நாகேஸ்வரி அண்ணாமலை

பணம் படுத்தும் பாட்டைப் பற்றி பலர் பல விதமாக எழுதியாயிற்று.  இப்போது என் முறை.  நானும் எழுதுகிறேன்.

நாங்கள் சிகாகோவில் அடுக்குமாடிக் கட்டடம் ஒன்றில் வசித்து வருகிறோம்.  அடுக்கு மாடிக் கட்டடத்தில் வசிப்பவர்களுக்கு அவரவர்களுடைய அபார்ட்மென்டின் சாவிகளோடு அந்தக் கட்டடத்தின் இரண்டு நுழைவாயில்களுக்குரிய சாவியையும் கொடுப்பார்கள்.  அதை வைத்திருப்பவர்கள் மட்டுமே கட்டடத்திற்குள் நுழைய முடியும்.  பாதுகாப்பிற்காக இந்த ஏற்பாடு.  தபால்காரரிடமும் பத்திரிக்கை டெலிவரி செய்பவர்களிடமும் கட்டடத்திற்குரிய சாவி இருக்கும்.  முன்பெல்லாம் நிறைய பிரதிகள் அடங்கிய ஒரு பெரிய கட்டாக பத்திரிக்கைகள் வருமாம்.  இப்போது பலர் செல்போனிலும் கணினியிலும் செய்திகளைப் பார்த்துவிடுவதால் பத்திரிக்கை படிப்பவர் எண்ணிக்கை மிகவும் குறைந்துவிட்டது.  140 அப்பார்ட்மென்ட்கள் உள்ள எங்கள் கட்டடத்திற்கு நான்கு பிரதிகள்தான் வருகின்றன.

நான்கு வருடங்களுக்கு முன்னால் எங்களுக்குத் தினமும் நியுயார்க் டைம்ஸ் பத்திரிக்கையை பன்னிரெண்டாவது மாடியில் இருக்கும் எங்கள் அபார்ட்மென்டின் வாசலில் கொண்டுவந்து கொடுப்பதற்கு பத்திரிக்கை ஒருவரை ஏற்பாடு செய்திருந்தது.  எங்கள் அபார்ட்மென்டிற்கு மிக அருகில் லிஃப்ட் இருந்தது.  அதனால் பத்திரிக்கை டெலிவரி செய்பவர் லிஃப்டில் பன்னிரண்டாவது மாடிக்கு வந்து லிஃப்டிலிருந்து பத்திரிக்கையை அப்படியே எங்கள் அப்பார்ட்மென்டிற்கு அருகில் வீசிவிட்டு லிஃப்ட் மறுபடி அந்தத் தளத்தை விட்டுப் போவதற்கு முன் அதைப் பிடித்து அதிலேயே திரும்பிச் சென்றுவிடுவார்.  பலமுறை பத்திரிக்கை எங்கள் அப்பார்ட்மென்டிற்கு வெகு தொலைவில் கிடக்கும்.  அது மட்டுமல்ல, பல முறை பத்திரிக்கை பிரிந்து பலவாறாகச் சிதறிக் கிடக்கும்.  இவ்வளவு தூரம் வருபவர் லிஃப்டை விட்டு வெளியே வந்து எங்கள் அப்பார்ட்மென்டிற்கு அருகிலேயே பத்திரிக்கையை வைத்துவிட்டுப் போகலாமே என்று நாங்கள் நினைத்ததுண்டு.  ஒரு முறை அவரிடம் கூறிப் பார்த்தும் அவர் தொடர்ந்து தான் செய்ததையே செய்துவந்தார்.

அதன் பிறகு ஒரு வருடம் கழித்து இன்னொருவர் பத்திரிக்கையை டெலிவரி செய்யும் வேலையைச் செய்ய ஆரம்பித்தார்.  இவர் முந்தையவரைப்போல் அல்லாமல் அப்பார்ட்மென்டிற்கு அருகிலேயே  மடித்த மடிப்புக் கலையாமல் அபார்ட்மென்டின் வாசலில் பத்திரிக்கையை வைத்துவிட்டுப் போவார்.  கதவைத் திறந்தாலே பத்திரிக்கை கைக்குக் கிடைக்கும்.  இரவு உடையை மாற்றாமலே பத்திரிக்கையை எடுத்துக்கொள்ளலாம்.  இது எங்களுக்கு மிகவும் வசதியாக இருந்தது.  தினமும் காலை ஐந்திலிருந்து ஐந்தரைக்குள் பத்திரிக்கையை டெலிவரி செய்துவிடுவார்.  எழுந்தவுடனேயே பத்திரிக்கை கைக்குக் கிடைத்துவிடுவதால் இதுவும் எங்களுக்கு மிகவும் வசதியாக இருந்தது.

ஒவ்வொரு வருடமும் கிறிஸ்துமஸ் பண்டிகைக்குச் சில நாட்கள் முன்னதாக இப்படிப் பத்திரிக்கை டெலிவரி செய்பவர்கள் பத்திரிக்கையோடு தங்கள் விலாசமிட்ட ஒரு கவரைப் பத்திரிக்கையோடு இணைத்துவைத்துவிடுவார்கள்.  அதில் அவர்களுக்குச் சன்மானமாக பத்திரிக்கையைப் பெற்றுக்கொள்பவர் அவர் விருப்பத்திற்கு ஏற்ப பணம் வைத்து தபாலில் அனுப்பிவிடுவது வழக்கம்.  எங்களுக்கு டெலிவரி செய்தவர் நேரம் தவறாமல், நாள் தவறாமல் நேர்த்தியாக டெலிவரி செய்ததால் 25 டாலர் பணத்தை அவர் வைத்திருந்த கவரில் வைத்துத் தபாலில் அனுப்பினோம்.  அவரும் மிகவும் மகிழ்ந்துபோய் அடுத்த முறை பத்திரிக்கை டெலிவரி செய்தபோது ஒரு மூலையில் பெரிதாக நன்றி என்று எழுதியிருந்தார்.  இப்படித்தான் நாங்கள் தகவல் பரிமாறிக்கொண்டோம்.  அவர் எங்களைப் பார்த்ததில்லை; நாங்கள் அவரைப் பார்த்ததில்லை.  இரண்டு வருடங்கள் இப்படியே எந்தவிதச் சிக்கலும் இல்லாமல் பத்திரிக்கை எங்களுக்குக் கிடைத்துவந்தது.

யார் கண்பட்டதோ.  மூன்றாவது வருடம் நாங்கள் இந்தியா சென்று திரும்பிய பிறகு அடிக்கடி நேரம் தவறாமல் டெலிவரி செய்வதில் தவறியதோடு எங்கள் அபார்ட்மென்டின் வாசலில் கொண்டுவந்து கொடுப்பதற்குப் பதில் எங்கள் அப்பார்ட்மென்ட் இருந்த கட்டடத்தின் வாசலிலேயே வைத்துவிட்டுப் போய்விடுவார்.  நாங்கள் இரவு உடையை மாற்றிக்கொண்டு கீழே இறங்கிப் போய் கட்டடத்தின் கதவைத் திறந்து வெளியே சென்று பத்திரிக்கையை எடுத்து வர வேண்டும்.  குளிர் காலத்தில் கட்டடத்தின் கதவைத் திறந்தாலே கடுமையான குளிர் வாட்டும்.  அதற்கும் சேர்த்து கம்பளி உடைகளை அணிந்துகொள்ள வேண்டும்.  சில சமயம் வாசல் வரை பனி கூட இருக்கும்.  ‘தயவுசெய்து எங்கள் அபார்ட்மென்டின் வாசலில் கொண்டுவந்து வைத்துவிடுங்கள்’ என்று கூறிப் பார்த்தோம்.  ஒரு நாள் நாங்கள் சொன்னபடிச் செய்வார்.  ஆனால் மறு நாளே பழையபடி வெளியே வைத்துவிட்டுப் போய்விடுவார்.  ஒரு முறை எங்கள் கட்டடத்தின் சாவி தன்னிடம் இல்லையென்று கூறினார்.  கட்டடத்தின் மேனேஜரிடம் சொல்லி அவருக்கு ஒரு சாவி கொடுக்கச் செய்தோம்.  ஆனாலும் எந்தவித பயனும் இல்லை.  வழக்கமாக கிறிஸ்துமஸுக்கு முன்னால் தன்னுடைய விலாசமிட்ட கவரை வைப்பதற்குச் சில நாட்கள் முன்னாலேயே ஒழுங்காக டெலிவரி செய்ய ஆரம்பித்தார்.  நாங்களும் ‘இதுவரை அவருக்கு ஏதோ கஷ்டம் இருந்திருக்க வேண்டும்.  அதனால்தான் அப்படிச் செய்தார் என்று நினைத்துக்கொண்டு வழக்கம்போல் 25 டாலரைக் கவரில் வைத்து அனுப்பினோம்.  ஒரு சில நாட்கள் ஒழுங்காக எல்லாம் நடந்து வந்தது.  மறுபடி அதே ஒழுங்கீனம் தொடர்ந்தது.  போகட்டும் என்று விட்டுவிட்டோம்.  நாங்களே கீழே போய் எடுத்துவர ஆரம்பித்தோம்.

இந்த வருடம் இந்தியாவிலிருந்து திரும்பி வந்ததும் அதே ஒழுங்கீனத்தைத் தொடர்ந்தார்.  சாவிப் பிரச்சினையா அல்லது வேறு ஏதாவது பிரச்சினையா என்று கேட்டுப் பார்த்தோம்.  சரியாகப் பதில் வரவில்லை.  நாங்கள் தகவல் பரிமாறிக்கொள்வதெல்லாம் கடிதம் மூலம்தான்.  அவர் கூற விரும்புவதை ஒரு பேப்பரில் எழுதிப் பத்திரிக்கையோடு சேர்த்துவிடுவார்.  நாங்கள் தபால் மூலம் அவரிடம் பேசுவோம்.  அவர் சமீபத்தில்தான் மெக்ஸிகோவிலிருந்து அமெரிக்காவிற்குக் குடிபெயர்ந்திருந்ததால் சரியாக ஆங்கிலம் பேச வராது.  அதனால் தொலைபேசியில் பேச விரும்ப மாட்டார்.  இந்த வருடமும் கிறிஸ்மஸுக்குக் கொஞ்ச நாட்கள் முன்பு தன்னுடைய விலாசமிட்ட கவரைப் பத்திரிக்கையோடு வைத்திருந்தார்.  இந்த முறை என் கணவர் விடுமுறைக்காக ஊரை விட்டுச் செல்லும் முன் ‘நாங்கள் ஊருக்குப் போகிறோம்.  திரும்பி வந்த பிறகு எப்படி டெலிவரி செய்கிறீர்கள் என்று பார்த்துவிட்டு கிறிஸ்துமஸ் இனாமைக் கொடுக்கிறோம்’ என்று கடிதம் மூலம் அவருக்குத் தெரியப்படுத்தினார்.  நாங்கள் திரும்பி வந்த அன்று பத்திரிக்கையோடு ஒரு சிறு தாளைச் செருகிவைத்திருந்தார்.  அதில் தான் ஏன் அதுவரை சரியாக டெலிவரி செய்யவில்லை என்பதற்குப் பலவித காரணங்களைச் சொல்லியிருந்தார்.  அவற்றில் பல அப்பட்டமான பொய்கள்.  அதைப் பார்த்து எனக்கு ஆத்திரப்படுவதா அல்லது அழுவதா என்று தெரியவில்லை.  இப்படிப் பொய்கள் சொல்லுகிறாரே என்று ஆத்திரம்.  25 டாலர்களைப் பெறுவதற்கு இத்தனை பொய்கள் சொல்ல வேண்டுமா என்று அழுகை மற்றொரு புறம்.  பணத்திற்கு இத்தனை சக்தியா?  இனி எப்படி டெலிவரி செய்கிறார் என்பதைப் பார்க்கக்கூட விரும்பாமல் அன்றே வழக்கமாகக் கொடுக்கும் 25 டாலரை அனுப்பிவிடும்படி கணவரிடம் கூறினேன்.  அவரும் அப்படியே செய்துவிட்டார்.

இன்னும் வரும் வருடங்களிலும் அவர் எப்படி டெலிவரி செய்தாலும் அவருக்குரிய 25 டாலர் பணத்தைக் கொடுத்துவிடுவது என்று முடிவு செய்தோம்.

.

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *