திருக்கடல்மல்லை – அருள்மிகு ஸ்தலசயனப் பெருமாள்  திருக்கோயில்

ag

புலனடக்கிப் புண்டரீகன் மாமல்லைக் கடலோரம்

பூப்பறித்துப் புகழ்பாடி புண்ணியனே உனைப்போற்ற

புவிபோற்றும் தவத்தோனாய் புசித்திடவே வந்தாயே

பசிமறந்து பாற்கடலாய் நினைத்தங்கே படுத்தவனே !

 

மாமுனிவன் மனமடக்கிய மாதவத்தில் மகிழ்ந்தாயோ

மாமல்லை வருகையிலே மற்றதெல்லாம் மறந்தாயோ

மங்கையினை மார்பினிலே மறக்காமல் வைப்பவனே

மனமுவந்தே சேடனுக்கோர் ஓய்வினையே தந்தாயோ?

 

அலைபாயும் கடலோரம் ஆனந்த சயனமன்றோ

கலைபோற்றும் மாமல்லைக் கரையினிலே கண்மூடி

மறைபோற்றும் ஆழ்வார்தம் பாயிரங்கள் துணைதேடி 

இணையில்லாத் தமிழ்க்கேட்கத் தலம் கொண்டாயே !

 

குயிலோசைக் குரல்போல கோபியர்கள் குரலசைய

அலையோசை இசைக்கின்ற குழலோசை இசைபாட 

இலையசையா அமைதியிலே மயில்தோகை அசைந்தாட

மனமசையா மாதவனே ! மனமுவந்தே காத்திடுவாய் !

 

கால்நீட்டிப் படுக்கையிலே கால்பிடிக்க வந்திடவோ?

கைத்தாங்கல் கொடுத்திடவே கைகளைத் தந்திடவோ ?

களைப்புற்று  உறங்குகையில் கைவிசிறி வீசிடவோ ?

கண்ணுறங்கும் வேளையிலும் கனிவுடனே காத்திடுவாய்!

 

பண்ணறியேன் பாவறியேன் பண்புமொழி தானறியேன்

கண்ணறியாக் கற்பனையின் காட்டாற்றில் கரையறியேன்

மனதறியா உயிர்கொண்டு மாயையிலே தவிக்கின்றேன்

விண்ணுயர்ந்த விக்ரமனே விரைவினிலே காத்திடுவாய் !

 

 

 

 

 

 

 

Leave a Reply

Your email address will not be published.