இங்கிலாந்திலிருந்து ஒரு மடல்….. (188)

— சக்தி சக்திதாசன்.

அன்பினியவர்களே!

அன்பான வணக்கங்கள்.

அடுத்தொரு வாரத்திலே உங்களுடன் மடல் வாயிலாக எனது மனதைத் திறப்பதினால் மகிழ்வடைகிறேன்.

எமது வாழ்க்கை ஒரு புதிரானது, புரிய முடியாதது. வரவை அறிந்த எமக்குச் செல்லும் இடமோ அன்றி எப்போது செல்லப்போகிறோம் என்பதுவோ விடை காண முடியாத வினாவாக, அறியாத கருப்பொருளாகவே எப்போதும் இருக்கிறது.அதனால்தானோ என்னவோ எமது வாழ்வும் மிகவும் சுவையாக இருக்கிறது. ஆரம்பமும் தெரிந்து முடிவும் தெரிந்துவிட்டால் பின்பு அதிலே என்ன ஆர்வம் இருக்கப் போகிறது ?

அன்னை, தந்தை என்னும் இருவரின் அன்பான பாதுகாப்புச் சிறையை விட்டு சிறகு விரித்தப் பறவை கூட்டை விட்டுப்பறப்பது போலப் புலம் பெயர்ந்தவன் நான். அந்நியதேசத்து மண்ணில் கால்பதிக்கும் போது என் தாய்மண்ணில்என்னைப் பெற்றவர்கள் உண்டு எனும் ஒரு செல்வத் திளைப்பு மனதில் இருந்தது.

இன்று நாற்பத்தியொரு வருடங்கள் உருண்டு விட்ட நிலையிலே என் தாயும், தந்தையும் இந்த அகிலத்தை விட்டு அகன்றபின்பு நானும் தந்தை எனும் நிலையில் வாழ்வின் பரிமாணங்களை எண்ணிப்பார்க்கிறேன். வாழ்க்கை பல்வேறுபடிமானங்களில் எனக்குக் கொடுத்த பல்வேறு வேடங்களை எண்ணிப் பார்க்கிறேன்.

அவையனைத்தும் அத்தருணங்களில் வேடங்களாக, எண்ணிப் பார்க்க முடியாத யதார்த்தங்களாக இருந்தன. ஆனால்காலம் கடந்த பின்பு அச்சமயத்திலிருந்து என்னை விலக்கி வைத்து அத்தருணங்களை மீண்டும் அலசும் போது அவைவேடங்களாகத்தான் தென்படுகின்றன.

மனச்சுத்தம் இல்லாதாரோடு மனச்சுத்தம் கொண்டு பழகும்போது, ஏனோ மனச்சுத்தம் கொண்டவர்களேஏமாளிகளாக்கப் படுவதே வழக்கமாகிறது. ஆனால் அது யாருடைய தோல்வி என்பது என்பதும் சர்ச்சைக்குரியதே.

வாழ்வில் கடந்து வந்த நிலைகளில், கடந்து வந்த பாதைகளில் என்றும் மாறாது நிலைத்திருப்பது என்னவென்றுஎண்ணிப்பார்க்கிறேன். “உண்மை அன்பு”. ஆமாம் … அது ஒன்றுதான் என்றும் மாறாமல் எம்முடன் கூட வருவது.அவ்வுண்மை அன்பைத் தருபவர் உறவினர்களாகத்தான் இருக்க வேண்டும் என்பதில்லை யாராகவும் கூட இருக்கலாம்.அவ்வன்பு கடைசிவரை எம்முடன் கூடவரும் என்பதுவே உண்மை.

நான் ஓரிடத்தில் படித்த கதையொன்று என் நினைவுக்கு வருகிறது. அதை உங்களுடன் பகிர்ந்து கொள்ள வேண்டும் போல்தோன்றுகிறது…

holding his handதன் தந்தையைத் தேடி வந்த ஒரு தளர்ந்து போன இராணுவவீரனை வயதான மனிதரிடம் அழைத்துச் சென்றாள் ஒருநர்ஸ். “இதோ உங்கள் மகன் வந்திருக்கிறான்” என்றபடியே அவன் கைகளைப் பிடித்து அந்த வயதானவரின் கைகளில்வைக்கிறாள். சரியாக எதையும் பார்க்க முடியாத அந்தப் பெரியவர் அவனைப் பார்க்க முயன்று பார்க்க முடியாமல்அவன் கைகளை இறுகப் பற்றிக்கொள்கிறார். பாசத்தோடு பற்றிக் கொண்ட கைகளை இறுகப்பிடித்துத் தந்தை மீதிருந்தபாசத்தைக் காட்டுகிறது அவ்விளைஞனின் விரல்கள்.

