அமெரிக்க ஜனநாயகம்
நாகேஸ்வரி அண்ணாமலை
2016 நவம்பரில் அமெரிக்கத் தேர்தல்கள் முடிந்து அமெரிக்கப் பாராளுமன்றத்தின் செனட்டிற்கும் பிரதிநிதிகள் சபைக்கும் புதிதாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட அங்கத்தினர்கள் 2017 ஜனவரி மூன்றாம் தேதி பதவிப் பிரமாணம் எடுத்துக்கொண்டார்கள். புதிய ஜனாதிபதியாகத் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கும் டொனால்ட் ட்ரம்ப் ஜனவரி இருபதாம் தேதி பதவிப் பிரமாணம் எடுத்துக்கொள்வார். ட்ரம்ப் குடியரசுக் கட்சியைச் சேர்ந்தவர்; புதிய செனட்டிலும் பிரதிநிதிகள் சபையிலும் குடியரசுக் கட்சியினரே பெரும்பான்மை வகிக்கின்றனர். இதனால் தங்களுடைய கொள்கைகளுக்குத் தக்கவாறு சட்டங்களை ஏற்றவும் பழைய சட்டங்களைத் திருத்தவும் முடியும் என்று குடியரசுக் கட்சியினர் நினைக்கின்றனர். அவர்கள் உடனடியாகத் திருத்த நினைப்பது ஒபாமாவின் மருத்துவக் காப்பீட்டுத் திட்டம். பதவிக்கு வந்த முதல் நாளன்றே இந்தச் சட்டத்தை முழுவதுமாக விலக்கிவிடுவதாக ட்ரம்ப் தன்னுடைய தேர்தல் பிரச்சாரத்தில் சூளுரைத்தார். இந்தச் சட்டத்தால் இருபது லட்சம் அமெரிக்கர்களுக்கு மருத்துவக் காப்பீடு கிடைத்திருக்கிறது, அவர்களுக்கு என்ன மாற்று ஏற்பாடு செய்யப் போகிறார் என்ற விபரம் எதையும் சொல்லவில்லை. ஒபாமா கொண்டுவந்த எல்லாச் சட்டங்களையும் நிராகரிப்பதுதான் குடியரசுக் கட்சியின் பிரதான நோக்கமாக இருக்கிறது. இப்போது இரண்டு அவைகளிலும் குடியரசுக் கட்சிக்கு பெரும்பான்மை இருப்பதாலும் ஜனாதிபதியே குடியரசுக் கட்சியைச் சேர்ந்தவர் என்பதாலும் அவர்களுடைய இந்த நோக்கம் எளிதாக நிறைவேறலாம்.
புதிதாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட ஜனாதிபதி அவருடைய அமைச்சரவைக்குத் தேர்ந்தெடுப்பவர்களை செனட் உறுப்பினர்கள் ஆறு பேர் அடங்கிய கமிட்டி – இதை செனட் ஒழுக்க நெறி கமிட்டி என்று அழைக்கிறார்கள் (Senate Ethics Committee) – அவர்களிடம் பல கேள்விகள் கேட்டு – அவர்களுடைய சொந்த வாழ்க்கை நெறிமுறைகள் பற்றியும் பல கொள்கைகளில் அவர்களின் நிலைப்பாடு பற்றியும் – அவர்களை எடைபோடுவார்கள். அதன் பிறகு செனட்டின் ஓட்டெடுப்பிற்கு அவர்களுடைய பெயர்களைப் பரிந்துரை செய்வார்கள். செனட் உறுப்பினர்களில் பெரும்பான்மையினர் அவர்களைத் தேர்ந்தெடுத்தால் அவர்கள் ஜனாதிபதியின் அமைச்சரவையில் அங்கம் வகிப்பார்கள். நம் நாட்டில்போல் நாட்டின் பிரதம மந்திரியோ மாநில முதல் அமைச்சர்களோ தங்கள் இஷ்டத்திற்கு தங்கள் மந்திரி சபை சகாக்களைத் தேர்ந்தெடுக்க முடியாது. அமெரிக்காவிலும் ஜனாதிபதியே தேர்ந்தெடுத்தாலும் செனட்டின் பெரும்பான்மையோர் அனுமதி இல்லாமல் அவர்களைத் தன் அமைச்சரவையில் சேர்த்துக்கொள்ள முடியாது. நம் நாட்டிலும் இப்படி இருந்தால் எவ்வளவோ ஊழல்கள் களையப்படுமே.
