மார்கழி மணாளன் 20
திருமணிக்கூடம் – அருள்மிகு வரதராசப் பெருமாள்
நெருப்பாக இருந்தவள் நெருப்பினிலே நின்றவுடன்
நெருப்பான நெஞ்சினிலே கருப்பான உணர்வுகளுடன்
நெருப்பாகி ஆடினான் துடிப்பாகத் தாண்டவனே
நெருப்பாக எரிந்ததுவே மூவுலகும் முன்னாலே !
சடையனின் சிகையெல்லாம் சீறியே மண்தொடவே
படையென எழுந்தனரே பதினோரு உருத்திரரே
விளையாட நினைத்தானோ விதிமுடிக்க வந்தானோ
விடையமர்ந்த வள்ளலே வெகுண்டதுவே சரிதானோ?
தகிக்கின்ற நெருப்புக்குத் தாளமிடும் ஒலிகள்
தக்கத்திமி தாவென்று தாவிவிடும் பாதங்கள்
திக்கெட்டும் ஒலிக்கின்ற உடுக்கையின் அச்சத்திலே
தஞ்சமென்றே தாளினிலே அமர்ந்தனரே அமரர்கள் !
வாராது நிற்போருக்கும் கேளாமல் கொடுப்பவனே
வந்தோரின் மனமறிந்து வளம்படைக்கும் வரதப்பா
வயதில்லா தேவர்களும் துயர்தீர்க்க வேண்டியதும்
வண்ணங்கள் பதினொன்றில் வடிவெடுத்து நின்றாயே !
வஞ்சியினை இழந்தவனும் காஞ்சியிலே இருந்தவனை
நெஞ்சினிலே வைத்தவுடன் நிறைவுடனே அமைதியுற்றான்
தஞ்சமென்று வந்தவர்க்குத் தாமோதரன் துணையிருக்க
வஞ்சமின்றி அருள்மழையும் வானிருந்து பொழுந்திடுமே !
நிலமகளும் அலைமகளும் அருகினிலே துணையிருக்க
நிலத்தோடு வானாளும் வரதப்பா வேண்டுகின்றேன்
நிஜத்தோடு போராடும் நிலையில்லா வாழ்வினிலே
நிஜமொன்று நீயேயென்று மனமறிய அருள்வாயோ ?