இன்றைய பொருளாதார நிலை!
பவள சங்கரி
உலகத்தின் மொத்த செல்வத்தின் சரி பாதி எட்டு நபர்களிடம் மட்டுமே உள்ளது. அதுமட்டுமல்ல இந்தியாவின் 58% செல்வம் 1% நபர்களிடம் மட்டுமே உள்ளதாகவும் கணிக்கப்பட்டுள்ளது. இந்நிலை அரசுகளின் செயல்பாடுகளால் உறுதிபடுத்தப்பட்டு அதிகரிக்கப்படுகிறது. இதனால் 99% மக்களின் சமுதாய நிலைப்பாடு ஏழ்மை நிலையை நோக்கிச் செல்லும் அபாயமும் உள்ளது. அதாவது சனநாயக, சமதர்ம, சோசலிச கோட்பாடுகள் அனைத்தும் காற்றில் பறக்க விடப்படுகின்றன. இப்படியொரு நிலையில் per capita என்கிற தனிமனித வருமானம் எப்படி அதிகரிக்கும்? தனி மனித வருமானம் அதிகரிக்காமல் நாட்டின் பொருளாதாரத்திற்கு எஸ் & பி போன்ற பொருளாதார அமைப்புகளிடம் அதிகப்படியான அங்கீகாரத்தைப் பெறவும் முடியாது. ஆட்சி அமைப்புகளையே இந்த 1 சதவிகிதம் மக்கள் தங்கள் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்துவிடவும் வாய்ப்பு உள்ளது.
உயர் மதிப்பு நோட்டுகள் செல்லாது என்று அரசு அறிவித்து இத்தனை நாட்கள் ஆன பிறகும் அதனுடைய பலன் மக்களை வந்து அடையவில்லை. இந்த அறிவிப்பால் உரூபாயின் மதிப்பு அதிகரித்திருக்க வேண்டும். விலை வீழ்ச்சி அடைந்திருக்க வேண்டும். ஆனால் இன்று விளை பொருட்களுக்கு உரிய விலை கிடைக்கவில்லை. இதற்கு மாறாக விலையேற்றங்கள் செயற்கையாக ஏற்படுத்தப்பட்டு வருகிறது. தொழிலாளர்கள் வேலை இழந்து வேலை வாய்ப்பும் கேள்விக்குறியாகவே உள்ளது. உரூபாயின் மதிப்பும் வீழ்ச்சியடைகிறது. பெட்ரோலியப் பொருட்கள் விலை ஏறும் முகத்தில் உள்ளது. மிகச்சிறந்த திட்டங்கள் கூட சரியான ஆளுமை இல்லாவிட்டால் தோல்வி அடையும் என்பதற்கு இது சாட்சியாகிவிடும் போலுள்ளது. 100 கோடி மக்களும் மிகப்பெரிய பின்விளைவுகளை ஏற்றுக் கொண்டதே தங்களுக்கு நல்லதொரு விடியல் பிறக்கும் என்ற எதிர்பார்ப்போடுதான். அனைத்து ஏடிஎம்களிலும் நாளொன்றிற்கு ₹ 10,000 நடப்புக்கணக்கில், ₹ 1 இலட்சமும், எடுக்கலாம் என்று ரிசர்வ் வங்கி அறிவித்தாலும் ஏடிஎம்களே திறக்காதபோதும், வங்கியில் பணம் இல்லாத நிலையிலும் அதிக தொகை எவ்வாறு எடுக்க முடியும். இவை அனைத்தையும்விட அனைவருக்கும் சரியான வருமானம் இல்லாதபோது வங்கிக் கணக்கு மட்டும் ஏறுவதற்கு அது அட்சயப் பாத்திரம் அல்லவே. உற்பத்திக்கும் தொழில் விற்பனைகளுக்கும், ஏற்றுமதிகளுக்கும், சரியான ஊக்குவிப்பு இல்லாவிட்டால் மிகப்பெரிய பொருளாதார தேக்க நிலை ஏற்படும் என்றே அஞ்ச வேண்டியுள்ளது.
இந்தியாவின் பொருளாதாரம் மீண்டும் சீனாவைக்காட்டிலும் பின்னடைந்து விட்டது என்று சர்வதேச நாணய நிதியம் கூறியுள்ளது. சர்வதேச நாணய நிதியத்தின் உலகப் பொருளாதார மையத்தின் ( IMF) கருத்தின்படி, சீனாவின் 6.7% வளர்ச்சியுடன் ஒப்பிடும்போது 2016 இல் இந்தியா 6.6% வளர்ந்துள்ளதாக மதிப்பிடப்பட்டுள்ளது. தற்போதைய நிதி ஆண்டில் 1 சதவிகிதப் புள்ளி குறைவிற்கான காரணமாக இரண்டு மாதம் முன்பு உயர் மதிப்பு நோட்டு தடை செய்யப்பட்டதையேக் குறிப்பிடுகிறது.
நவம்பர் 8-ம் தேதி பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் ஊழல், வரி ஏய்ப்பு போன்றவற்றிற்காக அதிரடியாக அறிவித்த இத்திட்டம் பெரும்பாலானவர்களின் மனம் கவர்ந்தது என்றாலும், 86% பணம் மட்டுமே சார்ந்த பொருளாதாரம் உள்ள நம் நாட்டில் உற்பத்தியையும், பல தொழில்களையும் பாதித்துள்ளதும் நிதர்சனம்.
அரசாங்கத்தின் புள்ளி விபரங்களின் படி,செப்டம்பர் மாதம் முடிவுக்கு வந்த காலாண்டில், உயர் மதிப்பு நோட்டு தடைக்கு முன்பாக இந்தியா 7.3% வளர்ந்திருந்தது. இப்போதைய நிதியாண்டிற்கான வளர்ச்சி குறையப்போவதாகக் கணித்துள்ளதும் குறிப்பிடத்தக்கது.
ஆய்வாளர்கள் இந்த மந்த நிலை அதிகமாகவும் வாய்ப்பிருப்பதாகக் கூறுகின்றனர். சர்வதேச நாணய நிதியமும் இதை ஒப்புக்கொள்வதாகவேத் தெரிகிறது. ஆயினும் 2017இல் 7.2% மற்றும் 2018 இல் 7.7% வளர்ச்சிப்பெறும் என்றும் கணித்துள்ளதுள்ளதும் ஆறுதலான விசயம் என்றாலும் மத்திய அரசும் ரிசர்வ் வங்கியும் என்ன நடவடிக்கை எடுக்கப்போகிறது என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.