சல்லிக்கட்டு பிரச்சனையின் உச்சநிலை!
பவள சங்கரி
தலையங்கம்
மத்திய அரசு சல்லிக்கட்டு பிரச்சனையை மாநில அரசின் பக்கம் திருப்பிவிட்டது.
உச்சநீதி மன்றம் சென்னை உயர்நீதி மன்றம் பக்கம் பிரச்சனையை திருப்பிவிட்டது.
இனி தமிழக அரசும் சல்லிக்கட்டு ஆதரவாளர்களும் என்ன செய்யப்போகிறார்கள்?
போராடும் மாணவர்களுக்கு உணவும் குடிநீரும் மின்சாரமும் வழங்கப்படவேண்டியது மாநில அரசின் தலையாய கடமை. மின்சாரத்தை தடை செய்து சட்டப்பிரச்சனைக்கு மாநில அரசு உள்ளாகப்போகிறதா?
பிரச்சனை மாநில அரசிற்கு எதிராகத் திரும்பும் வாய்ப்புகள் மிக அதிகம் என்பதே இன்றைய நிலை.
தமிழர் பண்பாட்டிற்கு ஆதரவாக மாநில அரசு செயல்பட்டு சட்டசபையைக்கூட்டி சட்டத் திருத்தம் அல்லது அவசரச் சட்டம் கொண்டுவருமா?
மாநில அரசை ஆதரிப்பதாக உறுதியளிக்கும் மத்திய அரசு மாநில அரசு சட்டம் இயற்றினால் மத்திய அரசு அச்சட்டத்தை ஏற்று குடியரசுத் தலைவர் கையொப்பமிட வழிவகுக்குமா?
சல்லிக்கட்டு போராட்டம் மாணவர்கள்/இளைஞர்கள் போராட்டம் என்ற நிலை மாறி இன்று ஒட்டுமொத்த தமிழர் பிரச்சனையாக உருவெடுத்துள்ளது. வணிகர்கள் தொழிற்சஙகங்கள், திரையரங்குகள், ஆட்டோ, டாக்சி ஓட்டுநர்கள், பேருந்து ஓட்டுநர்கள், நடிகர்கள், தயாரிப்பாளர் சங்கத்தினர் என அனைத்து பொது மக்களும் ஒன்றாக இணைந்து போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து கடையடைப்பு, உண்ணாவிரதம் என அனைத்துத் தமிழர்களும் ஒன்றுகூடி தமிழன் ஓர் இனம் என போராட முன்வந்துள்ளனர்.
அரசு என்ன முடிவு எடுக்கப்போகிறது?