Blog

  • மார்கழி மணாளன் 23

     

     

    திருவைகுண்ட விண்ணகரம் – அருள்மிகு தாமரைக்கண்ணுடையபிரான் கோயில்

     ag

    வேடங்கள் கலைந்ததும் வேண்டிட ஒன்றில்லை

    வேதவன் வாழ்ந்திடும் வைகுந்தமே வேறில்லை

    வேதங்கள் வாதங்கள் வழியினில் துணையில்லை

    பேதங்கள் இல்லையே வைகுந்தன் பார்வையில்!

     

    இழிவென்ற அழிவென்ற நினைப்பெல்லாம் நீங்கிட 

    விதியென்ற மதியென்ற கணக்கெல்லாம் பொய்த்திட

    கதியென்றே அரங்கனின் பாதங்கள் கிடக்கையிலே

    பிடியென்று அறிந்திடும் அறிவும்தான் வந்திடுமோ ?

     

    அரவத்தின் கண்கள் அச்சுறுத்தி நிற்க்கையில்

    கருமத்தின்  கணக்குகள் கவலைகள் தருகையில்

    தருமங்கள் முன்வந்து தன்வழக்கு உரைக்கையில்  

    உருவமாய் அருவமாய் வைகுந்தா வாழ்த்திடு  !

     

    பாயிரங்கள் ஒன்றேனும் உளமுருகிப் பாடாமல்

    பேய்மானமாய் அலைபாய்ந்து ஆடியே வந்தாலும் 

    மாயவனே ஏற்றிடுவாய் மனமுவந்து மலரடியில் 

    தாயவள் சேயினையே துறந்திட நினைப்பதோ?

     

    வாயில்கள் பலநூறும் வலம்வந்தேன் வழிதேடி

    கோயில்கள் எங்கெங்கோ கொண்ட பரந்தாமா !

    மாதத்தில் ஒன்றான மார்கழியில் மங்கலமாய்

    சொர்கத்தின் வாசல்வழி தந்தாயே சுந்தரனே !

     

    பொன்னங்கி முத்தங்கி பூவங்கி போட்டாலும்

    தானியங்கி தருமத்தை உள்ளங்கி போட்டவனே

    புகழங்கி போட்டோரின் பொய்யங்கி விலக்கியே

    மெய்யங்கி காட்டுவாய் சொல்லங்கி உனக்கெதற்கு?

     

     

     

     

    Share
  • கேசவ் வண்ணம் – கிரேசி எண்ணம்

     
    ’’ஆண்டாள் -22’’….
    —————————————

    kesav
    ”அங்கண்மா ஞாலத்திற்(கு) ஆண்டாள் திருப்பாவை,
    திங்கள் கதிர்முகத்தோன் தேவகிசேய், -செங்கண்மால்,
    நோன்பிருந்து சொல்லியவண்ணம் நாடுவோர் நிச்சயம்
    வான்புகவை குண்டம் வசம்’’….கிரேசி மோகன்….

    ’’கேசவ் வண்ணத்திற்கு எண்ணம்’’….!
    ——————————————————————-

    ‘’விதுரநீதி(சாதம்) வாயுண்டு, வில்லிச் சிறுமி
    மதுரகீதம்(திருப்பாவை) காதுண்டு(செவிக்குணவு) மாலர் -மதுரா
    புரிமன்னர் கட்டில்கீழ் மன்னர்கள் காத்து
    வரிஎண்ணல் காணெம்பா வாய்’’….கிரேசி மோகன்….!

    Share
  • இங்கிலாந்திலிருந்து ஒரு மடல் . . . (225)

    அன்பினியவர்களே!

    அன்பான வணக்கங்களுடன் 2017ஆம் ஆண்டின் முதலாவது மடலுடன் உங்களிடம் மனம் திறக்கிறேன். பல எதிர்பார்ப்புகளுடன் 2017 எனும் புதிய புத்தகம் திறக்கப்படுகிறது. ஒவ்வொன்றாக இப்புத்தகத்தில் 12 அத்தியாயங்கள் எழுதப்படப் போகின்றன. ஒவ்வொரு அத்தியாயத்திலும் எத்தனையோ எதிர்பாராத திருப்பங்கள், ஆச்சரியங்கள் என்பன உள்ளடங்கப் போகின்றன. உலகமெங்கும் ஒரே பரபரப்பான நிலையே தென்படுகின்றன. புதிய அரசியல் தலைமைகள், புதிய அரசியல் திருப்பங்கள் எனப் பல எதிர்பாராத நிகழ்வுகள் கிளப்பிய வினாக்களின் விடையை ஆவலோடு பலரும் எதிர்பார்த்த வண்ணமே இருக்கிறார்கள். மனிதர்களின் நியாயமான ஆசைகள் எனும் இலட்சியம் பேராசை எனும் எல்லைக் கோட்டினை நெருங்கி விட்டது போன்றதோர் உணர்வினுள் நாம் தள்ளப்பட்டிருக்கிறோம்.

