Blog

  • கேசவ் வண்ணம் – கிரேசி எண்ணம்

     

    தாயுமானவன் திருப்புகழ்
    ——————————
    ஸ்வாமி ஓம்காராநந்தர் தாயுமானவர் சொற்பொழிவு கேட்டு விட்டு விடியவிடிய(2009ல்)எழுதியது….அன்று அடியேனுக்கு மறக்க முடியாத சிவராத்திரி…..
    ——————————————————————————————————————————————————–

    ef593329-8a40-47d7-aa97-f07488d34cfa
    ”மகப்பேறு காண மருத்துவச்சி ஆக

    அகம்புறம் தாயுமான அன்பே -மிகப்பசியாய்
    பிள்ளைக் கறியுண்ட பித்தா உனதுலீலைக்(கு)
    எல்லைதனை யாரறிவா ரே”….

    ”நோயுமாவான் சாய்ந்திடும் பாயுமாவான் மாற்றிடும்
    மாயமாவான் புத்தொளிர் காயமாவான் -நாயன்மார்
    நேயமாவான் வெவ்வினையால் காயமானால் காப்பாற்ற
    தாயுமாவான் தந்தை தவித்து”….

    ”வேதங்கள் அர்ச்சிக்கும் பாதாம் புயம்பற்ற
    போதா உனக்கில்லை பாழ்மனமே -தீதில்
    இராப்பகல் தோறும் இருந்தென்ன கண்டாய்
    சிராப்பள்ளி ஈசனைச் சேரு”….
    ————————————————————————-

    சங்கர சங்கர சம்போ சிவ சங்கர சங்கர சங்கர சம்போ மெட்டு….ஸ்வாமிஜி பாடியதைக் கேட்டு….

    சாதாரணன் போல வந்தான் -ஏதும்
    ஓதாமல் சில நேரம் சும்மா இருந்தான்
    வேதா ரண்யம் ஊர் என்றான் -இதில்
    சூதில்லை அம்மகாதேவன் தான் என்றான்….(1)

    உண்டென்று ஒன்றுண்டு கேளாய் -அதை
    உண்டு நான் உமிழ்கிறேன் ஒவ்வொரு நாளாய்
    விண்டவர் கண்டிலர் கண்டாய் -அதைக்
    கண்டு நீ கொண்டாட காட்சிகள் உண்டாய்….(2)

    பதி பசு பாசங்கள் மூன்றும் -முறையே
    விதி மதி வினை என்ற விவகாரமாகும்
    நிதி உந்தன் நெஞ்சிலே காண்பாய் -அது
    புதிதல்ல மணம்வீசும் பூத்த மலரான்மா….(3)

    புதிரான பூலோகக் கல்லை -நீ
    பொய்யென்றும் மெய்யென்றும் பேரிடத் தொல்லை
    அதுவென்றும் இதுவென்றும் இல்லை -சுத்த
    அதுவே இதுவாக ஆனந்த எல்லை….(4)

    பண்டைநாள் வந்ததோர் பூச்சி -அது
    பலவாய்ப் பெருகிடப் பாரென்று ஆச்சி
    கொண்டதோர் கோலமே காட்சி -அதை
    உண்டில்லை கண்டிடும் உறுதி ஆராய்ச்சி….(5)

    செத்ததோர் பாம்பிந்த தேகம் -சுக
    துக்கமிதில் காண்பது செல்லாத லாபம்
    அத்தைக்கு மீசைமேல் மோகம் -அத்தை
    சித்தப்பன் பார்த்திட சிரைத்திடும் யோகம்….(6)

    வேடனார் வேடத்தில் இறைவன் -அவனே
    விருந்தாகி நீயுண்ண வலைவீசும் இரைவன்
    பாடெல்லாம் அவனென்று பறைவாய் -ஜீவ
    பாவத்தில் பசுபாசம் மெழுகாகக் கரைவாய்….(7)

    பார்முதல் பூதம்நீ அல்ல -பஞ்ச
    புலன்களை ஆண்டிட முயலாதே வெல்ல
    யாரந்த நானென்று உள்ளே -உன்னிப்
    பாரவன் ஆன்மனாய் ஆகுவான் மெல்ல….(8)

    அன்பே சிவமென்ற ஜோதி -அதன்
    ஆதார சக்தியே அருளென்ற பாதி
    பண்பான பக்தர்கள் மீதி -இந்தப்
    பாங்குணர்ந் தோற்க்கில்லை பூலோக வ்யாதி….(9)
    போக்கத்த சொப்பனம் நனவு -ஆழ்ந்த
    தூக்கத்தில் நிற்பவன் யாரென்று வினவு
    சாக்கிதால் சஞ்சலம் தீரும் -ரமண
    வாக்கிதை மேற்கொள்ள வழிவந்து சேரும்….(10)

    இறப்பதும் பிறப்பதும் யாரு -இங்கு
    இருக்கையில் ஆராய்ந்து யோசித்துப் பாரு
    உறக்கமே இறப்பென்ற மாயை -உணர
    உறங்காமல் உறங்கிடப் போடான்மப் பாயை….(11)

    நம்பிக்கை அறிவாக நீளும் -அவ
    நம்பிக்கை அறியாமை அதுகுப்பைக் கூளம்
    எம்பிக்கை போடட்டும் தாளம் -ஆன்ம
    ஏகாந்த வாசியின் ஏற்றமே மூலம்….(12)

    இல்லாத இகம்சொப்ப னங்கள் -அதில்
    இன்பத்தைத் துய்ப்போர்கள் இருள்பெற்ற மாக்கள்
    உள்ளது ஓராயி ரங்கள் -உதறி
    உணர்ந்திடு உணர்வென்னும் உச்சிப் பனங்கள்….(13)

    சும்மா இருந்திடல் சுகமே -என்று
    சொன்னார்கள் முன்னோர்கள் சிவமாகு அகமே
    நம்மால் இயன்றது நகமே -அது
    நாளாக நாளாக நம்பிக்கை முகமே….(14)

    துன்மார்கப் பாதையில் துன்பம் -அந்த
    சன்மார்கமே சச்சிதா னந்த இன்பம்
    தென்மார்கம் பார்த்திடும் அன்பன் -மவுன
    தத்துவம் தோள்கொடுத் தேவுதவும் நண்பன்….(15)

    ஓயாது துழைத்திடும் பெண்மை -சக்தி
    ஓங்கார நாதத்தின் ரீங்காரத் தன்மை
    தாயாகி அன்பர்க்கு நன்மை -நல்கும்
    தத்துவம் அவளந்த பித்தர்க்கும் அம்மை….(16)

    போகாத ஊருக்கு போக -இங்கு
    சாகாது சாகிறோம் ஜனனித்து நோக
    தேகான்ம பாவம் முடிக்க -சிவ
    தேசிகன் சரணார விந்தம் பிடிக்க….(17)

    செல்லாதா காசிந்த மேனி -இது
    இல்லாத போதுமி ருப்பவன் ஞானி
    கல்லாலின் கீழுற்ற கோலம் -அது
    சொல்லாமல் காட்டிடும் சித்தாந்த ஜாலம்….(18)

    பல்லாண்டு பல்லாண்டு வாழி -அந்த
    பரசிவம் ஒன்றுதான் பவுருஷம் தோழி
    உள்ளாண்ட போதவன் போதம் -வெளி
    உலகத்தில் விளையாட வேடிக்கை பூதம்….(19)

    சூலாயுதம் கொண்ட கையை -சக்தி
    வேலாயுதன் வந்த விழிகர்ப்பப் பையை
    ஆலால கண்டத்து மெய்யை -எண்ண
    அதுநெஞ்சில் ஊற்றிடும் ஆனந்த நெய்யை….(20)

    பொன்னார் மேனியன் இடையில் -வரிப்
    புலித்தோல் பூண்டவன் ஏறுவான் விடையில்
    உன்னார்வம் அவனெதிர் பார்ப்பான் -கொள்ள
    உண்ணா முலையோடு வந்தருள் சேர்ப்பான்….(21)

    சங்கர சங்கர சம்போ சிவ சங்கர சங்கர சங்கர சம்போ….
    ——————————————————————————-

    Share
  • இன்னம்பூரான் பக்கம்: III:1 இந்திய தணிக்கைத்துறையும், நானும்[1]

    இன்னம்பூரான்

    a1

    150 வருடங்களுக்கு மேலாக தனது பாரம்பரியத்தையும், சுயாதீனத்தையும், அடை காக்கும் பெட்டையை போல பொத்தி, பொத்தி பாதுகாக்கும் இந்திய தணிக்கைத்துறை, எனக்கு செவிலித்தாய். அதன் வெண்குடை எனக்கு நிழல் தந்த வேப்பமரம். உலகெங்கும், யதேச்சாதிகாரம் ஆளும் நாடுகளில் கூட தணிக்கை அறிக்கைகள் மீது தனி கவனம் உண்டு. அதை எப்படி பயன்படுத்திக்கொள்கிறார்கள் என்பதில் மலைக்கும், மடுவுக்கும் உள்ள தாரதம்யம் இருப்பதில் வியப்பு ஒன்றும் இல்லை. இந்தியா போன்ற குடியரசுகளில் கூட ஆளும் கட்சிகள், தணிக்கை நிரூபித்த குற்றச்சாட்டுகளை, உதாசீனம் செய்வதை நான் அறுபது ஆண்டுகளுக்கு மேல் கண்டு வருகிறேன். இதே வல்லமை இதழில் என் அனுபவங்களை ‘தணிக்கைத்துறையின் தணியா வேகம்’ என்ற தொடரிலும், 2ஜி ஆடிட் ரிப்போர்ட், பொய்யை மெய் என்று மொய் எழுதும் ரசவாதம், கான்ட்ராக்ட்களை அளிப்பதில் மோசடி, ஆகியவற்றை ‘தணிக்கை என்றதொரு முட்டுக்கட்டை’ என்ற தொடரிலும் எழுதி வந்தேன். அவற்றின் பின்னணி, வாக்களிக்கும் குடிமக்கள் பிரதிநிதிகளை தேர்ந்தெடுக்கும் போது, தணிக்கைத்துறையின் பரிந்துரைகளை நன்கு அறிந்து செயல்படவேண்டும் என்ற ஆர்வம். வாசகர்கள் குறைய குறைய, அந்த ஆர்வம் மங்கியது. என்னை கைது செய்ய வந்த அனுபவத்தைக் கூட, அரைகுறையாக, நட்டாற்றில் விட்டு விட்டேன்.

    விட்ட குறையை நிறைவு செய்ய நான் விரும்புவதற்கு மூன்று காரணங்கள் உளன.
    தேர்தல் வருகிறது பல மாநிலங்களில். சிலர் இந்த தொடரால் பயன் பெறக்கூடும்.

    நன்கு படித்து பல துறைகளில் திறனுடன் பணி புரிந்த நண்பர்கள் வினவும் வினாக்கள், தணிக்கைத்துறையின் சுயரூபத்தை, அவர்கள் காணவில்லை என்ற தோற்றத்தை உருவாக்குகின்றன: அவற்றில் சில. ஏன் இந்த இந்த அட்டூழியத்தை ஆடிட் ஒழிக்க வில்லை? ஆடிட் ரிப்போர்ட்டை ஏன் பொது மன்றத்தில் வைப்பதில்லை? அரசு ஆணையிட்டால் ஆடிட் ஆடித்தானே ஆகவேண்டும்! எல்லாம் வேஸ்ட் ஸார்!!!
    நான் எழுதும் தளங்களில் புதிய இளைய தலைமுறை வரவுகள்.

    இன்றைய தணிக்கை பிரகடன ஆவணத்துடன், பிராரம்பம் தொடங்குகிறது.

    *கர்நாடகா மாநிலத்து வரவு ஆவணங்களை ஆய்வு செய்ததின் வெளிப்பாடு:
    அனுமதியில்லாமல் வெட்டி எடுத்து அனுப்பிவித்த தாதுப்பொருள் [மினரல்]: 79 லக்ஷம் டன்;
    நஷ்டம்: 118.75 கோடி ரூபாய்;
    17 சாவடிகளில் 4ல் மட்டும் கணினி;
    52 ஆர்.டி.ஓ. அலுவலகங்கள் வாங்க விட்டுப்போன வரி: ரூ. 309.81 கோடி;
    ஆடிட் விரட்டி, விரட்டி கண்டு பிடித்த வரி ஏமாற்றல் அங்கே: ரூ.302.19 கோடி;
    22,002 ஊர்திகள் வரி ஏமாற்றியதில் நஷ்டம்: ரூ. 45.31 கோடி.
    13.71 லக்ஷம் வண்டிகளிடமிருந்து வாங்க விட்டுப்போன பசுமை வரி: 52 கோடி ரூபாய்க்கு மேல்.

    நான் எடுத்துக்காட்டியவை ஒரு சிறு துளி. எல்லா செலவுகளையும் ஆடிட் செய்ய ஒரு பெரிய படையே வேண்டும். இவை செலெக்ட் டெஸ்ட் ஆடிட் மூலம் கிடைத்த அவலங்கள். ஆடிட் ரிப்போர்ட்டை முழுமையாக படிக்க விரும்பினால், அதையும் இணைக்க முடியும்.

    சுருங்கச்சொல்லின், தணிக்கை பற்றிய விழிப்புணர்ச்சி ஏற்பட்டாலே, ஊழல் மன்னர்கள் நடுங்கிச்சாவார்கள். பார்க்கலாம்.
    -#-
    சித்திரத்துக்கு நன்றி:http://euromaidanpress.com/wp-content/uploads/2014/11/auditor.jpg

    ஆவணத்துக்கு நன்றி: ஹிந்து இதழ்: மார்ச் 5 , 2016.

    இன்னம்பூரான்

    Share
  • படக்கவிதைப் போட்டி .. (54)

    பவள சங்கரி

    அன்பிற்கினிய நண்பர்களே!

    வணக்கம். கண்ணையும், கருத்தையும் கவரும் படமொன்றைக் கண்டவுடன் உங்கள் உள்ளத்தில் கவிதை ஊற்றெடுக்கும் திறமை கொண்டவரா நீங்கள்?

    10578393_970813379639528_1917690085_n
    67945931@N04_rராஜ எடுத்த இந்தப் படத்திற்கு ஒரு கவிதை எழுதுங்கள். இதனை நம் வல்லமை ஃப்ளிக்கர் குழுமத்தின் பொறுப்பு ஆசிரியர் திருமதி சாந்தி மாரியப்பன் தேர்ந்தெடுத்து அளித்துள்ளார்.

    இந்த ஒளிப்படத்திற்கு ஏற்ற கவிதையை நல்ல தலைப்புடன் பின்னூட்டமாக இடலாம். ஒருவரே எத்தனை கவிதைகள் வேண்டுமானாலும் எழுதலாம். வரும் சனிக்கிழமை (12.03.2016) வரை உங்கள் கவிதைகளை உள்ளிடலாம். அவற்றில் சிறந்த கவிதையை நம் வல்லமை இதழின் ஆசிரியர் குழு உறுப்பினர், தமிழ் இலக்கிய ஆராய்ச்சியாளர் திருமதி மேகலா தேர்வு செய்வார். ஒவ்வொரு வாரமும் சிறந்த கவிஞர் ஒருவர் தேர்ந்தெடுக்கப்படுவார். ஒருவரே பல முறை பங்கு பெறலாம். இவ்வாய்ப்பு சிறந்த கவிஞராகத் தேர்ந்தெடுக்கப்படும் கவிஞர்களுக்கும் உண்டு. 12 மாதமும் தேர்வுபெறும் ஒளிப்படக் கலைஞர் / கவிஞர்களிலிருந்து ஆண்டின் சிறந்த கலைஞரும், கவிஞரும் தேர்வு பெறுவார்கள். ஒளிப்படத்திலிருந்து தாக்கமும் தூண்டுதலும் பெற்று எழும் அசல் படைப்புகளை ஊக்குவிப்பதே இதன் நோக்கம். இது, கவிஞர்களையும் கலைஞர்களையும் கண்டறிந்து ஊக்குவிப்பதற்கான அடையாளப் போட்டி; வெற்றி பெறுபவர்களுக்குப் பரிசளிப்பு இருக்காது; பாராட்டு மட்டுமே உண்டு. ஆர்வமுள்ளவர்களைப் பங்கு பெற அழைக்கிறோம்.

    புதுச்சேரி மாநிலத்தின் காரைக்காலில் பிறந்த திருமதி மேகலா இராமமூர்த்தி கணிப்பொறி (MCA) மற்றும் தமிழில் (MA) முதுகலைப் பட்டம் பெற்றவர். அமெரிக்க தமிழ்ச்சங்கப் பேரவையின் (FeTNA) 2008, 2009 ம் ஆண்டுகளில் (ஆர்லாண்டோ & அட்லாண்டா) கவியரங்கம், இலக்கிய வினாடி வினா நிகழ்ச்சிகளில் பங்கேற்று பாராட்டுகளும், பரிசுகளும் பெற்றுள்ளவர். புறநானூறு, குறுந்தொகைப் பாடல்களில் அதிக நாட்டமும், இலக்கியக் கூட்டங்களில் சுவைபட பேசுவதிலும் வல்லமை பெற்றவர். இவருடைய வலைப்பூ – மணிமிடைபவளம்

    Share
  • அருங்காட்சியகம் ஓர் அறிவுக் கருவூலம் – 57

    கைரோ அருங்காட்சியகம், எகிப்து

    முனைவர்.சுபாஷிணி

    kairo

    கைரோ அருங்காட்சியகம்

    என் அனுபவத்தில் இதுவரை ஏறக்குறைய நானூறுக்கும் மேற்பட்ட அருங்காட்சியகங்களுக்குச் சென்றிருப்பேன். அவை அனைத்திலும் நினைத்த மாத்திரத்தில் ஒரு சில அருங்காட்சியகங்கள் மனக்கண்ணில் வந்து நிற்கும். அதனை வரிசைப்படுத்தினால் அவ்வரிசையில் முதலில் இடம் பெறுவதாக அமைவது எகிப்தில் இருக்கும் கைரோ அருங்காட்சியகம் தான்.

    இந்த அருங்காட்சியகத்திற்குச் செல்வதற்கு நான் சற்று கூடுதலான பிரயத்தனம் செய்திருக்கின்றேன் என்று குறிப்பிட்டுத்தான் ஆகவேண்டும். 2009ஆம் ஆண்டில் நைல் நதியில் சூடான் வரை பயணித்து விட்டு ஹூர்காடாவில் நான் சுற்றுப்பயணம் பதிவு செய்திருந்த நிறுவனம் பயணத்தை தற்காலிகமாக முடித்திருந்தனர். ஹூர்காடா பகுதியில் செங்கடல் ஓரத்தில் ஓய்வெடுக்கும் வகையில் ஐந்து நாட்களை ஒதுக்கியிருந்தனர். எங்கள் பயணக்குழுவில் வந்திருந்த ஒரு சிலராக சேர்ந்து மூன்று நாட்களுக்கு கைரோ சென்று வருவது என முடிவெடுத்தோம். ஹூர்காடாவிலிருந்து இரவு நேர பஸ் எடுத்தால் ஏழு மணி நேரப்பயணத்தில் எகிப்தின் தலைநகரான கைரோவை அடைந்து விடலாம். அப்படி ஒரு ஏற்பாட்டை செய்து கொண்டு எட்டு பேர் கொண்ட குழுவினர் ஹூர்காடா நோக்கி பயணப்பட்டோம்.

    கைரோவில் இருந்த மூன்று நாட்கள் குறிப்பிடத்தக்க இடங்களைச் சுற்றிப்பார்த்தோம் என்றாலும் அதில் மனதில் வெகுவாக கவர்ந்தவை பிரமிட்களும் கைரோ அருங்காட்சியகமும் தான்.

    ​கைரோ அருங்காட்சியகம்

    அதில் கைரோ தேசிய அருங்காட்சியகத்தில் எகிப்திய நாகரிகத்தின் மையப் புள்ளிகளாக இருந்த பண்டைய மன்னர்கள் அவர்கள் துணைவியர் ஆகியோர் உடல்கள் பாடம் செய்யப்பட்டு மம்மிக்களாக காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளமையை பார்வையிட்டு வந்தது மனதில் மறக்க முடியாத வகையில் இன்றும் பதிந்திருக்கின்றது.

    இளமை காலத்தில் பள்ளியில் படித்த காலத்திலிருந்தே எகிப்திய மம்மிக்களைப்பற்றி கேள்விப்பட்டு அவற்றை நேரில் பார்ப்போமா என்று யோசித்ததுண்டு. அந்த வாய்ப்பு நிஜத்தில் எனக்குக் கிட்டியபோது அடைந்த மகிழ்ச்சிக்கு எல்லையில்லை என்பேன். அது என்ன செத்த பிணங்களான மம்மிக்களை பார்ப்பதில் ஒரு ஆர்வம் என சிலர் நினைக்கலாம். அவை வெறும் செத்த பிணங்கள் என்று நாம் கூறிவிட முடியாது. மாறாக அவை இன்றைக்கு 5000 ஆண்டு பழமையான மனிதர்களை நம்முன்னே கொண்டு வந்து வைக்கும் ஒரு அற்புத அனுபவம். இந்த அற்புத அனுபவத்தை நேரில் உணரும் போது உண்மையில் நாம் மெய் சிலிர்க்காமல் இருக்கமுடியாது. இல்லையென்றால் எதற்காக மில்லியன் கணக்கில் எகிப்தின் இந்த கைரோ அருங்காட்சியகத்திற்கு ஒவ்வொரு வருடமும் பார்வையாளர்கள் வந்து செல்கின்றனர் என்ற கேள்வி எழும் தானே!

    kairo1

    ​மாமன்னன் முதலாம் செட்டியின் பராக்கிரமங்களைக் கூறும் கர்னாக் கோயில் வாசலில்

    கைரோ அருங்காட்சியகத்தில் மம்மி சேகரிப்புக்களுக்காக இரண்டு அறைகள் ஒதுக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு அறையிலும் தலா 12 மம்மிக்கள் என காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன. அதில் முதல் அறையில் பண்டைய எகிப்தின் பாரோக்கள் என அழைக்கப்படும் பேரரசர்களின் மம்மிக்கள் காட்சிக்கு வைக்கப்பட்டிருக்கின்றன. இரண்டாவது அறையில் மேலும் சில பாரோக்களுடன் அவர்களது மனைவி மற்றும் பண்டைய எகிப்தின் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த சிலரின் மம்மிக்கள் வைக்கப்பட்டுள்ளன. நூல்களில் படித்து பாரோக்களின் பராக்கிரமத்தை அறிந்த நமக்கு அவர்களின் உடலை நேரில் பார்க்கின்றோம் என்பது திகைக்க வைக்கும் ஒரு நிகழ்வுதானே. அதிலும் என்னை ஈர்த்தது மன்னன் 2ம் ராம்ஸளின் பாடம்செய்யப்பட்ட மம்மி உடல். இவர் பண்டைய எகிப்தை 67 ஆண்டுகள் ஆண்ட பேரரசர். அடுத்ததாக மன்னன் முதலாம் ராம்ஸசின் மகனும் மன்னன் 2ம் ராம்ஸசின் தந்தையுமான முதலாம் செட்டியின் மம்மியைக் குறிப்பிடுவேன்.

    ஒன்றை கவனித்தீர்களா?
    இந்த மன்னர்களின் பெயர்கள் நமக்கு பரிச்சயமான பெயர்கள் போல் தானே ஒலிக்கின்றன? எகிப்து தொடர்பான பலதரப்பட்ட ஆய்வுகள் தென்னிந்திய மானுடவியல் ஆய்வுகள் செய்வோருக்கு மிகச் சுவாரசியமான தகவல்களை நிச்சயம் வழங்கும் என்பதில் எனக்குச் சந்தேகமில்லை.

    சரி. யார் இந்த இரண்டாம் ராம்ஸஸ்? இவரை ஏன் முக்கியமாக அதிலும் முதலாம் ராம்ஸஸை விட முக்கியமாக இங்கே நான் குறிப்பிட்டுச் சொல்கின்றேன் எனக் கேள்வி எழலாம். 2ம் ராம்ஸஸைப் பற்றிச் சொல்கின்றேன்.

    kairo2

    ​மாமன்னன் ராம்ஸஸின் பதப்படுத்தப்பட்ட மம்மி

    பேரரசன் 2ம் ராம்ஸஸ் கி.மு 1279 முதல் கி.மு 1213 வரை பரந்த எகிப்தை ஆண்ட மாமன்னன். கீழே இன்றைய சூடான் மேற்கே சிரியா என மிக விரிவான நிலப்பகுதி இவரது ஆட்சிக்குட்பட்டிருந்தது. மிக இளம்வயதிலேயே இவரது தந்தையார் முதலாம் செட்டி இவரை இளவரசராக நியமித்திருந்தார் என்பதுவும் தொடர்ச்சியாக தமது பதின்ம வயதினிலேயே ஆட்சிப்பொறுப்பை ஏற்றுக் கொண்டார் என்றும் புக் ஆஃப் டெத் நூலில் உள்ள குறிப்புக்களிலுருந்து அறிகின்றோம். இவர் நீண்ட ஆண்டுகாலம் ஆட்சி செய்து தமது 90 அல்லது 91 வயதில் உயிர் நீத்தார். தமது ஆட்சிப்பொறுப்பின் காலத்தில் நைல் நதிக்கரையில் எகிப்திய அரசின் பிரமாண்டமான தலைநகரமான பை-ராம்ஸஸை உருவாக்கினார். இவர் இறந்த சமயத்தில் இவரது உடல் மம்மியாக பாடம் செய்யப்பட்டு மன்னர்கள் பள்ளத்தாக்கில் (Valley of King) வைக்கப்பட்டிருந்தது. தற்சமயம் அது கைரோ அருங்காட்சியகத்தில் உள்ளது. 2ம் ராம்ஸஸ் கட்டிய கட்டுமானங்கள் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்தவை. பல கோயில்களை கட்டிய புகழ் இவருக்கிருந்தாலும் சூடானில் நைல் நதிக்கரையோரத்தில் இன்றைக்கு 4000 ஆண்டுகள் வாக்கில் 2ம் ராம்ஸஸ் அமைத்த அபு சிம்பெல் ஆலயம் ஒரு மைல்கல். இன்று அது எகிப்தின் எல்லை பகுதிக்கு யுனெஸ்கோ மற்றும் ஏனைய சில ஐரோப்பிய நாடுகளின் உதவியோடு கொண்டு வரப்பட்டு அழகாக அமைக்கப்பட்டிருக்கின்றது.

    kairo3

    ​அபு சிம்பல் ஆலயம்

    2ம் ராம்ஸஸின் அதிகாரப்பூர்வ மனைவி நெஃபடாரி மிக புகழ்மிக்க ஒரு அரச ஆளுமையாக கருதப்பட்டவர். எகிப்தில் ஜெர்மானிய தொல்லியல் துறை நிகழ்த்திய ஒரு அகழ்வாய்வில் கண்டெடுக்கப்பட்ட இவரது தங்கத்தினால் ஆன கழுத்து வரைக்குமான உருவச்சிலை ஜெர்மனியில் பெர்லின் நகரில் இருக்கும் புதிய அருங்காட்சியகத்தில் காட்சிக்கு உள்ளது. எகிப்து இச்சிலையை ஓரிரு முறை கேட்டும் கூட இச்சிலை ஜெர்மனியினால் திருப்பி வழங்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்க ஒன்று. அபு சிம்பல் ஆலயத்தில் பேரரசன் ராம்ஸஸின் உருவச் சிலை போலவே நெஃபட்டாரியின் உருவச் சிலையும் இருக்கின்றது. மன்னன் 2ம் ராம்ஸஸ் ஆணையிட்டு தன் மகாராணிக்காக கட்டிய ஆலயத்தின் வாசலில் நெஃபட்டாரியின் உருவச் சிலையையும் காணலாம்.

    kairo4

    ​மாமன்னன் முதலாம் செட்டியின் உருவப்படம்

    பேரரசன் 2ம் ராம்ஸஸின் தந்தை முதலாம் செட்டி ஏறக்குறைய பதினொரு அல்லது பதினைந்து ஆண்டுகள் மட்டுமே ஆட்சிப் பொறுப்பில் இருந்தவர் என்றாலும் இவர் காலத்தில் குறிப்பிடத்தக்க அரசியல் மாற்றங்கள் நிகழ்ந்திருக்கின்றன. எகிப்திய மொழியில் இவரது பெயரான செட்டி என்பது சேத் எனும் கடவுளின் பெயரை ஒத்து அமைவது. நைல் நதிக்கரையோர ஆலயங்களில் ஒன்றான கார்னாக் கோயிலில் முதலாம் செட்டியின் பராக்கிரமங்களை விளக்கும் ஹீரோக்ளிப்ஸ் ஆவணங்கள் சுவற்றில் வரிசையாகப் பதிக்கப்பட்டிருக்கின்றன. அவைமட்டுமன்றி மன்னர்கள் பள்ளத்தாக்கில் இவரது சமாதி இருக்கும் நீண்ட அறையில் இவரது ஆட்சிக் காலத்து வரலாற்றுச் செய்திகள் சுவர் முழுக்க ஹீரோக்ளிப்ஸ் குறியீடுகளால் வழங்கப்பட்டுள்ளன. மன்னர் முதலாம் செட்டியின் சமாதியை புதையுண்ட மணல் பகுதியிலிருந்து முதலில் கண்டெடுத்தவர் ஆஸ்திரியாவில் பிறந்த இத்தாலிய பூர்வீகத்தைக் கொண்ட Giovanni Battista Belzoni என்ற உலகப் புகழ்பெற்ற தொல்லியல் ஆய்வறிஞர். இப்பொழுது மாமன்னன் முதலாம் செட்டியின் மம்மியாக்கப்பட்ட உடல் கைரோ அருங்காட்சியகத்தில் உள்ளது.

    இந்த மம்மிக்களைப் பார்க்க கைரோ அருங்காட்சியகத்தினுள்ளே செல்வோம்.

    தொடரும்…

    Share
  • உன்னையறிந்தால் …… (45)

    நிர்மலா ராகவன்

    தற்காலத்தில் பண்டையகாலக் கருத்துகள்

    உனையறிந்தால்12

    கேள்வி: எக்காலத்திலோ தக்கதென சான்றோர் சொல்லிவிட்டுப்போன கருத்துகள் தற்காலத்துக்கும் உகந்தைவைதானா?

    விளக்கம்:

    பழையன கழிதலும் புதியன புகுதலும் மனித வாழ்க்கையின் தன்மை. இதை ஏற்காது, நம்மில் பலர் பழமைவாதிகளாக இருப்பதில்தான் பெருமை கொள்வார்கள். மூதாதையர் காலத்து நடைமுறைகளையும், பழமொழிகளையும் மேற்கோள் காட்டி, காலத்துக்கு ஒவ்வாத தம் நடத்தையை நியாயப்படுத்திக்கொள்ள முனைவார்கள். காலம் அதேபோல் இன்றும் இல்லையே!

    முன்னேற்றம் என்பது நல்லதொரு மாற்றத்தை நாமே ஏற்படுத்திக்கொள்வது. முன்னேற்றம் என்பதன் பொருளே மனிதனுக்கு மனிதன் மாறுபடும் — பணக்காரராக ஆவது, புகழுடன் விளங்குவது, கல்வியில் சிறப்பது இப்படி.

    `போதுமென்ற மனமே பொன்செய்யும் மருந்து’ என்பதைச் சிலர் வலியுறுத்த, பலரும் கைப்பிடித்து வருகின்றனர். நமது வாழ்க்கைத்தரம் ஒரே நிலையில் இருக்கவேண்டும். மேன்மேலும் புகழ், பொருளுக்கெல்லாம் ஆசைப்படக்கூடாது என்று மனதைத் தேற்றிக்கொள்வார்கள் இவர்கள். புதிய பாதைகளில் என்னென்ன இடர்பாடுகள் எதிர்ப்படுமோ என்ற பயமும் இதற்கு அடிப்படைக் காரணமாக இருக்கலாம்.

    வயதில் மூத்தவர்கள் சொல்வதை அப்படியே கேட்டு நடந்து, `ஏன் நான் மட்டும் முன்னேற்றமே அடையாமல், பின்தங்கியே இருக்கிறேன்?’ என்று வாடுபவர்கள் பலர்.

    சிறு வயதில், பெற்றோர் சொல்வதைக் கேட்க வேண்டியதுதான். ஆனால், அது ஒருவருடைய இயற்கையான திறன்களை மழுங்கடித்து, மனநலனையே பாதிக்கும் அளவுக்கு இருந்தால், எதற்குப் பொறுத்துப்போவது?

    கதை: ஒரு பையனுக்குச் சிறுவயது முதலே சித்திரம் வரைவதில்தான் ஆர்வம். அதிகம் பேசாது, ஓயாது வரைவான். பார்ப்பதையெல்லாம் மிகக் குறுகிய காலத்தில் அப்படியே வரையும் திறன் அவனுக்கு வாய்த்திருந்தது.

    அவனுடைய தந்தையைப் பொறுத்தவரை அவன் நேரத்தைப் பள்ளிப்படிப்பில் மட்டும்தான் செலவழிக்க வேண்டும். மற்ற செயல்கள் எல்லாம் வீண். அவன் காகிதத்தையும், பென்சிலையும் எடுத்தாலே இரைவார். பையன் பயந்து, பீரோவுக்குப் பின்னால் ஒளிந்து வரைய ஆரம்பித்தான். கண் பார்வை கெட்டது. அப்பா வெளியில் போனால் தைரியமாக வரைவான். அவர் வீட்டுக்குள் நுழைவதைப் பார்த்து குடும்பத்தினர் எல்லாரும், `அப்பா!’ என்று அடக்கிய குரலில் எச்சரிப்பார்கள். உடனே ஒளிந்து வரைவது வழக்கமாகப் போயிற்று.

    தாயோ, `பருவ வயதில் பெண்களையே வரைகிறானே!’ என்று கவலைப்பட்டு அரற்றினார்களாம். `அது தவறோ?’ என்று, இயற்கையாக எழுந்த கற்பனையை அதன்பின் விலக்க, `பெண்கள்’ என்றாலே குழப்பம்தான் எழ ஆரம்பித்தது.

    தனக்கு மிகவும் பிடித்த காரியத்தைச் செய்ய ஏதோ தீய பழக்கத்தில் ஈடுபட்டதைப்போல அவன் மறைத்துச் செய்தது அவனுடைய தன்னம்பிக்கையைக் குலைத்து, பிற்காலத்தில் இல்லற வாழ்வையே நரகமாக்கியது.

    `நான் அப்படித்தான் வரைவேன்!’ என்று நீங்கள் உங்கள் அப்பாவை எதிர்த்திருக்க வேண்டும்,’ என்றேன். காலங்கடந்து, வருத்தத்துடன் தலையை அசைத்தார் அந்த மனிதர். இயற்கையாக அவருக்கு அமைந்திருந்த திறனில் உலகப்புகழ் பெற்றிருக்க முடியும். அது தெரிந்திருந்தும், தந்தைக்காக விட்டுக்கொடுத்தது எவ்வளவு கொடுமை!

    கலைஞர்கள் மென்மையான குணம் படைத்தவர்கள். அவர்கள் மனதை நொறுக்குவது பிறருக்குப் பலத்தை அளிப்பதுபோல் இருக்கும். அதனால் முனைந்து செய்வார்கள்.

    எழுதுவதும் அப்படித்தான். ஆண்கள் என்ன எழுதினாலும், எவ்வளவு ஆபாசமாக எழுதினாலும் வாசகர்கள் பொறுத்துப் போகிறார்கள். ஆனால், ஒரு பெண் கதாநாயகனை வர்ணித்தோ, ஆண்-பெண் உறவைப்பற்றி விரிவாக எழுதினாலோ சர்ச்சைக்குள்ளாகிறாள். கற்பனை என்பது இருபாலருக்கும் பொது. இதில் என்ன ஆண், பெண் வேறுபாடு?

    பெண்களுக்கு மொழிவன்மை ஆண்களைவிட அதிகம் என்கிறது உளவியல். ஆண்குழந்தைகளோ, கைகளால் செய்வது எதையும் பெண்களைவிடச் சிறப்பாகச் செய்வார்கள். இது புரியாது, பொறாமையாலோ, இல்லை, `எங்கே நம்மை மிஞ்சிவிடுவாளோ!’ என்ற பயத்தாலோ எதிர்க்கும் ஆண்களின் கண்டனத்தைப் பொருட்படுத்தாது எழுதும் பெண்கள்தாம் தொடர்ந்து எழுதமுடியும்.

    நான் எழுத ஆரம்பித்தபோது, கற்பழிப்பைப்பற்றி ஒரு கதை எழுதி, `எங்கம்மா இதை அனுப்ப விடமாட்டா. நீங்க என்ன சொல்றேள்?’ என்று என் கணவரின் ஒப்புதலைக் கேட்டேன். `கற்பனைதானே? அதனால் என்ன!’ என்றுவிட்டார். அதைப் பிரசுரித்த பத்திரிகை ஆசிரியர், `இது கற்பனைக்கதைதான். உண்மைச் சம்பவமில்லை’ என்று அடியில் ஒரு குறிப்பு எழுதப்போக, பலர் என் கணவரை விசாரித்தார்களாம், `அது என்ன ஸார், அடியிலே அப்படி எழுதியிருக்காங்க?’ என்று!
    இறப்பைப்பற்றியும்தான் எவ்வளவோ எழுதியிருக்கிறேன். அது என்னவோ, நான் பல தடவை செத்துப்பிழைத்தவள் என்று எவரும் நினைப்பதில்லை!

    ஒருமுறை, `திருக்குறளில் பெண்கள்’ என்ற தலைப்பில் உரையாற்ற என்னை அழைத்திருந்தார்கள்.

    பேசி முடித்ததும், ஒருவர் எழுந்து, `திருவள்ளுவர் பெண்களின் பேச்சைக் கேட்டு ஆண்கள் நடக்கக்கூடாது’ என்று சொல்லியிருக்கிறார். அதை நீங்கள் கவனிக்க வேண்டும்!’ என்று விண்ணப்பித்தார்.

    `அந்தக் காலத்தில் பெண்கள் கல்வியறிவு அற்றவர்களாக இருக்கவேண்டிய கட்டாயம். வெளியுலகைப்பற்றி அதிகம் தெரியாமலிருந்திருக்கலாம். இப்போதும் அப்படியா?’ என்று நான் பதிலளித்தபோது, சற்றும் எதிர்பாராவிதமாக பெண்கள் தலைக்குமேல் கையை உயர்த்தித் தட்டி, தம் ஆதரவைத் தெரிவித்தார்கள்!

    நல்ல வேளை, `பெண்ணுக்குப் படிப்பு எதற்கு?’ என்ற காலம் போய்விட்டது.

    உயர்கல்வி பெற்று, உத்தியோகமும் பார்க்கும் ஒரு பெண்ணைப் பார்ப்போம். வாழ்வில் முன்னேற அவசியமானது கல்வி. ஆணோ, பெண்ணோ, தன்னை நாடுபவர்களுக்கு சுய நம்பிக்கையையும், சொந்தக்காலில் நிற்கும் துணிவையும் அளிப்பது கல்விதான். களவாடவோ, அழிக்கவோ முடியாதது.

    ஆனால், படித்த பெண் தனது வருவாயில் பெரும்பகுதியைக் கணவனிடம் கொடுத்துவிடுவது பதிபக்தியா?
    அப்படிச் செய்தால், மனைவியின்மீது ஆண் கொண்டுள்ள அதிகாரமும், ஆக்கிரமிப்பும் இன்னும் அதிகமாகாதா!

    `கணவனே கண் கண்ட தெய்வம்’ என்று ஏதோ மந்திரம்போல, பழைய திரைப்படத்தின் தலைப்பை மூதறிஞர் உரைபோல கெட்டியாகப் பிடித்துக்கொள்பவர்களைக் கேட்கிறேன், கொடுமைப்படுத்துவது தெய்வத்தின் தன்மையாகுமா?
    `எனக்குத் திரைப்படங்கள் பிடிக்காது. அதனால், நீயும் பார்க்க்க்கூடாது!’ என்று மிரட்டும் ஆண் எதில் சேர்த்தி?
    `அவருக்குப் பிடிக்காவிட்டால் என்ன? நீபாட்டில் போயேன்!’ என்று ஒரு மாதுவிடம் கூற, `கணவர் திட்டினால்?’ என்று பயந்தாள். அவரை மீறிப்போனால், அவள் கெட்டவளாகி விடுவாளா?

    ஆக்ககரமாக எதுவும் செய்யத் துணிவோ, அறிவோ இல்லாதவர்களுக்குத்தான் சில பழமொழிகளினால் பலம். நமது துன்பங்களை நாமே களைய முன்வராது போனால், வேறு யார்தான் அதில் அக்கறை காட்டுவர்?

    ஒரு குடும்பத்தைச் செவ்வனே நடத்திச்செல்ல வேண்டிய பொறுப்பு ஆண், பெண் இருவருக்குமே இருக்கிறது. இதை ஒருவர் உணரத் தவறும்போது, மற்றொருவர் தக்க முறையைக் காட்ட வேண்டுவது அவசியம். கணவனின் வருவாய்க்கு மேலேயே செலவு செய்யும் பெண்ணாகட்டும், மனைவி என்பவள் தன் தாழ்மை உணர்வுகளுக்கெல்லாம் வடிகால் என்பதுபோல் அவளை கீழ்த்தரமாக நடத்தும் கணவனாகட்டும், இவர்களுக்குத் தக்க முறையைக் காட்டுவது ஒருவருக்கொருவர் செய்யும் கடமை, உபகாரம்.

    `குடும்பத்தில் சச்சரவு எதற்கு?’ என்று விட்டுக்கொடுத்துவிட்டு, கையில் காசில்லாததால், வேறு வழியின்றி கணவனின் அடி, உதைகளை ஏற்று, `பொறுமையுடையார் பூமி ஆழ்வார்,’ என்று பிதற்றுவது மடமை.

    கோலாலம்பூரில் ஆதரவற்ற பெண்கள் மையத்தில் கணவரால் வதைக்கப்பட்டவர்கள் ஏழ்மை நிலையிலிருந்த பல தமிழ்ப்பெண்களும், படித்து உத்தியோகம் பார்க்கும் மலாய்ப்பெண்களும் மட்டும்தாம் என்பது எனக்கு ஆச்சரியத்தை விளைவித்தது. இவர்கள் மருத்துவர்களின் பரிந்துரைக்குப்பின் காவல் துறையினரால் அங்கு கொண்டு விடப்பட்டவர்கள். (வசதியான குடும்பத்திலிருந்து வரும் தமிழ்ப்பெண்களை எப்படியெல்லாம் வதைத்தாலும், கணவரைக் காட்டிக்கொடுக்க மாட்டார்கள். அப்புறம் குடும்ப கௌரவம் என்ன ஆகிறது?)

    மலேசியாவில் மலாய், சீனர், இந்தியர் ஆகிய மூன்று இனங்களும் பிரதானமாக விளங்குகின்றனர்.
    `சீனப்பெண்களை கணவன்மார்கள் வதைப்பதே இல்லையா?!’

    இல்லத் தலைவி என் ஆச்சரியத்தைக் கண்டு, நிலைமையை விளக்கினாள்: “சீனப்பெண்களுக்குச் சிறு வயது முதலே சொல்லிக் கொடுப்பார்கள்,` நீ சம்பாதிப்பது எல்லாவற்றையும் அப்படியே தூக்கி உன்னை மணப்பவனிடம் கொடுத்துவிடாதே. அவன் மது, மாது, மாஜோங் (சூதாட்டம்) என்று எல்லாவற்றையும் அழித்துவிடுவான். புத்திசாலித்தனமாக அதில் சிறு பங்கையாவது எங்கேயாவது பதுக்கி வை!’ என்று”.

    என் சீன மாணவி (17) ஒருத்தியும் அதை உறுதிப்படுத்தினாள்: “எங்கப்பா ரொம்ப மோசம். அம்மாவை அடிப்பார். எனக்குப் பதினஞ்சு வயசானபோது, `நீங்க எல்லாம் கொஞ்சம் பெரியவங்களா ஆகணும்னுதான் இத்தனை வருஷமா பொறுத்துட்டு இருந்தேன். இப்போ, தனியா போறேன்,’ என்று சொல்லிவிட்டு அம்மா எங்கேயோ போய்விட்டாள்”.

    மலேசியாவில், மற்ற இரண்டு இனப்பெண்களில் பலர் தம் சம்பாத்தியம் முழுவதையும் கணவரிடம் கொடுத்துவிட்டு, மகிழ்ச்சியற்ற குடும்ப வாழ்க்கையிலிருந்து விடுபடத் தெரியாது மாட்டிக்கொள்வார்களாம். (விவாகரத்து கோருவதில் இந்தியப்பெண்கள் முதலிடம் வகிக்கிறார்கள் என்பது சில ஆண்டுகளுக்குமுன் என் வேண்டுகோளுக்கு இணங்கி, எனக்குக் கொடுக்கப்பட்ட புள்ளிவிவரம்).

    `நீங்கள் எழுதுவதுபோல் பெண்கள் சுதந்திரமாக நடந்தால், குடும்பத்தில் சண்டை வருமே!’ என்று ஒருவர் சந்தேகம் தெரிவித்தார்.

    எத்தனை காலம்தான் சண்டை போடுவார்கள்! மாற்ற முடியாது என்று புரிந்துபோனதும், தானே விட்டுக்கொடுத்து விடுவார்கள். முடியாவிட்டால் விலகி, அவரவர் வழியைப் பார்த்துக்கொண்டு போகவேண்டியதுதான்.

    வாழ்க்கை எவ்வளவு நரகமாக இருந்தாலும், `விதி’ என்று ஏற்றுக்கொள்வது அறிவுடமையாகுமா? அளவுக்கு மீறிய பொறுமையுடன் எந்த அநியாயத்தையும் சகித்துக்கொண்டிருந்தால், வாழ்வில் பிடிப்பு குன்றி, நாளடைவில் நடைப்பிணமாக ஆகிவிடும் அபாயம் இருக்கிறதே!

    நம் வாழ்வினை மேம்படுத்திக்கொள்வது நம் கையில்தான் இருக்கிறது. நம் திறமைக்கு ஏற்ப, நமக்கு விருப்பமான துறையைத் தேர்ந்தெடுத்துக்கொண்டு, யார் எதிர்த்தாலும், பழித்தாலும் சட்டைசெய்யாது, தீவிர முயற்சியுடன் அதில் இறங்கினால் வெற்றி காண்பது உறுதி. முயற்சியுடையார் இகழ்ச்சியடையார்.

    தொடருவோம்

    Share
  • இந்த வார வல்லமையாளர்!

    செ. இரா.செல்வக்குமார்

     a2

    நோபல்பரிசாளர் பி.வா. ஆண்டர்சன் அவர்களுடன் பேராசிரியர் க.பாசுக்கரன்

    இந்தக் கிழமையின் வல்லமையாளர் வியப்பூட்டும் ஓர் அறிவியலாளர்.

    மிக எளிய குடும்பத்தில் பிறந்து உலகப்புகழ் எட்டியிருக்கும் இவருடைய வியத்தகு வாழ்க்கை நமக்கெல்லாம்  மிகுந்த உள்ளூக்கம் தரக்கூடியது. .

    தமிழ்நாட்டில் தூத்துக்குடி மாவட்டத்தில் விளாத்திக்குளம்  என ஓர் ஊர் உள்ளது. அதன் அருகே கரிசற்குளம் (கரிசல்குளம்) என்று ஒரு சிற்றூர். அங்கேதான் வாழ்ந்துவந்தனர் இவருடைய குடும்பத்தினர்.   ஒரு சமயம் பெரிய பஞ்சம் ஒன்று ஏற்பட்டதால் இவருடைய தந்தையார்  திரு. கணபதி அவர்கள் குடும்பத்தோடு மதுரையில் குடியேறினார்.  கணபதி அவர்கள் 2-ஆம் வகுப்புவரைதான்  படித்திருக்கின்றார்.  இந்தவார வல்லமையாளரான  பேராசிரியரும் முனைவருமான  க. பாசுக்கரன்  (க’. பா’ஸ்க’’ரன்) அவர்களுடன்  உடன்பிறந்தவர்கள் 7 பேர்.   மொத்தம் 10 பேர் கொண்ட  இவருடைய குடும்பத்தினர்  வெறும் 2-அறை கொண்ட  சிறிய வீட்டில் வசித்தனர். எளிய பொருளாதார வசதி படைத்த இவர் குடும்பத்தில் 8-ஆவது வரை ஒருவர் படித்தால் உடனே வேலைக்குப்போவதே வழக்கம்.  பாசுக்கரன் அவர்கள் 5-ஆவது வகுப்பு படிக்கும்வரை வீட்டில் மின்விளக்கு கிடையாது. மதுரையில் புனிதமேரி பள்ளியில் படித்த இவர் மண்ணெண்ணெய் விளக்கிலும் தெருவிளக்கிலுமே படித்தார்.  ஒவ்வொரு வகுப்பிலும் குறைந்த மதிப்பெண் பெற்று எப்படியோ தேறி வந்தார்.  கணக்குப்போடுவதும்  ஆங்கிலத்திலும் தமிழிலும் பிழையில்லாமல் எழுதுவதும் கடினமாக உணர்ந்தார்.  ஆனாலும் ஆசிரியர்  பாடம் நடத்துவதைக் கூர்ந்து கேட்டு வந்தார்.  பள்ளிப்படிப்பு வரை தமிழ்வழியில் பயின்ற இவர் பி.யூ.சி என்னும் (இன்றைய படிப்பில் பிளசு-2 –வின் இறுதியாண்டு)  படிப்பில்தான் முதன்முதலாக ஆங்கிலவழி படித்தார். முதலில் கடினமாகவே இருந்தது.  பி.யூ.சி-யில் இரண்டாம் வகுப்பில் தேர்ச்சி பெற்று  மதுரை தியாகராசர் கல்லூரியில் இயற்பியல் படிப்பில் இளநிலையில் (B.Sc) சேர்ந்தார்.  ஒருமுறை இவர் 70% மதிப்பெண் பெற்றதைப் பார்த்து, ‘’நீ இன்னமும் நல்ல மதிப்பெண் பெற்றிருக்க வேண்டும்’’ என்று இவருடைய துறைத்தலைவர் பேராசிரியர் செயராமன் அவர்கள் இவரிடம் கூறினார். அதைக் கேட்டதுமுதல் இவர் பாடத்தில் உற்றுகவனிக்கத் தொடங்கி மிகுந்த அக்கறை எடுத்தார்.  அதன் பயனாய் பட்டப்படிப்பில் முதல்வகுப்பில் முதல் மாணவனாகத் தேர்ச்சிப் பெற்றார்.

    பேராசிரியர் வாட்டர்லூ, கனடாவில்
    பேராசிரியர் வாட்டர்லூ, கனடாவில்

    அதன்பின் ஏறுமுகம்தான்.  அடுத்து அமெரிக்கன் கல்லூரியில் இயற்பியலில் முதுநிலை   பட்டம் பெற்றார்.  பல்கலைக்கழகத்திலேயே முதலிடம் பெற்றார். பெங்களூரில் உள்ள இந்திய அறிவியற்கழகத்தில் (Indian Institute of Science,) சேர்ந்து திண்மநிலை இயற்பியலில் (Solid State Physics) முனைவர்ப்பட்டம் பெற்றார்.  இவர் குடும்பத்தில் பட்டப்படிப்பே படிக்காதவர் நடுவில் இவர் புகழ்மிகு உயர்கல்விக்கழகத்தில்  முனைவர்ப்பட்டம் பெற்றிருக்கின்றார். நோபல் பரிசு பெற்ற அப்துசு சலாம் (Abdus Salam) அவர்கள் இத்தாலி நாட்டின் வடகிழக்கேயுள்ள திரீசித்தே ( Trieste) என்னும் நகரில் 1964 ஆம் ஆண்டு  நிறுவிய அனைத்துலக கொள்கைய  இயற்பியல் நடுவத்தில்  (International Centre for Theoretical Physics (ICTP)) குளிர்கால பயிற்சிப் பட்டறை ஒன்றில் பங்குகொள்ள இவருக்கு அரிய வாய்ப்பு கிட்டியது.  இந்த நிறுவனம் ஐ.சி.டி.பி (ICTP) எனப்பரவலாக அறியப்படுகின்றது.  பிறகு அங்கேயே (ஐ.சி.டி.பி –யில்) வேலையும் கிடைத்தது. இதுவொரு திருப்புமுனை!! அங்கே வந்தார் அமெரிக்காவில் உள்ள பிரின்சிட்டன் பல்கலைக்கழகத்தில் (Princeton University) பேராசிரியராக இருந்த நோபல் பரிசுபெற்ற அறிவியலாளர்   பிலிப்பு வாரன் ஆண்டர்சன் (Philip Warren Anderson) என்பார். இவர் மீகடத்தித்துறை (superconductor) ஆய்வில் மிகுபுகழ் எட்டியவர்.  அவருடன் நடந்த அறிவியல் கருத்துறவாட்டத்தின் பயனாய் அமெரிக்காவில் பிரின்சிட்டன் பல்கலைக்கழகத்திலேயே வருகைதரு பேராசிரியராகச் செல்ல வாய்ப்பு கிட்டியது.  இந்தியாவின் மிக உயர்ந்த அறிவியல் விருதாகிய சாந்தி சொரூப்பு பட்டுநாகர் விருதை (Shanti Swarup Bhatnagar Prize) இவர் 1990 இல் வென்றிருக்கின்றார். அதற்கும் முன்பாக  நோபலியர் அப்துசு சலாம் அவர்களின் ஐ.சி.டி.பி நிறுவனத்தின் முதல் விருதாகிய ஐ.சி.டி.பி பரிசை 1983 இல் வென்றார்.  இப்பரிசு 40 வயதுக்கும் குறைவான  வளரும் நாட்டு அறிவியலாளர் ஒருவருக்கு வழங்கப்பெறும் விருது.  இவர் நோபல் பரிசு பெற்ற ஆண்டர்சன் அவர்களுடன் இணைந்து ஆய்விதழ்களில் ஆய்வுக்கட்டுரைகள் எழுதியுள்ளார்.

    சிலவகைப் பொருள்களில் எதிர்மின்னிகளைத்  (electron) தனித்து இயங்கும் உருப்படிகளாகக் கருதாமல் அவற்றினிடையே வலுவான ஒத்தியங்கும் நுண்பிணைப்பு கொண்ட  ( developed the resonating valence bond theory)  தன்மை உடையதாகக் கருதப்படும் அமைப்புகள் பற்றிய ஆய்வில் பாசுக்கரன் அவர்கள் உலகளவில் முன்னணி ஆய்வாளர் இத்துறையில் இவர் நோபலியர் பி.வா. ஆண்டர்சன் அவர்களுடன் சேர்ந்து கருத்தியக் கொள்கைகளை உருவாக்கியிருக்கின்றார்.  இக்கருத்துகள் உயர்வெப்ப மீகடத்தித்துறையில் (high temperature superconductor) மிகவும் முக்கியமானவை. இவருடைய படைப்புகளுக்காக இவருக்கு நோபல்பரிசு கிடைத்தாலும் கிடைக்கக்கூடும். இவர் கனடாவில் வாட்டர்லூ நகரில் உள்ள புகழ்மிக்க பெரிமீட்டர் கழகம்  (Perimeter Institute) என்னும் கொள்கைய இயற்பியல் (Theoretical Physics) ஆய்வுக்கழகத்தில் வருகைதரு அறிவியலாளராக வந்துபோய்க்கொண்டு இருக்கின்றார்.  இதுமட்டுமல்லாமல் அமெரிக்கா, சப்பான், பிரேசில், பிரித்தானியா, இடாய்ச்சுலாந்து (செருமனி)  போன்ற பலநாடுகளுக்குச் சென்று அறிவியல் ஆய்வுரைகள் வழங்கிவருகின்றார்.   இந்திய அக்காதெமி ஆஃபு சயன்சு, இந்திய நேசனல் சயன்சு அக்காதெமி  போன்ற அமைப்புகள்  இவரை சிறப்பாளராக (Fellow) அறிவித்துப் பெருமைப்படுத்தியுள்ளன. இவர் சென்னையில் இந்திய அறிவியற்கணிதக் கழகத்தில் (The Institure of Mathematical Science) பேராசிரியராகப் பணியாற்றி ஓய்வுபெற்றிருக்கின்றார். இவர் தமிழ்மொழிக்கும் அரிய தொண்டு ஆற்றிவருகின்றார் என்பது சிறப்பாகக் குறிப்பிடத்தகக்து. முழுமை அறிவியல் உதயம் என்னும் இதழில்  ஐன்சுட்டீனின் பொதுச்சார்பியல் கொள்கையின்  (Einstein’s General Theory of Relativity) 100-ஆவது ஆண்டுநிறைவை ஒட்டி விரிவான  பெருங்கட்டுரைத் தொடர் ஒன்றைத் தமிழில் அண்மையில் எழுதியுள்ளார்.  இத்தொடரின் கடைசி கட்டுரை எழுதியவுடன்  தற்செயலாய் இதற்கு முத்தாய்ப்பு வைத்தாற்போல் பொருளீர்ப்பு அலைகளை  (Gravitational waves) பிப்பிரவரி 11, 2016 அன்று  LIGO என்னும் ஆய்வுநிறுவனத்தார் செய்முறையில் கண்டுநிறுவினார்கள்.

    arivial

    தெருவிளக்கில் படித்து  உலக அளவில் அறிவியலாளராக உயர்ந்த, நோபல் பரிசாளருடன் இணைந்து கட்டுரை எழுதிய, பெருமைமிகு விருதுகள்  பலபெற்ற பேராசிரியர் க. பாசுக்கரன் அவர்களை இந்தவார வல்லமையாளாராக அறிவித்து மகிழ்கின்றோம். அவருக்கு நம் பாராட்டுகள்.

    நூற்துணையும் குறிப்புகளும்:
    [1] புதிய தலைமுறை இதழ் (23, ஆகத்து 2010)

    [2] தமிழ்விக்கிப்பீடியா கட்டுரை க. பாசுக்கரன் (https://ta.wikipedia.org/s/2yzm)

    [3] ஆங்கில விக்கிப்பீடியா [https://en.wikipedia.org/wiki/Ganapathy_Baskaran

    [4] முழுமை அறிவியல் உதயம் இதழ்.

    [5] செ.இரா.செல்வக்குமாரிடம் நேரில் தெரிவித்த செய்திகள்.

    Share
  • நான் அறிந்த சிலம்பு – 199

    -மலர் சபா

    மதுரைக் காண்டம் – 07: ஆய்ச்சியர் குரவை

    படர்க்கைப் பரவல் 

    மூன்று உலகங்களையும்
    தன் இரண்டு அடிகளுக்குள் அடக்கி அளந்ததால்
    சிவந்த பாதங்கள் மேலும் சிவக்கும் வண்ணம்,
    தன் தம்பியாகிய இலக்குவனோடு
    காட்டிற்குச் சென்றவன்;
    ‘சோ’ என்னும் அரணும்
    அதனுள்ளே இருந்த அரக்கர்களும்            Vaamanaa
    அழிந்து போகச் செய்தவன்;
    பழமையான இலங்கை நகரின்
    காவலையும் அழித்தவன்;
    இத்தகைய சிறப்புடைய
    திருமாலின் புகழையும் சிறப்பையும்
    கேட்காத செவியும் ஒரு செவியா?! 

    தேவர்கள் எல்லார்க்கும் பெரியவன்;
    மாயங்களில் வல்லவன்;
    உலகங்கள் யாவையும் படைக்கின்ற
    உந்திக் கமலத்தை உடையவன்;
    கண்களும் திருவடிகளும் கைகளும்
    அழகிய வாயும்
    சிவந்து விளங்கும் கரிய நிறமுடையவன்;
    இவனைக் காணாத கண்களும்
    என்ன கண்களோ?!
    கண்டது இமைத்திடும் கண்களும்
    என்ன கண்களோ?! 

    அறியாமை கொண்ட மனத்தினை உடைய
    மாமன் கம்சன் புரிந்த
    வஞ்சகச் செயல்களில் இருந்து தப்பி,
    அவனை வென்றவன்;
    நான்கு திசைகளிலும் உள்ளவர் போற்ற,
    பின்தொடர்ந்து வந்த வேதங்கள் முழங்க,
    பாண்டவர்களுக்காகத் துரியோதனனிடம்
    தூது சென்ற ஆயக் கண்ணனைப்
    போற்றாத நாவும் என்ன நாவோ?!
    ‘நாராயணா’ என்று கூறாத
    நாவும் என்ன நாவோ?! 

    வாழ்த்து 

    நாம் குரவைக் கூத்தில் போற்றிய கடவுள்
    நமது ஆநிரைகளுக்கு நேரக்கூடிய
    துன்பத்தைப் போக்கிடுக!
    வெற்றி தரும் இடியைப் படையாகக் கொண்ட,
    இந்திரனின் தலையில் உள்ள
    முடியணியை அணிந்ததால்
    கொண்ட வெற்றியையும்,
    தொடி அணிந்த தோளினையும் உடைய
    பாண்டியனின் குறுந்தடியால் அறையப்படும்
    வெற்றி முரசானது
    வேற்றரசர்கள் நடுங்கும்படி
    நாள்தோறும் பகைவர்களைக் கொன்று
    வெற்றியைக் குவித்து விளங்குவதாக…
    என்றே வாழ்த்தினர். 

    ஆய்ச்சியர் குரவை முற்றியது; அடுத்து வருவது ‘துன்ப மாலை‘ 

    அடிப்படையாக அமைந்த சிலப்பதிகாரத்தின் வரிகள் இங்கே:
    http://www.chennailibrary.com/iymperumkappiangal/silapathikaram9.html

    படத்துக்கு நன்றி: கூகுள்

     

     

    Share
  • குறளின் கதிர்களாய்…(111)

    –செண்பக ஜெகதீசன்

    அறஞ்சாரா நல்குரவு ஈன்றதா யானும்
    பிறன்போல நோக்கப் படும்.  (திருக்குறள் -1047: நல்குரவு) 

    புதுக் கவிதையில்… 

    வறுமை கொடிதுதான்,
    வந்தால் அது
    அறமல்லாத வழியில்,
    அன்னை கூட
    மகனைப்
    பெற்றதை மறந்து
    பிறரைப்போலப் பார்ப்பாள்…! 

    குறும்பாவில்…

    அறவழியிலல்லாமல் வறுமை வந்தால்,
    அன்னை கூட மகனை
    அயலானாய்த்தான் கருதுவாளே…! 

     மரபுக் கவிதையில்…

    பெற்ற தாயவள் பிள்ளையினைப்
         பிடிக்கும் வறுமையில் விடமாட்டாள்,
    தொற்றிடும் வறுமை வந்ததவன்
       தீய வழியெனத் தெரிந்துவிட்டால்,
    முற்றிலும் மகனை வெறுத்தேதான்
      மனதைப் பாறாங் கல்லாக்கி
    மற்றவர் முன்பும் மதிக்காமல்
       மாற்றான் போல நினைப்பாளே…! 

    லிமரைக்கூ… 

    புறவழியில் வறுமை வந்தது,
    பிள்ளையை வேறாயப் பார்க்கக்
    காரணம் தாய்மனம் நொந்தது…! 

    கிராமிய பாணியில்… 

    கொடியதுகொடியது வறுமகொடியது
    வாழ்வுலவரும் வறுமகொடியது,
    பெத்ததாயும் உடமாட்டா
    புள்ளயத்தான் வறுமயிலவாட… 

    ஆனா,
    கெட்டவழில வறுமவந்தா
    எட்டிக்கூட பாக்கமாட்டா
    புள்ளய
    பெத்ததாயும் பாக்கமாட்டா,
    புள்ளயாத்தான் பாக்கமாட்டா
    பெறத்தியாராப் பாப்பாளே… 

    அதால
    கொடியதுகொடியது வறுமகொடியது
    வாழ்வுலவரும் வறுமகொடியது…!

     

     

    Share
  • நல்ல நூல்கள் (மரபுக் கவிதை)

     

    மீ.விசுவநாதன்

    images

    நண்பரெலாம் காணும் பேறு
    நான்காண வில்லை என்னும்
    எண்ணத்தை விட்டு விட்டேன் !
    இருக்கின்ற நல்ல நூல்கள்
    கண்திறக்கும் பண்பு கூட்டும்
    காலத்தை வென்று நிற்கும்
    வண்மைகளை பெற்று வந்து
    வம்சத்தை வாழ்த்தும் என்பேன்!

    பாரதியை நித்தம் கொஞ்சம்
    படித்தாலே ஞானம் கூடும் !
    ஈரடியாய் உள்ள அந்தத்
    திருக்குறளைத் தொட்டு விட்டால்
    பேரறிவைப் பெற்று உள்ளம்
    பெரியதாக மாற்றங் காணும் !
    சாரமிதைக் கண்டு விட்டேன்
    சாகாத யோகம் பெற்றேன் !

    (06.03.2016)
    (அறுசீர் அரையடி வாய்ப்பாடு:
    காய், மா, மா)

    Share
  • பழமொழி கூறும் பாடம்

    – தேமொழி.

     

    பழமொழி: சான்றவர் கையுண்டும் கூறுவர் மெய்

    மொய்கொண் டெழுந்த அமரகத்து மாற்றார்வாய்ப்
    பொய்கொண் டறைபோய்த் திரிபவர்க் கென்கொலோ?
    மையுண் டமர்ந்தகண் மாணிழாய்! சான்றவர்
    கையுண்டும் கூறுவர் மெய்.

    (முன்றுறையரையனார், பழமொழி நானூறு)

    பதம் பிரித்து:
    மொய்கொண்டு எழுந்த அமரகத்து, மாற்றார் வாய்ப்
    பொய் கொண்டு, அறைபோய்த் திரிபவர்க்கு என்கொலோ?-
    மை உண்டு அமர்த்த கண் மாணிழாய்!-சான்றவர்,
    கை உண்டும், கூறுவர் மெய்.

    பொருள் விளக்கம்:
    ஒருவருக்கொருவர் கொண்ட பகையினால் தோன்றிய போரில், எதிரி வழங்கும் பொய்யான உறுதிமொழியில் மயங்கி, பொருளாசை கொண்டு எதிரியுடன் இணைந்து இரண்டகம் செய்பவரை என்னவென்பதோ? அழகிய மைதீட்டிய கண்களையும் அணிகலன்களையும் கொண்டவரே; சான்றோர் (எனப்படுபவர் தனது) வாழ்வாதாரமே அடுத்தவரை நம்பி இருந்தாலும்கூட அவருக்காகச் சார்புநிலையினை மேற்கொள்ளாது நடுநிலை வழுவாது உண்மை மட்டுமே உரைப்பர். ‘அறைபோய்த் திரிபவர்’ என்பது கையூட்டு பெற்று எதிரணியில் சேர்ந்து தீமைக்கு உடன் போவாரைக் குறிக்கிறது.

    பழமொழி சொல்லும் பாடம்: சான்றோர் பிறரைச் சார்ந்து வாழவேண்டிய சூழ்நிலையிலும் அவர்களுக்காகச் சார்புநிலை கொள்ளாது, நடுநிலை தவறாது மெய்யுரைப்பர். நடுநிலை மாறாத சான்றோர் சிறப்பினைக் கூறுமிடத்து வள்ளுவர்,

    கேடும் பெருக்கமும் இல்லல்ல நெஞ்சத்துக்
    கோடாமை சான்றோர்க் கணி. (குறள்: 115)

    ஏற்றத் தாழ்வுகள் வாழ்க்கையில் இயல்பாக இருப்பினும், எந்த நிலையிலும் மனதில் நடுநிலை மாறாது செயல்படுவது சான்றோருக்கு அழகு என்கிறார். மேலும்,

    சமன்செய்து சீர்தூக்குங் கோல்போல் அமைந்தொருபால்
    கோடாமை சான்றோர்க் கணி. (குறள்: 118)

    எப்பக்கமும் சாராது, சமநிலை கொண்ட துலாக்கோல் போல நடுவுநி‌லைமை போற்றுவது சான்றோர்க்கு அழகு என்றும் அறிவுறுத்துகிறார்.

    Share
  • படக்கவிதைப் போட்டி 53-இன் முடிவுகள்

    -மேகலா இராமமூர்த்தி

    இவ்வாரப் படக்கவிதைப் போட்டிக்குரிய புகைப்படத்தின் உரிமையாளர் திரு. பிரேம்நாத் திருமலைசாமிக்கும், அவரின் புகைப்படத்தைப் போட்டிக்குத் தேர்ந்தெடுத்துத் தந்துள்ள வல்லமை ஃப்ளிக்கர் குழுமத்தின் பொறுப்பாசிரியர் திருமதி. சாந்தி மாரியப்பனுக்கும் வல்லமை இதழின் நன்றி!

    marriage ritual

     

     

     

     

     

     

     

     

     

     

    ’இல்லறமல்லது நல்லறமில்லை’ என்பது முதுமொழி. ’அறனெனப்பட்டதே இல்வாழ்க்கை’ என்பது வாழ்வியல் அறிஞர் வள்ளுவரின் வாய்மொழி. இவ்வினிய இல்லறத்தைத் தொடங்கிவைப்பது இருமனங்கள் இணையும் திருமணம் எனும் மங்கல நிகழ்வு.

    ’உழுந்து தலைப்பெய்த கொழுங்களி மிதவையோடு’ மிக எளிமையாய்த் தமிழர் திருமணம் நிகழ்ந்ததோர் பொற்காலம்! அம்மி மிதித்து அருந்ததி பார்த்தல் உள்ளிட்ட பல்வேறு வதுவைச் சடங்குகளை உள்ளடக்கியதாய் அது விரிவடைந்தது பிற்காலம்!

    திருமணம் என்பது இலட்சக்கணக்கான பொருட்செலவில் நிகழும் ஆடம்பரச் சடங்காய், வரதட்சணை எனும் பெயரில் பெண்ணை விலைபேசும் வியாபாரமாய் மாறிவிட்டிருப்பது தற்காலம்! இந்நிலை மாறி, திருமணம் காதலின் அடிப்படையில், எளிமையும், இனிமையும் நிறைந்ததாய் மாறும் காலம் எக்காலம்?

    ***

    இவ்வாரக் கவிதைப்போட்டியை அணிசெய்திருக்கும் மணியான கவிதைகளைப் படித்துச் சுவைக்கும் நேரமிது!

    மறக்கமுடியாத இனிய நிகழ்வுகளை உள்ளடக்கிய திருமணச் சடங்குகளை அழகிய சொல்மலர்களெடுத்து விளக்கியிருக்கின்றார் திரு. க. கமலகண்ணன். 

    அக்னியைச் சுற்றி
    அம்மி மிதித்து
    அருந்ததியைப் பார்த்து
    அனைத்து உறவுகளும்
    அருகிலே இணைந்திருக்க
    அருமையான தருணத்தில்
    அட்சதையைக் கரங்களால்
    அனைவரும் தூவ இனி
    அன்பு மனைவி இவள் என்று
    அருகில் அமர்ந்து மங்கள தாலியை
    அணிவிக்க மறக்க முடியாத நினைவுகளை
    அத்துணை சுலபத்தில் மறக்க முடியுமா
    அந்த அம்மி காத்திருக்கிறது
    அழகிய மணமகளின் கால் மிதிக்க
    அக்னி அம்மி குத்துவிளக்கு மரக்காலில் நெல்
    அனைத்துடன் ஒளிஓவியக் கருவிகளும்
    அற்புத நிமிடங்களைப் பதிவு செய்ய
    அன்புடன் இணைந்து கொண்டது இப்போது
    அளவில்லா ஆனந்தம் எப்போதும்
    அரிய நினைவுகளை நினைவுகூர…

    ***

    சமையல் உபகரணமாயிருந்த அம்மி, சடங்கு உபகரணமாகிக் கரணம் (திருமணம்) முடிந்ததும் மூலையில் முடங்கிக் கண்ணீர் வடிக்கின்றது என்று வேதனையுறுகின்றார் திரு. செண்பக ஜெகதீசன்.

    சமையல் உபகரணம்
    சடங்கு உபகரணமாகி,
    வேலை முடிந்ததும்
    மூலையில் வைக்கப்படுகிறது..

    அம்மி மிதித்தவர்களும்
    அங்கே வேடிக்கை பார்த்தவர்களும்,
    அகன்றுவிட்டனர்
    அதை
    அம்போ என விட்டுவிட்டு..

    மெல்லியலார் கைகளால்
    மிளகரைத்த காலத்தையும்,
    மின் உபகரணங்கள் வரவால்
    மறக்கப்பட்டு
    புறந்தள்ளப்பட்ட கதையையும்
    எண்ணிக்
    கண்ணீர் வடித்துக் காத்திருக்கிறது–
    அடுத்த
    கல்யாணத்திற்காக…!

    ***

    ’அம்மி மிதித்து அருந்ததி பார்க்கும் சம்பிரதாயமெல்லாம் பொருள்பொதிந்தவையே; வெறும் பொழுதுபோக்கல்ல’ என்கிறார் திரு. மெய்யன் நடராஜ்.

    அம்மி மிதித்து அருந்ததி பார்க்கின்றச் 
    சம்பிர தாயச் சடங்கினைக்  – நம்முன்னோர்  
    உண்டாக்கி வைத்ததெலாம் ஒப்புக்கு அல்லவே 
    கண்ணுற்றால் அர்த்தங்கள் நூறு. 

    ***

    ’வல்லமைமிகு வட்டெழுத்தே இல்லறம் எனப் போற்றுவர் பண்பாட்டுக் காவலர்; அந்நல்லறத்தை உணராத அறிவிலிகளோ அதனை நீர்மேல் எழுத்தெனச் சாற்றுவர்’ என்கிறார் திருமிகு. மலர்விழி மங்கையர்க்கரசி.

    இரட்டைநாயனமாய் எங்கும்
    இணைந்த இசைச்சங்கமமே
    குடும்பகீதம் என்றே உணர்த்திநிற்பன
    இரட்டைக் குத்துவிளக்குகளே!
    தொல்காப்பியன் சொன்ன
    மெய்ப்பாடெட்டையும் அன்புநீர்பெய்து
    அருஞ்சுவைதுவையலாய் நிகழ்வுகள்
    வழங்கி நீடூழிவாழ்வதே நல்லறஇல்லறமே
    ஈதுணர்த்தும் அம்மிக்கல் குழவி.
    நிறைநாழி நெல்நிறைத்தல்
    பறைசாற்றிப் பாரம்பரியம்போற்றி
    விதைநெல்லாய் வாழ்ந்துசிறக்கவே!
    அடியிரண்டு இணைநிற்கும்பாதங்கள்
    ஆளுக்கொன்றாய் அறுத்தோடி விலகாது
    அருகருகே அன்பாலிணைத்த இருகோடுகளே!
    இப்போது அறிவிலிகள்
    அரற்றுவர் தண்ணீரில்எழுத்தெனவே 
    எப்போதும் பண்பாட்டுக்காவலர்
    போற்றுவர் வல்லமைமிகு வட்டெழுத்தேயது!

    *** 

    படத்தில் காணக்கிடைக்கும் மங்கலப்பொருள்கள் ’இல்லறத்தில் இல்லாததொன்றில்லை’ என்பதையே குறிப்பால் உணர்த்துகின்றன என்பது திரு. மதிபாலனின் கருத்து.

    துன்பத்தை தூளாய் ஆக்கி 
          துயரத்தை அரைக்கும் அம்மி 
    இன்பத்தை எடுத்துக் காட்ட 
           இதம்தரும் மல்லி கைப்பூ
    அன்பென்னும் ஒளியை வீச 
           அழகான விளக்கி ரண்டு 
    என்னதான் இங்கே இல்லை 
            இருவரும் சேர்ந்து வாழ !

    ***

    திருமணவாழ்வு, அம்மியில் அரைபடும் அவல வாழ்வாயில்லாமல் செம்மையாய்ச் சீராய் அமைதலே நலம்; ஆதலால் நீக்கிடுக தேவையற்ற சுயநலம்” என விளம்புகின்றார் திருமிகு. வேதா இலங்காதிலகம்.

    சிந்திய அறுகரிசி சிதறிய பூக்களுமாயிது
    எந்த வகையிலோ மனக்கோல முடிவிது.
    பந்தங்கள் நிற்பது சீதனப் பொருட்களின்
    பக்கமாயும் இருக்கலாம் என்றும் கொள்கிறேன்.
    அம்மியில் அரைபடும் வாழ்வாக பலரது
    செம்மையாம் திருமண வாழ்வு அமைகிறது.
    அம்மையப்பன் போல பத்திரமாக நடுவிலது
    அமைவாகும் புகைப்படக்கருவியேன் புரண்டு கிடக்கிறது!

    குளப்பத்தின் பின்னரான ஒரு ஓய்வா!
    அளப்பரிய புயலுக்குப் பின்னான அமைதியா!
    விளக்கங்கள் அம்மி, அருந்ததி, விளக்கிற்கெனவோ
    வளமாகப் பலவுண்டு, வழக்கிலிவையெங்கே போகிறதோ!
    அலைந்த ஆதிவாழ்வு அமரிக்கையாய் தாலிக்கட்டுக்குள்ளானது.
    அந்த நிலைமாறி ஆதி நிலைக்கின்றிது
    தலைகீழாகிறது தடுப்பாரெவரோ! வழி எதுவோ!
    விலையற்ற கலாச்சாரம் பேணிக் காக்கப்படவேண்டும்!

    ***

    ஆணும் பெண்ணும் இல்வாழ்வில் இணையப் பாலமாய் விளங்கும் ’ஆயிரங்காலத்துப் பயிரான’ திருமணத்தில் நிகழ்த்தப்பெறும் சடங்குகளின் உட்பொருளை நுட்பமாய்த் தன் கவிதையில் நுவலுகின்றார் திருமிகு. சரஸ்வதி ராஜேந்திரன்.      

    எதிர்கால ஒழுக்கத்திற்கு
    அக்னி சாட்சி
    படியைத்தாண்டமாட்டேன் என்பதே
    அம்மி மிதித்தல்
    நிரந்தர கற்பு நட்சத்திரமாக மின்ன
    அருந்ததி பார்த்தல்
    பாலோடுசேர்ந்தபழம்போல் சுவைபெற
    பால் பழம் சாப்பிடல்
    பூ மணம் போல் புகழ் பரப்புவோம்என
    பூமணம் இடுவது
    ஒரு முடிச்சு கணவனுக்கு
    இரண்டாவது முடிச்சு
    தாய் தந்தையருக்கு
    மூன்றாவது முடிச்சு
    தெய்வத்துக்கு அடங்கி போக
    மூன்று முடிச்சு
    பெண்ணுக்கு தற்காப்பு வேண்டும்அது
    காப்பு கட்டல்
    இதன் அர்த்தம் புரிந்து
    ஆணும் பெண்ணும்
    இணைந்து வாழ்தலே நல்ல இல்லறம்
    வருவது ஒருமுறை
    அருமை புரிந்து வாழ்வது நடை முறை

    ***

    வாழ்க்கையெனும் பெருங்கடலை ’நம்பிக்கை’ எனும் துடுப்பின் உதவிகொண்டு மணமகனும் மணமகளும் கடக்கவேண்டும் என நல்லுரை பகர்கின்றார் திரு. நீலமேகம் ராமலிங்கம் சஹஸ்ரநாமன்.

    அன்றே அய்யன் திருவள்ளுவர் 
    மனத்தை மலராக உவமையாக்கினார்
    இரு மனங்களும் சேருவது திருமணம்
    மணமகன் உயிராகவும் , அச்சாணியாகவும்
    மணமகள் உடலாகவும், சக்கராமாகவும்
    வாழ்க்கை என்ற இல்லறக் கடலை
    நம்பிக்கை என்ற துடுப்புடன் கடக்கட்டும்
    தங்கம் தற்சமயத்தில் பலரக்கும் எட்டாதொன்று
    பூவோ அனைவருக்கும் எட்டுமொன்று
    அம்மியை மிதக்கிறமோ , இல்லையோ
    மம்மியை (தன் அம்மாவை) மதிக்க  வேண்டும்
    அருந்ததியை பார்க்கிறமோ , இல்லையோ
    அன்பு, அடக்கம், கருணை, கடமை
    ஆணவமின்மை, பொறுமை, கோபமின்மை
    என்ற நற்குணங்குணங்கள் இருப்பவர்களாக
    இருத்தல் அவசியம்…

    ***

    சிந்தனைக்கு விருந்தாய் நல்ல கவிதைகளைப் படைத்திருக்கின்றீர்கள் கவிஞர்களே! பாராட்டுக்கள்!

    ***

    இவ்வாரத்தின் சிறந்த கவிஞராய்த் தேர்வாகியிருப்பது யார் என்பதை அடுத்து அறிந்துவருவோம்!

    அன்பும் அறனும் உடைத்தாயின் இல்வாழ்க்கை
    பண்பும் பயனும் அது
    என்பது தெய்வ(ப்புலவரின்) வாக்கு. இன்றோ பல திருமணங்கள் அன்பும் பண்புமின்றிச் சந்தேகப் புயலிலும் வரதட்சணைச் சூறாவளியிலும் சிக்கிச் சின்னாபின்னமாகி வருவதை நாளுக்குநாள் நீதிமன்றங்களில் நீண்டுநிற்கும் மணவிலக்கு வழக்குகள் வெளிச்சமிட்டுக் காட்டுகின்றன! அப்படியானால் அம்மியும் அருந்ததியும் மணவிழாவில் இடம்பிடிப்பதன் நோக்கந்தான் என்ன? மனிதர்களின் கல்மனத்தையும், மின்னிமறையும் நட்சத்திர இயல்பையும் உணர்த்தத்தானோ? என வேதனையோடு இன்றைய நடப்பைப் பேசும் ஒரு கவிதை நெஞ்சைத் தொடுகின்றது!

    எத்தனை சாட்சிகள்
    இருந்தால் என்ன…
    ஆயிரங் காலத்துப்பயிர்
    சந்தேகப் புயலிலும்
    வரதட்சணை சுனாமியிலும்
    பொருந்தா மனப் புழுதியிலும்
    அகந்தைபிடித்தாட்டும் பனிப்பொழிவிலும்
    சின்னாபின்னப்பட்டுப் போகிறதே…

    அம்மி மிதித்தல்
    அவ்வப்போது மனம் கல்லாதல்,
    அருந்ததி பார்த்தல்
    மின்னி மறையும நட்சத்திரமாய்த்
    தொலைந்து போதல்,

    குத்துவிளக்கேற்றி வைத்து
    அடியிலிருக்கும்
    இருளையே மனதில் நிறைத்தல்,

    மூன்று முடிச்சு
    முடிந்தால் கழுத்தை இறுக்கும்,
    பெண்ணிற்கோ
    அவசியப்படாத அடையாளமாய்…

    எல்லாம் மங்கலமே…
    சிதறு தேங்காயாய்
    வாழ்க்கையைப் பிரித்து மேய்ந்து
    முகநூல்களிலும், இணையங்களிலும்
    பேருக்கு வாய்க்கும்
    பொருந்தா நட்பின்
    சந்தர்ப்பவாதங்களினாலும், காமத்தாலும்
    பிரிவதற்கென்றே
    குடும்ப
    வழக்கு மன்றங்களில்
    அலைந்து கொண்டிருப்போர்க்கு
    இவை யாவும்
    அஃறிணைப் பொருட்களே…
     

    ’மனப்பொருத்தமில்லா மணவாழ்வு, (நறு)மணமில்லா வருத்தமிகு வாழ்வே!’ என்பதை உணர்த்தியிருக்கும் இக்கவிதையின் ஆசிரியர் திரு. இளவல் ஹரிஹரனை இவ்வாரத்தின் சிறந்த கவிஞராய் அறிவிக்கின்றேன்.

    ***

    தன் மணவாழ்வின் மங்கல நிகழ்வுகளை மணம்வீசும் மலரும் நினைவுகளாய் மீட்டிப்பார்க்கும் மங்கை இவள்!

    மஞ்சள் குங்குமங் கலந்தே
    நெஞ்சக் குடிலினுள் நீ
    குடி புகுந்த வேளையதை
    சூடி விட்ட மல்லிகையும்
    கூடி நின்ற ஆன்றோரின்
    தேடி வந்த அட்சதையும்
    வாழ்க என்ற வாழ்த்துகளும்
    சூழ்ந்து வந்த சுற்றமும்
    அம்மி மிதிக்கையிலே
    அம் மெட்டி நீ சூட்டும்
    அழகிய நினைவுகளும்
    ஒழுக்கத்தில் அருந்ததியை
    முழுவதுமாய் கொண்டிரு
    என்றுன் கை பிடித்து
    வான் ஒளிரும் நட்சத்திரமொன்றை
    பகலவனின் பகலொளியில்
    அகத்தினிலே வேண்டியதும்
    அக்கினியின் சாட்சியத்தில்
    இக் கன்னியின் கழுத்தில்
    மாங்கல்யம் சூட்டியதும்
    மங்காது என்னுள்ளே இன்று
    மீண்டும் இனிமையுடன்…
    காணும் மணவிழாவில்
    தேனாய்த் தித்தித்தே
    மனதை நிறைக்கிறது…

    ’நினைத்தாலே இனிக்கும்’ தன் திருமண நாளை மங்கையொருத்தியின் வார்த்தைகளாய்த் தேர்ந்தசொற்களில் விவரித்திருக்கும் திருமிகு. புனிதா கணேசனின் இக்கவிதைக்கு என் பாராட்டுக்கள்!

    Share
  • கற்றல் ஒரு ஆற்றல் – 19

    க. பாலசுப்பிரமணியன்

     

    அந்த நாள் ஞாபகம் வந்ததே!

     education11

    தரையில் ஒரு  பாயை விரித்து  அதன் மேல் ஒரு போர்வையை விரித்து, ஒரு பழைய புடவையையும் விரித்து அந்த மெதுவான படுக்கையில் ஒரு சிறிய தலையணை வைத்து பாட்டி தன் படுக்கையை தயாரித்த உடன் ஓடிச்சென்று அதில் படுத்துக்கொண்டு “பாட்டி, எனக்கு ஒரு கதை சொல்லு”  என்ற இனிய காலம் … இன்றும் நினைவில் …..

    “ஒரு ஊரிலே ஒரு ராஜா இருந்தானாம்  – என்று அவள் அந்தக் கதையை சொல்லிக்கொண்டிருக்கும் பொழுதே கண்ணயர்ந்து,  மீண்டும் அடுத்த நாள் அதே நேரத்தில் “ஒரு ஊரிலே ஒரு ராஜா இருந்தானாம் …” என்று அது தொடர்கதையாக மாற ……

    கதை சொல்லுதலும் கதை கேட்பதுவும் ஒரு இனிய  கலை

    இளம் சிறார்களுக்குக் கதைகள் சொல்லுவது வெறும் பொழுதுபோக்கு அல்ல. அது அவர்களுடைய மன நலனை வளர்க்க, சிறப்பிக்க மற்றும் அதற்கு உயிரூட்டத் தேவையான நல்ல உரம்.

    கல்வி ஆராய்ச்சியாளர்கள் கற்றலில் கதைகளின் முக்கியத்துவத்தை மிகச் சிறப்பாகக் கூறியிருக்கின்றனர்.

    • கதைகள் குழந்தைகளின் ஆர்வத்தை வளர்ப்பதற்கு அடிகோலாக அமைகின்றது.
    • சமூக விழிப்புணர்வுகளை ஏற்படுத்துகின்றன.
    • நன்னெறிகளை வளர்க்கவும் உறுதிப்படுத்தவும் உதவுகின்றன.
    • கற்பனை வளத்தை செழிப்பாக்குகின்றன.
    • இலக்கிய,சரித்திர நிகழ்வுகளுக்கும் கோட்பாடுகளுக்கும் வெளிச்சம் போட்டு காட்டுகின்றன.
    • மனித உறவுகள் மற்றும் செயல்களையும் புரிந்து கொள்ளவும் ஆராய்ந்து பார்க்கவும் உதவுகின்றன.
    • இயற்கை வளம், விலங்குகள் பறவைகள் ஆகியவற்றின் வாழ்கைமுறைகளையும், முக்கியத்துவத்தையும் அறிந்து கொள்ள உதவுகின்றன

    சிறு குழந்தைகளுக்குக்  கதைகள்  சொல்லுவதே ஒரு நுணுக்கமான திறன் வாய்ந்த கலை. இதற்கு தனியான பயிற்சிகள் நடத்தப்படுகின்றன.

    சொல்லுபவருடைய சொல் வளம், குரல் வளம், உடல் மொழி, பாவனைகள், முகத் தோற்றங்கள் ஆகியவை கதைகளுக்கு வலுவையும் உணர்வுகளையும் கொடுக்கின்றன. அவை குழந்தைகளுடைய ஆர்வம், கற்பனை மற்றும் சிந்திக்கும் திறன் ஆகியவைகளைத் தூண்டுகின்றன. பல நேரங்களில் கதைகளைக் கேட்கும் குழந்தைகளுடைய முக பாவங்களும் உடல் மொழியும் சொல்லுபவருடைய பாவனைகளையும் மற்றும் உடல்மொழியையும் துல்லியமாகப் பிரதிபலிக்கும்.

    சிந்தனைத் திறத்தை (Thinking Skills ) வளர்ப்பதற்கு கதைகள் மிகவும் துணையாக இருக்கின்றன. தெனாலி ராமன் கதைகள், அக்பர் பீர்பால் கதைகள் , விக்ரமாதித்தன் கதைகள், பஞ்சதந்திரக் கதைகள், மரியாதை ராமன் கதைகள்  என பலவிதமான கதைகள் Lateral Thinking , analytical thinking, critical thinking, Creative thinking என்று தற்காலத்தில் வகுத்துச் சொல்லப்படும் சிந்தனைத் திறன்களை வளப்படுத்த உதவுகின்றன.

    பல நேரங்களில் கதைகளைக் கேட்கும் குழந்தைகள் அந்தக் கதைகளின் கதாநாயகர்களாகவே மாறிவிடுகின்றனர். கதைகளைக் கேட்டபின் அந்த உணர்வுகள் அதிக நேரம் அவர்கள் மனதில் தங்கி இரவில் தூக்கத்திலும் அவர்களை பாதிப்பது மனநல நிபுணர்களால் வெளிச்சமிட்டுக் காட்டப்பட்டுள்ளது. தூக்கத்தில் பேசுதல், பிதற்றுதல், பயப்படுதல், சிரித்தல், அலறுதல், சிறுநீர் கழித்தல் போன்ற பல நிகழ்வுகள் அன்று கேட்கப்பட்ட கதைகளின் பாதிப்பாக வெளிப்படுகின்றன. சில நேரங்களில் காடுகளின் நடுவில் தொலைந்துபோவது போன்ற உணர்வுகள், பேய் , பூதம் போன்ற ஒரு மாய மன உருவங்களைப் படைத்து பயப்படுதல் ஆகியவை மிகச் சாதரணமாக நடக்கக் கூடிய செயல்கள். ஆகவே குழந்தைகளுக்கு எந்த மாதிரியான கதைகள் சொல்லவேண்டும், எந்த நேரத்தில் சொல்ல வேண்டும், அவை என்ன பாதிப்புகளை ஏற்படுத்தும் என்ற கருத்துகளை பெற்றோர்களும் ஆசிரியர்களும் மனதில் கொள்ளுதல்  அவசியம்.

    தற்காலத்தில் அனேகக் கதைகள் சித்திர வடிவில் புத்தகங்களாக அமைக்கப்பட்டு குழந்தைகளுக்குக் கிடைக்கின்றன. பல நேரங்களில் அந்தப் புத்தகங்களில் வடிவமைக்கப்பட்ட உருவங்கள் உண்மைக்கு மாறுபட்டதாகவும் கேலிச்சித்திரங்களாகவும் அமைந்து தவறான கருத்துகளையும் உருவகங்களையும் உண்டாக்குவதற்கு வாய்ப்பை அளிக்கின்றன. ஆகவே குழந்தைகளுக்கு கதைப் புத்தகங்கள் வாங்கும் பொழுது பெற்றோர்கள் அவைகளின் தரத்தை ஆய்ந்து வாங்குதல் அவசியம்.

    கதைகள் கற்றலின் ஒரு முக்கியமான அங்கம்.  .. மேலும் இதைப் பற்றி அறிவோம்.

    Share
  • வாழும் கலை : மரணமில்லா ஜே.கே. தத்துவங்கள் – நூல் மதிப்புரை

    — இன்னம்பூரான்.

     

    jk2

    வாழும் கலை: மரணமில்லாத ஜே.கே. தத்துவங்கள்

    பி.எஸ்.ஆர். ராவ். (2007/2013) சென்னை; நர்மதா பதிப்பகம்
    புத்தக விமர்சனம்: இன்னம்பூரான்

    கைரேகைகளைப் போல அவரவரது வாழ்க்கையின் நடை, தனது அழியா வரிகளைப் பதித்து விடுகிறது. நாம் எஞ்சிய வாழ்க்கையின் போது அவற்றை அழிக்கமுடியாது என்றாலும், வருகை புரியும் ரேகைகளின் ஆளுமை பிற்கால வாழ்வியலை நிர்ணயிக்கும். ஜிட்டு கிருஷ்ணமூர்த்தி அவர்கள் ( ஜே.கே. ) மே 11, 1895 அன்று மதனப்பள்ளியில் ஜனித்தார். ஆசாரசீலர்களான ஒரு வளநாடு தெலுங்கு பிராமணக்குடும்பம் என்று பி.எஸ். ஆர். ஆர். குறிப்பிட்டதில் ஒரு நுட்பம் காண்கிறேன். ‘எங்கிருந்தோ வந்தான்…’ என்ற பாரதி வாக்குப்படி, மதனப்பள்ளி கட்டுப்பெட்டிக் குடும்பத்து பையன், தந்தையின் அலுவல் பொருட்டு சென்னையில் வந்திருந்து, பிரம்மஞ்ஞான சபையில் [The Theosophical Society, of which I became a member,decades later.] ‘முத்துக்குளித்து’ அன்னி பெசண்ட் அம்மையாரால் கடவுளின் அவதாரம் என்று பிரகடனம் செய்யப்பட்டவனானான். சர்ச்சைகள் கிளம்பி அடங்கின. தனது அபிமான புத்திரனாக, இவரை அம்மையார் அறிவித்தவுடன், ஜே.கே உலகுக்கே குரு என்ற கருத்து, பிரம்மஞ்ஞான சபையின் தாரக மந்திரம் ஆயிற்று. மனிதர்களில் அவரொரு மாணிக்கம் (ஆர்டர் ஆஃப் த ஸ்டார் இன் தி ஈஸ்ட்) என்று தான் அன்னி பெசண்ட் கூறி வந்தார். அந்தக் கருத்து நடைமுறைக்கு வந்திருந்தால், அவர் மிகவும் போற்றப்பட்டிருப்பார்; வணங்கப் பட்டிருப்பார்; மடாதிபதியாக மேலாண்மை பெற்றிருக்கலாம். ஒன்று நிச்சயம். இன்றளவில் சுவடு ஒன்றும் இல்லாமல் முழுமையாக மறக்கப்பட்டிருப்பார்.

    ஹாலந்தை சேர்ந்த ஓமன் நகரில் ஆகஸ்ட் 3, 1929 அன்று அந்தக்கூட்டத்தின் நக்ஷத்ர ஸ்தாபனத்தின் தலைவர் என்ற தகுதியின் படி தலைமை உரை ஆற்றிய ஜே.கே. அந்த ஸ்தாபனத்தைக் கலைத்து விட்டார். பிரம்மஞான சபையிலிருந்தும் விலகி விட்டார்.

    அந்தணக்குல ஜனனம் ஜனன ரேகை;
    பிரம்மஞான சபை பருவ ரேகை;
    அவதார பிரகடனம் அபிமான ரேகை;
    தன்னை தனித்து அமைத்துக்கொண்டது ஆத்மரேகை.

    [“கற்பனையும் ஊக்கமும் தொடமுடியாத பிரதேசத்தில் பயணம் செய்யத் தியானம் உதவுகிறது.” ~ ஜே.கே.]

    அது தான் நிர்ணயரேகையாக அமைந்தது, இன்றளவும் நம்மை சுய விசாரணை செய்ய உந்துகிறது.

    முன்னும் பின்னும் தெரியாதவற்றை விமர்சனம் செய்ய திறந்த மனதின் விகாசம் பெரிதும் உதவும். அண்டை வீட்டு பி.எஸ். ஆர். ராவ் அவர்களின் அன்றாட வாழ்க்கை ஜே.கே.யின் சிந்தனையின் தூய பிரதிபலிப்பு. ஒரு வருடத்துக்கு மேல் எனக்கு நெருங்கிய நண்பர். கருத்து வேறுபாடு அபரிமிதம் என்றாலும் சிந்தனை பரிமாற்றங்கள் எம் இருவரின் வாழும் கலைக்கு அர்ப்பணம். அதனால் இந்தப் புத்தக விமர்சனம் எனக்கு மெத்தக் கடினமாயிற்று. அதனுள் ஒரு நுட்பம். அது யாதெனில், திறந்த மனதின் விகாசத்தை நான் தேடி அலையும் போது, ஜே.கே. அவர்கள் கூறுவதை உன்னித்துக் கேட்கமுடிகிறது. முன்னும் பின்னும் தெரியாதவை கட்டியம் கூறுகின்றன. பீடிகை முற்றிற்று.

    “இருபதாம் நூற்றாண்டின் இணையற்ற தத்துவ ஞானம்.”

    “தன்னை அறிந்து இன்பமுற விழைவோருக்கு ஒரு பரிசுப்பதிப்பு.”

    என்ற சொற்றொடர்கள் நூலின் முகப்பை அலங்கரிக்கின்றன. இவை என்னை மிகவும் அலைக்கழித்த வரிகள். சுவாமி விவேகானந்தர், Bertrand Russell, Aldous Huxley, Jean Paul Sartre, Søren Aabye Kierkegaard போன்ற சிந்தனையாளர்கள் சிறு வயதிலேயே என் மனதை ஆக்கிரமித்தவர்கள். அந்தக் காலகட்டத்தில் ஜே.கே. அவர்களை அறிய நேர்ந்ததே நல்லதொரு வாய்ப்பு. சிலந்தி வலை போல் உமிழ்ந்து பின்னப்பட்ட என் சிந்தனை வலை, தட்டி உதற வேண்டிய ஒட்டடையாகப் போகாமல் இருப்பதற்கு, அந்த அறிமுகம் பெரிதும் உதவியது. இல்லாவிடின், இந்த விமர்சனம் எழுதுவது சாத்தியமில்லை.

    மானிடராகப் பிறப்பு எய்தியவர்கள் அன்றாடம் சந்திக்கும் கருத்துலகம்

    ~ உண்மை, ஒழுங்கு, அன்பு, எளிமை, சுதந்திரம் என்ற வரிசையில் தொடங்கி,

    ~ அறிந்து கொள்வது, ஆழ்ந்து கேட்பது, தனித்துச் செயல்படுவது போன்ற செயல்பாடுகளை விவரித்து,

    ~ அகம்பாவம், முரண்பாடுகள், இம்சை, பயம், பிரச்சினை, யுத்தம் போன்ற தீய தன்மைகளையும்,

    ~ கட்டுப்படுத்தும் அதிகாரம், ஜீவிதம், கல்வி, உளவியல் புரட்சி, மனித உறவுகள் போன்ற அன்றாட நடைமுறைகளையும்,

    ~ பிம்பங்கள், எண்ணங்கள், கல்வி, சமயம் போன்ற தலைப்புகள் மூலம் வாழ்வியல் தத்துவங்களையும்,

    இந்த நூலின் 41 பகுதிகள் எடுத்துரைக்கும். அவற்றின் அமரிக்கையான தன்மையும், அடுக்கி வைத்த வரிசையும், கலையார்வத்துடன் நன்முத்துக்களைப் பதித்த ஆபரணங்களைப் போன்ற சொல்லலங்காரமும் போற்றத்தக்கவைதான். இந்த ஆபரணத்தோற்றம், திரு. பி.எஸ்.ஆர். ராவ் அவர்களுக்குத் தென்பட்டிருக்காது. தள்ளி நின்று விமர்சனம் செய்பவர் கண்ணில்தான் படும்.

    நூலாசிரியர் தன் முன்னுரையில்,

    “ஜே.கே.யின் நூல்களையும் சொற்பொழிவுகளையும் புரிந்து கொள்வது மிகவும் கடினமாக இருக்கிறது என்று நிறைய பேர்கள் என்னிடம் கூறியிருக்கிறார்கள். அவருடைய சிந்தனைகளை சாதாரண படிப்பு படித்தவர்கள் கூட புரிந்து கொள்ளும்படி, நடைமுறையில் இருந்து வரும் எளிய வார்த்தைகளைப் பயன்படுத்தி இந்த நூலை எழுதியிருக்கிறேன். இது மொழி பெயர்ப்பு அல்ல. இந்த நூலைப் படிப்பவர்கள் சிறந்த மனிதர்களாக உருவெடுப்பார்கள்.”

    என்றது நிதர்சனமாகத் தெரிகிறது.

    “ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம்”.

    “நாம் தேர்ந்து எடுக்கும் ஜீவிதம் உன்னதமான, விசாலமான, பயனுள்ள, சிறந்த குறிக்கோள்களை உள்ளடக்கியதாக இருக்கவேண்டும்… உலக அமைதியை நிலை நாட்டுவதற்கு உதவுவதாக இருக்கவேண்டும். அராஜகம், கலவரம், யுத்தம் போன்றவற்றை உருவாக்காதபடி நம் ஜீவிதம் அமைய வேண்டும்… வானம், காற்று, நீர், மலை, கடல், மிருகங்கள், பறவைகள், நீர் வாழ் உயிரினங்கள், செடி, கொடிகள் போன்ற அனைத்துடனும் நாம் நல்ல ஆரோக்கியமான உறவை வளர்த்துக்கொள்ள வேண்டும்…. இன்று மனிதன் வாழும் ஜீவிதம் வேதனை நிறைந்ததாகவும், சுவையற்றதாகவும், சலிப்பு நிறைந்ததாகவும் இருந்து வருகிறது…. மகிழ்ச்சியும் இன்பமும் தரும் ஜீவிதத்தை நீங்கள்தான் உருவாக்கிக்கொள்ள வேண்டும்….. மதம், கடவுள்கள், கோவில்கள், தேவாலயங்கள், மசூதிகள் போன்றவை சம்பந்தப்பட்ட ஜீவிதங்கள் நல்ல ஜீவிதங்களாக இருக்க முடியாது. அவை அனைத்தும் மனித இனத்தைப் பல பிரிவுகளாகப் பிரித்து… மனித வாழ்க்கையை வேதனை நிறைந்ததாக மாற்றி வருகின்றன….. ஜே.கே. சொன்ன உளவியல் வழிமுறைகளைப் பின்பற்றுவதின் மூலம்தான் உலகில் இருந்து வரும் கெட்டவை அனைத்தையும் அகற்ற முடியும்… உங்களுடைய எதிர்பார்ப்புகளைப் பொறுத்துத்தான் உங்கள் ஜீவிதங்கள் அமையும்… நன்கு பராமரிக்கப்பட்ட பழச்செடி நிறைய ருசியான பழங்களைத் தருவது போன்று நன்கு பராமரிக்கப்பட்ட ஜீவிதமும் மகிழ்ச்சி நிறைந்த வாழ்க்கையைத் தரும்.”
    [நூல்: பக்கங்கள்: 194 -210].

    ஆசிரியர் எளிய முறையில் எழுதியதை, இந்த 33வது உட்பொதிவு ஆன ஜீவிதத்தின் சாராம்சம் பிரதிபலிக்கிறது. ஒவ்வொரு உட்பொதிவும் அவ்வாறே அமைந்து, ஜே.கே.யின் தத்துவத் திறவுகோலாக இயங்குகின்றன.

    தியானம் என்ற 39வது உட்பொதிவு ஒரு அமைதியான புரட்சி.

    “கற்பனையும் ஊக்கமும் தொடமுடியாத பிரதேசத்தில் பயணம் செய்ய தியானம் உதவுகிறது… தியானத்திற்கு ஆரம்பமும் இல்லை, முடிவும் இல்லை. அது அவன் முழு வாழ்க்கையைத் தழுவியதாக இருக்கவேண்டும்… தியானம் என்பது முழுமையான கவனம்தான்… எண்ணங்களை ஒருமுகப்படுத்துவது தியானம் அல்ல… ஏகாந்தமான நிலையில் மௌனம் என்ற அழகான மலர் வளரும். அன்பு ஆறாக உருவெடுத்து ஓடும். அப்போது மனவருத்தங்கள் முரண்பாடுகள் போன்ற எதுவும் இருக்காது.”
    [நூல்: பக்கங்கள் 286 -311]

    ஜே.கே.யின் சிந்தனைகள், கேள்வி-பதில் என்ற உட்பொதிவுகள் இந்த நூலுக்கு ஒரு முழுமையை அளிக்கின்றன. They are remarkable exercises in filling up the blanks. ஜே.கே. தன்னுடைய சிந்தனைகளுக்கு ஏகபோகம் கொண்டாடியதும் இல்லை. அவற்றிற்கு ஈடு, இணையில்லை என்று சொந்தம் கொண்டாடியதும் இல்லை. அவர் ஒரு சிந்தனை மார்க்கம் வகுத்தார். பயணிகளைக் கட்டுப்பாட்டுக்குள் வைக்கவில்லை. அது போதும்.

    இலக்கிய / தத்துவ / சிந்தனை உலகில், புத்தக விமரிசனங்கள் நீண்டதாகவே அமையும். நூலின் உள்ளடக்கத்தைக் கூறுவதும், ஆசிரியரின் அணுகு முறையை அலசுவதுதான் முதலிடம் பெறும். விமர்சகரின் கருத்துக்கள் எல்லாம் இடம் பெறுவதில்லை… ஜே.கே.’எந்த நூலையும் யாருடைய வார்த்தையையும் மேற்கோள் காட்டாமல் வாழ்க்கை பற்றியும் அதன் பொருள் (அல்லது பொருளின்மை) பற்றியும் பேசியவர்’ என்று தி இந்து இதழில் ஐந்து வருடங்கள் முன்னால் திரு. அரவிந்தன் எழுதியதும், ஜே.கே. நம்மையே நம் வினாக்களுக்கு விடை அளிக்க வைக்கும் அனுபவமும் நினைவில் இருப்பதால், நான் ஒப்பீடு ஆய்வுகளில் இறங்கவில்லை.

    சிந்தனைகள் பயணிக்கும் விதம் பற்றி சில வரிகள். வல்லமை இதழின் பன்முகம் அறிவோம். நூல்களை மதிப்பீடு செய்வது பற்றி ஒரு கருத்து பரிமாற்றம். இந்த நூலை மதிப்பீடு செய்ய சொல்லி ஒரு பரிந்துரை. அது நிறைவேற்றப்படுகிறது. வல்லமை இதழுக்கும், பரிந்துரை செய்த நண்பர்கள் அண்ணா கண்ணனுக்கும், தேமொழிக்கும், நூலாசிரியர் திரு. பி.எஸ்.ஆர். ராவ் அவர்களுக்கும் என் நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
    -#-

    சித்திரத்துக்கு நன்றி: http://img1.dinamalar.com/admin/Bookimages/5915156.jpg

    இன்னம்பூரான்
    மார்ச் 6, 2016

    http://innamburan.blogspot.co.uk
    http://innamburan.blogspot.de/view/magazine
    www.olitamizh.com

    Share
  • தமிழில் இயற்பியல் கணிதம் பாடங்களின் விளக்கக் காணொளி குறுந்தகடுகள்

    தமிழில் இயற்பியல் கணிதம் பாடங்களின் விளக்கக் காணொளி குறுந்தகடுகள் வழங்குதல் விழா

    Capture

    தேவகோட்டை – தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் அரசு உதவி பெறும் நடுநிலைப் பள்ளியில் நடைபெற்ற காட்சி வழி இயற்பியலும், கணிதமும், அவற்றின் விளக்க உரையும் கொண்ட பெருந்தொடர் வரிசையின் குறுந்தகடு வழங்குதல் விழா நடைபெற்றது.

    விழாவிற்கு வந்திருந்தோரைப் பள்ளி தலைமை ஆசிரியர் லெ. சொக்கலிங்கம் வரவேற்றார். பள்ளி செயலர் சோமசுந்தரம் தலைமை தங்கினார். பள்ளிக் கல்வி தலைவர் மீனாட்சி ஆட்சி, கண்ணங்குடி உதவித் தொடக்க கல்வி அலுவலர் அடைக்கலராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    அமெரிக்காவில் உள்ள உலக தமிழ் மொழி அறக்கட்டளையின் இயக்குநர் அழகப்பா ராம் மோகன் 52 பெருந்தொடர் குறுந்தகடுகளையும், இயந்திர அண்டத்துக்கு அப்பால் என்கிற 3 புத்தகங்களையும் வழங்கிச் சிறப்புரையாற்றுகையில், அறிவியல் இயற்பியல் மிகவும் முக்கியமானது. அதன் மொழி கணிதம். இவை வழி வந்தவையே வேதியியல் மற்றும் ஏனைய அறிவியல் துறைகள்.

    நாமும், நம்முடைய உலகமும், வகிக்கும் சூரிய குடும்பமும், அக் குடும்பம் இயங்கும் இந்த அண்ட வெளியும் அதன் விண்மீன் தொகுதிகளும் கொண்டதே இப் பிரபஞ்சம். அண்ட இயந்திரம் என்ற இப்பிரபஞ்சத்தின் இயந்திரமயமான இயக்கத்தையும் அதற்கு அப்பாலும் உள்ள அறிவியல் உண்மைகள் உங்கள் கைகளில் தவழும் இந்த நூல் மூன்று பகுதிகளாக வழங்குகிறது. இதை முதல் நூலாக அமெரிக்காவில் உள்ள ஆனேன்பெர்க் அறக்கட்டளையும், கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகமும் வெளியிட்டதைத் தொடர்ந்து இவை பரிசுகளையும், பல்வேறு நாட்டு அங்கீகாரத்தையும் உலகளாவிய முறையில் பெற்றுள்ளது. உலக அளவில் பல மொழிகளில் மொழி ஆக்கம் செய்யப்பட்டு பள்ளிகளிலும், கல்லூரிகளிலும் பல நாடுகளில் இயற்பியல் துறையில் சாதனைப் படைத்து கற்பிக்கப்படுகிறது. அதன் தமிழ் வடிவமே நீங்கள் பார்க்கும் இந்த நூல். இயற்பியலை 26 மணியளவில் 52 அரை மணி நேரக் காட்சிகளாகவும், ஒவ்வொரு காட்சிக்கும் துணைப் பாடமாக இரு பகுதிகளாக கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தால் எழுதித் தயாரிக்கப்பட்டது. இந்த நூல்கள் .அதோடு இந்த நூல்களில் வரும் கேள்விகளுக்கு விடையும் மூன்றாவது பகுதியாக தரப்பட்டுள்ளது.

    ‘ஞாயிறு போற்றுதும் ஞாயிறு போற்றுதும்’ என்று நமது சூரிய குடும்பத் தலைவனைப் போற்றி தனது சிலம்பு காவியத்தை இளங்கோ அடிகள் தொடங்குகிறார். இந்தக் கதிரவன் வரலாறு தான் நம் வரலாறு. அந்த வரலாறு தான் இயற்பியல். அதனை இரு தொகுதிகளாக இப் புத்தகம் விளக்குகிறது.

    முதல் தொகுதி விண்ணில் இயங்கும் பெரிய உருக்களைப் பற்றி காட்சி வடிவிலும் எழுத்து வடிவிலும் செல்கிறது. அதனை ‘இயந்திர அண்டம்’என்ற தலைப்பில் விளக்குகிறது.

    அதனை அடுத்து இரண்டாம் தொகுதி ‘இயந்திர அண்டமும் அதற்கு அப்பாலும்’ என்று பிரபஞ்சத்தில் இயங்கும் மிகச் சிறிய உருக்களைப் பற்றி காட்சி வடிவிலும் எழுத்து வடிவிலும் சொல்லி செல்கிறது.

    இதனை இளம் வயது மாணவர்களாகிய நீங்கள் நன்றாகப் பார்த்து எதிர்காலத்தில் அறிவியல் விஞ்ஞானிகளாக வர வேண்டும் என்று பேசினார்.

    திருக்குறள்தான் தமிழர்களின் அடையாளம் என்றும் பேசினார். குறுந்தகடு பெரிய திரையில் வெளியிடப்பட்டது.மாணவர்கள் ஆர்வமுடன் கண்டு களித்தனர்.அறிவியல் தொடர்பாக காட்சி வழி ஆர்வமூட்டுவதாக இருந்ததாகத் தெரிவித்தனர். விழா நிறைவாக ஆசிரியை முத்து லெட்சுமி நன்றி கூறினார்.

    பட விளக்கம் : தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் அரசு உதவி பெறும் நடுநிலைப் பள்ளியில் நடைபெற்ற காட்சி வழி இயற்பியலும்,கணிதமும் ,அவற்றின் விளக்க உரையும் கொண்ட பெருந்தொடர் வரிசையின் குறுந்தகடு வழங்குதல் விழா நடைபெற்றது.

    L.Chokkalingam,M.Sc,M.Phil,B.Ed,PGDHRM,BLISc,DGT
    Head Master,
    Chairman Manicka Vasagam Middle School,
    Devakottai.630 302.
    Sivagangai Dist.
    TamilNadu.
    09786113160.
    E-Mail : jeyamchok@gmail.com
    http://www.kalviyeselvam.blogspot.in/

    Share
  • குன்றுகளைக் குடைந்து கடலடியிலே தோண்டிய உலகிலே நீண்ட ஜப்பான் செய்கான் அதிசயக் குகை

    — சி. ஜெயபாரதன்.

     

     

    Seikan Subsea Mountain Tunnel

     

    [Japan ‘s Seikan Subsea Mountain Tunnel]

    சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear), கனடா

    +++++++++++++++

    https://youtu.be/HX-yhXFK7ss

    https://youtu.be/7lcwecXiL0I

    https://youtu.be/5nYGzo7QcUM

    முன்னுரை: இரண்டாம் உலகப் போரில் தோற்றுச் சரணடைந்த ஜப்பான், அதி விரைவில் எழுந்து ஐரோப்பிய, அமெரிக்க நாடுகளைப் போல் தொழில் வளத்தில் முன்னேறி, ஆசியாவின் பொறித்துறைப் பூதமாகவும், வல்லரசாகவும் உச்ச இடத்தைப் பிடித்துக் கொண்டுள்ளது! நவீனப் பொறி நுணுக்கங்களும், தொழிற்துறை நூதனங்களும் படைக்கும் மிகச் சுறுசுறுப்பான மாந்தரைக் கொண்டது ஜப்பான் தேசம்! தேள் கொடுக்கு போல் வளைந்த ஜப்பான் தேசம் சுமார் 7000 தீவுகளைத் தன்னகத்தே சேர்த்துக் கொண்டுள்ளது! 127 மில்லியன் ஜனத்தொகை கொண்ட ஜப்பான் தீவுகளின் பரப்பளவை ஒப்பிட்டால் அமெரிக்காவின் கலிஃபோர்னியா மாநிலத்திற்கு நிகராகும்! ஜப்பானின் நான்கு பெரிய தீவுகளும், அநேக சிறிய தீவுகளும் 2000 மைல் தூரம் நீண்டு வளைந்து பரவியவை! ஆண்டுக்கு 10,000 நிலநடுக்கங்கள் ஜப்பான் தீவுகளுக்கு அண்டையில் நேருகின்றன! அவற்றில் குறைந்தது 40 நிலநடுக்கம் ஜப்பான் நிலப் பகுதியில் மட்டும் ஏற்படுகின்றன! ஆயினும் நான்கு தீவுகளை இணைக்கும் நீளமான பாலங்களையும், ஆழமான கடற் குகைகளையும், மலைக் குகைப் பாதைகளையும், அவற்றின் ஊடே புகும் அதிவேக புள்ளெட் இரயில் வண்டிகளையும், [Bullet Trains] கோடிக் கணக்கான டாலர் செலவழித்து, ஜப்பான் நுணுக்கமாகக் கட்டிக் கண்காணித்து வருவது பேராச்சரியம் அளிக்கிறது!

    1954 இல் அடித்தக் கடற் சூறாவளியில் சுகரு நீர்ச்சந்தியில் [Tsugaru Strait] ஜப்பானியரை ஏற்றிச் சென்ற ஐந்து மீட்சிப் படகுகள் [Ferry Boats] கவிழ்ந்து 1314 பேர் மூழ்கிப் போயினர்! பொது மக்களின் பெரும் போராட்டத்தின் விளைவாய், ஜப்பான் அரசு அந்த நீர்ச்சந்தியைப் பாதுகாப்பாகக் கடக்க ஆழ்ந்து சிந்திக்க ஆரம்பித்தது! அம்முயற்சி பத்தாண்டுகளுக்குப் பிறகு 1964 ஆம் ஆண்டில் வெளிப்பட்டு, உலகிலே நீண்ட செய்கன் கடலடிக் குகை, ஹோன்சூ தீவுக்கும் ஹோக்கைடு தீவுக்கும் இடையே [Between Honshu & Hokkaidu Islands] கட்டப்பட்டு, 1988 முதல் அனுதினமும் இரயில் வண்டிகள் அதன் வழியே போய் வருகின்றன. அடுத்துத் தென்திசையில் ஹோன்சூ தீவை ஷிகோகுத் தீவுடன் [Shikoku] இணைக்க 22.5 மைல் தூரத்தில் இடையிடையே நிலத்துடன் சேர்ந்த உலகிலே நீண்ட ஊஞ்சற் பாலங்களும், முறுக்குநாண் பாலங்களும் [Suspension & Cable-stayed Bridges] அமைக்கப் பட்டன. கடல் இடையே மிதக்கும் எண்ணற்ற தீவுகளையும், மலை இடையே அமைந்த நகரங்களையும் போக்குவரத்து மூலம் சேர்க்க பலவிதக் குகைகள், பாலங்கள், இரயில் பாதைகள் அமைத்த ஜப்பான் உலகில் சிறந்த சிவில் பொறியியல் நிபுணத்துவ நாடாகப் பெயர் பெற்றுள்ளது!

    செய்கான் கடலடிக் கணவாயின் சிறப்பு அம்சங்கள்

    பிரிட்டனுக்கும் பிரான்ஸிற்கும் இடையே கட்டப்பட்ட ஈரோக்குகை [Eurotunnel (1994)], ஜப்பானின் வடதிசைத் தீவை மையத் தீவுடன் இணைக்கும் செய்கன் கடற்குகை [Seikan Tunnel (1988)] ஆகிய இரண்டுக்கும் உள்ள வேறுபாடுகள் என்ன ? மலைகளைக் குடைந்து கட்டப்பட்ட செய்கன் குகையே, மொத்த நீளத்தில் 33.4 மைல் [174,240 அடி (53.9 கி.மீ)] தூரம் கொண்டு ஈரோகுகையை விடச் சற்று நீண்டதாக உள்ளது. 800 அடிவரைக் கடலுக்குக் கீழே செல்லும் செய்கான், ஈரோகுகையை விட, ஆழத்திலும் உலகத்திலே முதன்மையாகக் கருதப்படுகிறது. ஆனால் கடற்பரப்பு நீளத்தை ஒப்பிடும் போது, ஈரோகுகையே உலகில் முதன்மை இடத்தைப் பெறுகிறது. செய்கன் குகை 14.3 மைல் நீளமானக் கடல் பகுதியைக் கடக்கிறது. இங்கிலீஷ் கால்வாயில் ஈரோகுகையின் கடற்தளக் கடப்பு நீளம்: 24 மைல். ஈரோ குகையின் நீளம்: 31 மைல் [50.45 கி.மீ]. அதன் ஆழம் 150-250 அடிவரைச் செல்கிறது. அடுத்து நிலநடுக்கப் பாதுகாப்பு உளவிகள் பதிக்கப்பட்டு, மேன்மையானப் பொறி நுணுக்க முற்பாடுகளில் அமைந்தது, செய்கன் குகை! பதினேழு ஆண்டுகளாய் 13.8 மில்லியன் பணியாளிகள் வேலை பார்த்த அந்த இமாலயத் திட்டத்தில் உயிரிழந்தவர் எண்ணிக்கை 33! அச்சிறிய எண்ணிக்கை ஜப்பானியரின் உன்னதப் பாதுகாப்பு நிர்வாகத்தை எடுத்துக் காட்டுகிறது!

    Rail tunnel Drilling

    சுண்ணாம்பு அடுக்குத் தளத்தில் துளையிட்ட குடையும் யந்திரங்கள் [Tunnel Boring Machine] ஈரோகுகையில் பயன்பட்டது போல், செய்கன் குகை முழுவதும் துளைக்கப் படவில்லை! காரணம் எரிமலைப் பாறைகள் இங்கும் அங்குமாய் அடுக்கப்பட்டுக் கிடந்தன. திட்டு திட்டான அந்தப் பாறைகளை வெடி மருந்தால் பிளக்க வேண்டிய தாயிற்று! மலைகளைக் குடைந்து, கடலடியே தோண்டி 33 மைல் நீண்ட குகையை முடிக்க 17 ஆண்டுகள் ஆயின. 800 அடி உச்ச ஆழத்தில் குகை தோண்டப்பட்டு, இரட்டை இருப்புப் பாதைகள் கொண்டு, அதி வேக சின்கன்ஸென் புள்ளெட் இரயில் தொடரோட்டப் போக்குவரத்துக்கு [Sinkansen Network High Speed Bullet Train] ஏற்றதாய் அமைக்கப் பட்டுள்ளது. ஆனால் தற்போது [மீடர்கேஜ்] குற்றகல இரயில் வண்டிகள் மட்டும் செய்கன் குகை வழியாக அனுமதிக்கப் படுகின்றன.

    செய்கான் கடலடிக் குகை அமைப்பில் ஏற்பட்ட சிக்கல்கள்

    ஹோக்கைடு தீவு பல்லாண்டுகளாக ஜப்பானியருக்கு ஒரு புதிய தேடல் பூமியாய்த் தோன்றி வரவேற் பளித்தது! அங்கே புதையல் களஞ்சியமாய்ச் செழித்துக் கிடந்த இயற்கை வளத்தைத் [Natural Resources] தோண்டிப் பிரதம தீவான ஹோன்சூவுக்குக் கொண்டு வருவதற்கு, மெதுவகச் செல்லும் கடல்வழித் துறையே பயன்பட்டு வந்தது. ஆனால் ஹோன்சூ, ஹோக்கைடு தீவுகளுக்கு இடையே உள்ள குறுகிய சுகரு நீர்ச்சந்தி [Tsugaru Strait] மிகக் கொந்தளிப்புள்ள கடற்பகுதி! 1954 இல் அவ்மோரி, ஹகோடேட் நகரங்களுக்கு [Aomori,Hakodate] இடையே பயணம் செய்யும் டோயா மாரு என்னும் இரயில் மீள்கப்பல் [Toya-Maru Train Ferry], ஓர் அசுரச் சூறாவளியில் சிக்கிக் கடலில் கவிழ்ந்தது! அப்பயங்கர விபத்தில் 1314 பேர் மூழ்கி, 159 நபர் உயிர் பிழைத்தனர்! ஜப்பானியர் அந்நிகழ்ச்சிக்குப் பிறகு எழுப்பிய குரலே, செய்கன் குகை இரயில் பாதை அமைக்க விதை யிட்டது!

    1971 ஆம் ஆண்டில் தோண்டும் பணிகள் துவக்கப்பட்டன. செய்கன் குகையை டிசைன் செய்து கட்டி முடித்த எஞ்சினியர் யாவரும் ஜப்பான் இரயில்வே கட்டமைப்பு வாரியப் பணியாளர்கள் [Japan Railway Construction Corporation]. திட்ட மிட்டக் குகை 33 மைல் தூரம் நீண்டதால், முக்கியக் குகையைக் குடைவதற்கு முன்பு, முதலில் முன்பணிக் குகையும் [Pilot Tunnel] பராமரிப்புக் குகையும் [Service Tunnel] அருகே இணையாகத் தோண்ட வேண்டிய தாயிற்று. முன்பணிக் குகைத் தளமட்டம், திசைநோக்கு, நிலப்பண்பு ஆகியவற்றை அறியும் சர்வே, புவியியல் கருவிகளைப் [Survey & Geological Instruments] பயன்படுத்தத் தேவைப் பட்டது. பராமரிப்புக் குகை வழியாகப் பணியாளிகள் நுழையவும், வெட்டுப் பாறைக் கற்களை வெளியேற்றவும் இருப்புப் பாதை வண்டிகள் செல்ல வசதிகள் அமைக்கப் பட்டன. பதினேழு ஆண்டுகளாக 800 அடி ஆழத்தில் கடலடியே பணி செய்ததில், 33 பேர் மொத்தம் உயிரிழந்ததாக அறியப்படுகிறது!

    1976 ஆம் ஆண்டில் குகைப்பணி தொடர்ந்து கொண்டிருந்த போது, எதிர்பாராத விதமாக ஒரு வெள்ள விபத்து ஏற்பட்டு இன்னலை உண்டாக்கியது! பணியாளிகள் மென்மையான பாறை அடுக்கு ஒன்றை உடைத்த போது, பேரிடர் விளைந்தது! பீறிட்டுக் கடல் வெள்ளம் உடைத்துக் கொண்டு பாய்ந்து, குகைக்குள்ளே நிமிடத்துக்கு 80 டன் வீதம் கொட்டிக் குவிந்தது! நல்ல வேளையாக மனிதர் எவருக்கும் ஆபத்து நேரவில்லை! ஆனால் கடல்நீர்க் கசிவு ஓட்டத்தை நிறுத்தி, குகைநீரை உறிஞ்சி வெளியேற்ற 60 நாட்கள் பிடித்தன!

    ஜப்பான் மலைகளுக்குள் எரிமலை அடுக்குப் பாறைகள்

    மலைகளுக்கு இடையே 24 மைல் அகண்ட மடியில் கொந்தளிக்கும் கடலுக்கு அடியில் 800 அடி ஆழத்தில் குகை அமைப்பது எப்படி ? முதலில் தளப்பண்பு நிபுணர்கள் [Geologists] சோதனைத் துளைகள் இட்டு, நிலமண்களை ஆராய வேண்டும். அதற்காக இரண்டு தீவுகளிலும் தனித்தனியாகச் சிறிய செங்குத்துக் கிணறுகள் [Vertical Shafts] தோண்டப்பட்டன. அவ்விதம் உட்சென்று எடுத்த மாதிரிப் பாறைக் கட்டிகள் உடையும் தன்மையும், துளைகளும் [Breakable & Porous] பெற்றிருந்ததால் அவை யாவும் எரிமலைப் படிமான பாறைகளாக அறியப்பட்டன! குகை தோண்ட ஆரம்பித்த பின்பு, அதிகரித்த நீர்க் கசிவுகளும், அழுத்தமான நீர்ப் பாய்ச்சலும் ஏற்பட்டுத் தொல்லைப் படுத்தின!

