மார்கழி மணாளன் 19
திருத்தேற்றியம்பலம் – அருள்மிகு செங்கண்மால் இரங்கநாதப் பெருமாள்
ஆதாரம் நீயேயென்று அமரர்கள் நாடிடவே
பாதாளம் வரைசென்ற வாராக வடிவே
சேதாரம் ஏதுமின்றி புவிகாத்த புனிதா
பூபாரம் தூக்கிய புண்ணியனே பூவராகா!
செந்தணல் சிந்தையுடன் சினம்கொண்டே போரிட்டு
செங்குருதி விழியேறச் சிவந்த செங்கண்மாலனே !
செங்கமலச் செல்வியுந்தன் சீரான தாள்பிடிக்க
சிங்காரப் பாம்பணையில் சினம்தீரச் சாய்ந்தவனே!
அலைபாயும் பாற்கடலில் அமுதாக நீயிருக்க
நிலையான உறக்கம் உனக்கேது நித்தியனே
சிலையாகக் கண்மூடிப் படுத்தாலும் கண்ணா
கலையாகக் காலங்கள் கண்களில் உருளாதோ ?
மண்ணுறங்கும் உயிரெல்லாம் மனதினிலே நிறுத்தி
கண்ணுறங்கும் வேளையிலும் காசினியைக் காப்பவனே
உள்ளுறக்கம் ஏதுமின்றி உலையான நெஞ்சங்களை
உன்னுறக்கம் நீக்கியே ஓடிவந்தே காத்திடுவாய் !
அரங்கங்கள் உனக்கென்று எங்கென்று அறியாமல்
உறங்காமல் ஊரெல்லாம் உலகெல்லாம் சென்றேன்
அலங்காரத் திருக்கோயில்கள் ஆயிரம் இருந்தும்
அமைதியாய் நெஞ்சத்தில் நீயிருக்கக் கண்டேன்
திருமேனி வண்ணங்கள் யாதென்று அறியாதார்
கருமேனி உனக்கென்று கனவினிலும் சொல்லிடுவார்
ஒருமேனி உள்ளடங்கா உலகெல்லாம் உனதன்றோ
பொன்மேனிச் செம்மலே! பூவுள்ளம் மலர்ந்திடுவாய் !