    ஐரோப்பிய யூனியனிலிருந்து வெளியேறுவது ஒன்றையே குறியாகக் கொண்டிருந்தோர் தமது ஆவல் எப்போது பூர்த்தியடையும் என்றே எண்ணிக் கொண்டிருக்கிறார்கள். ஐரோப்பிய யூனியனிலிருந்து ஐக்கிய இராச்சியம் வெளியேறுவது தமது பொருளாதாரச் சூழலை எவ்வகையில் பாதிக்கப் போகிறது என்பதைப் பற்றிச் சிறிதளவேனும் சிந்திப்பவர்களாகத் தென்படவில்லை.  மார்ச் மாதம் முடிவடைவதற்குள் வெளியேறுவதற்கான நெறிமுறையினைச் செயல் படுத்துவேன் என்ற பிரித்தானியப் பிரதமரின் வாக்குறுதியை இறுகப் பற்றிக் கொண்டு அதன் எதிர்பார்ப்பில் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். அதே சமயம் ஐக்கிய இராச்சியத்தின் ஜரோப்பிய யூனியன் வெளியேற்றத்தை முற்று முழுதாக எதிர்த்துக் கொண்டிருக்கும் பகுதியினரோ ஜரோப்பிய யூனியனின் “சிங்கிள் மார்க்கெட்” எனும் வியாபாரத் தளத்திலிருந்து ஐக்கிய இராச்சியம் முற்று முழுதாக விலகக் கூடாது எனும் ஏக்க்கத்தோடு ஓர் எதிர்பார்ப்புடன் காத்திருக்கிறார்கள். இந்த ஐரோப்பிய யூனியனிலிருந்து விலகுவதா? இல்லையா? எனும் சர்வஜன வாக்கெடுப்பில் விலகுவது எனும் முடிவுக்கு மக்களைத் தள்ளியது கட்டுப்பாடற்ற வெளிநாட்டவரின் குடியேற்றம் எனும் உண்மையின் யதார்த்தத்தை ஏனோ உள்வாங்கிக் கொண்டதாகத் தெரியவில்லை. எது எப்படி இருப்பினும் இந்த ஆண்டு ஐக்கிய இராச்சியத்தின் பொருளாதரம் ஒரு தேக்க நிலையை அடையப் போகிறது எனும் எதிர்பார்ப்பு அனைத்துத் தரப்பினர் மத்தியிலும் நிலவுகிறதை உணர்ந்து கொள்ளக்கூடியதாக இருக்கிறது.

    ஐக்கிய அமெரிக்கா என்பது ஒரு தனிப்பெரும் நாடு என்பது எந்த அளவிற்கு உண்மையோ , அந்த அளவிற்கு ஐக்கிய அமெரிக்காவின் மாற்றங்கள் உலக நாடுகள் அனைத்திலும் ஒரு தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதுவும் உண்மையே!அத்தகையதோர் மாற்றமாகத்தான் ஐக்கிய அமெரிக்காவின் ஜனாதிபதி மாற்றமும் அமைந்துள்ளது. அமெரிக்கா ஒரு பல்லின மக்கள் வாழும் நாடு. இன, மத வேறுபாடுகளைக் கடந்து பலகாத தூரம் சென்று விட்டது எனும் எண்ணமே பல நாடுகளில் காணப்பட்டது. ஆனால் சமீபத்திய அமெரிக்க ஜனாதிபதித் தேர்தலின் பிரசாரம் மக்களிடையே பல பேத உணர்வுகளை வளர்த்து விட்டது என்பதுவே வருந்தத்தக்க உண்மையாகிறது. ஜனாதிபதியாகத் தெரிவு செய்யப்பட்டிருக்கும் டொனால்ட் ட்ரம்ப் அவர்கள் தமது பிரசார மேடைகளில் மிகவும் சர்ச்சைக்குரிய கோஷங்களை முன்வைத்தார் என்பது மறுக்கப்பட முடியாத உண்மையாகிறது. அமெரிக்க மக்கள் மனத்தில் இருக்கும் உணர்வுகளையே தான் பிரதிபலித்ததாகவும், தனக்கு எதுவிதமான நிறவேற்றுமைப் பாகுபாடும் கிடையாது என்றும் அவர் கூறினாலும் அவரது கோஷங்களைத் தமது நிறவேற்றுமை மற்றும் இனத்துவேஷ கருத்துக்களுக்குச் சாதகமாக்கப் பல தீவிர வலதுசார அமைப்புகள் முனைந்துள்ளன என்பது உண்மையே. இத்தகைய நிகழ்வுகள் அமெரிக்காவைத் தமது தாயகமாக ஏற்றுக் கொண்டு வாழும் பல ஆசியப் பின்னணி கொண்ட மக்களுக்கு அச்சுறுத்தலாகவே அமைந்துள்ளது. இன்றைய அமெரிக்க அரசியல் வெள்ளை இனத்தவருக்கும் மர்றைய இனத்தவருக்கும் இடையிலான அரசியலாகப் பரிமளிக்கக்கூடிய ஒரு சூழல் தென்படுவது மிகவும் வருந்தத்தக்க விடயமே. இப்படியான பல விடையில்லா வினாக்களைத் தாங்கிக் கொண்டே 2017க்குள் நுழைகிறோம்.

    அடுத்து மற்றைய முன்னணி ஐரோப்பிய நாடுகளான பிரான்சு,ஜேர்மனி, இத்தாலி ஆகியவற்றிலும் அரசியல் நிலைமை ஒரு நிறவேற்றுமைப் பரிணாமத்தினூடாகவே பயணிக்கிறது. பிரான்சு நாட்டில் நடக்கவிருக்கும் ஜனாதிபதித் தேர்தலுக்கு 2017 என்ன முடிவை நல்கப் போகிறது என்பது மிகவும் பெரிய கேள்விக்குறியாகவே இருக்கிறது. பிரான்சு நாட்டில் வாழும் வெளிநாட்டவர் தமது நாட்டின் கலாசாரத்தைப் பின்பற்றாமல் தாம் எங்கிருந்து புலம் பெயர்ந்தார்களோ அந்நாடுகளின் கலாசாரத்தைப் பிரான்சு நாட்டு மக்களின் மீது திணிக்க முயல்கிறார்கள் என்றும் அதனைத் தடுப்பதே தமது அரசியல் என்றும் பிரான்சு நாட்டில் மிகவும் வேகமாக முன்னேறி வரும் தலைவரான லீ பென் எனும் இனவாதக் கட்சியின் தலைவர் பிரசாரம் செய்து வருகிறார். விரும்பியோ, விரும்பாமலோ மற்றைய தலைவர்களும் இவரது பிரசாரத்துக்கு ஈடுகொடுத்துத் தாமும் வெளிநாட்டவர் மீதான பிரசாரங்களை முடுக்கி விட வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளார்கள். ஜேர்மனி நாட்டின் த;லைவரான அஞ்ஞெலா மக்கேல் அவர்களுக்கெதிராகப் போட்டியிட பிரபலமான எவரும் இல்லையெனினும் அந்நாட்டில் இடம்பெறும் தீவிரவாதிகளின் தாக்குதல்களினால் அவர்மீது விமர்சனங்கள் அதிகரித்து வருவதைக் காணக்கூடியதாக உள்ளது. ஒரு மில்லியன் அகதிகளை வரவேற்கிறேன் என்று அவர் விடுத்த அழைப்பினாலேயே மத்திய கிழக்கு, ஆப்பிரிக்க நாடுகளில் இருந்து வரும் அகதிகளின் எண்ணிக்கை அதிகரித்தது என்பதும் இவர் மீது விழும் குற்றச்சாட்டு. இவைகளுக்கெல்லாம் முடிவாக 2017 எதைக் கொடுக்கப் போகிறது என்பது அனைவரின் மனங்களிலும் ஊசலாடும் கேள்வியாகவே இருக்கிறது.

    தமிழகத்தைப் பொறுத்த மட்டில் 2016இன் முடிவு பல அரசியல் மாற்றங்களை முடுக்கி விட்டிருக்கிறது என்றே கூற வேண்டும்.முன்னாள் முதலமைச்சரான செல்வி ஜெயலலிதாவின் எதிர்பாராத மறைவு அவரது கட்சிக்கு ஒரு புதிய தலைவரையும் அரசியல் வட்டாரங்களில் சில அதிர்வலைகளையும் கிளப்பி விட்டிருக்கிறது என்றே கூற வேண்டும். 2017ஆம் ஆண்டின் வரவோடு தி.மு.க தனக்கு ஒரு புதிய செயல் தலைவராக எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின் அவர்களைத் தெரிவு செய்ததும் ஒருவகையான அரசியல் மாற்றம் என்றே கூற வேண்டும். இந்த மாற்றம் தி.மு.க வின் செயல்பாட்டில் எத்தகைய மாற்றங்களை ஏற்படுத்தப் போகின்றது என்பதையும் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

    பலவகையான மாற்றங்களையும், அவை கொடுத்த பலவகையான எதிர்பார்ப்புகளையும் தன்னுள் சுமந்த வண்ணம் 2017 பிறந்திருக்கிறது. இவ்வாண்டு இவைகளுக்கெல்லாம் விடையளிக்குமா? இல்லை தொடரும் கேள்விக்குறியாக நாம்2018இனுள் நுழையப் போகிறோமா? என்பதற்குக் காலம்தான் பதிலளிக்க வேண்டும்.

    மீண்டும் அடுத்த மடலில்…

    அன்புடன்
    சக்தி சக்திதாசன்

    Share
  • கையக்கூட தொடமாட்டேன்..!

        கவியோகி வேதம்

    பனங்காட்டு வயலுக்குள்ளே

    .. ..பசுமாடு மேய்க்கும்புள்ளே!

    இன்னக்கி ‘சரி’ சொல்லுபுள்ளே!

    .. இந்தாண்டில் தாலிகட்றேன்!

    .

    கல்யாணத்துக்கு சாச்சியாநான்

    ..கன்னிமுத்தம் ஒண்ணுதர்ரேன்!

    மெல்லநீயும் வந்துபுள்ளே-என்

    .மீசெபக்கம் தார்ரியா?

    .

    கொக்கிஎதும்  போடாதே-மாமா!

    .கொக்கிஇடநான் வளையமில்லே!

    சொக்கமாட்டேன் உன் மீசெயிலே!

    ..சுந்தர்ராமன் நீயுமில்லெ!

    .

    மாடுமேய்க்கும் புள்ளெதான்நான்!-

    .மக்கு இல்ல நானுமாமா!

    ஏடுகூட படிப்பேன்மாமா!-உன்

    .எண்ணமெல்லாம்  அறிஞ்சிடுவேன்!

    .

    கலியாணப் பேச்செசொல்லி-என்னெ

    கண்கலங்க வெக்கவேணாம்!

    கல்யாணம் ஆகும் முன்னெ

    .கன்னமுத்தம் ஒண்ணும்வேணாம்!

    .

    என்னெக்கட்ற ஆம்பிளைக்கி-நானு

    .என்னிக்கும்சுத்த மாயிருப்பேன்!

    உன்னெக்கண்டு மயங்கிவிட்டு

    .உளுத்துப்போயி நிக்கமாட்டேன்!

    .

    ஆம்புளெங்க  பொண்மயக்கி

    .அம்போ-ன்னு விட்டபின்னே,..

    பொம்புளெங்க யார்ட்டபோயி

    . புலம்பறது சொல்லுமாமா!

    ..

    அடிசக்க காத்தாயீ!–நீ

    . அறிவுள்ள பொம்பளைடீ!

    துளிக்கூட மயங்காத

    . துணிச்சல்உள்ள  ஆத்தாநீ!-

    .

    இந்தாண்டுத் தையில நான்

    .எசவான நாள்பார்த்து-உன்

    செந்தண்டுக் கழுத்திலநான்

    ..தாலிகட்டி மகிழ்ந்திடுவேன்!

    .

    அந்தநாளு வரும்வரெக்கும்

    ..ஆத்தீ உன்னெத் தொடமாட்டேன்!!

    நல்லஒரு பொண்ணே!-உனக்காய்

    ..நாளுமேநான் காத்திருப்பேன்!

     

     

     

     

     

     

    Share
  • புதுப்பிக்க தவறின காதல்

     

    இரா. சந்தோஷ் குமார்

    மணற் பூக்களைத் தூவி
    எனை வரவேற்றது ஆழி..!

    என் அன்பு அன்னையை போல
    தாலாட்டுக் காற்றை 
    என் மீது
    விசிறி விட்டது இயற்கை.

    என் கடந்தகால துரோகிகளைப் போல
    துர்நாற்றமடித்தது மெரீனா குப்பைகள்.

    பருவத்திற்கு வந்த
    என் அத்தை மகளைப் போல
    அந்தி தாவணியை பிடித்து
    பகல் வெண்ணிலா
    வெட்கத்தோடு எட்டி்பார்த்தது.

    கல்லூரிப் பெண்களின்
    அரட்டையென அழகாக
    ரீங்காரிமிட்டது அலைகள்.

    குட்டிப்பாப்பா ஒருத்தியின்
    மணல் வீட்டில்
    குடிப்புகுந்தது
    என் இருதயம்..!

    ராஜ ராஜ சோழர்கள்
    குதிரையிலேறி
    செல்ஃபி கிளிக்கிட்டு இருந்தார்கள்.

    என்றாலும் என்ன…
    என்னோடு வராத
    வர முடியாத அவளின்
    நினைவுகளில் புதுப்பிக்க தவறின
    என் காதல் கதைகள்.

    **

    -இரா.சந்தோஷ் குமார்.

    Share
  • பணம் படுத்தும் பாடு

    நாகேஸ்வரி அண்ணாமலை

    பணம் படுத்தும் பாட்டைப் பற்றி பலர் பல விதமாக எழுதியாயிற்று.  இப்போது என் முறை.  நானும் எழுதுகிறேன்.

    நாங்கள் சிகாகோவில் அடுக்குமாடிக் கட்டடம் ஒன்றில் வசித்து வருகிறோம்.  அடுக்கு மாடிக் கட்டடத்தில் வசிப்பவர்களுக்கு அவரவர்களுடைய அபார்ட்மென்டின் சாவிகளோடு அந்தக் கட்டடத்தின் இரண்டு நுழைவாயில்களுக்குரிய சாவியையும் கொடுப்பார்கள்.  அதை வைத்திருப்பவர்கள் மட்டுமே கட்டடத்திற்குள் நுழைய முடியும்.  பாதுகாப்பிற்காக இந்த ஏற்பாடு.  தபால்காரரிடமும் பத்திரிக்கை டெலிவரி செய்பவர்களிடமும் கட்டடத்திற்குரிய சாவி இருக்கும்.  முன்பெல்லாம் நிறைய பிரதிகள் அடங்கிய ஒரு பெரிய கட்டாக பத்திரிக்கைகள் வருமாம்.  இப்போது பலர் செல்போனிலும் கணினியிலும் செய்திகளைப் பார்த்துவிடுவதால் பத்திரிக்கை படிப்பவர் எண்ணிக்கை மிகவும் குறைந்துவிட்டது.  140 அப்பார்ட்மென்ட்கள் உள்ள எங்கள் கட்டடத்திற்கு நான்கு பிரதிகள்தான் வருகின்றன.

    நான்கு வருடங்களுக்கு முன்னால் எங்களுக்குத் தினமும் நியுயார்க் டைம்ஸ் பத்திரிக்கையை பன்னிரெண்டாவது மாடியில் இருக்கும் எங்கள் அபார்ட்மென்டின் வாசலில் கொண்டுவந்து கொடுப்பதற்கு பத்திரிக்கை ஒருவரை ஏற்பாடு செய்திருந்தது.  எங்கள் அபார்ட்மென்டிற்கு மிக அருகில் லிஃப்ட் இருந்தது.  அதனால் பத்திரிக்கை டெலிவரி செய்பவர் லிஃப்டில் பன்னிரண்டாவது மாடிக்கு வந்து லிஃப்டிலிருந்து பத்திரிக்கையை அப்படியே எங்கள் அப்பார்ட்மென்டிற்கு அருகில் வீசிவிட்டு லிஃப்ட் மறுபடி அந்தத் தளத்தை விட்டுப் போவதற்கு முன் அதைப் பிடித்து அதிலேயே திரும்பிச் சென்றுவிடுவார்.  பலமுறை பத்திரிக்கை எங்கள் அப்பார்ட்மென்டிற்கு வெகு தொலைவில் கிடக்கும்.  அது மட்டுமல்ல, பல முறை பத்திரிக்கை பிரிந்து பலவாறாகச் சிதறிக் கிடக்கும்.  இவ்வளவு தூரம் வருபவர் லிஃப்டை விட்டு வெளியே வந்து எங்கள் அப்பார்ட்மென்டிற்கு அருகிலேயே பத்திரிக்கையை வைத்துவிட்டுப் போகலாமே என்று நாங்கள் நினைத்ததுண்டு.  ஒரு முறை அவரிடம் கூறிப் பார்த்தும் அவர் தொடர்ந்து தான் செய்ததையே செய்துவந்தார்.

    அதன் பிறகு ஒரு வருடம் கழித்து இன்னொருவர் பத்திரிக்கையை டெலிவரி செய்யும் வேலையைச் செய்ய ஆரம்பித்தார்.  இவர் முந்தையவரைப்போல் அல்லாமல் அப்பார்ட்மென்டிற்கு அருகிலேயே  மடித்த மடிப்புக் கலையாமல் அபார்ட்மென்டின் வாசலில் பத்திரிக்கையை வைத்துவிட்டுப் போவார்.  கதவைத் திறந்தாலே பத்திரிக்கை கைக்குக் கிடைக்கும்.  இரவு உடையை மாற்றாமலே பத்திரிக்கையை எடுத்துக்கொள்ளலாம்.  இது எங்களுக்கு மிகவும் வசதியாக இருந்தது.  தினமும் காலை ஐந்திலிருந்து ஐந்தரைக்குள் பத்திரிக்கையை டெலிவரி செய்துவிடுவார்.  எழுந்தவுடனேயே பத்திரிக்கை கைக்குக் கிடைத்துவிடுவதால் இதுவும் எங்களுக்கு மிகவும் வசதியாக இருந்தது.

