– சக்தி சக்திதாசன்.

 

 

daily-mail-graph

 

 

அன்பினியவர்களே !
இனிய வணக்கங்கள்.
சென்றவாரம் இங்கிலாந்து அரசியலில் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தப் போகும் ஒரு சிக்கலின் ஆரம்பத்திற்கான வாரம் என்று குறிப்பிட்டு எழுதியிருந்தேன். நான் மடலை வரைந்த அந்நாளே இங்கிலாந்துப் பிரதமர் திரு.டேவிட் கமரன் ஐரோப்பிய ஒன்றியத்துடனான அங்கத்துவத்தை பிரித்தானிய அரசு நீடிப்பதற்குத் தேவையான அடிப்படை மாற்றங்களைக் கோரி அதற்கான உடன்படிக்கையைப் பெற்றுக்கொள்வதற்கான பேச்சுவார்த்தைகளில் ஏனைய ஐரோப்பியத் தலைவர்களுடன் ஈடுபட்டிருந்தார்.

அவரது கோரிக்கைகளுக்கு ஏனைய 27 ஐரோப்பிய தலைவர்களும் உடன்படுவார்களா? இல்லையா? என்பதுவே கேள்விக்குறியாகவிருந்தது. இவ்வுடன்படிக்கையைப் பெற்றுக்கொள்வது பிரதமர் டேவிட் கமரனுக்கு ஒரு அத்தியாவசிய தேவையாகவிருந்தது. அவரது கோரிக்கைகளை ஏனைய ஐரோப்பிய தலைவர்கள் ஏற்றுக்கொண்டால்தான் பிரித்தானியா ஐரோப்பிய யூனியனில் தொடர்ந்து அங்கம் வகிப்பதற்கான ஆதரவைப் பிரதமர் நல்க முடியும் என்பதுதான் அவருக்கு முன்னாலிருந்த யதார்த்த நிலை.

டேவிட் கமரன் எதிர்பார்த்தபடி போனவாரம் வியாழக்கிழமை அவரின் ஏனைய ஐரோப்பிய தலைவர்களுடனான பேச்சுவார்த்தைகள் அவருக்கேற்றபடி அமையவில்லை. இரவோடிரவாக தொடர்ந்த பேச்சுவார்த்தை காலை 4.30 வரை நீடித்தும் அனைவரிடமும் இணக்கம் காணப்படவில்லை. ஆயினும் முடிவு டேவிட் கமரனுக்குச் சாதகமாக அமையும் எனும் ஓர் பொதுக்கருத்து நிலவியது. அதற்கான காரணம் இங்கிலாந்து ஐரோப்பிய ஒன்றியத்தை விட்டு விலகுவதை ஏனைய ஐரோப்பிய நாடுகளும் விரும்பவில்லை என்பதுவே.

பேச்சுக்கள் மீண்டும் காலை 10 மணியளவில் தொடங்கி மாலைவரை நீடித்தது. வெள்ளிக்கிழமை மாலை டேவிட் கமரனது கோரிக்கைகள் ஏனைய 27 ஐரோப்பிய ஒன்றிய அங்கத்துவ நாடுகளினதும் தலைவர்களினால் அங்கீகரிக்கப்பட்டுவிட்டது எனும் அறிவித்தல் கிடைத்தது. நடைமுறைக்கு மாறாக அமைச்சரவைக் கூட்டம் சனிக்கிழமை கூட்டப்பட்டு இங்கிலாந்துப் பிரதமர் டேவிட் கமரன் தனது கோரிக்கைகள் ஏற்கப்பட்டு விட்டன என்பதை அறிவித்தார்.

அதனை அடுத்து பிரதமரின் உத்தியோக வாசஸ்தலத்தில் நிருபர்களைச் சந்தித்த பிரதமர் தனது கோரிக்கைகளை பிரித்தானிய ஒன்றியத்தின் ஏனைய அங்கத்துவ நாடுகளின் தலைவர்கள் ஏற்றுக் கொண்டதால் தனது அமைச்சரவை பிரித்தானியா ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து விலகக் கூடாது என்று சிபாரிசு செய்வதாகவும், விலகுவதா, இல்லையா? என்பதற்கான மக்களின் சர்வஜன வாக்கெடுப்பு வருகிற ஜூன் மாதம் 23ம் திகதி நடைபெறும் என்றும் அறிவித்தார்.

அதேநேரம் தனது அரசாங்கம், தனது கட்சி அமைச்சர்கள், பாராளுமன்ற அங்கத்தினர்கள் தமது கொள்கையான ஐரோப்பிய ஒன்றியத்தில் நிலைத்திருப்பது என்பதைத்தான் ஆதரிக்க வேண்டும் என்று தான் வலியுறுத்தப் போவதில்லை என்றும் ஒவ்வொருவருக்கும் தாம் என்ன எண்ணுகிறார்களோ அதன் பிரகாரம் வாக்களிக்கும் சுதந்திரம் நல்குகிறோம் என்றும் அறிவித்தார். அரசாங்கத்தின் 29 அமைச்சர்களில் 6 பேர் பிரதமரின் கருத்துக்கு எதிரான கருத்துக்கு அதாவது ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து பிரித்தானியா விலக வேண்டும் எனும் கோரிக்கைக்காக பிரச்சாரம் செய்யப் போவதாக அறிவித்துள்ளார்கள்.

மதின்மேற்பூனை போல இருந்த லண்டன் மேயர் திரு பொரிஸ் ஜான்சன் (கன்சர்வேடிவ் கட்சியைச் சேர்ந்தவர்) எந்தப் பக்கம் பாயப் போகிறார் என்பதுவே அனைத்து ஊடகவியாளார்களுக்கும் கேள்விக்குறியாக இருந்தது. அவரை நோக்கி வீசப்பட்ட வினாக்களிலிருந்து அதுவரை சாதுரியமாகத் தப்பி வந்த அவர் தானும் ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரித்தானிய வெளியேற வேண்டும் என்று வாதிடும் சாரருக்கு ஆதரவாகப் பிரசாரம் செய்யப் போவதாக அறிவித்து விட்டார்.

இவரது இந்த முடிவு தனது சொந்த நலனை முன்வைத்தே எடுக்கப்பட்டிருக்கிறது என்று ஒரு சில ஊடகங்கள் குறிப்பிடுகின்றன. அதாவது இந்தப் பாராளுமன்றத்தின் முடிவோடு தானும் தலைவர் பதவியிலிருந்து விலகப்போவதாக டேவிட் கமரன் ஏற்கனவே அறிவித்து விட்ட நிலையில் கட்சித் தலைமைத்துவத்தைக் கைப்பற்றும் ஒரு நீண்டகாலத் திட்டத்தின் அடிப்படையிலேயே பொரிஸ் ஜான்சன் இயங்குகிறார் என்பது அவர்களின் கருத்து. இதற்குக் காலம் தான் பதில் கூற வேண்டும்.

அரசியல் அரங்கமே வரும் நான்கு மாதங்களும் ஒரு இடியப்பச் சிக்கல் போலத் தென்படுகிறது. ஏன் என்கிறீர்களா ? அரசாங்கத்துக்குள் இந்த ஐரோப்பிய அங்கத்துவத்தினால் பாரிய பிளவு, அதே சமயம் எதிர்க்கட்சியான லேபர் கட்சியின் பெரும்பான்மையான பாராளுமன்ற அங்கத்தினர்கள் பிரதமரோடு இணைந்து பிரசாரம் செய்யும் ஒரு நிலை. இத்தகைய ஒரு சூழலில் பிரதமருக்கு சாதாரண நாளுக்கு நாள் நடைபெறும் அரசாங்க விடயங்களுடன், ஐரோப்பிய ஒன்றிய அங்கத்துவ கொள்கையில் எதிர்த்துப் பிரசாரம் செய்யும் தன்னுடைய அமைச்சர்களுடன் சேர்ந்து இயக்க வேண்டிய தர்மசங்கடமான நிலை.

எத்தகைய வடிவிலான பிரச்சாரமாக இருந்தாலும் அது நாகரீகமாக, கெளரவமாகத் தனிப்பட்ட தாக்குதல்கள் தவிர்ந்ததாக இருக்க வேண்டும் என்று அரசாங்கச் சார்பில் கருதப்படுகிறது. வெறும் வாயையே மெல்லுவதில் வல்லுநர்களான ஊடகவியலாளர்கள் அவல் கிடைத்தால் சும்மா விட்டு விடுவார்களா என்ன ?

ஆரம்பிச்சுட்டாங்கய்யா ! பிரதமரின் கருத்துக்களைக் கேட்டு விட்டு, அவரை ஐரோப்பிய ஒன்றிய வாக்கெடுப்பில் எதிர்த்துப் பிரசாரம் செய்யும் அமைச்சர்களிடம் “என்ன பிரதமர் அப்படிச் சொல்லுகிறார் ? நீங்கள் இப்படிச் சொல்லுகிறீர்கள். அப்படியானால் பிரதமர் எம்மை ஏமாற்றுகிறாரா என்ன ” என்பது போன்ற கேள்விகளைக் கேட்டு குளத்தினுள் கல்லை விட்டெறிந்து வலயங்களைத் தோற்றுவித்து அதில் மீன்பிடிக்க எண்ணுகிறார்கள்.

அடிப்படைக் கொள்கைகளில் முற்றிலும் நேர்மாறான கொள்கை கொண்ட அரசியல்வாதிகள் இந்த ஒரு அம்சத்தில் மட்டும் இணைந்து ஒரே மேடையில் பிரச்சாரம் செய்யும் வினோதங்கள் நிகழ்கின்றன. மற்றுமொரு சிக்கலையும் எதிர்நோக்க வேண்டியுள்ளது. நடந்து முடிந்த ஸ்காட்லாந்து சர்வஜன வாக்கெடுப்பைப் பற்றிப் பலர் அறிந்திருக்கக்கூடும். ஸ்காட்லாந்து நாட்டில் நடைபெற்ற சர்வஜன வாக்கெடுப்பில் குறைந்த வித்தியாசத்தினால் ஸ்காட்லாந்து ஐக்கிய இராச்சியத்தில் இணைந்திருக்க வேண்டும் எனத் தீர்மானித்தது.

வரப்போகும் ஐரோப்பிய ஒன்றியத்தில் இருப்பதா? இல்லையா? எனும் சர்வஜன வாக்கெடுப்பில் பெரும்பான்மை வாக்குகள் விலக வேண்டுமெனத் தீர்மானிக்கிறது என்று வைத்துக்கொள்வோம். அதேநேரம் இதற்காக ஸ்காட்லாந்து நாட்டில் விழுந்த வாக்குகள் பெரும்பான்மையாக ஐரோப்பிய ஒன்றியத்தில் நிலைத்திருக்க வேண்டும் என்று விழுந்திருந்தது என்று வைத்துக் கொள்ளுங்கள். ஸ்காட்லாந்தின் மாநில அரசாங்கம் விட்டு விடுமா என்ன? நமது மக்கள் ஐரோப்பிய ஒன்றியத்தில் நிலைத்திருக்க விரும்புகிறார்கள் ஆனால் முழுவதுமான ஐக்கிய இராச்சிய வாக்கெடுப்பு வெளியேறத் தீர்மானித்தால் எப்படி அது ஜனநாயகமாகும் ? இதனால் ஸ்காட்லாந்து தனித்து போவதுதான் முறை என்று மற்றொரு தமது தனிநாட்டுக்கான சர்வஜன வாக்கெடுப்பை நடத்துவார்கள் அதில் அவர்கள் வெல்வதற்கான சாத்தியக் கூறுகளும் உண்டு.

அப்படி ஒரு நிலைமை ஏற்பட்டால் அதன் விளைவுகள் என்ன ? என்பதனையும் அரசியல்வாதிகள் சிந்திக்க வேண்டிய நிலையிலுள்ளார்கள். அரசியல்வாதிகள் மட்டுமல்ல இத்தகைய ஒரு அதிமுக்கிய தீர்மானத்தை ஜனநாயக அடிப்படையில் மக்களின் கையில் அரசாங்கம் கொடுத்திருக்கிறது. உணர்ச்சிகளின் அடிப்படையில் வாக்களிக்காமல் அறிவுப்பூர்வமாகச் சிந்தித்து, நிலைமைகளைச் சீர்தூக்கிப் பார்த்து வாக்களிக்க வேண்டியது ஒவ்வொருவருடைய கடமையுமாகிறது.

பொறுப்பான செயற்பாடுதான் ஜனநாயக கோட்பாட்டின் அடிப்படை.

மீண்டும் அடுத்த மடலில்
சக்தி சக்திதாசன்

http://www.thamilpoonga.com
http://www.facebook.com/sakthi.sakthithasan

படம் உதவி: http://www.dailymail.co.uk/news/article-2803377/Support-staying-European-Union-surges-23-year-high-thanks-rise-Ukip.html

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *