Blog

  • கேசவ் வண்ணம் – கிரேசி எண்ணம்

    abb25e87-9b72-45bd-8821-18f11ed98394

    ‘’கண்ணன் காப்பில் தாயும் சேயும் நலம்’’….
    ———————————————————————————-

    ”நினைத்திட நம்முள் நவநீதம் பொங்கும்
    கனைத்திடக் காமம் கலங்கும் -மணத்துழாய்
    திண்ணிய தோளில் தாய்மகிழ சேயணைக்கும்
    கண்னனை நெஞ்சே கருது”….

    ”அட்டைக் கரியாக ஆடை கலைந்திட
    வெட்ட வெளிதனில் வீற்றிருந்து -தொட்டிலில்
    தன்நினைவு இன்றிநலம் தாய்சேய்க்(கு) அளித்திடும்,
    கண்ணனை நெஞ்சே கருது”….கிரேசி மோகன்….

    Share
  • நட்பு சுகமா….. சுமையா….?

    பவள சங்கரி

    வாழ்க்கையில் நாம் அன்றாடம் எத்தனையோ பேரைச் சந்திக்கிறோம். ஒரு சிலரை பார்த்தவுடன் வெகு நாட்கள் அவர்களுடன் பழகியது போல ஒரு நெருக்கம் உண்டாகும். நம்மையறியாமல் ஒரு நேசமும், பாசமும் உருவாகிவிடும். சில நேரங்களில் இந்த பாசம் நேரில் பார்க்காமல் கூட ஒரு கற்பனை உருவத்துடனே வளர்ந்து வருவதற்கு, நம் பதிவுலக நட்புக்களே ஆதாரம். இந்த பாசமும், நேசமும், முன் ஜென்ம தொடர்போ என்று கூட பல நேரங்களில் நினைக்கத் தோன்றும். நம்மையறியாமல் நம் மனது அவர்களிடம் அதிக உரிமையைக் கூட எடுத்துக் கொள்ளும்.

    என் தோழி அஞ்சுவை {அஞ்சனா] என்ற பேரை நான் அஞ்சு என்றுதான் கூப்பிடுவேன் ] நான் சந்தித்தது ஒரு சுவாரசியமான சூழலில்…………..

    நாங்கள் புதிதாக வீடு வாங்கி குடி வந்திருந்த காலம். அக்கம் பக்கத்தில், 200 அடிக்கு எந்த வீடும் இல்லை. என் இரண்டு குழந்தைகளும் பள்ளி செல்லும் வயது. கணவர் பணி நிமித்தமாக வெளியில் சென்று திரும்ப நேரமானால் கூட அச்சமாகத்தான் இருக்கும். கூட்டுக் குடும்பத்தில் இருந்துவிட்டு முதன் முதலில் தனியே வெளியே வரும் அத்தனை பெண்களுக்கும் ஏற்படக்கூடிய சங்கடம்தான் இது. ஏதோ கண்ணைக் கட்டி ஒரு அத்துவானக் காட்டில் விட்டது போல சோகம்….. வலிய போய் பக்கத்தில் இருப்பவர்களிடம் பழகவும் தயக்கம். கல்லூரிக் காலங்களில் இருக்கும் சகஜ நிலை ஏனோ திருமணம் என்ற பந்தத்திற்குள் நுழைந்தவுடன், அப்படியே மாறிவிடுகிறது.

    உற்றார், உறவினர் என்ற சூழலிலேயே சுழன்று விட ஆரம்பித்துவிடுகிறது. பழைய நட்புக்களைப் பற்றி நினைக்கவும் நேரமின்றிப் போய்விடுகிறது. புதிய சூழல், புதிய மனிதர்கள் என்று ஒரு புறம், கணவரும் பணி நிமித்தமாக அதிக,நேரம் வெளியில் இருக்க வேண்டிய கட்டாயம். வழமையாக நான் தான் மகிழுந்தில் குழந்தைகளை பள்ளியில் சென்று விட்டு விட்டு வருவேன். அன்றும் அப்படி விட்டுவிட்டு, வங்கியில் ஒரு வேலை இருந்ததால் அதையும் முடித்துவிட்டு, வீடு திரும்ப எண்ணி காரை எடுத்துக்கொண்டு கிளம்பினேன். கிளம்பிய 5 நிமிடத்தில் ……….

    ஈரோட்டில் மேட்டூர் சாலை பிரதான சாலை. மிகப் பரபரப்பான சாலை, பஸ் நிலையமஅருகில் உள்ளதால், எந்நேரமும் சாரி, சாரியாக வண்டிகள் போய்க்கொண்டே இருக்கும். இடது புறம் இருந்த வங்கியிலிருந்து, சாலையின் மேற்குப் புறம் செல்வதற்காக, தெருவை கடக்க வேண்டி, என்னுடைய நான்கு சக்கர வாகனத்தை வேகமாக முடுக்கிவிட, அந்த வேளையில் சரியாக, நேர் எதிரில், ஒரு ஸ்கூட்டர், கண்,மண் தெரியாமல் படுவேகமாக வர, நேராக வந்து வண்டியின், பம்ப்பரில், மோதி, குட்டிக் கரணம் அடித்து சுருண்டு விழுந்ததை முதன் முதலில் கண்ணுக்கு நேராக, அதுவும், என் வண்டியிலேயே……. கண்ணிமைக்கும் நேரத்தில் எல்லாம் நடந்து விட்டது, அடுத்த நொடி, போக்குவரத்து காவல் அதிகாரி, இதையனைத்தையும் பார்த்துக் கொண்டிருந்தவர், நேராக வந்து, தவறு அந்த பெருங்குடி மகனார் மீதுதான், என்றும், தவறான பாதையில் அவர் வந்ததையும் சுட்டிக் காட்டி, என்னை அந்த இடத்தை விட்டு நகரச் சொன்னார். தெய்வாதீனமாக, விழுந்த அந்த மனிதரும் போதை தெளிய, மெதுவாக எழ முயற்சித்தார். ஆனாலும்,எனக்கு, கை, கால்கள் உதறல் எடுத்து, ஒரு அடி கூட நகர மறுக்கிறது.

    இந்த இக்கட்டான சூழலில்தான், ஒரு பெண்மணி,ஆதரவாக என் தோளில் கை போட்டு, வாருங்கள் போகலாம், என்றார். அந்த நேரத்தில் அவரை யார் என்று கேட்கக் கூட எனக்குத் தோன்றவில்லை. தன் கணவருடன் வந்திருந்தவர், அவரை எங்கள் பின்னாலேயே வரச் சொல்லிவிட்டு, என்னை வண்டியை எடுக்கச் சொல்லி, அருகில் அமர்ந்து கொண்டார். எனக்கு அந்த நேரத்தில் தெய்வமே வானத்திலிருந்து இறங்கி வந்தது போல ஒரு உணர்வு. செல்லும் வழியில்தான் அவர் தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டார். எங்கள் வீட்டின் அருகில் தான் அவர் வீடு என்றும், என்னை அவர் பார்த்திருப்பதாகவும், கூறினார். அவர் தன் பெயரை, அஞ்சனா என்றும், தன் கணவர் வங்கியில் பணிபுரிவதாகவும், ஒரே மகன் பத்தாம் வகுப்பு படிப்பதாகவும், தான் ஒரு மேல்நிலைப் பள்ளியில் ஆசிரியையாக இருப்பதாகவும் கூறினார்.

    அன்று முதல் அஞ்சனா எனக்கு அஞ்சுவானார். எங்கள் நட்பு நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாக வளர்ந்து கொண்டிருந்தது. அஞ்சுவின் கணவர் மிக கலகலப்பாக பழகக் கூடிய மனிதர். வலிய சென்று அடுத்தவர்களுக்கு உதவுவதில் அஞ்சுவிற்கு எள்ளளவும் குறைந்தவரில்லை அவர். அவரும் என்னை உடன் பிறவா சகோதரியாகவே நடத்தினார். இருவரும் “மேட் ஃபார் ஈச் அதர்” என்பார்களே, அப்படித்தான் இருப்பார்கள்.மிக அன்னியோன்யமான தம்பதியர் இருவரும். மிகத் தெளிந்த நீரோடையாக இருந்தது இவர்கள் வாழ்க்கை.

    ஆனால் விதிக்கு அது பொறுக்கவில்லை போலும். மிக ஆரோக்கியமான உடல் நிலையுடன், அன்றாடம் வாக்கிங், யோகாசனம், தியானம் என்று அழகாக திட்டமிட்ட வாழ்க்கை அவருடையது. அன்றும் வாக்கிங் சென்று விட்டு, வீடு திரும்பியவர், வழியில் பார்த்தவர்களுக்கெல்லாம் காலை வணக்கம் சொல்லிவிட்டு, வீட்டிற்குள் சென்றவர், சற்று நேரத்திலேயே அவர்கள் வீட்டில் ஒரே பரபரப்பு. காரில் அவரை தூக்கி வைத்துக் கொண்டிருந்ததைக் காண முடிந்தது. தீடீரென்று அதிகமாக வியர்க்க ஆரம்பித்ததாகவும், உடல் மிகவும் அசதியில் மயக்கமாக இருப்பதாகவும் கூறியதாக பேசிக் கொண்டனர். எந்த வலியோ வேதனையோ எதுவும் இல்லை. மருத்துவமனைக்குச் சென்றவர், இரண்டு மணி நேரத்திற்குள் அதே புன்னகை மாறா முகத்துடன் வெறும் உடலாக வந்து சேர்ந்தார். “திடீர் மாரடைப்பு” [ Massive attack ] என்றார்கள்.

    கூடியிருந்த அனைவரும் கதறியழ, அஞ்சு மட்டும், அப்படியே அசையாமல், அதிர்ச்சி நீங்காதவராக அமர்ந்திருந்தார். வெளியூரில் படித்துக் கொண்டிருந்த மகன் வந்து கதறிய போது கூட எந்த சலனமும் இல்லை அவரிடம். எல்லாம் முடிந்து வீட்டை சுத்தம் செய்து முக்கியமான உறவினர் மட்டும் இருந்து கொண்டிருந்தனர். இன்னும் நம் குடும்பங்களில் கணவனை இழந்த பெண்களுக்கு செய்யும் சடங்குகள் என்னும் கொடுமையிலிருந்து பெரிதாக விடிவு வந்தது போல் தெரியவில்லை. இப்பொழுதெல்லாம் பொட்டு வைக்க அனுமதிக்கிறார்கள். ஆனால் தாலி வாங்குவது, என்று ஒரு சடங்கு இருக்கிறதே. அது போன்ற கொடுமை ஏதுமில்லை எனலாம்.

    விடியற்காலை ஊர் உறங்கும் வேளையில், ஏற்கனவே கைம்பெண்களாக உள்ள சில பெண்கள் வருவார்கள். நெருங்கிய உறவினர், பெண்கள் மட்டும் இருப்பார்கள். அந்தப் பெண்ணை, நிறைய மஞ்சள் பூசி குளிக்க வைப்பார்கள். தலை நிறைய பூ வைத்து, பொட்டு பெரிதாக வைப்பார்கள். நல்ல புடவையும் உடுத்துவார்கள். பின்பு இந்த அலங்காரத்தைக் கண்ணாடியில் காட்டுவார்கள். கட்டிப்பிடித்து, ஒப்பாரி பாட்டு சொல்லி, [அந்த பாட்டைக் கேட்டால் கல் நெஞ்சும் கரையும்] பின்பு, தலையில் உள்ள பூவை பிய்த்துப் போட்டு, பொட்டை அழித்து, தாலியை கழட்டி ஒரு கிண்ணத்தில் பாலை வைத்து அதில் போட்டு விடுவார்கள். கையில் கண்ணாடி வளையல் இருந்தால் அதை உடைப்பார்கள். மற்ற சுமங்கலிப் பெண்கள் இந்த நேரத்தில் அவரைப் பார்க்காவிட்டால் மீண்டும் மூன்று மாதத்திற்கு திரும்பவும் அவரைப் பார்க்கக் கூடாதாம்………

    இந்த சடங்கு நடப்பதற்காக எல்லோரும் கூடியிருந்தனர். அந்த நேரத்தில் தான் அஞ்சுவின் மகன், எல்லாவற்றையும் பார்த்துவிட்டு, தன் அம்மாவிற்கு இப்படி ஒரு காரியம் செய்யவே கூடாது என்று அடம் பிடிக்க ஆரம்பித்துவிட்டான். எல்லோரும் எவ்வளவோ சொல்லிப் பார்த்தார்கள், அவன் கேட்பதாக இல்லை. எந்த சடங்கும் செய்ய அனுமதிக்க மாட்டேன். விருப்பப்பட்டவர்கள் மட்டும் இங்கே இருக்கலாம், என்று தெளிவாகக் கூறிவிட்டான். பெரியவர்கள் அவனை பலவாறாக சமாதானம் செய்யவும், தாலியை மட்டும் கழட்டிக் கொள்ள சம்மதித்தான். ஆனால் அதற்காக அஞ்சுவிடம் அந்த பெண்கள் நெருங்கிய போதுதான், அவர் சுய நினைவு பெற்றவராக, ஓ வென கத்த ஆரம்பித்தது தெருவில் இருந்த அனைவரையும் கதி கலங்கச் செய்தது. எனக்கும் ஏதும் புரியவில்லை, அந்த நிமிடம் வரை சொட்டு கண்ணீர் விடாதவர், தாலியை தொட்டவுடன் அவர் கத்தியது, இன்று நினைத்தாலும் கதி கலங்குகிறது.

    ஒருவரையும் அருகில் நெருங்கவே விடாமல், என் மடியில் படுத்துக் கொண்டு கதறியழுதது தாங்க முடியாத வேதனை. அன்று ஆரம்பித்த அழுகை முப்பது நாட்கள் இருக்கும் ஓயாத அவர் அழுகை சற்றே ஓய்வதற்கு. திடீரென, இரவு பத்து மணிக்குக்கூட அவர் அம்மா வந்து என்னை அழைப்பார்கள். அஞ்சுவின் அழுகையை கட்டுப்படுத்த முடியவில்லையென. நானும் எந்த நேரம் கூப்பிட்டாலும், வீட்டில் போட்டது போட்டபடி உடனே ஒடி விடுவேன். அவரிடம், பல விடயங்களைப் புரிய வைத்து அவர் அழுகையை கட்டுப்படுத்த முயற்சிப்பேன். கொஞ்சம், கொஞ்சமாக தேற ஆரம்பித்தார். மகனுக்காக தன்னைத் தேற்றிக் கொள்ள முயன்றார்.

    இதற்குப் பிறகுதான், என்னுடன் பழகுவதை குறைத்துக் கொள்ள ஆரம்பித்தார். கணவர் இறந்து ஆறு மாதங்கள் ஆகியிருக்கும் அந்த நேரத்தில். என்னைக் கண்டவுடன், ஏனோ அவருக்கு அழுகை பொங்கி வர ஆரம்பித்தது. நானும் அதை உணர்ந்து, சற்றே அவர் சந்திப்பைக் குறைத்துக் கொண்டேன். ஆனாலும் அவர் என்னை பார்ப்பதையே தவிர்க்க ஆரம்பித்ததுதான் ஏன் என்றே எனக்குப் புரியவில்லை……. நானும் எத்தனையோ முறை முயன்று பார்த்தும் பழையபடி அவரால் என்னிடம் பழக முடியவில்லை. அதுதான் ஏன் என்று எனக்கு இன்றும் புரியாத புதிராகவே, மனதை நெருடிக் கொண்டிருக்கிறது. இன்று அஞ்சுவின் மகன் படித்து முடித்து, துபாயில் வேலை கிடைத்து செட்டில் ஆகி விட்டான். இவரும் விருப்பு ஓய்வு பெற்று, மகனுடன் துபாய் சென்றுவிட்டார். நாட்டையே விட்டுச் செல்லும் போதுகூட என்னிடம் ஒரு வார்த்தை சொல்லவில்லை………. அதுதான் ஏன் என்ற காரணம் புரியாமல் என் மனம் குழம்பித் தவிக்கிறது………… மனித மனம் என்றுமே ஒரு புரியாத புதிராகத்தான் உள்ளது அல்லவா?

    Share
  • சிவபிரதோஷம்

     
    மீ.விசுவநாதன்

    pt893

    மகாவில்வம் ஒன்றெடுத்து எங்கள்
    மகாதேவன் கால்களிலே வைக்க
    மகாசெல்வப் பேரமைதி என்னுள்
    மௌனமாக ஓங்கியதே ! தீமை
    புகாமனத்துள் தீட்டேது என்று
    புத்தொளியாய் மின்னியதே ! நீயென்
    சகாவென்றே திரிசூலன் சேர்க்க
    சாதிபேதத் தீதெல்லாம் போச்சே!
    (06.03.2016)
    (அரையடி வாய்பாடு: காய், காய், மா)

    Share
  • குருவி சொன்ன பாடம்

    மீ.விசுவநாதன்

    Pitta_moluccensis-20040821

    குருவி ஒன்று பறக்கிறது
    கூடம் மாடம் திரிகிறது
    பெருகி வந்த மகிழ்ச்சியிலே
    பித்துக் கொண்டு அலைகிறது !
    அருகில் கொஞ்சம் வருகிறது
    அதிலே அன்பைத் தெளிக்கிறது
    அருகிப் போகா இறையருளை
    அழகாய்க் காட்டி அமர்கிறது !

    “உலையில் பொங்கும் அரிசியினை
    உண்ண வேண்டின் பொறுமையினை
    சிலைபோல் இருந்து பழகிவர
    சிந்தை அழுந்தி சிவமறியும் !
    அலையும் மனத்தை அடக்கிடவே
    அதுவே வழியாய் மொழிகிறது !”
    புலையன் வேதன் அனைவருக்கும்
    புருஷன் உணர்வை உணர்த்தியது !

    (06.03.2016)
    (அறுசீர் விருத்தம் வாய்பாடு:
    புளிமா, தேமா, கருவிளங்காய், மா,மா, கருவிளங்காய் )

    Share
  • கேசவ் வண்ணம் – கிரேசி எண்ணம்

    கேசவ் ‘’MAYAN CALENDER” ஞாபகம் ஏனோ வந்தது….
    ‘’மாயன் காலெண்டர்படி நாளை உலகம் அழியுமென்றார்கள்(முன்பு எப்பவோ!)
    உலகம் அழிவதும், உண்டாவதும், உருள்வதும் ‘’உலகளந்த உத்தமன்’’ கால்(UNDER)படி…

    e3673d40-664e-4101-81f4-0b5c500b5cbe
     
    ‘’மாயன்கா லெண்டர் மதிப்பீடு செய்தவண்ணம்,
    ஓயும் உலகென்றால், உண்டுமிழும் -மாயன்கோ
    பால கிருஷ்ணன், படுத்(து)ஆலில் கால்(UNDER)சுவைத்து,
    நீலக் கடல்மிதப்பான் நம்பு’’…..

    ”மாயனா! இல்லை மயன்தானா! கேசவ்கை
    மாயா மயமா!, மொழிகின்றேன்: -சீயமாய்
    தூணுக்குள் செல்லாது தேவலோக சிற்பியாய்
    காணக்கா லெண்டர் கிழித்து’’….கிரேசி மோகன்….

    Share
  • பழமொழி கூறும் பாடம்

    – தேமொழி.

     

    பழமொழி: ஈடில்லதற்குப் பாடில்லை

     

    மாட மழிந்தக்கான் மற்று மெடுப்பதோர்
    கூட மரத்திற்குத் துப்பாகு மஃதேபோற்
    பீடில்லாக் கண்ணும் பெரியார் பெருந்தகைய
    ரீடில்லதற் கில்லைப் பாடு.

    (முன்றுறையரையனார், பழமொழி நானூறு)

    பதம் பிரித்து:
    மாடம் அழிந்தக்கால், மற்றும் எடுப்பது ஓர்
    கூடம் மரத்திற்குத் துப்பு ஆகும்; அஃதேபோல்,
    பீடு இல்லாக்கண்ணும், பெரியார் பெருந் தகையர்;
    ஈடு இல்லதற்கு இல்லை, பாடு.

    பொருள் விளக்கம்:
    உயர்ந்த மாடங்களைக் கொண்ட ஒரு மாளிகை சிதைந்துவிட்டால், (இடிபாடுகளைக் கொண்டு) மற்றொரு வீட்டின் கூடம் கட்டுவதற்கு அதன் மரங்கள் உதவும். அதுபோலவே, (பெருமையுடன் வாழ உதவும்) செல்வம் இல்லாது அழிந்து போனாலும், பண்பிற் சிறந்த பெரியோர் பெருந்தன்மை கொண்டவராகவே வாழ்வார்கள். (வறுமையிலும் நற்பண்புகளைக் கடைபிடிக்கும்) இணையற்ற அவர்களது பெருமையை அவர்கள் துன்பத்தில் படும்பாடு வெளிக்கொணரும்.

    பழமொழி சொல்லும் பாடம்: கெட்டாலும் மேன்மக்கள் மேன்மக்களே, மேன்மை குணம் பொருந்தியவர்கள் துன்பம் வந்த போதும் தம் உயர் குணத்திலிருந்தும் மாறுபடாதவர்கள் என்பதனை விளக்குகிறது இப்பழமொழிப் பாடல். உளி தாங்கும் கற்கள் சிலையாக உருவாகும் சிறப்பைப் பெறுவது போல, துன்பத்திலும் செம்மையாக வாழும் அவர்களது நற்பண்பு அவர்களது பெருமையை வெளிக்கொணர உதவுகிறது. எந்த இடரிலும் தன்மை மாறாத சான்றோர்களின் சிறப்பைக் கூற விரும்பிய வள்ளுவர்,

    ஊழி பெயரினும் தாம்பெயரார் சான்றாண்மைக்கு
    ஆழி எனப்படு வார். (குறள்: 989)

    சான்றாண்மையின் கடலாக விளங்குபவர்கள், அழிவு தரக்கூடிய ஊழிக்காலத்தின் பொழுது கூடத் தனது உயர் குணங்களில் இருந்து பிறழாது, பண்பு மாறாதவர்களாகவே இருப்பார்கள் என்கிறார்.

    Share
  • கேசவ் வண்ணம் – கிரேசி எண்ணம்

    ab8ee64e-c025-4675-8513-13119a015795

    கண்ணனின் பச்சைக் காலை கிளி என்று எண்ணி வேடன்
    ‘’ஜரா’’ விட்ட நச்சு தடவிய அம்பு தைக்க….கிருஷ்ணாவதாரம் முடிவு….
    கண்ணனின் காலில் காலன் இருப்பதை அறிந்து கொண்ட
    ஐந்தறிவு ஆயர்பாடி பசு, அதனால்தான் கண்ணன் காலை
    வருடி ஆபத்து வரும் முன் அறிவித்ததோ….!

    ”வைகுண்டம் ஏள விரைந்தான், ஜராநச்சுப்
    பைகொண்ட அம்பால் பயணமிது, -அய்!கண்டு(ஆச்சரிய விளிச்சொல்)
    கொண்டதோ கேசவ்கை கன்றன்றே!, கால்வருடி
    விண்டதோவா யில்லாஜீ வன்!’’….கிரேசி மோகன்….

    Share
  • இங்கிலாந்திலிருந்து ஒரு மடல்….. (186)

    – சக்தி சக்திதாசன்.

     

    donald-trump

     

    அன்பினியவர்களே !

    இனிய வணக்கங்கள்.

    அடுத்தொரு மடலுடன் உங்கள் முன்னே நான். இன்றைய அவசர உலகில் நாடுகளின் அரசியல் நடப்புகள் எந்நெஞ்சில் ஓரளவு சிந்தனையைத் தூண்டியுள்ளன. குறிப்பாக, சகிப்புத்தன்மைக்குப் பேர் போன இங்கிலாந்து, அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளில் இடம்பெறும் அரசியல் அதிர்வுகள் சிந்திக்க வைக்கின்றன.

    புலம்பெயர்ந்து பலநாடுகளில் வாழும் நாம் எமது சீரான அமைதியான வாழ்வுக்கு நாம் வாழும் நாடுகளின் மக்களின் சகிப்புத்தன்மையும் எம்மை ஏற்றுக்கொள்ளும் மனோபாவமுமே துணை வருகின்றன. ஆனால் சமீபத்திய அரசியல் அரங்கில் நிகழும் நிகழ்வுகள் மனதில் ஒருவித பீதியோடு கூடிய மனக்கிலேசத்தை ஏற்படுத்துவது போலத் தென்படுகிறது.

    அமெரிக்கா சுமார் எட்டு வருடங்களின் முன்னால் ஒரு கறுப்பரைத் தனது ஜனாதிபதியாகத் தேர்ந்தெடுத்தது உலகெங்கும் ஒரு புதுவிதப் புத்துணர்ச்சியுடன் கூடிய உற்சாகத்தை அளித்தது. அமெரிக்க ஜனநாயகம் பற்றி மிகவும் புகழ்ச்சியான வகையில் பலவிடங்களிலும் விமர்சிக்கப்பட்டது. ஆனால், இப்போது எட்டு வருடங்களுக்குப் பின்னால், அதே அமெரிக்கா, மீண்டும் ஒரு ஜனாதிபதி தேர்தலை எதிர்நோக்கியுள்ளது. ஆனால், இம்முறை ஜனாதிபதித் தேர்தல் புத்துணர்ச்சியை அளிப்பதற்குப் பதிலாக புலம்பெயர்ந்தவர்கள் மத்தியிலும், சுதந்திர மனப்பான்மையுடைய ஏனைய அமெரிக்கர்கள், உலக மக்கள் மத்தியிலும் ஒருவித சஞ்சலமிக்க சிந்தனையைத் தூண்டி விட்டிருக்கிறது.

    ஆமாம் டொனால்ட் ட்ரம்ப் ( Donald Trump ) என்பவரின் அதிரடியான அரசியல் பிரவேசமும் அவருக்கு அமெரிக்க மக்கள் மத்தியில் கிடைக்கும் எதிர்பார்த்திராத ஆதரவுமே இத்தகைய ஒரு சஞ்சலத்தை ஏற்படுத்தியுள்ளது என்றால் மிகையாகாது. அமெரிக்க தேர்தல் விதிகளின்படி ஒவ்வொரு கட்சியிலும் அக்கட்சி சார்பாக போட்டியிடப் போகும் ஜனாதிபதி வேட்பாளர் யாரெனத் தீர்மானிப்பது ஒவ்வொரு நகரத்திலும் இருக்கும் அக்கட்சியின் ஆதரவாளர்களே. அவர்கள் அளிக்கும் வாக்கின் அடிப்படையிலேயே யார் அக்கட்சியின் சார்பாக ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடப் போவது என்பதை அக்கட்சி உறுதி செய்யும்.

    அவ்வகையில், இம்முறை நான் மேற்குறிப்பிட்ட டொனால்ட் ட்ரம்ப் என்பவரே இதுவரை நடந்த தேர்தல்களில் அமெரிக்க நாட்டின் முக்கிய கட்சிகளில் ஒன்றான குடியரசுக் கட்சியின் சார்பில் அதிக விருப்புள்ளவராகத் தென்படுகிறார்.

    யார் இந்த டொனால்ட் ட்ரம்ப் ?

    1946ம் ஆண்டு நியூயார்க் நகரில் பிறந்த டொனால்ட் ட்ரம்ப் ஒரு பொருளாதாரப் பட்டதாரியாவார். 2000ம் ஆண்டு ஜனாதிபதி வேட்பாளராக நிற்பதற்கான தேர்தலில் குதித்த இவருக்கு ஆதரவு கிட்டாத காரணத்தினால் விலகிக் கொண்டார். அமெரிக்க நாட்டின் பெரும் செல்வந்தர்களில் ஒருவரான இவர் பிரபலமான தொலைக்காட்சி ஒருங்கிணைப்பாளருமாவார். இவர் கடந்த காலங்களில், அமெரிக்க நாட்டின் இருபெரும் கட்சிகளான ஜனநாயகக் கட்சி (Democratic Party) , குடியரசுக் கட்சி (Republican Party) இரண்டுக்குமே பெருமளவில் நிதியுதவி செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

    இவர் ஜனாதிபதியாகப் போட்டியிடுவது ஏன் புலம்பெயர் சமூகத்திற்குச் சஞ்சலமளிக்கிறது எனும் கேள்வி எழலாம். காரணம் இவரது சமீபத்திய கொள்கைப் பிரகடனங்களே ! சமீபத்தில் இவர் நாட்டில் நடக்கும் பயங்கரவாதத்தைத் தடுக்க ஒரேவழி பயங்கரவாதத்திற்குரிய சரியான காரணத்தை அறியும்வரை அமெரிக்காவிற்குள் இஸ்லாமியர்கள் வருவதைத் தடை செய்ய வேண்டும் என்றார். மற்றொரு சமயம் மெக்சிகோவில் இருந்து அமெரிக்காவுக்குப் புலம்பெயர்ந்தோர்கள் பெண்களைப் பலாத்காரம் செய்வோர் என்றார். அது மட்டுமல்ல மெக்சிகோவில் இருந்து அமெரிக்காவிற்குள் வருவதைத் தடை செய்வதற்காக மெக்சிகோ அரசாங்கத்தின் செலவில் எல்லையில் மதில் கட்டி இருநாடுகளுக்குமிடையில் நிரந்தர எல்லையைப் பேணுவேன் என்றார்.

    அதுமட்டுமல்ல, அமெரிக்காவிற்குள் இருக்கும் சட்டவிரோத வெளிநாட்டிலிருந்து புகுந்தோர் அனைவரையும் உடனடியாக நாடு கடத்துவேன் என்று வேறு கூறியிருக்கிறார். அமெரிக்காவை மீண்டும் பெரிய ஏகாதிபத்திய நாடாக்குவேன் என்று சூளுரைத்துள்ளார். இத்தகைய வாதங்கள் புலம்பெயர்ந்தோர் மத்தியில் ஒரு சில சஞ்சலங்களைத் தோற்றுவிப்பது ஆச்சரியமில்லையே ! இப்படியான கொள்கையைப் பேசும் ஒருவரை வீணே பிதற்றுகிறார் என்று ஒதுக்கிவிடலாம். ஆனால், அவருடைய இத்தகைய பேச்சுகளுக்கு மக்கள் மத்தியில் கிடைக்கும் ஆதரவே இந்த அச்சத்திற்குக் காரணம் என்றால் மிகையாகாது.

    இதேபோல இப்போது இங்கிலாந்தில் ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து வெளியேறுவதா? இல்லையா ? எனும் அனைத்துமக்கள் வாக்கெடுப்பு நடத்தும் அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது. அதைத்தொடர்ந்து நடக்கும் வாதப் பிரதிவாதங்கள் அனைத்தும் வெளிநாட்டுக்காரர் பிரித்தானியாவுக்குள் நுழைவதைப் பற்றியே நிகழ்கின்றன.

    இவை நேரடியாக அந்தந்த நாடுகளில் வாழும் புலம்பெயர் மக்களின் மீதான அந்நாட்டு மக்களின் பார்வையின் கோணத்தை வித்தியாசப்படுத்தத் தொடங்கியுள்ளது. மக்கள் இத்தகைய கருத்துக்களுக்கு கூடுதலான கவனம் செலுத்தத் தொடங்கியுள்ளமை புலப்படுகிறது. இந்த மாற்றம் இந்தக் காலகட்டத்தில் ஏன் ஏற்படுகிறது எனும் கேள்வி எழுகிறது. இதற்குப் புலம்பெயர் சமூகமும் ஒரு காரணமாக இருக்கின்றதா எனும் கேள்வி நிச்சயமாகக் கேட்கப்பட வேண்டும்.

    எம்மை வாழவைக்கும் இந்த நாடுகளின் அனுகூலங்களை மட்டும் உள்வாங்கிக் கொண்டு எமக்கும் இந்த நாட்டுக்கும் எந்தவிதமான தொடர்பும் இல்லையெனும் போக்கில் பல புலம்பெயர் மக்களின் சமூகம் வாழத்தலைப்படுகிறதோ எனும் எண்ணம் ஏற்படாமல் இல்லை. இந்நாட்டில் பிறந்து வளர்ந்தவர்கள் இந்நாட்டையே தமது எதிரி நாடாகப் பார்த்து இம்மக்களைப் பாதிக்கும் பயங்கரவாதம் முதலான செயல்களில் ஈடுபடுவது இத்தகைய மாற்றத்திற்கு முக்கிய காரணியாக அமைகிறது.

    அது மட்டுமல்ல நாம் எமது கலாச்சாரங்களைப் பாதுகாக்கிறோம் எனும் நோக்கில் எமது கலாச்சாரங்களை இந்நாட்டு மக்களின் மீது திணிக்க முயல்கிறோமா ? என்பது கூட ஒரு நியாயமான சந்தேகமே ! எமது மொழி, எமது கலாச்சாரம் என்பது நிச்சயமாக எமது அடையாளங்களே. அதை நாம் எந்த நாட்டில் வாழ்ந்தாலும் அங்குத் தக்க வைத்துக் கொள்வதற்கு முயற்சிப்பது ஒரு உத்தமமான செயலே ! ஆனால், அதற்காக நாம் ஒரு சராசரி எல்லைக் கோட்டைத் தாண்டி விடுகிறோமா? எம்மைப் பார்த்து நாமே கேட்க வேண்டிய கேள்வி. எமது பாரம்பரியத்தை, கலாச்சாரத்தை நாம் எமக்குள் பேணிக்கொள்ள வேண்டியது அவசியம். அதற்காக, நாம் வாழும் நாட்டில் எம்மை மிகவும் மகிழ்வுடனும் அமைதியுடனும் வாழ இடம் தந்த சகிப்புத்தன்மை மிக்க மக்களிடம் அவர்கள் ஏற்றுக் கொள்ள வேண்டும் என்று எதிர்பார்ப்பது சரியா ?

    இவர்களது சகிப்புத்தன்மையின் எல்லைவரை தள்ளிச்சென்று நாம் இவர்களது பொறுமையைச் சோதிக்கிறோமா ? என்று கூட எண்ணத் தோன்றுகிறது. ஒரே நாட்டிற்குள், ஒரே நிறத்தையும், ஒரே கலாச்சாரப் பின்னணியையும் கொண்ட சமூகங்களுக்கிடையே பலவித பிரிவினைகளைப் பெரிதுபடுத்தப்படும். பின்புலநாடுகளில் இருந்து மேற்குலக நாடுகளுக்குப் புலம்பெயர்ந்த எம்மை எந்தவித நிறவேற்றுமை, மதவேற்றுமை , கலாச்சார வேற்றுமை பாராது இடம் தந்து வாழ்வு தந்த நாடுகளின் பிரஜைகளாக மாறிய பலர் இன்னும் மனதளவில் இந்நாட்டை ஒரு வாடகை வீடாகப் பார்ப்பதே இத்தகைய மனப்பான்மைக்குக் காரணம்.

    எனது இந்தக் கருத்துக்கள் நான் எனது தாய்மண்ணின் மீதோ அன்றி நான் எனது மொழியின் மீதோ கொண்ட பக்தியையும் காதலையும் எவ்விதத்திலும் குறைவாக மதிப்பிடுவதாகக் கொள்ளக்கூடாது. புலம்பெயர்ந்தோராகிய எமது அடுத்த சந்ததியும், இனிவரும் சந்ததிகளும் இந்நாடுகளில் ஒரு நிம்மதியான, நிலையான வாழ்வை மேற்கொள்ள வேண்டும் எனும் ஒரு ஆதங்கமே எனது இம்மடலின் மையக்கருத்துக்குக் காரணம்.

    “தம்பி உன்நெஞ்சில் உண்மை இருந்தால் பேனாவை எடு எழுது ” என்றான் முத்தமிழ்ப் பாவலன் மகாகவி பாரதி.

    நாம் வாழும் நாடுகளுக்கு உண்மையுள்ளவர்களாக, நன்றியுள்ளவர்களாக வாழ்வது ஒன்றே எமது எதிர்காலச் சந்ததியின் நல்வாழ்விற்கு வழிவகுக்கும்.

    மீண்டும் அடுத்த மடலில்
    சக்தி சக்திதாசன்

    http://www.thamilpoonga.com
    http://www.facebook.com/sakthi.sakthithasan

    Share
  • ஸ்ரீராகவேந்திரர் வெண்பாக்கள்

     

    கிரேசி மோகன்

    அடியேன் வரைந்த ராயர் ஓவியம்
    அடியேன் வரைந்த ராயர் ஓவியம்

    என்னிதய ராயரே என்வறுமை கேளய்யா
    என்னிதயம் வெற்றிடம் ஆச்சய்யா -சன்னிதி
    நாடெங்கும் உண்டுனக்கு நானதி லோர்துண்டு
    வாடகைக் கேணும் வருக….(1)

    தாயன் புடனே தமதடி யாரிடம்
    பாயும் பசும்கன்றே கற்பகமே-ராயா
    பிறந்தநாள் இன்று நிறைந்தநாள் ஆக
    கறந்தருள்வாய் காமதேனு வே….(2)

    வாயுபீம மத்வரின் வாரிசே ராமபூஜை
    தோயும்ஸ்ரீ ராயரே துங்கையில் -பாயும்நீர்
    வேகத்தோ(டு) அன்பர்தம் சோகத்தைத் தீர்க்கும்பூ
    லோக பிருந்தாவ னம்….(3)

    சு.ரவியின் ராகவேந்திரர் கன்ணனை முத்தமிட்டுக்
    கொஞ்சும் ஓவியம் பார்த்து….
    —————————————————————-

     

    ஆயர் குலவிளக்கை அஞ்சன வண்ணனை
    மாயக் குழந்தையை முத்தமிட்டு -ராயர்
    அணைத்திருக்கும் ஓவியம் ஆண்டாளின் பாடல்
    கனைத்திளம் கற்றெருமைக் கீடு….(4)

    நனைத்தில்லம் சேறாக்கும் நந்தகோபன் சேயை
    அணைத்தவன் கன்னம் அழுந்த -பிணைத்தபடி
    தாயன் புடனே திளைத்திருக்கும் ராயருக்கு
    காயாம்பு கண்ணனவன் கன்று….(5)….கிரேசி மோகன்….

    Share
  • இன்னம்பூரான் பக்கம்: 5: “பெண்ணாய் பிறந்திருக்கலாகாதா?”

    இன்னம்பூரான்
    03 03 2016

    a1

    நவம்பர் 14, 2009 அன்று மின் தமிழில் ‘தாவீது பாக்கியமுத்து நன்றாகத் தமிழில் எழுதுவார். அவர் எழுதிய “பெண்ணாய் பிறந்திருக்கலாகாதா?” என்ற கட்டுரையை படித்திருக்கிறேன்.’என்று ஒரு 1941வது வருட நிகழ்வை (அதாவது 75 வருடங்களுக்கு முன்னால்) பற்றி எழுதியிருந்ததை என் கண் முன்னால் வந்து வைத்தது: மாது சிரோன்மணி பத்ம பூஷண் எம். சாரதா மேனன் (டாக்டர்) அவர்களுக்கு தமிழ் நாட்டு அரசு அவ்வையார் விருது கொடுத்து, தன்னை கெளரவித்துக்கொண்ட இன்றைய தகவல்.

    அவரை பற்றி ஹிந்து நாளிதழில் அக்டோபர் 31, 2011 அன்று வந்த கட்டுரை வரவழைத்த பின்னூட்டங்களின் சுருக்கம்:

    Kurt Waschnig: ஆம். டாக்டர் சாரதா மேனன் சொல்வது சரி தான். கருணையை நாம் தான் வரவழைத்துக்கொள்ளவேண்டும். அதற்கு மனமும் மூளையும் துணை புரியவேண்டும்…‘டாக்டர்’ தலையெடுத்த காலகட்டத்தில், மனம் நலம் குன்றியோர் ஒதுக்கப்பட்டனர், பைத்தியம் என்று முத்திரை குத்தப்பட்டன்ர். அதனால் அவர்கள் சீறியெழுந்ததும் உண்டு. தன் மருத்துவ அனுபவத்தினால்,அதை உணர்ந்த ‘டாக்டர்’ SCARF அமைப்பை நிறுவினார்…அது வசிக்க இடம், மேன்மையான மனோநல ஆலோசனை, சிகிச்சை,பயிற்சி, வேலை வாய்ப்பு, நடமாடும் ஆஸ்பத்திரி, ஆராய்ச்சி, விழிப்புணர்ச்சி எல்லாவற்றிலும் தலைமை தாங்குகிறது…இது ஒரு பிரமாதமான வெற்றி. ஒரு பெண்ணரசியின் கருணை, கருணையின் புரிதல் சாதித்த சாதனை இது

    K.P. safarulla: இவர் ஒரு தேவதை.

    kothandaraman:புகழ்வாய்ந்த இந்த 88 வயது மன நல மருத்துவருக்கு பாரதரத்னா கொடுக்கவும்,நோபெல் பரிசுக்கு பரிந்துரைக்கவும், தமிழ் நாட்டு அரசு பரிந்துரைக்கவேண்டும். ( இது சொல்லி ஐந்து வருடங்களுக்குப் பின் அவ்வையார் விருது.)

    கட்டுரைச் சுருக்கம்:

    டாக்டரின் ஆலோசனை அறைக்கு விலாசம் போடப்படவில்லை. மனோ நல வைத்தியர் என்ற சொல்லைக் கேட்டாலே கொதித்து எழும் schizophrenia patients பல வாரங்களுக்குப் பின் நன்றி கூற வருகிறார்கள். மனித நேயத்தின் மறு உருவான டாக்டர் திட்ட வட்டமாக

    “மனம் தான் செயலை தீர்மானிக்கிறது. கனிவும், அன்பும் மனம் விரும்பினால் தான் இயங்குபவை. மூளையின் முன் அனுமதி இல்லாமல் ஒன்றும் நடவாது.” என்று கூறுகிறார்.

    அவருக்கு மங்கலான ஒரு நினைவு: 1947ல் அவர் மனோநலம் படிக்க விரும்பினார். 65 வருடங்களாக அதே தவம். எதிர் நீச்சல்: எட்டாவது மகவான அவர் ஏழாவது பெண். பெற்றோருக்கு ஏமாற்றம்.

    பால பருவத்தில் கடுஞ்சொல் வீசும் ஒரு கன்யாஸ்திரீயின் விவகாரத்தினால், இரண்டாம் வகுப்பு படித்த டாக்டர் ஒன்றாம் வகுப்பில் அமர்கிறார். தலைமை ஆசிரியை கேட்டதற்கு ‘என் சிக்கலை நானே தீர்த்துக்கொள்ள விரும்புகிறேன்.’என்கிறார். இது மறைந்த என் தம்பி பார்த்த சாரதியை நினைவூட்டுகிறது. ஒரு கன்யாஸ்திரீ அவன் தலையில் ஸ்கேலால் அடிக்கிறார். இவன் அந்த பள்ளிக்கு செல்ல மறுத்துவிட்டான். மதர் ஸுபீரியர் வீட்டுக்கு வந்து மன்றாடினர். தந்தை ஒத்துப்பாடினார். அவன் தன் பிரச்னையை நானே தீர்த்துக்கொள்கிறேன் என்று திரு ரசலையா அவர்களிடம் பேசி வேறு பள்ளிக்குப் போகத்தொடங்கினான். இந்த மனோபாவம் போற்றத்தக்கது.

    பெண்ணீயத்துக்குத் துணை போனது, அக்காலத்து கலோனிய அரசு. அவர்களுக்கு மருத்துவப்படிப்பு இலவசம். இன்றும் ஐ ஏ எஸ் எழுதுவது பெண்ணரசிகளுக்கு இலவசம். [தனி மொழி: அந்தக்காலத்தில் நான் மருத்துவம் படிக்க ஆசை கொண்டேன். பிராமணர்களை ஒடுக்க வந்த கம்யூனல் ஜீ.ஓ. ஒரு தடை. வறுமை மற்றொரு தடை. இன்று கூட ‘பெண்ணாய் பிறந்திருக்கலாகாதா?’ என்று அங்கலாய்க்கிறேன்.]

    டாக்டர் மொழிப்பிரச்னையை கூட எளிதாக தீர்த்தார். தெலுங்கில் Bacteriology படித்து பாஸ் செய்தார்! 1961ல் சென்னை மனோ நல ஆஸ்பத்திரியின் தலைமை. பிரமாதமான புரட்சிகரமான சீர்திருத்தங்களை நடைமுறைக்குக் கொணர்ந்தார். 1978ல் அவர் ஓய்வு (இன்றும் ஓய்வில்லை, 93 வயதில்) பெற்ற போது மனோ நலத்துறை திடம் பெற்று இருந்தது. அதுவே பெரிய சாதனை.

    நான் அதிகம் பேச என்ன இருக்கிறது?
    அவரே பேசுவதை கேட்டுத் தெளிந்து செயல் படுங்கள்
    https://www.youtube.com/watch?v=POcosfHeLcg

    இன்னம்பூரான்
    சித்திரத்துக்கு நன்றி:
    http://www.harmonyindia.org/images/Sarada_Menon.jpg

    உசாத்துணை: http://www.thehindu.com/features/magazine/unconditional-giver/article2573633.ece

    இன்னம்பூரான்

    http://innamburan.blogspot.co.uk

    http://innamburan.blogspot.de/view/magazine

    www.olitamizh.com

    Share
  • இன்னும் விழித்துக் கொள்ளாதது ஏன்?

    உமாராணி. ந.

    இந்தியாவில் ஒவ்வொரு ஆண்டும் விவசாயிகளின் தற்கொலை எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே இருக்கிறது. இந்த விவாதம் பெரும்பாலும் விவசாயிகளின் தற்கொலைக்கு ஒரு தற்காலிகமான ஒரு பதிலை தருவதாகவே உள்ளது. இனியும் எந்த விவசாயியும் தற்கொலை செய்யக்கூடாது என்பதற்கான முடிவாக அவை அமைவதில்லை. இதுவும் கடந்துபோகும் என்பதுபோல், ஒவ்வொரு விவசாயியின் இறப்பு எண்ணிக்கை நம்மைக் கடந்து சென்று கொண்டே இருக்கின்றன. ஆனால் இதற்கான முடிவு என்பது கேள்விக்குறியாகவே உள்ளது. தவறு எங்கு ஏற்படுகிறது, அதை எவ்வாறு சரிசெய்வது என்பதே இங்கு விவாதமாக உள்ளது. இவை எல்லாவற்றையும் விட இதைப்பற்றி அரசு கூறும் பதில் அதிருப்தி தருவதாக உள்ளது. அவை தன் பங்கிற்குப் பதில் சொல்ல வேண்டுமே என்பதற்காகச் சொல்வதாக உள்ளது.

    விவசாயத்தின் மூலம் 40 சதவிகித வேலையை மக்களுக்குத் தரமுடியும் என்று ஐ. நா. குறிப்பிடுவது மிக முக்கியமான ஒன்று. விவசாயியின் ‘தற்கொலை’ என்ற ஒற்றை வார்த்தைக்குப் பின்னால் மறைந்து இருக்கும் பருவ நிலை மாற்றம், நீர் பற்றாக்குறை, பொருளாதாரப் பிரச்சனை, இளமை, வறுமை, மழையின் அளவு குறைந்து போதல் அல்லது அதிகப்படியான மழை மற்றும் நிலம் இல்லாமல் கூலி வேலைக்குச் செல்வது என நீண்டு கொண்டே செல்லும் காரணங்கள் தெரிவதில்லை. நமக்குத் தெரிவது விவசாயி ‘தற்கொலை’ என்ற ஒற்றை வார்த்தையின் காரணமான எண்ணிக்கைகளில் அடங்கும் செய்திகள் மட்டுமே. நாம் எதிர் கொள்ள வேண்டிய ஒரே கேள்வி, இதற்கு முன்னர் நாம் விவசாயிகளின் தற்கொலை பற்றிய செய்தியை கேட்டதே இல்லையா? நிறையப் பார்த்து இருக்கிறோம் என்பதை நம் வரலாறு காட்டுகின்றது.

    அவற்றில் இருந்து நாம் தெரிந்து கொண்ட படிப்பினை என்னென்ன? அப்படித் தெரிந்து கொண்டோம் என்றால் ஏன் இன்றுவரை விவசாயிகளின் தற்கொலை எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே இருக்கிறது? அவற்றை ஏன் இன்னும் தடுத்து நிறுத்த முடியவில்லை? என்பது தான் நமது அடுத்தடுத்த கேள்விகள்.

    இந்திய விவசாயிகள் தற்கொலை செய்து கொள்வது 1990 ன் இடைப்பட்ட காலத்தில் இருந்து ஆரம்பிக்கிறது. தமிழ்நாட்டைப் பொறுத்தவரை விவசாயிகளின் தற்கொலை என்பது 1966-ல் இருந்து தமிழ்நாட்டின் ஒரு பகுதியாகவே அமைந்துள்ளது. அன்றிலிருந்து இதன் எண்ணிக்கை ஒவ்வொரு ஆண்டும் அதிகரித்துக் கொண்டே வருகிறது. இந்தியாவின் தேசிய குற்றப்பிரிவு துறை 1950-ல் இருந்து விவசாயியின் தற்கொலை பற்றிய தகவல்களை சேகரித்து வெளியிட்டும் வருகிறது.

    இதன்படி பார்த்தால் இந்திய அளவில் இதுவரை 1995 இல் இருந்து இன்றுவரை தற்கொலை செய்து கொண்டவர்களின் எண்ணிக்கை 2,96,438 ஆக உள்ளது. 1995-ம் ஆண்டு தற்கொலை செய்து கொண்டவர்களின் எண்ணிக்கை 10,720; 1996-ல் இதன் எண்ணிக்கை உயர்ந்தது, 1997- ல் தற்கொலை செய்து கொண்ட விவசாயிகளின் எண்ணிக்கை 13,622, இன்ன பிற. இவ்வாறு 1995- இல் இருந்து நாம் பல காரணங்களுக்காக விவசாயிகளின் தற்கொலை எண்ணிக்கை உயர்வதைப் பார்த்துக்கொண்டிருக்கின்றோம். ஆனால், இத்தனை ஆண்டுகள் ஆகியும் நாம் இன்று வரை விவசாயிகளின் தற்கொலைகள் பற்றிப் பார்த்தாலும், விவாதங்கள் மட்டுமே செய்து கொண்டு இருக்கின்றோம். அப்படியெனில் அவற்றினால் தெரிந்து கொண்ட காரணங்களை சரிசெய்து, அவர்களின் வாழ்வாதாரத்தை உயர்த்தி, விவசாயிகளின் தற்கொலையை தடுத்து நிறுத்த ஏன் முடியவில்லை என்பது தான் இன்றைய கேள்வி.

    2006 ல் இந்தியா, தற்கொலை செய்துகொண்ட விவசாயிகள் அதிக எண்ணிக்கையில் உள்ள மாவட்டங்கள் மற்றும் மாநிலங்களைத் தேர்ந்தெடுத்து ஒரு சிறப்பு மறுவாழ்வு அமைப்பை நிறுவியது. அதன் பிறகு 2008- ல் இந்திய அரசு ஒரு நிவாரணத் திட்டத்தையும் நிறுவியது. இவ்வாறு பல திட்டங்களை அரசு நடைமுறைக்குக் கொண்டு வந்துள்ளது. அதன் மூலம் பல செயல் திட்டங்கள் உதவுகின்றன. ஆனாலும் ஏன் விவசாயிகளின் தற்கொலை ஒவ்வொரு ஆண்டும் அதிகரித்துக் கொண்டே வருகிறது? இதற்கான மாற்று வழிதான் என்ன?

    அரசு தான் தரும் நிவாரணப் பணிகள் மற்றும் நலத் திட்டங்கள் மூலம் விவசாயிகளின் நிலைமையை முன்னேற்ற முடியும். மேலும், அவற்றின் மூலம் விவசாயிகளைத் தற்கொலை வரை கொண்டு செல்லாமல் தடுத்து நிறுத்தவும் முடியும் என நம்புகின்றது. ஆனால், நம் மக்கள், இதற்கான மாற்றுவழியை யோசிக்காமல் அரசு தான் உதவி செய்ய வேண்டும் என்ற எண்ணம் கொண்டவர்களாகவும் உள்ளனர்.

    விவசாயிகளின் தற்கொலை தினமும் நிகழ்வதால் இதற்கான முடிவை விரைவில் எடுக்க வெண்டும் என்ற அவசர நிலையில் இந்திய அரசு உள்ளது. ஐ. நா. வுடனும், பல நாடுகளுடனும் இணைந்து எடுத்த 17 நோக்கங்களில், நிலையான விவசாயத்தை உருவாக்குவது என்பதும் ஒரு முக்கியமான நோக்கம் என்பதும் இங்குக் குறிப்பிடத்தக்கது.

    ஒவ்வொரு ஆண்டும் எத்தனை விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டார்கள், அதற்கான காரணம் என்ன என்பதை அறிந்து கொள்வதற்காக மட்டுமே குழு அமைக்காமல், நலத்திட்டங்கள் சரியாக சென்று சேர்கின்றனவா? ஒவ்வொரு விவசாயியும் அவற்றினால் பயன் பெறுகின்றார்களா என்பதைக் கண்டறியவும்; அவற்றையும் தாண்டி தவறுகள் எங்கே நிகழ்கின்றன என்பதைக் கண்டறியவும் குழு அமைக்க வேண்டும். ஆனால், திட்டங்களை வகுப்பதும், அதைச் செயல்படுத்துவது மெதுவாகவும், பெயரளவிலும் நடைபெறுகின்றன என்பதே யதார்த்தமான உண்மை.

    மத்திய அரசும், பல சமுகத் தொண்டு நிறுவனங்களும் விவசாயிகளின் தற்கொலைகளுக்கு ஒரு நிரந்தரமான முடிவுகட்டவே மிகப் பெரிய அளவில் செயல்படுகின்றனர். ஆனால், அவற்றின் விளைவுகளை இன்று எந்த இடத்திலும் நம்மால் காண இயலவில்லை. விவசாயிகளின் தற்கொலை எண்ணிக்கை ஒவ்வொரு ஆண்டும் அதிகமாக நிகழ்ந்து கொண்டே இருக்கும் போதே அரசும் விழித்துக்கொண்டிருக்க வேண்டும். ஆனால் இதற்கான செயல்திட்டங்கள் குறைவாகவும், தீவிரமற்றும் இருப்பதைக் காண முடிகிறது.

    1994 – பஞ்சாயத் ராஜ் சட்டத்தின் படி விவசாயத்தைச் செம்மைப்படுத்துவதில் கிராம பஞ்சாயத்துகளுக்குப் பெரும் பங்கு உண்டு. இவை யாவும் சரிவர தனது பணியை செய்திருந்தால், ஒவ்வொரு கிராமத்திலும் விவசாயமும், விவசாயிகளின் வாழ்வும் செம்மையடைந்திருக்கும். இதன் மூலம் விவசாயிகளின் தற்கொலை எண்ணிக்கை ஒவ்வொரு பக்கமும் அதிகரித்துக் கொண்டே வந்தாலும், மற்றொரு பக்கம் இதைத் தடுத்து நிறுத்த வேண்டிய நல்லதொரு மாற்றாகக் கிராம பஞ்சாயத்து என்ற அமைப்பு முறையும் நம்மிடம் உள்ளது தெரிகிறது.

    ஒவ்வொரு கிராமத்திலும் கிராம பஞ்சாயத்து சரியான முறையில் தனது பணியைச் செய்யுமேயானால் நிச்சயம் விவசாயமும் செம்மையடையும், விவசாயியின் வாழ்வும் செம்மையடையும்; அதேநேரம் விவசாயியின் தற்கொலை என்ற ஒன்றும் இல்லாமல் போகும். இந்தியா முழுவதும் சமூக பங்கேற்புடன் கூடிய வறுமை குறைப்பு, வாழ்வில் தாழ்வுற்றோரை அதிகாரப்படுத்துதல், மக்கள் பங்கேற்புடன் வளர்ச்சி மற்றும் மேம்பாடு அனைத்தும் வெற்றித் தடங்களை பதிக்கின்ற போது, விவசாயியின் தற்கொலையை தடுத்து நிறுத்துவதில் மட்டும் ஏன் இந்த பொறுப்பற்றத் தன்மை?

    நாம் உண்ணும் உணவை உற்பத்திசெய்யும் ஒவ்வொரு விவசாயியும் கடவுளுக்குச் சமமானவர். ஒவ்வொரு விவசாயியும் தற்கொலை செய்துகொள்வது ஒவ்வொரு கடவுளும் தற்கொலை செய்து கொள்வதற்கு இணையானது. எல்லாப் பிரச்சனைக்கும் தற்கொலை தீர்வாகாது. முதலில் நம் வாழ்வாதாரத்திற்குத் தேவையான ஒரு வழியை நாம் தேடிக்கொள்ள வேண்டும். எப்போதும் அரசின் உதவியையே எதிர்பார்ப்பதும் அவை சரிவர கிடைக்கவில்லையென்றால் தற்கொலை செய்து கொள்வதும் ஏற்புடையதல்ல.

    விவசாயத்தில் சிக்கிம் மாநிலம் இந்திய அளவில் முதல் இடத்தில் உள்ளது. விவசாயமே அங்குப் பிரதான தொழில். விவசாயத்தைச் செம்மைப்படுத்த இம்மாநில மக்கள் கடுமையாக முயற்சித்துள்ளனர். சிக்கிம் மாநிலத்தில் மட்டும் எவ்வாறு இந்த அமைப்பு முறை சாத்தியமானது? மற்ற மாநிலத்தில் ஏன் இவை முடியவில்லை? எங்கு மாற்றம் தேவை படுகிறது?

    அது மட்டுமல்லாமல், பொதுமக்களை அரசு கட்டமைப்புகளுடன் இணைத்தும் வைக்க வேண்டும். இந்தச் சூழல் உருவானால், பொதுமக்களுக்கு எவ்வளவு பாதிப்பு ஏற்பட்டாலும் அவர்கள் முழுப் பொறுப்புடன் முழு வேலையில் ஈடுபடுவார்கள். ஆனால், நம் அரசு கட்டமைப்புகள் பொதுமக்களைத் தொலைவில் தனித்து வைத்துவிடவே எண்ணுகின்றன. அரசுக்கும் பொதுமக்களுக்கும் இடையில் ஓர் இடைவெளி இருக்குமாறு பார்த்துக் கொள்கின்றன. இதற்கு அரசு மட்டுமே காரணம் இல்லை என்றாலும் இந்த இடைவெளியில் நடக்கும் செயல் வேக மற்ற ஒரு மந்த நிலையே அரசின்மீது சந்தேகப்பட வைக்கிறது. இடைவெளி இல்லை என்றால் அரசின் அனைத்துத் திட்டங்களும் சரியான நேரத்திலும், வேகமாகவும் பொதுமக்களை சென்றடைய முடியும். அதனால் அனைத்து பொதுமக்களும் பயனடைந்திருப்பார்கள்.

    உள்ளாட்சியையும், கிராம பஞ்சாயத்தையும் வலுப்படுத்தாமல் இருப்போமானால் பொதுமக்களையும் ஒருங்கிணைக்க வழியில்லை. இன்றுள்ளது போல, பொதுமக்களின் பிரச்சனைகளை அரசு தெரிந்து கொள்வதிலும், அரசின் நலத் திட்டங்கள் பொதுமக்களைச் சென்றடைவதிலும் பெரிய இடைவெளி வரவே செய்யும். இடைவெளியில் அரசியல்வாதிகளும் லாபம் பார்க்கவே செய்வார்கள். அதையும் தவிர்க்கவே முடியாது.

    எனவே, விவசாயிகளின் தற்கொலைகளைத் தடுத்து நிறுத்த ஒரு மாற்று வழியைக் கண்டு பிடிக்க வேண்டும். மேலும், அரசும் விவசாயம் மற்றும் விவசாயிகளின் நிலைபற்றி தெரிந்து வைத்திருக்க வேண்டும். அதற்கான நலத்திட்டங்களும், பாதிக்கப்படும் போது அதற்கான செயல்பாடுகளும் எந்தவித தாமதமும் இன்றி சரியான முறையில் பாதிக்கப்பட்டவர்களுக்குச் சென்றடைய வெண்டும். அதேநேரம் விவசாயிகளுக்கும் தற்கொலைதான் முடிவு என்ற எண்ணத்தைக் கைவிடும் வகையில் விழிப்புணர்வையும் ஏற்படுத்த வெண்டும். இனியும் எந்த விவசாயியும் தற்கொலை செய்யக்கூடாது. இதுதான் இன்றைய மிக முக்கியமானத் தேவை.

    _________________________________

    உமாராணி. ந
    அரசியல் அறிவியல் மற்றும் வளர்ச்சி நிர்வாகத் துறை
    காந்திகிராம கிராமிய பல்கலைக்கழகம்
    கந்திகிராம்

    Share
  • கேசவ் வண்ணம் – கிரேசி எண்ணம்

    a41a8b16-203c-4970-b2d7-a6fdd10fae63

    ”ஐயம் அகற்றி அருச்சுனர்க்குள், ஆவேசம்
    மையம்கொள் கீதை மொழிகின்றான்:, -தெய்யம்
    விராட்உத் தமவில்லன், வீரன் கிரிக்கெட்
    விராட்கோலி யின்பேட்டிங்(Batting) வீச்சு’’….கிரேசி மோகன்….

    பாண்டவர்களுக்கு உத்தமன்
    கெளரவர்களுக்கு வில்லன்….

    Share
  • பழமொழி கூறும் பாடம்

    – தேமொழி.

     

    பழமொழி: அடுப்பின் கடைமுடங்கும் நாயைப் புலியாம் எனல்

     

    தாயானும் தந்தையா லானும் மிகவின்றி
    வாயின்மீக் கூறு மவர்களை ஏத்துதல்
    நோயின் றெனினும் அடுப்பின் கடைமுடங்கும்
    நாயைப் புலியா மெனல்.

    (முன்றுறையரையனார், பழமொழி நானூறு)

     

    பதம் பிரித்து:
    தாயானும், தந்தையாலானும், மிகவு இன்றி,
    வாயின் மீக்கூறுமவர்களை ஏத்துதல்-
    நோய் இன்று எனினும், அடுப்பின் கடை முடங்கும்
    நாயைப் புலியாம் எனல்.

    பொருள் விளக்கம்:
    (காக்கைக்கும் தன் குஞ்சு பொன்குஞ்சு என்ற மனநிலையைக் கொண்டவர்களான) பெற்ற தாயும் தந்தையும் கூட பெருமையுடன் கூறவழியற்ற பண்புகளின் இருப்பிடமானவர்,
    தானே தன்னைப் புகழ்ந்து பொய்யுரைத்துப் பேசிக் கொண்டிருப்பார் என்றால், பிறரும் அவர் மொழியினை நம்பி அவர்மேல் புகழுரைகளைக் கூறிக்கொண்டிருப்பது எந்தத் துன்பத்தையும் விளைவிக்காது. ஆயினும், அது அடுப்பின் அருகில் சோம்பலுடன் முடங்கிக்கிடக்கும் நாயொன்றினை வீரம் நிறைந்த புலி எனப் பாராட்டும் (நகைப்பிற்குரிய செயலாக அமைந்துவிடும்).

    பழமொழி சொல்லும் பாடம்: தற்புகழ்ச்சி கொண்டவரை அவர் மகிழும் வண்ணம் போற்றிப் புகழ்ந்துகொண்டிருப்பது முறையற்ற புகழ்ச்சியின் வகைப்படும். சிறியோர்களது  பண்பு என்றும் தன்னைத்தானே புகழ்ந்து கொண்டிருப்பது என்பதைச் சுட்டுகிறார் வள்ளுவர்,

    பணியுமாம் என்றும் பெருமை சிறுமை
    அணியுமாம் தன்னை வியந்து. (குறள்: 978)

    செருக்கின்றி யாவருடனும் பணிவன்புடன் பழகுவது பண்பில் சிறந்த பெரியோர்களின் குணம், சிறுமைக்குணம் படைத்த பண்பற்றோரே ஆணவத்துடன் தற்புகழ்ச்சியாகத் தன்னைத்தானே வியந்து பாராட்டிக் கொண்டிருப்பர்.

    அத்தகையோரே விரும்பிக் கேட்டாலும் அவர்களுடன் பயனற்றவற்றைப் பேசத் தேவையில்லை எனக் குறிப்பிடும் வள்ளுவர்,

    வேட்பன சொல்லி வினையில எஞ்ஞான்றும்
    கேட்பினும் சொல்லா விடல். (குறள்: 697)

    ஒருவரிடம் உரையாடும்பொழுது பயன்தருபவற்றை மட்டுமே பேசவேண்டும். அவரே விரும்பிக் கேட்டாலும் பயன்தராதா உரைகளைத் தவிர்த்துவிடுதல் வேண்டும் என்கிறார்.

    Share
  • கேசவ் வண்ணம் – கிரேசி எண்ணம்

     

    f8dcb958-bcd6-4dd6-a721-637395c46e9a

    ”எட்டிநாம் போனாலும் கட்டி அணைத்திடுவான்,
    எட்டவன் ஏழையவல் ஏற்றளிப்பான் -பெட்டியில்:
    CHIPKO கிருஷ்ணனை சேர ’மர’த்தமிழா,
    சுப்கே(ஹிந்தி) சமாதி சுகம்’’….கிரேசி மோகன்….
    சுப்கே -சும்மா இருத்தல்….கேசவ் ஓகேயா….!

    Share
  • அமெரிக்கத் தேர்தல் களம்

    நாகேஸ்வரி அண்ணாமலை

     genusmap

    2016-ஆம் ஆண்டுக்கான அமெரிக்க ஜனாதிபதித் தேர்தல் சூடுபிடித்து வருகிறது.  குடியரசுக் கட்சியில் ஆரம்பத்தில் பத்துப் பேர் களத்தில் இறங்கினர்.  ஆனால் படிப்படியாக ஐந்து பேர் போட்டியிலிருந்து விலகிய பிறகு இப்போது ஐந்து பேர் களத்தில் இருக்கின்றனர்.  இவர்களில் மூன்று பேர்தான் கடைசிக் கட்டம்வரை இருப்பார்கள் போல் தெரிகிறது.  இவர்கள் மூன்று பேரும் கொஞ்சம் கூட இங்கிதம் தெரியாதவர்கள்.  எதையெல்லாம் பேசக் கூடாது என்று ஒரு வரையறை இருக்கிறதோ அதையெல்லாம் பேசித் தீர்க்கிறார்கள்.

    https://en.wikipedia.org/wiki/United_States_presidential_election,_2016 - நன்றி
    https://en.wikipedia.org/wiki/United_States_presidential_election,_2016 

    அதிலும் முன்னணியில் இருக்கும் டொனால்ட் ட்ரம்ப் வாய்க்கு வந்ததைப் பேசுகிறார்.  கூட்டத்தில் நிருபர்கள் இதை எப்படிச் சமாளிப்பீர்கள், அதை எப்படிச் சமாளிப்பீர்கள் என்று எதைக் கேட்டாலும் ‘அந்த நிலை வரும்போது பார்த்துக்கொள்ளலாம்’ என்கிறார்.  இவரை முந்துவதற்கு டெட் க்ரூஸ், மார்க்கோ ரூபியோ ஆகிய இருவரும் என்னென்னவோ முயற்சிகள் செய்கிறார்கள்.  ஒன்றும் பலிக்கவில்லை.  இவர்தான் குடியரசுக் கட்சியின் வேட்பாளராக நியமனம் பெறலாம் என்று சில குடியரசுக் கட்சியைச் சேர்ந்த தலைவர்கள் இவரை ஆதரிக்க ஆரம்பித்துவிட்டார்கள்.  எல்லாம் எதற்காக?  ட்ரம்ப் ஜனாதிபதியானால் இவர்களுக்கும் ஏதாவது பதவி கிடைக்கும் என்ற நப்பாசையால்தான்.

    முதலில் போட்டியிட்ட பத்துப் பேர்களில் ஒருவரான இப்போதைய நியு ஜெர்ஸி மாநில ஆளுநரான கிரிஸ் கிறிஸ்டி திடீரென்று ட்ரம்பை ஆதரிப்பதாக அறிக்கை விட்டார்.  இதைக் கேட்டுப் பலர் அதிர்ச்சி அடைந்தனர்.  தன்னுடைய ஆதரவாளர்களையும் ட்ரம்பை ஆதரிக்கும்படி கிறிஸ்டி கேட்டுக்கொண்டிருக்கிறார்.  ஆனால் பலருக்கு இது பிடிக்கவில்லை.  அப்படியும் சிலர் கிறிஸ்டி கேட்டுக்கொண்டதற்கிணங்க ட்ரம்பை ஆதரிக்கப் போகிறார்கள்.  ட்ரம்ப்பிற்கு நியு ஜெர்ஸி மாநிலத்தில் சில வணிகத் தொடர்புகள் இருப்பதால் அவருக்கு அம்மாநிலம் பற்றி நன்றாகத் தெரியும் என்றும் கிறிஸ்டி காரணத்தோடுதான் ட்ரம்பை ஆதரிக்கிறார் என்றும் கூறுகிறார்கள்.

    முதலில் பத்துப் பேரில் ஒருவராக ஜனாதிபதி பதவிக்கு கிறிஸ்டி போட்டி போட்டபோது ட்ரம்பை எப்படித் தாக்கிப் பேசினார் என்று பல பத்திரிக்கை நிருபர்கள் பழையதைத் தோண்டி எடுத்து வெளியிடுகிறார்கள்.  முஸ்லீம்கள்தான் அமெரிக்காவில் நடக்கும் பெரும்பாலான துப்பாக்கி வன்முறைகளுக்குக் காரணம் என்றும் அவர்களை இனி அமெரிக்காவிற்குக் குடியேற அனுமதிக்கக் கூடாது என்றும் ட்ரம்ப் பேசிவருகிறார்.  2011-இல் கிறிஸ்டி நியு ஜெர்ஸி மாநில நீதிபதிகளுள் ஒருவராக ஒரு முஸ்லீமை நியமித்தபோது அதை எதிர்த்த சில பழமைவாதிகளை கிறிஸ்டி கடுமையாகச் சாடினார்.  அவர் இப்போது முஸ்லீம்களுக்கு முதல் எதிரியாக விளங்கும் ட்ரம்பை எப்படி ஆதரிக்கிறார் என்று பலரால் புரிந்துகொள்ள முடியவில்லை.  இவர் போட்டியில் இருந்தபோது ட்ரம்ப் ஜனாதிபதி பதவிக்கு அருகதை அற்றவர் என்றார்.  அரசியலில் எதுவும் நடக்கலாம் என்று புலம்புவதைத் தவிர வேறு எதுவும் அவர்களால் செய்ய முடியவில்லை.

    ஜனநாயகக் கட்சியில் நான்கு பேர் முதலில் முன்னிலையில் இருந்தனர்.  இப்போது போட்டியாளர்கள் இரண்டு பேர்தான்.  ஒருவர் வெர்மான்ட் செனட்டராக இருக்கும் பெர்னீ சேண்டர்ஸ்; இன்னொருவர் ஹிலரி கிளின்டன்.  சேண்டர்ஸ் இருபது வருடங்களுக்கும் மேலாக செனட்டராக இருக்கிறார்.  இவரிடம் எனக்கு மிகவும் பிடித்தது நேரத்திற்குத் தகுந்த மாதிரி தன் கொள்கைகளை மாற்றிப் பேசாமல் இருப்பது.  அவருடைய பொருளாதாரக் கொள்கைகளில் சில நடைமுறைக்கு ஒத்துவராததாக இருந்தாலும் தான் மனதில் நினைப்பதை ஒளிவு மறைவில்லாமல் பேசுகிறார்.  ஒபாமாவிற்குப் பிறகு இவர் ஜனாதிபதியாக வந்தால் அமெரிக்கா அடிக்கடி போர்க் கொடியைத் தூக்கிக்கொண்டு தனக்குப் பிடிக்காத நாடுகளோடு சண்டைக்குத் தயாராகாது.

    Hillary_Clinton_by_Gage_Skidmore_2ஆனால் ஹிலரி அப்படியல்ல.  ஒரு பத்திரிக்கையாளர் கூறியதுபோல் இவர் ஒரு பச்சோந்தி.  நேரத்திற்குத் தகுந்த மாதிரி பேசுவார்.  ஒபாமாவைப் போல் இவர் சமாதான விரும்பி அல்ல.  இரண்டாவது முறை ஜனாதிபதியாக வர வேண்டும் என்றால் முதல் தடவை ஜனாதிபதியாகச் செயல்படும்போது என்ன வேண்டுமானாலும் செய்வார்.  எத்தனை தடவை எந்த நாட்டோடும் இவர் போர் புரியத் தயங்க மாட்டார்.  இவர் பெரிய சந்தர்ப்பவாதி.  இரண்டு நாட்களுக்கு முன்னால் தென் கரோலினா மாநிலத்தில் கருப்பர்களின் அதிக ஓட்டுக்களைப் பெற்று அந்த மாநிலத்தில் ஜெயித்தார்.  கருப்பர்கள் மேல் தனக்கு அளவில்லாத அக்கறையும் அன்பும் இருப்பதாகக் காட்டிக்கொள்வார்.  தேர்தலுக்கு முன் அந்த மாநிலத்தில் ஒரு கூட்டத்தில் பேசியபோது ஒரு கருப்பின மாணவி 1996-இல் கருப்பர்கள் பற்றி அப்போது ஜனாதிபதியாக இருந்த இவருடைய கணவர் பில் கிளின்டன் எடுத்த முடிவை ஆதரித்ததற்கு மன்னிப்புக் கேட்க வேண்டும் என்று கோரினார்.  அந்தக் கருப்பின மாணவியின் கோரிக்கையை சற்றும் எதிர்பார்க்காத ஹிலரி ‘நீதான் இந்தக் கோரிக்கையை என்னிடம் முதல் முதல் வைத்திருக்கிறாய்’ என்று கூசாமல் பொய் கூறினார்.  ஆயிரத்துத் தொண்ணூறுகளில் பில் கிளின்டன் ஜனாதிபதியாக இருந்தபோது நிறையக் குற்றங்கள் புரிவதாகக் கருப்பர்கள் மீது குற்றம் சாட்டப்பட்டபோது கருப்பர்களுக்கு சிறைத் தண்டனை அதிகரித்தது.  ஹிலரி ‘குற்றவாளிகளில் அதிகம் பேர் ஏன் கருப்பர்களாக இருக்கிறார்கள் என்று ஆராய்வதற்கு முன் அவர்களை முதலில் மண்டியிடவைக்க வேண்டும்’ என்று கூறினார்.  தான் இப்படிச் சொன்னதற்கு ஜனாதிபதி பதவிக்குப் போட்டியிடும் அவர் இப்போது வருத்தம் தெரிவிக்க வேண்டும் என்று அந்த மாணவி கூறினார்.  அப்போது கருப்பர்களைப் பற்றி அவ்வளவு குறைவாகப் பேசியவர் இப்போது அவர்களுக்காக உருகுகிறாராம்!  இதுதான் ஹிலரி.

    அமெரிக்காவில் எல்லா வேட்பாளர்களுக்கும் நிறைய ஆதரவாளர்கள் உண்டு.  ட்ரம்ப்பை ஆதரிப்பவர்களைப் பார்த்தால் அமெரிக்கர்கள் இத்தனை இனதுவேஷிகளா என்று எண்ணத் தோன்றுகிறது.  க்ரூஸ் ஆதரவாளர்களைப் பார்த்தால் வறியவர்கள் மேல் இவர்களுக்கு இத்தனை வெறுப்பா என்று நினைக்கத் தோன்றுகிறது.  ஹிலரியின் ஆதரவாளர்களில் பலர் பெண்கள்.  ஒரு பெண் என்பதற்காகவே இவரை இப்படிக் கண்மூடித்தனமாக ஆதரிக்கிறார்களே என்று எண்ணத் தோன்றுகிறது.  இவர்களை எல்லாம் கூடப் புரிந்துகொள்ள முடிகிறது.

    ஆனால் இந்தியாவில் ஒரு அரசியல் தலைவரின் சிலையைக் காரின் மேல் வைத்துக்கொண்டும் படத்தைத் தன் காரின் மேல் பகுதி முழுவதும் ஒட்டிக்கொண்டும் இருப்பவரையும் அவருக்குக் கோவில் கட்டிக் கும்பிடும் இன்னொருவரையும் புரிந்துகொள்ள முடியவில்லையே.

    Share