Blog

  • பெண்குரல்

    பவள சங்கரி

    Trust Law என்ற உலகம் தழுவிய பெண்களுக்கான தொண்டு நிறுவனம் ஒன்று நடத்திய கணக்கெடுப்பில், பெண்களுக்கு பாதுகாப்பு இல்லாத நாடுகளின் வரிசையில், நம் இந்தியா நான்காவது இடத்தில் இருப்பதாகக் கண்டறியப்பட்டுள்ளது. முன்னாள் மத்திய உள் துறை செயலாளர் (union Home Secretary) மதுகர் குப்தா ஓர் அறிக்கையில், 2009ம் ஆண்டு மட்டும் நம் இந்தியாவில் கிட்டத்தட்ட 10 கோடி பேர், குறிப்பாக பெண்கள் மற்றும் குழந்தைகள் கடத்தப்பட்டுள்ளார்கள் என தெரிவித்துள்ளார். அவர்களில் பெரும்பாலானோர் பாலியல் தொழிலில் ஈடுபடுத்தப்படுகிறார்கள். இந்தியாவில் 30 இலட்சம் பாலியல் தொழிலாளர்கள் உள்ளனர் என்றும் அவர்களில் 40 சதவிகிதம் பேர் குழந்தைகள் எனவும் இந்திய மத்திய புலனாய்வுத் துறை (சிபிஐ – 2009) தெரிவித்துள்ளது.

    Share
  • அவன், அது, ஆத்மா (47)

    “நண்பர் வெ.கி. திருமாறன்”

    அவன் வசந்தாமேன்ஷன் அறையில் இருந்த பொழுது அவனுக்கு சில நெருக்கமான அரசியல் தலைவர்ளின் பழக்கம் இருந்தது. அதில் ஒருவர் வெ.கி. திருமாறன். அவர் காமராஜரின் தொண்டர். தமிழ்நாடு இளைஞர் காங்கிரஸ் தலைவராகவும் இருந்தார். தமிழ் நாடு காங்கிரஸ் தலைவர்களில் ஒருவரான பழ. நெடுமாறன் அவர்களுக்கு மிகவும் நெருக்கமானவர். வெ.கி. திருமாறன் அவர்களுக்கு தாயார் வழியில் சொந்த ஊர் திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள கடையம். மகாகவி பாரதியாரின் மனைவி செல்லம்மாவின் ஊரைச் சேர்ந்தவன் என்று பெருமிதமாகக் கூறுவார். பாரதியாரின் கவிதைகளின் நல்ல ஈடுபாடு கொண்டவர்.

    திருவல்லிக்கேணி ஐஸ்ஹவுஸ் பேருந்து நிலையம் பக்கத்தில் வெ.கி. திருமாறன் அவர்களின் வீடு இருந்ததால் அவனுக்கு அவரை அடிகடி சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது. அவனது வசந்தமேன்ஷன் அறைக்கும் அவர் வருவது உண்டு. அப்படி அவர் ஒரு முறை வந்த பொழுது, ” விஸ்வநாதா…நீ ஆதிசங்கரரின் வாழ்க்கையை வெண்பாவில் எழுத வேண்டும் என்பது என்னுடைய ஆசை…செய்வாயா என்றார்”..அவன் முயற்சி செய்கிறேன் என்றான். ஆனால் அவன் அப்பொழுது அதைச் செய்ய வில்லை. அவனுக்கு அப்படி ஒரு எண்ணம் வந்தது “மே” மாதம் 2006ல்தான். அதுவும் ஸ்ரீ சங்கரரின் வாழ்க்கையை அவன் அறுசீர் விருத்தத்தில்தான் எழுதி இருந்தான். வெண்பாவில் எழுத வில்லையே என்ற ஏக்கம் அவனுக்கும் இருந்தது. அந்த ஏக்கத்தை அவன் சிருங்கேரி ஜகத்குரு ஸ்ரீ பாரதீ தீர்த்த மகாஸ்வாமிகளின் வாழ்க்கையை வெண்பாவில் எழுதி அது “அம்மன் தரிசனம்” மாத இதழில் ஜூலை மாதம் 2010 முதல் டிசம்பர் 2011வரைத் தொடராக வெளிவந்ததில் மகிழ்ச்சி கொண்டான். குருவின் வாழ்க்கையை வெண்பாவில் எழுத வேண்டும் என்ற ஆசைக்குத் தூண்டுகோல் நண்பர் வெ.கி. திருமாறன் அவர்கள்தான்.

    1977ம் வருடம்தில் அப்போதைய பாரதப் பிரதமர் இந்திராகாந்தி மதுரைக்கு வந்த பொழுது அவருக்கு தி.மு.க. வினர் கறுப்புக் கொடி காட்டியதில் வன்முறை நடந்து, அதில் திருமதி. இந்திராகாந்தி அவர்கள் தாக்கப் பட்டு, மதுரையில் இருந்து சென்னைக்கு வந்தார். சென்னையில் மெரீனா கடற்கரையில் ஒரு பிரும்மாண்டப் பொதுக் கூட்டம் ஏற்பாடாகி இருந்தது. அந்தக் கூட்டத்திற்கு அவன் செல்ல விரும்பினான். தன் விருப்பத்தை அவன் திருமாறன் அவர்களிடம் சொன்னபொழுது, அவனை அழைத்துக் கொண்டு சென்று கூட்டத்தில் முக்கியமானவர்கள் அமரும் வரிசையில் அமர வைத்தார். பாரதப் பிரதமரின் பேச்சை அவன் மிக அருகில் இருந்து கேட்டான். அதன் பிறகு இரண்டு வாரங்கள் கழித்து அவனை மயிலாப்பூரில் சோலையப்பன் தெருவில் இருந்த காங்கிரஸ் தலைவர் பழ. நெடுமாறன் அவர்களின் இல்லத்திற்கு அழைத்துச் சென்று, “இவர் என் நண்பர், கவிஞர் விஸ்வநாதன்” என்று அறிமுகம் செய்து வைத்தார். அவன் தான் ஒரு காமராஜர் விஸ்வாசி என்று சொன்னபொழுது பழ. நெடுமாறன் அவர்கள் அவனை கைகுலுக்கி மகிழ்ச்சி தெரிவித்தார்.

    ஒருநாள் மாலையில் அவனுடைய அறைக்கு வெ.கி. திருமாறன் வந்திருந்த பொழுது அவனுக்கு நண்பன் சுரேஷ்ம் இருந்தான். அவர் அவனை நடிகரும், இலக்கியவாதியுமான ஸ்ரீகாந்த் அவர்களின் கோபாலபுரம் இல்லத்திற்கு அழைத்துச் சென்றார். ஸ்ரீகாந்த் அவர்கள் திரைபடத் துறையில் உச்சத்தில் இருந்த நேரம். த. ஜெயகாந்தனின் சிலநேரங்களில் சிலமனிதர்கள், ஒரு நடிகை நாடகம் பார்க்கிறாள், தங்கப்பதக்கம் போன்ற வெற்றிப் படங்கள் அவரது நடிப்பைப் பாராட்டிக் கொண்டிருந்த காலம். திருமாறனும், ஸ்ரீகாந்த் அவர்களும் நல்ல நண்பர்கள். இருவரும் காமராஜரின் பக்தர்கள். ஸ்ரீகாந்த் அவர்களுக்கு அவனை அறிமுகம் செய்து வைத்த பொழுது அப்பொழுதான் வெளிவந்திருந்த த. ஜெயகாந்தன் அவர்களின் “மகாயக்யம்” நாவலின் ஒரு பிரதியை அவனுக்குப் படிக்கக் கொடுத்தார். மேலும் இரண்டு ஆங்கில நாவல்களையும் படிக்கக் கொடுத்து விட்டு, ” நீங்கள் எங்கள் வீட்டுக்கு அடிக்கடி வாருங்கள்” என்றார். அதன் பிறகு அவன் திருமாறன் அவர்களுடனும், தனியாகவும் பலமுறை கோபாலபுரத்தில் உள்ள ஸ்ரீகாந்த் அவர்களின் இல்லத்திற்குச் சென்றிருக்கிறான். எப்பொழுது போனாலும் அன்போடு உபசரித்துப் பேசுவார். இது போன்ற நல்ல தொடர்புகளைத் தந்த நண்பர் வெ.கி. திருமாறன் அவர்கள் இளம் வயதிலேயே மரணம் அடைத்தது வருத்தமாகத்தான் இருக்கிறது.

    “நண்பர் கவிஞர் ஏர்வாடி எஸ். இராதாகிருஷ்ணன்”

    அவனுக்கு கவிஞர் ஏர்வாடி இராதாகிருஷ்ணன் அவர்களின் தொடர்பு அவனுக்கு தாய்மாமா மூலம் கிடைத்தது. அவனுக்கு மாமாவும், ஏர்வாடி இராதாகிருஷ்ணனும் சென்னை பாரிமுனையில் இருக்கும் பாரத ஸ்டேட் வங்கியில் பணியாற்றி வந்தனர். ஒருநாள் அவனுக்கு மாமா அவனை கவிஞர் ஏர்வாடி அவர்களிடம் அறிமுகப் படுத்தி வைத்தார். அப்பொழுது ஏர்வாடி இராதாகிருஷ்ணன் சென்னையில் மேடை நாடகங்கள் நடத்திக் கொண்டிருந்தார். சென்னை தொலைகாட்சியிலும், வானொலியிலும் அவரது படைப்புகள் வந்து கொண்டிருந்தன. ஒருநாள் கவிஞர் ஏர்வாடி அவர்கள் அவனை சென்னை வானொலி நிலையத்திற்கு வரச்சொன்னார். அவன் அங்கு சென்ற பொழுது, அங்கு நிகழ்ச்சிப் பொறுப்பாளராக இருந்த “லீலா” அவர்களிடம், ” இந்தத் தம்பி நல்ல கவிதைகள் எழுதுகிறார்…இவரைப் பயன் படுத்திக் கொள்ளுங்கள்” என்று அறிமுகம் செய்து வைத்தார். அதுமுதல் சென்னை வானொலியில் நிறைய கவிதைகளும், சிறுகதைகளும் அவன் வாசித்திருக்கிறான்.

    1977ம் வருடம் நவம்பர் மாதத்தில் ஒருநாள் கவிஞர் ஏர்வாடி இராதாகிருஷ்ணன், கவிஞர் கோவேந்தன் அவர்களையும் அழைத்துக் கொண்டு திருவல்லிக்கேணியில் அவன் தங்கியிருந்த அறைக்கு வந்திருந்தார். அவனிடம், “விசு…நாங்க கவிதை உறவு என்ற அமைப்பைத் துவங்கியிருக்கிறோம். அதன் செயலாளராக நான் இருக்கிறேன். தலைவராக கவிஞர் கு.மா.பாலசுப்ரமணியன் இருக்கிறார். நீங்கள் பொருளாளராக இருக்க வேண்டும் என்று விரும்புகிறேன்…அது ஒன்றும் பெரிய வேலை இல்லை. மாதம் ஒரு கூட்டம் அண்ணாசாலையில் இருக்கும் மத்திய நூலகத்தில் நடக்கும். அதற்குக் கட்டணமாக பத்துரூபாய் கட்டவேண்டும். தொடர்ந்து நல்ல நிகழ்ச்சிகளை நாம் எல்லோரும் சேர்ந்து செய்யலாம்” என்று சொல்லி ஊக்கப் படுத்தினார். தொடர்ந்து மாதம் ஒரு இலக்கியக் கூட்டம் அருமையாக நடந்து வந்தது.

    1978ம் வருடம் ஜனவரி மாதம் சந்திக்கும் பொழுது, ” விசு…நாம் இன்னும் சில கவிஞர்களுடன் சேர்ந்து மார்ச் மாதத்தில் “வண்ணங்கள்” என்ற தலைப்பில் ஒரு கவிதை நூல் வெளியிட வேண்டும். கவிஞர் வேதம், கவிஞர் மதிவண்ணன், ரிசர்வ் வங்கியில் வேலை செய்து வந்த கவிஞர் பகத்சிங், கவிஞர் கிருஷ்ணமூர்த்தி என்று ஒரு பத்து பேர்களது கவிதைகளைத் தொகுத்து வெளியிட திட்டமிருக்கிறது. நீங்களும் உங்களது படைப்பைத் தாருங்கள்” என்றார். அவரே அனைவருடனும் தொடர்பு கொண்டு கவிதைகளைப் பெற்றுத் தொகுத்து, முனைவர் சிலம்பொலி செல்லப்பன் அவர்களிடம் நூலுக்கு ஒரு வாழ்த்துரையும், பாரதிகலைக் கழகத்தின் தலைவர் , பாரதி இரா. சுராஜ் அவர்களிடம் மதிப்புரையும் வாங்கினார்.

    ae5eac49-bf5b-4947-8a48-d4819cb1b750

    புத்தக வெளியீட்டு விழா தொடர்பாக கவிஞர் கு.மா.பாலசுப்ரமணியன் அவர்களைச் சந்திக்க மயிலாப்பூரில் இருந்த அவரது இல்லத்திற்கு கவிஞர் கோவேந்தனுடன் அவனையும் அழைத்துப்போய் அவரிடமும் அறிமுகம் செய்து வைத்தார். “…மீசை வைத்ததனால் இவர் மீ.விசுவநாதன் ஆனாரோ” என்று அவனை கவிஞர் கு.மா.பா. தட்டிக் கொடுத்தார். கவிதை நூல் வெளியீட்டு விழாவில் கவிஞர்களை அறிமுகப் படுத்தும் பொழுதும் அவனை இப்படித்தான் சொல்லி கவிஞர் கு.மா.பா. அறிமுகம் செய்தார். விழாவில் கவிதை நூலை வெளியிட்டு அப்பொழுது அறநிலைத் துறையின் அமைச்சராக இருந்த திரு. R. M . வீரப்பன் அவர்களும், வாழ்த்துரையாக முனைவர் சிலம்பொலி செல்லப்பன், பாரதி இரா.சுராஜ் போன்ற பெரியோர்களும் பேசினார்கள்.

    கவிதை உறவு என்ற அமைப்பை இன்றுவரைத் தொய்வில்லாமல் தொடர்ந்து நடத்தி வருவதோடு மட்டுமல்லாமல் “கவிதை உறவு” என்ற இலக்கிய மாத இதழையும் கவிஞர் ஏர்வாடி இராதகிருஷ்ணன் நடத்தி வருகிறார். அதில் அவர் எழுதிவருகிற “என் பக்கம்” பகுதியில் நல்ல சிந்தனைகளைப் பதிவு செய்து வருகிறார்.

    கவிஞர் ஏர்வாடி அவர்களை மாத்திரம் இன்றி அவரது குடும்பத்தினர்களுடனும் அவனுக்குத் தொடர்பு இருந்து வருகிறது. அவருக்கு சங்கர் என்ற மகனும், சுதா என்ற மகளும் உண்டு. அவரது மகள் சுதா பெயரில்தான் “சுதா பதிப்பகம்” என்ற பதிப்பகத்தைத் துவங்கினார். சுதா பதிப்பகம் மூலமாகத்தான் “வண்ணங்கள்” கவிதைத் தொகுப்பும் வெளியானது.

    கவிஞர் ஏர்வாடி எஸ். இராதாகிருஷ்ணன் அவனுக்கு என்றும் ஒரு நல்ல நண்பர்.

    11.03.2016

    அவன் மீண்டும் அடுத்தவாரம் வருவான்………..

    Share
  • இங்கிலாந்திலிருந்து ஒரு மடல்….. (187)

    — சக்தி சக்திதாசன்.

    Princess Sophia Duleep Singh
    அன்பினியவர்களே !

    அன்பினிய வணக்கங்கள்.

    8ம் திகதி மார்ச் மாதம் சர்வதேச மகளிர் தினம் கொண்டாடப்படும் வாரத்திலே உங்கள் முன்னால் என் மடல் வந்து விழுகிறது. பெண்களுக்கென ஓர் தினம் அவசியமா ? எனும் கேள்விகள் சில திக்குகளில் இருந்து கிளம்பியதை என்னால் அவதானிக்க முடிந்தது. மேற்கத்திய உலகில் முன்னேற்றமடைந்த நாடுகளில் முன்னணியில் இருக்கும் நாடுகளில் ஒன்றாக இங்கிலாந்து திகழ்கிறது. இங்கே பெண்கள் சுயாதீனமாக, தமது கால்களில் தாங்கள் தங்கி வாழக்கூடிய சூழல் பல பத்து வருடங்களுக்கு முன்னாலேயே உருவாகி விட்டது.

    அதாவது எமது பின்புல நாடுகளில் பெண்களின் மகத்துவத்தின் பெருமை உணரப்படுவதற்கு முன்னாலேயே இங்குப் பெண்களுக்கான உரிமைகள் முன்னெடுக்கப்பட்டு விட்டன. அப்படியிருந்தும் மேற்கத்திய நாடுகளில் குறிப்பாக இங்கிலாந்தில் இச்சர்வதேசப் பெண்கள் தினத்திற்குக் கொடுக்கப்படும் முக்கியத்துவம் அதீதமானதாகவே காணப்படுகிறது. இதுவே சர்வதேச மகளிர் தினம் அவசியமா எனும் வினாவை எழுப்புவோருக்குத் தக்க விடையாகக் கூட அமைந்து விடுகிறது. இங்கிலாந்தில் உலக மகாயுத்தத்திற்கு முன்னிருந்த பெண்களின் நிலையும் இரண்டாம் உலகமகாயுத்தத்திற்குப் பின்னால் இருந்த பெண்களின் நிலையும் முற்றிலும் மாறுபட்டிருந்தது.

    1800 களின் இறுதியிலும் 1900களின் முற்பகுதியிலும் பிரித்தானியாவில் பெண்களின் விடுதலைக்கான போராட்டம் முனைப்படைந்திருந்தது. பெண்கள் தமது வாக்குரிமைக்காகப் பல போராட்டங்களை நடத்தினார்கள். இப்போராட்டங்களின் போது பல வீராங்கனைகள் தமது உயிரைப் பணயமாகக் கொடுத்த நிகழ்வுகளும் உண்டு. இப்போராட்டங்களில் ஈடுபட்ட வீராங்கனைகளில் ஒருவர் “சோபிஃயா டியூலிப் சிங்” ( Sophia Duleep singh ) ஆவார். இவரின் தந்தை மகாராஜா டியூலிப் சிங் , சீக்கிய இராச்சியத்தின் மகாராஜா ஆவார். இவரின் தாயார் ஒரு ஜெர்மானிய வியாபாரியின் மகளாவார். மகாராஜா டியூலிப் சிங் தனது 11வது வயதில் தனது இராஜ்ஜியத்தை பிரிட்டிஷ் சாம்ராஜ்ஜியத்திடம் கையளித்தார் என்பதும், இவரே “கோஹினூர் வைரத்தை” அன்றைய பிரிட்டிஷ் மகாராணி விக்டோரியாவிற்கு அன்பளிப்புச் செய்தார் என்றும் கூறப்படுகிறது.

    இவரின் குடும்பம் பிரித்தானியாவுக்கு, பிரிட்டிஷ் நிர்வாகத்தினரால் நாடு கடத்தப்பட்டது என்பதுவும் இவரை இங்கிலாந்தில் பிரித்தானிய மகாராணி விக்டோரியா பராமரித்தார் என்றும் கூறப்படுகிறது. அத்தகைய ஒரு சூழலில் தான் ஃசோபியா டியூலிப் சிங் இங்கிலாந்தில் பெண்ணுரிமைக்கான போராட்டத்தில் இணைந்து கொண்டார் என்று சொல்லப்படுகிறது. பல பெண்களுக்கான போராட்டங்களில் பங்கெடுத்த இவர் உலக மகாயுத்தத்தின் போது செஞ்சிலுவைச் சங்கத்தின் சீருடையில் நர்ஸாகப் பணியாற்றியுள்ளார் என்பதும், இந்திய இராணுவ வீரர்களுக்கான பல ஆதரவுப் போராட்டங்களில் பங்கெடுத்துள்ளார் என்றும் சொல்லப்படுகிறது. 1048ம் ஆண்டு இவர் இங்கிலாந்தில் மரணமடைந்தார்.

    நான் சுருக்கமாக இந்திய வரலாற்றுப் பின்னணி கொண்ட ஒரு பெண்ணின் பெண்ணியப் போராட்டத்தைப் பற்றி இங்கே குறிப்பிட்ட காரணம் இங்கிலாந்தில் இத்தினத்திற்கான மகிமையின் பின்னணியைச் சிறிது விளக்குவதற்காகவே! அப்படியானால் இன்றைய காலகட்டத்தில் பெண்கள் சம உரிமை அடைந்து விட்டார்களே இன்னும் என்ன பிரச்சனை என்கிறீர்களா?

    அதாவது 2016ஆம் ஆண்டில் இங்கிலாந்தில் பெண்களுக்கும், ஆண்களுக்குமான ஊதிய வேறுபாடு நிலவும் ஒரு காலகட்டத்தில் இருக்கிறோம். ஒரே தரமான பணியில் ஈடுபட்டிருக்கும் ஒரு ஆணின் ஊதியத்திற்கும், பெண்ணின் ஊதியத்திற்கும் வேறுபாடு காணப்படுகிறது. இவ்வேறுபாட்டின் அடிப்படையை அறிந்து ஆவன செய்வதற்கு இங்கிலாந்து அரசாங்கம் அதற்கான குழுவை அமைத்துச் செயற்படுகிறது. பெண்களின் கல்வித்தகமைகள் எவ்வளவு உயர்ந்ததாக இருப்பினும் அவர்களால் ஒரு குறிப்பிட்ட உயரத்திற்கு மேல் ஏறமுடியாதவாறு தடைக்கற்கள் காணப்படுகின்றன எனும் வாதம் வலுவடைந்திருக்கிறது.

