Blog

  • கற்றல் ஒரு ஆற்றல் 21

    க. பாலசுப்பிரமணியன்

    கற்றல் ஒரு உணர்வுப்பூர்வமான செயல்

    education11

    ஒரு சிறிய நகரத்தில் அரசாங்கப் பள்ளியில் மூன்றாம் வகுப்பு படித்துக் கொண்டிருந்த மாணவனுக்கு இடைக்காலத் தேர்வு நடந்து கொண்டிருந்தது. வகுப்பிலேயே மிகச் சிறப்பாகப் படிக்ககூடிய ஒரு மாணவன் அன்று நடந்த கணிதத் தேர்வில் ஒரே ஒரு வினாவைத் தவிர மற்ற அனைத்து  வினாக்களுக்கும் சிறப்பாக பதில் கொடுத்திருந்தான். விட்டுப்போன வினாவோ மிக எளிதான வினா. வகுப்பு ஆசிரியருக்கு மிக அதிசயமாக இருந்தது. அந்த வினாவிற்கும் அவன் பதில் எழுதியிருந்தால் அவனுக்கு நூற்றுக்கு நூறு மதிப்பெண்கள் கிடைத்திருக்கும்.

    அந்த மாணவனை அழைத்து ஆசிரியர் அதற்கான காரணத்தை அறிய முற்பட்டார். அந்த மாணவனின்  பதில் கேட்டு அவர் ஆச்சரியத்தில் முழுகிவிட்டார். என்ன காரணம் தெரியுமா?

    “அய்யா, இந்த வினாவிற்கு பதிலளிக்க நான் அருகில் இருக்கும் பெரிய எண்ணிடமிருந்து கடன் வாங்க வேண்டும். அப்போது தான் சரியான விடை கிடைக்கும். ஆனால் என் தந்தையோ என்னிடம் எப்போதும் எங்கேயும்  யாரிடமும் கடன் வாங்கக் கூடாது . அது கெட்டப் பழக்கம் என்று அறிவுறுத்தியிருக்கிறார். அதனால் தான் நான் அந்த வினாவிற்கு பதில் அளிக்கவில்லை.”

    கற்றலில் ‘பொருளறிதல்’  (Meaning  Making ) ஒரு முக்கியமான நிலை. கற்றுக்கொள்ளும் ஒவ்வொரு வார்த்தையும் கருத்தும் எவ்வாறு எப்படிப்பட்ட பொருளை தெரிவிக்கின்றன என்பது பற்றிய ஆராய்ச்சி உலக அளவிலே   நடைபெற்று இருக்கிறது. சமுதாயப் பொருளாதார மற்றும் கலாச்சார சூழ்நிலைகள் ஒரு தனிப்பட்டவரின்  பொருளறியும் திறனையும் பொருளின் குணத்தையும்  பாதிக்கின்றன.

    உலகம் போற்றும் ஆங்கில இலக்கிய மேதை பெர்னார்ட் ஷா கூறுகின்றார் “வார்த்தைகள் வெறும் தபால் தலைகள்  போன்றவை. அவைகள் வார்த்தைகளை மட்டும் ஒருவரிடமிருந்து மற்றொருவருக்கு எடுத்துச்  செல்லும். கருத்துக்கள் அந்தக் கடிதத்தில் உள்ளே எழுதப்பட்டவை  போன்றன.”

    ஆகவே கற்றலில் வார்த்தைகளின் மேன்மை, சொல்லப்படும் விதம் மட்டுமின்றி அந்த வார்த்தைகள் ஒருவருடைய  எண்ணங்களின் சிந்தனைகளின் பேராண்மையின் மீது எந்த தாக்கத்தை ஏற்படுத்துகின்றன என்பதை அறிந்துகொள்ளுதல் மிக  அவசியம்.

    ஒருமுறை ஒரு சிறிய கூட்டத்தில் இருந்த சிலரிடம் நான் சொல்லப்போகும் வார்த்தை உங்கள் மனதில் என்ன கருத்தை உருவாக்குகின்றது என்று வினவி “லட்டு ” என்ற வார்த்தையைச் சொன்னேன். ஒருவர் சிரித்துக்கொண்டே “திருப்பதி” என்றார். இன்னொருவர் “இனிப்பு” என்றார். மற்றவர் “விழாக்களில் பகிரப்படுவது ” என்றார் ஒரு  கணித ஆசிரியரோ ‘ஒரு வட்டவடிவமான இனிப்பு உருண்டை ” என்றார். பல பொருள்கள். கதைகளும் கருத்துக்களும் ஒவ்வொருவராலும் அவர்தம் உணர்வுகளுக்கேற்ப சூழ்நிலைகளுக்கேற்ப உள்வாங்கப்படுகின்றன. கற்றல் ஒரு உணர்வுப்பூர்வமான செயல் என அறிதல் புரிதலில் ஈடுபட்ட வல்லுநர்கள் கூறுகின்றனர்.

    முன்னாட்களில் பள்ளிகளில் நீதிக்கல்விக்கு (Moral Education) முக்கியத்துவம் இருந்தது. காலப்போக்கில் பல காரணங்களால் மாற்றப்பட்டு இன்று “வாழ்க்கைக் கல்வி ” என்ற தலைப்பின் கீழ் சீரமைக்கப்பட்டு கற்பிக்கப்பட்டு   வருகின்றது. கற்றலில் கருத்துகள் எந்த விதமான நீதிகளையோ வாழ்க்கைத் தத்துவங்களையோ வெளிப்படுத்துகின்றன. அவற்றால் மாணவர்களின் உணர்வுகளின், அறிதலின், நினைவுகளின்  மீது   தாக்கம் என்ன என்பதையோ அறிந்து செயல் படுதல் அவசியம்.

    இங்கு முன்னே சொல்லப்பட்ட நிகழ்வை ஆராயும்பொழுது ஒரு தந்தையின் நீதிபோதனை அவருடைய மகனின் மனதில் எப்படிப்பட்ட தாக்கத்தை ஏற்படுத்தி இருக்கின்றது என்று புரிந்து கொள்ள முடிகின்றது.

    வார்த்தைகளால் ஆக்கப்பூர்வமான மற்றும் அழிவை உண்டாக்கக்கூடிய சக்தியை .உருவாக்க முடியும். ஆகவே கதைகள் மற்றும் புத்தகங்களில் பதிக்கப்படும் மற்றும் பாடத்திட்டத்தில் இடம்பெறும் பதிப்புகளை மிகவும் கவனத்துடன் அமைத்தல் ஒரு அரசாங்கத்தின், சமுதாயத்தின் மற்றும் கல்வியாளர்களின்  கடமை.

    தொடருவோம்

    Share
  • வாக்குமூலம்

    -மீ.விசுவநாதன்

    ஓடியோடிப் போகின்றேன் – உயிர்
    ஓட்டப் பந்தய வீதியிலே!
    ஆடியாடிக் களிக்கின்றேன் – அதில்
    ஆசை பொங்கிட வேர்க்கின்றேன்!

    வாசலிலே கோலத்தில் – கலை
    வாசம் செய்வதை ரசிக்கின்றேன்!
    நேசமிகு சேய்களுடன் – தினம்
    நெகிழ்ந்து கரைவதை உணர்கின்றேன்!

    கற்றகல்வி கர்வமெலாம் – சல்லிக்
    காசுக் கீடிலை அறிகின்றேன்!
    உற்றதுணை சுற்றமுடன் – மனம்
    ஒத்து வாழ்ந்திட நினைக்கின்றேன்!

    ஆடுமாடு பறவையுடன் – என்
    ஆத்ம ஈர்ப்பிலே பழகுகிறேன்!
    கூடுவிட்டுக் கூடுபாய்ந்து – கவி
    கொஞ்சிக் கூத்திட உருகுகிறேன்!

    நல்லிசையைக் கேட்டபடி – செவி
    நரம்பு ஆழ்ந்திட விரும்புகிறேன்!
    மல்லிகைப்பூ வாசமென – நான்
    மற்றவர் மகிழ்ந்திட அரும்புகிறேன்!

     

     

    Share
  • படக்கவிதைப் போட்டி 55-இன் முடிவுகள்

    -மேகலா இராமமூர்த்தி

    அடடா! இந்த மழலையின் மகிழ்ச்சிக்குளியலைக் காணக் கண்கோடி வேண்டாமோ? குட்டிநிலவின் பட்டுமேனியை ஆசையோடு தொட்டுவிளையாடுகின்றன பொங்கிவரும் நீரலைகள்!

    சின்னஞ்சிறு கைப்பேசியில் கைதுசெய்துவிடமுடியுமா இந்த வண்ணநிலவின் வடிவழகை?

    baby's bath

     

     

     

     

     

     

     

     

    அழகோவியத்தைத் தன் படக்கருவியில் அள்ளிவந்திருக்கும் புகைப்படக்கலைஞர் திரு. பிரேம்நாத் திருமலைசாமிக்கும், இப்படத்தைக் கவிதைப்போட்டிக்குத் தேர்வுசெய்து தந்திருக்கும் திருமதி. சாந்தி மாரியப்பனுக்கும் எம் நன்றி!

    இனி கவிதைகளுக்குச் செல்வோம்!

    ***

    துள்ளிவரும் வெள்ளிநீரில் வெண்தாமரையாய் மின்னும் இம்மழலையின் அழகைக் கண்டு இரசிக்கவா? இல்லை அள்ளி எடுக்கவா? என்று ஆசையாய்க்  கேட்கின்றார் திரு. ஹரிஹரன்.

    வைரமேனியின் மேல் வைரத் துளிகள் பாய,
    மொட்டு சாய்வது போல் தலைசாய ,
    வெண்தாமரையாய் உம்மேனி நீரினுள் தெரிய ,
    பூங்காற்றும் உம்அழகுடன் போட்டியிட விச,
    அழகே,
    இயற்கையில் இயற்கை நீராடுகிறது.
    உன்னை,
    நீர்க்குமிழிகள் சுடுமோ? குளிருமோ?
    நீரின் வேகம் உம்மை அச்சுறுத்துமோ?
    என் நெஞ்சம் தேடுகிறது.
    உம் அழகைக் கண்டு ரசிக்கவா?
    உன் ஆனந்தம் கண்டு நெகிழவா?
    உம்  மேனியை அள்ளி எடுக்கவா?
    சொல்லடா என் செல்வமே!, சொல் ,

    உன் மொழி எனக்குத் தெரியாது ,
    என் மொழி உனக்குத் தெரியாது .
    அதனாலே,
    உன் உயிரை நானே படமெடுக்கிறேனடா!…

    ***

    கொட்டும்நீரில் குதித்துவிளையாடும் பட்டுத்தளிரின் பரவச அனுபவத்தைக் கவிதையாக்கியிருக்கின்றார் திரு. மதிபாலன். 

    கொட்டிடும் நீரில் குதித்து  விளையாடும் 
    பட்டுத் தளிரே பரவசமோ –ஒட்டி 
    உறவாடும் நீரலை உன்னால் இனிக்கும் 
    மறக்குமோ அந்த சுகம் ?

    ***

    சித்திரக்குளியல் செய்யும் பத்தரைப் பசும்பொன்னின் ‘சூரியத் திருமேனி’யைப் போற்றிப் பாடியிருக்கின்றார் திரு. இளவல் ஹரிஹரன்.

    சின்னச் சூரியத் திருமேனி யொன்று
    சித்திரக் குளியல் செய்கிறது
    எண்ணத் தொலையா நீர்ப்பூக்களதன்
    எழில்மேனியில் பெய்கிறது

    கண்ணும் கருத்தும் கவரும் வகையிலதைக்
    கைகளில் படத்தைப் பிடிக்கிறது…இந்த
    மண்ணில் வந்த வான நிலவென்
    மகிழ்வாய்க் குழந்தை நடிக்கிறது.

    […]

    சிகரம் வைத்த காட்சி எனவே
    சித்திர மாக்கிப் பார்க்கிறது…நல்ல
    மகவின் குளியல் ஆனந்தந் தன்னை
    பெற்றோர் பார்க்கச் சேர்க்கிறது.

    இதுபோல இன்பம் உலகில் இல்லை
    இனிதே வாழக் கற்பிக்கும்….இங்கு
    இழந்த வாழ்வின் இன்பம் அதிகம்
    இதனை மீட்டுப் புதுப்பிப்போம்.

    ***

    ”நீர்கண்டு பதறும் குழந்தையல்லன் இவன்! எதிர்காலத்தில் நீரையே ஆளும் வல்லமை மிக்கோன்!” எனக்குழந்தையை வியந்து போற்றுகின்றார் திருமிகு. வேதா. இலங்காதிலகம். 

    வெள்ளிச் சாரலில் உள்ளம் குளிர
    துள்ளி வரும் நிரிலுடல் குளிர
    கொள்ளை இன்பக் காட்சியில் மழலை
    அள்ளும் அழகுக் காட்சியை அப்படியே
    கொள்ளும் கருவியுடன் தந்தை போலவன்.
    வெள்ளத்தில் பிள்ளைக்குப் பாதுகாப்பாய் அம்மா.
    கோடையின் ஆனந்த ரசனையின் அனுபவத்தில்
    ஆடையற்ற மேனியின் ஆனந்தப் பரவசம்.

    நீர் கண்டு பதறும் குழந்தையல்ல
    நீரையே ஆளுவான் இவன் எதிர்காலத்தில்
    ஆகா! என்ன இன்பக் காட்சி!
    வாகாக மூலிகை கழுவிய நீர்ப்
    போர்வை குழந்தையைத் தழுவ அனுபவச்
    சார்பில் ஆனந்த ரசனை முகம்.
    கிளர்ச்சி அனுபவத்தால் குழந்தை மன
    வளர்ச்சிக்கு ஆதரவு தரும் பெற்றோர்!
    ***

    ”மறந்துபோன மரபுகளில் ஒன்று களியூட்டும் வயல்வெளிக் குளியல்; அதனை மீண்டும்  நினைவூட்டுகின்றது இந்தப் பட்டுத்தாமரையின் ஒய்யாரக் குளியல்” என்கிறார் திரு. க. கமலகண்ணன்.

    மறந்து போன பாரம்பரிங்களில்
        இதுவும் ஒன்று
    வயல்வெளி குளியல் மகிழ்ச்சிகளில்
        நம்மை வென்று
    வாழ்வில் இன்றியமையா பல
        இழந்தது நின்று
    சிலிர்க்கும் தருணங்கள் அது
        கிடைக்குமா இன்று
    என மனது ஏங்குகிறது
        வெட்கத்தை தின்று
    கொடுத்து வைத்த குழந்தையடா
        வளருவாய் நீ நன்று

    ***

    இனி, இவ்வாரத்தின் சிறந்த கவிஞரைச் சந்திப்போம்!

    எடுக்கப்படும் புகைப்படம் ஒவ்வொன்றும் சமூக வலைத்தளங்களில் அடுத்தடுத்துச் சங்கமமாகும் காலமிது! அந்த உண்மையைச் சின்னக்குழந்தை செப்புவதாய் அமைத்திருக்கும் ஒரு கவிதை மனங்கவர்கின்றது.

    பாய்ஞ்சு வந்தத் தண்ணியில் 
    ****பயமில் லாமக் குளிக்கிறேன்
    தேய்ச்சுக் குளிக்க வில்லைநான்
    ****
    தேகம் குளிரக் குளிக்கிறேன் ! 

    ஆச தீரக் குளிக்கிறேன்
    ****
    அழாம நானே குளிக்கிறேன்
    பேசக் கூட முடியல
    ****
    பின்னால் தண்ணி முட்டுது ! 

    ஆடை யின்றிக் குளிக்கிறேன்
    ****
    அமர்ந்துக் கொண்டே குளிக்கிறேன்
    கோடை வெயிலும் தெரியல
    ****
    கொஞ்சங் கூட சலிக்கல ! 

    அம்மா துணையா நிக்குறா
    ****
    அப்பா போட்டோ எடுக்குறார்
    சும்மா விடவாப் போகிறார்
    ****
    சுற்றி வாட்ஸ்அப் பண்ணுவார் ! 

    நாளை உமக்கும் வந்திடும்
    ****
    நல்லா என்னப் பாக்கணும்
    தோளைக் குலுக்கி ரசிச்சதும்
    ****
    சூடா லைக்கும் பண்ணணும் ….!!!

    பாய்ந்துவரும் தண்ணீரில் பயமில்லாமல் குளிக்கும் இந்தக்குழந்தை, தன்னைப் புகைப்படமெடுக்கும் தந்தை அடுத்து அதனை எங்கெல்லாம் ’வலையேற்றுவார்’ என்பதைச் சுவையோடு விவரிப்பது, நம்மை இரசிக்கவும் சிரிக்கவும் வைக்கின்றது! இக்கவிதையை இயற்றியிருக்கும் திருமிகு. சியாமளா ராஜசேகர் இவ்வாரத்தின் சிறந்த கவிஞராய்த் தேர்வாகிறார்.

    ***

    நகரங்களை நோக்கிய மக்களின் இடைவிடாப் படையெடுப்பால், இயற்கையோடு இயைந்த கிராமவாழ்க்கை இன்று கனவாய், பழங்கதையாய் மாறிவருகின்றது.

    ’கூட்டுப்பறவையாய் நகரில்வாழும் குழந்தைக்கு, நாட்டுப்புற வாழ்வும், வனப்பும் குதூகலமே’ என்று கூறும் கவிதை நம்மைச் சிந்திக்க வைக்கிறது.

    நாட்டுப் புறத்தை மறந்தேதான்
    நகர வாழ்க்கை வந்தோர்தம்
    கூட்டுப் பறவைக் குழந்தைக்குக்
    கிராமம் கண்டதும் குதூகலம்தான்,
    தோட்ட நீரில் புகுந்தேதான்
    துள்ளிக் குதித்தே ஆடுதல்பார்,
    ஆட்டம் பார்க்கும் பெற்றோரும்
    அந்தநாள் நினைவில் குளித்தாரே…!

    நாட்டுப்புற வாழ்வின் இனிமையை எளிமையாய்ச் சொல்லியிருக்கும் திரு. செண்பக ஜெகதீசனுக்கு என் பாராட்டுக்கள்!

     

     

    Share
  • கேசவ் வண்ணம் – கிரேசி எண்ணம்

    கிரேசி மோகன்

    b973af5a-ca30-4e88-90e5-c5dee3af753e

    கேசவ் அவர்களின் Antoni Gaudi Spain Architect….குறிப்பு பற்றி அவரிடம் தொலை பேசியில் கேட்டபோது, காடியான வண்ணங்கள் GAUDI அவர்களைக் குறிப்பதாகக் கூறினார்….எவ்வளவு ‘’காடியாய்’’ வரைந்தாலும் கேசவ் அவர்களின் ‘’GOD”யா கண்ணன்….மேலும் அவர் SPAIN என்று போட்டுள்ளதால், எனக்கு ‘’பொறியியல் கல்லூரி’’ ஞாபகம் வந்தது….அடியேன் படிக்கையில் எழுதிய ஒரு ஸ்மால் ஸ்கிட்டில் வசனம் இப்படி வரும்….

    ஒருவர் -வள்ளுவரே SPAIN நாட்டைப் பற்றி திருக்குறள் எழுதியுள்ளார்….!

    மற்றொருவர் -நெசமாவா….அது என்ன குறள்….!

    ஒருவர் -’’பீலிபெய் சாகாடும் அச்சிறும் அப்பண்டம்

    சால மிகுத்து SPAIN”….(பயங்கர க்ளாப்ஸ் வரும்) அதாவது மயிற்பீலி லேசாக இருந்தாலும், அளவுக்கு மீறினால் ஏற்றிய வண்டியின் அச்சு ஒடியும்…. கண்ணனின் கீதை ஹெவியாக இருந்தாலும் தேரின் அச்சு ஒடியவில்லை… மயிலே மயிலே என்றால் கீதை இறகு போடும் பச்சை மாமலையவர்…. இதுவும் ஞாபகம் வந்தது…. படத்துக்குப் பொருத்தமான வெண்பாவுக்கு கருத்து கிடைத்தது…. நன்றி கேசவ்…. நன்றி வள்ளுவர்.

    ‘’அச்சிறா வண்ணம் அசுவரதம் ஓட்டியன்று,
    அச்சுறும் பார்த்தர்க்(கு) அருங்கீதை, -பச்சமயில்
    பீலியாகத் தந்தனை பெற்றவளைப் போல்கண்ணா
    சால மிகுத்து ஸ்பெயின்(SPAIN)”….கிரேசி மோகன்….

    அச்சிறா- அச்சு ஒடியா….
    அச்சுறும் -பயந்த அர்ஜுனர்

    Share
  • சிவபிரதோஷம்

    “சாமவேத சிவன்”
    (மீ.விசுவநாதன்)
    காமத்தின் வேகத்தில் கண்கேட்டுப் போனவனின்
    சாமவேத நல்லிசையில் சந்தோஷ மானவனே
    பாதியைத் தந்து பலர்போற்றும் பெண்மைக்குப்
    போதிய சக்தியான பொன்.
    (பிரதோஷ தினம் : 20.03.2016)

    Share
  • கேசவ் வண்ணம் – கிரேசி எண்ணம்

    f8565988-c420-4c42-8acf-4404b6e8782c

    ”ஆணென்றும் பெண்ணென்றும் நானென்றும் நீயென்றும்
    வீணிந்த வித்தியாசம் ஏனென்று, -ஆண்களில்
    உத்தமன் பெண்ணானான், உத்திரத் தோன்றலுக்காய்,
    ஒத்திகை பார்க்கின்றான் ஓய்’’….கிரேசி மோகன்….
    ஆண்களில் உத்தமன் -புருஷோத்தமன்….
    உத்திரத் தோன்றல் -அய்யப்ப ஸ்வாமி….

    Share
  • என்ன குறை வைத்தேன்

    என்ன குறை வைத்தேன்

    [மொழியாக்கக் கதை]
    தெலுங்கில்: வசந்தலட்சுமி. P
    மொழியாக்கம்: கௌரி கிருபானந்தன்

    “உனக்கு என்ன குறை வைத்தேன்?”

    “உனக்கு என்ன குறை வைத்தேன்?” திரும்பவும் கேட்டான் மகேஷ்.

    ‘எல்லாமே அதிகம்தான்’ மனதில் நினைத்துக் கொண்டேன். வெளியில் மட்டும் எதுவும் சொல்லாமல் என் வேலையை பார்த்துக் கொண்டிருந்தேன். என்னவென்று சொல்வது? எப்படிச் சொல்வது இந்த மனிதனுக்கு?

    தோசை வார்த்துக் கொண்டிருந்தேன். தேங்காய் சட்னி அரைத்தாகி விட்டது. தக்காளி தொக்கு ஏற்கனவே இருந்தது. தோசைமிளகாய் பொடி, நல்ல எண்ணெய் எல்லாம் தயாராக வைத்தேன்.

    குளித்துமுடித்துவிட்டு தலையை துவட்டிக் கொண்டே வந்த மகேஷ் டிபனுக்கு என்ன பண்ணியிருக்கிறேன் என்று எட்டிப் பார்த்துவிட்டு, “சாம்பார் இல்லையா?” என்றான்.

    நேற்று முதல் எனக்கு மைக்ரேன் தலைவலி. அம்மா வீட்டில் இருந்த போது எனக்குச் சின்ன தலைவலி வந்தாலும் அம்மா எவ்வளவு துடித்துப் போவாளோ, எவ்வளவு உபசாரம் செய்வாளோ நினைவுக்கு வந்ததும் கண்களில் நீர் சுழன்றது.

    என் கண்ணில் நீர் துளிர்த்தது மகேஷின் கண்ணில் பட்டு விட்டது. என்ன இருந்தாலும் மனைவியின் கண்கள் கலங்கினால் இந்த ஆண்களால் தாங்கி கொள்ள முடியாது இல்லையா.

    “என்னவோ பெரிதாக கஷ்டப்பட்டுக் கொண்டிருப்பது போல் அழுவானேன்? மாவு அரைக்க கிரையிண்டர். சட்னி அரைக்க மிக்ஸி இருக்கு. குக்கர், ஓவன் எல்லாமே வாங்கிக் கொடுத்திருக்கிறேன். வாய்க்கு ருசியாகச் சமைத்து போடுவாய் என்றுதானே உன்னைக் கல்யாணம் பண்ணிக்கொண்டேன். இல்லையென்றால் எந்தப் பிடுங்கலும் இல்லாமல் நிம்மதியாக இருந்திருப்பேன்.”

    வெடுக்கென்று இப்படிச் சொல்லாமல் எனக்குச் சமையலில் கொஞ்சம் உதவி செய்து கொண்டே, கிண்டல் அடிப்பது போல் சொல்லி இருந்தால் இந்தக் காலை நேரத்தில் என் விழிகளில் ஈரம் படிந்திருக்காதோ என்னவோ.

    காலை ஐந்து மணிக்கே எழுந்து பில்டரில் டிகாஷன் போட வேண்டும். காபி புது மணத்துடன் சூடாக இருக்க வேண்டும். இட்லி மாவை ஒரு நாளுக்கு மேல் பயன்படுத்தக் கூடாது. ஹோட்டல் தோசை போல் மொறுமொறுப்பாக இருக்க வேண்டும். ஹோட்டலில் கொடுப்பது போலவே மூன்று விதமான சட்னி, கூடவே சாம்பாரும் இருக்க வேண்டும். இட்லி பஞ்சு போல் மெத்தென்று, வாயில் போட்டால் கரைந்து போக வேண்டும்.

    இவையெல்லாம் மகேஷின் விருப்பங்கள். இல்லை இல்லை டிமாண்டுகள்! அதது அப்படி இல்லை என்றால் தன்னுடைய வெறுப்பை முகத்தில் மட்டுமே இல்லை, வார்த்தைகளிலும் காட்டுவதற்கு தயங்கமாட்டான்.

    ஆணாக இருந்தால் எது வேண்டுமானாலும் நடத்திக்கொள்ள முடியுமா? என்னுடைய விருப்பம் என்னவென்று ஒரு நாளும் கேட்டது இல்லை. சொல்லவும் எனக்கு வாய்ப்பு கொடுத்தது இல்லை.

    அம்மா செய்யும் இட்லி மல்லிகை போல் வெள்ளை வெளேரென்று, வாயில் போட்டால் கரைந்து விடுவது போல் இருக்கும். ஆனால் நான் எப்போது சமையல் அறைக்குள் எட்டிப் பார்த்திருக்கிறேன், அம்மா எப்படித் தயாரிக்கிறாள் என்று தெரிவதற்கு?

    எப்போதும் படிப்பு, இல்லையா சிநேகிதிகளுடன் சினிமா, டிராமா என்று ஊர் சுற்றுவது. அப்பாவின் செல்லம் நான். ஒரே மகள்! ‘அவளை எதுவும் சொல்லாதே. எங்க அம்மாதான் மகளாகப் பிறந்திருக்கிறாள்’ என்று எவ்வளவு செல்லமாக பார்த்துக் கொண்டார்!

    *******

    நானும் தவறு செய்திருக்கிறேன். சிவில் இன்ஜினியரிங் முடித்த பிறகு, வேலைக்கு முயற்சி எதுவும் செய்யவில்லை. அப்பாடா! படிப்பு முடிந்து விட்டது. கொஞ்சநாள் நிம்மதியாக ரெஸ்ட் எடுத்துக்கொள்வோம் என்று நினைத்திருந்தேன்.

    படிக்கும் போது கவனம் செலுத்தி படிக்கவில்லை. எப்போதும் சிநேகிதிகளுடன் பேச்சும், சிரிப்புமாகப் பொழுதை போக்கி வந்தேன். எப்படியோ முதல் வகுப்பில் தேர்ச்சி பெற்று விட்டேன். படிப்பு முடிந்த பிறகுதான் தோன்றியது. பள்ளியில் படிக்கும் போது நன்றாகத்தானே படித்து வந்தோம்? இந்த இன்ஜினியரிங் படிப்பை ஏன் சிரத்தை எடுத்துக்கொண்டு படிக்க வில்லை?

    எல்லாம் கனவு போல் நடந்து முடிந்து விட்டது. கல்லூரிப் பேருந்தில் ஒரு மணி நேரம் பயணம், ஆண்களும், பெண்களுமாய் சேர்ந்து அரட்டை அடித்துக் கொண்டு ஜாலியாக ஏதோ பிகினிக் போவது போல் கல்லூரிக்குப் போய் வந்தாள். அந்த நான்கு வருடங்களும் எவ்வளவு சந்தோஷமாக கழிந்து விட்டன!

    படிப்பு முடிந்ததும் அப்பா கேட்டார் மேற்கொண்டு என்ன செய்வதாக இருக்கிறாய் என்று.

    என்ன பதில் சொல்வது என்று தெரியவில்லை. ஒரு லட்சியமும் இல்லாத படிப்பை முடித்துவிட்டு களைத்துப் போய் விட்டேன். கொஞ்சம் ஓய்வு எடுத்துக் கொள்ளணும் என்று நினைத்தேன். இப்பொழுது தோன்றுகிறது இன்னும் கொஞ்சம் சிரத்தையாகப் படித்திருக்கலாமே என்று.

    அம்மா எப்போதும் சொல்லிக்கொண்டு இருப்பாள். “சுதா! வாழ்க்கையில் படிப்பு ரொம்பவும் முக்கியம். அதை விட்டு விடாதே” என்று. அப்போது அம்மா சொன்னது பழைய பஞ்சாங்கம் போல் இருந்தது.

    அதற்குள் அப்பாவின் நண்பன் மூலமாக இந்த வரன் வந்தது. பெயர் மகேஷ். நல்ல உயரம், இன்ஜினியர், ஹைதரபாதில் சாப்ட்வேர் வேலை, ஒரு தங்கை. அவளுடைய திருமணமும் முடிந்து விட்டது. பெற்றோர்கள் சொந்த ஊரில் இருக்கிறார்கள். அவர்களுக்கு அங்கே வீடு, நிலம் நீச்சு எல்லாம் இருக்கிறது. பெரிய பொறுப்புகள் எதுவும் இல்லை. குறை சொல்வதற்கு எதுவும் இல்லாத இடம்.

    எனக்கும் மறுப்பு சொல்வதற்கு எந்தக் காரணமும் தெரியவில்லை. கல்யாணம் என்றதும் ஏதோ தெரியாத உற்சாகம் பொங்கி வந்தது. இனிமேல் எனக்கு என்று ஒரு வீடு இருக்கும். என் விருப்பம் போல் அதை சீரமைத்துக் கொள்வேன். கணவன் மனைவியுமாக ஊர் சுற்றுவோம், காதலித்துக் கொள்வோம். கல்யாணம் முடிந்த பிறகுதான் காதல் என்று என் மனதில் முன்பே தீர்மானம் செய்திருந்தேன் . கல்லூரியில் படிக்கும் போது இரண்டு மூன்று பேர்கள் காதலித்து கல்யாணம் செய்து கொண்டார்கள். ஆனால் என் மனதில் அது போன்ற எண்ணம் ஒரு நாளும் வந்தது இல்லை.

    திருமண நாள் நிச்சயமானதும் அம்மாவும், நானும் கடைகடையாக ஏறிக் கொண்டிருந்தோம். பட்டுப் புடவை, சாதாரண புடவை, ரெடிமேட் ஆடைகள், மாட்சிங் பிளவுசுகள், செருப்புகள், சிக்கர் பொட்டுகள்… ஒன்றா இரண்டா!

    ஷாப்பிங் என்றாலே தலைவலி வரும் அளவுக்குக் கடைகளை ஏறி இறங்கினோம். இனி திருமணப் பத்திரிகை தேர்வு செய்யும் கட்டம். எனக்குப் பிடித்தது அம்மாவுக்குப் பிடிக்காது, அப்பாவுக்குப் பிடித்தது எனக்குப் பிடிக்காது. மூன்று பேருக்கும் பிடித்தது தேர்வு செய்வதற்குள் ஒரு வாரம் ஓடி விட்டது.

    இனி வாழ்நாள் முழுவதும் எனக்குத் துணை மகேஷ்! வாழ்க்கைத் துணையைத் தேர்வு செய்வதில் அவசரப்பட்டு விட்டேனா?

    அம்மா, அப்பாவுக்கும் பெரியவர்கள் நிச்சயம் செய்த கல்யாணம்தான். அவர்கள் ஒற்றுமையாகத்தானே இருந்தார்கள்?

    என் விஷயத்தில் மேட்சிங் எங்கேயோ தவறி விட்டது போன்ற உணர்வு.

    கல்யாணத்தின் போதே தெரிந்தது. என் சினேகிதிகள் ஜோக் செய்தால் கடுகடுவென்று முகத்தை வைத்துக் கொண்டான். “அவனுக்கு எல்லாம் ஒழுங்குமுறையுடன் இருக்கவேண்டும். நான் பண்ணினால் கூட அவனுக்கு சில சமயம் பிடிக்காது. ஏன் இப்படிச் செய்தாய் என்று கோபித்துக் கொள்வான்.” மாமியார் மகனைப் புகழ் பாடினாள்.

    “உன் மனைவி வந்த பிறகு உனக்கு வேண்டிய விதமாகப் பண்ணவைத்து சாப்பிடு. என்னால் இதைவிடச் செய்ய முடியாது என்று சொல்லிவிட்டேன்.”

    மாமியார் சொன்ன போது என் இதயம் தொண்டைக்குழிக்கு வந்தது போல் இருந்தது,

    இப்பொழுது நான் வாய்க்கு ருசியாக சமைத்துப் போட்டு, வீட்டை நேர்த்தியாக எடுத்து வைத்து நல்ல பெயர் வாங்க வேண்டுமா? அடடா! நன்றாகப் படித்திருந்தும் வேலைக்குப் போகாமல் ஏன் சும்மா இருந்தேன்? அது இன்னும் கொஞ்சம் சுலபமாக இருந்திருக்கும் இல்லையா?

    கணினி மூலமாகச் சமையல் குறிப்புகளைக் கற்றுக்கொண்டு ஆறுமாதங்கள் போவதற்குள் பைவ் ஸ்டார் ஹோட்டல் அளவுக்கு இல்லை என்றாலும் ஓரளவுக்கு நன்றாகவே சமைக்கத் தொடங்கினேன்.

    அப்படியும் குறை சொல்லாமல் ஒரு நாளும் சாப்பிட்டது இல்லை. கத்தரிக்காய் வதக்கல் செய்தால் எண்ணெய் பசையே இல்லை. இன்னும் கொஞ்சம் எண்ணெய் விட்டு வதக்கி இருந்தால் நன்றாக இருக்கும் என்பான். டாக்டர்கள் எண்ணெய்யை குறைக்கச் சொல்லி சொன்னார்களே என்று கவனமாக தயாரித்தேன். ருசியாகத்தான் இருந்தது. இன்னும் சொல்லப் போனால் அமிருதமாகவே இருந்தது.

    என்ன மனிதன் இவன்!

    இருந்தாலும் இப்படி சமைத்துப் போட்டுக்கொண்டு நான் ஏன் இப்படி உட்கார்ந்து இருக்கிறேன்? வேலைக்குப் போகணும் என்று முடிவு செய்து அதை அறிவிக்கவும் செய்தேன்,

    “உன் விருப்பம். நான் வீட்டுக்கு வரும் போது நீ வீட்டில் இருக்க வேண்டும். மூடி இருக்கும் கதவைத் திறந்து கொண்டு வீட்டுக்குள் வருவது எனக்குக் கொஞ்சம் கூடப் பிடிக்காது. எனக்கு வாய்க்கு ருசியாக இருக்க வேண்டும். சமையல் சாப்பாட்டில் எந்தக் குறையும் இருக்கக் கூடாது. நான் மற்றவர்களைப் போல் இல்லை. இருந்தாலும் நான் உனக்கு என்ன குறை வைத்தேன்? நீ கேட்காமலேயே எல்லாம் வாங்கித் தருகிறேன். சொந்த வீடு இருக்கிறது. அடுத்த மாதம் கார் வாங்கப் போகிறேன்.”

