திரு அயோத்தி – அருள்மிகு இராமன் திருக்கோயில்

ag

உறவுக்குப் பொருள் கொடுத்த உத்தமனே

மரபுக்கு மகுடம் துறந்த மூத்தவனே

துறவினிலும் அருள்  சேர்த்த தூயவனே

கருணைக்கு கடலான கதிர்குலக் காவலனே !!

 

மானுடனோ வானரனோ வேடுவனோ வேதவனோ

ஊனுடைய உலகினிலே உறவாக்கித் தந்தாய்

கானகத்து வாழ்வினிலும் கற்புக்குப் பொருளாய்

தானழித்து தரணிக்கே தருமங்கள் சொன்னாய் !

 

அன்புக்குப் பாலங்கள் அகத்தினிலே படைத்தாய்

அன்புடையாள் அழைத்துவர ஆழ்கடலை இணைத்தாய்

அன்னையென சபரிக்கே அருளமுது அளித்தாய் !

அரக்கனின் தம்பியையும் அரவணைத்தே  நின்றாய் !

 

பறவைக்கும் மகனாகிப் பரமபதம் தந்தாய்

துறவையும் சொத்தாக்கித் தூயவர்கள் பணிந்தாய்

மறவாமல் நினைக்கின்ற மாருதியின் மனமிருந்தே 

மறையாகப் பெயர்சொல்ல மறுக்காமல் வருபவனே!

 

செருக்காலே  மதியிழந்த சிவநேசன் இராவணனை

வெறுக்காமல் வழிகாட்டி வென்றிட நினைத்தாயே !

மதிக்காமல் பெண்மையினை பழித்திட்டப் பாதகனை

புவிகாக்க போர்முனையில் விதிமுடித்த வில்லோனே !

 

நதிகாத்து நிலம்காத்து மதிகாக்கும்  மன்னவனே

விதிகாத்து வினைகாத்து  மனைகாக்க வருவாயோ ?

புவிநாற்று நிலம்பார்த்து வளம்பெருக்கி வருதல்போல் 

மதிகாத்து மனம்காத்து நலம்பெருக்க வருவாயோ ?

 

 

 

 

 

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *