Blog

  • காதலியின் சிரிப்பிலே …

    — நிர்மலா ராகவன்

    ‘ஏண்டா, நீ ஆம்பளைதானா?’

    பள்ளி நண்பர்கள் கேலி செய்தபோதெல்லாம் அதைச் சிறிதும் பொருட்படுத்தாத எனக்கு அன்றிரவுதான் அச்சந்தேகம் பயங்கரமாக முளைத்தது.

    ஹாலில் எனக்குப் பக்கத்தில் தரையில் படுத்திருந்த என் மாமா எப்போது அவ்வளவு நெருங்கி வந்தாரோ, தெரியவில்லை. அவருடைய கை என் உடல்மேல் படர்ந்து, போகக்கூடாத இடத்தில் எல்லாம் சஞ்சரித்தபோது விழிப்பு வந்தது.

    “ஐயோ!”

    அந்த அலறல் என்னிடமிருந்தில்லை. நான்தான் என்ன நடக்கிறதென்றே புரியாது, உடல் முழுவதும் விறைத்துக்கொள்ள, மூச்சை இறுகப் பிடித்துக் கொண்டிருந்தேனே!

    மாமா சட்டென்று விலகி, மூக்கை உறிஞ்சினார். நான் இன்னும் உறைந்திருந்தேன். அப்பாதான் விரைந்தெழுந்து விளக்கைப் போட்டார். அடுத்து, ஆம்புலன்சை போன் போட்டு வரவழைத்தது, தாத்தாவை இருதய ஆஸ்பத்திரிக்கு அழைத்துச் சென்றது எல்லாம் தெய்வத்தின் குறிக்கீட்டால்தான்.

    “தாத்தாவோட நானும் போறேன்!” என்று நான் வீட்டிலிருந்து தப்பிக்கப் பார்த்தேன்.

    “என் செல்லம்!” அம்மா நெட்டி முறித்தார்கள். “என் கண்ணுக்குத்தான் தாத்தாமேல எவ்வளவு பாசம்!”

    என் நான்கு அண்ணன்களைப்போல் நானும் கல்யாணம், படிப்பு என்று எதையாவது சாக்கு வைத்து, வீட்டைவிட்டுப் போய்விடப் போகிறோனோ என்று அம்மாவுக்குப் பயம். அதனால் அளவுக்கு மீறிய கொஞ்சலில் என்னைக் கட்டிப் போட்டிருந்தது எனக்குத் தெரியாமல் இல்லை. ஆனால், அம்மா அடிக்கடி என் கன்னத்தைத் தடவுவதும், தினமும் காலையில் என் தலைக்கு எண்ணெய் வைப்பதும் எனக்கு வேண்டித்தான் இருந்தது. அதனால்தானோ என்னவோ, பெண்களைப் பார்த்தால் மரியாதையுடன் ஒதுங்கத் தோன்றியது. அவர்களை வம்புக்கு இழுக்கும் என் வயதொத்தவர்களைப் பிடிக்காமல்போய், தனித்தே இருந்தேன்.

    ஆம்புலன்ஸ் விரைந்துகொண்டிருந்தது. என் எண்ணமோ ஒன்றையே சுற்றிச்சுற்றி வந்தது.
    ‘ஆண்’ என்றால், இயற்கையிலேயே எந்தப் பெண்ணைப் பார்த்தாலும் கிளர்ச்சி தோன்றவேண்டுமோ, மீசை முளைத்தவுடன்? என்னிடம் தப்பை வைத்துக்கொண்டு, மற்ற பையன்கள்தாம் ‘ரௌடிகள்’ என்று மனதிற்குள் வைதேனே!

    இன்று எப்படியோ மாமாவிடமிருந்து தப்பித்தாயிற்று. வேறு யாராவது இப்படி நடந்துகொள்ளமாட்டார்கள் என்பது என்ன நிச்சயம்? நாளை மாமாவே…! நினைக்கவே பயமாக இருந்தது. இனி நானும் பிற ஆண்களைப்போல நடந்துகொள்ளவேண்டும் என்று முடிவெடுத்தேன். சினிமா கதாநாயகனைப்போல், எதிர்ப்படும் இளம்பெண்களை எல்லாம் காதலிக்க ஆரம்பிக்க வேண்டும். குறைந்த பட்சம், அவர்கள் என்னைக் கவனிக்கவாவது வைக்கவேண்டும்.

    “என்னடா முழிச்சிட்டிருக்கே? ஆஸ்பத்திரி வந்தாச்சு. இறங்கு!”

    அப்பாவின் குரலைக் கேட்ட செல்வம் படிகளைச் சட்டைசெய்யாது, எம்பிக் குதித்தான். புதியதாக வீரம் பிறந்துவிட்டதில் பெருமை பீறிட்டது.

    “தாத்தாவுக்குத் துணையா நான் இங்கேயே தங்கறேம்பா!” என்று செல்வம் கேட்டுக்கொண்டபோது, ஆபீசுக்குப் போகவேண்டியிருந்த அப்பா மறுத்துப் பேசவில்லை.

    நாள் பூராவும் கண்ணை மூடியபடி தாத்தா படுத்திருக்க, அந்த அறையிலிருந்து வெளியே வந்தான் செல்வம்.
    ‘இந்த இடத்தில்தான் நோயாளிகளின் உறவுக்காரப் பெண்களும், நர்சுகளுமாக எத்தனை இளம்பெண்கள்!’ என்ற பிரமிப்பு ஏற்பட்டது. அவர்கள் எல்லாருமே அவனைவிட வயதில் மூத்தவர்கள் என்பதை அவன் நினைத்துக்கூடப் பார்க்க விரும்பவில்லை.

    சுடுநீர்ப் போத்தலைக் கையில் பிடித்தபடி நடந்து வந்த அப்பெண் கண்ணில் பட்டாள். எவ்வளவு அழகு! தமிழ்ப்பெண்ணாகவேறு இருக்கிறாள். துணிந்து இவன் புன்னகைக்க, பதிலுக்கு அவளும் சிறுநகை புரிந்தாள்.

    “எங்க தாத்தாவுக்கு ஆபரேஷன். நான்தான் பாத்துக்கறேன்!” என்று பெருமையுடன் தெரிவித்தான்.

    அவனை மதித்து அவள் உரையாடியபோது, வயதிலும், அனுபவத்திலும் பல வருடங்கள் கூடிவிட்டதுபோல இருந்தது செல்வத்துக்கு.

    “சரிங்க, அக்கா!” என்று அவளுக்குப் பிரியாவிடை கொடுத்தான்.

    அடுத்த முறை அவளைத் தேடி பக்கத்திலிருந்த பெண்கள் பகுதிக்குப் போகவேண்டும் என்று முடிவு செய்துகொண்டான். அப்போது ஒரு நர்ஸ் அந்தப் பக்கம் வர, “இப்படி ஓயாம நடக்கறீங்களே, சீமா! கால் வலிக்கலே?” என்று கரிசனப்பட்டான். ஆடையில் குத்தப்பட்டிருந்த பெயர் அட்டையிலிருந்து தன் பெயரைத் தெரிந்துகொண்டு, உரிமையுடன் அழைத்த அவனது துணிச்சலைப் பாராட்டுவதுபோல அவள் சிரித்தாள்.

    “பழகிப்போச்சு!” அவள் அவனைக் கடந்து சென்றுவிட்டபோதும், ஏதோ இன்பக் கிறக்கத்தில் அவள் போன திசையையே பார்த்துக்கொண்டிருந்தான் செல்வம்.

    ‘டேய்! தான் எங்க தாத்தாவோட ஆஸ்பத்திரியில் தங்கியிருந்தபோது நீங்க என்னைப் பாத்திருக்கணும். சும்மா, ‘காதல் மன்னன்’னு பட்டமே குடுத்திருப்பீங்க!’ என்று நண்பர்களிடம் வீறாப்பு காட்டுவதாகக் கற்பனை செய்துகொண்டான். ‘வீரம்’ வளர்ந்தது.

    “அக்கா!” அவன் இருமுறை கூப்பிட்டபிறகுதான் அவள் அவனைக் கவனித்தாள்.

    தன் கையிலிருந்ததை நீட்டினான் அவளிடம். “ஒங்களுக்கும் பாட்டு பிடிக்கும்னீங்களே! ஒரு புது ஏ. ஆர். ரஹ்மான் கேசட் வாங்கினேன். கேட்டுப் பாருங்க!” ஆஸ்பத்திரி கேண்டீனில் சாப்பிட என்று அப்பா கொடுத்துவிட்டுப்போன பணத்தில் அவளை நெருங்கவென்றே அவன் அதை வாங்கிவந்தான் என்பதை அவள் அறியவா போகிறாள்!

    “தாங்க்ஸ்!” அவள் அதை வாங்கி, அருகிலிருந்த டிரான்சிஸ்டரின்மேல் வைத்தாள். பின், அவன் அங்கிருப்பதையே மறந்தவளாய், தன் தாயைக் கவனிக்கத் தொடங்க, ‘முதல் நாளுக்கு இது போதும்’ என்ற திருப்தியுடன் வெளியேறினான் செல்வம்.

    அன்றிரவு ஒன்பது மணிக்குள் மருந்துகளின் உபயத்தால் தாத்தா ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தார். பொழுதுபோகாது, தூங்கவும் பிடிக்காது, அவரிருந்த தனியறையைவிட்டு வெளியே வந்தான் செல்வம். வெளியில் ஒரு பொது ஹால். அதில் டி.வி. ஓடிக்கொண்டிருந்தது — ஓசை எழுப்பாமல்! எதிரிலிருந்த சோபாக்களில் சிலர் — நோயாளிகளின் மனைவிமார்களும், உடல்நிலை சற்றே தேறியவர்களும். ஓரிருவர் உட்கார்ந்த நிலையிலேயே அயர்ந்து உறங்கிக்கொண்டிருந்தனர். அவர்களுள் ஒருவனாகும் எண்ணமே கசப்பை விளைவிக்க, செல்வம் வராந்தாவில் நடந்தான்.

    வழியில், ஒரு கௌண்டருக்குப் பின்னால் அமர்ந்திருந்த தாதியர் ஏதோ குறிப்பெடுத்துக்கொண்டிருந்தனர். மேலே நடந்தான் — எதிரே சுவர் மறைக்கும்வரை. வலது கோடியில் இருந்த பெண்கள் வார்டு அவனை ‘வா, வா’ என்று அழைத்தது. அவன் வருகையை எதிர்பார்த்திருந்ததுபோல, கதவும் திறந்தே கிடக்க, மேலே யோசிக்காமல், உள்ளே நுழைந்தான்.

    இவன் மனத்தைக் கவர்ந்த பெண் நாற்காலியில் உட்கார்ந்திருந்தாள். நேரே அவளருகே சென்று, “பாட்டைக் கேட்டீங்களா?” என்று கேட்டான். பேச்சை ஆரம்பிக்க ஒரு வழி கண்டுபிடித்த தனது புத்திசாலித்தனத்தைப் பாராட்டிக்கொண்டபோதே, அரைப்பரீட்சையில் மலாய் தவிர மற்ற எல்லாப் பாடங்களிலேயும் பெயில் ஆனதும், அப்பா, “புத்தி இல்ல?” என்று கேட்டபடி, பிரம்பால் அடித்ததும் நினைவில் எழுந்தன. ‘அப்பா கிடக்கிறார்!’ என்று அதை ஒதுக்கினான்.

    “இன்னும் இல்லை,” என்றவள் முகத்தில் சிறு புன்னகை. “என்ன படிக்கிறீங்க?” மரியாதையை உத்தேசித்துக் கேட்டமாதிரி இருந்தது. ஆனால் செல்வத்துக்கோ உற்சாகம் தாங்கவில்லை. ‘இவளுக்கு என்னைப் பிடித்திருக்கிறது! எவ்வளவு அக்கறையாக விசாரிக்கிறாள்!’

    “எஸ்பிஎம் எழுதியிருக்கேன்!”

    “ஓ! ரிசல்ட்டுக்காகக் காத்திருக்கீங்களா?”

    தான் நினைத்தும் பார்க்க விரும்பாத ஒன்றை அவள் ஞாபகப்படுத்தவும், அவன் உள்ளுக்குள் சுருங்கிப்போனான்.
    சீக்கிரத்தில் தன்னைச் சமாளித்துக்கொண்டு, “ட்ரையல் பரீட்சையில எட்டுப் பாடங்களிலே நான் ‘ஏ’ வாங்கினேன். விளையாட்டிலும் நிறையப் பரிசு கிடைச்சிச்சா! மிகச் சிறந்த மாணவன்’னு பரிசு குடுத்தாங்க!” என்று அளந்தான். காதல் முளைக்கும்போதே அலட்டலும் வந்துவிடாதா!

    ‘இவ்வளவு குண்டாக இருப்பவன் எல்லாம் விளையாடிக் கிழித்தான்!’ என்றெல்லாம் அவள் அவநம்பிக்கைப்பட்டதாகத் தெரியவில்லை.

    ‘என்ன பாவம் செய்தோமோ இப்படி ஒரு வியாதி வர!’ என்று பலவாறாக ஓயாது புலம்பிக்கொண்டிருக்கும் நோயாளிகளிடையே அவனுடைய சிறுபிள்ளைத்தனமான பேச்சு வித்தியாசமானதாக, வரவேற்கத்தக்கதாக இருந்திருக்கவேண்டும். அதிகம் பேசாது, அவன் சொல்வதை எல்லாம் கேட்டுக்கொண்டாள். சுமார் ஒரு மணி நேரம் அவள் பக்கத்திலேயே நின்றபடி, தன் பிரதாபங்களை அளந்தான் செல்வம். நடுவே, தன் மனதை உறுத்திக்கொண்டிருந்ததையும் கேட்டேவிட்டான்: “ஒங்களுக்கு ‘பாய் ஃப்ரெண்ட்’ இருக்கா, அக்கா?”
    அவள் சிரித்த முகத்துடன், ‘இல்லை’ என்று தலையாட்டியதும், அவனுக்குச் சொர்க்கமே தெரிந்தாற்போல் இருந்தது.

    உபசாரமாக, “நான் நம்பமாட்டேம்பா! அக்கா இவ்வளவு அழகா இருக்கீங்க!” என்று சீண்ட, அவள் மீண்டும் சிரித்தாள்.

    “ஒங்க பேரு என்னக்கா?”

    “செல்வராணி!”

    “நெசமாவா? நான் செல்வம். நம்ப பெயர் பொருத்தத்தைப் பாத்தீங்களா?”

    அவனுடன் அவளும் சேர்ந்து சிரித்தபோதுதான் அவனுக்கு மகிழ்ச்சி கலந்த அந்தக் குழப்பம் எழுந்தது: ‘இவளுக்கு நம்பமேல ஒரு ‘இது’ வந்திருச்சோ?’

    அவளுடன் கைகோர்த்து பொது இடங்களுக்குப்போவதாகவும், அவனுடைய அதிர்ஷ்டத்தைப் பார்த்துப் பயல்கள் எல்லாம் வயிற்றெரிச்சல் படுவதாகவும் கற்பனை செய்துபார்த்தான். தாத்தாவின்மேல் நன்றி சுரந்தது. அவரால்தானே தனக்கு இவ்வளவு அயனான சந்தர்ப்பம்! ‘தாத்தாவுக்கு விரைவில் குணமாகவிடக்கூடாது, சாமி!’ என்று பிரார்த்தித்தான்.

    மறுநாள் காலை எழுந்திருக்கும்போதே மனம் உல்லாசமாக இருந்தது. செல்வராணியின் சிரிப்புதான் எவ்வளவு அழகு! அவளை நினைக்கும்போதே மனம் பரபரத்தது. அவளை அப்போதே பார்க்கவேண்டும்போல இருந்தது. ‘வேண்டாம். பகலில் டாக்டர்கள் நடமாட்டம் அதிகம்,’ வேண்டாவெறுப்புடன் தன்னைக் கட்டுப்படுத்திக்கொண்டான்.

    தாத்தா ஒருமுறை கண்விழித்து, “ஒனக்கு ஏண்டா இந்த வயசிலே கஷ்டம்? வீட்டுக்குப் போ!” என்று முனக, “நல்லா… ஒங்களை விட்டுட்டுப் போவேனே!” என்று கூறி அவரை அதிசயிக்க வைத்தான்.

    ‘பையன் ரொம்பப் பொறுப்பு!’ நிறைந்த மனத்துடன் தாத்தா கண்ணை மூடிக்கொண்டார்.

    ஆஸ்பத்திரியை நினைக்கும்போதே செல்வராணிதான் தெரிந்தாள். அவளோ, இல்லை தானோ, என்றாவது வீட்டுக்குத் திரும்பிப் போகவேண்டும் என்ற நிதரிசனமே அதிர்ச்சியை அளித்தது. அதற்குள் அவளும் தன்னை எண்ணி ஏங்கும்படி செய்துவிட வேண்டும். அதற்கென்ன, அவனைவிட வயதில் சற்றே மூத்தவள்தான். ஆனால், உடல் ஆகிருதியில் அவன்தானே பெரியவன்? அது போதாதா, என்று என்னென்னவோ நினைத்தே பொழுதைக் கழித்தான்.

    மாலைப் பொழுது… நோயாளிகளைக் காண வந்த உறவினர்களும், நண்பர்களுமாக மூன்றாவது மாடியிலிருந்த வார்டு கலகலத்துக்கொண்டு இருந்தது. இதுதான் தக்க சமயமென செல்வம் பெண்கள் வார்டுக்குள் நுழைந்தான். கண்கள் காதலியைத் தேடின.

    “ஆன்ட்டி! அக்கா எங்கே?”

    விரக்தியுடன் காணப்பட்ட முதியவள், “இல்லே!” என்றாள் பதிலாக.

    “கேண்டீனுக்குப் போயிருக்காங்களா?” என்றான் விடாப்பிடியாக.

    “வீட்டுக்கு!”

    அவனுடன் பேசுவதையே தவிர்க்க விரும்புபவள்போல் நடந்துகொண்டவளிடம் மேற்கொண்டு என்ன பேசுவது என்று புரியாது, சற்று விழித்துவிட்டு, ஏமாற்றத்துடன் வெளியே நடந்தான்.

    எட்டு மணிக்கு வார்டே காலியானது. நப்பாசையுடன் மீண்டும் சென்று, “ஆன்ட்டி! அக்கா..,” என்று அவன் இழுக்க, “அக்காவோட என்ன பேசணும் ஒனக்கு?” என்று மிரட்டலாகக் கேள்வி வந்தது.

    முதலில் அதிர்ந்தவன், விரைவில் சமாளித்துக்கொண்டான். காதல் என்றால் லேசா? அதற்கு எவ்வளவு துணிச்சலும், சாமர்த்தியமும் வேண்டும்!

    “அக்காகிட்ட என்னோட கேசட் ஒண்ணு குடுத்தேன்..”

    “அக்கா கேட்டாங்களா?” முகத்தில் அடிக்காத குறை.

    ‘உடம்பு முடியாம இருக்கறப்போவே கிழவி இந்தப்போடு போடுதே! ஐயோ!’ என்று மிரண்டவன், தோள்பட்டை முன்னால் சரிய, அங்கிருந்து வெளியேறினான்.

    மறுநாள் காலை அப்பா வந்தார். முகத்தில் கடுமை.

    “புறப்படுடா!” என்று இரைந்தார்.

    அந்த வீட்டுக்கா! அவனுக்கு உதறல் எடுத்தது. மாமாவின் கை தன்மேல் படர்வதைப்போல் பிரமை எழ, சிலிர்த்துக்கொண்டான்.

    “தாத்தாவைப் பாத்துக்கிட்டு, இங்கேயே இருக்கேனேப்பா!” அப்பாவியாக முகத்தை வைத்துக்கொண்டான்.

    “போதும், நீ பாத்துக்குட்ட லட்சணம்! பொம்பளைங்க படுத்திருக்கிற இடத்திலே ஒனக்கென்னடா வேலை?”

    அப்பா உறுமினார். “மானம் போகுது எனக்கு! ஒங்கம்மா காதில விழுந்தா, உசிரையே விட்டுடுவா!”

    தாத்தா ஈனஸ்வரத்தில் குறுக்கிட்டார்: “எத்தனை நேரம்தான் என் மூஞ்சியையே பாத்துக்கிட்டு ஒக்காந்திருப்பான்? காலார நடந்து போயிருக்கான், பாவம்!”

    “நீங்க வேற! டாக்டர் என்னைக் கூப்பிட்டுச் சொல்றார், ‘ஒங்க பையன்மேல ஒரே புகார்! நர்சுகளை வம்புக்கு இழுக்கிறானாம், பெண்கள் வார்டுக்குள்ளே போய், ராத்திரி ஒரு பொண்ணோட ஒரே அரட்டை. எல்லாரோட தூக்கமும் கெட்டுப்போச்சாம்!’ அப்படின்னு. இவனுக்குப் பயந்து, அந்தப் பொண்ணோட அம்மா அதை வீட்டுக்கு அனுப்பிட்டாங்களாம். வெட்கக்கேடு!”

    தலை குனிந்தபடி, அவர் பின்னால் நடந்தான் செல்வம். புதிய கேசட் போனது போனதுதான் என்ற துக்கம் ஒருபுறம் எழ, அதைப் போட்டு பாட்டு கேட்டுக்கொண்டு, தன் நினைவாகவே செல்வராணி இருப்பதைப்போல் ஓர் ஆனந்தமான உணர்வு துக்கத்தை மீறி எழுந்தது. அது அவனுக்குள் ஒரு புது தெம்பை ஊட்டியது.
    அவன் வருகையை எதிர்பார்த்தவர்போல், வீட்டு வாசலிலேயே காத்திருந்தார் மாமா.

    “வாடா! எங்களை எல்லாம் மறந்தே போயிட்டியா?” கேலியாகப் பேசுவதுபோல், அவனது இடுப்பை அவர் கையால் வளைத்தார். விலகிப்போன இரை தானே வலியவந்து மாட்டிக்கொண்ட சந்தோஷம் அவர் முகத்தில் தெரிந்தது.

    ‘என்னையும் ஒரு பெண் மதித்துப் பேசி இருக்கிறாள்!’ என்ற நினைவே அபார தைரியத்தைக் கொடுக்க, முரட்டுத்தனமாக அவர் கையை விலக்கினான் செல்வம். முறைத்தபடி, “ஒங்க கை ஒங்ககிட்டேயே இருக்கட்டும். என்மேல பட்டா, அப்புறம் அது ஒங்க ஒடம்பில இருக்காது!” என்று பல்லைக் கடித்தபடி, அடிக்குரலில் மிரட்டினான்.

    அவனிடம் ஏற்பட்டிருந்த மாறுதலை அவர் சற்றும் எதிர்பார்க்கவில்லை என்பது தலையைப் பின்னுக்கு இழுத்துக்கொண்ட வேகத்தில் தெரிந்தது.

    நிமிர்ந்த தலையுடன் வீட்டினுள் நுழைந்தான் செல்வம்.

    “கண்ணு! ஆஸ்பத்திரியில இருந்திட்டு வந்திருக்கே! மொதல்லே குளி, போ!” அம்மாவின் வரவேற்பு.

    செல்வத்துக்கு எங்கிருந்தோ கோபம் வந்தது. “நான் ஒண்ணும் சின்னப்பிள்ளை இல்ல. ஒவ்வொண்ணையும் மத்தவங்க சொல்லிக் குடுத்திட்டு இருக்க வேணாம்!” என்று இரைந்தான்.

    ‘இந்தப் பயலுக்கு என்ன ஆயிடுச்சு!’ என்ற குழப்பத்தில் ஆழ்ந்தாள் பெற்றவள்.

    Share
  • இன்னா இன்னுரை!

    -முனைவர். இராம. இராமமூர்த்தி

    நாம் காணவிருக்கும் இக்கட்டுரைக்கண் இரண்டு செய்திகள் இடம்பெறவுள்ளன. பாடலின் மையப்பொருளாக விளங்கும் அகப்பொருட் செய்தியொன்று; பிறிதொன்று அப்பாடற்கு உறுதுணையாக விளங்குவதோடு, பண்டை நாளைய வரலாறு பற்றிய செய்தி. முதலில் அகப்பொருட் செய்திக்குறிப்பினைக் காணலாம்.

    சங்க இலக்கியங்களில் நற்றாய்க்கு உசாத்துணையாக விளங்குபவள், அவள் தோழியாகிய செவிலி. மற்றொருவர், ’தானே அவளே’ வேறுபாடின்றி விளங்கும் தலைவியின் உயிர்த்தோழியாவாள். இவ்வருமருந்தன்ன தோழி, செவிலி(த்தாயின்) மகளாவாள். இவ்விருவரும் அகப்பொருள் இலக்கியங்களில் இன்றியமையாச் சிறப்பிடங்கள் பெறுதலை இலக்கியங்கற்போர் நன்கறிவர். ஈண்டுச் செவிலியின் அன்பு மீதூர்ந்தவுள்ளம் தலைவியின் பிரிவால் வருந்தும் நிலையினை நாம் காண்போம்.

    அதற்குமுன்னர், இலக்கியம் படைக்கும் சங்கப்புலவர்கள், தாம் கூறுஞ்செய்திக்கு வலிவும் பொலிவுஞ் சேர்க்கப் பண்டைய வரலாற்றுச் செய்திகளை உவமை முகத்தானும், பிறவாற்றானும் அப்பாக்களில் அழகுறப் புனைந்துபாடுவர். இங்ஙனம் அகத்திணைப் பாடல்களுள் வரலாற்று நிகழ்வுகளை எழிலுறப் புனைந்து பாடியோர் பலர். அவருள்ளும் பரணரும் மாமூலனாரும் சிறப்பிடம் பெறுவோராவர். இவ்விருவர் அகப்பாடல்களான், வரலாற்று நிகழ்வுகள் ஆவணப்படுத்தப்பட்டுள்ளன. இவற்றால் தமிழக வரலாறு உறுதியும் ஒளியும் பெற்றுச் சிறந்துள்ளமை காணலாம். இத்தகு அரிய பாடல்களைப் புனையும் மாமூலனாரின் கைவண்ணத்தை இக்கட்டுரையில் இடம்பெறும் அகநானூற்றுப் பாடலான் காண்போம்.

    நம் தலைவி, தேன்கலந்த பாற்சோற்றினைச் செவிலி அன்பொடு குழைத்து ஊட்டியபொழுது மறுத்துண்ட செல்வமகள். தலைவியின் சிறுதுயரினையும் பொறாது வருந்துமியல்பினள் அன்புச்செவிலி. அவ்வண்ணம் அன்பால் வளர்ந்த அத்தலைமகள், தலைவன் ஒருவனைக் கண்டு காதல் வயப்பட்டனள். இரவும் பகலும் காதல் வளர்ந்தது. தலைவியின் காதலைப் போற்றத்தவறினர் தாயும் தமரும். தலைவனும் வரைதலை (மணஞ்செய்து கொள்ளலை) நீட்டினன். என் செய்வாள் பேதை? தலைவனொடு அவன் ஊருக்கு உடன்போகத் துணிந்தாள். தோழியும் உடன்போக்கிற்குத் துணைநின்றாள். காதல் தலைவனொடு தலைவி கொடிய பாலை நிலங்கடந்து அவனூர் செல்லத் துணிந்து சென்றாள்.

    தலைவியின் உடன்போக்கினையறிந்த செவிலி ஆற்றொணாத் துயரில் மூழ்கினாள். தலைவி விளையாடி மகிழ்ந்த இடங்களை நோக்கி நோக்கிப் பெருமூச்செறிந்தாள். தலைவியில்லா இல்லம், செவிலிக்குப் பாலையாகவே தோன்றிற்று. என்ன செய்வதெனப் புரியாது தவித்தாள் செவிலி. தலைவியின் பிரிவுத்துயரினும் அவள் காதலனோடு உடன்போக்கு மேற்கொண்ட பாலைநிலமும், காய்கதிர்ச்செல்வனின் கொடுமையும், நிழலற்ற அரிய வழிகளும் செவிலிக்குச் சொல்லொணாத் துன்பத்தைத் தந்தன; தலைவியின் பிரிவுத்துயர் நிலத்தினும் பெரிதாகி வருத்தியது.

    இத்துணைத் துயர்களையும் தாங்கிகொண்ட செவிலிக்குத் தாங்கொணாத் துயரொன்று உளத்தைத் துளைத்தெடுத்தது. அத்துயர்தான் என்ன? நாமறிய அவாவுவது இயல்புதானே! தலைவியும் தானும் (செவிலியும்) உடலால் இருவரே; ஆயினும் உயிரான் ஒன்றானவர். தன்னுயிர் பிரிந்துபோதலைச் செவிலி எங்ஙனம் ஆற்றுவள்? தலைவி சென்றபோழ்து தன்னுயிரும் சென்றிருக்கவேண்டுமே? புலம்பியவளாய் இனியும் உயிர்வாழ்கின்றேனே எனக் கவன்றனள் செவிலி. இந்நிலையில் தமிழ்நாட்டில் நிகழ்ந்த போர்நிகழ்வொன்று அவள் நினைவிற்கு வருகின்றது.

    வெண்ணிப்பறந்தலை என்ற இடத்தில் சோழன் கரிகாலனொடு பெருஞ்சேரலாதன் கடும்போர் புரிந்தான். கரிகாலன் எறிந்த வாள் சேரலாதனின் மார்பிற் பாய்ந்தது; அந்தோ! அவ்வாள் அவன் முதுகுவழியே வெளியேறியது. சேரலாதன் என் செய்வான்? முதுகில் வாட்புண் ஏற்பட்டதால் புறப்புண்பட்டதாக நாணினான்; பட்ட பழியைத் துடைக்கவேண்டி, வாளொடு வடக்கிருந்து தன்னுயிர் துறந்தான் சேரவேந்தன். சேரலாதன் இறந்தான் என்ற இன்னாச் சொல்லையும், அதேநேரத்தில் புறப்புண்ணாக நாணி உயிர்நீத்த இனிய மொழியையும் ஒருங்கே கேள்வியுற்ற அம்மன்னனின் அவைக்களச் சான்றோர் பலர் அவனோடு உடனுயிர் துறக்க எண்ணித் தம்மின்னுயிர் நீத்தனர். இந்நிகழ்வே செவிலியின் துயரை மிகுவித்தது. தம் மன்னன் இறந்தானெனக் கேட்ட சான்றோர் தம்முயிர் துறந்தனர்.  ஆனால் என் தலைவி பிரிந்துசென்ற பின்னும், என்னுயிர் பிரியவில்லையே?  நான் என்செய்வேன் எனப் புலம்புகின்றாள் அவள். செவிலியின் அன்பினை அளந்துரைக்கவும் இயலுமோ? அத்துயர் தம்நெஞ்சினையும் வருத்துவதனைக் கற்போர் உணர்வர். அன்பெனப்படுவது உறவினரைப் பிரியாது போற்றும் பெருந்தகைமையாகும். இதைத்தான் ’அன்பெனப்படுவது தன்கிளை செறாஅமை’ என்கிறது கற்றறிந்தார் ஏத்தும் கலி.

    செவிலியின் துயர்பேசும் அப்பாடல்!

    காய்ந்துசெலற் கனலி கல்பகத் தெறுதலின்
    நீந்து குருகுருகும் என்றூழ் நீளிடை
    உளிமுக வெம்பரல் அடிவருத் துறாலின்
    விளிமுறை அறியா வேய்கரி கானம்
    வயக்களிற் றன்ன காளையொ டென்மகள்
    கழிந்ததற் கழிந்தன்றோ இலனே யொழிந்தியான்
    ஊதுலைக் குருகின் உள்ளுயிர்த் தசைஇ
    வேவது போலும் வெய்ய நெஞ்சமொடு
    கண்படை பெறேஎன் கனவ ஒண்படைக்
    கரிகால் வளவனொடு வெண்ணிப் பறந்தலைப்
    பொருதுபுண் ணாணிய சேர லாதன்
    அழிகள மருங்கின் வாள்வடக் கிருந்தென
    இன்னா இன்னுரை கேட்ட சான்றோர்
    அரும்பெறல் உலகத் தவனொடு செலீஇயர்
    பெரும்பிறி தாகி யாங்குப் பிறிந்திவண்
    காதல் வேண்டியென் துறந்து
    போதல்செல் லாவென் உயிரொடு புலந்தே.
    (அகம்-55: மாமூலனார்) 

    இவ்வகப்பாடல் புலவர் மாமூலனாரின் மிகுபுலமைக்கு ஓர் உரைகல். வரலாற்று நிகழ்வினைச் சுட்டுமாற்றான் பிரிவுத்துயரான் வருந்தும் செவிலியின் ஆற்றொணாத் துயரையும் ஓர் அழகோவியமாய்ப் படைத்துள்ள பாங்கு எண்ணியெண்ணி யின்புறத்தக்கது. இப்பாடற்கண் திகழும் மற்றுமொரு சிறப்பு அவர் கையாண்ட “இன்னா இன்னுரை”, என்னுந்தொடர். இத்தொடரில் முரண்பொருட்சுவையைக் காணலாம். ‘இன்னா’ எனுஞ்சொல் சேரலாதன் இறந்தான் என்பதனைச் சுட்டுதலால் அஃது இன்னாவுரை என்க; ’புறப்புண் நாணி வடக்கிருந்து உயிர்துறந்தான்’ என்பது சான்றோர்க்கு இன்னுரையாயிற்று. “இன்னா இன்னுரை கேட்ட சான்றோர்” எனவரும் செய்யுளடி மாமூலனாரின் சென்னியிற் றிகழும் மணிமுடியன்றோ!     

     

     

    Share
  • எட்டாம் வகுப்பு மாணவ, மாணவிகள் அறிவியல் ஆய்வக களப்பயணம்

    தேவகோட்டை – தேவகோட்டை சேர்மன் மாணிக்கவாசகம் அரசு உதவி பெறும் நடுநிலைப்பள்ளி மாணவ மாணவிகள்கல்லூரி ஆய்வகங்களுக்கு அறிவியல் ஆய்வகக் களப்பயணம் மேற்கொண்டனர். இப்பள்ளியில் 8ஆம் வகுப்பு பயிலும்மாணவர்கள் தொடர்ந்து மூன்றாவது ஆண்டாகக் கல்லூரி ஆய்வக சோதனை கூடங்களுக்கு நேரில் களப்பயணம்மேற்கொண்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. இவர்கள் களப்பயணமாக தேவகோட்டை ஸ்ரீ சேவுகன் அண்ணாமலைக்கல்லூரி அறிவியல் ஆய்வகத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.

    கல்லூரி முதல்வர் பேச்சு:
    இந்நிகழ்ச்சிக்கு வந்திருந்தோரை விலங்கியல் துறைத்தலைவர் பேராசிரியர் பட்சிராஜன் வரவேற்றார். பள்ளி தலைமைஆசிரியர் லெ. சொக்கலிங்கம் முன்னிலை வகித்தார். கல்லூரி முதல்வர் சந்திரமோகன் தலைமை தாங்கி பேசுகையில், 8ஆம் வகுப்பு படிக்கும் நீங்கள் எந்த விசயத்தை அணுகினாலும் ஏன் என்று கேள்வி கேட்டு பதில் பெறுங்கள்.அப்போதுதான் உங்கள் அறிவு விரிவடையும் என்றார். சுட்ட பழம் வேண்டுமா? சுடாத பழம் வேண்டுமா ? என்று கேட்டகேள்வி வந்ததே முதல் அறிவியல் கேள்வி என்று கூறினார். ஐசக் நியூட்டன் போன்ற அறிவியலாளர்கள் அறிவியல்தொடர்பான நிறையக் கண்டுபிடிப்புகளை நிகழ்த்தியதற்குக் காரணமே அவர்கள் ஏன் என்று கேள்வி கேட்டதனால்தான்என்றார். எனவே நீங்களும் சிறு வயதில் படிக்கும் காலத்திலேயே நிறையக் கேள்விகள் கேட்டு பதில்கள் பெறுங்கள்.வருங்காலத்தில் கண்டிப்பாக அறிவியல் விஞ்ஞானிகள் ஆவீர்கள் எனப் பேசினார்.

    விலங்கியல் துறையைப் பார்வையிடல்:

    devakootai1

    மாணவர்கள் விலங்கியல் ஆய்வகத்தில் மனித எலும்புக் கூட்டை ஆர்வமாகப் பார்வையிட்டனர்

    களப்பயணத்தின் தொடக்கமாக மாணவ மாணவியர் விலங்கியல் துறையில், ஒரு செல் உயிரிகளிலிருந்து பல செல்உயிரிகள் வரையும்;
    முதுகெலும்பற்றவையான புரோட்டோசோவா தொகுதியைச் சார்ந்த அமீபா, பாரமீசியம், பிளாஸ்மோடியம்,பவளப்பாறைகள், ஆர்த்ரோபோடா, ஆக்டோபஸ், ஸ்டார் ஃபிஷ், சங்கு, சிப்பி, இறால், நத்தை ஆகியவற்றையும்;
    முதுகெலும்பு உள்ளவற்றில் கடல் குதிரை, பச்சோந்தி, பல்லி , ஆமை, மீன் வகைகள்; இருபுலவாழ்விகளான தவளை;
    ஊர்வனவற்றில் பாம்பு வகைகளான நச்சுப் பாம்புகள், நஞ்சற்ற பாம்புகள், நல்லபாம்பு, ராஜநாகம், பச்சைப்பாம்பு;
    பறப்பனவற்றில் புறா, காகம், மைனா, மரங்கொத்தி, மீன் கொத்தி ஆகியவை.
    உடல் உறுப்புகளில் எலும்புகளுடனும், கருக்களில் பாலூட்டிகளான முயல், பன்றி, எலி ஆகியவற்றின் கருக்களையும்;எலும்பு வகைகள், மனித இதய மாதிரி, டி என் ஏ, ஆர் என் ஏ மாதிரிகளையும், மைட்டோகாண்ட்ரியா, மனித எலும்புமண்டலம் தொடர்பான மாதிரிகளையும், கரு உருவாவதை நுண்ணோக்கி வழியாகவும் பார்த்தும் அதன் பயன்களைகேட்டும் அறிந்து கொண்டனர்.ரத்த வகை கண்டறிதல் எவ்வாறு நடைபெறுகிறது, அதன் அர்த்தங்கள் என்ன,அதன்வகைகள் என்ன என்பன போன்ற தகவல்கள் பெற்றனர்.

    தாவரவியல் துறை பார்வையிடல்:
    தாவரவியல் துறையில் மூலிகை தோட்டத்தில் டெரிடொ பைட்டுகள், பிரையொ பைட்டுகள் எனத் தாவரங்களின்வகைகளையும், நுண்ணோக்கிகள் மூலம் தாவரத்தின் மகரந்தப்பை, சூல்பைகளையும் பார்வையிட்டும் அதன்பயன்பாடுகளையும் அறிந்து கொண்டனர்.

    மூலிகைத்தோட்டம் பார்வையிடல்:

    devakootai4

    மாணவர்கள் தாவரவியல் தோட்டத்தில் உள்ள மூலிகை செடிகளை ஆர்வமுடன் பார்த்து தெரிந்து கொண்டனர்

    மூலிகை தோட்டம் சென்று மலேசியன் திப்பிலி, அம்மான் பச்சரிசி, சிறுநங்காய், முடக்கத்தான், முப்பிரண்டை,கரிசலாங்கண்ணி, நொச்சி, வசம்பு , ஓமவல்லி, ஆடாதொடா, தவசி முருங்கை, மஞ்சள், மணத்தக்காளி, பெரியநெல்லி,தும்பை, அறுகம்புல், சங்குப்பூ, செம்பருத்தி, குப்பைமேனி உட்பட பல்வேறு மூலிகை செடிகளை நேரடியாகப் பார்த்தும்அதன் பயன்களை அறிந்தும், அது எவ்வாறு மனிதர்களுக்கு உதவியாக உள்ளது என்பதையும் அறிந்தார்கள். .தாவரவியல்விஞ்ஞானிகளைப் படங்களின் மூலமாக அவர்களின் கண்டுபிடிப்புகளை பார்வையிட்டும் பயன்பெற்றனர்.

    வேதியியல் ஆய்வகம் பார்வையிடல்:
    வேதியியல் ஆய்வகத்தில் உப்பு தொடர்பான சுடர் சோதனைகள், பருமனரி பகுப்பாய்வு செய்து காட்டல், ஆய்வகஉபகரணங்களான கூம்பு குடுவை, பியூரெட், பீப்பெட், சோதனைக் குழாய், கண்ணாடித் தட்டு, உப்பு எடுக்கும் கரண்டி,கண்ணாடி கலக்கி, புன்சென் அடுப்பு , நிற மாற்றத்தைச் சரியாக காட்டும் போர்சலின்ன் டைல் , 200 மி.லி.பீக்கர்,வீழ்படிவு சேகரிக்கும் சோதனைக் குழாய் போன்றவற்றையும், நடுநிலையாக்கல் வினைகளையும், வீழ்படிவு எவ்வாறுநடைபெறுகிறது என்பதையும் அதற்கான உபகரணங்கள் எப்படிச் செயல்படுத்த படுகிறது என்பதையையும்நேரடியாகச் செய்து காட்டல் மூலம் கற்று கொண்டனர்.

    devakootai2

    மாணவர்கள் வேதியியல் ஆய்வகத்தில் உபகரணங்களைப் பற்றி கேட்டுத் தெரிந்து கொண்டனர்

    devakootai3
    வகுப்பு மாணவர்கள் நடுநிலையாக்கல் சோதனைகளை அவர்களே செய்து பார்த்தனர்

    மாணவர்களும் நடுநிலையாக்கல் வினைகளை அவர்களே செய்து பார்த்து அதன் முடிவு நிலைகளைத் தெரிந்துகொண்டனர். மேலும் உப்புக்கள் கண்டறிதல் சோதனைகளை அதன் நிறங்கள் புன்சன் அடுப்பில் காண்பிக்கும்போதுஎவ்வாறு மாறுகிறது என்பதையும், அதன் மூலம் அவற்றை எவ்வாறு கண்டுபிடிக்க முடியும் என்பதையும் அவர்களேசெய்து பார்த்தனர்.

    இயற்பியல் ஆய்வகம் பார்வையிடல்:
    இயற்பியல் துறையில் காந்தங்கள், வான்நோக்கி, மின்நோக்கி,தனிஊசல், நிறப்பிரிகை, ஆடிகள், திருகு அளவி, ஊசல்கடிகாரம், எதிரொலிப்பு மற்றும் நேனோ தொழில் நுட்பங்கள் போன்றவை நேரடியாகச் செய்து காண்பிக்கப்பட்டும்மாணவர்களால் செய்தும் பார்க்கப்பட்டது. கணினித் துறையில் எவ்வாறு கணினியை இயக்குவது, அதில் உள்ள முக்கியபகுதிகள் என அனைத்துக்கும் விரிவாக நேரடியாகச் செயல் விளக்கங்கள் மாணவ,மாணவியர்க்கு விளக்கப்பட்டது.

    கல்லூரி நூலகம் பார்வையிடல்:
    கல்லூரியின் நூலகத்தை நூலகர் உதவியுடன் மாணவர்கள் பார்வையிட்டனர். எவ்வாறு ஒவ்வொரு புத்தகமும் பாடவாரியாக அடுக்கப் பட்டுள்ளது, அதனை எவ்வாறு நாம் எளிதாக எடுத்துப் படிக்க இயலும், நூலகம் எவ்வாறு பயன்படுத்த வேண்டும் என்பது தொடர்பாக விரிவாக எடுத்துக் கூறினார்.மாணவர்கள் மகிழ்ச்சியுடன் சிறிது நேரம் கல்லூரிநூலகத்தில் அமர்ந்து படித்து பார்த்தனர்.

    பள்ளி மாணவியின் பேச்சு:
    ஆய்வக களப்பயணம் குறித்து நிறைவாக மாணவி தனம் பேசுகையில் கல்லூரியில் படித்தால் கூட ஒரு துறை பற்றிமட்டும்தான் அறிய முடியும்.ஆனால் 8ம் வகுப்பு படிக்கும்போதே நாங்கள் கல்லூரியில் உள்ள அனைத்து அறிவியல்துறைகளையும் அறியும் வாய்ப்பைப் பெற்றதில் மகிழ்ச்சி அடைகிறோம் என்றார். பள்ளியின் சார்பாக மாணவி சுமித்ராநன்றி கூறினார். களப்பயணத்திற்கான ஏற்பாடுகளை ஆசிரியை வாசுகி மற்றும் ஆசிரியர் ஸ்ரீதர் ஆகியோர்செய்திருந்தனர்.

    L.Chokkalingam,M.Sc,M.Phil,B.Ed,PGDHRM,BLISc,DGT
    Head Master,
    Chairman Manicka Vasagam Middle School,
    Devakottai.630 302.
    Sivagangai Dist.
    TamilNadu.
    09786113160.
    E-Mail : jeyamchok@gmail.com
    http://www.kalviyeselvam.blogspot.in/

    Share
  • அருங்காட்சியகம் ஓர் அறிவுக் கருவூலம் – 58

    கைரோ அருங்காட்சியகம் (2), எகிப்து

    முனைவர்.சுபாஷிணி

    கைரோ அருங்காட்சியகம் என அழைக்கப்படும் இந்த அருங்காட்சியகம் எகிப்திய அருங்காட்சியகம் என்ற பெயரிலும் அழைக்கப்படுகின்றது. ஏறக்குறைய 120,000 அரும்பொருட்களைச் சேகரித்து வைத்துள்ளது இந்த அருங்காட்சியகம். உலகிலேயே ஃபாரோக்களைப் பற்றிய மிக அதிகமான தகவல்களைக் கொண்ட ஒரு அருங்காட்சியகம் என்றால் அது இந்த கைரோ அருங்காட்சியகம் தான்.

    ak1
    தங்கள் குழுவினருக்குப் பயண வழிகாட்டி விளக்கம் தருகின்றார்
    ​

    கைரோ அருங்காட்சியகத்தில் மம்மிக்களைப் போல கவரும் இன்னொரு விடயம் இங்கு சேகரித்து வைக்கப்பட்டுள்ள இறந்த பண்டைய அரச குடும்பத்தினரின் ஈமச்சடங்குப் பொருட்கள். ஈமச்சடங்குப் பொருட்கள் என்றவுடன் உடனே தூபக்கால், சிறிய மண்பாண்டம், மணிகள், கைவினைப் பொருட்கள், சாமி வடிவங்கள் என்று எண்ணி விடவேண்டாம்.

    ஒவ்வொரு அரச குடும்பத்தினரது புதைக்கப்பட்ட வீடுகளிலிருந்து வெளிக்கொணரப்பட்டவை அனைத்தும் விலைமதிக்கமுடியாதவை. தங்கம், வெள்ளி, வைடூரியம், விதம் விதமான மணிகள், வைரக்கற்கள் என ஒவ்வொரு அரச குடும்பத்தினரின் அவரது தகுதி, முக்கியத்துவத்திற்கேற்ற வகையில் இறந்தவரின் மம்மி செய்யப்பட்ட உடலோடு இணைத்து வைக்கப்பட்டிருக்கும். அது மட்டுமா ?

    இறந்த அந்த அரச குடும்பத்தினரின் இறப்புக்குப் பின்னர் அவர் வாழ்கின்ற உலகத்தில் அவர் பயன்படுத்துவதற்காகத் தேர், வாகனங்கள், பெட்டிகள், மிக நுணுக்கமாகச் செய்யப்பட்ட ஆடைகள், சாப்பிடுவதற்கான பாத்திரங்கள், இன்னும் அவர் என்னென்னவெல்லாம் பயன்படுத்துவார் என்று நினைத்தார்களோ அத்தனையையும் தங்கத்தினாலும் வெள்ளியாலும், விலை உயர்ந்த பொருட்களினாலும் செய்திருக்கின்றனர். தேர்கள், படுக்கை கட்டில்கள் எல்லாம் தங்கமுலாம் பூசப்பட்டு கண்களை கூசச் செய்வதாக இருக்கின்றன. புதைக்கப்பட்ட வீடுகள் என்று குறிப்பிட்டேன். ஆம். புதைக்கப்பட்ட ஒவ்வொரு அரச குடும்பத்தினருக்கும் பல அறைகளைக் கொண்ட குகை வீடுகள் உருவாக்கப்பட்டன. இந்த குகை வீடுகள் எகிப்திய பாலைவனப் பகுதியில் நைல் நதியின் இரு பக்கங்களிலும் அமைந்திருக்கின்றன.ஒரு பக்கத்தில் அரசர்களின் பள்ளத்தாக்கு (Valley of the Kings), மறு பகுதியில் அரசியர்களின் பள்ளத்தாக்கு (Valley of the Queens).

    ak2

    கர்னாக் ஆலய வாசலில்

    நான் கைரோ அருங்காட்சியகம் சென்ற சமயத்தில் இளம் வயதில் இறந்த மன்னன் தூத்தான்சாமூனின் ஈமச்சடங்குப் பொருட்கள் அனைத்தும் அங்கு அன்றைக்கு காட்சிக்கு வைக்கப்பட்டிருந்தன. இப்பகுதி மிகுந்த பாதுகாப்புகளோடு கண்காணிக்கப்படும் பகுதி. தூத்தான்சாமூனின் மம்மிபடுத்தப்பட்ட உடல் ஏனைய அரசர்களது உடலைப் போல நல்ல நிலையில் இல்லை. இதற்குக் காரணம் இந்த இளம் அரசன் ஒரு சதிச்செயலால் மிக இளமையிலேயே வெட்டி கொல்லப்பட்டவர். இவரது உடல் மிகுந்த சேதப்படுத்தப்பட்ட நிலையில் மம்மியாக்கப்பட்டு ஏதோ ஒரு வகையில் பாதுகாத்துவிட்டார்கள். தாக்குதலில் அவரது தலைப்பகுதி மிகச்சிதைந்து போனதால் அவரது உடலின் மேல் தங்கத்தாலான கவசம் ஒன்றினைச் செய்து வைத்திருக்கின்றனர். தூத்தான்சாமூனுக்காகச் செய்யப்பட்ட ஒவ்வொரு பொருளையும் பார்த்து அதிசயத்தில் திகைத்துப் போய் நின்றேன்.

    கைரோ அருங்காட்சியகத்தில் இருக்கும் பல ஒரு விலை மதிக்க முடியாத பொருட்களில் என் மனதைக் கவர்ந்த மேலும் ஒன்று என்னவென்றால் இங்கிருக்கும் அரசி ஹட்செப்சத் அவர்களது மம்மி என்று கூறலாம்.

    கைரோ அருங்காட்சியகம் வருவதற்கு முன்னர் கட்சிப்சத் தனக்காக நினைவு மண்டபமாகக் கட்டிய கோயிலை பெனி ஹசான் பகுதியில் பார்த்து விட்டுத்தான் கைரோ அருங்காட்சியகம் வந்திருந்தேன். ஆகையால் பேரரசியார் ஹட்செப்சத் அவர்களது பராக்கிரமங்களை ஓரளவு அருங்காட்சியகம் வரும் முன்னரே தெரிந்து கொள்ள முடிந்தது.

    ak3

    பேரரசியார் ஹட்செப்சத் தானே தனக்குக் கட்டிய நினைவாலயம்
    ​

    இவர் அரசியாக முடிசூடிக் கொண்டு பண்டைய எகிப்தின் பதினெட்டாவது பரம்பரையின் ஐந்தாவது ஃபாரோவாக (மாமன்னனாக அல்லது பேரரசியாக) ஆட்சி செய்தவர். இவரது காலம் கி.மு 1507 – 1458. அதாவது மாமன்னன் ராம்ஸசுக்கு முன்னரே ஆட்சி செய்தவர் என்பதோடு பண்டைய எகிப்தில் மிகப் பிரமாதமான பல கட்டுமானங்களைச் செய்வித்தவர் என்ற பெரும் புகழ் பெற்றவர். இவர் பேரரசர் முதலாம் தூத்மோசிசின் மகள். முதலாம் தூத்மோசிசின் முதல் மனைவிக்குப் பிறந்தவர். அதே முதலாம் தூத்மோசிசின் இன்னொரு மனைவிக்குப் பிறந்த இரண்டாம் தூத் மோசிசை மணந்தவர்.

    பேரரசியார் ஹட்செப்சத் தன் ஆட்சிக் காலத்தில் மிக விரிவாக நாடெங்கிலும் வர்த்தகத்தை விரிவுபடுத்தினார். முடங்கிக்கிடந்த சாலை சீரமைப்புப் பணிகளை செம்மைப்படுத்தி பிற நாடுகளுக்கிடையிலான வர்த்தகம் செழிப்புற வகை செய்தார். குறிப்பிடத்தக்க கோயில்களை இவர் எகிப்தில் கட்டினார். இவர் காலத்தில் சிற்பக்கலை செழித்தது. இவர் காலத்து சிற்பங்கள் உலகின் பல அருங்காட்சியகங்களைச் சிறப்பு செய்கின்றன. அதில் குறிப்பாக நியூயோர்க் மெட்ரோபோலிட்டன் அருங்காட்சியகத்தில் பேரரசியார் ஹட்செப்சத் கால சிற்பத் தொகுதிகளுக்கென்றே ஒரு அறை ஒதுக்கப்பட்டுள்ளது குறைப்பிடப்படவேண்டிய ஒன்றே.

    ak4

    கர்னாக் கோயில் ஒபிலிஸ்க்
    ​

    இவர் காலத்தில் கார்னாக் கோயிலில் மேலும் சில சிற்பங்களை இவர் இணைத்திருக்கின்றார். பண்டைய பெண் தெய்வமான முட் தெய்வத்தின் கற்பக்கிருக பகுதியைச் சீர் செய்தார். அது மட்டுமன்றி இரட்டை ஒபில்ஸ்குகளை இக்கோயிலின் வாசலில் பிரதிஷ்டை செய்தார். அதில் ஒன்று உடைந்து விழுந்து விட்டது. ஆனால் மற்றொன்று இன்னமும் அதே கோயிலில் இருக்கின்றது. இதுவே உலகின் மிக உயரமான ஒபிலிஸ்க் என்பது குறிப்பிடத்தக்கது. ஒபிலிஸ்க் என்பது செலிண்டர் போன்ற அமைப்பில் மிக உயரமாக அமைந்து அதன் நுனிப்பாகத்தில் சூரியக் கதிர்போல் கூர் முனையைக் கொண்டிருக்கும் ஒரு வடிவம். இது சூரியக் கடவுளை பிரதிபலிக்கும் ஒரு வடிவம் என்றும் குறிப்பிடலாம். பேரரசியார் ஹட்செப்சத் தனது 22வது ஆட்சிக் காலத்தில் இறந்தார். கிடைக்கின்ற ஆவணங்களின்படி இவர் ஜனவரி மாதம் 16ஆம் தேதி கி.மு 1458ஆம் ஆண்டு இறந்தார் எனத் தெரிகின்றது.

    இன்னொரு சுவாரசியமான விடயம் என்னெவென்றால் ஆட்சிப் பொறுப்பில் இருக்கும் மன்னர்கள் தாடி வைத்திருப்பது வழக்கம். அதனை பிரதிபலிக்க பேரரசியார் ஹட்செப்சத் தானும் செயற்கை தாடி ஒன்றினை செய்து அணிந்து கொண்டு அரசவைக்கு வருவாராம்.

    ak5

    பேரரசியார் ஹட்செப்சத் உருவச்சிலை தாடியுடன்
    ​

    இந்தப் பேரரசியார் ஹட்செப்சத் அவர்களின் மம்மியும் இந்த கைரோ அருங்காட்சியகத்தில் இருக்கின்றது. இவரது ஆட்சிக் காலத்து விடயங்களை அறிந்து கொண்டு நேரில் இப்பேரரசியார் ஹட்செப்சத்தை பார்த்தபோது உண்மையிலேயே பிரமிப்பில் உறைந்து போனேன்.

    ak6

    ​பேரரசியார் ஹட்செப்சத்தின் மம்மியாக்கப்பட்ட உடல்

    இப்படி சொல்லிச் சொல்லி விளக்க எத்தனை எத்தனையோ அரும்பொருட்கள் இந்த கைரோ அருங்காட்சியகத்தில் இருக்கின்றன. இவை ஒவ்வொன்றும் விலை மதிக்க முடியாத அரும்பொருட்கள்.

    உலக வரலாற்றிற்கு உன்னத சரித்திரத்தை எகிப்து வழங்கியுள்ளது. அந்த பழைய காலத்தை மீட்டுக்கொண்டுவந்து நம் கண்முன்னே அனுபவமாகத் தருவதாக இந்த கைரோ அருங்காட்சியகம் திகழ்கின்றது.

    சரி.. அடுத்த பதிவில் மேலும் ஒரு அருங்காட்சியகத்துடன் உங்களைச் சந்திக்கின்றேன். இந்த ஆப்பிரிக்க கண்டத்திலிருந்து பெயர்ந்து வேறு எங்கு உங்களை அழைத்துச் செல்லப்போகின்றேன் என ஊகித்து வையுங்கள்.

    Share
  • போயர் இன மக்களின் தெய்வ வழிபாட்டு மரபுகள்

    –க. பிரகாஷ்.

    7

    தருமபுரி மாவட்டத்திற்கு உட்பட்ட அரூர் வட்டத்தைச் சார்ந்த சந்தப்பட்டி ஊராட்சி மற்றும் சந்தப்பட்டி கிராமம் ஆகிய பகுதிகளில் வசிக்கும் தெலுங்கு மொழி பேசும் போயர் இன மக்களின் தெய்வ வழிபாட்டு முறைகளும் சடங்குகளும், பிற இன மக்களின் வழிபாட்டு முறைகளுடனும், சடங்குகளுடனும் இருந்து வேறுபட்டுக் காணப்படுகின்றன. சந்தப்பட்டி கிராமப் பகுதிகளில் வசிக்கும் போயர் இன மக்கள் வருடத்திற்கு ஒருமுறை மட்டுமே திருவிழா கொண்டாடுகிறார்கள். வெளியூர்களுக்குச் சென்று கூலித் தொழில், கட்டிடம்கட்டுதல், கல்கட்டுதல், விவசாயம் போன்ற தொழில்கள் செய்து வரும் இவர்கள் விழாக்காலங்களில் மட்டுமே சொந்த ஊருக்கு வருகின்றார்கள். இக்கிராமத்தில் இவ்வினத்தைச் சார்ந்த நூற்று இருபது குடும்பங்கள் வசித்துவருகின்றனர். இவ்வூர் செவ்வக வடிவில் அமைந்துள்ளது. இவ்வூரின் அங்காளி பங்காளிக்கு ஒரு கோயில் என்ற முறையில் இரண்டு பொரிய கோயில்களும் (அத்தெய்வங்களைப் பெருந்தெய்வங்களாகவும்), ஊருக்கு பொதுவாக இரண்டு சிறு கோயில்களும் (இத்தெய்வங்களைச் சிறுதெய்வங்களாகவும்), மேலும் ஒரு மாரியம்மன் கோயிலும் (அம்மனைப் பெருந்தெய்வமாகவும்) வழிப்படுகிறார்கள்..

    கோயில்கள்:
     வீரமத்தி கோயில்
     சின்னம்மாள் கோயில்
     பத்தரகாளியம்மன் கோயில்
     பிள்ளைமுனி கோயில்
     மாரியம்மன் கோயில்

    பூசாரியின் பெயர்கள்:
    சாமிக்கண்ணு, சம்பத் இவர்கள் இரண்டுபேரும் கோயில் பூசை செய்யும் பூசாரிகள். மற்ற பூஜைகளுக்கென தனி பூசாரிகள் இருக்கின்றனர் அவர்கள் சத்தி பூசாரி, கரக பூசாரி, கத்தி பூசாரி, பேய் ஓட்டும் பூசாரி, (கருப்பு ஓட்டும் பூசாரி) இளைய பூசாரி எனப் பிரிவுகளாக இருக்கின்றனர்.

    பூஜை:
    கோயில் பூஜைகள், விரத பூஜைகள், கொலுவைத்தல், சனி பூஜைகள், விருந்தினர் பூஜைகள் எனப் பல வகையான பூஜைகள் நடைபெறுவதுண்டு.

    சாமி பெயர்கள்:
     வீரமத்தியம்மாள் ( வரம் வாங்கும் சாமி)
     சின்னம்மாள் ( வரம் வாங்கும் சாமி)
     காளியம்மாள் ( காவு வாங்கும் சாமி )
     பிள்ளை முனியம்மாள் ( காவு வாங்கும் சாமி )
     மாரியம்மாள் ( ஊர் பொது சாமி)

    கோயில் அமைப்பும் – இருப்பிடமும்:
     கட்டிட அமைப்பு – மண்சுவற்றிலும், சிமெண்ட்டிலும்
     மரத்தடியில் -புளியமரத்தடியிலும் வேப்பமரத்தடியிலும்
     ஊர் மந்தை
     ஏரிக்கரையின் இடையில்

    தெய்வ இருப்பிடம்:
    மூன்று பெருந்தெய்வங்களும் இரண்டு சிறு தெய்வங்களும் கிழக்கு பார்த்தபடியே அமர்ந்துள்ளனர். பெருந்தெய்வங்களுடைய சுவர் அமைப்புகள் கற்களால் கட்டப்பட்டவையாகும். சாமியை வைத்திருக்கும் இடத்திற்கு கர்பக்கிரகம் (கர்ப்பகிடங்கு) மூலஸ்தானம், கருவறை, மற்றும் பூஜையறை என்றும் குறிப்பிடுவதுண்டு. பூஜையறைக்கு முன்பாக இருக்கும் அறைக்குத் தாழ்வாரம் என்றும் வாகன அறை என்றும் குறிப்பிடுகின்றனர். கோயிற்சிலை, தெய்வங்களின் வாகனங்கள், சாட்டைகள், சூலாயுதங்கள் போன்ற அனைத்துக் கருவிகளும் அங்கு வைக்கப்பட்டுள்ளன.

    கொலுவைத்தல்:
    பொதுவாக வாரத்தில் வெள்ளி மற்றும் சனிக்கிழமைகளில் கொலுவைப்பது வழக்கமாக உள்ளது. மக்கள் புதியதாக பொன் பொருள் வாங்குவதாக இருந்தாலும், வெளியூருக்குச் செல்வதாக இருந்தாலும், கஷ்டங்கள் வந்தாலும், பேய்பிடித்து இருந்தாலும் பூஜையில் இருக்கும் பூசாரியிடம் தங்கள் தேவைகளைக் கூறுவர். பூசாரி காளியம்மன், சின்னம்மாள் ஆகிய இரண்டு சாமிகளுக்கு இடையில் நாணயத்தை வைத்து மேளமும் மணியும் அடித்து வரம் கேட்பார். சின்னம்மாள் சாமியின் வலது புறத்தில் வைத்திருந்த நாணயம் கீழே விழுந்தால் நற்சகுனம் என்றும் இடதுபக்கத்தில் விழுந்தால் சகுனத்தடை என்றும் தெரிவிப்பது உண்டு.

    விழாக்காலங்கள்:
    போயர் இன மக்கள் சித்திரை, வைகாசி, ஆனி மற்றும் ஆடி ஆகிய நான்கு மாதங்களில் திருவிழாக்களை நடத்தி முடித்துவிடுவார்கள். இக் களப்பகுதியைச் சார்ந்தவர்கள் ஆனி மாதத்தில் திருவிழாவை நடத்தும் வழக்கம் உள்ளது. இக்கிராமங்களிலுள்ள இரு பிரிவினருக்கிடையே சண்டை, இளம் பெண்கள் பூப்பெய்துதல் மற்றும் இறப்பு ஏற்பட்டுவிட்டால் திருவிழாவை நடத்த இயலாததாகிறது. இதனால் திருவிழா நாட்களில் தொடர்ந்து நடக்கவேண்டிய காரியங்களை மட்டும் பார்ப்பது உண்டு. கோயிலுக்குச் சார்ந்தவர்கள் மட்டுமே (கங்கணம் கட்டியவர்) இறப்பு சடங்கை தவிர்த்துவிடுவார்கள். மற்றும் அவர்களின் உறவினர்கள் என்றால் கங்கணம் அகற்றிவிடுவர்.

    திருவிழா வழிபடும் முறை:
    சந்தப்பட்டி கிராமத்தில் ஆனி, ஆடி ஆகிய மாதங்களில் திருவிழா நடத்துவது வழக்கமாக உள்ளது. திருவிழா நடத்துவதற்கு முன்பு ஊர் சாட்டும் வழக்கமும் உள்ளது. ஏழு நாட்கள் அல்லது பதினைந்து நாட்களுக்கு ஒருமுறை ஊர் சாட்டுகின்றது. ஊர் சாட்டிய பிறகு, அவ்வூரின்(இன) மக்கள் வெளியூருக்குச் செல்லவோ அல்லது அசைவம் உண்ணவோ கூடாது. விழா திங்கள் கிழமை தொடங்கி வெள்ளிக் கிழமை வரை நடைபெறும்.

    திங்கட்கிழமை திருவிழாவின் முதல் நாள் அன்று காலை நகரத்துக்குச் சென்று சாமிக்குத் தேவையான பொருட்களை வாங்கிக்கொண்டு ஊர் எல்லையில் எல்லோரும் ஒன்று கூடி மேளதாளங்களோடு ஊர் சன்னதிக்கு வந்து சேர்வதுண்டு. அன்று இரவு பெருந்தெய்வச் சிலைகளை எல்லாம் டிராக்டர் வண்டியில் பலகையை வைத்து ஒன்றுக்குப்பின் ஒன்றாக அலங்கார கோலத்தில் வைத்தபிறகு (மகமேரி) தேரை வடிவமைத்து ஊர் மந்தையில் தேரை நிறுத்தி வைத்துவிட்டு ஊர் மக்கள் அனைவரும் சாமிக்கு பூஜை செய்து வணங்கிய பிறகு தேர் உலா செல்லும். தேருக்கு முன்பு கரகாட்டத்தை நிகழ்த்தி வருவதுண்டு. இத்தேர்த்திருவிழா விடியும் வரை நடத்தப்படும்.

             12

    இரண்டாம் நாள் செவ்வாய்க்கிழமை அன்று காலை 8.00 மணியளவில் கோழிக்காரனை வைத்து, 11.00 மணியளவில் பொங்கல் வைக்கவேண்டும் என்று ஊர் சாட்டுவது வழக்கம். காலையில் பொங்கல் வைத்து முடித்தவுடன் அவரவர்களுடைய பொங்கல் பானையை அடையாளப்படுத்தி வைத்துவிட்டு வீட்டிற்குச்சென்று விடுவார்கள். மதியம் இரண்டு மணியளவில் ஊர்க்கோடியில் இருக்கும் எல்லைப் பகுதியில் வேண்டுதல் இருப்பவர்கள் எல்லோரும் ஒன்று கூடி சாமிக்கு முன்பாக நின்று வழிபடுவார். பிறகு பம்பைக்காரரை வைத்து ஒலி எழுப்பி அருள் வந்தபிறகு அலகு குத்துவார்கள். அலகு குத்தியபிறகு கோயில்களுக்குச் சென்று அலகினை எடுத்துவிடுவார்கள். நான்கு மணியளவில் விளக்குமாவு எடுத்துக் கொண்டு ஊர் மந்தையில் ஒன்று கூடி கோலாட்டத்துடன், சாமிகளைத் தூக்கிக் கொண்டு மந்தைக்கு வந்து சேர்வார்கள். பிறகு தேங்காய் உடைத்து சாமிக்கு பூஜை செய்து முடித்தவுடன் பெண்கள் வீடு திரும்பிவிடுவார்கள். நான்கு மணியளவில் பூஜை செய்து ஆடு, கோழிகள் மேல் தீர்த்தம் தெளித்து விட்டபிறகு தலை ஆட்டிவிட்டால் “கத்திப்” பூசாரியால் ஆடு, கோழிகள் வெட்டப்படும் ( கத்திப்பூசாரியினர் பரம்பரை பரம்பரையாகவே இந்தப் பூஜையை செய்து வருகின்றனர்).

             34

    திருவிழாவின் மூன்றாவது நாள் புதன் கிழமை அன்று காலை 8.00 மணியளவில் கோழிக்காரனை வைத்து, 11.00 மணியளவில் பொங்கல் வைக்கவேண்டும் என்று ஊர் சாட்டுவது வழக்கம். காலையில் பொங்கல் வைத்து முடித்தவுடன் அவர்களுடைய பொங்கல் பானையை அடையாளப்படுத்தி வைத்துவிட்டு வீட்டிற்குச் சென்று விடுவார்கள். மூன்று மணியளவில் விளக்குமாவு எடுத்துக் கொண்டு ஊர் மந்தையில் ஒன்று கூடி கோலாட்டத்துடன், சாமிகளைத் தூக்கி கொண்டு மந்தைக்கு வந்து சேர்வார்கள். பிறகு தேங்காய் உடைத்து சாமிக்கு பூஜை செய்து முடித்தவுடன் பெண்கள் வீடு திரும்பிவிடுவார்கள். நான்கு மணியளவில் பூஜை செய்து ஆடு, கோழிகள் மீது தீர்த்தம் தெளித்து விட்டபிறகு அவை தலை ஆட்டிவிட்டால் கத்திப் பூசாரியால் அவ்வாடு, கோழிகள் வெட்டப்படும். ஐந்து மணியளவில் பிள்ளை முனி கோயிலுக்குச் சென்று தேங்காய் உடைத்து பூஜை செய்து முடித்தவுடன் கோழி வெட்டி தீர்த்தம் தெளிக்கின்றனர் அதன்பிறகு அனைவரும் வீட்டிற்குச் சென்றுவிடுவார்.

    திருவிழாவின் நான்காம் நாள் வியாழக்கிழமை அன்று சாமிகளை ஊர் வலமாகக் கொண்டு வந்து ஒவ்வொரு வீட்டிற்கும் பூஜை போட்டு வருவது வழக்கமாக இருக்கிறது. அப்போது யார் வீட்டிலாவது பேய் பிடித்தவர்கள் இருந்தாலோ, செய்வினை செய்து இருந்தாலோ கண்டுபிடித்துவிடுவர். மேலும் இறந்தவர்களுக்குப் படையல் போட்டு ( கடலை, வெல்லம், தேங்காய், மிட்டாய், வாழைப் பழம்) பூசை செய்து வழிப்பட்டு கண்ணீர் விட்டு அழுது வருவதும் உண்டு.

             56

    ஐந்தாவது நாளன்று வெள்ளிக்கிழமை சாமி ஊர்வலம் வந்து எல்லோர் வீட்டிற்கும் பிரசாதமாக பஞ்சாமிர்தம் கொடுத்துவிட்டு மாலை நேரத்தில் சாமியை வாகனத்திலிருந்து தனியே எடுத்து வைத்துவிட்டு உறவினர்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து மஞ்சள் நீராடுவது வழக்கம். திருவிழாவின் இப்பகுதி போட்டியோடு தொடங்கப்படுகிறது. அண்ணன், தம்பி (பங்காளி) எல்லாம் ஒரு பக்கத்திலும், மாமன், மைத்துனன் எல்லாம் ஒரு பக்கத்திலும் சேர்ந்து இடையில் ஒரு கயிறு கட்டி வண்ணம் கலந்த நீரை வீணாக்காமல் ஒட்டுமொத்தமாக வைத்துக் கொண்டு இரு அணிகளில் தலா ஒருவரைப் பிடித்து பாத்திரங்களில் வைத்திருக்கும் நீரை அவர் மீது ஊற்றி விளையாடுவார்கள்.

    பேய் ஓட்டும் முறை:
    ஆறாவது நாளும் ஏழாவது நாளும் (சனி மற்றும் ஞாயிற்றுக் கிழமை) மாலை நேரத்தில் பேய் பிடித்தவர்களை சாமி அழைத்து வந்து மந்தையில் உட்காரவைத்து பேய் ஓட்டுவது வழக்கம். பூசாரிக்கு அல்லது கருப்பு ஓட்டும் பூசாரிக்கு அருள் வந்தவுடன் சாட்டையை வாங்கி பேய்பிடித்தவர்களை அடிப்பதுண்டு. அந்த அடியில் ஒருசிலப் பேய்கள் ஓடிப்போய்விடும். அப்படிப் போகவில்லை என்றால் சூலாயுதம் கொண்டு கருப்பு ஓட்டுபவர் சக்கர வடிவில் ஒருவட்டத்தை வரைந்து பேய் பிடித்ததவர்களை அச்சக்கரத்தின் உள்ளே உட்காரவைத்து அருள் அழைத்து பேய் பிடித்த நபரிடம் வினாக்களை எழுப்புவதுண்டு. அவர்களிடம் வினாக்களைக் கேட்கும் போது படிக்காதவர்கள் கூடப் பல மொழிகளில் பேசுவதும் உண்டு.

    “யார்?”, “எதற்காகப் பிடித்திருக்கிறாய்?”, ” உனக்கு என்ன வேண்டும்?”, “இவரை விட்டு விலகு?”, என்ற கேள்விகளுக்கு, ஒருசிலப் பேய்கள் தான் அடைய நினைப்பதைக் கூறும். அதுபோலவே நாங்கள் செய்து விடுகிறோம். அவரை விட்டு நீங்கிப்போ என்று வாக்களித்த பிறகு, வட்டத்தில் எத்தனைச் சக்கரங்கள் இருக்கிறதோ அத்தனை சக்கரங்களுக்கும் எலுமிச்சைப் பழமும், தேங்காய், வத்தி, கோழி அல்லது ஆடுகளை வைத்த பிறகு கருப்பு ஓட்டுபவர் அந்த ஆட்டையும் கோழியையும் உயிருடன் பிடித்து இரத்தத்தை உறிஞ்சி விழுங்குவதோடு பேய்பிடித்தவரிடம் இருந்து மூன்று தலைமுடியை எடுத்து கொடுக்கச் சொல்லி அம்முடியை (மூன்று) முடிச்சுகள் போட்டு ஊர் எல்லையில் இருக்கும் ஆலமரத்தில் ஆணி அடித்துவிட்டுத் திரும்பி பார்க்காமல் வீடு வந்து சேர்ந்திடுவார்கள்.

    போயர் இன மக்கள் வருடத்திற்கு ஒரு முறை மட்டுமே திருவிழா கொண்டாடுகிறார்கள். அவர்கள் அத்திருவிழாவினை ஐந்து நாட்கள் கொண்டாடுகிறார்கள். பொங்கல் வைத்தல், விளக்குமாவு எடுத்தல், ஆடு, கோழிகள் வெட்டுதல், மஞ்சள் நீராட்டுதல் என வரிசையாக இக்கிராமத்தில் திருவிழாவைக் கொண்டாடுகின்றனர். திருவிழா முடிந்தபிறகு பேய் ஓட்டி ஊர் எல்லைகளுக்குப் பூஜை செய்து ஒவ்வொரு திசைக்கும் ஒரு ஆடு என்ற கணக்கில் நான்கு திசைக்கும் நான்கு ஆடுகள் வெட்டிய பிறகே வெளியூர் பயணங்களை மேற்கொள்வதுண்டு.

    ஊரில் அனைத்து நிகழ்ச்சிகளும் முடிந்த பிறகு சாமிச் சிலைகளை இப்பகுதியிலுள்ள சிறப்பு வாய்ந்த தீர்த்தமலைக்கும், அனுமன் தீர்த்தத்துக்கும் கொண்டு சென்று கழுவியபிறகே ஊருக்குள் கொண்டுவருவர். சாமிசிலைகள் ஊருக்கு வந்த அடுத்தநாள் வீடுகளைச் சுத்தம் செய்து அத்தீர்த்தத்தைத் தெளித்துவிட்டால் வீடுகளும், ஊரும் சுத்தமாகிவிடும் என்பது இம்மக்களின் நம்பிக்கை.

    போயர் இன மக்கள் வருடம் வருடம் திருவிழா நடத்துவது உண்டு. இம்மக்களிடம் இரண்டு பிரிவினர் இருப்பதால், (மாமன் மைத்துனன் ஒரு பிரிவு; அண்ணன் தம்பிமார் (பங்காளி) ஒரு பிரிவு), சில நேரங்களில் பிரச்சனைகள் ஏற்பட்டு விடுகின்றன. இதன் அடிப்படையாக வைத்து திருவிழாவை நடத்தக் கூடாது என்று ஒரு பிரிவினர் தெரிவித்தால் அந்த ஆண்டு திருவிழா நடத்த முடியாமல் போய் விடும். மக்கள் எல்லோரும் ஒற்றுமையாக இருந்தால் மட்டுமே திருவிழாவை சிறப்பாக நடத்தமுடியும். ஒரு ஆண்டு திருவிழா நடத்தவில்லை என்றால் மூன்று ஆண்டுகளுக்கு நடத்த முடியாமல் போய்விடும். நான்காம் ஆண்டுதான் திருவிழாவை நடத்தமுடியும் அந்த ஆண்டும் நடத்தமுடியாமல் போனால் ஐந்தாம் ஆண்டும் நடத்தமுடியாது. பின் ஆறாம் ஆண்டு மட்டுமே தான் திருவிழா நடத்தமுடியும். போயர் இன மக்கள் இத்திருவிழாவைச் சிறப்பாகவும், எந்தச் சடங்குகளும் மாறுபாடு இல்லாமல் நடத்தி வருகின்றனர்.

    தகவலாளர்கள் விவர குறிப்பு:
    க.கந்தசாமி வயது – 45, சந்தப்பட்டி
    க.லத்தா வயது – 40, சந்தப்பட்டி
    க.தாயம்மாள் வயது – 63, சந்தப்பட்டி
    க.குருசாமி வயது – 72, சந்தப்பட்டி

    ___________________________________________

    க.பிரகாஷ்

    க. பிரகாஷ்
    ஆய்வாளர்
    தமிழ்த்துறை
    பாரதியார்பல்கலைக்கழகம்
    கோயம்புத்தூர் – 46
    ___________________________________________

    Share
  • மகளிர்க்காக!

    – சித்ரப்ரியங்கா பாலசுப்ரமணியன்
    womens' day

     

     

     

     

     

     

     

     

    அன்பை வழங்குதலில் ஆனாய் அன்னையே
    ஆறுதல் அளித்துத் தேற்றுவதில் தோழியே
    இல்லறத்தை நல்லறமாக்கும் இனிய துணைவியே
    ஈடற்ற குலக்கொழுந்தே ஆனாய் நீ நன்மகளே
    உறைக்கக் கூறி குறை களைதலில் உன்னத சகோதரியே
    ஊர் உலகமே போற்றட்டும் நீ வாழி என இன்றுனையே
    எத்துணை பேரிடர்  உன் வாழ்வதினிலே தான் வரினும்
    ஏற்றதனை வெற்றி கொள்வதனில் நீயே மகா சக்தியடி
    ஐ! நின் பெருமை என் சொல்ல மாற்றுக் குறையா பொன்னே!
    ஒன்றா இரண்டா பலகோடி பாமாலையாய் அதைத்  தொடுத்துச்
    சீராக அதனையுமே சிறப்புறவே  உந்தனுக்கே
    சென்று எட்டுத் திக்குமே ஒலிக்கச் செவ்வனே செய்திடுவோம்!

     

     

    Share
  • கிருஷ்ணப் பருந்து!

    -மீ.விசுவநாதன்

    அங்கே பருந்தொன்று பறக்கிறது – அது
    அகண்ட வானத்தை அளக்கிறது!
    சங்கத் தமிழ்போலச் சிறகடித்து – அது  black-eagle
    சத்தம் போடாமல் விரைகிறது !

    சிறகை மடல்போல விரித்தபடி- அந்திச்
    சிவப்பை அணைக்கத்தான் முயல்கிறது!
    பறவை இனத்திற்குப் பெருமைதர -விஷ்ணு
    பாத மிரண்டைத்தோள் சுமக்கிறது!

    சொந்த இரையெடுக்க நினைத்தாலோ – ஒரு
    சுற்றில் சடாரென்று இறங்கிவரும்!
    பந்தைக் குழந்தைகள் எடுப்பதுபோல் – நன்கு
    பற்றி மேலேறிப் பறந்துவிடும்!

    அந்தி நேரத்தில் நதிக்கரையில் – அதை
    அறவோர் கும்பிட்டு மகிழ்ந்திடுவர்!
    எந்த உயரத்தில் இருந்தாலும் – தன்
    இறைவன் பெருமாளை நினைத்திருக்கும்! 

     

     

    Share
  • சங்கர சங்கர சம்போ சிவ சங்கர சங்கர சங்கர சம்போ

    சங்கர சங்கர சம்போ சிவ சங்கர சங்கர சங்கர சம்போ மெட்டு….ஸ்வாமிஜி பாடியதைக் கேட்டு….சிவபார்வதி ஓவியம்(அடியேன் வரைந்தது) இணைப்பு….

    d25b399b-f64b-4928-beae-7d4f1b9d4337

    ‘’சிவராத்திரியை முன்னிட்டு’’
    ———————————————————-

    ’’அம்போவென்(று) என்னை அகிலத்தில் ஆடவிட்ட
    சம்போ மகாதேவா சிந்திப்பாய் -உன்போல்
    மனையாள், இரண்டு மகன்கள் பெற்ற
    இணையாம் எனையாக்(கு) இறை’’….கிரேசி மோகன்….

    Share
  • கேசவ் வண்ணம் – கிரேசி எண்ணம்

    31ac78e5-5b52-46de-84c7-f5b5ffd1eae8

     

    ”குஞ்சு கிருஷ்ண கிளைபா கவதச்சேய்,
    வஞ்சியர் நாளின்று வையத்தில், -அஞ்சின்
    மனைவி துரோபதைஅ மங்கலம் பார்த்து
    வினைபா ரதத்தை விதைப்பு’’….கிரேசி மோகன்….

    வஞ்சியர் நாளின்று -சர்வதேச மகளிர் தினம்….
    அஞ்சின் -பஞ்ச பாண்டவர்களின்….

    Share
  • மறுமலர்ச்சி!

    பவள சங்கரி

    images

    1904 ஆம் ஆண்டின் இறுதியில் சகோதரி நிவேதிதா பெண்கள் கல்வி நலனில் பெரும் அக்கறை கொண்டு தனிப்பட்ட கல்விக்கூடங்கள் அமைத்து சேவை புரிந்து கொண்டிருந்தபோது,, தன்னுடைய Web of Indian Life’ என்ற நூலில் கூறியுள்ளது போன்று, வீட்டில் சமையல் வேலையும் மற்ற வீட்டு வேலைகளும் முடிந்த பின்பு பெண்கள் கிசு கிசுச் செய்திகளை பத்திரமாகப் பகிர்ந்து கொண்டும், சுலோகங்கள் சொல்லிக்கொண்டும் பொழுதைக் கழிக்கிறார்கள் என்ற நிலை மாறி, இன்று வசதியான வீட்டுப் பெண்கள்கூட வேலை இல்லாமல் பொழுதைக் கழிப்பது சுயமரியாதையை பாதித்துவிடும்  என்பதைப் புரிந்துகொண்டார்கள். போட்டியில் பங்கு பெறத் தயாராக இருக்கும் பெண்களுக்கு இன்று பல பயிற்சிக் கூடங்களும், பலவிதமான கல்வித் திட்டங்களும், அதற்குரிய வேலை வாய்ப்புகளும் பல்கிப் பெருகியுள்ளது. இன்று பெண் மருத்துவர்கள், வழக்கறிஞர்கள், பொறியியலாளர்கள், அலுவலக நிர்வாகிகள், கணக்கர்கள், இசைக்கலைஞர்கள், நடிகைகள், உயர் அதிகாரிகள், அரசியல் தலைவர்கள், இவையனைத்திற்கும் மேலாக நாட்டின் குடியரசுத் தலைவராகவும்  தம் உழைப்பால் உயர்ந்து சாதித்துக் கொண்டிருப்பவர்கள் பெரும் அளவில் இருக்கத்தான் செய்கிறார்கள்.  வெளிநாடுகளில் சென்று பயிற்சி பெற்று வரவும், பணிபுரியச் செல்பவர்களும் அதிகரித்துள்ளார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.  பஞ்சாப் மற்றும் வங்காளத்திலிருந்து ஆயிரக்கணக்கானப் பெண்கள் , வசதியான மத்திய தர குடும்பத்தின் விதவைகள், வருமானம் குறைவாக இருப்பவரின் மனைவிகள் என பலர்,  கல்வியறிவில் மிகவும் குறைந்திருந்தாலும், உதவியாளர்களாகவும், வீட்டுப் பணிப் பெண்களாகவும், கட்டிடத் தொழிலாளர்கள், கைவினைப் பொருட்கள் தயாரித்து விற்பவர்கள் என ஏதோவொரு வேலை செய்யக் கிளம்பிவிட்டனர். கூலித்தொழிலாளர்கள், சுரங்கத்தில் பணிபுரிபவர்கள், தொழிற்சாலைகள் மற்றும் வயல்களில் பணிபுரிபவர்கள் என கீழ்மட்ட தொழிலாளர்கள் எந்த பழைய பகட்டையும் காப்பாற்றிக் கொள்ளும் தேவையில்லாமல் வேலை கிடைத்தால் போதும் என்ற நிலையில் மிகவும் சிரமப்பட்டே வாழ்க்கையை நடத்துகிறார்கள். இதுவே இன்றைய மத்திய தர பெண்களின் நிலையாக உள்ளது.

    Share
  • மகளிர் தின வாழ்த்துகள்!

    பவள சங்கரி

     vallamai

    சுவாமி விவேகானந்தரின் பார்வையில் பெண்கள்   

    பத்தொன்பதாம் நூற்றாண்டில் ஏற்படத் தொடங்கிய இந்து மத மறுமலர்ச்சியில் உருவான உன்னதமான பல ஞானிகளில் நம் சுவாமி விவேகானந்தர் தனித்துவம் வாய்ந்த மகான். பெண்களை துறவு வாழ்க்கைக்குத் தடையாக இருக்கும் மாய சக்தியாகக் காணும் பல துறவிகளுக்கிடையே சுவாமி விவேகானந்தர், மிக வித்தியாசமான கருத்தைக் கொண்டிருந்தார்.  சீதை மற்றும் சாவித்திரி. போன்ற கதாப்பாத்திரங்களை ,பெண்களைப் பற்றிய தம் நோக்கிற்கு முன்னுதாரணமாகக் கொண்டிருந்தார்.   பாரதப் பண்பாட்டை நேசிப்பவராகவும், நவீன சமூக வளர்ச்சிகளைக் கருத்தில் கொண்டு அதற்கேற்றவாரு  தம் கருத்துகளை முன்வைப்பவராகவும் இருந்தார்.  இந்தியப் பெண்களின் தூய்மை, அன்பு, பக்தி போன்ற மேன்மையான குணநலன்களைப் பாராட்டியுள்ளார். இந்தியப் பெண்களின் பெருமை என்றும் அவர்தம்  தாய்மையிலேயே பிரகாசிக்கிறது என்கிறார். பெண்கள் சுதந்திரமும் வளர்ச்சியும் பெறுவதற்கு அடிப்படையான கல்வியைப் பெறுவதன் மூலமாக  தங்களுக்குத் தேவைப்படும் சீர்திருத்தங்களைத் தாங்களே தீர்மானித்துக் கொள்வார்கள்.  வெறும் புத்தகப் படிப்பை அளிப்பதைக் காட்டிலும், பெண்களுக்கு மதத் தத்துவங்கள், கலை, சுகாதாரம், ஆரோக்கியம், குடும்ப பராமரிப்பு, சமையல், தையல்,  அறிவியல் போன்ற அனுபவப் பாடங்கள் போதிக்கப்பட வேண்டும் என்கிறார். இளம் வயது திருமணங்கள் தவிர்க்கப்பட வேண்டும். பெண் சுதந்திரம் குறித்த விழிப்புணர்வும், சுய முன்னேற்றம் குறித்த தெளிவும் கட்டாயம் வேண்டும் என்கிறார். பெண்களை அடிமைப்படுத்தி வைத்திருப்பதே இந்திய நாட்டின் வீழ்ச்சிக்குக்  காரணம் என்கிறார்.

    1920-இல் மகாகவி பாரதியார் ,  ‘மாதர்களைப் பற்றி சுவாமி விவேகானந்தரின் அபிப்ராயம் ’ என்ற கட்டுரையை எழுதினார். அதில் அவர், பெண்கள் நிலை, பெண் விடுதலை பற்றிய தமது கருத்துகளை தமக்கே உரிய பாணியில் ஆராய்ந்திருக்கிறார். கடைசியில் அவர் அந்தக் கட்டுரையை கீழ்கண்டவாறு முடித்தது குறிப்பிடத்தக்கது:

    ” இங்கு ஸ்வாமி செய்திருக்கும் உபதேசத்தையும், இதனைச் செய்யும் படி தூண்டிய பேரன்பையும் கைக்கொள்வோமாயின், பாரத தேசத்து ஸ்திரீகளுக்கு பரிபூர்ணமான விடுதலை கிடைத்துவிடும்! அதனின்றும் பூ மண்டலத்துக்கு நன்மை உண்டாகும்”. என்கிறார்.

    சுவாமிஜியின் வேத வாக்குகள்:

    மேன்மக்கள் அனைவருமே பெண்மையை மதிப்பவர்கள். பெண்மையை மதிப்பவர்கள் அனைவரும் மேன் மக்களே.

    மேன்மக்கள் அன்புகாட்டி பெண்களை அடிமை கொள்ள மாட்டார்கள். மாறாக, பெண்களுக்குச் சுதந்திரம் கொடுத்து அதன் மூலம் அவர்கள் முன்னேறுவதையே விரும்புவார்கள்.

    பெண்மைக்கு ஆதாரமாய் உள்ள தெய்வீக சக்தியைப் புரிந்துகொண்டு அதை வணங்குதலே  அதற்குரிய மரியாதை.

    Manliness எனப்படும் ஆண்மைப் பண்புகள் ஆண்களுக்கு மட்டுமல்ல, பெண்களுக்கும் உரியது  ஆண்மை என்பது வீரம் மாத்திரமல்ல; பொறுமை, அன்பு,  தியாகம்,  சேவை,  செயல்வேகம், சிந்தனைத்திறன் போன்றவைகளும் அதில் உள்ளடங்கும்.

    நல்ல சூழ்நிலையில் பெண்களின் கற்பு மலர் போல் இருந்து நல்லவர்களின் மனங்களை மேம்படுத்துகிறது. அதே சமயத்தில் சூழ்நிலை பாதகமாகும்போது பெண்களின் கற்பு சுட்டெரிக்கும் நெருப்பாகித் தீயவர்களைச் சுட் டெரிக்கிறது.

    பெண்களை ஆளும் ஆதிக்கங்கள் அநேகம் உள்ளன. கணவன் – மனைவி  உறவில் ஆண்கள் பெண்களை ஆதிக்கம் செலுத்துகிறார்கள். மாமியார்- மருமகள் உறவில் பெண்களைப் பெண்களே ஆதிக்கம் செலுத்துகிறார்கள். அதேபோல ஆண்களை அடக்கி ஆளும் பெண்ணாதிக்கமும் இருப்பதை யாரும் மறந்துவிடக் கூடாது.

    ஒவ்வொரு பெண்ணும் தன் உடல்,  உள்ளத்தின் பலவீனங்களுக்குத் தன்னைத் தானே அடிமையாக்கிக் கொள்ளும்  ஆதிக்கங்களிலிருந்து பெண்கள் மட்டுமல்ல, அனைவரும் விடுபட்டு ஆன்ம சுதந்திரத்தில் திளைக்க வேண்டும்.

    ஒவ்வொருவரும் ஆன்ம ஆற்றலை உணர்ந்து அதை வெளிப்படுத்தி,  தங்கள் சொந்தக் கால்களிலேயே நிற்க வேண்டும்.  இதில் ஆண் பெண் என்ற பேதமின்றி இருவருக்கும்  சம வாய்ப்பும், உரிமையும் உள்ளன.

    Share
  • கிளாரா ஜெட்கினின் கொள்ளுப் பேத்திகளும் கொள்ளுப் பேரன்களும்

     கிளாரா ஜெட்கின்: பெண்ணுரிமைப் போராளி; 1910ல் கோபன்ஹெகன் நகரில் கூட்டப்பட்ட உலக மாநாட்டில் நூற்றுக்கு மேற்பட்ட நாடுகளின் பிரதிநிதிகள் அமர்வில், மார்ச் 8 உலக பெண்கள் தினமாக அனுசரிப்பது என்ற முடிவை எடுத்துக் கொடுத்த வீராங்கனை

    கிளாரா ஜெட்கின்: பெண்ணுரிமைப் போராளி; 1910ல் கோபன்ஹெகன் நகரில் கூட்டப்பட்ட உலக மாநாட்டில் நூற்றுக்கு மேற்பட்ட நாடுகளின் பிரதிநிதிகள் அமர்வில், மார்ச் 8 உலக பெண்கள் தினமாக அனுசரிப்பது என்ற முடிவை எடுத்துக் கொடுத்த வீராங்கனை

     

    உலக பெண்கள் தின வாழ்த்துக்களுடன்

    எஸ் வி வேணுகோபாலன்

     

    சமத்துவ ஒப்பனை அல்லது
    சமத்துவ பாவனை அல்லது
    சமத்துவம் அசாத்தியம் எனும் சவால் அல்லது
    சமத்துவம் எதற்கு எனும் துருவல் அல்லது
    சமத்துவப் பேச்சே பிரச்சனைதான் எனும் புகார்……

    இன்னபிற எசப்பாட்டுக்கெல்லாம் சளைக்காது
    தொடர்ந்து கேட்டுக் கொண்டிருக்கிறது
    சர்வதேச மகளிர் தின கீதம்

    *கிளாரா ஜெட்கின் நினைவைக் கொண்டாடும்
    கொள்ளுப் பேத்திகளும் கொள்ளுப் பேரன்களும்
    புதுப்பித்துக் கொள்கின்றனர்
    புதிய சமூகத்திற்கான கருவிகளை !

    புன்னகையால் புறந்தள்ளுகின்றனர்
    நிலைகுலைந்து போவோரது சாப மொழியை !

    இல்லத்தில், பொதுவெளியில், பணியிடத்தில்
    அடக்கவும், ஒடுக்கவும், முடக்கவும் பட்ட
    அவலங்களுக்கு எதிரான தீர்மானமான குரல்களோடு

    ஏந்திக் கொள்கின்றனர்
    பாலின சமத்துவத்தின் பல்லக்கை
    உன்னதப் பெருமிதம் சூடும் தோள்களோடும்
    உற்சாகத் தாளமிடும் கால்களோடும் !

    **********************

    Share
  • சிவசக்தி 

     க. பாலசுப்பிரமணியன்

    download

    சொல்லெல்லாம் என்றும்  சதாசிவமே !

    சொல்லுக்குள்  பொருளெல்லாம் சக்தி மயமே !

    கண்ணுக்குள் காட்சியெல்லாம் சதாசிவமே ,

    கண்ணின் ஒளியாக நிற்பதென்றும் சக்திமயமே !!

     

    நாதவடிவில் நிலைப்பதெல்லாம் சதாசிவமே

    நாதத்தின் மூலத்தில் நிற்பதுவோ சக்திமயமே !

    உயிர்மூச்சில் ஒலிப்பதுவோ சதாசிவமே

    உயிராக அதனுள் நிற்பதுவோ சக்திமயமே !!

     

    அசையும் அசையாப் பொருளெல்லாம் சதாசிவமே,

    அந்த அசைவின் இசையோ சக்திமயமே !!

    இருந்தும் இல்லாமலிருப்பதுவோ சதாசிவமே,

    இல்லாப் பொருளிலும் இருப்பதுவோ சக்திமயமே!!

     

    ஓமென்னும் சொல்லில் உயர்ந்து நிற்பது சதாசிவமே,

    அம்மென்னும் சொல்லில் அழகாய் வடிவது சக்திமயமே !!

    உடலில் உயிர்ப்பொருளாய்  என்றும் சதாசிவமே,

    உயிருக்கு பொருளாய் உணர்வாயிருப்பது சக்திமயமே !!

     

     

    Share
  • கேசவ் வண்ணம் – கிரேசி எண்ணம்

    86bc7d51-2d21-4a81-beec-53573e9cf379

    தென்முகம் நோக்கும் திருஅருணை மூர்த்தியை,
    உண்முகம் காண, உயர்த்திடும்,முக் -கண்முகம்
    வெற்பாய் ரமணவழி: வில்வத்தின் கீழ்அகந்தை
    அற்ப முகிலன் அடைவு ….கிரேசி மோகன்….

    Share