    எனக்குத் தெரியாமலேயே, என்னைக் கலந்து ஆலோசிக்காமலேயே, என் விருப்பு வெறுப்புகளின் பிரமேயம் இல்லாமலேயே காரியங்கள் நடந்தேறிக் கொண்டிருக்கும்.

    நான் எவ்வளவு பெரிய தவறு செய்துவிட்டேன் என்று இப்பொழுது புரிந்தது. என் வாழ்க்கையைப் பற்றி, எவ்வளவு சுலபமாக, முடிவு செய்து விட்டேன்! என்னுடைய பிரமேயம் இல்லாத வாழ்க்கை இது!

    சதுரமாக இருக்கும் ஒரு பொருளை எடுத்து வட்டமாக இருக்கும் ஒரு இடத்திற்குள் பொறுத்த முயற்சி செய்தால், பொருளாகவே இருந்தாலும் அதற்குக் காயம் ஏற்படாமல் இருக்காது.

    நான் என்று ஒருத்தி இறுதியில் எஞ்சி இருப்பேனா? மகேஷின் மனைவியாக என்னை நிலை நாட்டிக் கொள்வதற்குள் எனக்குப் பிரியமானவற்றை எத்தனை இழக்க வேண்டியிருக்குமோ.

    தேவையில்லாமல் அதிகமாக யோசித்துக் கொண்டிருக்கிறேனோ. இப்பொழுதே இப்படி என்றால் நாளை ஒரு குழந்தை பிறந்து விட்டால் நிலைமை இன்னும் எப்படி மாறுமோ.

    வேலைக்குப் போவதாக சொன்னது முதல் அவனுடைய எரிச்சல் அதிகமானதை உணர்ந்து கொண்டுதான் இருந்தேன். அதன் பாதிப்புதான் இன்று தலைவலியாக உருமாறி இருக்கிறது. மனம் காயமடைந்தால் உடலும் நலிந்து போகும் இல்லையா.

    “டிபன் ரெடியா?” மகேஷின் குரல் கேட்டது.

    “இதோ கொண்டு வருகிறேன்.”

    ஒரு தட்டில் இரண்டு தோசைகள், இரண்டு விதமான சட்னி, தோசைமிளகாய் பொடி, உருக்கின நெய், இன்னொரு கையில் டம்ளரில் தண்ணீர் கொண்டு போய் மேஜை மீது வைத்தேன்.

    “நான் வேலைக்குப் போவது நிச்சயம். வேலைக்குப் போகாமல் என்னால் இருக்க முடியாது. குறைந்த பட்சம் சின்ன குழந்தைகளுக்கு பாடம் சொல்லிக் கொடுக்கும் டீச்சர் வேலை என்றாலும் சரி. இல்லை என்றால் எனக்குப் பைத்தியம் பிடித்து விடும். இது போல் சமைத்துப் போட்டுக்கொண்டு, வீட்டோடு இருப்பதற்கு நான் படிப்பு அறிவு இல்லாத, சுயசிந்தனை இல்லாத முட்டாள் இல்லை. மனமும், யோசிக்கும் மூளையும் இருக்கும் பெண். வாய்க்கு ருசியாக சமைத்துப் போடும் சமையல்காரியாக மட்டுமே நீங்கள் என்னை நடத்துகிறீர்கள். உங்களை நேசிக்கும், மதிக்கும் மனைவி உங்களுக்கு வேண்டும் என்றால் நான் வேலைக்குப் போவதற்கு சம்மதம் சொல்லுங்கள். இல்லை என்றால் என்னால் இங்கே இருக்க முடியாது.”

    மனதில் இருப்பதைச் சொல்லிவிட்டு என் அறைக்குப் போய் படுத்துக் கொண்டேன்.

    இந்தத் தலைவலி குறைய வேண்டும் என்றால் தூக்கம் ஒன்றுதான் மருந்து.

    என் மனதில் பட்ட காயம் ஆற வேண்டும் என்றால் முதலில் நான் விழித்துக் கொள்ள வேண்டும்.

    இனி முடிவு அவன் கையில். எனக்கு என்ன குறை என்று புரிந்தால் ஒப்புக்கொள்வான் என்ற யோசனையுடன் தூக்கத்தில் நழுவினேன்.

    _____________________________________

    கௌரி கிருபானந்தன்
    மொழியாக்கம்:
    கௌரி கிருபானந்தன்
    tkgowri@gmail.com

    _____________________________________

    Share
  • பாண்டியர் காலத்தில் சமசுகிருத மொழிப் புலமை

    பவள சங்கரி

    தமிழ்ச்சங்கம் அமைத்து தமிழுக்கு தொண்டு செய்த பாண்டியர்கள் சமசுகிருதத்தையும் சமமாகப் போற்றி வந்துள்ளனர்.

    தமிழ்நாட்டு மன்னர்களான சேர, சோழ, பாண்டிய மன்னர்கள் தமிழ் மொழி மட்டுமல்லாது சமசுகிருத மொழியையும் பெரிதும் போற்றி வளர்த்திருக்கிறார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது. சோழர் காலத்தின் சமசுகிருத கல்வெட்டுகள், செப்புப் பட்டயங்களில் காணப்படும் அரசாணைகள், குறிப்புகள் ஆகியவற்றில் சமசுகிருத மொழி பயன்படுத்தப் பட்டிருப்பதிலிருந்து இதனை அறிய முடிகிறது. பாண்டிய மன்னர்களில் பெரும்பாலானவர்கள் கல்வியில் சிறந்தவர்களாகவும், கவிஞர்களைப் போற்றியவர்களாகவும் இருந்துள்ளனர். தமிழ் சமசுகிருதம் என்ற பேதமற்று கவிஞர்களைப் போற்றியிருந்தனர்! முதலாம் மாறவர்மன் ராஜசிம்மன் என்னும் பாண்டிய மன்னன், ‘வித்யாசார விபூஷணன்’ அதாவது கல்விக்கு அணிசேர்ப்பவன் என்ற பட்டப் பெயர் பெற்ற மன்னனாவான்.

    பாண்டியர்களுக்கும் அகத்திய முனிவருக்கும் உள்ள தொடர்பு பற்றிய ஒரு சுலோகம்

    अस्तम्भयत्क्षितिधरं प्रविजृम्भमाणं
    अम्भसमस्तमपिबज्जलधेश्च यस्य |
    कुम्भोद्भवो भवति यस्य मुनि: पुरोधसा
    श्रीनिधिर्जयति पाण्ड्य नरेन्द्र वंश: ||

    அஸ்தம்ப⁴யத்க்ஷிதித⁴ரம்ʼ ப்ரவிஜ்ருʼம்ப⁴மாணம்ʼ
    அம்ப⁴ஸமஸ்தமபிப³ஜ்ஜலதே⁴ஶ்ச யஸ்ய |
    கும்போ⁴த்³ப⁴வோ ப⁴வதி யஸ்ய முனி: புரோத⁴ஸா
    ஶ்ரீநிதி⁴ர்ஜயதி பாண்ட்³ய நரேந்த்³ர வம்ʼஶ: ||

    இதன் விளக்கம்:

    விந்திய மலை வளருவதைத் தடுத்து, கடலத்தனையும் குடித்த, குடத்தில் பிறந்த குறுமுனி அகத்தியரைக் குலகுருவாகக் கொண்ட, மனிதர்களில் மாண்புடைய பாண்டிய மன்னர்கள் வாழ்க! செழுமையில் குறைவிலாத இவர் தம் வம்சம் வளர்க.

    ‘கடைச்சங்கத்தில் கடல் கடந்த கொங்கு கலாச்சாரம்’ என்ற என் நூலிலிருந்து.

    Share
  • தமிழர் தம் தெய்வ வழிபாடுகளும் குறியீடுகளும்

    பவள சங்கரி

     

    ஆன்மீக நாடான நம் தமிழ்நாட்டில் ஆயிரக்கணக்கான கோவில்களும், வழிபாடுகளும் இருந்தாலும், குல தெய்வ வழிபாடு என்பது அந்தந்த குடும்பங்களில் உள்ள நபர்களுக்கான தனிப்பட்டதொரு தெய்வம் என்பதால் மிகவும் சக்திவாய்ந்த தெய்வமாகக் காணப்படுவது குறிப்பிடத்தக்கது.குலம்’ என்றால் “குடும்ப பாரம்பரியம்’ என்று பொருள். நமது குடும்பத்திற்கென்று ஒரு வழிபாட்டு தெய்வத்தினை நமது முன்னோர்கள் வைத்திருக்கிறார்கள். தனது அடுத்த சந்ததியினர் நன்றாக இருக்க வேண்டும் என்பதே குல தெய்வ வழிபாட்டின் முக்கியக் குறிக்கோள். ‘சுக்குக்கு மிஞ்சிய மருந்தும் இல்லை, குலதெய்வத்திற்கு மிஞ்சிய கடவுளும் இல்லை’ என்று வழிவழியாக வழங்கப்படும் பழமொழியே இதற்குச் சான்றாகும். அதாவது  ஒருவரது குலம் ஆல்போல் தழைத்து அருகுபோல வேரூன்ற வேண்டுமெனில் குலதெய்வ வழிபாடு என்பது மிகவும் அவசியமான ஒன்று. அந்த வகையில் தமிழ் நாட்டில் குல தெய்வ வழிபாடு என்பது நாகரிக மாந்தர்கள் மத்தியில் அருகி வந்தாலும் சிற்றூர்கள் மற்றும் கிராமப்புறங்கள், பாரம்பரியக்  குடும்பங்கள் போன்ற இடங்களில் இன்றளவிலும் தவறாமல் ஐதீக முறைப்படி வழிபாடுகள் நடைபெறுவதைக் காணமுடிகிறது. சிலர் குல தெய்வ வழிபாட்டை சிறு தெய்வ வழிபாடு என்று புறந்தள்ளுபவர்களையும் காண முடிகிறது.

     

    சிவனோடு ஒக்கும் தெய்வம் தேடினும் இல்லை

    அவனோடு ஒப்பார் இங்கு யாரும் இல்லை

    புவனம் கடந்தஅன்று பொன் ஒளி மின்னும்

    தவனச் சடை முடித் தாமரையானே! (திருவாசகம்)

     

    என்பார், சிவனைத் தவிர எந்த ஒரு தெய்வத்தையும் வழிபடுவதில்லை என்று உறுதியாக இருப்பவர்கள். குலதெய்வம் பெரும்பாலும் சிறு தெய்வமாகவே காணப்படும் என்றாலும்  அளவிட முடியாத சக்தி படைத்த தெய்வம் என்ற நம்பிக்கையும் உண்டு. குல தெய்வம் என்பது தங்கள் குலத்தில் தோன்றிய  முன்னோர்களாகவோ அல்லது தங்கள் குடும்பம், சமூகம் அல்லது பல குடும்பங்கள் விளங்க தங்கள் உயிரையே கொடுத்து காப்பாற்றியவராகவும் இருக்கலாம்.

    குல தெய்வம் என்று எடுத்துக்கொண்டால் எந்த ஒரு வம்சத்திலும் 13 வம்சாவளியினருக்கு மேல் வணங்கும் குல தெய்வம் இருக்க முடியாது என்கிறார்கள். குறிப்பிட்ட அந்த வம்சத்தில் வழி வழியாக வந்தவர்களில் சிலருக்கு குழந்தைப் பேறு இல்லாமலோ, அகால மரணங்களினாலோ, ஆண் வம்ச விருத்தி அடையாமலோ அல்லது வேறு ஏதும் காரணத்தினாலோ வம்சம் அழிந்து விடக்கூடும் என்ற நம்பிக்கையும் உண்டு. ஆகவே ஒரு வம்சத்தின் குல தெய்வம் என்பது 13  வம்சாவளிகளுக்கு மட்டுமே  சக்தியளிக்கக்கூடியதாக இருக்கும் என்றும் நம்புகிறார்கள். எந்தவொரு நல்ல காரியமும்  குல தெய்வத்தை வழிபட்ட பின்பே செய்வது பெரும்பாலான குடும்பங்களில் வழமையாக உள்ளது. குழந்தைக்கு முதல் மொட்டையடிப்பதும் குல தெவ கோவிலில் மட்டுமே செய்பவர்களும் உண்டு. குலதெய்வத்தின் கோவிலுக்கு செல்லும்போது பொங்கல் வைத்து சாமி கும்பிட்டு வரவேண்டும். எல்லா குலதெய்வத்திற்கும் அது தான் வழக்கம்.  மகள் என்பவள் திருமணம் ஆனவுடன் புகுந்த வீட்டிற்குச் சென்று விடுவதினால் அவளுக்கு தாய்-தந்தையின் குல தெய்வத்தை தனது குல தெய்வமாக ஏற்க முடியாமல் போகிறது. அவள் புகுந்த வீட்டின் குலதெய்வமே அவள் குல தெய்வம் ஆகி விடும்.

    .குருவை மறந்தாலும் குலதெய்வத்தை மறவாதே… 

    ..குலதெய்வத்தைக் கும்பிட்டு கும்மியடி…

    என்ற முதுமொழிகள் குலதெய்வ வழிபாட்டினைக் குறிப்பிடுகின்றன.

     

    குல தெய்வங்கள் தோன்றும் முறையை ஒவ்வொரு குடும்பத்திலும் ஒரு நாட்டுப்புற கதை போலவே செவி வழிக் கதையாக சுவைபட வழங்கப்படுவதும் குறிப்பிடத்தக்கது. உதாரணத்திற்கு, ஒரு கன்னிப்பெண் குல தெய்வமான கதையைக் காணலாம்.

    குல தெய்வம்

    18-1424234747-kuladeivamscience4

    பாரதி ராஜாவின் கேமராக் கண்களுக்குத் தப்பிய அழகிய பண்ணை வீடு. வீட்டைச் சுற்றி கண்ணுக்கு எட்டிய தூரம் வரை பச்சைக் கம்பளம் விரித்தது போன்று அப்படி ஒரு பசுமை, நிறை மாத கர்ப்பிணியாக துவண்டு நிற்கும் நெற்கதிர்கள்! வரப்பு மேட்டு மேலேயே போய் நெல் வயலைத் தாண்டியவுடன் ஒரு புறம் தாயும், கன்றுமாக வாழைத்தோப்பும், மறு புறம் நெடிதுயர்ந்து கொத்துக் கொத்தாக குலையுடன் தென்னை மரங்களின் அணிவகுப்பு.இந்தக் காட்சியெல்லாம் சாமான்யரையே கிறங்கச் செய்யும் போது கவிஞரொருவரின் கண்ணில் பட்டால் என்ன ஆவது?

    அந்தி மயங்கும் மாலை வேளையில் வரப்பு மீது அமர்ந்து கொண்டு ஓடை நீரில், கணுக்கால் தெரியும் வரை சின்னாளப் பட்டுப் பாவாடையை தூக்கிப் பிடித்துக் கொண்டு காலை விட்டு ஆட்டிக் கொண்டே சலசலக்கும் அந்த ஓடை நீரின் தண்ணளியுடன் கூட்டில் அடையும் ஆவேசத்துடன் அன்றில் பறவைகள் அணிவகுத்துச் செல்லும் அழகையும், குச்சு வீட்டில் காதல் மொழி பேசி கொஞ்சிக் குலவும் இணைகளின் சங்கேத மொழியின் கீதமும் கண்ணையும், செவியையும் ஒரு சேர கொள்ளை கொள்ள, வானத்தில் ஆங்காங்கே கரிய மேகங்களின் ஓவியச் சாலங்களும் அதில் இணைந்து கொள்ள தன்னை மறந்ததொரு மோன நிலைக்குச் செல்ல வேறு முகாந்திரமும் வேண்டுமோ ஒயிலரசிக்கு? இவளுடைய அன்றாட வழமைகளில் இதுவும் ஒன்று.

    “எலே, ஒயிலா, நெதமும் இது ஒனக்கு தொழுவாடா போச்சுதா? காலேசு உட்டு ஊடு வந்தோமா, எதுனாச்சும் சாப்புட்டோமான்னு கூட இல்லாம, நேரா இங்கன வந்து குந்திக்கிட்டு ஆகாசத்தையும், பூமியிம் விரைக்க விரைக்க பாத்துக்கிட்டு அப்படி என்னலே பண்ணுதே…..?”

    “போங்க அப்பத்தா, இன்னும் கொஞ்சம் நேரம் போனா நானே வந்துடப் போறேன். நீங்க என்னத்துக்கு இவ்வளவு தொலவு வந்தீங்க?”

    “சரி சரி வா போகலாம். உங்கம்மா கடந்து ஆகாசத்துக்கும் பூமிக்குமா குதிச்சிக்கிட்டு கிடக்கா”

    “அப்பத்தா இந்த பச்சப் பசேல் வயலும் தென்னங் காத்தும், சலசலக்கும் நீரோடையும், புள்ளினங்களின் கீதமும் என்னை அப்படியே மயக்கி கட்டிப் போடுது அப்பத்தா. அப்படியே இந்த இயற்கையோடேயே கரைஞ்சு போயிட மாட்டோமான்னு மனசு ஏங்குது அப்பத்தா”

    “என்னலே என்னமோ சினிமா வசனமாட்டம் பேசற. உங்கப்பன் என்னமோ உன்னை பெரிய படிப்பெல்லாம் படிச்சு பட்டணத்துல உத்தியோகம் பாக்குற மாப்பிள்ளைக்கு கட்டிக் குடுக்கப் போறதா சொல்லிக்கிட்டுத் திறியறான். நீ என்னடான்னா இந்த தோட்டத்தையே கட்டிக்கிட்டு கிடக்கற”

    ”போங்க அப்பத்தா நான் செத்தாலும் இந்த தோட்டத்தை விட்டுப் போக மாட்டேன் ஆமா!”

    அவள் பேச்சில் இருந்த உறுதியும் முகத்தில் தெரிந்த கடுமையும் அப்பத்தாவையும் ஒரு கணம் மிரளச் செய்தது.

    “அப்பத்தா நம்ம கருப்பராயன் கோவில்கிட்ட பெரிய வேப்பமரம் இருக்கிதுல்ல. அதுக்குங் கீழே சின்ன சின்ன சாமியா இருக்குதே அது என்ன சாமி அப்பத்தா?”

    03_full

    “அதுவா அது ஏழும் ஏழு கன்னிமாருங்க. நம்ம பரம்பரையில கன்னியா செத்துப் போன பொண்ணுங்க நம்ம குலதெய்வமா அங்கனயே இருந்து நம்ம வம்சத்தையே காத்துக்கிட்டு இருக்குதுன்னு எம்பட மாமனாரு, அதேன் உங்க பெரிய தாத்தன் சொல்லுவாரு”

    பாட்டியும்,பேத்தியும் பேசிக் கொண்டே வீடு வந்து சேர்ந்தனர். வழக்கம் போல அம்மாவின் சத்தத்தைச் சமாளிக்க ஓடிச் சென்று அவள் கழுத்தைக் கட்டிக் கொண்டு ‘மன்னிச்சுடும்மா….என் செல்லந்தானே..கோவிச்சுக்காதம்மா’ என்று கொஞ்சிக் கொண்டே காபியை வாங்கி உறிஞ்சிக் கொண்டே, ‘மஞ்சுக் குட்டி’ என்று செல்லமாகக் கூப்பிட்டாள்.

    அக்காவின் குரலைக் கேட்டவுடன் தாய்ப்பசுவைக் கண்ட கன்றைப் போல துள்ளிக் கொண்டு ஓடி வந்து அவளை அணைத்துக் கொண்டாள்.

    “என்னக்கா, இன்னைக்கு என்னக்கூட பார்க்காம தோட்டத்துக்குப் போயிட்ட. உனக்காக எவ்வளவு நேரமா என் மார்க் சீட்டை காட்டறதுக்காக காத்துக்கிட்டு இருக்கேன்”

    “என் செல்லக்குட்டி எப்பவுமே ஃபர்ஸ்ட் ரேங்க் தானே. அதில என்ன சந்தேகம். சரி உனக்கு உன்னோட ஃபேவரிட் மயிலிறகு நாளைக்கு கொண்டு வந்து தறேன். சரியா.”

    “அம்மா நான் போயி கண்ணன் அண்ணனை பார்த்துட்டு வாரேன்”

    “எதுக்குடி இந்நேரத்துல போற… காலைல போகலாமில்ல”

    “இல்லம்மா,எனக்கு அண்ணனைப் பார்க்கலாம்னு இருக்கு. நாளைக்கு அண்ணன் தான் என்னை பாக்க வாரோனும்” என்றாள் சிரித்துக் கொண்டே.

    கண்ணன் ஒயிலாவின் பெரியப்பா மகன். அவளிடம் மிக அன்பாக இருப்பவன்.பிறந்த நாளுக்கு ஒவ்வொரு வருடமும் அவன் எடுக்கும் துணியைத்தான் அவள் அணிந்து கொள்வாள். அண்ணனும் தன் தங்கைக்கு அவள் விரும்பும் துணியைப் பார்த்து பார்த்து டவுனுக்குச் சென்று வாங்கி வருவான்.ஒயிலாவும் ஒரு சின்ன விசயமானாலும் அண்ணனைக் கேட்காமல் செய்ய மாட்டாள். பக்கத்துத் தோட்டத்திலேயே அவள் பெரியப்பா வீடு என்பதால் தினமும் ஒரு முறையாவது சென்று வருவாள்.

    பெரியப்பா, பெரியம்மா, அண்ணன் எல்லோரையும் பார்த்து விட்டு வீடு திரும்புவதற்கு இரவு மணி 8 ஆகியிருந்தது. அப்பாவுடன் உட்கார்ந்து அன்று நடந்ததெல்லாம், கல்லூரித் தோழிகள் பற்றி என்று ஒரே அரட்டைதான்.

    பாட்டியின் அருகில்தான் அவளுக்கும் படுக்கை. தூக்கம் வரும் வரை ஏதேனும் பழங்கதைகள் பேசிக் கொண்டிருப்பது இருவருக்கும் வழமையான ஒரு பொழுது போக்கு. பாட்டியும் ஊர் கதை அத்தனையும் அறிந்து வைப்பவர். தன் பேத்தியும் எல்லாவற்றையும் பற்றி அறிந்து வைத்திருப்பது நல்லது என்று எண்ணுபவர்.

    “அப்பத்தா, போன வருசம் நம்ம செண்பகம் அத்தையோட பொண்ணு சந்திரா, அதான் எங்கூட படிச்சாளே அப்பத்தா, அவ எப்படி அப்பத்தா செத்திருப்பா. அவ, மண்ணெண்ணை அடுப்பு வெடிச்சி செத்துட்டதாத்தானே நாம நினைச்சிக்கிட்டு இருக்கோம். ஆனா, அப்படி இல்லையாம்.அவ வேணுமின்னே தானே நெருப்பு பத்த வைச்சுக்கிட்டாளாம். ”

    “சரி அதப்பத்தி இப்ப என்னாத்துக்குப் பேசறே? தூங்கறப்ப கண்டதையும் பேசக் கூடாது”.

    “இல்ல அப்பத்தா,செத்துப் போனப்பறம் என்ன ஆவாங்கன்னு சொல்லு ….”

    “நல்லபடியா செத்தா சாமிகிட்ட போவாங்க. உடம்பு போனாலும் ஆன்மா அழியாது. ஒரு குறிப்பிட்ட காலம் வரை இருந்துட்டு அடுத்த பிறவியோ அல்லது சாமி பாதத்துக்கோ போயிடும். அது அவரவர் விதிப்படி நடக்கும். ஆனா, உங்க அத்தை மகள் போல நிறை மாத புள்ளதாச்சியா, புருசன்கிட்ட சண்டை போட்டுக்கிட்டு கிணத்துல விழுந்து செத்துப் போனாப் பாரு அப்படிப் போனாத்தான் ஆவேசம் அடங்காம ஆவியா அலைவாய்ங்க…….அவளும் அப்படித்தேன் கொஞ்ச நாள் அலைஞ்சிக்கிட்டு கிடந்ததா சொல்லுவாய்ங்க….அப்பறம் பூசையெல்லாம் பண்ணி அவளுக்கு சாந்தி பண்ணாங்க.. சரி சரி தூங்கு. காலைல பேசிக்கலாம்.தூங்கும் போது சாமியப் பத்தி மட்டும் தான் நினைக்கோனும் சரியா ஆத்தா….”

    வழமைக்கு மாறாக அன்று வெகு சீக்கிரமே விழித்துக் கொண்டாள் ஒயிலரசி.

    நேரே சமயலரையில் சென்று தாயிடம் வம்பிழுக்க ஆரம்பித்து விட்டாள். தாய்க்கு மிக ஆச்சரியம் மகள் என்றும் இல்லாத திருநாளாக இவ்வளவு சீக்கிரம் எழுந்து விட்டாளே.

    “அம்மா எனக்கு இன்னைக்கு தலைக்கு எண்ணெய் தேய்த்து குளிப்பாட்டுகிறாயா…”என்றாள்

    “என்னடி இது அதிசயம். தலைக்கு குளிக்கறதுனாலே உன் கிட்ட சண்டை போட்டு மாளாது, இன்னைக்கு அதிசயத்துக்கு மேல அதிசயமா இருக்கு.என்னை வேற தலைக்கு குளிச்சி விடச் சொல்லற…மழைதான் கொட்டப் போகுது போ…”

    மகளுக்கு தலைக்கு நல்லெண்ணெய் இளம் சூடாகக் காய்ச்சி அதில் சிறிது வெந்தயமும் போட்டு, அந்த எண்ணையை தலையில் நன்கு தேய்த்து ஊறவிட்டு பிறகு தண்ணீர் காய வைத்து மகளுக்கு தலை தேய்த்து குளிக்க வைத்து சாம்பிராணிப் புகை போட்டு , அதன் மீது பெரிய கூடை கவிழ்த்து , அவளுடைய சுருள் சுருளான, நீண்ட கூந்தலை அதன் மீது விரித்து சாம்பிராணிப் புகை எல்லாப்பக்கமும் பரவும் படிச் செய்து அவள் கூந்தல் காய்ந்ததோடு நறுமண்மாகவும் இருந்தது.

    அம்மாவை இட்லி ஊட்டி விடச் சொல்லி அடம் பிடித்து ஒரு இட்லி சேர்த்தே சாப்பிட்டாள் என்றும் இல்லாதத் திருநாளாக.தனக்கு மிகவும் பிடித்தமான, பளபளவென கருப்பு வண்ண ஜெர்சி பாவாடையும் அதே வண்ண இரவிக்கையும், வெள்ளை சிப்பான் ஜார்ஜெட் தாவணியும் அணிந்து கொண்டு அழகு தேவதையாய் கல்லூரிக்குக் கிளம்பினாள்.

    தன் மகளின் அழகைப் பார்த்து தாய்க்கு மாளாத பெருமை. இருக்காதா பின்னே. அந்த ஊரிலேயே கொடியிடை அம்மன் போல மிக அழகான பெண் இவள்தான். கடைக்குட்டி மஞ்சுவும் அக்காவின் அழகிற்கு சளைத்தவள் அல்ல. தன் மகள்களுக்கு சுத்திப் போட வேண்டும் என்று நினைத்துக் கொண்டாள். வீட்டில் ஒவ்வொரு வியாழன் மற்றும் ஞாயிற்றுக் கிழமைகளில் வாடிக்கையாக நடக்கின்ற ஒன்று.

    ஊரு கண்ணு உறவு கண்ணு

    கோழி கண்ணு கொள்ளி கண்ணு

    அண்டை கண்ணு அயலு கண்ணு

    பல்லி கண்ணு பாம்பு கண்ணு

    தாய் கண்ணு தந்தை கண்ணு

    உற்றார் கண்ணு மற்றார் கண்ணு

    மூளி கண்ணு முட்டை கண்ணு

    எல்லா கண்ணும் மண்ணோடு மணணாப் போக

    என்று சிகப்பு மிளகாய் சுற்றி அடுப்பில் போட்டு அது காரத்துடன், சடசடவென பொரிய, தாய் கண்ணிலோ மகள்களின் கண் திருட்டியெல்லாம் போய் விட்டது என்று பெருமை பொங்கும் !

    பேருந்து நிறுத்தத்தில் தோழி மாலாவுடன் நின்று கொண்டிருக்கும் போது ஏதோ லேசாகத் தலை சுற்றுவது போல இருந்தது ஒயிலாவிற்கு. என்னமோ நடக்கப் போகிறது என்பதை உள்ளுணர்வு உணர்த்திக் கொண்டிருந்தது. எங்கோ மற்றொரு உலகத்தின் வாசல் தனக்காக திறந்து கொண்டிருப்பதாகத் தோன்றியது. கண்கள் இருட்டிக் கொண்டிருந்தது.ஆனாலும் மன உறுதி அதனோடு போராடச் செய்து தலையை சிலிர்த்துக் கொண்டு கண்ணை விரித்து பார்வையை தெளிவு படுத்திக் கொண்டு ஒரு அடி எடுத்து வைக்க முயன்று….தோற்று , மூக்கில் ஏதோ ஊறுவது போன்று தோன்ற துடைக்க எண்ணி கைக்குட்டையை எடுத்து துடைத்து விடடு தன்னிச்சையாக கையைப் பிரித்துப் பார்த்தவள் அந்தக் கைக்குட்டையெல்லாம் இரத்தமாக இருந்ததைப் பார்த்து அதிர்ச்சி அடைந்தாலும், சில்லி மூக்கு உடைந்திருக்கும் சற்று நேரத்தில் சரியாகி விடும் என்று நினைத்துக் கொண்டே, பேருந்து வருவதைப் பார்த்து விட்டு அதை நோக்கிச் செல்ல முடிவெடுத்த வேளையில் அருகிலிருந்த தோழி மாலாவிற்கு, ஒயிலாவின் முகத்தில் இருந்த ஒரு இயலாமை தன்னையும் பின் வாங்கச் செய்தாலும், ஒயிலா அவள் கையையும் பிடித்து இழுத்துக் கொண்டு இருவரும் பேருந்தில் ஏறி உட்கார்ந்தார்கள்.

    உட்கார்ந்து சற்று சாய்ந்து இளைப்பாற நினைத்து மெதுவாகக் கண்ணை மூடியவள் .. அதற்குப் பிறகு நடந்தது எதுவும் அவள் அறிந்தாளில்லை. அருகில் இருந்த மாலா மட்டும் ஒயிலாவிடம் இருந்த பெரும் மாற்றத்தைக் கவனித்துக் கொண்டிருக்கும் போதே, திடுமென மூக்கிலிருந்து இரத்தம் வெள்ளமாக பெருக ஆரம்பித்தது…..மாலாவின் மீது அப்படியே சரிந்து விட்டாள். மாலா போட்ட கூச்சலில் பேருந்தின் ஓட்டுநர் அப்படியே பேருந்தை ஓரம்கட்டி நிறுத்தினார். நடத்துநர் ஓடி வந்து பார்த்து சூழலைப் புரிந்து கொண்டு கூடியிருந்த மாணவர்களை விலக்கி விட்டு நேரே அரசாங்க மருத்துவ மனைக்கு பேருந்தை செலுத்தச் செய்து ……..பின் நடந்ததெல்லாம் சாமான்ய மக்கள் உணர முடியாத ஒரு அமானுஷ்ய நிகழ்வுகள் ஆகிப் போனது! ஆன்மா என்ற ஒன்று அழிவில்லாதது……..உயிர் என்பது என்றுமே அழிவில்லாதது. இதற்கான ஆதாரமே ஒயிலரசியின் சரிதம் ஆனது.

    ஆம், அன்று இரவே ஒயிலரசி தன் அன்புத் தங்கை கனவில் வந்து தோட்டத்தில் உள்ள கன்னிமார் சிலைகளில் மூன்றாவது சிலையில் தாம் இருப்பதாகவும், இனி தாம் குலதெய்வமாக இருந்து சந்ததியினரைக் காக்கப்போவதாகவும் சொன்னதாகக் கூறுகிறாள். சின்ன மகளின் பேச்சைக்கேட்டு அவள் சொன்ன இடத்திற்கு ஓடியவர்கள், அங்கு ஒயிலரசி அணிந்திருந்த கை வளையல்களும், தலை முடியில் கட்டும் ரிப்பன், பொட்டு போன்ற சில பொருட்கள் இருப்பதையும் பார்த்து ஓவென்று அழுதவண்ணம், அவைகளை எடுத்து பத்திரப்படுத்தியவர்கள் அன்று முதல் அவள் சொல்லிச் சென்றவாறு அவளையேத் தங்கள்  குலதெய்வமாக வழிபட ஆரம்பித்தனர்.

     

    முடிவுரை:

    குலதெய்வம் என்பது நம் பெற்றோரைப் போல நம்கூடவே இருந்து வழிகாட்டும் அருட்சக்தியாகக் கருதப்படுகிறது. நமக்கு ஒரு துன்பம் நேருகிறபோது  குலதெய்வம் தான் உடனே முன் வந்து காப்பாற்றும், மற்ற தெய்வங்கள் எல்லாம் அடுத்து தான் வரும் என கிராமங்களில் கூறுவர். வீரத்தோடு வாழ்ந்து வீரமரணம் அடைந்தவர்களுக்கு நடுகல் வழிபாடு செய்வது சங்க காலத்தில் இருந்தே தமிழ்நாட்டில் நடைமுறையில் இருந்தது. அதில் இருந்து குல தெய்வ வழிபாடு உருவாகி இருக்கலாம் என்ற கருத்தும் நிலவுகிறது. குல தெய்வ வழிபாடு கிராம மக்களை நெறிப் படுத்துவதோடு, அவர்களை ஒற்றுமைப்படுத்தவும் செய்கிறது.

    தொழில் நிமித்தமாக பல இடங்களில் பரவி இருக்கும் உறவினர்களை ஒன்று சேர்த்து காணும் வாய்ப்பை குல தெய்வ வழிபாடே ஏற்படுத்திக் கொடுக்கிறது. கணவன் மரணம் அடைந்ததும் உடன்கட்டை ஏறும் பெண்களுக்கும் இறைசக்தி இருப்பதாக நம்பி வழிபடப்பட்டது. தீப்பாய்ச்சியம்மன் இம்முறையில் இருந்து வந்ததாக கூறப்படுகிறது

    குல தெய்வ கோவில்கள் பெரும்பாலும் `வடக்கு அல்லது கிழக்கு திசை நோக்கியே கட்டப்பட்டிருக்கும். ராஜகோபுரம், மாட வீதிகள் என்று இருப்பதில்லை. சிறிய கோவில் அமைப் பாகத்தான் இருக்கும். தமிழ் நாட்டில் உள்ள குல தெய்வங்களில் பெரும்பாலான குல தெய்வங்கள் பெண் தெய்வங்களாக உள்ளதும் குறிப்பிடத்தக்கது.

    குழந்தை பிறந்தவுடன் அதற்கு பெயர் வைப்பது முதல் மொட்டைஅடித்து முடி காணிக்கை செலுத்தி காது குத்துவது வரை அனைத்தும் குலதெய்வத்தின் கோயிலில்தான். குடும்பத்தில் எந்த சுபநிகழ்ச்சி நடந்தாலும், குலதெய்வத்தை முதலில் வணங்கிய பிறகே அதற்கான பணிகளைத் தொடங்குவது வழக்கம். சுப நிகழ்ச்சிகளை துவங்குபவர்கள் உடனே குல தெய்வம் கோயிலுக்கு செல்ல முடியாவிட்டால் குல தெய்வத்தை நினைத்து காணிக்கையை ஒரு மஞ்சள் துணியில் முடிந்து வைத்து, குலதெய்வம் கோயிலுக்கு செல்லும் போது செலுத்தி விடுவது வழக்கம்.

    சில குடும்பங்களில் ஆடு, கோழி, பன்றி போன்ற உயிர் பலி கொடுப்பதும் வழமையாக உள்ளது. குல தெய்வ வழிபாடுகளில் ஆகாச பூஜை என்பது தனிச் சிறப் புடையது. ஆட்டின் ரத்தத்தை சோற்றுடன் கலந்து ஊர் எல்லைக்கு கொண்டு சென்று ஆகாசத்தை நோக்கி எறிவார்கள். அந்த பிரசாதத்தை சிறு தெய்வங்கள் பெற்றுக் கொள்வதாக நம்பப்படுகிறது.  குல தெய்வ வழிபாடு என்பது தமிழர்களின் வாழ்க்கை பண்பாடு மற்றும் பாரம்பரியத்தைப் பிரதிபலிக்கும் கண்ணாடியாக இருப்பதும் குறிப்பிடத்தக்கது.

    குமாரபாளையம், எஸ்.எஸ்.எம். கலைக்கல்லூரியில் நடந்த தமிழ் மரபு அறக்கட்டளை இணைந்து நடத்திய  பன்னாட்டுக் கருத்தரங்கில் இடம்பெற்ற கட்டுரை.

    Share
  • சத்தியத்தை நீங்கள் காத்திருந்தால், சத்தியம் உங்களைக் காத்திருக்கும்: கவிஞர் வைரமுத்து

    –நீலமேகம் ராமலிங்கம் சஹஸ்ரநாமன்.

     

    oru koottu kiliyaga song

    கவிஞர் வைரமுத்து அவர்கள் 1985 ஆம் ஆண்டு , ‘படிக்காதவன்’ திரைப்படத்திற்காக ‘ ஒரு கூட்டுக் கிளியாக, ஒரு தோப்புக் குயிலாக பாடு, பண் பாடு’ என்ற பாடலை எழுதினார். அன்று மகாகவி பாரதியார் ‘குயில்’ பாட்டை எழுதினார். இன்று, கவிஞர் வைரமுத்து ‘ ஒரு கூட்டுக் கிளியாக, ஒரு தோப்புக் குயிலாக பாடு, பண் பாடு’ என்று கூறியுள்ளார்கள். இசை ஞானி இளையராஜா இசை அமைத்திருந்தார். மலேசியா வாசுதேவன் அவர்கள் பாடினார்.

    நாம் செல்லும் வழியில் பல்வேறு இன்னல்கள், தடைகள், பள்ளங்கள் வரலாம். நமது உள்ளத்திலும் சலனங்கள், கவலைகள், பயம் போன்றவை வரலாம். கவிஞர் வைரமுத்து அவர்கள் நேர்மையாகவும், தர்மத்தை மீறாமலும் இருக்க வேண்டும் என்று நயம்படக் கூறுகின்றார்.

    ‘சத்தியத்தை நீங்கள் காத்திருந்தால் சத்தியம் உங்களைக் காத்திருக்கும்’ … கவிஞர் வைரமுத்துவின் சத்திய வரிகள் நிச்சயமாக நமது வாழ்க்கையின் வெற்றிக்கு உறுதுணையாக இருக்கும். இதோ கவிஞர் வைரமுத்துவின் பாடல் வரிகள் …

     

    ஒரு கூட்டுக் கிளியாக, ஒரு தோப்புக் குயிலாக பாடு, பண் பாடு
    இரை தேடப் பறந்தாலும் திசை மாறித் திரிந்தாலும் கூடு, ஒரு கூடு
    என்னென்ன தேவைகள் அண்ணனைக் கேளுங்கள்

    செல்லும் வழியெங்கெங்கும் பள்ளம் வரலாம்
    உள்ளம் எதிர்பாராமல் வெள்ளம் வரலாம்
    நேர்மை அது மாறாமல் தர்மம் அதை மீறாமல்
    நாளும் நடை போடுங்கள் ஞானம் பெறலாம்

    சத்தியத்தை நீங்கள் காத்திருந்தால்
    சத்தியம் உங்களைக் காத்திருக்கும்
    தாய் தந்த அன்புக்கும் நான் தந்த பண்புக்கும்
    பூமாலை காத்திருக்கும்

    நெல்லின் விதை போடாமல் நெல்லும் வருமா
    வேர்வை அது சிந்தாமல் வெள்ளிப் பணமா
    வெள்ளை இளஞ் சிட்டுக்கள் வெற்றிக் கொடி கட்டுங்கள்
    சொர்க்கம் அதைத் தட்டுங்கள், விண்ணைத் தொடுங்கள்

    பேருக்கு வாழ்வது வாழ்க்கையில்லை
    ஊருக்கு வாழ்வதில் தோல்வியில்லை
    ஆனந்தக் கண்ணீரில் அபிஷேகம் நான் செய்தேன்
    என் கண்ணில் ஈரமில்லை

    காணொளி: https://youtu.be/wJ9AnV-yjeA

    Share
  • கேசவ் வண்ணம் – கிரேசி எண்ணம்

    60c480de-5450-4038-a990-9a5731f843fd

    ”நெஞ்சில் திருமகள் கொஞ்சிக் குலாவிட,
    பஞ்சணைப் பாம்பில் படுத்தவனின், -அஞ்சலென
    கஞ்சனைக் கொன்றவனின், கோகுலம் காத்தவனின்,
    செஞ்சரண் சேர்தல் சிலிர்ப்பு’’….கிரேசி மோகன்….

    Share
  • இதுதான் வாழ்க்கை!

    -மீ.விசுவநாதன்

    பொதிய மலைக்குப் போறேன் – என்
    புருசங் கூட நானும்!
    அதிக ஆசை இல்ல – சேந்து
    அருவி குளிச்சி வாறேன்!

    மஞ்சப் பூசி நானும் – அந்த
    மதகு நீரில் நிப்பேன்!
    பிஞ்சு விரலப் பிடிச்சு – அவர்
    பேசச் சிலையா நிப்பேன்!

    கடல முட்டாய் வாயில் – வச்சுக்
    கடிச்சுக் கடிச்சுத் தருவேன்!
    சொடல மாடன் முன்னே – அவர்
    சொகத்த வேண்டிக் கிடுவேன்!

    ஆத்துத் தண்ணி போல – தேன்
    அன்பு சொட்டும் புருசன்!
    தோத்துப் போக மாட்டேன் – அவர்
    தோளக் கட்டி நடப்பேன்!

    ஒண்ணு ரெண்டு புள்ள – அவர்
    கொணத்தப் போல பெறுவேன்!
    மண்ணு வெளங்க ரெண்டும் – நல்ல
    மனுச னாக்கி விடுவேன்!

     

     

    Share
  • இங்கிலாந்திலிருந்து ஒரு மடல்….. (188)

    — சக்தி சக்திதாசன்.

    அன்பினியவர்களே!

    அன்பான வணக்கங்கள்.

    அடுத்தொரு வாரத்திலே உங்களுடன் மடல் வாயிலாக எனது மனதைத் திறப்பதினால் மகிழ்வடைகிறேன்.

    எமது வாழ்க்கை ஒரு புதிரானது, புரிய முடியாதது. வரவை அறிந்த எமக்குச் செல்லும் இடமோ அன்றி எப்போது செல்லப்போகிறோம் என்பதுவோ விடை காண முடியாத வினாவாக, அறியாத கருப்பொருளாகவே எப்போதும் இருக்கிறது.அதனால்தானோ என்னவோ எமது வாழ்வும் மிகவும் சுவையாக இருக்கிறது. ஆரம்பமும் தெரிந்து முடிவும் தெரிந்துவிட்டால் பின்பு அதிலே என்ன ஆர்வம் இருக்கப் போகிறது ?

    அன்னை, தந்தை என்னும் இருவரின் அன்பான பாதுகாப்புச் சிறையை விட்டு சிறகு விரித்தப் பறவை கூட்டை விட்டுப்பறப்பது போலப் புலம் பெயர்ந்தவன் நான். அந்நியதேசத்து மண்ணில் கால்பதிக்கும் போது என் தாய்மண்ணில்என்னைப் பெற்றவர்கள் உண்டு எனும் ஒரு செல்வத் திளைப்பு மனதில் இருந்தது.

    இன்று நாற்பத்தியொரு வருடங்கள் உருண்டு விட்ட நிலையிலே என் தாயும், தந்தையும் இந்த அகிலத்தை விட்டு அகன்றபின்பு நானும் தந்தை எனும் நிலையில் வாழ்வின் பரிமாணங்களை எண்ணிப்பார்க்கிறேன். வாழ்க்கை பல்வேறுபடிமானங்களில் எனக்குக் கொடுத்த பல்வேறு வேடங்களை எண்ணிப் பார்க்கிறேன்.

    அவையனைத்தும் அத்தருணங்களில் வேடங்களாக, எண்ணிப் பார்க்க முடியாத யதார்த்தங்களாக இருந்தன. ஆனால்காலம் கடந்த பின்பு அச்சமயத்திலிருந்து என்னை விலக்கி வைத்து அத்தருணங்களை மீண்டும் அலசும் போது அவைவேடங்களாகத்தான் தென்படுகின்றன.

    மனச்சுத்தம் இல்லாதாரோடு மனச்சுத்தம் கொண்டு பழகும்போது, ஏனோ மனச்சுத்தம் கொண்டவர்களேஏமாளிகளாக்கப் படுவதே வழக்கமாகிறது. ஆனால் அது யாருடைய தோல்வி என்பது என்பதும் சர்ச்சைக்குரியதே.

    வாழ்வில் கடந்து வந்த நிலைகளில், கடந்து வந்த பாதைகளில் என்றும் மாறாது நிலைத்திருப்பது என்னவென்றுஎண்ணிப்பார்க்கிறேன். “உண்மை அன்பு”. ஆமாம் … அது ஒன்றுதான் என்றும் மாறாமல் எம்முடன் கூட வருவது.அவ்வுண்மை அன்பைத் தருபவர் உறவினர்களாகத்தான் இருக்க வேண்டும் என்பதில்லை யாராகவும் கூட இருக்கலாம்.அவ்வன்பு கடைசிவரை எம்முடன் கூடவரும் என்பதுவே உண்மை.

    நான் ஓரிடத்தில் படித்த கதையொன்று என் நினைவுக்கு வருகிறது. அதை உங்களுடன் பகிர்ந்து கொள்ள வேண்டும் போல்தோன்றுகிறது…

    holding his handதன் தந்தையைத் தேடி வந்த ஒரு தளர்ந்து போன இராணுவவீரனை வயதான மனிதரிடம் அழைத்துச் சென்றாள் ஒருநர்ஸ். “இதோ உங்கள் மகன் வந்திருக்கிறான்” என்றபடியே அவன் கைகளைப் பிடித்து அந்த வயதானவரின் கைகளில்வைக்கிறாள். சரியாக எதையும் பார்க்க முடியாத அந்தப் பெரியவர் அவனைப் பார்க்க முயன்று பார்க்க முடியாமல்அவன் கைகளை இறுகப் பற்றிக்கொள்கிறார். பாசத்தோடு பற்றிக் கொண்ட கைகளை இறுகப்பிடித்துத் தந்தை மீதிருந்தபாசத்தைக் காட்டுகிறது அவ்விளைஞனின் விரல்கள்.

    மறுபடி நர்ஸ் வரும்போது அவரின் கைகளைப் பற்றியபடி அருகிலிருந்த கதிரையில் அமர்ந்திருந்த அவ்விளைஞன்அவருக்குக் கனிவான ஆறுதல் வார்த்தைகள் சொல்லிக் கொண்டிருந்தான். மீண்டும் ஒருமணிநேரம் கழித்து வந்த நர்ஸ்அவ்விளைஞன் தூங்காமல் அவருக்கு அருகிருந்தபடியே ஆறுதல் சொல்லிக் கொண்டிருந்ததைக் கண்டு, “சிறிதுநேரம்ஓய்வெடுத்து விட்டு வரக்கூடாதா ? “ என்றாள். அவ்விளைஞனோ அவளைச் சட்டை செய்யாது தொடர்ந்துஅவ்வயதானவருக்கு ஆறுதல் சொல்லிக் கொண்டிருந்தான். காலைநேரம் வந்தது அவ்விளைஞனின் கைகளைப்பற்றியபடியே அவ்வயதானவரின் உயிர் பிரிந்தது.

    அங்கு வந்த நர்ஸ் , “கவலைப்படாதே கடைசிநேரத்தில் நீ உன் தந்தையுடன் இத்தனை நேரம் செலவு செய்தது உன்பாக்கியமே” என்று ஆறுதல் கூறினாள். அதற்கு அவ்விளைஞன், “யார் அந்த மனிதர் ? “ என்று கேட்டான். திகைத்துவிட்டாள் நர்ஸ். “அவர் உன் தந்தை இல்லையா?“ என்று கேட்டாள். “இல்லையே” என்று பதிலளித்தான் அவ்விளைஞன். “உன்தந்தையில்லாவிட்டால் நான் உன் தந்தை என்று அவரிடம் அழைத்துச் சென்றபோதே என்னிடம் சொல்லியிருக்கலாமே ! “என்றாள். அதற்கு அவன், “அவர் என் தந்தையில்லை. ஆனால் அவர் தனது மகனை எதிர்பார்த்திருந்தார். அவருக்கு அவர்மகனைக்கூட அடையாளம் காண முடியவில்லை, அந்நிலையில் அவரது கடைசி நேரத்தில் அவர் நம்பிக்கையைச்சிதைக்க நான் விரும்பவில்லை ” என்றான். அந்த நர்ஸ் தனது செவிகளையே நம்ப முடியாமல் அவனை ஒருவித புதுக்கனிவுடன் பார்த்தாள்.

    இது ஒரு வெறும் கதையே ! ஆனால் அன்பு குடிகொண்டவர் நெஞ்சில் அதன் தாக்கம் எப்போதும் இருக்கத்தான் செய்யும்.அவ்வன்பினை அவர்களது பலவீனமாகக் கருதி பலர் அவர்களைத் தாம் ஏமாற்றியதாக எண்ணலாம். ஆனால்உண்மையில் ஏமாற்றப்படுவது அவர்களே.

    எனது இந்தப் புலம்பெயர் வாழ்க்கையில் நான் உண்மை அன்பினை எதிர் கொண்டது சிற்சில பொழுதுகளே ! ஆனால்அவை வாழ்வில் எனக்குப் புகட்டிய அனுபவப் பாடங்களோ ஆயிரமாயிரம்.

    அன்பு ஒன்றே இறுதிவரை எம்முடன் கூடவரும் செல்வம்.

    மீண்டும் அடுத்த மடலில்
    அன்புடன்
    சக்தி சக்திதாசன்

    http://www.thamilpoonga.com
    http://www.facebook.com/sakthi.sakthithasan

    Share
  • திருக்குறளுக்குப் புது விளக்கம் – 33

    – புலவர் இரா. இராமமூர்த்தி.

    நம் வாழ்க்கையின் பெரும்பகுதி உண்பதற்கான உணவுப்பொருளைத் தேடிச் சேர்த்துக் கொள்வதிலும், அவற்றைப் பக்குவப்படுத்தி உண்பதிலுமே கழிந்து விடுகிறது; அத்துடன் வாழ்நாளின் பாதிக்காலம் உறங்குவதிலேயே கழிந்து விடுகிறது! இதனை,

    ”வேதநூற் பிராயம் நூறு மனிதர்தாம் வகுத்தாரேனும்
    பாதியும் உறங்கிப் போகும்!”

    என்று தொண்டரடிப்பொடியாழ்வார் பாசுரம் கூறுகிறது. மேலும் இதனை,

    ”யோசிக்கும் வேளையில் பசிதீர உண்பதும்
    உறங்குவதுமாகக் கழியும் ”

    என்று தாயுமானவரும் பாடுகிறார்! மேலும் உணவு குறித்து விருந்தோம்பல், நாணுடைமை, ஈகை, புலால் மறுத்தல், புணர்ச்சியின் மகிழ்தல், ஊடல் உவகை ஆகிய அதிகாரங்களில் வள்ளுவர் பாடுகிறார். இப்படி உண்பதைக் குறித்தும், உண்ட உணவு செரிப்பதைக் குறித்தும் திருவள்ளுவர் ஒரே அதிகாரத்தில் ஆறு குறட்பாக்களில் விளக்குகிறார்! அந்த அதிகாரம், பொருட்பாலில் உள்ள ”மருந்து” என்ற அதிகாரமாகும்! இந்த அதிகாரத்தில்,

    ”அருந்தியது அற்றது போற்றி உணின்” என்றும்
    ”அற்றால் அளவறிந்து உண்க” என்றும்
    “அற்றதறிந்து கடைப்பிடித்து மாறல்ல துய்க்க” என்றும்
    ”மாறுபாடில்லாத உண்டி மறுத்து உண்ணின்” என்றும்
    ”இழிவறிந்து உண்பான் கண் இன்பம் போல்” என்றும்
    ”தீயளவின்றித் தெரியான் பெரிதுண்ணின்” என்றும்
    ஆறு இடங்களில் உணவு குறித்து, ”மருந்து” என்ற ஒரே அதிகாரத்தில் கூறுகிறார்!

    இதற்குக் காரணம், அண்மையில் எல்லாரும் கூறும் ”உணவே மருந்து; மருந்தே உணவு” என்ற புதிய
    மருத்துவ முறையின் பழமையை உணர்த்துவதற்கே ஆகும்!

    மருந்து என்ற அதிகாரத்தின் முதற் குறளாகிய,

    ”மிகினும் குறையினும் நோய் செய்யும் நூலோர்
    வளிமுதலா எண்ணிய மூன்று!” (941)

    என்ற பாடலுடன் சற்றும் தொடர்பு இல்லாதவை போலவே அடுத்த ஆறு குறட்பாக்களையும் கூறுகிறார்! இவற்றை அடுத்த எட்டாம் குறட்பாவில்,

    ”நோய்நாடி நோய்முதல் நாடி அதுதணிக்கும்
    வாய்நாடி வாய்ப்பச் செயல்!” (948)

    என்ற பாடலில் மருந்து என்ற அதிகாரப் பொருளுடன் நெருங்கிய, மருத்துவம் குறித்த கருத்துக்களைக் கூறுகிறார்! அடுத்த இரண்டு குறட்பாக்களும் மருத்துவம் குறித்தவையே ஆகும்!

    இடையில் உள்ள ஆறு குறட்பாக்களும் நம் நோய்க்குக் காரணமாக விளங்கும் உணவினைப் பற்றியவை ஆகும்! நாம் உண்ணும் உணவு நம் உடலுக்கு இசைந்த வகையிலேயே இருக்க வேண்டும்; இல்லாவிட்டால், இந்த உணவே நம்முடைய நோய்களைப் பெருக்கித் துன்பம் தந்து விடும்! நம் உடலின் இயக்கத்துக்குத் தேவையான மூவகைப்பட்ட நாடிகளை நாம் உண்ணும் உணவே கட்டுப் படுத்துகிறது. இதனையே முதற்பாடலில் திருவள்ளுவர், ”வளி முதலா எண்ணிய மூன்று” என்கிறார். அவை வாதநாடி, பித்தநாடி, சிலேத்தும நாடி என்பனவாகும்! இந்த நாடிகள், நமக்குத் தேவையான வாயு, வெப்பம், குளிர்ச்சி ஆகியவற்றைக் குறித்தவை யாகும். இந்த வாயுவோ, வெப்பமோ, குளிர்ச்சியோ நம் உடல் நலத்துக்குத் தேவையான அளவை விடக் குறைந்தாலோ, கூடினாலோ நமக்கு நோயை வரவழைத்து விடும்!

    இனி, ”நோய் நாடி” எனத் தொடங்கும் குறட்பாவின் புதிய பொருளை இங்கே காண்போம்! இந்தக் குறட்பாவில் ”நாடி” என்ற சொல் ஆராய்ந்து என்ற பொருளைத் தருகிறது. ‘நோய் நாடி’ என்பது நோயின் அடையாளங்களை ஆராய்ந்து என்ற பொருளையும் (symptoms), அடுத்து ‘நோய் முதல் நாடி’ என்பது,நோய்க்குக் காரணமான உணவு, முதலான வற்றை ஆராய்ந்துஎன்ற பொருளையும் (diognosis), ”அது தணிக்கும் வாய் நாடி” என்பது, நோயைத் தீர்க்கும் மருத்துவ முறைகளை ஆராய்ந்துஎன்ற பொருளையும் (medications) தருகின்றது. உணவு உடலுக்குள் சென்று குடலில் செரித்து, அதன் சத்துக்கள் திசுக்களில் எரிந்து உடலில் கலப்பதை இன்றைய மருத்துவ அறிவியல் கூறுகிறது! இதனை,வள்ளுவர் ”தீயளவு” என்கிறார். இத்தொடர் உணவு உடலினுள், உயிர்வளியுடன் எரிக்கப்படும் தீயின் அளவைக் குறிப்பதாகும். ”தீயளவின்றித் தெரியான் பெரிதுண்ணின்” என்ற தொடர் அரியதொரு பொருளைத் தருகிறது!

    அத்துடன் இக்குறளில் ‘நாடி’ என்ற சொல் மூன்று முறை வந்தமையால் அவை குறிப்பாக வளி முதலாக எண்ணப்படும் மூவகை நாடிகளைக் குறிக்கின்றன!
    உயிர்க்காற்று உறுப்புக்களின் வழியே சென்று, அவற்றின் இயக்கத்தைத் துடிப்புடன் இணைக்கிறது! திசுக்களில் உணவுச்சத்து கலந்து, எரியும் வெப்பத்தில் சுரக்கும் பித்தநீரளவால் இயங்கும் வெப்பநாடித் துடிப்பு, நமது உடலியக்கத்தைக் கட்டுப் படுத்துகிறது!
    அடுத்து உயிர்க்காற்று நுரையீரலில் கரிவளியைப் பிரிக்கும்போது ஏற்படும் சளி அடைப்பினால் சிலேத்தும நாடியின் துடிப்பு மிகுந்தோ, குறைந்தோ நோய்க்கு இடம் தருகிறது!
    இவற்றை உள்ளடக்கிய மூவகை நாடித் துடிப்புகளையே இக்குறளில் உள்ள நாடி என்ற சொல் குறிப்பாகப் புலப்படுத்துகிறார்!.

    அடுத்து வரும் இரண்டு குறட்பாக்களிலும் மருத்துவ நெறி முறைகளை விரிவாகக் கூறுகிறார். ‘உற்றான்அளவு, பிணியளவு, நோயின்அளவு இவற்றை நோயின் வரலாற்றுடன் கற்றவனே மருத்துவன்!’ என்றும்,’நோயாளி, நோயைப் போக்கும் மருத்துவன், மருந்து, மருத்துவருடன் இருக்கும் செவிலியர் ஆகிய நான்குவகைக்குள் மருத்துவமே அடங்குகிறது!’ என்றும் வள்ளுவப் பெருந்தகை கூறுவதை எக்காலத்திலும் ஏற்றுப் போற்றலாம்!

    Share
  • கேசவ் வண்ணம் – கிரேசி எண்ணம்

    e882d558-5529-4307-bb82-9267ef311d58
    Krishna Bringing The Kingdom Of Heaven To Earth….

    “கூரை உறியேறி, கோகுலத்தில் கொள்ளையாய்,
    மோரைத் தயிர்வெண்ணெய் மொஸ்கிய, -சீராயன்,
    மைவண்டு மேனியன், மானத்திற்க்(கு) ஆணையாய்,
    வைகுண் டமேவையம் வா”….கிரேசி மோகன்….

    மானத்திற்கு-வானத்திற்க்கு கலோக்கியலாய்..

    Share