மறுபடி நர்ஸ் வரும்போது அவரின் கைகளைப் பற்றியபடி அருகிலிருந்த கதிரையில் அமர்ந்திருந்த அவ்விளைஞன்அவருக்குக் கனிவான ஆறுதல் வார்த்தைகள் சொல்லிக் கொண்டிருந்தான். மீண்டும் ஒருமணிநேரம் கழித்து வந்த நர்ஸ்அவ்விளைஞன் தூங்காமல் அவருக்கு அருகிருந்தபடியே ஆறுதல் சொல்லிக் கொண்டிருந்ததைக் கண்டு, “சிறிதுநேரம்ஓய்வெடுத்து விட்டு வரக்கூடாதா ? “ என்றாள். அவ்விளைஞனோ அவளைச் சட்டை செய்யாது தொடர்ந்துஅவ்வயதானவருக்கு ஆறுதல் சொல்லிக் கொண்டிருந்தான். காலைநேரம் வந்தது அவ்விளைஞனின் கைகளைப்பற்றியபடியே அவ்வயதானவரின் உயிர் பிரிந்தது.

அங்கு வந்த நர்ஸ் , “கவலைப்படாதே கடைசிநேரத்தில் நீ உன் தந்தையுடன் இத்தனை நேரம் செலவு செய்தது உன்பாக்கியமே” என்று ஆறுதல் கூறினாள். அதற்கு அவ்விளைஞன், “யார் அந்த மனிதர் ? “ என்று கேட்டான். திகைத்துவிட்டாள் நர்ஸ். “அவர் உன் தந்தை இல்லையா?“ என்று கேட்டாள். “இல்லையே” என்று பதிலளித்தான் அவ்விளைஞன். “உன்தந்தையில்லாவிட்டால் நான் உன் தந்தை என்று அவரிடம் அழைத்துச் சென்றபோதே என்னிடம் சொல்லியிருக்கலாமே ! “என்றாள். அதற்கு அவன், “அவர் என் தந்தையில்லை. ஆனால் அவர் தனது மகனை எதிர்பார்த்திருந்தார். அவருக்கு அவர்மகனைக்கூட அடையாளம் காண முடியவில்லை, அந்நிலையில் அவரது கடைசி நேரத்தில் அவர் நம்பிக்கையைச்சிதைக்க நான் விரும்பவில்லை ” என்றான். அந்த நர்ஸ் தனது செவிகளையே நம்ப முடியாமல் அவனை ஒருவித புதுக்கனிவுடன் பார்த்தாள்.

இது ஒரு வெறும் கதையே ! ஆனால் அன்பு குடிகொண்டவர் நெஞ்சில் அதன் தாக்கம் எப்போதும் இருக்கத்தான் செய்யும்.அவ்வன்பினை அவர்களது பலவீனமாகக் கருதி பலர் அவர்களைத் தாம் ஏமாற்றியதாக எண்ணலாம். ஆனால்உண்மையில் ஏமாற்றப்படுவது அவர்களே.

எனது இந்தப் புலம்பெயர் வாழ்க்கையில் நான் உண்மை அன்பினை எதிர் கொண்டது சிற்சில பொழுதுகளே ! ஆனால்அவை வாழ்வில் எனக்குப் புகட்டிய அனுபவப் பாடங்களோ ஆயிரமாயிரம்.

அன்பு ஒன்றே இறுதிவரை எம்முடன் கூடவரும் செல்வம்.

மீண்டும் அடுத்த மடலில்
அன்புடன்
சக்தி சக்திதாசன்

http://www.thamilpoonga.com
http://www.facebook.com/sakthi.sakthithasan

உங்கள் கருத்துகளைத் தெரிவிக்க