திரு துவாரகை – அருள்மிகு கல்யாண நாராயணன் திருக்கோயில்

 ag

 குழலொன்றைக் கையேந்தி கோதையினை மனமேந்தி

கோபியர்கள் நினைவேந்திக் கோவர்தனம் காத்தவனே!!

கோலாட்டம் பார்த்திடவே கோவினங்கள் கூடிவர

குலம்காத்த யாதவனே ! கோபாலா கண்மலர்வாய் !

 

மந்தாரப் புன்சிரிப்பால்  மங்கையர்கள் உளம்தொட்டு

மாயைகள் செய்தவனே மதுராவை வாடவிட்டாய் !

மாளாத துயர்கொண்ட மங்கையர்கள் மனம்தேடி

மாதவனே! ஆதவனே! மனம்கொண்டார் துவாரகையில்  !

 

தூவானம் தாலாட்ட துளிர்மலர்கள் கால்போற்ற

பூங்காற்றுப் போர்வையில் புன்னகை படைப்பவனே!

தூங்காமல் துவாரகையில் துயர்நீக்கி நிற்பவனே

மூவுலகும் காத்திடவே முடிகொண்டாய் துவாரகையில் !

 

சூதாடும் மன்னவர்களின் அவையடக்கம் நீங்கிடவே

சதிராடும் சபைதன்னில் விதிமுடிக்க வந்தவனே !

மதிகெட்டுப் பாண்டவர்கள் பாஞ்சாலியைப் பகடையிட

கதியென்று வந்தவளுக்குக் கைகொடுத்த காவலனே  !

 

உறியடித் தோழனின் உளமறிந்த கண்ணா

உவமைக்கு நிகரில்லா உலகாண்ட மன்னா

ஒருபிடி அவலுக்குப் பொன்னையே தந்தாய் 

ஒருபிணி இல்லாத மனமென்று தருவாய் ?

 

வருவினை அறிந்தும் வாதிடும் எண்ணங்கள்

தருவினை அறிந்தும் தள்ளாடும் செயல்கள்

கருவினில் அழித்தே காத்திடு  கமலனே !

கருடனில் வந்தே காத்திடும் கண்ணனே!

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.