Blog

  • சுமைதாங்கி

    க. பாலசுப்பிரமணியன்

     

    பூவுக்குள் வாசம் தேடிப் புவியெல்லாம் வளைத்தேன்

    புன்னகையின் பொருள் தேடி நாளெல்லாம் விழித்தேன்  !!

    பூங்காற்றில் புலன் தொலைத்துப் பொசுக்கிடும் உறவில் துடித்தேன்,

    பொல்லாத மனத்திற்குள் பொழுதெல்லாம் நடித்தேன்!!

     

    பொருள் நாடி, புகழ்  நாடி

    பூவையர்தம் உளம் நாடி,

    கானல் நீராய் எதையெதையோ நாடி

    கனவுக் கானகத்தில் காலத்தை தொலைத்தேன்!!

     

    தேடுதலும், நாடுதலும், வாழ்வின் வாடுதலோ?

    கூட்டுதலும் கழிப்பதுவும் பொய்மையைப் போற்றுதலோ?

    அன்பைப் பெருக்குதலும், பண்பை வகுப்பதுவும்

    வாழ்வில் மேன்மையை நாடுதலோ?

     

    இருப்பது இருப்பதாய் இருப்பதுவே

    அமைதிக்குச் சான்றிதழோ?

    இல்லாத இருப்பையே இமைகளுக்குள்

    சுமப்பதுவே சோகத்தின் முன்னுரையோ?

     

     

    Share
  • கேசவ் வண்ணம் – கிரேசி எண்ணம்

    ”செட்டிப் புண்ணியத்தில் எழுந்தருளியுள்ள ஹயக்ரீவர்”
    —————————————————————————————————
    c6dc75a0-f266-4de9-86b4-67b8b8699ef7
    நிகமாந்த தேசிகன் நாவில் அமர்ந்து
    புகழ்வாய்ந்த பாதுகையைப் பாடி -அகமகிழ்ந்த,
    எண்ணியதை நல்கும் ஏற்றம் தரும்செட்டிப்
    புண்ணியத்தில் வாழும் பரி….

    புண்ணியச் செட்டியில் புண்ணாக்(கு) அளித்தனரோ
    நண்ணிய(து) ஏனங்கு நாலுகாலில் -கண்ணனே
    பாரதப் போரில் பழகிய நன்றியோ
    நீரதைப் போலின் நிலத்து….

    கொள்ளுக்(கு) அடங்காய் கவிதே சிகன்கூறும்
    சொல்லுக்குள் பாயுமுயர் ஜாதியே -கல்விக்கு
    வாய்த்த கடவுளே வாணி அரிதாரா
    போய்த்தவம் செய்யப் பழக்கு….

    கட்டுக்(கு) அடங்காது செட்டிக்குப் புண்ணியத்தை
    கொட்டுமருள் கல்விக் குதிரையே -குட்ட
    குளம்பால் தலையில் குருவே வருக
    தளும்பா அறிவைத் தர….

    புல்லும், படிகநீரும், புண்ணாக்கும் கொள்ளும்நான்
    அல்லும் பகலும் அளித்திடுவேன் -மெல்லும்
    தலம்செட்டிப் புண்ணியத்தில் தங்கும் பரியே
    பலனெட்டெட் ஆயகலை போடு….

    ஊர்செட்டிப் புண்ணியத்தில் உய்யும் அசுவமே
    மார்தட்டிச் சொல்லும் மடையன்நான் -சீர்கொட்டும்
    வெண்பாக்கள் யாத்துன்மேல் வாழும் வரமருள
    பெண்பால் பாரதியே பார்….

    சண்டித் தனமாய் சகத்தில் உழல்கின்ற
    நொண்டிக் குதிரைநான் நாரணா -அண்டி
    வருவாய் அருகே குருவாகிக் காட்டு
    பரிமேல் அழகா பரிவு….கிரேசி மோகன்….

    Share
  • கற்பித்தல் எளிது – ஆளுமை பயிற்சி முகாம்

    உயிர் விகாசம் அடைந்தால் உடல் நோயில்லாமல் இருக்கும்.
    நாம் துருப்பிடித்து அழிவதை விடத் தேய்ந்து அழிவது நன்று.
    நாம் அனைவரும் இப்போது இருக்கும் திறமையை போல் இன்னும் 14 மடங்கு அதிகமாக உழைக்கும் திறமையை பெற்றவர்கள்.
    வாழ்வியல் பயிற்றுநர் பேச்சு

    தேவகோட்டை – சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் அரசு உதவி பெறும் நடுநிலைப் பள்ளியில் ஆசிரியர்களுக்கான கற்பித்தல் எளிது என்கிற ஆளுமை பயிற்சி முகாம் நடைபெற்றது.

     

    தேவகோட்டை

    பயிற்சிக்கு வந்திருந்தோரை ஆசிரியை முத்து லெட்சுமி வரவேற்றார். பள்ளி தலைமை ஆசிரியர் லெ. சொக்கலிங்கம் தலைமை தாங்கினார். ஸ்ரீ சேவுகன் அண்ணாமலை கலை மற்றும் அறிவியல் கல்லூரி முதல்வர் சந்திர மோகன், பேராசிரியர் கண்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மதுரை வாழ்வியல் பயிற்றுநர் விஸ்வநாதன் ஆசிரியர்களுக்குப் பயிற்சி அளித்துப் பேசும்போது ஆசிரியர்கள் அனைவரும் எப்போதும் எளிதாக நல்ல உடல் நலத்துடனும், மன நலத்துடனும் இருக்கலாம்.நீங்கள் முதலில் மாணவர்களுக்குப் புரிவது மாதிரி சொல்லி கொடுங்கள்.

    நாம் பிறந்தது முதல் கேட்க மட்டுமே பழகி உள்ளோம். வார்த்தைகளால் சொல்வதை காதால் மட்டும் கேட்காமல் வார்த்தைகளால் சொல்வதை தாண்டி கண்ணால், மூளையால், இதயத்தால் புரிந்துகொண்டால் சொல்வது நன்றாகப் புரியும். நாம் சொல்வது விரிவாக இருந்தால் கேட்பவர் மனம் சொல்வதை ஏற்கவில்லை என்றால் அடுத்தவர் சொல்லும் தகவல் நமக்குக் கேட்க கூடாது என்று தானாகவே கத்தியைக் காது எடுத்துக்கொள்ளும்.

    மூச்சுதான் நமது வாழ்க்கையை நிர்ணயிக்கிறது.பிடிக்காத வேலையைச் செய்தால் மூச்சு ஈரமாக இருக்கும். உடல் பாதுகாப்பாக இருக்கிறது. உயிர் விகாசமாக இருந்தால் தான் வாழ்கையில் மகிழ்ச்சி கிடைக்கும்.நாம் அனைவரும் நமது திறமையை போல் 14 மடங்கு அதிகமாக உழைக்கக் கூடிய ஆற்றலைப் பெற்றவர்கள். அவ்வாறு நாம் உழைக்கவில்லை என்றால் நம் உடல் விடும்.அதனால் பல்வேறு நோய்கள் நமக்கு வந்துவிடும்.எனவே நாம் துருப்பிடித்து அழிவதை விடத் தேய்ந்து அழிவது நன்று.

    உடல் உறுப்புகளுக்குத் தேவையான 5 வகை சுவைகள்:
    நம்முடைய உடலில் உள்ள ஒவ்வொரு உறுப்பும் ஒரு சுவையை விரும்பும்.மொத்தம் 5 வகையான சுவைகள் நமது உடம்பு நன்றாக இயங்குவதற்குத் தேவைப்படுகிறது. இவைதான் ஐந்து பூதங்கள் என்று அழைக்கப்படுபவை ஆகும். ஆசிரியர்களுக்கு நுரையீரல் நன்றாக இருக்க வேண்டும். நுரையீரல், பெருங்குடல், தோல் ஆகிய உடல் உறுப்புகள் நன்றாகச் செயல்பட காரம் சாப்பிட வேண்டும். காது, பல், நகம், சிறுநீரகம் , எலும்பு ஆகிய உடல் உறுப்புகள் உப்பு சாப்பிட்டால் நன்றாக இருக்கும். உப்பு என்றால் நாம் சாப்பிடும் உப்பு கிடையாது. இளநீர் போன்ற பொருள் சாப்பிடும்போது சுவை கொடுக்கும் உப்பு ஆகும். கல்லீரல், கண், பித்தப்பை போன்ற உடல் உறுப்புகள் ஆற்றலுடன் செயல்பட புளிப்பு சுவை சாப்பிட வேண்டும். இதயம், மூளை, நாக்கு,ந மது ஈகோ நன்றாகச் செயல்பட கசப்பு, துவர்ப்பு நன்றாகச் சாப்பிட வேண்டும். மண்ணீரல், இரைப்பை, வாய் போன்ற உடல் உறுப்புகள் நன்றாகச் செயல்பட இனிப்பு சுவை சாப்பிட வேண்டும். இவ்வாறு 5 சுவைகளையும் அவற்றின் தேவைக்கு ஏற்ப சாப்பிட்டாலே எந்த பாதிப்பும் வராது. இந்த 5 சுவைகள் காரம், உப்பு, புளிப்பு, நெருப்பு, இனிப்பு ஆகிய ஐந்தும் காற்று, நீர், ஆகாயம், நெருப்பு, மண் ஆகிய 5 பூதங்களைக் குறிக்கும்.

