இங்கிலாந்திலிருந்து ஒரு மடல்….. (186)

– சக்தி சக்திதாசன்.

 

donald-trump

 

அன்பினியவர்களே !

இனிய வணக்கங்கள்.

அடுத்தொரு மடலுடன் உங்கள் முன்னே நான். இன்றைய அவசர உலகில் நாடுகளின் அரசியல் நடப்புகள் எந்நெஞ்சில் ஓரளவு சிந்தனையைத் தூண்டியுள்ளன. குறிப்பாக, சகிப்புத்தன்மைக்குப் பேர் போன இங்கிலாந்து, அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளில் இடம்பெறும் அரசியல் அதிர்வுகள் சிந்திக்க வைக்கின்றன.

புலம்பெயர்ந்து பலநாடுகளில் வாழும் நாம் எமது சீரான அமைதியான வாழ்வுக்கு நாம் வாழும் நாடுகளின் மக்களின் சகிப்புத்தன்மையும் எம்மை ஏற்றுக்கொள்ளும் மனோபாவமுமே துணை வருகின்றன. ஆனால் சமீபத்திய அரசியல் அரங்கில் நிகழும் நிகழ்வுகள் மனதில் ஒருவித பீதியோடு கூடிய மனக்கிலேசத்தை ஏற்படுத்துவது போலத் தென்படுகிறது.

அமெரிக்கா சுமார் எட்டு வருடங்களின் முன்னால் ஒரு கறுப்பரைத் தனது ஜனாதிபதியாகத் தேர்ந்தெடுத்தது உலகெங்கும் ஒரு புதுவிதப் புத்துணர்ச்சியுடன் கூடிய உற்சாகத்தை அளித்தது. அமெரிக்க ஜனநாயகம் பற்றி மிகவும் புகழ்ச்சியான வகையில் பலவிடங்களிலும் விமர்சிக்கப்பட்டது. ஆனால், இப்போது எட்டு வருடங்களுக்குப் பின்னால், அதே அமெரிக்கா, மீண்டும் ஒரு ஜனாதிபதி தேர்தலை எதிர்நோக்கியுள்ளது. ஆனால், இம்முறை ஜனாதிபதித் தேர்தல் புத்துணர்ச்சியை அளிப்பதற்குப் பதிலாக புலம்பெயர்ந்தவர்கள் மத்தியிலும், சுதந்திர மனப்பான்மையுடைய ஏனைய அமெரிக்கர்கள், உலக மக்கள் மத்தியிலும் ஒருவித சஞ்சலமிக்க சிந்தனையைத் தூண்டி விட்டிருக்கிறது.

ஆமாம் டொனால்ட் ட்ரம்ப் ( Donald Trump ) என்பவரின் அதிரடியான அரசியல் பிரவேசமும் அவருக்கு அமெரிக்க மக்கள் மத்தியில் கிடைக்கும் எதிர்பார்த்திராத ஆதரவுமே இத்தகைய ஒரு சஞ்சலத்தை ஏற்படுத்தியுள்ளது என்றால் மிகையாகாது. அமெரிக்க தேர்தல் விதிகளின்படி ஒவ்வொரு கட்சியிலும் அக்கட்சி சார்பாக போட்டியிடப் போகும் ஜனாதிபதி வேட்பாளர் யாரெனத் தீர்மானிப்பது ஒவ்வொரு நகரத்திலும் இருக்கும் அக்கட்சியின் ஆதரவாளர்களே. அவர்கள் அளிக்கும் வாக்கின் அடிப்படையிலேயே யார் அக்கட்சியின் சார்பாக ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடப் போவது என்பதை அக்கட்சி உறுதி செய்யும்.

அவ்வகையில், இம்முறை நான் மேற்குறிப்பிட்ட டொனால்ட் ட்ரம்ப் என்பவரே இதுவரை நடந்த தேர்தல்களில் அமெரிக்க நாட்டின் முக்கிய கட்சிகளில் ஒன்றான குடியரசுக் கட்சியின் சார்பில் அதிக விருப்புள்ளவராகத் தென்படுகிறார்.

யார் இந்த டொனால்ட் ட்ரம்ப் ?

