இலக்கியம்கவிதைகள்

உலகச் சுகாதார தினம்

-சித்ரப்ரியங்கா பாலசுப்ரமணியன்

சுகாதாரத்தை நினைத்தால் இன்றோ
சற்றும் நெஞ்சு பொறுக்குதில்லையே
புறத்தூய்மை நீராலமையும் என்பதற்குப்
புண்ணியம் சேர்க்கும் மழையுமில்லை
அகத்தூய்மை வாய்மையாற் காண்பதற்கு
அகம்தான் சீராய்ப் பெற்ற மனிதனுமில்லை! world hygene day

நெஞ்சினில் நஞ்சு வைத்தே பலர்
வஞ்சம் தீர்த்து மகிழ்கின்றார்
பிஞ்சையும் விட்டு வைப்பதில்லை
பெரியவரும் இதற்கு விதி விலக்கில்லை
அஞ்சி தான் அனைவரும் வாழ்கின்றார்
அஞ்சுதல் பேதைமை என்பது மறந்தே
காடுகள் அழித்துக் காற்றை மாசுபடுத்திக்
கருமேகத்தின் கூடலைத் தடைசெய்து
மாரியின் திசையைத் தான் மாற்றி
மதிகெட்டுத் தானும் அழிகின்றார்!

புகையிலை எனும் பாதகத்தியின்
பாதகம் உணர்ந்தும் அறிவிலிகளாய்ப்
பிளாஸ்டிக் எனும் கொடுங்கோலனுடன்
தோழனாய்க் கைகோத்த அப்பாவிகளாய்
மது மாது இல்லையென்றால் பலருக்கு
மதி விடுப்பெடுக்கிறது மணிக்கணக்காய்!

ஆறறிவும் தாமே பெற்றிருந்தும் ஐயகோ!
ஓரறிவுக்குக் கூடவா இன்னும் எட்டவில்லை?!
வேண்டாம் இந்நிலை அன்புத் தோழர்களே!
வேண்டுகிறேன் இந்நாளில் உங்களையே
மனிதத்தோடு நாம் ஒன்றிணைந்தே நம்
மரணத்தைச் சற்றே தள்ளி வைப்போம்
எங்கும் எதிலுமே தூய்மை கண்டிடவே
எல்லோரும் ஒன்றாய்ப் படையெடுப்போம்!

(ஏப்ரல் 7 – இன்று உலகச்சுகாதார தினம்)

 

Print Friendly, PDF & Email
Share

உங்கள் கருத்துகளைத் தெரிவிக்க