அன்பினியவர்களே!

அன்பான வணக்கங்களுடன் அடுத்த மடலிலே உங்களுடன் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்வதில் மனம் மகிழ்கிறேன். ஒரு நாட்டின் சுபீட்சம், நாட்டின் ஜனநாயகப் படிமுறைகள் என்பன சரியான பாதையில் எதிர்பார்ப்புகளுக்கமைய நடைபெற வேண்டுமானால் அந்நாட்டை நிர்வகிக்கும் அதிகாரத்திலிருப்போரின் நடவடிக்கைகள் ஆராயப்பட்டு எழும் கேள்விகள் அவர்களை நோக்கித் திருப்பப்பட வேண்டும். நியாயமான வகையில் இக்கேள்விகள் அமைவது அவசியம். அவ்வகையினில் அமையுமானால் அதற்கான சரியான பதிலை அதிகாரத்திலிருப்போர் வழங்கும் பட்சத்தில்தான் ஜனநாயக வழிமுறையில் மக்களுக்கு இருக்கும் நம்பிக்கை வலுப்பெறும்.

இத்தகைய ஜனநாயக முன்னெடுப்புக்கான நடவடிக்கைகளில் ஊடகங்களின் பங்கு முக்கியமானது. அரசாங்கத்தை, பிரதமரை, ஜனாதிபதியை, அமைச்சர்களை சரியான வழியில் நடக்கப் பண்ணுவதில் ஊடகங்களுக்கு முக்கியமான பங்கு இருப்பது மறுக்கப்பட முடியாத உண்மை. இவ்வூடகங்களில் பணியாற்றும் பத்திரிகையாளர்கள் மிகவும் முக்கியமானவர்களாகக் கருதப்படுகிறார்கள். ஒரு நாட்டின் சராசரிக் குடிமகனிடம் உண்மைச் செய்திகளை அவ்வுண்மை நிலைக்குச் சிறிதும் பங்கம் நேராத வகையில் எடுத்துச் செல்வது இப்பத்திரிகையாளர்களின் கடமையாகிறது. அதேசமயம் ஒவ்வொரு பத்திரிகையாளருக்கும் ஒவ்வொரு செய்தியின் மீதும் தமது சொந்தக் கருத்துக்கள் இருக்கும். அச்செய்தியை வடிவமைக்கும் போது ஆங்காங்கே அவர்களின் கருத்துக்களின் சாரம் அச்செய்தியில் பதிந்திருப்பதைக் காணக்கூடியதாக இருக்கும்.

இந்தக் கருத்துப் பரிமாற்றம், செய்திப்பரிவர்த்தனை சரியாக நடைபெற வேண்டுமானால் பத்திரிகை நிருபர்களுக்கும்,தொலைக்காட்சிச் செய்தியாளர்களுக்கும் அச்செய்தியில் சம்பந்தப்பட்டிருக்கும் நபருக்கும் (அரசியல்வாதியோ அன்றி ஒரு பிரபலமிக்க நபரோ ) இடையிலான உறவு ஒருவருக்கொருவர் கொடுக்கும் மரியாதையின் அடிப்படையில் அமைந்திருப்பது அவசியமாகிறது. மகாகவி பாரதியின் கூற்று ” தம்பி உன்னுள்ளத்தில் உண்மை இருந்தால் பேனாவை எடு , எழுது”என்பதன் உள்ளார்த்தம் புரிகிறது. இதுதான் பத்திரிகைத்தர்மம் என்பதன் அடித்தளமாகிறது. பத்திரிகையாளர்களுக்கும்,அப்பத்திரிகை நிருபர்களுக்கும் அளிக்கப்படும் கெளரவம் போன்றே அச்செய்தியில் சம்மந்தப்பட்டவர்களுக்கும், அச்செய்தியின் சாரத்திற்கும், உண்மைக்கும் கௌரவமளிக்கப்படவேண்டியது அவசியமாகிறது. ஒரு சமுதாயத்தின் சிந்தனையின் தரத்தைப் பாதுகாக்கும் முக்கியப்பொறுப்பு ஊடகங்களுக்கு உண்டு. மக்களை நல்வழிப்படுத்தும், அதேசமயம் அவர்களுக்கு உண்மைகளை அவர்களின் நன்மை கருதி எடுத்துச் செல்லும் கடமை ஊடகங்களுக்கு உண்டு. நாம் ஓர் அரசியல் கட்சியையோ அன்றி ஓர் அரசியல்வாதியையோ ஆதரிக்கிறோம் எனும் காரணத்திற்காக உண்மைக்குப் புறம்பான செய்திகளின் மூலம் அவர்களுக்கு ஆதரவு தேடுவது பத்திரிகாதர்மத்துக்குப் புறம்பானது. அதேநேரம் நாம் ஒருவரின் அரசியல் கொள்கைக்கோ அன்றி அவரது கருத்துக்கோ எதிரான கருத்துக் கொண்டவர்கள் என்பதனால் செய்திகளைத் திரித்துக்கூறுவதும் ஊடகத் தர்மத்திற்கு ஊறு விளைவிப்பதாகவே அமைகிறது.

