Blog

  • இன்னம்பூரான் பக்கம்: 2: கனம் கோர்ட்டார் அவர்களே![26]

    இன்னம்பூரான்
    27 02 2016

    d46e33f5-ece4-49dc-9494-25695e8e1d0d

    உரிமை போராட்டங்களில் உரிமையும் தாக்கப்படுவது ஒரு இயல்பான காட்சி. ஒரு உள்ளங்கை நெல்லிக்கனி உதாரணம்.
    ‘தன்னுடைய கோலை சுழுற்றுவதற்கு உமக்கு முழு உரிமை உண்டு, அது என் மூக்கை உடைக்கும் வரையில்.’

    எனினும் கோலை சுழற்றுபவர்களுக்கும், சிதைந்த நாசிகளுக்கும் பஞ்சமில்லை!

    மஹாலக்ஷ்மி பாவானி என்ற வழக்கறிஞர், உச்சநீதிமன்றத்தின் மகளிர் வழக்கறிஞர் சங்கத்தின் சார்பில், அந்த நீதிமன்றத்தில் ஒரு வழக்குத் தொடர்ந்தார். அதில் கூறப்பட்ட தகவல், சர்வ வல்லமை படைத்த ஆண்டவனையும் உலுக்கி எடுத்து விடும். குஞ்சும் குளவானுமான வருடந்தோறும் இல்லத்தில் ‘கரு’ பணி செய்து வரும் பஸ் டிரைவர்களும், கண்டக்டர்களும், அந்தந்த பஸ்களில் பள்ளி சென்று வரும் சிறுமிகளுக்கு நீலத்திரைப்படங்களை காண்பித்து, அவர்களை பாலின தொந்தரவு செய்கிறார்கள் என்றும் அத்தகைய வக்கிரங்களை சட்டரீதியாக தடுக்கவேண்டும் என்றார்.

    Child pornography உலகெங்கும், அதுவும் இணையத்தில், பரவியிருந்தாலும், அநேக தேசங்களில் உடனடி தடையும் தண்டனையும் உண்டு. போர்ட்ஸ்மத் என்ற இங்கிலாந்து நகரில், ஒரு ஓய்வு பெற்ற மேஜர் ஜெனெரல் நீதிபதி. மேற்படி குற்றங்களுக்கு கடுந்தண்டனை விதிப்பார். ஒரு நாள் அவர் வீட்டில் சோதனை. ஆயிரக்கணக்கான நீலப்படங்கள். கையோடு கையாக கைது செய்து விட்டார்கள். அமெரிக்காவில், cybercrime police உடனேயே, கத்தியும் கபடாவுமாக வீட்டில் புகுந்து கைது செய்யக்கூடும். ஶ்ரீலங்காவில் வசித்து வந்த ஒரு பிரபல ஆங்கிலேய எழுத்தாளரை இங்கிலாந்து ராஜகுமாரன் (கிழம்!) வந்து பாராட்டுவதாக இருந்த நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டது. ஏன் தெரியுமா? அந்த பெரிசு Child pornographyயில் மூழ்கி ஞானஸ்நானம் செய்வதால். ஆனால் அவரை கைது செய்யவில்லை, பல வருடங்களாக. இந்தியாவில் இந்த வக்ரமான மனோவியாதி மிகவும் பரவலாக இருந்தாலும், தமிழனின் நாகரீகத்தில் ஒளிந்து கொண்டிருந்தாலும், சர்வம் மர்மமயம். இது ஒழிக.

    எதற்கெடுத்தாலும் நாமும் கோர்ட்டாரை அணுகுகிறோம்; அவர்களும் மனமுவந்து தீர்வு அளிக்கிறார்கள். இந்த வக்ராதிபதிகளை தண்டிக்கவேண்டும் என்பதை உறுதிப்படுத்திய கோர்ட்டார் மிகவும் மன உளைச்சல்களுக்கு ஆளாகி, இதை அசிங்கம், சமுதாயத்தின் நன்னெறிக்கும் அபாயம் என்று கூறினர். நீதிபதி மிஸ்ரா அவர்கள்,

    ‘…பேச்சுரிமையும், விட்டு விடுதலையும் கட்டுப்பாடற்றவை அல்ல. அரையணா சர்ச்சைகளும், கோர்ட்டின் எல்லை சர்ச்சைகளும் குறுக்குசால் ஓட்டக்கூடாது..’

    என்று அச்சுறுத்தினார். மத்திய அரசு பொருத்தமான சட்டங்கள் இயற்றவேண்டும் என்ற நீதிபதிகள், அந்த அரசிடமிருந்து ஒரு விளக்கம் கேட்டு ஆணையிட்டனர். கவின்கலைக்கும், வக்கிரபுத்திக்கும் வித்தியாசம் உண்டு என்ற அவர்கள், அவற்றை பகுத்து அறிவது கடினம் என்றனர்.

    படிப்பினை:

    டாக்டர் தேவி ரஜப் அவர்கள் நாசகார பன்முகங்களை ஒழிப்பதில் கவனம் செலுத்தாமல், வீண் சிந்தனைகளிலும், காழ்ப்புணர்ச்சியிலும் காலம் கடத்துவதால் இளைய சமுதாயம் மாபெரும் தவறு செய்கிறது; கடமையிலிருந்து நழுவி விடுகிறது; சமுதாய சீர்குலைப்பு தழைவிட்டு வளர்கிறது என்பதை எடுத்துரைத்து விட்டார். அதை நாம் ஊன்றி கவனித்து, நமது சம்பிரதாய சண்டைகளிலிருந்து (பாட்டியின் மொட்டை, பார்ப்பன துவேஷம் போன்ற சில்லறை மாஜி தாவாக்கள்: அதெல்லாம் செத்த பாம்பு, மேடம். Child pornography ஒரு கட்டுவிரியன்: அடுத்து வருவது கருநாகம். ) விடுதலை பெற்று ஆக்கப்பூர்வமான சமுதாய நிவாரணங்களுக்காக உழைக்க வேண்டும். சமுதாயத்தின் விரோதி சமுதாயம் தான் என்பது கசப்பான உண்மை. சமுதாயத்தின் பின்னடைவை தடுத்தாட்கொண்டு முன்னேற்றங்களை கொணரவதும் சமுதாயம் தான் என்பது இனிப்பான உண்மை.

    இனி உங்கள் பாடு.

    -#-
    சித்திரத்துக்கு நன்றி: https://forrestduba475.files.wordpress.com/2011/02/child-pornography.jpg

    உசாத்துணை:

    Printable version | Feb 27, 2016 7:01:19 AM | http://www.thehindu.com/todays-paper/tp-national/prevent-access-to-child-pornography-centre-told/article8287151.ece
    © The Hindu

    இன்னம்பூரான்

    Share
  • படக்கவிதைப் போட்டி 52-இன் முடிவுகள்

    -மேகலா இராமமூர்த்தி

    திரு. ராம்குமார் ராதாகிருஷ்ணனின் புகைப்படத்தை இவ்வாரப் போட்டிக்குத் தெரிவுசெய்து தந்திருப்பவர் வல்லமை ஃப்ளிக்கர் குழுமத்தின் பொறுப்பாசிரியர் திருமிகு. சாந்தி மாரியப்பன். இவர்கள் இருவரும் வல்லமையின் நன்றிக்கு உரியவர்கள்.

     book store

     

     

     

     

     

     

     

     

     

     

    குவியல் குவியலாய்க் கொலுவிருக்கும் புத்தகங்கள்! வெறும் புத்தகங்களா அவை? இல்லை…அகத்தைத் தூய்மையாக்கி, அறிவை விரிவாக்கி, உலகை வெல்லச்செய்யும் ஆயுதங்கள்!

    நூல்களின் சிறப்பை விளக்கவந்த பாவேந்தர்,

    நூலைப்படி – சங்கத்தமிழ்
    நூலைப்படி – முறைப்படி
    நூலைப்படி!

    காலையிற்படி கடும்பகல்படி
    மாலை, இரவு பொருள்படும்படி
    நூலைப்படி!

    கற்பவை கற்கும்படி
    வள்ளுவர் சொன்னபடி
    கற்கத்தான் வேண்டுமப்படி
    கல்லாதவர் வாழ்வதெப்படி?  

    என்று மு(எ)ப்போதும் நூல்களைக் கற்கவேண்டியதன் அவசியத்தைச் செப்பிச் செல்கின்றார். 

    சரி…புத்தகக் குவியல்கண்ட நம் கவிஞர் பெருமக்கள் எத்தகு கவிதைகளைப் புனைந்திருக்கின்றனர் என அறியப் புகுவோம்!

     ***

    ’பொலிவாக முன்னர்த் தோற்றங்காட்டிய புத்தகங்கள் பின்னர் மதிப்பிழந்து மலிவாய்ப் போவதுபோன்றதே மானுட வாழ்வின் இயல்பும்!’ என்று புத்தகங்களை மனிதரின் நிலையோடு ஒப்பிடுகின்றார் திரு. மதிபாலன். 

    புத்தகங்கள் , ஏடுகளில் புன்னகைக்கும் ரத்தினங்கள்!
    பொத்திவைத்த அறிவென்னும் பொக்கிஷத்தின் சுரங்கங்கள்!

    உள்ளூரின் இதழ்முதலாய் உலகஇலக் கியம்வரைக்கும்
    எல்லாமும் இங்குண்டு,எடுப்பதெல்லாம் குறைந்தவிலை!

    கடைகடையாய் அலைந்தபின்னும் காணாத புத்தகமும்
    நடைபாதைக் கடையிதிலே நாம்காணக் கிடைப்பதுண்டு!

    புதிதாக வந்தபோது பொலிவாக இருந்ததுதான்
    எதனாலோ இங்குவந்து இயல்புகெட்டுக் கிடக்கிறது!

    பயனுள்ள வரைக்கும்தான் பலர்நம்மைப் புகழ்ந்திடுவார்
    பயன்குறைந்து போய்விட்டால் பாதையோரப் புத்தகம்தான்!…

    *** 

    ’நூலகத்தில் துலங்கி வாலறிவை வளர்த்த புத்தகங்கள் வழிமாறிப் போனாலும் மரணிப்பதில்லை; அவற்றைத் தேடித்தேடிப் படித்த மனிதனும் அவ்வாறே!’ என்று சாகாவரம் பெற்ற புத்தகங்களின் புகழ்பாடுகின்றார் திரு. கவிஜி.

    நீர் அடித்துப் போன 
    புத்தக நினைவுகளின்
    கூட்டுக்குள்
    திறந்து விடப் பட்டுக்
    கொண்டேயிருக்கிறது,
    சிறுவயது முதல் சேர்த்து
    வைத்த அவரின் நூலகம்… 

    அது
    வழி மாறிய பதிவுகளை
    கரையெங்கும்
    விட்டுப் போகிறது…

    […]

    ஒரு புத்தகம், அதில்
    சில பக்கம்
    அல்லது ஒரு பக்கம் ஒரே
    ஒரு பக்கம்
    எவர் கையிலாவது அகப்படலாம்….

    மண்ணுக்குள் வேராக விதி செய்யலாம்…
    வினை செய்யலாம்
    …
    காலம் முழுக்க
    அடையாளமின்றி
    படித்தவர்,
    கடல் தாண்டியும் ஏதாவதொரு
    தீவுக்குள் விதையலாம்… 

    புத்தகங்கள் மரணிப்பதில்லை,
    படித்த அவரைப் போலவே…

    *** 

    ’அட்டைக்குள் பதுங்கியிருக்கும் அறிவு நீரூற்று புத்தகம்; அதனிடம் தலைகுனிந்தவன் வாழ்வில் தலைநிமிர்வான்’ என்று அழகாக அனுபவமொழி பகர்கின்றார் திரு. செண்பக ஜெகதீசன்.

    அறிவு நீரூற்று
    அடக்கி வைக்கப்பட்டிருக்கிறது

    அட்டைகளுக்குள்..

    எடுத்துக் குடிப்பவரை
    ஏமாற்றியதில்லை என்றும்,
    ஏற்றித்தான் விடுகிறது
    குன்றாய் உயர..

    இதனிடம் தலைகுனிந்தால்,
    தலைநிமிரலாம் வாழ்வில்..

    ஆனால் இன்று அது
    அடுக்கிவைக்கப்பட்டிருக்கிறது
    நூலகத்தில்,
    எடுத்துப்பார்க்க ஆளின்றி..

    கொலுவிருக்கிறது புத்தகக்கடையில்
    கூடுதல் விலை மதிப்பில்..

    அந்த அறிவு இங்கே
    பேரம் பேசப்படுகிறது–
    பழைய புத்தகக் கடையில்…!

    *** 

    சொற்பமாய்க் கிடைத்த நேரத்திலும் அற்புதப் புத்தகங்களைக் கற்றுத் தன் சொற்சுவை நிறைந்த உரைகளால் பாராளுமன்றத்தில் பாராட்டைப் பெற்ற நேரு பெருமானைத் தன் கவிதையில் நினைவுகூர்ந்திருக்கின்றார் திரு. க. கமலகண்ணன்.

    நேரு பாராளுமன்றத்தில்
    புதிய புதிய கருத்துக்களையும்
    உதாரண உவமைகளையும் சொல்லுவாராம்
    கேட்கின்ற அத்துணைப் பேருக்கும்
    ஆச்சரியம் நேருக்கு மட்டும் எப்படி
    நேரம் கிடைகிறது ஒருவர் துணிந்து
    கேட்டே விட்டாராம் எப்படி என்று
    திருடினேன் என்றாராம் நேரு
    அரங்கமே அதிர்ந்து போனது
    புரியவில்லை என்றாரம் அவர்
    என் உதவியாளர் உறங்குவதற்கு
    நான்கு மணி நேரம் தருவார்
    அதில் ஒரு மணி நேரம் திருடி
    புதிய புத்தகங்களை படிப்பேன்
    என்று சொல்லி மீண்டும் அரங்கத்தை
    அதிர வைத்தாராம் நேரு
    புத்தகம் வெறும் காகிதமல்ல
    பொக்கிஷம்…

     ***

    புத்தகக்கடைகண்டு முத்தான கவிதைகளை வடித்திருக்கும் கவிஞர்கள் அனைவருக்கும் பாராட்டுக்கள்!

    சிறந்த கவிதையைப் படைத்திருக்கும் கவிஞர் யார் எனக் கண்டுவரும் தருணமிது!

     ”தொட்டனைத் தூறும் மணற்கேணி மாந்தர்க்குக்
    கற்றனைத் தூறும் அறிவு” என்பது வான்புகழ் வள்ளுவரின் வாய்மொழி. அறிவை ஆழமாகவும் அகலமாகவும் வளர்த்துக்கொள்ள நாம் அகலாது அணுகவேண்டியவை நூல்கள்! வெறும் அச்சேறிய காகிதங்களாய்ப் பார்க்கப்பட்டுப் ’பயனில’ என்று வீசப்படும் புத்தகங்கள் எத்தனையோ அறிஞர்களையும் சிந்தனையாளர்களையும் அவனிக்கு அளித்தவை என்பதனை அவற்றின் மதிப்புணர்ந்த யாரே மறுப்பர்? அத்தகைய புத்தகங்களைப் பதுமநிதி எனப் புதுமையாய்ப் போற்றும் கவிதை என் சித்தத்தைக் கொள்ளையிட்டது! 

    வேண்டாமென்று வீசுவோர் பலர் அதை
    வேண்டுமென்று தேடுவோர் பலர்; அதைத்
    தோண்டி எடுக்கட்டுமென்ற தாராள மனதில்
    தோராயமாய் விற்கிறார் இங்கு இவர்!
    பாதையோரப் புத்தக அகமானாலும் தரம்
    போதையெனும் அறிவு பெற வரம்.
    கீதையும் பெரும் காதைகளும் மலிவாகி
    பாதையாகும் அறிவுச் சுடர் ஏற்ற.

    அழகோ அலங்கோலமோ அறிவிற்கேது தரம்!
    பழையதோ புதியதோ அறிவு மொழியுரம்.
    பழகிய அறிவுச் சாரற் குளிப்பாம்
    புத்தக வனத்துக் கருத்துணர்வுப் பொக்கிசம்.
    வாசிப்பு அருகிடும் காலத்தில் புதையலாய்
    நேசித்து அறிவூற்றில் நீந்திப் பயனடைவார்.
    புத்தகப் பக்கத்தில் ஒளிரும் முத்துக்கள்
    சத்தை உணராதவன் செத்தவன் ஆகிறான்.

    பாம்புப் புற்று போன்ற அடுக்கில்
    தோம்பு, தோட்டக்கலை, தொல்காப்பியம் ஈறாக
    கூம்பகம், கூட்டுறவு, கூத்துப் பாட்டென
    வேம்போ இனிப்போ அத்தனையும் தேடலாம்.
    பதுக்கிடு! என்றும் பழசென்று வீசாதே!
    பதுமநிதி போன்றது பன்முக நூல்கள்.
    மதுரவாக்கு  பழைய நூல்களும் வளர்க்கும்
    பொதுவான நல்லறிவு தேடிப் படி!

    ”தேடிப் படி நல்ல நூல்களை!” என நமைநாடிச் சொல்லும் கவிதையைத் தீட்டியிருக்கும் திருமிகு. வேதா. இலங்காதிலகம் இவ்வாரத்தின் சிறந்த கவிஞராய்த் தேர்வு பெறுகின்றார்.

    *** 

    ’வண்ணச்சிந்தனைகளை வாழ்வில் விதைத்த புத்தகங்கள் இன்று கருப்பு வெள்ளையாய் நிறமாறிப் போனாலும், டிஜிட்டல் யுகத்திலே அவை எண்ணிம வடிவில் உருமாறிப் போனாலும், காகித உருவில் நம் நெஞ்சிற்கு இதமளித்த புத்தகங்களுடனான நம் உறவு காலத்தை வென்றது’ என்று கவினுறப் பேசுகின்ற கவிதையொன்று!

    வண்ண வண்ண சிந்தனைகளை
    வார்த்தெடுத்தப் புத்தகங்கள்
    எண்ணக் குவியல்களால்
    புரட்சிகளை உருவாக்கியப் புத்தகங்கள்
    இன்று
    கருப்பும் வெள்ளையுமாய் மாறிப் போனது
    காலத்தின் கோலம்!

    அன்று
    வாய் மொழிச் சொற்களில்
    வலம் வந்த சிந்தனைகள்
    கல்லுக்குள் இடம் மாறி
    ஓலைக்குள் உருமாறி
    தொழில் புரட்சி ஈன்றெடுத்த
    அச்சு இயந்திரத்தால்
    காகிதத்திற்குள் புகுந்து
    புத்தகமாய்ப் பரிணமித்தது!

    புவியின் நிலை மாற்ற
    புத்தகங்கள் ஆற்றிய பணி
    போற்றற்குரியது!

    இன்று
    காகிதத்திலிருந்து
    டிஜிட்டலுக்குத் தாவும்
    அறிவியல் தருணம்!

    வடிவ மாற்றமென்பது
    இயற்கையின் இயல்பே

    போர்டு ஐகானில் பயணிப்பவர்கள்
    மாட்டு வண்டிகள்
    மரணித்துவிட்டதே என்று
    கவலை கொள்வதில்லை!
    என்றாலும்
    புத்தகங்களுக்கும்
    நமக்குமான உறவை
    எந்த டிஜிட்டலினாலும்
    டெலிட் செய்ய முடியாது! 

    மனிதனைப் பல்துறை வித்தகனாக்கும் புத்தகங்களின் பரிணாமவளர்ச்சியைப் பாங்காய்ச் சொல்லியிருக்கும் திரு. கொ.வை. அரங்கநாதனின் கவிதையைப் பாராட்டுக்குரியது என அறியத்தருகின்றேன்.

     

     

    Share
  • வல்லமையாளர் விருது பொறுப்பேற்கும் செ.இரா. செல்வக்குமார்

    பவள சங்கரி

    அன்பினிய நண்பர்களுக்கு,

    வணக்கம். கடந்த 200 வாரங்களாக வல்லமையாளர் தேர்வை மிகச் சிறந்த முறையில் நடத்தியுள்ள நம் வல்லமை ஆலோசனைக் குழு உறுப்பினர் திரு.திவாகர், வல்லமை ஆசிரியர் குழு உறுப்பினர் முனைவர் தேமொழி அவர்களையும் மனமார வாழ்த்தி, அடுத்து உயர்திரு செ.இரா. செல்வக்குமார் அவர்களை இப்பொறுப்பை ஏற்று நடத்த மகிழ்ச்சியுடன் வரவேற்கிறோம். மேலும் இப்பணியில் உதவிய திரு. இன்னம்பூரான்,  பேராசிரியர் நாகராசன் அவர்களையும் பாராட்டி மகிழ்கிறோம். இதுவரை 200 வல்லமையாளர்களை நாம் பாராட்டி மகிழ்ந்திருக்கிறோம். மேலும் பல வல்லமையாளர்களை திருமிகு செ.இரா. செல்வக்குமார் அவர்கள் தெரிவு செய்ய உள்ளார்கள் என்பதையும்  மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறோம்.

    crசெ.இரா. செல்வக்குமார் கனடாவில் உள்ள வாட்டர்லூ பல்கலைக்கழகத்திலே மின்னிய, கணினியியப் பொறியியல் துறையில் பேராசிரியராகப் பணியாற்றுகின்றார். அவருடைய ஆய்வும் கற்பித்தலும் குறைக்கடத்தி நுண்கருவிகள் (Semiconductor micro-nano eleactronic devices) துறையைச் சார்ந்தது. அவர் கிண்டி பொறியியற்கல்லூரியில் இளநிலை பொறியியற்பட்டமும் இந்தியத்தொழினுட்பக்கழகம் (ஐ.ஐ.டி), மும்பையில் முதுநிலைப்பட்டமும், சென்னை இந்தியத்தொழினுட்பக்கழகத்தில் (ஐ.ஐ.டி)  முனைவர்ப்பட்டமும் பெற்றவர். பின்னர்  வாட்டர்லூ பல்கலைக்கழகத்தில் முதலில் முதுமுனைவராகவும் பின்னர் பேராசிரியராகவும் ஆனார். 1992 இல் கலிபோர்னியாவிலுள்ள இசுட்டான்போர்டு (Stanford) பல்கலைக்கழகத்தில் வருகைதரு பேராசிரியராகவும், (Visiting faculty),  பின்னர் 2003 இல் பிரின்சிட்டன் (Princeton) பல்கலைக்கழகத்தில் வருகைதரு சிறப்பாளராகவும் (Visiting Fellow) பணியாற்றியிருக்கின்றார். வாட்டர்லூ பல்கலைக்கழகத்தில் 9 ஆண்டுகள் (1996-2005) வாட்டுமேட்டு (WATMAT) என்னும்  பொருளறிவியல், பொறியியல் நடுவத்தின்  இயக்குநராக இருந்தார். ஐ.இ.இ.இ (IEEE)  என்னும் அனைத்துலகப் பொறியியல் நிறுவனம் நடத்தும்  ‘’IEEE Bipolar/BiCMOS Circuits and Technology Meeting.’’ என்னும் கருத்தரங்கத்தின் தலைவராக 1994 இல் இருந்தார்.  ஐ.இ.இ.இ ஆய்விதழ் ஒன்றுக்குச் சிறப்பாசிரியராகவும்  இருந்தார். வாட்டர்லூ பல்கலைக்கழகத்தின் மேலவை (Senate) உறுப்பினராகவும், பல்கலைக்கழக ஆளுநர் குழுவின் (Board of governors) உறுப்பினராகவும் 3 ஆண்டுகள் (2006-2009) பணியாற்றியிருக்கின்றார். 1992 முதல்  American Men and Women of Science என்னும் தொகைநூலில் குறிக்கப்பெற்றுள்ளார்.

    crs

    இவர் கடந்த 25 ஆண்டுகளாக இணையத்தில் தமிழில் எழுதிவருகின்றார். Alt.culture.tamil,  soc.culture.tamil, tamil.net போன்ற மடலாடற்குழுமங்களின் நிறைய எழுதியிருக்கின்றார். அதன் பின் இப்பொழுது முகநூலிலும், அவர் நடத்தும் தமிழ்மன்றம் என்னும் கூகுள் மடலாடற்குழுமத்திலும் தொடர்ந்து எழுதிவருகின்றார். இவர் தமிழ் விக்கிப்பீடியாவில் ஏறத்தாழ 820 கட்டுரைகளைத்தொடங்கி எழுதியும் 20,000 உக்கும் கூடுதலான தொகுப்புகள் செய்தும் ஆக்கம் அளித்திருக்கின்றார். பள்ளிநாள்களிலிருந்தே தமிழ்ப்பற்றுடன் தமிழ்வளர்ச்சி சார்ந்தவற்றில் பங்காற்றி வருகின்றார். முகநூலில் அதிகமான தமிழ் மொழிபெயர்ப்புகள் செய்தவர் இவரே.   மாதத்துக்கு 80 மில்லியன் பேருக்கும் மேலானோர் வருகைதரும் கோரா (Quora) என்னும் தளத்தின் முன்னணி எழுத்தாளர்களில்  (Top Writers) ஒருவராக 2016 இல் அறிவிக்கப்பெற்றுள்ளார்.  அங்கு  அவர் எழுதியவையும் பெரும்பாலும் தமிழ்சார்ந்தவையே.

    cr2

    மேலும் ஓவியம் வரைதல், களிமண் சிலைவடித்தல், பாப்புனைதல், பாறையேற்றம், மொழியியல் ஆர்வம் போன்ற பல்கலைகளிலும் வித்தகர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

    அவரைப்பற்றிய குறிப்புகள் அடங்கிய வலைப்பக்கங்கள்:

    https://ece.uwaterloo.ca/~selvakum/biop.html

    https://uwaterloo.ca/electrical-computer-engineering/people-profiles/chettypalayam-selva-selvakumar

     விக்கிப்பீடியா பயனர் பக்கம்:  https://ta.wikipedia.org/s/1lo
    முகநூல் பக்கம் :  https://www.facebook.com/c.r.selvakumar

    இந்த வார வல்லமையாளராக தங்கள் கவனத்தைக் கவருபவர் எத்துறையைச் சார்ந்தவராக இருப்பினும் நம் வல்லமை ஆசிரியர் குழுவினரின் கவனத்திற்குக் கொண்டுவர விரும்பினால், vallamaiselva@gmail.com , vallamaieditor@gmail.com ஆகிய முகவரிகளில்  தங்கள் பரிந்துரைகளை அனுப்பி வைக்கலாம்.  மேலும் வல்லமையாளர் விருது பற்றிய விவரங்களை இப்பக்கத்தில் காணலாம் –http://www.vallamai.com/?p=19391, இதுவரை வல்லமையாளர்களாகத் தேர்வு பெற்றோர் பட்டியலை இங்கே காணலாம் http://www.vallamai.com/?p=43179 ]

    _______________________________________________________

    Share
  • கேசவ் வண்ணம் – கிரேசி எண்ணம்

    613c3c92-5534-4085-b5a2-bcd30a1b456e

    ‘’பாம்புத் தலைமேலே நடமிடும் பாதத்தினைப் பணிவோம்
    மாம்பழ வாயினிலே குழலிசை வன்மை புகழ்ந்திடுவோம்’’ என்ற
    மகாகவி பாரதியாரின் வரிகளால் வந்த வெண்பா….

    ’’பாம்பின் தலைமேல் படமொடுங்க ஆடிடும்
    மாம்பழ வாயா, மதுராவின், -ஆம்பிளை,
    சிங்கமே, வெல்லமே, சீராயர் செல்லமே
    வங்கக் கடல்கடைந்தோய் வா’’….கிரேசி மோகன்….

    ’’பாம்பாட்டி, நச்சரவ பேய்ச்சி யிருமுலைக்
    காம்பாட்டி, அன்னையால் கட்டுண்டு, -தாம்பாட்டி,
    *கூனாட்டி மங்கைக்கு, தூணாட்டி பிள்ளைக்கு,
    காணாட்டி கேசவ்கை காண்’’….கிரேசி மோகன்….

    *-மதுராபுரி சென்றதும் கண்ணன் செய்த முதல் காரியம் ஒரு மங்கையின் கூனை நிமிர்த்தியது….

    Share
  • பிரான்சிலே உலகத்தின் பிரமிக்கத் தக்க வானுயர்ப் பட்டாம்பூச்சிப் பாலம்

     Long bride -10

     

    [World’s Highest Butterfly Bridge in France] 

    சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear), கனடா

    https://youtu.be/F6wLEiv491g

    பிரான்சில் ‘மில்லா நீள்வீதிப் பாலம் கட்டமைப்புப் பொறியியல் துறைநுணுக்கச் சாதனையாக உன்னத இடத்தைப் பெறுகிறது. நமது ஆராய்ச்சி, பொறித்துறை நுணுக்கங்களின் மகத்தான வல்லமையை அது எடுத்துக் காட்டுகிறது.  அங்கே கட்டப்பட்டு, பிரென்ச் மக்கள் மெய்யாகப் பெருமைப்படும் அந்த மகத்தான சாதனை பிரான்சின் தீரச்செயலைப் பறைசாற்றுகிறது. நவீன வெற்றிமயமான பிரான்ஸ் தேசம், எதிர்காலத்துக்காகத் தன்னை இணைத்துக் கொள்ளும் ஓர் பங்கெடுப்புத் திட்டம், இது ‘.

    பிரென்ச் அதிபதி: ஜாக்ஸ் செராக் (President: Jacques Chirac)

    Long bride -9

    ‘மனிதனின் படைப்பு வினைகள் இயற்கை வனப்புக்கு ஏற்புடையதாக இருக்க வேண்டும். வீதிப் பாலத்தை வானவெளியில் தூக்கி நிற்கும் தூண்கள் பூமியில் ஏறக்குறைய இயற்கையாக வளர்ந்தவை போல எழுந்து, சூழ்வெளி வனாந்திர எழிலில் தோற்றம் அளிக்க வேண்டும். பொலிவுடன் காட்சி தரும் பள்ளத்தாக்குடன், பாலம் ஒட்டுத் தையல் போட்டதுபோல் தெரியக் கூடாது. பசுமையான வனச்சரிவுகள் பரந்த வெளியில் பட்டாம்பூச்சி மென்மையாக எழுவது போல் பாலம் காணப்பட வேண்டும் ‘.

    ‘நமது நாகரீக யுகத்தில் பின்னணித் துணைத்துறை [Infrastructure] அமைப்பு ஒரு நாட்டுக்கு வேண்டிய அடிப்படை. பொதுவெளித் தளங்கள், நதிகள் மீது கட்டும் பாலங்கள், வீதிகள் ஆகியவைதான் மக்களை ஒருங்கிணைத்துச் சேர்க்கின்றன. மேலும் நமது வாழ்க்கைத் தரத்தை அவை செம்மைப் படுத்துகின்றன. ஆனால் ஒருவர் அளந்தறிய முடியாத மிக்க ஆன்மீக உணர்வும், நமது தேவைகளில் ஒன்றாய் அவற்றுடன் இருக்கின்றது. ‘

    ajay

    ‘பாலம் மீது ஒருவர் வாகனத்தில் கடந்து செல்லும் போது, அவரது உள்ளத்தையும் பாலம் உயரச் செய்ய வேண்டும். கம்பீரமான பாலத்தைப் பார்க்கும் அவரது நெஞ்சில் ஓர் பரபரப்பை ஏற்படுத்த வேண்டும். மில்லா நகர் வழியே வாகனப் பயணங்களைத் தவிர்த்து அதைப் பாழாக்காமல், வான்வீதிப் பாலம் மாந்தருக்குக் கடந்து செல்ல வேறு பாதை அளிப்பதுடன், அதைத் தாண்டி மனப் பூரிப்பையும் மிகையாய்த் தருகிறது.’

    பிரிட்டிஷ் கட்டமைப்புக் கலைநிபுணர்: நார்மன் ஃபாஸ்டெர் (British Architect: Norman Foster)

    Long bride -5

    பொறிநுணுக்கமும் கலைத்துவமும் கலந்த வான்வீதிப் பாலம்

    உலகப் பெருவிந்தைப் படைப்புகளில் முன்னணியில் நிற்கும் பாரிஸ் ஐஃபெல் கோபுரம் [Eiffel Tower], அமெரிக்காவின் சுதந்திரச் சிலை [Statue of Liberty] ஆகியவற்றை ஆக்கிய பிரான்ஸ் தேசம், மற்றுமொரு மகத்தான பொறியியற் சாதனையாக மிக்க உயரத்தில் ஒரு நீண்ட வான்வீதிப் பாலத்தைத் தனது 21 ஆவது நூற்றாண்டுப் படைப்பாக அமைத்து, உலகிலே ஓர் பரபரப்பை உண்டாக்கி யுள்ளது! தீக்குச்சி களில் நூலைக் கட்டித் தொங்கவிட்ட தொட்டில் போல் எளிதாகத் தோன்றுகிறது, பிரான்சின் பிரம்மாண்டமான இரும்புவடம் தூக்கிய புது யுகப் பாலம் [Cable-Stayed Modern Bridge]! கண்கொள்ளாக் காட்சி யாய்க் கவரும், பிரான்ஸ்-ஸ்பெயின் எல்லைப் பகுதியில் டார்ன் நதிப் பள்ளத்தாக்கில் (Tarn River Valley), உயர்ந்த மலைச் சரிவுகளில் தெரிந்தும், தெரியாமால், சூழ்வெளிப் பொலிவைச் சிறிதும் குன்றச் செய்யாது அற்புதமாக ஆக்கப் பட்டிருக்கிறது, பிரான்சின் ஜெர்மன் சில்வர் வடத் தொங்கு பாலம்!

    ஏழு கம்பங்கள் தாங்கி நிற்கும் 1.6 மைல் [2460 மீடர்] நீளமான வான்வீதிப் பாலம், பிரான்சின் தெற்குப் பகுதியில் மாஸ்ஸிஃப் மைய மலைப் பிரதேசப் பள்ளத்தாக்கில் (Massif Central Mountains) 886 அடி [270 மீடர்] உயரத்தில் படுத்திருக்கும் வானவில் போல காட்சி அளிக்கிறது! இந்த வான்வீதியில் மோட்டர் பயணம் செய்வதால் 60 மைல் (100 கி.மீ) பயண தூரம் குறைவதோடு, 4 மணிப் பயண நேரமும் சேமிப்பாகிறது! ஏழு தீக்குச்சிக் கம்பங்களில், எல்லாவற்றுக்கும் பெரிய கம்பம் 1125 அடி [343 மீடர்] உயரத்தில் ஐஃபெல் கோபுரத்தை விட 62 அடி மிகையாகப் பூமியில் ஊன்றப் பட்டுள்ளது, ஒரு மகத்தானப் பொறியியல் சாதனையே!

    மெலிந்த, எளிதான, மென்மையான மில்லா வான்வீதிப் பாலத்தைப் படைத்தவர், பிரிட்டிஷ் கட்டமைப்புக் கலை நிபுணர் நார்மன் ஃபாஸ்டர். ரைஸ்ஸ்டாக் [Reichstag] என்னும் ஜெர்மன் பாராளுமன்றத்தைப் பெர்லினில் டிசைன் செய்த கட்டிட நிபுணர், நார்மன் ஃபாஸ்டர். பிரான்சின் தலைநகர் பாரிஸ் நகரை, ஸ்பெயின் நாட்டு எல்லையுடன் இணைக்கும் பாதையில் (A75) இப்புது வீதி, ரோன் நதி தீரத்தில் [Rhone River Valley] கோடை கால மோட்டர் வாகனங்களின் பயண நெருக்கடியைக் குறைப்பதற்காகக் கட்டப்பட்டது. ‘மலைச் சரிவுப் பள்ளத்தாக்கில் கண்ணுக்குப் பட்டும், படாமல் மெலிந்த சிற்பக் கோடுகள் போல் தோற்றம் அளிக்கிறது, பிரான்சின் புதுப்பாலம். இயற்கையோடு மனிதன் கொண்டுள்ள நடை மொழியைப் பேசுகிறது இந்தப் பாலம். மிகச் சிறிய இடத்தை அடைத்துக் கொண்டு, மலைச் சரிவு தீரத்தில் இயற்கையுடன் பொருந்தி நடமிடும், இந்தப் பாலத்தின் கட்டமைப்புப் பொலிவு எங்களைக் கவர்கிறது! ‘ என்று ஃபாஸ்டர் கூறினார்.

    Relative Size

    பிரான்சின் மில்லா வான்வீதி, ஜப்பான் கடல்மீது கட்டியுள்ள நீண்ட தொங்கு பாலம் ஆகாஷி கைகோவை விட [Akashi Kaiko, Japan] சற்று நீளமானது. மேலும் மில்லாவின் கூம்பிய தூண்கள் ஆகாஷி ைகைகோ கோபுரங்களை விட மிக்க உயரத்தைக் கொண்டவை. ஆனால் அமெரிக்காவின் ஆர்கன்ஸாஸ் நதிமேல் [Arkansas River] 1067 அடி (320 மீடர்) உயரத்தில் இருக்கும் கொலராடோ ராயல் கார்ஜி பாலத்தை விடச் [Colorado Royal Gorge Bridge] உயரத்தில் சிறியது, மில்லா வான்வீதி. ஆனால் இரும்பு உத்தரச் சட்டத்தின் மேல் மரப்பலகைகளால் கட்டப்பட்ட ராயல் கார்ஜி பாலம் மனிதர் மட்டும் செல்லும் நடைபாலமே [Pedestrian Bridge] தவிர, பிரான்ஸ் மில்லா பாலம் போன்று மோட்டர் வாகனங்கள் பயணம் செய்யத் தகுதியும், வலுவும் அற்றது! ஆகவே மோட்டர் வாகனங்கள் போக்குவரத்துக்கு ஏற்ப பேருயர்ச்சியில் கட்டப்பட்ட உலகப் பெரும் பாலம், பிரான்சின் மில்லா வான்வீதி என்பதை அழுத்தமாகச் சொல்லலாம். ஈரோப்பின் [2004] நாணய மதிப்பில் E.394 மில்லியன் ஈரோ [523 மில்லியன் US டாலர்] செலவில் கட்டி முடிக்கப்பட்ட வான்வீதிப் பாலத்தை 2004 டிசம்பர் 14 ஆம் தேதி பிரென்ச் அதிபதி ஜாக்ஸ் செராக் கோலாகல மோடு திறந்து வைத்தார்.

    Bridge details

    வான்வீதிப் பாலத்தின் கட்டுமான விளக்கங்கள்

    மில்லா நீள்பாலம் 120 ஆண்டுகள் நீடிக்கும் தகுதி உடையது என்று உத்தரவாதம் அளிக்கப்படுகிறது. எதிர்பார்க்கப்படும் போக்குவரத்து வாகனங்கள், தினம் சராசரி 10,000 என்றும், வேனிற் காலச் சுற்றுலாச் சமயங்களில் உச்சம் 25,000 ஆக ஏறும் என்று அனுமானிக்கப் படுகிறது. வாகனங்கள் பாலத்தில் பயணம் செய்யக் ‘கடப்புக் கட்டணம் ‘ (Toll Fee) ஈரோ நாணயம் E 4.9 [6.5 டாலர்] செலுத்த வேண்டும். பளு வாகனங்கள், லாரி ஓட்டுநர் அதைப்போல் 4 மடங்கு தர வேண்டும். கூம்பிய நீள் தூண்கள், பாலத் தட்டுகள், அவற்றுக் குரிய சட்டங்கள் யாவும் சுமார் 36,000 டன் எடை கொண்டவை. கூடியவரை அவ்வுறுப்புகள் அனைத்தும், பாலம் அமைப்பாகும் தளங்களிலே ஒவ்வொன்றாய் இணைக்கப் பட்டன. பூமிக்குமேல் 1.6 மைல் நீளமுள்ள பாதைத் தட்டைப் பல நூறு அடி உயரத்தில் 7 தூண்கள் தூக்கிக் கொண்டு, மணிக்கு 150 மைல் (250 கி.மீ.) வேகத்தில் காற்றின் ஆற்றல் தாக்கினாலும், ஊஞ்சல் போன்று சிறிது ஆட்டம் ஆடிச் சாய்ந்து விடாதபடித் தாங்கிக் கொள்ளும் தகுதி பெற்றது, மில்லா வான்வீதி!

    The Road building

    வான்வீதிப் பாலத்தின் நீளம்: 8200 அடி (2460 மீடர்). அகலம்: 106 அடி (32 மீடர்). பாலத்தின் தடிப்பு: 14 அடி (4.2 மீடர்). இரட்டைப் பாதைகளை இருதிசைகளிலும் அமைக்கப்பட்டுப் பாலம், ஒரே சமயத்தில் இரண்டு வாகனங்கள் இணையாகச் செல்லும் வசதி படைத்தது. ஏழு கூம்பிய தூண்களின் [Piers] இடையில் அமைப்பான ஆறு இடையகற்சித் தட்டுகள் [Span Plates] ஒவ்வொன்றும் 1140 அடி (342 மீடர்). முதல்-இறுதித் தூண்களின் புறத்தே உள்ள தட்டின் நீளம்: 680 அடி (204 மீடர்). ஏழு தூண்கள் 253 அடி முதல் 807 அடி வரை உயரங்கள் (77 மீ-246 மீ) கொண்டு அடித்தளம் 81 அடி (24.5 மீ) அகலமும், பாலத் தட்டு அரங்கில் 36 அடி (11 மீ) அகண்டும், உச்சியில் ஒடுங்கியும் உள்ளன. தூண் ஒன்றின் மேல் 319 அடி (97 மீடர்) கோபுரம் [Pylon] நிற்கிறது. ஒவ்வொரு தூணும் 16 இணைப்புச் சட்டங்களால் சேர்க்கப்பட்டு, 2230 மெட்ரிக் டன் எடை கொண்டது. தூண்கள் ஒவ்வொன்றின் இருபுறத்திலும் 154 முறுக்கப்பட்ட இரும்பு வடங்கள் [Twisted Steel Cables] பூட்டப்பட்டு, மனிதக் கரங்கள் போல் பாலத்தின் இடைத்தட்டு எடையைத் தூக்கி, தட்டின் மட்டநிலை [Horizontal Level] உயரத்தைச் சீராகச் சமநிலையில் நிறுத்துகின்றன. முறுக்கிய இரும்பு நாண்களின் மொத்த எடை: 5000 டன்.

    2001 அக்டோபர் 17 ஆம் தேதி கட்டத் துவங்கி, 39 மாதங்களில் (3 வருடம் 3 மாதம்) 520 பணியாளிகள் வேலை செய்து கட்டி, பாலம் முடிக்கப் பட்டது ஒரு வியக்கத் தக்க சாதனையே. அதை அமைத்த முக்கிய பொறியியல் கம்பேனி: எஃப்பியாஜ் [Effiage]. அப்பாலத்தில் பயன்பட்டிருக்கும் இரும்புச் சாதனங்களின் எடையில் (36,000 டன்) ஐந்து ஐஃபெல் கோபுரங்களைக் கட்டி விடலாம்! வீதிக்குப் பயன்பட்டுள்ள காங்கிரீடின் கொள்ளளவு: 85,000 கியூபிக் மீடர். பாலவீதி அமைத்துள்ள பிரான்சின் மோட்டர் வாகன வீதி: A75 (Autoroute). 1140 அடி நீளம், 14 அடி தடிப்புள்ள காங்கிரீட் தட்டுகள், 60 டன் எடையுள்ள 13 அடிX57 அடி [4 மீடர்X17 மீடர்] துண்டுகளால் தனித்தனியாகச் சேர்க்கப்பட்டுப் பிறகு ஒவ்வொரு தட்டும், பூமியின் துணைக்கோள் மூலம் கண்காணிக்கப் பட்டு ஆயில் அழுத்த துடுப்புகளால் [Satellite-guided Hydraulic Rams], ஒவ்வொரு கனமான தட்டும், தூண்களின் மேல் மெதுவாக [நிமிடத்துக்கு 6 அங்குல] நகர்ச்சி வீதம் சீராகத் தள்ளப்பட்டு நேராக்கப் பட்டது.

    வான்வீதிப் பாலத் திட்டம் உருவாகிய வரலாறு

    1989 ஆம் ஆண்டு ஜூன் 22 ஆம் தேதி ஆய்வு செய்யப்பட்ட நான்கு பாதை அமைப்பு முறைகளில் ஒன்றாக வான்வீதிப் பால மாடல் தேர்ந்தெடுக்கப் பட்டது. உயர மாடல் ஒன்றும், மட்டநிலை மாடல் ஒன்றும் அவற்றில் முக்கியமானவை. மட்டநிலை வீதி மாடலில் டார்ன் நதி மீது 667 அடிப் [200 மீடர்] பாலமும், அதை நீட்சி செய்து, 7670 அடி [2300 மீடர்] மலைக்குகைப் பாதையும் தேவைப்பட்டன. குகையைத் தோண்டுவதால் டார்ன் நதியின் நீரோட்டம் குறுக்கீடு ஆவதாலும், அருகில் உள்ள நகரின் அடியே பாதை செல்வதாலும் நிதிச் செலவு அதிகமாகித் தூரமும் மிகையானது. ஆகவே மட்டநிலை மாடல் வீதி அமைப்பு கைவிடப்பட்டு, உயரத்தில் செல்லும் வான்வீதி மாடல் தகுதி பெற்றது.

    Long bride -4

    1989 பூகம்பத்தில் பழுதடைந்த அமெரிக்காவின் ஸான் பிரான்சிஸ்கோ வளைகுடா தொங்கு பாலம் [Bay Bridge] 2004 இல் செப்பனிட அல்லது வேறிடத்தில் புதிதாய்க் கட்டத் தீர்மானமாகி, இப்போது மதிப்பீடைத் தாண்டிப் பல பில்லியன் டாலருக்கும் மேலோடி விட்டது. காலிஃபோர்னியா ஆளுநர் ஆர்நால்டு சுவார்ஸ்நெக்கர் [Arnold Schwarzeneggar], வளைகுடாப் பாலத்தில் டிசைன் மாறுதல் அமைக்கச் செய்து, நிதிச் செலவு குறையுமா வென்று ஆராய நிபுணர்களை ஏற்பாடு செய்தார். ஆனால் புதுப்பாலம் அமைப்புத் திட்டம் தீர்மானமாகத் தாமதமாகிக் கொண்டு வருவதால், தற்போது வளைகுடா பால அமைப்பு நிதி மதிப்பீடு [5200 பில்லியன்], பிரான்சின் வான்வீதிப் பாலச் செலவைப் போல் பத்து மடங்காகி விட்டது! பிரென்ச் பொறியியல் நிபுணர்கள் 21 ஆம் நூற்றாண்டு துவக்கத்தில் மூன்றே ஆண்டில் 1.6 நீளமுள்ள மகத்தான ஒரு புதுவித வான்வீதியைச் சிக்கனமாக 520 மில்லியன் டாலரில் கட்டி முடித்தது, மெச்சத் தகுந்த ஒரு மாபெரும் சாதனையே!

    Long bride

    ******************************

    Photo credits: [Thanks for the following Web Sites]

    a) http://www.structurae.de/photos/index.cfm ?ID=31858

    http://www.structurae.net/structures/data/index.cfm ?id=s0000351

    b) http://en.wikipedia.org/wiki/Image:Millau_Viaduct_from_the_End_.jpg

    By Photographer: Daniel Lavabre

    c) http://www.structurae.net/photos/index.cfm ?JS=26588

    And also the Following Websites

    +++++++++++++++++++++

    தகவல்:

    1. World ‘s Tallest Bdige Opens in France [www.iafrica.com/pls/cms/iac.page] Dec 14, 2004

    2. From Wikipedia the Free Encyclopedia

    3. France Opens World Class Bridge By Dan Walters [Dec 15, 2004]

    4. World ‘s Tallest Road Bridge Opens By the Guardian [www.guardian.co.uk/] Dec 14, 2004]

    5. France Opens World ‘s Highest Bridge http://www.gulg-news.com

    6. Europe ‘s Highest Bridge Links Art & Engineering [http://seattletimes.nwsource/cgi-bin]

    7. France Inaugurates World ‘s Highest Bridge [www.reuters.co.uk/] Dec 14, 2004

    8. http://www.bing.com/videos/search?q=millau+viaduct+bridge+france&&FORM=VDVVXX

    9.  http://www.highestbridges.com/wiki/index.php?title=Millau_Viaduct

    10.  https://en.wikipedia.org/wiki/Millau_Viaduct  [February 22, 2016]

    *****************************

    jayabarathans@gmail.com (S. Jayabarathan)  [February 27, 2016]  [R-1]

    Attachments area
    Share
  • ’’சுஜாதா’’ எழுத்தச்சன்….

     

    “எழுத்தச்சன் சுஜாதா” அவர்களின் நினைவு நாள்….

    d54d4d7f-dd10-48ef-9784-960195c4e79e

    எழுத்தாளர் சுஜாதா மறைவால் வருந்தி
    ————————————————-
    கதையா ? கவிதையா ? கட்டுரையா ? கேட்போர்க்(கு)
    எதையும் வழங்கும் எழுத்துப் -புதையலே
    ஸ்ரீரங்க தேவதையே ஏரங்க ராஜனே
    பாரிங்கு நீரின்றி பாழ்….கிரேசி மோகன்….

    Share
  • கேசவ் வண்ணம் – கிரேசி எண்ணம்

    4aa942d3-5519-4181-b4b6-5d3ca66bee4e

    இருக்மணி பாமா இருவராய் எண்ணி,
    விருப்புடன் வாஞ்சையாய் வைத்து, -கருப்பன்
    நெருக்கினான் கோக்களை நவநீதம் பொங்க:
    கருக்கலில்கே சவ்தூரி கை ….கிரேசி மோகன்….
    அணைப்பின் ஆனந்தத்தில் ஆக்கள் பாலுக்கு பதில் நவனீதமாய் பொழிந்தன….
    கருக்கல் -விடியற்காலை-பிம்மாலை மணி 3.00 கேசவ் வரையும் நேரம் நமக்காக….

    Share
  • காரைக்குடி கம்பன் கழகத்தின் மார்ச் மாதக் கூட்டம்

    காரைக்குடி கம்பன் கழகத்தின் மார்ச் மாதக் கூட்டம் எதிர்வரும் 5.3.2016 ஆம் நாளன்று நடைபெற உள்ளது.

    இந்நிகழ்வில் கம்பன் கழகப் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்கள் தம் திறமையை வெளிப்படுத்த உள்ளனர். மேலும் இசைப் பட்டிமண்டபம் புதுக்கோட்டை முத்துநிலவன் தலைமையில் நடைபெற உள்ளது. கம்பன் நின்று நிலைப்பது அழகியல் பாடல்களிலே என்ற அணியில் மகா. சுந்தர் வாதாடுகிறார். அறவியல் பாடல்களிலே என்று முனைவர் மு.பாலசுப்ரமணியன் வாதாடுகிறார். எப்பக்கம் என்று நடுவர் தீர்ப்புரைப்பார். இந்நிகழ்ச்சிக்கு காரைக்குடி முத்துப்பட்டணம் நா. வீர குடும்பத்தாரும் கம்பன் அன்பர் ஒருவரும் கொடை தந்து உதவியுள்ளனர். அனைவரும் வருக. எப்போதும் போல் சிற்றுண்டி உண்டு.

    கம்பர்

    Share
  • கேசவ் வண்ணம் – கிரேசி எண்ணம்

     

    0e68005e-b7be-4a30-a5db-09b498a83ad3

    நீல யமுனையில் நீந்திய கோபியர்
    சேலைப் புதையலை சேகரித்தோய் -நாளை
    சபையில் துரோபதை சோகம் களைந்து
    அபயம் அளிக்கத்தா னே….
    நிறத்துக்கு நீலம் நினைப்புக்கு லீலை
    கருத்துக்கு கொள்மனமே கீதை -சிரத்துக்குள்
    சீர்மல்கும் சீதரனை சிந்திக்க ஜீவன்கண்
    ணீர்மல்க ஆன்மாவா கும்….

    நீலம் அரவணைக்க நிர்மூலம் ஆகிடும்
    காலம் இடம்பொருள் ஏவல்கள் -கோல
    விடமுறங்கி ஆலில் விளையாடும் பிள்ளை
    உடனிருக்க உற்சாக ஊற்று….கிரேசி மோகன்….

    Share
  • பழமொழி கூறும் பாடம்

    – தேமொழி.

     

    பழமொழி: எருக்கு மறைந்து யானை பாய்ச்சிவிடல்

     

    எல்லாத் திறத்தும்இறப்பப் பெரியாரைக்
    கல்லாத் துணையார்தாம் கைப்பித்தல் சொல்லின்
    நிறைந்தார் வளையினாய்! அஃதால் எருக்கு
    மறைந்துதியானை பாய்ச்சி விடல்.

    (முன்றுறையரையனார், பழமொழி நானூறு)

     

    பதம் பிரித்து:
    எல்லாத் திறத்தும், இறப்பப் பெரியாரை,
    கல்லாத் துணையார் தாம் கைப்பித்தல் சொல்லின்,-
    நிறைந்து ஆர் வளையினாய்!-அஃதால், எருக்கு
    மறைந்து, யானை பாய்ச்சிவிடல்.

    பொருள் விளக்கம்:
    எல்லா வகைத் திறனும் கொண்ட மேன்மை பொருந்திய அறிஞர்களை, கல்லாமையைத் துணையாகக் கொண்ட கற்றறியாதோர், தங்கள் அறிவின்மையில் மூழ்கி மறைந்து கொண்டு, வெறுப்பேற்றும் சொற்களை உமிழ்வது, அழகு நிறைந்த ஒலிக்கும் வளையல்களை அணிந்தவரே; அத்தகைய செயல், எருக்கம் புதரின் பின் மறைந்து கொண்டு யானையைச் சீண்டி சினமூட்டும் செயல் போன்றது (சிறிய எருக்கம் புதரை பாதுகாப்பு என்று நினைத்து, அதன் பின் மறைந்து கொள்ளும் அறிவிலி, யானையைச் சினம் கொள்ளச் செய்தால் யானை மிதித்தே அழித்துவிடும், ஆதலால் அது துன்பம் வரவழைத்துக் கொள்ளும் செயலென அறிக)

    பழமொழி சொல்லும் பாடம்: மேன்மை மிகு அறிஞர்களை, அறிவிலிகள் துன்புறுத்த எத்தனித்தால் அது தங்கள் அழிவைத் தேடிக் கொள்ளும் செயலாக அமைந்துவிடும். இக்கருத்தை வள்ளுவர்,

    கூற்றத்தைக் கையால் விளித்தற்றால் ஆற்றுவார்க்கு
    ஆற்றாதார் இன்னா செயல். (குறள்: 894)

    ஆற்றல் உள்ளோரிடம், அந்த ஆற்றல் இல்லாதவர் தீங்கு விளைவிக்க முயல்வது மரணத்தைக் கையசைத்து அழைத்து வலிந்து ஏற்றுக்கொள்வது போன்றதாகும் என்கிறார்.

    Share
  • இங்கிலாந்திலிருந்து ஒரு மடல்….. (185)

    – சக்தி சக்திதாசன்.

     

     

    daily-mail-graph

     

     

    அன்பினியவர்களே !
    இனிய வணக்கங்கள்.
    சென்றவாரம் இங்கிலாந்து அரசியலில் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தப் போகும் ஒரு சிக்கலின் ஆரம்பத்திற்கான வாரம் என்று குறிப்பிட்டு எழுதியிருந்தேன். நான் மடலை வரைந்த அந்நாளே இங்கிலாந்துப் பிரதமர் திரு.டேவிட் கமரன் ஐரோப்பிய ஒன்றியத்துடனான அங்கத்துவத்தை பிரித்தானிய அரசு நீடிப்பதற்குத் தேவையான அடிப்படை மாற்றங்களைக் கோரி அதற்கான உடன்படிக்கையைப் பெற்றுக்கொள்வதற்கான பேச்சுவார்த்தைகளில் ஏனைய ஐரோப்பியத் தலைவர்களுடன் ஈடுபட்டிருந்தார்.

    அவரது கோரிக்கைகளுக்கு ஏனைய 27 ஐரோப்பிய தலைவர்களும் உடன்படுவார்களா? இல்லையா? என்பதுவே கேள்விக்குறியாகவிருந்தது. இவ்வுடன்படிக்கையைப் பெற்றுக்கொள்வது பிரதமர் டேவிட் கமரனுக்கு ஒரு அத்தியாவசிய தேவையாகவிருந்தது. அவரது கோரிக்கைகளை ஏனைய ஐரோப்பிய தலைவர்கள் ஏற்றுக்கொண்டால்தான் பிரித்தானியா ஐரோப்பிய யூனியனில் தொடர்ந்து அங்கம் வகிப்பதற்கான ஆதரவைப் பிரதமர் நல்க முடியும் என்பதுதான் அவருக்கு முன்னாலிருந்த யதார்த்த நிலை.

    டேவிட் கமரன் எதிர்பார்த்தபடி போனவாரம் வியாழக்கிழமை அவரின் ஏனைய ஐரோப்பிய தலைவர்களுடனான பேச்சுவார்த்தைகள் அவருக்கேற்றபடி அமையவில்லை. இரவோடிரவாக தொடர்ந்த பேச்சுவார்த்தை காலை 4.30 வரை நீடித்தும் அனைவரிடமும் இணக்கம் காணப்படவில்லை. ஆயினும் முடிவு டேவிட் கமரனுக்குச் சாதகமாக அமையும் எனும் ஓர் பொதுக்கருத்து நிலவியது. அதற்கான காரணம் இங்கிலாந்து ஐரோப்பிய ஒன்றியத்தை விட்டு விலகுவதை ஏனைய ஐரோப்பிய நாடுகளும் விரும்பவில்லை என்பதுவே.

    பேச்சுக்கள் மீண்டும் காலை 10 மணியளவில் தொடங்கி மாலைவரை நீடித்தது. வெள்ளிக்கிழமை மாலை டேவிட் கமரனது கோரிக்கைகள் ஏனைய 27 ஐரோப்பிய ஒன்றிய அங்கத்துவ நாடுகளினதும் தலைவர்களினால் அங்கீகரிக்கப்பட்டுவிட்டது எனும் அறிவித்தல் கிடைத்தது. நடைமுறைக்கு மாறாக அமைச்சரவைக் கூட்டம் சனிக்கிழமை கூட்டப்பட்டு இங்கிலாந்துப் பிரதமர் டேவிட் கமரன் தனது கோரிக்கைகள் ஏற்கப்பட்டு விட்டன என்பதை அறிவித்தார்.

    அதனை அடுத்து பிரதமரின் உத்தியோக வாசஸ்தலத்தில் நிருபர்களைச் சந்தித்த பிரதமர் தனது கோரிக்கைகளை பிரித்தானிய ஒன்றியத்தின் ஏனைய அங்கத்துவ நாடுகளின் தலைவர்கள் ஏற்றுக் கொண்டதால் தனது அமைச்சரவை பிரித்தானியா ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து விலகக் கூடாது என்று சிபாரிசு செய்வதாகவும், விலகுவதா, இல்லையா? என்பதற்கான மக்களின் சர்வஜன வாக்கெடுப்பு வருகிற ஜூன் மாதம் 23ம் திகதி நடைபெறும் என்றும் அறிவித்தார்.

    அதேநேரம் தனது அரசாங்கம், தனது கட்சி அமைச்சர்கள், பாராளுமன்ற அங்கத்தினர்கள் தமது கொள்கையான ஐரோப்பிய ஒன்றியத்தில் நிலைத்திருப்பது என்பதைத்தான் ஆதரிக்க வேண்டும் என்று தான் வலியுறுத்தப் போவதில்லை என்றும் ஒவ்வொருவருக்கும் தாம் என்ன எண்ணுகிறார்களோ அதன் பிரகாரம் வாக்களிக்கும் சுதந்திரம் நல்குகிறோம் என்றும் அறிவித்தார். அரசாங்கத்தின் 29 அமைச்சர்களில் 6 பேர் பிரதமரின் கருத்துக்கு எதிரான கருத்துக்கு அதாவது ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து பிரித்தானியா விலக வேண்டும் எனும் கோரிக்கைக்காக பிரச்சாரம் செய்யப் போவதாக அறிவித்துள்ளார்கள்.

    மதின்மேற்பூனை போல இருந்த லண்டன் மேயர் திரு பொரிஸ் ஜான்சன் (கன்சர்வேடிவ் கட்சியைச் சேர்ந்தவர்) எந்தப் பக்கம் பாயப் போகிறார் என்பதுவே அனைத்து ஊடகவியாளார்களுக்கும் கேள்விக்குறியாக இருந்தது. அவரை நோக்கி வீசப்பட்ட வினாக்களிலிருந்து அதுவரை சாதுரியமாகத் தப்பி வந்த அவர் தானும் ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரித்தானிய வெளியேற வேண்டும் என்று வாதிடும் சாரருக்கு ஆதரவாகப் பிரசாரம் செய்யப் போவதாக அறிவித்து விட்டார்.

    இவரது இந்த முடிவு தனது சொந்த நலனை முன்வைத்தே எடுக்கப்பட்டிருக்கிறது என்று ஒரு சில ஊடகங்கள் குறிப்பிடுகின்றன. அதாவது இந்தப் பாராளுமன்றத்தின் முடிவோடு தானும் தலைவர் பதவியிலிருந்து விலகப்போவதாக டேவிட் கமரன் ஏற்கனவே அறிவித்து விட்ட நிலையில் கட்சித் தலைமைத்துவத்தைக் கைப்பற்றும் ஒரு நீண்டகாலத் திட்டத்தின் அடிப்படையிலேயே பொரிஸ் ஜான்சன் இயங்குகிறார் என்பது அவர்களின் கருத்து. இதற்குக் காலம் தான் பதில் கூற வேண்டும்.

    அரசியல் அரங்கமே வரும் நான்கு மாதங்களும் ஒரு இடியப்பச் சிக்கல் போலத் தென்படுகிறது. ஏன் என்கிறீர்களா ? அரசாங்கத்துக்குள் இந்த ஐரோப்பிய அங்கத்துவத்தினால் பாரிய பிளவு, அதே சமயம் எதிர்க்கட்சியான லேபர் கட்சியின் பெரும்பான்மையான பாராளுமன்ற அங்கத்தினர்கள் பிரதமரோடு இணைந்து பிரசாரம் செய்யும் ஒரு நிலை. இத்தகைய ஒரு சூழலில் பிரதமருக்கு சாதாரண நாளுக்கு நாள் நடைபெறும் அரசாங்க விடயங்களுடன், ஐரோப்பிய ஒன்றிய அங்கத்துவ கொள்கையில் எதிர்த்துப் பிரசாரம் செய்யும் தன்னுடைய அமைச்சர்களுடன் சேர்ந்து இயக்க வேண்டிய தர்மசங்கடமான நிலை.

    எத்தகைய வடிவிலான பிரச்சாரமாக இருந்தாலும் அது நாகரீகமாக, கெளரவமாகத் தனிப்பட்ட தாக்குதல்கள் தவிர்ந்ததாக இருக்க வேண்டும் என்று அரசாங்கச் சார்பில் கருதப்படுகிறது. வெறும் வாயையே மெல்லுவதில் வல்லுநர்களான ஊடகவியலாளர்கள் அவல் கிடைத்தால் சும்மா விட்டு விடுவார்களா என்ன ?

    ஆரம்பிச்சுட்டாங்கய்யா ! பிரதமரின் கருத்துக்களைக் கேட்டு விட்டு, அவரை ஐரோப்பிய ஒன்றிய வாக்கெடுப்பில் எதிர்த்துப் பிரசாரம் செய்யும் அமைச்சர்களிடம் “என்ன பிரதமர் அப்படிச் சொல்லுகிறார் ? நீங்கள் இப்படிச் சொல்லுகிறீர்கள். அப்படியானால் பிரதமர் எம்மை ஏமாற்றுகிறாரா என்ன ” என்பது போன்ற கேள்விகளைக் கேட்டு குளத்தினுள் கல்லை விட்டெறிந்து வலயங்களைத் தோற்றுவித்து அதில் மீன்பிடிக்க எண்ணுகிறார்கள்.

    அடிப்படைக் கொள்கைகளில் முற்றிலும் நேர்மாறான கொள்கை கொண்ட அரசியல்வாதிகள் இந்த ஒரு அம்சத்தில் மட்டும் இணைந்து ஒரே மேடையில் பிரச்சாரம் செய்யும் வினோதங்கள் நிகழ்கின்றன. மற்றுமொரு சிக்கலையும் எதிர்நோக்க வேண்டியுள்ளது. நடந்து முடிந்த ஸ்காட்லாந்து சர்வஜன வாக்கெடுப்பைப் பற்றிப் பலர் அறிந்திருக்கக்கூடும். ஸ்காட்லாந்து நாட்டில் நடைபெற்ற சர்வஜன வாக்கெடுப்பில் குறைந்த வித்தியாசத்தினால் ஸ்காட்லாந்து ஐக்கிய இராச்சியத்தில் இணைந்திருக்க வேண்டும் எனத் தீர்மானித்தது.

    வரப்போகும் ஐரோப்பிய ஒன்றியத்தில் இருப்பதா? இல்லையா? எனும் சர்வஜன வாக்கெடுப்பில் பெரும்பான்மை வாக்குகள் விலக வேண்டுமெனத் தீர்மானிக்கிறது என்று வைத்துக்கொள்வோம். அதேநேரம் இதற்காக ஸ்காட்லாந்து நாட்டில் விழுந்த வாக்குகள் பெரும்பான்மையாக ஐரோப்பிய ஒன்றியத்தில் நிலைத்திருக்க வேண்டும் என்று விழுந்திருந்தது என்று வைத்துக் கொள்ளுங்கள். ஸ்காட்லாந்தின் மாநில அரசாங்கம் விட்டு விடுமா என்ன? நமது மக்கள் ஐரோப்பிய ஒன்றியத்தில் நிலைத்திருக்க விரும்புகிறார்கள் ஆனால் முழுவதுமான ஐக்கிய இராச்சிய வாக்கெடுப்பு வெளியேறத் தீர்மானித்தால் எப்படி அது ஜனநாயகமாகும் ? இதனால் ஸ்காட்லாந்து தனித்து போவதுதான் முறை என்று மற்றொரு தமது தனிநாட்டுக்கான சர்வஜன வாக்கெடுப்பை நடத்துவார்கள் அதில் அவர்கள் வெல்வதற்கான சாத்தியக் கூறுகளும் உண்டு.

    அப்படி ஒரு நிலைமை ஏற்பட்டால் அதன் விளைவுகள் என்ன ? என்பதனையும் அரசியல்வாதிகள் சிந்திக்க வேண்டிய நிலையிலுள்ளார்கள். அரசியல்வாதிகள் மட்டுமல்ல இத்தகைய ஒரு அதிமுக்கிய தீர்மானத்தை ஜனநாயக அடிப்படையில் மக்களின் கையில் அரசாங்கம் கொடுத்திருக்கிறது. உணர்ச்சிகளின் அடிப்படையில் வாக்களிக்காமல் அறிவுப்பூர்வமாகச் சிந்தித்து, நிலைமைகளைச் சீர்தூக்கிப் பார்த்து வாக்களிக்க வேண்டியது ஒவ்வொருவருடைய கடமையுமாகிறது.

    பொறுப்பான செயற்பாடுதான் ஜனநாயக கோட்பாட்டின் அடிப்படை.

    மீண்டும் அடுத்த மடலில்
    சக்தி சக்திதாசன்

    http://www.thamilpoonga.com
    http://www.facebook.com/sakthi.sakthithasan

    படம் உதவி: http://www.dailymail.co.uk/news/article-2803377/Support-staying-European-Union-surges-23-year-high-thanks-rise-Ukip.html

    Share
  • இட ஒதுக்கீடுகளும், போராட்டங்களும்

    பவள சங்கரி

    தலையங்கம்

    குஜராத்தில் பட்டேல் இனத்தவரின் போராட்டங்களும், ஹரியானாவில் ஜெட் இனத்தவரின் போராட்டங்களும், அவை மேற்கு உத்திர பிரதேசத்தில் பரவக்கூடிய வாய்ப்புகளும், சில ஆண்டுகளுக்கு முன்பு ஜெட் இனத்தவரின் ராஜஸ்தான் போராட்டங்களும் அங்கு ஆட்சியாளர்களின் வெவ்வேறு விதமான அணுகுமுறைகளால் தீர்க்கப்பட்டோ அன்றி ஒடுக்கப்பட்டோ பிரச்சனைகளை அப்போதைக்கப்போது அல்லது தற்காலிகமாக மட்டுமே தீர்க்கப்படுகின்றன. நடுவண் அரசோ அல்லது மாநில அரசுகளோ மனித வள மேம்பாட்டுக் கொள்கைகளில் நிலையானதொரு முடிவை எடுப்பதில்லை என்பதையே இது காட்டுகிறது. குறிப்பிட்ட சாரார்களுக்கான ஒதுக்கீடு என்பது முன்பெல்லாம் தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட மக்களும், அரசு வேலை வாய்ப்புகளிலும், கல்வித் துறையிலும் வாய்ப்புகள் பெற வேண்டும் என்பதற்காக ஏற்படுத்தப்பட்டது. சுதந்திரம் அடைந்து 68 ஆண்டுகள் ஆகியும் நமது மக்கள் வளர்ச்சியடையாமல் தாழ்ந்த நிலையில் உள்ளார்கள் என்பதை பறைசாற்றும் விதமாக அரசே இப்படி ஒதுக்கீடு வழங்குவது தேவையா என்று சிந்திக்க வேண்டிய நிலையில் உள்ளோம்.

    தடியெடுத்தவன் எல்லாம் தண்டல்காரன் என்பது போன்ற நிலையே உருவாகிக் கொண்டிருப்பதும் நாட்டின் வளர்ச்சிக்கு முட்டுக்கட்டை போடக்கூடியது. போராட்டம் என்ற பெயரில் போக்குவரத்திற்கு இடைஞ்சலாக ஆயிரம் ரயில்கள் நிறுத்தப்பட்டன. போராட்டத்தை கட்டுக்குள் கொண்டுவருவதற்காக இராணுவத்தை வானவெளி மூலமாகவே கொண்டுவர வேண்டியுள்ளது வெட்கப்பட வேண்டிய நிலை அல்லவா. இப்படி ஒவ்வொரு மாநிலத்திலும் ஏதோ ஒரு வகுப்பினர் போராட்டங்களை நடத்தினால் அரசு நிலை குலையும் நிலை ஏற்படும் என்பதும் அனைவரும் அறிந்ததே. இதற்கான தீர்வு என்ன என்பதை முறையாக சிந்தித்தால் மட்டுமே இதிலிருந்து முழுமையாக விடுபட முடியும். அதற்கு முதல் கட்டமாக , கட்சிப் பாகுபாடின்றி அனைத்துக் கட்சியினரும் ஒன்றாக அமர்ந்து பேசி பாரபட்சமற்ற முடிவை எடுக்க வேண்டியது அவசியம். இட ஒதுக்கீடு என்பது இனியும் தேவையா என்று முடிவெடுக்க வேண்டிய காலகட்டம் இது. திறமை உள்ளவர்கள் போட்டி போட்டுக்கொண்டு வெற்றி பெற வேண்டுமேயொழிய சமுதாயம், நாடு வளர்ச்சியடைவதற்கு பின்வழிகளை அரசு ஏற்கக்கூடாது. பல சமுதாயங்கள் இன்றளவிலும் வளர்ச்சியடையாமல் இருக்கும்பட்சத்தில் பொருளாதார உதவிகள் மூலம் இது போன்று போட்டியிடுவதற்குரிய திறமைகளை அதிகப்படுத்த வேண்டுமேயொழிய தேவையான திறமையற்றவர்கள் இந்த ஒதுக்கீடுகள் மூலமாக உயர்மட்ட பொறுப்புகளுக்கு வரும்பொழுது நாட்டு வளர்ச்சியும் பாதிக்கக்கூடும். உச்சக்கட்டத் தேர்வின்போது சம அளவிலான மதிப்பெண்களை தேர்வில் பங்குபெறும் நான்கு பேரும் பெற்றிருந்தால் அந்நிலையில் தாழ்த்தப்பட்ட சமுதாயத்திற்கோ, மாற்று வளர்ச்சியடையாத சமுதாயத்தை சேர்ந்தவருக்கோ அந்த வாய்ப்பை அளித்தால் சமுதாயம் முன்னேறுவதோடு நாடும் வளர்ச்சியடையும். இதை விடுத்து அரசியல் ஆதாயத்திற்காகவோ அல்லது வேறு ஏதும் காரணங்களுக்காகவோ இட ஒதுக்கீடு என்ற திட்டத்தை நிறைவேற்றுவது என்பது தவறான வழி வகைகளை ஏற்படுத்தும் என்பதோடு இதனால் நாட்டின் வளர்ச்சியும் பாதிப்படையும் என்பதும் உறுதி.

    Share
  • நமக்கு நாமே எதிரிகள்

     சத்தியமணி

     

    நமக்கு நாமே எதிரிகள்

    நாம்தான் தேச துரோகிகள்

    உண்மையில் குற்றவாளிகள்

    உணர்ந்தால் இலை பிரதிவாதிகள்

     

    நிறங்களை இனங்களை கலக்க‌விடாது

    பிரித்து கலவரம் காட்டினோம்

    திறங்களை பார்த்து வாய்ப்பளிக்காது

    பள்ளியை சுடுகாட்டாக்கினோம்

    வகுப்பு என்பதன் பொருளதை மாற்றி

    வீதியில் வெறியுடன் ஆடினோம்

    சிறப்பு சொல்லிடும் பல்கலைகழகம்

    சிதைத்து சிறைகளாய் மாற்றினோம்

     

     

    பணமும் பகட்டும் வசதியும்காண‌

    விட்டு அயலகம் ஏகினோம்

    புழுங்கும் மனதை திருந்தவிடாது

    அங்கே குடிமகனாகினோம்

    கலங்கும் தாயகம் வதங்கிட கண்டும்

    காணா திருகுரு டாகினோம்

    கற்க கசடற கற்ற பின்னாலே

    விற்ற கலைபொருளாகினோம்

     

     

    அழுகிய காய்களை கறிகளில் சேர்த்து

    அமுதாய் உண்பவர்  ஆகினோம்

    அழுக்கினில் கிடைத்த அவலங்களோடு

    அணிவகுப்புகளை பாராட்டினோம்

    குலப்பட மெடுத்து கலப்படம் மாட்டி

    கும்பிடும் பக்தரும் ஆக்கினோம்

    செவிப்பட கதறிட செப்புகிறாள் தாய்

    மண்ணுக்கு ஏதுரை செய்யுவீர்

     

     

    லஞ்ச ஒழிப்போம் இன்றெனச் சொல்லி

    அஞ்சலுடன் கை அலம்பினோம்

    வஞ்சகம் அறுப்போம் என்றெனச் சொல்லி

    வயதினர் விடுதிகள்  காட்டினோம்

    தஞ்சம் என்றென வரும் அரவுகளை

    நஞ்சுடன் வாழக் காப்பாற்றினோம்

    மிஞ்சும்படி இனி மிச்சம் வைக்காது

    எல்லாம் கெட கொண்டாடினோம்

     

    தாயைப் பழித்து வாழ்ந்தாரென்ற‌

    சரித்திர முண்டோ சொல்லுவீர்

    தாய்மண் அழிக்க சிறந்தாரென்ற‌

    தகவலும் முண்டோ சொல்லுவீர்

    அடிமை அழித்து குடியரசாகியும்

    அவலப்பெண்ணா ? பாரதம்

    உரிமை கோரி உலையில் போட்டீர்

    பெருந்தகை யாளரே! வாழியே

    Share
  • தேவிதரிசனம்

    ஒரு அரிசோனன்

    என் கண்ணைப் பறித்தன அந்த பளபளக்கும் வான்நீலத் தாவணியும், கருநீலப் பட்டுப்பாவாடையும்.  அவற்றை அணிந்துவந்த அழகுதேவதை என் கண்களையும், கருத்தையும் தன்பால் கட்டிக் கவர்ந்திழுத்தாள்.  உடனே, என் கால்கள் தாமாகவே நின்றுபோயின.

    “டேய், கண்ணா, ஏண்டா சடன் பிரேக் போடறே?  இப்பவே பந்தி ஃபுல் ஆகறமாதிரி இருக்கு.  நீபாட்டு பராக்குப் பார்த்துக்கிட்டு நின்னா, சாப்பாட்டுக்கு ரெண்டாம் பந்திக்குக் காத்திருக்கவேண்டியதுதான்!” என்று என்னை இழுத்தான் என் வயதொத்த என் சின்னமாமன் ராஜு.

    “நீ போய் உக்கார்ந்து, எனக்கும் உன்பக்கத்துலே இடம் போட்டுடேண்டா, ராஜு!” என்று அவனை அனுப்பமுயன்றேன்.  ஒரே வயதொத்தவர்கள் என்பதால் ‘வாடா, போடா,’தான்;  மாமன், மருகன் என்ற பேதம் மறைந்து நட்பு நிறைந்துநின்றதே அதற்குக் காரணம்.

    “இங்கெ என்ன வெட்டிமுறிக்கற வேலை உனக்கு இருக்கு, கல்யாணச் சாப்பாட்டை ஒருகை பார்க்கறதைவிட?  சரி, இடம்போட்டுத் தொலைக்கறேன்.  நீ உன்னோட வெட்டிமுறிக்கற வேலையை முடிச்சுட்டே வந்துதொலை!” என்று பலவிதமான, எழுதக்கூடாத வார்த்தைகளால் என்னை அர்ச்சனை செய்து, எனக்கு ஆசிவழங்கியவாறே செல்லத்துவங்கியவனை மறுகணமே பின்தொடர்ந்தேன், “ராஜூ,  நில்லுடா, நானும் வரேன்,” என்றவாறே.

    என் நீலத்தேரும் பந்தியைநோக்கி நகர ஆரம்பித்ததே அதற்குக் காரணம்.

    அந்தத் தேர் அசைந்து அசைந்து செல்வதைப் பார்த்ததும் என் நினைவுக்கு வந்தது, சில நாள்கள்முன்பு தமிழாசிரியர் நடத்திய கவிதைகளின் வரிகள்தான்!

    “இட்ட அடி நோக, எடுத்த அடி கொப்புளிக்க, வட்டில் சுமந்து மருங்கசைய…”

    அத்துடன், அம்பிகாபதி படத்தில் வந்த,

    “சற்றே சரிந்த குழலே துவளத் தரளவடம்
    துற்றே அசையக் குழை ஊசலாடத் துவர்கொள் செவ்வாய்
    நற்றேன் ஒழுக நடன சிங்கார நடையழகின்
    பொற்றேர் இருக்கத் தலையலங்காரம் புறப்பட்டதே!”

    என்ற பாடலையும் என் உதடுகள் தானாகவே முணுமுணுத்தன.

    என்னைத் திரும்பிப்பார்த்த என் மாமன் ராஜு, “உனக்கு அரணைப் புத்திடா, கண்ணா!  சித்தம்போக்கு சிவன்போக்குடா உனக்கு!  ஒழுங்கா சாப்பிட வந்துதொலை!  சமையல் வாசனை மூக்கைத் துளைக்குது.  வெங்காய சாம்பார் மணம் என்னை அப்பிடியே தூக்குது!” என்று உண்ணவிருக்கும் திருமணவிருந்தையே எண்ணி மகிழ்ந்தவாறே முன்சென்றான்.

    எனது பாடல் அவன் காதுகளில் விழவேயில்லை.  பசியினால் அவனது காதுகள் அடைத்துப்போயினவா, அல்லது, “வயிற்றுக் குணவு இல்லாதபோது செவிக்கும் சிறிது ஈயப்படும்” என்ற அவனது சித்தாந்தமா என்று நானறியேன்.

    அந்த நீலத்தேரின் நடையழகை, துவளும் இடையழமை இரசித்தவாறே நடந்தேன்.

    அழகு, அழகு கொள்ளையழகு.  மனதிற்குள்ளும், உடலுக்குள்ளும் ஏதோ ஓர் இனம்புரியாத கிளர்ச்சி.  அவள் நடக்க நடக்க, நெளிந்தாடும் பாம்பையொத்த குஞ்சலம் வைத்த பின்னல் என்னைக் கட்டியிழுதத்தைச் சொல்லவா, பக்கவாட்டில் அசையும் பின்னழகில் நான் கிறங்கி அதற்கேற்ப என் தலையை என்னையும் அறியாமல் ஆட்டி மகிழ்ந்ததைச் சொல்லவா, அலையலையாக வளைந்திருந்த கருங்குழலில் என் இரும்பு மனம் பழுக்கச் சிவந்து வளைந்ததைச் சொல்லவா?  என் மனம் என்னை விட்டுவிட்டு அவளுடன் நடைபயின்றது.

    “கருங்குழலி என்பது ஆகுபெயர் புறத்துப்பிறந்த அன்மொழித்தொகை” என்று தமிழாசிரியர் கற்பித்த இலக்கணம் நினைக்காமலே என் நினைவுக்கு வந்து, இலக்கணத்திற்கு எடுத்துக்காட்டான அழகி இவள் என்ற எண்ணத்தை என் மனதில் இழையோடவிட்டது.

    அப்பொழுது எதிர்பாராவண்ணம் திரும்பிய நீலத்தேர் தன் முத்துப்பற்கள் தெரிய புன்னகை செய்தாள்.  நான் அங்கேயே ஏன் மயங்கிவிழவில்லை என்று எனக்கே தெரியவில்லை.

    நடுவில் சீரான, நேர்கோடான வகிடு, அதிலிருந்து இருபுறமும் வளைந்துவளைந்து செல்லும் கரிய கேசம் காதுகளைப் பாதி மூடியவண்ணம் பின்சென்று மறைந்தது.  மணிபதித்த நெற்றிச்சுட்டி, காதில் குண்டலங்கள் அவள் திரும்பியதால் ஆடிய ஆட்டத்தை இன்னும் நிறுத்தவில்லை.  அந்த ஆட்டத்தில் நான் அக்குண்டலங்களோடு ஊஞ்சலாடினேன்.

    சாயமே இல்லாமல் இலேசாகச் சிவந்திருந்த உதடுகளில் உள்ள ஈரப்பசையில் என் உள்ளம் அட்டையாக ஒட்டிக்கொண்டது.  இயற்கையாகவே சிவந்திருக்கும் உதடுகளை முதன்முறையாக அப்பொழுதுதான் பார்த்தேன்.  அதுவரை – உதடுகள் கடவுளால் உருவாக்கப்பட்டதற்குக் காரணம் – மண்டையோடுமாதிரி நமது பற்கள் மாதிரி வெளியே தெரியாமலிருக்கவும், பேசுவதற்காகவும், உண்ணுவதற்காகவும், நமது வாயைத் திறக்கவும், மூடவும் — அதற்குமேல் அவற்றைப்பற்றி சிந்திக்கவும் தேவையில்லாத உறுப்புகள் அவை என்பதைத்தவிர வேறெந்த எண்ணமும், என்னைப்பொருத்தவரை என் மனதில் தோன்றியதில்லை.

    ஆனால், முகத்திற்கு அழகுசேர்க்கும் — கண்களுக்கு இணையான — அவள் கண்களைப்பற்றி அடுத்தபடி சொல்லுகிறேன் – உள்ளத்தைக் கவ்வியிழுக்கும் உறுப்பு என்ற எண்ணம் முதன்முறையாக என்னிடம் எழுந்தது.

    அவள் என்னைப் பார்த்துத்தான் புன்னைகை செய்கிறாள், உடனே அவளருகில் செல்வோம் என்ற எனது ஆர்வத்திற்கு அணைபோட்டேன்.  அடுத்தகணம் அப்புன்னைகை எனக்கல்ல, என்னைத்தாண்டி ஓடி அவளருகில் சென்று அவள் தோளில் உரிமையுடன் கையைப்போட்டுக்கொண்ட அவளது தோழிக்குத்தான் என்றறிந்ததும், என் உற்சாகம் ஈரப்பட்டாசாகப் பிசுபிசுத்தது.

    உடனே என்னையும் அறியாமல் ஒருவிதமான பொறாமை உணர்வும் தோன்றுவதை என்னால் தடுக்கமுடியவில்லை.

    “சாண்பிள்ளையானாலும் ஆண்பிள்ளை,” என்று எப்பொழுதும் என்னை உயர்த்திப்பேசும் என் பாட்டியின் சொற்கள் என்மனதில் ஆழமாகப் பதிந்திருந்தாலும், பெண்ணாகப் பிறந்திருந்தால், அந்த நீலத்தேரின் அருகில் சென்று பேசியிருக்கலாமே, அதிலும், அவளின் தோழியாகப் பிறந்திருந்தால், அவளின் தோளில் உரிமையாகக் கையைப்போட்டு, அவளுடன் சென்றிருக்கலாமே என்ற பொறாமைகலந்த நப்பாசை ஒருகணநேரம் என்னுள் தோன்றுவதையும் என்னால் தடுக்க இயலவில்லை.

    “இங்கே உட்காரலாமாடா, கண்ணா?  இங்கேதான் முதல்ல பரிமாறுவாங்க.  எதுவும் விட்டுப்போகாம கிடைக்கும். என்ன, சரியா நான் சொல்றது?” என்று தனது உணவுப்பந்தி நுணுக்கத்தை எடுத்துக்காட்ட முயன்றான் என் மாமன் ராஜு.

    “இருடா ராஜு, இங்கே வேண்டாம்.” என்று என்னையும் அறியாமல் என்னிடமிருந்து பதில் வந்ததும், என்னை வியப்புடன் பார்த்தான் ராஜு.

    “என்னடா ஆச்சு கண்ணா, உனக்கு?  பித்துப் பிடிச்சுடுச்சா?  இந்த இடத்துக்கு என்ன குறைச்சலாம்? கொஞ்சநேரமா உன் போக்கு சரியாவே இல்லே!” என்று தன் அதிருப்தியைக் தெரிவித்துக்கொண்டான்.

    “அங்கே வாடா, போகலாம்,” என்று நீலத்தேர் — வேண்டாம், நீலக்குயில் என்று சொல்லலாமே இனிமேல் – அவள் உட்கார்ந்த இடத்தைநோக்கி விரைந்தேன்.  அவளும், அவள் தோழியும் அமர்ந்த இடத்திற்கு எதிரில் அமர்ந்தேன், அங்கு அமரமுற்பட்ட ஒரு முதியவரை முந்தித் தள்ளிக்கொண்டு.

    “ஏண்டாப்பா தம்பி, நான்தான் இங்கே உட்கார வரேன்னு பார்த்தும், சினிமாக் கொட்டகைக்கு டிக்கெட் வாங்கப்போறவன்மாதிரி இடிச்சுதள்ளிண்டு உட்காரறியே?” என்று முதியவர் கேட்டது என் காதில் விழவேயில்லை.  அந்த நீலக்குயில்தான் என்னில் நிறைந்திருந்தாள்.

    “வரவர இந்தக்காலப் பசங்களுக்கு மரியாதை மட்டு எதுவும் இல்லாமப்போச்சு!” என்று குறைப்பட்டுக்கொண்டவாறே நகர்ந்தார் அம்முதியவர்.

    என்னை என் நீலத்தேரின், நீலக்குயிலின், நீலாயதாட்சி தேவியின் தரிசனத்திலிருந்து தடுத்தது ஓருருவம்.  அதை என் இடதுகையால் விலக்க முற்பட்டேன்.

    பட்டென்று என்முதுகில் ஒரு அடி விழுந்தது.  நிமிர்ந்துபார்த்தேன்.  என் மாமன் ராஜு.

    “உன்னை நம்பி வந்தால் நீ சுப்பிரமணியசாமி மயில்வாகனத்தில் உக்கார்ந்தமாதிரி இங்கேவந்து உக்காந்திருக்கே!  எங்கேயும் இடமில்லே, நகருடா கொஞ்சம்,” என்றபடி என்னை தம் பிடித்து நகர்த்தி, தானும் என்னருகில் அமர்ந்தான்.  அதையும் நான் உணரவேயில்லை. என் மனதைக் கவர்ந்த தேவியின் தரிசனத்தில் மீண்டும் ஆழ்ந்தேன்.

    அவள் தன் தோழியுடன் ஏதோ பேசிக்கொண்டிருந்தாள்.  எதையோ சொல்லிவிட்டு, மறுதலிப்பதுபோலத் தலையை இங்குமங்கும் ஆட்டினாள்.  உதட்டைச் சுழித்துக்கொண்டாள்.  அப்பொழுது அவள் காதில் சுழன்றாடிய குண்டலங்களைப் பார்த்துப் பொறாமைப்பட்டேன், நான் அவளது குண்டலங்களாக இல்லாதுபோனேனே என்று.

    அவளது கண்கள் – ஆகா, பால்கிண்ணத்தில் நீந்தும் கருவண்டுகளாக அவளது கருவிழிகள் இங்குமங்கும் அலைந்தன.  ஒருதரம் பார்த்தாலேபோதும், உடனே பார்த்தவரைத் தன்னிடம் ஈர்த்துக்கொண்டுவிடும் அகண்ட கருவிழிகள்! அவ்விழிகளைப் பார்த்து அக்கடைக்கண் அமுதைத் தவிர வேறு எதுவும் வேண்டாம் என்று எண்ணச்செய்யும் கருணைததும்பும் விழிகள்.

    அப்படிப்பட்ட அவ்விழிகள், அவளையே அள்ளிப்பருகிக்கொண்டிருக்கும் என்மேல் வந்து ஒருகணம் நிலைத்தன.  அதில் ஒரு சிறுபகுதிநேரம் என் கண்களுடன் கலந்தன.  அப்பொழுது அக்கண்களில் தெரிந்தது நாணமா, அன்பா, பாசமா, எதிர்பாரா திடுக்கிட்ட உணர்வா – அந்த அரைக்கண நேரம் எனக்கு ஆயிரம் யுகங்களாக — அசையாமல் நின்றுவிட்ட காலத்தின் இறுதியாகவே என்னால் உணரப்பட்டது.  அந்த அரைக்கணம் என்வாழ்விலேயே மறக்க இயலாத அரைக்கணம்; என் நினைவைவிட்டே அகலாத அரைக்கணம்; என்றென்றும் என்னைவிட்டு நீங்காத அரைக்கணம்; என் துன்பம், இன்பம், கோபம், தாபம், மகிழ்வு, இகழ்வு இவையனைத்தையும் மறக்கடித்துப் பேரின்பத்தில் ஆழ்த்தி முழுகடிக்கும் அரைக்கணம்.

    அவளது இதழ்கள் பிரிந்து மலர்ந்தன.  உடனே நாணத்தில் அவள் தலைகவிழ்ந்தாள்.

    நான் இன்பவெள்ளத்தில் திளைத்துத் திக்குமுக்காடினேன்.

    சுர்ரென்று புறங்கையில் சூடுவைத்ததைப் போன்ற உணர்வு என்னை துன்பக்கரையில் கொண்டுசேர்த்தது.

    “ஏண்டா, கண்ணா!  இலையைக் கவனிக்காமல் என்ன பார்வை, இங்குமங்கும்?  இப்பவே, மனசை அலையவிட்டால், நீ எங்கே படிச்சு உருப்படறது?  கொதிக்கற சாம்பாரைக் கையில் ஊத்தினாலும் திரும்பாம என்ன பார்வை?  இலையைக் கவனிடா!  உன்னை வைத்து பாப்பா [என் அம்மா] எத்தனையோ மனக்கோட்டை கட்டிக்கொண்டிருக்கிறாள், அதை மண்கோட்டையாக்கிவிடாதே!” என்று எரிந்துவிழுந்தார். என் மூத்த மாமா முத்துராமலிங்கம்.  உறவினர் திருமணம் என்பதால், பரிமாறும் பொறுப்பையும் தானாக இழுத்துப் போட்டுக்கொண்டவர், தன்னைமறந்த என் நிலைமையைக் கவனித்திருக்கிறார்.

    திடுக்கிட்டு சுய உணர்வுக்கு வந்தேன்.  என் இனிய கனவை – பேரின்ப அனுபவத்தை –வித்தியாசமான என் முதல் உணர்வை – ஒருபெண்ணிடம் லயித்த எனது முதன்முதல் கன்னிக்காதல் உணர்வைக் கலைத்துவிட்ட பெரியமாமா அடுத்த இலைக்குமுன் அமர்ந்திருந்த என் சின்னமாமன் ராஜுவுக்கு பரிவுடன் சாம்பாரிலிருந்து காய்கறித்துண்டங்களை எடுத்துப்போட்டுக்கொண்டிருந்தார்.

    அதற்குமேல் எனக்கு உணவில் கவனம் செல்லவில்லை.  எழுந்துவிட்டேன்.

    அப்பொழுது அவள் என்னைப் பார்த்த பார்வை —  ஏன் எழுந்தாய் என்பது போலும் இருந்தது, இல்லாமலும் இருந்தது.  அந்த ஒருகணத்தில் “நானிருக்கப் பயமேன்?” என்று அருள்புரியும் தேவியின் கடைக்கண் பார்வையைபோலவும் இருந்தது.

    “ஏண்டா கண்ணா, எழுந்திட்டே?” என்று வினவிய என் சின்னமாமனிடம், “பசி தீந்து போயிட்டதுடா, ராஜு.  இனிமே எதுவும் வேணும்னு தோணலே!”  என்று என் நீலத்தேரை, நீலக்குயிலை, நீலாயதாட்சித் தேவியைத் திரும்பிப்பார்க்காமல் நடந்தேன்.

    உள்ளம் கனத்தது.  அவளைத் திரும்பிப்பார்க்க என்மனதில் திராணியில்லை.  அவளது உருவம் என் நெஞ்சில் கற்சிற்பமாக காலம்காலத்திற்கும் அழியாதவண்ணம் செதுக்கப்பட்டதைமட்டுமே என்னால் உணரமுடிந்தது.  அவளை என் இறுதிமூச்சு உள்ளவரை மறக்கமுடியாது என்பதும் தெரிந்தது.  அதுவொரு சுகமான அனுபவமாகவும், என்னைப்பொருத்தமட்டில் ஒருகணத்தில் உலகையே புறட்டிப்போடவைத்த புத்துணர்ச்சியாகவும் இருந்தது.

    காதல் பக்தியாகப் பரவசமெடுத்தது.

    ஆண்டுகள் பல கழிந்துவிட்டன.  எத்தனையோ அழகிகளைக் கண்டுவிட்டேன்.  அவர்களின் முகம் என் நினைவில் இருப்பதில்லை.  அந்த நீலத்தேரின், நீலக்குயிலின், நீலாயதாட்சியின் – அவள் பெயர்கூட எனக்குத் தெரியாது — அதற்குப்பிறகு அவளை என்வாழ்வில் நான் சந்திக்கவும் இல்லை.  ஆயினும், ஒருசில நிமிடங்களே பார்த்த அவளது முகம், அவளது  திருவுருவம் காதல் ஓவியமாக, காதல்தெய்வமாக, அருள்பாலிக்கும் தேவியாக என் நெஞ்சில் நீக்கமற நிறைந்திருக்கிறது.  அவளைப் பார்த்த நிகழ்வு என்னைப்பொருத்தவரையில் ஒரு தேவிதரிசனமாகவே நெஞ்சில் குடியிருக்கிறது — அவள் என்னுள், என் உயிரில், என் உணர்வில் ஒன்றிவிட்டாள்.  அவளைக் காண முடியவில்லையே என்ற ஏக்கம் என்னுள் எப்போதும் தோன்றியதே இல்லை.  ஏனெனில், என்னைப் பார்த்துப் புன்னகைசெய்த அரைக்கணத்தில் — என் கண்ணோடு கலந்த அந்த அரைக்கணத்தில் என்னுடன் ஒன்றாகிவிட்டாள்.

    என்னுடன், என்னுள்ளே இருப்பவளை நான் ஏன் வேறு இடத்தில் தேடவேண்டும்?

    நான் மனம்தளரும்போதெல்லாம் அவள் என்னுள் இருந்து என்னைத் தேற்றுகிறாள்.  என் மனவலிமை குன்றி நான் தடுமாறும் சமயத்தில் ஊன்றுகோலாக உருவெடுக்கிறாள்.  என்றுமே நான் தனிமையை உணராதவண்ணம் என் வாழ்க்கைத்தோழியாக வடிவெடுக்கிறாள்.  என் தாய் இறந்தவுடன் எனது தாயாகவேமாறி என்றும் தாயன்பு செலுத்துகிறாள்.

    சுருங்கச் சொன்னால் அவள் எனக்கு ஒரு தெய்வமாகவே தென்படுகிறாள்.

    அவள் எங்கு இருக்கிறாளோ எனக்குத் தெரியவில்லை.  அரைக்கணத்தில் என்னுள் ஒரு நிறைவை நிலைநிறுத்திய அவள் சென்றவிடமெல்லாம் சிறப்பித்துவருவாள் என்றே எனக்குத் தோன்றுகிறது.

    என் காதல்தெய்வத்திற்கு, என் தேவிக்கு என் வணக்கங்கள்!

    ***   ***   ***

    Share
  • ‘இன்னம்பூரான் பக்கம்’- 1

    இன்னம்பூரான்

    சமுதாயமும், நீயும், நானும், அவரும்

    f956a23c-4711-4df9-ae1a-e4d27c8b84a4

    ‘உலகெங்கும் காணக்கிடைக்கும் இன்னல்களுக்கு தீர்வு காணமுடியவில்லையே; அவற்றின் சீற்றத்தைக் குறைக்கவும் கூட முடியவில்லையே’ என்று அங்கலாய்க்கும் தென்னாப்பிரிக்க சிந்தனையாளர் டாக்டர் தேவி ரஜப் அவர்கள் இளைய சமுதாயம் வீண் சிந்தனைகளிலும், காழ்ப்புணர்ச்சியிலும் காலம் கடத்துவதை கண்டு வருந்துகிறார். அது, சமூக விரோதிகளின் நாசகார பன்முகங்களை கண்டுகொள்ளாததால் விளையும் அவலங்களை தடுப்பதை, குலைக்கிறது என்கிறார் (Confluence: Feb 2016). அத்தருணம் ஒரு ஹிந்து மெய்யறிஞர், ‘இந்த மதமோ, அந்த மதமோ, எந்த மதமாயினும், (நாத்திகத்தின் பல உட்பிரிவுகள் உட்பட) அதன் விசுவாசிகள் தங்கள் நம்பிக்கை மட்டுமே உண்மை என்று அடித்துக் கூறுவதால் அபாயம் ஏற்பட்டுவிடுமே என்று அஞ்சுகிறார். அவர் விடுத்த எச்சரிக்கை: மனிதம், சுதந்திர உலகம் ஆகியவற்றை காப்பாற்ற, எந்த விதமான மதாபிமானத்தையும் புறக்கணிக்காமல், ’ அப்பா! இதற்கு கடவுளின் துணை நாடாதே (Not in God’s name!) என்றதை வழிமொழிகிறார்.

    உலகசமுதாயம் பெரிது; கணக்கற்ற வாழ்வியல்கள். சற்றே சிறியதான தேசாபிமான சமுதாயமும் அப்படித்தான் என்றாலும், நாட்டுப்பற்று ஒரு தொப்பிள் கொடி. இந்தியா இதற்குரிய உதாரணம். அதன் பல பகுதிகள்- அருணாச்சல பிரதேசத்திலிருந்து ஆண்டிப்பட்டி வரை- இமாலயத்திலிருந்து திருவிதாங்கூர் வரை, தனது தனித்துவ சமுதாய பண்புகளையும், இந்திய கலாச்சாரத்தை போற்றும் வகையிலும் இயங்கி வருகின்றன. மனித இனம் என்பதால் முரண்களுக்கு பஞ்சம் இல்லை.

    உலகெங்கும் சமுதாய அநீதிகள் காலம் காலமாக கோலோச்சுவதும், அவை தோன்றி மறைவதும் கண்கூடு. ஆனால், மேல்மட்டம் கண்களை மூடிக்கொள்வார்கள். ஆஃப்ரிக்க நாடுகளில் பெண்கள் தாழ்த்தப்படுவதும், துன்புறுத்தப்படுவதும், பழங்குடி சண்டைகளும் காணக்கிடைக்கின்றன. நான் பட்டியலிட்ட அவலங்கள் தமிழ்நாட்டுக்கு மட்டும் ஏகபோக உரிமையல்ல. நான் மற்ற மாநிலங்களிலும் கண்டிருக்கிறேன். டில்லியின் மேல்மட்டத்தில், தலைக்கூத்தல், (முதியவர்களை 26 வகைகளில் ஒன்றில் கொன்று விடுவது) பெண்சிசுவதை, கந்து வட்டி, கட்டப்பஞ்சாயத்து ஆகிய நான்கு அவலங்களும், மற்றும் பல சமூகவிரோதங்களும் பரவலாகத்தான் இருந்தன, இருக்கின்றன. சொத்து களவாடவேண்டி, செல்வந்தர்கள் வீடுகளில் தலைக்கூத்தல் மாதிரி முதியவர்கள் குறி வைக்கப்பட்டது உண்டு. உசிலம்பட்டி சிசுக்கொலையை விட, டில்லியில் அதிகம். 1965 -1990களில் ரயிலில் வந்தால், இருபக்கமும் செக்ஸ் டெட்டர்மினிஷன் விளம்பரங்கள் . மெத்தப்படித்த கொலைகார டாக்டர்கள் தான், சட்டத்தை அவமதித்து, இன்றைக்கும் சேலத்தில் கூட சிசு வதை செய்திருக்கிறார்கள், அரசு விளம்பரங்கள் அலறும் போதும். இத்தனைக்கும் ஏற்கனவே தண்டிக்கப்பட்டவர்கள். சில மாநிலங்களில் கந்துவட்டி கொடுக்கமுடியமால் தற்கொலைகள் இன்று கூட நடக்கின்றன. தமிழ் நாட்டில் ஒரு பிரபல செல்வந்தர் கூட தற்கொலை செய்து கொஞ்சம் பழைய செய்தி. பீஹார், உத்தர் பிரதேஷ் கட்டப்பஞ்சாயத்துக்கள் உயிர்க்கொல்லிகள். ஒடிஷாவின் நெற்களஞ்சியமான காலகண்டியில் ஏழை வயிற்றில் மண்.

    நான் பாலபருவத்தில் கண்டு கலங்கிய வறுமையின் பூதாகாரம் யாருக்கும் புரியவில்லை. அரைப்பட்டினியில் ஐம்பது நாட்களாவது வதங்கியவர்களுக்குத் தான் அதன் வலி புரியும். நான், சொந்த அனுபவத்தாலும், நாடு முழுதிலும் பணி புரிந்திருந்ததாலும், கிராமங்களுக்கு அடிக்கடி செல்லவேண்டி இருந்ததாலும், இவற்றை அறிவேன்.

    இந்தியாவில் ஒரு புரட்சி வந்தே தீரும் என்று, இந்தப் பின்னணியில் பலதடவை எழுதியிருக்கிறேன். எனது ஆசானாகிய தமிழ்த்தென்றல் திரு.வி.க. அவர்களும், நானும் பல கோணங்களில் மார்க்சிஸ்ட் தான். இதை படித்த பின் புரியும்.

    ‘…புரையோடிப்போன சமூகத்தை மொத்தமாய் புரட்டிப்போடுவதற்குப்பெயர் தான் புரட்சி…83 ஆயிரம் சதுரமைல் பரப்பளவு கொண்ட ஹைதராபாத் சமஸ்தானத்தில் மூன்று மாவட்டங்களின் நிலம் பத்துப்பதினைந்து சுவான்தார்களுக்குச் சொந்தம். விஷ்ணுப்பூர் தேஷ்முக்: 40 ஆயிரம் ஏக்கர்: சூர்யாபேட் தேஷ்முக்: 20 ஆயிரம்: கல்லூர் தேஷ்முக் ஒரு லக்ஷம்…இந்த பண்ணையாளர்கள் விவசாயத்தொழிலாளிகளை நாயினும் கேவலமாக நடத்தினர். கூலியே இல்லாமல் வேலை கட்டாயம். ஐந்து பேருக்குக் கொடுக்கும் கூலி ஒரு ஆள் சாப்பிடக்கூட காணாது. கூலி கேட்டால் கடன். மன்னிக்கவும் குட்டி வட்டி, கந்து வட்டி; பல்லக்குத்தூக்க வேண்டும்; குதிரை வண்டி முன்னால் ஓடவேண்டும்; சமையல், சலவை, நாவிதம் எல்லாம் இலவசம். பண்ணையாருக்கு கால் அமுக்கி விடவேண்டும்; விருப்ப நாயகிகள் தரவேண்டும், மனைவிகளை…அதில் பந்தாட்டம் உண்டு. வரதக்ஷிணையில் அடிமைப்பெண் உண்டு. (கொஞ்சம் சுருக்கினேன், பெரும்பாலோர் இத்தகைய கசப்பு செய்திகளை படிக்கமாட்டார்களே என்று.) (ஆதாரம்: ஜூனியர் விகடன்: 3.2.16)

    மேற்படி மனித உதாசீனங்கள் தஞ்சை டெல்டாவில்- வாண்டையார், வடபாதி மங்கலம், சாம்பசிவ அய்யர் (கொஞ்சம் நல்லவர் என்பார்கள் விவசாயிகள்), குருதி வெள்ளம் எல்லாவற்றிலும் உண்டு. நான் வாழ்ந்த மதுரை பக்கத்திலும் உண்டு, கொஞ்சம் டிஃஃபெரண்ட் பார்முலா. சொன்னால் பொல்லாப்பு. சாதியை சாடுகிறான் என்பார்கள். ஆனாலும் ஏழைக்கு சாவு மணி தான். ஏன் தலைக்கூத்தல் நடக்காது? முதலாளியை கொல்லமுடியாது. அப்பனுக்கும் ஆத்தாளுக்கும் போட ஒரு சோறு இல்லை. பொட்டுத்துணி இல்லை. பசங்க வள வள. எல்லாம் பட்டினி, அழுகை. மருத்துவம் கேள்விப்படாத உண்டு. ஏழ்மை இல்லை; வறுமை இல்லை; வரட்சி இல்லை; இல்லாமை, ஐயா.

    எழுபது வருடங்களுக்கு முன்னால் நான் கண்ட அவலங்கள் இன்றும் நடக்கின்றன, தமிழ்நாட்டில், நடத்தப்படுகின்றன. சமுதாயத்தின் விரோதி சமுதாயம் தான். அதையெல்லாம் விட்டு விட்டு…இதற்கு மேல் எழுத இன்று சக்தியில்லை.
    -#-
    சித்திரத்துக்கு நன்றி:
    http://fscomps.fotosearch.com/compc/CSP/CSP017/k20722685.jpg

    இன்னம்பூரான்

    Share