1946ம் ஆண்டு நியூயார்க் நகரில் பிறந்த டொனால்ட் ட்ரம்ப் ஒரு பொருளாதாரப் பட்டதாரியாவார். 2000ம் ஆண்டு ஜனாதிபதி வேட்பாளராக நிற்பதற்கான தேர்தலில் குதித்த இவருக்கு ஆதரவு கிட்டாத காரணத்தினால் விலகிக் கொண்டார். அமெரிக்க நாட்டின் பெரும் செல்வந்தர்களில் ஒருவரான இவர் பிரபலமான தொலைக்காட்சி ஒருங்கிணைப்பாளருமாவார். இவர் கடந்த காலங்களில், அமெரிக்க நாட்டின் இருபெரும் கட்சிகளான ஜனநாயகக் கட்சி (Democratic Party) , குடியரசுக் கட்சி (Republican Party) இரண்டுக்குமே பெருமளவில் நிதியுதவி செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

இவர் ஜனாதிபதியாகப் போட்டியிடுவது ஏன் புலம்பெயர் சமூகத்திற்குச் சஞ்சலமளிக்கிறது எனும் கேள்வி எழலாம். காரணம் இவரது சமீபத்திய கொள்கைப் பிரகடனங்களே ! சமீபத்தில் இவர் நாட்டில் நடக்கும் பயங்கரவாதத்தைத் தடுக்க ஒரேவழி பயங்கரவாதத்திற்குரிய சரியான காரணத்தை அறியும்வரை அமெரிக்காவிற்குள் இஸ்லாமியர்கள் வருவதைத் தடை செய்ய வேண்டும் என்றார். மற்றொரு சமயம் மெக்சிகோவில் இருந்து அமெரிக்காவுக்குப் புலம்பெயர்ந்தோர்கள் பெண்களைப் பலாத்காரம் செய்வோர் என்றார். அது மட்டுமல்ல மெக்சிகோவில் இருந்து அமெரிக்காவிற்குள் வருவதைத் தடை செய்வதற்காக மெக்சிகோ அரசாங்கத்தின் செலவில் எல்லையில் மதில் கட்டி இருநாடுகளுக்குமிடையில் நிரந்தர எல்லையைப் பேணுவேன் என்றார்.

அதுமட்டுமல்ல, அமெரிக்காவிற்குள் இருக்கும் சட்டவிரோத வெளிநாட்டிலிருந்து புகுந்தோர் அனைவரையும் உடனடியாக நாடு கடத்துவேன் என்று வேறு கூறியிருக்கிறார். அமெரிக்காவை மீண்டும் பெரிய ஏகாதிபத்திய நாடாக்குவேன் என்று சூளுரைத்துள்ளார். இத்தகைய வாதங்கள் புலம்பெயர்ந்தோர் மத்தியில் ஒரு சில சஞ்சலங்களைத் தோற்றுவிப்பது ஆச்சரியமில்லையே ! இப்படியான கொள்கையைப் பேசும் ஒருவரை வீணே பிதற்றுகிறார் என்று ஒதுக்கிவிடலாம். ஆனால், அவருடைய இத்தகைய பேச்சுகளுக்கு மக்கள் மத்தியில் கிடைக்கும் ஆதரவே இந்த அச்சத்திற்குக் காரணம் என்றால் மிகையாகாது.

இதேபோல இப்போது இங்கிலாந்தில் ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து வெளியேறுவதா? இல்லையா ? எனும் அனைத்துமக்கள் வாக்கெடுப்பு நடத்தும் அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது. அதைத்தொடர்ந்து நடக்கும் வாதப் பிரதிவாதங்கள் அனைத்தும் வெளிநாட்டுக்காரர் பிரித்தானியாவுக்குள் நுழைவதைப் பற்றியே நிகழ்கின்றன.

இவை நேரடியாக அந்தந்த நாடுகளில் வாழும் புலம்பெயர் மக்களின் மீதான அந்நாட்டு மக்களின் பார்வையின் கோணத்தை வித்தியாசப்படுத்தத் தொடங்கியுள்ளது. மக்கள் இத்தகைய கருத்துக்களுக்கு கூடுதலான கவனம் செலுத்தத் தொடங்கியுள்ளமை புலப்படுகிறது. இந்த மாற்றம் இந்தக் காலகட்டத்தில் ஏன் ஏற்படுகிறது எனும் கேள்வி எழுகிறது. இதற்குப் புலம்பெயர் சமூகமும் ஒரு காரணமாக இருக்கின்றதா எனும் கேள்வி நிச்சயமாகக் கேட்கப்பட வேண்டும்.