கடந்தவாரம் வெள்ளிக்கிழமை உலகத்திலேயே சக்தி வாய்ந்த வல்லரசாகக் கருதப்படும் அமேரிக்க நாட்டின் ஜனாதிபதியாக டொனால்ட் ட்ரம்ப் அவர்கள் பதவியேற்றுக் கொள்ளும் வைபவம் நிகழ்ந்தது. ஜனாதிபதித் தேர்தல் பிரசாரக் காலத்தில் பல முரண்பட்ட கருத்துக்களை முன்வைத்து அமெரிக்க மக்களிடையே பேதங்களை உருவாக்கிய ஒரு சர்ச்சைக்குரியவரான டொனால்ட் ட்ரம்ப் இந்த வைபவத்தில் பதவியை ஏற்று நிகழ்த்தும் உரையில் அமெரிக்க மக்களிடையே கிளர்ந்துள்ள இப்பேதத்தைக் களைந்து நாட்டினை ஒன்றுபடுத்தும் வகையிலான ஓர் உரையை டொனால்ட் ட்ரம்ப் அவர்கள் நிகழ்த்துவார்கள் என்று கொண்டிருந்த எதிர்பார்ப்புகளை தரைமட்டமாக்கும் வகையில் அமெரிக்க மக்களிடையே உள்ள பேதங்களை மேலும் கூர்மைப்படுத்தும் வகையிலான உரையாகவே அவரது உரை அமைந்தது என்பது அரசியல் அவதானிகள் பலரது ஒருமுகப்படுத்தப்பட்ட கருத்து. அமெரிக்க ஊடகங்களுடன் டொனால்ட் ட்ரம்ப் அவர்கள் ஒரு போருக்கான அறைகூவல் விடுத்துள்ளார் என்றே கூறவேண்டும். தான் தன்னுடைய கருத்துக்களை மக்களிடையே எடுத்துச் செல்வதற்குத் தன் பக்கம் ஈர்க்க வேண்டிய ஊடகங்களை முற்றுமுழுதாகப் புறந்தள்ளி அவர்களை மிகவும் அவமரியாதை செய்துள்ளார் என்பதுவே பொதுப்படையான கருத்து. வழமையான ஜனநாயக மரபுகளை விடுத்து சமூக வலைத்தளமான ட்வீட்டர் மூலமாகத் தனது கருத்துக்களைப் பதிவிடுவதன் மூலம் தன்னிச்சையாகத் தனது கருத்துக்களை வெளியிடுவது மட்டுமின்றி அவரின் செயல்களுக்கான விளக்கத்தை அறியும் வகையில் ஊடகங்கள் அவரைக் கேள்வி கேட்க முடியாத வகையில் அவரது செயற்பாடுகள் அமைகின்றன.

அவரது பதவியேற்பு வைபவத்தில் கலந்து கொண்ட மக்கள் தொகை முன்னாள் ஜனாதிபதி ஓபாமா அவர்களின் பதவியேற்பு வைபவத்தில் கலந்து கொண்ட மக்க்கள் தொகையை விடக் கணிசமான அளவு குறைந்தே காணப்பட்டது எனும் உண்மையை ஆதரங்களுடன் வெளியிட்ட ஊடகங்களின் அறிக்கைகள் அனைத்தும் பொய்யானவை என்றும் தமது கணக்கீட்டின்படி தனது பதவியேற்று வைபத்தில் பங்குபெற்றவர்களின் தொகையே அதிகமானது என்றும் வாதிட்டு அனைவருக்கும் கறுப்பு என்று தெரியும் ஒன்றை வெள்ளையென வாதிட்டிருக்கிறார் உலகின் மிகப்பெரிய வல்லரசு நாட்டின் ஜனாதிபதி. இது மிகவும் விசனத்துக்குரியதாகும். இத்தகைய விதண்டாவாதத்தில் ஈடுபடும் இவரின் தரப்பிலிருந்து இன்னும் எவ்வகையான தரவுகள் வெளிப்படப் போகின்றன என்பதே பலரது மனக்கிலேசத்துக்குக் காரணமாகவிருக்கிறது. இந்நிலையில் பத்திரிகை தர்மத்தைக் கடைப்பிடிக்கும் ஊடகங்களின் நிலை என்ன? உண்மையான செய்திகள் மக்களை எவ்வகையில் சென்றடையப் போகிறது? இப்படிப் பல கேள்விகள் உலகெங்குமுள்ள ஜனநாயகத்தில் நம்பிக்கை கொண்டுள்ள அரசியல் அவதானிகளால் எழுப்பப்படுகின்றன.

இத்தகைய ஒருவர் வல்லரசான அமெரிக்காவின் தலைவராக எடுக்கும் முடிவுகளின் தாக்கங்கள் அமெரிக்காவோடு மட்டும் முடிந்து போவதில்லை. இவற்றின் விளைவுகள் உலகநாடுகள் அனைத்திலும் ஏதோ ஒரு தாக்கத்தை கொண்டு செல்லப்போகின்றன. அவைகளின் விளைவுகளை நாம் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

மீண்டும் அடுத்த மடலில்…

அன்புடன்
சக்தி சக்திதாசன்

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *