படக்கவிதைப் போட்டி … (55)
பவள சங்கரி
அன்பிற்கினிய நண்பர்களே!
வணக்கம். கண்ணையும், கருத்தையும் கவரும் படமொன்றைக் கண்டவுடன் உங்கள் உள்ளத்தில் கவிதை ஊற்றெடுக்கும் திறமை கொண்டவரா நீங்கள்?
பிரேம்நாத் திருமலைசாமி எடுத்த இந்தப் படத்திற்கு ஒரு கவிதை எழுதுங்கள். இதனை நம் வல்லமை ஃப்ளிக்கர் குழுமத்தின் பொறுப்பு ஆசிரியர் திருமதி சாந்தி மாரியப்பன் தேர்ந்தெடுத்து அளித்துள்ளார்.
இந்த ஒளிப்படத்திற்கு ஏற்ற கவிதையை நல்ல தலைப்புடன் பின்னூட்டமாக இடலாம். ஒருவரே எத்தனை கவிதைகள் வேண்டுமானாலும் எழுதலாம். வரும் சனிக்கிழமை (19.03.2016) வரை உங்கள் கவிதைகளை உள்ளிடலாம். அவற்றில் சிறந்த கவிதையை நம் வல்லமை இதழின் ஆசிரியர் குழு உறுப்பினர், தமிழ் இலக்கிய ஆராய்ச்சியாளர் திருமதி மேகலா தேர்வு செய்வார். ஒவ்வொரு வாரமும் சிறந்த கவிஞர் ஒருவர் தேர்ந்தெடுக்கப்படுவார். ஒருவரே பல முறை பங்கு பெறலாம். இவ்வாய்ப்பு சிறந்த கவிஞராகத் தேர்ந்தெடுக்கப்படும் கவிஞர்களுக்கும் உண்டு. 12 மாதமும் தேர்வுபெறும் ஒளிப்படக் கலைஞர் / கவிஞர்களிலிருந்து ஆண்டின் சிறந்த கலைஞரும், கவிஞரும் தேர்வு பெறுவார்கள். ஒளிப்படத்திலிருந்து தாக்கமும் தூண்டுதலும் பெற்று எழும் அசல் படைப்புகளை ஊக்குவிப்பதே இதன் நோக்கம். இது, கவிஞர்களையும் கலைஞர்களையும் கண்டறிந்து ஊக்குவிப்பதற்கான அடையாளப் போட்டி; வெற்றி பெறுபவர்களுக்குப் பரிசளிப்பு இருக்காது; பாராட்டு மட்டுமே உண்டு. ஆர்வமுள்ளவர்களைப் பங்கு பெற அழைக்கிறோம்.
புதுச்சேரி மாநிலத்தின் காரைக்காலில் பிறந்த திருமதி மேகலா இராமமூர்த்தி கணிப்பொறி (MCA) மற்றும் தமிழில் (MA) முதுகலைப் பட்டம் பெற்றவர். அமெரிக்க தமிழ்ச்சங்கப் பேரவையின் (FeTNA) 2008, 2009 ம் ஆண்டுகளில் (ஆர்லாண்டோ & அட்லாண்டா) கவியரங்கம், இலக்கிய வினாடி வினா நிகழ்ச்சிகளில் பங்கேற்று பாராட்டுகளும், பரிசுகளும் பெற்றுள்ளவர். புறநானூறு, குறுந்தொகைப் பாடல்களில் அதிக நாட்டமும், இலக்கியக் கூட்டங்களில் சுவைபட பேசுவதிலும் வல்லமை பெற்றவர். இவருடைய வலைப்பூ – மணிமிடைபவளம்
வைர மேனியின் மேல் வைர துளிகள் பாய ,
மொட்டு சாய்வது போல் தலை சாய ,
வெண்தாமரையாய் உம்மேனி நிரினுள் தெரிய ,
பூங்காற்றும் உம்அழகுடன் போட்டியிட விச ,
அழகே,
இயற்கையில் இயற்கை நிராடுகிறது.
உன்னை,
நீர்குமுழ்கள் சுடுமோ ? குளிருமோ ?
நீரின் வேகம் உம்மை அச்சுறுத்துமோ ?
என நெஞ்சம் தேடுகிறது.
உம் அழகை கண்டு ரசிக்கவா ?
உன் ஆனந்தம் கண்டு நெகிழவா ?
உம் மேனியை அள்ளி எடுக்கவா ?
சொல்லடா என் செல்வமே , சொல் ,
உன் மொழி எனக்கு தெரியாது ,
என் மொழி உனக்கு தெரியாது .
அதனாலே ,
உன் உயிரை நானே படமெடுக்கிறேனடா !
இறைவா ,
இதற்போல் , இன்பம் இனி தரவில்லை
என்றாலும் பரவயில்லை ,
துன்பம் தந்துவிடதே .
சின்னச் சூரியத் திருமேனி யொன்று
சித்திரக் குளியல் செய்கிறது
எண்ணத் தொலையா நீர்ப்பூக்களதன்
எழில்மேனியில் பெய்கிறது
கண்ணும் கருத்தும் கவரும் வகையிலதைக்
கைகளில் படத்தைப் பிடிக்கிறது…இந்த
மண்ணில் வந்த வான நிலவென்
மகிழ்வாய்க் குழந்தை நடிக்கிறது.
அழகை அள்ள ஒளியை அள்ள
அற்புத மிங்கே நிகழ்கிறது…இந்த
மழலை தன்னைப் பகலவன் பார்த்து
மனம்போல் குளிரப் புகழ்கிறது.
சிகரம் வைத்த காட்சி எனவே
சித்திர மாக்கிப் பார்க்கிறது…நல்ல
மகவின் குளியல் ஆனந்தந் தன்னை
பெற்றோர் பார்க்கச் சேர்க்கிறது.
இதுபோல இன்பம் உலகில் இல்லை
இனிதே வாழக் கற்பிக்கும்….இங்கு
இழந்த வாழ்வின் இன்பம் அதிகம்
இதனை மீட்டுப் புதுப்பிப்போம்.
கவிஞர் “இளவல்” ஹரிஹரன், மதுரை.
ஆனந்தக் குளியல்…
நாட்டுப் புறத்தை மறந்தேதான்
நகர வாழ்க்கை வந்தோர்தம்
கூட்டுப் பறவைக் குழந்தைக்குக்
கிராமம் கண்டதும் குதூகலம்தான்,
தோட்ட நீரில் புகுந்தேதான்
துள்ளிக் குதித்தே ஆடுதல்பார்,
ஆட்டம் பார்க்கும் பெற்றோரும்
அந்தநாள் நினைவில் குளித்தாரே…!
-செண்பக ஜெகதீசன்…
கொட்டிடும் நீரில் குதித்து விளையாடும்
பட்டுத் தளிரே பரவசமோ -ஒட்டி
உறவாடும் நீரலை உன்னால் இனிக்கும்
மறக்குமோ அந்த சுகம் ?
படவரி 55
ரசிக்கும் மழலை முகம்.
வெள்ளிச் சாரலில் உள்ளம் குளிர
துள்ளி வரும் நிரிலுடல் குளிர
கொள்ளை இன்பக் காட்சியில் மழலை
அள்ளும் அழகுக் காட்சியை அப்படியே
கொள்ளும் கருவியுடன் தந்தை போலவன்.
வெள்ளத்pல் பிள்ளைக்குப் பாதுகாப்பாய் அம்மா.
கோடையின் ஆனந்த ரசனையின் அனுபவத்தில்
ஆடையற்ற மேனியின் ஆனந்தப் பரவசம்.
நீர் கண்டு பதறும் குழந்தையல்ல
நீரையே ஆளுவான் இவன் எதிர்காலத்தில்
ஆகா! என்ன இன்பக் காட்சி!
வாகாக மூலிகை கழுவிய நீர்ப்
போர்வை குழந்தையைத் தழுவ அனுபவச்
சார்பில் ஆனந்த ரசனை முகம்.
கிளர்ச்சி அனுபவத்தால் குழந்தை மன
வளர்ச்சிக்கு ஆதரவு தரும் பெற்றோர்!
பா வரிகள் வேதா. இலங்காதிலகம்.
டென்மார்க்.’
19-3-2016
மறந்து போன பாரம்பரிங்களில்
இதுவும் ஒன்று
வயல்வெளி குளியல் மகிழ்ச்சிகளில்
நம்மை வென்று
வாழ்வில் இன்றியமையா பல
இழந்தது நின்று
சிலிர்க்கும் தருணங்கள் அது
கிடைக்குமா இன்று
என மனது ஏங்குகிறது
வெட்கத்தை தின்று
கொடுத்து வைத்த குழந்தையடா
வளருவாய் நீ நன்று
பாய்ஞ்சு வந்தத் தண்ணியில்
****பயமில் லாமக் குளிக்கிறேன்
தேய்ச்சுக் குளிக்க வில்லைநான்
****தேகம் குளிரக் குளிக்கிறேன் !
ஆச தீரக் குளிக்கிறேன்
****அழாம நானே குளிக்கிறேன்
பேசக் கூட முடியல
****பின்னால் தண்ணி முட்டுது !
ஆடை யின்றிக் குளிக்கிறேன்
****அமர்ந்துக் கொண்டே குளிக்கிறேன்
கோடை வெயிலும் தெரியல
****கொஞ்சங் கூட சலிக்கல !
அம்மா துணையா நிக்குறா
****அப்பா போட்டோ எடுக்குறார்
சும்மா விடவாப் போகிறார்
****சுற்றி வாட்ஸ்அப் பண்ணுவார் !
நாளை உமக்கும் வந்திடும்
****நல்லா என்னப் பாக்கணும்
தோளைக் குலுக்கி ரசிச்சதும்
****சூடா லைக்கும் பண்ணணும் ….!!!