மக்களுக்காக முதல்வர்களா அல்லது முதல்வர்களின் நலனுக்காக மக்களா?
பவள சங்கரி
தலையங்கம்
சல்லிக்கட்டிற்காக ஆறுநாட்கள் அறவழிப்போராட்டம் நடத்திக்கொண்டிருந்த இளைஞர்கள்/ மாணவர்கள் மகிழ்ச்சியடையும்படி, தலைநகர் சென்று பிரதம மந்திரியைச் சந்தித்து சல்லிக்கட்டு நடத்துவதற்கான அவசரச் சட்டம் வெளியிடுவதற்கு ஒப்புதல் பெற்று வந்ததை நேரடியாக அந்த இளைஞர்களிடம் சென்று தானும் தமிழன் தான் என்ற உணர்வோடு, இத்தகவலை வெளியிட்டு, இது நிரந்த சட்டமாகும் வகையில் சட்டசபையின் சிறப்புக் கூட்டம் கூட்டி இதற்கு வழிவகை செய்யப்படும் என்று நம் தமிழக முதல்வர் திரு ஓ.பன்னீர்செல்வம் அவர்கள் பேசியிருந்தாலே போதும். மாணவர்கள் முதலமைச்சரின் பேச்சுக்கு மரியாதை கொடுத்து அமைதியாக கலைந்து சென்றிருப்பார்கள் என்பதில் ஐயமில்லை. இத்தனை பிரச்சனைகள் நடந்திருக்க வாய்ப்பே இருந்திருக்காது.
சில தலைவர்கள் காலங்கள் கடந்தும் கட்சி சார்பற்றும் மக்கள் மனத்தில் நிறைந்திருக்கிறார்கள் என்றால் அதற்கு அந்தத் தலைவர்கள் மக்கள் மீது கொண்டிருந்த உண்மையான அக்கறையும், அவர்களின் நல்வாழ்விற்காக தன்னலம் கருதா உழைப்பையும், நேரத்தையும் மனமுவந்து அளித்ததுதான்.
1980 களில் திரு எம்.ஜி.ஆர். அவர்கள் முதலமைச்சராக இருந்த காலகட்டம். ஈரோட்டிற்கு தங்கள் கட்சிக் கூட்டத்திற்காக வந்திருந்த சமயம். பள்ளிபாளையம் சேசசாயி காகித ஆலையில் தொழிற்சங்க வேலை நிறுத்தப் போராட்டம் அறிவிப்பு செய்திருந்தார்கள். 8.33% மீதூதியம் (போனஸ்) வாங்க மறுத்து 45% மீதூதியமும், சம்பள உயர்வும் வேண்டி வேலை நிறுத்தம் செய்திருந்தார்கள். பேச்சு வார்த்தைகள் இழுபறியாக இருந்து கொண்டிருந்தது. முதல்வர் எம்.ஜி.ஆர் அவர்கள் வந்திருப்பதை அறிந்து தொழிற்சங்கத் தலைவர்கள் அவரைச் சந்தித்து முறையிட விரும்பி அவர் தங்கியிருந்த சேசசாயி விருந்தினர் மாளிகைக்குச் சென்று அவருடைய உதவியாளரிடம் அனுமதி கேட்கிறார்கள். அப்பொழுதுதான் வந்து சேர்ந்தவர், தேநீர் பருகிவிட்டு கூட்டத்திற்குச் செல்ல தயாராகிக் கொண்டிருந்திருக்கிறார். உதவியாளர் வந்து சொன்னவுடன் சிறிதும் தயங்காமல் தொழிற்சங்கத் தலைவரை உள்ளே வரச்சொல்லிவிட்டார். கட்சிக்கூட்டம் சற்று தாமதம் ஆனாலும் பரவாயில்லை, தொழிலாளர் பிரச்சனையை தீர்ப்பது முக்கியம் என்றாராம். தொழிற்சங்கத் தலைவர்களிடம் பிரச்சனைகளை பொறுமையாகக் கேட்டவர், என்மீது உங்களுக்கு நம்பிக்கை இருந்தால் உடனடியாக வேலை நிறுத்தத்தை கைவிட்டு பணிக்குச் செல்லுங்கள், உங்களுக்கு வேண்டியதை நான் உடனே செய்து தருகிறேன் என்றாராம். அவர் பேச்சில் இருந்த நம்பிக்கையில், தொழிற்சங்கத் தலைவர்களும், ஆங்காங்கு வெளியூரில் இருக்கும் ஊழியர்கள் திரும்பி வந்து சேரும் ஒரு நாள் அவகாசத்தில் அனைவரும் பணிக்குத் திரும்புவதாக உறுதியளித்துச் சென்றிருக்கிறார்கள். முதல்வரும் தாம் சொன்ன வார்த்தையைக் காப்பாற்றும் விதமாக உடனடியாக சேசசாயி ஆலை நிர்வாக இயக்குநரை வரவழைத்து அவரிடம் பேசி, அரசின் உதவியும் பெறலாம் என்று கூறி அவரைச் சம்மதிக்க வைத்து தொழிலாளர்களின் குறையை உடனடியாகத் தீர்த்து வைத்தாராம். தொழிலாளர்கள் கேட்டபடி 45% மீதூதியமும், சம்பள உயர்வும் கிடைத்த மகிழ்ச்சியில் முதல்வரைக் கொண்டாடாமல் இருப்பார்களா என்ன?
இதேபோன்று இன்னுமொரு சம்பவமும் நினைவு கூரலாம். ஒரு முறை விவசாயிகளின் போராட்டத்தின்போது விவசாய சங்கத் தலைவர் திரு நாராயணசாமி நாயுடு அவர்களை அவர் இல்லத்திற்கேச் சென்று அவரைச் சந்தித்து விவசாயிகளின் கோரிக்கைகளைக்கேட்டு அவர்தம் பிரச்சனைகளைத் தீர்த்து வைப்பதாக உறுதியளித்து, பிரச்சனைகளை தீர்த்தும் வைத்துள்ளார்.
மக்களுக்காக முதல்வரா அல்லது முதல்வரின் நலனுக்காக மக்களா என்ற கேள்விக்கே இடமில்லாத வகையில் நடந்துகொள்ளும் தலைவர்களை மக்கள் ஏன் மறக்கப் போகிறார்கள்?