    ஆசிரியர்கள் அனைவரும் விதைகள் போன்றவர்கள்.விதைகளுக்குள் பல மரங்கள் இருப்பதைப் போல் ஆசிரியர்களும் பல மாணவர்களை வளர்க்கிறார்கள். ஆசிரியர்களால் தான் இந்தச் சமூகத்தை மாற்ற முடியும். எனவே நீங்கள் அனைவரும் உச்ச எல்லை திறனை வெளிப்படுத்திச் செழுமைப்படுத்தினால் உங்களின் வாழ்க்கை உயரத்தைக் கூட்டும் .உடலைப் பாதுகாப்பாக வைத்துக் கொள்வதற்காக பல்வேறு சுவாச பயிற்சிகளையும் சொல்லி கொடுத்தார். ஆசிரியர்கள் அனைவரும் ஆர்வமுடன் பயிற்சியில் பங்குபெற்றனர். கண்ணங்குடி உதவித் தொடக்க கல்வி அலுவலர் அடைக்கலராஜ் உட்படப் பலர் கலந்துகொண்டனர். ஆசிரியர் ஸ்ரீதர் நன்றி கூறினார்.நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை ஆசிரியை சாந்தி செய்திருந்தார்.

    பட விளக்கம் :தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் அரசு உதவி பெறும் நடுநிலைப் பள்ளியில் ஆசிரியர்களுக்கான கற்பித்தல் எளிது என்கிற ஆளுமை பயிற்சி முகாமில் வாழ்வியல் பயிற்றுநர் மதுரை விஸ்வநாதன் ஆசிரியர்களுக்குப் பயிற்சி வழங்கினார்.

    Share
  • கேசவ் வண்ணம் – கிரேசி எண்ணம்

     

    ’’வெண்பாகவதம்’’….
    ————————————-
    கூர்மாவதாரம்
    ——————–

    d6a268dd-423c-4547-b53b-9d6ce5ad646b

    ’’துர்வாசர் இட்ட தொடையை எறிந்திட
    கர்வாதி கத்தில் களிறின்மேல் -சர்வாதி
    காரத்தால் பெற்ற கடுத்தமுனி சாபத்தின்
    பாரத்தால் வானத்தோன் பாழ்’’….

    ’’சாப விமோசனத்தை, சாகரப் பாற்கடலை
    மாபெரும் மந்தார மத்தினால், -நீபெருவாய்
    வாசுகி தாம்பால் வளைத்துக் கடைந்திட;
    வாசுதேவன் விண்ணுக்கு வாக்கு’’….

    ’’வாசுகி உச்சியை வானோர் பிடித்திழுக்க
    ஆசு அசுரர் அதன்வாலில் -கோஷமிட
    மந்தார வெற்பன்று மூழ்குதலைத் தாங்கிட
    வந்தாராம் ஆமையாய் விஷ்ணு’’….

    ’’அப்போது பீறிட்ட ஆலகால நெஞ்சினை
    துப்பாது உண்ணாது தொண்டையில் -எப்போதும்
    கொண்டனன் சம்பு; கிளர்ந்த இலக்குமியைக்
    கொண்டனன் கூர்மம் கரத்து’’….

    ’’தன்வந்த்ரி தந்த திருக்கண் அமுதருந்த
    முன்வந்த தானவரை மோகினிப் -பெண்வந்து
    ஆசையைக் காட்டியவர் மோசமுற, விண்ணோரை
    ஈஷியிட்டார் விஷ்ணு இலை’’….கிரேசி மோகன்….

    Share
  • பழமொழி கூறும் பாடம்

    – தேமொழி.

    பழமொழி: நெடும்பகை தன்செய்யத் தானே கெடும்

     

    உற்றதற் கெல்லா முரஞ்செய்ய வேண்டுமோ?
    கற்றறிந்தார் தம்மை வெகுளாமைக் காப்பமையும்
    நெற்செய்யப் புற்றேய்ந்தாற் போல நெடும்பகை
    தற்செய்யத் தானே கெடும்.

    (முன்றுறையரையனார், பழமொழி நானூறு)

     

    பதம் பிரித்து:
    உற்றதற்கு எல்லாம் உரம் செய்ய வேண்டுமோ?
    கற்று அறிந்தார் தம்மை வெகுளாமைக் காப்பு அமையும்;
    நெல் செய்யப் புல் தேய்ந்தாற்போல, நெடும் பகை,
    தன் செய்ய, தானே கெடும்.

    பொருள் விளக்கம்:
    எதிர்கொள்ளும் இடர் ஒவ்வொன்றுக்கும் தன்னை வலிமை படுத்திக் கொள்வது தேவையா? சான்றோர்களைச் சினம் கொள்ளச் செய்யாமல் நன்னெறி வழி நடப்பதே தற்காப்பாக அமைந்து பகையை அழித்துவிடும் (கற்றறிந்த சான்றோர் தமக்கு ஏற்படும் சினத்தைக் கட்டுக்குள் வைத்தாலே பகையை வென்றுவிடலாம் என்றும் பொருள் கொள்ளலாம்). உழவு செய்து நெல்பயிரிடும் வயலில் நெல் செறிந்து வளர்ந்தால் அங்குள்ள புல் தானே அழிந்துபடும் (களை நீக்கவென தனியான முயற்சி எதுவும் தேவையில்லை). அவ்வாறே தீராத பகையும், ஒருவர் தன்னை வலிமைப்படுத்திக் கொள்வாரானால் தானே அழிந்துவிடும் (பகை ஒழிக்கும் நடவடிக்கை எடுக்காமலே, எதிராளியின் வலிமையை அறிந்து கொண்ட பகைவர் தாமே ஒடுங்கிவிடுவர்).

    பழமொழி சொல்லும் பாடம்: கற்றோருக்கு சினமூட்டி பகைத்துக் கொள்ளாமல் நன்னெறி வழி நடப்பவர்க்குச் சான்றோர் பலர் ஆதரவாளராக இருப்பதன் காரணமாக வலிமை மிகுந்தவராகவும் இருப்பார். வலிமை மிகுந்த அவரை எதிரிகள் தாக்கத் துணிய மாட்டார்கள். கற்றோர்கள் தங்கள் சினத்தைக் கட்டுப்படுத்தி சீராகச் சிந்திக்கும் திறன்மூலம், பதற்ற மற்றவர்களாய் தங்களை வலிமைப்படுத்திக் கொள்ளும் வழி அறிவர். அந்த வலிமை பகையை அழித்துவிட உதவும் எனவும் பொருள் கொள்ளலாம். தன்னை வலிமைப் படுத்திக் கொள்ளும் வகை அறிந்தவரிடம் பகைமை பாராட்டுபவர் இருக்கமாட்டார் என்பதை விளக்க விரும்பும் வள்ளுவரும்,

    வகையறிந்து தற்செய்து தற்காப்ப மாயும்
    பகைவர்கண் பட்ட செருக்கு. (குறள்: 878)

    வழிமுறைகளை அறிந்து தன்னை வலிமைப்படுத்திக் கொண்டு, தற்காப்பை ஏற்படுத்திக் கொண்டவரை எதிர்கொள்ள இயலாமல் பகைவரின் ஆணவம் தானே அழியும், பகையும் ஒழியும் என்கிறார்.

    Share
  • படக்கவிதைப் போட்டி … (52)

    பவள சங்கரி

    அன்பிற்கினிய நண்பர்களே!

    வணக்கம். கண்ணையும், கருத்தையும் கவரும் படமொன்றைக் கண்டவுடன் உங்கள் உள்ளத்தில் கவிதை ஊற்றெடுக்கும் திறமை கொண்டவரா நீங்கள்?

    12767778_963779777009555_639098695_n
    ராம்குமார் ராதாகிருஷ்ணன் எடுத்த இந்தப் படத்திற்கு ஒரு கவிதை எழுதுங்கள். இதனை நம் வல்லமை ஃப்ளிக்கர் குழுமத்தின் பொறுப்பு ஆசிரியர் திருமதி சாந்தி மாரியப்பன் தேர்ந்தெடுத்து அளித்துள்ளார்.

    இந்த ஒளிப்படத்திற்கு ஏற்ற கவிதையை நல்ல தலைப்புடன் பின்னூட்டமாக இடலாம். ஒருவரே எத்தனை கவிதைகள் வேண்டுமானாலும் எழுதலாம். வரும் சனிக்கிழமை (27.02.2016) வரை உங்கள் கவிதைகளை உள்ளிடலாம். அவற்றில் சிறந்த கவிதையை நம் வல்லமை இதழின் ஆசிரியர் குழு உறுப்பினர், கவிஞர் மதுமிதா தேர்வு செய்வார். ஒவ்வொரு வாரமும் சிறந்த கவிஞர் ஒருவர் தேர்ந்தெடுக்கப்படுவார். ஒருவரே பல முறை பங்கு பெறலாம். இவ்வாய்ப்பு சிறந்த கவிஞராகத் தேர்ந்தெடுக்கப்படும் கவிஞர்களுக்கும் உண்டு. 12 மாதமும் தேர்வுபெறும் ஒளிப்படக் கலைஞர் / கவிஞர்களிலிருந்து ஆண்டின் சிறந்த கலைஞரும், கவிஞரும் தேர்வு பெறுவார்கள். ஒளிப்படத்திலிருந்து தாக்கமும் தூண்டுதலும் பெற்று எழும் அசல் படைப்புகளை ஊக்குவிப்பதே இதன் நோக்கம். இது, கவிஞர்களையும் கலைஞர்களையும் கண்டறிந்து ஊக்குவிப்பதற்கான அடையாளப் போட்டி; வெற்றி பெறுபவர்களுக்குப் பரிசளிப்பு இருக்காது; பாராட்டு மட்டுமே உண்டு. ஆர்வமுள்ளவர்களைப் பங்கு பெற அழைக்கிறோம்.

    Share
  • படக்கவிதைப் போட்டி 51 இன் முடிவுகள்

    மதுமிதா

    12736466_960121290708737_181381344_n

    வணக்கம். இம்முறையும் தேர்ந்தெடுக்கப்பட்ட படமும், படத்துக்கான கவிதைகளும் சிறப்பாக இருக்கின்றன. முதல் பரிசு என்று தேர்வு செய்வது கடினமாக இருக்கும் வகையில் பங்கேற்பாளர்கள் எழுதுகின்றனர். ஒவ்வொரு முறையும் முன்பு நான் எழுதிய ஏதோ ஒரு கவிதையை நினைவு கூறச் செய்கின்றனர் படைப்பாளிகள்.

    செண்பக ஜெகதீசன்

    நடிப்பாய்…

    நாட்டை யாழும் மன்னனென
    நடையுடை பாவனை ஒப்பனையில்,
    பாட்டும் நடிப்பும் ஓங்கிடவே
    பலர்முன் கூத்தில் நடிப்பவனின்
    வீட்டு ஏழ்மை நிலையினையே
    வெளியே காட்ட முடிவதில்லை,
    நாட்டில் பலரின் கதையிதுவே
    நடிப்பாய்ப் போனது வாழ்வதுவே…!
    -செண்பக ஜெகதீசன்…

    செண்பக ஜெகதீசன் – கச்சிதம்

    ·
    மதிபாலன்

    தெருக்கூத்து

    நிழல் திரைப்படம்
    விழிகளில் நுழைந்து
    நம்மை
    சிறைப்படுத்தி விட்டது !
    நிஜம் இங்கே
    தெருவோரமாய்
    கேட்பாரற்றுக் கிடக்கிறது !
    கட்டை கட்டி ஆடும்
    கலைஞனின் அரிதாரம்
    கவர்ச்சியற்றுப் போனது !
    எட்டுக்கட்டையில் பாடும்
    அவனது பாடலை
    ரசிக்க ஆளில்லை !
    கணினி இசை
    நம்மைக் களவாடிவிட்டது !
    தெருக்கூத்தை
    திரைக்கூத்து
    தின்றுவிட்டது !
    கண்ணீர்த் துளியோடு
    காவியம் படைக்கிறான்
    உண்மைக் கலைஞன் .
    அவனைக்
    கண்டுகொள்ளாமல்
    படத்தில் லயிக்கிறான்
    இனறைய இளைஞன் !

    மதிபாலன் – உண்மை நிலையே இது.

    ·
    சரஸ்வதி ராஜேந்திரன்

    திரைக்கூத்தும் அரசியல் கூத்தும் இன்று
    தெருக்கூத்தாய் பவனி வருகிறது பாரம்பரிய
    தெருக்கூத்து பாதியிலேயே மறக்கடிக்கப்பட்டது
    வேஷம் பலவிதம் மோசம் சாசுவதமாகிப்போனது
    கோஷங்கள் போடுகிறார்சந்தடி சாக்கில் வருமானத்திற்கு
    ஆனாலும் நாட்டிற்கு நல்லது செய்ய எண்ணி
    ஆண் ஒருவர் ஓய்வு அடைந்தும் வேஷம் போடுகிறார்
    நங்கைகள் கூடும் இடத்தில் தாய்ப்பால் அவசியத்தையும்
    ஆடவர்கள் கூடும் இடத்தில் புகை பகை எனகூறி
    சத்தான பேச்சால் விழிப்புணர்வு தூண்டுகிறார்
    வித விதமான வேஷத்தால்,, ஏனெனில் ,மக்கள்
    வேஷத்தில் பழகிவிட்டார்கள் என்று ஆம்
    உலகமே ஒரு நாடக மேடை அதில்
    உலவும் மக்கள் எல்லோரும் நடிகர்கள்தானே
    தெருக்கூத்துப்போய் திருக்கூத்தாய் ஆனது கொடுமை

    சரஸ்வதி ராஜேந்திரன் – கூத்தையும் வாழ்க்கை நாடகத்தையும் ஒன்றாக இணைத்து உவமை நன்று.

    ·
    க.கமலகண்ணன் 

    நம் பாரம்பரியத்தின் அடையாளம்
    பங்குபெற ஒருவருமில்லை தற்போது
    ஒப்பில்லா கலைகள் பல காணவில்லை
    கவிதையாய் அனைத்தையும் பார்த்து வளர்ந்த
    அளவில்லா சிலர் கலைஞர்களாய் மாறிப்போன
    சிலிர்ப்பு மட்டும் உண்மை உள்ளம் சுடுகிறது
    மட்டற்ற கட்டபொம்மனும் சர்க்கரவர்த்திகளும் கெத்து
    களம் காட்டியதல்ல நேரடியாக பார்த்தது போன்று
    காணவில்லையே இப்போது இந்த தெருக்குகூத்து…
    – க.கமலகண்ணன்

    கமலகண்ணன் – இழப்பின் அவலத்தை பேசும் வரிகள்

    வேதா. இலங்காதிலகம்

    தமிழர்களின் பழங்கலை.

    இரண்டாயிரம் வருடங்களின் முன்னரான கலை
    புரண்டது கூத்தெனும் பெயரில் மாறுதலை-
    நாட்டிய நாடகம், தெருக்கூத்து கதையில்
    பாட்டு ஆடல், மேடையேற்றம் களரியில்.
    வண்ண ஆடை, பின்னணி இசையிசைத்து
    எண்ணும் விழிப்புணர்வுக் கருத்து, பக்தி
    பரப்பும் சீர்திருத்தமாக. கோமாளியாதார யுக்தி.
    உரப்பும் மனம் குரலின் சக்தி.

    வாழ்வாதாரத்திற்குக் கூத்தாடும் வறுமை நிலை
    தாழ்வு நிலைக்கின்று சினிமா கணனியலை.
    கட்டாரி கையில் ஏந்தி ஆக்ரோசமோ!
    கரடியை வனத்தில் கொல்லும் இராசாவோ!
    சுவையாகப் பார்த்து இரசிக்குமொரு கூட்டம்
    சபையாகத் தரையில் அமர்ந்தும் நின்றும்
    ஒரு பொழுது போக்கும் உழைப்போர்
    பெரும் ரசிகராய் ஆர்வமுடன் சுகிக்கிறார்.

    வரியாக்கம் வேதா. இலங்காதிலகம்.
    டென்மார்க்.
    20.2-2016.

    வேதா – இவரின் பாணியே அலாதியானது. சிந்தையிலும் எழுத்திலும் ஒவ்வொரு முறையும் வியக்க வைக்கிறார்.

    முதல் பரிசு – செண்பக ஜெகதீசன்

    அன்புடன்

    மதுமிதா

    23.02.1016

    Share
  • கேசவ் வண்ணம் – கிரேசி எண்ணம்

    வெண்பாகவதம்……(பாகவத்தை வெண்பா வடிவில் எழுதிக் கொண்டிருக்கிறேன்
    மூலம் -நாராயண பட்டத்திரியின் ஸ்ரீமத் நாராயணீயம்….)
    ———————————–
    பாத்திரங்கள் சம்பவங்கள் அனைத்தும்
    கண்ணனின் கற்பனையே….!
    —————————————————-

    பாக வதப்பழமது ஏகருசி ஆனது
    தேகம் ஒழித்தசுக தேவனவர் -நாகவண்ண
    மேனியன் லீலையை முன்னமே உண்டதனை
    ஞானி அவர்ரசித்த நூல்….
    ———————————————————-
    சுருதி ஒலிக்குள், பரிதி ஒளிக்குள்
    இறுதிமுதல் இல்லா இறைக்குள் -கருதி
    துதிக்கும் முனிவர்தம் தேடலுக்கு எட்டா
    ஸ்திதிக்குப் புகன்றேன் சரண்….

    புதைபா கவத விதைநா ரணனாம்
    அதன்வேர் பிரமன் அடிநா -ரதனாம்
    முனிவியாசன் அம்மரம் மூண்ட கிளைகள்
    கனிவாசு தேவன் கதை…

    d1363546-a941-4176-8b18-5cbbd0d76f84
    மச்சாவதாரம்
    ——————

    கோன்சத் தியவிரதன் கையபி ஷேகநீரில்
    மீன்சுத் திவந்து மிகப்பெரிதாய் -வான்பொத்தல்
    ஆகத் திமிங்கலமாய் ஆக அரசனும்
    தாகமென்ன கேட்டான் திகைத்து….

    ஞானியர்கள், ஜீவர்கள், தானியங்கள் ஜோடியாய்
    தோணியிட்டு வாசுகித் தாம்பினால் -ஆணியிடு
    உச்சியுள்ள கொம்பென்(று) உரைத்தது பாகவத
    மச்சா வதாரத்து மீன்….

    மனவா சுகியால் மனித கலத்தை
    வினையூழி நாளில் வலிக்க -உனைமீன்
    உருவில் இழுத்து உயர்நலம் சேர்க்கும்
    குருவின் மகிமை கருத்து….

     
    வருவித்த வெள்ளம் வடியும் வரையில்
    பிறவித் தலைவர் பிரமன் -தருவித்த
    தூக்கமவர் கண்மூட சாக்கென்று தானவன்
    தூக்கிச்சென் றான்வேதத் தை….

    தானவன் குதிரைத் தலையைத் துணித்தபின்
    மீனவன் மீட்டான் மறைநான்கை -மானவகேள்,
    தூங்குமயன் தாமசம், தீயரக்கன் ராஜசம்,
    தாங்குமீன் சத்வம் துணை….கிரேசி மோகன்….

    Share
  • கேசவ் வண்ணம் – கிரேசி எண்ணம்

    திவ்யப் பிரபந்தம் மாதிரி இது கேசவாழ்வாரின் திவ்ய BRUSH பந்தம்….அட்டகாசம்….கிரேசி மோகன் ….கேசவ் தொடரட்டும் உம் தூரிகைத் தவம்…ஒருநாள் கண்ணன் உம்வீட்டு காலிங் -பெல் அடிக்கப் போவது நிச்சயம் ….

    a3a9b8c8-0f82-4d5c-98f6-1e52fb4f748f

    ”வில்TOP விஜயனுக்கு வீரம் விளைவித்து
    FULL-STOP நூறுக்குப் போட்டவன், -அல்டாப்பாய்
    கண்ணார்வம் கொண்டிங்கு கோதைக்காய் காத்திருக்கான்
    மன்னார் குடிமைனர் மால்’’….

    “விண்ணார்வம் வேண்டேன் வியனுலகும் வேண்டேனே
    கண்ணாவுன் ஆர்வமதைக் கொண்டேனே, -மன்னார்
    குடிராஜ கோபாலா கேசவ் அகத்தில்
    குடிபோன கோகுலனே காப்பு”….கிரேசி மோகன்….

    Share
  • இந்த வார வல்லமையாளர்!

    பிப்ரவரி 22, 2016

    இவ்வார வல்லமையாளர்

    வல்லமைமிகு  ரூபாதேவி அவர்கள்

     

    ரூபாதேவி0

     

    வல்லமையின் இவ்வார வல்லமையாளராகப் பாராட்டப்படுபவர், சென்றவாரம் (பிப்ரவரி 5 முதல் 16 வரை) மேகாலயா மாநிலத்தில் கௌஹாத்தி/ஷில்லாங்கில் நடைபெற்ற “தெற்காசிய போட்டி”களில் சர்வதேச கால்பந்து சம்மேளனத்தின் (FIFA – Federation Internationale de Football Association) கால்பந்தாட்ட நடுவராகச் செயல்பட்ட, தமிழகத்தின் “முதல் சர்வதேச கால்பந்து பெண் நடுவரான” திருமிகு ரூபாதேவி அவர்கள். அவரை வல்லமையாளர் விருதிற்குப் பரிந்துரைத்தவர் வல்லமையின் அறிவியல் எழுத்தாளரும் கவிஞருமான அணுவியல் விஞ்ஞானி திரு. ஜெயபாரதன் அவர்கள். அவருக்கு வல்லமைக் குழுவின் நன்றிகள் உரித்தாகிறது.

    ரூபாதேவி1

    திண்டுக்கல்லைச் சேர்ந்த 25 வயதான ரூபாதேவி பள்ளி நாட்களிலேயே கால்பந்தாட்ட விளையாட்டினால் ஈர்க்கப்பட்டவர். இவரது ஆர்வத்தைக் கண்ட பயிற்சியாளர் ஜஸ்டின் ஆரோக்கியராஜ் இவருக்கு அளித்த ஊக்கத்தினாலும் பயிற்சியாலும் பள்ளிநாட்களில் திண்டுக்கல் அணியின் சார்பாக மாவட்டப் போட்டிகளில் விளையாட ஆரம்பித்தார். பல்கலைக்கழக நாட்களில் மதுரை காமராஜர் பல்கலைக்கழக அணி மற்றும் திண்டுக்கல் கால்பந்துக்கழக அணிக்காகவும், பின்னர் மாநில மற்றும் தேசிய அணிகளில் பங்கேற்றும் விளையாடி வந்துள்ளார்.

    இளைஞர்களுக்கு நடுவர் பயிற்சி அளிக்கும் நோக்கில், 25 வயதுக்குட்பட்டோருக்காக ஆசிய கால்பந்து சம்மேளனம் உருவாக்கிய ‘புராஜெக்ட் ஃப்யூச்சர்’ திட்டத்தில் பயிற்சி பெற்றுத் தேறிய இரு பெண்களில் ரூபாதேவியும் ஒருவர். இலங்கை, கத்தார், பஹ்ரைன், மலேசியா, நேபாளம், மாலத்தீவு போன்ற நாடுகளில் நடுவராகப் பணியாற்றி இருப்பதுடன், கடந்த மூன்று ஆண்டுகளாகத் தேசிய அளவிலான கால்பந்துப் போட்டிகளுக்கும், ஆசிய அளவிலான போட்டிகளுக்கும் நடுவராகப் பணியாற்றியுள்ளார்.

    ரூபாதேவி

    ரூபாதேவியின் ஈடுபாட்டைக் கவனித்த சர்வதேச கால்பந்து சம்மேளனம் சர்வதேச அளவில் நடுவராகப் பணியாற்ற இவரைப் பரிந்துரைத்தது. அதற்கான எழுத்து, உடல் திறன் தேர்வுகளில் வெற்றிபெற்ற இரு பெண்களில் ஒருவரான ரூபாதேவிக்கு சர்வதேச நடுவராகப் பணியாற்ற சர்வதேச கால்பந்து சம்மேளனம் வாய்ப்பளித்துள்ளது. இவரது முயற்சிகளுக்குக் கிடைத்த இந்த உயரிய அங்கீகாரத்தினால், தென் இந்தியாவின் முதல் சர்வதேச பெண் நடுவராகத் தேர்வு செய்யப்பட்டவர் என்ற பெருமை ரூபாதேவிக்குக் கிடைத்துள்ளது.

    ரூபாதேவி2

    இந்திய “தேசிய அளவில்” இதுவரை ஆறு பெண்கள் மட்டுமே கால்பந்தாட்ட நடுவராகத் தேர்வாகியுள்ளனர். தமிழகத்தில் ரூபாதேவியும், இவருக்குப் பிறகு எஸ். வசந்தியும் தேசிய அளவு நடுவராகத் தகுதி பெற்றார்கள். சர்வதேச அளவில் பெண்கள் கால்பந்தாட்ட நடுவராகப் பங்கேற்கும் நிலை இதுவரை மகளிருக்கு இருந்ததில்லை.

    ஆண்களின் களமாக இருந்துவரும் கால்பந்தாட்ட நடுவர் பணியில் அதிரடியாக இறங்கி அனைவரையும் தனது முயற்சியால் திரும்பிப் பார்க்க வைத்துள்ள ரூபாதேவியின் எதிர்காலக் குறிக்கோள், ஒலிம்பிக் போட்டிகள் மற்றும் உலகக் கால்பந்து போட்டிகளில் நடுவராகப் பங்கேற்க வேண்டும் என்பதே. ரூபாதேவி அந்த உயரங்களை அடைய வல்லமை குழுவினரின் வாழ்த்துகளும் பாராட்டுகளும்.

    **************************************************************************************
    வல்லமையாளருக்குப் பாராட்டுகள்!!!
    தங்களுடைய ஆக்கப்பூர்வமான பங்களிப்பினைத் தொடர்ந்திட
    வல்லமை மின்னிதழ் அன்பர்களின் மனம் நிறைந்த வாழ்த்துகள்!!!

    **************************************************************************************

    [இந்த வாரத்தில் தனது ஆற்றலை சிறப்புற வெளிபடுத்தி உங்கள் கவனத்தைக் கவருபவரை வல்லமை ஆசிரியர் குழுவினரின் கவனத்திற்குக் கொண்டுவர விரும்பினால், வழக்கம் போலவே வல்லமை ஆசிரியரிடம் (vallamaieditor@gmail.com) உங்களது பரிந்துரைகளை அனுப்பி உதவிடுமாறு வேண்டுகிறோம், மேலும் வல்லமையாளர் விருது பற்றிய விவரங்களை இப்பக்கத்தில் காணலாம் –http://www.vallamai.com/?p=19391, இதுவரை வல்லமையாளர்களாகத் தேர்வு பெற்றோர் பட்டியலை இங்கே காணலாம் http://www.vallamai.com/?p=43179 ]

    _______________________________________________________
    படங்களும் தகவல்களும் பெற்ற இடங்கள்:
    இணையத்திலிருந்தும் கீழ்காணும் தளங்களில் இருந்தும் …
    South Asian Games – 2016
    http://southasiangames2016.com/
     
    தமிழக பெண்ணுக்கு அங்கீகாரம் : சர்வதேச கால்பந்து நடுவராக ரூபாவை தேர்வு செய்த பிஃபா!
    http://www.vikatan.com/news/sports/57134-indian-woman-referee-selected-by-fifa.art
     
    ஃபிஃபா ரெஃப்ரி ரூபாதேவி!
    http://www.vikatan.com/article.php?aid=115146
     
    கால்பந்து தமிழச்சி!
    http://siragu.com/?p=19756

    _______________________________________________________

    Share
  • நினைவுகளுடன் ஒருத்தி – 3

     சீதாம்மா

     

      “Kindly be brave and fight the battle of daily life.

     Be strong in mind.  Be joyful and calm at all times. 

     Have faith in the Lord  at anycost.

    He gives you some more experiances to give more strength and will to face the life more bravely.

    Be sure of His Divine Living presence at all times with you.

    He will guide you “

    சுவாமி சிவானந்தா எனக்கு எழுதிய கடைசி கடிதத்தில் சில வரிகள்

    ஆம், நான்கு ஆண்டுகளுக்கும்  மேலாக எங்களுக்குள் கடிதங்கள் பரிமாற்றம் இருந்தது. என்னை உருவாக்கியவர்களில்  ஒருவர்.   இந்தத் தொடரில் பின்னர் விளக்கமாக எழுதுகின்றேன். ஒன்றை மட்டும் கூற விரும்புகின்றேன். கல்லூரி மாணவியாக இருக்கும் பொழுது எனக்கு கிடைத்த வழிகாட்டிகளில் ஒருவர்.

    இவரால்தான் திசைமாறிப் போகாமல் காப்பாற்றப்பட்டேன். சுவாமிஜி எழுதியதுபோல் என் வாழ்வில் இன்றளவும் போராட்டம் தொடர்கின்றது.. படிப்பினைகளும் பெற்று வருகின்றேன். . என்னுடன் என் இறைவனும் தொடர்ந்து வருவது உணர்கின்றேன். தைரியமாக எதிர்கொள்ள வேண்டிய அனுபவங்களை நான் சந்தித்தாக வேண்டுமென்பது அன்றே நிர்ணயப்படுத்தப்பட்டுவிட்ட ஒன்றாகும்.

    கட்டுரையாளரின் ஆதங்கத்தை இப்பொழுது பார்க்கலாம்.

    கடவுளின் தவிப்பு.        

    கடவுளானாலும் அவருக்கும் அமைதி வேண்டுமே!

    அவர் படைப்புகளில் மனிதன் அவரை அமைதியாக இருக்க விடவில்லை.

    எப்பொழுதும் துரத்திக் கொண்டே இருக்கின்றான். அவன் ஆசைகள் நிறைவேற வேண்டும்.   வேண்டியன  உடனே கிடைக்க வேண்டும்.   ஆசை வளர்ந்து பேராசை, அதன் குட்டிகளான பொறாமை, வன்மம், , பகைமை, ஒன்றா இரண்டா, ஒவ்வொரு துர்க்குணமாக வளர்ந்து அத்தனைக்கும் ஆண்டவன் உதவ வியாபாரமே பேச ஆரம்பித்துவிடுகின்றான். ஒரு கோயில் , பிறகு இன்னொருகோயில் இப்படி அவரை எங்கும் நிம்மதியாக இருக்க விடுவதில்லை. இப்படி ஒரு கூட்டம் !

    இன்னொன்றைப் பார்த்தால் நினைத்தது கிடைக்கவில்லையென்றால், திட்டித் தீர்க்க விரட்டல்.

    இன்னொரு கூட்டமும் உண்டு. ஆற்றாமையில் அலறல்.” எப்பொழுதும் கெட்டவனுக்கு நினைப்பது நடக்கின்றது, நல்லவன் தான் கஷ்டப்படுகின்றான் “

    ( இப்படி  பல மனித குணங்களைக் கட்டுரையாளர் எழுதியுள்ளார் )

    கடவுளின் நிலை பரிதாபமாகி விடுகின்றது. யாரும் அன்புடன், அவரை அவருக்காக அணுகவில்லை. எங்குதான் ஓடி ஒளிய முடியும். ?! மனிதன் எட்டிப் பார்க்காத ஓர் இடத்தில் ஒதுங்க நினைக்கின்றார்.

    மனம்

    மனிதன் எட்டிப்பார்க்காத இடமாம் !

    மனத்தில் கடவுளை அமர்த்திவிட்டு நின்று விடுகின்றார் கட்டுரையாளர்.

    என் மனமோ இறைக்கைகள் விரித்துப் பறக்க ஆரம்பித்தது.

    :நான் யார் ? “என்று எத்தனை பேர்கள் நினைத்துப் பார்க்கின்றனர். !

    தன்னிடம் இருக்கும் குறைகளை சிறிதளவேணும் புரிந்து கொண்டால் அவனுடைய பல பிரச்சனைகளுக்கு அவனே வழி கண்டுபிடிக்க இயலுமே!

    அதிகம் பேசுவோம்  — பக்கம் பக்கமாக எழுதுவோம்

    நம்மை நாம் அறிவோமா?

    எனக்கும் பல முகங்கள் உண்டு. பல குறைகளும் உண்டு. அனுபவங்கள் பல படிப்பினைகள் கற்றுக் கொடுத்தும் நான் பூரணமாக திருந்த முடியவில்லை.

    கட்டுரையாளர் என்னை சுவாமி சிவானந்தரின் கடைசி மடலை எடுத்துப் பார்க்க வைத்துவிட்டார்    ஆமாம் ஓர் புதுப் படிப்பினை பெற்றேன் . அதைப்பற்றி எழுதும்  முன்னர் ஒன்றைக் குறிக்க விரும்புகின்றேன்.

    மனம்  என்பதற்குப் பதிலாக ஆழ்மனம் என்று குறிப்பிட்டிருக்கலாம்.

    மனித மனம் குரங்கைவிட மோசமானது. குரங்கு ஒரு கிளையிலிருந்து இன்னொன்றுக்குத் தாவும்பொழுது சில விநாடிகள்தான் இரண்டையும் பிடித்து தொங்கும்.  உறுதி தெரிந்தவுடன் ஒன்றை மட்டும் பற்றிக் கொள்ளும். மனிதனோ இரண்டையும் பிடித்துக் கொண்டு தொங்குவான்.

    தரமற்ற எண்ணங்களால் மனத்தைக் குப்பைத் தொட்டியாக வைத்திருக்கின்றோம்.

    ஆழ் மனத்தில் தான் பிரபஞ்ச சக்தி அமைத்திருக்கின்றது.

    அதனை உணர்வது அவ்வளவு எளிதல்ல.

     உன் வீட்டில் தங்கக் கட்டிகள் நிறைந்த ஒரு பெட்டி இருக்கின்றது என்று   யாராவது கூறினால் எப்படி தேடுவோம் ? களைப்பு என்று உட்கார்ந்து விடுவோமா?

    முயன்றால் முடியாதது இல்லை.

    நினைவொன்று மனத்தில் நிழலாடியது .அதிலும் சிந்தனைக் குளத்தில் தள்ளிய ஓர் சம்பவம்.

    download

    எழுத்தாளர் ஜெயகாந்தன் இறந்த செய்தி கேள்விப்படவும் துன்பத்தில் துடித்துவிட்டேன். என்வரையில் அவர் ஓர் எழுத்தாளர் மட்டுமல்ல. . பிரச்சனைகளால் துரத்தப்படும் பொழுதெல்லாம் என் மனக் குமுறல்களைத் தாங்கும் ஓர் சுமைதாங்கி.   ஓர் நல்ல நண்பர்.. அவர் உடல் நிலை மோசமாகி வருவது தெரியும். விரைவில் அவர் மரணிப்பார் என்பதும் உணர்வேன். ஆனால் உண்மை தெரிந்தவுடன். மனத்தில் விழுந்த அடி மிகவும் வலித்தது.. அவர்கள் குடும்பத்தாருடன் பேச நினைத்தேன். ஆனால் வீட்டு தொலைபேசி எண் இல்லை.. விசாரித்து அவர்களுடன் பேச ஒரு வாரம் ஆயிற்று.

    முதலில் எடுத்தது கவுசல்யாதான். . அவர் குரல் கேட்டவுடன் தேம்பித் தேம்பி அழுதேன். அவர்கள் என்னை  சமாதானம் செய்தார்கள். . . பின்னர் அவருடைய முதல் மனைவியிடம் பேசினேன்.. அவர்களும் என்னைச் சமாதானம் செய்தார்கள்

    சமாதானம் சொல்ல வேண்டியவள் நான். ஆனால் அங்கே என்னைச் சமாதானம் செய்தனர். அவர்கள் கொடுத்த விளக்கங்கள் எனக்குக் கிடைத்த படிப்பினை. அனைவரும் அறிந்து கொள்வது மட்டுமல்ல சரியாகப் புரிந்து கொள்ள வேண்டிய ஓர் நிகழ்வு.

    நாமும் அலசிப் பார்ப்போமே!

    (என் உடல் நிலை காரணமாகத் தாமதம் ஏற்பட்டுவிட்டது. —   பொறுத்தருள்க.)

    Share
  • நான் அறிந்த சிலம்பு – 197

    – மலர்சபா.

    மதுரைக் காண்டம் – 07. ஆய்ச்சியர் குரவை

    உள்வரி வாழ்த்து
    பூவை நிலை

    moovendar

     

    கோர்க்கப்படாத பொதிய மலையின்
    ஆரமான சந்தனமும்,
    கோர்க்கப்பட்ட கொற்கைக் கடலின்
    ஆரமான முத்தும்,
    தேவர் தலைவனாகிய
    இந்திரனின் பூண் ஆரமும்,
    இம்மூன்றும்
    பாண்டியனின் மார்பில் திகழ்கின்றன.

    இங்ஙனம்
    இந்திரனின் ஆரம் அணிந்த பாண்டியன்
    வளம் மிக்க துவாரகையில்
    ஆநிரை மேய்த்துக் குருத்த மரத்தை முறித்த
    கண்ணனே ஆவான்!
    என்று அனைவரும் கூறுவர்.

    பொன் போன்ற இமய மலையின் உச்சியில்
    வெற்றிக்கு அறிகுறியாய்த்
    தன் புலிக்கொடியை நாட்டி
    இப்பகுதியில் உள்ள நிலங்களை எல்லாம்
    ஆட்சி புரிந்தவன்,
    மதிலையுடைய புகார் நகரத்தில் வாழும்
    சோழ மன்னன் ஆவான்.

    அம்மன்னனை,
    போர் செய்யும் அழகிய
    சக்கரப் படையை உடையத் திருமால் ஆவான்!
    என்று அனைவரும் கூறுவர்.

    கடலின் உள்ளே புகுந்து சென்று
    அங்கே,
    மூத்தல் என்றும் அடையாத் தன்மை கொண்ட
    கடம்ப மரத்தினை வெட்டிச் சாய்த்தவன்,
    வளம் மிக்க வஞ்சி மாநகரில் வாழும்
    சேர மன்னன் ஆவான்.

    அவன் மலையை ஒத்த தோளை உடைய
    திருமால் ஆவான்!
    என்று அனைவரும் கூறுவர்.

     

     

     

     

     

     

    (கண்ணனே சேரனாக, சோழனாக, பாண்டியனாகக் கோலம் வரித்து
    தமிழகத்தை ஆண்டான் எனும் உள்வரி வாழ்த்து இது.)

    அடிப்படையாக அமைந்த சிலப்பதிகாரத்தின் வரிகள் இங்கே:
    http://www.chennailibrary.com/iymperumkappiangal/silapathikaram9.html

    படத்துக்கு நன்றி: கூகுள்

    Share
  • கற்றல் ஒரு ஆற்றல்  (17)

    க. பாலசுப்பிரமணியன்

    விளையாட்டு முறையில் கல்வி

    education1

    விளையாட்டு முறையில் கல்வி கற்கும் பொழுது அது மனதிற்கு இனியதாகவும் ஏற்புடையதாகவும் மன அழுத்தங்களிலிருந்தும் வேறு எதிர்பார்ப்புகளிலிருந்தும் விடுபட்டதாகவும் அமைகின்றது .உலகில் உள்ள பல நாடுகளில் செய்யப்பட்ட ஆராய்ச்சிகள் இந்த உண்மையை உறுதி செய்கின்றன.

    ஒரு நாற்பது ஐம்பது ஆண்டுகளுக்கு முன்பு நாம் கூட்டுக் குடும்ப வாழ்க்கை முறையை பின் பற்றிய பொழுது வீட்டில் உள்ள முதியவர்கள் – தாத்தா பாட்டி, அத்தை, மாமா போன்றவர்களும் தாய் தந்தையரும் குழந்தைகளுக்கு  விளையாட்டாக பல உண்மைகளை விளக்கி வந்தனர். சிறிய கதைகள் பாடல்கள் விடுகதைகள் மூலம் அன்பு, பண்பு, சகிப்புத்தன்மை, உறவு பேணுதல், நல்லொழுக்கம் மற்றும் வாழ்வியல் சம்பந்தப்பட்ட கருத்துகள் பரிமாறிக்கொள்ளப்பட்டன. இவைகள் நித்தம் விளையாட்டான எளிதான முறையில் வந்ததால் அவை ஏற்றுக்கொள்ளப்பட்டு வாழ்க்கை கலைகளோடு இணைந்து நின்றன.

    தாய் உணவு ஊட்டும் குழந்தைக்கு ” நிலா, நிலா ஓடி வா ” என்ற பாடலை பாடிக் காட்டும் பொழுது அந்த நிலவைப் பார்க்கின்ற குழந்தைக்கு கவனம், வியப்பு, ஆர்வம் மற்றும் அன்றாட இயற்கையை புரிந்து கொள்ள வாய்ப்புக் கிடைத்தது “Twinkle Twinkle Little Star ” என்று நட்சத்திரங்களை காட்டிப் பாடிய பொழுது நிலவுக்கும், நட்சத்திரங்களுக்கும் உள்ள வேறுபாடுகள் மறைமுகமாக அறிந்து கொள்ள முடிந்தது. அந்தப் பாடலில் உள்ள “Wonder” என்ற வார்த்தை வியப்பை ஊக்குவிப்பதாக இருந்தது. “பறவையைக் கண்டான் விமானம் படைத்தான்,’ என்ற கவிஞரின் பாடல் மனிதனின் வியப்பின் உண்மையை விளக்குகிறது . பேரறிஞர் அரிஸ்டாடில் மனிதனின் வளர்ச்சிக்கும் அவனுடைய படைப்புத் திறனுக்கும் இந்த வியப்பை அடிப்படையாகக்  கருதுகின்றார். ( Sense of wonder of  wander ).

    “நட்சத்திரங்களைப்  பார்க்கின்ற குழந்தை அதனுடைய மின்னும் செயலைக் கண்ட பின்  இங்கே ஒன்று, அங்கே ஒன்று மற்றும் அங்கே ஒன்று என்று தொடர்ந்து கண்களை அலைய விட்டு தேடலில் ஈடுபடுகின்றது. மூளையின் வளர்ச்சிக்கு வியப்பும் தேடலும் மிகவும் ஊட்டத்தை அளிப்பதாகவும் வளர்ச்சிக்கு படிகளாகவும் அமைகின்றன.

    “தட்டு நிறைய லட்டு, லட்டு மொத்தம் எட்டு ” என்று ஆரம்பித்து பாடிய பொழுது எண்ணிக்கை, கணிதத்தின் அடிப்படை கருத்துக்கள், உறவு பாராட்டல், பகிர்ந்து கொள்ளும் உணர்வு ( caring and sharing ) போன்ற பல வித கருத்துகள் விளக்கப்பட்டு உணர்வுகளோடு ஒன்றி வளர்ந்தன. தற்போதைய நிலையில் இந்த பல அருமையான உணர்வு சார்ந்த கருத்துகள் குடும்பங்களிலிருந்து குழந்தைகளுக்கு கிடைப்பதில்லை. மற்றும் தாய் மொழி அற்ற மற்ற மொழிகளில் கற்றுக்கொள்ளும் பொழுது அவைகள் அதிகமான அளவில் உணர்வுகளோடு ஒன்றுவதில்லை.

    கற்றல் என்பது ஒரு உணர்வுப்பூர்வமான செயல் அதற்கு மனம், மூளை மற்றும் உடல் அனைத்தும் சேர்ந்து ஈடுபடுதல் அவசியம்

    கற்கப்படும் கருத்துக்களோடு கற்பவர்களின் ஈடுபாடும் ஈர்ப்பும் ( Effective engagement  of the learner) கற்றலின் அளவையும் திறனையும் அதிகரிக்கின்றன.

    விடுகதைகள் சிந்தனையைத் தூண்டும் சிறு கேள்விகள் மாணவர்களின் ஆர்வத்தைத் தூண்டுவது மற்றுமின்றி அவர்களுக்கு வெவ்வேறு விதமான சிந்தனைத் திறன்களைத் தூண்டுகின்றன. பொதுவாக பெரியவர்கள் குழந்தைகளுக்கு இவையெல்லாம் தெரிந்திருக்க வாய்ப்பில்லை என்ற கருத்தையும் சில கேள்விகள் அவர்கள் சிந்தனைக்கு அப்பாற்பட்டது என்றும் கருதுகின்றனர். ஆனால் மூளை வளர்ச்சியை ஆராய்ச்சி செய்யும் வல்லுனர்களோ மூளை எப்பொழுதும் புதிய சாதனைகளுக்காகவும் சந்தர்பங்களுக்காகவும் காத்துக்கொண்டிருப்பதாகக் கூறுகின்றனர்.

    ஒரு பள்ளியில் ஆரம்ப வகுப்பிற்குச் சென்ற ஒரு பேராசிரியர்  ஒரு மாணவனிடம் உனக்குத் தெரிந்த கதை ஒன்று சொல் என்று வினவ அந்தச் சிறுவன் ‘காக்கையின் தாகம் என்ற கதையைச் சொல்லி எவ்வாறு அந்தக் காகம் அருகிலிருந்த சிறிய கற்களை உபயோகித்து தண்ணீரை மேலே கொணர்ந்து தாகத்தை தணித்துக் கொண்டது என்று விளக்கினான். அந்தப் பேராசிரியரோ அந்த இடத்தில் கற்கள் இல்லாமலிருந்தால் அந்தக் காகம் என்ன செய்யும் என்று கேட்க ஒரு மாணவன் ” அந்தக் காகம் சற்றே பறந்து தன இறக்கைகளால் அந்தப் பானையைத் தள்ளிவிட்டு வழிந்து வரும் நீரைக் குடிக்கும் என பதில் சொன்னான். மற்றொருவனோ அந்தக் காக்கை தன அலகுகளால் அந்தப் பாண்டத்தை குத்தி ஓட்டை ஒன்றை உண்டாக்கி அதிலிருந்து வரும் நீரை குடிக்கும் என்று சொன்னான்  இன்னொரு மாணவனோ காகம் அருகிலிருந்த குப்பைத்தொட்டியிலிருந்து ஒரு குழலை (Straw)வைக் கொண்டுவந்து தண்ணீர் கடிக்கும் என்று சொன்னான். கேள்வி  ஒன்றுதான்……சிந்தனைகள் பலவிதம். விளையாட்டு முறையிலும் சிந்தனையைத் தூண்டும் வகையிலும் பள்ளிகள் பாடங்களை நடத்தினால் கற்றல் தற்காலிக நினைவிலிருந்து நிரந்தர நினைவாக மாற வாய்ப்புண்டு

    Share
  • உன்னையறிந்தால் ……… (43)

    நிர்மலா ராகவன்

    தாம்பத்தியத்தில் தலைவலி

    உனையறிந்தால்
    கேள்வி: எங்களுக்குக் கல்யாணமாகி ஐந்து வருடங்கள் ஆகின்றன. என் கணவர் என்னுடன் ஒத்துப்போகவே மாட்டேன் என்கிறார். தினமுமே எங்களுக்குள் சண்டை வருகிறது. இதை எப்படித் தடுப்பது?

    விளக்கம்: என்னதான் வாழ்க்கைத்துணையாக இருந்தாலும், நம் விருப்பத்திற்கேற்ப ஒருவரை மாற்ற முடியாது. நம்மை நாமே கட்டுப்படுத்திக்கொள்வதுதான் முடிந்த காரியம். பெரிய மனதிருந்தால், மற்றவரது குறைகளை அப்படியே ஏற்றுக்கொள்ளலாம். (நம்மை ஒத்தவர்களிடம் பேசிச் சிரிக்கலாம்).

    கணவன்-மனைவியருக்குள் ஏன் சண்டை பூசல் வருகிறது?

    1 ஒருவர் பேசும்போது, மற்றொருவர் தன்பாட்டில் ஏதாவது செய்துகொண்டிருப்பது. உதாரணமாக, கணவரோ அல்லது மனைவியோ தொலைகாட்சியில் கவனத்தைப் பதித்தபடி, மற்றவர் பேசும்போது அசுவாரசியமாக `உம்’ கொட்டியபடி இருத்தல். பத்திரிகையைப் படிப்பதில் ஆழ்ந்திருத்தல், கைத்தொலைபேசியில் வேறு யாருடனோ உரையாடுவது இதெல்லாம்கூட தொடர்பைத் தகர்க்கும். `தன்னைக் கவனிக்கிறாரா (கவனிக்கிறாளா), பார்!’ என்ற ஆத்திரத்தை விளைவிக்கும். இப்படி எதிலாவது ஈடுபட்டிருந்தாலும், அதைத் தாற்காலிகமாக நிறுத்தி வைத்துவிட்டுக் கவனிப்பது நம்முடன் பேசுபவருக்கு நாம் கொடுக்கும் மரியாதை.

    ஒருவர் முக்கியமான விஷயத்தைப் பேசிக் கொண்டிருக்கும்போது, இடைமறித்து ஏதாவது பேசுவது, `நீ எப்பவுமே இப்படித்தான்!’ என்ற வகையில் அலட்சியப்படுத்துவது — இதெல்லாமே சண்டைக்குக் காரணமாக அமையும். தலையை லேசாக அசைத்து, ஒருவர் கூறுவதை நாம் சரியாகப் புரிந்துகொண்டோமா என்று அவர் கூறியதில் சந்தேகம் கேட்பது உசிதம்.

    நாம் கவனிக்கிறோம் என்பதை உடல் மொழியால் காட்டுவது: தலையைச் சற்றே குனிந்து, காதை ஒருவர் பக்கம் திருப்பிக்கொண்டு அவர் சொல்வதைக் கேட்கத் தயாரானால், அவருக்கு நம்மிடம் மேலும் பேச உற்சாகமாக இருக்கும்.

    2.  நம் தேவைகளைப் புறக்கணித்துவிட்டு, பிற வேலைகளைச் செய்வதே தலையாய கடமையாக எண்ணிச் செய்வதுதான் நல்ல பெண்ணுக்கு அழகு என்று நம்மில் பலரும் நினைத்துக் கொண்டிருக்கிறோம். (அல்லது, வளர்க்கப்பட்டிருக்கிறோம்). அப்படி நடந்தால், நாளடைவில் எரிச்சல்தான் உண்டாகும். அந்த ஆத்திரம் வேறு பக்கம் திரும்பும்.

    கதை: நான் வீட்டிலும், வெளியிலும் வேலை பார்த்த காலத்தில், சனிக்கிழமையானால் காரணமின்றி குழந்தைகளிடம் எரிந்து விழுவேன். அவர்கள் சிரித்தபடி, `நாங்கள் இன்று சமைக்கிறோம். நீ எழுதும்மா!’ என்பார்கள். அவர்களுக்குச் சமைக்கத் தெரியாது என்பது வேறு விஷயம். அதன்பின், ஒவ்வொரு சனியும் எங்கள் வீட்டில் நூடுல்ஸ்தான்! மேக்கியையும், மசாலாவையும் சேர்த்துப்போட்டு, நீரில் கொதிக்கவைத்தால், ஆயிற்று சமையல்! நானும் உற்சாகமாக விடுமுறை நாட்களை எதிர்பார்க்க ஆரம்பித்தேன்.

    நீதி: உங்களுக்கு எழுதவோ, படிக்கவோ பிடிக்குமானால், அதை அடியோடு விடத் தேவையில்லை. வாரம் சில தினங்களாவது சற்று நேரத்தை ஏதாவது ஒரு பொழுதுபோக்கிற்காக ஒதுக்கலாமே! பெரிய தியாகிபோல் உங்களை எண்ணிக்கொள்ளாது, உங்கள் குடும்பத்தினருடன் கலந்து பேசினால் புரிந்துகொள்ள மாட்டார்களா, என்ன!

    3. பரஸ்பர நம்பிக்கை

    `நான் ஏதாவது நடிகையின் அழகைப் புகழ்ந்தால்கூட என் மனைவிக்குக் கோபம் வருகிறது!’ என்றார் என்னுடன் வேலை பார்த்த நண்பர். என்னிடம் கேட்டார், `அவளுக்குக் கண் அழகா இருக்கும். ரொம்ப குறைச்சலா டிரெஸ் போட்டுக்கிட்டு டான்ஸ் ஆடுவாளே! அவ பேர் என்ன?’

    நான் சிரித்தபடி பதில் சொன்னேன். (நீங்களும் ஊகித்திருப்பீர்கள்).

    இதில் பொறாமைப்பட என்ன இருக்கிறது! எங்கோ இருக்கும் அந்த நடிகை இவரை ஒரு கூட்டத்தில் இனம் கண்டுகொள்ளப்போகிறாளா, என்ன!

    கதை: `நமக்குத் திருமணமாவதற்குமுன் நான் பல பெண்களுடன் பழகியிருக்கிறேன்!’ என்று ஒருவர் தான் காதலித்து மணந்த மனைவியிடம் வெள்ளைமனத்துடன் கூறினாராம் — காதலிக்கும் இருவருக்குள் எவ்வித ரகசியமும் இருக்கக்கூடாது என்று நினைத்ததால். அதுதான் அவர் செயுத தவறு. அவள் அவரை அதன்பின் நம்பவே மறுத்துவிட்டாள். அனுதினமும் மனைவி ஏவிய சொல்லம்புகளைப் பொறுக்காது, விவாகரத்து பெற்றுவிட்டதாக என்னிடம் வலிய வந்து கூறினார். `நான் அவளை எவ்விதத்திலும் கட்டுப்படுத்தவில்லை. ஆனால், என் மணவாழ்க்கை ஏன் பொய்த்தது?’ என்றவரிடம் அனுதாபம்தான் காட்டமுடிந்தது என்னால்.

    தனது, அல்லது வாழ்க்கைத்துணையின், கடந்த காலத்தையே ஒருவர் கெட்டியாகப் பிடித்துக்கொண்டிருந்தால், நிகழ்காலம் நரகமாகிவிடாதா! அதேபோல், வருங்காலக் கனவுகளிலேயே ஆழ்ந்துவிடுவதும் நிகழ்காலத்தைப் பாதிப்பதுதான்.

    4. நம்மையே நாம் ஏற்காதபோது, நம் உணர்ச்சிகளை மதிக்காதபோது, மகிழ்ச்சி இராது.

    `எப்போதும் என்ன யோசிப்பீர்கள்?’ என்று நான் சிலரைக் கேட்டேன்.

    ஒரு பெண்மணியின் பதில்: `தெரிந்தவர்கள் யாராவது என்னைப் பார்த்துச் சிரிக்காவிட்டால், மனமுடைந்து போய்விடுவேன்! நாம் என்ன தப்பு செய்துவிட்டோம்?’ என்ற கேள்வி நாளெல்லாம் மண்டையைக் குடையும்.

    தன்னைப்பற்றிப் பிறர் என்ன நினைக்கிறார்களோ என்ற கவலையிலேயே காலத்தைக் கழிப்பவர்களுக்கு என்றுமே நிம்மதி கிடையாது. ஏனெனில், எல்லாருமே அவர்களைப்பற்றி ஒரேவிதமான எண்ணத்தைக் கொண்டிருக்க மாட்டார்களே!

    தீர்வு: `நான் இப்படி நடப்பதுதான் எனக்கு ஏற்றதாக, நிம்மதியை அளிப்பதாக இருக்கிறது. மற்றவர்கள் என்ன வேண்டுமானாலும் பேசிவிட்டுப் போகட்டும்,’ என்ற மனப்போக்கை வளர்த்துக்கொள்ள வேண்டும்.

    வேறு சிலர் துக்கம், இழப்பு, தனிமை முதலியவற்றில் ஏதாவது ஒன்றால் பாதிக்கப்பட்டிருப்பார்கள். ஆனால், அதனால் தாம் பாதிக்கப்பட்டதாகக் காட்டிக்கொள்வது இழுக்கு என்று நினைப்பார்கள்.

    கதை: ஒரு கூட்டுக்குடும்பத்தில் பத்து வயதான சிறுவன் இறந்து ஒரு மாதத்திற்குள் தீபாவளி கொண்டாட்டம் தடபுடல் பட்டது. `அவன் விதி அவ்வளவுதான்!’ என்று விட்டேற்றியாகப் பேசினார்கள். அக்குடும்பத்தில், பெற்ற தாய் உள்பட, யாருக்குமே சிறிதளவுகூட துக்கம் இருந்திருக்காதா? ஏன் அதை ஒத்துக்கொள்ள மறுக்கிறார்கள்?

    எங்கள் உறவினர் ஒருவருக்கு நான்கைந்து குழந்தைகள் பிறந்து ஒரு வருடத்திற்குள் இறந்தனவாம். ஆனால், தாயார் எந்த உணர்ச்சியையும் வெளியில் காட்டிக்கொள்ளாது, தன் கடமைகளைச் செய்துவந்தாள். வீட்டிற்கு மூத்த மருமகள் என்ற முறையில், அதுதான் அவளிடம் எதிர்பார்க்கப்பட்டது.

    இம்மாதிரி தமது உணர்ச்சிகளை மறைத்துக்கொண்டு, உள்ளுக்குள்ளேயே மறுகுபவர்கள் ஆத்திரம், குற்ற உணர்வு, அவமானம் என்று தமக்கே புரியாத பல்விதமானவைகளுக்கு ஆளாகிறார்கள். பிறரிடம் ஓயாது குற்றம் காண்பது, பழிகூறுவது, காரணமில்லாது கோபப்படுவது, அல்லது உள்ளுக்குள்ளேயே ஒடுங்கிவிடுவது — இதெல்லாம் வேண்டாத விளைவுகள். இம்மாதிரி தருணங்களில், துணைவர் (துணைவி) தன்னையும் பார்த்துக்கொள்ள வேண்டுவது அவர் கடமை என்று எண்ணுவார்கள். நடக்கிற காரியமா!

    அப்படி ஒருவர் எதிர்பார்த்துக்கொண்டே இருந்தால், கூட இருப்பவருக்கும் நிம்மதி போய்விடும். பித்துப் பிடித்துவிடுவது போலிருக்கும். `இது அவர் வந்த வழி!’ என்று தன் காரியத்தைப் பார்த்துக்கொண்டு போகவேண்டியதுதான்.

    4. மணமானவர்கள் மனத்தாங்கல் இல்லாது நட்புடன் பழக, வீட்டு வேலைகளையும், செலவுகளையும் பகிர்வது நல்லதொரு வழி. இருவருமே உத்தியோகம் பார்க்கும் நிலையில் மட்டுமல்ல; நாள்பூராவும் வீட்டிலேயே அலுத்துச் சலித்து வேலை பார்க்கும் மனைவிக்கு சிறிது உதவி செய்தால் அவளுடைய நன்றியையும் அன்பையும் பெறலாம்.

    5 `கல்யாணம்தான் ஆகிவிட்டதே! இனி என்ன!’ என்று தம்பதிகள் அலட்சியமாக இருந்தால் உறவு எப்படி பலப்படும்? வாரத்தில் ஒரு நாளை ஒதுக்குங்கள் — இருவரும் எங்காவது தனியாக ஊர்சுற்ற. முதல் நாளும், மறுநாளும் சண்டை போடலாம்!

    தாம்பத்திய உறவுகளில் இருக்கும் எல்லா சிக்கல்களையும் தீர்க்க முடியாது. அப்படி ஒரு நிலை இருந்தால், அவைகளைப்பற்றி எந்நேரமும் நினைத்தோ, பிறரிடம் பேசிப் பேசியோ ஆறுதல் தேட நினைக்காது, வேறு ஆக்கபூர்வமான காரியங்களில் ஈடுபடுவதுதான் நிம்மதிக்கான வழி.

    Share
  • குறளின் கதிர்களாய்…(109)

     

     செண்பக ஜெகதீசன்

     

     

    பருவத்தோ டொட்ட வொழுகல் திருவினைத்

    தீராமை யார்க்குங் கயிறு.

         -திருக்குறள் -482(காலமறிதல்)

     

    புதுக் கவிதையில்…

     

    காலமறிந்து

    கடமையைச் செய்..

     

    உரிய காலத்தில்

    ஒன்றி முயல்வது,

    செல்வம் நம்மை

    விட்டுச் செல்லாதிருக்கக்

    கட்டிவைக்கும் கயிறாமே…!

     

    குறும்பாவில்…

     

    காலமறிந்து கடமை செய்வது,

    செல்வம் விட்டுச்சென்றிடாமல்

    கட்டிடும் கயிறு போன்றதே…!

     

     மரபுக் கவிதையில்…

     

    செல்வம் என்றும் நில்லாமலே

         சென்று கொண்டே யிருப்பதினால்

    நில்லெனத் தடுத்துக் கட்டியேதான்

         நிறுத்திடும் கயிறது வேறில்லை,

    நல்ல செயலது தொடங்குமுன்னே

         நாளும் நன்மை பெற்றுத்தரும்

    வல்லமை மிக்க காலத்தினை

         வகையாய் அறிந்து செயல்படலே…!

     

    லிமரைக்கூ…

     

    காலமறிந்து செய்திடு கடமை,

    அதுதான் கயிறாய் கட்டியே

    செல்வமதை ஆக்கிடுமுன் உடமை…!

     

    கிராமிய பாணியில்…

     

    கடமயச்செய்யி கடமயச்செய்யி

    காலமறிஞ்சி கடமயச்செய்யி,

    காலத்த நல்லதாத் தெரிஞ்சிக்கிட்டே

    கடமயநீயும் தொடங்குனாலே

    கட்டாயம்வெற்றி வந்துசேரும்..

     

    அது,

    பாடுபட்டு சேத்தசெல்வம்

    பறிபோவாம கெட்டிப்போடும்

    பெலமாவுள்ள கயறேதான்

    பொருத்தமான தொணயேதான்..

     

    அதால,

    கடமயச்செய்யி கடமயச்செய்யி

    காலமறிஞ்சி கடமயச்செய்யி…!

     

    -செண்பக ஜெகதீசன்…

    Share