கண்ணியம் காத்த இளைஞர்கள்!

2

பவள சங்கரி

தலையங்கம்

25,00000 இளைஞர்கள் 500 இடங்களில் அமைதியாக, காந்தீய வழியில் போராடி வெற்றி பெற்று சாதனை படைத்திருக்கிறார்கள். உலகமே உற்று நோக்கி வியந்து நிற்கும் வகையில் வரலாறு படைத்திருக்கிறார்கள். இப்படியொரு தீப்பொறி அவர்களுக்குள் கனன்று கொண்டிருப்பதே வெளியில் தெரியாமல் பொத்தி வைத்திருந்தவர்கள் அதன் எல்லை மீறி இன்று பெருந்தீயாக கொதித்தெழுந்துள்ளார்கள். கங்கு கூட குளிர்த் தென்றலாய் அமைதி காக்கும் என்பதையும் உணர்த்தி, சரித்திரம் படைத்துள்ளார்கள். என் மனச்சாட்சியே எனக்குத் தலைவன், முகமூடியணிந்த எந்த தலைவனும் எங்களுக்குத் தேவையில்லை என்று ஒற்றுமையுடன் கூடி நின்று நினைத்ததை நடத்தி சாதனைப்படைத்து விட்டார்கள். புல்லுறுவிகளாக உள் நுழைய முற்பட்ட சாதி அரசியல்வாதிகளையும், அதனுள் விட்டிலாய் வீழ இருந்தவரையும் அடையாளம் கண்டு நாசூக்காக ஓரங்கட்டிய சடங்குகளும் அழகாக நடந்துள்ளன. வெகு இயல்பாக இளைஞரோடு இளைஞராக கலக்க இருந்த புல்லுருவிகளையும் நிதானமாக திறமையாக வெளியேற்றிய சாதனைகளையும் பாராட்டாமல் இருக்க முடியவில்லை. இலக்கு நேர்மையானதாக, தன்னலமற்றதாக, நாட்டின் நலனை மட்டுமே கருத்தில்கொண்டதாக இருக்கும்பட்சத்தில் வெற்றி நிச்சயம் என்பதை மிக அழகாகத் தெளிவுபடுத்தியுள்ளனர். குப்பை போடாமல், தீய சொற்களையும், தீய செயல்களிலும் ஈடுபடாமல் மனமுதிர்ச்சியுடன் நடந்துகொண்ட இந்த துள்ளிவரும் காளைகள் இன்றைய அரசியல்வாதிகளுக்கு எப்படி நடந்துகொள்ள வேண்டும் என்று பாடம் புகட்டியுள்ளனர். இதற்கு மேலும் திருந்தாவிட்டால் அடுத்து அவர்களின் நடவடிக்கை எப்படியிருக்கும் என்பதையும் தெளிவாகவே உணர்த்தியுள்ளார்கள். அண்டை மாநில இளைஞர்களும் தன்னார்வத்துடன் உதவிக்கு வரத் தயாராக இருந்ததன் மூலம் அவர்களுக்கும் விழிப்புணர்வை ஏற்படுத்தியுள்ள நம் தமிழ்நாட்டு இளைஞர்கள் நம் நாட்டிற்குக் கிடைத்த வரம் என்றே பெருமை பொங்க கூறமுடிகிறது. சில புல்லுறுவிகள் நம் நாட்டுத் தலைவர்களை மரியாதைக் குறைவாகப் பேசியும், தேவையில்லாத செயல்பாடுகளில் இறங்கியும் உள்ளதற்கு இந்த மாணவச் செல்வங்கள் எந்த வகையிலும் காரணம் அல்ல என்பதையும் உணர்த்தியுள்ளார்கள். கூட்டத்தில் குளிர் காய்ந்துகொண்டு தங்கள் காழ்ப்புணர்ச்சியை வெளிப்படுத்திக்கொண்ட சுயநலவாதிகளைப் பற்றி கவலைப்படத் தேவையில்லை. மற்றபடி பாலின பாகுபாடின்றி எல்லோரும் ஓரினம் என்ற அறைகூவலோடு, பெண்களையும் கௌரவமாக நடத்தி, எந்தவொரு அசம்பாவிதமும் நடக்காமல் அமைதியாகப் போராடி வெற்றி கண்டுள்ள இளைஞர்களை/மாணவச் செல்வங்களை எத்துணை பாராட்டினாலும் தகும்.

அவசரச்சட்டம் மத்திய அரசால் முழுமையாக ஏற்றுக்கொள்ளப்பட்டு, குடியரசு தலைவரும் ஏற்றுக்கொள்வதற்காக அவருடைய பார்வைக்குச் சென்றுள்ளது. இன்று மாலைக்குள் ஆளுநரும் கையொப்பமிட இந்த அவசரச் சட்டமானது மாநில அமைச்சர் குழுக்களால் ஏற்கப்பட்டு அறிவிக்கப்பட உள்ளது. நாளை அலங்காநல்லூரில் சல்லிக்கட்டு வீர விளையாட்டைத் தாமே துவங்கி வைப்பதாக தமிழக முதல்வர் திரு ஓ.பன்னீர் செல்வம் அவர்கள் அறிவித்துள்ளது மகிழ்ச்சியளிக்கிறது. இன்றே அதற்கான பணிகள் தொடங்கி மாவட்ட கலெக்டர் வாடிவாசல் வந்து பார்வையிட்டு நிகழ்ச்சி சிறப்பாக நடைபெறுவதற்கான ஆரம்பப் பணிகள் துவங்கப்பட்டுள்ளன.

கண்ணியம் காத்த அனைத்து இளைஞர்களுக்கும் தமிழ் பண்பாட்டை உலகிற்கே உணர்த்திய அனைத்து நல்லுள்ளங்களுக்கும் பாராட்டுதல்களும், வாழ்த்துகளும் தெரிவிக்கும் அதே நேரத்தில் மேலும் இதே ஒற்றுமையையும், அமைதியையும் என்றும் காத்து தமிழர் நலம் பேணுவோம் என்று உறுதியெடுப்போம்!

பதிவாசிரியரைப் பற்றி

2 thoughts on “கண்ணியம் காத்த இளைஞர்கள்!

  1. பலே பலே நல்ல நச் எனும் தலையங்கம் பவளா அவர்களே.
    வாழ்க உங்கள் காளை விரட்டுப் பாணி முரசுப்போர்!
    கவியோகியார்

  2. தலையங்கம் அருமை.

    ஜல்லிக்கட்டு போராட்டம் நல்லபடியாய் முடிந்து விட்டதா ?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *