Blog

  • கேசவ் வண்ணம் – கிரேசி எண்ணம்

    கேசவ்வின் இந்த ஓவியத்தைப் பார்த்தவுடன் என் நினைவுக்கு வந்தவர்
    பகவான் ஸ்ரீ ரமணர்….கிருஷ்ணனும் ரமணன்தான்….
    சூரி நாகம்மாள் ஸ்ரீ ரமணாச்ரம லேகுலு….

    பகவானிடம் ஒரு குரங்கு தனக்குப் பிறந்த குட்டியைக்
    காட்ட வந்த போது, ஒருவர் அதை விரட்ட பகவானின் பதில்….

    f63fe475-4aec-4c59-a86c-1aaff3596482

    ‘’மந்திக்கு தன்குட்டி மாருதிதான்,ஆகையால்
    வந்திருக்கு என்ஆசீர் வாதத்திற்(கு), -உன்தரப்பில்,
    மாதவம் தோன்ற மறுநாளே காட்டலையா’’ :
    பேத மிலாத பரிவு’’….கிரேசி மோகன்….

    மாதவம் -அன்னாரின் சிசு….

    Share
  • கேசவ் வண்ணம் – கிரேசி எண்ணம்

    395dbfd2-4190-406e-81c9-8cb777d27e22

     

    ”காமியாவாய் ராதைக்கு, நேமியாவோய் ராட்சசர்க்கு,
    பூமியாவாய் போற்றும் அடியார்க்கு, -மாமியானாய்
    சாமிநாத சாமிக்கு(வேலர்க்கு), நாமிருவர் சந்தித்தால்
    ஏமிரா நீயார் எனக்கு….கிரேசி மோகன்….

    நேமி -சக்கிரம்….
    மாமன் மாலன் மோகினியாய் மாமியானான் மருகன் முருகனுக்கு….

    Share
  • எளிமையான தலைவர்!

    பவள சங்கரி

    லால்

    இத்தகைய மாமனிதர்களும், அரசியல் தலைவர்களாக வாழ்ந்த புண்ணிய பூமிதான் நம் இந்தியா! நம்புங்கள் நண்பர்களே..  ஆம், நம்ம லால் பகதூர் சாஸ்திரி பற்றித்தான் சொல்கிறேன். சாஸ்திரி அப்போது நேருவின் மந்திரி சபையில் இருந்தார். நம்முடைய அண்டை நாடான நேபாளத்திற்கு ஒரு விழாவிற்காகச் செல்ல வேண்டிய நேரத்தில், நேருவிற்குப் பதிலாக சாஸ்திரியை அனுப்பிவைத்தவர், அது கடுமையான குளிர் காலம் என்பதால் தம்முடைய கோட் ஒன்றை அந்தக் குளிருக்கு அவருக்குத் தேவைப்படும் என்று சொல்லி அவரிடம் கொடுத்தனுப்பினார். இது நடந்து பல ஆண்டுகளுக்குப் பிறகுதான் சாஸ்திரி, அதாவது நேருவின் மறைவிற்குப் பிறகு நம் நாட்டின் பிரதமரானார். அப்போது இலண்டனில் நடந்த காமன்வெல்த் பிரதம மந்திரிகளின் மாநாட்டில் கலந்துகொள்ள புறப்பட்டுக்கொண்டிருந்தார் சாஸ்திரி. அவருக்குத் தேவைப்படும் என்பதையறிந்த அவருடைய மனைவி சாஸ்திரி அவர்களுக்கு ஒரு கோட் தைக்க ஏற்பாடு செய்தார். இதையறிந்த சாஸ்திரி அதை மறுத்துவிட்டு நேரு பல ஆண்டுகளுக்கு முன்பு தனக்குக் கொடுத்த அதே கோட்டை தன்னுடைய அப்போதைய அளவிற்கு சரிசெய்து தரும்படி தையற்காரரிடம் சொல்லி, சரிசெய்த பின்பு அந்தக் கோட்டையே இலண்டன் மாநாட்டிற்கு அணிந்து சென்றாராம்!

    Share
  • உலகச் சுகாதார தினம்

    -சித்ரப்ரியங்கா பாலசுப்ரமணியன்

    சுகாதாரத்தை நினைத்தால் இன்றோ
    சற்றும் நெஞ்சு பொறுக்குதில்லையே
    புறத்தூய்மை நீராலமையும் என்பதற்குப்
    புண்ணியம் சேர்க்கும் மழையுமில்லை
    அகத்தூய்மை வாய்மையாற் காண்பதற்கு
    அகம்தான் சீராய்ப் பெற்ற மனிதனுமில்லை! world hygene day

    நெஞ்சினில் நஞ்சு வைத்தே பலர்
    வஞ்சம் தீர்த்து மகிழ்கின்றார்
    பிஞ்சையும் விட்டு வைப்பதில்லை
    பெரியவரும் இதற்கு விதி விலக்கில்லை
    அஞ்சி தான் அனைவரும் வாழ்கின்றார்
    அஞ்சுதல் பேதைமை என்பது மறந்தே
    காடுகள் அழித்துக் காற்றை மாசுபடுத்திக்
    கருமேகத்தின் கூடலைத் தடைசெய்து
    மாரியின் திசையைத் தான் மாற்றி
    மதிகெட்டுத் தானும் அழிகின்றார்!

    புகையிலை எனும் பாதகத்தியின்
    பாதகம் உணர்ந்தும் அறிவிலிகளாய்ப்
    பிளாஸ்டிக் எனும் கொடுங்கோலனுடன்
    தோழனாய்க் கைகோத்த அப்பாவிகளாய்
    மது மாது இல்லையென்றால் பலருக்கு
    மதி விடுப்பெடுக்கிறது மணிக்கணக்காய்!

    ஆறறிவும் தாமே பெற்றிருந்தும் ஐயகோ!
    ஓரறிவுக்குக் கூடவா இன்னும் எட்டவில்லை?!
    வேண்டாம் இந்நிலை அன்புத் தோழர்களே!
    வேண்டுகிறேன் இந்நாளில் உங்களையே
    மனிதத்தோடு நாம் ஒன்றிணைந்தே நம்
    மரணத்தைச் சற்றே தள்ளி வைப்போம்
    எங்கும் எதிலுமே தூய்மை கண்டிடவே
    எல்லோரும் ஒன்றாய்ப் படையெடுப்போம்!

    (ஏப்ரல் 7 – இன்று உலகச்சுகாதார தினம்)

     

    Share
  • மக்களின் எதிர்பார்ப்புகள்!

    பவள சங்கரி

    தலையங்கம்

    எரிபொருள் நிறுவனங்களின் சமீபத்திய அறிவிப்பு மக்களுக்கு அதிர்ச்சியளிக்கக்கூடியது. பெட்ரோலுக்கு ரூ. 2.19 உம், டீசலுக்கு ஒரு உரூபாயும் விலையை அதிகப்படுத்தியுள்ளனர். இதையடுத்து பெட்ரோல் விலை 61. 32 உரூபாயும், டீசல் விலை 50.09 உரூபாயாகவும் உள்ளன. இது கீழ்த்தட்டு மற்றும் மத்திய தர மக்களை பெரிதும் பாதிக்கக்கூடியது. உலகச் சந்தையின் கச்சா எண்ணெய் விலை ஏற்றத்தின் காரணம் காட்டி, மிக சமீபத்தில் சென்ற மார்ச் 17 ஆம் தேதியன்றுதான் பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ. 3.06ம், டீசலுக்கு ரூ.1.96ம் உயர்த்தப்பட்டன. அதாவது இந்த ஒரு மாத காலத்தில் மட்டும் ரூ.5.25 வரை விலை உயர்ந்திருக்கிறது. ஏற்கனவே விலைவாசி ஏற்றத்தால் பாதிக்கப்பட்டுள்ள மக்கள் மீண்டும் ஒரு முறை விலைவாசி உயரும் நிலை வந்தால் மிகுந்த சிரமத்திற்குள்ளாவார்கள் என்ற கவலை துளியும் இன்றி நடுவண் அரசு இப்படி விருப்பம்போல் விலையேற்றம் செய்வது இந்த தேர்தல் நேரத்தில் நல்லதல்ல. டீசல் விலை உயர்ந்ததாலும், தமிழகச் சாலை பயன்பாட்டிற்குரிய சுங்கக் கட்டணம் உயர்ந்ததாலும், ஏற்கனவே சரக்குந்துகளின் கட்டணம் உயர்த்தப்பட்டிருந்ததால் சரக்குந்துகளின் வாடகையை உயர்த்தப்போவதாக வண்டி உரிமையாளர்கள் அறிவித்திருந்தார்கள். இப்போது இந்த எரிபொருள் விலையுயர்வு காரணமாக மேலும் வாடகை உயர்ந்தால் பால், காய்கறிகள் என அத்தியாவசியப் பொருட்களின் விலை மேலும் அதிகரிக்கும் அபாயம் நேரும். இதனால் பாதிக்கப்படப்போவது பொதுமக்கள்தான். பொதுவாகவே உலகச் சந்தையில் கச்சா எண்ணெயின் விலை குறையும்போது அதன் பயனை நாட்டு மக்களுக்கு வழங்காத அரசு விலையேற்றம் என்று வரும்போது மட்டும் பாரபட்சமின்றி விலையை உடனே ஏற்றிவிடுவது மக்களுக்கு ஆட்சியாளர்கள் மீது அதிருப்தியையே ஏற்படுத்தும் என்பதில் ஐயமில்லை.

    பெட்ரோலியப் பொருட்களுக்கு விலை நிர்ணயிக்கும் அதிகாரத்தை அரசு அளித்தபோதே விலைவிதிப்பானது சந்தையில் கச்சா எண்ணையின் பேரல் விலைகளையும் சந்தை உரூபாய் மதிப்பையும் வைத்தே நிர்ணயிக்கவேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. பெட்ரோலியப் பொருட்களை வாங்குவது மக்களுக்கு அத்தியாவசியத் தேவை என்பதாலேயே இந்நிறுவனங்கள் தங்கள் மனம் போன போக்கில் விலையை நிர்ணயம் செய்கின்றன. எப்போதுமே பெட்ரோலியப் பொருட்கள் விலை குறைவாக உள்ள மேற்கத்திய நாடுகள் மற்றும் கிழக்காசிய நாடுகளின் விலையுடன் நமது இந்தியாவில் விற்கப்படும் விலையை ஒப்பிட்டுப் பார்க்காமல் சந்தையிலுள்ள கச்சா எண்ணெயின் விலையையும் சந்தையிலுள்ள உரூப்பாயின் மதிப்பும் சரிவடையாமல் இருக்கும் இந்த சூழ்நிலையில் பெட்ரோலியப் பொருட்களின் விலை குறைக்கப்பட வேண்டுமேயொழிய இது போன்ற விலையேற்றம் அறிவிப்பு அதிர்ச்சியளிக்கக்கூடியதாகவே உள்ளது. இன்றைய சந்தை நிலவரப்படி ஒரு லிட்டர் பெட்ரோலின் விலை உரூபாய் 40 முதல் 50 வரை இருக்கலாம் என்று புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. மக்கள் அதிகாரப்பூர்வமாக கொள்ளையடிக்கப்படுவதே நிதர்சனம். பெட்ரோலிய நிறுவனங்கள் பெட்ரோலியப் பொருட்களுக்கான விலைவிதிப்பு பற்றிய வெள்ளை அறிக்கையை பொது மக்களுக்கு அளிக்க வேண்டியதும் நடுவண் அரசின் கடமை. முந்தைய ஆட்சியில் இதேபோன்ற பிரச்சனை வந்தபோது இன்றைய ஆட்சியாளர்கள் பேசியவைகளை நினைவுகூர்தலும் இன்றைய தேவை.

    சென்ற பிப்ரவரி மாதத்தில் என்.சி.ஆர்., எனப்படும், தேசிய தலைநகர் பிராந்தியத்தைச் சேர்ந்த நொய்டாவில், உள்ள ‘ரிங்கிங் பெல்ஸ்’ நிறுவனம் உலகின் மிக மலிவான, ‘பிரீடம் 251’ என்ற ஸ்மார்ட் போன் தயாரித்து, அதை 251 உரூபாய்க்கு விற்கப்பட இருந்தது நினைவிருக்கலாம். இந்த போன் ரூ. 5,000 மதிப்புள்ள போன்களுக்குச் சமமாக, 4 அங்குல தொடுதிரையுடன், ‘டுவிட்டர், பேஸ்புக்’ போன்ற சமூக வலைதளங்கள் விரைவாக இயங்கக் கூடிய வகையிலான, 1 ‘ஜிபி’ நினைவுத்திறன், 8 ஜிபி தகவல் சேமிப்பு திறன், 3.2 ‘மெகாபிக்சல்’ பின்புற கேமரா, ‘செல்பி’கேமரா, அதிகத் திறனுள்ள பேட்டரி (1450 எம்.ஏ.எச்.) மற்றும் 32 ஜி.பி., மைக்ரோ எஸ்.டி., கார்டு பொருத்தக்கூடிய வசதியும் உடைய அந்த நவீன கைபேசி 251 உரூபாய்க்கு வழங்குவதாக அறிவிக்கப்ப்பட்டு சாதாரண மக்களின் வயிற்றில் பால் வார்க்கச் செய்திருந்தது. ஆனால் நமது அரசோ அவர்களின் வங்கிக் கணக்கு, தொழிலகங்களின் ஆய்வு என்று பல்வேறு சோதனைகளை நடத்தி அந்த நிறுவனத்தையே முடக்கிவிட்டது. இந்த விசயத்தில் அரசு, அந்த நிறுவனத்தின் உற்பத்தியில் உறுதுணையாக இருந்து தரக்கட்டுப்பாடு அலுவலர்களை பணியாற்ற வைத்து, இன்னும் சற்று விலையில் கூடுதல் இருந்தாலும் கூட, அந்நியச் செலாவணியும் , மக்கள் பணமும் பாதுகாக்கப்பட்டிருக்கும். இதைவிடுத்து அந்த முயற்சியை முளையிலேயே கிள்ளியெறிந்தது பன்னாட்டு நிறுவனங்களின் நிர்ப்பந்தமா என்ற ஐயமும் கிளப்பிவிட்டது. அரசு பொதுவாக பன்னாட்டு நிறுவனங்களின் தயாரிப்புப் பொருட்களுக்கான விலைவிதிப்பை ஆய்வு செய்வதில்லை. உதாரணமாக ஒரு காரின் விலை 8 இலட்சம் என்று அறிவிக்கிறார்கள் என்றால் அந்தக் கார் அந்த 8 இலட்சத்திற்கு தகுதியுடையதா? அல்லது எத்தனை சதவிகிதம் இலாபம் எடுத்துக்கொள்கிறது என்ற ஆய்வை அரசு ஏன் மேற்கொள்வதில்லை. இது போல பல இலட்சங்கள், கோடிகள் என்று காரின் விலை நிர்ணயிக்கப்படுகின்றன. அந்த விலைக்கு அவை தகுதியுடையவைதானா? நம்முடைய தரக்கட்டுப்பாடு நிர்ணய அலுவலகம் இந்த வாகனங்களின் தரத்தை சோதனை செய்துள்ளதா? சமீபத்தில் ஒரு பிரபலமான கார் நிறுவனம் தாம் தயாரித்த வாகனங்களில் இலட்சம் வண்டிகளை திரும்பப் பெற்று அவை மீண்டும் சரி செய்யப்பட்டன. இதுபோன்று அலைபேசி, கைபேசி எனும் சுமார்ட் போன்களின் பயன்பாடு அதிவேகமாக பரவி வருகின்ற இன்றைய நிலையில் அலைக்கற்றையை உபயோகிப்பதற்கான கட்டணங்களை அரசு ஏன் வரைமுறைப்படுத்துவதில்லை?மக்களிடமிருந்து பல ஆயிரம் கோடி பணங்கள் கொள்ளையடிக்கப்படுவதையும் டிராய் கண்டுகொள்வதில்லை. இதைவிடுத்து அரசு நிறுவனங்களே பன்னாட்டு நிறுவனங்களும் போட்டி போட்டுக்கொண்டு கட்டணத்தை நிர்ணயித்து அதிலும் இலாபக் கணக்கைக் காட்டாமல் நட்டக் கணக்கை காட்டுவதே வியப்புக்குரிய செய்தியாக உள்ளது.

    பன்னாட்டு நிறுவனங்களின் தடை செய்யப்பட்ட மருந்துகள் பற்றிய முடிவு என்ன எடுத்துள்ளது என்ற விவரம் அறிவிக்கப்படவில்லை. ஐந்து நாட்கள் மட்டுமே தடை செய்யப்பட்டதை நிறுத்திவைத்து நீதிமன்றம் வழங்கிய ஆணைக்குப் பிறகு இந்த மருந்துகளின் உற்பத்தி, விற்பனை எந்த நிலையில் உள்ளது, இதுபற்றி அரசின் நிலைப்பாடு என்ன என்பதுபற்றிய விவரங்களை மருந்து ஆளுமை மையம் மக்களுக்குத் தகவல் அறிவிப்பார்களா? தடை செய்யப்பட்ட மருந்துகளின் பட்டியல் ஒவ்வொரு மருந்தகங்களிலும் வைக்க அரசு ஆணை பிறப்பிக்குமா?

    வாக்களிப்பது நம் உரிமை மட்டுமல்ல, கடமையும் கூட
    வாக்களிக்கத் தவறாதீர்கள்! 100% வாக்களிப்புச் செய்வோம்!!

    Share
  • சுதந்திரம்

    நிர்மலா ராகவன்

    “மாதவனுக்காக நீச்சல் கத்துக்கிட்டே! இப்போ ஒனக்கே பிடிச்சுப்போச்சு போலிருக்கே!”

    கணவன் கேலியை ரசிக்க முடியவில்லை சாவித்திரியால்.  `ஏதோ, நாலு பேரைப் பாத்தாலாவது அவன் கொஞ்சம் தேறமாட்டானா என்கிற ஆசைதான்!”என்றாள், தழுதழுத்த குரலில்.

    பூமியின்மேல் இரு பாதங்களையும் பதித்து நடக்க முடியாது, தன் தோளைப்பற்றி, உடன் நடக்கும் பிள்ளையை நினைக்கும்போதே சொல்லவொணாவருத்தம் எழுந்தது அத்தாய்க்குள். அவள் அருகில் இல்லாவிட்டால், எட்டு மாதக் குழந்தைபோல் தவழுவான்.

    ஏதோ நினைப்பில் அவள் முகம் மலர்ந்தது. “அவன் நீஞ்சறப்போ நீங்க பாக்கணுமே!  தண்ணிக்குள்ளே போய் குட்டிக்கரணம் போட்டு..! என்று ஆரம்பித்தவள்,கொஞ்ச நேரம் அந்த இன்ப நினைவில் ஒன்றிப்போனாள். “அவன் தலையை மறுபடியும் மேலே பாக்கறபோதுதான் எனக்கு மூச்சு வரும்!”

    “அதான் டாக்டர் சொல்லியிருக்காரில்ல? உயிருக்கு ஆபத்து வர்றமாதிரி எதுவும் செய்திட மாட்டான்னு!”

    “இருந்தாலும், எனக்குப் பயம்தான்! ” என்று ஒப்புக்கொண்டாள் அந்த பேதைத்தாய். “நீங்கதான் எங்ககூட வரவே மாட்டேங்கிறீங்களே!”

    “எனக்கு இந்த `தண்ணி` எல்லாம் பிடிக்காது!” சிரித்தார். “அதோட, அளவுக்கு அதிகமா க்ளோரின் போட்டிருப்பாங்க. கிருமிங்க சாகுதோ, என்னவோ, எனக்குமுடி கொட்டிடும்”.

    சாவித்திரிக்குத தெரியும் அவர் மறுப்பின் காரணம்.

    தண்ணீரில் அமிழ்ந்திருக்கும்போது தான் அனுபவிக்கும் சுகத்தை வெளிக்காட்ட வேறு வழி தெரியாது, மாதவன் அர்த்தமற்ற பிதற்றல்களை இரைந்துகத்தும்போது, அங்கிருக்கும் அனைவரும் வேடிக்கை பார்ப்பதும், அருவருப்புடன் ஒதுங்குவதும் அந்தப் பெரிய மனிதருக்கு தலைகுனிவு.

    எவ்வளவோ ஆசையாகப் பெற்ற மகன்!

    மூன்று மாதத்தில் தன் முகம் பார்த்து இவன் சிரிக்கவில்லை, எட்டு மாதத்தில் உட்காரவில்லையே என்றெல்லாம் சாவித்திக்கு  சந்தேகம் எழ, `எல்லாக்குழந்தையின் சுபாவமும் ஒரே மாதிரி இருக்குமா?` என்று சமாதானம் செய்தார் கணவர்.

    மூன்று வயதானபின், `பசித்தாலும் சொல்லத் தெரியவில்லை, நெருப்பு சுடும் என்றாலும் புரியவில்லை,` என்ற நிலை வர, அதற்கு மேலும் தவிர்க்கமுடியாது,  மருத்துவர்களை நாடிப் போனார்கள்.

    மாதவனுக்கு எட்டு வயதானபோது, `இவன் என்றுமே சிறு பிள்ளையாகத்தான் இருப்பான்!` என்று திட்டவட்டமாகப் புரிந்து போனது சாவித்திரிக்கு. நீரில்அமிழ்பவன், தத்தளிப்பை விடுத்து, தன் முடிவை ஏற்கச் சித்தமாவதுபோல் அமைதியானாள். எந்த தேவைக்கும் தன்னை எதிர்பார்க்கும் இந்த மகன் என்றுமேதனக்கு கைப்பிள்ளைதான் என்று மனதைத் திடப்படுத்திக்கொண்டாள்.

    `ஆடிசம் குணமாக இதுவரை யாரும் மருந்து கண்டுபிடிக்கல. அவனால் இயன்றவரை, எல்லாவற்றையும் கற்க ஏற்பாடு செய்யுங்கள்!` என்று டாக்டர்கள்தெரிவித்தபோது, மாதவன் பியானோ கற்க ஒரு ஆசிரியை நியமிக்கப்பட்டாள்.

    `விரல்களில் வலுவே இல்லையே!` என்று அவள் உதட்டைப் பிதுக்க, பரிதவிப்புடன், டாக்டரிடம் ஆலோசனை கேட்டாள் சாவித்திரி.

    `உங்கள் மகனுடைய நல்ல காலம்தான் இப்படி பணத்தட்டுப்பாடு இல்லாத குடும்பத்தில் பிறந்திருக்கிறான். நீந்தவும் கற்றுக் கொடுக்கலாமே!`

    `எப்படி டாக்டர்? இவனுக்கோ பிடித்துக்கொள்ளாமல் நிற்கவே முடியவில்லை..!` தாய் பயந்தாள்.

    `தண்ணியில எடை குறைஞ்சமாதிரி இருக்குமில்லியா? அதனால, கால், கையெல்லாம் சீரா இணைஞ்சு, ஒடம்பும் சமநிலைக்கு வரும். நாளடைவிலேஇருதயமும் பலமாகிடும்`.

    நீச்சல் குளம் காலியாக இருந்தது. அனேகமாக, காலை எட்டு மணிக்குமேல் யாரும் வரமாட்டார்கள்.  பூமத்திய ரேகைக்கு ஏழு டிகிரி வடக்கிலிருந்த மலேசியநாட்டில், நாள் முழுவதும் வெயில் கடுமையாகத் தாக்கும். எப்போது மழை பொழியும் என்றும் சொல்ல இயலாது.

    வெளிர்நிற சருமம் கொண்டவர்கள் பகல் பன்னிரண்டு மணி வெயிலில் — ஒரே மணி நேரம் — காய்ந்தால்கூட, சருமப் புற்றுநோய் கண்டிப்பாக வரும் என்றுஆங்கில தினசரிகளில் எச்சரிக்கை விடுத்துக்கொண்டே இருந்தார்கள்.

    மேல்நாடுகளில் வசித்தவர்கள் டிசம்பர் மாதத்து குளிரைத் தாங்கமுடியாது, இங்கு வந்து, கடற்கரைப் பகுதிகளில், அல்லது நீச்சல் குளங்களுக்கருகே நாற்காலிகளில் அமர்ந்திருப்பது  சாதாரணமாகக் காணக்கூடிய காட்சி. கூடியவரை ஆடைகள் எல்லாவற்றையும் களைந்துவிட்டு, காலையும்தலைக்குமேல் தூக்கி, இண்டு, இடுக்கு எல்லாம் ஒரே சீராக பழுப்பு நிறமாக வேண்டும் என்ற அவாவுடன் அவர்கள் இருந்தார்கள், `கான்சர் போன்ற வியாதிஎல்லாம் பிறருக்குத்தான் வரும்,` என்ற மெத்தனத்துடன். மாதவனுக்கோ சூரியன் அளிக்கும் அந்த விட்டமின் D வேண்டியிருந்தது.

    வழக்கம்போல், “ஒழுங்கா அந்தப் பக்கம் போயிட்டு வரணும், என்ன?” என்று உபதேசித்தாள் சாவித்திரி, மகனுக்கு அந்த அறிவுரை விளங்காது என்றுதெரிந்திருந்தும்.

    அவனோ, இரு மீட்டருக்குமேல் இருந்த குளத்தின் அடிப்பாகத்திற்கே சென்றான். மேலெழுகையில், அனுமார்போல் கன்னம் உப்பியிருந்தது.

    “மாதவன்!” சாவித்திரியின் கண்டனக்குரல் தாமதமாகத்தான் வந்தது.

    தலையை மேலே சாய்த்து, வாய் நிறைய இருந்த நீரை உமிழ்ந்தான். அந்த எச்சில் நீர் அருகே நின்றிருந்த ஒருவரின்மேல் அருவியாக ஊற்றியது.

    பதைப்புடன் அவரை நோக்கியவள், “என் மகன்.. அவனுக்கு மூளை சரியில்லை! மன்னித்துக் கொள்ளுங்கள்!” என்று அவமானத்தில் இறுகிய முகத்துடன்வேண்டினாள்.

    “இதற்கு மன்னிப்பு எதற்கு? இன்னொரு முழுக்கு போட்டால் போகிறது!” என்று பெருந்தன்மையுடன் கூறியவரை நன்றியுடன் நோக்கினாள்.

    அவருக்கும் கிட்டத்தட்ட அவள் வயதுதான் இருக்கும். சற்றே நரைத்திருந்தாலும், அடர்ந்த முடி நெற்றியெல்லாம் படர்ந்திருந்தது.

    “உன் பேரு என்னப்பா?”

    தலையும், பார்வையும் இலக்கில்லாது, எங்கோ பதிந்திருக்க, இயந்திர கதியில் பதிலளித்தான் மாதவன்.

    “அங்கிள் முகத்தைப் பார்த்துச் சொல்லு, மாதவன்!” என்று திருத்தினாள் தாய்.

    அவன் அவர்புறம் திரும்பியபோது, மரியாதையாக, “என் பெயர் சேது!” என்று தெரிவித்தார், முறுவலுடன்.

    “சேது!” என்று திரும்பச் சொன்ன மகனை மீண்டும் கண்டித்தாள் தாய்: “அங்கிள் சேது!”

    “மீன் குட்டி மாதிரி தண்ணிக்குள்ளே என்னென்னமோ வித்தைகள் செய்யறானே!” சேதுவின் வியப்பு உண்மையாக இருந்தது.

    பெருமையுடன் புன்னகைத்தாள் சாவித்திரி மாதவனைப் பாராட்டி, இதுவரை எவரும், எதுவும் சொன்னதாக நினைவில்லை அவளுக்கு.

    “ஒவ்வொரு நாளும் இங்க கூட்டிட்டு வர்றப்போ, பயமா இருக்கு எனக்கு. அவனோ, எப்பப் பார்த்தாலும், `ஸ்விம்மிங் போகலாம்மா, ப்ளீஸ்!` என்கிறான்!”

    “எதுக்குப் பயப்படறீங்க? சொல்லப்போனா, மாதவனைப் பாத்தா பொறாமையா இருக்கு எனக்கு”.

    சாவித்திரி வியப்புடன் அவரை நோக்கினாள்.

    “நாப்பது வயசுக்குமேலதான் நீச்சல் பழகினேனா! இப்போ.. ஒழுங்கா.. இந்தப் பக்கத்திலேருந்து அந்தப் பக்கம்தான் போகத் தெரியும். மீதி எல்லாம் பயம்!”

    அவர்கள் இருவரும் மனம் விட்டுச் சிரிக்கையில், காரணம் புரியாமலேயே தானும் சேர்ந்து சிரித்தான் மாதவன்.

    பூரிப்புடன் அவனது கன்னத்தைத் தடவினாள் தாய். இப்போது அக்கன்னம் முன்போல வழவழப்பாக இல்லை என்பதை உணரும்போதே, ஒரே சமயத்தில்பெருமிதமும், கவலையும் முளைத்தன.

    ஒளிவுமறைவில்லாது பேசும் இவரிடம் எதை வேண்டுமானாலும் சொல்லலாம் என்ற நம்பிக்கையுடன், “ஒங்ககிட்ட ஒண்ணு கேக்கலாமா?” என்றாள்,கெஞ்சலாக.

    பதிலாக, அவர் மிக லேசாக தலையை ஒருமுறை மேலும், கீழும் ஆட்டி, அவளுடைய கண்களையே உற்றுப் பார்க்க, சாவித்திரி தன் மனதைத் திறந்துகொட்டினாள் — தன்னைவிட உயரமாக வளர்ந்துவிட்ட மகனுக்குப் பல் விளக்க ஒவ்வொரு நாளும் தான் படும் பாடு (`அவனை நாற்காலியில உட்காரவைங்களேன்!`), யாராவது பேசும்போது அதை அரைகுறையாக விளங்கிக்கொண்டு, தவறாக அதை வெளியிட்டு மகன் தலைகுனிவை ஏற்படுத்துவது;அப்படித்தான் ஒருநாள், ஒரு பெண்மணி அவர்கள் வீட்டிற்கு வந்திருந்தபோது, அவளுடைய மார்பகத்தைச் சுட்டி, `குண்டு!` என்று அறிவித்தது, அப்போதுவந்தவள் அடைந்த அதிர்ச்சி, கோபம் — இப்படியாக, தன்னை எப்போதோ பாதித்து இருந்த அனைத்தையும் பகிர்ந்துகொண்டாள். ஒருவரிடம் மனந்திறந்துபேசுவதே இனிய அனுபவமாக இருந்தது.

    உன்னிப்பாகக் கேட்டுக்கொண்டிருந்த சேது, “தான் ஆண் என்பது மாதவனுக்குத் தொ¢யுமா?” என்று வினவினார்.

    சாவித்திரி தலையசைத்தாள்.

    “பொதுவா, ஒரு பையனுக்கு நாலு வயசாறப்போ, `அம்மாவோட ஒடம்பு என்னோடதுமாதிரிஇல்லையே!` அப்படின்னு வியப்பா இருக்கும். `அம்மாஎன்கூடவே இருக்கணும்` என்கிறமாதிரி ஒரு கவர்ச்சி ஏற்படும்”.

    பிறகு, தான் படித்திருக்கும் பெருமையை இவளிடம் காட்டிக் கொள்கிறோமே என்று வெட்கியவராக, “ஆசிரியப் பயிற்சி எடுக்கும்போது, மனோதத்துவத்திலபடிச்சது,” என்று சமாளித்தார். “மாதவனுக்கு ஒடம்புதான் வளர்ந்திருக்கு. ஆனா, மனசு இன்னும் சின்னப்  பிள்ளையாத்தானே இருக்கு?” என்று நியாயம்கற்பித்தார்.

    “மத்தவங்களுக்கு இது புரியுதா? எங்களைத் தப்பா நினைக்கிறாங்க!” சாவித்திரியின் முகத்தில் ஆழ்ந்த வருத்தம்.

    “கெடக்கிறாங்க. நாம்ப எல்லாரையும், எப்பவும் திருப்திப்படுத்திக்கிட்டு இருக்க முடியாது!” கையை ஒருமுறை அலட்சியமாக வீசினார் சேது.

    சிறிது நேரம் யோசித்துவிட்டு, ” நீங்க அவன்கிட்ட,  `நீ அப்பா மாதிரி. அப்பாவும் ஒன்னைமாதிரி பையனாக இருந்தவர்தான். ஆனா, அம்மா ஒரு பெண்` –இப்படிச் சொல்லிப் பாருங்களேன்!”

    “அவனுக்குப் புரியுமா?” சாவித்திரியின் நியாயமான சந்தேகம்.

    “எந்த ஒண்ணையும் செய்கையால புரிய வைக்க முடியாதா, என்ன! அவசியமானா, ஒங்க ஜாக்கெட்டுமேல அவன் கையை வைங்க!” கூறப்பட்டதுநுண்ணியமானதாக இருந்தாலும், கூறிய விதத்தால் ஆபாசமாக ஒலிக்கவில்லை.

    “எந்த ஒண்ணும் நமக்குப் புரிஞ்சு போயிடறப்போ,  அதில வேண்டாத ஆர்வம் இருக்கிறதில்ல,” என்று அழுத்தமாக மேலும் சொன்னார்.

    சாவித்திரியின் நன்றி உணர்வையும் மீறி, பெருமூச்சு வந்தது. “நான் தெரிஞ்சுக்க வேண்டியது எவ்வளவோ இருக்கு!” சொல்லும்போதே  சுயபச்சாதாபம்கிளர்ந்தது.

    சேது மென்மையாகப் புன்னகைத்தார். “எல்லாமே தெரிஞ்சவங்களா இருந்தா, நாம்ப ஏம்மா இன்னும் இந்த  ஒலகத்தில இருக்கோம்? சாமியா இல்லஆகியிருக்கணும்?”

    கருணையும், அமைதியும் ததும்பும் அவரது கண்களைச் சந்தித்தபோது குழப்பமோ, குற்ற உணர்வோ இல்லை அவளிடம்.

    நாளடைவில், சேது நீச்சல் குளத்தில் இருந்தால், தொலை தூரத்திலிருந்தே அவரைக் கண்டுவிட்டு, “அங்கிள் சேது!” என்று ஆனந்தப்படும் மாதவனுக்காக,அவன் கேட்பதற்கு முன்னாலேயே சாவித்திரி` தயாராவது பழக்கமாயிற்று. அவளுடைய புதிய ஆர்வம் கணவருடைய கண்களுக்குத் தப்பவில்லை. “எப்படாநீச்சல் குளத்துக்குப் போகலாம்னு, இவனைவிட நீதான் அதிகம் துடிக்கிறமாதிரி இல்ல இருக்கு!” என்று கேலி செய்தார்.

    அவள் எதுவும் சொல்லுமுன், “அங்கிள் சேது!” என்றான் மாதவன், அசந்தர்ப்பமாக.

    தம்புராவின் தந்தி அறுந்ததுபோல, இசைவு மறைந்த சூழ்நிலை எழுந்தது அங்கு.

    சட்டென முகத்தில் மாறுதல் தெரிய, “யாரது?” என்ற கேள்வி பிறந்தது.

    கூடியவரை இயல்பாக இருக்க முயன்று, “எப்பவாவது அங்கே பார்ப்போம். மாதவன்கிட்டே அன்பாப் பேசுவார்,” என்றாள்.

    “என்ன உத்தியோகம்?” மிரட்டலாக வந்தது அடுத்த கேள்வி.

    சாவித்திரியின் ஸ்ருதி இறங்கியது. “ஸ்கூல் டீச்சர்னு சொன்ன ஞாபகம்!”

    கை, கால், முதுகு எல்லாம் தெரிய, மானம் காக்கும் அத்தியாவசியமான உறுப்புகள் மட்டும் மறைக்கப்பட்டால் போதும் என்னும் நோக்கத்துடன்தைக்கப்பட்டிருந்த உடையில் மனைவி நீச்சல் குளத்தில் இருக்க, அவளருகே ஓரிரு சாண் அகல உள்ளாடை மட்டுமே அணிந்த ஒரு ஆண்மகன்!

    எப்படிப் பேசினால் பெண்களைக் கவரலாம் என்பதைக் கலையாகக் கற்றிருப்பவன் அவன் என்பதில் அவருக்குக் கிஞ்சித்தும் சந்தேகமில்லை.

    பெற்ற குழந்தையைப் புகழ்ந்து பேசினால், அவள் எவ்வளவு கடின நெஞ்சுடையவளாக இருந்தாலும் இளகிவிடுவாளே! அப்படி இருக்கையில், மகனைநினைக்கையில், வேதனை மட்டுமே அனுபவித்திருக்கும் சாவித்திரி எம்மாத்திரம்!

    மாதவனிடம் அன்பாகப் பேசுவானாமே!

    தான் பெற்ற மகனுடன் கழிக்க சிறிது அவகாசத்தை ஒதுக்கவில்லை என்பதைக் குத்திக்காட்டுகிறாளோ!

    இப்போது தாய், தந்தை இருவருமே தொடர, நீச்சலுக்குப் போனான் மாதவன். அவனுடைய கபடில்லா மகிழ்ச்சியைக் கண்டு ஆனந்தப்பட முடியவில்லைசாவித்திரியால்.

    கணவருக்கு அப்படியொன்றும் மகன்மீது புதிதாகக் கரிசனம் பிறந்துவிடவில்லை, தன்னைக் கண்காணிக்கவே உடன் வருகிறார் என்று புரிய, வேதனையாகஇருந்தது.  மரியாதை கருதி, சேதுவை கணவருக்கு அறிமுகப்படுத்தினாள், வலிய வரவழைத்துக்கொண்ட புன்னகையுடன்.

    தனது சொந்த கம்பெனியில் வந்து குவியும் பணத்தை கணவர் பிரகடனப்படுத்திக்கொண்டபோது, சேதுவுடன் அவளும் கூசிப்போனாள்.

    `நான் யார் தெரியுமா? நீ மாதமெல்லாம் உழைத்துச் சம்பாதிப்பதை நான் ஒரே நாளில் ஈட்டிவிடுகிறேன்! என்னிடமா மோதுகிறாய்?` என்று மறைமுகமாகஎச்சரிக்கை விடுத்தது தெளிவாகத் தெரிந்தது.

    சில வாரங்கள் கழிந்தன.

    இனிமேலும் தான் மனைவிகூட வருவது அனாவசியம் என்று அவர் நினைத்திருக்க வேண்டும்.

    கணவர் தன் முழு கவனத்தையும் பழையபடி வேலை மற்றும் `பார்` நண்பர்களிடம் திருப்ப, சாவித்திரியால் நிம்மதியாக இருக்க முடியவில்லை.

    இப்போது மட்டும் என்ன, அவளிடம் புது நம்பிக்கையா?

    மகனுடைய வளர்ச்சியில், மகிழ்வில் அக்கறையைவிட மனைவியைக் கண்காணிக்க வேண்டியதுதானே அவசியமாகப் போய்விட்டது அவருக்கு!

    “அங்கிள் சேது!” என்று மாதவன் ஆர்ப்பரித்தபோது, தலைநிமிர்ந்த சாவித்திரியின்  கண்கள் சேதுவின் தீர்க்கமான நயனங்களில் பதிந்தன.

    அதில் அவள் கண்டது இரக்கமா, வேதனையா? அதை அலசும் மனநிலையில் இருக்கவில்லை அவள்.

    வேகமாகப் பார்வையைத் திருப்பிக்கொண்டபோது, ஆத்திரம் பொங்கியது, இலக்கில்லாமல்.

    ஆண்-பெண் நட்பு எவ்வளவுதான் மதிப்புக்குட்பட்டதாக இருந்தாலும், அதைக் கேவலமானதாகக் கருதுபவர்கள் இருக்கும்வரையில், எவருக்குமே பூரணசுதந்திரம் இல்லை.

    நம் சமூகம் ஏன் இப்படி தனக்குத்தானே விலங்கிட்டுக் கொள்கிறது?

    குளத்தின் அடியில் போய், வாய் நிறையத் தண்ணீருடன் மூச்சுத் திணற, தலையை வெளியே நீட்டிய மகனுடைய முதுகில் ஓங்கி ஓர் அறை விட்டாள்சாவித்திரி.

    அதைக் காணாதமாதிரி, வேறு பக்கம் போனார் சேது.

    Share
  • மின் நூலகம்

    — க.பிரகாஷ்.

    21 ஆம் நூற்றாண்டின் இணையற்ற அறிவியல் சாதனமாகக் கணினியில் நூல்களைப் பதிவு செய்து பாதுகாக்கும் பணி உலகெங்கிலும் எல்லா மொழிகளிலும் வெகு வேகமாக நடைபெற்று வருகிறது.

    தமிழ் மொழி இலக்கியம், இலக்கணம், உள்ளிட்ட நூல்களைக் கணினியில் சேமித்து வைக்கும் வேலை அரசாலும், அரசு சார்புடைய அமைப்புகளாலும், தனியார் பலரின் ஆர்வத்தாலும் நடைபெற்று வருகிறது.

    சென்னையில் உள்ள தமிழ் இணையப் பல்கலைக்கழகமும் பெரும்பங்காற்றியுள்ளது. சென்னை பல்கலைக்கழகமும் மைசூரில் உள்ள இந்திய மொழிகளின் நடுவண் நிறுவனமும் தமிழ் நூல்களைக் கணினியில் சேமிக்கும் வேலையைத் தொடங்கி வருகின்றனர்.

    கே.கல்யாணசுந்தரம் என்பவர் தமிழ் நூல்களைக் கணினியில் சேமிக்கும் வேலையை 1988 ஆம் ஆண்டு தொடங்கினார். இது தமிழ் நூல்களைக் கணினியில் சேமிக்கும் முதல் பணியாகக் கருதப்படுகிறது. இவர் தொடங்கிய திட்டத்திற்கு மதுரைத் திட்டம் என்று பெயர் வந்தது.

    நூலக திட்டங்களை அமைத்து அனைத்து நூலகங்களிலும் மின்னூல் பணியை ஆரம்பித்தனர். இதுவே நூலக திட்டம் என்று குறிப்பிடுகின்றார்.

    தமிழக அரசாங்கம் தமிழகத்தில் உள்ள கன்னிமார நூலகம் தேவநேயப் பாவாணர் நூலகம், தஞ்சையில் உள்ள சரஸ்வதி மகால் நூலகம், தமிழ் பல்கலைக்கழக நூலகம், கும்பகோணத்தில் உள்ள அரசினர் கலைக் கல்லூரி நூலகம், போன்ற புகழ் மிக்கதும் பழமையானதுமான நூலகங்களைக் கணினிமயமாக்கி பாதுகாத்து வருகிறது.

    மேற்கூறிய பணிகளில் சில நூல்களை முழுவதுமாக படிக்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ளன. சில நூல்களின் பட்டியலைப் பார்வையிடும் வகையில் அமைந்து காணப்படுகின்றன.

    இங்ஙனம் தமிழ் நூல்களைக் கணினியில் சேமித்து இணையப் பயன்பாட்டின் மூலமாக எவரும் எங்கிருந்தும் பார்க்கும் வகையில் நூலகமாக அமைத்திடும் முறையையே மின் நூலகம் என்று குறிப்பிடப்படுகின்றன.

    மின் நூலகங்கள்:

    virtual_library_web
    • எண்ணிம நூலகம் – (Digital Library)
    • தமிழ் இணையப் பல்கலைக்கழகம் மின் நூலகம் – (Tamil Virtual University E – Library)
    • ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் – (Roja Muthiah Resarch Library)
    • சென்னை மின் நூலகம் – (Chinnai Library)
    • நூலகம்.நெட் – (Noolaham.net)
    • இந்திய மொழிகளின் நடுவண் நிறுவனம் – (Central Institute of Indian Languages – (CIIL)

    மதுரைத் திட்டம், மின்பதிப்புத் திட்டம்:
    உலகளாவிய தமிழர்கள் இணையம்வழி ஒன்று கூடி தமிழ் இலக்கியங்களின் மின்பதிப்புக்களை உருவாக்கி அவற்றை இணையம் வழி உலகெங்கிலும் உள்ள தமிழர்களும் தமிழார்வலர்களும் இலவசமாக பெற வசதிசெய்யப் பெற்றுள்ளன.

    ஒரு சமூகத்திற்கு இலக்கியங்கள்தான் கலாசாரத்திற்கான ஒரு முக்கிய எடுத்துகாட்டு ஆகும். உலகளாவிய தமிழர்களுக்கும் ஏனையோருகும் பகிர்ந்துகொண்டு பின் வரும் சந்ததியினருக்குக் கொண்டுச் செல்வதும் ஒவ்வொரு தமிழரின் கடமை ஆகும்.

    மதுரைத் திட்டம் எந்தவித அரசாங்கம் அல்லது தனியார் நிறுவன உதவியின்றி, வியபார நோக்க மின்றியும் நடைபெறுகின்ற ஒரு தன்னார்வ முயற்சி ஆகும். 1998 ஆம் ஆண்டு தமிழர் பொங்கல் திருநாள் அன்று ஆரம்பிக்கப்பட்ட இத்திட்டம் இன்றும் தொடர்ந்து இயங்க வருகின்றது. உலகில் வெவ்வேறு நாடுகளில் வசிக்கும் முன்னூற்றுக்கு மேற்பட்ட தமிழர்களும் தமிழார்வலர்களுக்கும் ஒன்றுகூடி இத்திட்டத்தை நடத்தி வருகின்றனர்.

    மதுரைத் திட்டம் உலகில் பல நாடுகளில் வசித்து வரும் தமிழர்கள் அவரவர் தங்களது வீடுகளில் கணினியைக் கொண்டு கிடைக்கும் நேரங்களில் தமிழ் இலக்கியங்களை கணினியில் உள்ளிட்ட பிழை திருத்தி மின்பதிப்புகளாக தயாரிக்கும் ஒரு கூட்டு முயற்சியில் ஈடுப்பட்டுள்ளனர்.

    தமிழ் இலக்கியங்களை மின்வழி பாதுகாத்து மற்றவர்களுடன் இலவசமாக பகிர்ந்து கொள்வதில் பங்கு பெறச்செயகின்றனர்.

    மதுரைத் திட்டத்தின் மின்பதிப்புகள் ஆரம்ப காலத்தில் இணைமதி, மயிலை, தமிழ் எழுத்துக்கள் கொண்டு தயாரிக்கப்பட்டது. ஆனால்1999 ஆம் ஆண்டிலிருந்து இணையம் வழி தமிழ் தகவல் தொழில்நுட்ப பரிமாற்றதிற்கான இணையம் வழி தீர்மானிக்கப்பட்ட தமிழ் தகுதர வடிவம் கொண்டு தயாரித்து மின்பதிப்புகள் வெளியிட்டு வருகின்றது. 2003 ஆம் ஆண்டில் இருந்து பல்மொழி ஒருங்குக் குறியீடு முறை தயாரிக்கப்பட்ட மின்பதிப்புகளையும் வெளியிட்டு வருகின்றனர்.

    தமிழ் இலக்கியங்களின் வரலாறு மிக பழமையானது. முதற்சங்க கால நூல்கள் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே இயற்றப்பட்டது என்பது வல்லுனர்கள் கருத்து.

    மதுரைத் திட்டம் காலம், சமயம், தேசப்பிரிவு, இலக்கியப்பிரிவு போன்ற எவ்வித பாகுபாடுமின்றி எல்லாவிதமான தமிழ் நூல்களின் மின்பதிப்புகளை வெளியிட்டு வருகின்றது. தொன்றுதொட்டு சங்ககால நூல்கள் முதல் தற்கால தமிழ்நூல்கள் வரை அனைத்தும் வெளியிடப் படுகிறது. ஒரேஒரு கட்டுப்பாடு புத்தக வடிவில் வெளியான நூல்கள் காப்புரிமைகளுக்கு மரியாதை கொடுத்து கண்ணியமாக நடப்பது ஆகும். காப்புரிமை இல்லா எல்லா நூல்களையும் மின்பதிப்பில் வெளியிடலாம்.

    உலக மின்னூலகம்:
    உலக மின்னூலகம் என்பது யுனெஸ்கோ மற்றும் அமெரிக்க காங்கிரசு நூலகம் ஆகியவற்றால் நடத்தப்படும் ஒரு பன்னாட்டு மின்னூலகம் ஆகும். அனைத்துலக மற்றும் பல்வேறு கலாசாரப் புரிதல்களை ஊக்குவித்தல், இணையத்தில் கிடைக்கும் கலாசார உள்ளடக்கங்கள் அளவிலும், வகையிலும், அதிகமாக்குதல், கல்வியாளர்கள், ஆய்வாளர்கள், பொதுமக்கள், ஆகியோருக்கு அறிவுசார் வளங்களை அளித்தல், பங்குதாரராக உள்ள நிறுவனங்களில் அறிவுசார் வளங்களை அதிகாpத்தல் அதன் மூலம் பல்வேறு நாடுகளுக்கு இடையே உள்ள எண்ம இடைவெளியைக் குறைத்தல் ஆகியவற்றை தனது நோக்கமாக உலக மின்னூலகம் கொண்டுள்ளது.

    உலகெங்கிலும் உள்ள கலாசாரங்களின் முதன்மைத் தகவல் ஆதாரங்களான வரைப்படங்கள் அரிய நூல்கள் இசைக் கோர்வைகள் திரைப்படங்கள், அச்சுவடிவங்கள், ஒளிப்படங்கள், வடிவியல், வரைபடங்கள், ஆவணங்கள் உள்ளிட்டவற்றை இலவசமாக இணையத்தில் கிடைக்கச் செய்வதில் முனைப்புடன் செயல்படுகிறது.

    உலக மின்னூலகம் துவங்கப்பட்ட போது அரபி, சீனம், ஆங்கிலம், பிரஞ்சு, போர்ச்சுகிசு, ரஷ்யன், ஆகிய மொழிகளில் கிடைத்த 1170 உருப்படிகளைக் கொண்டிருந்தது.

    வரலாறு:
    ஏறக்குறைய 20 ஆண்டுகளுக்குப் பிறகு 2003 ஆம் ஆண்டு ஐக்கிய நாடுகள் கல்வி அறிவியல் மற்றும் கலாசார அமைப்புக்கான யுனெஸ்கோ தனது நிலையான பிரதிநிதிக் குழுவை ஐக்கிய அமெரிக்கா மீள அமைத்தது. அமெரிக்க நாடாளுமன்றமான காங்கிரசின் நூலகர் முனைவர் ஜேம்சு.எச்.பில்லிங்டன், அந்நாட்டின் ஆணையாளராக யுனெஸ்கோவில் நியமிக்கப்பட்டார்.

    “ஜூன் 2005 ஆம் ஆண்டு யுனெஸ்கோ துவக்க நாள் கருத்தரங்கில் அழைப்பின் பேரில் சென்று உலக மின்னூலகம் ஒரு பார்வை என்ற தலைப்பில் உரையாற்றினார்.”5 அப்போது நிறுவனங்கள் நூலகங்கள் அருங்காட்சியகங்கள் சேகரித்து வைத்துள்ள அரிய உள்ளடக்கங்களை எளிதில் அணுகி இலவசமாகப் பெறக்கூடிய வகையில் புதிய வடிவில் திரும்ப இந்த உலகிற்கு அளிக்கத் தகுந்த அமைப்பாக உலக மின்னூலகம் செயல்பட வேண்டும் என்று விளக்கினார்.

    அரசு தனியார் பங்களிப்புடன் தொடங்கப்பட்ட உலக மின்னூலகத்தில் 2005 ஆம் ஆண்டு கூகுள் நிறுவணம் உதவியாக இருந்தது.

    பணிக் குழுக்கள்:
    பில்லிங்டன் தொலை நோக்கை நிறை வேற்ற ஒரு செயற் திட்டத்தைக் காங்கிரசு நூலகத்தில் உள்ள உலக மின்னூலக முது நிலை ஆலோசகர் முனைவர் ஜான் வான் ஔடென்ரேன் 2006 ஆம் ஆண்டு கருத்தரங்கில் வழங்கினார்.

    உலக மின்னூலகமானது தனது பங்குதாரர்களை முதன்மையான நான்கு திட்டப்பணிகளில் ஊக்குவிக்க வேண்டும் என்றார்.
    அவை:
    • தொழில் நுட்ப கட்டமைப்பு
    • தேர்வு செய்தல்
    • நிர்வகித்தல்
    • நிதியளித்தல்

    2006 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் பாரிசில் நடைப்பெற்ற உலக மின்னூலக வளர்ச்சி குறித்த மாநாட்டில் இக்குறிக்கோள் வடிவமைக்கப்பட்டது. நான்கு திட்டப் பணிகளில் உள்ள தனிப்பட்ட சிக்கல்களை ஆராய தனித்தனியான பணிக் குழுக்கள் அமைக்கப்பட்டன.

    2007 ஆம் ஆண்டு முதற்பகுதியில் ஒன்று கூடி மின்னூலகத் துறையில் உள்ள தொழில் வல்லுநர்களையும் சேர்த்து கொண்டது.

    ஒவ்வொரு நாடுகளில் இருந்து பணிக்குழுவினருக்கு உதவி செய்து வந்தனர். 2009 ஆம் ஆண்டு உலக மின்னூலகம் தொடங்கப்பட்டது.

    காட்சிப்படுத்தல்:
    உலக மின்னூலகம் துவங்கப்பட்ட போது பல்வேறு காட்சிப்படுத்துதல்கள் சேர்க்கப்பட்டன.
    அவை:
    • செஞ்யின் கதை
    • 11 ஆம் நூற்றாண்டு ஜப்பான் கதை
    • உலகில் முதன் முறையாக எழுதப்பட்ட புதினம்
    • குழந்தை ஏசுவின் முதல் அசுடெக் குறிப்புகள்
    • அல்ஜீப்ரா கணித வடிவமைப்பில் பயன்படுத்தப்பட்ட பழமை வாய்ந்த அரபு மொழி நூல்கள்.
    • எட்டாயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்த ஆப்பிhpக்கா ஒவியமான ரத்தம் சிந்தும் மான்.
    • அமெரிக்கா சென்று முதன் முறையாக குறிப்பிட்டு உருவாக்கப்பட்ட வால்டுசீமுல்லர் வரைப்படம்.
    • மொழியில் பெயர்க்கப்பட்ட விவிலியம் ருசிய குருவால் அலுசியன்.
    • மாலி நாட்டில் கிடைத்த இசுலாமிய கையெழுத்துப் பிரதி.
    • லுமியர் சகோதரர்கள் உருவாக்கிய உலகின் முதல் திரைப்படம்
    • இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் கல்வெட்டு ஒளிப்படம்

    இது போன்று பல்வேறு நூல்களை உலக மின்னூல்கள் துவங்கப்பட்ட போது காட்சிப்படுத்தலின் போது சேர்க்ப்பட்டுள்ளன.

