-க. பாலசுப்ரமணியன் 

எப்படி சுயசரிதையை ஆரம்பிப்பது? திருதராஷ்டிரனின் சிந்தனை அலைபாய்ந்து கொண்டிருந்தது… அட என்னங்க.. திருதராஷ்டிரன் என்ற பெயரைப்பார்த்து ஆச்சரியப்படுகிறீங்களா? அது அவரோட புனைபெயருங்க…அவருடைய உண்மையான பெயர் சந்தானகோபாலன். அவர் கதை கவிதையெல்லாம் எழுத ஆரம்பித்தபோது ஒரு புனைப்பெயருக்காக ஏங்கிக்கொண்டிருந்தார். அப்போதாங்க.. அவருடைய மனைவி ஒரு டம்ளர் காப்பியை எடுத்துக்கொண்டு வந்து அவருடைய மேஜைமீது வைத்தார். அப்போது பத்திரிகை படித்துக்கொண்டிருந்த சந்தானகோபாலன் கவனிக்காமல் அந்தப் பத்திரிகையை மடிக்க.. அந்தக் காப்பி டம்பளர் கீழே விழ .. அவருடைய மனைவி “சரியான திருதராஷ்டிரன்…முன்னாலே வைத்த காப்பி கூட கண்ணிலே தெரியல” என்று சொல்ல, அவருடைமூளையிலே  அன்று எங்கேயோ ஒரு மணி அடித்தது. ஆகா.. அருமையான பெயர். யாரும் இந்தப் பெயரை வைத்துக்கொள்ள மாட்டார்கள் என்று நினைத்து அதையே தன் வசமாக்கிக்கொள்ள…இப்போது எல்லோருக்கும் அவர் “திருதராஷ்ட்டிரன்” தான்.

“என்ன பேருடா இது…” என்று அவருடைய அப்பா அங்கலாய்க்க “இத மாத்தித் தொலை..வேற நல்ல பெயரே உனக்குக் கிடைக்கவில்லையா?” என்று கேட்க இவரும் பதிலுக்கு “பெயரிலே என்னப்பா இருக்கு? இருந்தாலும் ஒரு  வித்தியாசமான பெயரைக் கேட்டதும் எல்லாரும் கொஞ்சம் திரும்பிப் பார்ப்பாங்க இல்லியா? ” எனக் கூறித் தனது முடிவை ஊர்ஜிதப் படுத்தினார். ஆண்டுகள் கடந்து விட்டன. திருதராஷ்டிரனின் பெயர் மட்டுமல்ல அவர் கதை கவிதைகள் அவருக்கு பத்திரிகை உலகில் ஒரு இடம் கொடுத்துவிட்டன.

அன்று காலை நடந்த நிகழ்ச்சி…

“ஏண்டா, ஏதோ சுய சரிதை எழுதப்போகின்றாயாமே” என்று கேட்டுக்கொண்டே தனது முதிர்ந்த வயதுக்கு முத்தாரமாய் உள்ள கம்பைக் கையில் வைத்துக்கொண்டே அவருடைய தந்தை அவரை நோக்கி வந்தார். திருதராஷ்டிரனுக்கு தூக்கிவாரிப் போட்டது. இவருடைய முடிவை இவர் யாரிடமும் சொல்லவே இல்லையே . இவருக்கு எப்படித் தெரிந்தது என்றுதான்.

“ஆஹா நேற்று தனது அலைபேசியில் பத்திரிகை ஆசிரியரோடு பேசிக்கொண்டிருந்ததை தன் மனைவி கேட்டுக்கொண்டிருப்பதை நினைவில் கொணர்ந்தார். “பிபிசி தொலைக்காட்சியை விட அதிக வேகத்தில் பரவும் ஒரு ஒலிப்பெருக்கி இயந்திரத்தை தன் வீட்டிலேயே வைத்திருப்பதன் பலன் தெரிந்தது.

“அதெல்லாம் ஒண்ணும் இல்லேப்பா… இன்னும் பிள்ளையார் சுழி கூடப் போடலை” என்று அதற்கு முற்றுப்புள்ளி வைக்க நினைத்தவருக்குத் தன் தந்தையின் அடுத்த வார்த்தை  மூளையின் கதிரியக்கத்தை வேகப்படுத்தியது. ” அதில்லேப்பா. உன்னோட சரிதைக்கே நான் தானே பிள்ளையார் சுழிபோட்டேன். அதை நினைவிலே வைத்துக்கொண்டு என்னைப்பற்றியும் கொஞ்சம் எழுது.” என்றார்.

தந்தையை முறைத்துப் பார்த்த திருதராஷ்டிரனுக்கு கோபம் தலைக்கு ஏறியது. இருந்தாலும் ஒரு அசட்டுச் சிரிப்பை அவிழ்த்துவிட்டு அமைதியானார்.

“என்னங்க பிள்ளைக்கிட்டே தனியாய்ப் பேச்சு?  அவனோட சுயசரிதைக்கு ஏதாவது ஐடியா கொடுக்கிறீங்களா?” என்று கேட்டுக்கொண்டே அவருடைய தாயார் தொடர்கதைபோல் பின்னே வந்தார்.

“என்னடாயிது..அதுக்குள்ளே எல்லோருக்கும் அலைபேசி மூலமா விஷயம் பரவிவிட்டதா?” என்று அவர் யோசிக்கும் நேரத்தில் “டேய் கோபாலா. சுயசரிதையில் அம்மாவுக்கு ஒரு முக்கிய பங்கு இருக்கு.. MGR  பாடுவாரில்லையா “தாயில்லாமல் நானில்லை”…அதான் .. அம்மா இல்லேன்னா சரிதையே இல்லை… தெரிஞ்சிதா..” என்று சொல்ல ” அலமு, அப்பாவுக்குத்தாண்டி முதல் இடம்” என்று அவர் கணவர் சொல்ல “இல்லீங்க… அன்னையும் பிதாவும் முன்னறி தெய்வம்” அம்மாவுக்குத் தான் முதலிடம் என்று அவள் வாதிக்க .. ஏண்டா, இதுக்கு ஒத்துக்கொண்டோம் என்று திருதராஷ்ட்ரன் தன் கண்களை மூடிக்கொண்டு “கிருஷ்ணா” என்று கஜேந்திரன் அழைத்ததைப் போல் அழைத்திட்டார்.

தலையைப் பிடித்துக்கொண்டு உட்கார்ந்திருந்த திருதராஷ்டிரனுக்கு வந்தது அடுத்த தலைவலி. “கேட்டுக்கொண்டுதானிருந்தேன் இவ்வளவு நேரம். கல்யாணமாகி என்னதான் இருபத்திஐந்து வருஷமானாலும் வீட்டிலே பெண்டாட்டிக்கு இடமில்லை.. என்னிக்குமே அப்பா பிள்ளை இல்லேன்னா அம்மா பிள்ளை. நீங்களெல்லாம் எதுக்குத்தான் கல்யாணம் பண்ணிகொள்கிறேங்களோ தெரியலை..” என்ற முகவுரையுடன் ஆரம்பித்த மனைவி பார்கவி தொடர்கதையானாள்.

‘பார்கவி. இன்னும் அதைப்பற்றி நான் நினைக்கவே இல்லை. ஏதோ அந்தப் பத்திரிகை ஆசிரியர் உங்கள் வாழ்க்கைப் போராட்டங்களை ஒரு சுய சரிதையாகப் பகிர்ந்து கொள்ளுங்களேன் என்று சொன்னார். யோசித்துச் சொல்லுகிறேன் என்று சொல்லிவிட்டேன். அதை பற்றி நான் யோசிக்கவேயில்லை. அதுக்குள்ளே இத்தனை சங்கடமா? ” என்கிறார்.

“இந்த பாருங்கோ.. பானை பிடித்தவள் பாக்கியசாலி என்று எங்க வீட்டுக்காரங்க சொன்னாலும் அதுக்கு மரியாதையில்லைன்னு எனக்குத் தெரியும்.

நீங்க உங்க சரிதையில் எனக்கு இடம் கொடுக்காவிட்டாலும் பரவாயில்லே. ஆனால் முன்னுரையிலேயாவது எனக்கும் பெண்டாட்டி பிள்ளைங்க இருக்காங்க என்று சொல்லுங்கோ..”

திருதராஷ்டிரனுக்குச் சுவரில் தலையை முட்டுக்கொள்ளலாம் போல இருந்தது. அவர் பேசாமல் சட்டையை மாட்டிக்கொண்டு வெளியே கிளம்பி விட்டார்.

தன்னுடைய பிளாட்டை விட்டுக் கீழே இறங்கி அப்பாடா என்று கேட்டை திறந்துதான் தெரியும்.. “நமஸ்காரம் கோபாலன் சார்…சுய சரிதை எழுதப்போறேளாமே “…. பக்கத்து பிளாட்டில் குடியிருப்பவர்…

”உங்களுக்கு யார் சொன்னா?”

“அதான்.. என் வீட்டுக்காரி நேற்றைக்கு கோவில் போனபோது  உங்க மனைவி சொன்னார்களாம் .. இல்லேன்னா எனக்கு எப்படித் தெரியும்..”

“ம்…”

‘ஞாபகம் இருக்கா.. இருபது வருஷம் முன்னாலே உங்களுக்கு வேலை இல்லாத போது  எப்படி எல்லாம் நாம பேசிக்கொண்டு இருந்தோம்…இள வயசு அப்போ… அதெல்லாம் எழுதுவேளோ  இல்லையோ… “

திருதராஷ்டிரன் அவரைப் பார்த்து சற்றே சிரித்தார்..

அது சரி.. நீங்க என்ன எழுதவேண்டுமென்று நான் சொல்லக்கூடாது…சரி. சரி.. உங்க அலைபேசிலே அழைப்பு யாரோ கூப்பிடறாங்க போலிருக்கு “..

திருதராஷ்டிரன் அலைபேசியைப் பார்க்க  ..”என்ன மாமா.. சௌக்கியமா.. நான்தான் சுதர்சனம் பேசறேன். அம்மா சொன்னாங்க.. நீங்க சுயசரிதை எழுதப்போறேள்னு .. வாழ்த்துக்கள்… சினிமா கதைக்கு உகந்த மாதிரி எழுதுங்கோ… உங்களுக்கு ஏதாவது ரொமான்டிக் எலிமெண்ட்ஸ் வேணும்னா சொல்லுங்க.. நான் எப்பவும் தயார்..”

திருதராஷ்டிரனின் தலை சுழன்றது.

“நன்றி” என்று வேண்டா வெறுப்பாகச் சொல்லிவிட்டு அலைபேசியைக் கீழேவைத்து விட்டார்.

சற்றே குழப்பத்தில் ஆழ்ந்த திருதராஷ்டிரன் வீடு திரும்பி யாரிடமும் பேசாமல் சாய்வு நாற்காலியில் அமர்ந்தார். அம்மா கொடுத்த காப்பியை எடுத்துக்கொண்டு வந்த அவர் மகன் “அப்பா. வாழ்த்துக்கள்.. உங்களுக்கு அதை கணினியில் போடவேண்டுமென்றால் என்ன உதவி வேண்டுமென்று சொல்லுங்கள். நானிருக்கிறேன். அந்த முகவுரையில் மட்டும் அதை நினைவாகப் போட்டுவிடுங்கள்.”

திருதராஷ்டிரனுக்கு காப்பி கசந்தது. தன் மேசையை நோக்கி விருட்டென்று சென்ற அவர் காகிதத்தில் பிள்ளையார் சுழி போட்டு எழுத ஆரம்பித்தார்.. “அன்புள்ள ஆசிரியருக்கு,  சுற்றத்தில் இருக்கின்ற அனைவருடைய சரிதைகளையும் எழுதிவிட்டு நடு நடுவே தன்னுடைய பெயரையும் இணைத்துக்கொள்ளுவது சுயசரிதையின் இலக்கணம் போலத் தெரிகின்றது. ஆகவே. இயலாமைக்கு மன்னிக்கவும்”

இரண்டு நாட்களுக்குப் பின் அலைபேசியில் ஆசிரியர் அழைத்து திருதராஷ்டிரனை சமாதானப்படுத்தி எழுத வைக்க, சில மாதங்களுக்குப் பின் அவருடைய சுயசரிதை வெளியானது. வெளியீட்டு விழாவிற்கு குடும்பத்திலிருந்து யாரும் செல்லவில்லை. எல்லோருக்கும் தனக்குரிய இடம் அதில் கிடைக்கவில்லையே என்ற ஆதங்கம்.

விழா முடிந்து மாலையும் கழுத்துமாக வீடு திரும்பிய அவரைப் பார்த்து மனைவி “குபுக்”கென்று சிரித்தாள். அவருக்கு நெஞ்சு கொஞ்சம் வலித்தது.

“என்ன சிரிப்பு?”

“இல்லேப்பா. உங்களை பார்த்தால் கல்யாணப் பரிசு சினிமாவிலே தங்கவேலு மாலையோட  வீட்டுக்கு வர காட்சி நினைவுக்கு வரது போல இருக்கு . சரிதானேம்மா?” என்று மகன் விளக்கம் கொடுத்தான்.

“தட்டினாங்களா?” என்று தொடர்ந்தாள் மனைவி. “அதான் கை தட்டினாங்களா?” அவர் அவளை முறைத்துப் பார்த்தார்.

மாலையிலே தன் நெருங்கிய தோழருக்கு புத்தகத்தின் ஒரு பிரதியை கொடுக்கச் சென்றபோது அந்த நண்பர் அவரிடம் கேட்டார் “சுய சரிதையை எழுதுவதின் உள்நோக்கம் என்ன கோபாலா?”

“நம்முடைய உண்மையான முகத்தை மறைத்து உண்மைகளின் முன்னே கண்ணை மூடிக்கொண்டு மற்றவர்கள் ஏற்கும் வகையிலே எழுதப்படும் நம்முடைய கதை” என்று அவர் பதில் சொல்ல அவர் கையில் இருந்த புத்தகத்தின் தலைப்பு “திருதராஷ்டிரனின் சுயசரிதை” அவரைப் பார்த்துச் சிரித்தது.

 

பதிவாசிரியரைப் பற்றி

1 thought on “திருதராஷ்டிரனின் சுயசரிதை!

  1. பலே பலே உங்க கதை நன்றாகவே இருக்கு. படு சுவாரஸ்யம். நிஜமாகவே யான் சுயசரிதை எழுதும்போது இப்படியெல்லாம் சங்கடங்கள் இல்லை. ஜம்மென்று இதுவரை 28 அத்யாயங்கள் வந்துவிட்டன. இலக்கியவேல் என்னும் எங்க ஆஸ்ரம மாத ஏட்டில்.
    ரொம்ப அருமையான இலக்கிய ஏடு. சந்தா 120 தான். சேருகிறீரா? உம்ம கதையும் அதில் போடலாம். பிறகு என் கதை ஒரு நூலாக வரும். பாலா அவர்களே.என் தாத்தாவும் கல்வி அதிகாரிதான்… கவியோகி வேதம்,தலைவர், லஹரி பாபாஜி(க்ரியா யோகா ஆஸ்ரமம், நீலாங்கரை, சென்னை-115

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *