக்கியக் கூட்டங்களிலும், பட்டிமன்றங்களிலும் சுவைபடப் பேசுவதில் வல்லமையும் பெற்றவர். இவருடைய வலைப்பூ – மணிமிடைபவளம்.

    Share
  • கேசவ் வண்ணம் – கிரேசி எண்ணம்

     

    “ஆண்டாள் -25’’….
    ————————————–

    kesav

    ‘ஒருத்தி மகனை ஒருபத்து மூன்றில்
    இருத்திஆனாள் வைகுண்ட இல்லாள், -கருத்தவன்
    ஆரா அமுதன் அடைந்து மணத்தானே,
    நாரவள் பூநார ணன்’’….கிரேசி மோகன்….

     

    ”ஒருத்தி கருத்தரிக்க, வேறொருத்தி காத்த,
    கருத்தவரே கம்ஸவதக் கர்த்தா -திருப்புத்தூர்(திருவில்லி புத்தூர்)
    கோதை திருப்பாவை பாதை வழிசென்று
    கீதை உரைத்தவரே காப்பு”….கிரேசி மோகன்….!

    Share