செ.இரா. செல்வக்குமார்.

 

 அயற்சொற்களைத் தமிழ் வழக்கில் எழுதுவோம்

வேற்றுமொழிச்சொற்கள் இல்லாமல் எழுதுதல் தனித்தமிழ். ஆனால் அப்படியான தனித்தமிழ் எப்பொழுதும் எங்கும் இருந்ததே கிடையாது, இருக்கவும் முடியாது. ஆனால் எல்லோருக்கும் புரியும்படியாகவும் தமிழ்வேரிலிருந்து கிளைக்கும் நல்ல தமிழ்ச்சொற்களை எடுத்தாண்டு நல்ல இலக்கணத்தைப் பின்பற்றி எழுதலாம் என்பதே குறிக்கோள். தமிழ் மரபுக்கு மீறிவரும்பொழுது ஒலியைத் தோராயமாகக் காட்ட எழுதலாம். கிரந்தம் இல்லாமல் எழுதுவதால் தமிழில் 66+ 13 = 79 எழுத்துகள் குறைவாகப் பயன்படுத்தலாம். எழுத்தைக் குறைப்பது மட்டுமே நோக்கமன்று, வேறுபல சிக்கல்களில் இருந்தும் பிழைக்கலாம். மிஞ்சிப்போனால் ஃக, ஃப, ஃச ஆகிய மூன்று காற்றொலிகளைச் சிறுபான்மையாகப் பயன்படுத்தலாம். இதுவும் கூடவே கூடாது எனச்சொல்வோர் உண்டு. அவர்களின் கூற்றில் நல்லறிவுரையும் உள்ளது. எனவே இயன்ற அளவு இயல்பான தமிழிலேயே எழுதலாம். எளிமையைப் போற்றுவோம் என்பதே குறிக்கோள்.

எண் அயற்சொல் பொது வழக்கு தமிழ் வழக்கு
1 Big பிக் பெரிய/பிய்கு [பி’க்’கு’]
2 Biscuit பிஸ்கேட் பிசுக்கோத்து
3 Bore போர் (அடிக்கிறது) துளை/ஆழ்துளை/போர்
4 Bow போ / பவ் வில்/இருகண்ணி முடிச்சு/போவ்
5 Bra பிரா பிரா/கச்சை
6 Bread பிரட் பிரெடு
7 Broadway பிராட்வே பிராடுவே
8 Chaddi (Hindi word) ஜட்டி சயிட்டி
9 Charles Darwin சார்லஸ் டார்வின் சார்லசு தார்வின்
10 Deutschland டாய்ச்லாந்து இடாய்ச்சுலாந்து
11 Dublin டப்ளின் தபுலின்
12 Fancy பேன்சி பேன்சி
13 Germany ஜெர்மனி செருமனி
14 Great கிரேட் பெரிய/பேரரருமை/கிரேட்டு
15 Greed கிரீட் பேராசை/கிரீடு
16 Greet கிரீட் வாழ்த்து/கிரீட்டு
17 HariKi ஹரிகி அரிகி
18 Hsuan Tsang யுவான்சுவாங் உவான்சுவாங்கு
19 Hyundai ஹூண்டாய்/ஹண்டே ஃகூண்டை/குயுண்டை/உயுண்டை/ஃகுயுண்டை
20 Jam ஜாம் பழக்களி/நெரிதடை/சாம்
21 Japan ஜப்பான் சப்பான்
22 Kasthuri கஸ்தூரி கத்தூரி
23 Kushboo குஷ்பு குட்பு
24 Laddu லட்டு இலட்டு/உலட்டு
25 Lakh லட்சம் இலட்சம்
26 Lead லீடு ஈயம்/முன்செலி/வழிகாட்டி/இலீடு
27 League லீக் குழு/இலீகு
28 Leak லீக் கசிவு/இலீக்கு
29 Load லோடு சுமை/உலோடு
30 London லண்டன் இலண்டன்
31 Mississippi மிஸ்ஸிஸிப்பி மிசிசிப்பி
32 Missouri மிஸ்ஸௌரி மிசௌரி
33 Pig பிக் பன்றி/பன்னி/பிக்கு
34 Pour போர் ஊற்று/போர்
35 Robert Clive ராபர்ட் கிளைவ் இராபர்ட்டு கிளைவ்
36 Rod ராடு கம்பி/இராடு
37 Rupa Devi ரூபாதேவி உரூபாதேவி
38 Rupee ரூபாய் உருபாய்
39 Russia ரஷ்யா உருசியா
40 San Francisco ஸான் ஃபிரான்ஸிஸ்கோ சான் பிரான்சிசுக்கோ/சான் பிரான்சிசிக்கோ
41 Shailaja ஷைலஜா சைலசா
42 Spa ஸ்பா நலநீர்க்குளி/ இசுப்பா
43 Stephen Hawking ஸ்டீஃபன் ஹாக்கிங் இசுட்டீபன் ஆக்கிங்கு
44 Stepney ஸ்டெப்னி வைப்பாழி/தெப்பினி
45 Store ஸ்டோர் கடை/இசுட்டோர்/சேமி
46 Story ஸ்டோரி கதை/இசுட்டோரி/அடுக்கு
47 Street ஸ்டிரீட் தெரு/இசுற்றீட்டு
48 Sure ஷ்யூர் உறுதி/சுயூர்
49 Times Now டைம்ஸ் நவ் தைம்சு நவ்
50 Xuanzang யுவான்சுவாங் சுவான்சுவாங்கு

 

 

 

பதிவாசிரியரைப் பற்றி

27 thoughts on “அயற்சொற்களைத் தமிழ் வழக்கில் எழுதுவோம்

  1. பேரா. செல்வா,

    யாராவது குட்பு, கத்தூரி, மகிழுந்து, தார்வின், தபுலின், தங்குலின் என்று எழுதியுள்ளாரா ? இவ்விதம் சொல்லுவாரா ? 

    மதிப்புக்குரிய ஸ்டீஃபன் ஹாக்கிங் வாடர்லூ பல்கலைக் கழகத்துக்கு வந்தபோது செல்வா இசூடீபன் ஆக்கிங் என்று அழைத்தாரா ? அழைப்பாரா ?

    செல்வாவின் இந்தச் சொல் அகராதிச் சொற்கள் பல மேடை ஏறவே ஏறா !!! வல்லமை இவற்றை ஆதரித்து வெளியிட்டாலும், அதன் அதிபர் அண்ணா கண்ணன் மேடையில் குட்பு, கத்தூரி, சார்ச்சு புச்சு, தார்வின், தபுலின், தங்குலின், அரிகி, கரிக்கி, என்று சொல்வாரா ?  படைப்பில் எழுதுவாரா ?  அவரது தனிப்பட்ட மனக் கருத்தென்ன ?

    காஷ்மீர், ஆஸ்திரேலியா, ஆஸ்டிரியா, ஸ்பெயின், பிரான்ஸ், யுகோஸ்லாவியா, ஹங்கேரி, கிரீஸ், ஹாங்ஹாங், பாகிஸ்தான், ஆஃப்கானிஸ்தான், ராஜஸ்தான், ஹிந்துகுஷ், பலுஜிஸ்தான், ஸ்காட்லாந்து, இஸ்லாம், புஷ்பா, சரஸ்வதி, லெனின், ஸ்டாலின், ஸ்புட்னிக், ஃபாஸ்ஃபரஸ், ஜியார்ஜ் புஷ், ஷேக்ஸ்பியர், வஷிஸ்டர் போன்ற பெயர்களை எப்படித் தனித்தமிழில் எழுதுவார் ???

    புத்தம் புதிய கலைகள், பஞ்சப்
    பூதச் செயல்களின் நுட்பங்கள் கூறும்;
    மெத்த வளருது மேற்கே, அந்த
    மேன்மைக் கலைகள் தமிழினில் இல்லை

    சொல்லவும் கூடுவ தில்லை! அவை
    சொல்லும் திறமை தமிழ்மொழிக் கில்லை!
    மெல்லத் தமிழினிச் சாகும், அந்த
    மேற்கு மொழிகள் புவிமிசை ஓங்கும்!

    ++++++++++++

    தமிழுக்கு விடுதலை தா
     
    சி. ஜெயபாரதன், கனடா.
     

    தமிழைச் சங்கச் சிறையில்
    தள்ளாதே ! 
    தங்கச் சிறை வேண்டாம் !
    ​கை கால்களில்​ 
    ​பொன் விலங்கு பூட்டாதே !​
    விதிகள் இட்டால்
    விதி விலக்கும் இடு !
    தமிழுக்கு வல்லமை தேவை
    மூச்சு விடட்டும்;
    முன்னுக்கு வரட்டும் ! 
    நுண்ணோக்கி மூலம் நீ,
    பின்னோக்கிச் செல்லாது,
    முன்னோக்கிச் செல்
    தொலை நோக்கி மூலம் ! 
    வேரூன்றிக் கிளைகள் விட்டு
    விழுதுகள் 
    வைய மெங்கும் பரவட்டும்; 
    கழுத்தை நெரிக்காதே !
    காற்றில் நீந்தட்டும் ! 
    காலுக்கு ஏற்றபடி செருப்பை மாற்று !
    தமிழைத் தவழ விடு !
    நடைத் தமிழில் 
    நடக்க விடு !
    ​நடக்க நடக்கக் குருதி ஓடும் ! 
    ​முடக்காதே தமிழை ! 
    தவறி விழுந்தால்
    எழுந்து நடக்கக் கைகொடு ! 
    தோள் கொடு, தூக்கி விடு !
    தனித்தமிழ் தேடி, தூய தமிழ் நாடி
    வடிகட்டி ஏந்தி
    வலை உலகில் மேயாதே ! 
    பழமை பேசிப் பேசி 
    கிழவி ஆகாதே !
    ஆறிய கஞ்சியை மீண்டும்
    சூடாக்கிக் குடிக்காதே !
    அழுக்குச் சட்டை
    ​தூய நீரில்​
    துவைத்து துவைத்துக்
    கிழிந்து போனது !
    தமிழில் இல்லாததை, தமிழால் இயலாததைத்
    தத்தெடுத்துக் கொள்
    யுக்தியுடன்;
    புத்தாடை அணிய விடு ! 
    புத்துயிர் பெற்றுப் பைந்தமிழ்
    இத்தரணி ஆளவிடு !

    +++++++++

    சி. ஜெயபாரதன்

  2. திருத்தம் செய்க

    ///// அயற்சொற்களை தமிழ் வழக்கில் எழுதுவோம்   ////

    அயற்சொற்களைத் தமிழ் வழக்கில் எழுதுவோம்.

    பெயர்ச்சொற்கள் [விதி விலக்கு]

    லண்டன், ரஷ்யா, லாந்தனம், லிதியம், லுடீடியம், ரேடியம், ரேடான், ரீனியம், ரோடியம், ருதீனியம், லத்தீன், லட்சம், லாகிரிதம், லலிதா, டார்வின், டப்ளின், டான்டலம், டங்ஸ்டன், டியூடிரியம், டிரிடியம்,  டெல்லூரியம், டெக்னீசியம், டின், டெர்பியம், டிட்டேனியம் போன்ற பெயர்ச்சொற்களுக்கு விதி விலக்கு தேவை.

    மூலகங்கள், மூலக்கூறுகள், கலவைகள் :  [விதி விலக்கு]

    அசெட்டிக் ஆசிட்
    ஆல்க ஹால்,
    கார்பன் டெட்ராகுளோரைடு
    குளோரஃபார்ம்,
    அம்மோனியா,
    மீதேன்,
    இப்படிப் பல.

    ++++++++++++++

    விதிகள் கூறும் போது,
    விதி விலக்கும் கூறுவோம்.

    சி. ஜெயபாரதன்

  3. தலைப்பில் செய்த ஒற்றுப் பிழைக்கு வருந்துகிறேன்.  அது என் கவனக் குறைவினால் விளைந்தது. 

    ….. தேமொழி 

  4. வல்லமையில் எழுதுவோர், அவரவர் நடையில் எழுதலாம். ஆனால், தமிழ் வழக்கில் எழுத விருப்பம். எப்படி எழுதுவது? என்று கேட்பவர்கள், இந்தப் பக்கத்தைச் சேமிக்கலாம். 

    நான் தனிப்பட்ட முறையில் இயன்ற வரை தமிழ் என்ற நிலைப்பாட்டிலேயே தொடர்கிறேன். மகிழுந்து என்பது பரவலான புழக்கத்தில் உள்ள சொல். இலண்டன், இலட்சம் எனப் பலரும் எழுதுகிறோம். இலட்டு என எழுதுவதில்லை. இடத்துக்கு ஏற்ப, இவற்றில் பொருத்தமான சொல்லைத் தேர்ந்தெடுப்பேன். மக்களுக்கு எளிதில் புரிய வேண்டும் என்ற நோக்கிலேயே என் எழுத்து இருக்கும்.

    நான் முழுவதும் பின்பற்றாவிட்டாலும், தனித் தமிழில் எழுத வேண்டும் என விரும்புவோருக்கு அவர்களின் சுதந்திரத்தை உறுதி செய்வேன், உறுதுணையாகவும் இருப்பேன்.

  5. நண்பர் அண்ணாகண்ணன்,

    குஷ்பூ எனப் பெயருள்ள ஒரு புகழ்பெற்ற திரைப்பட நடிகையை “குட்பு”, என்று வல்லமை தனித்தமிழ்ச் சொல் அகராதியில் குறிப்பிடுவது அவரை அவமதிப்பாகக் கருதப்படும் என்று என் கருத்து.   

    அதுபோல் புகழ் பெற்ற விஞ்ஞான மேதை பெயரை [ஸ்டீஃபன் ஹாக்கிங்] இசுடீபன் ஆக்கிங் என்று பொதுவலை வல்லமையில் இடுவது அவரை இழிவு செய்வது என்பது என் கருத்து.

    சி. ஜெயபாரதன்

  6. பேராசிரியர் செ. இரா. செல்வகுமார் அவர்களது கருத்தில் எனக்கு உடன்பாடு உண்டு. ஆசிரியர் கருத்தும் உள்வாங்கப்பட்டு இங்கு எனது கருத்தைப் பதிகிறேன். நான் கடந்த 30 ஆண்டுகளாக கனடாவில் வசித்து வருபவன். பார்க்கப்போனால் கனடா கூட தமிழ் வேராகத்தான் இருக்கமுடியும். காணறா (காண்+உற) மக்கள் கூட்டமாக வாழும் இடத்தைச் சுட்டிய சொல்! மற்றும் எனது வதிவிடமான மிசுசாகா கூட மொகவாக் (முகவாய்) என்னும் பூர்விகக் குடிமக்களின் வாழ்விடமே. இத்துணை தொன்மைவாய்ந்த மொழியை தாய்மொழியாகக்கொண்ட இன்றைய சக்ததியினருக்கு வரலாற்றுப் பொறுப்பும் இருக்கவே செய்கின்றன. இல்லையேல் நாவும் மாறி மொழியும் சிதைந்து அழிந்துபோகும். நன்றி.

  7. மொழியின் பலம்: மொழி என்றவுடன் நா வந்துவிடும். ஒரு மொழியை மொழிவதற்கு நா இன்றியமையாதொன்று என்பதே அதன் பொருள். ஆங்கிலத்தில் அண்ணளவாக 15,000ற்கும் மேற்பட்ட பிரெஞ்சு சொற்கள் மூலமாக இருப்பதாக மொழியியலாளர்கள் கூறுகின்றனர் (art, music, dance, theatre, author, stage, paint, canvas…) உள்ளடங்கலாக. ஆனால் அவர்கள் இலத்தீன் வேர்ச்சொற்களாயிருந்தாலும் செர்மனிக் வேர்ச்சொற்களாயினும் அப்படியே உள்ளாங்கியிருக்கவில்லை என்பது இங்கு கவனிக்கத்தக்கது. இன்று அடையாளம் காண முடியாதளவிற்கு அத்துணையும் ஆங்கிலமாகவே ஒலிக்கின்றன. அன்று அவர்கள் தங்களது மொழியைக் கட்டிக் காக்க எப்படி அவர்களது நா’வில் இறுக்கமாக இருந்துள்ளார்கள் என்பதுதான் இன்று அவர்களது மொழியின் பலம்!

  8. வேஷ்டியை வேட்டியென்றும் சேஷ்டையை சேட்டை என்றும் துஷ்டனைத் துட்டன் என்றும் இஷ்டத்தை இட்டம் என்றும் எழுதுவதைப் போலவே, குஷ்பூவைக் குட்பு என எழுதியுள்ளார். 

    ஸ்டாலினை இசுடாலின் என எழுதுவது போலவே ஸ்டீபனை இசுடீபன் என எழுதியுள்ளார். ஹாலந்து என்பதை ஆலந்து என்றும் ஹரப்பா என்பதை அரப்பா என்றும் எழுதுவதைப் போலவே ஹாக்கிங் என்பதை ஆக்கிங் என எழுதியுள்ளார். 

    அவரவர், எழுதும் இடத்துக்கு ஏற்ப, விருப்பத்துக்கு ஏற்ப, இவற்றை எழுதலாம். ஆனால், தமிழ் மரபை நாம் மாற்ற முடியாதே.

  9. /////வேஷ்டியை வேட்டியென்றும் சேஷ்டையை சேட்டை என்றும் துஷ்டனைத் துட்டன் என்றும் இஷ்டத்தை இட்டம் என்றும் எழுதுவதைப் போலவே, குஷ்பூவைக் குட்பு என எழுதியுள்ளார். 

    ஸ்டாலினை இசுடாலின் என எழுதுவது போலவே ஸ்டீபனை இசுடீபன் என எழுதியுள்ளார். ஹாலந்து என்பதை ஆலந்து என்றும் ஹரப்பா என்பதை அரப்பா என்றும் எழுதுவதைப் போலவே ஹாக்கிங் என்பதை ஆக்கிங் என எழுதியுள்ளார். 

    அவரவர், எழுதும் இடத்துக்கு ஏற்ப, விருப்பத்துக்கு ஏற்ப, இவற்றை எழுதலாம். /////

    வேஷ்டி, சேஷ்டை, துஷ்டன், இஷ்டம் போன்றவை உயிரற்றவை / ஒருவரைக் குறிப்பிடாதவை.

    ஆனால், பாஸ்கரன், குஷ்பு, ஸ்டாலின், ஸ்டீஃபன் ஹாக்கிங், ஹரிகி, ராஜம், ஜெயபாரதன், ஷைலஜா போன்ற பெயர்ச் சொற்கள் மதிப்புள்ள மனிதரைக் குறிப்பிடுபவை. இவர்களை பாசுக்கரன், குட்பு, இசுடாலின், இசுடீபன் ஆக்கிங், அரிகி, கரிக்கி, ராசம், செயபாரதன், சைலச்சா என்று வல்லமை போன்ற பொது வலைகளில் தெரிந்தே எழுதுவதும், வாயால் விளிப்பதும் அநாகரீகமாகும்; அவர்களை அவமதிப்பதாகும்.  அவை அனைத்தும் விதி விலக்குப் பெயர்ச் சொற்கள்.

    அவ்விதம் வாயால் அழைக்காத பெயர்ச்சொற்களை விருப்படிப் பொது வலைகளில் எழுதுவது அமங்கல, அநாகரீக  வழக்கு.

    இதற்குத் தமிழ் இலக்கண விதிகளைக் கூறி நியாயம் கற்பிப்பது ஒவ்வாது.  

    சி. ஜெயபாரதன்.

    சி. ஜெயபாரதன்.

  10. இது பற்றி நெடுக அலசி இருக்கின்றோம்.  (1) எல்லா மொழிகளிலும் எல்லா ஒலியன்களும் இல்லை என்பது உண்மை.  (2) இருக்கும் ஒலியன்களைக்கொண்டு, தம் மொழியின் இயல்புக்கும், இலக்கண விதிகளுக்கும் ஏற்பவே எல்லா பொதுவாக மொழிகளும் பிறமொழிச்சொற்களை உள்வாங்கத்தேவை இருப்பின் உள்வாங்குகின்ற்ன. (3) மெய்யெழுதுக்கூட்டம் மொழிக்குமொழி மாறுபடுவது. சப்பானியரால் McDonald என்பதில்  வரும் -cD- ஒலியை இடையே ஓர் உயிரொலி சேர்க்காமல் ஒலிக்க  இயலாது. மக்குடொனால்டு அல்லது மெக்குடொனால்டு என்றுதான் ஒலிக்க முடியும். சீனர்களுக்கும், தமிழர்களுக்கும் அப்படியே. ஒருசிலரால் (தமிழர், சீனர், சப்பானியர் ஆகியோரிடம்)  ”க்” என்னும் ஒலியை அடுத்து  மிகக்குறைந்த அளவு உயிரொலிகொண்டு ஒலித்துவிட்டு  ”-டொனால்டு” என்பதைச்சொலல்முடியும். (4) புறமொழிப்பெயர் (exonym) மரபு என்பதும் எல்லா மொழிகளிலும் உண்டு. Deutschland  என்பதை ஆங்கிலத்தில் Germany என்றும் அதே நாட்டை பிரான்சு நாட்டில் Allemagne என்று அழைப்பதும் இதனாலேயே. இன்னும் பல்லாயிரக்கணக்கான எடுத்துக்காட்டுகள் தரலாம். இம்மொழிகள்   இத்தனைக்கும் இனமான மொழிகள் உரோமன்/இலத்தீன எழுத்துகளைக் கொண்டு எழுதும் மொழிகள், எனினும் இப்படி.  London என்னும் நகரத்தை பிரான்சியத்திலும் எசுப்பானியத்திலும்,, போர்த்துகீசியத்திலும் Londres என எழுதுகின்றார்கள். இத்தாலியத்திலும் உருமானிய மொழியிலும் Londra என்கின்றனர்,, செக்கு, சுலோவாக்கு மொழிகளில் Londýn என்கின்ற்னர், ஐசுலாந்தியத்தில் Lundúnir, பின்லாந்தியத்தில் Lontoo என்கின்றனர். இவை அனைத்தும் உரோமன்/இலத்தீன எழுத்துகளில் எழுதும் மொழிகள்.  அதாவது மொழிவழக்கின்படியும், இயல்பின்படியும், மரபின்படியும் இவை சற்று மாறி ஒலிக்கும், மாற்றி எழுதுவார்கள். பல்லாயிரக்கணக்கான எடுத்துக்காட்டுகள் தரலாம்.  தமிழில் இலண்டன் என்று எழுதுவதே முறை. தமிழை மதிக்காதவர்கள் எப்படியும் எழுதுவார்கள், அவற்றையெல்லாம் சரியென ஏற்கவியலாது.

    சரி, காந்தி, பாரதி  என்னும் பெயர்களை நீங்கள் கேள்விப்பட்டிருப்பீர்கள்தானே.  அதுபோலவே செயமனோகரி என்னும் பெயரும் அதைப்போன்ற பெயர்களும்.  நீங்கள் Jeyamanoohari என ஒலித்துக்கொள்ளுங்கள், ஆனால் தமிழில் எழுதும் முறை செயமனோகரி. பிரான்சியர் Bertrand என்னும் பெயரை ஒலிப்பதற்கும், ஆங்கிலேயர் அதே பெயரை ஒலிப்பதற்கும் மிகுந்த வேறுபாடு உண்டு. இதே போலவே பிரான்சியர் Paris என்று ஒலிப்பதற்கும் ஆங்கிலேயர் Paris என ஒலிப்பதற்கும் மிகுந்த வேறுபாடு உண்டு,. ஒருமொழி வழக்கத்தையும் ஒலிக்கூட்டங்களையும் இன்னொரு மொழிமீது திணிக்கவியலாது. ஒருசிலரால் இரண்டுவிதமாகவும் ஒலிக்க முடியலாம், ஆனால் அது பொதுவாகாது, எழுத்தில் காட்டவேண்டும் என்றும் எதிர்பார்க்கவியலாது.  தமிழில் தல யாத்திரை, தஅல்ம் என்னும் சொல் வழக்கில் இருப்பதை அறிவீர்கள்.அது ”ஸ்த்தல” என்னும் சமற்கிருதச்சொல்லில் இருந்து வந்தது என்பார்கள். இதே போல ”ஸ்க்கந்த” என்னும் சொல்லே கந்த-கந்தன் என வந்தது என்றும் சொல்வார்கள். இதேபோல பல எடுத்துக்காட்டுகளைத்தரலாம். இங்கெல்லாம் முதல் காற்றொலி சகர ஒற்றை நீக்கிவிட்டு தலம், கந்தன் என வழங்குவது முறை. Steven என்பதைத் தீவன் என்றும் தமிழில் சொல்லலாம். இசுட்டீவன் என்றும் தமிழில் சொல்லலாம். தமிழழகன் என்னும் சொல்லைத் தகரமும் ழகரமு இல்லாத ஆங்கிலத்தில் ட*மிலலகன்  (Tamilalagan) என்றுதான் கூற்முடியும். அதில் பிழையேதும் இல்லை. மதுரையை மேஅடுரை என்றுதான் ஆங்கிலேயர்கள் சொல்லவியலும். தமிழொலிப்புடன் சொல்லமுடிந்தாலும், அவை மற்ற் சொற்களோடு இயைந்து நிற்காது. எனவே மொழி வழக்கத்தின் படி, அதன் உள்ளோசையின்படி, பண்ணின்படி திர்ந்தே ஒலிக்கும். அச்சொல் எதை, யாரைக் குறிக்கும் என அவர்களுக்குப் புரிந்தால் போதும். இசுட்டீவன் ஆக்கிங்கு எனவோ தீவன் ஆக்கிங்கு என்றோ எழுதினால்  அது அவரை அவமதிப்பதாகக் கொள்வது மொழிகளின் இயல்புகளை அறியாமையால், முறைமைகளை அறியாமையால். அருள்கூர்ந்து இவற்றைப் புரிந்துகொள்ள வேண்டுகின்றேன். 

  11. நண்பர் செல்வா,

    தனித்தமிழில் குஷ்பூ வென்று எழுத  இயலாது.  ஹரிகி, ஷைலஜா, பாஸ்ஃபரஸ், ஸ்டீஃபன் ஹாக்கிங் என்று எழுத முடியாது.  இந்த மெய்ப்பாடு நீங்கள் ஆயிரம் உதாரணங்கள் கூறினாலும், தமிழில் இல்லாமையை, ஏலாமையை நிரூபிக்க முடியாது.

    லண்டன், ரஷ்யா, லாந்தனம், லிதியம், லுடீடியம், ரேடியம், ரேடான், ரீனியம், ரோடியம், ருதீனியம், லத்தீன், லட்சம், லாகிரிதம், லலிதா, டார்வின், டப்ளின், டான்டலம், டங்ஸ்டன், டியூடிரியம், டிரிடியம்,  டெல்லூரியம், டெக்னீசியம், டின், டெர்பியம், டிட்டேனியம் போன்ற பெயர்ச்சொற்களை எழுத விதி விலக்கு தேவை.

    சி. ஜெயபாரதன்.   

  12. ஐயா, ஒரு மொழியில் இல்லாத எழுத்துகளைக் கொண்டு அவ்வொலிகள் உள்ள பிறமொழிச்சொற்களை  அம்மொழியில் எழுதமுடியாது என்பது எல்லா மொழிக்குமான பொதுத்தன்மைதானே!!. இதனை இயலாமை, ஏலாமை என்பது எதற்காக ? எந்தமொழியிலும் ”இயலாது, ஏலாது”. இது செய்தியல்லவே!! இந்தியில் செல்வா, சென்னை, தமிழ்  என்பனவற்றை எழுதமுடியாது,  நம் மொழியான தமிழ் என்பதையே ஆங்கிலத்தில் சொல்லவோ எழுதவோ  முடியாது. இவை செய்தியே அல்ல. ஏனெனில் அதில் தகரமும் கிடையாது ழகரமும் கிடையாது. குshபு,  பாSபரS என்றெல்லாம் ”தமிழில்” எழுத முடியாது, நல்ல தமிழில் எழுதக்கூடாது. பு[ஷ்][ப்]பம் என்பதைத் தமிழில் புட்பம் எனஎழுதுவார்கள். அதுபோல குட்பு என எழுதுவார்கள் (எ.கா. மறவன்புலவு ஐயா எழுதுவது). ஆங்கிலத்தில் ”My mother language is தmiழ்”  என எழுதமுடியாது. 

    நீங்கள் விலக்கு தேவை எனக்குறிப்பிட்ட சொற்களை அழகாகத் தமிழில் எழுதலாமே.  பலமொழிகளும் தங்கள் மொழிவழக்கின்படித்தானே எழுதுகின்றன. இலண்டன், உருசியா,  தெலூரியம், தார்வின், தாண்டலம், இலாந்தனம், இலித்தியம் இலூட்டியம், இரேடியம்,  இரேடான் …ஏன் விலக்கு தேவை???!!  எசுப்பானியத்தில் Estroncio என்பது ஆங்கிலத்தில் strontium.  எசுப்பானியத்தில் escandio  என்பது ஆங்கிலத்தில் scandium. இப்படி ஆயிரக்கணக்கான் எடுத்துக்காட்டுகள் பல மொழிகளில் இருந்து அறிவியல் சார் சொற்களுக்கே தரவியலும். நாம் ஆங்கிலத்தைப் பின்பற்றித்தான் பெயர்களை வழங்குகின்றோம், ஆனால் நம்மொழிக்கு ஏற்ப சிறிதே திருத்தி வழங்குகின்றோம். அது தேவை, அது இயல்பு. ஆங்கிலச்சொற்கள் அப்படியே எல்லா மொழிகளிலும் வழங்குவதும் இல்லை. நீங்கள் குறிப்பிட்ட வடிவங்களும் திரிபானவையே, (சில தவறானவையும்கூட, எ.கா. ”டிட்டேனியம்) அச்சொட்டாக அப்படியே ஆங்கிலவொலிப்புமல்ல. ஏன் ஆங்கிலவொலிப்பில் இருக்கவும் வேண்டும்?? 

  13. நண்பர் செல்வா,

    ////குshபு, பாSபரS என்றெல்லாம் ”தமிழில்” எழுத முடியாது, நல்ல தமிழில் எழுதக்கூடாது. பு[ஷ்][ப்]பம் என்பதைத் தமிழில் புட்பம் எனஎழுதுவார்கள். அதுபோல குட்பு என எழுதுவார்கள் (எ.கா. மறவன்புலவு ஐயா எழுதுவது). ஆங்கிலத்தில் ”My mother language is தmiழ்” என எழுதமுடியாது. //// குட்பு [Kushbu] என்று இரு மொழிகளில் எழுதலாமா ? அரிகி, கரிக்கி [Hari Krishnan] என்று இரு மொழிகளில் எழுதலாமா ? //// இலண்டன், உருசியா, உரூபா, தெலூரியம், தார்வின் [டார்வின்], தபுலின் [டப்ளின்], தங்குலின் [டங்ஸ்டன்], தாண்டலம், இலாந்தனம், இலித்தியம் இலூட்டியம், இரேடியம், இரேடான் …உடாய்ச்சுலாந்து, இசுடீபன் ஆக்கிங், பாசுக்கரன்//// இப்படியெல்லாம் பெயர்ச் சொற்களைச் சிதைத்து எழுதுவது தமிழைப் பிற்போக்கு மொழியாகக் காட்டுகிறது.
    சி. ஜெயபாரதன்

  14. பேராசிரியர் ஐயா செ. இரா. செல்வக்குமார் அவர்களுக்கு! உங்களது சிறப்பான விளக்கததுக்கு முதற்கண் எனது நன்றிகள். இன்றைய தொழில்நுட்ப வளுர்ச்சியுநூடே பொதுமையாகியிருக்கும் தொடர்பாடல்களின் நன்மையும் – தீமையும் இருமுனைக் கத்திபோல் பார்க்கத் தோன்றுகிறது. பொதுவாக ஈழத் தமிழர்களிடையே குறிப்பிடத்தக்க விழுக்காடானோர் பேச்சு மொழியை சிரத்துக்குள்ளேயே வைத்துப் பேசுகின்றார்கள்.  அதுதான் தமிழ்மொழியினது இயல்பாகவும் இருக்கமுடியும். ஒரு குறிப்பிட்ட தட்பவெப்ப மண்ணில் ஒட்டி உறவாடி பல்நெடுங்காலமாக வாழ்ந்து வருகின்ற ஒரு குடிமக்களின் பரிணாமத்தோடு பயணித்து வந்த ஒரு மொழியினது இயல்புநிலை அது!  மாறாக இன்றைய தமிழ் ஒலி-ஒளி பரப்பு ஊடகங்களில் குறிப்பாக தமிழக ஊடகங்களில் தமிழ் ஒலிப்பு முற்றிலுமாக வயிற்றுக்கே வந்துவிட்டது! கேட்க, (பழங்கடைக்குள் யானை புகுந்தாற்போல்)  மிகமிக கொடூரமாக ஒலிக்கின்றது. இது ஒரு விகார நிலையேயன்றி சிறப்பானதாகக் கொள்ளமுடியாது. சிறிது நேரம் தொடர்ந்து கேட்டால் தலைவலியே வந்துவிடுமளவிற்கு கரடுமுரடாக ஒலிக்கிறது. இதற்கு அதிகமான வடமொழிச் சொற்சேர்க்கையும் ஆங்கில மொழித் தாக்கமுமே காரணமென கருதுகிறேன். இதில் மிக வருத்தத்துக்குரியது என்னவென்றால்,  இதன் பிற்தாக்கம் ஈழம் வரையும் மட்டுமன்றி தமிழர் புலம்பெயர் நாடுகளுக்கும் போச்சென்றுவிட்டதென்பதுதான் கசப்பான பெரும் உண்மை! இது நிச்சயமாக ஒரு மொழியின் தேய்வேயன்றி வளர்ச்சியல்ல என்பதை இவ்வுலகின் எந்த ஒரு மொழியையும் தாய்மொழியாக கொண்டிருப்பவனைக் கேட்டால் ஒப்புக்கொள்வான், தமிழனைத் தவிர!!! தனது தாய்மொழி பற்றிய அடிப்படையறிவும் பற்றும் மரியாதையும் இல்லாவனுக்கு யாரும் மதிப்பும் மரியாதையும் தரமாட்டார்களென்பதும் அவனோடு உடன்பட்டு பயணிக்க விரும்பமாட்டார்களென்பதுமே யதார்த்தம்! ஏனெனில் ஒரு மனிதனுக்கு இருக்கக்கூடிய அடிப்படையான தகுதி அதுவாகத்கான் இருக்கமுடியும். இதுதான் உலக நியதி. ஐயா! உங்கள் கருத்தோடு எனது உடன்பாட்டின் நிமித்தம் இதை இங்கு பதிவுசெய்ய விழைகிறேன். நன்றி. 

  15. நன்றி ஐயா! நான் எனது இளமைக்காலந்தொட்டு தமிழ்மொழிக்கான அச்சுருவாக்கத்தில் மிகுந்த ஆர்வம்கொண்டவனாகவும் அதன் தொடர்ச்சியாக கிட்டத்தட்ட 29 ஆண்டுகளுக்கு முன்பாக மின்கணினிக்கான தமிழ் அச்சுருக்களை உருவாக்கி வெளியிட்டுமிருந்தேன். தொடர்ந்த பயணிப்பில் இற்றைவரை 250 ற்கும் மேற்பட்ட வடிவடங்களில் தமிழ் அச்சுருக்களை உருவாக்கியுள்ளேன். குறிப்பாக எனது நோக்கில், தமிழில் மழலையிலிருந்து பல்கலைக்கான பாடப்புத்தகங்களுக்கான அச்சமைப்புக்குக் தேவையான அடித்தளத்தை உருவாக்கி வைத்துள்ளேன். இவை, அச்சுருவமாகவும் (print)  இலத்திரனுருவமாகவும் (e-book) சமாந்தரமாக, எந்தவித இடையூறுமற்ற பன்முகப் பயன்பாட்டை அடித்தளமாகக் கொண்டு கட்டமைக்கப்பெற்றுள்ளன. இது இனிவரும் காலத்தில் தமிழ்மொழிக்கான பயன்பாட்டை மேலும் செழுமையாக்கி, தமிழ்கூறும் உலகம் பயன்பெற வேண்டுமென்பதே எமது அவா! மிக விரைவில் இதற்கான உறுதிப்பாட்டை எட்டுவோம் என்பதை தங்களுக்கு அறியப்படுத்துவதில் மன நிறைவுகொள்கிறேன். மீண்டும் உங்களது தமிழ்ப்பணிக்கு வாழ்த்துகளும் நன்றிகளும்.

