இட ஒதுக்கீடுகளும், போராட்டங்களும்
பவள சங்கரி
தலையங்கம்
குஜராத்தில் பட்டேல் இனத்தவரின் போராட்டங்களும், ஹரியானாவில் ஜெட் இனத்தவரின் போராட்டங்களும், அவை மேற்கு உத்திர பிரதேசத்தில் பரவக்கூடிய வாய்ப்புகளும், சில ஆண்டுகளுக்கு முன்பு ஜெட் இனத்தவரின் ராஜஸ்தான் போராட்டங்களும் அங்கு ஆட்சியாளர்களின் வெவ்வேறு விதமான அணுகுமுறைகளால் தீர்க்கப்பட்டோ அன்றி ஒடுக்கப்பட்டோ பிரச்சனைகளை அப்போதைக்கப்போது அல்லது தற்காலிகமாக மட்டுமே தீர்க்கப்படுகின்றன. நடுவண் அரசோ அல்லது மாநில அரசுகளோ மனித வள மேம்பாட்டுக் கொள்கைகளில் நிலையானதொரு முடிவை எடுப்பதில்லை என்பதையே இது காட்டுகிறது. குறிப்பிட்ட சாரார்களுக்கான ஒதுக்கீடு என்பது முன்பெல்லாம் தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட மக்களும், அரசு வேலை வாய்ப்புகளிலும், கல்வித் துறையிலும் வாய்ப்புகள் பெற வேண்டும் என்பதற்காக ஏற்படுத்தப்பட்டது. சுதந்திரம் அடைந்து 68 ஆண்டுகள் ஆகியும் நமது மக்கள் வளர்ச்சியடையாமல் தாழ்ந்த நிலையில் உள்ளார்கள் என்பதை பறைசாற்றும் விதமாக அரசே இப்படி ஒதுக்கீடு வழங்குவது தேவையா என்று சிந்திக்க வேண்டிய நிலையில் உள்ளோம்.
தடியெடுத்தவன் எல்லாம் தண்டல்காரன் என்பது போன்ற நிலையே உருவாகிக் கொண்டிருப்பதும் நாட்டின் வளர்ச்சிக்கு முட்டுக்கட்டை போடக்கூடியது. போராட்டம் என்ற பெயரில் போக்குவரத்திற்கு இடைஞ்சலாக ஆயிரம் ரயில்கள் நிறுத்தப்பட்டன. போராட்டத்தை கட்டுக்குள் கொண்டுவருவதற்காக இராணுவத்தை வானவெளி மூலமாகவே கொண்டுவர வேண்டியுள்ளது வெட்கப்பட வேண்டிய நிலை அல்லவா. இப்படி ஒவ்வொரு மாநிலத்திலும் ஏதோ ஒரு வகுப்பினர் போராட்டங்களை நடத்தினால் அரசு நிலை குலையும் நிலை ஏற்படும் என்பதும் அனைவரும் அறிந்ததே. இதற்கான தீர்வு என்ன என்பதை முறையாக சிந்தித்தால் மட்டுமே இதிலிருந்து முழுமையாக விடுபட முடியும். அதற்கு முதல் கட்டமாக , கட்சிப் பாகுபாடின்றி அனைத்துக் கட்சியினரும் ஒன்றாக அமர்ந்து பேசி பாரபட்சமற்ற முடிவை எடுக்க வேண்டியது அவசியம். இட ஒதுக்கீடு என்பது இனியும் தேவையா என்று முடிவெடுக்க வேண்டிய காலகட்டம் இது. திறமை உள்ளவர்கள் போட்டி போட்டுக்கொண்டு வெற்றி பெற வேண்டுமேயொழிய சமுதாயம், நாடு வளர்ச்சியடைவதற்கு பின்வழிகளை அரசு ஏற்கக்கூடாது. பல சமுதாயங்கள் இன்றளவிலும் வளர்ச்சியடையாமல் இருக்கும்பட்சத்தில் பொருளாதார உதவிகள் மூலம் இது போன்று போட்டியிடுவதற்குரிய திறமைகளை அதிகப்படுத்த வேண்டுமேயொழிய தேவையான திறமையற்றவர்கள் இந்த ஒதுக்கீடுகள் மூலமாக உயர்மட்ட பொறுப்புகளுக்கு வரும்பொழுது நாட்டு வளர்ச்சியும் பாதிக்கக்கூடும். உச்சக்கட்டத் தேர்வின்போது சம அளவிலான மதிப்பெண்களை தேர்வில் பங்குபெறும் நான்கு பேரும் பெற்றிருந்தால் அந்நிலையில் தாழ்த்தப்பட்ட சமுதாயத்திற்கோ, மாற்று வளர்ச்சியடையாத சமுதாயத்தை சேர்ந்தவருக்கோ அந்த வாய்ப்பை அளித்தால் சமுதாயம் முன்னேறுவதோடு நாடும் வளர்ச்சியடையும். இதை விடுத்து அரசியல் ஆதாயத்திற்காகவோ அல்லது வேறு ஏதும் காரணங்களுக்காகவோ இட ஒதுக்கீடு என்ற திட்டத்தை நிறைவேற்றுவது என்பது தவறான வழி வகைகளை ஏற்படுத்தும் என்பதோடு இதனால் நாட்டின் வளர்ச்சியும் பாதிப்படையும் என்பதும் உறுதி.
கருத்துள்ள தலையங்கம்.