    உச்சியைப் பார்க்கக்கூடியதாக இருக்கிறது ஆனால் அதை நோக்கி முன்னேறும் போது கண்ணாடிக் கதவுகள் தடைசெய்கின்றன. இதை ஆங்கிலத்தில் “Glass Ceiling” என்பார்கள். பெண்கள் தான் வீட்டைப் பராமரிக்க வேண்டும் எனும் எதிர்பார்ப்பு இன்னும் நவீனமயமான ஆண்களிடம் நிலவுவதை நாம் பல இடங்களில் கண்கூடாகக் காணக்கூடியதாக உள்ளது. “இல்லத்தரசி” எனும் பதவி ஒரு பெண்ணுக்குக் கெளரவமானதே ! ஆனால் இன்றைய காலகட்டத்தில் ஆண்களுக்கு நிகராக முழுநேரப் பணியிலும் ஈடுபட்டுக் கொண்டு முழுநேர இல்லத்தரசியாகவும் இருக்க வேண்டும் எதிர்பார்ப்பு நியாயமானதா ?

    ஒரு பெண்ணை நோக்கிய சமுதாய எதிர்பார்ப்புகள் பல பெண்களை மனோநிலை பாதிக்கப்படும் அளவிற்குக் கொண்டு செல்லுகின்ற நிலை இன்றைய காலகட்டத்தில் நிகழ்வது பரிதாபத்திற்குரியதே! ஒரு பெண்ணால் நிறுவனத்தை நிர்வகிப்பது மட்டுமல்ல ஒரு நாட்டையே ஆளமுடியும் என்பதைச் சான்றுடன் நிரூபித்த பெண்களைக் கண்ட நாம், அன்றைய நிலைப்பாடுகளில் எம் வாழ்க்கையில் காணும் பெண்களை எடைபோட முனைவது எவ்வகையில் நியாயமாகும் ?

    அதற்காக எல்லா ஆண்களுமே அப்படிப்பட்ட மனோபவத்தில் தான் இருக்கிறார்கள் என்பதல்ல எனது வாதம். தன் மனைவியின் பெருமை உணர்ந்து அதற்கான மதிப்பைக் கொடுத்துக் கௌரவிக்கும் பல விதிவிலக்கான சந்தர்ப்பங்களும் காணப்படத்தான் செய்கின்றன. தன் மனைவி தன்னோடு இல்லாத நேரத்தில் தானருந்துவதற்கான பாலைக் காய்ச்ச முனைந்த போதுதான் மகாகவியின் மனதில் பெண்ணுரிமையின் முக்கியத்துவம் உதித்தது. அவரிடம் நிவேதிதா அம்மையார் “இந்நாட்டில் எப்போது பெண்களுக்கு விடுதலை வருகிறதோ அப்போதுதான் இந்நாடு விடுதலையடையும்” என்று கூறியது அவரது தீர்க்கமான பெண்விடுதலைக் கருத்தை வலியுறுத்தியது.

    எம் வாழ்வில் பெண்களின் வெவ்வேறு வடிவங்களை நாம் வெவ்வேறு நிலைகளில் பார்க்கிறோம் என்பதுவே உண்மை. எமது அன்னைக்கும், சகோதரியருக்கும் கொடுக்கும் இடத்தை எமது மனைவிக்குக் கொடுக்கிறோமா? என்பது ஒரு நியாயமான கேள்வியே. பெண்ணுரிமை என்பது அடிமட்டத்திலிருந்து ஆரம்பிக்கப்பட்டால்தான் அதன் உண்மையான தாத்பரியம் புரியும். சர்வதேச மகளிர் தினத்தின் முக்கியத்துவம் என்னைப் பொறுத்தவரையில் எம் ஒவ்வொருவர் மனங்களிலும் கேள்வியை எழுப்புவதே !

    “எம்மைச் சுற்றியுள்ள, எம் வாழ்வில் இணைந்துள்ள பெண்களுக்கு அவர்களுக்கு உரியக் கெளரவத்தை மனிதாபிமானத்தின் அடிப்படியில் வழங்குகிறோமா ?“ என்பதுவே.

    மீண்டும் அடுத்த மடலில்
    அன்புடன்
    சக்தி சக்திதாசன்

    http://www.thamilpoonga.com
    http://www.facebook.com/sakthi.sakthithasan

    Share
  • தேரோட்டம்

    -மீ.விசுவநாதன்

    ஊர்கூடி வந்து ஒன்றாகச் சேர்ந்து
    தேரிழுக்கும் போது தெரியாது சாதி    temple chariot
    மதமென்னும் பாப மதவெறியும் அங்கே
    முதலான தெய்வம் முகமூடி இன்றி
    அருள்கொண்டு கொட்ட அள்ளிடுவர் பக்தர்!
    இருள்நீங்கி உள்ளே ஏகாந்த வெளியில்
    சுகமாக இருந்து சூழ்நிலையை மறப்பர்!
    இகவாழ்வில் கிட்டும் இந்தவோர் இன்பம்
    தேரோட்ட நாளில் தெருவிலே மக்கள்
    சீரோடு என்வீட்டு திருவாசல் முன்னம்
    சிலநொடிகள் நின்று சென்றிடும் நேரம்
    பலஜென்ம பாபம் பறந்தோடிப் போகும்!
    நகரத்தில் கிராமத்தில் நடக்கின்ற
    சிகரமாம் திருவிழா தேரோட்டந் தானே!

     

     

    Share
  • III:2 இன்னம்பூரான் பக்கம்: III:2 இந்திய தணிக்கைத்துறையும், நானும்

    கடையில் இருக்கும் நெய்யே…!

    இன்னம்பூரான்
    மார்ச் 9, 2016

    8cf1ed83-5f46-411c-a667-39ea8d11e06b

    ஒருவர் சொத்தை மற்றொருவர் அபகரிப்பது தொன்று தொட்டு நடந்து வரும் பகற்கொள்ளை. சில சமயம் தீவட்டிக்கொள்ளை. சில சமயங்களில் கன்னம் வைப்பது. சில சமயம் ஆட்டைத்தூக்கி மாட்டில் போட்டு, பொய் கணக்கு எழுதுவது.

    சாணக்கியர் உரைத்தப்படி, திருடர்கள் இருப்பதை இல்லை என்பார்கள். இல்லாததை இருக்கிறது நம் தலையில் அடித்து சத்தியம் செய்வார்கள். [அந்த இழை தனியே ஓடும்.] இதையெல்லாம் சாங்கோபாங்கமாக குடைந்தெடுத்து, தணிக்கைத்துறை பொதுமன்றத்தில் வைத்தாலும், கொள்ளையர் சண்டியர் மாதிரி வீதிவலம் வருகிறார்களே என்று மெத்தப்படித்தவர்கள் கூட அங்கலாய்த்துக் கொள்கிறார்கள். குடியரசு ஆட்சியில், அரசியல் சாஸனத்தின் ஆணைக்கு உட்பட்டு, ஆடிட் ரிப்போர்ட்கள் சட்டசபையில் வைக்கப்படுகின்றன. அந்த நிமிடமே பொதுமன்றத்தில் அவை பிரசன்னம். இனி, மக்களும், மக்களின் பிரதிநிதிகளும் தான் செயல்படவேண்டும்.

    இன்று எங்களுடைய மின் தமிழ் தளத்தில் முனைவர் சுபாஷிணி எழுதியது,

    ‘…அரசியல் என்று வரும் போது அரசியல்வாதி-பொதுமக்கள் என்ற இரு பகுதி இருக்கின்றது. அரசியல்வாதி தவறாகாச் செயல்படும் போது அதனை மாற்றி அமைக்க வேண்டிய கடமை பொதுமக்களுக்கு உண்டு. அதிலும் அதிகமாக ஊடகங்களுக்கு உண்டு…’

    கனப்பொருத்தமாக அமைகிறது.

    Do not bark at the wrong tree, please.

    தணிக்கைத்துறையின் வரலாற்றுத் துளிகளும், சேகரத்துக்குகந்த பழைய நிகழ்வுகளும், என் அனுபவங்களும், தணிக்கை செய்முறை நுட்பங்களும், தற்காலிக சமாச்சாரங்களும், இழையில் ஊடாடி [seamlessly woven) வருபவையாகும். வாசகர்கள் ஊன்றி படித்தாலொழிய, ஆடிட் ஆவணங்களை புரிந்து கொள்ள முடியாது. இத்தனைக்கும், அந்த துறை பொதுமக்கள் பார்வைக்காக, ஐம்பது வருடங்களாக எளிய நடை தமிழில் அவற்றின் சாராம்சத்தை பதிவு செய்கிறார்கள். விழிப்புணர்ச்சிக்கு அது தேவை. காலம் கெட்டுக்கிடக்கிறது. மத்திய அரசின் ஒற்றர் இலாகா கூட இன்று ஆர்வலர்-ஒற்றர் நாடி விளம்பரம் செய்து இருக்கிறது ! சிட்டிஸன் -ஆடிட்டரைத்தான் காணமுடியவில்லை!

    மிண்டோ-மார்லி சீர்திருத்தங்கள் 1909 தான் முதல் முதலாக ஆடிட் பற்றி தெளிவான திட்டம் வகுத்தது. ஆடிட்டர்களுக்கு நிம்மதி வேண்டும்; சிந்திக்க அவகாசம் தேவை; அவர்களை மாஸ்டர்கள் தொணத்தக்கூடாது; அவர்கள் தன்னிச்சையாக செயல்பட வசதி அளிக்கவேண்டும்; இத்யாதி. அன்னியநாட்டை அடக்கி ஆளும் கலோனிய அரசு இத்தகைய சுவாதீனத்தைத் தணிக்கைத்துறைக்குக் கொடுத்தது போற்றத்தக்கது; வியப்பை அளிக்கிறது. இது ஒரு முகாந்திரம். ஒரு நிகழ்வு. அந்த துறையின் மூத்த இந்திய அதிகாரி ஒருவர் வைஸ்ராய் செய்த செலவுகளை கண்டித்தார். அது துரைத்தனத்தாருக்குப் பிடிக்கவில்லை. ஆனாலும், அடுத்தபடி ஆடிட்டர் ஜெனெரலாக அப்போதைக்கு ஒருவரை நியமனம் செய்ய வேண்டி இருந்தது. அதே துரைத்தனத்தார், தன்னிச்சையாக செயல்படுபவர் என்று இவரையே அந்த பதவியில் அமர்த்தினர்.

    நான் தணிக்கைத்துறையில் கால் வைத்தது 1954ல், குமாஸ்தாவாக. வேலை கனஜோர். மேலதிகாரிகளை இம்பெரஸ் பண்ணுவதற்காக, வந்த ஆவணங்களை மறைத்து வைத்து விட்டு, ‘ஏன் அனுப்பவில்லை?’ என்று கடுமையாக விசாரணை செய்வது போல் பாவ்லா காட்டிவிட்டு, அடுத்தமாதம் ஆவணங்களை வெளி கொணர்ந்து செட்டில் செய்து, மார் தட்டிக்கொள்வதும் உண்டு! வபையாக மாட்டிக்கொண்டவனை திண்டாட வைத்ததும் உண்டு. இதை சொல்வதின் காரணம்: [1] ஆடிட்காரனும் பாமர மனிதனே; சில்லரை விஷமம் அங்கேயும் உண்டு. [2] அடுத்த வருடமே பெரிய பதவி ஏற்ற நான் பாவ்லா செய்பவர்களை பிடிக்க முடிந்தது என்பதே.

    இன்றைய சங்கதிக்குக் கோடி காட்டி விட்டு போகிறேன். ஏற்கனவே, நீண்டு விட்டது.