  16. ///இலண்டன், உருசியா, உரூபா, தெலூரியம், தார்வின் [டார்வின்], தபுலின் [டப்ளின்], தங்குலின் [டங்ஸ்டன்], தாண்டலம், இலாந்தனம், இலித்தியம் இலூட்டியம், இரேடியம், இரேடான் …உடாய்ச்சுலாந்து, இசுடீபன் ஆக்கிங், பாசுக்கரன்//// இப்படியெல்லாம் பெயர்ச் சொற்களைச் சிதைத்து எழுதுவது தமிழைப் பிற்போக்கு மொழியாகக் காட்டுகிறது.////

    பெயர்ச்சொற்களை இவ்விதம் திரித்து எழுதுவது தனித்தமிழ்வாதிகளுக்குக் கொடையாக இருக்கலாம்.  பெரு மகிழ்ச்சி தரலாம்.  ஆனால் இப்போது யார் இவற்றைக் கட்டுரைகளில் இப்படித் திரித்துப் பயன்படுத்தப் போகிறார் ?  ஓரிருவர் இருக்கலாம்.  திரு. செல்வக்குமார்  படைத்த ஏட்டுச் சுரைக்காய்க் கறிக்கு உதவாது ! 
    சி. ஜெயபாரதன்

  17. ஊருக்கு உபதேசம் எப்போதுதான் நிற்க்கும்.  வாழ்க்கை ஆதாயத்திலிருந்தும், வயித்துப்  பிழைப்பிலிருந்தும்  தமிழ் விலகும்போது இப்படிப்பட்ட அபத்தங்களை மற்றவர்களுக்கு டன் கணக்கில் அள்ளி விடலாம்.  வயித்து பிழைப்புக்காக ஒரு தினத்தந்தி அல்லது தினமலர் எடிடராக இருந்தால் அல்லது மற்ற‌வர்கள் வாங்கும் படி சுவாரஸ்யமாகவும், உபயோகமாகவும் இருக்கும் நூலை எழுதும் போது இப்படிப்பட்ட நேரத்தை விரயம் செய்யும் எண்ணங்கள் பறந்து போகும். 

    மற்றவர்கள் படிக்கும் போல் வசீகரமாக தமிழ் இருக்க வேண்டும் என்றால்

    சூப்பர் ஸேல்ஸ்மென், இ-காமர்ஸ், எஸ்கேப், ஹலோ கன்ஸ்யூமர், சிம்மசன சீக்ரட் , மார்க்கெடிங் மந்திரங்கள் , ஃபேஸ் புக் வெற்றிக்கதை,  சேல்ஸ்மேன் , போன்ற புஸ்தகங்களை தவிர்க்க முடியாது

    http://nammabooks.com/Buy-Business-Management-Tamil-Books-Online?pages=1-5#p9305

    தன் பண அல்லது நேர முதலீடு இல்லாமல், லாப நஷ்டம் இல்லாமல், மற்றவர்களுக்கு உபதேசம் செய்தே தமிழை வளர்ப்பது என்றால் இதைப்போல் Unproductive  கட்டுரைகளை எழுதலாம்

    வ.கொ.விஜயராகவன்

  18. “பொது வழக்கு” என்பது தமிழில்லையாம்!!!    “தமிழ் வழக்கு” என்னும் காலத்தில் உள்ளவை எப்படிப்பட்ட ஜோக் என்பது ஒரு வார்த்தையை உதாரணமாக பார்த்தால் போதும். 

    Biscuit  பிஸ்கேட்   பிசுக்கோத்து

    பொது வழக்கில் இருப்பது பிஸ்கட்.   கூகிள்  ஹிட்கள் பார்த்தாலே புரியும் 

    பிஸ்கேட்    2380
    பிஸ்கட்        172000
    பிஸ்கோத்து     6080

    “தமிழ் வழக்கு”  பிசுக்கோத்து     186 

    இதைப்போல் ஹாஸ்யங்களை தமிழ்வழக்கு என பீலா விடுவது   தமிழ்நாட்டில் எடுபடாது

    வ.கொ.விஜயராகவன்

  19. திரு சசிகரன் அவர்களே, மிக்க நன்றி.

    திரு செயபாரதன் அவர்களே, எந்த மொழியாயினும் அதன் அடிப்படை இலக்கணங்களையும் அம்மொழியின் மரபுகளையும் நல்வழக்கங்களையும் அறிந்து பயன்படுத்தவேண்டும். மொழி என்பது ”பொது”, நாம் பேசும் மக்கள் குழுவையும் காலத்தையும் தாண்டி பொருளுணர்த்தி தொடர்புநிறுத்திப் பயன்படுவது. எச்சொல்லாயினும், தமிழில் எழுதும் முறையறிந்து எழுதுதல் வேண்டும். இங்கங்கே சில உறழ்ச்சிகள் ஏற்படலாம், அவற்றை ஏற்காதவர்களும் ஏற்பவர்களும் இருக்கலாம். தமிழில் மொழிமுதல் வரக்கூடிய வரக்கூடாத எழுத்துகள் வரையறை செய்யப்பட்டுள்ளன. அவை அறிவார்ந்த மொழி நுண்ணறிவால் விளைந்த விதிகள். தமிழை மதித்து, ஒழுக்கத்துடன் சரியாக எழுத வேண்டுமெனில் அடிப்படையான தமிழிலக்கண விதிகளைக் கடைபிடிக்க வேண்டும். தமிழில் இலண்டன் என எழுதினால் ஏட்டுச்சுரைக்காய், அது கறிக்கு உதவாது, ஆனால் பிழையாக ”லண்டன்” என எழுதினால் அது கறிக்கு உதவுமா? பொருந்தாமையை அருள்கூர்ந்து உணரவேண்டுகின்றேன். புறப்பெயர் வழங்குமரபு ஏறத்தாழ எல்லா மொழிகளிலும் உண்டு. இதனை ஆங்கிலத்தில் exonym என அண்மைய காலங்களில் அழைக்கின்றார்கள். உரோமன் எழுத்துகளிலேயே எழுதும் மொழிகளிலேயே “Lomdon” என்பதை எப்படி எழுதுகின்றார்கள் எனப்பாருங்கள். ஆங்கிலத்துக்கு இனமான மொழிகளிடையேயுமே மிகுந்த வேறுபாடுகள் உள்ளன. அவையெல்லாம் திரிபுகள் அல்ல, அவரவர் மொழிகளில் வழங்கும் பெயர்கள். இந்த அடிப்படைச் செய்தியையாவது புரிந்துகொள்ள வேண்டுகின்றேன்.
    ”London” என்பதை ”Londres” எனப் பிரான்சியத்திலும் போர்த்துகேயத்திலும் எசுப்பானியத்திலும் அழைக்கின்றார்கள். ”Londen” என இடச்சு (Dutch) மொழியிலும் ”Londra” என இத்தாலிய மொழியிலும் மாலத்தீசு, உரோமானியமொழி, துருக்கி மொழி ஆகியவற்றிலும் அழைக்கின்றார்கள். ”Londër” என அல்பேனிய மொழியிலும் , ” Londýn” எனச் செக்கு மொழியிலும் சுலோவிக்கு மொழியிலும் அழைக்கின்றார்கள். ” Londyn” எனப்போலந்திய மொழியில் அழைக்கின்றார்கள். ஐசுலாந்திய மொழியிலோ ” Lundúnir” என அழைக்கின்றார்கள். பின்லாந்திய மொழியில் ”Lontoo”. இவையெல்லாம் திரிப்புகள் அல்ல ஐயா. அவரவர் மொழிகளுக்கேற்ப அவரவர் மொழிகளில் வழங்கும் வடிவங்கள். தமிழை மதித்து, தமிழ் மரபுப்படி இலண்டன் என எழுதுவதில் ஏன் இவ்வளவு வெறுப்பு என்பது எனக்கு வியப்பாகவே இருக்கின்றது. வழிவழியாய் தமிழறிஞர் காத்து வந்ததாலேயே நம்மொழி இன்றும் இனிமையோடும் மிகுவல்லமையோடும் விளங்குகின்றது.

  20. ///”London” என்பதை ”Londres” எனப் பிரான்சியத்திலும் போர்த்துகேயத்திலும் எசுப்பானியத்திலும் அழைக்கின்றார்கள். ”Londen” என இடச்சு (Dutch) மொழியிலும் ”Londra” என இத்தாலிய மொழியிலும் மாலத்தீசு, உரோமானியமொழி, துருக்கி மொழி ஆகியவற்றிலும் அழைக்கின்றார்கள். ”Londër” என அல்பேனிய மொழியிலும் , ” Londýn” எனச் செக்கு மொழியிலும் சுலோவிக்கு மொழியிலும் அழைக்கின்றார்கள். ” Londyn” எனப்போலந்திய மொழியில் அழைக்கின்றார்கள். ஐசுலாந்திய மொழியிலோ ” Lundúnir” என அழைக்கின்றார்கள். பின்லாந்திய மொழியில் ”Lontoo”. இவையெல்லாம் திரிப்புகள் அல்ல ஐயா. ///

    திரிபு என்ற கோலத்தில் மேனாட்டு, கீழ்நாட்டு மொழிகளைப் பின்பற்றித் தமிழ்மொழிப் பெயர்ச்சொல் அமைப்பு / உச்சரிப்பு உருவாக வேண்டாம்.   இப்படி பிறமொழித் திரிபுகளைச் சான்றாகக் காட்டி, தமிழ்மொழி ஏன் பிற்போக்கு மொழியாக வேண்டும் ? 

    லண்டன், டப்ளின், டார்வின், ஸ்டீஃபன் ஹாக்கிங், குஷ்பு, ஸ்டிரான்சியம், ஸ்டாலின், லெனின், டச்சு, ஸ்பானிஸ், ரூபா, ரூபாவதி, ரஷ்யா, ஜெர்மனி, ராஜம், ஹரிகி, ஜெயபாரதன், பாஸ்கரன் போன்ற பெயர்ச்சொற்களைத் திரித்து எழுத வேண்டும் என்று முன்பே தொல்காப்பியர் குறிப்பிட்டுள்ளாரா ?  இவ்வாறு பொதுவாக எழுதப்பட்டால் தமிழ்மீது இடி வீழ்ந்து சிதைந்து விடுமா ?  பற்பலத் தமிழ் வெளியீடுகள் [சிலவற்றைத் தவிர]  பொதுவாக இப்படித்தான் எழுதி வருகின்றன.  அவை விற்காமல் போகின்றனவா ?

    ஹரிகிருஷ்ணன் என்ற பெயரைத் தமிழில் எழுதத் தயங்கி, எழுத முடியாமல் ஆங்கில அன்னிய மொழியில் [Hari Krishnan]  என்று ஒரு தனித்தமிழ் மேதை எழுதிப் பிறந்த நாள் வாழ்த்துக் கூறுவது முறையா ?  இப்படி ஆங்கிலத்தில் செய்யலாம் என்று தொல்காப்பியர் எழுதியுள்ளாரா ?  

    சி. ஜெயபாரதன்

  21. வணக்கம்! உலக வரலாறு சொல்லும் பாடம், தாய்மொழி உயிருக்கு நிகரானது அல்ல அதனிலும் மேலானது என்பதே! அந்தந்த மொழி பேசும் மக்களின் உயிர்நாடியே அவரவர்களது தாய்மொழிதான். இன்று பல சிறிய தேசங்கள்  பெரும்பாலும் மொழியடிப்படையிலேயே பிரிந்து சென்றுள்ளதைப் பார்க்கலாம். குறிப்பாக கிழக்கு ஐரோப்பிய நாடுகளைக் கூறலாம். இன்று நாங்கள் அறிந்த எந்தவொரு மொழியின் பெயராகவிருக்கட்டும் நாடுகளின் பெயராயினும் அந்தந்த மொழியின் உச்சரிப்பிலில்லை! நாம், குறிப்பாகத் தமிழர்கள் அறிந்து வைத்திருப்பதெல்லாம் அந்தந்த நாடுகளின் ஆங்கிப்பெயர்களைத்தான். இதையே அந்தந்த நாடுகளில் எமக்குத் தெரிந்த ஆங்கிலப் பெயரில் கேட்டுவிட்டு அவர்கள் கேட்பது புரியாது திகைத்தால் அது அவர்களது தவறாகுமோ! 
    ஆங்கிலத்தில் England என்று அழைக்கப்பெறுகின்ற இங்கிலாந்தை அயல்நாட்டுக்காரர் எப்டி அழைக்கின்றார்களென்று பார்த்தாலேயே விளக்கம் தேவையில்லை. :
    England (English) = Lloegr (Welsh), Sasainn (Scots Gaelic), Sasana (Irish)…. இவர்கள் தங்களது  மொழியில் England என்று அழைக்கமுடியாதா என்ன! அவரவர் மொழிகளில் அவரவர்கள் அழைப்பதென்பதுதானே இயல்பானதும் முறையும்கூட! உலகமக்களுக்கெல்லாம் இயல்பாகவிருப்பது இவ்வுலகின் தொட்டிலாகப் போற்றப்பெறும் தாய்த்தமிழகத்துக்கு விதிவிலக்காகிப்போனது, தாய்மைப் பண்போ!!! நன்றி. 

  22. மொழி ஒரு கருவி.  நமது கருத்தை, கட்டளையை, விளைவை காட்டிச் செல்லும் சொல்லமைப்பு. காலத்துக்கு ஏற்ப விஞ்ஞான யுகத்தில் நமது தேவைக்குத் தமிழ் மொழி வளைந்து கொடுக்க வேண்டுமே தவிர, மொழி இலக்கண வரம்புக்கு ஏற்ப நாம் தொல்காப்பியர் காலத்துக்கு இலண்டன், உரூபா, இடாய்ச்சிலாந்து, இசுடீவன் காக்கிங், தார்வின், தப்ளின், குட்பு, இசுதாலின் என்றுதான் எழுத வேண்டும் என்று கோணப் பாதையில் போகக் கூடாது.   

    தாய்மொழி உயிருக்கு நிகரானது என்றால் என்ன ?  மொழியை மொழியாகப் பார்க்க வேண்டுமே தவிர, அதை உயிர், ஆத்மா என்று உணர்ச்சி வசமாகச் சொல்வது விந்தையாக இருக்கிறது !!! 

    சி. ஜெயபாரதன்

  23. “இவ்வுலகின் தொட்டிலாகப் போற்றப்பெறும் தாய்த்தமிழகத்துக்கு …”        சசிகரன்,யார் இப்படியெல்லாம் நம்புகின்றனர் பாவாணரிஸ்டுகளைத் தவிர.

    தமிழர்கள் சுதந்திர மனிதர்களாய் ஜெர்மானிய, ரஷ்ய, மற்ற நாடுகளூடன் பழகவில்லை.   தமிழர்கள் 300 ஆண்டுகள் ஆங்கிலேயர் கட்டுப்பாடில் இருந்து, ஆங்கிலம் கற்று அதன் வழியாகத்தான் தற்கால உலகத்தை தெரிந்து கொண்டனர். அதனால் நாம் ஜப்பான், ஜெர்மனி. ஸ்காட்லாண்ட் இப்படி எழுதுகிறோம். நான் 300 ஆண்டு கற்றுதல்களை தூக்கி எரிந்து  புதிதாக சொல் படைப்பேன் என்பது மடமை.   

    வ.கொ.விஜயராகவன்
        

  24. அண்ணாகண்ணன்  “அவரவர், எழுதும் இடத்துக்கு ஏற்ப, விருப்பத்துக்கு ஏற்ப, இவற்றை எழுதலாம். ஆனால், தமிழ் மரபை நாம் மாற்ற முடியாதே.”

    தமிழ் எழுத்து என்பது ஒரு ஹோட்டல் மெனு அல்ல ; ஹோட்டலில் போனால் நீங்கள்  எனக்கு இதுதான் வேண்டும், இதைத்தான் சாப்பிடுவேன், அதை சாப்பிடவே மாட்டேன் என சொல்லலாம். தற்கால தமிழ் எழுத்து என்ன என்பது யூனிகோட் மற்றும் தமிழ்நாடு அரசு TACE16 ல் வரை செய்யப்பட்டு விட்டது. இதை நான் பின்பற்ற மாட்டேன் என்பது  இடக்குத்தனம், கிறுக்குத்தனம், ஒரு விதத்தில் தமிழுக்கு துரோகம். 

    2010ல் தமிழ்நாடு அரசு எது தமிழுக்கு அங்கீகரிக்கப்பட்ட எழுத்துகள் என ஆணை செலுத்தி விட்டது. அதன்படி யூனிகோட், TACE16  இரண்டும் அங்கீகரிக்கப்பட்டவை

    யூனிகோட் தமிழ்

    http://unicode.org/charts/PDF/U0B80.pdf

    TACE16

    http://www.tamilvu.org/coresite/download/TACE16_Report_English.pdf, 

    மரபு இதன்கூட ஒத்து வராவிட்டால் மரபை தூக்கி குப்பையில் போடுங்கள். நாம் மரபை மாற்றமுடியாதுதான், ஆனால் நம் வழக்குகள் மாறிக்கொண்டு இருக்கின்றன.

    ஆங்கிலத்தில் 26 எழுத்துகள் உள்ளன; ஆங்கிலத்தில் எந்த மடையனாவது “எனக்கு  Q  , P,  Z   எழுத்துகள் பிடிக்கவில்லை , அதனால் என்னைப் பொருத்து வரை ஆங்கிலத்தில் 23 எழுத்துகள் தான்” என சொல்கிறான ? இல்லை . ஏனெனில் ஆங்கிலேயர்கள் (அமெரிக்கர்கள், கனேடியர்கள், ஸ்காட்லாந்தியர்……    ) உலகத்தில் முன்னேறுபவர்கள். விஞ்ஞானம் , கணிதம், தொழில்கள் படைப்பவர்கள்.  , மற்றவர்களுக்கு உபதேச மூட்டைகள் கொடுக்காமல்  ஆக்கபூர்வமாக நேரத்தை செலுத்துபவர்கள்.

    வ.கொ.விஜயராகவன்

  25. “வல்லமை இவற்றை ஆதரித்து வெளியிட்டாலும், அதன் அதிபர் அண்ணா கண்ணன் …….   ”  ஜெயபாரதன்,  அதிபரின் நோக்கை நீங்கள் தவறாக கணக்குப் போடுகிறீர்கள். அதிபர் இந்த கட்டுரையை ஆதரிக்கவில்லை . நகைச்சுவை பக்கத்தை புது விதமாக போட்டுள்ளார்.   தனித்தமிழ்ப் போல் நகைச்சுவையை வேரெங்கும் பார்க்க முடியாது – லெமூரியாவைத் தவிர.  

    லெமூரியாவில்தான் நீங்கள்இசுப்பா போய்,  பிரெடு  மேல்  நெரிதடை   தடவி , குட்பு மற்றும் இசுட்டீபன் ஆக்கிங்கு இருவரையும் சந்திக்கலாம். உங்கள் ஆழ்துளை   போகவேண்டும் என்றால் பல இசுற்றீட்டுகளை சுற்றி வரலாம். ஃகுயுண்டை வண்டியில் போய் பிக்கு  மிருகத்தையும் பார்க்கலாம்.

    இந்த விந்தை காமெடி உலகம்  லெமூரியா போக நான் பாவாணர் ஏர்லைன்ஸில் டிக்கட் வாங்கி விட்டேன்.

    வன்பாக்கம் விஜயராகவன்

  26. தமிழ்நாடு அகழ்வாராயாச்சி கொடுமணல், மாங்குளம், இன்னும் பலவிடங்களில் நடத்தியதில் எழுத்து தடயங்களும் உள்ளன. இவை கி.மு. 200 – 500 காலத்தை சேர்ந்தவை. அப்பொழுதே, அதாவது தமிழகத்தின் முதல் எழுத்து தடயங்களிலேயே “தமிழ் எழுத்து” என்பது தொல்காப்பிய 30 அளவை கடந்து உள்ளது, கி.மு 200 ஆண்டு முன்பே  தற்கால “கிரந்தம்” என அழைக்கபடும் ஒலிகள் அக்கால தமிழில் எழுதப்பட்டுள்ளன‌, அதாவது தொல்காப்பியரே  தன்கால நடைமுறை மொழி எழுத்தை சரியாக பதிவு செய்யவில்லை.

    உதாரணம் மாங்குளம்

    http://www.tamilvu.org/tdb/titles_cont/inscription/html/mankulam.htm

    கல்வெட்டுப் பாடம்  1

    கணிய் நந்தஸிரிகுவன் கே தம்மம்
    ஈத்த நெடுஞ்செழியன் பணாஅன்
    கடலன் வழுதி கொட்டுபித்த பாளிய்

    கல்வெட்டு 2

    கணிய் நந்த ஸிரிய்குவன்
    தம்மம் ஈத்த நெடுஞ்செழியன் ஸாலகன
    இளஞ்சடிகன் தந்தைய் சடிகன்
    செஈய பாளிய்

    இன்னும் இதைப்போல்…

    http://www.tnarch.gov.in/excavation/kod.htm

    http://www.rediff.com/business/slide-show/slide-show-1-big-discovery-a-2500-year-old-industrial-estate/20120612.htm#5

    தமிழ் எழுத்துகள் தொல்காப்பிய 30 தான் என்றால் நம்பாதீர்கள். அது இக்காலத்தில் செல்லாது, தொல்காப்பியர் காலத்திலேயே செல்லாது

    வ.கொ.விஜயராகவன்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.