Blog

  • இங்கிலாந்திலிருந்து ஒரு மடல் . . . ( 227 )

    அன்பினியவர்களே!

    அன்பான வணக்கங்கள்.

    இவ்வுலகமெனும் நாடகமேடையில் ஒருவார காலம் என்பது நிச்சயமாக வரலாறு எனும் நாடகத்தின் காட்சிகளை மிகவும் அதீத வகையினில் மாற்றி வைத்து விடக்கூடிய வல்லமை படைத்தது. ஜனநாயகம் என்பது மிகவும் வியக்க வைக்கத் தக்கது. உலகம் மாபெரும் மனிதக் கொடூரத்தை நிகழ்த்திய ஹிட்லரை முன்னணிக்குக் கொண்டு வந்தது ஜனநாயகம் எனும் காட்சியின் அடிப்படையில் என்பது சரித்திர உண்மை. மக்களின் அடிப்படை மன உணர்வின் ஓட்டத்தை நடுநிலைமை வகிக்கக்கூடிய அரசியல் கட்சிகள் புரிந்து கொள்ளத் தவறும் வேளையில், அவர்களின் எண்ணத்தின் பிரதிபலிப்பை உள்வாங்கிக் கொள்ளத்தவறும் வேளையில் மக்களின் அடிப்படை உரிமையான ஜனநாயகம் எனும் அரசியல் கொள்கையின் நடைமுறை முடிவுகள் உலக வழக்கங்களை முறியடிக்கும் வகையில் அமைவதைத் தடுக்க முடியாது. உலகின் பொருளாதார முன்னேற்றமாக உலகமயமாக்கல் அல்லது Globalization எனும் பொறிமுறையைப் பொருளாதாரத்தில் முன்னேற்றமடைந்த நாடுகள் கடைப்பிடிக்கத் தொடங்கியதன் காரணம் முதலாளித்துவப் பொருளாதாரக் கொள்கையின் அடிப்படையை வலுவாக்குதல் என்ற போதிலும் அதன் மூலம் பொருளாதாரத்தில் வளர்ச்சியடையாத நாடுகள் முன்னேறக்கூடிய சந்தர்ப்பம் உள்ளது எனும் காரணமே முதன்மைப்படுத்தப்பட்டது.

    மூன்றாவது உலக நாடுகள் என வகைப்படுத்தப்பட்ட நாடுகளின் பொருளாதாரத்தை முன்னேற்றமடையச் செய்கிறோம் எனும் போர்வையில் பொருளாதாரத்தில் முன்னணி நாடுகளான அமேரிக்கா, இங்கிலாந்து, ஜேர்மனி போன்ற நாடுகளின் பெரிய கம்பெனிகள் தமது செலவுகளைக் குறைத்து இலாபத்தைப் பெருக்கிக்கொள்வதற்காகப் பிற்தள நிர்வாக வேலைகளை அந்நாடுகளிலிருந்து வளர்ச்சியடையும் நாடுகள் என வகைப்படுத்தப்பட்ட நாடுகளுக்கு அப்புறப்படுத்தின. அது மட்டுமன்றி வெளிநாட்டுக் குடியேற்றத்தைக் கட்டுப்படுத்தத் தவறியதன் காரணமாகவும் அந்தந்த நாட்டு மக்களின் வேலைவாய்ப்புக்கள் குன்றியதோடு அடிப்படை வாழ்க்கைத்தரம் குன்றியது. இவைகளோடு சேர்ந்து 2008ஆம் ஆண்டு உலக வங்கிகளில் ஏற்பட்ட சரிவினால் அகில உலகமே ஒரு பொருளாதார அதிர்வுக்குள்ளாகியது. விளைவு மக்களின் வாழ்வாதாரங்கள் மேலும் பாதிக்கப்பட்டது. இவைகளுக்கெல்லாம் சிகரம் வைத்தாற்போல பாரிய கம்பெனிகளின் தலைமைத்துவத்திலிருப்பவர்களின் ஊதியம் 200, 300% என அதிகரித்தது. இவையெல்லாம் வாழ்க்கையின் மத்தியதர வர்க்கத்தினர் என வருணிக்கப்பட்ட மக்களின் வாழ்வினை மிகவும் பாதித்தது. சந்தர்ப்பவசமாக இந்த மத்தியதர உழைக்கும் வகுப்பினைச் சேர்ந்த மக்கள் அந்தந்த நாடுகளின் இனத்தினைச் சேர்ந்தவர்களாக இருந்ததன் காரணமாக ஒருவிதமான இனவாதக் கருத்துக்களும் இவர்களின் மனங்களில் மேலோங்கத் தலைப்பட்டது.

    விளைவு!

    இந்தவாரம் உலக வரலாறு எனும் புத்தகத்தில் ஒரு புதிய அத்தியாயத்தை அன்றி ஒரு புதிய திருப்பத்தைத் தோற்றுவிக்கப் போகிறது. ஆமாம் இந்தக் கட்டுரை பிரசுரமாகும் 20ஆம் திகதி வெள்ளிக்கிழமை உலக நாடுகளில் அதி முக்கியம் பெற்ற ஒரு நாட்டுத் தலைவர் பதவியைத் தனதாக்கிக் கொள்ளப் போகிறார் ஒரு மனிதர். அமெரிக்க ஜனாதிபதித் தேர்தலில் வெற்றியீட்டிய திரு. டொனால்ட் ட்ரம்ப், கடைசிவரை வெற்றிபெற முடியாதவர் என பல முன்னணிச் செய்தி ஊடகங்களினாலும், பல முன்னணி அரசியல் விமர்சகர்களினாலும் வருணிக்கப்பட்ட டொனால்ட் ட்ரம்ப் அமெரிக்க ஜானாதிபதியாக முடிசூட்டிக் கொள்ளப்போகிறார் எனும் சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்வை அடக்கிக் கொண்டுள்ள பெருமையை இவ்வாரம் பெற்றுக்கொள்கிறது. அது அமெரிக்க நாட்டின் சாபம் என்று ஒரு சாராரும், இல்லை இது உலகில் பல நன்மைகளை விளைவிக்கப் போகிறது என்று ஒரு சாராரும் இடைவிடாது தர்க்கித்துக் கொண்டிருக்கிறார்கள். யார் விரும்பினாலும்,விரும்பாவிட்டாலும் திரு.டொனால்ட் ட்ரம்ப் உலகில் அதிக செல்வாக்குள்ள நாட்டின் அதிபராகப் போகிறார் என்பதே மறுக்கப்பட முடியாத உண்மை.

    இதுவரைத் தனது வாழ்வில் எந்தவொரு அரசியல் பதவியையும் வகிக்காத ஒருவர், மாறி, மாறி வித்தியாசமான அரசியல் கட்சிகளுக்கு நிதி உதவி அளித்ததைத் தவிர வேறு எந்தவிதமான அரசியல் பின்னணியையோ அன்றி அரசியல் அறிவையோ கொண்டிருக்காதவர் என்பது போன்ற தகைமைகளுக்குப் பெயர் போனவர் டொனால்ட் ட்ரம்ப். இன்றைய சூழலில் அவரின் நடவடிக்கைகளை அவதானித்து, அவரின் செயற்பாடுகள் அமேரிக்காவின் 45ஆவது அதிபரை எப்படிப்பட்டவராக சரித்திரப் புத்தகத்தில் எழுதப்போகிறது என்பதைப் புரிந்து கொள்வதே எம்முன்னால், எம்மால் ஆற்றக்கூடிய ஒரேயொரு செயல்.அமெரிக்க நாட்டின் உயர்வும், தாழ்வும் அமெரிக்க நாட்டை மட்டுமே பாதிக்கப் போகிறது நமக்கென்ன எனும் கொண்டிருப்போரை எண்ணிப் பரிதாபப்படவே முடிகிறது. விரும்பியோ, விரும்பாமலோ அமெரிக்க நாட்டின் பொருளாதார நிலையின் அடிப்படையிலே உலகநாடுகளின் பொருளாதார முன்னேற்றமும் தங்கியுள்ளது. உலகத்தின் சமாதனம், அமைதி என்பனவற்றின் உறுதி அமெரிக்க நாட்டின் வெளிநாட்டுக் கொள்கையின் அடிப்படையில் தங்கியுள்ளது என்பது உண்மை.

    உலகம் இன்று எதிர்நோக்கும் பிரச்சனை ஒரு புதுவிதமான திசையை நோக்கிப் பயணிக்கிறது. உலகமயமாக்குதல் எனும் கொள்கை தமது நலன்களுக்கு எதிராகச் செல்கிறது என்று எண்ணம் கொண்ட மக்களைக் கொண்ட நாடுகள் தமது எல்லைகளைச் சுருக்கிக் கொள்ளத் தலைப்படுகின்றன. அதே போலக் கிழக்காசிய நாடுகளில் பொருளாதார வளர்ச்சியில் திளைத்திருக்கும் நாடுகளின் மனோநிலைகள் வித்தியாசமான ஒரு எண்ணத்தில் திளைத்திருக்கின்றன. இவை இரண்டுக்குமிடையிலான வேறுபாட்டை வைத்துத்தான் பலநாடுகளின் அரசியல் வியாபாரம் நடந்து கொண்டிருக்கிறது. மேலைநாடுகளோ தமது பொருளாதாரக் கொள்கையின் வீழ்ச்சியை விளக்குவதற்கு வெளிநாட்டவரின் குடியேற்றம் அதாவது Immigration என்பதை முக்கியக் காரணியாகக் காட்டி தம்மைக் காப்பாற்றிக் கொள்ளும் நடவடிக்கையில் ஈடுபட்டிருக்கின்றன. வெளிநாட்டிலிருந்து தம் நாட்டில் குடியேறியவர்கள் தமது கலாசாரத்தினுள் தம்மை மூழ்கடித்துத் தமது சொந்த நாட்டிலேயே தமது அடையாளத்தை தொலைக்கப் பண்ணி விடப்போகிறார்கள் எனும் பீதியில் இத்தகைய வாதங்களுக்கு அந்தந்த நாட்டு மக்கள் விலை போகிறார்கள். இதற்கான முற்று முழுதாக அவர்களைக் குறைகூறி விட முடியாது. வெளிநாட்டிலிருந்து புகலிடம் தேடி இந்நாடுகளில் எமது வாழ்வினை அமைத்துக் கொண்டவர்கள் முழுமனதுடன் இந்நாட்டினை எமது நாடாக கருதும் மனப்பான்மையைக் கொண்டிருக்கிறோமா என்றால் “இல்லை” என்பதுவே உண்மையான, நேர்மையான விடையாகும்.

    இதற்கு என்ன காரணம்? அடுத்தவரின் அறிவை, அவர்களின் தெளிந்த உணர்வை எமது அறிவையும், தெளிந்த உணர்வையும் விட குறைத்து மதிப்பிடுவதே காரணமாகும். அடுத்தவரைவிட நாம் அனைத்திலும் மேலோங்கியவர்கள் எனும் காரணத்தினால் அவர்களை விட அனைத்திலும் நாம் மேலோங்கி வாழ்ந்து விடலாம் எனும் ஒரு குறுகிய மனப்பான்மையே இதற்குக் காரணமாகும். இந்த உலகம் அனைவர்க்கும் பொதுவானது. நாம் அடுத்தவர்களின் உணர்வை மதித்து வாழ வேண்டும் எனும் வாதங்களின் உண்மையான தாத்பரியத்தை உணராமல் எம்மைப் பற்றி நாமே நியாயமற்ற வகையில் பெருமை கொள்வதே அடிப்படைக் காரணமாகிறது. எத்தனையோ ஆயிரம் மைல்களுக்கப்பால் இருந்து வாழ வழி தேடி வந்திருக்கும் எங்களுக்கு வாழ வழி சமைத்துக் கொடுத்த இந்நாடுகளின் சொந்தக் கலாசாரத்திற்கு மதிப்பளித்து வாழவேண்டும் என்பதை மறந்து போய்விடுகிறோம். நாம் பிறந்த எமது தாய்நாடுகளில் உரிமைகள் மறுக்கப்பட்ட நிலையில் அந்நாடுகளில் போராடினால் உயிரையே இழந்து விடக்கூடிய நிலையில் எமக்கு அடைக்கலம் தந்த நாடுகளில் அவர்கள் அளிக்கும் சுதந்திரத்தை அவற்றின் எல்லைக்கே கொண்டு சென்றுவிடுவதில் நாம் வல்லவர்களாயிருக்கிறோம். அதற்காக நாம் எமது மொழியையும், கலாசாரத்தையும் இழந்து அடையாளமின்றிப் போக வேண்டும் என்பதல்ல எனது வாதம். எமக்கு அளிக்கப்பட்ட சுதந்திரத்தை எமது எல்லைகளுக்குள் அடுத்தவர் மீது திணிக்காத வகையில் வாழ்வதே சரியான வழியாகும் என்பது எனது கருத்து.

    அன்பினியவர்களே இதையெல்லாம் இம்மடலின் மூலம் நான் உங்களுடன் பகிர்ந்து கொள்வது ஏதோ, எதையோ சாதித்து விடப் போகிறோம் என்பதனால் அல்ல. இன்றைய உலகின் போக்கு மிகவும் கவலையளிக்கிறது. உலக அரசியல் நிகழ்வுகள் ஒரு எதிர்மறையான தாக்கத்தை அளிக்கின்றன. இத்தகைய நிலையைத் தோற்றுவிப்பதற்கு எது காரணம் அன்றி நாம் எந்த வகையில் காரணமாக இருந்திருக்கிறோம் எனும் கேள்விக்கு இந்தச் சாமான்ய மனுஷனின் ஒரு அலசலே!

    மீண்டும் அடுத்த மடலில்…

    அன்புடன்
    சக்தி சக்திதாசன்

    Share
  • சல்லிக்கட்டு பிரச்சனையின் உச்சநிலை!

    பவள சங்கரி

    தலையங்கம்

    மத்திய அரசு சல்லிக்கட்டு பிரச்சனையை மாநில அரசின் பக்கம் திருப்பிவிட்டது.

    உச்சநீதி மன்றம் சென்னை உயர்நீதி மன்றம் பக்கம் பிரச்சனையை திருப்பிவிட்டது.

    இனி தமிழக அரசும் சல்லிக்கட்டு ஆதரவாளர்களும் என்ன செய்யப்போகிறார்கள்?

    போராடும் மாணவர்களுக்கு உணவும் குடிநீரும் மின்சாரமும் வழங்கப்படவேண்டியது மாநில அரசின் தலையாய கடமை. மின்சாரத்தை தடை செய்து சட்டப்பிரச்சனைக்கு மாநில அரசு உள்ளாகப்போகிறதா?