    தமிழ் இணையப் பல்கலைக் கழக நூலகம் – (Tamil Virtual University E – Library):
    உலகம் தழுவி வாழும் தமிழர்கள், தமிழ் ஆர்வலர்கள், தமிழ் அறிஞர்கள், தமிழ் பயில விரும்பும் மாணவர்கள் முதலியோர் படித்துப் பயன்பெறும் வகையில் தமிழ் இணையப் பல்கலைக்கழகம் மின்நூலகம் ஒன்றை அமைந்துள்ளது. தொல்காப்பியம் முதற்கொண்டு இக்கால இலக்கியம் வரையிலான 250 க்கும் மேற்பட்ட ஏறக்குறைய 1,00,000 பக்கங்களுக்கு மேல் இம்மின் நூலகத்தில் இடம் பெற்றுள்ளன.

    தமிழ் இணையப் பல்கலைக் கழக மின் நூலகத்தில் உள்ள நூல்களை உலகில் எவரும் எங்கிருந்தும் எப்பொழுதும் இணைய வழியாகப் படித்தப் பயன் பெறலாம். ஓர் நூலை ஒரே நேரத்தில் எத்தனைப் பேர் வேண்டுமானாலும் படித்தப் பயன பெறலாம். ஒருவர் வழக்கமான நூலகத்திற்குச் சென்று தமக்குத் தேவையான நூல்களைத் தேடிப் பெறுவதில் உள்ள சிக்கல்கள் நீங்குகின்றன.

    “அவசரமான உலகத்தின் அவசரம் கருதி காலம் பொன்னானது என்ற பொன்மொழியை மனத்தில் கொண்டு படிப்பவர்களின் நேர விரியத்தைத் தவிர்க்கும் வகையில் இந்நூலகம் அமைக்கப்படுகின்றது.” அரிய வசதிகள் கொண்ட இம்மின் நூலகத்தை விரும்புகின்ற அனைவரும் தற்பொழுது கட்டணம் ஏது மின்றி முற்றிலும் இலவசமாகப் பயன்படுத்திக் கொள்ளலாம். இம்மின் நூலகமானது இலக்கண, இலக்கிய நூல்கள் உரோமன் வரி வடிவத்தமிழ் நூல்கள், அகராதிகள், கலைச்சொல், தொகுப்புகள், ஒளிக்காட்சித் தொகுப்புகள் என்ற வகையில் பகுக்கப்பட்டுள்ளது.

    பொதுவாக நூலகத்தில் நூல்கள் மட்டுமே இடம் பெற்றிருக்கும் ஆனால், இம்மின் நூலகத்தில் தமிழர்களின் பண்பாட்டை எடுத்துரைக்கும் பண்பாட்டு நிகழ்ச்சிகளும், தமிழர்களின் இறை உணர்வைப் புலப்படுத்துகின்ற சைவ, வைணவக் கோயில்களின் ஒலி, ஒளிக்காட்சிகளும் இடம் பெற்றுள்ளன. தமிழர்களின் சமயப் பொறைக்கு எடுத்துக்காட்டாக இம்மின் நூலகத்தில் இசுலாமிய மற்றும் கிறித்துவ ஆலயங்களின் ஒலி, ஒளிக்காட்சிகள் இடம் பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.

    உள்ளடக்க மின்னூல்கள்:
    தமிழ் இணைய பல்கலைக் கழக மின் நூலகத்தில் இடம் பெற்றுள்ள நூல்கள் இலக்கண நூல்கள், சங்க இலக்கியம், பதினெண் கீழ்கணக்கு, காப்பியங்கள், சமய இலக்கியங்கள், சிற்றிலக்கியங்கள், திரட்டு, நூல்கள், நெறி நூல்கள், சித்தர் இலக்கியங்கள், இருபதாம் நூற்றாண்டுத் தமிழ் இலக்கியங்கள் உரைநடை, நாட்டுப்புற இலக்கியங்கள், சிறுவர் இலக்கியங்கள் என்னும் வகைப்பாட்டு முறைமையில் பகுத்தமைக்கப்பட்டுள்ளன.

    இலக்கண நூல்கள்:
    • தொல்காப்பியம்
    • புறப்பொருள் வெண்பாமாலை
    • யாப்பருங்கலம்
    • யாப்பருங்கலக்காரிகை
    • தண்டியலங்காரம்
    • நன்னூல்
    • நம்பியகப் பொருள்
    • தொன்னூல் விளக்கம்
    • இலக்கண விளக்கம்
    • தமிழ் நெறி விளக்கம்
    • சிதம்பரப்பாட்டியல்
    • நவநீதப்பாட்டியல்
    • வீரசோழியம்
    • தமிழ் நூல்
    • முத்துவீரியம்
    • சுவாமிநாதம்
    • நேமிநாதம்
    • அறுவகை இலக்கணம்
    இவை அனைத்து இலக்கண நூல்களுக்கு உரையுடன் அமைந்துள்ளன.

    இலக்கிய நூல்கள்:
    தமிழ் இணைய பல்கலைக் கழக நூலகத்தில் 52 இலக்கிய நூல்கள் உரையுடன் இடம் பெற்றுள்ளன.
    • சங்கஇலக்கியம்
    • பதினெண்கீழ்க்கணக்கு
    • ஐம்பெங்ருகாப்பியங்கள்
    • ஐஞ்சிறுகாப்பியங்கள்
    • பெருங்கதை
    • கம்பராமாயணம்
    • வில்லிபாரதம்
    • அரிச்சந்திர புராணம்
    • காஞ்சிப் புராணம்

    சமய இலக்கியங்கள்:
    சமய இலக்கிய நூல்கள் சைவம், வைணவம், கிறித்துவம், இசுலாமியம் என்ற வரிசையில் அமைந்துள்ளன.

    சைவம் –
    • பன்னிரு திருமுறைகள்
    • திருவிளையாடற் புராணம்
    • கந்தபுராணம்
    • கல்லாடம்
    • மெய்கண்டசாத்திரங்கள்
    • திருமுறைத் தலங்கள்

    வைணவம் –
    • நாலாயிர திவ்யபிரபந்தம்
    • 108 வைணவ திவ்யதேச ஸ்தலவரலாறு

    கிறுத்துவம் –
    • தேம்பாவணி
    • இரட்சணிய யாத்திரிகம்
    • திரு அவதாரம்
    • இயேசு காவியம்
    • இரட்சணிய மனோகரம்

    இசுலாம் –
    • சீறாப்புராணம்
    • நெஞ்சில் நிறைந்த நபிமணி
    • நாயகம் எங்கள் தாயகம்
    • யூசுப் ஜீலைகா
    • நாயகம் ஒரு காவியம்

    சிற்றிலக்கியங்கள்:
    • கலம்பகம்-கச்சிக்கலம்பகம்
    • உலா-மூவருலா
    • தூது-அழகர் வீடுதூது
    -தமிழ்வீடுதூது
    • கோவை – தஞ்சைவாணன் கோவை
    • பிள்ளைத்தமிழ்-சேக்கிழார்ப் பிள்ளைத் தமிழ்
    -திருச்செந்தூர் முருகன் பிள்ளைத்தமிழ்
    -மதுரை மீனாட்சியம்மைப் பிள்ளைத்தமிழ்
    • பரணிஇரணியவதைப் பரணி
    -கலிங்கத்துப்பரணி
    • அந்தாதி – அபிராமி அந்தாதி
    -திருக்கருவைப் பதிற்றுப்பத்தந்தாதி
    • சதகம் – தண்டலையார் சதகம்
    -அறப்பளீசுர சதகம்
    -குமரேச சதகம்
    -கொங்கு மண்டல சதகங்கள்
    • வெண்பா – நள வெண்பா
    • குறவஞ்சி – திருக்குற்றாலக் குறவஞ்சி
    -தியாகேசர் குறவஞ்சி
    • பிரபந்தம் – அஷ்டபிரபந்தம்
    • ஆற்றுப்படை – புலவராற்றுப்படை

    திரட்டு நூல்கள்:
    குமரகுருபரர் பிரபந்தத் திரட்டு 12 நூல்களும், சிவப்பிரகாச சுவாமிகள் பனுவல் திரட்டு 24 நூல்களும், இராமலிங்க அடிகளின் திருவருட்பா, தாயுமானவரின் தனிப்பாடல்கள் உள்ளிட்ட 38 நூல்கள் உரையுடன் அமைக்கப்பட்டுள்ளன.

    நெறி நூல்கள்:
    மனிதர்களை நெறிப்படுத்தும்நோக்கில் நெறிநூல்கள் உருவாக்கியுள்ளார். அவ்வகை நுல்கள்
    • ஆத்திசூடி
    • கொன்றை வேந்தன்
    • மூதுரை
    • நல்வழி
    • வெற்றிவேற்கை
    • உலகநீதி
    • நீதி நெறி விளக்கம்
    • அறநெறிச்காரம்
    • நீதிநூல்
    • சித்தர் இலக்கியங்கள்

    இருபதாம் நூற்றாண்டு இலக்கியங்கள் கவிதை:
    • பாரதியார்
    • பாரதிதாசன்
    • வேதநாயகம்பிள்ளையின் பெண்மதி மாலை
    • கவிஞர் முடியரசனின் பூங்கொடி
    • தமிழ் ஒளி கவிதை

    இருபதாம் நூற்றாண்டு இலக்கியங்கள் உரைநடை:
    சிறுகதை, புதினம், நாடகம், கட்டுரை, என்ற முறையில் நூல்களை அமைத்துள்ளது.
    • சிறுகதை – பாரதியார்கதைகள்
    • புதினம் – அகல் விளக்கு (மு.வ)
    -சமுதாய வீதி (நா.பார்த்தசாரதி)
    -வேங்கையின் மைந்தன் (அகிலன்)
    • நாடகம் – மனோன்மணீயம்
    • கட்டுரை – புத்தர் அருளிய தம்மபதம்
    • திறனாய்வு – அறமும் அரசியலும் (மு.வ)
    -இலக்கிய ஆராய்ச்சி (மு.வ.)
    -தமிழர் வளர்த்த அழகுக்கலைகள் (மயிலை சீனி.வேங்கடசாமி)
    -பதினெண் கீழ்கணக்கும் தமிழர் வாழ்வும் (சாமி.சிதம்பரனார்)
    -பாரதியார் கட்டுரைகள்
    -பாவாணர் படைப்புகள் (30 நூல்கள்)

    வரலாறு:
    மொழி வரலாறு, இலக்கிய வரலாறு, வாழ்க்கை வரலாறு, நாட்டு வரலாறு, நாட்டுப்புற இலக்கியங்கள், சிறுவர் இலக்கியங்கள், என பல இலக்கிய நூல்கள் அமைந்துள்ளன.

    மொழி வரலாறு:
    தமிழ் மொழிவரலாறு (தொ.பொ.மீ)

    இலக்கியவரலாறு:
    • சமணமும் தமிழும் (மயிலை சீனி.வேங்கடசாமி)
    • தமிழ் இலக்கிய வரலாறு (மு.வ.)
    • பௌத்தமம் தமிழும் (மயிலை சீனி.வேங்கடசாமி)
    • விடுதலைப் போரில் தமிழ் வளர்ந்த வரலாறு (மா.பொ.சி)

    வாழ்க்கை வரலாறு:
    • என்சரித்திரம் (உ.வே.சா)

    நாட்டுவரலாறு:
    • குடியாட்சி (அப்பாதுரை)
    • தமிழகம் (கா.அப்பாதுரை)
    • தமிழ் இந்தியா (ந.சி.கந்தையாபிள்ளை)
    • தொண்டு (கா.அப்பாதுரை)

    நாட்டுப்புற இலக்கியங்கள்:
    • தமிழர் நாட்டுப் பாடல்கள் (நா.வானமாமலை)
    • மலையருவி (கி.வா.ஜகநாதன்)
    • முத்துப்பட்டன் கதைப்பாடல் (நா.வானமாமலை)

    சிறுவர் இலக்கியங்கள்:
    • வாண்டுமாமா படைப்புகள் (கதைகதையாம் காரணமாம்)

    உரோமன் வரிவடிவ நூல்கள்:
    தொல்காப்பியம், பத்துப்பாட்டு, எட்டுத்தொகை ஆகிய நூல்கள் முழுமையாக உரோமன் வரி வடிவத்தில் கொடுக்கப்பட்டுள்ளன.

    அகராதிகள்:
    தமிழ் இணைய பல்க்கலைக்கழக மின் நூலகத்தில் இலக்கண, இலக்கிய நூல்களேயன்றிச் சென்னைப் பல்கலைக்கழகத் தமிழ்ப் பேரகராதி, சென்னைப் பல்கலைக்கழக ஆங்கிலம் – தமிழ் அகராதி, பால்ஸ் அகராதி, மு.சண்முகம்பிள்ளையின் தமிழ் – தமிழ் அகரமுதல் ஆகிய நான்கு அகராதிகள் இடம் பெற்றுள்ளன. சொற்களுக்கான பொருளை அகர வரிசை முறையிலும், வேண்டிய சொற்களுக்கான பொருளைத் தேடிப் பெறும் வகையிலும், அச்சுவடிவ அகராதியைப் பார்ப்பதைப் போலவே பக்கம் பக்கமாகப் பார்க்கும் வகையிலும் வசதிகள் செய்யப்பட்டுள்ளன.

    கலைச்சொற்கள்:
    சமுதாயவியல், கலை மானிடவியல், அறிவியல், மருத்துவவியல், தகவல் தொழில் நூட்பவியல், சட்டவியல், கால்நடை மருத்துவவியல், பொறியியல் தொழில் நுட்பவியல், மனைஇயல், உயிரியத் தொழில் நுட்பவியல், வேளான்மைப் பொறியியல் ஆகிய துறைகளைச் சார்ந்த அளவுகடந்த கலைச்சொற்கள் இந்நூலகத்தில் அடங்கியுள்ளது.

    சுவடிக் காட்சியகம்:
    ஓலைச்சுவடிகள் உள்ள தமிழ் இலக்கியங்களைப் பாதுகாக்கும் வகையிலும் இம்மின்னூலகம் பணியாற்றி வருகிறது. ஓலைச் சுவடிகளைஒளிப்பட நகல் எடுத்துப் பாதுகாத்து வருகிறது. ஓலைச்சுவடிகள் மட்டுமன்றிச் சில அரிய காகிதச் சுவடிகளையும் பாதுகாத்து வைப்பதோடு அவற்றை இணையம் வழியாகக் காட்சிக்கும் அளிக்கிறது. அவ்வகையில் கீழ்க்காணும் ஓலைச்சுவடிகள் காணக்கிடைக்கின்றன.

    பண்பாட்டுக் காட்சியகம்:
    தமிழர்களின் பண்பாட்டை வெளிப்படுத்தும் வகையில் பின்வரும் பகுதிகள் அமைந்துள்ளன. ஒவ்வொன்று பற்றியும் சுருக்கமான விளக்கம், படக்காட்சிகள், ஒலி ஒளிக் காட்சிகள் ஆகியவை அமைக்கப்பட்டுள்ளன.

    திருத்தலங்கள்:
    • 14 சமணத்தலங்கள்
    • 101 சைவத்தலங்கள்
    • 93 வைணவத்தலங்கள்
    • 9 இசுலாமியத் தலங்கள்
    • 13 கிறித்துவத் தலங்கள்

    திருவிழாக்கள்:
    • 7 தேர் திருவிழாக்கள்
    • 8 பல்வேறு விழாக்கள்

    கலைகள்-16 வகையான கலைகள்
    வரலாற்றுச் சின்னங்கள் – 3 சின்னங்கள்
    விளையாட்டுகள்-5 வகையான விளையாட்டுகள்

    தமிழ் மொழியில் இன்று பரவலாக இருக்கும் நூல்களை அனைத்தும் மின்னூலாக மாற்றி வருகின்றனர். மின்னூல்களை ஒரு கட்டமைப்பாக வைப்பதற்கு மின்னூலகங்கள் உருவாக்கினர். அந்நூலகத்தின் மூலமாக பல மின்னூல்களை வெளியிட்டு வருகின்றனர். இனி வரும் காலங்களில் கட்டமைக்கப்பட்ட புத்தகங்களைப் படிப்பதைத் தவிர்த்து விட்டு மின்னூல் படிக்கும் முறை அதிகமாக வளர்ந்து வருகின்றன.

    _________________________________________

    பார்வை நூல்கள்:
    • http://ta.wikipedia.org/s/w97
    • http://ta.wikipedia.org/s/94p
    • இணையமும் இனிய தமிழும் – க.துரையரசன்

    _________________________________________

    க.பிரகாஷ்
    தமிழ்த்துறை
    தொழில் நுட்ப கள ஆய்வு பணியாளர்
    பாரதியார் பல்கலைக்கழகம்
    கோயம்புத்தூர் – 46

    _________________________________________

    படம் உதவி: https://www.nsf.gov/news/news_summ.jsp?cntn_id=110947

    Share
  • ஆண்டாண்டு தோறும் பருவ காலத்தில் அமெரிக்க மாநிலங்களைத் தாக்கிப் பேரழிவு செய்யும் அசுரச் சூறாவளிகள் [Tornadoes]

     

    aj

    சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear) கனடா

     

    http://www.youtube.com/watch?feature=player_detailpage&v=Pt5JlFVhSqg 

    [New HD 2013 Tornado video compilation – All video no pictures !] 

    http://www.youtube.com/watch?feature=player_detailpage&v=SVDD5kxDoAo 

    [Largest tornado ever recorded? 2.5 miles wide! Hallam,

    Nebraska 2004]

    http://www.youtube.com/watch?feature=player_detailpage&v=8aSbQ_I8-jA

    [April 17th, 2013 Tornado Near Lawton, Oklahoma] 

    https://www.youtube.com/watch?feature=player_detailpage&v=G15Vg-5Q7c0

    [Moore, Oklahoma Tornado – May 20, 2013]

     

     1999 Oklahoma Tornado

     

    முன்னுரை :  அமெரிக்காவின் சில மாநிலங்களில் ஆண்டுதோறும் யுத்தக் குண்டுகள்போல் விழுந்து பேரழிவுகளை விளைவித்து வரும் பருவ காலச் சூறாவளிகள் தவிர்க்க முடியாத, தடுக்க இயலாத, தாங்கிக் கொண்டு தவிக்க வைக்கும் இயற்கையின் மாபெரும் வெப்ப விளைவுக் கொடுஞ் சீற்றமே !  தற்காலத் துணைக்கோள்கள் பற்பல அவற்றின் வருகையை அரை மணிக்கு முன்பு எச்சரிக்கை செய்யினும், ஓரளவு மனித உயிர்கள் தப்பலாமே தவிர, அவற்றின் கோர விளைவுகளைத் தவிர்க்க முடிய வில்லை. இந்தப் பேய்ச் சூறாவளிச் சுற்றுப் புயல்கள் ஆண்டு தோறும் அடித்துத் தாக்கும் நாடுகள் பல : வட அமெரிக்கா, தென் அமெரிக்காவின் வடப் பகுதி, நடுப் பகுதி, தென்னாப்பிரிக்கா, ஆஸ்திரேலியா, நியூஸீலாந்து, தென் கிழக்கு ஐரோப்பா ஆகியவை சூறாவளிப் பேய்க் காற்றின் பாதிப்பு நாடுகளாகக் குறிப்பிடப் படுகின்றன.  1999 ஆண்டு மே மாதத்தில் அமெரிக்காவின் ஓக்லஹோமா, கான்சஸ் மாநிலத்தில் அடித்த அசுரச் சூறாவளியால் 50 பேர் மாண்டனர் ! பொருடுட் சேத நிதி மதிப்பீடு : 1.5 பில்லியன் டாலர் ! சூறாவளியின் உச்ச ஆற்றல் EF-5 [Enhanced Fujita Scale] அளவீடாக மதிப்பிடப் பட்டது.

    2013 May Tornado Deaths

    அந்த சமயத்தில் [1999] மூன்று நாட்களில் மட்டும் 140 சூறாவளிகள் அமெரிக்க மாநிலங்கள் [ஓக்லஹோமா, கான்சஸ், ஆர்க்கென்ஸாஸ், அலபாமா, டெக்ஸஸ், டென்ன்ஸி] பலவற்றைத் தாக்கியுள்ளன !  அவற்றில் EF-5 ஆற்றலில் கோரமாய்த் தாக்கிய ஓக்லஹோமா சூறாவளியின் வேகம் 300 mph [500 km/h] வரை அளக்கப் பட்டுள்ளது ! பேய்ச் சூறாவளி உண்டாக்கிய கட்டடப் பொருட் சேதாரங்கள் சுமார் 40 மைல் தூரம், 1 மைல் அகலம் பரவின.  முற்றிலும் அழிந்த வீடுகள் : 1780; சிதைந்த வீடுகள் : 6550; வாணிப நிறுவகச் சேதாரம் : 127. அதுபோல் கோரமாய்ச் சமீபத்தில் தாக்கிய [2013 மே மாதம் 20] அசுரச் சூறாவளி ஓக்லோஹோமா மூர் நகரைச் சின்னா பின்னம் ஆக்கியது !  சூறாவளியின் தீவிரம் : EF-5, வேகம் : 200 mph, சேதாரப் பகுதி 20 மைல் நீளம், சுமார் 2 மைல் அகலம் !  உயிரிழந்தோர் எண்ணிக்கை : 51. காயம் அடைந்தோர் : 120. பொருட் செலவுத் தொகை இன்னும் கணிக்கப் பட வில்லை.

    2013 Tornado Wreck -1

    அசுரச் சூறாவளிகள் ஆண்டு தோறும் எப்படி உருவாகின்றன ?

    டொர்னாடோ என்பது பெரு வேகத்தில் சுற்றும் ஓர் இடிமின்னல் கோரப் புயல் தூண் !  சுழலும் அந்தத் தூண் புயல் மேலே குடைக் காளான் வடிவில் சேமித்து வரும் இடிமின்னல் மழை முகிலைப் பூமியோடு சேர்த்து வேகமாய் நகர்வது ! புயலின் உச்சவேகம் 100 mph முதல் 300 mph மேலாய் மிகையாகிறது ! சூறாவளி ஓரிரு மைல் அல்லது 300 அடி-500 அடி அகலத்தில் சுமார் 30-50 மைல் தூரம் பயணம் செய்து பாதையில் பெருமளவுச் சிதைவுகளை, பாதிப்புகளை விளைவிக்கும். இவற்றை ஆங்கிலத்தில் [Tornadoes, Twisters, Mesacyclones, Mesovortices] என்றும் குறிப்பிடுகிறார். ஹர்ரிக்கேன் வேறு, டொர்னாடோ வேறு. ஹர்ரிக்கேன் உண்டாக்கும் பேரழிவுகள், பெரு வெள்ளம், மரணங்கள், டொர்னாடோ விளைகளை விடப் பன்மடங்கு.  ஹர்ரிக்கேனிலிருந்து பற்பல சூறாவளிகள் கிளம்பலாம் !

    2013 Tornado Wreck -6

    இடிமின்னல் முகில்கள் திரளவும், சூறாவளிகள் உருவாகவும் பல முன்னடி நிகழ்ச்சிகள் நேர வேண்டும். அந்தப் பகுதிகளில் பேரளவுத் தணிவு நிலை நீர்மை [Low Level Moisture] முதலில் தேவைப்படும். உண்டாகும் நிலப்பரப்புக்கு ஒருபுறம் குளிர்முகக் காற்றும், மறுபுறம் வெப்பக் காற்றும் வீச வேண்டும்.  வட அமெரிக்கக் கண்டம் தென் புறத்தில் மெக்ஸிகோ வெப்ப வளைகுடாவைக் கொண்டுள்ளது. வடக்கே கனடாவின் குளிர்க் காற்று தென்திசை நோக்கி அடிக்கிறது. இரு முகக் காற்றுகளும் சேர்ந்து கடல் நீராவியைச் சுமந்து இணையும் போது, பூமியின் சுழற்சியால் மழைமுகில் சுற்ற ஆரம்பிக்கிறது. மேகத்தில் அயனிகள் சேர்ந்து இடிமின்னல் உண்டாகும். வெப்பக் கடல் நீராவியைச் சேர்த்த மழைமுகில் இடிமின்னல் மேகமாய்த் திரண்டு கடிகார நேர் சுழற்சியுடன் மேலே ஏறுகிறது !

    இடிமுகிலுக்குக் கீழே குடைக் காளான் போல் தூண் முளைத்து பூமியைத் தொடுகிறது !  அதுவே அதி வேகத்தில் நகர்ந்து சூறாவளி ஆகிறது.  சூறாவளிக்கு இப்படி மையத்தைச் சுற்றும் ஒரு சுழற்சிக் கோர வடிவம் எப்படி உருவாகிறது என்பது கால நிலை விஞ்ஞானி களுக்கு இன்னும் ஒரு புதிராகவே உள்ளது !

    2013 Tornado Wreck -8

     

    உருவாகும் பல்வேறு முறைச் சூறாவளித் தோற்றங்கள்          

     

    1. 1.   அசுரத் திரட்சி சூறாவளிகள் [Supercell Tornadoes]:  அதி தீவிரப் பாதிப்புகள் செய்யும் பயங்கரச் சூறாவளிகள் அசுரத் திரட்சி இடிமின்னல் முகில் மூட்டத்தில் தோன்றுகின்றன.  அசுரத் திரட்சி இடிமுகில் மின்கொடை அயனிகள் சேர்ந்து, நீண்ட காலம் நீடிக்கும் சுழற்சிக் கரு மேகங்கள் இவை.  இந்த விதப் பயங்கரச் சூறாவளிகள் சில சமயம் பனித்துண்டு மழையைப் பொழிய வைக்கும் !  அசுரத் திரட்சி இடிமுகில்களில் பாதிதான் சூறாவளியை உண்டாக்கும்.
    1. 2.   சூடான மெக்ஸிகோ வளைகுடா இடிமுகில் திரட்ட நீராவி கொடுக்கிறது.  வரண்ட காற்றைத் தென்மேற்குப் பாலை வனமும், ராக்கி மலைத் தொடர்களும் பரிமாறிப் பெரும் கொந்தளிப்பை [Instability] உண்டாக்குகின்றன. ஈரக் காற்றும் வரண்ட காற்றும் கூடி இணையும் போது ஒருவித அசுரத் திரட்சிகள் [Supercells] தனிப்பட்ட முறையில் உருவாகலாம்.

    2013 Tornado Wreck -2

    1. 3.   கடல் நீர்த்தாரைகள் அல்லது எழுநீர் ஊற்றுகள் [Water Spouts]  : கடல் நீர்த்தாரைகள் அல்லது எழுநீர் ஊற்றுகள் தீவிரமற்ற சூறாவளிகள்.  அவை விளைவிக்கும் தீங்குகள் பெரிதல்ல. சுமார் 150 அடி அகலம் கொண்டவை. இந்த விதச் சூறாவளி கடலில் உண்டாகி, கரைத் தளத்துக்கு வந்ததும் மறைந்து போய் விடுகிறது.  இதற்குப் பூமியைத் தொடும், சுற்றுப் புனல் வடிவப் புயலோட்டம் [Spiraling Funnel-Shaped Wind Current] உண்டு.
    1. 4.   நில நீர்த்தாரைகள் [Land Spouts]  : இவ்விதச் சூறாவளிகள் ஆற்றல் குன்றியவை. இவற்றின் மேகங்களில் அதிகமாய் நீர்மை உண்டாவதில்லை.
    1. 5.   குப்பைச் சூறாவளி [Gustnado]  : நிலத்தில் உண்டாகி குப்பைக் கூளங்களை அள்ளிக் கொண்டு நகரும் பேய்க் காற்று.
    1. 6.   பன்முகச் சுழற்சி சூறாவளி [Multiple Vortex Tornado]  : சில சமயங்களில் ஓர் இடிமின்னல் முகிலிலிருந்து, பற்பல சுழற்சிச் சூறாவளிகள் கிளம்பி வேறு திசைகளில் செல்லலாம்.

     

    May 2013 Tornado

    வட அமெரிக்காவில் உள்ள சூறாவளி அரங்கம் [Tornado Alley]

    வட அமரிக்காவின் மைய மாநிலங்கள் சிலவற்றில் அசுரச் சூறாவளிகள் ஆண்டுதோறும் பருவ காலங்களில் தவறாமல் தாக்கிப் பேரளவில் சேதாரம் விளைவித்து வருகின்றன.  அமெரிக்காவில் 90% எண்ணிக்கைச் சூறாவளிகள் இந்த மாநிலப் பகுதிகளைத் தாக்கி, உயிரிழப்பும், பெரும் நிதிச் செலவும் கொடுத்து வருகின்றன. இந்த மாநிலங்களைச் “சூறாவளி அரங்கம்” [Tornado Alley] என்று காலநிலை நிபுணர் குறிப்பிடுகிறார்.

    1950 முதல் 2009 ஆண்டுவரைச் சூறாவளி அரங்கில், அசுரச் சுழற் புயல்கள் அடித்த பத்து முக்கிய அமெரிக்க மாநிலங்கள் :

    1.    டெக்ஸ்ஸ் :  8049 [உச்ச எண்ணிக்கை]
    2.    கான்ஸஸ் :  3809
    3.    ஓக்லஹோமா : 3443
    4.    ஃபிளாரிடா : 3032
    5.    நெப்ராஸ்கா : 2595
    6.    ஐயோவா : 2368
    7.    இல்லினாய்ஸ் : 2207
    8.    மிஸ்ஸௌரி : 2119
    9.    மிஸ்ஸிஸிப்பி : 1972
    10.   அலபாமா : 1844 [நீச்ச எண்ணிக்கை]

    2013 Tornado Wreck -4

    அமெரிக்க அசுரச் சூறாவளியின் கோரப் பண்பாடுகள்

    ஆண்டு தோறும் அமெரிக்காவை சுமார் 1200 சூறாவளிகள் தாக்கிப் பேரழிவுகளைத் தவறாது விளைவித்து வருகின்றன. இந்த சராசரி எண்ணிக்கை 1950 ஆம் ஆண்டிலிருந்துதான் கணிக்கப் பட்டுள்ளது.  பருவ காலச் சூறாவளிகள் ஒவ்வோர் ஆண்டிலும் மே – ஜூன் மாதங்களில் தவறாமல் அடித்துக் கோரச் சிதைவுகளை உண்டாக்குகின்றன.  பூமியின் சுழற்சியால், பெரும்பாலும் சூறாவளிகள் தென்மேற்குத் திசையில் துவங்கி, வடகிழக்கு நோக்கி வளைந்து அடிக்கின்றன.    பூமியின் சுழற்சியால், பெரும்பாலும் சூறாவளிகள் தென்மேற்குத் திசையில் துவங்கி, வடகிழக்கு நோக்கி வளைந்து அடிக்கின்றன.

    பல்வேறு வடிவில் தாக்கும் பெரும்பான்மையான சூறாவளிகள், பெருத்த குடை போன்ற இடிமின்னல் முகிலிலிருந்து கண்ணுக்குப் புலப்படும், சுருங்கிய புனல் வடிவான சுற்றுத் தூணின் [Condensation Funnel Column] கீழ் முனை பூமியைத் தொட்டுக் கொண்டு வருவதைக் காணலாம்.

    2013 Tornado Wreck -10

    Tornado damage at Moore City

    பொதுவாக அவற்றின் வேகம் 100 mph, அகலம் 250 அடி, நகர்ந்து செல்வது சொற்ப மைல்கள்தான்.  சில அசுரச் சூறாவளிகள் 300 mph வேகத்தைத் திரட்டிக் கொண்டு 2 மைல் அகலத்தில் விரிந்து, 50 அல்லது 60 மை தூரம் சென்று நாசம் விளைவிக்கும்.

    சூறாவளிகளின் ஆற்றலைக் குறிப்பிட பல்வேறு அளவு கோல்கள் பயன்படுகின்றன.  அவற்றில் ஒன்று ஃபூஜிடா [Fujita] அளவுகோல்.  அந்த அளவுகோல் சூறாவளியின் நாச விளைவுகளை ஒப்பிடுவது. சில நாடுகளின் அது மேன்மைப் படுத்தப் பட்டு [Enhanced Fujita Scale (EF)] என்று மாற்றப் பட்டுள்ளது.  அதாவது F Scale à EF Scale ஆகி யுள்ளது. அந்த முறையில் EF-1, EF-2, EF-3, EF-4, EF-5 என்று ஐந்து வித அடுக்கில் ஒப்பிடப் படுகிறது. EF-1 குன்றிய சேதாரம். EF-5 பேரளவு சேதாரம், மரணம்.

    1999-2013 Totnado Paths Comparision

    அமெரிக்காவில் தொடரும் அசுரச் சூறாவளி ஆராய்ச்சிகள் :

    காலநிலை விஞ்ஞானிகளுக்குப் பருவ காலச் சூறாவளிகள் எப்படி உண்டாகி அசுரத் தாண்டவம் ஆடி வருகின்றன என்பது இன்னும் ஓர் புதிராக இருந்து வருகிறது.  பூமியைச் சுற்றிக் கண்காணிக்கும் காலநிலைத் துணைக்கோள்கள் சூறாவளி, ஹர்ரிகேன் உருவாகி வருவதை நோக்கினும், சூறாவளி தோன்றுவதை எச்சரிக்க சுமார் அரை மணிநேரம்தான் கிடைக்கிறது.  மேலும் அது தாக்கப் போகும் பாதையைத் தீர்மானிப்பதும் கடினமே !  சூறாவளி ஆராய்ச்சிக்கு கடந்த 160 வருட புள்ளி விவரம் இருப்பினும், சென்ற 60 வருட எண்ணிக்கைதான் ஆராய்ச்சிக்கு எடுத்துக் கொள்ளப் படுகிறது. இயற்கையின் கோரக் கொலை ஆயுதங்களில் அசுரச் சூறாவளிகளின் தோற்றம், போக்குப் பாதை, ஆற்றல் இவற்றை முன்னதாக அறிந்து எச்சரிக்கை செய்வது கால நிலை நிபுணருக்கு இன்னும் ஒரு பெரும் சவாலாகவே இருந்து வருகிறது !

     Tornado Alley

    [தொடரும்]

     

    ++++++++++++++++++

    தகவல்:

     Discovery Channel DVD Raging Planet [Tornado] July 19, 1999.

    1.  http://en.wikipedia.org/wiki/1999_Oklahoma_tornado_outbreak
    2.  http://www.spacedaily.com/reports/Satellites_See_Storm_System_that_Created_Oklahoma_Tornado_999.html
    3. http://www.weather.com/encyclopedia/tornado/form.html
    4. http://redgreenandblue.org/2013/05/21/tornadoes-storms-and-superstorms-yes-its-global-warming/
    5. http://en.wikipedia.org/wiki/List_of_1999_Oklahoma_tornado_outbreak_tornadoes
    6. http://en.wikipedia.org/wiki/Tornado
    7. http://environment.nationalgeographic.com/environment/natural-disasters/tornado-profile/
    8. http://www.nssl.noaa.gov/education/svrwx101/tornadoes/
    9. http://www.mysearchresults.com/search?c=2402&t=01&ei=utf-8&q=tornadoes&cat=images
    10. http://www.solarnavigator.net/tornadoes.htm
    11. http://en.wikipedia.org/wiki/Tornado_Alley
    12. http://www.spc.noaa.gov/faq/tornado/
    13. http://abcnews.go.com/blogs/headlines/2013/05/live-updates-of-tornado-damage-in-oklahoma/

    ++++++++++++++++++++++++++++++++++

    Attachments area
    Preview YouTube video Largest tornado ever recorded? 2.5 miles wide! Hallam, Nebraska 2004

    Largest tornado ever recorded? 2.5 miles wide! Hallam, Nebraska 2004

    Preview YouTube video April 17th, 2013 Tornado Near Lawton, Oklahoma

    April 17th, 2013 Tornado Near Lawton, Oklahoma
    Share
  • கியூபாவுக்குப் பயணம் – 2

    –நாகேஸ்வரி அண்ணாமலை.

    கியூபாவைப் பற்றி அமெரிக்காவில் தெரிந்துகொண்ட நாள் முதலே கியூபாவிற்குச் செல்ல வேண்டும் என்ற ஆவல் என்னுள் தோன்றத் தொடங்கியது. என்னுடைய இந்த ஆசையை ஒரு அமெரிக்க நண்பரிடம் கூறியபோது ‘கியூபாவில் ஒரு கொடுங்கோலன் அல்லவா ஆட்சி செய்கிறார்? அங்கு போய் என்ன பார்க்கப் போகிறீர்கள்?’ என்றார். அமெரிக்க மக்கள் பலர் இப்படித்தான் மூளைச்சலவை செய்யப்பட்டிருக்கிறார்கள். அமெரிக்க ஜனநாயகமும் அமெரிக்க முதலாளித்துவப் பொருளாதாரமும்தான் உலகிலேயே சிறந்தவை என்று பல அமெரிக்கர்கள் எண்ணுகிறார்கள். இவர்களுக்கு கியூபா பற்றியோ கியூபா மீது அமெரிக்கா விதித்திருக்கும் வர்த்தகத் தடைகள் பற்றியோ சரியாகத் தெரியாது. கியூபாவில் ஒரு சர்வாதிகாரி அரசியல் நடத்துகிறார் என்பது மட்டும்தான் அவர்களுக்குத் தெரியும். அவர் சர்வாதிகாரி என்றே வைத்துக்கொண்டாலும் அவர் எப்படிப்பட்ட சர்வாதிகாரி, அவருடைய அரசியல் பின்னணி என்ன, மற்ற சர்வாதிகாரிகளைப்போல் தனக்காக அவர் சொத்து சேர்த்திருக்கிறாரா என்பது பற்றியெல்லாம் ஒன்றும் தெரியாது. அமெரிக்கர்கள் இப்படியிருந்தாலும் எங்களைப் போன்றவர்களுக்கு கியூபா மீது ஒரு தனி அக்கறை உண்டு.

    சென்ற வருடம் வரை அமெரிக்காவிலிருந்து இன்னொரு நாட்டிற்குச் சென்று அங்கிருந்துதான் கியூபாவிற்குச் செல்ல வேண்டும். இன்னொரு நாட்டின் வழியாக கியூபா சென்று திரும்பும் அமெரிக்கர்களுக்கு அபராதம் உண்டு. கியூபாவிலிருந்து திரும்பி வந்ததும் ‘அங்கு எதற்குப் போனீர்கள்?’ என்று அமெரிக்கக் குடிபுகல் பகுதியில் அதிகாரிகள் கேட்கும் கேள்விகளுக்கு அவர்களுக்குத் திருப்தி அளிக்கும் வகையில் பதில் கூறாவிட்டால் அபராதம் விதிக்கலாம். அமெரிக்காவிலிருந்து கியூபாவிற்கு சென்ற ஒரு வருடம் வரை நேரடியான விமானப் போக்குவரத்தோ கப்பல் போக்குவரத்தோ இல்லை. கியூபாவிலிருந்து அமெரிக்காவில் குடியேறியிருக்கும் கியூபா மக்கள் (காஸ்ட்ரோவின் புரட்சிக்குப் பிறகு கியூபாவில் இருக்கப் பிடிக்காமல் அமெரிக்காவில் தஞ்சம் புகுந்தவர்கள்) கியூபாவில் இருக்கும் தங்கள் உறவினர்களுக்குப் பணம் அனுப்பத் தடை இருந்தது. ஒபாமா இந்தத் தடையை நீக்கினார். ஓராண்டிற்கு முன்னால் குழுக்களாக சுற்றிப் பார்க்கும் பயணத்தை அமெரிக்கர்கள் மேற்கொள்ளலாம் (as tourists by chartered flights) என்ற ஒரு விதியை ஒபாமா அமலாக்கினார். அதுவரை இன்னொரு நாட்டிற்குச் சென்று அங்கிருந்துதான் கியூபாவிற்குப் போக முடியும் என்ற நிலை இருந்தது. புதிய விதி அமலுக்கு வந்த பிறகு சில அமெரிக்கர்கள் கியூபா சென்று வந்தனர். இப்போது வரும் ஜூலை மாதத்திலிருந்து அமெரிக்காவிலிருந்து கியூபாவிற்கு நேரடியான விமானப் போக்குவரத்தை ஆரம்பிக்கப் போகிறார்கள்.

    நாங்கள் பல மாதங்களாக கியூபா போகும் திட்டத்தை வைத்திருந்ததால் இதற்கு மேல் காத்திருக்காமல் சார்ட்டர்ட் விமானம் மூலம் கியூபா போகத் திட்டமிட்டோம். மேலும் அமெரிக்காவிற்கும் கியூபாவிற்கும் இடையே உறவு மேம்பட்டு அதிக அமெரிக்கர்கள் அங்கு போக நேரிட்டால் அதிகக் கூட்டம் சேர்ந்துவிடும். அமெரிக்கக் கம்பெனிகள் அங்கு தோன்ற ஆரம்பித்தால் கியூபாவின் தோற்றமே, சமூகமே மாறிவிடலாம் என்பதற்காகவும் கியூபா கியூபாவாக இருக்கும்போதே அந்த நாட்டைப் பார்த்துவிட வேண்டும் என்று திட்டம் போட்டோம்.

    குழுக்களாக கியூபாவை சுற்றிப் பார்ப்பதற்கு ஏற்பாடு செய்யும் கம்பெனிகள் இருக்கின்றன. அவர்கள் ஒரு பயணிக்கு ஐயாயிரம் டாலர்வரை வசூலிக்கிறார்கள். மேலும் அவர்களோடு சென்றால் அவர்கள் அழைத்துச் செல்லும் இடங்களுக்குத்தான் போக முடியும்; அவர்கள் தங்கவைக்கும் இடங்களில்தான் தங்க முடியும். நாங்களாகச் சென்றால் இந்தக் கெடுபிடி இருக்காது என்பதால் சார்ட்டர்ட் விமானத்தில் சென்றாலும் குழுக்களோடு போகும் பயணத்தில் சேர்ந்து போகவில்லை.

    எங்கள் மகள் மெல்லி சார்ட்டர்ட் விமானத்தில் பயணச் சீட்டு வாங்குவதிலிருந்து கியூபாவில் தங்குவதற்கு இடம் பிடிப்பதுவரை எல்லா ஏற்பாடுகளையும் செய்தாள். ஒபாமா கியூபா பற்றிப் பேச ஆரம்பித்ததும் ஒரு சில அமெரிக்கர்களுக்காவது அந்த நாட்டைப் பார்க்க வேண்டும் என்ற ஆசை வந்திருக்கிறது. நாங்கள் கியூபா போவதாகக் கூறியதும் பலர் ஆச்சரியப்பட்டனர். நிறைய புகைப்படங்கள் எடுத்துக்கொண்டு வாருங்கள் என்றனர். திரும்பி வந்ததும் கியூபா பற்றி உரை நிகழ்த்துமாறு சிலர் என் கணவரிடம் கூறினர்.

    எங்கள் மகள்கள் குடும்பங்களும் நாங்களும் அவரவர் ஊர்களிலிருந்து ஃப்ளோரிடா மாநில டாம்ப்பாவில் கூடினோம். கியூபாவிற்குச் செல்லும் சார்ட்டர்ட் விமானம் மதியம் 12 மணிக்குத்தான் டாம்ப்பாவை விட்டுக் கிளம்பினாலும் எட்டு மணிக்கே விமானநிலையத்திற்கு வந்துவிடுமாறு கூறியிருந்தனர். அதனால் முந்தின நாளே டாம்ப்பாவிற்குச் செல்ல வேண்டியதாயிற்று. சார்ட்டர்ட் விமானத்தைச் சேர்ந்த ஒரு பெண் எல்லோருடைய பாஸ்போர்ட், விசா (சார்ட்டர்ட் விமான சேவையை நடத்துபவர்களே எல்லாப் பயணிகளுக்கும் விசா பெற்றுத் தந்தனர்.) முதலிய ஆவணங்களைச் சரிபார்த்து விமானத்தில் ஏறுவதற்குத் தயாராக இருக்கும்படி கூறினார். நாங்கள் இன்னும் அமெரிக்காவில்தான் இருந்தோம். எல்லாம் ஒழுங்காக நடந்தது. பயணிகளில் சிலர் கியூபா மக்களின் உறவினர்கள்.

    சரியாகப் பன்னிரெண்டு மணிக்கு விமானம் கிளம்பியது. பயண நேரம் ஒன்றரை மணி. விமானம் ஹவானாவை நெருங்கும்போது கடைசியாக கியூபாவிற்கு வந்துவிட்டோம் என்று மகிழ்ச்சியாக இருந்தது. விமானம் தரையைத் தொட்டதும் சிலர் சந்தோஷத்தில் கைதட்டி ஆரவாரித்தனர்.

    விமானத்திலிருந்து இறங்குவதற்கு விமானத்தை விமான நிலையத்தோடு இணைக்கும் (ஏரோஃப்ளோட்) வசதி இல்லை. எல்லோரும் விமானத்தை விட்டு இறங்கி விமான நிலையத்தை நோக்கி நடந்தோம். விமான நிலையம் மிகவும் சிறியதாகவும் எளிமையானதாகவும் இருந்தது. ஒரு நாட்டின் தலைநகரின் விமான நிலையம் இத்தனை சிறியதாகவும் எளிமையானதாகவும் இருக்க வேண்டுமா என்ற எண்ணம் எழாமல் இல்லை. அத்தனை பயணிகள் இந்த விமான நிலையத்திற்கு வந்து போகாததால் குடிபுகல் பகுதியில் அவ்வளவு கூட்டம் இல்லை. கழிப்பிட அறைகள் இருந்தாலும் சுத்தமாக இல்லை. ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்களாக இருந்தாலும் ஒவ்வொருவராகத்தான் குடிபுகல் பகுதியில் இருக்கும் அதிகாரியிடம் போக வேண்டும் என்றார்கள். பாஸ்போர்ட்டையும் விசாவையும் சரிபார்த்த அதிகாரி அங்கு வந்ததற்குரிய முத்திரையை பாஸ்போர்ட்டில் குத்தலாமா என்று எங்களிடம் கேட்டுக்கொண்டு நாங்கள் சரி என்றதும் குத்திக் கொடுத்தார். அமெரிக்காவின் தண்டனைக்குத் தப்ப நினைப்பவர்கள் முத்திரையைக் குத்த வேண்டாம் என்று சொல்லிவிடுவார்கள்.

    அமெரிக்க ஜனாதிபதி ஒபாமாவின் விமானத்தைப் பார்த்து கியூபா மக்கள் மிகுந்த வியப்புக்குள்ளாவார்கள் என்று நியூயார்க் டைம்ஸ் பத்திரிக்கை நக்கலாக ஒரு கட்டுரையில் கூறியிருந்தது. ஏனெனில் இவ்வளவு பெரிய விமானத்தை அவர்கள் பார்த்திருக்க மாட்டார்கள். அது ஒன்றும் உண்மைக்குப் புறம்பான வார்த்தை இல்லையோ என்று தோன்றுகிறது. அத்தனை சிறிய விமான நிலையத்தில் அத்தனை பெரிய விமானம் வந்து இறங்குவது மிகவும் வியப்புக்குரிய விஷயம்தான்.

    Scenes_of_Cuba_(K5_02551)_(5978552313)

    விமான நிலையத்தை விட்டு வெளியே வந்ததுமே நேரடியாகச் சாலைகளில்தான் வந்து சேர்கிறோம். இடையில் பெரிய இடைவெளி எதுவும் இல்லை. அமெரிக்க விமான நிலையங்களைப் பார்த்திருந்த எங்களுக்கு ஹவானா விமான நிலையம் பெரிய அதிர்ச்சியைக் கொடுத்தது. டாக்சி பிடித்து நாங்கள் தங்கப் போகும் இடத்திற்குப் போவதற்கு முன் எங்களிடம் இருந்த டாலர் பணத்தை கியூபா கரன்சியாக மாற்ற வேண்டியிருந்தது. கியூபா நாணயத்திற்குப் பெயர் பிஸோ (peso). இது உள்நாட்டில் புழங்கும் நாணயச் செலாவணி. கியூபாவில் சுற்றுலாப் பயணிகளுக்காக இன்னொரு நாணயம் இருக்கிறது. இதற்குப் பெயர் திரும்ப மாற்றக் கூடிய பிஸோ; ஆங்கிலத்தில் குக் (CUC – Cuban convertible currency) என்கிறார்கள். இதனுடைய சின்னம் CUC$. பயணிகள் நூறு டாலர் கொடுத்தால் நூறு குக்குகள்தான் கொடுக்கிறார்கள். நாங்கள் ரூபாயில் கொடுத்ததாக வைத்துக்கொண்டால் நூறு ரூபாய்க்கு ஒன்றரை குக்குகள் கொடுத்திருப்பார்கள். ஏனென்றால், 65 ரூபாய்க்கு ஒரு டாலர்தானே. ஒரு குக் ஒரு டாலருக்குச் சமம். டாலரைக் கொடுத்து குக்குகள் வாங்குவதற்கு நிறைய நேரம் காத்திருக்க வேண்டியதாயிற்று. ஏனெனில் கரன்சியை மாற்றும் இடத்தில் ஒரே ஒருவர்தான் இருந்தார். அதனால் காத்திருந்த அத்தனை பேருக்கும் அவர் ஒருவர்தான் கரன்சி மாற்றும் வேலையைச் செய்ய வேண்டியதிருந்தது. கியூபாவில் எல்லா இடங்களிலும் இப்படித் தாமதம் ஏற்படுவதற்கு முக்கிய காரணம் ஆட்கள் போதாமைதான். அரசிடம் எல்லா இடங்களிலும் நிறைய ஆட்களை நியமிப்பதற்குப் போதிய பணம் இல்லை.

    வெளிநாட்டுப் பயணிகள் கியூபாவில் செய்யும் செலவுகளுக்கு குக்குகளில்தான் பணம் செலுத்த வேண்டும். இப்படிப் பயணிகளிடமிருந்து பெறும் பணத்தை கியூபா மக்கள் அவர்களுடைய வங்கிகளில் கொடுத்து அவர்களுடைய உள்ளூர் கரன்சியான பிஸோவாக மாற்றிக்கொள்ள வேண்டும். ஒரு அமெரிக்க டாலருக்கு உலக நாணயமாற்றின் (foreign exchange) கணக்குப்படி 24 பிஸோக்கள். வெளிநாட்டுப் பயணிகளிடமிருந்து குக்குகள் பெறும் கியூபா மக்களுக்கு ஒரு குக்கிற்கு 24 பிஸோக்கள் கிடைக்கும். இதில் வங்கி சில பிஸோக்களை கமிஷனாக எடுத்துக்கொள்ளும். வங்கி கமிஷன் எடுத்த பிறகும் அவர்களுக்கு ஒரு கணிசமான தொகை கிடைத்துவிடுகிறது. இப்படிப் பணம் அதிகம் கிடைப்பதால் வெளிநாட்டுப் பயணிகள் அதிகமாக வரும் இடங்களில் டாக்சி ஓட்டுநர்கள், ஆட்டோக்காரர்கள், சைக்கிள் ரிக்‌ஷா ஓட்டுபவர்கள் அதிகமாகக் கூடுகிறார்கள். ஆம், கியூபாவில் டாக்சிகளோடு நம் நாட்டில் இருப்பதுபோல் ஆட்டோ ரிக்‌ஷாக்களும் (நம் நாட்டு ஆட்டோ ரிக்‌ஷாக்களிருந்து உருவத்தில் சிறிது மாறுபட்டவை) மனிதர்கள் மிதித்து ஓட்டிச் செல்லும் சைக்கிள் ரிக்‌ஷாக்களும் இருக்கின்றன. போகும் தூரத்தைப் பொறுத்து இவற்றில் ஒன்றை நாம் தேர்ந்தெடுத்துக்கொள்ளலாம்.

    எல்லா நாடுகளிலும் வெளிநாட்டுப் பயணிகளிடம் அந்நாட்டு டாக்சி ஓட்டுநர்கள், ஆட்டோக்காரர்கள் அதிகமாகவே வசூலிப்பார்கள். நாங்கள் வெளிநாட்டிற்குச் செல்லும்போது அங்கு வசிக்கும் நண்பர்களிடமோ மற்றவர்களிடமோ டாக்சி ஓட்டுநர்கள் துருவமாக எவ்வளவு கேட்பார்கள் என்று கேட்டுவைத்துக்கொள்வோம். அல்லது பயண வழிகாட்டிப் புத்தகத்திலிருந்து இம்மாதிரி விஷயங்களைத் தெரிந்துகொள்வோம். கியூபாவிலும் நாங்கள் தங்கவிருந்த இடத்திற்குப் போவதற்கு 40 குக்குகள் டாக்சி ஓட்டுநர் கேட்டார். இந்தத் தொகை அதிகம் என்று தோன்றினாலும் மொழி தெரியாத காரணத்தால் பேரம் பேச முடியவில்லை. கியூபாவில் ஒரு சிலரைத் தவிர யாருக்கும் ஆங்கிலம் தெரியவில்லை. அமெரிக்காவோடு சண்டை என்பதால் அமெரிக்காவில் பேசப்படும் மொழியான ஆங்கிலத்தையும் அவர்கள் புறக்கணிப்பதுபோல் எனக்குத் தோன்றியது. ஆங்கிலம் சர்வதேச மொழி, அதைத் தெரிந்துகொள்ளாமல் இருப்பது கியூபா மக்களுக்குத்தான் நஷ்டம் என்பதை உணர்ந்திருப்பதுபோல் இப்போது பள்ளியில் அதைக் கற்றுக் கொடுக்க ஆரம்பித்திருக்கிறார்களாம். இதுவரை ஆங்கிலமே பள்ளிகளில் கற்பிக்கப்படவில்லை.

    தொடரும்…

    படம் உதவி: விக்கிபீடியா

    https://commons.wikimedia.org/wiki/File:Scenes_of_Cuba_(K5_02551)_(5978552313).jpg

    Share
  • வண்ணத்துப் பூச்சி

    –மீ.விசுவநாதன்

    வண்ணத்துப் பூச்சி பறக்கிறது -அது
    வகைவகைப் பூவை ரசிக்கிறது!
    மண்ணுக்குள் போகும் பொழுதுக்குள் -உள்ள  Butterfly
    மலரெலாம் தொட்டு மகிழ்கிறது! 

    மகரந்தப் பொடியின் அழைப்பினிலே -அது
    மயங்கியே மலரில் அமர்கிறது!
    சிகரங்கள் தொட்ட மரத்தினிலும் – தான்
    விரும்பிய பூவில் கலக்கிறது! 

    தானும்நற் தேனைச் சுவைக்கிறது – அதன்
    தயவிலே பூகா யாகிறது!
    ஏனோதா னென்று திரியாமல் – ஒரு
    இலட்சியங் கொண்டே வாழ்கிறது! 

    ஈசனது படைப்பின் அவசியத்தை – என்
    சின்னதாம் அறிவும் அறிவதற்கு
    நேசமுடன் வந்து தினந்தோறும் -என்
    நெற்றியின் மீதும் அமர்கிறது!

     

     

    Share
  • அழகென்னும் தெய்வம்

    -ச.சவகர்லால்

     

    mountain

     

     

     

     

     

     

     

     

     

    பூத்திருக்கும் மலரசைவில், கீழை வானில்
       -புலர்ந்திருக்கும் கதிரொளியில், மாலை வாசல்
    காத்திருக்கும் கண்ணசைவில், தலையைத் தூக்கிக்
       -கவிழ்ந்திருக்கும் சேயசைவில், நீர்க்கு டத்தைச்
    சேர்த்திருக்கும் இடுப்பசைவில், தெறித்த நீரில்
       -திளைத்திருக்கும் உடலசைவில், கவிதை சிந்தி   
    ஆர்த்திருக்கும் பெண்ணசைவில் மனங்கொ டுத்தேன்;
       -அழகென்னும் தெய்வத்தின் அடிமை யானேன்.

    காலையிளங் கதிரவனை எழுப்பும் சேவற்  
       -கரகரத்த குரலினிலே அழகைக் கண்டேன்.
    சோலையிளந் தளிரினையே ஆட்டி வைக்கும்
       -சுகமான தென்றலிலே அழகைக் கண்டேன்.
    காளையினத் திமிர்நடையில், அதைந டத்தும்
       -கட்டுறுதித் தோளசைவில், அழகைக் கண்டேன்.
    மாலைவரும் புள்ளினத்தின் வரிசை தன்னில்
       -மயக்குகிற அழகென்னும் தெய்வம் கண்டேன்.

    மலைமீது கொஞ்சுமிளம் பசுமை; அங்கே
       -மலர்மாலை எனவீழும் அருவி, ஓடி
    மலையளக்கும் மான்கூட்ட அருமை, ஆளை
       -மயக்குகிற காட்டுமர இசைகள், என்றே
    மலையெல்லாம் அழகுகொஞ்சி நிற்ப தால்தான்
       -மனமகிழத் தமிழ்முருகன் மலையைக் கொண்டான்.
    மலைகண்டு குடிகொண்டு வாழு மந்த
       -மலைக்கொழுந்தில் அழகென்னும் முழுமை கண்டேன்.

    தெய்வத்தைக் காணவெனில் தூய்மை கொஞ்சித்
       -திகழ்கின்ற மனம்வேண்டும்; அதுபோ லத்தான்
    தெய்வமெனும் அழகினையே காண வேண்டின்
       -செப்பமுற்ற கவிதைமனம் வேண்டும்; அந்தத்
    தெய்வத்தைக் கண்டுணரப் பழகி விட்டால்
       -தெருவெல்லாம் அழகுநடம் மிளிரும்; அந்தத்
    தெய்வமனம் கவிதையுளங் கொண்ட வன்நான்
       -தெய்வமெனும் அழகிற்கே அடிமை யானேன்.

     

     

    Share
  • கேசவ் வண்ணம் – கிரேசி எண்ணம்

    015b9db8-8cd1-49de-a8c9-0dcdf66afa76

    ”நினைத்திட நம்முள் நவநீதம் பொங்கும்
    கனைத்திடக் காமம் கலங்கும் -மணத்துழாய்
    திண்ணிய தோளில் துலங்கும் துவாபரக்
    கண்ணனை நெஞ்சே கருது”….கிரேசி மோகன்…..

    துழாய் -துளஸி….

    Share
  • சிவபிரதோஷம் “புகழுடம்பே”

    மீ.விசுவநாதன்

    pradosha-moorthi
    அந்திப் பொழுதில் அருமைத் தமிழில் அரந்தனையே
    சிந்தித் திருந்தால் சிதையா மனத்தைச் செதுக்கிடலாம் !
    நந்தி மறையை நமது செவியுள் நகர்த்துவதை
    மந்தி ரமாக மதித்தே துதித்தல் மகத்துவமே !

    மெய்யாம் தவத்தை மெதுவாய்க் கலைத்த ஒருவனது
    மெய்யை எரித்து விபூதி யளித்த சிவபெருமான்
    மெய்யே எனநான் மிகவும் விரும்பித் தொழுவதற்குப்
    பொய்யாம் உடம்பு புரியும் உதவி புகழுடம்பே!

    (கட்டளைக் கலித்துறை)
    (பிரதோஷ தினம் : 05.04..2016)

    Share
  • இணையம்

    — க. பிரகாஷ்.

    இணையம் இன்று உலக முழுவதிலும் பலகோடி மக்களின் பயன்பாட்டுத் தேவைகளைப் பூர்த்தி செய்யும் புதுக்கண்டுபிடிப்பு என்று கூறலாம். மிகப் பழைய தகவல்களையும், இன்று புதிதாகத் தோன்றக் கூடிய பல புதிய தகவல்களையும் பெற இணையம் உதவி வருகின்றது. தகவல்களை அனுப்புவதற்கும், தகவல்களைப் பெறுவதற்கும், கருத்துகளைத் தெரிவிக்கவும், வாங்கவும், விற்கவும், கற்பனை செய்து பார்க்க முடியாத அளவிற்கு இணையத்தில் தகவல்கள் குவிந்து கிடக்கின்றன.

    இணையத்தில் படைப்பாளர்கள் ஒவ்வொருவரும் வெவ்வேறு தகவல்களைச் சேமித்து வைத்துள்ளார்கள். அவை இலக்கியம், இலக்கணம், திரைப்படம், வரலாறு, புவியியல், வானியல், அறிவியல், கணிதம், சோதிடம், பக்தி, பொதுஅறிவு, மருத்துவம், சித்தம், யோகம், சமையல்குறிப்பு, ஓவியக்கலை, விளையாட்டு போன்ற எண்ணற்ற தலைப்புகளில் தகவல்களாகவும், நூல்களாகவும் வெளியிட்டுள்ளனர்.

    உலகெங்கும் சிதறிக் கிடைக்கும் தகவல்களை இணையத்தில் இணைத்துவிட்டால் யாரும் எந்த நேரமும் சென்று அத்தகவல்களைப் பெற முடியும். முற்காலத்தில் ஒன்றைப் பற்றி அல்லது ஒருவரைப் பற்றி தெரிந்து கொள்ள வேண்டுமாயின் நூலகங்களுக்குச் சென்று அலைய வேண்டிய சூழல் இருந்தது. இப்பொழுது தேவையான ஒன்றையோ அல்லது கருத்தையோ, ஒருவர் பற்றிய தகவல்களையோ, தெரிந்து கொள்ள நாம் அன்றாடம் பயன்படுத்திவரும் கையடக்கக் கருவியான அலைபேசி மற்றும்  திறன்பேசி, நுண்ணறிபேசி, வில்லை, மாத்திரை, மடிக்கணினி, கணினி போன்றவற்றில் இணைய வசதிபெற்று கருத்துகளைத் தெரிந்து கொள்ளலாம்.

    இணையத்தில் செய்திகள் படிக்கலாம், படங்கள் பார்க்கலாம், பாடல்கள் கேட்கலாம், தகவல் பரிமாறலாம், பொழுதுபோக்கலாம், அறிவைப் பெருக்கலாம். இது போன்ற பல தகவல்களைப் பெற்று மனநிறைவு பெறச்செய்வது இணையமாகும். அந்த அளவிற்கு இணையம் இன்று வளார்ந்து கொண்டே வருகின்றது.

    “எண்ணிய எண்ணியாங்கு எய்துப எண்ணியார்

    திண்ணியர் ஆகப் பெறின்” ( குறள் – 666)

    என்ற குறளில் எண்ணியவர் எண்ணியபடியே செயல் ஆற்றுவதில் உறுதியுடையவராக இருக்கப்பெற்றால் அவர் எண்ணியவற்றை எண்ணியவாறே அடைவார் என்று திருவள்ளுவர் குறிப்பிடுவது போல் நீங்கள் எதைப் பற்றித் தெரிந்து கொள்ள வேண்டும் என்று விரும்புகின்றீர்களோ அதனை இணையத்தில் சென்று ஒரு சில நொடிகளில் தேடித் தெரிந்து கொள்ளலாம்.

    இணையம் சொற்பொருள்:

    உலகம் முழுவதும் உள்ள அனைத்துக் கணினிகளையும் ஒரே மின்னணு வலையில் சங்கிலிப்பிணைப்பு செய்யப் பெற்று ஒன்றாக்கப்பட்டது தான் இணையம். உலகெங்கும் கணிப்பொறியில் உள்ள செய்திகளின் இணைப்பே இணையம் ஆகும். உலகளாவிய வலை இதனை ஆங்கிலத்தில் World Wide Web என்பர். இதனைச் சுருக்கமாக WWW என்றும் W3 The Web என்றும் குறிப்பிடுவதுண்டு.

    இணைய வரலாறு:

    இன்றைய உலகம் இணைய வழிகாட்டுதலின்படி பீடுநடை போடுகிறது எனில் அது மிகையன்று. 1950 ஆம் ஆண்டிற்கு அண்மையில், தொடர்பியல் ஆய்வாளர்கள் கணினி மற்றும் பல்வேறு தொலைத்தொடர்பு வலையமைப்பின் பயன்கள் பொதுவான தொடர்பு மற்றும் தகவல் பரிமாற்றம் கொள்ள ஆவன செய்ய வேண்டும் என எண்ணினர்.

    இதன் விளைவாக மையக் கட்டுப்பாடற்ற வலையமைப்புகளை வரிசைப்படுத்தும் முறைகள் மற்றும் தரவுப்பொது நிலைமாற்றம் போன்ற துறைகளில் ஆய்வு செய்யத் துவங்கினார்.

    இணையத் தந்தை என ஜே.சி.ஆர்.லிக்லைடர் என்பவரை அழைக்கின்றனர்.

    அரியக்கண்டுபிடிப்புக்கு வித்திட்டவர்கள் பிரிட்டானிய நாட்டு அறிஞர்களான “சார்லஸ் காவ் மற்றும் ஜார்ஜ்ஸ் ஹாக்மேன்” ஆகியோர் ஆவார்.

    1980 இல் பிரான்ஸ் நாட்டில் மினிடெல் என்பவர் தொலைபேசிக் கம்பி வழியிலான தகவலறியும் சேவையைத் துவக்கினார் 1992 நவம்பர் மாதம் டெல்ஃபி என்ற நிறுவனம் பெரிய அளவிலான தகவல் சேவையைத் தொடங்கியது.

    1993 செப்டம்பர் 15 இல் மிகப்பெரும் அளவிலான தேசியத் தகவல் பரவலுக்கான திட்டம் ஒன்றை அமெரிக்க அரசு வரைவு செய்தது.

    1993 இல் இல்லினாய்ஸ் பல்கலைக் கழகத்தின் (National Centre for Super Computing) என்ற மையத்தைச் சார்ந்த மாணவர்கள் பல வசதிகள் கொண்ட இணையத் தேடலுக்கான மென்பொருள் திரையைக் கண்டறிந்தனர். இது மொசைக் என்றழைக்கப்பட்டது. இதனை மார்க் ஆண்டர்சன் மொசைக் என்பவர் கண்டறிந்தார்.

    1996 இல் ஃபைபர் நூலிழையின் உதவியால் தகவல்களை ஒளிப் பிம்பங்களாக மாற்றி நெடுந்தொலைவு அனுப்ப முடியும் என்று கண்டுபிடித்தனர்.

    வலைப்பின்னல் மையம்:

    வலைப்பின்னல் என்பது மீள்கருவி மையம் என்று குறிப்பிடுவர். பல சுருளிணைகள் ஒளியிழை, ஈத்தர்நெட் கருவிகளை ஒன்றாக இணைத்து அவற்றை ஒற்றை வலைப்பின்னல் கூறாகச் செயல்பட உதவும் கருவியாகும்.

    1994 இல் WWW என்ற வலைப்பின்னலாக அமைந்த அமைப்பு உலகின் பல்வேறு பகுதிகளை இணைக்கும் கருவியாக உருமாற்றம் பெற்றது. இதன் மூலம் தகவல்களை மட்டுமல்லாத படங்களையும் பார்க்க முடிந்தது. சுவிட்சர்லாந்து நாட்டில் உள்ள சொ்ன் என்னும் அணுத்துகள் இயற்பியல் நிறுவனம் உலகு  தழுவிய விரிவு வலைமுறையைக் கொண்டு வந்தது.

    1995 இல் கொரிய நாட்டில் பிறந்த பின் அமெரிக்கக் குடியுரிமை பெற்ற நாம் ஜீன் பெய்க் (Nam Jun Paik) எப்பர் டவுன்  (Yber Town)  என்ற ஒன்றை நிறுவி அதன் மூலம் பல்லாயிரக் கணக்கான மக்களை இணைத்தார்.

    இணையத்தை வழிநடத்துவோர்:

    இணையத்தைத் தனிமனிதரோ அல்லது குழுவோ கட்டுப்படுத்துவதில்லை எனினும் இணையத்தினை வழிநடத்த இணையக் கழகத்தைக் கணினி வல்லுநர்கள் இலாப நோக்கமின்றி நடத்தி வருகின்றனர். அவற்றுள் IAB, IETF ஆகிய இரண்டு கழகங்கள் குறிப்பிடத்தக்கன.

    IAB   –           Internet Architecture Board

    IETF –           Internet Engineering Test Force

    IAB  –  என்பது கணினிகளை இணையத்தில் இணைப்பதற்கான வரையறையாகும். இணையத்தில் இணைந்துள்ள கணினிகளுக்கு முகவரிகளை இது வழங்குகிறது. மேலும் தேவைப்படுகின்ற நேரங்களின் தேவைக்கேற்ப வரையறைகளை மாற்றி அமைக்கும் பணியையும் இக்கழகம் செய்கிறது.

    IETF  –  என்பது கணினியின் தொழில்நுட்ப வளர்ச்சி குறித்தும் அதனால் இணையத்தில் ஏற்படுத்த வேண்டிய மாறுதல்கள் குறித்தும் முடிவு செய்கிறது.

    இணைய விதிமுறைகளைக் கண்காணிப்பதற்காக The Internet Society Overseas for the Development of the Internet என்ற அமைப்பும் இணையத் தளங்களை மேற்பார்வையிடுவதற்காக World Wide Web Consortium என்ற அமைப்பு செயல்பட்டு வருகின்றன.

    இணைய வசதி வழங்குவோர்:

    இணைய வசதிகளை வழங்கும் நிறுவனங்களிடமிருந்து கட்டணம் செலுத்தி இணைய இணைப்புப் பெற்றுக் கொள்ளலாம். இத்தகைய சேவையை வழங்கும் நிறுவனங்கள் ஆங்கிலத்தில் Service provider என்று அழைக்கப்படும். தமிழில் சேவை வழங்குநர் என்று கருதப்படுவதுண்டு.

    அமெரிக்காவில்  GTR, MCI, SEINT, UUNET, AOL ஆகிய நிறுவனங்கள் இணையச்சேவையை வழங்குகின்றன. இந்தியாவில் VSNL, BSNL, DISHNET, STFY, AIRTEL, RELIANCE, TATA INDICOM முதலிய பல நிறுவனங்கள் இச்சேவையை அளிக்கின்றன.  இணையச்சேவை வசதி என்று குறிப்பிடுவதுண்டு.

    இணைய இணைப்பு பெறத் தேவையானவை:

    இணைய இணைப்பு பெறுவதற்குக் கணினி, தொலைபேசி, இணைப்பு மாற்றி (Modem) ஆகிய மூன்றும் இருந்தால் போதும், இணைய வசதி பெற்றிடலாம். இணைய வசதி வழங்கும் நிறுவனங்களிடம் கட்டணம் செலுத்தி இணைப்பை பெற்றுக் கொள்ளலாம். நாம் பயன்படுத்தும் அளவிற்கேற்ப உரியத் தொகையானது முன் தொகையாகவோ பின் தொகையாகவோ செலுத்தப்பட வேண்டும்.

    இணைய முகவரி:

    ஒவ்வொருவருக்கும் ஒரு பெயர் மற்றும் முகவரி இருப்பது போல் ஒவ்வொரு இணையதளத்திற்கும் ஒரு பெயர் மற்றும் முகவரி இருக்கிறது. இதனை இணைய முகவரி என்று கூறுவதுண்டு. http://www.prakashtamil.blogspot.com  இம்முகவரியில் ஐந்து பகுதிகள் உள்ளன.

    http – Hypertext transport protocol என்பதன்  சுருக்கமாகும் (மீயுரைப் பரிமாற்ற நெறிமுறை)

    www – Worldwide web  என்பதன் சுருக்கமாகும் (வைய வரி வலை)

    prakashtami – குறிப்பிட்ட ஓர் இணையதளத்திற்கு வழங்கப்படும் பெயர் ஆகும்.

    blogspo – தனியார் நிறுவனத்தின் பெயர்

    com – Commerce என்பது சுருக்கமாகும். இணையதளத்தின் தன்மையைக் குறிப்பிடுவதாகும்.

