Blog

  • வாக்குரிமைக்காகப் போராடிய இளவரசி (தொடர்ச்சி …)

    — தேமொழி.

    இந்தியாவிலிருந்து புரட்சி மனப்பான்மையுடன் இங்கிலாந்து திரும்பிய இளவரசி சோஃபியா துலிப் சிங்கிற்கு அவரது சகோதரிகளின் வாழ்க்கையே பெண்களுக்கான சமத்துவம் கிடைக்கத் தேவை இருப்பதற்கான காரணங்களைச் சுட்டிக் காட்டியது. சோஃபியாவின் சகோதரி பம்பா மருத்துவம் படிக்க விரும்பி அமெரிக்க சிக்காகோ நகரின் மருத்துவக் கல்லூரியில் கல்வியைத் துவக்கினார். அவர் கல்வி முற்றுப்பெறுவதற்குள், பல்கலைக்கழகம் பெண்கள் அறுவை சிகிச்சை செய்யத் திறன் கொண்டவர்கள் அல்ல என்ற காரணத்தைக் கற்பித்து அவரை வெளியேற்றியது. மற்றொரு சகோதரி கேத்தரின் ஒரு பெண்ணை தனது வாழ்க்கைத்துணையாக ஏற்றார். அவருக்கும் சமுதாயத்தின் புறக்கணிப்பே பரிசாகக் கிடைத்தது. பெண்களின் வாழ்வும் எதிர்காலமும் பெண்களின் விருப்பப்படி இல்லாமல், மற்றவர்கள் முடிவால் நிர்ணயிக்கப் படுவதைக் கண்டு குமைந்தார் இளவரசி. இதற்கு அடிப்படைக் காரணம் பெண்களுக்கு அரசியலில், சட்ட வரைமுறைகளை உருவாக்குவதில் உரிமை மறுக்கப்படுவதன் காரணம் என்று தெளிவாகப் புரிந்து கொண்டார்.

    பெண்கள் ஒடுக்கப்படும் அநீதிக்கு ஒரு முடிவுகட்ட வேண்டும் என்று இளவரசி சிந்தித்துக் கொண்டிருந்த பொழுது சில பெண்ணியவாதிகளுடன் அவருக்குத் தொடர்பு ஏற்பட்டது. அவரது தோழிகளில் ஒருவரான ‘உனா டக்டேல்’ (Una Dugdale), என்பவர் ‘பெண்கள் சமூக அரசியல் ஒன்றியம்‘ (WSPU- The Women’s Social and Political Union) என்ற அமைப்பின் உறுப்பினர். அவர் பெண்களின் வாக்குரிமைக்காகப் போராடிய ‘எம்மிலின் பான்க்ரஸ்ட்’ (Emmeline Pankhurst) என்பவரின் தோழியும் ஆவார். அவர் தான் சார்ந்துள்ள பெண்கள் சமூக அரசியல் ஒன்றியம் பற்றியும், பெண்களின் வாக்குரிமைக்காகப் போராட்டத்தில் அவர்கள் ஈடுபட்டிருப்பதையும் கூறவே, இளவரசி தனது கொள்கைகளுடன் ஒத்திருந்த பெண்கள் சமூக அரசியல் ஒன்றியத்துடன் இணைந்து போராட முடிவெடுத்து உடனே தன்னை உறுப்பினராக்கிக் கொண்டார்.

    மறுஆண்டு வரவிருக்கும் தேர்தலில் வாக்குரிமை பெற்றுவிடவேண்டும் என்ற முடிவோடு ஒரு சட்டவரைவை (மசோதா/bill) பெண்கள் சமூக அரசியல் ஒன்றியம் பாராளுமன்றத்தில் முன்மொழிந்தது. இதில் சற்றும் ஒப்புதல் இல்லாதிருந்த தலைமை அமைச்சர் ‘ஹெர்பர்ட் ஆஸ்கவித்’ (Prime Minister Herbert Henry Asquith)அதில் அக்கறை காட்டாது புறக்கணித்தார். மகளிர் போராட முடிவெடுத்தனர். ‘எம்மிலின் பான்க்ரஸ்ட்’ உட்பட 12 பெண்கள் தலைமையில், சற்றொப்ப 300 பெண்கள் ஒருங்கிணைந்து தலைமை அமைச்சரைச் சந்திக்க விரும்பி, மக்களாட்சியின் அடையாளமாகக் கருதப்பட்ட இங்கிலாந்தின் பாராளுமன்ற சதுக்கத்தை (Parliament Square, Westminster, London) நோக்கி ஊர்வலமாகப் புறப்பட்டனர். பாராளுமன்றத்திற்குப் போகும் அவர்களைத் தடை செய்ய அரசும் ஒரு பெரிய படையாகக் காவல்துறை வீரர்களை நிறுத்தி அரண் எழுப்பியது. அவர்களைப் பொருட்படுத்தாத பெண்கள் காவலர்களைத் தள்ளிக்கொண்டு முன்னேற முயல, காவலர்கள் பெண்களை பின்னோக்கித் தள்ள, பெரிய தள்ளு முள்ளு ஏற்பட்டு போராட்டம் வன்முறையாக மாறியது. பல பெண்கள் தடிகொண்டு தாக்கப் பட்டனர். சாலைகளில் தூக்கி வீசப்பட்டனர்.

    பல பெண்களுக்கு கை கால் முறிவு ஏற்பட்டது. காவலர்களில் சிலர், அடிபட்டு கைகளால் தவழ்ந்து ஊர்ந்து முன்னேறிய பெண் ஒருவரைக் கொத்தாக அள்ளி சாலையில் ஓங்கி ஓங்கி மோதித் தாக்கி மிதித்த வன்செயலைக் கண்ணுற்றுக் கொதித்துப் போனார் சோஃபியா. தனது பாதுகாப்பைக் கருதாது அந்தப் பெண்ணிற்கும் காவலர்களுக்கும் இடையில் குறுக்கேப் பாய்ந்தார். அரச குடும்பத்துடன் தொடர்பு கொண்ட புகழ்பெற்ற சோஃபியாவை அடையாளம் தெரிந்து கொண்ட காவலர்கள் அதிர்ச்சியில் பின்வாங்கி ஓடிவிட்டனர். அதற்குள் வன்முறையில் ஈடுபட்ட காவல் துறை ஊழியரின் அடையாள வில்லையில் அவரது எண் V700எனக் கவனித்துக் கொண்டார் சோஃபியா. மொத்தத்தில் அந்த இடம் ஒரு போர்க்களம் போல மாறியது, ஆயுதம் தாங்கிய காவல்துறையினர், ஆயுதமற்ற மங்கையரைத் தாக்கி வீழ்த்தினர். நூற்றுக்கு மேற்பட்ட மகளிர் போராட்டத்தின் முடிவில் கைது செய்யப்பட்டார்கள். இந்தப் போராட்டம் நடந்த நவம்பர் 18, 1910 – ஆவது நாள் இங்கிலாந்தின் வரலாற்றில் “கருப்பு வெள்ளிக்கிழமை” (November 18th, 1910 – ‘Black Friday’)என்ற பெயரைப் பெற்றது. நாளிதழ்கள் வெளியிட்ட காவல்துறையின் வன்முறைக் காட்சிகளின் படங்கள் மக்களையும் அதிர்ச்சி அடையச் செய்தது.

    வன்முறையில் ஈடுபட்ட காவல் துறை ஊழியரின் அடையாளக் குறிப்புடன் காவல்துறையைக் குற்றம் சாட்டும் கடிதமொன்றை காவல்துறை உயர் அதிகாரிக்கு சோஃபியா அனுப்பினார். இந்த நிகழ்வு ஏற்படுத்திய பரபரப்பில், அதனைக் கையாண்ட முறைகேட்டிற்காக இங்கிலாந்தின் உள்துறை அமைச்சர் ‘வின்ஸ்டன் சர்ச்சில்’ (Winston Churchill, Home Secretary)கடுமையான விமர்சனத்தை எதிர்கொண்டிருந்தார். அவர் கைது செய்யப்பட்ட பெண்களின் மீது குற்றம் சுமத்தாமல் விடுதலை செய்ய உத்தரவிட்டிருந்தார். அவர்கள் மீது வழக்குத் தொடுத்தால் அனுதாப அலை அவர்கள் பக்கம் திரும்பி அரசுக்கு அதிக இழப்பு ஏற்படுமென்பது அரசுத் தரப்புக் கணிப்பு. சோஃபியாவின் குற்றச்சாட்டுக் கடிதமும் சர்ச்சிலின் பார்வைக்கு அனுப்பப்பட்டது. அதில் அவர் தனது கைப்பட இதற்கு மறுமொழி எதுவும் அப்பெண்ணிற்கு அனுப்பவேண்டாம் என்ற குறிப்பினை எழுதிக் கையெழுத்திட்டார்.

    அரசகுடும்பத் தொடர்புடைய பெண்ணே அரசுக்கு எதிராகப் போராட்டம் செய்வது என்பது துரோகமாகக் கருதப்பட்டதுடன், சர்ச்சிலுக்கு சோஃபியாவின் நடவடிக்கைகள் ஏற்புடையதாகவும் இல்லை. தட்டிக் கழித்தால் அனைத்தும் அடங்கிவிடும் என்ற எண்ணம் கொண்டார் சர்ச்சில். ஆனால் அது அவர் செய்த தப்புக் கணக்கு என்று அவருக்குத் தெரிந்திருக்கவில்லை. போராளியாக இந்தியாவில் இருந்து திரும்பியிருந்த சோஃபியாவும் இந்த புறக்கணிப்பையும், அவமதிப்பையும் ஏற்கத் தயாராகவும் இல்லை. வாக்குரிமைக்காகப் போராடிய பெண்கள் அனைவரும் இது போன்ற போராட்டங்களைத் தொடர்ந்து நடத்தத் திட்டமிட்டனர்.

    பல போராட்டங்களில் பெண்கள் பலர் கைது செய்யப்பட்டு சிறைக்குச் சென்றாலும், அரசு சோஃபியாவை புறக்கணித்து அடக்கி வாசித்தது. அவரைவிடத் தீவிரம் குறைந்த போராட்டங்களில் ஈடுபட்ட பெண்கள் பலர் கைது செய்யப்பட்டனர், சிறைக்குச் சென்றனர். உண்ணாவிரதம் இருந்த பெண்களுக்கு வலுக்கட்டாயமாக உணவு திணிக்கப்பட்டு சித்திரவதைக்கு உள்ளாயினர். ஆனால் புகழ் பெற்ற சோஃபியாவை சிறைக்கு அனுப்பினால் அது போராட்டம் செய்யும் மகளிருக்குத்தான் விளம்பரமாக அமைந்து மக்களின் ஆதரவு பெருகும் என்று அரசு அவரைப் பொருட்படுத்தவில்லை. இதனை தனக்கு சாதகமாக்கிக் கொண்ட சோஃபியாவும், அரசுக்கு முடிந்தவரைத் தொல்லை கொடுத்து கவன ஈர்ப்பு செய்யத் திட்டமிட்டார். வாக்குரிமைப் போராட்ட செய்தித்தாள்களை அவர் தான் குடியிருந்த அரசு மாளிகையின் வெளிப்புறமே விநியோகிக்கத் துவங்கினார். போராட்டம் தொடர்ந்தது. சோஃபியாவும் தனது தருணத்திற்காகக் காத்திருந்தார். அந்த நாளும் வந்தது, அது பிப்ரவரி 6, 1911. சோஃபியா குறிவைத்தது பெண்கள் வாக்குரிமைப் போராட்டத்தின் முதன்மை எதிரியான தலைமை அமைச்சர் ஹெர்பர்ட் ஆஸ்கவித் அவர்களை. போராட்டத்திற்குத் தேர்ந்தெடுத்த நாள், இங்கிலாந்து பேரரசி விக்டோரியாவின் பேரன் ஐந்தாம் ஜார்ஜ் மன்னர் பாராளுமன்றத்தில் உரை நிகழ்த்தவிருந்த நாள்.

    எண் 10 டௌனிங் ஸ்ட்ரீட் (10 Downing Street) தலைமை அமைச்சர் அலுவலகம் முன்பு வழக்கம் போல சுற்றுலாப்பயணிகள், நாட்டுமக்கள் எனக் கூட்டம் நிரம்பியிருந்தது. அலுவலகத்தில் இருந்து வெளியே வரும் அமைச்சருக்குக் கையசைத்து வணக்கம் சொல்லக் கூட்டத்தினர் வழக்கம் போலக் காத்திருந்தனர். காவல்துறையினரின் கவனத்தைக் கவராத வண்ணம் நீண்ட ஆடை அணிந்திருந்த சோஃபியாவும் கூட்டத்தோடு கூட்டமாகக் கலந்து நின்றார். ஐந்தாம் ஜார்ஜ் மன்னர் உரைநிகழ்த்துவதில் பங்கேற்கத் தலைமை அமைச்சரும் அலுவலகத்தில் இருந்து வெளிவந்து காரில் பயணமானார். தனது உடையில் மறைத்து வைத்திருந்த “பெண்களுக்கு வாக்குரிமை வேண்டும்” (‘Votes for Women’) என்று எழுதப் பட்டிருந்த பதாகையை உருவி எடுத்துக் கொண்டு, அமைச்சரின் ஊர்தி முன் பாய்ந்து கூச்சலிட்டார் சோஃபியா. வழக்கம் போல காவல் துறையினர் வந்தனர், வழக்கம் போல அவரைக் கைது செய்து குண்டுகட்டாகத் தூக்கிச் சென்றனர், வழக்கம் போலவே அவரைக் குற்றம் சாட்டாது விடுவித்து விட்டனர். பேரரசியின் பேரன் பாராளுமன்ற உரை நிகழ்த்தும்நாளில், பேரரசியின் காட் டாட்டர் அரசுக்கு எதிராகப் போராடியதில் சிறை சென்றார் என்பது போன்ற செய்திவரவிடாமல், வதந்தி பரவாமல், நடந்த நிகழ்ச்சி மக்கள் கவனத்தைக் கவரவிடாமல் சோஃபியாவின் போராட்டத்தைப் பிசுபிசுக்க வைத்தது அரசு. இந்தப் பெண்ணை அடக்கி வைக்க வழியே இல்லையா என்று அரச குடும்பத்திலும், அவர் வாழ்ந்த அரசு குடியிருப்புப் பகுதியிலும் முணுமுணுப்புகள் எழத் துவங்கின.

    இதை அத்தோடு விடுவதாக இல்லை சோஃபியாவும். தொடர்ந்து ‘பெண்களின் வரிகொடா இயக்கத்தில்’ (the Women’s Tax Resistance League)பங்கேற்றார். அவரிடம் இருக்கும் குதிரைகள், வண்டி, நாய்க்குட்டிகள், வேலைக்காரர்கள் வைத்திருப்பது போன்ற உரிமம் பெற வேண்டிய தகுதிகளுக்கு வரி கட்ட மறுத்தார். இருமுறை (மே 1911 மற்றும் டிசம்பர் 1913 ஆம் ஆண்டுகள்) நீதிமன்றத்திற்கு வரவழைக்கப்பட்டார். இரண்டாம் முறையாக, 1913 ஆம் ஆண்டு வரவழைக்கப்பட்ட பொழுது ஏன் வரி கட்டவில்லை என்ற நீதிபதியின் கேள்விக்கு….

    “நாட்டின் செலவினங்களைக் கட்டுப்படுத்தும் முடிவுகளை எடுக்கும் செல்வாக்கு எனக்கு இல்லாததால் முழுமனதுடன் வரி செலுத்த என்னால் இயலவில்லை. நான் அளிக்கும் வரிப்பணத்தில் ஊதியம் பெறும் பாராளுமன்ற உறுப்பினர்களைத் தேர்ந்தெடுக்கவும் எனக்கு வாய்ப்பில்லை. இது சற்றும் முறையன்று. இங்கிலாந்து என்று மகளிருக்கு வாக்குரிமை அளித்து, என்று எனது குடியுரிமைக்கு மதிப்பு கொடுக்கிறதோ அன்று நிச்சயமாக முழு விருப்பத்துடன் நான் நாட்டின் பராமரிப்பிற்காக வரி அளிப்பேன். நாட்டின் நலத்தில் எனக்கு சார்பாண்மை தகுதி இல்லாதபொழுது, நாட்டிற்கு வரி செலுத்தும் தகுதியை மட்டும் நான் பெற்றுள்ளதாக ஏன் கருதப்படவேண்டும்?”