    பிரச்சனை மாநில அரசிற்கு எதிராகத் திரும்பும் வாய்ப்புகள் மிக அதிகம் என்பதே இன்றைய நிலை.

    தமிழர் பண்பாட்டிற்கு ஆதரவாக மாநில அரசு செயல்பட்டு சட்டசபையைக்கூட்டி சட்டத் திருத்தம் அல்லது அவசரச் சட்டம் கொண்டுவருமா?

    மாநில அரசை ஆதரிப்பதாக உறுதியளிக்கும் மத்திய அரசு மாநில அரசு சட்டம் இயற்றினால் மத்திய அரசு அச்சட்டத்தை ஏற்று குடியரசுத் தலைவர் கையொப்பமிட வழிவகுக்குமா?

    சல்லிக்கட்டு போராட்டம் மாணவர்கள்/இளைஞர்கள் போராட்டம் என்ற நிலை மாறி இன்று ஒட்டுமொத்த தமிழர் பிரச்சனையாக உருவெடுத்துள்ளது. வணிகர்கள் தொழிற்சஙகங்கள், திரையரங்குகள், ஆட்டோ, டாக்சி ஓட்டுநர்கள், பேருந்து ஓட்டுநர்கள், நடிகர்கள், தயாரிப்பாளர் சங்கத்தினர் என அனைத்து பொது மக்களும் ஒன்றாக இணைந்து போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து கடையடைப்பு, உண்ணாவிரதம் என அனைத்துத் தமிழர்களும் ஒன்றுகூடி தமிழன் ஓர் இனம் என போராட முன்வந்துள்ளனர்.

    அரசு என்ன முடிவு எடுக்கப்போகிறது?

    Share
  • கடைசியில்—மிஞ்சுவது

    சரஸ்வதி ராசேந்திரன்

     

    அண்டத்தில் பிறந்தவரெல்லாம்
    பிண்டத்தில் ஒரு நாள் அடக்கம்
    கண்டபடி பொருள் சேர்க்க இதில்
    சண்டை போட்டு அலைவதேன் ?

    பொருளில்லாருக்கு இவ்வுலகம் இல்லை
    பொருள் பொதிந்த வார்த்தைதான் அந்த
    பொருள் அளவோடு இருந்தாலே
    பொருந்தாதா வாழ்க்கை பயணம் ?

    கோடி கோடியாய் பணத்தை சேர்க்க
    ஓடி ஓடி ஓய்வில்லாமல் தேடிஅலைந்து
    கூடை கூடையாய் குவித்து வைத்தாலும்
    பாடையிலே போகும் போது கூடவா வரும்?

    நிறைந்த மனதை உடையவனே
    நிம்மதியாக வாழ்கிறான்
    செல்வத்தின் நிலையாமையை அறிந்தவன்
    செல்வத்தைத்தேடி பேயாய் அலைவதில்லை

    கூடுகின்ற நட்பு கூட்டமும்
    நாடுகின்ற உறவு கூட்டமும்
    ஆடை கழற்றுவது போன்று
    ஜாடையாக ஒதுங்கிடுவார் செல்வம் போனால்
    யார் யாரையோ வஞ்சித்து பொருள்
    சேர்த்து என்ன பயன் உனக்கு ?
    கடைக்கூட்டு நேரத்தில்
    கடைசியில் மிஞ்சுவது இதுதான்

    விளக்கம் – கடைக்கூட்டு—-அந்திம சமயம்
    ஆதாரம்; ; தமிழ் அகராதி

     

    Share
  • வாழ்த்துகள் வழங்கவேண்டும் !

         [  எம். ஜெயராமசர்மா…. மெல்பேண் …. அவுஸ்திரேலியா ]

     

     

     

    உள்ளத்தில் உவகைவந்தால்

    உன்வாழ்வு உயர்ந்துநிற்கும்

    கள்ளங்கள் நிறைந்துவிட்டால்

    கஷ்டத்தில் அமிழ்ந்துபோவாய்

    நல்லதை நாடிநின்றால்

    நம்மிடம் சொர்க்கமாகும்

    அல்லவை தவிர்த்தால்வாழ்வு

    ஆனந்தம் நிறைந்தேநிற்கும் !

     

    மற்றவர் உன்னைப்பார்த்து

    மனவெறுப் படையாவண்ணம்

    சொற்களை எந்தநாளும்

    சுவைபடப் பேசவேண்டும்

    கற்பன கற்கவேண்டும்

    கவனத்தில் கொள்ளல்வேண்டும்

    அற்பங்கள் அகற்றிநின்று

    அன்பையே பகிர்தல்வேண்டும் !

     

    சிரிப்பினைப் பேணவேண்டும்

    சிறப்பினை நாடவேண்டும்

    பொறுப்புடன் நல்லவற்றை

    போற்றியே நிற்றல்வேண்டும்

    செருக்கினை ஒதுக்கவேண்டும்

    சினமதை ஒழித்தல்வேண்டும்

    அடுத்தவர் மகிழ்ச்சிபார்த்து

    ஆனந்தம் அடைவாயென்றும் !

     

    வாழ்த்துகள் வழங்கவேண்டும்

    மகிழ்ச்சியைப் பெருக்கவேண்டும்

    ஆத்திரம் அடக்கவேண்டும்

    அன்பினை அளிக்கவேண்டும்

    வேற்றுமை தவிர்க்கவேண்டும்

    விருப்பமாய் பழகல்வேண்டும்

    சாற்றிடும் சொற்கள்யாவும்

    சந்தோஷம் தருதல்வேண்டும் !

     

    Share
  • கேசவ் வண்ணம் – கிரேசி எண்ணம்

    kesav

    ”ஸ்ரீவத்ஸ மச்சம் சரீரம் தரித்தவர்,
    ‘’ஆ’’வர்த்த தனத்திற்காய் ஆயர்சேய் -கோவர்த்
    தனகுன்றினைத் தாங்கிய தாமோ தராயென்
    மனக்குன்றை ஏந்தவா மால்’’….கிரேசி மோகன்….!

    Share
  • ஆற்றல்மிகு இயங்கு நகரம்!

    பவள சங்கரி

    உலகில் உள்ள சிறந்த 140 நகரங்களில் முதலாவதாக ஆற்றல்மிகு இயங்கு நிலை நகரங்களில் முதலாவதாக பெங்களூரூ நகரம் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவின் சிலிக்கான் வேலி நகரத்தை மூன்றாவது இடத்திற்குத் தள்ளிவிட்டு முதலாவது இடத்திற்கு வந்துள்ள பெங்களுரூ நகரத்திற்கு வாழ்த்துகள். தொழில் துறை வேலை வாய்ப்பு, ரியல் எஸ்டேட், போன்ற அனைத்துத் துறைகளின் அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது. இப்பட்டியலில் சென்னை 17 வது இடத்திலும், மும்பை, தில்லி 23, 25 வது இடத்திலும் உள்ளன. இந்த 140 நகரங்கள் ஆசிய பசிபிக் நாடுகளில் அமைந்துள்ளதும் குறிப்பிடத்தக்கது. இந்தப் பட்டியலில் சீனாவை இந்தியா பின் தள்ளியுள்ளது.

    Share
  • கேசவ் வண்ணம் – கிரேசி எண்ணம்

    170118 -Dialogues with Arjuna -watermark

    ”ஏந்துகிறார் தாமரையில் ஏக்கமாய் பார்த்தரவர்
    சாந்துநிற செங்கண்மால் சேவகரை, -நீந்துகிறார்
    கேணியில் சாரதியின் கீதைக் குளியலில்:
    நான்நீ விலகநிர்வா ணம்”….கிரேசி மோகன்….!

    Share
  • மனிதரில் எத்தனை நிறங்கள்

    (நாவல் முன்னுரை மற்றும் முதல் நான்கு அத்தியாயங்கள்)

    அன்பு வாசகர்களுக்கு,

    nirangal 2

    வணக்கம்.

    ’மனிதரில் எத்தனை நிறங்கள்’ அச்சுப்பதிப்பில் வரும் எனது ஐந்தாவது நாவல் என்றாலும் நான் எழுதிய வரிசையில் இரண்டாம் நாவல். இந்த நாவலில் வரும் சிவகாமி என்னும் கதாபாத்திரம் அமானுஷ்யனுக்கு முன்பாக வாசகர்களிடம் மிகவும் பிரபலமாகப் பேசப்பட்ட கதாபாத்திரம். இரண்டு வருட காலம் நிலாச்சாரலில் தொடராக வெளி வந்த இந்த நாவலின் வாசகர்களுடன் எனக்கு ஏற்பட்ட அனுபவங்கள் பல.

    ஆரம்பத்தில் இருந்தே மர்ம நாவல் போல் செல்லும் இந்த நாவல் மர்ம அம்சத்தையும் விட அதிகமாக மனிதர்களின் குணாதிசயங்களை அலசுவதாக இருந்தது. மனித குணாதிசயங்களை விட, மர்மத்தைத் தெரிந்து கொள்வதில் ஆர்வம் அதிகமாக இருந்த சில வாசகர்கள் விரைவில் மர்மத்தை அறிந்து கொள்ள அவசரப்படுத்தியதால் கடைசி அத்தியாயங்களை அவசரகதியில் அப்போது எழுதினேன். நாவல் முடிவுக்கு வந்த போது அவசரப்படுத்தி எழுதி விட்டீர்களே என்று பல வாசகர்கள் என்னைக் கோபித்துக் கொண்டார்கள். எங்கள் மனம் கவர்ந்த கதாபாத்திரத்திற்கு என்ன இப்படி ஒரு முடிவைக் கொடுத்து விட்டீர்களே என்று வருத்தப்பட்டவர்கள் பலர். இதற்காக என்னிடம் சண்டை போட்ட வாசகர்களும் உண்டு.

    புத்தம் சரணம் கச்சாமியை அடுத்து ஒரு நாவல் அச்சில் வெளியிடுவது பற்றி என் பதிப்பாளர் திரு யாணன் அவர்களிடம் பேசிக் கொண்டிருந்த போது,  வேறெந்த நாவலையும் எழுத ஆரம்பிக்காத நிலையில், அச்சில் வராத இந்த ’மனிதரில் எத்தனை நிறங்கள்’ நாவல் வாசகர்களிடையே பெற்ற வரவேற்பைப் பற்றியும் முடிவு குறித்து ஏற்பட்ட வருத்தம் பற்றியும் தெரிவித்தேன். உடனே அவர் இந்த நாவலைத் திருத்தி எழுதி வாசகர்கள் விருப்பத்தை நிறைவேற்றி விடுவது தானே என்று கேட்டார்.

    விளைவு உங்கள் கையில் இருக்கும் இந்த நாவல். முன்பு ஒருமுறை எழுதிய நாவலை மறுபடி திருத்தி எழுதிய ஒரே நாவல் இது தான்.

    முன்பே நான் சொன்னது போல் இது சுவாரசியமான மர்ம நாவல் மட்டுமல்ல. பலம்-பலவீனம், அன்பு-வெறுப்பு, சந்தேகம்-நம்பிக்கை போன்ற முரண்பாட்டு அம்சங்களைத் தங்களுக்குள்ளே வைத்திருக்கும் யதார்த்த மனிதர்களைக் கதாபாத்திரங்களைக் கொண்டு பின்னப்பட்ட நாவல்.

     ஒரு வாசகர் எனக்கு எழுதினார். “நான் பல சுயமுன்னேற்ற நூல்களில் கற்றுக் கொண்டதை விட, ஆளுமை நூல்களில் கற்றுக் கொண்டதை விட அதிகமாய் உங்கள் சிவகாமி கதாபாத்திரத்திடமிருந்து கற்றுக் கொண்டேன்”.  அதுவே இந்த நாவலில் கடைசி வரை முரண்பாடுகளின் தொகுப்பு போலத் தோன்றும் அந்தக் கதாபாத்திரத்தின் வெற்றி என்று கருதுகிறேன்.

    மனிதர்களில் எத்தனை நிறங்கள் என்று பார்க்க இந்த நாவல் களத்துக்குள் நுழையுங்கள் என்று உங்களை வரவேற்கிறேன்.

    அன்புடன்

    என்.கணேசன்

    1 

     மறுபடியும் அதே கனவு-                                                                              

    வெளியே இடி மின்னலுடன் பேய் மழை பெய்து கொண்டு இருக்கிறது.. அழைப்பு

    மணியை யாரோ விடாமல் அழுத்திக் கொண்டே இருந்தார்கள்…அந்த மழை

    சத்தத்துடன் சேர்ந்து  கேட்கும் போது அந்த அழைப்பு மணியின் தொடர்ச்சியான

    சத்தம் நாராசமாகக் கேட்கிறது…ஒரு பெண் கலவரத்துடன் யாருடனோ  போன்

    பேச முயன்று கொண்டிருக்கிறாள்….. பிறகு கலவரத்துடன் ரிசீவரைக் கீழே

    வைத்து விட்டு முகத்தைத் தன் புடவைத் தலைப்பால் துடைத்துக் கொள்கிறாள்.

    யாரோ ஓடி வரும் சத்தம் கேட்டது…. இரண்டு பெண்கள் ஒரு அறைக்குள் ஆவேசத்துடன் பேசிக் கொள்ளும் சத்தம் கேட்கிறது… பேச்சைத் தொடர்ந்து  ஒரு பெண்

    அமானுஷ்ய குரலில் சிரிக்கிறாள்.  ஒரு வினோதமான காலடி ஓசை கேட்கிறது… ஒரு பெண்ணின் அலறல் இடிச்சத்தத்தையும் மீறி அந்த பங்களா முழுவதும் எதிரொலிக்கிறது…. துப்பாக்கி வெடிக்கும் சத்தம் கேட்டது… மூடிய அறைக்குள்

    இருந்து கதவிடுக்கின் வழியே இரத்தம் வெளியே வருகிறது… வெளியே ஒரு கார் வந்து நிற்கும் சத்தம் கேட்கிறது….முகமெல்லாம் இரத்தம் வடிய ஒரு பெண்

    அறையிலிருந்து ஓடி வருகிறாள்…. யாரோ ஈனசுரத்தில் “ஆர்த்தி” என்று அழைக்கிறார்கள்……”

    அலறியபடி ஆர்த்தி விழித்துக் கொண்டாள். உடல் எல்லாம் வியர்க்க, இதயம்

    படபடக்க திகிலுடன் படுக்கையில் உட்கார்ந்தாள்.  இந்தக் கனவு அவளுக்கு

    நினைவு தெரிந்த நாளில் இருந்து வருகிறது. முன்பெல்லாம் நான்கைந்து

    மாதங்களுக்கு ஒரு முறை வரும் இந்தக் கனவு இப்போதெல்லாம் மாதம் ஓரிரு முறை வர ஆரம்பித்து விட்டன. இந்தக் கனவின் காட்சிகள் எப்போதும் இதே

    வரிசையில்  வருவதில்லை. ஒவ்வொரு முறையும் முன் பின்னாக மாறி மாறி

    வரும்.  ஆனால் கனவில் காணும் அந்த காட்சிகளில் மாற்றம் இருப்பதில்லை.

    ஒரு பெரிய ஸ்கிரீனில் சினிமா ஸ்லைடுகள் காண்பிக்கப்படுவது போல கோர்வை  இல்லாமல் வேகமாக வந்து போகும் கனவின் காட்சிகள் கலைவது மட்டும்

    ஈனசுரத்தில் ஆர்த்தி என்று யாரோ அழைக்க அலறியபடி அவள் விழித்துக்

    கொள்வதில் தான்.

    அறையின் மின் விளக்கு எரிந்தது. அவளுடைய அலறல் சத்தம் கேட்டு வந்த  தாத்தாவும் பாட்டியும் அவளையே கவலையுடன் பார்த்துக் கொண்டு நின்றார்கள்.

    அவர்கள் என்ன ஆயிற்று என்று அவளைக் கேட்கவில்லை.  வருடக்கணக்கில்

    அவளை வதைத்து வந்த கனவைப் பற்றி அவர்களுக்கு நன்றாகவே தெரியும்.

    சிவந்த நிறம், நீண்ட கூந்தல், அழகான பெரிய கண்கள், கண்களுக்கு ஈடு

    கொடுக்கக்கூடிய அழகு முகம், செதுக்கிய உடற்கட்டு, சராசரிக்கும் மேற்பட்ட

    உயரம் என அழகோவியமாய் இருக்கும் பேத்தியின் இந்த தொடர்

    சித்திரவதையைப் பார்க்க  பாட்டியின் கண்களில் லேசாக கண்ணீர் திரை

    போட்டது.  தாத்தாவின் முகத்தில் இயலாமையுடன் கூடிய துக்கம் குடி கொண்டது. இருபத்தியொரு வயதை அடுத்த வாரம் எட்டப் போகிற அவர்கள் பேத்தியை இந்தக் கனவில் இருந்து காப்பாற்ற அவர்களால் முடியவில்லையே

    என்ற ஆதங்கம் அவர்களிடம் தெரிந்தது. ஆர்த்தி அவர்கள் இருவரையும் பார்த்து

    பலவந்தமாக மெலிதாய் புன்னகையை வரவழைத்தாள்.  “வழக்கமான கனவு தான். நீங்க போய் தூங்குங்க”.

    பாட்டி பார்வதி அவளைப் படுக்க வைத்து போர்வை போர்த்தி அவள் தலைமுடியைக் கோதி விட்டு ஆசுவாசப்படுத்தி விட்டுத் தான் அங்கிருந்து நகர்ந்தாள்.

    தாத்தா நீலகண்டன் பேத்தியைப் பாசத்துடன் பார்த்தபடி ஒரு கணம் நின்று விட்டு மனைவியைப் பின் தொடர்ந்தார். பார்வதி கணவனிடம் மெல்லிய குரலில்

     சொன்னாள்.

    “அவள் கிட்ட இன்னும் எத்தனை நாள் உண்மையை மறைக்கிறது.

    எல்லாத்தையும் சொல்லிடறது நல்லதில்லையா?”  அவர் தற்காலிகமாய்

    செவிடானார்.

    அவர்கள் போன பின்பு ஆர்த்திக்கு உறக்கம் நீண்ட நேரம் வரவில்லை. இந்தக்

    கனவு ஏன் வருகிறது என்று அவளுக்குப் புரியவில்லை. அடிக்கடி வரும் கனவாக இருந்தாலும் கூட ஒவ்வொரு முறையும் அது அவளுக்குள் ஏற்படுத்தும் பாதிப்பு

    ஏனோ சிறிதும் குறைவதில்லை. அவளுக்கு சுமார் பதினைந்து வயது இருக்கும் போது நீலகண்டன் அவளை ஒரு சைக்கியாட்ரிஸ்டிடம் கூட்டிக் கொண்டு

    போனார்.  அந்த டாக்டர் அவளிடம் அரை மணி நேரம் பேசி விட்டுப் பிறகு தனியாக தாத்தாவிடம் அரை மணி நேரம் பேசினார்அவர் என்ன சொன்னார் என்று

    கேட்டதற்கு தாத்தா சரியாகப் பதில் சொல்லவில்லை.

    அதற்குப் பின் தாத்தா அவளுக்கு இந்த விஷயத்தில் சிகிச்சைபார்க்கும்

    முயற்சியே எடுக்கவில்லை. பணம் அதிகமாக செலவாகும் சிகிச்சை ஏதாவது

    அந்த டாக்டர் தாத்தாவிடம் சொல்லி இருக்கலாம்,  ஏழ்மை நிலையில் இருக்கும் தாத்தா இது நம் வசதிக்கேற்றதில்லை  என்று விட்டிருக்கலாம் என்று ஆர்த்தி

    நினைத்தாள். ஆனால் அவளுக்கு தாத்தா மீது வருத்தம் இல்லை.

    பாண்டிச்சேரியில் ஒரு சிறிய ஓட்டு வீட்டில் குடியிருந்து கொண்டு காலையிலும் மாலையிலும் டியூஷன் சொல்லிக் கொடுத்துக் கொண்டு, இடைப்பட்ட நேரத்தில் ஒரு தனியார் நூலகத்தில் வேலை செய்து கொண்டு, வரும் வருமானத்தில் மனைவியையும், பேத்தியையும் காப்பாற்ற வேண்டி உள்ள அவர் நிலைமையை அவள்

    நன்றாகவே அறிவாள். அவர் அவளைப் பட்டப்படிப்பு படிக்க வைத்ததே பெரிய

    விஷயம்……… அவள் அப்படியே உறங்கிப் போனாள்.

     ஆனால் பார்வதியால் உறங்க முடியவில்லை. பேத்தியின் கனவின் பின்னால் இருக்கும் உண்மையை இனியும் தெரிவிக்காமல் இருப்பது முட்டாள்தனம் என்று

    அவள் உள்ளுணர்வு சொன்னது.

    மறுநாள் காலை பார்வதி பேத்தியிடம் ஏதோ சொல்ல வாய் திறப்பதும் பின்

    வாங்குவதுமாக இருந்தாள். ஆர்த்தி “என்ன பாட்டி?” என்று கேட்கும் போது

    நீலகண்டன் அவர்கள் அருகே வர, அவர் போகட்டும் பிறகு சொல்கிறேன் என்று

    அவர் அறியாமல் சைகையால் சொன்னாள்.  நீலகண்டன் காய்கறி வாங்கி வர

    வெளியே போகும் வரை காத்திருந்து விட்டுப் பிறகு பேத்தியைத் தன் அருகே

    உட்கார வைத்து ஏதோ சொல்ல பார்வதி வாய் திறந்தாள். மறுபடியும்

    வார்த்தைகள் வெளிவரவில்லை.

        “என்ன பாட்டி?”

     பார்வதிக்கு முகமெல்லாம் வியர்த்தது. அவள் முந்தைய நாள் இரவெல்லாம்

    உறங்காமல் சிந்தித்து தான் பேத்தியிடம் சில உண்மைகளை தெரிவித்து விடத்

    தீர்மானித்திருந்தாள்.  ஆனாலும் அதைச் சொல்ல முற்படுகையில் ஏதோ

    தொண்டையை  அடைத்தது. பொறுமையாக ஆர்த்தி தன் பாட்டி பேசக் காத்திருந்தாள்.

        “ஆர்த்தி, உன்னோட அந்தக் கனவு….”

        “சொல்லுங்க பாட்டி அதுக்கென்ன?”

        “அது நீ நினைக்கற மாதிரி காரணமில்லாமல் வர்றதில்லை”

         ஆர்த்தி திகைப்புடன் தன் பாட்டியைப் பார்த்தாள்.

        “உன் அம்மா சாகறப்ப உனக்கு மூணு வயசு….அவ மரணம் இயற்கையாய் இருக்கலை….அது கொலையாய் இருக்கலாம்கிற சந்தேகம் எங்களுக்கு ஆரம்பத்தில்

    இருந்தே இருக்கு… அந்த சமயத்தில் நீ உங்கம்மா கூட இருந்திருக்கிறாய்…. உன்

    ஆழ்மனசில் அப்ப பதிஞ்சது எல்லாம் தான் இந்தக் கனவாய் வருதுன்னு அன்றைக்குப் பார்த்த டாக்டர் நினைக்கிறார். எங்களுக்கும் அது சரியாக இருக்கலாம்னு தோணுது”

        ஆர்த்தியின் இதயத் துடிப்பு ஒரு கணம் நின்று போனது.

    2

        ஆர்த்தி அதிர்ச்சியிலிருந்து மீண்டவுடன் கேட்டாள்.

    ”என்ன பாட்டி சொல்றீங்க?…. இதையேன் இவ்வளவு நாள் சொல்லாமல் வச்சிருந்தீங்க?”

        பார்வதி குற்ற உணர்ச்சியுடன் தன் பார்வையைத் தாழ்த்திக் கொண்டாள்.  “உன் தாத்தா உன் கிட்ட சொல்லவே கூடாதுன்னு முதல்ல இருந்தே பிடிவாதமாய்

    இருக்கார். உனக்கு தான் உன் தாத்தாவோட குணம் தெரியுமே. உண்மையைச்

    சொன்னா உனக்கு அதிர்ச்சியாகும்னு நினைச்சார்.  இன்னொரு பக்கம் உன்னை

    இழந்துடுவோமோன்னு பயப்பட்டார்….”

         “என்னை இழந்துடுவோம்னா?….”

         “நீ உங்கப்பா கிட்ட போயிடுவாயோன்னு பயந்தார்…”

     ஆர்த்தி திகைப்புடன் தன் பாட்டியைப் பார்த்தாள்.  அதிர்ச்சிக்குமேல்அதிர்ச்சி தருகிறாளே பாட்டி! பார்வதி தலை குனிந்தபடியே சொன்னாள்.

    “உன் அம்மா ஆனந்தி தான் உன் மூணாம் வயதில் இறந்தாளே ஒழிய உன் அப்பா உயிரோட தான் இருக்கார்…..”

     ஆர்த்திக்கு தலை சுற்றியது.  தன்னுடைய சிறு வயதிலேயே பெற்றோர் இருவரும் ஒரு விபத்தில் இறந்து விட்டதாகவும் அதனால் தான் தன்னுடைய தாய்வழி

    தாத்தா பாட்டியுடன் வாழ்ந்து வருவதாகவும் நம்பி வந்திருந்த அவளுக்கு இந்தப் புதுத் தகவல்கள் பெரும் அதிர்ச்சியைத் தந்தன.

    “எல்லாத்தையும் தெளிவாய் ஆரம்பத்தில் இருந்து சொல்லுங்க பாட்டி”

     பார்வதி தன் கணவன் வருவதற்கு முன் சொல்லி முடித்து விட எண்ணி

    சுருக்கமாய் சொன்னாள்.  “உங்கப்பா பெரிய பணக்காரர். ஊட்டியில் பெரிய

    எஸ்டேட்டும், கோயமுத்தூரில் பல கம்பெனிகளும்,  ஃபேக்டரிகளும்

    அவங்களுக்கு இருக்கு.  அப்ப நாங்களும் கோயமுத்தூர்ல இருந்தோம்.  உன்

    அம்மாவும்,  உங்கப்பாவும் ஒரே காலேஜில் படிச்சாங்க.  காதலிச்சாங்க.

    கல்யாணம் செய்துகிட்டாங்க. உன் அம்மா ஆரம்பத்தில் சந்தோஷமாய் தான்

    இருந்தாள்.  பிறகு கொஞ்சம் கொஞ்சமாய் அந்த சந்தோஷம் வடிஞ்சு போனதை நாங்க பார்த்தோம். என்னன்னு கேட்டதுக்கு அவள் பதிலே சரியாய்

    சொல்லலை.”

         “உனக்கு மூணு வயசு இருக்கறப்ப ஒரு தடவ ஊட்டி பக்கம் விடாம பேய் மழை அடிச்சு பல இடங்கள்ல நிலச்சரிவு ஆயிடுச்சு. உங்கம்மா ஆனந்தியும் அப்ப ஊட்டி எஸ்டேட் பங்களாவில் இருந்ததால் நாங்க கவலையோட போன் செஞ்சு

    கேட்டோம். வீட்டாளுங்க யாரும் இருக்கலை. உங்கம்மாவைக் காணோம்னும்

    தேடிகிட்டிருக்கிறதாகவும் ஒரு வேலைக்காரன் தான் சொன்னான்.  நாங்க பதறிப் போய் அங்கே உடனே போனோம்.  ரெண்டு நாள் அங்கேயே இருந்தோம். அப்பவும் அவளை தேடிகிட்டு தான் இருந்தாங்க. ரெண்டு நாள் கழிச்சு அவங்க எஸ்டேட்

    பக்கத்தில் நிலச்சரிவு ஆகியிருந்த இடத்தில் சிக்கி செத்திருந்ததாய் சொல்லி

    அவள் பிணத்தை எடுத்துட்டு வந்தாங்க. எங்களை முகத்தைப் பார்க்கக் கூட

    விடலை….. முகம் சிதிலமாயிடுச்சு, பார்த்தா தாங்க மாட்டீங்கன்னு சொல்லி மூடி

    எடுத்துகிட்டு வந்த பிணத்தை அவசர அவசரமாக அப்படியே எரிச்சுட்டாங்க…..

    எங்களுக்கு சந்தேகம் வந்தாலும் அந்த சமயம் ஒண்ணும் சொல்ல முடியலை….

    அப்புறமாய் உனக்கு தொடர்ச்சியாய் வந்த கனவு, உங்கம்மா மரணம் பத்தி

    முதல்ல எங்களுக்கு வந்த சந்தேகம் பொய்யில்லைன்னு நிரூபிச்சிடுச்சு….”

    பார்வதி சொல்லச் சொல்ல அழுதாள். அவள் கடந்த காலத்துக்கே போய் விட்ட

    மாதிரி இருந்தது.

        பின் தன்னை சுதாரித்துக் கொண்டு தொடர்ந்தாள்.  “அந்த சமயத்துல அந்த ஊட்டி பங்களாவில் உன் அம்மா கூட இருந்தது நீயும் ஒரு வேலைக்காரியும் மட்டும்

    தான்.  அந்த வேலைக்காரி என்ன ஆனாள்னு யாருக்கும் தெரியலை. பிரமை

    பிடிச்ச மாதிரி அங்கே அழக்கூட முடியாமல் நீ மட்டும் நின்னுட்டுருந்தாய். உங்கம்மாவை எரிச்ச மறு நாளே உன்னை கொஞ்ச நாள் வச்சிகிட்டிருந்து பிறகு

    அனுப்பறோம்னு சொல்லி எடுத்துகிட்டு வந்த நாங்க பிறகு அந்தப் பக்கம் எட்டிக்

    கூட பார்க்கலை. “

        பாட்டி சொன்னதை ஜீரணிக்க ஆர்த்திக்கு நிறைய நேரம் தேவைப்பட்டது.  ஏதோ இரவல் வாங்கிக் கொண்டு வந்த புத்தகத்தைத் திருப்பித் தரவில்லை என்பது

    போல பார்வதி சொன்னது அவளுக்கு திகைப்பை ஏற்படுத்தியது. திகைப்போடு

    ஆர்த்தி கேட்டாள்.  “எங்கப்பா பிறகு என்னைத் தேடிகிட்டு வரலையா?”

        பாட்டி குற்ற உணர்வோடு சொன்னாள்.

    “கோயமுத்தூரில் உங்க தாத்தாவுக்கு ஒரு ஸ்கூல்ல வாத்தியார் வேலை

    இருந்தது.  உன்னை எடுத்துட்டு வந்த பிறகு அவர் நிறைய யோசிச்சார்.  உன்னை அந்தக் கொலைகாரக் குடும்பத்துக்கு திருப்பி அனுப்ப  அவருக்கு மனசு வரலை.  வேலையை ராஜினாமா செய்துட்டு, இருந்த வாடகை வீட்டையும் காலி

    செஞ்சுட்டு யாருக்கும் சொல்லிக்காம அங்கிருந்து என்னையும் உன்னையும்

    கூட்டிகிட்டு கிளம்பிட்டார்.  எங்க போறதுன்னு முடிவு செய்ய முடியலை.

    மனசெல்லாம் ரணம், குழப்பம்.  அரவிந்தாஸ்ரமத்து அன்னை மேல் இருந்த

    நம்பிக்கைல, இங்கே வழி கிடைக்கும்னு இந்தப் பாண்டிச்சேரிக்கு வந்தோம்.

    அவருக்கு டியூஷன் ரூபத்தில் பிழைப்புக்கு வழி கிடைச்சது. பிறகு லைப்ரரியில வேலையும் கிடைச்ச பிறகு சுதாரிச்சுகிட்டோம். நாங்க இங்கே இருக்கிறோம்னு

     உங்கப்பாவுக்கு தெரிவிக்கலை. அவங்களுக்குத் தெரியாமல் இங்கே நாம

    ஒளிஞ்சு வாழ்ந்திட்டிருக்கிறோம்….”

        “என் மகள் இறந்ததுல எனக்கு துக்கம் இல்லாமல் இல்லை.  ஆனா உன்னை

    உங்கப்பா கிட்டே இருந்து பிரிச்சு எடுத்துகிட்டு வந்ததில் எனக்கு ஒப்புதல்

    இல்லை. உன் தாத்தா கிட்ட அப்பவே இதைச் சொன்னேன். அப்ப நான்  சொன்னதுக்கு அதுக்கு பதிலாய் விஷத்தை சாப்பாட்டுல கலந்து கொடுக்க உன் தாத்தா சொன்னார்.  இந்த மாதிரிப் பேசினா நான் என்ன செய்ய முடியும் சொல்லு.  உன் தாத்தாவுக்கு உணர்ச்சிவசப்பட்டு முடிவு எடுத்துட்டு, பிறகு அது தான்

     சரின்னு சாதிக்கிறது எப்பவுமே இருக்கிற கெட்ட பழக்கம். உன்னை எடுத்துகிட்டு வந்தது தான் உனக்கு செஞ்ச நல்ல காரியம்கிறது அவர் எண்ணம்.  ஆனா

    உங்கப்பா குடும்பம் போலீசு மூலம் எங்களைத் தேடிகிட்டு எப்ப நம்ம வீட்டு

    வாசலில் நிற்குமோன்னு நான் ஆரம்பத்தில் நிறையவே பயந்துகிட்டிருந்தேன்…”

        பார்வதியின் கண்களில் லேசாய் நீர் கோர்த்தது.

    “பணம், செல்வாக்குன்னு ராணி மாதிரி இருக்க வேண்டிய உன்னை இந்த

     தீப்பெட்டி மாதிரிச் சின்னதாய் இருக்கிற மூணு ரூம் வீட்டில் வச்சு வளர்த்தினதில் எனக்கு நிறையவே வருத்தம் ஆர்த்தி. எமன் எப்ப கூப்பிடுவான்னு தெரியாமல்

    காத்துகிட்டிருக்கிற இந்த சமயத்தில் கூட நாங்க உன் கிட்ட உன் அப்பா பத்தி

    சொல்லாமல் இருக்கிறது சரியில்லைன்னு தான் உன் கிட்டே இதைச்

    சொன்னேன். எங்களுக்கு ஏதாவது ஆயிடுச்சுன்னா உனக்கு யாரிருக்காங்கன்னு நான் பயப்படறேன்….”

        ஆர்த்திக்கு பாட்டி சொன்னதையெல்லாம் ஜீரணிக்க இன்னும் கஷ்டமாகவே

    இருந்தது.  எப்போதும் அர்த்தமில்லாமல் வரும் கனவு என்று அவள்

    நினைத்திருந்த அந்தக் கனவில் வரும் அந்தப் பெண்ணின் முகத்தை நினைவுக்குக் கொண்டு வர முயற்சித்தாள். அந்த பெண்ணின் உருவமே மங்கலாகத் தெளிவு இல்லாமல் இருந்ததால் தான் தினமும் பார்க்கும் தாயின் புகைப்படத்திற்கும்

    அந்தப் பெண்ணிற்கும் சம்பந்தம் இருக்கலாம் என்கிற சந்தேகம் கூட அவளுக்கு

    இத்தனை நாள் வரவில்லை என்பது புரிந்தது.

       எத்தனையோ கேள்விகள் ஒருசேர மனதில் எழுந்தாலும் ஆர்த்தி ஒரு கேள்வியை முதலில் தேர்ந்தெடுத்தாள்.  “அம்மாவை யார் கொன்னாங்க பாட்டி?”

    3

      பார்வதியால் உடனடியாக பதில் சொல்ல முடியவில்லை. பின் கைகளை விரித்தபடி சொன்னாள்.  

    “தெரியலை….ஆனால் பிணத்தை எடுத்துட்டு வந்ததில் இருந்து அவசர

    அவசரமாய்  அதை எரிக்க ஏற்பாடு செய்தது வரை எல்லாமே உன் பெரியத்தை மேற்பார்வையில் நடந்ததால் உன் தாத்தா அவளைத் தான் சந்தேகப்படறார்…..”

         “பெரியத்தையா?” ஆர்த்தியின் கேள்வியில் இருந்த குழப்பத்தைப் பார்த்த

    பார்வதி விளக்கமாக சொல்ல ஆரம்பித்தாள்.

         “தாயைச் சின்ன வயதிலேயே இழந்துட்ட உன் அப்பாவுக்கு இரண்டு அக்காக்கள் இருந்தாங்க.  பெரியக்காவை அவர் அம்மா ஸ்தானத்திலேயே வச்சிருந்தார்.

    அவங்கப்பாவும் அவர் மேஜராகறதுக்கு முன்னால் போய் சேர்ந்துட்டதால்

    வியாபாரம், சொத்து எல்லாத்தையும் கூட அவர் பெரியக்கா தான் ஆரம்பத்தில்

    பார்த்துகிட்டிருந்தாள். அப்புறமும் கூட எல்லாமே அவள் கட்டுப்பாட்டில்

    தானிருந்துச்சு. உன் அப்பா ஒரு ரப்பர் ஸ்டாம்பாக தானிருந்தார்.  அவளைக்

    கேட்காம அந்த வீட்டில் ஒரு அணு கூட அசையாதுங்கற அளவு உயரத்தில்

    பெரியக்காவை வச்சிருந்தார். அவள் சொல்லாமல் அவராய் செய்த காரியம்

     உங்கம்மாவைக் காதலிச்சதாய் தான் இருக்கணும்…”

     ஆர்த்தி கேட்டாள்.  ”அவங்களுக்கு அப்பா அம்மாவைக் காதலிச்சது பிடிக்கலையா?”

      “அவள் இவங்க காதலுக்கு எதிராய் இருக்கலை.  அவள் தான் எங்க கிட்ட வந்து

    தம்பிக்குப் பெண் கேட்டாள். கட்டின சேலையோட பெண்ணை அனுப்பினா

    போதும்னாள்.  நாங்களும் எங்க பொண்ணு மாதிரி அதிர்ஷ்டக்காரி உலகத்தில்

    இல்லைன்னு நினைச்சோம். கல்யாணத்துக்கு அப்புறம் உங்கம்மாவும் அவளைத் தலையில் வச்சு கொண்டாடினாள்…” சொல்லிக் கொண்டே வந்த பார்வதி

    திடீரென்று  நிறுத்தி பேத்தியிடம் கேட்டாள். உனக்குத் தெரியுமா, உன் பெரியத்தை யாருன்னு?”

        “தெரியலை”

        “உங்க காலேஜ் டேயில்  சீஃப் கெஸ்ட்டாய் போன வருஷம் வந்தாளே ஒருத்தி…. நீ கூட அன்றைக்கு முழுசும் அவளைப் பத்தியே பேசிகிட்டிருந்தாயே…..”

        “சிவகாமியம்மாவா?”

      ஆர்த்தியால் தன் காதுகளை நம்ப முடியவில்லை.

    “அவள் தான் உன் பெரியத்தை” என்று பாட்டி சொன்ன போது அவள் நம்ப

    முடியாமல் திகைத்தாள்.  ஆனால் சந்திரசேகர் இண்டஸ்ட்ரீஸின் எக்சிகியூடிவ் டைரக்டர் சிவகாமியம்மாள் என்று அரங்கில் அறிமுகப்படுத்தப்பட்டு பலராலும் பாராட்டப்பட்ட அவளை இன்று வரை அவளால் மறக்க முடிந்ததில்லை என்பது

    உண்மை.  தன் தந்தை சந்திரசேகர் தான் அந்த இண்டஸ்ட்ரீஸின் பெயரில் இருக்கும் சந்திரசேகர் என்பதையும் இப்போது தான் ஆர்த்தி அறிகிறாள்.

        சென்ற வருடம் கல்லூரி நாளில் சிறப்பு விருந்தினராக வந்து மேடையில் அமர்ந்திருந்த சிவகாமி அப்போது அவளைக் காந்தமாய் கவர்ந்திருந்தாள்.  நல்ல உயரம், சிவந்த நிறம், கம்பீரமான அழகான தோற்றம், தன்னம்பிக்கை நிறைந்த பேச்சு, என  அவளின் எல்லாமே ஆர்த்தியை அன்று வசியப்படுத்தியது.  பெண் சுதந்திரம்,

    பெண்களின் முன்னேற்றம், என்று எல்லா மாணவிகளையும் புத்துணர்ச்சி பெறும் வண்ணம் பேசி எல்லோரையும் அன்று சிவகாமி நிறையவே கவர்ந்து

    விட்டிருந்தாள்.  அன்று மேடைக்கு முன்னால் மூன்றாவது வரிசையில்

    அமர்ந்திருந்த ஆர்த்தி மந்திரத்தால் கட்டுண்டது போல அந்தப் பேச்சைக் கேட்டுக் கொண்டிருந்தாள்…..

    அவள் தான் தன் பெரியத்தை என்று அறிந்த இந்தக் கணம் தான் இன்னொரு

    உண்மை அவளுக்கு உறைத்தது.  சிவகாமி மேடைக்கு வந்தது முதல் அங்கிருந்து கிளம்பும் வரை ஆர்த்தியை அடிக்கடி பார்த்துக் கொண்டிருந்தாள்.  பேசும் போது

    அவளையே அதிக நேரம் பார்த்துப் பேசினாள். மற்ற நேரங்களிலும் அவளையே

    உன்னிப்பாகக் கவனித்துக் கொண்டிருந்தாள். அவள் பார்வை தன் மீது அதிக நேரம் விழுவது கூட அவளுக்குப் பெருமையாக அன்று இருந்தது.  வீட்டுக்கு வந்து

    அன்று முழுவதும் ஆர்த்தி சிவகாமியம்மாவைப் பற்றியே பேசிக்

    கொண்டிருந்தாள்.  அப்போதெல்லாம் பாட்டியும் தாத்தாவும் தர்மசங்கடத்துடன் பார்வைகளைப் பரிமாறிக் கொண்டிருந்ததன் அர்த்தமும் இப்போது தான் புரிந்தது.  அவர்கள் முடிந்த வரை பேச்சை வேறு திசைகளில் திருப்பப் பார்த்தார்கள்.

    ஆனால் ஒரு வித “ஹீரோ வர்ஷிப்”பில் இருந்த ஆர்த்தி அன்று திரும்பத் திரும்ப

    சிவகாமி பற்றியே பேசினாள்…. தாத்தா முக்கிய வேலை இருப்பதாகச் சொல்லி வெளியே போனவர் நீண்ட நேரம் வரவேயில்லை.

         “நீ அன்றைக்கு சிவகாமி பத்தி அவ்வளவு பெருமையாய் பேசிகிட்டுருந்தப்ப

    எங்களுக்கு உன் அம்மா ஞாபகம் தான் வந்தது. அவளும் அப்படி தான் சிவகாமி

    பத்தி வாய் நிறைய பேசுவாள்…” என்று பார்வதி சொன்னாள்.

      தன் மனதைக் கவர்ந்திருந்த அந்த சிவகாமி ஒரு கொலைகாரியாக இருப்பாள்

    என்று நம்ப ஆர்த்திக்குத் கஷ்டமாக இருந்தது.  ஆனாலும் யோசித்துப்

    பார்க்கையில் சிவகாமி வேறு விதங்களிலும் சந்தேகத்தைக் கிளப்பினாள். சென்ற வருடக் கல்லூரி நாளன்று ஆர்த்தி யார் என்று முதல் பார்வையிலேயே உணர்ந்து தான் சிவகாமி அவளைக் கவனித்தாள் என்று இப்போது ஆர்த்திக்கு உள்ளுணர்வு சொன்னது. அப்படியானால் பாட்டி சொன்னது போல் அவள் எங்கிருக்கிறாள் என்று அவளது தந்தை குடும்பத்திற்குத் தெரியாமல் இருக்க வாய்ப்பில்லை.  குறைந்த

    பட்சம் சிவகாமி கண்டிப்பாக ஆர்த்தி பாண்டிச்சேரியில் இருப்பதை தெரிந்து வைத்திருந்தாள் என்பதில் ஆர்த்திக்கு சந்தேகம் இருக்கவில்லை.

    என்ன தான் ரப்பர் ஸ்டாம்பாக இருந்தாலும் தன் மகள் இருக்கும் இடம் தெரிந்த

    பிறகு ஒரு தந்தை வராமல் இருப்பார் என்பதை அவளால் ஒத்துக் கொள்ள

    முடியவில்லை. ஒன்று, சிவகாமி தன் தம்பியிடம் ஆர்த்தியைப் பார்த்த விஷயத்தைச் சொல்லாமல் இருந்திருக்க வேண்டும். இல்லாவிட்டால் சிவகாமிக்கு

    அவளை யார் என்றே தெரியாமல் இருந்திருக்க வேண்டும்…. மறுபடியும்

    யோசித்துப் பார்த்த போதும் அவள் மனம் இரண்டாம் அனுமானத்தை ஏற்க

    மறுத்தது.  ஆனந்திக்கும் அவளுக்கும் உள்ள உருவ ஒற்றுமை பார்வை

    உள்ளவனுக்கு கண்டிப்பாகத் தெரியும். தெரிந்தும் சிவகாமி அதை ரகசியமாய்

    வைத்திருப்பது தான் உண்மை என்று பட்டது.  அது ஏன் என்பதை அவளால் யூகிக்க முடியவில்லை.

       பாட்டியிடம் கேட்க எத்தனையோ கேள்விகள் இருந்தன. பாட்டி கதைச் சுருக்கம் தான் சொன்னாளே ஒழிய முழுக்கதை இன்னும் தெளிவாக இல்லை என்பதை

    ஆர்த்தி உணர்ந்தாள். மனதில் எழுந்த பிரதானமான கேள்வியை கேட்டாள்.

         “அவங்க அம்மாவைக் கொல்ல என்ன காரணம் இருந்திருக்கக்கூடும் என்று

    நீங்க நினைக்கிறீங்க?”

         “அது தான் குழப்பமாய் இருக்கு ஆர்த்தி. என்ன காரணம் இருக்க முடியும்னு

    எனக்கு இன்னும் புரியலை….” என்று பார்வதி சொல்லச் சொல்ல தாத்தாவின்

     குரல் இடைமறித்தது.

    “கடவுள் கொடுத்த மூளையை உபயோகிச்சுப் பாரு, புரியும்.”

         அப்போது தான் பாட்டியும் பேத்தியும் நீலகண்டனைக் கவனித்தார்கள்.  அவர்

    தன் மனைவியை சுட்டெரித்து விடுவது போல் பார்த்தபடி நின்றிருந்தார்

    4

        அந்த இறுக்கமான சூழ்நிலையிலும் எல்லா விதங்களிலும் அந்த தம்பதிகள்

    மாறுபடுவதை ஆர்த்தியால் கவனிக்காமல் இருக்க முடியவில்லை.  தாத்தா

    மாநிறம், நல்ல உயரம், ஆஜானுபாகுவான உடல்வாகு. பாட்டியோ நல்ல சிவந்த

    நிறம், குறைவான உயரம், ஒடிசல் தேகம். தோற்றத்தில் மட்டுமல்லாமல் குணாதிசயங்களிலும் நிறையவே இருவரும் மாறுபட்டார்கள்.  தாத்தா உணர்ச்சிகளால்

    உந்தப்படுபவர்.  பாட்டியோ சிந்தித்து செயல்படுபவள்…… நான்கு வார்த்தைகள்

    சேர்ந்தாற்போல் அவர்கள் இருவரும் பேசிக்கொண்டால் ஐந்தாவது வார்த்தை

    சண்டையில் தான் முடியும் என்பது ஆர்த்தியின் அனுபவ அறிவு. அதைப் பொய்யாக்க விரும்பாதது போல் பார்வதி கோபத்துடன் சொன்னாள்.

    “கடவுள் எனக்கு மூளையை வைக்கலை. எனக்கும் சேர்த்து உங்களுக்குத் தானே வச்சிருக்கார். சொல்லுங்க, உங்க பேத்தி கேட்கட்டும்”

         “மூளை இருந்தால் இதையெல்லாம் அவ கிட்ட சொல்லுவாயா? சொல்ல

    வேண்டாம்னு படிச்சுப் படிச்சு எத்தனை தடவை சொல்லியிருக்கேன்”

         “நாம என்ன சிரஞ்சீவிகளா? எமன் கூப்பிடு தூரத்தில் இருக்கான்.  அவன்

    நம்மளை கூட்டிட்டு போறதுக்கு முன்னாடி நாம அவள் கிட்ட அவங்கப்பா பத்தி சொல்லி அவர் கிட்ட சேர்த்துடறது நல்லதில்லையா”

         “எதுக்கு? அவளோட அம்மாவைக் கொன்னுட்ட மாதிரி இவளையும் அவங்க கொன்னுடறதுக்கா?”

         “இவளை ஏன் கொல்லப் போறாங்க?”

         “சொத்துக்காக தான். வேறென்ன.  இவங்கப்பாவுக்கு இரண்டாம் தாரத்திலும்

    குழந்தை இல்லை. இப்ப எல்லா சொத்துக்கும் இவள் தான் வாரிசு” என்று ஆக்ரோஷமாக தெரிவித்த நீலகண்டன் ஆர்த்தியிடம் சொன்னார்.

    “நீ கேட்டதுக்கு நான் பதில் சொல்றேன்மா. உங்கம்மா ஏழ்மை நிலையில் வளர்ந்தாலும் பிடிவாதக்காரி. யாருக்கும் அவ்வளவு சீக்கிரம் வளைந்து கொடுக்கிற ரகம் அல்ல. என்னை மாதிரி. கிட்டத்தட்ட எல்லாத்தையும் தன் கைப்பிடிக்குள்

    வச்சிருக்கிற சிவகாமிக்கு உங்கம்மா ஒத்துப் போகாமல் இருந்திருக்கலாம்.

    உங்கப்பாவும் மனைவி பக்கம் சாய்கிற மாதிரி இருந்திருக்கலாம். நிலைமை கை மீறிப் போகிறதுக்கு முன் உங்கம்மாவை தீர்த்துக் கட்ட அந்த ராட்சஸி முடிவெடுத்திருக்கலாம்…..” தாத்தாவுக்கு சிவகாமியைப் பற்றிப் பேசப் பேச இரத்தக் கொதிப்பு அதிகமானது போல் தோன்றியது.  பேச்சில் ஆக்ரோஷம் அதிகரித்தது.

         பார்வதி சொன்னாள். “ஆனந்தி எதுவும் நம்ம கிட்ட சொல்லவேயில்லையே.”

      தாத்தா மனைவியை இடைமறித்து சொன்னார்.  “பெத்தவங்க கிட்ட சொல்லி

    அவங்க மனசைப் புண்படுத்த வேண்டாம்னு நினைச்சிருப்பாள். அதனால் தான் சொல்லலை. எனக்குத் தெரியும், என் குழந்தை மனசு….ஆனா அவள் ஏதாவது

    சொல்லியிருந்தா நாங்க கண்டிப்பா உன்னை எடுத்துகிட்டு வந்த மாதிரி

    அவளையும் கூட்டிகிட்டு வந்திருப்போம். யாருக்கு வேணும் காசு பணம்?  ஆனா

    எதுவும் சொல்லாமல் மனசுக்குள் இருந்ததையெல்லாம் மூடி வச்சுட்டே

    இருந்துட்டு முகத்தைக் கூட கடைசியாய் காட்டாம ஒரேயடியாய் போயிட்டாள்…”.

     தாத்தா சொல்லச் சொல்ல கண் கலங்கினார். துக்கத்தால் உடைந்து போனார்.

    திடீர் என்று நெஞ்சைப் பிடித்துக் கொண்டார்.

        பார்வதி வேகமாய் வந்து அவரைப் பிடித்துக் கொண்டு “என்ன ஆகுதுங்க” என்று கேட்டாள்.

        “பார்வதி எனக்கு நெஞ்சடைக்கற மாதிரி இருக்கு….” என்று சொன்னவர் மனைவி மீது சாய்ந்தார்.

                                 *****

         டாக்டர் ஆர்த்தியை தனியாக அழைத்துச் சொன்னார்.  “இதயத்தில் மூன்று

    இடங்களில் அடைப்பு இருக்கும்மா. எவ்வளவு சீக்கிரம் பை பாஸ் சர்ஜரி செய்ய

    முடியுமோ அவ்வளவு நல்லது. இல்லாட்டி உயிருக்கு எந்த நேரத்திலும் ஆபத்து

     வரலாம்”

        ஆர்த்தி பயந்து கொண்டே கேட்டாள். “எவ்வளவு செலவாகும்?”

        “கிட்டத் தட்ட ரெண்டு லட்சம் ரூபாய் வரைக்கும் ஆகும். ஏதாவது மெடிக்கல்

    இன்ஷுரன்ஸ் செஞ்சிருக்கீங்களா?”

        இல்லை என்று ஆர்த்தி தலையசைத்தாள். டாக்டர் அடுத்த ·பைலை எடுத்துப்

    புரட்ட ஆரம்பித்தபடி தலையை நிமிர்த்தாமல் சொன்னார்.

    “பணம் உடனடியாய் ரெடி செய்ய முடிஞ்சா சொல்லும்மா. இல்லாட்டி நீங்க

    நாளைக்கே அவரை டிஸ்சார்ஜ் செய்துக்கலாம்”

        கண்ணில் தழும்ப ஆரம்பித்த நீரைத் துடைத்துக் கொண்டு ஆர்த்தி வெளியே

    வந்தாள்.  பார்வதி தன் பேத்தியை ஆவலோடு பார்த்தாள். “டாக்டர் என்ன சொல்றார்? பயப்பட ஒண்ணும் இல்லை தானே?”

        “ஆபரேஷன் செய்தால் நல்லதுங்கறார்”

        “எவ்வளவு ஆகுமாம்?”

        ஆர்த்தி தொகையைச் சொன்னவுடன் பார்வதியின் முகம் வெளிறியது. “வெள்ளிக்கிழமையும் அதுவுமாய் எந்த நேரத்தில் எமன் பக்கத்தில் இருக்கான்னு சொன்னேனோ தெரியலை அவன் இப்படி வாசல்ல வந்து நிற்கறான்.  எத்தனை

    நாள் லக்ஷ்மி ஷோபானம் படிச்சிருப்பேன். அவள் பார்வையைக் கூட இந்தப் பக்கம் திருப்பலை”.  எழுந்து போய் ஆஸ்பத்திரியின் ஐ.சி.யூ கண்ணாடி வழியாக

    கண்கலங்க கணவனைப் பார்த்தாள். மறுபடி வந்து ஆர்த்தி அருகில் அமர்ந்தாள்.

    “மனுஷன் வலி கொஞ்சமும் தாங்க மாட்டாரே. இப்ப எப்படி இருக்கோ தெரியலையே”

    பாட்டியைப் பார்க்க ஆர்த்திக்குப் பாவமாக இருந்தது.  என்ன தான் சண்டை போட்டாலும் அந்த முதிய தம்பதிகள் இருவருக்கும் இடையே இருந்த அன்பு ஆழமானதுஎன்பதையும் ஆர்த்தி அறிவாள். தாத்தாவைக் காப்பாற்ற என்ன வழி என்று

    யோசிக்கையில் அவளுக்கு ஒரே ஒரு வழி தான் கண் முன் தெரிந்தது.

     “பாட்டி நான் என் அப்பா கிட்ட பணம் கேட்டுப் பார்த்தால் என்ன?”

      பார்வதி திகைத்துப் போய் அவளைப் பார்த்தாள். சிறிது யோசித்த பின் இருதலை கொள்ளி எறும்பாக தவித்தாள். நிறைய யோசித்து விட்டுப் பேத்தியைக் கேட்டாள். “திடீர்னு எப்படிப் போய் கேட்பாய்? என்ன சொல்வாய்? அவங்க கோயமுத்தூர்லயோ, ஊட்டியிலயோ இருப்பாங்க.  நம்ம கிட்ட போன் நம்பர் கூட இல்லையே.”

         ஆர்த்தி தன் கல்லூரி முதல்வருக்குப் போன் செய்து சிவகாமி அம்மாளின்

    ஆபீஸ் அல்லது வீட்டு போன் நம்பர் தர முடியுமா என்று கேட்டாள். நல்ல வேளையாக கல்லூரி முதல்வர் தன் விசிட்டிங் கார்டுகள் சேமித்து வைத்திருந்த

    தொகுப்பில் தேடி எடுத்து  மூன்று எண்களைச் சொன்னார். ஆர்த்தி ஊட்டி வீட்டு

    எண்ணிற்குப் போன் செய்தாள்.

         “ஹலோ சந்திரசேகர் இருக்கிறாரா”

         “அவர் கோயமுத்தூர் ஆபீசில் இருக்கார். நீங்க யார் பேசறது?”

      பதில் சொல்லாமல் இணைப்பைத் துண்டித்து ஆர்த்தி கோயமுத்தூர் ஆபிசிற்குப் போன் செய்தாள்.

         “ஹலோ சந்திரசேகர் இருக்கிறாரா?”

         டெலிபோன் ஆபரேட்டர் சந்திரசேகரின் செகரட்டரிக்கு இணைப்பு கொடுத்தாள். அந்த செகரட்டரியோ எடுத்தவுடன் யார் பேசுவது என்று கேட்டாள்.  ஆர்த்திக்கு

    சிறிது நேரம் தொண்டையை அடைத்தது. பிறகு சொன்னாள்.  “நான் அவர் மகள்

    பேசறேன்”

         அந்த செகரட்டரியின் குழப்பம் அவளது அடுத்த கேள்வியில் தெரிந்தது. “உங்களுக்கு எந்த சந்திரசேகர் வேணும். இது மேனேஜிங் டைரக்டர் சந்திரசேகர்

    ஆபிஸ்”

         “நான் அவர் மகள் தான் பேசறேன்”

         “உங்களுக்கு விளையாட வேறு ஆள் கிடைக்கவில்லையா?” என்று

    கோபத்துடன் கேட்ட அந்த செகரட்டரி போன் இணைப்பை உடனடியாக

    துண்டித்தாள்.

         தன் துர்ப்பாக்கிய நிலையை எண்ணி வருந்திய ஆர்த்தி இனி என்ன செய்வது

    என்று யோசித்தாள்.

    (விறுவிறுப்பும், பரபரப்பும் நிறைந்த இந்த நாவலை வாங்கி வாசகர்கள் மீதியைப் படித்து மகிழலாம்….)

    என்.கணேசன்

    Share
  • திருதராஷ்டிரனின் சுயசரிதை!

    -க. பாலசுப்ரமணியன் 

    எப்படி சுயசரிதையை ஆரம்பிப்பது? திருதராஷ்டிரனின் சிந்தனை அலைபாய்ந்து கொண்டிருந்தது… அட என்னங்க.. திருதராஷ்டிரன் என்ற பெயரைப்பார்த்து ஆச்சரியப்படுகிறீங்களா? அது அவரோட புனைபெயருங்க…அவருடைய உண்மையான பெயர் சந்தானகோபாலன். அவர் கதை கவிதையெல்லாம் எழுத ஆரம்பித்தபோது ஒரு புனைப்பெயருக்காக ஏங்கிக்கொண்டிருந்தார். அப்போதாங்க.. அவருடைய மனைவி ஒரு டம்ளர் காப்பியை எடுத்துக்கொண்டு வந்து அவருடைய மேஜைமீது வைத்தார். அப்போது பத்திரிகை படித்துக்கொண்டிருந்த சந்தானகோபாலன் கவனிக்காமல் அந்தப் பத்திரிகையை மடிக்க.. அந்தக் காப்பி டம்பளர் கீழே விழ .. அவருடைய மனைவி “சரியான திருதராஷ்டிரன்…முன்னாலே வைத்த காப்பி கூட கண்ணிலே தெரியல” என்று சொல்ல, அவருடைமூளையிலே  அன்று எங்கேயோ ஒரு மணி அடித்தது. ஆகா.. அருமையான பெயர். யாரும் இந்தப் பெயரை வைத்துக்கொள்ள மாட்டார்கள் என்று நினைத்து அதையே தன் வசமாக்கிக்கொள்ள…இப்போது எல்லோருக்கும் அவர் “திருதராஷ்ட்டிரன்” தான்.

    “என்ன பேருடா இது…” என்று அவருடைய அப்பா அங்கலாய்க்க “இத மாத்தித் தொலை..வேற நல்ல பெயரே உனக்குக் கிடைக்கவில்லையா?” என்று கேட்க இவரும் பதிலுக்கு “பெயரிலே என்னப்பா இருக்கு? இருந்தாலும் ஒரு  வித்தியாசமான பெயரைக் கேட்டதும் எல்லாரும் கொஞ்சம் திரும்பிப் பார்ப்பாங்க இல்லியா? ” எனக் கூறித் தனது முடிவை ஊர்ஜிதப் படுத்தினார். ஆண்டுகள் கடந்து விட்டன. திருதராஷ்டிரனின் பெயர் மட்டுமல்ல அவர் கதை கவிதைகள் அவருக்கு பத்திரிகை உலகில் ஒரு இடம் கொடுத்துவிட்டன.

    அன்று காலை நடந்த நிகழ்ச்சி…

    “ஏண்டா, ஏதோ சுய சரிதை எழுதப்போகின்றாயாமே” என்று கேட்டுக்கொண்டே தனது முதிர்ந்த வயதுக்கு முத்தாரமாய் உள்ள கம்பைக் கையில் வைத்துக்கொண்டே அவருடைய தந்தை அவரை நோக்கி வந்தார். திருதராஷ்டிரனுக்கு தூக்கிவாரிப் போட்டது. இவருடைய முடிவை இவர் யாரிடமும் சொல்லவே இல்லையே . இவருக்கு எப்படித் தெரிந்தது என்றுதான்.

    “ஆஹா நேற்று தனது அலைபேசியில் பத்திரிகை ஆசிரியரோடு பேசிக்கொண்டிருந்ததை தன் மனைவி கேட்டுக்கொண்டிருப்பதை நினைவில் கொணர்ந்தார். “பிபிசி தொலைக்காட்சியை விட அதிக வேகத்தில் பரவும் ஒரு ஒலிப்பெருக்கி இயந்திரத்தை தன் வீட்டிலேயே வைத்திருப்பதன் பலன் தெரிந்தது.

    “அதெல்லாம் ஒண்ணும் இல்லேப்பா… இன்னும் பிள்ளையார் சுழி கூடப் போடலை” என்று அதற்கு முற்றுப்புள்ளி வைக்க நினைத்தவருக்குத் தன் தந்தையின் அடுத்த வார்த்தை  மூளையின் கதிரியக்கத்தை வேகப்படுத்தியது. ” அதில்லேப்பா. உன்னோட சரிதைக்கே நான் தானே பிள்ளையார் சுழிபோட்டேன். அதை நினைவிலே வைத்துக்கொண்டு என்னைப்பற்றியும் கொஞ்சம் எழுது.” என்றார்.

    தந்தையை முறைத்துப் பார்த்த திருதராஷ்டிரனுக்கு கோபம் தலைக்கு ஏறியது. இருந்தாலும் ஒரு அசட்டுச் சிரிப்பை அவிழ்த்துவிட்டு அமைதியானார்.

    “என்னங்க பிள்ளைக்கிட்டே தனியாய்ப் பேச்சு?  அவனோட சுயசரிதைக்கு ஏதாவது ஐடியா கொடுக்கிறீங்களா?” என்று கேட்டுக்கொண்டே அவருடைய தாயார் தொடர்கதைபோல் பின்னே வந்தார்.

    “என்னடாயிது..அதுக்குள்ளே எல்லோருக்கும் அலைபேசி மூலமா விஷயம் பரவிவிட்டதா?” என்று அவர் யோசிக்கும் நேரத்தில் “டேய் கோபாலா. சுயசரிதையில் அம்மாவுக்கு ஒரு முக்கிய பங்கு இருக்கு.. MGR  பாடுவாரில்லையா “தாயில்லாமல் நானில்லை”…அதான் .. அம்மா இல்லேன்னா சரிதையே இல்லை… தெரிஞ்சிதா..” என்று சொல்ல ” அலமு, அப்பாவுக்குத்தாண்டி முதல் இடம்” என்று அவர் கணவர் சொல்ல “இல்லீங்க… அன்னையும் பிதாவும் முன்னறி தெய்வம்” அம்மாவுக்குத் தான் முதலிடம் என்று அவள் வாதிக்க .. ஏண்டா, இதுக்கு ஒத்துக்கொண்டோம் என்று திருதராஷ்ட்ரன் தன் கண்களை மூடிக்கொண்டு “கிருஷ்ணா” என்று கஜேந்திரன் அழைத்ததைப் போல் அழைத்திட்டார்.

    தலையைப் பிடித்துக்கொண்டு உட்கார்ந்திருந்த திருதராஷ்டிரனுக்கு வந்தது அடுத்த தலைவலி. “கேட்டுக்கொண்டுதானிருந்தேன் இவ்வளவு நேரம். கல்யாணமாகி என்னதான் இருபத்திஐந்து வருஷமானாலும் வீட்டிலே பெண்டாட்டிக்கு இடமில்லை.. என்னிக்குமே அப்பா பிள்ளை இல்லேன்னா அம்மா பிள்ளை. நீங்களெல்லாம் எதுக்குத்தான் கல்யாணம் பண்ணிகொள்கிறேங்களோ தெரியலை..” என்ற முகவுரையுடன் ஆரம்பித்த மனைவி பார்கவி தொடர்கதையானாள்.

    ‘பார்கவி. இன்னும் அதைப்பற்றி நான் நினைக்கவே இல்லை. ஏதோ அந்தப் பத்திரிகை ஆசிரியர் உங்கள் வாழ்க்கைப் போராட்டங்களை ஒரு சுய சரிதையாகப் பகிர்ந்து கொள்ளுங்களேன் என்று சொன்னார். யோசித்துச் சொல்லுகிறேன் என்று சொல்லிவிட்டேன். அதை பற்றி நான் யோசிக்கவேயில்லை. அதுக்குள்ளே இத்தனை சங்கடமா? ” என்கிறார்.

    “இந்த பாருங்கோ.. பானை பிடித்தவள் பாக்கியசாலி என்று எங்க வீட்டுக்காரங்க சொன்னாலும் அதுக்கு மரியாதையில்லைன்னு எனக்குத் தெரியும்.

    நீங்க உங்க சரிதையில் எனக்கு இடம் கொடுக்காவிட்டாலும் பரவாயில்லே. ஆனால் முன்னுரையிலேயாவது எனக்கும் பெண்டாட்டி பிள்ளைங்க இருக்காங்க என்று சொல்லுங்கோ..”

    திருதராஷ்டிரனுக்குச் சுவரில் தலையை முட்டுக்கொள்ளலாம் போல இருந்தது. அவர் பேசாமல் சட்டையை மாட்டிக்கொண்டு வெளியே கிளம்பி விட்டார்.

    தன்னுடைய பிளாட்டை விட்டுக் கீழே இறங்கி அப்பாடா என்று கேட்டை திறந்துதான் தெரியும்.. “நமஸ்காரம் கோபாலன் சார்…சுய சரிதை எழுதப்போறேளாமே “…. பக்கத்து பிளாட்டில் குடியிருப்பவர்…

    ”உங்களுக்கு யார் சொன்னா?”

    “அதான்.. என் வீட்டுக்காரி நேற்றைக்கு கோவில் போனபோது  உங்க மனைவி சொன்னார்களாம் .. இல்லேன்னா எனக்கு எப்படித் தெரியும்..”

    “ம்…”

    ‘ஞாபகம் இருக்கா.. இருபது வருஷம் முன்னாலே உங்களுக்கு வேலை இல்லாத போது  எப்படி எல்லாம் நாம பேசிக்கொண்டு இருந்தோம்…இள வயசு அப்போ… அதெல்லாம் எழுதுவேளோ  இல்லையோ… “

    திருதராஷ்டிரன் அவரைப் பார்த்து சற்றே சிரித்தார்..

    அது சரி.. நீங்க என்ன எழுதவேண்டுமென்று நான் சொல்லக்கூடாது…சரி. சரி.. உங்க அலைபேசிலே அழைப்பு யாரோ கூப்பிடறாங்க போலிருக்கு “..

    திருதராஷ்டிரன் அலைபேசியைப் பார்க்க  ..”என்ன மாமா.. சௌக்கியமா.. நான்தான் சுதர்சனம் பேசறேன். அம்மா சொன்னாங்க.. நீங்க சுயசரிதை எழுதப்போறேள்னு .. வாழ்த்துக்கள்… சினிமா கதைக்கு உகந்த மாதிரி எழுதுங்கோ… உங்களுக்கு ஏதாவது ரொமான்டிக் எலிமெண்ட்ஸ் வேணும்னா சொல்லுங்க.. நான் எப்பவும் தயார்..”

    திருதராஷ்டிரனின் தலை சுழன்றது.

    “நன்றி” என்று வேண்டா வெறுப்பாகச் சொல்லிவிட்டு அலைபேசியைக் கீழேவைத்து விட்டார்.

    சற்றே குழப்பத்தில் ஆழ்ந்த திருதராஷ்டிரன் வீடு திரும்பி யாரிடமும் பேசாமல் சாய்வு நாற்காலியில் அமர்ந்தார். அம்மா கொடுத்த காப்பியை எடுத்துக்கொண்டு வந்த அவர் மகன் “அப்பா. வாழ்த்துக்கள்.. உங்களுக்கு அதை கணினியில் போடவேண்டுமென்றால் என்ன உதவி வேண்டுமென்று சொல்லுங்கள். நானிருக்கிறேன். அந்த முகவுரையில் மட்டும் அதை நினைவாகப் போட்டுவிடுங்கள்.”

    திருதராஷ்டிரனுக்கு காப்பி கசந்தது. தன் மேசையை நோக்கி விருட்டென்று சென்ற அவர் காகிதத்தில் பிள்ளையார் சுழி போட்டு எழுத ஆரம்பித்தார்.. “அன்புள்ள ஆசிரியருக்கு,  சுற்றத்தில் இருக்கின்ற அனைவருடைய சரிதைகளையும் எழுதிவிட்டு நடு நடுவே தன்னுடைய பெயரையும் இணைத்துக்கொள்ளுவது சுயசரிதையின் இலக்கணம் போலத் தெரிகின்றது. ஆகவே. இயலாமைக்கு மன்னிக்கவும்”

    இரண்டு நாட்களுக்குப் பின் அலைபேசியில் ஆசிரியர் அழைத்து திருதராஷ்டிரனை சமாதானப்படுத்தி எழுத வைக்க, சில மாதங்களுக்குப் பின் அவருடைய சுயசரிதை வெளியானது. வெளியீட்டு விழாவிற்கு குடும்பத்திலிருந்து யாரும் செல்லவில்லை. எல்லோருக்கும் தனக்குரிய இடம் அதில் கிடைக்கவில்லையே என்ற ஆதங்கம்.

    விழா முடிந்து மாலையும் கழுத்துமாக வீடு திரும்பிய அவரைப் பார்த்து மனைவி “குபுக்”கென்று சிரித்தாள். அவருக்கு நெஞ்சு கொஞ்சம் வலித்தது.

    “என்ன சிரிப்பு?”

    “இல்லேப்பா. உங்களை பார்த்தால் கல்யாணப் பரிசு சினிமாவிலே தங்கவேலு மாலையோட  வீட்டுக்கு வர காட்சி நினைவுக்கு வரது போல இருக்கு . சரிதானேம்மா?” என்று மகன் விளக்கம் கொடுத்தான்.

    “தட்டினாங்களா?” என்று தொடர்ந்தாள் மனைவி. “அதான் கை தட்டினாங்களா?” அவர் அவளை முறைத்துப் பார்த்தார்.

    மாலையிலே தன் நெருங்கிய தோழருக்கு புத்தகத்தின் ஒரு பிரதியை கொடுக்கச் சென்றபோது அந்த நண்பர் அவரிடம் கேட்டார் “சுய சரிதையை எழுதுவதின் உள்நோக்கம் என்ன கோபாலா?”

    “நம்முடைய உண்மையான முகத்தை மறைத்து உண்மைகளின் முன்னே கண்ணை மூடிக்கொண்டு மற்றவர்கள் ஏற்கும் வகையிலே எழுதப்படும் நம்முடைய கதை” என்று அவர் பதில் சொல்ல அவர் கையில் இருந்த புத்தகத்தின் தலைப்பு “திருதராஷ்டிரனின் சுயசரிதை” அவரைப் பார்த்துச் சிரித்தது.

     

    Share
  • வணங்குகின்றேன் மகிழ்வுடனே !

          ( எம் .ஜெயராமசர்மா … மெல்பேண் … .அவுஸ்திரேலியா )

    மடிமீது நான்கிடக்க
    மலர்ந்தவிழி தனைப்பார்த்து
    குடிமுழுதும் காக்கவந்த
    குலசாமி எனவழைத்து
    விரல்சூப்பும் எனைரசித்து
    வேதனைகள் தனைமறக்கும்
    எனதருமை அம்மாதான்
    எப்போதும் என்தெய்வம் !