    “சுவிட்சர்லாந்து நாட்டில் ‘செர்ன்’ என்னும் அணுத்துகள் ஆராய்ச்சி நிலையம் உள்ளது. அங்கு டிம் பெர்னர்லீ என்ற இயற்பியல் வல்லுநர் பணியாற்றினார். இவர் 1989 இல் உலகளாவிய வலைப்பின்னலுக்கு WWW  – world wide web என்ற பெயரிட்டார்.”

    டிம்பெர்னா் லீ இணையத்துக்கு அடிப்படையான மூன்று கருத்துக்களை கண்டுபிடித்தார்.

    Internet-1(1)

    அவை:

    http

    url

    html

    http – Hypertext transfer protocol என்பதன் சுருக்கமே ஆகும். (மீயுரைப் பரிமாற்ற நெறிமுறை)  வையக வலையில் தகவலைப் பெறுவதற்கான விதிமுறை புரோட்டோக்கோல் எனப்படும். தொடக்கம், செய்தி, படம்,  எழுத்து, முடிவு இவையென இந்த விதிமுறைகள் மூலம் முன்பே தீர்மானித்தார்.

    URL – Uniform Resource Locator என்பதன் சுருக்கம் ஆகும். சீரான தள இடங்காட்டி இணையத்தில் உள்ள தகவலின் இருப்பிடம் காட்டும் முகவரியே இதுவாகும். இந்த முகவரியைப் பயன்படுத்தியே உலாவிகள் இணைய தளங்களைக் கண்டறிகின்றன. http;//www.Google.com என்பது சீரான தவள இடங்காட்டிகளுள் ஒன்று ஆகும்.

    HTML – Hyper Text Markup Language என்பதன் சுருக்கம் ஆகும். மீயுரைக் குறிப்பு மொழி இணையத்தில் ஓரிடத்திலிருந்து வேறோர் இடத்திற்குத் தாவிச் செல்ல குறிப்புகள் எழுதவேண்டும். இந்த குறிப்புகள் எழுதும் மொழியே மீயுரைக் குறிப்பு மொழி ஆகும். ஆவணத்தில் இரு பகுதிகள் உண்டு.

    அவை:

    தலை

    உடல்

                    தலைப்புப்பகுதியில் ஆவணத்தின் தலைப்பும் உடல் பகுதியில் ஆவணமும் இருக்கும். 1991 மே மாதம் இந்த வையக விரிவு வலை அறிமுகமானது. காலாகாலத்திற்குச் சேமிக்க முடிவதால் இப்பொழுது வலையேகதி என்ற சூழல் ஏற்பட்டுவிட்டது.

    இணைய முகவரியும் இணையச் செயல்பாடும்:

    ஒவ்வொரு தொலைபேசி இணைப்பிற்கும் ஓர் எண் இருப்பதுபோல இணையத்தில் இணைந்துள்ள ஒவ்வொரு கணிப்பொறிக்கும் ஓர் அடையாள எண் உண்டு. இந்த எண்ணில் நான்கு பகுதிகள் இருக்கும். சான்றுக்கு 456-12-25-78 என்பது ஒரு முகவர் கணிப்பொறியின் அடையாள எண் ஆகும். இந்த அடையாள எண்களை நினைவில் வைத்திருப்பது கடினம். எண்ணிற்குப் பதிலாக எழுத்திலான பெயரைப் பயன்படுத்துகிறோம்.

    நமக்குத் தேவையான முகவரியை உள்ளிட்டால் தேடும் பொறி அந்தக் கணிப்பொறியைக் கண்டுபிடித்து நம் கணிப்பொறித் திரையில் காட்டும். இதற்கு யாகு, கூகிள், அல்டாவிஸ்டா எனப் பல தேடும்பொறிகள் உள்ளன.

    இணையச் செயல்பாடு:

    இணைய இணைப்பைப் பெறத் தேவையானவை சில கருவிகள் உள்ளன. அவை:

    கணிப்பொறி – Computer

    தொலைபேசி – Tele communication

    மாற்றி – Modem

    தொடர்பு மென்பொருள் – Communication Software

    இணையச் சேவை வழங்குபவர் – Internet Service Provide

    இது போன்ற கருவிகளின் மூலம் இணைய வசதிகள் பெற முடிகின்றது. தொலைபேசி வழியே இணையத்தைப் பயன்படுத்துவதில் தொடர்பு மென்பொருள்கள் பெரிதும் உதவுகின்றன. இப்பொழுது ஒளியிழைத் தடங்கள் வழியே இணைய இணைப்பை எளிதிலும் விரைவாகவும் பெறமுடிகிறது.

    கணிப்பொறியில் இணையச் சேவை பெறுவதற்கு முன்பே இணையம் செயல்படுவதற்கான மென்பொருள்களைப் பொருத்தி இருக்க வேண்டும். Landline net தொலை நிகர வசதியாகவும், Modem மாற்றி போன்ற முறையிலும் இணையச் சேவை கணிப் பொறியில் பெறமுடியும்.

    இணையக்குறியீடுகள்:

    இணையக்குறியீடு என்பது ஒவ்வொரு நிர்வாகத்திற்கும் அரசாங்கத்திற்கும் வெளிநாட்டிற்கும், கல்வி, பல்கலைக்கழகம், இராணுவம் போன்ற பல நிறுவனங்களின் விரிவான பெயர்களை தான் இப்பொழுது இணையத்தில் சுருக்கமாக வடிவமைத்துக் குறிப்பிட்டுள்ளனர்.

    அவை:

    கல்வி – edu

    பல்கலைக்கழகம் – univ

    அரசு சாராநிறுவனம் – org

    இராணுவம் – mil

    வலைப்பராமரிப்பு – net

    அரசாங்கம் – gov

    தமிழ்நாடு – tn

    இந்தியா – in

    சிங்கப்பூர் – sg

    கனடா – ca

    இங்கிலாந்து – uk

    ஒருவருக்கு எழுதப்படுகின்ற கடிதங்களில் சரியான முகவரி இருந்தால் அக்கடிதம் உரியவருக்கு உரிய நேரத்தில் சென்று கிடைக்கும். முகவரி சரியாக இல்லை என்றால் அக்கடிதம் உரியவருக்குச் சென்று சேர்வதில் காலதாமதம் ஏற்படும்.

    பல நேரங்களில் அது உரியவருக்குக் கிடைக்காமலேயே போய்விடும். கடிதத்தில் முகவரியே இல்லையென்றால் அக்கடிதம் யாருக்குமே சென்று சேராது.

    இணையதள முகவரி சரியாக இருந்தால் அத்தளத்தைச் சரியாகச் சென்றடையலாம். முகவரி சரியாக இல்லையென்றால் உரிய இணையதளத்தை உரிய நேரத்தில் சென்றடைவது கடினம். முகவரியே இல்லையென்றால் இணையதளத்தை அடையவே முடியாது.

    ஒவ்வொரு இணையதளமும் எளிதில் அடையும் வகையில் ஒவ்வொரு இணையதள முகவரியைக் கொண்டு விளங்குகின்றன. நாம் எளிதில் மனதில் பதியவைத்து கொள்ளும் வகையில் முகவரிகள் அமைந்திருந்தாலும் கணினிக்கு முகவரிகள் தெரியாது.

    முகவரிகளைக் கணினி எண்களைக் கொண்டே அடையாளம் காட்டுகிறது. எடுத்துக்காட்டாக 212.58.240.32 என்ற எண் ஒரு முகவரியின் இணையதளத்தைக் குறிக்கிறது. இதனை IP முகவரி என்று கூறுவதுண்டு. Internet Protocol என்பதன் சுருக்கம் IP ஆகும்.

    இணையத்தில் தகவல் தேடும் வசதிகள்:

    விரிந்து பரந்த இந்த உலகத்தில் ஒருவருக்கு வேண்டிய தகவல்களைத் தேடிப்பிடித்தல் என்பது எளிதன்று. ஆராய்ச்சி தொடர்பாக ஒருவர் நூலகத்திற்குச் சென்று தனக்கு வேண்டிய ஒரு நூலைத் தேடினால் அந்நூல் அங்கு இருக்கலாம், இல்லாமல் போகலாம், இருந்து யாராவது எடுத்துப் போயிருக்கலாம் இருந்தும் கூட நம் பார்வைக்கு வைத்தும் கிடைக்காமல் போகலாம்.

    இணையம் என்பது அவ்வாறு அல்ல; தேடிய நேரத்தில் தேடியதைக் கண் முன்னே கொண்டு வந்து குவித்துவிடும். சில வேளைகளில் நாம் ஒன்றைத் தேட அதனைக் கொண்டு வந்து தருவதோடு மட்டுமன்றி அதனோடு தொடர்புடைய மேலும் பல தகவல்களை அள்ளித் தந்து நம்மை வியக்கவைக்கும் வகையில் இருக்கின்றது. ஆய்வுப் பணியில் ஈடுபடுவோருக்கு இணையம் மிகச்சிறந்த வழிகாட்டுதலாகவும் அமைகிறது.

    வேண்டியதை வேண்டியவாறு மட்டுமன்றி கூடுதலாகவும் அதே வேளையில் தனியொரு மனிதனோ அல்லது ஒரு குழுவினரோ தேடிக் கண்டுபிடிக்க முடியாதவற்றையும் மிகுந்த காலம் தேவைப்படுகின்ற தேடுதல்களைக்கூட மிக எளிதாகவும் விரைந்தும் செய்து முடிகின்ற ஆற்றல் வாய்ந்ததுதான் இணையம்.

    சிறப்பு மிக்க தேடுதல் வசதிகளைப் பல நிறுவனங்கள் இணையப் பார்வையாளர்களுக்கு இலவசமாக வழங்குகின்றன.

    தேடு பொறிகள்:

    அலெக்ஸா                    Alexa

    கூகிள்                              Google

    யாஹூ                           Yahoo

    ஸ்டார்வர்                      Starware

    தமிழ் தேடல்                 W3 tamil Search

    மொசிலா ஃபையர் ஃபாக்ஸ் Mozilla Firefox

    எம்.எஸ்.என்                 MSN

    அல்டாவிஸ்டா           Alta vista

    பிங்கு                              bing

    ஆஸ்க்.காம்                 com

    இவ்வாறு தேடு பொறிகளின் உதவியால் வேண்டிய செய்திகளைச் சில நொடிப் பொழுதில் இருந்த இடத்தில் இருந்தவாறே எளிதில் பெற முடியும்.

    தேடு பொறியினால் விளையும் சில நன்மைகள் இருக்கின்றன. அவை கால விரயத்தினைத் தவிர்க்கலாம். குறைந்த செலவில்  தகவல்களை விரைந்து பெறலாம். கூடுதல் தகவல்களையும் பெறலாம். தமிழ் மொழி வழியாகவும் தேடலாம்.

    இணையத்தில் கலந்துரையாடல்:

    இணைய வழிக் கலந்துரையாடல், இணையவழி அளவளாவுதல், இணையவழி பொழுது போக்குதல் என்று கூறுவர்.

    பொழுது போக்கிற்காக நண்பர்கள் ஒன்று கூடி எதனையோ பற்றி பொழுது போக்காகப் பேசி மகிழ்வது ஆகும். இதில் மகிழ்ச்சியும் பொழுது போக்குமே முதன்மை நோக்கமாக இருக்கும்.

    இணையவழிக் கலந்துரையாடல் என்பது ஏதேனும் ஒரு பொருள் பற்றி ஆக்கப்பூர்வமான முறையில் ஒன்றுக்கு மேற்பட்டவர்கள் இணையம் வழிக் கூடிப் பேசுவது ஆகும். இக்கலந்துரையாடலுக்கு இ – குழு (e – Group) என்று குறிப்பிடுகின்றனர். இக்குழுவில் நண்பர்கள் ஓய்வான நேரங்களில் அமர்ந்து கொண்டு கணினியிலோ அலைப்பேசியிலோ நேருக்கு நேர் முகம் பார்த்து பேசுவதும் தகவல்கள் பரிமாறுவதும் போன்ற உணர்வையும் மகிழ்ச்சியையும் இம்முறையின் வழியாகப் பெற இயலும் என்பர்.

    பல நிறுவனங்கள் இலவசமாக இச்சேவையை வழங்குகின்ற அவ்வகையில் www.chatting.com என்ற இணையதளம் குறிப்பிடத்தக்கது.

    இணையத்தின் பயன்கள்:

    இணைய உலகம் உண்மையிலேயே விந்தையானது ஒருவருக்கு ஓரளவு நேரமும் இணையத்தில் உலாவுவதற்குப் புரிதலும் இருந்து விட்டால் உலகையே அவன் தன் கைகளுக்குள் கொண்டு வந்து விடலாம்.

    இணையம் விரிந்து பரந்து கிடக்கும் இந்த உலகையே நம் வீட்டுக்குள் கொண்டு வரும் ஆற்றல் வாய்ந்தது.

    “இறந்தது காத்தல் எதிரது போற்றல்”  – (தொ.பொ.மரபு) 1610

    இணையத்தின் வழி புதியன புகுந்து, அறிவுப் பெருக்கி, சிந்தனை செழிக்கச் செய்கிறது. இதன் மூலம் தகவல்களைப் பெறலாம், அளிக்கலாம், வாங்கலாம், கல்வி பயிலலாம், பயிற்று விக்கலாம், எவரும் – எங்கிருந்தும் – எந்தத் தகவல்களையும் 24 மணி நேரமும் நாடு, இனம், மொழி, என்ற எத்தகைய வேறுபாடுகளும் இன்றிப் பெறும்  ஊடகமாக இணையம் விளங்குகிறது.

    இதன் மூலம் தொலைவில் இருப்பவர்களைக் கண்காணிக்க முடியும். இவற்றின் வழி சாதனங்களையும் தகவல்களையும், கருத்துக்களையும் பகிர முடியும்.

    இணையத்தில் அ முதல் ஔ வரை எந்தச் செய்தியையும் பெற முடியும். இணைய தளத்தை நல்ல  நண்பனாகவும், எவ்வளவு நேரம் உறவாடினாலும் சலிப்பு ஏற்படாமல் உற்சாகம் குறையாத உணர்விலும் தகவல்களை அளிக்கும் வகையில் இணையம் திகழ்கிறது.

    _____________________________________________________

    பார்வைநூல்கள்:

    திருக்குறள்  உணர்வுரை              –              இரா. கனகசுப்பரத்தினம்

    தமிழில் இணைய இதழ்கள்        –              அண்ணா கண்ணன்

    தொல்காப்பியம்                               –              தமிழண்ணல்

    _____________________________________________________

    க.பிரகாஷ்

    தமிழ்த்துறை

    தொழில் நுட்ப கள ஆய்வுப் பணியாளார்

    பாரதியார் பல்கலைக்கழகம்

    கோயம்புத்தூர் – 46

    _____________________________________________________

    Share
  • படக்கவிதைப் போட்டி _ (58)

    பவள சங்கரி

    அன்பிற்கினிய நண்பர்களே!

    வணக்கம். கண்ணையும், கருத்தையும் கவரும் படமொன்றைக் கண்டவுடன் உங்கள் உள்ளத்தில் கவிதை ஊற்றெடுக்கும் திறமை கொண்டவரா நீங்கள்?

    12968737_990685257652340_1672247774_n

    95475568@N05_rவெங்கட் சிவா எடுத்த இந்தப் படத்திற்கு ஒரு கவிதை எழுதுங்கள். இதனை நம் வல்லமை ஃப்ளிக்கர் குழுமத்தின் பொறுப்பு ஆசிரியர் திருமதி சாந்தி மாரியப்பன் தேர்ந்தெடுத்து அளித்துள்ளார்.

    இந்த ஒளிப்படத்திற்கு ஏற்ற கவிதையை நல்ல தலைப்புடன் பின்னூட்டமாக இடலாம். ஒருவரே எத்தனை கவிதைகள் வேண்டுமானாலும் எழுதலாம். வரும் சனிக்கிழமை (09.04.2016) வரை உங்கள் கவிதைகளை உள்ளிடலாம். அவற்றில் சிறந்த கவிதையை நம் வல்லமை இதழின் ஆசிரியர் குழு உறுப்பினர், தமிழ் இலக்கிய ஆராய்ச்சியாளர் திருமதி மேகலா தேர்வு செய்வார். ஒவ்வொரு வாரமும் சிறந்த கவிஞர் ஒருவர் தேர்ந்தெடுக்கப்படுவார். ஒருவரே பல முறை பங்கு பெறலாம். இவ்வாய்ப்பு சிறந்த கவிஞராகத் தேர்ந்தெடுக்கப்படும் கவிஞர்களுக்கும் உண்டு. 12 மாதமும் தேர்வுபெறும் ஒளிப்படக் கலைஞர் / கவிஞர்களிலிருந்து ஆண்டின் சிறந்த கலைஞரும், கவிஞரும் தேர்வு பெறுவார்கள். ஒளிப்படத்திலிருந்து தாக்கமும் தூண்டுதலும் பெற்று எழும் அசல் படைப்புகளை ஊக்குவிப்பதே இதன் நோக்கம். இது, கவிஞர்களையும் கலைஞர்களையும் கண்டறிந்து ஊக்குவிப்பதற்கான அடையாளப் போட்டி; வெற்றி பெறுபவர்களுக்குப் பரிசளிப்பு இருக்காது; பாராட்டு மட்டுமே உண்டு. ஆர்வமுள்ளவர்களைப் பங்கு பெற அழைக்கிறோம்.

    புதுச்சேரி மாநிலத்தின் காரைக்காலில் பிறந்த திருமதி மேகலா இராமமூர்த்தி கணிப்பொறி (MCA) மற்றும் தமிழில் (MA) முதுகலைப் பட்டம் பெற்றவர். அமெரிக்க தமிழ்ச்சங்கப் பேரவையின் (FeTNA) 2008, 2009 ம் ஆண்டுகளில் (ஆர்லாண்டோ & அட்லாண்டா) கவியரங்கம், இலக்கிய வினாடி வினா நிகழ்ச்சிகளில் பங்கேற்று பாராட்டுகளும், பரிசுகளும் பெற்றுள்ளவர். புறநானூறு, குறுந்தொகைப் பாடல்களில் அதிக நாட்டமும், இலக்கியக் கூட்டங்களில் சுவைபட பேசுவதிலும் வல்லமை பெற்றவர். இவருடைய வலைப்பூ – மணிமிடைபவளம்

    Share