    அவுட்! 12,400 கோடி ரூபாய் அபேஸ்! ஆடிட்டர் ஜெனரல் துல்லியமாக தனியார் துறை கணக்குப்புத்தகங்களை அலசி, வடிகட்டி எடுத்த குற்றச்சாட்டு. நமது நண்பர்கள் முதலாளித்துவத்தை போன்ற உயரிய பொருளியல் தத்துவம் கிடையாது; போட்டி இருப்பதால் சந்தை விலையை குறைக்கும் என்பார்கள். சந்தையெல்லாம் மொந்தைக்கள் தான். மற்றும் சிலர் அயல் நாட்டுச்சரக்கை வரவேற்க வேண்டும் என்று ரத்னகம்பளம் விரிப்பார்கள்.

    நடந்தது என்ன?

    ரிலையன்ஸ், டாட்டா, ஏர்டெல்,வோடோஃபோன், ஐடியாஸ். ஏர்செல் ஆகிய தனியார் துறை மகானுபாவர்கள் 2006 -2010 காலகட்டத்தில் பொய்க்கணக்கு காட்டி, அரசை ஏமாற்றிய செல்வம்: 12,400 கோடி ரூபாய். ஆதாரம், அவர்கள் காட்ட மறுத்து பல கோர்ட்டுகளை அணுகி, கெஞ்சி,வாய்தா கேட்டு, கேட்டு, எல்லாவிதமான தகடுத்தத்தங்கள் ஃபெயில் ஆனபின், 2014ல் தான் உச்ச நீதி மன்ற தீர்வுக்கு பிறகு, அரைமனதுடன் காண்பித்த கணக்குப்புத்தகங்கள் அளித்த வாக்குமூலம், இது.

    சாமான்யமாக ஆடிட் செய்ய முடியவில்லை. ‘கல்லைக்கண்டா நாயை காணோம்; நாயை கண்டா கல்லைக்கானோம்.’ என்ற அலங்கோலம் தான். ஆனாலும், இந்த தணிக்கைத்துறைக்கு பொறுமை ஜாஸ்தி. வணங்கா முடி வேறே.

    கொசுறு: இந்த ஊடகக்காரர்கள் [மீடியா] அந்த தனியார் நிறுவனங்களை அணுகி, ‘என்னப்பா சமாச்சாரம்? ஆடிட்காரன் அடி அடியா அடிக்கிறானே. நிசமா? ‘ என்று கேட்டார்கள். ஒரே மூச்சாக எல்லாரும் பதிலளிக்க மறுத்து விட்டார்கள்.

    ஆதாரம்: டைம்ஸ் ஆஃப் இந்தியா: மார்ச் 9ம் 2016,
    -#-
    சித்திரத்துக்கு நன்றி: http://www.starlightinvestigations.co.uk/wp-content/uploads/2015/01/Investigation-1038×576.jpg

    இன்னம்பூரான்

    http://innamburan.blogspot.co.uk

    http://innamburan.blogspot.de/view/magazine

    www.olitamizh.com

    Share
  • வானத்தைத் தொட்டவர்: சாகித்திய அகாடமி விருது பெற்ற கௌரி கிருபானந்தன்

    என் . ஸ்ரீதரன்.

    வானத்தைத் தொட்டவர்

    கௌரி கிருபானந்தன் எழுதிய “மீட்சி” என்ற தமிழ் மொழிபெயர்ப்பு புத்தகத்திற்கு 2015 வருடத்திற்கான சாகித்திய அகாடமியின் சிறந்த மொழிபெயர்ப்பிற்கான விருது கிடைத்திருக்கிறது.

    Meetchi
    “மீட்சி” என்பது 2015 வருட சாகித்திய அகாடமி விருது கிடைத்துள்ள “விமுக்தா என்ற பெயரில் திருமதி ஓல்கா” எழுதிய தெலுங்கு நாவலின் மொழிபெயர்ப்பு புத்தகம் என்பது குறிப்பிடத்தக்கது.

    விமுக்தா என்ற கதைத் தொகுப்பில் இருக்கும் கதைகள் ராமாயண இதிகாசத்தின் பின்னணியில் சீதை சூத்திரதாரியாக சொல்லப்பட்டவை.

    எண்டமூரி வீரேந்தர நாத் மற்றும் யத்தன்பூடி சுசிலா ராணி போன்ற எழுத்தாளர்களின் எண்ணற்ற தெலுங்கு நாவல்களை கௌரி கிருபானந்தன் சுவை படத் தமிழில் மொழிபெயர்த்திருக்கிறார். அவருடைய மொழிபெயர்ப்பில் உயிரோட்டம் இருக்கும். தேன் போல் இனிக்கும்.

    gowri.kirubanandan2
    விருதைப் பற்றி அவருக்குத் தெரிந்த போது அவர் அமெரிக்காவில் இருந்தார். “ நான் எதிர் பாராதது. எனக்கு மிக மகிழ்ச்சியாக இருந்தது என்று கூறினார்.
    கௌரி.கிருபானந்தன் சிகரத்தைத் தாண்டி வானத்தைத் தொட்டுவிட்டார். அவர் இன்னும் நிறைய விருதுகள் பெற வேண்டும்,

    நீங்களும் அவரை வாழ்த்துங்களேன் – அவர் மொபைல் நம்பர் 9791069485

    ****************
    என் . ஸ்ரீதரன்
    9790791965

    ****************

    Share
  • காரைக்குடி – 2016 ஆம் ஆண்டு கம்பன் திருவிழா

    காரைக்குடி கம்பன் கழகத்தின் 2016 ஆம் ஆண்டு கம்பன் திருவிழா

    காரைக்குடி, கல்லுக்கட்டி கிருஷ்ணா திருமண மண்டபத்தில்
    வரும் 21.3.2016 முதல் 23.3.2016 வரை நடை பெற உள்ளது.

    24.03.2016 அன்று கம்பன் அருட்கோயில் (கம்பர் சமாதி)
    உள்ள ஊரான நாட்டரசன் கோட்டையில் நடைபெற உள்ளது.

    அனைவரும் வருக. அழைப்பிதழ் விபரம் பின்வருமாறு
    காரைக்குடி கம்பன் கழக நிகழ்ச்சி நிரல் (2016)

    ____________________________________

    21.3.2016
    திங்கட்கிழமை மாலை 5.00 மணி திருவிழா மங்கலம்
    ____________________________________

    தலைவர்- தமிழக அரசு அறிவியல் நகரத் துணைத்தலைவர்
    திரு. உ. சகாயம் . இ. ஆ.ப. அவர்கள்

    இறைவணக்கம்- திருமதி லட்சுமி கிருஷ்ணமூர்த்தி,
    மலர் வணக்கம் – திருமதி ராதா ஜானகிராமன்

    கம்பன் அடிப்பொடி அஞ்சலி – செல்வி எம். கவிதா
    கம்பன் அருட்கவி ஐந்து- திருச்சிராப்பள்ளி கலைக்காவிரி நுண்கலைக்
    கல்லூரி மாணவ மாணவியர்

    வரவேற்புரை- திரு கம்பன் அடிசூடி

    தொடக்கவுரை- பேராசிரியர் தி, மு. அப்துல் காதர்

    இசைத்தமிழறிஞர் திரு அரிமளம் சு. பத்மநாபன் எழுதி உமா பதிப்பகம் வெளியிடும் மீனாட்சி பழனியப்பா அறக்கட்டளைச் சொற்பொழிவு நூல் கம்பனில் இசைத் தமிழ் வெளியீடு
    மதுரை தியாகராசர் கல்லூரி செயலர் திரு. ஹரி தியாகராஜன்

    பொன்விழா கொண்டாடிய புதுச் சேரி கம்பன் கழகத்தின் செயலாளர் திரு. வி.பி சிவக்கொழுந்து அவர்களுக்குக் கம்ப வள்ளல் விருது வழங்கிப் பாராட்டு
    மதுரை கம்பன் கழகத் துணைத்தலைவர் திரு சங்கர சீதாராமன்

    கோவை கம்பன் கழகத் துணைச் செயலாளர் பேராசிரியர் க. முருகேசன் எழுதிய தெய்வமும் மகனும் நூல் வெளியீடு
    பேராசிரியர் சொ. சேதுபதி எழுதிய கரைக்குடியில் ஜீவா என்ற நூல் வெளியீடு

    சென்னை உயர்நீதி மன்ற மூத்த வழக்கறிஞர் திரு. த. இராமலிங்கம்

    அந்தமான் தீவில் கம்பன் கழகம் 2016 ஏப்ரலில் கூட்டும் மூன்றாம் உலகத் தமிழ்க்கருத்தரங்கச் செய்தி விழா மடல் வெளியீடு – செட்டிநாடு சிமெண்ட்ஸ் இயக்குநர், நமது செட்டிநாடு இதழ் புரவலர் திரு இராஜாமணி முத்துக்கணேசன்

    கோவிலூர் ஆதீன கர்த்தர் திருப்பெருந்திரு மெய்யப்ப ஞான தேசிக சுவாமிகளுக்கு அவர்தம் கல்விப் பணிகளைப் பாராட்டி கம்பன் கழகம் பணிவுடன் அளிக்கும் காரைக்குடி தெ. இலக்குவன் நினைவைப் போற்றி அவர்தம் குடும்பத்தார் இவ்வாண்டு நிறுவியுள்ள கம்பன் அடிப்பொடி விருதினை வழங்கிப் பாராட்டு – மனிதத் தேனீ இரா. சொக்கலிங்கம்

    மாணாக்கர்களுக்கான பரிசளிப்பு- திருமதி வள்ளி முத்தையா

    தலைமை உரை- திரு. உ. சகாயம் இ. ஆ. ப. அவர்கள்

    ____________________________________

    22.3.2016
    செவ்வாய்க் கிழமை மாலை 5.00 மணி பூர நாள் நிகழ்ச்சி
    ____________________________________

    தமிழமுதம் – செல்வி எம். கவிதா (தக்க பின்னியங்களுடன் )

    கருத்துப்பொழிவு

    கம்பனில் மறக்க முடியாதது – திரு. த. இராமலிங்கம்
    கம்பனில் மறக்கக் கூடாதது -திரு. பழ. கருப்பையா

    கவிப்பொழிவு

    பொருள் – தமிழ் வெள்ளம்

    தொடக்கப்பொழிவு – நாடாளுமன்ற உறுப்பினர் தகைமிகு கனிமொழி
    சொற்கடல் – கவிதாயினி திருமதி ருக்மணி பன்னீர் செல்வம்
    சுவை ஊற்று – கவிதாயினி திருமதி சல்மா

    ____________________________________

    23.3.2016
    புதன் கிழமை மாலை 5.00 மணி உத்தரநாள்
    ____________________________________

    தமிழமுதம்- செல்வி எம். கவிதா

    பட்டிமண்டபம்

    நடுவர்- திரு தமிழ்க்கடல் நெல்லைக்கண்ணன்.

    தலைப்பு – எவர் சந்திப்பில் கம்பன் பெரிதும் வெற்றி கொண்டு
    வெளிப்படுகின்றார்?

    இராமன் -கைகேயி- திரு. வே. சங்கர நாராயணன்
    திருமதி பாரதி பாபு
    திரு பாகை கண்ணதாசன்

    இராமன் – இராவணன் திரு இரா. மாது
    திரு. சுமதிஸ்ரீ
    திரு. மெ. ஜெயம்கொண்டான்

    இராமன்- சிறைமீண்ட சீதை
    திரு. பழ. முத்தப்பன்
    திருமதி இரா. கீதா
    திரு அப்பச்சி எஸ் சபாபதி

    நோக்கர் பெருமகள் நாற்பத்து ஒன்பதின்மர் வாக்களித்து ஒரு அணியை விலக்குதல்

    நோக்கர்கள் தீர்ப்பால் பாதிக்கப்பட்டவர் மேல் முறையீடு
    நோக்கர்கள் சார்பில் எதிர் வாதம் – திரு. மா. சிதம்பரம்
    நடுவர் தீர்ப்பு

    ____________________________________

    24.3.2016
    வியாழக்கிழமை மாலை 5.00 மணி நாட்டரசன் கோட்டை
    ____________________________________

    தலைவர்
    நாடாளுமன்ற உறுப்பினர் தகைமிகு டாக்டர் ஈ. எம். சுதர்சன் நாச்சியப்பன்

    கம்பன் அருட்கோயில் வழிபாடு

    மலர் வணக்கம் திருமதி லெட்சுமி கிருஷ்ணமூர்த்தி
    திருமதி ராதா ஜானகிராமன்

    கம்பன் அருட்கவி ஐந்து – திருச்சி கலைக்காவிரிக் குழுவினர்

    இறைவணக்கம் – செல்வி எம்.கவிதா

    வரவேற்புரை – திரு. கண. சுந்தர் உரை

    கம்பன் கலை நகைச்சுவை – முனைவர் இளசை சுந்தரம்

    நன்றியுரை – முனைவர் மு.பழனியப்பன்

    வாழிய செந்தமிழ்

    அனைவரும் வருக. அனைத்து நிகழ்ச்சிகளுக்கும் வருக.

    ____________________________________

    இவ்வாண்டு நிகழ்ச்சி உதவி
    ____________________________________

    நமது செட்டிநாடு – இதழ்
    கோட்டையூர் வள்ளல் அழகப்பர் குடும்ப திருமதி வள்ளி முத்தையா
    பொன்னமராவதி அன்னை மெடிக்கல்ஸ்
    திரு.அரு. வே. மாணிக்கவேலு, சரஸ்வதி அறக்கட்டளை
    நாட்டரசன் கோட்டை திருமதி விசாலாட்சி கண்ணப்பன்
    சிங்கப்பூர் தமிழ் அன்பர்
    காரைக்குடி தெ. இலக்குவன் நினைவாக இல தெய்வராயன் காந்தி
    திரு. கண. சரவணன், ஸ்ரீலெட்சுமி பிரிண்டர்ஸ், காரைக்குடி
    விஸ்வாஸ் கலை பண்பாட்டு அறக்கட்டளை மதுரை
    ஸ்ரீ விசாலம் சிட் பண்டு

    மாணாக்கர்களுக்கான பரிசு
    பேராசிரியர் தி. இராச கோபாலன் நிறுவியுள்ள வேம்பு அம்மாள் பரிசு
    பேராசிரியர் சரசுவதி இராமநாதன் நிறுவியுள்ள புலவர் க.வே. இராமநாதனார் பரிசு
    பேராசிரியர் மு.பழனியப்பன் நிறுவியுள்ள பழ. முத்தப்பனார் பரிசு
    பொன்னமராவதி அரு,வெ . மாணிக்கவேலு சரசுவதி பரிசு
    திருமதி லெ. அலமேலு நிறுவியுள்ள அரியக்குடி ஆர். எம். வேங்கடாசலம் பரிசு

    ____________________________________

    1

    2

    3

    4

    5

    6

    7

    8

    ____________________________________

    அன்புடையீர்
    வணக்கம்.
    காரைக்குடி கம்பன் கழக கம்பன் திருவிழா அழைப்பிதழை அனுப்பியுள்ளேன் அனைவரும் வருக.

    அன்புடன்
    மு.பழனியப்பன்

    காரைக்குடி கம்பன் கழகப் பொருளாளர்.

    ____________________________________

    Share
  • கேசவ் வண்ணம் – கிரேசி எண்ணம்

     

    அந்தாதியில் ‘’கண்ணா கனியவை’’ நாற்பது எழுதினேன்….அவைகளில் ஆறு….

    0ca30e0c-ebe3-4c91-a66b-ce77659b985e
    ஆக்கப் பொறுத்தாலும் ஆறப் பொறுத்தாலும்
    காக்கும் கடவுள் கவலைப்படான் -நோக்கு
    விதித்ததை ஏற்றி வினையால் அணைத்து
    புதைப்ப(து) அவன்பொழுது போக்கு….(1)

    போக்கத்(து) உலகில் பொழுதைக் கழித்திரு
    காக்கும் கடவுளுடன் கைகோர்த்து -தாக்கும்
    செடியாய வல்வினைகள் செங்கரும்பாம், ஊன்றத்
    தடியாகும் பட்டினத் தார்….(2)

    தாரில் மலரவன் நாராம் மணக்கும்நாம்
    சோறில் சுவையவன், சக்கைநாம் -நேரில்
    வரத்தயங்கும் கீதமவன் வந்துவிட்ட நாமக்
    கரத்தியங்கும் புல்லாங் குழல்….(3)

    குழலுற்ற கீதத்தைக் காதுற்றுக் கேளீர்
    விழலுக்(கு) இறைக்காதீர் வீணாய் -தழலுக்குள்
    வேகாது, தண்ணீரில் வீழ்ந்தும் நனையாது
    சாகாத அவ்வுணர்வே சத்து….(4)

    சத்துக்கு ஆனந்தம் சித்தின் விளையாட்டு
    அத்தனையும் வேடிக்கை ஆகப்பார் -புத்தி
    மனமுள்ளம் நெஞ்சென்ற மாயங்கள் நால்வர்
    உனையுண்ணத் தூக்கும் உறவு….(5)

    உறவும் பகையும் துறவும் தெளிவும்
    வரவு செலவாகும் வாழ்க்கை -பறவை
    ஒருகூடு விட்டு மறுகூடு போகும்
    பெறுவீடு காணப் பயன்….கிரேசி மோகன்….

    Share
  • தருமசாத்திரநூல்களில் கூறப்பட்டிருக்கும் எட்டுவகை விவாகங்கள்

    பவள சங்கரி

    மண வாழ்க்கையின் உயர்ந்த நோக்கம் , வாழ்நாள் நம்பிக்கை, அந்நியோன்யம் மற்றும் கணவன் மனைவிக்கிடையேயான ஒருமித்த அன்பு போன்றவற்றின் மீது கட்டமைக்கப்பட்டது என்பதை ரிக் சமிதா குறிப்பிடுகிறது

    திருமணம் என்பது ஒரு பெண்ணின் வாழ்க்கையில் ஒரு திருப்பு முனையை ஏற்படுத்துவது. ரிக் வேத காலங்களில், இந்து சாத்திரங்கள் எட்டு வகையான திருமண முறைகள் பற்றி கூறுகின்றன. அவைகளாவன :

    1. பிரம்ம முறை திருமணம்:

    வேத ஆகமங்களை கற்றுத்தேர்ந்து, நல்லொழுக்கமுள்ள ஒரு ஆண் மகனை, பெண்ணின் தந்தை வரவழைத்து, தனது மகளுக்கு விலையுயர்ந்த ஆடைகள் மற்றும் அணிகலன்களை அணிவித்து அவளை மணமுடித்து வைப்பது.

    2. தெய்வ முறை திருமணம்:

    கோவில்களில் கடவுளருக்கு பூசைகளை நிறைவேற்றும் அர்ச்சகருக்கு, பெண்ணின் தந்தை தனது மகளை, ஆடை ஆபரணங்களுடன் தானமாக அளிப்பது.

    3. அர்ஷா முறை திருமணம்:

    புனித கடமையை நிறைவேற்றும் பொருட்டு மணமகனிடமிருந்து பெண்ணின் தந்தை தானமாக இரண்டு ஜோடி பசுக்கள் மற்றும் காளைகளைப் பெற்று தனது மகளை மணமகனுக்கு அளிப்பது.

    4. பிராஜாபத்ய முறை திருமணம்:

    பெண்ணின் தந்தை மணமகனுக்கு மரியாதை செலுத்தி, ‘நீங்கள் இருவரும் இனி உங்கள் கட மைகளை இணைந்தே நிறைவேற்றுவீர்களாக’ என்று வாழ்த்தி தனது மகளை தானமாக அளிப்பது.

    5. அசுர முறை திருமணம்:

    மணமகன் தன்னால் இயன்ற அளவிற்கு செல்வங்களை கன்னிப் பெண்ணின் உறவினர்களுக்கு பரிசாக அளித்து மணமகளை அடைவது

    6. காந்தர்வ முறை திருமணம்:

    மணமகனும் மணமகளும் ஒருவருக்கொருவர் பாலுணர்வால் உந்தப்பட்டு தாமாகவே இணைந்து வாழ்வது.

    7. ராட்சச முறை திருமணம்:

    ஒரு பெண்ணின் உறவினர்களை கொன்று அல்லது துன்புறுத்தி, அவள் விருப்பத்திற்கு மாறாக கவர்ந்து செய்து மணமுடிப்பது.

    8. பைசாச முறை திருமணம்:

    ஒரு பெண் மயக்கமுற்று அல்லது உறக்கத்தில் இருக்கும்போதோ அல்லது சுயநினைவில் இல்லாத நிலையிலோ அவளை நயவஞ்சகமாக அடையும் பாவகரமான திருமண முறை.

    Share
  • கேசவ் வண்ணம் – கிரேசி எண்ணம்

     

    கண்ணன் காப்பு
    —————————

    b0b326a5-e2e5-4f6f-9e44-9bb4b51d41f8
    அமுதா அளவினை விஞ்சுகின்ற நஞ்சாம்
    எமதாசை நெஞ்சினை ஏற்று -குமுதவாய்
    பேய்ச்சி முலைப்பாலை உண்டதுபோல் எம்மனச்
    சூழ்ச்சியைக் கொள்வாய் சரண்….(INFINITY)….

    கஷ்டம் கலைந்திடும் நஷ்டம் நகர்ந்திடும்
    இஷ்டம் நமக்கு இணங்கிடும் – அஷ்டமி
    ரோகினியில் தோன்றிய லேகிய வண்ணனை
    ஏகிட எல்லாம் எளிது….(0)
    தீக்குளிட்டு பாரதி தீண்டிய தெய்வத்தை
    வாக்கிலெட்டா கண்ணனை வாழ்த்துவோம்-பூக்களிட்டு
    அப்பம் அதிரசம் முப்பழங்கள் வைத்தாலும்
    அப்பயலுக்(கு) அன்பே அமுது (or) அறம்….(1)

    மாதவனை கேசவனை மாலொழிய வந்தவனை
    ஆதவனை ஆயர் அணிவிளக்கை -யாதவனை
    ரோகினி அஷ்டமியாய் ஆகிய கீதையை
    தாகிநீ தேஹியென்றோ தி….(2)
    நடுநிசியில் ரோகினி நட்ஷத் திரத்தில்
    கொடுஞ்சிறையில் தோன்றிய கண்ணா-முடிமிசையில்
    அப்பன் சுமந்திட ஆயர்தம் கோகுல
    குப்பம் நுழைந்தவனே காப்பு….(3)

    கட்டு மயிற்பீலி கொண்டை யிலணிந்து
    பட்டுப்பீ தாம்பரம் பூண்டாவை -வெட்ட
    வெளிதனில் மேய்க்க வேய்ங்குழல் ஊதும்
    களிமிகு கண்ணனே காப்பு….(4)

    பொன்னிற வண்ணப் புழுதி எழுந்துயர்
    விண்ணவர் கண்ணில் விழுந்திட -செந்நிற
    சாயங்கா லத்தில் சகாக்களுடன் வீடேகும்
    காயாம்பூ வண்ணனே காப்பு….(5)

    காளியன் குட்டையில் மூளியாய் மூழ்கஅவன்
    தோளினில் ஆடிய தெய்வமே -காளியின்
    அண்ணனே கைமாறி ஆயர் குலம்புகுந்த
    கண்ணனே வேண்டினேன் காப்பு….(6)

    பூதனை மார்பை புசித்தவள் ஆவியை
    வேதனை இன்றி விரட்டியவா -தீதினை
    ஓட்டவும் தர்மம் உயரவும் பாண்டவ
    கூட்டம் பிணைந்தவா காப்பு….(7)

    தாய்க்குப் பணிந்தன்று தாம்பில் புகுந்துமரம்
    சாய்க்க உரலிழுத்த சாகஸா – வாய்க்குள்
    மாதா மகிழ மகோன்னதம் காட்டிய
    கீதா உபதேசா காப்பு….(8)

    எதுரா எதுராவென எங்கெங்கோ தேடும்
    புதிராம் புவிவாழ்வு போதும் – மதுரா
    நகரொளிந்த தெய்வம் நவனீதக் கண்ணன்
    சுகமளிக்கும் செல்வச் செழிப்பு….(9)

    தீரன் யமுனா தரங்கக் கரையோரன்
    சேரும் இளமாதர் ஜீவான்ம -சோரன்
    அழகில் சுகுமாறன் அன்பில் உபகாரன்
    கழுகில் வரும்நேரம் காப்பு….(10)

    குவலயா பீடத்தின் கொம்பொசித்துக் கம்சன்
    கவலையால் பீடிக்கக் கொன்றோன் – அவலையா
    தந்தாய் எடுத்துக்கொள் தோழாயென் செல்வத்தால்
    கந்தையைக் கட்டென்றான் காப்பு….(11)

    கூவும் கஜேந்திரனை காத்த புஜேந்திரா
    ஏவிய சக்கரத்தை ஏந்தியவா -காவிய
    பாகவதக் கண்ணா பரந்தாமா நாரணா
    காகவத காகுத்தா காப்பு….(12)

    ஆலில் மிதந்தவா ஆழ்வார்கள் பாசுர
    நூலில் நிறைந்தவா நந்தலாலா -தோளில்
    திருத்துழாய் பூண்ட திருவோணத் தானே
    கருத்தில் கலந்துவளைக் காப்பு….(13)

    உதித்தவா நேற்று மிதித்தவா இன்று
    நதிக்கரை நந்தகோபன் நாட்டை -எதிர்த்ததாய்
    மாமா அனுப்பிய மல்லர் களையன்று
    கோமாளி ஆக்கியவா காப்பு….(14)

    Share
  • கலாஷேத்ரா

    பவள சங்கரி

    பால்ய விவாகத்தைத் தடை செய்யும் சட்ட மசோதாவை ஏற்படுத்தியவர் மற்றும் இந்துக் கோவில்களில் இருந்த தேவதாசி முறையை அறவே ஒழித்த டாக்டர் முத்துலஷ்மி ரெட்டியை அறியாதவர் இருக்கமாட்டார்கள். 1931ம் ஆண்டில் உப்பு சத்யாகிரகத்தில் பங்கு பெற்று முதன்முதலில் சிறை சென்றவர் ருக்மணி லஷ்மிபதி. மிகப்பெரும் கல்வியாளர் மற்றும் சமூக சீர்திருத்தவாதி ராதா சுப்பராயன், பலதார மணம் தடைச்சட்டம், திருமண வயதை மாற்றியமைக்கும் சட்டம், நவீன காலத்திற்கேற்ப இந்திய சட்டங்களை மாற்றியமைக்க ஒப்புதல் பெறும் மசோதாக்கள் போன்றவற்றை வெளியிட்டார். கலாஷேத்ரா என்றொரு அமைப்பை நிறுவி, இந்தியக் கலை மற்றும் கலாச்சாரத்திற்குப் புத்துணர்வு ஏற்படுத்தக்கூடிய சாதனைப்படைத்தவர், ருக்மிணிதேவி அருண்டேல்.

    Share
  • நம் இந்து திருமணச்சட்டமே தோல்வியான ஒன்றே.

    பவள சங்கரி

    இன்றைய நவீன உலகில் பெண்களுக்கானச் சட்டத்தின் நிலை, குறிப்பாக அவர்களின் பொருளாதாரம் மற்றும் கல்வி தொடர்பான சிக்கல்கள் குறித்துப் பார்ப்போமானால், ஒரு பெண் திருமணம் என்ற பந்தத்தில் நுழைவதற்குக் காரணமே அவளுடைய எதிர்கால பாதுகாப்பு என்ற ஒன்றைக் கருதியே. ஆனால் கணவன் ஏதேனும் ஒரு காரணத்திற்காக இரண்டாவது மணம் புரிய விரும்பினால், அவனைத் தடுத்து நிறுத்த முடியாது என்பதைவிட கணவனிடமிருந்து ஜீவனாம்சம் மட்டுமே அவள் பெற முடியும். அவளுடைய சீதனமான நகை, சொத்து, பணம் என அனைத்து தனிப்பட்ட உடமைகளைத் தவிர்த்து குழந்தைகள் முதல் மற்ற அசையா சொத்துகள், அசையும் சொத்துகள் என அனைத்தும் கணவனுக்கே உடமையுள்ளது. ஒரு மனைவி, ஒரு குடும்பத்தை வைத்து வாழ்க்கை நடத்துவதே பெரும்பாடாக இருக்கும் இக்காலகட்டத்தில் பலதாரமணம் என்பதெல்லாம் மிகவும் அரிதான ஒன்றாகவே உள்ளது. பொதுவாக சட்டங்களை முறியடிப்பவர்களுக்கும், சிக்கலில் இருப்பவர்களுக்கு மட்டுமே சட்டம் துணை வருகிறது என்கிறபோது, நம் இந்து திருமணச்சட்டமே தோல்வியான ஒன்றே.

    Share
  • பெண்களின் பலம் மற்றும் பலவீனம்

    பவள சங்கரி

    நம் இந்தியா பல இன, பல மொழி பேசும் மக்கள் வாழும் நாடு. ஒரு பஞ்சாபிப் பெண்ணின் திருமண முறை, அவர்கள் வாழும் முறை, உடுத்தும் உடை, உண்ணும் உணவு , சடங்கு, சம்பிரதாயம் என அனைத்தும் வங்காளப் பெண்ணிற்கோ அல்லது காஷ்மீரப் பெண்ணிற்கோ மாறுபட்ட ஒன்றாகவே இருக்கும். அனைவரையும் இணைக்கக்கூடிய ஒரே பாலம் என்றால் அது பக்தியும், அதனை ஊக்குவிக்கிற சமசுகிருத சுலோகங்கள் மட்டுமே. தென்னாட்டிலும், வடநாட்டில் மலைவாழ் சமூகங்களுக்குள் ஒரு சில என  தாய்வழிச் சமூகங்கள் இருப்பது உண்மை என்றாலும் அவை அளவில் மிக குறைந்ததாகவே உள்ளது. பெரும்பான்மையான இந்தியப் பெண்கள் திருமண பந்தம், தாய்மை, குடும்பப் பராமரிப்பு  போன்றவைகளை இயற்கையாகவே ஏற்றுக்கொண்டனர். இதுவே பெண்களின் பலம் மற்றும் பலவீனமாக இருக்கிறது.

    Share
  • கேசவ் வண்ணம் – கிரேசி எண்ணம்

    கிரேசி மோகன்

     

    அமுதசுரபியில் அடியேன் எழுதிய ‘’ரமணாயணத்திலிருந்து’’….

    9e24425b-a11f-4795-97f3-7c58fe1e3449

    கண்ணன் கதைக்கு கிடைத்த சுகமுனிபோல்
    அண்ணல் பகவான் அவதார -எண்ணத்தை
    நால்வருணம் தாண்டிய பால்பிரண்டன் தீட்டினான்
    நூல்வடிவில் நானார் நிகழ்வு….

    பால காண்டம்….
    ——————————————
    திருவா திரையில் திருச்சுழி ஊரில்
    கருவாய் அழகம்மை கர்பம் -உருவாய்
    பெருந்தவம் செய்த பகவான் ரமணர்
    பிறந்து துறந்தார் பிறப்பு….

    பேரூழி காலத்தில் பாராழி புக்காது
    நீரோய சூலன் நிறுத்திய -ஊராம்
    திருச்சுழி தோன்றினன், தாயழ கம்மை
    கருக்குழியில் கர்மம் கழித்து….
    பகவான் உவாச
    ——————————
    சித்தப்பா வீட்டில்நான் செத்தப்பா ஆனதும்
    முத்தாய்ப்பாய் கேட்டேனோர் சத்தத்தை -வத்தாத
    ஜீவநதி ‘’நான்ஆன்ம” சாகர சங்கமிப்பை
    சாவதனில் கொண்டேன் சுகம்….

    வந்தது சாவு வரட்டுமே சாவென்றால்
    எந்தஎது சாகிறது என்றவினா -தந்த
    பலத்தால் மரண பயத்தை எதிர்த்தேன்
    களத்தில் இறந்தது கூற்று….

    வந்த இறப்பை வரவேற்று வாசியின்றி
    அந்தநிலையில் ஆழ்ந்து அடுத்ததாய் -இந்த
    உடலை எடுத்து சுடலை நெருப்பில்
    விடுவதைப் பார்த்தேன் வியந்து….
    உடல்போன பின்பும் உயிர்போன பின்பும்
    கடல்போல என்னிருப்பைக் கண்டேன் -மட’நான்’போய்
    தான்குவித்த குப்பையை தானே களைந்தது
    நான்கவஸ்த்தை தாண்டிய ‘’ நான் ‘’….

    பகவான் உவாச
    —————-

    சுவரென்ற சக்தி சுழற்றித் திருப்பும்
    கவணெறி வேகத்தில் கர்மம் -அவரவர்
    ப்ராரப்தம் என்று பணிந்தேற்றுக் கொள்வீர்
    வேறர்த்தம் எல்லாமே வீண்….

    நடவாத ஒன்றை நமது முயற்சி
    நடத்தா ததுபோல் நிகழ்வும் -தடையாய்
    எவனென செய்தும் எழுவது திண்ணம்
    மவுனக் கிடக்கையே மட்டு….

    செயல்புரியும் மோகம் ,செயல்பலன் தாகம்
    அயலாக எண்ணல் தியாகம் -வயலாம்
    விசாரம் விடுத்து விழலான வாழ்வின்
    அசாதா ரணத்திற்க்கேன் அப்பு….

    சிந்தை விளையாட்டு செப்ப வினையாகும்
    விந்தையாம் ‘’ நானார்’’ விசாரணை -வந்ததோர்
    ஆணவத்தைக் கூண்டில் அமர்த்தி வினவிட
    நானவஸ்த்தை ‘’நான்’’என்பான் நைந்து….

    மாயநான் மார்பில் மணிகட்ட பூனையாம்
    தூயநான் தோன்றிடும் தூண்பிளந்து -சீயமாய்
    ஆன்மா அதற்கிரை ஆனால் அதுஇறையாய்
    ‘’நான்’’போன நம்முள் நுழைந்து….
    ஆரூர் பிறந்தோர்க்கும் அக்காசி மாய்ந்தோர்க்கும்
    பாரில் சிதம்பரம் பார்த்தோர்க்கும் -நேரும்
    திருநாளாம் முக்தி அருணா சலத்தை
    ஒருநாள் நினைத்தாலே உண்டு…
    குளித்து மடியாய் வெளுத்த நுதலாய்
    உளத்தில் அரனை உடுத்தி -களைத்த
    நிறைகர் பிணியாய் நிதானம் காத்து
    வரைசுற்ற வாழ்வில் வளம்….

    நானென்ற ஓசை நவில்வது யாரென்று
    ஊணுறக்கத் திற்க்கீடாய் உன்னிப்பாய் -காணென்றும்
    ஒன்றிவிடும் உள்ளம்நான் ஊறும் இடத்தினில்
    மன்றமது மெய்த்தவக் குன்று….

    விழிப்பு, கனவு, விழுங்கும் சுழுத்தி
    கழிக்கும் அதுவே’நான்’ காண்பாய் -உழைப்பாய்
    உடலான்ம பாவம் ஒழிக்கும் விதத்தை
    அட!ஆன்மத் தேடல் அதற்கு….

    வெட்டியான்போல் நின்று விசாரணைக் கோல்கொண்டு
    சுட்டும் எழும்பும் சவமனம்மேல் -பட்டென்(று)
    அடித்திட ‘நானும்’ அடித்திடும் ‘நானார்’
    தடிக்கொம்பும் சாம்பலாம் தீக்கு….

    மந்திர ஓசையுள் ளெங்கிருந்து தோன்றுதென்று
    எந்திரமாய்ப் பார்க்க எழுவாய்க்குள் -வந்தடங்கும்
    உந்தன் மனது ஒடுங்கிட மிஞ்சிடும்
    விந்தை மவுனம் விளைந்து….

    ஆடி அசைந்திடும் ஆனை துதிக்கையாய்
    நாடிச் சலித்திடும் நம்மனப் -பேடிக்கு
    சங்கிலியாய்த் தந்திடுவீர் சத்வ குணங்களை
    அங்கொளிரும் ஆன்மா அலர்ந்து….

    உப்புபுளி காரம் உணவில் தவிர்த்திடுவாய்
    செப்பிறைவன் நாமம் , சரணென்று -ஒப்படைப்பாய்
    உன்னையொரு மூர்த்தியிடம் உள்ளே தியானித்து
    தொன்னைமனம் நெய்யான்மா தொப்….
    காவிய கண்டர் கருணைக்கை தூரிகையால்
    ஓவியம் போலவர்முன் உட்கார்ந்தார் -மேவிய
    சந்தேகம் ஓய்ந்திட சஞ்சலம் மாய்ந்திட
    தன்தேக பாவம் தொலைப்பு….

    இராமனம் வென்று மராமரம் போல்வாழ்
    பிராமண சாமிபெயர் சீடர் -சிறாருரைக்க
    வேங்கட ராமனுக்கு வேறுபெயர் கண்டரிட்டார்
    ஈங்கிவர் ஸ்ரீரமணர் என்று….

    திருவொற்றி யூரில் தவமிருந்த போது
    உருவொத்து வந்த ரமணர் -சிரமொத்தி
    தன்சாரம் தீட்சையாய் தந்தாராம் கண்டர்க்கு
    மின்சாரப் பாய்வு முனிக்கு….

    சுமாரோர் மாதத்தில் செய்ய நினைத்தகண்டர்
    உமாசஹஸ்ரம் பெய்தாரோர் நாளில் -தமாஷாக
    ‘’என்ன கணபதி சொன்னது போதுமா’’
    கண்சிமிட்டிக் கேட்டார்சத் குரு….
    கண்டர் -காவ்ய கண்ட கணபதி முனிகள்…

    பச்சையம்மன் கோயில் பகவான் இருக்கையில்
    உச்சிமுகர்ந்து சென்றதாம் நட்சத்திரம் -இச்சரியை
    ஆறுமுறை ஆக அங்கிருந்த சாஸ்திரியார்
    ஆறுமுகன்தான் என்றார் அடித்து….
    விருபாட்ஷி மாடத்து வேழன்மேல் வெண்பா
    உருவாச்சு ஓர்நாள் பகவான் -திருவாக்கால்
    வேடிக்கை வெண்பாவை பாடி கணபதிக்கு
    கோடிட்டுக் காட்டியதைக் கேள்….

    பகவான் சொன்ன வெண்பா
    —————————

    பிள்ளையாப் பெற்றவனைப் பிச்சாண்டி யாக்கியெங்கும்
    பிள்ளையாப் பேழ்வயிற்றைப் பேணினீர் -பிள்ளையான்
    கன்னெஞ்சோ மாடத்துப் பிள்ளையாரே கண்பாரும்
    பின்வந்தான் தன்னைநீர் பெற்று….

    பகவான் உவாச
    ——————

    ஞானம் நிரந்தர கானம் குழந்தைக்கு
    ஏனென்றால் ‘நானங்’(கு) எழவில்லை -பேணிடுவீர்
    பிள்ளைப் பருவத்தை பேசா விருப்பத்தை
    உள்ளின் உவப்பை உகந்து….

    உனக்குதவும் செய்கை உலகளாவும் சேவை
    பிணக்கிதில் நீவேறாய்ப் பாரை -நினைப்பது
    ஆன்மாவில் ஒன்றிட ஆளே(து) உதவிட
    வீண்பேதம் காணல் விலக்கு….
    கண்ணனும் ஏசுவும் பண்ணிய அற்புதங்கள்
    என்னளவில் ஆகுமா என்கிறீர் -முன்னமவர்
    செய்யவந்த செய்கையை செய்வதாய்ச் செய்யவில்லை
    கைவந்தோர்க்(கு) ஈதியற்கை காண்….
    சித்தி வலைதனில் சிக்கிடாது நீந்திடுவாய்
    சத்திய மெய்ஞான சாகரத்தில் -உத்தியாய்
    பூரண சரணத்தில் பூத்திருப்போர்க்(கு) இல்லைகாண்
    காரண காரியக் கட்டு….

    மனவிளிம்புக்(கு) அப்பால் மனமுவந்து சென்று
    குணமளிக்கும் ஆன்மாவில் கூடு -நினைவளிக்கும்
    புத்தியோடு நில்லாமல் சத்தியத்தைப் பார்த்திட
    கத்தி விசாரணையால் கொத்து….

    சூதாடி உள்ளமதன் மீதாடும் எண்ணமுடன்
    வாதாடி மாய்த்துமனம் வென்றிடுவாய் -ஆத்தாடி
    சித்தம் சிவமாகும் பித்தம் பிணமாகும்
    அத்தை உரைத்தல் அறிது….

    கும்பிடும் தெய்வம் கிருத்துவோ கண்ணனோ
    நம்பிட நாமதுவாய் எம்பிடுவோம் -என்பதற்கு
    மாதிரியாய் வாழ்ந்த மகான்விடை பெற்றகன்றார்
    பாதிரியாய் ஹம்ப்ரீஸ் பணிக்கு….

    பாரதியார் வருகை….
    ————————————–

    சிவய்யாவும் மற்றும் சிலரே இருந்த
    அவைக்குள் நுழைந்ததும் அங்கு -தவய்யா
    நேரவர் உட்கார்ந்தார் நேரம் ஒருமணி
    யாரவர் பாரதி யார்….

    அங்கிருந்த போது அறியார் ரமணரவர்
    பொங்குதமிழ் ஞானப் புயலென்று -எங்கிருந்தோ
    வந்தார் ,இடைச்சாதி நானொழித்த ராமனுக்கு
    தந்தார் அணிலாய்த் தமிழ்….

    வாழ்க மஹரிஷியார்,வாழ்க பாரதியார்
    வாழ்க தமிழ்த்தவ வல்லார்கள் -வாழ்க
    திருவருணைக் குன்று திருவல்லிக் கேணி
    குருவருள் கொஞ்சுதமிழ் காப்பு….

    ————————————————————-

    பாதாள லிங்க குகை வாசம்….
    ————————————————–
    உய்யும் தவம்கலைக்கும் பையன்கள் தொந்திரவால்
    அய்யன் இடமாற்றம் செய்தனன் -மையிருளாம்
    சாதா ரணர்களால் செல்ல முடியாத
    பாதாள லிங்க குகைக்கு….

    பூரான் கறையான் புழுபூச்சி பல்லிகள்
    ஆரா அமுதாய் அவரெதிர் -பாரா
    உடலை ருசித்தும் கடவுள் நினைப்பில்
    ஜடமாய் இருந்தான் ஜெயித்து….

    ஜாடியில் வைத்த சிவகடாட்ச ஊறுகாய்
    வாடாது பாதாள வாயிலுக்கு -மூடியாய்
    தானுகந்தான் தன்னை தவத்திரு சேஷாத்ரி
    ஞானியின்கால் ஞானம் அறிந்து….

    ——————————————————————————————-
    பகவான் உவாச
    —————

    நானென்றும் சொல்லி நினதென்றும் சொல்கிறாய்
    நானிதில் யார்யார் நினக்குள்ளே -காணதை
    உன்னுள்ளே நோக்கி உழல்கின்ற உண்மையை
    கண்ணுள்ளே காண்போனே கோன்….

    பாலுக்கும் தோழனாய் பூனைக்கும் காவலாய்
    பாலுனக்கு பாடு புலன்களால் -பாலதன்
    பால்கலந்த தண்ணீரே பாழ்நான் உணர்வாய்யன்
    பால்பிறக்கும் நானே பரம்….

    தேடலின் தீவீரம் தீக்குச் சமமாகும்
    சீடன் கரியா? வெடிமருந்தா? -பாடது
    முன்னதில் தேசிகர்க்கு மூளவைத்தல் துர்லபம்
    பின்னதில் பற்றல் பளிச்….

    சரித்திரம் நேற்று ,விசித்திரம் நாளை
    நிரந்தரம் இன்றை நினைவாய் -பரம்பொருள்
    தாங்குவான் பாரங்கள் ஈங்கிதே சாரம்காண்
    ஏங்குதல் ஏங்காமை ஏய்ப்பு….

    யதாவுன் இருப்பு ததாயிவ் உலகு
    கதாகனா வாகின்ற காட்சி -சதாநீ
    உனதுண்மை தேடு, உலகுக்கதன் பாடு
    மனதின்மை காண்போன் மகான்….
    புண்ணியநம் நாட்டில் புதைந்த ரகசியத்தை
    கண்ணியவான் பால்பிரண்டன் கண்டுணர்ந்து -மண்ணுக்கு
    புத்தகமாய் தந்தார் ,பகவான் ரமணரின்
    தத்துவம் தொட்டதெட்டு திக்கு….
    ——————————————————————————————————————————————
    முக்தி காண்டம்….
    ————————————–
    வாம முழங்கை வழியாய் புகுந்தன்று
    ஆமையாம் கான்ஸர்நோய் அண்ணலிடம் -சாமியே
    காலடியின் கூட்டத்தால் கையடியில் வந்தநானும்
    போலடியார் தானென்றான் புற்று….

    ஆடா(து) அசங்கா(து) அமர்ந்திருந்த உங்களை
    மேடையென் றெண்ணிமேல் ஏறிவிட்டேன் -ஆடிடுவோன்
    வாய்க்கெட்டும் ஆலம்நான் கைக்கேட்டும் மூலமும்
    நோய்க்கட்டி ஆனதென்நன் நாள்….

    மாதுமையாள் கண்டத்தில் மாலையாய் சாய்கின்ற
    போதெம்மை பூஜைக் கரடியென்றாள் -ஆதலால்
    உய்ய வழியின்றி உம்மில் புகுந்தேன்நான்
    அய்ய அடைக்கலமுன் கை….

    சிற்றின்பம் ஓடியது பேரின்பம் நாடியது
    உற்றன்பு கொண்டூ டுறுவுமிப் -புற்றின்பம்
    ஏற்றுப் பொறுத்து எமக்களிப்பீர் முக்தியை
    தூற்றுமூர் மூக்கை உடைத்து….

    கொல்லும் கணைக்கூட்டம் காகுத்தன் தோளிருப்பு
    சொல்லும் வசவும் சரஸ்வதிதான் -அல்லும்
    பகலுமிங்கு சேர்ந்திருக்க புண்ணியத்துள் இப்புண்
    புகுதலென்ன பாவம் புகல்….

    கர்கடக ராசிநான் கைராசி ஆனேனே
    சற்குரு உந்தன்கை சேர்ந்ததனால் -தற்பரமே
    கையடித்து சொன்னாலுன் கைவலிக்கும் வாக்களித்தேன்
    மெய்யடியார் மெய்யுண்ணேன் மெய்….

    கொப்பளநோய் தன்னை குணமாக்க நீர்மனம்
    ஒப்பிடத் தூளாகும் அப்பளமாய் -சுப்பரா
    மய்யாவாள் வேண்ட மகானுரைத்தார் மெய்யாமை
    பொய்யாம் மனமுயல் போக்கு….

    நேரிசை வெண்பாவில் சீரசைவு போனதற்கு
    நேரிசை வானநோய் மேனியின் -வாரிசே
    நானசம் பாவிதத்தை நன்குணர்ந்த ஞானிக்கு
    மானச சஞ்சார மேது….

    அஸ்திரத்தை நோவானேன் அர்ஜுனன் எய்ததற்கு
    சஸ்திர வைத்தியம் செய்வதேன் -வஸ்திர
    மேனிக்கு வந்ததே ஹானி எனக்கல்ல
    ஞானிக்(கு) ஏதுடல் நெஞ்சு….

    நோய்சிரமம் ஏற்று நொடிந்த ரமணரிடம்
    ஆசிரமம் அண்டி அறுவைக்காய் -பேச
    மயக்க மருந்தின்றி மாசை அகற்ற
    தயக்கமில்லை என்றார் தவர்….

    தொண்டையில் ஹம்ஸரும் தோளில் கிருத்துவும்
    கொண்டனர் தொண்டர்தம் கர்மத்தை -பண்டை
    வினைப்பயன் ஏது விதிவசம்தான் ஏது
    தனிப்பெரும் வாஞ்சை தனக்கு….
    பாவியென்று வந்தவரின் பூர்வஜென்ம கர்மமேற்று
    கோவிலாய் மாற்றினார் கோட்டானை -தாவிய
    அப்பாவம் புற்றாக அண்ணலிடம் சேர்ந்திட
    அப்பிரா ரப்தம் அழிவு….

    வண்டி அமர்ந்தவன் கொண்டுவந்த மூட்டையை
    மண்டை சுமத்தல் மதியீனம் -அண்டியோர்
    தேசிகன் தாளிடை தஞ்சம் புகுந்துவிடு
    நீசுக துக்க நினைப்பு….

    வாமனனாய் வந்தகட்டி விக்கிரம னாய்வளர்ந்து
    கோமணத்தர் கையில்கை கூப்பியது -சாவினை
    போவென சொன்னவர்மேல் போயின்று நாளைவந்த
    ராவணனாய் நின்றான் ரணம்….

    கள்ளுண்டோன் ஆடைமேல் கொண்ட உணர்வேயாம்
    உள்ளுண்ட சித்தன் உடலுணர்வு -புல்லுண்டு
    மண்ணுண்டு பூச்சி புழுவுண்டு போகுமிதை
    புண்ணுண்ட போதேன் பதைப்பு….

    பலியுண்ட ஆட்டுக்கு பீடம் நெருங்கியும்
    கிலியின்றி போகும் கதையாய் -வலியுண்டு
    கூறுவார் வாய்தவறிக் கூட வலிக்கிறது
    கூறாராம் ஊராருக் காய்….

    வேள்வியாய் மூலிகை வைத்தியர் பார்த்தது
    தோல்வியாய்ப் போக துவண்டாராம் -கேள்வியாய்
    கூனியவர்(கு) ஆறுதலாய் கூறினார் ‘’அன்பரே
    நானிருப்பேன் உம்மால் நிலைத்து’’….

    ஜனவரியில் அண்ணல் ஜனித்த தினத்தில்
    ஜனவரிசை கூட்டத்தில் சேர்ந்து -அனைவரையும்
    போல்யானை நட்புடன் தாள்வணங்கிச் சென்றதாம்
    பால்யத்து தோழனைப் பார்த்து….

    தேவை நமக்கு தயவு அனைத்திற்கும்
    சாவை நமக்காக சுமப்பாரோ -பாவை
    உடலிதை நால்வர் திடல்வரை சேர்ப்பர்
    இடைவெளியில் நானேன் இதற்கு….
    பண்டங்கள் நூறு பறிமாறி நாலுமிலை
    உண்டபின் ஓரம் ஒதுக்கத்தான் -பிண்டமாம்
    வாழுமிலை மேனியிது வாழ்விலை ஆனபின்
    வாழையிலை போலெறியும் வீடு….

    இல்லாத துன்பம் இருப்பதாய்த் தோன்றவைக்கும்
    பொல்லாத மாயையை போக்கிவிட்டு -எல்லாமும்
    சாட்சியாய்ப் பார்க்கின்ற சாஸ்வத மெய்யுணர்வே
    மோட்சமாம் நீயதில் மூழ்கு….

    மணியென்ன கேட்ட மகானுடனே சொன்னார்
    இனியென்ன காலக் கணக்கு( இழுப்பு) -பணியாக
    அன்பர்க்(கு) அளித்தார் அமைதியாய் த்யானத்தை
    நண்பகல் வேளைஅந் நாள்….

    ஆதவன் சாய்கின்ற அந்திப் பொழுதினில்
    மாதவம் சாய்ந்தது மஞ்சத்தில் -ஓதும்
    அருணா சலசிவத்தை அண்மையில் காண
    மரணாவஸ் தைக்கு முடிவு….

    எட்டுநாப் பத்தேழு ஏப்ரல் பதினாலில்
    விட்டுடல் ஜோதி விரைவாக -முட்டக்
    கறுத்தவிரி வானை எரித்துவிண் மீனாய்
    பரத்திடம் முக்தி பறப்பு….

    சுபம்
    முடிவு
    மங்களம்
    ——————————————————-

    Share
  • பெண்ணின் பணி – கவிதை

    –தேமொழி

     

    பெண்ணின் பணி

    Maya-Angelou-241x300

    கவிதை  மூலம் – மாயா ஆஞ்சலூ
    மொழிபெயர்ப்பு – தேமொழி

     

    என் குழந்தைகளைக் கவனிக்க வேண்டும்
    துணியின் கிழிசல்களைத் தைக்க வேண்டும்
    தரையை மெழுகி சுத்தமாக்க வேண்டும்
    சமைப்பதற்காகக் கடையில் வாங்க வேண்டும்
    பிறகு கோழியை வறுக்க வேண்டும்
    குழந்தைக்குத் துவட்டிவிட வேண்டும்
    விருந்தினருக்கு உணவளிக்க வேண்டும்
    தோட்டத்தில் களையெடுக்க வேண்டும்
    சட்டைகளுக்கு பெட்டிபோட்டு மடிக்க வேண்டும்
    சிறுவர்களுக்கு ஆடை அணிவிக்க வேண்டும்
    தகர உணவுப்பெட்டி மூடியைத் திறக்க வேண்டும்
    வீட்டை கூட்டிப் பெருக்க வேண்டும்
    நோயாளியைக் கவனிக்க வேண்டும்
    காட்டில் பருத்தி எடுக்க வேண்டும்

    சூரியனே, என் மீது உன் ஒளியை வீசிவிடு
    மழையே, என்மீது பொழிந்துவிடு
    மென்மையாக பனித்துளியாகத் தூறிவிடு
    மீண்டும் என்தலையைக் குளிர்வித்துவிடு

    புயலே, உனது கடுங் காற்றினால்
    என்னை இங்கிருந்து பறக்கவிடு
    எனக்கு ஓய்வு கிடைக்கும் வரை
    வானில் மெல்ல என்னை மிதக்கவிடு

    பனியே மென்மையாகப் பொழிந்துவிடு
    வெள்ளைப்பனியால் என்னை மூடிவிடு
    பனித்துகள் தரும் குளிர் முத்தங்களால்
    இன்றிரவு அமைதியாக என்னை உறங்கவிடு

    சூரியனே, மழையே, பரந்த வானமே
    மலையே, கடலே, இலையே, பாறையே
    தாரகைகள் ஒளிரட்டும், நிலவொளி வீசட்டும்
    நீங்கள் யாவரும்தான் எனக்குரியவர்கள்
    என்று நான் சொல்லிக் கொள்ள முடியும்

    _________________________________

    Woman Work – Poem by Maya Angelou
    _________________________________

    I’ve got the children to tend
    The clothes to mend
    The floor to mop
    The food to shop
    Then the chicken to fry
    The baby to dry
    I got company to feed
    The garden to weed
    I’ve got shirts to press
    The tots to dress
    The can to be cut
    I gotta clean up this hut
    Then see about the sick
    And the cotton to pick.

    Shine on me, sunshine
    Rain on me, rain
    Fall softly, dewdrops
    And cool my brow again.

    Storm, blow me from here
    With your fiercest wind
    Let me float across the sky
    ‘Til I can rest again.

    Fall gently, snowflakes
    Cover me with white
    Cold icy kisses and
    Let me rest tonight.

    Sun, rain, curving sky
    Mountain, oceans, leaf and stone
    Star shine, moon glow
    You’re all that I can call my own.

    _________________________________

    Share