    என்கண்ணில் நீர்கண்டால்
    ஏங்கியவள் தவித்திடுவாள்
    என்சிரிப்பைப் பார்த்தவுடன்
    எல்லாமே மறந்திடுவாள்
    என்எச்சில் தனையவளும்
    இன்னமுது எனநினைப்பாள்
    எப்படிநான் துப்பிடினும்
    இருகரத்தால் ஏந்திநிற்பாள் !

    பிடிவாதம் பிடித்தாலும்
    பெருங்குறும்பு செய்தாலும்
    கடிகின்ற உணர்வகற்றி
    கருணையுடன் எனைவணைப்பாள்
    அடியுதைகள் நான்கொடுக்க
    அவள்மடியைத் தந்துநிற்கும்
    அன்புநிறை அம்மாவே
    அவனிதனில் என்தெய்வம் !

    கோவிலுக்குச் சென்றாலும்
    குலதெய்வம் பார்த்தாலும்
    சாமியென அம்மாதான்
    சன்னதியில் தெரிகின்றாள்
    தூய்மைநிறை மனமுடையாள்
    துன்பமெலாம் தாங்கிடுவாள்
    வாய்மைநிறை அம்மாவை
    வணங்குகின்றேன் மகிழ்வுடனே !

    Share
  • காணாமல்போன பொங்கல்

    பா.ராஜசேகர்

     

    உனக்கு மட்டும்தெரியும்
    நாம் சந்திக்கும்போதெல்லாம்
    பொங்கல் வந்துபோவது.

    வளைந்து நெளிந்துதான் 
    கீழிறங்குகிறது அருவி
    மலைமுகட்டிலிருந்து
    நீ கீழிறங்குவதுபோல்.

    வயல் வரப்பின் புல்வெளிகள்
    பஞ்சுமெத்தையாய்
    உன்பாதங்களை தாங்கிக்கொள்கிறது
    என்னிதயத்தில்
    நீயும் அப்படித்தான்.

    நெல்மணிகள் வெட்கித்
    தலைகுனிந்து நிற்கின்றன
    உன்னழகில்.
    நீ என் கண்சிமிட்டலில்
    வெட்கத்தில் தலைகுனிகிறாய்.

    நான் பறித்துவந்த
    நாவல்பழத்தை இருவரும் ருசித்தோம்
    நாவல்பழம் உன்னை ருசித்ததை
    நான் மட்டும் கவனித்தேன்

    நீ எங்கிருக்கிறாய்
    எனக்குத்தெரியாது
    அருவி என்கண்களில்
    கீழிறங்குகிறது.

    நாவல் பழம் இப்போது
    கசந்துகிடக்கிறது
    அது உன்னை ருசிப்பதை
    இப்போது காண்பதற்கில்லை.

    வரப்புகளில் புற்களில்லை
    என்மனசைப்போல்
    சருகாகிக்கிடக்கிறது.

    என்எதிர்காலம் வெடித்துச்சிதறி
    சின்னாபின்னமாய் கிடக்கிறது
    நெல்மணிகள்
    நிறைந்திருந்த வயல்.

    நீயில்லாத பொங்கலை
    கடந்துகொண்டிருக்கிறேன்
    நிலவில்லாத வானமாய்!

     

    Share
  • வரலாறுகளின் வேர் -5

    -அண்ணாமலை சுகுமாரன்

    ANS-1-1 (1)

    கடந்து போன 19ம் நூற்றாண்டில் இந்திய துணைக்கண்டம் முழுமையும் (இந்தியா, நேபாளம் , பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தான் ஆகியவை , அவை அத்தனையும் அப்போது ஆங்கிலேயர் ஆளுகையில் இருந்தன )அசோகரின் கல்வெட்டுகள் மிக அதிகமாக கண்டுபிடிக்கப்பட்டன. மேலும் அவைகள் பிரின்செப்பின் முன்னெடுப்பால் புரிந்து கொள்ளப்பட்டன .. இந்திய வரலாற்றின் மிகப் பழமையான, குறிப்பிடத்தக்க நீளமான, முழுதும் புரிந்து கொள்ளப்பட்ட கல்வெட்டுகள் அசோகர் காலத்தவை மட்டுமே எனலாம். இதற்கு வழி வகுத்தது பிரின்செப் தான் என அந்தக்காலத்தில் அறியப்பட்டது .

    அசோகரின் கல்வெட்டுகள் பெருவாரியாக தூண் மற்றும் பாறைக்கல்வெட்டு என இரு பிரிவாகப் பிரிக்கப்பட்டன . பாறைக்கல்வெட்டுகள் மேலும் மூன்று பிரிவாகப் பிரிக்கப்பட்டன .அவை சிறு பாறை கல்வெட்டுகள் , கற்பாறை ஆணைகள் மற்றும் குகைக்கல்வெட்டுகள் ஆகும் .

    இவைகளைப் பற்றிய விரிவானத் தகவல்கள் ,இந்த கல்வெட்டுகள் தெரிவிக்கும் செய்திகள் மற்றும் கருத்துகள் சுவையானவை எனினும் நாம் பிரின்செப் பற்றிய தகவல்ளைத் தொகுப்பதாலும் , அவர் கண்டுபிடித்த கல்வெட்டுகளில் கிடைத்த தமிழ் நாட்டைப் பற்றிய தகவல்களில் மட்டுமே குறிப்பிட விரும்புவதால் , அதைப்பற்றிய செய்தியை மட்டும் இனி பார்க்கலாம் .இல்லையேல் இந்தத் தொடர் பாதை மாறிவிடும் .

    பொதுவாக அசோகர் தூண்களிலும் , கற்பாறைகளிலும், குகைச்சுவர்களிலும் பொறிக்கப்பட்ட அரசாணைகள், பிரகடனங்கள் எல்லாம் அசோகரின் சீர்திருத்தங்களையும் கொள்கைகளையும் குடிமக்களுக்கு வழங்கிய அறிவுரைகளையும் பறை சாற்றின. ஆயினும் அவற்றில் இரண்டாவது பாறைக்கல்வெட்டும் , 13 வது பாறைக்கல்வெட்டும் முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது .

    இரண்டாவது பாறைக்கல்வெட்டு இவ்வாறு கூறுகிறது ,

    1. ஸர்வத் விஜிதே(ம்)ஹி தேவாநாம்பிர்யஸ பிர்யதர்ஸினோ ராஞோ
    2. ஏவமபி ப்ர சந்தேஸீ யதா சோடா, பாடா ஸதியபுதோ கேதளபுதோ ஆ தம்ப
    3. பர்ணி அன்தியோகோ யோன ராஜா யே வாபி அன்தியகஸ் ஸாமிநோ
    4. ராஜானோ ஸவத தேவனாம் பியஸ ப்ரிய (பிய) தஸினோ ராஞோ த்வே சிகீச்சா கதா
    5. மனுஸ சிகிச்சா ச பஸீ சிகிச்சா ச ஔஸீதானி ச யாநி மனுசோபதானி ச
    6. பஸோ ப கானி ச யத் யத் நாஸ்தி ஸர்வத்ர ஹாரா பிதானி ச ரோபா பிதானிச
    7. முலானி ச ஃபலானிச யத் யத் நாஸ்தி ஸர்வத் ஹாரா பிதானி ச ரோபாபிதானி
    8. பந்தேஸீ கூபா ச கானாபிதா வ்ருச்சா ச ரோபா பிதா பரிபோக்ய பஸீ மனுஸாநம்

    தேவனுக்குப் பிரியமானவன் என குறிப்பிடப்பெறும் . அசோகர் தமது ஆட்சிக்குட்பட்ட பகுதியில் மட்டுமின்றி அண்டை நாடுகளான , சோழ, பாண்டிய, ஸத்தியபுத்திரர், கேரளபுத்திரர் மற்றும் அவருடைய அண்டைநாடுகளுக்கும் இரு வகை மருத்துவங்கள் அளிக்கப்படவேண்டும் என்பதை வலியுறுத்தியுள்ளதை இக்கல்வெட்டு தெரிவிக்கிறது . அதாவது மனிதருக்கும் விலங்கினங்களுக்கும் சிகிச்சை அளிக்கப்பெறுதல் வேண்டும். எங்கெல்லாம் மூலிகைச் செடிகளும் பழம் தரும் மரங்களும் இல்லையோ, அவைகள் கிடைக்கும் இடங்களிலிருந்து தருவித்து இல்லாத இடங்களில் நடப்படவேண்டும் என்றும், பசுக்கள் நீர் அருந்த கிணறு போன்ற நீர் நிலைகள் ஏற்படுத்தவேண்டும் என்றும் அறிவுறுத்துகின்றது. இவ்விதமாகப் பசுக்களும், மனிதர்களும் , மகிழ்வுடன் வாழவேண்டும் என்று அந்தக் கல்வெட்டு கூறுகிறது.

    இக்கல்வெட்டில் தமிழகத்தில் சங்க காலத்தில் வாழ்ந்த அரசர்களின் வம்ச பெயர்கள் குறிப்பிடப்பட்டுள்ளன.

    இதனால் அசோகருக்கு இணையான காலத்தில் ( கி மு 3ஆம் நூற்றாண்டுகளில்) தமிழ் மன்னர்கள் தமிழ் நாட்டுப்பகுதியில் வாழ்ந்தது தெளிவாகிறது .நமது சங்க இலக்கியங்கள் கூறும் செய்திகளுக்கு ஒரு வரலாற்று ஆதாரம் தமிழ் நாட்டுடன் சம்பந்தம் இல்லாத அசோகர் மூலம் வட இந்தியாவில் இருந்து கிடைக்கிறது .இது நமது தமிழக வரலாற்றிற்கு மிக முக்கிய சான்று ஆகும் . எனவேதான் இவைகளை சற்று விரிவாக எழுதினேன் .

    தமிழக வரலாற்றை குறிப்பாக சங்க காலத்தை கி பி .8ஆம் நூற்றாண்டு என மிகவும் பின்னோக்கி கொண்டு செல்லும் “டிக்கன்” போன்ற அறிஞர்களின் கருத்துகளைத் தவறானவை என இக்கல்வெட்டு மூலம் மெய்ப்பிக்க நமக்கு தக்க சான்றுகள் கிடைத்திருக்கிறது ..

    அசோகர் தனது அண்டை நாடாகக் குறிப்பிடுவதால் அசோகரின் ஆட்சியோ படையெடுப்போ தமிழகத்தில் நிகழவில்லை என்பது அவரது கல்வெட்டு மூலமே உறுதியாகிறது தமிழ் மன்னர்கள் இக்காலத்தில் ( கி மு 300)மிக வலிமைகொண்டு விளங்கியுள்ளனர் என்பதை அறிய முடிகிறது இவை வெளிவர உதவியவர் பிரின்செப் தான் என்பது நாம் அவரை நினைவு கூறுவது முக்கியமானதாகும் .

    தமிழ் மன்னர்கள் மட்டுமின்றி ஸத்தியபுத்திரர் என்ற ஒரு வம்சத்தின் பெயரோ அல்லது மன்னரின் பெயர் அந்தக் கல்வெட்டில் இடம்பெற்றிருந்தது ஸத்தியபுத்திரர் என்பது யாரைக் குறிப்பிடுகிறது என்பது நீண்ட காலம் ஒருபுரியாத, விடை தெரியாத கேள்வியாகவே இருந்துவந்தது .
    அந்த புதிரை திருக்கோவிலூர் அருகே ஜம்பை எனும் ஊரில் கிடைத்த ஒரு கல்வெட்டு புரியவைத்தது .இவ்வூரின் கிழக்குப் பகுதியில் அமைந்துள்ள குகை ஒன்றிலேயே இக் கல்வெட்டு அமைந்துள்ளது.

    கி.மு. முதலாம் நூற்றாண்டைச் சேர்ந்ததாகக் கணிக்கப்பட்டுள்ள இக்கல்வெட்டு தமிழ்நாட்டு வரலாற்றைப் பொறுத்தவரை மிகவும் முக்கியத்துவம் கொண்ட ஒரு கல்வெட்டாகக் கருதப்படுகின்றது.

    சங்ககாலத் தமிழ் இலக்கியமான புறநானூற்றில் பேசப்படுபவனும், தகடூர்த் தலைவனுமாகிய அதியமான் நெடுமானஞ்சி ஒரு குகை வாழிடத்தைத் தானமாகக் கொடுத்ததை இக் கல்வெட்டு அறிவிக்கின்றது.

    கல்வெட்டின் செய்தி: ஸத்திய புத்திரன் அதியன் நெடுமான் அஞ்சி என்பவர் தானமாகக் கொடுத்தே பாளி (சமணர் படுக்கை)

    சங்ககால அரசன் ஒருவனின் பெயர் கொண்ட கல்வெட்டுச் சான்று ஒன்று கிடைத்தது இந்தக் கல்வெட்டின் சிறப்பு. அத்துடன், அதியமான் இந்தக் கல்வெட்டில் “சதிய புத்தோ” என்னும் அடை மொழியுடன் குறிப்பிடப்பட்டுள்ளார் . இதன்மூலம் அசோகனின் கல்வெட்டொன்றில், சேர, சோழ, பாண்டியர்களுடன்”சதிய புத்தோ” எனக் குறிப்பிடப்பட்டுள்ள அரசகுலம் எது என்பது குறித்து நிலவிய விவாதங்களுக்கும் முற்றுப்புள்ளி வைப்பதாக அமைந்தது

    தமிழ் அரசர்களின் சிற்றரசர்காளாக விளங்கிய அதியமான் போன்றோரும் அசோகர் அறியும் வண்ணம் சிறப்புற்று விளங்கியுள்ளனர் என்பது தெளிவாகிறது. அசோகருக்கு அண்டை நாடாகக் குறிப்பிடப்படுவதால் அசோகரின் ஆட்சியோ படையெடுப்போ தமிழகத்தில் நிகழவில்லை என்பதை அறியலாம். தமிழ் மன்னர்கள் இக்காலத்தில் மிக வலிமைகொண்டு விளங்கியுள்ளனர் எனக் கூறலாம்.

    இனி 13 வது பாறைக்கல்வெட்டு கூறும் தகவல்களைப் பார்க்கலாம்.

    அவருடைய 13 வது பாறைக் கல்வெட்டில், தெற்கில் தம்பண்ணி அதாவது தாம்பரபரணி வரையான சோழ பாண்டிய நாடுகளில் தர்ம விஜயத்தில் வெற்றிகொண்டதாகக் கூறுகிறார் .

    இதில் சதிய புத்தோ அதியமான் நெடுமானஞ்சி பெயர் இடம் பெறவில்லை கேரளா புத்திர எனும் சேரர் பெயர் இடம் பெறவில்லை . இதற்குக்காரணம் முந்தய கல்வெட்டுக்கு சில ஆண்டுகள் சென்றபின் இந்தக்கல்வெட்டுப் பொறிக்கப்பட்டதால் அப்போது அதியமான் இறந்து போயிருக்கலாம் என தமிழ் இலக்கியத்தில் கல்வெட்டியல் கூறுகள் எனற புத்தகத்தில் முனைவர் ஆ .ஜெகதீசன் கூறுகிறார் .
    சேரர்கள் பாண்டியர்களால் வெல்லப்பட்டிருக்கலாம் .

    மேலும் அசோகர் தாம்பரபரணி வரையான சோழ பாண்டிய நாடுகளில் தர்ம விஜயத்தில் வெற்றிகொண்டதாகக் கூறுகிறார் . போரில் வென்று இந்தப்பிரதேசங்களைக் கொண்டதாகக் கூற இயலாது . அவரது போதனைகள் அங்கே பரவியதாகத்தான் தர்ம விஜயம் என்று குறிப்பிடுகிறார் எனக் கொள்ளலாம் .

    அதியமானைப்பற்றியும் தமிழ் மூவேந்தர் பற்றியும் வேறு ஒரு கல்வெட்டு தமிழ் நாட்டுக்கு வெளியே ஒரிசாவில் ( கலிங்கம் ) கிடைத்துள்ளது .

    இதைக்கண்டுபிடித்ததில் நேரடியாக பிரின்செப் அவர்களுக்கு தொடர்பு இல்லை என்றாலும் ,இந்தத்தருணத்தில் இந்த கல்வெட்டுப்பற்றியும் தெரிந்துக் கொள்வதில் தவறில்லை எனலாம் .

    இந்தியக் கல்வெட்டுகளிலேயே வரலாற்று நிகழ்ச்சிகளை அவை நடந்த ஆண்டுகளைக் குறிப்பிடும் முதல் கல்வெட்டு ஹத்திக்கும்பா கல்வெட்டாகத்தான் இருக்கக்கூடும். காரவேலன் என்ற மன்னர் தென்னாட்டில் அப்போது நிலவிய ஒரு கூட்டணியைப் பற்றிக் கூறுகிறார் .

    அந்தக்கூட்டணி நிலவியதால் தமிழ் நாட்டை வெல்லவில்லை எனக் கூறுகிறார் .

    , தமிழ் மூவேந்தர் உடன்பாடு பற்றிய குறிப்பில் 113 அல்லது 1300 ஆண்டு நீடித்திருந்த கூட்டணி என்றும், இந்தக் கல்வெட்டு ஆண்டுகளைக் குறிப்பிடுகிறது. தனசூலியக் கால்வாய் கட்டிய ஆண்டைப் பற்றிக் குறிப்பிடும் “நந்த ₃ ராஜ திவஸ ஸத” (नंदराज तिवस सत) என்பதை நந்தராசன் ஒருவனில் தொடங்கிய ஆண்டுக்கணக்கில் கொள்வதா அல்லது சமண சமயத்தைச் சார்ந்த காரவேல மன்னனுக்கு சமணத்தின் முக்கியமான வர்த்தமான மகாவீரர் மறைந்த ஆண்டிலிருந்து தொடங்கிய மகாவீரர் ஆண்டுக்கணக்கில் கொள்வதா என்பதில் கருத்து வேறுபாடு நிலவுகிறது. அதே போல “திவஸ ஸத” (மூன்று நூறு) என்பதை முந்நூறு என்று படிக்காமல் நூற்று மூன்று என்று ஏன் படிக்கிறார்கள் என்ற குழப்பம் இன்னமும் நிலவுகிறது . இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு மேலாக இயற்கையின் தாக்கத்தால் விளைந்த சேதங்கள் மட்டுமின்றி, சில எழுத்துகளின் மாறுபட்ட வடிவம், உளிக்குறிகளையும் எழுத்துகளையும் வேறுபடுத்த முடியாத குழப்பம், இவ்வைகளாலும் மழைநீராலும் சிதைந்த எழுத்துகள் என்று பலவற்றால் பதினேழு வரிகளைப் படிப்பதிலேயே ,அறிஞர்களிடையே சச்சரவுகளும் பல கருத்து வேறுபாடுகள் தொடர்ந்து வந்திருக்கின்றன

    இவ்வாறு பிரின்செப் அவர்களின் சீரிய முன்னெடுப்பால் அசோகரின் பிராமி எழுத்துகள் புரிதல் தொடங்கியது .

    அடுத்த வாரம் இன்னமும் சில முக்கிய நபர்களின் வரலாற்றுப் பங்களிப்பையும் , அதன் தாக்கம் என்ன என்பதையும் விபரமாகக்காணலாம்

    தொடருவோம்

    Share
  • “உன்னை அறிந்தால் “

    இன்று 17.01.17 புரட்சித் தலைவர், பொன்மனச் செம்மல், பாரத ரத்னா டாக்டர் எம்.ஜிஆர் அவர்கள் 100 வது பிறந்த தினம். அவர் நடிப்பில் என்னை பெருமளவில் ஈர்த்த வசனம் “ஆயிரத்தில் ஒருவன்” திரைப்படத்தில் அடிமைத் தனத்தை எதிர்த்து “உங்கள் அதிகாரம் என்ன சிலப்பதிகாரமா என்றும் நிலைத்து நிற்பதற்கு?” என்ற வசனமே. அவரைப் பற்றி அதிகம் அறிந்திருக்கவில்லை எனினும், நிறைய நல்ல விஷயங்கள் தெரிந்து கொள்ளலாம் அவர் நடிப்பில். அவர் நடித்த வேட்டைக்காரன் படத்தில் வரும் கவியரசர் கண்ணதாசன் பாடல்”உன்னை அறிந்தால்” என்பதன் கருவை மையமாக கொண்டு நான் புனைந்த கவிதை.

    aa

    “உன்னை அறிந்தால் “

    அன்பெனும் தோணியைத் துணையாகக் கொண்டு
    ஆழ்கடல் சமூகத்தில் அழகாய்த் தான் முத்தெடுக்க
    இன்னது யாதென்ன நீ செய்ய வேண்டுமெனில்
    ஈடற்ற ஆற்றலின் உறைவிடமாய்த் திகழும்
    உன்னதமான உன்னை நீ முழுவதுமாய் அறிந்துபின்
    ஊக்கமாய் அனைவரோடும் ஒருசேரக் கைகோர்த்து
    எண்ணும் எழுத்தும் கண்ணெனச சொல்வது போல்
    ஏற்றம் நல்கும் மானத்தையும் உயிரென மதித்து
    ஐயம் தெளிவுற அனைத்திலும் அறவே தெளிந்து
    ஒப்பற்ற உன்குடியும் உயர்ந்திடச் செய்தால்
    ஓர்நாளும் நீயுந்தான் வீரநடை போட்டு
    ஓ! என அனைவர் வியக்க, கோ என வலம் வரலாம்!
    தான்கற்று தனையறிந்ததோடு நில்லாது
    தன்னலம் தன்னையும் தகர்த்திடுவாய் நாளும்
    பிறர்நலன் நோக்கும் பேரறிவாளனாய் நீயிருந்தால்
    இந்நன்னிலம் தன்னில் மன்னனாவது உறுதி!!
    அதனால்
    உன்னதமான உன்னை நீ முமுவதுமாய் அறிந்து
    சமூகம்
    உயர்வடையச் செயலாற்றுவாய் நீயுந்தான் விரைந்து!

    – சித்ரப்ரியங்கா ராஜா.
    திருவண்ணாமலை.

    Share
  • இன்றைய பொருளாதார நிலை!

    பவள சங்கரி

    உலகத்தின் மொத்த செல்வத்தின் சரி பாதி எட்டு நபர்களிடம் மட்டுமே உள்ளது. அதுமட்டுமல்ல இந்தியாவின் 58% செல்வம் 1% நபர்களிடம் மட்டுமே உள்ளதாகவும் கணிக்கப்பட்டுள்ளது. இந்நிலை அரசுகளின் செயல்பாடுகளால் உறுதிபடுத்தப்பட்டு அதிகரிக்கப்படுகிறது. இதனால் 99% மக்களின் சமுதாய நிலைப்பாடு ஏழ்மை நிலையை நோக்கிச் செல்லும் அபாயமும் உள்ளது. அதாவது சனநாயக, சமதர்ம, சோசலிச கோட்பாடுகள் அனைத்தும் காற்றில் பறக்க விடப்படுகின்றன. இப்படியொரு நிலையில் per capita என்கிற தனிமனித வருமானம் எப்படி அதிகரிக்கும்? தனி மனித வருமானம் அதிகரிக்காமல் நாட்டின் பொருளாதாரத்திற்கு எஸ் & பி போன்ற பொருளாதார அமைப்புகளிடம் அதிகப்படியான அங்கீகாரத்தைப் பெறவும் முடியாது. ஆட்சி அமைப்புகளையே இந்த 1 சதவிகிதம் மக்கள் தங்கள் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்துவிடவும் வாய்ப்பு உள்ளது.

    உயர் மதிப்பு நோட்டுகள் செல்லாது என்று அரசு அறிவித்து இத்தனை நாட்கள் ஆன பிறகும் அதனுடைய பலன் மக்களை வந்து அடையவில்லை. இந்த அறிவிப்பால் உரூபாயின் மதிப்பு அதிகரித்திருக்க வேண்டும். விலை வீழ்ச்சி அடைந்திருக்க வேண்டும். ஆனால் இன்று விளை பொருட்களுக்கு உரிய விலை கிடைக்கவில்லை. இதற்கு மாறாக விலையேற்றங்கள் செயற்கையாக ஏற்படுத்தப்பட்டு வருகிறது. தொழிலாளர்கள் வேலை இழந்து வேலை வாய்ப்பும் கேள்விக்குறியாகவே உள்ளது. உரூபாயின் மதிப்பும் வீழ்ச்சியடைகிறது. பெட்ரோலியப் பொருட்கள் விலை ஏறும் முகத்தில் உள்ளது. மிகச்சிறந்த திட்டங்கள் கூட சரியான ஆளுமை இல்லாவிட்டால் தோல்வி அடையும் என்பதற்கு இது சாட்சியாகிவிடும் போலுள்ளது. 100 கோடி மக்களும் மிகப்பெரிய பின்விளைவுகளை ஏற்றுக் கொண்டதே தங்களுக்கு நல்லதொரு விடியல் பிறக்கும் என்ற எதிர்பார்ப்போடுதான். அனைத்து ஏடிஎம்களிலும் நாளொன்றிற்கு ₹ 10,000 நடப்புக்கணக்கில், ₹ 1 இலட்சமும், எடுக்கலாம் என்று ரிசர்வ் வங்கி அறிவித்தாலும் ஏடிஎம்களே திறக்காதபோதும், வங்கியில் பணம் இல்லாத நிலையிலும் அதிக தொகை எவ்வாறு எடுக்க முடியும். இவை அனைத்தையும்விட அனைவருக்கும் சரியான வருமானம் இல்லாதபோது வங்கிக் கணக்கு மட்டும் ஏறுவதற்கு அது அட்சயப் பாத்திரம் அல்லவே. உற்பத்திக்கும் தொழில் விற்பனைகளுக்கும், ஏற்றுமதிகளுக்கும், சரியான ஊக்குவிப்பு இல்லாவிட்டால் மிகப்பெரிய பொருளாதார தேக்க நிலை ஏற்படும் என்றே அஞ்ச வேண்டியுள்ளது.

    இந்தியாவின் பொருளாதாரம் மீண்டும் சீனாவைக்காட்டிலும் பின்னடைந்து விட்டது என்று சர்வதேச நாணய நிதியம் கூறியுள்ளது. சர்வதேச நாணய நிதியத்தின் உலகப் பொருளாதார மையத்தின் ( IMF) கருத்தின்படி, சீனாவின் 6.7% வளர்ச்சியுடன் ஒப்பிடும்போது 2016 இல் இந்தியா 6.6% வளர்ந்துள்ளதாக மதிப்பிடப்பட்டுள்ளது. தற்போதைய நிதி ஆண்டில் 1 சதவிகிதப் புள்ளி குறைவிற்கான காரணமாக இரண்டு மாதம் முன்பு உயர் மதிப்பு நோட்டு தடை செய்யப்பட்டதையேக் குறிப்பிடுகிறது.

    நவம்பர் 8-ம் தேதி பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் ஊழல், வரி ஏய்ப்பு போன்றவற்றிற்காக அதிரடியாக அறிவித்த இத்திட்டம் பெரும்பாலானவர்களின் மனம் கவர்ந்தது என்றாலும், 86% பணம் மட்டுமே சார்ந்த பொருளாதாரம் உள்ள நம் நாட்டில் உற்பத்தியையும், பல தொழில்களையும் பாதித்துள்ளதும் நிதர்சனம்.

    அரசாங்கத்தின் புள்ளி விபரங்களின் படி,செப்டம்பர் மாதம் முடிவுக்கு வந்த காலாண்டில், உயர் மதிப்பு நோட்டு தடைக்கு முன்பாக இந்தியா 7.3% வளர்ந்திருந்தது. இப்போதைய நிதியாண்டிற்கான வளர்ச்சி குறையப்போவதாகக் கணித்துள்ளதும் குறிப்பிடத்தக்கது.

    ஆய்வாளர்கள் இந்த மந்த நிலை அதிகமாகவும் வாய்ப்பிருப்பதாகக் கூறுகின்றனர். சர்வதேச நாணய நிதியமும் இதை ஒப்புக்கொள்வதாகவேத் தெரிகிறது. ஆயினும் 2017இல் 7.2% மற்றும் 2018 இல் 7.7% வளர்ச்சிப்பெறும் என்றும் கணித்துள்ளதுள்ளதும் ஆறுதலான விசயம் என்றாலும் மத்திய அரசும் ரிசர்வ் வங்கியும் என்ன நடவடிக்கை எடுக்கப்போகிறது என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

    Share
  • வேதனையின் உச்சம்!

    பவள சங்கரி

    இந்தியாவில் மொத்த பெண்கள் தொகை 40 கோடி. இதில் 40% பெண்கள் கிராமப்பகுதிகளில் விவசாயம் சார்ந்த பணிகளையே மேற்கொண்டுள்ளனர். இவர்களுக்கென்று சொந்தமாக விவசாய நிலங்களும் கிடையாது. அதனால் இவர்களுக்கு விவசாயி என்ற அங்கீகாரமோ அல்லது அரசின் உதவிகளோ, மானியங்களோ கிடைப்பதில்லை.

    Share