    என்று பதிலளித்தார். பொதுவாக வரி கொடாமல் இருப்பது சட்டப்படி சிறைக்குச் செல்ல வேண்டிய ஒரு குற்றம். அதை எதிர்பார்த்துத்தான் சோஃபியா இந்த நடவடிக்கைகளை எடுத்தார். ஆனால் நீதிபதி ஒரு குறைந்த அளவு அபராதம் விதித்து அதைக் கட்டினால் போதும் எனத் தீர்ப்பளித்து அனுப்பினார். அபராதமும் கட்ட மறுத்தார் சோஃபியா. அமீனாக்கள் அவரது மாளிகையில் நுழைந்து அபராதத்தைக் கட்டச் சொல்லி நிர்ப்பந்தித்த பொழுது சோஃபியா அமைதி காத்தார். வேறுவழியின்றி அவர்கள் அபராதத் தொகைக்கு ஈடாக அவரது வைரம், முத்து பதித்த அணிகலன்களைக் கைப்பற்றி எடுத்துச் சென்றனர். சோஃபியாவும் அதைச் சற்றும் பொருட்படுத்தவில்லை, மதிப்பு மிக்க தனது பரம்பரைச் சொத்துகளே போனாலும் அவற்றையும் இழக்கத் தயாராகவே அவர் இருந்தார். அவரது அணிகலன்கள் ஏலத்தில் விடப்பட்டு அபராதத்திற்கானத் தொகையாக எடுத்துக் கொள்ளப்பட்டது. சோஃபியாவின் அணிகலன்களை அவரது தோழி ‘ஜோப்லிங் ரோவ்’ (Jopling Rowe) என்பவரே ஏலத்தில் எடுத்து சோஃபியாவிடம் திருப்பிக் கொடுத்தார். சோஃபியாவின் செயல்கள் பெண்கள் போராட்டத்திற்கு நல்ல கவன ஈர்ப்பாக அமைந்ததில் சோஃபியாவிற்கும், போராட்டக் குழுவினருக்கும் மிகவும் மகிழ்ச்சி.

    தொடர்ந்து மறு ஆண்டே 1914 – இல் முதல் உலகப் போர் துவங்கியது. மகளிர் அணியினர் நாட்டுத் தொண்டிற்கு முன்னுரிமை அளித்து செயல்படத் தொடங்கினர். சோஃபியா தாதியர் பயிற்சி பெற்று படையில் இருந்த காயமடைந்த இந்திய வீரர்களுக்குப் பணிபுரிந்தார். பஞ்சாப் சிங்கம் ரஞ்சித் சிங்கின் பேத்தியே தங்களுக்கு மருத்துவ உதவிகள் செய்த பொழுது இந்திய வீரர்கள் மிகவும் நெகிழ்ந்து போயினர். இந்தியப்படையில் இருந்த பஞ்சாபி வீரர்களுக்கு கொடிநாள் வணக்கம் செய்வதற்கும் ஒத்துழைப்புக் கொடுத்தார் சோஃபியா. போர்க்காலத்தில் மகளிர் அனைத்துத் துறையிலும் ஈடுபட்டு சிறப்பாகப் பங்காற்றியது பெண்களுக்கு வாக்குரிமை அளிக்க விரும்பாத பாராளுமன்ற உறுப்பினர்களின் மனநிலையிலும் பெரிய மாறுதலைக் கொண்டுவந்தது. நாட்டின் வளர்ச்சியில் பெண்கள் அளித்த பங்கும் உணரப்பட்டது. அதன் விளைவாக, வாக்குரிமை கேட்டுப் போராடிய பெண்களின் போராட்டம் இரு கட்டமாக வெற்றி பெற்றது.

    முதலில் 1918 ஆம் ஆண்டு 30 வயதிற்கு மேற்பட்ட பெண்களுக்கு, சொத்துரிமை உள்ள பெண்களுக்கு, படித்த பட்டதாரிப் பெண்களுக்கு, என்றெல்லாம் கட்டுப்பாட்டுடன் மகளிருக்கு வாக்குரிமை வழங்கப்பட்டது; மகளிர் வாக்குரிமை சட்டத்தின் சட்டவரையறைக்கு 385 வாக்குகள் ஆதரவாகவும், வெறும் 55 வாக்குகள் எதிர்ப்பு என்ற நிலையில் அது மாபெரும் வெற்றி அடைந்தது.

    பின்னர் பத்தாண்டுகள் கழித்து 1928 ஆம் ஆண்டு மகளிர் வாக்குரிமைப் போராட்டத்தைத் துவக்கிய எம்மிலின் பான்க்ரஸ்ட் மரணமடைந்துவிட, அவருக்கு அடுத்தபடியாக சோஃபியா தலைமைப் பொறுப்பை ஏற்றுக் கொண்டார். அந்த ஆண்டே, எம்மிலின் பான்க்ரஸ்ட் மறைந்த இரண்டே வாரங்களில், சோஃபியா தலைமைப் பொறுப்பை ஏற்ற சில நாட்களில், மகளிர் வாக்குரிமையின் அடுத்த கட்டமாக பெண்களுக்குச் சம உரிமை வழங்கப்பட்டு, 21 வயது உள்ள அனைத்து மகளிருக்குமே வாக்குரிமை உண்டு என்று சட்டம் வரையறுக்கப் பட்டது.

    மகளிர் வாக்குரிமை முன்னோடிகள் தங்கள் போராட்ட நினைவுகளைப் பதிவு செய்யும் முயற்சியை முன்னெடுத்த பொழுது சோஃபியாவும் அதில் பங்கேற்றார். “பெண்களில் யார் எவர்?” (‘Women’s Who’s Who’) என்ற தொகுப்பின் 1934 ஆண்டு வெளியான பதிப்பில், இடம் பெற்ற சோஃபியா, தங்கள் ஆர்வம் பற்றியக் குறிப்பைத் தரவேண்டிய இடத்தில், ‘பெண்கள் முன்னேற்றத்தின் நலவிரும்பி’ (interest – “The advancement of women”) என்று மட்டுமே சுருக்கமாகக் குறிப்பிட்டார்.

    sophia (2)நூறாண்டுகளுக்குப் பின்னர், இன்றைய நிலையில் இந்கிலாந்து பாராளுமன்றத்தில் சட்டங்களை வரையறுக்கும் பாராளுமன்ற உறுப்பினர் பதவியில், அதிகாரம் பெற்ற நிலையில் 200 மகளிர் பங்கேற்றாலும், ஆரம்ப நாட்களில் இருந்த பெண்களுக்கான அடக்குரிமையை எதிர்த்துப் போராடி வாக்குரிமை பெற்றுத் தந்த மகளிர்களில் இந்திய வம்சாவளியின் வீரப்பெண் ஒருவரும் இன்றியமையாதப் பங்கேற்றார் என்பது இந்தியர்களுக்கு, குறிப்பாக இந்தியப் பெண்களுக்கு பெருமை தரும் ஒரு செய்தி.

    மன்னர் துலிப் சிங்கின் வாரிசுகள் அனைவருமே சட்டப்பூர்வ வாரிசுகள் இன்றியே இறந்தனர். சோஃபியாவும் திருமணம் செய்து கொள்ளவில்லை. தனது பணியாளர் ஒருவரின் மகளின் காட்மதராக கௌரவிக்கப்பட்டார். அந்தப் பெண் வளர்ந்த பொழுது, அவரிடம் எப்பொழுதும் தேர்தலில் வாக்களிப்பேன் என்று உறுதிமொழி கொடு என்று சத்தியம் செய்யச் சொல்லி பெண்களுக்கான வாக்குரிமை சுதந்திரத்திற்குத் தான் கொடுக்கும் முக்கியத்தை அவருக்கு உணர்த்தினார். தனது 72 ஆவது வயதில் ஆகஸ்ட் 22, 1948 – இல் அவர் இறந்த பிறகு, அவர் விருப்பப்படி, சீக்கியகுல வழக்கப்படி அவருடலுக்கு எரியூட்டப்பட்டு, சாம்பல் அவரது மூதாதையரின் மண்ணான பஞ்சாபில் தூவப்பட்டது. தனது பாட்டனார் பஞ்சாப் சிங்கம் மன்னர் ரஞ்சித் சிங் போலவே சமயச்சார்பற்ற கொள்கையுடன் இறுதிவரை வாழ்ந்த சோஃபியா, தனது சொத்துக்களை இந்து, முஸ்லிம், சீக்கியம் எனப் பல மதங்களைச் சார்ந்து இயங்கிய பெண்கள் பள்ளிகளுக்காக, பெண்களின் கல்வி வளர்ச்சிக்குப் பயன்படவேண்டும் என்று எழுதி வைத்தார்.

    பெண்களுக்கு வாக்களிக்கும் உரிமை கிடைத்த போராட்டமான வரலாற்றுப் பின்னணியும், அதற்காக அல்லலுற்ற பெண்கள் பலரின் கதைகளும் காலப்போக்கில் மறக்கப்பட்டு இக்காலப் பெண்களுக்கு தங்களுக்குரிய வாக்குரிமையின் அருமை தெரியாமல் இருக்கிறது. பெண்களுக்குரிய உரிமைகள் நிலைநாட்டப்பட வேண்டுமானால், சரியான வழியில் பெண்கள் தங்கள் வாக்குரிமையைத் தவறாது பயன்படுத்தி, தங்கள் குரலை சட்டவறையைகளை உருவாக்கும் மன்றங்களில் முன்வைக்கும் தகுதியுள்ள வேட்பாளர்களைத் தேர்ந்தெடுக்க வேண்டும்.

    படம் உதவி: விக்கிப்பீடியாவும், பி பி சியும் , பிற இணைய தளங்களும்
    ____________________________________________________

    Read more @:
    Sophia: Princess, Suffragette, Revolutionary, January 13, 2015, by Anita Anand
    http://www.amazon.com/Sophia-Suffragette-Revolutionary-Anita-Anand/dp/1632860813

    Princess Sophia Duleep Singh: A champion in the cause of women’s rights
    http://historysheroes.e2bn.org/hero/3521

    Sophia Duleep Singh
    https://en.wikipedia.org/wiki/Sophia_Duleep_Singh

    Sophia: Suffragette Princess- Princess Sophia Duleep Singh
    BBC video at – https://youtu.be/dAH0MLNfK1U
    ____________________________________________________

    “I am unable conscientiously to pay money to the state, as I am not allowed to exercise any control over its expenditure; neither am I allowed any voice in the choosing of Members of Parliament, whose salaries I have to help to pay. This is very unjust. When the women of England are enfranchised and the state acknowledges me as a citizen I shall, of course, pay my share willingly towards its upkeep. If I am not a fit person for the purpose of representation, why should I be a fit person for taxation?”

    Ref:
    Asian Suffragettes, British Protest at Home and Abroad
    http://britishprotest.com/tag/feminist-history/
    ____________________________________________________

    Share
  • கை கொடுக்கும் நம்பிக்கை!

    -மேகலா இராமமூர்த்தி

    இயல்பில் மனிதன் ஒரு சமுதாய விலங்கு (Man is by nature a social animal) என்பார் தத்துவ அறிஞர் அரிஸ்டாட்டில். மனித வாழ்வு தனிமையில் இனிமை காண இயலாதது. உலகத்தோடு ஒட்ட ஒழுகுவதிலும் சமுதாயத்தோடு இணைந்தும் இயைந்தும் வாழ்வதிலும் முழுமை காண்பது. அவ்வாறு ஒருவர் மற்றொருவரைச் சார்ந்துவாழ்வதற்கு அடித்தளமாக இருப்பது நம்பிக்கை எனும் நல்லுணர்வு. ஒரு குழந்தை தன்தாய் சுட்டிக்காட்டுகின்ற மனிதரைத் தந்தையென ஏற்றுக்கொள்வதற்கு அடிப்படையாய்த் திகழ்வதுகூட (தன் தாய்மீது அச்சேய் கொள்ளும்) நம்பிக்கையே எனலாம்!

    முன்பின் அறிமுகமில்லாத ஓர் ஆடவனும், ஆரணங்கும் காதல்கொண்டு, செம்புலப்பெயல்நீர்போல் அன்புடை நெஞ்சுகலப்பதற்குக் களமமைப்பதும் அவர்கள் ஒருவர்மீது மற்றொருவர் கொள்ளுகின்ற அசைக்கவியலா நம்பிக்கையே!

    தலைவன் ஒருவன்மீது மாறாக் காதல்கொண்ட தலைவியொருத்தி, அவனை ’நின்ற சொல்லர்’ (நாட்டு வழக்கில் சொல்வதென்றால் பேச்சு மாறாதவர்) என்று வாயாரப் புகழ்வதை நற்றிணைப் பாடலில் கபிலர் காட்டுவார்.

    நின்ற சொல்லர் நீடுதோன்றினியர்
    என்றும் என் தோள் பிரிபறியலரே
    …
    (நற்: 1)

    இன்னொரு தலைவியோ தன் காதல்மீது இமய நம்பிக்கை கொண்டவளாய்த் தானும் தலைவனும் கொண்ட காதல், நிலத்தைவிடப் பெரிது, வானத்தைவிட உயர்ந்தது, நீரினும் ஆழமானது என்று அளந்துபார்த்தவள்போல் ஆணித்தரமாய்க் கூறுவது நமக்குப் பெருவியப்பை விளைக்கின்றது.

    நிலத்தினும் பெரிதே வானினும் உயர்ந்தன்று
    நீரினும் ஆரள வின்றே சாரற்
    கருங்கோற் குறிஞ்சிப் பூக்கொண்டு
    பெருந்தேன் இழைக்கும் நாடனொடு நட்பே.  (குறுந்: 3)

    காதலுக்கு மட்டுந்தானா கை கொடுக்கும் நம்பிக்கை? இல்லை… நட்புக்கும் அதுவே வீற்றிருக்கை! நேரில் காணாதபோதினும் ஒத்தஉணர்ச்சி கொண்ட இரு உயர்ந்த உள்ளங்கள் உயிர்நட்பு கொண்டதனைத் தமிழ்கூறு நல்லுலகு நன்கறியும். ஆம்! சோழ அரசனாகிய கோப்பெருஞ்சோழனுக்கும், பாண்டி நன்னாட்டுப் புலவர் ஆந்தையாருக்கும் இடையில் முகிழ்த்து மலர்ந்திருந்த நட்பெனும் நறுமலர் புறநானூற்றில் இன்றும் புதுமணம் பரப்பிக்கொண்டுதான் இருக்கின்றது!

    தான் பெற்றமக்களால் தாங்கொணாத் துயருக்கு ஆளான கோப்பெருஞ்சோழன் அதற்குமேலும் தன் இன்னுயிரைத் தரித்திருக்க விரும்பவில்லை. வடக்கிருந்து உயிர்துறப்பது எனும் முடிவை எடுத்தான். அரசவாழ்வைத் துறந்து, தருப்பைப்புல் ஆசனம்பரப்பி வடக்கு நோக்கி அமர்ந்தான்; அவனைச் சுற்றிலும் அவன்மீது பெருமதிப்பும், அன்பும் கொண்டிருந்த அரசவையினரும் புலவர்பெருமக்களும் குழுமியிருந்தனர் வேதனையோடு. புலவர் பெருமக்களை நோக்கித் தன் பார்வையை வீசினான் காவலன். தன் குறிப்பறிந்து அருகில்வந்த புலவோரை நோக்கி, “அருமை நண்பர் ஆந்தையாருக்கென என்னருகே ஆசனம் ஒன்றை அமையுங்கள்!” என்று உத்தரவிட்டான்.

    அரச கட்டளையாயிற்றே மறுக்க முடியுமா? அரசனுக்கருகே ஆசனம் அமைக்கப்பட்டது ஆந்தையாருக்கு. ஆயினும், அரசன் நீங்கலாக ஆங்கே குழுமியிருந்த ஏனையோருக்கு பாண்டி நாட்டிலுள்ள ’பிசிர்’ எனும் ஊரிலிருந்து, செய்தி கேள்விப்பட்டு, ஆந்தையார் இவ்வளவு தூரம் வருவார்; வந்து அரசனோடு உயிர்விடுவார் என்றெல்லாம் எள்ளளவும் நம்பிக்கை இருக்கவில்லை. நாட்கள் நகர்ந்தன. ஆந்தையாரோ வரக்காணோம். அரசனும் உயிர்துறந்துவிட்டான். சுற்றியிருந்தோர், இனியும் ஆந்தையார் வருவார் எனும் எண்ணத்தைக் கைவிட்டு அங்கிருந்து புறப்பட எத்தனித்த வேளையில், தொலைவில் ஒருமனிதர் அவர்கள் நின்றிருந்த இடத்தை நோக்கி விரைந்து வந்துகொண்டிருப்பதைக் கண்டனர்; வியப்போடு அத்திசை நோக்கினர். அருகே வந்த அம்மனிதர் அவர்களிடம் தன்னை ”ஆந்தையார்” என்று அறிமுகப்படுத்திக்கொள்ள, அனைவரும் அதிசயித்தனர்; அவரை ஆரத்தழுவி உரையாடி மகிழ்ந்தனர்.

    ஆந்தையாரை வரவேற்ற சான்றோரில் ஒருவரும், கோப்பெருஞ்சோழனின் அன்புக்குரிய அவைப்புலவருமான பொத்தியார், ”நண்பர் ஆந்தையார் எனைக்காண அவசியம் வருவார்” என்ற மன்னனின் (பெருமைமிகு) எண்ணத்தையும், அது பிழைபடாதவாறு வந்த புலவரின் சிறப்பையும் எண்ணியெண்ணி வியப்பும் மருட்கையும் ஒருங்கே எய்தியவராய் அவ்வுணர்வை அழகியதோர் பாட்டாய் வடித்தார்.

