– புலவர் இரா. இராமமூர்த்தி.

நம் வாழ்க்கையின் பெரும்பகுதி உண்பதற்கான உணவுப்பொருளைத் தேடிச் சேர்த்துக் கொள்வதிலும், அவற்றைப் பக்குவப்படுத்தி உண்பதிலுமே கழிந்து விடுகிறது; அத்துடன் வாழ்நாளின் பாதிக்காலம் உறங்குவதிலேயே கழிந்து விடுகிறது! இதனை,

”வேதநூற் பிராயம் நூறு மனிதர்தாம் வகுத்தாரேனும்
பாதியும் உறங்கிப் போகும்!”

என்று தொண்டரடிப்பொடியாழ்வார் பாசுரம் கூறுகிறது. மேலும் இதனை,

”யோசிக்கும் வேளையில் பசிதீர உண்பதும்
உறங்குவதுமாகக் கழியும் ”

என்று தாயுமானவரும் பாடுகிறார்! மேலும் உணவு குறித்து விருந்தோம்பல், நாணுடைமை, ஈகை, புலால் மறுத்தல், புணர்ச்சியின் மகிழ்தல், ஊடல் உவகை ஆகிய அதிகாரங்களில் வள்ளுவர் பாடுகிறார். இப்படி உண்பதைக் குறித்தும், உண்ட உணவு செரிப்பதைக் குறித்தும் திருவள்ளுவர் ஒரே அதிகாரத்தில் ஆறு குறட்பாக்களில் விளக்குகிறார்! அந்த அதிகாரம், பொருட்பாலில் உள்ள ”மருந்து” என்ற அதிகாரமாகும்! இந்த அதிகாரத்தில்,

”அருந்தியது அற்றது போற்றி உணின்” என்றும்
”அற்றால் அளவறிந்து உண்க” என்றும்
“அற்றதறிந்து கடைப்பிடித்து மாறல்ல துய்க்க” என்றும்
”மாறுபாடில்லாத உண்டி மறுத்து உண்ணின்” என்றும்
”இழிவறிந்து உண்பான் கண் இன்பம் போல்” என்றும்
”தீயளவின்றித் தெரியான் பெரிதுண்ணின்” என்றும்
ஆறு இடங்களில் உணவு குறித்து, ”மருந்து” என்ற ஒரே அதிகாரத்தில் கூறுகிறார்!

இதற்குக் காரணம், அண்மையில் எல்லாரும் கூறும் ”உணவே மருந்து; மருந்தே உணவு” என்ற புதிய
மருத்துவ முறையின் பழமையை உணர்த்துவதற்கே ஆகும்!

மருந்து என்ற அதிகாரத்தின் முதற் குறளாகிய,

”மிகினும் குறையினும் நோய் செய்யும் நூலோர்
வளிமுதலா எண்ணிய மூன்று!” (941)

என்ற பாடலுடன் சற்றும் தொடர்பு இல்லாதவை போலவே அடுத்த ஆறு குறட்பாக்களையும் கூறுகிறார்! இவற்றை அடுத்த எட்டாம் குறட்பாவில்,

”நோய்நாடி நோய்முதல் நாடி அதுதணிக்கும்
வாய்நாடி வாய்ப்பச் செயல்!” (948)

என்ற பாடலில் மருந்து என்ற அதிகாரப் பொருளுடன் நெருங்கிய, மருத்துவம் குறித்த கருத்துக்களைக் கூறுகிறார்! அடுத்த இரண்டு குறட்பாக்களும் மருத்துவம் குறித்தவையே ஆகும்!

இடையில் உள்ள ஆறு குறட்பாக்களும் நம் நோய்க்குக் காரணமாக விளங்கும் உணவினைப் பற்றியவை ஆகும்! நாம் உண்ணும் உணவு நம் உடலுக்கு இசைந்த வகையிலேயே இருக்க வேண்டும்; இல்லாவிட்டால், இந்த உணவே நம்முடைய நோய்களைப் பெருக்கித் துன்பம் தந்து விடும்! நம் உடலின் இயக்கத்துக்குத் தேவையான மூவகைப்பட்ட நாடிகளை நாம் உண்ணும் உணவே கட்டுப் படுத்துகிறது. இதனையே முதற்பாடலில் திருவள்ளுவர், ”வளி முதலா எண்ணிய மூன்று” என்கிறார். அவை வாதநாடி, பித்தநாடி, சிலேத்தும நாடி என்பனவாகும்! இந்த நாடிகள், நமக்குத் தேவையான வாயு, வெப்பம், குளிர்ச்சி ஆகியவற்றைக் குறித்தவை யாகும். இந்த வாயுவோ, வெப்பமோ, குளிர்ச்சியோ நம் உடல் நலத்துக்குத் தேவையான அளவை விடக் குறைந்தாலோ, கூடினாலோ நமக்கு நோயை வரவழைத்து விடும்!

இனி, ”நோய் நாடி” எனத் தொடங்கும் குறட்பாவின் புதிய பொருளை இங்கே காண்போம்! இந்தக் குறட்பாவில் ”நாடி” என்ற சொல் ஆராய்ந்து என்ற பொருளைத் தருகிறது. ‘நோய் நாடி’ என்பது நோயின் அடையாளங்களை ஆராய்ந்து என்ற பொருளையும் (symptoms), அடுத்து ‘நோய் முதல் நாடி’ என்பது,நோய்க்குக் காரணமான உணவு, முதலான வற்றை ஆராய்ந்துஎன்ற பொருளையும் (diognosis), ”அது தணிக்கும் வாய் நாடி” என்பது, நோயைத் தீர்க்கும் மருத்துவ முறைகளை ஆராய்ந்துஎன்ற பொருளையும் (medications) தருகின்றது. உணவு உடலுக்குள் சென்று குடலில் செரித்து, அதன் சத்துக்கள் திசுக்களில் எரிந்து உடலில் கலப்பதை இன்றைய மருத்துவ அறிவியல் கூறுகிறது! இதனை,வள்ளுவர் ”தீயளவு” என்கிறார். இத்தொடர் உணவு உடலினுள், உயிர்வளியுடன் எரிக்கப்படும் தீயின் அளவைக் குறிப்பதாகும். ”தீயளவின்றித் தெரியான் பெரிதுண்ணின்” என்ற தொடர் அரியதொரு பொருளைத் தருகிறது!

அத்துடன் இக்குறளில் ‘நாடி’ என்ற சொல் மூன்று முறை வந்தமையால் அவை குறிப்பாக வளி முதலாக எண்ணப்படும் மூவகை நாடிகளைக் குறிக்கின்றன!
உயிர்க்காற்று உறுப்புக்களின் வழியே சென்று, அவற்றின் இயக்கத்தைத் துடிப்புடன் இணைக்கிறது! திசுக்களில் உணவுச்சத்து கலந்து, எரியும் வெப்பத்தில் சுரக்கும் பித்தநீரளவால் இயங்கும் வெப்பநாடித் துடிப்பு, நமது உடலியக்கத்தைக் கட்டுப் படுத்துகிறது!
அடுத்து உயிர்க்காற்று நுரையீரலில் கரிவளியைப் பிரிக்கும்போது ஏற்படும் சளி அடைப்பினால் சிலேத்தும நாடியின் துடிப்பு மிகுந்தோ, குறைந்தோ நோய்க்கு இடம் தருகிறது!
இவற்றை உள்ளடக்கிய மூவகை நாடித் துடிப்புகளையே இக்குறளில் உள்ள நாடி என்ற சொல் குறிப்பாகப் புலப்படுத்துகிறார்!.

அடுத்து வரும் இரண்டு குறட்பாக்களிலும் மருத்துவ நெறி முறைகளை விரிவாகக் கூறுகிறார். ‘உற்றான்அளவு, பிணியளவு, நோயின்அளவு இவற்றை நோயின் வரலாற்றுடன் கற்றவனே மருத்துவன்!’ என்றும்,’நோயாளி, நோயைப் போக்கும் மருத்துவன், மருந்து, மருத்துவருடன் இருக்கும் செவிலியர் ஆகிய நான்குவகைக்குள் மருத்துவமே அடங்குகிறது!’ என்றும் வள்ளுவப் பெருந்தகை கூறுவதை எக்காலத்திலும் ஏற்றுப் போற்றலாம்!

பதிவாசிரியரைப் பற்றி

1 thought on “திருக்குறளுக்குப் புது விளக்கம் – 33

  1. தெளிவாகவும், விரிவாகவும் திருக்குறளுக்கு விளக்கம் தருகிற புலவர் ஐயாவின் இந்தத் தொடரைத் தொடர்ந்து படித்து வருவதில் மிகுந்த மகிழ்ச்சி பெறுகிறேன். இனி அடுத்த கட்டுரையைப் படிக்க உள்ளம் விழைகிறது. நன்றி.
    அன்பன்,
    மீ.விசுவநாதன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *