Featuredஇலக்கியம்கட்டுரைகள்பத்திகள்

கற்றல் ஒரு ஆற்றல் 61

க. பாலசுப்பிரமணியன்

கற்றலும் பள்ளிச்சூழ்நிலைகளும் (1)

education-2-1

வீட்டுச் சூழ்நிலைகள் எவ்வாறு கற்றலின் அளவையும் திறனையும் பாதிக்கின்றதோ, அதேபோல் பள்ளிச்சூழ்நிலைகளும் ஒரு தனிப்பட்ட மற்றும் ஒரு மாணவ சமூகத்தின் காற்றலையும் சிந்தனைகளையும் திறன்களையும் பாதிக்கின்றன. ஆகவே கற்றலுக்கான சூழ்நிலைகளுக்கேற்ப கல்விநிலையங்கள் அமைத்தல் அவசியமாகின்றது. முன்காலத்தில் கற்றல் பொதுவாக இயறக்கையைச் சார்ந்த சூழ்நிலைகளிலும் வெளிப்புறங்களில் வாழ்க்கையோடு இணைந்து காணப்பட்டது. இதனால்தான் சான்றோர்கள் “ஒரு பள்ளி செங்கல் சுண்ணாம்புச் சுவர்களால் காட்டப்படுவதில்லை. அவை மேம்பட்ட குறிக்கோள்களால் கட்டப்படுகின்றன” என்று கூறி வந்தனர்.

பொதுவாக கல்விநிலையங்கள் எங்கே அமைக்கப்படவேண்டும் என்பதற்கான சட்டபூர்வமான விதிமுறைகள் கல்வித்துறைகளிலும் அரசு கண்காணிப்புத் துறைகளிடமும் செயல்வடிவத்தில் முறைப்படுத்துவதற்க்காக உள்ளன. ஆனால் பெரும்பாலான விதிமுறைகள் மீறப்பட்டோ, நடைமுறையிலிருந்து விலக்கப்பட்டோ இருப்பதால் பல இடங்களில் கற்றலுக்கான சரியான சூழ்நிலைகள் இருப்பதில்லை.

உதாரணமாக, ஒரு பள்ளியைக் கட்டுவதற்கு இடம் தேடும்பொழுதே விதிமுறைகளை கவனத்தில் கொள்ளுதல் அவசியம். பள்ளிகள் பொதுவாக மருத்துவ நிலையங்களுக்கு அருகிலோ, இடுகாடு/சுடுகாடுக்களுக்கு அருகிலே, சந்தை மற்றும் சினிமா அரங்குகளுக்கோ அருகிலோ இருக்கக்கூடாது. பல இடங்களில் மாணவர்களுக்கு தொற்றுநோய் பரவுவதற்க்கான வாய்ப்புக்கள் இருக்கலாம். அதே போல் ஒளி,ஒலி மற்றும் உடலுக்கும் மனத்துக்கும் ஒவ்வாத நாற்றங்கள் இருக்கும் இடங்களில் கற்றலில் பாதிப்பு ஏற்படுவதுமட்டுமின்றி மாணவர்களின் மனநிலைகளின் வளர்ச்சியையும் பாதிக்க வாய்ப்புக்கள் உண்டு.

திரை அரங்குகள், சந்தைகள், பெரிய அங்காடிகள் அருகில் பள்ளிகள் இருக்கும் பட்சத்தில், மற்றும் அதிகமான போக்குவரத்து இருக்கும் சாலைகளின் அருகில் இருக்கும் பட்சத்தில், அதிகமான ஒலிஅலைகள் கற்றலின் தரத்தை பத்திப்பதுமட்டுமின்றி மாணவர்களுக்கு மன உளைச்சலையும் கொடுக்க வாய்ப்புள்ளதாக ஆராய்சசிகள் தெரிவிக்கின்றன. பொதுவாக போக்குவரத்து அதிகமுள்ள இடங்களில் வெளிப்படும் புகைமண்டலங்கள் மூச்சுக்காற்றோடு கலந்து  சுவாசிக்கப்படும் பிராண வாயுவின் தரத்தைக்குறைப்பதால் மூளைக்குச் செல்லும் ஆக்சிஜனின் அளவு குறைவதாலும் கற்றலின் தரம் மற்றும் அளவுகள் பாதிக்கப்படுகின்றன. ஆகவேதான், பள்ளிகளை சுற்றி இயற்கைவளம் இருத்தல் அவசியமாக கூறப்படுகின்றது. பள்ளிகளில் எங்கெங்கு மரங்களை நடுவதற்கு வாய்ப்புக்கள் இருக்கின்றனவோ அந்த இடங்களை இயற்கை வளத்தால் நிரப்புதல் அவசியம்.

வெளிநாட்டில் செய்யப்பட்ட ஒரு ஆராய்சசியில் விமான தளங்களுக்கு அருகில் கட்டப்பட்ட பள்ளியின் மாணவர்கள் செயல்திறன் அதிகமாக பாதிக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர் ஒலிஅலைகளின் தாக்கத்தால் என்று கண்டுபிடிக்கப்பட்டது. கவனக்குறைவு, கவனச்சிதைவு, அறிதலில் காலதாமதங்கள், குறைவான புரிதல் திறன்கள், சோர்வு, தாழ்வு மனப்பான்மை ஆகியவை மாணவர்களிடம் வளருவதற்கான வாய்ப்புக்கள் இருப்பதாக அறியப்பட்டுள்ளது,

இதேபோன்று இரயில் தண்டவாளங்களுக்கருகில் பள்ளிக்கட்டிடங்களை கட்டுதல் கற்றலுக்கு உகந்தது மட்டுமல்ல அது சில நேரங்களில் பாதுகாப்பின்மைக்கு காரணமாகின்றது. பல ஆண்டுகளுக்கு முன் ஒரு இரயில் வண்டி பள்ளிக்கருகில் வேகமாகக் கடந்தபோது அந்தப் பள்ளிக்கு கட்டிடம் கீழே விழுந்து குழந்தைகளின் மரணத்திற்கு காரணமாகவும் அமைந்தது.

சில இடங்களில் தொழிற்சாலைகளை ஒட்டிய ஊழியர்களுக்கான சிறுநகர்ப்புறங்கள் கட்டப்பட்டு அதன் நடுவே அவர்களுக்கு வசதிசெய்யும் வகையில் பள்ளிகள் கட்டப்படுகின்றன. இந்தப் பள்ளிகள் பல நேரங்களில் அந்தத் தொழிற்சாலைகளிலிருந்து வெளிப்படும் புகை மண்டலங்கள், கழிவு நீர் கலப்புக்கள் காரணமாக தீராத நோய்களுக்கு காரணமாக அமைகின்றன. ஆகவே பள்ளிகள் கட்டப்படும் பொழுது இவைகள் கவனத்தில் கொள்ளுதல் அவசியமாகின்றது.

கற்றலில் விளையாட்டிற்கும் உடற்பயிற்சிக்கும் முக்கிய பங்கு இருப்பதால் பள்ளிகளில் அதற்கான தகுந்த இடம் மற்றும் வசதிகள் தேவைப்படுகின்றது. ஆனால் பல பள்ளிகளில், மாணவர்களின் எண்ணிக்கைகள் அதிகமாக, கட்டிடத் தேவையயை முன்னிறுத்தி அந்த இடங்கள் ஆக்ரமிக்கப் படுகின்றன. ஆகவே, மாணவர்களுக்கு கல்வியில் தேவையான ஒரு முக்கிய பகுதி இல்லாமல் போகின்றது. இதை அதிகாரிகள் கவனித்தல் தேவை.

இதே போன்று மலைப்பாங்கான இடங்களில் கற்றலுக்கு மாறுபட்ட சூழ்நிலைகள் தேவைப்படுகின்றன. அந்த இடங்களில் நில நடுக்கங்கள், அதிர்ச்சிகள், மலைச் சரிவுகள், தொடர் மழைகள் ஆகியவற்றை முன்னிருத்திப் பள்ளிக்கட்டிடங்கள் அமைத்தல் அவசியமாகின்றது. நாட்டில் மழை அதிகமாகப் பெய்யும் இடங்களில் நீர் வெளியேற்றத்திற்கான கருத்துகளை மனத்தில் நிறுத்தி கட்டிட அமைப்புகள் வடித்தல் அவசியமாகின்றது.

கற்றலுக்கு பாதுகாப்பான சூழ்நிலைகள் மிக அவசியம். எவ்வாறு பாதுகாப்பில்லாத சூழ்நிலைகள் கற்றலை பாதிக்கின்றன என்பதைத் தொடர்ந்து பார்ப்போம்.

(தொடரும்)

Print Friendly, PDF & Email
Share

உங்கள் கருத்துகளைத் தெரிவிக்க