எம்மை வாழவைக்கும் இந்த நாடுகளின் அனுகூலங்களை மட்டும் உள்வாங்கிக் கொண்டு எமக்கும் இந்த நாட்டுக்கும் எந்தவிதமான தொடர்பும் இல்லையெனும் போக்கில் பல புலம்பெயர் மக்களின் சமூகம் வாழத்தலைப்படுகிறதோ எனும் எண்ணம் ஏற்படாமல் இல்லை. இந்நாட்டில் பிறந்து வளர்ந்தவர்கள் இந்நாட்டையே தமது எதிரி நாடாகப் பார்த்து இம்மக்களைப் பாதிக்கும் பயங்கரவாதம் முதலான செயல்களில் ஈடுபடுவது இத்தகைய மாற்றத்திற்கு முக்கிய காரணியாக அமைகிறது.

அது மட்டுமல்ல நாம் எமது கலாச்சாரங்களைப் பாதுகாக்கிறோம் எனும் நோக்கில் எமது கலாச்சாரங்களை இந்நாட்டு மக்களின் மீது திணிக்க முயல்கிறோமா ? என்பது கூட ஒரு நியாயமான சந்தேகமே ! எமது மொழி, எமது கலாச்சாரம் என்பது நிச்சயமாக எமது அடையாளங்களே. அதை நாம் எந்த நாட்டில் வாழ்ந்தாலும் அங்குத் தக்க வைத்துக் கொள்வதற்கு முயற்சிப்பது ஒரு உத்தமமான செயலே ! ஆனால், அதற்காக நாம் ஒரு சராசரி எல்லைக் கோட்டைத் தாண்டி விடுகிறோமா? எம்மைப் பார்த்து நாமே கேட்க வேண்டிய கேள்வி. எமது பாரம்பரியத்தை, கலாச்சாரத்தை நாம் எமக்குள் பேணிக்கொள்ள வேண்டியது அவசியம். அதற்காக, நாம் வாழும் நாட்டில் எம்மை மிகவும் மகிழ்வுடனும் அமைதியுடனும் வாழ இடம் தந்த சகிப்புத்தன்மை மிக்க மக்களிடம் அவர்கள் ஏற்றுக் கொள்ள வேண்டும் என்று எதிர்பார்ப்பது சரியா ?

இவர்களது சகிப்புத்தன்மையின் எல்லைவரை தள்ளிச்சென்று நாம் இவர்களது பொறுமையைச் சோதிக்கிறோமா ? என்று கூட எண்ணத் தோன்றுகிறது. ஒரே நாட்டிற்குள், ஒரே நிறத்தையும், ஒரே கலாச்சாரப் பின்னணியையும் கொண்ட சமூகங்களுக்கிடையே பலவித பிரிவினைகளைப் பெரிதுபடுத்தப்படும். பின்புலநாடுகளில் இருந்து மேற்குலக நாடுகளுக்குப் புலம்பெயர்ந்த எம்மை எந்தவித நிறவேற்றுமை, மதவேற்றுமை , கலாச்சார வேற்றுமை பாராது இடம் தந்து வாழ்வு தந்த நாடுகளின் பிரஜைகளாக மாறிய பலர் இன்னும் மனதளவில் இந்நாட்டை ஒரு வாடகை வீடாகப் பார்ப்பதே இத்தகைய மனப்பான்மைக்குக் காரணம்.

எனது இந்தக் கருத்துக்கள் நான் எனது தாய்மண்ணின் மீதோ அன்றி நான் எனது மொழியின் மீதோ கொண்ட பக்தியையும் காதலையும் எவ்விதத்திலும் குறைவாக மதிப்பிடுவதாகக் கொள்ளக்கூடாது. புலம்பெயர்ந்தோராகிய எமது அடுத்த சந்ததியும், இனிவரும் சந்ததிகளும் இந்நாடுகளில் ஒரு நிம்மதியான, நிலையான வாழ்வை மேற்கொள்ள வேண்டும் எனும் ஒரு ஆதங்கமே எனது இம்மடலின் மையக்கருத்துக்குக் காரணம்.

“தம்பி உன்நெஞ்சில் உண்மை இருந்தால் பேனாவை எடு எழுது ” என்றான் முத்தமிழ்ப் பாவலன் மகாகவி பாரதி.

நாம் வாழும் நாடுகளுக்கு உண்மையுள்ளவர்களாக, நன்றியுள்ளவர்களாக வாழ்வது ஒன்றே எமது எதிர்காலச் சந்ததியின் நல்வாழ்விற்கு வழிவகுக்கும்.

மீண்டும் அடுத்த மடலில்
சக்தி சக்திதாசன்

http://www.thamilpoonga.com
http://www.facebook.com/sakthi.sakthithasan

Leave a Reply

Your email address will not be published.