ஜனாதிபதியாகத் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கும் ட்ரம்ப் தன் அமைச்சரவைக்குப் பெரிய பணக்காரர்களைத் தேர்ந்தெடுத்திருக்கிறார். இவர்களில் பலருக்கு அரசில் அங்கம் வகிக்கும்போது அவர்களுடைய தொழில்களின் நலமும் அரசின் நலமும் முரணும் அளவுக்கு நிறையத் தொழில்கள் உள்ளன. (ட்ரம்ப்பிற்கே நிறையத் தொழில்கள் இருப்பதால் அந்த மாதிரி நடக்க நிறைய வாய்ப்புகள் இருக்கின்றன. ஜனாதிபதி மட்டும் தன்னுடைய வணிக நிறுவனங்களை விட்டுவிடச் சட்டத்தின் கட்டாயம் இல்லையாம். ஆனாலும் இது மரபாக இருந்து வருகிறது. அவற்றை நான் விடத் தேவை இல்லை சொல்லிக்கொண்டிருந்தாலும், பலர் எதிர்த்ததால் அவற்றையெல்லாம் ஒரு ட்ரஸ்டில் வைக்கப் போவதாகக் கூறிக்கொண்டிருக்கிறார்.) ட்ரம்ப்பால் அவருடைய அமைச்சரவைச் சகாக்களாகத் தேர்ந்தெடுக்கப்பட்டிருப்பவர்களில் பலர் பல தொழில்கள் செய்துகொண்டிருப்பதால் அவர்களுடைய தொழில்களில் அவர்கள் செய்யும் முடிவுகள் அரசின் நன்மைகளைப் பாதிக்காமல் இருக்க வேண்டும் என்பதற்காக ஒரு பெரிய பாரத்தில் அவர்கள் தங்களைப் பற்றிய விபரங்களை நிரப்பிக் கொடுக்க வேண்டும். தாங்கள் செய்யும் தொழில்கள் பற்றிக் குறிப்பாக அந்த பாரத்தில் குறிப்பிட வேண்டும். தேவையென்றால் தங்கள் தொழில்களை விட்டுவிடவேண்டும். மூன்று பேர்தான் அந்த பாரத்தை முழுமையாக நிரப்பிக் கொடுத்திருக்கிறார்கள். மற்றவர்கள் அந்த பாரத்தை அரைகுறையாக நிரப்பிக் கொடுத்திருக்கிறார்கள். எப்படியாவது செனட் ஒழுக்க நெறி கமிட்டி தங்களைப் பற்றிய முழுவிபரங்களையும் தெரிந்துகொள்ளும் முன் பதவிகளைப் பெற்றுவிட வேண்டும் என்று நினைக்கிறார்கள்.
இது ஒரு புறம் இருக்க, புதிதாகத் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கும் பிரதிநிதிகள் சபை அங்கத்தினர்கள் பதவிப் பிரமாணம் எடுத்துக்கொள்வதற்கு முந்தைய நாளே ரகசியமாக கூட்டம் கூட்டி ஒரு தீர்மானம் கொண்டுவந்தார்கள். இந்த சபையிலும் உறுப்பினர்களின் ஒழுக்க நெறிகளைக் கண்காணிக்க ஒரு குழு (House Ethics Committee) இருக்கிறது. 2008-இல் இது முதன்முதலாக நிறுவப்பட்டது. ஊழல் புரியும் பிரதிநிதிகள் சபையின் உறுப்பினர்களின் சட்டத்தை மீறும் குற்றங்கள் இந்தக் குழுவின் பார்வைக்குக் கொண்டுவரப்பட்டால் அந்தக் குற்றங்களை விசாரிக்கும்படி ஒழுக்க நெறிகள் அலுவலகத்தைக் (Office of the Congressional Ethics) இந்தக் குழு கேட்டுக்கொள்ளும். இந்த ஒழுக்க நெறிகள் அலுவலகம் அந்த உறுப்பினர்கள் பற்றி விசாரித்து பிரதிநிதிகள் சபைக்கு அறிக்கை சமர்ப்பிக்கும். உறுப்பினர்கள் குற்றம் புரிந்ததாக ஒழுக்க நெறிகளின் அலுவலகம் தீர்மானித்திருந்தால் ஒழுக்க நெறிகளைக் கண்காணிக்கும் குழு அந்த உறுப்பினர்களுக்குத் தண்டனை வழங்கும். பிரதிநிதிகள் சபை உறுப்பினர்கள் மூன்று பேர் இம்மாதிரித் தண்டிக்கப்பட்டுச் சிறைக்குச் சென்றிருக்கிறார்கள். அவர்கள் இழைத்த தவறு என்ன தெரியுமா? அப்படி ஒன்றும் நம் நாட்டு அரசியல்வாதிகள் செய்ததுபோல் ‘மலைமுழுங்கிக் குற்றங்கள்’ இல்லை. வெளிநாட்டிற்குப் போனபோது அங்கு விலையுயர்ந்த பரிசுப் பொருட்களை அந்த நாட்டின் அரசிடமிருந்து பெற்றார்களாம்.
தங்களுடைய தவறுகளைக் கண்டுபிடித்துப் பிரநிதிகள் சபை தண்டனை வழங்குவது இந்த அரசியல்வாதிகளுக்குப் பிடிக்கவில்லை. மேலும் சில சமயங்களில் தங்கள் மீது தவறாக வழக்குகள் போடப்படுவதாகவும் அதை நிரூபிப்பதற்கு தாங்கள் அதிகப் பணம் செலவழிக்க வேண்டியிருப்பதாகவும் பிரதிநிதி சபை உறுப்பினர்கள் அலுத்துக்கொள்கிறார்கள். அதனால் இரண்டாம் தேதி இரவோடு இரவாகக் கூடி ஒழுக்க நெறிகளைக் கண்காணிக்கும் குழுவின் அதிகாரத்தைக் குறைக்க வேண்டும் என்று தீர்மானம் போட்டார்கள். அதன் பிறகு என்ன நடந்தது என்று நினைக்கிறீர்கள். மறு நாள் காலையில் அவர்கள் தங்கள் அலுவலகத்திற்கு வந்தபோது பொதுமக்களிடமிருந்து அத்தனை மின்னஞ்சல்கள் அவர்களுக்கு வந்திருந்தனவாம். கூகுளின் வரலாற்றிலேயே அதிகபட்ச அளவில் ‘பிரதிநிதி சபையின் என்னுடைய பிரதிநிதி யார்?’ என்று கேட்டு அத்தனை தேடல்கள் (searches) வந்திருந்தனவாம்! தங்களுடைய பிரதிநிதி யார் என்று தெரியாமல்தான் ஓட்டுப்போட்டார்களா என்று கேட்கிறீர்களா? தீவிர குடியசுக் கட்சி ஆதரவாளர் என்றால் பெயரைக் கூடப் பார்க்காமல் அந்தக் கட்சியின் சின்னத்திற்குப் பக்கத்தில் தன் ஓட்டைப் பதிவு செய்துவிடுவார். அதே மாதிரிதான் ஜனநாயகக் கட்சி ஆதரவாளரும். சில சமயங்களில் பிரதிநிகளுடைய தொலைபேசி எண்ணை, மின்னஞ்சல் முகவரியைக் கண்டறியவும் இப்படிச் செய்திருக்கலாம். இப்படித் தங்கள் பிரதிநிதிகளைத் தொலைபேசியில் அழைத்தவர்கள், மின்னஞ்சல் அனுப்பியவர்கள் ஒழுக்க நெறிகளைக் கண்காணிக்கும் குழுவின் அதிகாரத்தைக் குறைக்க வேண்டும் என்று அவர்கள் போட்ட தீர்மானத்தை உடனடியாக வாபஸ் வாங்க வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்தனராம். இப்படி நிறையப் பேரிடமிருந்து வேண்டுகோள் வந்ததால் பயந்துபோய் தங்கள் தீர்மானத்தை உடனேயே வாபஸ் வாங்கிவிட்டார்களாம். அது மட்டுமல்ல, செனட் அங்கத்தினர்களும் அவசர அவசரமாக ஆரம்பித்த மந்திரிசபைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டவர்களை விசாரிக்கும் படலத்தை அடுத்த வாரத்திற்குத் தள்ளிப் போட்டிருக்கிறார்களாம்.
ஆஹா, மக்கள் குரலைக் கேட்கும் இதுவல்லவோ ஜனநாயகம்! காலில் விழும் கலாச்சாரத்திலிருந்து தமிழ்நாடு எப்போது ஜனநாயகம் பக்கம் திரும்பப் போகிறது?