    ஒவ்வொரு வருடமும் கிறிஸ்துமஸ் பண்டிகைக்குச் சில நாட்கள் முன்னதாக இப்படிப் பத்திரிக்கை டெலிவரி செய்பவர்கள் பத்திரிக்கையோடு தங்கள் விலாசமிட்ட ஒரு கவரைப் பத்திரிக்கையோடு இணைத்துவைத்துவிடுவார்கள்.  அதில் அவர்களுக்குச் சன்மானமாக பத்திரிக்கையைப் பெற்றுக்கொள்பவர் அவர் விருப்பத்திற்கு ஏற்ப பணம் வைத்து தபாலில் அனுப்பிவிடுவது வழக்கம்.  எங்களுக்கு டெலிவரி செய்தவர் நேரம் தவறாமல், நாள் தவறாமல் நேர்த்தியாக டெலிவரி செய்ததால் 25 டாலர் பணத்தை அவர் வைத்திருந்த கவரில் வைத்துத் தபாலில் அனுப்பினோம்.  அவரும் மிகவும் மகிழ்ந்துபோய் அடுத்த முறை பத்திரிக்கை டெலிவரி செய்தபோது ஒரு மூலையில் பெரிதாக நன்றி என்று எழுதியிருந்தார்.  இப்படித்தான் நாங்கள் தகவல் பரிமாறிக்கொண்டோம்.  அவர் எங்களைப் பார்த்ததில்லை; நாங்கள் அவரைப் பார்த்ததில்லை.  இரண்டு வருடங்கள் இப்படியே எந்தவிதச் சிக்கலும் இல்லாமல் பத்திரிக்கை எங்களுக்குக் கிடைத்துவந்தது.

    யார் கண்பட்டதோ.  மூன்றாவது வருடம் நாங்கள் இந்தியா சென்று திரும்பிய பிறகு அடிக்கடி நேரம் தவறாமல் டெலிவரி செய்வதில் தவறியதோடு எங்கள் அபார்ட்மென்டின் வாசலில் கொண்டுவந்து கொடுப்பதற்குப் பதில் எங்கள் அப்பார்ட்மென்ட் இருந்த கட்டடத்தின் வாசலிலேயே வைத்துவிட்டுப் போய்விடுவார்.  நாங்கள் இரவு உடையை மாற்றிக்கொண்டு கீழே இறங்கிப் போய் கட்டடத்தின் கதவைத் திறந்து வெளியே சென்று பத்திரிக்கையை எடுத்து வர வேண்டும்.  குளிர் காலத்தில் கட்டடத்தின் கதவைத் திறந்தாலே கடுமையான குளிர் வாட்டும்.  அதற்கும் சேர்த்து கம்பளி உடைகளை அணிந்துகொள்ள வேண்டும்.  சில சமயம் வாசல் வரை பனி கூட இருக்கும்.  ‘தயவுசெய்து எங்கள் அபார்ட்மென்டின் வாசலில் கொண்டுவந்து வைத்துவிடுங்கள்’ என்று கூறிப் பார்த்தோம்.  ஒரு நாள் நாங்கள் சொன்னபடிச் செய்வார்.  ஆனால் மறு நாளே பழையபடி வெளியே வைத்துவிட்டுப் போய்விடுவார்.  ஒரு முறை எங்கள் கட்டடத்தின் சாவி தன்னிடம் இல்லையென்று கூறினார்.  கட்டடத்தின் மேனேஜரிடம் சொல்லி அவருக்கு ஒரு சாவி கொடுக்கச் செய்தோம்.  ஆனாலும் எந்தவித பயனும் இல்லை.  வழக்கமாக கிறிஸ்துமஸுக்கு முன்னால் தன்னுடைய விலாசமிட்ட கவரை வைப்பதற்குச் சில நாட்கள் முன்னாலேயே ஒழுங்காக டெலிவரி செய்ய ஆரம்பித்தார்.  நாங்களும் ‘இதுவரை அவருக்கு ஏதோ கஷ்டம் இருந்திருக்க வேண்டும்.  அதனால்தான் அப்படிச் செய்தார் என்று நினைத்துக்கொண்டு வழக்கம்போல் 25 டாலரைக் கவரில் வைத்து அனுப்பினோம்.  ஒரு சில நாட்கள் ஒழுங்காக எல்லாம் நடந்து வந்தது.  மறுபடி அதே ஒழுங்கீனம் தொடர்ந்தது.  போகட்டும் என்று விட்டுவிட்டோம்.  நாங்களே கீழே போய் எடுத்துவர ஆரம்பித்தோம்.

    இந்த வருடம் இந்தியாவிலிருந்து திரும்பி வந்ததும் அதே ஒழுங்கீனத்தைத் தொடர்ந்தார்.  சாவிப் பிரச்சினையா அல்லது வேறு ஏதாவது பிரச்சினையா என்று கேட்டுப் பார்த்தோம்.  சரியாகப் பதில் வரவில்லை.  நாங்கள் தகவல் பரிமாறிக்கொள்வதெல்லாம் கடிதம் மூலம்தான்.  அவர் கூற விரும்புவதை ஒரு பேப்பரில் எழுதிப் பத்திரிக்கையோடு சேர்த்துவிடுவார்.  நாங்கள் தபால் மூலம் அவரிடம் பேசுவோம்.  அவர் சமீபத்தில்தான் மெக்ஸிகோவிலிருந்து அமெரிக்காவிற்குக் குடிபெயர்ந்திருந்ததால் சரியாக ஆங்கிலம் பேச வராது.  அதனால் தொலைபேசியில் பேச விரும்ப மாட்டார்.  இந்த வருடமும் கிறிஸ்மஸுக்குக் கொஞ்ச நாட்கள் முன்பு தன்னுடைய விலாசமிட்ட கவரைப் பத்திரிக்கையோடு வைத்திருந்தார்.  இந்த முறை என் கணவர் விடுமுறைக்காக ஊரை விட்டுச் செல்லும் முன் ‘நாங்கள் ஊருக்குப் போகிறோம்.  திரும்பி வந்த பிறகு எப்படி டெலிவரி செய்கிறீர்கள் என்று பார்த்துவிட்டு கிறிஸ்துமஸ் இனாமைக் கொடுக்கிறோம்’ என்று கடிதம் மூலம் அவருக்குத் தெரியப்படுத்தினார்.  நாங்கள் திரும்பி வந்த அன்று பத்திரிக்கையோடு ஒரு சிறு தாளைச் செருகிவைத்திருந்தார்.  அதில் தான் ஏன் அதுவரை சரியாக டெலிவரி செய்யவில்லை என்பதற்குப் பலவித காரணங்களைச் சொல்லியிருந்தார்.  அவற்றில் பல அப்பட்டமான பொய்கள்.  அதைப் பார்த்து எனக்கு ஆத்திரப்படுவதா அல்லது அழுவதா என்று தெரியவில்லை.  இப்படிப் பொய்கள் சொல்லுகிறாரே என்று ஆத்திரம்.  25 டாலர்களைப் பெறுவதற்கு இத்தனை பொய்கள் சொல்ல வேண்டுமா என்று அழுகை மற்றொரு புறம்.  பணத்திற்கு இத்தனை சக்தியா?  இனி எப்படி டெலிவரி செய்கிறார் என்பதைப் பார்க்கக்கூட விரும்பாமல் அன்றே வழக்கமாகக் கொடுக்கும் 25 டாலரை அனுப்பிவிடும்படி கணவரிடம் கூறினேன்.  அவரும் அப்படியே செய்துவிட்டார்.

    இன்னும் வரும் வருடங்களிலும் அவர் எப்படி டெலிவரி செய்தாலும் அவருக்குரிய 25 டாலர் பணத்தைக் கொடுத்துவிடுவது என்று முடிவு செய்தோம்.

    .

    Share
  • மார்கழி மணாளன் 22

     

     

    திரு மணிமாடக்கோயில்

    அருள்மிகு பத்ரி நாராயணப் பெருமாள் திருக்கோவில்

    ag

    மணிமாடங்கள் ஆயிரம் இருந்தாலும்  மாதவனே

    மனத்துள்ளே நீயிருக்க மணிமாடக் கோயில்தானே

    அணியின்றி அரங்கத்தில் அயர்ந்தாலும் அழகனே

    அணியே ! வான்தோட்டக் கனியே ! வந்தருள்வாய் !

     

    இமயத்தில் இருந்தாலும் இதயத்தைத் தொடுவாய் 

    இணையேது உனக்கென்றும் இருள்நீக்கும் திருவே

    பனிமூடும் வாழ்க்கைக்குப் பகலவனே பத்ரிவாசா

    பணிகின்றேன் பாதங்கள் பரிவுடனே வந்திடுவாய் !

     

    பணியின்றி பாற்கடலில் படுத்தாலும் பரந்தாமா

    புவியாளும் திறனெல்லாம் புன்னகையில் வைத்தாயே

    பிணிதீர்க்கும் மருந்தென்று யாரறிந்தார் உன்னுள்ளம்

    விழிநிறையும் எழிலன்றோ திருமகளுறை திருமாலே !

     

    உறியடித்த பிள்ளையிடம்  உளம்தொலைத்த கோபியர்கள்

    உரிமையுடன் விளையாட  உன்னெழிலைத் தேடிவந்தார்

    உன்னுருவம் எத்தனையோ உலகங்கள் வியந்ததய்யா

    உலகெல்லாம் ஓருருவம் உன்னுருவமென அறிந்ததய்யா !

     

    கண்ணிமைகள் மூடியவர் கற்பனையில் வடித்துன்னை

    கண்ணனென்றும் கருநீலமெனக் காதலால்  சொன்னார்

    கண்ணொளியின்  கரைகடந்த வண்ணமன்றோ கண்ணா

    மின்னொளியும் வெட்கிவிடும் பகல்வண்ணப் பரந்தாமா !

     

    கனியமுதும் கறியமுதும் சாத்தமுதும் படைத்தாலும்

    சொல்லமுதைக் கேட்டதுமே செவிசாய்க்கும் சுந்தரனே

    விண்ணமுது உண்டவர்கள் வந்தாலும் வரிசையிலே

    கண்ணமுது கண்டபின்னே வேறமுது வேண்டுவரோ ?

     

     

     

     

    Share
  • கேசவ் வண்ணம் – கிரேசி எண்ணம்

    kesav
    ‘’பாதாதி கேசரை பசுவின் வாலாதி கொம்பிலே வைத்தது வில்லிபுத்தூர் நாச்சியார்
    தமிழ்ப் பாசுரங்கள்’’….!

    ”வாலாதி கொம்பிலே வாய்த்த அவதாரர்
    பாலூறும் வள்ளல், பசுநேசர்: -ஏலாதி
    அக்கா ரவடிசலவ் ஆண்டாள் திருப்பாவை
    உ(ட்)க்கார வைத்தததை ஓது(முப்பதை….)’’….கிரேசி மோகன்….!

     
    ”ஆண்டாள் -21’’….
    ————————————-

    ’’போற்றக் கலங்களெதிர் பார்க்கும் கலங்கரைத்
    தோற்றத்திற்க்(கு) ஈடாய் திருப்பாவை, -சாற்றினாள்
    சம்சாரக் கப்பலது, சிக்கிடாது பக்தியாம்
    மின்சாரம் ஆண்டாள் மினுக்’’….கிரேசி மோகன்….

    Share
  • மார்கழி மணாளன் 21

     

     

    திருசிறுப்புலியூர்-  அருள்மிகு அருமாக்கடல் அமுதன் திருக்கோயில்

     ag

    கண்ணுடை விரல்களும் புலியின் நகங்களும்

    கைகளில் ஏந்தியே கயிலையான் போற்றிய

    கனவுடை முனிவன் வைகுந்தம் வேண்டிட

    கனிவுடன் சிவனும்  கேட்டதைத் தந்தான்!

     

    அரங்கத்தில் அயர்ந்தவன் அருளினைப் பெற்றே 

    அலைமகள் தலைவனின் அடிகளில் அமர்ந்தே

    அருளுடை வியாகிரன் அச்சுதன் போற்றிட

    அகிலமே வியந்ததே அற்புதம் அனந்தனே !

     

    சிந்தையில் சிவனும் மூச்சினில் முகுந்தனும்

    விந்தையாய் நிறுத்தியே வேண்டிய  முனிவர்கள்

    விழியினில் ஒளியின்றி வழியினை இழந்ததும்

    வடிவினில் பாலனாய் அரங்கனும் அருளினான் !

     

     விந்தைகள் நித்தமும் வைகுந்தன் வாசலில்

    சிந்தையை அவனிடம் சிதறாமல் தந்திட

    மந்தையில் ஆடாய் சென்றிடும் மனதினை

    பந்தங்கள் நீக்கியே பக்குவம் செய்வான் !

     

    கருடனும் பறந்தவன் சுமைதனைத் தூக்கிடும்

    கருவிட   நாகமும் களைப்பின்றித் தாங்கிடும்

    கருடனின் பிடியினில் அரவினைக் காத்தாய்

    கலங்கிடும் இதயங்கள் காத்திடும் கண்ணனே !

     

    கைவிரலில் மலைதூக்கிக் கைவண்ணம் வரைந்தாய்  

    காலடியில் காளிங்கனுக்கோ கால்வண்ணம் சொன்னாய் 

    காதலுடை ராதைக்கோ தந்தாயுந்தன் கண்வண்ணம் 

    கவிதையிலே தேடவோ கண்ணா சொல்வண்ணம் ?

     

     

     

     

     

     

     

     

     

     

     

     

     

     

     

    Share
  • தன்னம்பிக்கை

     

     

    ரா.பார்த்தசாரதி

     

     

     

    மனிதன்  வாழ  தேவை  தன்னம்பிக்கை

    தன்னம்பிக்கையை இழந்தால் தைரியம் பிறக்காது

    சோதனையை  கண்டு  என்றும் பயந்தவனுக்கு

    சாதனை என்பது,  என்றும்  நடக்காது !

     

     

    வாழ்க்கை என்பது பொதுவாய் அமைந்த நியதியடா

    தைரியம் இல்லாத மனிதர்கள் பூமிக்கு சுமையடா

    தோல்வியை தாண்டி சென்றாலே வெற்றி கிடைக்குமே

    தொடர்ந்து முயற்சி செய்பவனுக்கே வெற்றி கிட்டுமே !

     

     

    கடனே என்று வாழ்பவனுக்கு கடமையும் சுமைதான்

    தென்றலின் இனிமையை புயலாய்  நினைப்பான்

    தன்னம்பிக்கையும், நம்பிக்கையும் நாணயத்தின் இரு பக்கங்களே

    மனிதனின் பலம்  நம்பிக்கையிலே, யானையின் பலம் தும்பிக்கையிலே!

     

     

    உலகில் மனித நேயத்துடன்  பழகு !

    தாமே  வந்திடும்  புகழ்  உனக்கு

    சோர்வையும், சோம்பேறித்தனத்தை அறவே நீக்கு

    வாழ்வில்  வெற்றியினை  எப்போதும்  உனதாக்கு !

     

     

     

     

     

     

    Share
  • கேசவ் வண்ணம் – கிரேசி எண்ணம்

    kesav
    ”நப்பின்னை போலவே நானும் அழகுதான்
    அப்பெண் அகமுடையாள் ஆனாற்போல், -இப்பெண்நான்
    பின்னாடி வந்தாலும் ”ப்ரோச்சேவா”, பக்தியில்
    கண்ணாடி காட்டுகிறாள் காண்”….கிரேசி மோகன்….!

    ”பாஸுரமுக கரிராஜுலு(யானை கஜேந்திரன்) ப்ரோச்சின(காப்பாத்தின)
    த்யாகய்யர் கீர்த்தனை” ப்ரோச்சேவா எவருரா” வாசித்ததில்….!ஆண்டாள்
    தன்னை மணம்புரிந்து காப்பாத்துமாறு கண்ணனிடம் கோருகிறாள்….
    தான் பத்தினி நப்பின்னையைப் போல் அழகானவள் என்பதை கண்ணாடி காட்டி
    CONFIRM செய்கிறாள் கோதை….!

    Share
  • மார்கழி மணாளன் 20

     

     

    திருமணிக்கூடம்  – அருள்மிகு வரதராசப் பெருமாள்

    ag

    நெருப்பாக இருந்தவள் நெருப்பினிலே நின்றவுடன்

    நெருப்பான நெஞ்சினிலே கருப்பான உணர்வுகளுடன்

    நெருப்பாகி ஆடினான் துடிப்பாகத் தாண்டவனே

    நெருப்பாக எரிந்ததுவே மூவுலகும் முன்னாலே !

     

    சடையனின் சிகையெல்லாம் சீறியே  மண்தொடவே

    படையென எழுந்தனரே பதினோரு உருத்திரரே

    விளையாட நினைத்தானோ விதிமுடிக்க வந்தானோ

    விடையமர்ந்த வள்ளலே வெகுண்டதுவே சரிதானோ?

     

    தகிக்கின்ற நெருப்புக்குத் தாளமிடும் ஒலிகள்

    தக்கத்திமி   தாவென்று தாவிவிடும் பாதங்கள் 

    திக்கெட்டும் ஒலிக்கின்ற உடுக்கையின் அச்சத்திலே

    தஞ்சமென்றே தாளினிலே அமர்ந்தனரே அமரர்கள் !

     

    வாராது நிற்போருக்கும் கேளாமல் கொடுப்பவனே

    வந்தோரின் மனமறிந்து  வளம்படைக்கும் வரதப்பா

    வயதில்லா தேவர்களும்  துயர்தீர்க்க வேண்டியதும்

    வண்ணங்கள் பதினொன்றில் வடிவெடுத்து நின்றாயே  !

     

    வஞ்சியினை இழந்தவனும் காஞ்சியிலே இருந்தவனை

    நெஞ்சினிலே வைத்தவுடன் நிறைவுடனே  அமைதியுற்றான்

    தஞ்சமென்று வந்தவர்க்குத்  தாமோதரன் துணையிருக்க

    வஞ்சமின்றி அருள்மழையும் வானிருந்து பொழுந்திடுமே !

     

    நிலமகளும் அலைமகளும் அருகினிலே  துணையிருக்க

    நிலத்தோடு  வானாளும் வரதப்பா  வேண்டுகின்றேன்

    நிஜத்தோடு போராடும் நிலையில்லா வாழ்வினிலே

    நிஜமொன்று நீயேயென்று மனமறிய அருள்வாயோ ?

    Share
  • கோபிசெட்டிப்பாளையம் பி.கே.ஆர்.மகளிர் கலைக் கல்லூரியில் இணையத்தமிழ் குறித்த சிறப்புரை

    மு.இளங்கோவன்

    ஈரோடு  மாவட்டம் கோபிசெட்டிப்பாளையத்தில் அமைந்துள்ள  பி.கே.ஆர். மகளிர் கலைக் கல்லூரியில் 03.01.2017 (செவ்வாய்க் கிழமை) காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை தமிழ் இலக்கியம் பயிலும் மாணவர்களுக்கு இணையத் தமிழ் குறித்த சிறப்புரையும், செய்முறைப் பயிற்சியும் நடைபெற உள்ளன. புதுச்சேரி மு.இளங்கோவன் கலந்துகொண்டு மாணவர்களுக்கு இணையத் தமிழ் குறித்த சிறப்புரையாற்றுகின்றார். அருகில் உள்ள கல்வி நிறுவனங்களைச் சேர்ந்த பேராசிரியர்கள், ஆய்வு மாணவர்கள் கலந்துகொள்ள இயலும்.

    கோபிசெட்டிப்பாளையத்தில் பண்ணாராய்ச்சி வித்தகர் குடந்தை ப. சுந்தரேசனார் ஆவணப்படம் திரையிடலும் கலந்துரையாடலும்

    ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிப்பாளையத்தில் 03.01.2017 செவ்வாய்க்கிழமை மாலை 6 மணிக்குப் புலவர் மா. அரசு நினைவு கல்வி அறக்கட்டளையின் சார்பில் பண்ணாராய்ச்சி வித்தகர் குடந்தை ப.சுந்தரேசனார் ஆவணப்படம் திரையிடலும் கலந்துரையாடலும் நடைபெற உள்ளது.

    பண்ணாராய்ச்சி வித்தகர் குடந்தை. ப. சுந்தரேசனாரை ஆதரித்த பெருமக்கள் கொங்கு மண்டலப் பகுதியில் மிகுதியாகும். புன்செய்ப் புளியம்பட்டியைச் சேர்ந்த தமிழன்பர்கள் குடந்தை ப. சுந்தரேசனாரை அழைத்து அவர்தம் தமிழ்ப்பணிக்கு உதவியுள்ளனர். பஞ்சமரபு நூல் கொங்கு மண்டலத்தில் வாழ்ந்த வேலம்பாளையம் வித்துவான் வே.இரா. தெய்வசிகாமணிக் கவுண்டரிடம் ஓலையிலிருந்து பெற்றே பதிப்பிக்கப்பட்டது. இத்தகு பெருமைக்குரிய கொங்கு மண்ணில் ப.சு. ஆவணப்படம் திரையிடப்பட உள்ளமை ஒரு வரலாற்று நிகழ்வாகும்.

    கோபி, ஈரோடு, சத்தியமங்கலம் பகுதியில் உள்ள தமிழன்பர்கள்  இந்த நிகழ்வில் கலந்துகொண்டு சிறப்பிக்கலாம்.

    தொடர்புக்கு: திரு. அரசு தாமசு ஆசிரியர் அவர்கள் 9842097878

    Share
  • கேசவ் வண்ணம் – கிரேசி எண்ணம்

    kesav
    ”காகம் குதறியும், கண்ணயர்ந்த காகுத்தன்
    தேகம் அசையாது தூங்கஅ -சோகவன
    ஜானகிபோல் ஆண்டாள் சும்மா இருந்திடாள்:
    வானுலகே(விஷ்ணு) வையத்துள் வா”….

    ”ஓங்கி உலகளந்தோன், தாங்கினான் குன்றினை,
    ஏங்கிய கோகுல யாதவர்க்காய், -பாங்கியாய்
    ஆண்டாளை ஏற்றநம் அச்சுத நெய்யிருக்க,
    வேண்டேலோர் வேறெம்பா வாய்’’….கிரேசி மோகன்….

    Share
  • மார்கழி மணாளன் 19

     

     

    திருத்தேற்றியம்பலம் – அருள்மிகு செங்கண்மால் இரங்கநாதப் பெருமாள்

    ag 

     ஆதாரம் நீயேயென்று அமரர்கள் நாடிடவே

    பாதாளம் வரைசென்ற வாராக வடிவே

    சேதாரம் ஏதுமின்றி புவிகாத்த புனிதா

    பூபாரம் தூக்கிய புண்ணியனே பூவராகா!

     

    செந்தணல் சிந்தையுடன் சினம்கொண்டே போரிட்டு

    செங்குருதி விழியேறச் சிவந்த செங்கண்மாலனே !

    செங்கமலச் செல்வியுந்தன் சீரான தாள்பிடிக்க 

    சிங்காரப் பாம்பணையில் சினம்தீரச் சாய்ந்தவனே!

     

    அலைபாயும் பாற்கடலில் அமுதாக நீயிருக்க

    நிலையான உறக்கம் உனக்கேது நித்தியனே

    சிலையாகக் கண்மூடிப்  படுத்தாலும் கண்ணா

    கலையாகக்  காலங்கள் கண்களில் உருளாதோ ?

     

    மண்ணுறங்கும் உயிரெல்லாம் மனதினிலே நிறுத்தி

    கண்ணுறங்கும் வேளையிலும் காசினியைக் காப்பவனே

    உள்ளுறக்கம் ஏதுமின்றி உலையான நெஞ்சங்களை

    உன்னுறக்கம் நீக்கியே ஓடிவந்தே காத்திடுவாய் !

     

    அரங்கங்கள் உனக்கென்று எங்கென்று  அறியாமல்

    உறங்காமல் ஊரெல்லாம் உலகெல்லாம் சென்றேன்

    அலங்காரத் திருக்கோயில்கள் ஆயிரம் இருந்தும்

    அமைதியாய்  நெஞ்சத்தில் நீயிருக்கக்  கண்டேன்

     

    திருமேனி வண்ணங்கள் யாதென்று அறியாதார்

    கருமேனி உனக்கென்று கனவினிலும் சொல்லிடுவார் 

    ஒருமேனி உள்ளடங்கா உலகெல்லாம் உனதன்றோ

    பொன்மேனிச் செம்மலே! பூவுள்ளம் மலர்ந்திடுவாய் !

    Share