ஸ்ரீராகவேந்திரர் வெண்பாக்கள்
கிரேசி மோகன்

என்னிதய ராயரே என்வறுமை கேளய்யா
என்னிதயம் வெற்றிடம் ஆச்சய்யா -சன்னிதி
நாடெங்கும் உண்டுனக்கு நானதி லோர்துண்டு
வாடகைக் கேணும் வருக….(1)
தாயன் புடனே தமதடி யாரிடம்
பாயும் பசும்கன்றே கற்பகமே-ராயா
பிறந்தநாள் இன்று நிறைந்தநாள் ஆக
கறந்தருள்வாய் காமதேனு வே….(2)
வாயுபீம மத்வரின் வாரிசே ராமபூஜை
தோயும்ஸ்ரீ ராயரே துங்கையில் -பாயும்நீர்
வேகத்தோ(டு) அன்பர்தம் சோகத்தைத் தீர்க்கும்பூ
லோக பிருந்தாவ னம்….(3)
சு.ரவியின் ராகவேந்திரர் கன்ணனை முத்தமிட்டுக்
கொஞ்சும் ஓவியம் பார்த்து….
—————————————————————-
ஆயர் குலவிளக்கை அஞ்சன வண்ணனை
மாயக் குழந்தையை முத்தமிட்டு -ராயர்
அணைத்திருக்கும் ஓவியம் ஆண்டாளின் பாடல்
கனைத்திளம் கற்றெருமைக் கீடு….(4)
நனைத்தில்லம் சேறாக்கும் நந்தகோபன் சேயை
அணைத்தவன் கன்னம் அழுந்த -பிணைத்தபடி
தாயன் புடனே திளைத்திருக்கும் ராயருக்கு
காயாம்பு கண்ணனவன் கன்று….(5)….கிரேசி மோகன்….