    நினைக்கும் காலை மருட்கை உடைத்தே
    எனைப்பெரும் சிறப்பினோடு ஈங்கிது துணிதல்
    அதனினும் மருட்கை உடைத்தே பிறன் நாட்டுத்
    தோற்றம் சான்ற சான்றோன் போற்றி
    இசைமர பாக நட்புக் கந்தாக
    இனையதோர் காலை ஈங்கு வருதல்
    வருவன் என்ற கோனது பெருமையும்
    அதுபழு தின்றி வந்தவன் அறிவும்
    வியத்தொறும் வியத்தொறும் வியப்பிறந்
    தன்றே… (புறம் – 217: பொத்தியார்)

    பின்னர், ஆந்தையாரும் மன்னன் மடிந்த இடத்தருகிலேயே வடக்கிருந்து உயிர்துறந்தார் என்பது புறம் நமக்கு அறியத்தரும் செய்தி.

    புணர்ச்சி பழகுதல் வேண்டா உணர்ச்சிதான்
    நட்பாங் கிழமை தரும்
    எனும் வள்ளுவத்துக்கு விளக்கமாய்த் திகழ்வது இக்காவிய நட்பு!

    இவ்வாறு, பிறர்மீது கொள்ளும் நம்பிக்கை, காதலுக்கும் நட்புக்கும் பாதையமைப்பதுபோல், தன்மீதே ஒருவன் கொள்ளும் நம்பிக்கை அவன் தனிவாழ்வின் வெற்றிக்கும், பெற்றிக்கும் வழிவகுக்கின்றது. ஏழைமையோடு தோழமைகொண்ட போதிலும், தளராத தன்னம்பிக்கையோடு வாழ்வில் சாதனைபடைத்த எத்தனையோ அறிஞர்களையும் ஆராய்ச்சியாளர்களையும் வரலாறு நமக்குக் காட்டவில்லையா?

    மாந்தரிடம் காணக்கிடைக்கும் இந்நம்பிக்கை, தம்மைச் சார்ந்ததாகவும், சகமனிதர்களைச் சார்ந்ததாகவும் மட்டுமே உள்ளதா அல்லது அதனையும் தாண்டிப் பயணிக்கின்றதா என்று சற்றே சிந்தித்தால், அவர்தம் நம்பிக்கையின் எல்லை வானளவு விரிந்து, கண்ணால் காணவொண்ணாத கருத்துருவான கடவுள்வரை அது நிறைந்திருக்கக் காண்கின்றோம். தத்தம் சமயக் கோட்பாடுகளுக்கியைந்த வகையில் கடவுளின் உருவிலும், உடையிலும் மக்கள் மாறுபாடுகள் கொள்ளுகின்றனரேயன்றி, கடவுளே உலகையும், உயிர்களையும் படைத்தவர், அவரை நம்பினார்க் கெடுவதில்லை என்பன போன்ற நம்பிக்கை முழக்கங்களில்(!) மாற்றமில்லை. சிலநேரங்களில் இந்த இறைநம்பிக்கை கரைபுரண்டோடி, தேவையற்ற மூடநம்பிக்கைகளில் மானுடரை மூழ்கடித்துவிடுகின்ற ஆபத்தான வேலையையும் செய்யத் தவறுவதில்லை. அதுபோல் மனிதர்மீது மனிதர் கொள்ளும் நம்பிக்கையானது துரோகத்திலும், அவநம்பிக்கையிலும் முடிந்துபோவதையும் மறுப்பதற்கில்லை.

    ஆயினும், ஒரோவழி (at times) நிகழும் இவைபோன்ற எதிர்மறை விளைவுகளை நீக்கிவிட்டு நோக்கினால், வாழ்வைச் செம்மையாய் நடாத்துதற்குத் தேவையான பலத்தையும், மனவுரத்தையும் நம்பிக்கை மாந்தர்க்குத் தந்து வையத்தை வாழ்விக்கின்றது என்றே கூறலாம்.

     

     

    Share
  • இலக்கியச் சித்திரம் – இனிய பிள்ளைத்தமிழ்-14

     

    மீனாட்சி பாலகணேஷ்

     

    உமை சிறுவீடு கட்டியருளே!

     b9d3e4c3-abb5-4467-af72-ded1305dd2bd
    பிள்ளைத்தமிழ் நூல்கள் தாம் எடுத்தியம்பும் அனைத்துப் பருவங்களையும், தத்துவம், சமயம், தொன்மம், சுவைமிகு புனைகதைகள் என இவற்றையெல்லாம் பாடல்களில் இணைத்து சந்தநயமும் பொருள்நயமும் விளங்க அழகுற எடுத்துரைக்கும் தன்மையனவாகும். முந்தைய அத்தியாயங்களில் கண்டதுபோன்ற சுவைமிகுந்த கதைகள்மட்டுமே இவ்விலக்கியத்திற்கு அழகு சேர்க்கவில்லை. குழந்தையின் ஒவ்வொரு செய்கையையும், குழந்தையாகப் போற்றப்படும் அந்தத் தெய்வம் செய்யும்செயலுடன் பொருத்திப்பாடுவதே இவற்றைப்பாடிவைத்த நல்லிசைப் புலவோரின் கவிதைநயத்திற்கும் அழகுணர்ச்சிக்கும் சான்றாக விளங்கி, அவர்களை ‘வித்தாரகவி’ எனும் போற்றுதலுக்கும் உரியவராக்கின. இதற்கான எடுத்துக்காட்டினை இப்போது நல்லதுக்குடி கிருட்டிணையர் இயற்றியுள்ள தில்லை சிவகாமியம்மை பிள்ளைத்தமிழில் கண்டு களிக்கலாம். இவ்வாசிரியர் 19-ம் நூற்றாண்டில் நல்லதுக்குடி எனும் ஊரில் வாழ்ந்தவராவார் என அறிகிறோம். இப்பிள்ளைத்தமிழ் மற்ற பிள்ளைத்தமிழ் நூல்களிலிருந்தும் வேறுபட்டு விளங்குகிறது. ஏனெனில் இதில் வழக்கிற்கு மாறாக பதினைந்து பருவங்கள் விரித்துரைக்கப்படுகின்றன.

    பத்துப்பருவங்களுக்குப் பத்துப்பாடல்கள் வீதம் மொத்தம் நூறு பாடல்களைக் கொண்டமைவன பிள்ளைத்தமிழ் நூல்கள். பிங்கல நிகண்டு பெண்பாற்பிள்ளைத்தமிழுக்குப் பத்தொன்பது பருவங்களையும் திவாகர நிகண்டு பன்னிரண்டு பருவங்களையும் கூறும். தில்லைச் சிவகாமியம்மை பிள்ளைத்தமிழ் நூல் காப்பு, செங்கீரை, தால், சப்பாணி, முத்தம், வாரானை, அம்புலி, சிற்றில், பந்தாடல், ஊசல், பாவையாடல், கழங்காடல், அம்மானை, நீராடல், குதலை மொழியாடல் எனப் பதினைந்து பருவங்களைக் கொண்டு இலங்குகிறது. ஈற்றயலான நான்கு பருவங்களில் இரண்டு அல்லது மூன்று பாடல்களே ஒரு பருவத்திற்குப் பாடப்பட்டுள்ளன. ஆண்பால் பிள்ளைத்தமிழில் சிற்றில் பருவத்தில் ஆண்குழந்தைகளைச் சிறுமிகள் தங்களது சிற்றிலை அழிக்காதே என வேண்டுவதாக அமையும். இங்கு பெண்பால் பிள்ளைத்தமிழில் அமைந்த சிற்றில் பருவத்தில் பெண்குழந்தை சிவகாமியைத் தாயாரும் மற்றோரும் சிற்றில் எனப்படும் சிறுவீடு கட்டியருளே! என வேண்டுகின்றனர். பாடலைக் காண்போமே!

    ******

    சிறுமி சிவகாமி சிற்றிலிழைக்க முயன்றவண்ணம் இருக்கிறாள். அருகில் நின்று இதனைப் பார்க்கும் தாய் தன்மகளை ஊக்குவிக்கிறாள்; எவ்வாறு சிறுவீடு கட்டவேண்டும் எனத் தன் சின்னஞ்சிறு மகளுக்குக் கூறுகிறாள். அவளும் ஒருகாலத்தில் இவ்வாறு சிற்றிலிழைத்து விளையாடியது உண்டல்லவா?

    “முதலில் தூண்களைக் கால்களாக வை குழந்தாய்! பின்பு மண்ணை வைத்து அடைசுவர்களாகச் செய். பின்பு குறுக்கும் நெடுக்குமாகக் கைம்மரத்தை வை; அதுதான் ஓடுகளைத் தாங்கும் வலுவான மரமாகும் தெரியுமா? நீ கட்டும் இந்த வீட்டிற்கு ஒன்பது வாயில்களை அமைக்கவேண்டுமம்மா!
    “அடுத்து இந்தக்கூரை மரங்களை எவ்வாறு இணைப்பது தெரியுமா? கயிற்றால் இறுகக்கட்டிப்பின் சேற்றைப்பூசி சுவரை வலுப்படுத்த வேண்டும்,” என்னும் தனது அன்னையை நோக்கி ஆடலரசனின் காதல்நாயகி சிவகாமி, “சரி அம்மா, உன் விருப்பப்படியே, இன்னும் அழகாக அமைத்துவிடுகிறேன்,” என எல்லாம் அறிந்த ஒரு புன்னகை பூக்கிறாள். அன்னை வியந்துநோக்க, வீட்டினுள் விளக்கினை ஏற்றி, சிலவீடுகளை அழித்து, இன்னும் பல சிறுவீடுகளை உண்டுபண்ணி அருள்விளையாடல் புரிகிறாள். பார்த்தவண்ணம் நிற்கும் அன்னை மயங்குகிறாள். சிவகாமசுந்தரி தான் சமைத்த வீடுகளைக் கண்டு கைகொட்டி மகிழ்கிறாள்.
    என்ன இது முன்பின் முரணாக உள்ளது எனத்தோன்றுகிறதா? பாடலாசிரியர் இதில் பிரபஞ்சப்படைப்பின் பெரும்தத்துவத்தை அல்லவோ உட்பொருளாக்கி இப்பாடலை அமைத்துள்ளார்.
    அவர் நோக்கில் மற்றொருமுறை காணலாமா? எலும்பும் தசையும் கொண்ட ஓர் உடலை அன்னை பராசக்தி படைக்கும் அழகு இங்கு கவிதைநயம் பொங்கக் கூறப்படுகின்றது.
    தசை எனப்படும் மண்ணைவைத்து அதன்மீது தூண்கள் எனப்படும் கால்களை வைத்து உடலெனப்படும் சுவரை வைக்கிறாள். பின் இருபுறமும் கைகளாகிய கைம்மரங்களை வைக்கிறாள். மனித உடலின் ஒன்பது துளைகளாகிய வாயில்களை விட்டும், எலும்புகளாலான கூரைமரங்களை நரம்புகளால் முறையாக அமைத்து இறுகக்கட்டுகிறாள். பிறகு மேலே ஒரு பெரிய தோலினைக் கொண்டு அதனைச் சரிவரப் போர்த்துகிறாள். இது முழுவீட்டினையும் சாந்தால் மெழுகுவதனை ஒக்கும். மயிர்களால் அழகான கூரை அமைத்துவிடுகிறாள். இனி, தான் இவ்வாறு கட்டியவீட்டினை அழகுபடுத்தும் பணிதுவங்குகிறது. ஒவ்வொரு உயிரும் செய்துள்ள பாவபுண்ணியங்கள் எனும் இருவினைகளை ஆராய்ந்து சீர்தூக்கி அதிலிருந்து அவ்வுயிர் ‘அனுபவிக்க வேண்டிய வினை’ எனும் சேற்றைப்பூசுகிறாள். இது வீட்டிற்கு வண்ணம் பூசுவதனைப் போன்றது. இவ்வினைகளால் வரும் இன்பதுன்பங்களைப் பகுத்துணர்ந்து அனுபவிக்கக் கண்களைக் கொடுத்தருளுகிறாள்- இது விளக்கினைப் பொருத்துவதற்குச் சமமாகும்.

    e9912af1-9d47-4a34-bc7c-8857ebb53af9
    இவ்வாறு இவ்வுலகில் உள்ள எண்பத்துநான்கு இலட்சம் வகைப்பட்ட உயிரினங்களும் குடியிருந்து வாழ்வதற்காக அவரவர்களுக்கேற்ற வகையில் சிறுவீடுகளைப்படைத்தருளி, அவற்றை தகுந்த தருணத்தில் அழித்தொடுக்கி, பின்னும் வலிமைமிக்க பலவீடுகளை (யானை, சிங்கம் போன்றவற்றின் உடல்களை) உண்டுபண்ணுகிறாள் பாராசக்தி அன்னை. “இப்படிப்பட்ட அருள்விளையாடல் செய்யும் உமையாகிய அன்னையே! சிவகாமசுந்தரி என உலகம் போற்றும் விமலையே! சிறுவீடு கட்டியருள்க!” என வேண்டுகிறார் புலவர்.
    படைத்தும், காத்தும், அழித்தும், மறைத்தும், அருளியும் நடைபெறும் இந்தப் பிரபஞ்சப்பெருவிளையாட்டினை சிவபிரானின் பாதியாகிய அன்னை சிவகாமசுந்தரியே நிகழ்த்துவதாகக் கூறி மகிழ்கிறார் புலவர் கிருட்டிணையர். (ஆ ப்ரஹ்ம-கீட ஜனனீ என்பது லலிதா சஹஸ்ரநாமம்- பிரம்மன் முதல் புழு வரை அவளால் படைக்கப்படுகின்றன என்பது இதன் பொருள்; படைப்புக்கடவுளான பிரம்மனையுமே அவள்தான் படைக்கிறாளாம்).
    ஆக, பராசக்தியாகிய சிவகாமசுந்தரி சிற்றில் இழைக்கும் விளையாட்டு எத்தனை பெரிய தத்துவத்தைத் தன்னுள் அடக்கிக் கொண்டுள்ளது என உணர்ந்து அதிசயிக்கலாம். அவள் இழைக்கும் சிற்றில்கள் ஒன்றில் நாமும் உள்ளோம் எனும் எண்ணமே மெய்சிலிர்க்கவைக்குமே!


    மண்வைத்துக் கால்வைத்துத் தூணினால்
    சுவர்வைத்து வலிய கைம்மரமும் வைத்து
    வாசல் ஒன்பது விட்டு மோட்டுவளை
    பக்கத்துவளை வரிச்சலும் நரம்பால்
    பண்புற்றிடக் கட்டி மேலெலாம் தோலுடன்
    பலமயிர்க் கற்றை இட்டுப்
    பழவினைச் சேறுகட்டி இன்பதுன்பங்கள்
    கண் பாத்துண விளக்கும் ஏற்றி
    எண்பத்து நான்கு நூறாயிரம் பேதமாய்
    இனிய சிறுவீடு தோறும்
    எவ்வுயிர்களும் குடியிருந்து விளையாடவே
    இன்னமும் அழித்து அழித்துத்
    திண்பெற்ற பலவீடு கட்டிவிளை யாடும்
    உமை சிறுவீடு கட்டியருளே!
    சிவகாம சுந்தரி எனும் பெரிய
    விமலையே! சிறுவீடு கட்டியருளே!
    (தில்லைச் சிவகாமியம்மை பிள்ளைத்தமிழ்-
    சிற்றில் பருவம்- நல்லதுக்குடி கிருட்டிணையர்)
    சிற்றிலிழைத்து விளையாடும் இச்சிறு பெண்பிள்ளை, அச்சிறுவீட்டினுள்ளே பலவிதமான பாவைகளைக் குடிவைத்து விளையாடுகின்றாள். இவள் உலகுக்கே பேரரசியல்லவா?இவளிடம் இல்லாத பாவைகளே இல்லை எனலாம். (பணக்கார வீட்டுக் குழந்தைகள் சமீபத்தில் வெளியான Barbie, starwar figures ஆகிய பாவைகளை வைத்துக்கொண்டு விளையாடுவது போலவே இதுவும்).
    அவளுடைய விளையாட்டுகள் சிலவற்றை நாமும்தான் காணலாமே!
    சண்டமுண்டர்கள் எனும் அரக்கர்கள், பின்பு மகிடன் எனும் அரக்கன் ஆகியோர் தேவர்களை அவர்களது பதவிகளிலிருந்து நீக்கிவிட்டுத் தாமே ஆட்சி செய்தார்கள். அன்னை பராசக்தி வீராங்கனையாகத் தானே தோன்றி (சாமுண்டி, மகிடாசுரமர்த்தினி), அவ்வரக்கர்களை அழிக்கிறாள். இதற்காக எண்ணற்ற வீரர்களையும், காளி, வாராஹி ஆகிய தெய்வங்களையும் படைக்கிறாள்.
    மீனாட்சியாகித் தானே மதுரையைத் தன் துணைவன் சிவபிரானுடன் அரசாள்கிறாள்.
    சேரர்கள், சோழர்கள், பாண்டியர்கள் என அரசகுலங்களை உண்டுபண்ணி, அவர்களுக்குள் நட்புறவைச் சிலபொழுதுகளிலும், சண்டைசச்சரவைச் சில பொழுதுகளிலும் செய்வித்தாள். சிலபொழுது பூமியை நீர்வறட்சியால் வருந்தச் செய்கிறாள். சிலபொழுது பெரும்வெள்ளத்தால் சேதமும் அடையச் செய்கிறாள் அன்னை.
    பலபொழுதுகளில் அனைத்தையுமே இன்பமயமாக இயங்கச் செய்கிறாள். நம்மை இசையையும் நடனத்தையும் நூல்களையும் பயிலச் செய்து கலைகளை வளர்க்கிறாள். அகிலத்தையே இவ்வாறு படைத்து ஆட்டுவிக்கிறாள்.
    அன்னை பராசக்தியின் அருளிலேயே ஆழ்ந்தவரான புலவர் அன்னை சிறுபெண்ணாய் விளையாடும் விளையாட்டுகள் அனைத்தினையுமே பராசக்தியின் ஆடல்களாகக் கண்டு வாழ்த்துகிறார். மிக எளிமையாக இதற்குப் பொருளுணர வேண்டுமாயின் பின்வருமாறு பொருள்கொள்ளலாம்:
    ஆற்றல்வாய்ந்த தெய்வங்களின் பாவைகள், பூவுலகில் வாழும் ஆடு, மாடு, யானை முதலான விலங்குகளின் பாவைகள், கடலில் வாழும் ஜீவராசிகளின் பாவைகள், பலவிதமான பறவைகளின் பாவைகள், விரைந்து நெளிந்து ஊர்ந்து செல்லும் புழு, பூச்சிகள், மரவட்டை, பாம்பு ஆகியனவற்றின் பாவைகள், செடி, கொடி, மரங்கள் ஆகியனவற்றின் பாவைகள் என ஓரறிவு முதல் ஐந்தறிவு வரை உள்ள உயிர்களின் பாவைகளை எல்லாம் எண்பத்துநான்கு இலட்சம் வகைகளில், எண்ணற்ற வடிவங்களால் இவளே அப்பாவைகளைச் செய்கிறாளாம். அன்னை பராசக்தி இவ்வுயிர்களை பஞ்சபூதங்களால் விளையாட்டாகவே உண்டுபண்ணுகிறாள். அது மட்டுமா? அவற்றைக் கனவு, நினைவு / விழிப்பு, உறக்கம் ஆகிய நிலைகளில் தன்னுடைய விருப்பத்திற்கு ஏற்றபடி வைத்து தினமும் விளையாடுகிறாள்.
    (எல்லா உயிர்களுக்கும் பராசக்தி அன்னை திரும்பத்திரும்பப் படைத்து அளிக்கும் பலவிதமான வடிவங்கள் இப்பாடலில் நயம்படக் கூறப்படுகின்றன).
    வல்ல தெய்வப் பாவை மானிடப்
    பாவையொடு வாழ்விலங்கின் பாவையும்
    மறிதிரைப் புனலிடை வழங்கிடும் பாவையும்
    மருவு பறவைப் பாவையும்
    ஒல்லையில் நெளிந்துதாம் ஊர்ந்திடும்
    பாவையும் உறும் தாவரப் பாவையும்
    ஒரு பொறிப்பாவை முதல் ஐம்பொறிப்
    பாவையும் உற்றிடும் பாவை எல்லாம்
    எல்லவே சாக்கிரம் கனவொடு
    சுழுத்தியுடன் எழும் பூதாசார வடிவாய்
    எண்பத்து நாலுலக்கத்தான கொள்கையினில்
    எண்ணிறந்திடும் கோலமும்
    பல்லுயிர்ப் பாவை விளையாடு நற்
    பூவையே பாவை விளையாடி அருளே!
    பரம சிவகாம சுந்தரி அம்மை இனிய
    பொற்பாவை விளையாடி அருளே!
    (பாவை- பொம்மை; பொறி- அறிவு; சாக்கிரம்- விழிப்பு; சுழுத்தி- உறக்கம்)
    (தில்லைச் சிவகாமியம்மை பிள்ளைத்தமிழ்-
    பாவை விளையாடல் பருவம்- நல்லதுக்குடி கிருட்டிணையர்)
    இவ்வுலகில் நிகழும் அனைத்துச் செயல்களையும் பராசக்தியின் விளையாட்டாகக் கண்டு மகிழ்ந்து பாடிப்போற்றும் இந்நூலாசிரியர் சக்தி உபாசகர் என எண்ண இடமுள்ளது.
    பிள்ளைத்தமிழ் பிரபந்தத்தின் அமைப்பில் ஒவ்வொரு பருவத்திற்குமான பத்துப்பாடல்களில், தொன்மச் செய்திகள், அழகியல், சந்தநயம், அணிநயங்கள் மட்டுமின்றி, சைவசித்தாந்த, தத்துவ, சமய விளக்கங்களையும் கூட்டிப் பாடல்களை அமைப்பதே நல்லிசைப்புலவோரின் வழக்காகும் எனப் பேராசிரியர் முனைவர் கோ. ந. முத்துக்குமாரசுவாமி அவர்கள் கூறுகிறார்.
    தொடர்ந்து படித்து ரசித்து மகிழ்வோம்.

    (ஆய்வுக்கு உதவிய நூல்: நல்லதுக்குடி கிருட்டிணையர் பாடிய தில்லைச் சிவகாமியம்மை பிள்ளைத்தமிழ்- மூலமும் உரையும்- உரையாசிரியர்: முனைவர் திரு. கா. நாகராசு- 2015)

    மீனாட்சி க. (மீனாட்சி பாலகணேஷ்)
    {முனைவர் பட்ட ஆய்வாளர், தமிழ்த்துறை,
    கற்பகம் பல்கலைக் கழகம், கோவை,
    நெறியாளர்: முனைவர் ப. தமிழரசி,
    தமிழ்த்துறைத் தலைவர்.}

    ********************************

    Share
  • பறவையின் பயணம்

    -மீ.விசுவநாதன்

    நீண்ட தூரப் பயணமதில்
          நின்று போகப் பொழுதிலை!
    கூண்டில் சிக்கித் தவித்திடாத
          குஷிக்கு ஈடு இணையிலை!   flyingbirds
    குடும்ப மாக உறவுடனே
          கொண்ட உணவில் குறையிலை!
    கொடும்ப கைமை எதுவுமின்றிக்
          குறித்த வாழ்வில் பழுதிலை! 

    விரிந்த வான வெளிப்பரப்பில்
          விதவித வண்ணப் பறவைகள்
    தெரிந்த திசையில் கவனமுடன்
          தினந்தினம் செல்லும் அழகிலே
    மறந்து நிற்பேன் எனையிழந்து
          மனிதன் அதுபோல் பழகினால்
    சிறந்து வாழ முடியுமென
          சிந்தித் திருப்பேன் தனியிலே! 

     

    Share
  • அமெரிக்க உச்சநீமன்றத்தில் நீதிபதிகளின் கொள்கைகளும் தீர்ப்புகளும்

    — நாகேஸ்வரி அண்ணாமலை.

    நான் சிறு வயதில் நீதிமன்றங்கள் (இந்திய நீதிமன்றங்கள் உட்பட) உண்மையின் உறைவிடங்கள் என்று நினைத்துக்கொண்டிருந்தேன். அதிலும் எல்லாம் சட்டப்படி நடக்கும் அமெரிக்காவில் அமெரிக்க உச்சநீதிமன்றம் தன்னுடைய தீர்ப்பில் எப்போதும் நியாயத்தையே கடைப்பிடிக்கும் என்றும் அது உண்மையான நியாயமாக (absolute truth) இருக்கும் என்றும் நினைத்திருந்தேன். உண்மை என்பது பன்முகங்கள் கொண்டது என்பதும், அந்த உண்மையைப் பார்ப்பவர்களைப் பொறுத்து அதன் முகம் மாறும் என்பதும் இப்போது தெளிவாகியிருக்கிறது. அமெரிக்காவில் சில வருடங்கள் வாழ்ந்த பிறகுதான் புரிகிறது அங்குள்ள நீதிபதிகளின் கொள்கைகளைப் (ideology) பொறுத்து அவர்களுடைய தீர்ப்புக்களும் அமையும் என்பது.

    supreme court judges

    தற்சமயம் அமெரிக்க உச்சநீதிமன்றத்தைப் பொறுத்தவரை ஒரு பெரிய போராட்டம் இரண்டு அரசியல் கட்சிக்குள்ளும் நடந்துவருகிறது. அன்டோனின் ஸ்காலியா என்னும் 79 வயது நீதிபதி திடீரென்று பிப்ரவரி மாதம் விடுமுறையைக் கழிக்கச் சென்ற இடத்தில் உயிர் துறந்தார். அவர் தனிமையில் இறந்து கிடந்ததால் அவர் இறந்து சில மணி நேரங்கள் கழித்துத்தான் அவர் இறந்த விஷயம் தெரியவந்தது. அவர் மரணம் பலருக்குத் தெரியவந்து அவருடைய இறுதிச் சடங்குகளுக்கான ஏற்பாடுகள் முடிவதற்குள் அவருடைய இடத்திற்கு யாரை நியமிப்பது என்ற சர்ச்சை இரண்டு கட்சிகளைச் சேர்ந்த செனட் அங்கத்தினர்களுக்கிடையே ஆரம்பித்துவிட்டது.

    அமெரிக்கா பிரிட்டனிடமிருந்து சுயேச்சையாக விலகித் தனி நாடாகத் தன்னைப் பிரகடனப்படுத்துக்கொண்ட பிறகு முதன் முதலாக தனக்கு ஒரு அரசியல் அமைப்புச் சட்டத்தை 1776-இல் எழுதிக்கொண்டது. புதிய அரசாங்கத்தின் சட்டங்கள் இயற்றும் அங்கத்தையும் அவற்றை அமல்படுத்தும் அங்கத்தையும் உண்டாக்கிய பிறகு, அதிகாரம் இந்த இரண்டு துறைகளின் கைகளில் மட்டும் இருக்க வேண்டாமென்று கருதி அமெரிக்க நாட்டை நிர்மாணித்தவர்கள் அமெரிக்க உச்சநீதிமன்றத்தையும் 1789-இல் உருவாக்கினார்கள். அதில் ஆறு நீதிபதிகள் இருப்பார்கள் என்றும் முடிவு செய்யப்பட்டது. அந்த எண்ணிக்கை பல சமயங்களில் வேறுபட்டாலும் பொதுவாக அமெரிக்க உச்சநீதிமன்றத்தில் ஒன்பது நீதிபதிகள் இருந்து வருகிறார்கள். உச்சநீதிமன்ற நீதிபதிகள் அவர்களுடைய ஆயுள் வரை அந்தப் பதவியில் நீடிக்கலாம். அவர்கள் விரும்பினால் ஓய்வு பெறலாம். (வெஸ்லி பிரவுன் என்னும் யு. எஸ். மாவட்ட நீதிபதி தன்னுடைய 104– வது வயது வரை, தூக்கத்திலேயே தன் உயிர் பிரியும் வரை, நீதிபதியாக வேலை பார்த்தார். என் ‘ஆயுளையோ, நன்னடத்தையையோ எதை முதலில் இழக்கிறேனோ அதுவரை பதவியில் நீடிப்பேன்’ என்றும் ‘நாட்டிற்குச் சேவை செய்வதற்காக வந்தேன். அதைச் செய்ய முடியும் வரை செய்வேன்’ என்றும் கூறியிருக்கிறார்.)

    இந்தியாவில் பிரிட்டனிடமிருந்து நாம் சுதந்திரம் பெற்ற பிறகு மொழிவாரி மாநிலங்களாக இந்தியாவைப் பிரித்துக்கொண்டோம். அமெரிக்காவில் புதிய கண்டத்தில் காலனிகளாக உருவானவை ஒன்று சேர்ந்து அமெரிக்க ஐக்கிய நாடுகள் என்ற நாட்டை உருவாக்கிக்கொண்டன. பழைய காலனிகள் அந்த நாட்டின் மாநிலங்களாக உருவாகின (அதனால் மாநிலங்களுக்குள் எல்லைத் தகராறு எழுவதில்லை!.) இந்த நாட்டிற்கு அரசியல் சாசனம் எழுதி எல்லாக் காலனிகளுக்கும் அந்த காலனிகளின் சம்மதம் கேட்டு அனுப்பினார்களாம். அப்போது சில காலனிகள் தங்களுக்கு இன்னும் அதிக உரிமைகள் வேண்டுமென்று கேட்டதால் Bill of Rights என்றவற்றைப் புதிதாக உருவாக்கிச் சேர்த்தார்களாம். இப்போதும் ஒவ்வொரு மாநிலத்துக்கும் ஒரு அரசியல் சாசனம் உண்டு. அதைப் பாதுகாக்க ஒவ்வொரு மாநிலத்திலும் ஒரு உச்சநீதிமன்றம் உண்டு. அந்த மாநிலத்துக்கே உரியப் பிரச்சினைகளை இந்த உச்சநீதிமன்றங்கள் தீர்த்துவைக்கும். நாடு முழுவதையும் பற்றிய பிரச்சினை என்றால் அது அமெரிக்க உச்சநீதிமன்றத்திற்கு வரும்.

    அமெரிக்க உச்சநீதிமன்றம் தீர்த்துவைத்த முக்கியமான வழக்குகளில் முக்கிய இடம் வகிக்கும் சிலவற்றைப் பார்ப்போம். ஜனாதிபதி லிங்கன் கறுப்பர்களுக்கு சுதந்திரம் கொடுத்த பிறகும் அவர்களுக்கு முழு உரிமைகளும் வழங்கப்படவில்லை. ஒரு வழியாக அவர்களுக்குச் சில உரிமைகள் வழங்கப்பட்டாலும் அவர்களும் வெள்ளையர்களும் பொது இடங்களில் ஒன்றாக இருக்க முடியாது. பள்ளிகள், கல்லூரிகள், ஓட்டல்கள் என்று எல்லா இடங்களிலும் கறுப்பர்களும் வெள்ளையர்களும் தனித்தனி இடங்களில்தான் உட்கார வேண்டும். வெள்ளை மாணவர்கள் படிக்கும் கல்வி நிறுவனங்களில் கறுப்பர்களுக்கு இடமில்லை. கருப்பர்களும் வெள்ளையர்களும் இருவரும் அரசியல் சாசனப்படி சமமானவர்கள் என்றாலும் வேறு வேறு இனத்தவர்; ஆகவே தனித்தனியாக வைப்பது சரியே என்ற அடிப்படையில் மேலே சொன்ன ஒதுக்கல் கொள்கை அமலில் இருந்தது. இது பெரும்பான்மையினரான வெள்ளை இனத்தவர் செய்த சட்டம். தன் மகளை வெள்ளைக் குழந்தைகள் மட்டுமே படிக்கும் பள்ளியில் சேர்க்க மறுத்த கல்விக் குழுவின் (Board of Education) முடிவை எதிர்த்து பிரவுன் என்னும் கறுப்பர் 1953-இல் வழக்குத் தொடர்ந்தார். ‘வேறு இனத்தவர்கள் என்ற முறையில் ஒதுக்கல் கொள்கையில் அவர்களுக்குச் சம உரிமைகள் வழங்கப்படவில்லை, அதனால் அது சட்டப்படி செல்லாது’ என்ற வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த தீர்ப்பை அமெரிக்க உச்சநீதிமன்றம் வழங்கியது. அன்றுவரை இரு இனத்தவர்களுக்கும் தனித்தனி இடம் என்ற நிலைமை போய், ஒன்றாக வாழும், படிக்கும், பணிபுரியும் நிலை ஏற்பட்டது. இந்த வழக்கில் ஒன்பது நீதிபதிகளுக்கிடையே கொள்கை வேறுபாடு இல்லை. தீர்ப்பு ஒரு மனதாக இருந்தது.

    அடுத்ததாக 1973-இல் பெண்களுக்கு கருச்சிதைவு செய்யும் உரிமை மறுக்கப்படுவதை எதிர்த்து ஒரு பெண் வழக்குத் தொடர்ந்தார். கருச்சிதைவு செய்துகொள்வது பெண்களுக்குரிய உரிமை என்று அமெரிக்க உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கினாலும், குழந்தையின் உயிருக்கோ தாயின் உயிருக்கோ ஆபத்து என்றால் கருச்சிதைவை அனுமதிக்கும் உரிமையை அந்தந்த மாநிலங்கள் முடிவுசெய்யும் என்றும் அறிவித்தது. இந்த முடிவை தங்களுக்குச் சாதகமாகப் பயன்படுத்திக்கொண்டு சில மாநிலங்கள் பல நிபந்தனைகளை விதித்து பெண்கள் கருச்சிதைவு செய்துகொள்ளாமல் பார்த்துக்கொள்கிறது. மாநிலங்களுக்கென்று சில உரிமைகள் இருப்பதால் உச்சநீதிமன்றமும் இம்மாதிரி விஷயங்களில் இந்த மாதிரியான தீர்ப்பை வழங்குகிறது. இந்த வழக்கில் ஏழு நீதிபதிகள் சார்பாகவும் இரண்டு நீதிபதிகள் எதிராகவும் தீர்ப்பளித்தனர். இந்த வேறுபாடு நீதிபதிகளின் கருச்சிதைப்புப் பற்றிய கொள்கைகளிலிருந்து பிறந்தது.

    சமீப காலத்தில் உச்சநீதிமன்றத்திற்கு வந்த இன்னொரு முக்கியமான வழக்கு ஒபாமா 2010-இல் கொண்டுவந்த எல்லோருக்கும் கிடைக்கக் கூடிய மருத்துவ வசதிச் சட்டம் பற்றியது. அந்தச் சட்டப்படி எல்லோரும் மருத்துவ இன்சூரன்ஸ் எடுக்க வேண்டும், அப்படி எடுக்காதவர்கள் அபராதம் கட்ட வேண்டும். இதை எதிர்ப்பவர்கள் வழக்குத் தொடுத்ததால் உச்சநீதிமன்றத்திற்கு வழக்கு வந்தது. இப்போது தலைமை நீதிபதியாக ஜான் ராபர்ட்ஸ் இருக்கிறார் (இவர் இரண்டாவது புஷ் காலத்தில் அப்போதிருந்த தலைமை நீதிபதி இறந்ததால் நியமிக்கப்பட்டவர். இவர் புஷ்ஷைப்போல் பழமைவாதி. மத்திய அரசின் நீதிமன்றங்களில் நீதிபதிகளை நியமிக்கும் உரிமை ஜனாதிபதிக்கு உண்டு. ஜனாதிபதி அவருக்கு வேண்டியவரை முன்மொழிந்தாலும் செனட் அங்கத்தினர்கள் அதை ஒப்புக்கொள்ள வேண்டும்.) ராபர்ட்ஸ் பழமைவாதி என்பதால் கட்டாய இன்சூரன்ஸ் சட்டத்தை அரசியல் சட்டத்திற்குப் புறம்பானது என்று தீர்ப்பு வழங்கலாம் என்று பலர் பயந்தனர். ஆனால் அம்மாதிரி நடக்கவில்லை. இன்சூரன்ஸ் எடுக்கும்படி குடிமக்களை அரசு கட்டாயப்படுத்த முடியாது என்று சிலர் கூறிய மறுப்புகளை எதிர்த்து உச்சநீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை நியாயப்படுத்த இப்படி வாதாடியது: திருமணம் செய்துகொள்ளாதவர்களுக்கும் திருமணம் செய்துகொண்ட பிறகு துணையை விட்டுப் பிரிந்து தனித்து வாழ்பவர்களுக்கும் சட்டத்தில் அதிக வரி வசூலிக்கப்படுகிறது. அது மாதிரி இன்சூரன்ஸ் எடுத்துக்கொள்ளாதவர்களுக்கும் அதிக வரி வசூலிக்கப்படுகிறது. சட்டத்தை எப்படியும் அர்த்தப்படுத்த முடியும் என்பதற்கு இரு ஒரு உதாரணம். இந்த வழக்கில் தீர்ப்பு 6:3 என்ற விகிதத்தில் இருந்தது. இந்தப் பிளவும் நீதிபதிகளின் அரசாங்கத்தின் அதிகாரம் பற்றிய கொள்கைகளைப் பிரதிபலித்தது.

    உச்சநீதிமன்றத்திற்கு நீதிபதிகளை நியமிக்கும்போது ஜனாதிபதிகள் தங்கள் கொள்கைகளுக்கு ஏற்றவர்களாக இருப்பவர்களை நியமிக்கிறார்கள். இப்போது உச்சநீதிமன்றத்தில் இருப்பவர்களில் நான்கு பேர் பழமைவாதிகள்; மூன்று பேர் தாராளவாதிகள் (liberals); ஒருவர் இரண்டிலும் சேராதவர். ஒபாமா ஒரு தாராளவாதியை நியமித்தால் எதிர் காலத்தில் வரும் வழக்குகளில் தாராளவாதிகளின் கை ஓங்கி தீர்ப்புகள் இவர்கள் வழங்கும் தீர்ப்புகளாக அமைந்துவிடலாம் என்பதற்காக குடியரசுக் கட்சியைச் சேர்ந்தவர்கள் இது ஒபாமாவின் கடைசி வருடம் என்பதால் அவர் நியமிக்கக் கூடாது என்கிறார்கள். தன் ஆட்சிக் காலம் முடிவதற்குள் ஒரு தாராளவாதியை நியமித்துவிட வேண்டும் என்பதில் ஒபாமா குறியாக இருக்கிறார். இதை நிறுத்துவதற்கு என்னென்னவோ முட்டுக் கட்டைகள் போடுகிறார்கள் எதிர்க் கட்சிக்காரர்கள். இப்போது செனட்டில் ஜனநாயகக் கட்சியின் சிறுபான்மைத் தலைவராக இருக்கும் ஹேரி ரீட் என்பவர் பல வகை உத்திகளைக் கையாண்டு ஒபாமா தேர்ந்தெடுக்கும் நபரை நியமிக்கவைத்துவிடுவார் என்கிறார்கள். அவருக்கு இது செனட்டில் கடைசி ஆண்டு. மறுபடியும் செனட் பதவிக்குப் போட்டியிடப் போவதில்லை என்று அவர் அறிவித்துவிட்டார். அரசியலில் இது அவருக்குக் கடைசி ஆண்டாதலால் தன்னுடைய பங்கிற்கு இதைச் செய்துவிட்டுப் போக வேண்டும் என்று நினைக்கிறார்.

    அரசியல் காரணங்களுக்காகக் குடியரசுக் கட்சியினர் மறுக்க முடியாத, அதே சமயம் தாராள மனப்பான்மை உடைய, ஒருவரை நியமித்து குடியரசுக் கட்சி அங்கத்தினர்களைச் சம்மதிக்க வைத்துவிடலாம் என்று ஒபாமா நம்பிக்கொண்டிருக்கிறார். இதில் இவர் வெற்றி பெற்றால் இனி வரும் வழக்குகளில் அமெரிக்க உச்சநீதிமன்றம் வழங்கும் தீர்ப்புகள் ஒரு வகையாக இருக்கும். இல்லையென்றால் தேர்தலுக்குப் பிறகு அடுத்த ஜனாதிபதியாக வருபவரின் கொள்கையைப் பொறுத்து நீதிபதி நியமிக்கப்படுவார். தீர்ப்புகளும் வேறு வகையாக இருக்கும்.

    Share
  • திண்ணை

    — தமிழ்த்தேனீ.

    கட்டுப்பெட்டி கிராமமாக இருந்த திருவிடை மருதூர் அக்கிரகாரத்தில் ஓட்டு வீடுகளும் திண்ணையுமாக இன்னும் சற்றேறக் குறைய தன் பழமை மாறாமல் இருந்தது. திண்ணையிலே சீட்டாடும் கும்பலைத் தாங்கிக் கொண்டு முதுகுச் சுமை தாளாமல் தவித்துக் கொண்டிருந்தாலும் எத்தனை பேர்களை சுமந்தாயிற்று, எத்தனை மனிதர்களைப் பார்த்தாயிற்று, அத்தனை பேரின் அந்தரங்கக் கதையும் தனக்கு மட்டுமே தெரியும் என்கிற கர்வத்தோடே இது வரை வாழ்ந்தாயிற்று, அந்தக் கர்வம்தான் இத்தனை பேருக்கும் சுமைதாங்கியாய் தன்னை ஆக்கி வைத்திருக்கிறது என்றே உணராமல் நம்மை அசைக்க ஆளில்லை எனும் கர்வத்தோடு, வெயிலையும் மழையையும் தாங்கிக் கொண்டு, பற்றாக்குறைக்குத் தேக்கு மரத் தூண்களையும் தாங்கிக் கொண்டு, கர்வத்தின் அலகை அகல விரித்து கால்பரப்பி கனத்தின் அழுத்தத்தால் கால் மடங்கி அப்படியே சமமாய் பரந்து படர்ந்து அந்தரங்க ரகசியங்களையும் கிசுகிசுக்களையும் கேட்பதே பேரானந்தம் என்று நினைத்துக் கொண்டு இன்னமும் எப்போது இடிபடுவோம் என்றே தெரியாமல் காத்திருக்கிறது.

    இன்றும் வாயில் வெற்றிலைக் குதப்பலுடன் புளிச் புளிச்சென்று முதுகின் மேலேயே துப்பவும், கையிலே சீட்டுகளைப் பிடித்துக் கொண்டு ஜோக்கர் வரவில்லை என்று பொறுமிக் கொண்டு காத்திருக்கும் சீட்டாட கும்பல் வந்தாயிற்று. இனி சுமைதான். எவ்வளவு வேண்டுமானாலும் சுமக்கிறேன். ஆனாலும், எனக்குத் தினமும் கிசுகிசுக்களையும் அந்தரங்கங்களையும் காதால் கேட்டால்தான் தூக்கமே வரும்.

    திண்ணைக்கேதடா காது என்று யோசிக்கிறீர்களா? சுவருக்கும் காது உண்டு என்று சொல்வார்களே!! எனக்கு இருக்கக் கூடாதா? எத்தனையோ ராமநாதன்கள்… எத்தனையோ விஸ்வநாதன்கள்… எத்தனையோ கிருஷ்ணமணிகள் என்று அத்தனை பேரையும் பார்த்த திண்னை நான் என்று நினைக்கும் போது இன்னமும் கர்வம் ஓங்கி வளர்ந்தது. பெரியவங்க சொல்வாங்க, வாயை மூடிக்கிட்டு காதைத் தொறந்து வையி, அப்போத்தான் ஞானம் வரும்னு, திண்ணையாய் இருக்கும் என்னை உதாரணமாக வைத்துத்தான் அதைச் சொன்னாங்க தெரியுமா? என்று மனம் படபடக்கிறது. இது யாருக்குமே புரிய மாட்டேங்குது.

    ராமநாதன் தன் கையிலிருந்த சீட்டுகளை உற்றுப் பார்த்தான். மப்பும் மந்தாரமுமாக இருந்த மானமும் மனமும் கண்களை மறைக்கவே உற்றுப் பார்த்தான். சிவந்த விழிகள் மேலும் சிவந்தன. கை நடுங்கியது. ஆண்டவா!!! எனக்கு இந்தத் தடவை எல்லாம் நல்ல நல்ல சீட்டா வந்திருக்கு. ஒரே ஒரு ஜோக்கர் மட்டும் இருந்தா ஜெயிச்சிடுவேன். எப்பிடியாவது கருணை காட்டுப்பா, என்று வேண்டியபடி ஒரு சீட்டை எடுத்தான். அது தேவையே இல்லாத சீட்டு.

    “இந்தத் தடவையும் என்னைக் கவுத்திட்டியா?” என்றார் உரக்க எதிரே இருந்த ஜெயராமன்.

    “ஆமாம், கவுத்துட்டேன்,” என்றார் .

    “உன்னை இல்லைப்பா,” என்றார் ராமநாதன்.

    “நான் உன்னைக் கவுத்துட்டேன்னு சொன்னேன், நான் ஜெயிச்சிட்டேன்,” என்றான் ஜெயராமன்.

    ஹூம் …

    “எல்லாரும் காசைக் குடுங்க,” என்று கல்லாகட்ட ஆரம்பித்தார் ஜெயராமன்.

    தெய்வமே எவ்ளோ வேண்டறேன், எவ்ளோ திறமையா ஆடினாலும் ஒரு சீட்டுலே என்னைக் கவுக்குறியே, என்னை ஜெயிக்கவே விடமாட்டியா? என்று நொந்து போனார் ராமநாதன். அவருக்குக் காலையில் அவருக்கும் அவர் மனைவிக்கும் நடந்த உரையாடல் நினைவுக்கு வந்தது.

    “என்னோட ஏழு தலைமுறைக்கும் உக்காந்து சாப்டாலும் என் சொத்து தீராது. நீ எதுக்கு என்னை வேலைக்குப் போகப்படாதா? அதைவிட்டுட்டு எப்போ பாத்தாலும் சூதாடிண்டு இருக்கேன்னு திட்ற,” என்றார் ராமநாதன்.

    “பழங்கதையே பேசாதீங்க. இப்போ என்ன நிலமைன்னு தெரியுமா? இன்னும் மூத்தவளுக்கே கல்யாணம் செய்யலை. இப்போ நாம வெறும் காலிப் பெருங்காய டப்பாதான். எல்லாத்தையும் சீட்டாடியே தோத்தாச்சு,” என்றாள் மூக்கைச் சிந்தியபடி.

    சுருக்கென்றது அவருக்கு. அடேடே!!! இவ்ளோ நாள் என்ன நிலமைன்னே தெரியாமே சீட்டாடினோமே!! இதுலேயாவது ஜெயிச்சோமா? இதுலேயும் தோத்துண்டே இருக்கோம். வாழ்க்கையிலேயும் தோத்துட்டோமா? ஒரு தீர்மானத்துக்கு வந்தவராய் எழுந்தார்.

    “நான் இனிமே சீட்டாடப் போறதில்லே. நாம அதிர்ஷ்டத்தையும் கடவுளையும் நம்பி ஆடிண்டே இருக்கோம். ஆனா நாம தன்னம்பிக்கையா ஆடவேண்டிய ஆட்டத்தை ஆடறதில்லே. இனிமே என்னைத்தான் நம்பப் போறேன். இனிமே நான் ஆடற எல்லா ஆட்டமும் என்னை நம்பியே இருக்கும்,” என்று சொல்லிவிட்டு தள்ளாடினார்.

    “இனிமே இவரு போயி தனியா ஆடப் போறாராம்! நிக்கவே முடியலே. உடம்பு தள்ளாடுது, இதுலே ஆட வேற போறாராம்,” என்று சிரித்தனர் அனைவரும்.

    திண்ணை ஆடாமல் அசையாமல் கவனித்தபடி இருந்தது. மாநகராட்சியின் சாலைப் பணியாளர்கள் ராக்‌ஷச இயந்திரத்தோடு வந்து கொண்டிருக்கின்றனர். சாலையை அகலமாக்கப் போறாங்களாம். திண்ணையை எல்லாம் இடிச்சிருவாங்களாம் என்று எங்கிருந்தோ ஒரு குரல் கேட்டது.

    Share
  • துரும்பைத் திரியாக்கி ஒளிரும் பெண்கள்

    — பானு.

    கேரளாவில் அறிமுகப்படுத்தப்பட்ட ஷீ டேக்ஸி மற்றும் ஷீ ஆட்டோ பற்றிக் கேள்விப்பட்டதில் ஏற்பட்ட ஆர்வம் (பொறாமை?? 🙂 ) இன்னும் தீர்ந்த பாடில்லை. அதற்குள் மற்றொரு பெரும் வாய்ப்பு அம்மாநிலப் பெண்களுக்குக் கிட்டியுள்ளது. பெண் முன்னேற்றம் என கோஷம் எழுப்புவதோடு நின்றுவிடவில்லை. சாத்தியமான எல்லா முயற்சிகளையும் தொடர்ந்து செய்து வருவதில் கேரளா அரசு நிச்சயம் மற்ற மாநிலங்களுக்கு ஒரு முன்மாதிரியே.

    she taxiமுழுக்க முழுக்கப் பெண்களாலேயே நிர்வகிக்கப்பட்டு பெண்களின் பயன்பாட்டுக்காவே இயங்கி பெண்களின் பொருளாதார வளர்ச்சிக்காகத் துவங்கப்பட்டு பெண்கள் பாதுகாப்பை உறுதி செய்துள்ளது ஷீ டேக்ஸி. பெண்கள் பாதுகாப்பின்மைக்கு அவர்களது தனிமைப் பயணங்களும் நிச்சயமாகத் தவிர்க்க இயலாத ஒரு வாழ்க்கை முறையாகிவிட்ட இக்காலத்தில் தனியாக வெளியே செல்லாதீர்கள் எனத் தடுக்காமல், முறையான பாதுகாப்புக்கு ஏற்பாடு செய்து கொடுப்பது தான் அறிவுடைமை. அதனைக் கேரள அரசு அருமையாகச் செய்து காட்டியுள்ளது.  ஷீ டேக்ஸி பற்றி அறிந்துகொள்ளப் பார்க்க பதிவு.

    இவ்வருட மகளிர் தினத்தை முன்னிட்டு கேரளாவில் ஷீ ஷாப்ஸ் She-shops அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. கேரள அரசின் மகளிர் முன்னேற்றக் கழகம் அளிக்கும் உதவியுடன் துவங்கப்பட்டுள்ளன ஷீ ஷாப்ஸ்.

    பெண்கள் முன்னேற்றம் மற்றும் சுகாதாரமான உணவு என்ற கொள்கை நோக்கத்தோடு வீறு நடை நடக்கிறது ஷீ ஷாப்ஸ்.

    மைதா மாவு, செயற்கை நிறங்கள் போன்ற கேடு விளைவிக்கும் பொருட்களுக்கு இங்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது. கேரளாவின் பாரம்பரிய உணவுகளான கேழ்வரகு, அவல், நவரா அரிசி போன்றவை இங்குப் பரிமாறப்படும் முக்கிய உணவுகள்.

    உணவு தயாரிப்பதில் இருந்து மின்சார ஆட்டோக்களில் விநியோகம் செய்வது, விற்பது என அனைத்தும் செய்வது பெண்கள்..பெண்கள் ..பெண்கள் மட்டுமே.

    இங்குச் சேகரிக்கப்படும் உணவுக்கழிவுகள் இயற்கை எரிவாயு தயாரிக்க அனுப்பப்படுகிறது.

    இங்குப் பணியாற்ற ஆர்வமுள்ள பெண்களின் பொருளாதாரத்தேவைகள் முதற்கொண்டு அனைத்தும் தீர விசாரிக்கப்பட்டு வேலைகளில் ஈடுபடுத்தப்படுகின்றனர். பயிற்சி தேவைப்படுவோருக்குப் பயிற்சியும் அரசின் மகளிர் முன்னேற்றக் கழகம் வழங்க முன்வருகிறது.

    ஹ்ம்ம்ம்ம்ம்…..பெண் முதல்வர் என்பதால் அந்த மாநிலத்தின் பெண்களுக்கெல்லாம் முன்னேற்றம் கிடைத்துவிட வேண்டும் என்பதெல்லாம் கட்டாயமா என்ன? பெண் முதல்வருக்கு இதைவிட முக்கியமான கட்சிப்பணிகள் இருக்கும் என்று புரிந்து கொள்ளும் பக்குவத்தை நாம் வளர்த்துக்கொள்ள வேண்டும். எனினும், இடம், நேரம் பாகுபாடின்றி கிடைக்கும் ஒரு துரும்பைக் கொண்டேனும் பெண்கள் சாதிக்கக் காத்திருக்கிறார்கள் என்பது மறுக்க முடியாத உண்மை.

    அரசாங்கத்தின் உதவி இல்லையெனினும் முன்னேறத் துடிக்கும் பெண்கள் ஒருங்கிணைந்து ஷீ ஷாப்ஸ், ஷீ டேக்ஸி போன்ற முயற்சிகளில் ஈடுபட்டு வெற்றி காணலாம்.

    படம் உதவி:
    http://www.indiatimes.com/news/india/mumbai-s-first-batch-of-women-auto-rickshaw-drivers-to-take-to-the-roads-soon-249497.html

    http://media.indiatimes.in/media/content/2016/Jan/she%20taxi_1_1452930519.jpg

    Share
  • ’’அண்ணாமலைபுர அய்யன் தங்கத்தேர்’’….

    கிரேசி மோகன்

    ஓவியம் - கிரேசி மோகன்
                         ஓவியம் – கிரேசி மோகன்

    ——————————————————————————–

    ‘’தங்கரதம் காந்தமலை ஜோதியுடன் -அய்யன்
    திருமேனி வில்லம்பில் சாந்தியுடன்….
    வடம் பிடித்திழுத்து வந்தோம் சன்னிதியில்
    வந்தடைந்தோம் இல்லம் நிம்மதியில்’’….

    இனி என் Form வெண்பாவில்….

    ஆணென்றும் பெண்ணென்றும் நானென்றும் நீயென்றும்
    வீணிந்த வித்தியாசம் ஏனென்று – ஆணென்ற
    பெண்மைக்கும் பெண்பாதி ஆண்மைக்கும் சேயானோய்
    உண்மைக்குள் உய்ய உதவு….(1)….

    அரிதாரம் பூசி அரிதாரம் ஆனான்
    கரியாடை பூண்டோன் கரத்தில் -அறிவே
    அரனில் அரியை அறிய புரிவாய்
    சரணம் சபரி மலைக்கு….(2)

    அத்தனும் பித்தனும் சித்தம் ஒருமித்த
    தத்துவமே தான்தோன்றி தற்பரமே -சத்குரு
    ஈசா சபரிகிரி வாசா சரணமுற்றோர்
    நேசா வணக்கம் நினக்கு….(3)

    வங்கக் கடல்கடைந்த சிங்கனும் சங்கரனும்
    அங்கம் கலக்க அவதரித்த -எங்களூர்
    அண்ணா மலைபுர அய்யன்தேர் கண்டதில்
    பண்ணாத பாவமும் போச்சு….(4)

    பிறப்பெனக்கு வேண்டும்நின் பம்பையில் நீராய்
    இறப்பணைந்த கற்பூரத் தீயாய் -மறப்பெனக்கு
    காமக் குரோத உலோபமத மாச்சரியம்
    நாமத் திருநீறோ னே….(5)….கிரேசி மோகன்….

    Share
  • கேசவ் வண்ணம் – கிரேசி எண்ணம்

    fe64932f-f788-4594-af82-efbbcf262a34
    கேசவ், பிரமாதம்….லகு வாசிஷ்டம் போல கண்ணன் உங்களுக்கு
    உள்ளங்கை நெல்லிக்கனியாய் சுலபமாய் வருகின்றான்…சபாஷ்….

    ”தாய்ப்பசு மேய்ந்திட திண்தோள் மணிவண்ணன்
    சேய்ப்பசுசு மக்கும்வாத் ஸல்யத்தை, -தோய்த்தெடுத்து
    விட்டாயுன் தூரிகையால் வித்தை உனக்கிது(கேசவ்)
    கொட்டாவி போலல கு’’….கிரேசி மோகன்….a

    Share
  • அயற்சொற்களைத் தமிழ் வழக்கில் எழுதுவோம்

    செ.இரா. செல்வக்குமார்.

     

     அயற்சொற்களைத் தமிழ் வழக்கில் எழுதுவோம்

    வேற்றுமொழிச்சொற்கள் இல்லாமல் எழுதுதல் தனித்தமிழ். ஆனால் அப்படியான தனித்தமிழ் எப்பொழுதும் எங்கும் இருந்ததே கிடையாது, இருக்கவும் முடியாது. ஆனால் எல்லோருக்கும் புரியும்படியாகவும் தமிழ்வேரிலிருந்து கிளைக்கும் நல்ல தமிழ்ச்சொற்களை எடுத்தாண்டு நல்ல இலக்கணத்தைப் பின்பற்றி எழுதலாம் என்பதே குறிக்கோள். தமிழ் மரபுக்கு மீறிவரும்பொழுது ஒலியைத் தோராயமாகக் காட்ட எழுதலாம். கிரந்தம் இல்லாமல் எழுதுவதால் தமிழில் 66+ 13 = 79 எழுத்துகள் குறைவாகப் பயன்படுத்தலாம். எழுத்தைக் குறைப்பது மட்டுமே நோக்கமன்று, வேறுபல சிக்கல்களில் இருந்தும் பிழைக்கலாம். மிஞ்சிப்போனால் ஃக, ஃப, ஃச ஆகிய மூன்று காற்றொலிகளைச் சிறுபான்மையாகப் பயன்படுத்தலாம். இதுவும் கூடவே கூடாது எனச்சொல்வோர் உண்டு. அவர்களின் கூற்றில் நல்லறிவுரையும் உள்ளது. எனவே இயன்ற அளவு இயல்பான தமிழிலேயே எழுதலாம். எளிமையைப் போற்றுவோம் என்பதே குறிக்கோள்.

    எண் அயற்சொல் பொது வழக்கு தமிழ் வழக்கு
    1 Big பிக் பெரிய/பிய்கு [பி’க்’கு’]
    2 Biscuit பிஸ்கேட் பிசுக்கோத்து
    3 Bore போர் (அடிக்கிறது) துளை/ஆழ்துளை/போர்
    4 Bow போ / பவ் வில்/இருகண்ணி முடிச்சு/போவ்
    5 Bra பிரா பிரா/கச்சை
    6 Bread பிரட் பிரெடு
    7 Broadway பிராட்வே பிராடுவே
    8 Chaddi (Hindi word) ஜட்டி சயிட்டி
    9 Charles Darwin சார்லஸ் டார்வின் சார்லசு தார்வின்
    10 Deutschland டாய்ச்லாந்து இடாய்ச்சுலாந்து
    11 Dublin டப்ளின் தபுலின்
    12 Fancy பேன்சி பேன்சி
    13 Germany ஜெர்மனி செருமனி
    14 Great கிரேட் பெரிய/பேரரருமை/கிரேட்டு
    15 Greed கிரீட் பேராசை/கிரீடு
    16 Greet கிரீட் வாழ்த்து/கிரீட்டு
    17 HariKi ஹரிகி அரிகி
    18 Hsuan Tsang யுவான்சுவாங் உவான்சுவாங்கு
    19 Hyundai ஹூண்டாய்/ஹண்டே ஃகூண்டை/குயுண்டை/உயுண்டை/ஃகுயுண்டை
    20 Jam ஜாம் பழக்களி/நெரிதடை/சாம்
    21 Japan ஜப்பான் சப்பான்
    22 Kasthuri கஸ்தூரி கத்தூரி
    23 Kushboo குஷ்பு குட்பு
    24 Laddu லட்டு இலட்டு/உலட்டு
    25 Lakh லட்சம் இலட்சம்
    26 Lead லீடு ஈயம்/முன்செலி/வழிகாட்டி/இலீடு
    27 League லீக் குழு/இலீகு
    28 Leak லீக் கசிவு/இலீக்கு
    29 Load லோடு சுமை/உலோடு
    30 London லண்டன் இலண்டன்
    31 Mississippi மிஸ்ஸிஸிப்பி மிசிசிப்பி
    32 Missouri மிஸ்ஸௌரி மிசௌரி
    33 Pig பிக் பன்றி/பன்னி/பிக்கு
    34 Pour போர் ஊற்று/போர்
    35 Robert Clive ராபர்ட் கிளைவ் இராபர்ட்டு கிளைவ்
    36 Rod ராடு கம்பி/இராடு
    37 Rupa Devi ரூபாதேவி உரூபாதேவி
    38 Rupee ரூபாய் உருபாய்
    39 Russia ரஷ்யா உருசியா
    40 San Francisco ஸான் ஃபிரான்ஸிஸ்கோ சான் பிரான்சிசுக்கோ/சான் பிரான்சிசிக்கோ
    41 Shailaja ஷைலஜா சைலசா
    42 Spa ஸ்பா நலநீர்க்குளி/ இசுப்பா
    43 Stephen Hawking ஸ்டீஃபன் ஹாக்கிங் இசுட்டீபன் ஆக்கிங்கு
    44 Stepney ஸ்டெப்னி வைப்பாழி/தெப்பினி
    45 Store ஸ்டோர் கடை/இசுட்டோர்/சேமி
    46 Story ஸ்டோரி கதை/இசுட்டோரி/அடுக்கு
    47 Street ஸ்டிரீட் தெரு/இசுற்றீட்டு
    48 Sure ஷ்யூர் உறுதி/சுயூர்
    49 Times Now டைம்ஸ் நவ் தைம்சு நவ்
    50 Xuanzang யுவான்சுவாங் சுவான்சுவாங்கு

     

     

     

    Share
  • கேசவ் வண்ணம் – கிரேசி எண்ணம்

    4a08111b-9864-443d-8754-c237f54b1738
    ”காரடையான் நோன்புக் கண்ணன்’’
    ————————————————————-

    ‘’நோம்படை(நோன்பு அடை) செய்து ,நவநீதம் தொட்டுண்டு,
    தாம்படைந்தோன் தாளைத் தொழுதேத்து , -ஆம்படையான்,
    சத்யவான் போலாவான் சாகா வரம்பெற்று,
    நித்ய சுமங்கலி நீ’’….கிரேசி மோகன்….

    Share
  • உன்னையறிந்தால் …… (46)

    நிர்மலா ராகவன்

     

    போட்டி மனப்பான்மை

    உனையறிந்தால்12

    கேள்வி: வாழ்வில் முன்னேற்றமடைய போட்டி மனப்பான்மை இருக்க வேண்டியது அவசியம்தானே?
    விளக்கம்: போட்டி மனப்பான்மை இயற்கையிலேயே எழும் ஒன்றுதான். ஆனால், தானே முதன்மையில் இருக்க வேண்டும் என்ற எண்ணம்கொண்டு, எப்போதும், எல்லோருடனும் போட்டி போடுவது நல்லதல்ல. அக்குணம் பகைமையைத்தான் வளர்க்கும்.

     

     

    தாய் தன் தம்பியையோ, தங்கையையோ கவனிக்கும்போதும், கொஞ்சும்போதும், தன்னையும் கவனிக்கச் செய்ய ஏதாவது விஷமம் செய்வது சிறு குழந்தைகளின் இயல்பு. ஒன்றரை வயதுக் குழந்தை தன்னைவிடச் சிறிய சகோதரியின் கண்ணைக் குத்தப் பார்க்கும். போர்வையை விலக்கும். ஏதோ, அதற்குத் தெரிந்த வகையில், தன் மனப்புழுக்கத்தை வெளிக்காட்டும். அதற்காக தண்டிக்கப்பட்டால், பொறாமை மூளும்.

     
    தாம் பெற்ற குழந்தைகளிடம் பாரபட்சம் காட்டும் பெற்றோர் குழந்தைகளிடையே ஒற்றுமையை வளர்க்கத் தவறிவிடுகிறார்கள்.

     
    கதை 1: நான் படிக்கும்போது, எங்கள் பள்ளியில் நடந்த ஒரு விழாவுக்கு வந்திருந்தவளின் சொற்பிரயோகத்தைக் கண்டு நான் அதிர்ந்து போனேன். அழகாக, சிவப்பாக இருந்த தன் இரண்டாவது மகளை அத்தாய், `ராஜாத்தி!’ என்று வாய்க்கு வாய் அழைத்துக் கொஞ்சுவாள். அப்போது அதற்கு ஐந்து வயதிருக்கும். மூன்று வயது மூத்தவளையோ, `மூதேவி!’ என்று திட்டிக்கொண்டே இருந்தாள்.

     
    இம்மாதிரி வளர்க்கப்பட்ட இரு குழந்தைகள் எப்படி பாதிக்கப்படுகிறார்கள் என்று ஆராய்வோமா?
    அதீத செல்லம் கொடுக்கப்படும் குழந்தை திமிராக, அல்லது சோம்பேறியாக வளரக்கூடும். எல்லாவித மனிதர்களையும் புரிந்துகொண்டு சமாளிக்கும் திறன் அதற்கு வராது — தன்னையே உயர்வு என்று எண்ணி வளர்ந்ததால்.

     
    மட்டம் தட்டப்படும் குழந்தை தன்னம்பிக்கை குன்றித் தவிக்கும். என்னதான் பெரிய உத்தியோகத்திற்குப் போனாலும், நீடித்த நல்லுறவுகளைப் பெறமுடியாது தவித்துப்போகும்.

     
    தான் ஏதோ வகையில் இழிந்தவள் என்று நம்பும் பெண் தங்கைக்கே விட்டுக்கொடுத்து விடுவாள். தோல்வியைக் கண்டு அஞ்சுவாள். அல்லது, தங்கையை மீற வேண்டும் என்ற வீம்புடன் மிகக் கடுமையாக உழைப்பாள் — அப்படியாவது அம்மாவின் அன்பைப் பெற முடியாதா என்ற ஏக்கத்தில்.

     
    கதை 2: ஒரு மலையாளப் பெண் எழுத்தாளர் இப்படித்தான் தந்தையின் அன்பைப் பெற முடியாது, தான் எதிலாவது ஜெயிக்க வேண்டும் என்று கடுமையாக உழைத்ததாகப் படித்தேன். பெரும் புகழ் அவளைத் தேடி வந்தது.

     
    இந்தக் கதையை நான் கூறியபோது, ஒரு மாணவன், “அப்போது அப்பா அவளிடம் அன்பாக இருந்தாரா?” என்று ஆவலுடன் விசாரித்தான். எனக்குப் பரிதாபமாக இருந்தது. அவனுடைய தந்தை மூத்தவனான இவனிடம் கடுமையாக நடந்து கொள்வார் என்று சொல்லியிருக்கிறான். இவனுடைய தம்பியைக் கண்டால் உயிரை விடுவாராம்.

     
    “அந்த எழுத்தாளர், `அப்பாவுக்கு என்னைப் பிடித்தால் என்ன, பிடிக்காவிட்டால் என்ன!’ என்று அலட்சியமாக இருந்துவிட்டாளாம்!” என்று கதையை முடித்தேன்.

     
    எல்லாக் குழந்தைகளிடமும் ஏதாவது திறமை இருக்காமல் போகாது. ஒரே தாயின் வயிற்றில் உதித்திருந்தாலும், எந்த இரு குழந்தைகளும் ஒரேபோல் இருப்பதில்லை. அவர்களை அப்படியேதான் ஏற்கவேண்டும். ஒப்பிடுதல் எதற்கு?

     
    கதை 3: “எங்கம்மா என் அக்காளையே எப்போதும் கவனித்துக் கொண்டிருக்கிறாள்! என்னைக் கவனிப்பதே கிடையாது!” என்று என்னிடம் குறைப்பட்டாள் என் நெருங்கிய தோழி, தேவகி.
    சற்று கோபத்துடன், “SHAME ON YOU!” என்று உரிமையுடன் திட்டினேன்.

     
    அவளுடைய அக்காளின் மூளை வளர்ச்சி ஐந்து வயதிலேயே நின்றுவிட்டதென்று அப்பா, தன் பொறுப்பிலிருந்து விலகிக் கண்காணாமல் போய்விட்டார். அக்காளுக்கு தானே எதுவுமே பண்ணிக்கொள்ளத் தெரியாது. வயது முதிர்ந்த தாயின் பாரமும் வேதனையும் புரியாது, இருபத்தெட்டு வயதாகியும் தேவகி தன் தமக்கையுடன் போட்டி போடுவதும் மனித இயல்புதான்.

     
    கதை 4: என் தோழி மேரியின் (பெயர் மாற்றப்பட்டிருக்கிறது) மகன் ஜோசப்புக்குப் பிறவியிலேயே ஆடிசம் (AUTISM). சரியாக நடக்க முடியாது, பிறருடன் பழகத் தெரியாது. தானே ஏதேதோ பேசிக்கொண்டு இருப்பான். ஆனால், அவன் நீரில் பாய்ந்தால், மீன் தோற்றுவிடும். குட்டிக்கரணம் அடித்தபடி நீஞ்சுவான். அவனுடைய உடல் வளர்ச்சிக்கென மாதம் ஒருமுறை அவனைக் கடலுக்கு அழைத்துப்போவதை வழக்கமாகக் கொண்டிருந்தாள் மேரி.

     
    `நீருக்கடியில் உங்கள் மகன் ஏதேதோ வித்தைகள் செய்வது பார்ப்பவர்களுக்குப் பயமாக இருந்தாலும், அவன் உயிருக்கு ஆபத்து ஏற்படும் வகையில் நடந்துகொள்ள மாட்டான்!’ என்று மருத்துவர்கள் அவளுக்குத் தைரியம் அளித்திருந்தார்கள்.
    ஜோசப்புக்காக பெற்றோர் நிறைய நேரத்தையும், பணத்தையும் செலவழிப்பது கண்டு அவனுடைய அண்ணன் பொறாமைப்படவில்லை. அவனுடைய போட்டி மனப்பான்மை வேறு விதத்தில் செயல்பட்டது.

     
    “என் மூத்த மகன் ஜோசப்புக்கு நேர் எதிரிடை! எல்லாவற்றிலும் மிகச் சிறப்பாக இருக்கிறான்!” என்று மேரி சற்றுப் பெருமையுடன் கூறியபோது, நான் விளக்கினேன்: “நீங்கள் கஷ்டப்படுவதைச் சகிக்காது, அவன் தன்னை வருத்திக்கொள்கிறான் — தன்னாலாவது பெற்றோர் சிறிது இன்பம் அடையட்டும், அவர்கள் தன்னையும் கவனிப்பார்களே என்று!”
    மேரியின் வாய் பிளந்தது, திகைப்பால். சிறிது நேரத்திற்குப்பின், “ஜோசப் இப்படி இருப்பது அவன் தப்பில்லேயே!” என்றாள், குரல் கம்ம. “இனி நான் அவனைக் கவனித்துப் பார்க்கிறேன்!” என்றாள்.

     
    “அவனுடன் கலந்து பேசுங்கள். அவன் மற்ற சிறுவர்களைப்போல் வளரட்டும். தம்பிக்கும் சேர்த்து அவன் சாதிக்க நினைப்பது நடக்கிற காரியமா!” என்றேன்.

     
    கதை 5: தாயற்ற தம் இரு குழந்தைகளும் ஒற்றுமையாக இருக்க வேண்டுவது அவசியம் என்று உணர்ந்தவர் அந்த தந்தை. வயது வித்தியாசம் அதிகம் இல்லாத நிலையில், குழந்தைத்தனமாக, தம்பி செய்த விஷமத்தை தந்தையிடம் சொன்னால், அவருக்குத் தன்னை அதிகம் பிடித்துப்போய்விடும் என்று கணக்குப்போட்டாள் சிறுமி. ஆனால் நடந்ததோ!
    `ஏன் விஷமம் செய்தாய்?’ என்று மகனை அடித்தவர், `இன்னொருவரைப்பற்றிக் கோள் மூட்டுவாயா?’ என்று மகளையும் அதேபோல் அடித்தார்!

     
    இப்போது அப்பா அவர்கள் அஞ்சும் நபராக, எதிரியாகிவிட(!), குழந்தைகள் இருவருக்குள்ளும் நெருக்கம் அதிகரித்தது. போட்டி, பொறாமை அறவே இல்லை. ஒருவரின் வெற்றியில் இன்னொருவர் மகிழ்ந்தனர். இதைத்தானே அப்பாவும் விரும்பினார்!

     

     

    குழந்தைகளுக்குள் எழும் போட்டி மனப்பான்மையும், பொறாமையும் பெற்றோர்களால்தான் அதிகரிக்கிறது.
    தன் குழந்தை எதிலாவது வெற்றி பெற்றால் அளவுக்கு அதிகமாக குதூகலிக்கும் அன்னையும், அவன் ஏதாவது போட்டியில் வெற்றி பெறாவிட்டால் விம்மி விம்மி அழும் தாய்மார்களும் தம் நிறைவேறாத கனவுகளையும், ஆசைகளையும் தாம் பெற்ற குழந்தைகள்மூலம் நிறைவேற்றிக்கொள்ள நினைக்கிறார்கள். இதைப் புரிந்து வைத்திருப்பதால், தோல்வி அடையும்போது பெற்றோரின் கனவுகளை நனவாக்க முடியவில்லையே என்ற குற்ற உணர்ச்சிக்கு குழந்தைகள் ஆளாகிறார்கள்.

     
    தொலைகாட்சியில் சிறுவர்களுக்கான போட்டிகளைப் பார்த்தால் ஒரு விஷயம் புலனாகும். சாமர்த்தியமாகப் பதிலளிக்கும் குழுவை பொறாமையுடன் வெறிக்கும் பிற அணிகள் தோல்வியைத்தான் கவ்வுகிறார்கள்.
    இவர்கள் ஏன் இப்படி இருக்கிறார்கள்?

     
    `நம் பள்ளியின் பெருமை உங்கள் கையில்தான் இருக்கிறது! கண்டிப்பாக வெற்றி பெறவேண்டும்!’ என்று ஒரு பெரிய பாரத்தை அவர்கள் தலையில் சுமத்தியிருப்பார்கள் பள்ளியில்.

     
    ஓரணிக்குள்ளேயே, `நான் மட்டும் சிறப்பாகச் செயல்பட வேண்டும். எல்லாரும் என்னையே பாராட்ட வேண்டும்,’ என்று ஒவ்வொருவரும் நினைத்து, தமக்குள்ளேயே போட்டி போட்டு நடந்தால், எந்தப் போட்டியிலும் வெற்றிபெற முடியாது. ஒரு குழுவுக்காக எல்லாரும் தம்மால் இயன்றவரை உழைக்க வேண்டுமேயன்றி, தம் சொந்த விருப்பு வெறுப்புகளைப் பெரிதாக நினைக்கக்கூடாது.

     
    தொலைகாட்சியில், `ஒரு வார்த்தை ஒரு லட்சம்’ என்ற போட்டி நிகழ்ச்சியைப் பார்த்திருப்பீர்கள். அமைதியாக, சிரித்த முகத்துடனேயே பங்கெடுத்துக்கொள்ளும் சிறுவர்கள்தாம் வெல்கிறார்கள். இவர்கள் நன்றாகப் பயிற்சி எடுத்துக்கொண்டிருக்கிறோம் என்ற துணிவுடன் வருகிறார்கள். வெற்றி, தோல்வி இரண்டில் ஏதாவது ஒன்று போட்டிகளில் கிடைக்கலாம் என்ற தெளிவு இருக்கிறது. பெற்றோர்களும், ஆசிரியர்களும் இவர்கள் தோல்வியுற்றால் வசை பாடமாட்டார்கள் என்பதும் இவர்களது தன்னம்பிக்கைக்குக் காரணமாக இருக்கலாம். இவர்கள் ஒரு காலத்தில் தலைவர்களாகும் திறன் பெற்றிருப்பார்கள். வெல்லாவிட்டாலும், வெற்றி பெற்றவர்களை மனமார வாழ்த்தும் பெருந்தன்மை இவர்களைப் போன்றவர்களுக்கு உண்டு.

     
    போட்டி மனப்பான்மை நமக்குள் மறைந்துகிடக்கும் திறமையை வெளிக்கொணர வேண்டும். மனிதத்தன்மையை வளர்க்கவேண்டும். இதை உணர்ந்தால், முன்னேறுவது உறுதி.

    தொடருவோம்

    Share
  • இந்தவார வல்லமையாளர்!

     

    செ.இரா. செல்வக்குமார்

    சீனிவாசவரதன்

    இந்தக் கிழமையின் வல்லமையாளர் வியப்பூட்டும் ஒரு கணிதவியலாளர்.

    உலகத்திலே பல்லாயிரக்கணக்கான துறைகளும் கலைகளும் உள்ளன. கடந்த 5000-6000 ஆண்டுகளாக மாந்தர்கள் வாழ்வியல் வரலாற்றை ஒருசேர எண்ணிப்பார்த்தால் வியப்பே ஏற்படுகின்றது. என்றாலும், மிகவும் வியப்பூட்டும் வளர்ச்சியானது கடந்த 200-300 ஆண்டுகளில்தான் நிகழ்ந்துள்ளதெனில் அது மிகையாகாது.  அதிலும் குறிப்பாக அறிவியல், கணிதம் ஆகிய அடிப்படைத்துறைகளிலும் அதன் பயன்பாட்டுத்துறைகளாகிய பொறியியல், மருத்துவம் முதலிய துறைகளிலும் கடந்த 70-150 ஆண்டுகளில் ஏற்பட்ட வளர்ச்சிதான் மிகப்பெரியது.  வெறும் 150 ஆண்டுகளுக்கு முன்னால் போனாலே  மாட்டுவண்டிக்காலம்தான்.  மகிழுந்து, தொலைபேசி, வானூர்தி,  தொலைக்காட்சி,  கணினி, இணையம், மரபணுவியல், முதலியவை எதுவும் தோன்றியிருக்கவில்லை அல்லது மிகவும் தொடக்கநிலையிலே இருந்தன.

    இத்தனைக்கும் அடிப்படையான அறிவியல் என்னும் துறையில் உலகத்தில்  பெரிதும் போற்றப்படும்  இந்தியர்கள் ஒருசிலரே. அறிவியலாளர்களில்  இயற்பியல்  நோபல் பரிசு பெற்றவர்களாகிய  உயர்திரு ச.வெ. இராமன் (சர். சி.வி. இராமன்),  உயர்திரு. சுப்பிரமணியன் சந்திரசேகர் (1910 –1995) ஆகியவர்களோடு அண்மையில்  வேதியியல் நோபல் பரிசுபெற்ற  உயர்திரு. வெங்கடராமன் (வெங்கி’’) இராமக்கிருட்டிணன் (பிற. 1952) அவர்களையும் பலரும் அறிந்திருப்பார்கள்.  உயர்திரு. இராமக்கிருட்டிணன் அவர்கள் புகழ்பெற்ற பிரித்தானிய இராயல்  சொசையிட்டி  (Royal Society) என்னும்  வேந்தியக் குமுகத்தின் தலைவராகவும் இருக்கும் பெருமை பெற்றவர்.   ஒப்பரிய கணிதமேதை சீனிவாச இராமானுசன் அவர்களைப் பற்றியும் அறிவோம்.

    நோபல் பரிசு போலவே புகழ்பெற்ற  கணிதத்துறைக்கான பரிசு ஏபல் பரிசு (Abel Prize).  இதனை ஆபல் பரிசு என்றும் அழைப்பர். இப்புகழ்மிகுந்த பரிசைப்பற்றி தமிழுலகில் அவ்வளவாகப் பலரும் அறிந்திருப்பதில்லை. இவ்வுயரிய பரிசைப்  பெற்ற தமிழராகிய பேராசிரியர் சாத்தமங்கலம் .அரங்க ஐயங்கார் சீனிவாச வரதன் (சா. அர. சீனிவாச வரதன், S.R. Srinivasa Varadhan)  (பிறப்பு சனவரி 2, 1940) அவர்களை அறிந்துகொள்வோம். இப்பெரும் புகழாளரே  இந்தவார வல்லமையாளர்.

    பேராசிரியர் சா.அர. சீனிவாச வரதன் அவர்களின் தந்தையார்  திரு. அரங்க ஐயங்கார் சென்னைக்கு அருகே ஏறத்தாழ 30 கி.மீ தொலைவில் உள்ள பொன்னேரி என்னும் ஊரில் உள்ள போர்டு உயர்நிலைப்பள்ளியில் அறிவியல் கற்பிக்கும் பள்ளி ஆசிரியராக இருந்து தலைமை ஆசிரியராக உயர்தவர்.  அங்கே பள்ளியில் படிக்கும்பொழுதே சீனிவாச வரதன் அவர்களுக்குக் கணக்குப்பாடங்களில் மிகுந்த ஆர்வம் ஏற்பட்டுவிட்டது. அதற்குக் காரணம் அங்கு இருந்த கணக்கு ஆசிரியரே.  அவர் ஆர்வம் காட்டிய மாணவர்களைத் தன்வீட்டுக்குக் கிழமை இறுதி நாள்களான சனி ஞாயிறு போன்ற விடுமுறை நாள்களில் அழைப்பார்.  ஆர்வத்தைத்தூண்டும் கணக்குகளை விளையாட்டும் போட்டியும் போல மாணவர்களுக்குக் கொடுப்பார். கணக்குப் போடுவது கூட களிப்பூட்டும் ஒன்றாக இருக்கும் என்பதை சீனிவாச வரதன் அவர்கள்  அப்பொழுதே உணர்ந்தார்.  பள்ளிப்படிப்பை முடித்தவுடன் சென்னையில் (அப்பொழுது மதராசு)  உள்ள மாநிலக்கல்லூரியில் கணிதவியலில் இளநிலை படிப்பை முடித்தார்.  ஓராண்டிலேயே முதுநிலைப் பட்டமும் 1960  இல் பெற்றுவிட்டு,  தன்  அகவை 20 இல் கொல்கத்தாவில் உள்ள புகழ்மிக்க இந்திய புள்ளியியல் கழகத்தில்  (Indian Statistical Institute)  புள்ளியியலிலே மேற்படிப்பு படிக்கப்போனார். புள்ளியியல் படித்தால்  தொழிலகங்களில் நல்ல வேலை கிடைக்கும் என நம்பியிருந்தார்.  புள்ளியியல்வழி தரக்கட்டுப்பாடு (Statistical quality control)  பற்றிப் படித்தால் நல்லது என நினைத்து 6-8 மாதங்கள் படித்தும்பார்த்து அவருக்கு நிறைவு ஏற்படவில்லை.  அப்பொழுது அங்கே இருந்த வரதராசன் பார்த்தசாரதி,  அரங்காராவ்  ஆகியவர்களுடன் சேர்ந்து  கணிதநோக்கில் நிகழ்தகவு (வாய்ப்பியல்) (probability) என்னும் துறையில் புகுந்தார்.  அப்பொழுதிலிருந்து அவருடைய வியப்பூட்டும் வளர்ச்சி தொடங்குகின்றது.

    கொல்கத்தாவின் இந்தியப் புள்ளியியல் கழகத்தில் (இ.பு.க, ISI) இருந்த புகழ்மிக்க கலயம்புடி இராதாகிருட்டிணராவ் (க. இரா. இராவ் C.R. Rao)  அவர்களின் மாணவராக மாறினார்.   உலகப்புகழ்பெற்ற  ஆந்தரே நிக்கொலாவிச்சு கோல்மொகுரோவ் (Andrey Nikolaevich Kolmogorov ) என்னும் உருசிய ஆய்வாளர்  1962 ஆம் ஆண்டு ஒரு மாதம்  இந்தியப் புள்ளியியல் கழகத்துக்கு வருகை தந்திருந்தார்.  சீனிவாச வரதன் அவர்களின் முனைவர்ப்பட்ட ஆய்வுரையை  1962 இலேயே அவரிடம் கொடுத்து  அவரைத் தேர்வாளராக இருக்கச் செய்தார்கள். அவர் சீனிவாச வரதன் அவர்களுடைய ஆய்வுரையை உருசியாவுக்கு எடுத்துப்போய்  அங்கே மாசுக்கோவில் இருந்து கீழ்க்காணுமாறு  வியந்து மடலில் எழுதினார்  [2]

    ‘’ This is not the work of a student, but of a mature master.’’
    (இது ஒரு மாணவரின் ஆய்வன்று, முதிர்ச்சியடைந்த கலைநிறைஞனுடையது)

    தன்னுடைய 23 ஆவது வயதில்  திரு சீனிவாச வரதன் எழுதி கோல்மொகுரோவ் பாராட்டிய முனைவர்ப்பட்ட ஆய்வுரையின் தலைப்பு

    Convolution Properties of Distributions on Topological Groups
    (இடவியல் குழுக்களில் பகிரமைப்புகளின் புணர்த்தொகை)

    தன் 23-ஆவது அகவையிலேயே அமெரிக்காவில் நியூயார்க்குப் பல்கலைக்கழகத்தின்  புகழார்ந்த கூராந்து கணிதவிய அறிவியல் கழகத்தில் (Courant Institute of Mathematical Sciences)  முதுமுனைவராகச் சேர்ந்தார்.  24 ஆவது வயதில்  தன்னைவிட 7 வயது இளைய வசுந்தரா என்பாரை மணந்தார்.   தன் 32-ஆவது அகவையிலேயே நியூயார்க்குப் பல்கலைக்கழகத்தில் முழுநிலைப் பேராசிரியராக உயர்ந்தார்.  இது அரியதோர் உயர்ச்சி. இவருடைய கணிதவியல் கண்டுபிடிப்புகளைப் பொதுமக்கள் புரிந்துகொள்வது கடினம், ஆனால் அவை மிகவும் அடிப்படையானவை அறிவானவை என உணர்ந்த அறிவுலகம் அவருக்குப் பல பரிசுகளைத் தந்து பெருமைப்படுத்தியுள்ளது.   சிலவற்றை மட்டுமே இங்கு குறிப்பிடமுடியும்.

    அமெரிக்க கணிதக்குமுகமான அமெரிக்க மேத்தமேட்டிக்கல் சொசையிட்டியும் ( American Mathematical Soceity) இலண்டனின் வேந்தியக் குமுகமும் (Royal Society of London) சேர்ந்து வழங்கும் சியார்ச்சு தாவீடு பிர்க்காஃபு பரிசை ( George David Birkhoff Prize) 1994 இல் வென்றார்.

    அமெரிக்க மேத்தமேட்டிக்கல் சொசையிட்டி தரும்  இலிராய் பி. இசுட்டீல் பரிசை ( American Mathematical Soceity’s  Leroy P Steele Prize) 1996 இல் வென்றார்.

    சீனிவாச வரதன் அவர்கள் ஆய்வு செய்த இன்னொரு கணிதக் களமான பெரிய விலகுமைகள் (large deviations) என்பதில் இவர் செய்த ஆழ்ந்த ஆய்வுகளுக்காக 2007  ஆம் ஆண்டில் ஏபல் பரிசு வழங்கினார்கள்.  ஏபல் பரிசுக்குழு எழுதிய பரிசுரையில்  அவருடைய 1966 ஆம் ஆண்டு ஆய்வுக்கட்டுரையைக் குறிப்பிட்டுக் கீழ்க்காணுமாறு எழுதினார்கள் [3]

    In his landmark paper ‘Asymptotic probabilities and differential equations’ in 1966 and his surprising solution of the polaron problem of Euclidean quantum field theory in 1969, Varadhan began to shape a general theory of large deviations that was much more than a quantitative improvement of convergence rates. It addresses a fundamental question: what is the qualitative behaviour of a stochastic system if it deviates from the ergodic behaviour predicted by some law of large numbers or if it arises as a small perturbation of a deterministic system? The key to the answer is a powerful variational principle that describes the unexpected behaviour in terms of a new probabilistic model minimizing a suitable entropy distance to the initial probability measure. In a series of joint papers with Monroe D Donsker exploring the hierarchy of large deviations in the context of Markov processes, Varadhan demonstrated the relevance and the power of this new approach. A striking application is their solution of a conjecture of Mark Kac concerning large time asymptotics of a tubular neighbourhood of the Brownian motion path, the so-called ‘Wiener sausage’. Varadhan’s theory of large deviations provides a unifying and efficient method for clarifying a rich variety of phenomena arising in complex stochastic systems, in fields as diverse as quantum field theory, statistical physics, population dynamics, econometrics and finance, and traffic engineering. It has also greatly expanded our ability to use computers to simulate and analyze the occurrence of rare events. Over the last four decades, the theory of large deviations has become a cornerstone of modern probability, both pure and applied.’’

    இவ்வளவு புகழ்மிக்க ஆய்வுகள் செய்துவரும்பொழுதே  இவர் இருமுறை கூராந்து கணிதவிய அறிவியல் கழகத்தின் இயக்குநராகவும் பணிபுரிந்திருக்கின்றார் (1980-84 , 1992-94).

    அமெரிக்காவிலேயே ஆகப்பெரிய பெருமையாகிய தேசிய அறிவியல் பதக்கத்தை ( National Medal of Science) அமெரிக்கக் குடியரசுத்தலைவர் பராக்கு ஒபாமா 2010 இல் வழங்கினார்.

    கணிதத்தைத் தவிர இவருக்கு வேறு எதில் ஆர்வம் என்றால் பயணம் செய்வதும் தமிழும் தமிழ் இலக்கியமும் எனக் கூறியுள்ளார். அவர் அமெரிக்கக் கணிதக்குமுகத்துக்கு அளித்த நேர்காணலில் கூறியவற்றை அவர் கூற்றாகவே கேட்கலாம் [2]

    ‘’ I like reading Tamil literature, which I enjoy. Not many people in the world are familiar with Tamil as a language. It is a language which is 2,000 years old, almost as old as Sanskrit. It is perhaps the only language which today is not very different from the way it was 2,000 years ago. So, I can take a book of poetry written 2,000 years ago, and I will still be able to read it. To the extent I can, I do that.’’

    இவருடைய பெருமைமிகு வாழ்க்கையில் பெரும் துன்பகரமான நிகழ்ச்சியும் ஒன்றுள்ளது. இவருக்கு கோபால், அசோக்கு என இரண்டு  மகன்கள். 1969 ஆம் ஆண்டு பிறந்த  மூத்த மகன் கோபால் 2001  ஆண்டு ஆகத்து மாதத்தில் நியூயார்க்கில் கேண்டர் ஃபிட்சுகெரால்டு (Cantor Fitzgerald) என்னும் நிறுவனத்தில் இயக்குநராகச் சேர்ந்தார்.  ஒருமாத காலத்தில் செப்டம்பர் 2001 இல் உலகவணிகக் கோபுரங்களின் மீது வானூர்தி மோதி ஏற்பட்ட கொடுநிகழ்வில் எதிர்பாராது இறந்துபோனார்.

    2008 ஆம் ஆண்டு இந்தியா இவருக்குப் பதும பூசன் விருது வழங்கி பெருமைப்படுத்தியது. அகவை 76 ஆனாலும், இன்றும் ஆழமான ஆய்வுரைகளை எழுதிவெளியிடுகின்றார் [4].

    பேராசிரியர் சீனிவாச வரதன் தன் நண்பர்களால் ‘’ரகு’’ என அழைக்கப்படுகின்றார். அவருடைய நியூயார்க்குப் பல்கலைக்கழகத்தின் இணையப் பக்கத்தில் அவருடைய அண்மைய ஆய்வுக்கட்டுரைகளின் குறிப்புகள் உள்ளன. [4]
    இவ்வார வல்லமையாளரான ஏபல் பரிசாளர்   பதுமபூசன், அமெரிக்கத்தேசிய அறிவியல் பதக்கம் வென்ற பேராசிரியர் சீனிவாச வரதன் அவர்களைப் பாராட்டி மகிழ்கின்றோம்.

    [1] பல குறிப்புகள் இதிலிருந்து பெற்றவை: http://www-groups.dcs.st-and.ac.uk/history/Biographies/Varadhan.html
    [2] M Raussen and C Skau, Interview with Srinivasa Varadhan, Notices Amer. Math. Soc. 55 (2) (2008), 238-246.
    {3] The Abel Prize 2007.
    {4] http://math.nyu.edu/people/profiles/VARADHAN_SRS.html
    [5] படம் பெற்ற இடம் http://www.paulcarlislekettler.net/s-r-srinivasa-varadhan-awarded-national-medal-of-science/varadhan/

    Share
  • படக்கவிதைப் போட்டி … (55)

    பவள சங்கரி

    அன்பிற்கினிய நண்பர்களே!

    வணக்கம். கண்ணையும், கருத்தையும் கவரும் படமொன்றைக் கண்டவுடன் உங்கள் உள்ளத்தில் கவிதை ஊற்றெடுக்கும் திறமை கொண்டவரா நீங்கள்?

    12825123_974125405974992_638137298_n

    32535581@N07_lபிரேம்நாத் திருமலைசாமி எடுத்த இந்தப் படத்திற்கு ஒரு கவிதை எழுதுங்கள். இதனை நம் வல்லமை ஃப்ளிக்கர் குழுமத்தின் பொறுப்பு ஆசிரியர் திருமதி சாந்தி மாரியப்பன் தேர்ந்தெடுத்து அளித்துள்ளார்.

    இந்த ஒளிப்படத்திற்கு ஏற்ற கவிதையை நல்ல தலைப்புடன் பின்னூட்டமாக இடலாம். ஒருவரே எத்தனை கவிதைகள் வேண்டுமானாலும் எழுதலாம். வரும் சனிக்கிழமை (19.03.2016) வரை உங்கள் கவிதைகளை உள்ளிடலாம். அவற்றில் சிறந்த கவிதையை நம் வல்லமை இதழின் ஆசிரியர் குழு உறுப்பினர், தமிழ் இலக்கிய ஆராய்ச்சியாளர் திருமதி மேகலா தேர்வு செய்வார். ஒவ்வொரு வாரமும் சிறந்த கவிஞர் ஒருவர் தேர்ந்தெடுக்கப்படுவார். ஒருவரே பல முறை பங்கு பெறலாம். இவ்வாய்ப்பு சிறந்த கவிஞராகத் தேர்ந்தெடுக்கப்படும் கவிஞர்களுக்கும் உண்டு. 12 மாதமும் தேர்வுபெறும் ஒளிப்படக் கலைஞர் / கவிஞர்களிலிருந்து ஆண்டின் சிறந்த கலைஞரும், கவிஞரும் தேர்வு பெறுவார்கள். ஒளிப்படத்திலிருந்து தாக்கமும் தூண்டுதலும் பெற்று எழும் அசல் படைப்புகளை ஊக்குவிப்பதே இதன் நோக்கம். இது, கவிஞர்களையும் கலைஞர்களையும் கண்டறிந்து ஊக்குவிப்பதற்கான அடையாளப் போட்டி; வெற்றி பெறுபவர்களுக்குப் பரிசளிப்பு இருக்காது; பாராட்டு மட்டுமே உண்டு. ஆர்வமுள்ளவர்களைப் பங்கு பெற அழைக்கிறோம்.

    புதுச்சேரி மாநிலத்தின் காரைக்காலில் பிறந்த திருமதி மேகலா இராமமூர்த்தி கணிப்பொறி (MCA) மற்றும் தமிழில் (MA) முதுகலைப் பட்டம் பெற்றவர். அமெரிக்க தமிழ்ச்சங்கப் பேரவையின் (FeTNA) 2008, 2009 ம் ஆண்டுகளில் (ஆர்லாண்டோ & அட்லாண்டா) கவியரங்கம், இலக்கிய வினாடி வினா நிகழ்ச்சிகளில் பங்கேற்று பாராட்டுகளும், பரிசுகளும் பெற்றுள்ளவர். புறநானூறு, குறுந்தொகைப் பாடல்களில் அதிக நாட்டமும், இலக்கியக் கூட்டங்களில் சுவைபட பேசுவதிலும் வல்லமை பெற்றவர். இவருடைய வலைப்பூ – மணிமிடைபவளம்

    Share
  • III:3: இன்னம்பூரான் பக்கம்: III:3

    இந்திய தணிக்கைத்துறையும், நானும்[3]
    ஆட்டைத்தூக்கி…!

    இன்னம்பூரான்
    மார்ச் 13, 2016

    joke16

    தணிக்கைத்துறை சகலகலாவல்லவனாக இருக்கமுடியாது. ஒரு நாள் கல்லூரி ஆடிட்; அடுத்த நாள் நீர் பாசனம்; அடுத்த நாள் ஆசுபத்திரி;அடுத்த நாள் ராணுவ தளவாடங்கள். எல்லாம் வேஸ்ட் சார்! இது காமன் எரிந்த கட்சி. சார்! கணக்கு வழக்குப் பார்ப்பவனுக்கு நிர்வாகத்தை பற்றி என்ன தெரியும்? ரோடு போடமுடியுமா? பதிலடி கொடுப்போம் இல்லை! இது ரதியும் எரிந்த கட்சி! தணிக்கை செய்யப்பட்ட துறையுடன் ஆலோசனை செய்து, ஆடிட் திட்டமிடப்படுகிறது. அந்த துறையின் பதிலும் உள்ளடக்கம். நாங்கள் உள்ளதை, உங்கள் ஆவணங்களை ஆய்வு செய்து, சொல்கிறோம். எங்கள் அறிக்கையை, அக்கு வேறு, ஆணி வேறாக அலச, சட்டசபையின் பொது கணக்கு கமிட்டி இருக்கிறது. இது காமன் எரியாத கட்சி.

    ஒரு பல்கலை கழகத்தின் நூலகம் சிதறி கிடைந்தது. நூல் வாங்க அளித்த பணத்தில் ஹாஸ்டலுக்கு அரிசி வாங்கினார்கள்; பாசனத்துக்கு சுழல்முறையில் தண்ணீர் திறந்து விடப்பட வேண்டும். அது தவறினால், அநீதி நிகழும். ஒரு ஆசுபத்திரியில் செத்தவங்களுக்கு சோறு போட்டதாக கணக்கு எழுதினார்கள். போஃபோர்ஸ் பீரங்கி தெரிந்த கதை. கணக்கு வழக்குப் பார்க்கிறவன், தோட்டாவை காணவில்லையே பெட்டியில். நமது சிப்பாய் எதிராளியை தாக்கமுடியாமல் சுடப்படுவானே என்று அங்கலாய்த்தால், அதில் என்ன தவறு?

    தணிக்கை என்பது காசுபணம் மட்டும் பார்க்காது. வச்ச காசுக்கு ஆதாயம் இருக்கிறதா என்று தோண்டிப் பார்க்கும். நாக்கை பிடுங்கிறாப்பல நாலு கேள்வி கேட்கும். தணிக்கைத்துறையின் பயிற்சிக்கூடம் 1955 வரை சென்னையில் இருந்தது. பின்னர் சிம்லாவில் அங்கு தான் எங்களுக்கு அக்னிப்பரிக்ஷை.

    ஒரு அனுபவம். நான் இராணுவத்துறையில் பணிபுரிந்த போது, பொதுகணக்குத்துறையில் ஆடிட்டுக்கு எதிரணியில் பணி. உரிய நேரத்தில் முடிவு எடுக்காததால் பீர் விலை ஏறிவிட்டது. இத்தனை நஷ்டம் என்று ஆடிட் புகார். நஷ்டமில்லை. விலையில் கூட்டிவிட்டோம் என்று பதில் அளித்தார், ஹரீஷ் ஸரீன் ஐ.சி.எஸ். ஆடிட்டர் ஜெனெரல் ரங்கநாதனும் ஐ.சி.எஸ். ஆபீஸுக்கு வந்த பின் அந்த பதிலில் உள்ள தவறை ஹரீஷ் ஸரீனிடம் காண்பித்தேன். காலையில், முடிந்து போன கதையை மறுபடியும் எடுத்து, தவறை ஏற்றுக்கொண்டு, இரவே இந்த செலவை ஜவான் தலையில் கட்டக்கூடாது என்று எங்கள் தலையில் போட்டுக்கொண்டோம் என்றார், அவர். எல்லாரும் அதை சிலாகித்தார்கள். அந்த காலத்தில் எல்லாருமே மாரல் ஜட்ஜ்மெண்டில் குறியாக இருந்தார்கள். இது நிற்க.

    மாஜி ராணுவவீரர்கள் நாள்தோறும் செத்துப்பிழைத்தவர்கள். எல்லாநாடுகளிலும் அவர்களுக்கு தனி மரியாதை, சலுகைகளும் உண்டு. இந்தியாவிலும் தான். ஆனால் நடந்ததை பாருங்கள். மாஜி ராணுவ வீரர்கள், அவரை சார்ந்த குடும்பம், பெற்றோர்கள் ஆகியோருக்கு [47.34 லக்ஷம்: ஏப்ரல் 2015] கைக்காசு செலவழிக்காத வகையில் மருத்துவ உதவி அளிக்க மத்திய அரசு 2002ல் ECDS என்ற அமைப்பை உருவாக்கினார்கள்.

    சமீபத்தில் நடந்த ஆடிட் முடிவுகள்:

    முதல் கோணல் முற்றும் கோணல்: உறுப்பினர்களுக்கு அடையாள சீட்டு அச்சடிக்கும் மிகவும் பொறுப்பான வேலையை ஐந்து வருடங்களுக்கு விதியை மீறி ஒரு நிறுவனத்துக்குக் கொடுக்கப்ட்டது. சந்தை விலையை பற்றி ஒரு விசாரிப்பு இல்லை. அதிகப்படி தண்டம் ரூ.6.69 லக்ஷம் வேறே!

    இது இலவச பராமரிப்பு இல்லை. ஒரே தடவை-சந்தா காசு கட்டினால் தான் சிகிச்சை. வேறு செலவை மாஜிகள் தலையில் கட்டக்கூடாது; ஆனால் கட்டினார்கள். கேள்வி முறை இல்லையா?

    டில்லியில் மட்டும், மாஜிகளின் சந்தாவில் பணிபுரியும் இந்த ECDSலிருந்து தற்கால ராணுவ மருத்துவ இலாக்காவுக்கு அனுமதியில்லாமல் செய்த செலவு: ரூ.40.78 கோடி. அதான் ஆட்டைத்தூக்கி மாட்டில் போட்டார்கள்!

    பல பாலிக்ளினிக்களில் மருந்து பஞ்சம், வருடம் முழுதும்.

    காலாவதியான மருந்துகளை தன் செலவில் ஒப்பந்தக்காரர் எடுத்து செல்லவேண்டும் என்று ஷரத்து. ஆனால், அவற்றை திருப்பி அனுப்பாததால் நஷ்டம்: ரூ.73.44 லக்ஷம்.

    மற்றும் பல.

    ஆடிட் ரிப்போர்ட்டை முழுதும் படித்தால், நான் குறிப்பால் உணர்த்தியது சொற்பம் என்று தெரியும். அது இலவசம்.
    -#-
    சித்திரத்துக்கு நன்றி:http://3.bp.blogspot.com/-WMGqGIAUj0c/VJ1FJ7JubTI/AAAAAAAAP8E/rzVaZrxTRFE/s1600/joke16.jpg

    Share