சரஸ்வதி ராசேந்திரன்

 

அண்டத்தில் பிறந்தவரெல்லாம்
பிண்டத்தில் ஒரு நாள் அடக்கம்
கண்டபடி பொருள் சேர்க்க இதில்
சண்டை போட்டு அலைவதேன் ?

பொருளில்லாருக்கு இவ்வுலகம் இல்லை
பொருள் பொதிந்த வார்த்தைதான் அந்த
பொருள் அளவோடு இருந்தாலே
பொருந்தாதா வாழ்க்கை பயணம் ?

கோடி கோடியாய் பணத்தை சேர்க்க
ஓடி ஓடி ஓய்வில்லாமல் தேடிஅலைந்து
கூடை கூடையாய் குவித்து வைத்தாலும்
பாடையிலே போகும் போது கூடவா வரும்?

நிறைந்த மனதை உடையவனே
நிம்மதியாக வாழ்கிறான்
செல்வத்தின் நிலையாமையை அறிந்தவன்
செல்வத்தைத்தேடி பேயாய் அலைவதில்லை

கூடுகின்ற நட்பு கூட்டமும்
நாடுகின்ற உறவு கூட்டமும்
ஆடை கழற்றுவது போன்று
ஜாடையாக ஒதுங்கிடுவார் செல்வம் போனால்
யார் யாரையோ வஞ்சித்து பொருள்
சேர்த்து என்ன பயன் உனக்கு ?
கடைக்கூட்டு நேரத்தில்
கடைசியில் மிஞ்சுவது இதுதான்

விளக்கம் – கடைக்கூட்டு—-அந்திம சமயம்
ஆதாரம்; ; தமிழ் அகராதி

 

உங்கள் கருத்துகளைத் தெரிவிக்க