    தொடர்ந்து பெருகும் நீரை வெளியேற்றுவதும், சேர்ந்து போகும் சகதியை நீக்குவதும் பெரிய பிரச்சனைகள் ஆயின! ஜப்பானிய நிபுணர் படைத்த பொறி நுணுக்க சாதனங்களால், இன்னல்களும் பிரச்சனைகளும் குறைக்கப் பட்டுக் குகைப் பணிகள் தொடர்ந்தன. அதிக அழுத்தமுடன் சோடியம் சிலிகேட் செமென்ட் [High Pressure Injection of Sodium Silicate Cement] நுழைக்கப் பட்டு, நீர்க் கசிவுகள் அடைக்கப்பட்டு அறவே நீக்கப் பட்டன. பாறைக் குடைவுகள் முடிந்ததும், காங்கிரீட் திரவத்தைக் குகைச் சுவர்களில் தெளித்து உடனே பாறைக் குழிகள் மூடப்பட்டு உறுதிப் படுத்தப்பட்டன.

    சுகரு நீர்ச்சந்திக்குக் [Tsugaru Strait] கீழே இருந்த நிலப்பரப்புப் பகுதி யாவும் எரிமலைப் பாறையாகக் [Volcanic Rock] காணப் பட்டதால், பொதுவாகக் கையாளப்படும் குகைக் குடையும் யந்திரம் [Tunnel Boring Machine (TBM)] அங்கே முழுமையாகப் பயன்படவில்லை! கடலடிக் குகையைத் தோண்ட 2800 டன்

    வெடி மருந்தைப் பயன்படுத்தி மலைப் பாறைகளைக் குடைந்து துளைக்க நேரிட்டது! 180,000 டன் தேனிரும்புக் கம்பிகளும், சாதனங்களும் குகைக்குக் காங்கிரீட கவசமிடத் தேவைப் பட்டன! கடல் மட்டத்துக்கு 800 அடி ஆழத்தில் சில பகுதிகளில் அமைப்பான செய்கன் குகைப்பாதை, உலகிலே மிக ஆழ இரயில் பாதையாகக் கருதப்படுகிறது! பிரதமப் பெருங்குகையின் விட்டம் சுமார் 32 அடி. சிறியதானப் பராமரிப்புக் குகையின் அகலம் 16 அடி.

    33 மைல் நீள இரட்டை இரயில் பாதைகள் ஒவ்வொன்றும் மூன்று தண்டவாளங்கள் கொண்டிருந்தன. அவ்விதம் அமைப்பதால், குறுகிய அகற்சி, பெருகிய அகற்சி இரயில் வண்டிகள் [Narrow Gauge & Broad Gauge Trains] இரண்டும் போவதற்கு வசதியாக இருக்கும். குகைக்குள் இரண்டு இரயில் நிலையங்கள் உள்ளன. ஒன்று: யோஷியோகா-கைத்தி நிலையம் [Yoshioka-Kaitei Station], அடுத்தது: டாப்பி-கைத்தி நிலையம் [Tappi-Kaitei Station]. இரண்டு நிலையங்களும் செய்கன் குகையின் வரலாறு, விளக்கம் அளிக்கும் காட்சி மையங்களாக [Museums] நிறுவகமாகி யுள்ளன.

    ஜப்பான் புள்ளெட் வேக ரயில்

    நிலநடுக்கம் தாலாட்டும் நித்திய பூமி!

    ஆண்டு தோறும் நிகழும் நிலநடுக்க ஆட்டங்களும், சூறாவளி, சுனாமி [Tsunami] புயல் அடிப்புகளும் ஜப்பானியர்களுக்கு ஆச்சரியமோ, அதிர்ச்சியோ அளிக்காதவை! உலகத்தின் 10 சதவீத நிலநடுக்கங்கள் டோக்கியோ தலைநகருக்கு அருகிய பகுதிகளில் நேருகின்றன! இயற்கை அன்னை விளைவிக்கும் கோர விபத்துகளை எதிர்பார்த்து, இடர்களை ஏற்றுக் கொண்டு மீண்டும் மீண்டும் சீர்ப்படுத்தி, உயிர்த்தெழும் ஜப்பானியரின் நெஞ்சுறுதிக்கு ஈடு, இணை உலகில் வேறு எங்கும் இல்லை! இல்லை!! இல்லை!!! ஒவ்வோர் ஆண்டு செப்டம்பர் முதல் தேதி அன்று, பூகம்ப எச்சரிக்கைப் பயிற்சிகள் தவறாது நடத்தப்பட்டு மக்களைத் தயாராக வைத்திருப்பது, போற்றத் தகுந்த ஓர் அரசாங்கப் பணி!

    1995 ஆம் ஆண்டு ஜனவரி 17 ஆம் தேதி கோப் [Kobe] பெரு நகரத்தின் அருகே 6.9 ரிக்டர் அளவில் நேர்ந்த 20 விநாடிப் பூகம்ப ஆட்டத்தில் இறந்தவர்: 5470. காயமடைந்தவர் 33,000! நிலநடுக்கத்தில் சிதைந்து போன இல்லங்கள்: 144,032! தீப்பற்றி மாய்ந்து போன வீடுகள்: 7456! கவிழ்ந்து போன கட்டடங்கள்: 82,091! முறிந்து போன மாளிகைகள்: 86,043! நிதி மதிப்பீட்டில் சிதைவுக்கு ஈடான தொகை: 200 பில்லியன் டாலர்! நீர்வசதி, மின்சார வசதி, எரிவாயு போன்ற மனிதருக்குத் தேவையான முக்கிய ஏற்பாடுகளை மீண்டும் உயிர்ப்பித்து இணைக்க 100 பில்லியன் டாலர் நிதி செலவானது! வாணிப நிதிவளத் தொழில் துறைகளை மீண்டும் இயக்க அடுத்து 50 பில்லியன் தொகை தேவைப்பட்டது! முக்கியமாக கார், வாகன, இரயில், கப்பல் போக்குவரத்துக்கள் நின்று போயின! காங்கிரீட் பாலங்கள் உடைந்து, இருப்புப் பாதைகள் நெளிந்து, பெரு வீதிகள் பிளந்து நகரங்கள் பெருஞ்சேத மடைந்தன.

    பூகம்ப ஆட்டத்தின் போது இரயில் ஓட்டப் பாதுகாப்பு!

    மணிக்கு 180 மைல் வேகத்தில் பாய்ந்து உலகிலே அதி விரைவில் ஓடும் புள்ளெட் இரயில்கள் ஜப்பான் ஒரு நாட்டில்தான் உள்ளன! அவை வேகத்துக்கும், பாதுகாப்புக்கும், குறித்த நேரத்துக்கும் பெயர் பெற்றவை! 1964 ஆண்டு முதல் இயங்கிவரும் புள்ளெட் இரயில் முன் விழுந்து தானாக மாய்ந்தவரைத் தவிர இதுவரை வண்டி கவிழ்ப்போ, தடப் புரட்டோ எதுவும் நேர்ந்து யாரும் உயிரிழந்த தில்லை! காலவரைக் கடைப்பிடிக்கப் பட்டு விநாடித் துல்லியமாக அனுதினமும் நிலையங்களை அடைகிறது, புள்ளெட் இரயில் வண்டி! ஓராண்டு ஓட்டத்தைக் கணக்கு எடுத்துப் பார்த்ததில், அனைத்து புள்ளெட் இரயில்களின் மொத்தக் கால தாமதம் 12 விநாடி என்று அறிவது வியப்பை அளிக்கிறது!

    புள்ளெட் இரயில் ஓடும் ஜப்பானின் இருப்புப்பாதை முழுவதிலும் இடையிடையே ‘நிலநடுக்க உளவிகள் ‘ [Seismometers] மாட்டப் பட்டிருக்கின்றன. அவற்றின் பணி, புவித்தள ஆட்டத்தை உணர்ந்து, ரிக்டர் அளவு 4 மேற்பட்ட சமயத்தில் அதி வேகத்தில் பாய்ந்து செல்லும் புள்ளெட் இரயிலை உடனே நிறுத்துவது! சக்தி வாய்ந்த நிலநடுக்க ஆற்றல் இருப்புப் பாதைகளை நெளித்து, இரயில் வண்டியைச் சாய்த்துவிடும் முன்னரே, முன்னறிவிப்புக் கருவிகள் வண்டியை நிறுத்துகின்றன! இரயில் பாதை அருகிலும், மற்றும் பாலங்கள், வீதிக் கம்பங்கள் ஆகியவற்றில் நிலநடுக்க ஆட்டத்தின் மட்டநிலை நகர்ச்சியைப் [Horizontal Displacements] பதிவு செய்யக் குறிக்கோடுகள் வரையப் பட்டுள்ளன! புள்ளெட் இரயில் போல மற்ற வாகனங்களும் 4 ரிக்டர் அளவுக்கு மிகையான பூகம்ப ஆட்டத்தின் போது நிறுத்தப் படுகின்றன.

    2003 ஆம் ஆண்டு செப்டம்பர் 25 இல் 8.3 ரிக்டர் அளவுப் பூகம்பம் மாலை 7:50 மணிக்கு ஹோக்கைடுப் பகுதியை [Hokkaido Region] ஆட்டியது! நல்ல வேளையாக தாக்கிய பூமி கரையிலிருந்து 25 மைல் அப்பால் கடற்பகுதியில் இருந்ததால், நகர மாந்தர் தப்பினர்! வீடுகள், வீதிகள், பாலங்கள், முக்கியமாக செய்கன் கடலடிக் குகை யாவும் பிழைத்துக் கொண்டன! ஆனால் அதே தீவில் செப்டம்பர் 26 ஆம் தேதி ஏற்பட்ட 8 ரிக்டர் நிலநடுக்கத்தில் 250 பேர் காயமுற்றனர்! யாரும் மரண மடைய வில்லை! 16,000 இல்லங்களில் மின்சக்தி அற்றுப் போனது! தொழிற் சாலைகளில் தீப் பற்றின! காங்கிரீட் வீதிகள் பிளவு பட்டன! நகரில் நீர்ப்பைப்புகள் துண்டிக்கப் பட்டன! கடலில் மீன்படகுகள் கவிழ்ந்தன! விமானத்தள மாளிகையின் கூரைக் குழிந்தது! நிலநடுக்கம் உண்டாக்கிய சுனாமியில் [Tsunami] கடல்நீர் மட்டம் 4.3 அடி உயர்ந்து, குஷிரோ நகரத்தின் [Kushiro City] கடற்கரைத் தாக்கப்பட்டு 41,000 மாந்தர் கடத்தப்படக் கட்டளை பிறந்தது! நல்ல வேளையாக ஹோக்கைடுத் தீவிலுள்ள அணுமின் நிலையத்திலோ அல்லது செய்கன் கடற்குகைப் பாதையிலோ எந்த விபத்தும், உடைப்பும் நேரவில்லை!.

    செய்கான் குகை இரயில் பாதைப் போக்கின் எதிர்காலம்

    ஜப்பானில் உள்ள சுமார் 3800 மலைக் குகைகளின் ஊடே செய்கன் குகையும் சேர்த்து, இரயில்கள் 1260 மைல் தூரம் [2100 கி.மீ.] அல்லும் பகலும் பயணம் செய்கின்றன. கடலடியில் 800 அடி உச்ச ஆழத்தில் குகை தோண்டப்பட்டு, இரட்டை இருப்புப் பாதைகள் கொண்டு, அதி வேக சின்கன்ஸென் புள்ளெட் இரயில் தொடரோட்டப் போக்குவரத்துக்கு [Sinkansen Network High Speed Bullet Train] ஏற்றதாய் அமைக்கப்பட்டு உள்ளது. ஆனால் தற்போது [மீடர்கேஜ்] குற்றகல இரயில் வண்டிகள் மட்டும் செய்கன் குகை வழியாக அனுமதிக்கப் படுகின்றன. காரணம், சின்கன்ஸென் தொடரோட்டப் போக்கில் செய்கன் குகை இரயில் பாதையை இணைப்பது பெரும் நிதி விழுங்கும் திட்டம்! 2020 ஆண்டுக்குப் பிறகுதான் அதை நிறைவேற்றப் போவதாக ஜப்பான் அறிவித்துள்ளது!

    நான்கு பெரிய தீவுகளையும் ஒப்பிட்டால், வடதிசையில் குளிர்ந்ததான ஹோக்கைடு தீவில் ஜனத்தொகை மிகவும் குறைவு. அதனால் குற்றகல இரயில் வண்டிகளே அங்கே போய் வருகின்றன. தற்போது ஜப்பானில் ஹோன்சூ, ஹோக்கைடு தீவுகளுக்கிடையே உள்ள விமானப் பயணச் செலவு, ஏறக் குறைய இரயில் பயணச் செலவை ஒட்டியதாக உள்ளதால், நிதி மிகையான புள்ளெட் இரயில் தொடர்பு இணைப்பு இப்போதைக்குள் நிகழப் போவதாய்த் தெரியவில்லை! எண்ணிக்கை முறையில் குறைவாகப் பயணங்களுக்கு பயன்பட்டாலும், ஆழமான செய்கன் கடலடிக் குகை இருபதாம் நூற்றாண்டின் ஓர் உன்னதப் பொறியியல் சாதனையாக உலகிலே கருதப்படுகிறது!

    ஜிப்ரால்டர் நீர்ச்சந்தியில் எதிர்காலக் கடலடிக் குகை!

    பிரிட்டன் தீவை ஈரோப்புடன் இணைக்கும் கடலடிக் குகை ‘ஈரோடன்னல் ‘ [Eurotunnel] 1994 ஆண்டு திறக்கப்பட்டு, மில்லியன் கணக்கான பயணிகள் சுற்றுலா இரயில் பயணத்தில் சென்று நிதிவளம் செழித்து வருகிறது! 2004 ஜனவரியில் ஸ்பெயின், மொராக்கோ அரசாங்கம் இரண்டும் ஈரோப்பையும், ஆஃபிரிக்காவையும் கடலடிக் குகை மூலம் இணைத்து, இரயில்பாதை அமைக்கத் தீர்மானித்துள்ளன! 19 ஆம் நூற்றாண்டில் சூயஸ் கால்வாயும், 20 ஆம் நூற்றாண்டில் பனாமா கால்வாயும் தோண்டப் பட்டது போல், 21 ஆம் நூற்றாண்டில் ஜிப்ரால்டர் குகைக் கணவாய்த் தோன்றப் போகிறது என்று பெருமிதமுடன் அறிவித்தன! 27 மில்லியன் ஈரோ நிதி மதிப்புடன் முன்னோடித் தளப்பண்பு உளவுகள் இப்போது திட்டமிடப் பட்டுள்ளன.

    ஜிப்ரால்டர் நிலச்சந்திக் குகை 24 மைல் நீளமும், கொந்தளிக்கும் கடலடித் தளம் 17 மைல் அகலமும் இருக்கும் என்று கணிக்கப் பட்டிருக்கிறது. கட்டப் போகும் கடற்குகை 300 அடி முதல் 1000 அடி ஆழத்தில் [100-300 மீடர்] அமைக்கப் பட்டு, உலகத்திலே மிக ஆழக்குகை என்று வரலாற்று முதன்மை பெறப் போகிறது! ஸ்பெயின் கம்பெனி இப்போதே 200 நீளச் சோதனைக் குகையைத் தோண்டி, மாதிரி மண்கள் ஆராயப்பட்டுத் தளப்பண்புகள் அறியப்படுகின்றன. அதேபோல் மொராக்கோ கம்பெனி 1000 அடி [300 மீடர்] ஆழக் கிணறு ஒன்றைத் தோண்டி தளப்பண்பு ஆய்வு செய்து வருகிறது. பத்து பில்லியன் ஈரோ நாணயத் திட்டச் செலவில் [2004 மதிப்பு] உருவாகப் போகும் ஜிப்ரால்டர் கடலடிக் குகை 2008 ஆம் ஆண்டில் முழுப் பணிகளைத் துவங்கப் போகிறது! சமீபத்தில் இரயில் வெடிகளை வைத்து ஸ்பெயின் தலைநகர் மெட்ரிட்டில் 200 பேர் மாண்டதற்கு, சில மொராக்கோ மூர்க்கர் காரணக் கர்த்தாக்கள் என்று அறியப் படுவதால், ஜிப்ரால்டர் குகைத் திட்டம் நிறுத்தப் படுமா அல்லது ஒத்திப் போடப் படுமா என்பது தெரியவில்லை! மேலும் மொராக்கோவிலிருந்து ஏராளமான புலப்பெயர்ச்சி முஸ்லீம் மாந்தர், சட்டத்தை மீறி நுழைந்து கொள்ள குகைப்பாதை தொடர்ந்து வழி வகுக்கும் என்று ஸ்பெயின் அரசாங்கம் கவலை கொண்டிருக்கிறது!

    தகவல்:

    1. National Geographic Picture Atlas of our World [1990]

    2. The Seikan Tunnel -A Short History of the Tsugaru Straits Line [www.pref.aomori.jp/]

    3. Science & Technology: The World ‘s Longest Tunnels [www.Swishweb.com/]

    4. Mountain Tunnels, Tunnels & Bridges -Seikan Undersea Tunnel.

    5. A Short History of Japan By: InfoPage Corporation [2003]

    6. Bullet Trains Programmed to Stop, if a Quake occurs [And Life Goes On By: G.Bhaskaran, The Hindu Jan, 2002]

    7. Powerful Earth Quake Shakes Northern Japan [Sep 26, 2003]

    8. World Data Center for Seismology, Denver U.S. Geological Survey [Sep 25, 2003]

    9. Spain & Morocco Agree to Rail under Gibraltar Strait By Vicky Short [Jan 5, 2004]

    10. http://www.railway-technology.com/projects/seikan-tunnel/

    12. http://web-japan.org/atlas/architecture/arc02.html

    13. https://en.wikipedia.org/wiki/Seikan_Tunnel [March 2, 2016]

    *********************

    Share