அன்பினியவர்களே!

அன்பான வணக்கங்கள்.

இவ்வுலகமெனும் நாடகமேடையில் ஒருவார காலம் என்பது நிச்சயமாக வரலாறு எனும் நாடகத்தின் காட்சிகளை மிகவும் அதீத வகையினில் மாற்றி வைத்து விடக்கூடிய வல்லமை படைத்தது. ஜனநாயகம் என்பது மிகவும் வியக்க வைக்கத் தக்கது. உலகம் மாபெரும் மனிதக் கொடூரத்தை நிகழ்த்திய ஹிட்லரை முன்னணிக்குக் கொண்டு வந்தது ஜனநாயகம் எனும் காட்சியின் அடிப்படையில் என்பது சரித்திர உண்மை. மக்களின் அடிப்படை மன உணர்வின் ஓட்டத்தை நடுநிலைமை வகிக்கக்கூடிய அரசியல் கட்சிகள் புரிந்து கொள்ளத் தவறும் வேளையில், அவர்களின் எண்ணத்தின் பிரதிபலிப்பை உள்வாங்கிக் கொள்ளத்தவறும் வேளையில் மக்களின் அடிப்படை உரிமையான ஜனநாயகம் எனும் அரசியல் கொள்கையின் நடைமுறை முடிவுகள் உலக வழக்கங்களை முறியடிக்கும் வகையில் அமைவதைத் தடுக்க முடியாது. உலகின் பொருளாதார முன்னேற்றமாக உலகமயமாக்கல் அல்லது Globalization எனும் பொறிமுறையைப் பொருளாதாரத்தில் முன்னேற்றமடைந்த நாடுகள் கடைப்பிடிக்கத் தொடங்கியதன் காரணம் முதலாளித்துவப் பொருளாதாரக் கொள்கையின் அடிப்படையை வலுவாக்குதல் என்ற போதிலும் அதன் மூலம் பொருளாதாரத்தில் வளர்ச்சியடையாத நாடுகள் முன்னேறக்கூடிய சந்தர்ப்பம் உள்ளது எனும் காரணமே முதன்மைப்படுத்தப்பட்டது.

மூன்றாவது உலக நாடுகள் என வகைப்படுத்தப்பட்ட நாடுகளின் பொருளாதாரத்தை முன்னேற்றமடையச் செய்கிறோம் எனும் போர்வையில் பொருளாதாரத்தில் முன்னணி நாடுகளான அமேரிக்கா, இங்கிலாந்து, ஜேர்மனி போன்ற நாடுகளின் பெரிய கம்பெனிகள் தமது செலவுகளைக் குறைத்து இலாபத்தைப் பெருக்கிக்கொள்வதற்காகப் பிற்தள நிர்வாக வேலைகளை அந்நாடுகளிலிருந்து வளர்ச்சியடையும் நாடுகள் என வகைப்படுத்தப்பட்ட நாடுகளுக்கு அப்புறப்படுத்தின. அது மட்டுமன்றி வெளிநாட்டுக் குடியேற்றத்தைக் கட்டுப்படுத்தத் தவறியதன் காரணமாகவும் அந்தந்த நாட்டு மக்களின் வேலைவாய்ப்புக்கள் குன்றியதோடு அடிப்படை வாழ்க்கைத்தரம் குன்றியது. இவைகளோடு சேர்ந்து 2008ஆம் ஆண்டு உலக வங்கிகளில் ஏற்பட்ட சரிவினால் அகில உலகமே ஒரு பொருளாதார அதிர்வுக்குள்ளாகியது. விளைவு மக்களின் வாழ்வாதாரங்கள் மேலும் பாதிக்கப்பட்டது. இவைகளுக்கெல்லாம் சிகரம் வைத்தாற்போல பாரிய கம்பெனிகளின் தலைமைத்துவத்திலிருப்பவர்களின் ஊதியம் 200, 300% என அதிகரித்தது. இவையெல்லாம் வாழ்க்கையின் மத்தியதர வர்க்கத்தினர் என வருணிக்கப்பட்ட மக்களின் வாழ்வினை மிகவும் பாதித்தது. சந்தர்ப்பவசமாக இந்த மத்தியதர உழைக்கும் வகுப்பினைச் சேர்ந்த மக்கள் அந்தந்த நாடுகளின் இனத்தினைச் சேர்ந்தவர்களாக இருந்ததன் காரணமாக ஒருவிதமான இனவாதக் கருத்துக்களும் இவர்களின் மனங்களில் மேலோங்கத் தலைப்பட்டது.

விளைவு!

இந்தவாரம் உலக வரலாறு எனும் புத்தகத்தில் ஒரு புதிய அத்தியாயத்தை அன்றி ஒரு புதிய திருப்பத்தைத் தோற்றுவிக்கப் போகிறது. ஆமாம் இந்தக் கட்டுரை பிரசுரமாகும் 20ஆம் திகதி வெள்ளிக்கிழமை உலக நாடுகளில் அதி முக்கியம் பெற்ற ஒரு நாட்டுத் தலைவர் பதவியைத் தனதாக்கிக் கொள்ளப் போகிறார் ஒரு மனிதர். அமெரிக்க ஜனாதிபதித் தேர்தலில் வெற்றியீட்டிய திரு. டொனால்ட் ட்ரம்ப், கடைசிவரை வெற்றிபெற முடியாதவர் என பல முன்னணிச் செய்தி ஊடகங்களினாலும், பல முன்னணி அரசியல் விமர்சகர்களினாலும் வருணிக்கப்பட்ட டொனால்ட் ட்ரம்ப் அமெரிக்க ஜானாதிபதியாக முடிசூட்டிக் கொள்ளப்போகிறார் எனும் சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்வை அடக்கிக் கொண்டுள்ள பெருமையை இவ்வாரம் பெற்றுக்கொள்கிறது. அது அமெரிக்க நாட்டின் சாபம் என்று ஒரு சாராரும், இல்லை இது உலகில் பல நன்மைகளை விளைவிக்கப் போகிறது என்று ஒரு சாராரும் இடைவிடாது தர்க்கித்துக் கொண்டிருக்கிறார்கள். யார் விரும்பினாலும்,விரும்பாவிட்டாலும் திரு.டொனால்ட் ட்ரம்ப் உலகில் அதிக செல்வாக்குள்ள நாட்டின் அதிபராகப் போகிறார் என்பதே மறுக்கப்பட முடியாத உண்மை.

இதுவரைத் தனது வாழ்வில் எந்தவொரு அரசியல் பதவியையும் வகிக்காத ஒருவர், மாறி, மாறி வித்தியாசமான அரசியல் கட்சிகளுக்கு நிதி உதவி அளித்ததைத் தவிர வேறு எந்தவிதமான அரசியல் பின்னணியையோ அன்றி அரசியல் அறிவையோ கொண்டிருக்காதவர் என்பது போன்ற தகைமைகளுக்குப் பெயர் போனவர் டொனால்ட் ட்ரம்ப். இன்றைய சூழலில் அவரின் நடவடிக்கைகளை அவதானித்து, அவரின் செயற்பாடுகள் அமேரிக்காவின் 45ஆவது அதிபரை எப்படிப்பட்டவராக சரித்திரப் புத்தகத்தில் எழுதப்போகிறது என்பதைப் புரிந்து கொள்வதே எம்முன்னால், எம்மால் ஆற்றக்கூடிய ஒரேயொரு செயல்.அமெரிக்க நாட்டின் உயர்வும், தாழ்வும் அமெரிக்க நாட்டை மட்டுமே பாதிக்கப் போகிறது நமக்கென்ன எனும் கொண்டிருப்போரை எண்ணிப் பரிதாபப்படவே முடிகிறது. விரும்பியோ, விரும்பாமலோ அமெரிக்க நாட்டின் பொருளாதார நிலையின் அடிப்படையிலே உலகநாடுகளின் பொருளாதார முன்னேற்றமும் தங்கியுள்ளது. உலகத்தின் சமாதனம், அமைதி என்பனவற்றின் உறுதி அமெரிக்க நாட்டின் வெளிநாட்டுக் கொள்கையின் அடிப்படையில் தங்கியுள்ளது என்பது உண்மை.

உலகம் இன்று எதிர்நோக்கும் பிரச்சனை ஒரு புதுவிதமான திசையை நோக்கிப் பயணிக்கிறது. உலகமயமாக்குதல் எனும் கொள்கை தமது நலன்களுக்கு எதிராகச் செல்கிறது என்று எண்ணம் கொண்ட மக்களைக் கொண்ட நாடுகள் தமது எல்லைகளைச் சுருக்கிக் கொள்ளத் தலைப்படுகின்றன. அதே போலக் கிழக்காசிய நாடுகளில் பொருளாதார வளர்ச்சியில் திளைத்திருக்கும் நாடுகளின் மனோநிலைகள் வித்தியாசமான ஒரு எண்ணத்தில் திளைத்திருக்கின்றன. இவை இரண்டுக்குமிடையிலான வேறுபாட்டை வைத்துத்தான் பலநாடுகளின் அரசியல் வியாபாரம் நடந்து கொண்டிருக்கிறது. மேலைநாடுகளோ தமது பொருளாதாரக் கொள்கையின் வீழ்ச்சியை விளக்குவதற்கு வெளிநாட்டவரின் குடியேற்றம் அதாவது Immigration என்பதை முக்கியக் காரணியாகக் காட்டி தம்மைக் காப்பாற்றிக் கொள்ளும் நடவடிக்கையில் ஈடுபட்டிருக்கின்றன. வெளிநாட்டிலிருந்து தம் நாட்டில் குடியேறியவர்கள் தமது கலாசாரத்தினுள் தம்மை மூழ்கடித்துத் தமது சொந்த நாட்டிலேயே தமது அடையாளத்தை தொலைக்கப் பண்ணி விடப்போகிறார்கள் எனும் பீதியில் இத்தகைய வாதங்களுக்கு அந்தந்த நாட்டு மக்கள் விலை போகிறார்கள். இதற்கான முற்று முழுதாக அவர்களைக் குறைகூறி விட முடியாது. வெளிநாட்டிலிருந்து புகலிடம் தேடி இந்நாடுகளில் எமது வாழ்வினை அமைத்துக் கொண்டவர்கள் முழுமனதுடன் இந்நாட்டினை எமது நாடாக கருதும் மனப்பான்மையைக் கொண்டிருக்கிறோமா என்றால் “இல்லை” என்பதுவே உண்மையான, நேர்மையான விடையாகும்.

இதற்கு என்ன காரணம்? அடுத்தவரின் அறிவை, அவர்களின் தெளிந்த உணர்வை எமது அறிவையும், தெளிந்த உணர்வையும் விட குறைத்து மதிப்பிடுவதே காரணமாகும். அடுத்தவரைவிட நாம் அனைத்திலும் மேலோங்கியவர்கள் எனும் காரணத்தினால் அவர்களை விட அனைத்திலும் நாம் மேலோங்கி வாழ்ந்து விடலாம் எனும் ஒரு குறுகிய மனப்பான்மையே இதற்குக் காரணமாகும். இந்த உலகம் அனைவர்க்கும் பொதுவானது. நாம் அடுத்தவர்களின் உணர்வை மதித்து வாழ வேண்டும் எனும் வாதங்களின் உண்மையான தாத்பரியத்தை உணராமல் எம்மைப் பற்றி நாமே நியாயமற்ற வகையில் பெருமை கொள்வதே அடிப்படைக் காரணமாகிறது. எத்தனையோ ஆயிரம் மைல்களுக்கப்பால் இருந்து வாழ வழி தேடி வந்திருக்கும் எங்களுக்கு வாழ வழி சமைத்துக் கொடுத்த இந்நாடுகளின் சொந்தக் கலாசாரத்திற்கு மதிப்பளித்து வாழவேண்டும் என்பதை மறந்து போய்விடுகிறோம். நாம் பிறந்த எமது தாய்நாடுகளில் உரிமைகள் மறுக்கப்பட்ட நிலையில் அந்நாடுகளில் போராடினால் உயிரையே இழந்து விடக்கூடிய நிலையில் எமக்கு அடைக்கலம் தந்த நாடுகளில் அவர்கள் அளிக்கும் சுதந்திரத்தை அவற்றின் எல்லைக்கே கொண்டு சென்றுவிடுவதில் நாம் வல்லவர்களாயிருக்கிறோம். அதற்காக நாம் எமது மொழியையும், கலாசாரத்தையும் இழந்து அடையாளமின்றிப் போக வேண்டும் என்பதல்ல எனது வாதம். எமக்கு அளிக்கப்பட்ட சுதந்திரத்தை எமது எல்லைகளுக்குள் அடுத்தவர் மீது திணிக்காத வகையில் வாழ்வதே சரியான வழியாகும் என்பது எனது கருத்து.

அன்பினியவர்களே இதையெல்லாம் இம்மடலின் மூலம் நான் உங்களுடன் பகிர்ந்து கொள்வது ஏதோ, எதையோ சாதித்து விடப் போகிறோம் என்பதனால் அல்ல. இன்றைய உலகின் போக்கு மிகவும் கவலையளிக்கிறது. உலக அரசியல் நிகழ்வுகள் ஒரு எதிர்மறையான தாக்கத்தை அளிக்கின்றன. இத்தகைய நிலையைத் தோற்றுவிப்பதற்கு எது காரணம் அன்றி நாம் எந்த வகையில் காரணமாக இருந்திருக்கிறோம் எனும் கேள்விக்கு இந்தச் சாமான்ய மனுஷனின் ஒரு அலசலே!

மீண்டும் அடுத்த மடலில்…

அன்புடன்
சக்தி சக்திதாசன்

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *