Category: வல்லமையாளர் விருது பெற்றோரின் பட்டியல்

வல்லமையாளர் விருது

  • இந்த வார வல்லமையாளர் – 310

    இந்த வார வல்லமையாளர் – 310

    ராம்பிரகாஷ்  சாமிநாதன்

    அன்பிற்கும் உண்டோ அடைக்கும் தாழ் என்றார் வள்ளுவர் !

    அன்பு ஒரு மிகப்பெரிய சக்தி, நிகரற்ற பேராற்றல். அதை நாம் இந்தக் “கொரோனா“ கிருமியின் கோரப் பிடியில் கண்கூடாகக் கண்டு வருகின்றோம்.

    எண்ணற்ற மனிதர்கள், தன்னார்வ அமைப்புகள், சேவை மையங்கள், ஆலய அலுவலர்கள்  எனப் பல தரப்பு மக்களும் எந்தவித எதிர்பார்ப்பும் இல்லாமல் தங்களால் இயன்ற உதவிகளை உணவாகவோ, பணமாகவோ, பொருட்களாகவோ, உடல் உழைப்பு மூலமாகவோ செய்து வருகின்றனர். அதிலும் தூய்மைப் பணியாளர்கள், காவல் துறையினர், மருத்துவம் மற்றும் அதைச் சார்ந்த பணியாளர்களும் செய்து வரும் நிகரற்ற சேவைகளை விவரிக்கவும் வாழ்த்தவும் வார்த்தைகள் போதா!

    இவர்களின் அர்ப்பணிப்பான தொண்டிற்கும் அன்பே ஆதாரம், சக உயிரின் பால் உள்ள பிரியம். இந்த அன்பின் நெடும்பயணத்தில் இந்த வாரம் நடைபெற்ற இரு நிகழ்வுகள், நம்மைப் பெரிதும் ஈர்த்தன.

    1. ஒரு சாமானியனின் சமரசமற்ற பயணம்

    பாசம் விலைமதிப்பற்றது. அதை ஆணித்தரமாக நிரூபிக்கும் விதமாக இந்த வாரத்தில் இரு வேறு நெகிழ வைக்கும் சம்பவங்கள் நடந்துள்ளன.

    திரு. அறிவழகன் வயது 65. கும்பகோணத்திற்கு  அருகே உள்ள ஒரு சிற்றூரில் வசித்து வருகிறார். விவசாயம் சார்ந்த தொழில் புரியும் சாமானியர், பரம ஏழை!

    அவரது மனைவி மஞ்சுளா, வயது 60. வாய்ப் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு, புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் சிகிச்சை மேற்கொண்டு வந்தார். இரண்டு முறை ஹீமோதெரபி சிகிச்சை முடித்துவிட்டு மூன்றாவது சிகிச்சை பெற, 2020 மார்ச் 30ஆம் தேதி மருத்துவர்கள் வரச்சொல்லி இருந்தனர்.

    ஆனால் “கோவிட்-19” கிருமித் தொற்று காரணமாக, நாடு தழுவிய ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுவிட்டது. அரசுப் பேருந்துகள், தனியார் பேருந்துகள், வேன், கார் என எதுவும் கிடைக்கப் பெறமால் தவித்த அறிவழகன், ஓர் அதிரடி முடிவை எடுத்தார்.

    அவரது பழைய மிதிவண்டியிலேயே தனது மனைவியைக் கும்பகோணத்தில் இருந்து புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்வதென்று முடிவெடுத்தார். இடைப்பட்ட தூரம்  ஏறக்குறைய 130 கிலோமீட்டர்கள். நெஞ்சுரம் மிக்க அறிவழகன், தம் மனைவியுடன் பயணத்தைத் தொடங்கினார். வரும் வழியில் குறிஞ்சிப்பாடி காவல் துறையினர் இவர்கள் இருவரையும் நிறுத்தி விசாரித்து அசந்துவிட்டனர் அத்தோடு அவர்களுக்கு உணவு வழங்கி வாழ்த்தி அனுப்பி வைத்தனர்.

    அதன் பின்னர்  எங்கேயும் ஓய்வு எடுக்காமல் சிதம்பரம், சீர்காழி, கடலூர் வழியாக ஜிப்மர் சென்று அடைந்தனர்.

    ஆனால்  அங்கோ, அனைத்துப் புற நோயாளிகள் சிகிச்சைகளும் தள்ளி வைக்கப்பட்டிருந்தன. இச்சமயத்தில் இவர்கள் நிலையையும் வந்த விதத்தையும் கண்டு இரங்கிய திரு.எ.எஸ். பாதே மற்றும் அவருடைய குழு மருத்துவர்கள், அவர்களை 3 நாட்கள் அங்கேயே தங்க வைத்து, சிகிச்சை அளித்து, ஜிப்மர் ஆம்புலன்ஸ் வண்டியிலேயே மிதிவண்டியோடு சேர்த்துத் திரும்ப அனுப்பி வைத்தனர்.

    2. தடைகளைத் தவிடுபொடியாக்கிய தாய்ப்பாசம்

    ரஜியா பேகம் (50), தெலுங்கானா மாநிலம், நிஜாமாபாத் பகுதியைச் சேர்ந்த அரசு ஆசிரியை. பன்னிரண்டு ஆண்டுகளுக்கு முன்னர், கணவரை இழந்தவர். அதன் பின்னர் தம் இரு மகன்களே அவரின் உலகம்.

    வாழ்வில் எதிர்நீச்சல் போட்டுக்கொண்டு தன் பிள்ளைகளைக் கரைசேர்க்கப் போராடும் தாய்.

    அவருக்கு இளைய மகன் முகமத் நிஜாமுதீன் (17) பன்னிரண்டாம் வகுப்புத் தேர்வை எழுதிவிட்டு, சித்தூரில் உள்ள அவரது நண்பர் வீட்டிற்குச் செல்ல நேர்ந்தது. அப்போது அறிவிக்கப்பட்ட ஊரடங்கு உத்தரவால் அங்கேயே தங்கும் நிலை உண்டாயிற்று.

    பல வழிகளில் முயன்ற ரஜியா, தாமே சென்று நிஜாமுதீனை அழைத்து வந்துவிடுவது என்று முடிவுசெய்து, போதன் காவல் துறை உதவி ஆய்வாளர் திரு. ஜெயபால் ரெட்டியைச் சந்தித்து அனுமதி கோரினார். அவரும் இவரது துணிச்சலைக் கண்டு மெச்சி, பாதுகாப்பு வழிமுறைகளை எடுத்துக் கூறி அனுமதிக் கடிதத்தை அளித்தார் .

    2020 ஏப்ரல் 6ஆம் தேதி எரிபொருள் நிரப்ப ஒரு கேனினையும், சாப்பிட சில ரொட்டித் துண்டுகளையும்  தனது ஸ்கூட்டியில் எடுத்துக்கொண்டு கிளம்பினார்.

    வழியில் வரும் பெட்ரோல் பங்குகளில் பத்து நிமிடங்கள் ஓய்வு, பிறகு அடர்ந்த காடுகளுக்கு இடையில் அசராத பயணம். இதோ அவரது வார்த்தைகளிலேயே தொடர்கிறது.

    “நான் செல்லும் வழிகளில் காவல் துறையினர் எனக்குப் பெரிதும் உதவினார்கள். அவர்கள் எனக்கு மேலும் நம்பிக்கை தந்தனர்.

    “சகோதரி, இந்த நேரத்தில் அடர்ந்த வனப்பகுதியில் நீங்கள் பயணம் மேற்கொள்ள வேண்டாம், இங்கேயே சிலமணி நேரம் தங்கிவிட்டுச் செல்லுங்கள்“ என்று கூறித் தங்க வைத்து, எனது பாதுகாப்பை உறுதி செய்தனர். கிட்டத்தட்ட 700 கிலோமீட்டர்கள் கடந்து என் மகனைக் கண்டேன், அவனைக் கண்டவுடன் (7ஆம் தேதி மாலை) அத்தனையும் பறந்துவிட்டது.

    மேலும் நேரத்தை விரயம் செய்யாமல் அன்றே கிளம்பி மீண்டும் 700 கிலோமீட்டர்கள் கடந்து 8ஆம் தேதியே இங்கே வந்துவிட்டோம்“

    திட சிந்தையும்  தன்னம்பிக்கையும் அயராத நெஞ்சுறுதியும் மிக்க, அன்பே உருவான அறிவழகன், ரஜியா பேகம் இருவரையும் இந்த வார வல்லமையாளர்களாக அறிவிக்கிறோம். இருவரையும் வாழ்த்திக் கௌரவிப்பதில் வல்லமை பெருமை கொள்கிறது.

    படத்திற்கு நன்றி – விகடன்.காம் 

    Share
  • வல்லமையாளர் விருது 306 – பனை சதிஷ்

    -விவேக்பாரதி

    நம் வாழ்க்கை வேகமயமாக மாறி வருகிறது. மரபு சார்ந்த நம் அடையாளங்கள் ஒவ்வொன்றும் எப்படியோ மறந்து வருகின்றன. இயற்கை விவசாயம் என்ற சொல்லை நாம் போராட மட்டும் தான் காண முடிகிறது. இந்த அவலநிலைக்குப் பின்னால் ஒளிந்திருக்கும் அரசியல் கூறுகள் நம்மைச் சிந்திக்க வைப்பதில்லை. மாறாக தன் வளர்ச்சியை நம் வளர்ச்சியாக மாற்றிச் சொல்லிக்கொண்டு இருக்கின்றன. இவற்றிலிருந்து விடுபட, இளைஞர்கள் அறிவார்ந்த புரட்சிகளைக் கைகளில் எடுக்க வேண்டும். அப்படிப்பட்ட ஒரு இளைஞர்தான் இந்த வாரத்தின் வல்லமையாளர்.

    நீர் வளத்தைக் காக்க இயற்கை நமக்குக் கொடுத்த அற்புதமான வரம், பனை மரம். ஆழ்ந்து விரிந்து தண்ணீர் இருக்கும் இடத்தைத் தேடிச் செல்லும் வேர்களைக் கொண்டவை பனைமரங்கள். ஆறு மற்றும் குளத்தின் கரை ஓரங்களில் பனைமரங்களை நம்மால் பார்க்க முடியும். ஆனால் இன்றைய சூழ்நிலையில் குளங்களெல்லாம் வற்றி நிலங்களாயின. நமக்கும் ஏனோ பனை மரங்களின் மகிமை மட்டும் இதுவரை புரியாமலேயே இருக்கிறது.  பனை மரங்களைப் பாதுகாக்க வேண்டும் என்கிற சிந்தனையோடும் உழைப்போடும் தன் வாழ்க்கையை அவற்றுக்காகவே அர்ப்பணிக்கிறார் பனை சதிஷ் என்னும் இளைஞர். இயற்கை வேளாண் விவசாயி நம்மாழ்வாரின் வழியில் பயணிக்கிறார் இவர்.  சமகால இளைஞர்களைப் போல இவரும் வாழ்க்கைத் தேவைக்காகத் தொழில்நுட்பத் துறையைச் சார்ந்திருந்தாலும், பூமியில் பனை மரங்கள் போன்ற ஒரு வாழ்வாதாரத்தைக் காக்கப் பெரிதும் முயற்சியெடுத்து வருகிறார். பனை மரங்களின் பயன்களைச் செல்லும் இடங்களில் எல்லாம் தீர்க்கமாக வலியுறுத்தி வருகிறார்.

    பனை சதிஷ், தன் குழுவுடன் இணைந்து சென்னையின் சுற்று வட்டாரப் பகுதிகளில் மட்டும் சுமார் 2000 பனை விதைகளை சென்ற பருவத்தில் விதைத்திருக்கிறார். இதனைப் பாராட்டி நேற்று (28.04.2019) கவிப்போம் அறக்கட்டளை இவரைப் பாராட்டிச் சிறப்பித்தது. துரித உணவுக் கலாச்சாரத்தில் மயங்கி, நம் கலாச்சாரத்தைத் தொலைத்து நிற்கும் இளைஞர்கள் மத்தியில் இவர் இயற்கை உணவுப் பழக்கங்களைப் பெரிதும் ஊக்குவித்து வருகிறார்.

    “சிலரிடம் பனை பற்றி எத்தனை விழிப்புணர்வோடு பேசினாலும் அவர்களுக்கு இருக்கும் பணிச்சுமையில் அதனைக் கடந்துவிடுவது இயற்கை, ஆனால் இளஞ்சிறார்கள் அப்படி அல்ல, பனை விதைகளை விளையாடக் கொடுத்து, நடச்சொல்லி, பனை மரங்களைப் பற்றிய பயன்பாட்டை விளக்கினால் அவர்கள் இந்தப் புரட்சியை மிகச் சாதாரண விளையாட்டாக செய்வார்கள்” என்று ஒரு அமைதிப் புரட்சியைச் செய்து நம்மையும் சேர்த்துப் புளகாங்கிதம் அடைய வைக்கிறார் பனை சதீஷ்.

    அவருடைய சாதனையையும், விடா முயற்சியையும் பாராட்டுகிறோம். வல்லமை மின்னிதழ் குழு பனை சதிஷுக்கு “வல்லமையாளர்” என்ற விருதை அளித்து கௌரவம் சேர்க்கிறது. இயற்கை வேளாண்மையுடைய வல்லமையை இன்னும் உலகறிய வைக்கவும் வாழ்த்துகிறோம்.

    பனை சதிஷ் குறித்து அறிய அவருடைய முகநூல் பக்கம் பார்க்கவும். (https://www.facebook.com/sathishkumar.pichandi)

    பனை குறித்த தகவல்கள் தேவைப்பட்டால் அவருடைய தொலைபேசி எண்களுக்குத் தொடர்பு கொள்ளலாம் (99949 69088)

    Share
  • வல்லமையாளர் 305 – கோமதி மாரிமுத்து

    –விவேக்பாரதி

    வாழ்க்கை என்னும் ஓட்டப் பந்தயத்தில் எத்தனையோ தடைகளைத் தாண்டி, சுமைகளை ஏந்தி நாம் ஒவ்வொரு நாளும் ஓடிக் கொண்டிருக்கிறோம். வெற்றி தோல்வி என்பதெல்லாம் இல்லாமல் பாதியிலே நாம் பந்தயத்திலிருந்து விலகியும் விடுகிறோம். ஆனால் உள்ளம் முழுவதிலும் சாதிக்கும் திண்ணத்துடன் ஓடும் வீரர்கள் பந்தயங்கள் எத்தனை வந்தாலும் வென்றுவிடுகிறார்கள். அப்படிப்பட்டவொரு வீரரே வீராங்கனை கோமதி மாரிமுத்து.

    போதிய அளவு மைதான வசதியோ, பேருந்து வசதியோ கூட இல்லாத முடிகண்டம் என்னும் ஊரிலிருந்து தனது ஒவ்வொரு பயிற்சியையும் திருச்சி அண்ணா விளையாட்டு மைதானத்தில் மேற்கொண்டு ஓட்டம் பயில ஓடி ஓடி உழைத்த கோமதி மாரிமுத்து அவர்கள் கத்தார் நாட்டில் நிகழ்ந்த 23 ஆவது ஆசிய தடகளப் போட்டியில் கலந்துகொண்டு இந்திய நாட்டின் சார்பாக தங்கம் வென்றுள்ளார்.

    காலை 3 மணி முதல் தன் நாளின் ஓட்டத்தைத் தொடங்கி, பள்ளி அதன்பின் கல்லூரி என்று தன் இளமைப் பருவம் முழுக்கவும் தன்னை ஓட்டப் பந்தயத்திற்காகவே தயார் செய்த கோமதி அவர்களுக்கு அவரது தந்தை மாரிமுத்து அவர்கள் பின்னால் உந்து சக்தியாக செயல்பட்டு இவரது இன்றைய வெற்றியைக் காண பெரிதும் ஆசைப்பட்டார் என்று சொன்னால் அது மிகையன்று. தன் மகள் வென்றதையே பத்திரிகையாளர்கள் தம் இல்லம் சூழ்ந்ததை வைத்துத் தெரிந்து கொண்ட தாய் “எங்க பாப்பா எப்டியோ ஓடி ஜெயிச்சிட்டா” என்று உருக்கமாக பேட்டியும் அளித்துள்ளார்.

    விளையாட்டுப் பிரிவில் தேர்ச்சிபெற்று, பெங்களூருவில் வருமான வரித்துறையில்  பணியாற்றிக் கொண்டிருக்கும் கோமதி மாரிமுத்து, தனது மாபெரும் துணையான தம் தந்தையை இழந்த இரண்டாவது ஆண்டில் அவரது கனவை நனவாக்கியுள்ளார். 800 மீட்டர் தடகளப் போட்டியில் அதன் தூரத்தை 2 நிமிடம் 70 நொடிகளில் கடந்து சாதனை படைத்துள்ளார்.

    தமிழகத்தில், திருச்சி மாவட்டம் முடிகண்டம் பகுதியிலிருந்து இந்தியா சார்பாக போட்டியிட்டு வென்று இந்தியாவுக்கே பெருமை சேர்த்துத் தந்திருக்கும் வீராங்கனை கோமதி மாரிமுத்து அவர்களுக்கு வல்லமை மின்னிதழ் “வல்லமையாளர்” என்னும் விருதினைப் பெருமையோடு அளித்து இன்னும் பல சாதனைகளை நிகழ்த்த வேண்டுமென்று வாழ்த்துகிறது.

    Share
  • இந்த வார வல்லமையாளர் – 304

    –விவேக்பாரதி

    மாறிக்கொண்டே வரும் இந்த துரித உணவுக் கலாச்சாராத்தில் உணவு என்பதும் நம் வாழ்க்கையில் ஆடம்பரப் பொருள்களுள் ஒன்று என்று ஆகிவிட்டது. பெருநகரங்களில் மட்டுமே கிடைக்கும் என நம்பப் படுகின்ற துரித உணவுகள், சமைக்கும் முறைகளில் நவீனமான கருவிகள் தேவைப்படும் எனப் பலர் கருதும் உணவுகளை ஒரு கிராமத்துச் சூழலில் சமைத்து வருகிறார் ஒருவர். அனைத்து வகையான உணவுகளையும் சிறிதளவு என்றில்லாமல் குறைந்தபட்சன் 50 நபர்கள் சாப்பிடும் அளவு சமைத்து குழந்தைகளுக்கான விடுதிகளிலும், கோவில்களிலும் ஆதரவற்றோருக்கு அளித்து வருகிறார்.

    இதிலே வியக்கத்தக்க செய்தி என்னவென்றால் அவர் சமைக்கும் முறைகளைக் காணொலிகளாக்கி யூடியூபில் வெளியிட்டு இளைஞர்கள் மத்தியில் அவர் டிரெண்டிங் ஆகி வருவது தான். “வில்லேஜ் ஃபுட் ஃபேக்ட் ரி” என்ற பெயரில் இயங்கிக் கொண்டிருக்கும் யூடியூப் பக்கம் சுமார் 2 லட்சம் வாடிக்கையாளர்களையும் 200 க்கும் மேற்பட்ட காணொலிகளையும் கொண்டுள்ளது. அதிகப்படியான தகவல்க, ஆராவாரமான பேச்சுகள் என்பதெல்லாம் இல்லாமல் சிறிய எளிய முறையில் 8 முதல் 10 நிமிடங்களில் முடிந்துவிடும் காணொலிகளின் மூலமாக இத்தனை பெரிய ரசிக வட்டத்தை வில்லேஜ் ஃபுட் ஃபேக்ட ரி பிடித்திருக்கிறது எனலாம்.

    இதில், சமையல் செய்து வழிநடத்திச் செல்பவர் திரு. ஆறுமுகம் அவர்கள். பெரிய அளவில் உணவு சமைத்து ஆதரவற்றோருக்கு வழங்கும் அடிப்படையில் பிரம்மிக்க வைக்கும் நிறைய சாதனைகளை இவர் நிகழ்த்தியிருக்கிறார். அதில் சென்ற வாரம் இவர் செய்த நுங்கு சர்பத்தும் ஒரு உதாரணம்.

    சுமார் 1500 நுங்குகளைக் கொண்டு தன் ஊர் மக்களுக்கு அவர் செய்துன்கொடுத்த, நமக்குச் செய்து காட்டிய நுங்கு சர்பத் பார்க்கும்போதே கண்கள் வழியே மனத்துக்குக் குளிர்ச்சியைப் பரப்பியது. இதோ காணொலிக்கான சுட்டி,

    நம் பாரம்பரிய வகை உணவுகளையும் துரித உணவுகளுடன் சேர்த்துச் சமைத்துக் காட்டி இளைஞர்களைப் பெரிதும் கவர்ந்து, வாட்ஸாப், முகநூல், இன்ஸ்டாகிராம் மூலம் மிகவும் பிரபலமாகி இருக்கும் வில்லேஜ் ஃபுட் பேக்டரியைச் சேர்ந்த திரு. ஆறுமுகம் அவர்களை இந்த வாரத்தின் வல்லமையாளர் என்று அறிவிப்பதில் பெருமையும் மகிழ்ச்சியும் கொள்கிறோம். அவர்களது இந்தப் பணி தொடரவும் வல்லமை மின்னிதழ் குழுமம் வாழ்த்துகளை இங்கே பதிவு செய்கின்றது.

     

    Share
  • இந்த வார வல்லமையாளர் – 303: டிம் பெர்னர்ஸ்-லீ

    இந்த வார வல்லமையாளர் என கணிஞர் டிம் பெர்னர்ஸ்-லீ அவர்களை அறிவிப்பதில் வல்லமை பெருமை கொள்கிறது. இயற்பியல் ஆய்வரான டிம் வையவிரிவலை (World Wide Web) உருவாக்கி உலகெங்கிலும் உள்ள கோடிக்கணக்கான மக்களைத் தொடர்பு கொள்ள சாதனை புரிய கால்கோள் இட்டவர்.  இணையம் அமைப்பது பற்றிய ஆவணங்களை எழுதி 30 ஆண்டுகள் ஆகிவிட்டன. வையவிரிவலையின் 30-ம் பிறந்த நாளில், உலகை இணைக்கும் அற்புத சாதனத்தை வடிவமைக்க அடிக்கல் நாட்டிய விஞ்ஞானி ஸர் திம் பெர்னர்ஸ்-லீயை வாழ்த்துவோம். எல்லாக் கணினிகளிலும் இயங்கும் யூனிகோட் எழுதுருக்கள், எந்தத் தகவலையும் தேட உதவும் துழாவி எந்திரம், இதன் பெரிய கம்பெனி ஆக கூகுள், … இவை எல்லாம் ‘வெப்’ என்னும் வையவிரிவலையின் பங்களிப்பு தானே! ஆவணம் ஒன்றுடன் வேறொன்றை இணைக்கும் ஹைப்பர் -லிங்க் எனப்படும் அமைப்பை உருவாக்கி, அதனை ஒரு உலாவி (browser) வழியாகக் காணும் வழிமுறையை இவர் படைத்துத் தந்தார். ஏற்கனவே வேறு வழிமுறைகளில் இயங்கிக் கொண்டிருந்த இணையத்தினை அதனுடன் வெற்றிகரமாக இணைத்து செயல்படுத்தினார். இதன் மூலம் மக்கள் எளிதாகவும், வெற்றிகரமாகவும் ஒலி, ஒளி, எழுத்து ஆவணங்களை உருவாக்கிப் பகிர்ந்து கொள்ள முடிந்தது. இப்போது பெரும் வழக்கில் பயன்படுத்தப்படும் எச்.டி.டி.பி. மற்றும் எச்.டி.எம்.எல். (HTTP Hypertext Transfer Protocol, HTML Hypertext Markup Language) வழங்குமுறை தொழில் நுட்பங்கள் இதில் உருவானவையே. இப்பொழுது சோசியல் மீடியா என்று ட்விட்டர், பேஸ்புக் அதிக அளவில் இந்திய மொழிகளில் பயன்படுகிறது. இந்தியாவைப் பொறுத்தவரை, சமூக வலைத்தளங்கள் போலிச்செய்திகளை வெளியிடுவதிலும், பாலியல் வன்முறைக்கு கருவி ஆகவும் ஆகிவருகிறது. இதனை முளையிலேயே தடுக்காவிட்டால் பெரிய பிரச்சினை தான்.

    ஓர் இலக்கியக் குறிப்பு: இணையம் பற்றிப் பேசுகிறோம். நீர்ப் பகுதிகளில் வாழும் பறவைகள் நீந்த வசதியாக அதன் விரல்களுக்கு இடையே இணைந்த ஒரு சவ்வுத் தோல் இருக்கும். இதனைக் கொய்யடி என்பது பழைய தமிழ் வழக்கு. ஆங்கிலத்தில் webbed feet. திவாகரம், பிங்கலந்தை போன்ற நிகண்டுகளில் “குருகு வண்டானம் கொய்யடி நாரை” என்ற சூத்திரம் உள்ளது. இந்த நூற்பாவின் பொருள்: வண்டானமும் (Pelican), கொய்யடிநாரையும் (Flamingo) குருகுப் பறவை வகுப்புகள் ஆகும். குருகு = Water birds. ஃப்லெமிங்கோ எனப்படும் பூநாரைகளின் பாதம் கொய்யடி கொண்டவை. எனவே, பழைய தமிழில் கொய்யடி நாரை என்பது இந்த ஃப்லெமிங்கோ பறவைகளைத் தான். இஃதறியாமல், சென்னைப் பேரகராதி வண்டானம் என்பது கொய்யடி நாரை என்று குறிப்பிட்டுள்ளது. அது பிழை. வண்டானம் என்னும் பெலிக்கன் பறவைகள் நாரை இனம் அல்லவே. டிம் தந்த இணையத்தில் கொய்யடி நாரை என்னும் Flamingo பறவையின் துதிக்காலை பார்க்கலாமே. 

    இந்த வார வல்லமையாளராக தங்கள் கவனத்தைக் கவருபவர் எத்துறையைச் சார்ந்தவராக இருப்பினும் நம் வல்லமை ஆசிரியர் குழுவினரின் கவனத்திற்குக் கொண்டுவர விரும்பினால், naa.ganesan@gmail.com, vallamaieditor@gmail.com ஆகிய முகவரிகளில் தங்கள் பரிந்துரைகளை அனுப்பி வைக்கலாம். மேலும் வல்லமையாளர் விருது பற்றிய விவரங்களை இப்பக்கத்தில் காணலாம் – http://www.vallamai.com/?p=19391, இதுவரை வல்லமையாளர்களாகத் தேர்வு பெற்றோர் பட்டியலை இங்கே காணலாம் http://www.vallamai.com/?p=43179 )

    Share
  • இந்த வார வல்லமையாளர் – 302: மருத்துவர் சௌமியா சுவாமிநாதன்

    இந்த வார வல்லமையாளர் என மருத்துவர் சௌமியா சுவாமிநாதனை அறிவிப்பதில் வல்லமை பெருமை கொள்கிறது. 1959-ல் சென்னையில் பிறந்த டாக்டர் சௌமியா, விவசாயத் துறையில் விஞ்ஞானி, பெரிய பொறுப்பில் இருந்த எம். எஸ். சுவாமிநாதனின் மகள் ஆவார். டாக்டர் சௌமியாவின் தாய் மீனாவின் தாய் கிருத்திகா (மதுரம் பூதலிங்கம்) என்னும் பெண் எழுத்தாளர். அகில உலக பெண்கள் தினம் கொண்டாடப்படும் இந்த வாரத்தில், சென்னையைச் சார்ந்த தமிழ்ப் பெண் மரு. சௌமியா உலக சுகாதார நிறுவனத்தின் (World Health Organization) தலைமை விஞ்ஞானையாகப் பொறுப்பேற்றிருப்பது மகிழ்ச்சியான செய்தி. அவரை வாழ்த்தி வரவேற்கிறோம். டாக்டர் சௌமியாவின் ட்விட்டர் பக்கம்: https://twitter.com/doctorsoumya

    பெண்கள் இந்தியாவின் அறிவியற் கழகங்களில் தலைவர்கள் ஆகவேண்டும் என்ற கொள்கை கொண்ட மரு. சௌமியா காசநோய் (TB), எய்ட்ஸ் போன்ற தீவிர நோய்கள் ஆராய்ச்சியில் ஈடுபட்டவர். அமெரிக்காவின் தென் கலிபோர்னியாவின் பல்கலைக்கழக மருத்துவமனையில் பட்டங்கள் பெற்றவர். இப்பொழுது மரபணு போன்றவற்றின் மூலம், மலேரியா, டிபி, எய்ட்ஸ், புற்றுநோய், இதயநோய், … போன்றவற்றின் ஆராய்ச்சிகள் மிகுந்துவருகின்றன. ஸ்டெம்செல்  ஆய்வு, டிஎன்ஏ ஆராய்ச்சிகள் இவற்றுக்கு WHO நிறுவனம் நிதிநல்கையை அதிகப்படுத்தினால் இந்தியா போன்ற வளரும் நாடுகளில் மக்கள் உடல்நலம் பேணுதற்கு உறுதுணையாக விரைவில் உதவிகள் வரும்.

    (இந்த வார வல்லமையாளராக தங்கள் கவனத்தைக் கவருபவர் எத்துறையைச் சார்ந்தவராக இருப்பினும் நம் வல்லமை ஆசிரியர் குழுவினரின் கவனத்திற்குக் கொண்டுவர விரும்பினால், naa.ganesan@gmail.com, vallamaieditor@gmail.com ஆகிய முகவரிகளில் தங்கள் பரிந்துரைகளை அனுப்பி வைக்கலாம். மேலும் வல்லமையாளர் விருது பற்றிய விவரங்களை இப்பக்கத்தில் காணலாம் – http://www.vallamai.com/?p=19391, இதுவரை வல்லமையாளர்களாகத் தேர்வு பெற்றோர் பட்டியலை இங்கே காணலாம் http://www.vallamai.com/?p=43179 )

    Share
  • இந்த வார வல்லமையாளர் (299) – இசைப்புயல் ஏ. ஆர். ரகுமான்

    ஆஸ்கார் விருதுகளைப் பத்து ஆண்டு முன்னர் பெற்ற இசைப்புயல் ஏ. ஆர். ரகுமான் அவர்களை இவ்வார வல்லமையாளர் என அறிவிப்பதில் வல்லமை பெருமை கொள்கிறது. கணினி தொழில்நுட்பத்தை சினிமா இசையில் புகுத்தியவர். மேற்கத்திய சங்கீதத்தின் வளர்ச்சியை உள்வாங்கி இந்திய திரையிசையாக தமிழ், ஹிந்தி மொழிகளில் தருவதில் மிக வல்லவர் ரகுமான். ‘இளையராஜா 75’ என்ற பல்லாயிரம் பேர் கலந்துகொண்ட நிகழ்ச்சியில் தன் குருவை வாழ்த்தி ‘கீபோர்ட்’ வாசித்து புகழ்மிக்க புன்னகைமன்னன் படப்பாடலை மீண்டும் இசைத்தார். மும்பை, ஹாலிவுட் இசையமைப்புகளில் நீண்ட காலம் செலவிட்ட இரகுமான் இப்போது சென்னையில் நேரத்தைச் செலவிடுகிறார். ராஜீவ் மேனன் இயக்கி, மதன்கார்க்கி பாடல்களுடன் “சர்வம் தாள மயம்” என்ற கர்நாடக சங்கீத உலகம் பற்றிய நல்ல திரைப்படம் தமிழில் உருவாகியுள்ளது. வாழ்த்துகள் திரு. இரகுமானுக்கும், அவர் இன்னும் தர இருக்கும் தமிழின் புத்திசைப் பாடல்களுக்கும்!
    சாஸ்திரீய சங்கீதம் என்னும் பிரவாகத்தில் இந்தியாவின் பழைய சமூக அமைப்பில் இரு கோடிகளும் இணைவது 3000+ ஆண்டுகளாய் நிகழ்ந்துவருகிறது. பாணர், நாட்டார் இசைக் கலைகள், நாட்டிய மரபுகள் மேட்டிமை மரபுகளாக உருமாற்றம் ஆகின்றன. இந்த ம்யூஸிக்காலஜி ஸப்ஜெக்ட்டை வெகுஜனங்கள் பார்க்கும் சினிமாக்களிலே விட்டுவிடுகிறார்கள் என்கிறார் ‘டெஸ்லா’ கணேஷ்.

    காத்தவராயன் சினிமாவை எடுத்துக்கொள்ளுங்கள். சிவாஜி – சாவித்திரி படம்.இதில் தும்புரா வாசித்துக்கொண்டு சிவாஜி கிழவனாக நடிப்பார். தும்பி (பஞ்சாபில்) – தும்புரு (> தம்புரா). இது மத்திய கிழக்கு நாடுகளில் எல்லாம் பரவியுள்ளது. தும்பி = சுரைக்குடுவை. ‘வரவு எட்டணா செலவு பத்தணா’… துந்தனா என்னும் பாட்டிலே வரும்.  இதுபோன்ற கருவியை வைத்துக் கொண்டு வில் யாழ் வாசிப்பது கின்னரம். ‘கிழவி சொன்னால் கின்னாரக் காரனுக்கு ஏறாது’ (பழமொழி). காத்தவராயன் கதை என்னும் நாட்டுப்புறக் கதை டெஸ்லா கணேஷ் சொல்லும் செய்தியை உள்ளடக்கியது. ஆரியமாலா – கின்னரம் வாசிக்கும் பாணன் காத்தவராயன்.  கின்னரம் ~ ராவணஹஸ்தம் (Pre-Violin History):
    https://groups.google.com/forum/#!topic/santhavasantham/aMK2Pa10Wvc

    3000+ ஆண்டுக்கு முன்னும் ஜாதி அமைப்பின் இரு கோடிகளும் இசையில் சந்தித்துள்ளன. இதைத்தான் குசீலவர் (Cf. Kuyiluvar in Sangam Tamil) பாடல்களும், கிரவுஞ்ச வதை என்னும் வான்மீகியின் பாலகாண்ட சருக்கமும் காட்டிநிற்கின்றன. சாம கானம் பாடும் போது ‘wish-chant’ என்னும் பாடலுக்கு க்ரௌஞ்ச-ஸாமன் எனப் பெயர். விளரி எனத் தமிழிசை கூறும் தைவத ஸ்வரம் (6th note – high note in sapta svaras, dedicated to Asuras and Brhaspati) அன்றில்/க்ரௌஞ்சம் ஏங்கும் பாடல் ரிக்வேதத்தில் சில பாட்டுகளைப் பாட பாணர், குயிலுவரிடம் இருந்து உள்வாங்கப்பட்டுள்ளது. மிக நீண்ட பயணம் இந்தியாவின் சங்கீதம், அதில் சுடரும் விண்மீன் ரகுமான்.

    செம்பூழிக் காலத்தை ஆராய்கிறேன். பீர் என்ற சிந்து மாகாணத்தில் உருவான சொல் தமிழ் அடிப்படைத் தாது கொண்டது. பிரான், பிராட்டி; தம்பிரான் (சைவ ஆதீனங்கள்), தம்புராட்டி (கேரள தரவாடுகள்) ஓர்மிக்கவும்.  பீர் எனுஜ் சொல் அறபி, ஈரான், வடமொழி போன்ற மொழிகளில் அதன் வேர் காட்டவியலாது. சூபி பீர் அவர்களிடம் பக்தி பூண்டு ரகுமானின் தாயாருடன் இஸ்லாம் மதத்தைத் தழுவியவர் ரகுமான். திலீப் என்பது பெற்றோர் இட்ட பெயர். வட இந்தியாவின் ஹிந்துஸ்தானி சங்கீதமும், அதன் முன்னனிக் கலைஞர்களுடனும் புதிய படைப்புகளைத் தந்து புகழும், பணமும் ஈட்டுகிறார். இவரது பாடல்கள் என்றால்  படமே ஹிட் தான்.

    “He suggested the names: “Abdul Rahman” and “Abdul Rahim” and said that either name would be good for me. I instantly loved the name “Rahman.” It was a Hindu astrologer who gave me my Muslim name.” https://scroll.in/article/699665/Why-I-converted:-The-transformation-of-Dilip-Kumar-into-AR-Rahman

    https://scroll.in/reel/897429/10-things-we-learnt-about-ar-rahman-from-the-authorised-biography-notes-of-a-dream

    https://indianexpress.com/article/lifestyle/books/ar-rahman-biography-notes-of-a-dream-ar-rahman-oscar-5444054/

    (இந்த வார வல்லமையாளராக தங்கள் கவனத்தைக் கவருபவர் எத்துறையைச் சார்ந்தவராக இருப்பினும் நம் வல்லமை ஆசிரியர் குழுவினரின் கவனத்திற்குக் கொண்டுவர விரும்பினால், naa.ganesan@gmail.com, vallamaieditor@gmail.com ஆகிய முகவரிகளில் தங்கள் பரிந்துரைகளை அனுப்பி வைக்கலாம். மேலும் வல்லமையாளர் விருது பற்றிய விவரங்களை இப்பக்கத்தில் காணலாம் – http://www.vallamai.com/?p=19391, இதுவரை வல்லமையாளர்களாகத் தேர்வு பெற்றோர் பட்டியலை இங்கே காணலாம் http://www.vallamai.com/?p=43179 )

    Share
  • இந்த வார வல்லமையாளர் (297) – ப்ராஞ்சல் கச்சோலியா

    -விவேக்பாரதி

    இல்லங்கள் என்பன அன்பின் ஆதாரங்கள். நமக்கு நாமே சேர்த்துக் கொள்ளும் வரங்கள். “எலிவளை ஆனாலும் தனிவலை வேண்டும்” என்று பழமொழி சொல்கிறது அல்லவா! அத்தகைய சிறப்பினை நமது சமூகத்தில் எப்போதும் இடம்பிடித்து இருப்பன வீடுகள் தாம். சின்னச் சின்ன வீடுகளில் தொடங்கி பெரிய பங்களாக்களும், அரண்மனைகளும், அடுக்கடுக்காய் பல மாடிகளைக் கொண்ட அடுக்ககங்களும் சூழ்ந்த நாடு நம் நாடு. இத்தகைய நவீன இல்லங்களை சமூகத்தினர் தற்போது அலங்காரப் படுத்துவதில் காட்டும் அக்கரையும் நேர்த்திகளும் பார்ப்பவர் கண்களையும் சிந்தனையையும் சேர்த்துக் கவர்ந்திழுக்கும் வல்லமை பொருந்தியவை. பல கலவையில் கண்களைச் சுண்டி இழுக்கும் வண்ணங்கள், அழகான வேலைப்பாடுகள், அம்சமான விதான அமைப்புகள். மக்கள் தங்கள் கலைநயத்தைக் குடியிருக்கும் வீடுகளில் காட்டி மகிழ்வதும் மகிழ்விப்பதும் எந்தக் காலத்திலும் மாறாத ஒன்று. நிற்க! என் பணி இங்கே வல்லமையாளரை அறிமுகம் செய்வது, அதனை விடுத்து ஏன் இல்லங்களின் அழகினை விவரித்துக் கொண்டிருக்கிறேன் என்ற எண்ணம் உங்களுக்குள் இந்நேரம் எழுந்திருக்குமாயின் அதற்கான விடையை இங்கே தருகிறேன்.

    இந்த வார வல்லமையாளர் நமது இல்லங்களைப் புதுவிதமாக மேம்படுத்தும் உத்தியைக் கண்டு கொண்டவர். ஆம்! அலங்காரங்கள் பெறுகின்ற வீடுகள் அதற்கடுத்து பெறப்போவது அறிவை. இன்றைய கணினி மயமான வாழ்க்கை மனிதர் சௌகர்யத்தை எப்படியெல்லாம் உயர்த்துகின்றது பாருங்கள்! இன்றைக்கு எல்லாரது வீடுகளையும் மின்சாரம் ஆள்கின்றது. மின்சாரம் இல்லாத / பயன்படுத்தாத வீடுகளைச் சுட்டிக் காடுதல் அரிது. இவ்வளவில், மின்சாரச் சிக்கனம் குறித்தும் சேமிப்பு குறித்தும் மக்களிடை பரவலாக விழிப்புணர்வுகளும் நிகழ்ந்த வண்ணம் உள்ளது. மின்சாரத்தைச் சேமிப்பது மூலம், நம் பங்கிற்குச் செலவைக் குறைக்கும், சமுதாயத்தில் மின்சாரம் எட்டும் தொலைவில் இல்லாத ஊர்களையும் சென்றடையும். இந்தக் கோட்பாட்டை நாம் எளிமையாகச் செய்ய தேவைக்கு மீறி இயங்கும் மின் சாதனங்களை நிறுத்தி வைப்பதொன்றே போதும்.

    கை தட்டினால் இயங்கும் மின் விளக்குகள், ஆள் நடமாட்டத்தை அறிந்து இயங்கும் குளிர்சாதனங்கள் என்று இன்றைய அறிவியல் உலகம் இந்த மின் சேமிப்பை இன்னும் எளிமைப் படுத்தித்தான் இருக்கிறது. அந்த வகையில், சாதனை புரிந்து வல்லமையை நிரூபிக்கிறார் இந்த இளம் விஞ்ஞானி. ஸ்மார்ட் ஃபோன் மயமாகிப் போன நமது வாழ்க்கையில் மின் சாதனங்களையும் ஓர் செல்ஃபோன் செயலி மூலம் இயக்குகின்ற உபகரணங்களைக் கண்டுபிடித்துள்ளார் ஐஐடி டில்லியைச் சேர்ந்த மாணவர் ப்ராஞ்சல் கச்சோலியா. மிகவும் எளிய முறையில் வீட்டின் எந்தவொரு மின் சாதனத்தையோ மாற்றாமல் அப்படியே இருக்கும் மின் கம்பிகளுக்கு ஊடே சாதாரணமாக ஒரு செயற்கருவியைப் பொருத்தலின் மூலம் உலகத்தின் எந்த மூலையில் இருந்தும் நமது வீட்டில் இருக்கும் மின் சாதனங்களை இயக்கும் செயலியை இவர் உருவாக்கியுள்ளார், இதனை ஈடன் ஸ்மார்ட் ஹோம்ஸ் என்ற நிறுவனம் முழுவுதவி செய்து உலகச் சந்தைகளுக்குக் கொண்டு சேர்க்கின்றது.

    அதன் விளம்பரக் காணொலி,

    மாணவராகவும் அறிவியல் மூலம் அன்றாட வாழ்வியலில் மாற்றம் கொணர விரும்பிய விஞ்ஞானியாகவும் பரிமளித்துக் கொண்டிருக்கும் பொறியியல் மாணவர் திரு ப்ராஞ்சல் கச்சோலியா அவர்களை இந்த வாரத்தின் வல்லமையாளர் என்று அறிவிப்பதில் பேருவகை எய்துகிறோம். வல்லமை மின்னிதழ் குழுமம் இன்னும் பல அத்யாவசியமான படைப்புகளை இவர் உலகத்திற்கு வெளிக்கொணர வாழ்த்துகிறோம்.

    சிக்கனம் அதனைச் சிறுவயதில்
    சிறப்புடன் செய்ய! மின்சார
    மக்களெல் லாரும் வாழ்வினிலே
    மதித்திடும் வண்ணம் கண்டெடுப்பைப்
    பக்கமாய்ப் பலமாய்ச் செய்தவரும்
    ப்ராஞ்சல் கச்சோலியா அவர்கள்
    மிக்கவே இன்னும் கண்டெடுக்க
    வல்லமை யாளர் உயர்விருதே!!

    (“வல்லமையாளர்” என்று நீங்கள் பரிந்துரைக்க விரும்பும் நபர்களைப் பற்றி வல்லமை ஆசியர் குழுவிற்குத் தெரியப்படுத்த tamiludanvivekbharathi@gmail.com அல்லது vallamaieditor@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு எழுதி அனுப்பவும்)

    இதுவரை விருது பெற்றிருப்போர் பட்டியலைக் காணக் கீழே சொடுக்கவும்.
    http://www.vallamai.com/?p=43179

    Share
  • இந்த வார வல்லமையாளர் (296) – டி குகேஷ்

    -விவேக்பாரதி

    முன்னரே நிறுவி வைத்திருக்கும் இலக்கினைக் காலம் ஒவ்வொரு திறனாளிகளைக் கொடுத்து உடைத்துப் பார்க்கின்றது. எளிமையாக நமது எண்ணங்களை மற்றொரு எண்ணம் வெல்வது என்பதில் தொடங்கி சர்வதேச அளவில் இந்த இலக்கை முறியடித்து சாதனை படைப்பதும் வெற்றி வாகை தரிப்பதும் ஒரு உலகியல் நியதி. நாம் பேசிக்கொண்டிருக்கும் இந்த வினை விளையாட்டு சம்பந்தமான துறையில் நிறையவே காணப்படுகிறது. ஏற்கனவே சாதனையாளராக ஒரு விளையாட்டு வீரர் தன் திறத்தால் தாம் சேர்ந்த துறையில் பதித்து வைக்கின்ற இலக்குக் கல்லை மற்றொரு சாதனையாளர் தம் திறத்தால் இடம்பெயர்த்து உயர்த்தி வைக்கிறார் என்பதி விளையாட்டுத் துறையில் எளிதில் நமக்குப் புலப்படும் ஓர் ஆரோக்யமான போட்டி.

    இந்த வார வல்லமையாளர் அப்படிப் பட்டவரே! ஆனால் இங்கே சாதனைக்கு உள்ளானது விளையாட்டு வீரர்களின் வயது! ஆம்! மிகவும் சிறு வயதிலேயே இந்தியாவின் கிராண்ட் மாஸ்டராகவும், உலக ளவில் இரண்டாவது இளம் கிராண்ட் மாஸ்டராகவும் சென்னையைச் சேர்ந்த குகேஷ் என்னும் 12 வயது நிரம்பிய மாணவர் சாதனை படைத்துள்ளார். அவரே இந்த வாரத்து வல்லமையாளர்.

    டில்லியில் நடந்த சர்வதேச ஓபன் கிராண்ட் மாஸ்டர் செஸ் போட்டியில் தினேஷ் சர்மா என்னும் வீரரை 9 ஆவது சுற்றில் வீழ்த்தி குகேஷ் இந்தப் பட்டத்தை வென்றிருக்கிறார். இதற்கு முன்னதாக 12 வயது 10 மாதங்கள் 13 நாட்களில் கிராண்ட் மாஸ்டர் பட்டம் வென்ற பிரக்னாநந்தா என்பவர் நிறுத்தி வைத்திருந்த இலக்கைத் தான் குகேஷ் முறியடித்து 12 ஆண்டு 7 மாதங்கள் 13 நாட்களில் இந்தியாவின் மிகக்குறைந்த வயது கிராண்ட் மாஸ்டராக வலம் வருகிறார்.

    அவரது தந்தை மற்றும் தாயின் தளராத ஊக்கத்தாலும், 5 வயதிலிருந்தே அவர் மேற்கொண்டு வரும் செஸ் விளையாட்டின் பயிற்சி மற்றும் ஆர்வத்தினாலும் இந்த வெற்றிப் பதக்கத்தைத் தோளில் சுமந்துள்ளார். மார்ச் மாதம் சர்வதேச செஸ் மாஸ்டர், பாங்காக் ஓபன் போட்டியில் 3 ஆம் இடம், ஆர்பிஸ் போட்டிகளில் 2 ஆம் இடம் ஆகிவற்றை வென்றதன் நீட்சியாகவே இப்போது உலகத்திந் இரண்டாவது இளம் கிராண்ட் மாஸ்டராகப் பரிமளிக்கிறார்.

    இவர்தம் வல்லமையை மெச்சி, இன்னும் பல விருதுகளும் பல திறமைகளும் வாய்க்கப்பெற வல்லமை மின்னிதழ் குழுமம் டி குகேஷ் அவர்களுக்கு வல்லமையாளர் என்ற விருதினைப் பெருமையுடன் வழங்கி மகிழ்கின்றது.

    சதுரங்க ஆட்டத்தில் காய் நகர்த்தும்
    சமர்த்தாலே உலகிலிளம் கிராண்ட் மாஸ்டர்
    மதிப்பதனை வென்றகுகேஷ் வல்ல மைக்காய்
    வல்லமையாளர் விருதை வழங்குகின்றோம்!

    Share
  • இந்த வார வல்லமையாளர் (295) – குக்கூ குழந்தைகள் வெளி

    உலகறியாத சிறுவர்க்குள் தான்
    உலகம் சுழல்கிறது!
    ஒவ்வொரு கணமும் ஒவ்வொரு ரகமாய்
    உயர்ந்து விரிகிறது!
    கலகம் அறியாப் பிள்ளை நெஞ்சுள்
    கடவுள் வாழ்கிறது!
    கணமொரு வடிவாய்ப் புதிதினும் புதிதாய்க்
    கனவாய் வளர்கிறது!

    என்ற வரிகள் இதயத்தில் உதயமாகின்றன. இவை இந்நேரம் தோன்றக் காரணம் என்ன? அதற்குக் காரணமானவர்களே இந்த வாரத்தின் வல்லமையாளர். விதையை யார் தான் எழும்ப வைக்கிறார்? இந்தக் கேள்விக்கு என்னவாயிருக்கும் பதில்? அப்படி சிறிய விதைகளாய் விளங்கும் குழந்தைகளைச் சமுதாய நெறியின்படி நல்ல நடத்தையுடன் எழுப்பும் ஒரு சுவாரஸ்யமான முயற்சியைச் சுலபமாக மேற்கொண்டுக் கொண்டிருக்கின்ற குக்கூ குழந்தைகள் வெளி அமைப்பினர் அனைவருமே இந்த வாரத்து வல்லமையாளர்கள் தாம்.

    குக்கூ குழந்தைகள் வெளி என்ற அமைப்பினர், http://cuckoochildren.in என்றொரு இணையதளம் மூலம் தங்களது அன்றாட சேவைகளை உலகின் பார்வைக்குப் பதிவுசெய்கிறார்கள். அந்த வலைதளத்தில் அவர்களைப் பற்றி குறிப்பிடும் பகுதியில்,

    Forgive my grimy hands. I’m just back from the forest.
    There is a stream there.
    On its banks is a rock that’s shaped like an elephant.
    I was sitting on it with my friends all morning.
    We played a lot of games.
    We made animals and birds with clay from the bank and released them into the forest.
    We drew clouds on the ground using red earth, we also drew the sun.
    We wrote a story in which the moon goes for a swim one night.
    We collected seeds which we will plant near our homes.
    We read a book under a tree when it drizzled.
    And when the sun came out we danced for a song we wrote.
    We then…oh my, we’re late.
    The seeds! We have to plant them right away.
    See those grey clouds floating towards us?
    They hold precious water drops that will give life to the seeds.
    We have to go now, there’s so much to do.
    Good-bye.
    No, wait, do you want to come along?

    என்று ஒரு அற்புதமான கவிதை வழியாகத் தாங்கள் வித்யாசமானவர்கள் என்று நிறுவுகிறார்கள்.

    நண்பர்கள் சிலர் கூடி 2004 ஆம் ஆண்டு தொடங்கப் பட்ட தன்னார்வ அமைப்பான குக்கூ குழந்தைகள் வெளி, ஊர்ப்புற சிறார்களுக்கு உள்ளே அமிழ்ந்திருக்கும் ஆற்றல் மிகுந்த படைப்பாளிகளையும், திறமைசாலிகளையும் எளிதில், இயற்கையோடு இயைந்த வாழ்வியல் முறையில் கண்டெடுத்துப் பயிற்சி அளிக்கும் செயலினைத் தொண்டாகச் செய்து வருகிறது.

    Our objective — letting children discover themselves. We mostly work with little ones from rural Tamilnadu, who lack the opportunities that children from urban environments take for granted. We introduce them to Nature, good books and movies. We tell them stories, play with them, draw and paint with them, introduce them to the colorful world of photography, traditional folk arts, music, martial arts, theatre, and also engage them in exciting discussions on socio-political and environmental issues. We wish to bring out the inherent spark in every child. And more than anything, we want to learn from them, for their world is the most beautiful place on earth.

    என்ற அவர்களின் தன்விவரக் குறிப்பு நமக்கு அவர்களின் தன்மையை விளக்கும்.

    கலாச்சாரம் மற்றும் பண்பாடு ரீதியாகக் கலைநயத்துடன் புது நயத்தையும் சேர்த்துக் குழந்தைகளை உயர்த்தும் இந்த குக்கூ குழந்தைகள் வெளி அமைப்பினரின் சாதனைகளை அவர்களது முகநூல் பக்கத்தில் காணும்பொழுது மெய் சிலிர்த்துப் போகிறது. சிறிய, எளிய, இதுவரை யாரும் யோசிக்காத விஷயங்களை மிகவும் சாதாரணமாக நிகழ்த்தியிருக்கிறார்கள். அந்தப் புதிய பார்வை மிகவும் பாராட்டத் தக்கது. அதிலும் குறிப்பாக இந்த வாரம், பனை ஓலைகளை வைத்து விளையாடப் பழக்கியிருக்கும் இவர்களது முயற்சி மிகவும் புதுமையாகவும், கேட்கவே சுவாரஸ்யமானதாகவும் விளங்குகிறது என்பது படிக்கும் உங்களுக்கும் பிடிபடும்.

    அவர்களின் பதிவு,

    பனை ஓலையில் பொம்மைகள் செய்யக் கற்றுத்தரும் குழந்தைகள் பயில்முகாம் இனிதே நிகழ்ந்துமுடிந்தது குக்கூ காட்டுப்பள்ளியில்… பனை ஓலையின் வாசத்தை நாசியில் ஏற்றி ஓலையை மடித்தும் நுழைத்தும் சின்னச்சின்ன பறவைகளாகவும், விலங்குருவங்களாகவும் செய்து இவ்வெட்டவெளியில் மிதக்கவிட்டனர். மகிழ்வின் நிறைவின் புகைப்படங்கள் உங்கள் விழிகளுக்காக… ஒளிப்படங்கள் : அய்யலு குமரன், திருமலைவாசு

    பொதுவாகவே ஒரு விருதளிப்பது என்பது இன்னும் திறம்படச் செயலாக்க அவர்களை ஊக்கும் சக்தியாக விளங்கும். அந்த வகையில் குக்கூ குழந்தைகள் வெளி அமைப்பினருக்கு வல்லமையாளர் என்ற விருதினை வழங்கி மனப்பூர்வமாக வாழ்த்துகிறோம். நாளைய சமுதாய பூக்களை சரியாக வகையில் பயிரிட்டு அடை காக்கின்ற குக்கூ குழந்தைகள் வெளி போல பல அமைப்புகள் இன்றைய சூழலில் நாளைக்காகவும் உழைக்க வேண்டும் என்ற வேண்டுதல்களை இறைவன் முன்னம் வைத்து வாழ்த்துகிறோம்.

    (“வல்லமையாளர்” என்று நீங்கள் பரிந்துரைக்க விரும்பும் நபர்களைப் பற்றி வல்லமை ஆசியர் குழுவிற்குத் தெரியப்படுத்த tamiludanvivekbharathi@gmail.com அல்லது vallamaieditor@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு எழுதி அனுப்பவும்)

    இதுவரை விருது பெற்றிருப்போர் பட்டியலைக் காணக் கீழே சொடுக்கவும்.
    http://www.vallamai.com/?p=43179

    Share
  • இந்த வார வல்லமையாளர் (294) – டாக்டர் சுதா சேஷய்யன்

    தமிழில் ஆர்வம் கொண்டு செயல்பட்டு அதன் மேம்பாட்டிற்கும் தமிழ் மக்களின் நல்வாழ்விற்கும் உழைக்கும் அறிஞர்களும் சான்றோர்களும் அதிக பட்சம் பிற துறைகளிலும் சாதித்தவர்களாக இருக்கிறார்கள். இந்த வார வல்லமையாளரும் அப்படிப் பட்டவர் தான்.

    “பிறநாட்டு நல்லறிஞர் சாத்திரங்கள் தமிழ்மொழியில் பெயர்த்தல் வேண்டும்
    இறவாத புகழுடைய புதுநூல்கள் தமிழ்மொழியில் இயற்றல் வேண்டும்”

    என்பார் பாரதியார். அப்படி உலகமெங்கும் வியக்கும் பல மருத்துவக் கருத்துகளைத் தமிழ்மொழியிலும் தந்து, தமிழின் மீதும் ஆன்மீகச் சிந்தனைகளின் மீதும் தீராத காதலாகி, அவை இரண்டையும் தமதிரு கண்களாகவே போற்றி வாழ்ந்து வரும் டாக்டர் சுதா சேஷய்யன் அவர்கள்.

    பல இதழ்களில் ஆன்மீக சிந்தனைகளை எழுதியும், பல மேடைகளில் தமிழர் தெய்வீகத்தை உரையாற்றியும் வருகின்ற டாக்டர் சுதா சேஷய்யன் அவர்கள், தமிழ்நாடு எம்.ஜி.ஆர் மருத்துவ பல்கலைக்கழகத்தின் பதிவாளராகப் பணியாற்றி, மருத்துவம் தொடர்பான நிறைய கட்டுரைகளைத் தமிழில் எழுதிச் சிறப்பு சேர்த்தவர். அந்தப் பல்கலைக்கழகத்தின் துணை வேந்தராக இருந்த திருமதி கீதா லட்சுமி ஓய்வு பெற்றதும், அதற்கடுத்த இரண்டே நாட்களில், மரியாதைக்குரிய தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் அவர்களால் அதே மருத்துவப் பல்கலைக்கழகத்தின் துணை வேந்தராக நியமிக்கப்பட்டுள்ளார். மருத்துவர், மருத்துவப் பேராசிரியர், ஆன்மீகவாதி, சொற்பொழிவாளர், எழுத்தாளர் என்ற பல பரிமாணங்களைத் தாங்கி நிற்கும் சுதா சேஷய்யன் அவர்கள் இப்போது துணைவேந்தர் என்ற உயரிய பதவியையும் தமது திறத்தால் அடைந்து உயர்ந்துள்ளார் என்பது பாராட்டுதலுக்கு உரியது.

    மனித உடற்கூறியல் துறையில் மிகவும் பிரபலமான Gray’s anatomy என்கின்ற புத்தகத்தை எழுதி வெளியிட்ட சர்வதேச ஆசிரியர் குழுவில் ஓர் அங்கமாக இவர் செயல்பட்டார். ஆன்மீகம் மற்றும் மருத்துவம் தொடர்பாக இவர் பல கட்டுரைகள் எழுதியிருக்கிறார். பல அரசு விழாக்களின் சிறப்பு தொகுப்பாளராகவும் டாக்டர் சுதா சேஷய்யன் இருந்து வருகிறார் என்பதெல்லாம் இவரது இடையறாத உழைப்பையும் திறனையும் மேற்கோளிட்டுக் காட்டும் பதிவுகள்.

    சென்ற வாரம், தமிழ்நாடு எம்.ஜி.ஆர் மருத்துவப் பல்கலைக்கழகத்தின் புதிய துணை வேந்தராக நியமிக்கப்பட்டுள்ள டாக்டர் சுதா சேஷய்யன் அவர்களுக்கு வல்லமை மின்னிதழ் சார்பில் “வல்லமையாளர்” விருது அளிப்பதில் கௌரவம் கொள்கிறோம்.

    டாக்டர் சுதா சேஷய்யன் அவர்களைப் பற்றி தி இந்து வெளியிட்டிருக்கும் செய்தி
    https://www.thehindu.com/features/friday-review/art/balancing-act/article2011893.ece

    மருத்துவத்தோடு மலர்த்தமிழ்த் தொண்டும்
    பொருத்தமாய்ச் செய்து புவியில் – அருத்தமுடைச்
    சொல்லொடு வாழும் சுதா சேஷயனுக்கு
    வல்லமை யாளர் விருது!

    (“வல்லமையாளர்” என்று நீங்கள் பரிந்துரைக்க விரும்பும் நபர்களைப் பற்றி வல்லமை ஆசியர் குழுவிற்குத் தெரியப்படுத்த tamiludanvivekbharathi@gmail.com அல்லது vallamaieditor@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு எழுதி அனுப்பவும்)

    இதுவரை விருது பெற்றிருப்போர் பட்டியலைக் காணக் கீழே சொடுக்கவும்.
    http://www.vallamai.com/?p=43179

    Share
  • இந்த வார வல்லமையாளர் (293): சுகந்தி நாடார்

    முத்தமிழ் என்றழைக்கப்பட்ட நம் தமிழ்மொழி இப்போது நாற்றமிழாக அதனுடன் “கணினித் தமிழை”யும் இணைத்துக் கொண்டுள்ளது. இணையம் ஒரு பக்கம் உயர்ந்து கொண்டே இருக்கையில் அதன் மூலமாகவும் தமிழை இளைய, இணைய தலைமுறைக்குக் கொண்டு சேர்ப்பது என்பது தமிழ் ஆர்வலர்களது இடையறாத பணியாக இன்றளவில் இயங்கி வருகிறது. இப்படிப் பட்ட பொழுதில் முழுக்க முழுக்க இணைய தலைமுறைக்கு இனிய தமிழைக் கொண்டு சேர்க்க வேண்டியே உழைக்கும் ஒரு குழு இருக்கின்றது என்பதும், அவர்கள் எண்ணற்ற எளிமையான பாடத் திட்டங்கள் மூலமான பிற தேசங்களில் வாழும் தமிழர்களுக்கும் மிகவும் பயனாகுமாறு செய்து வருகின்ற பணி, மிகவும் பாராட்டத் தக்கது.

    “தமிழ் அநிதம்” என்ற ஒரு தன்னார்வ நிறுவனம் நமது தமிழ் மொழியின் சிறப்பை இணையத்தில் மூலம் பல மூலைகளுக்கு எடுத்துக் கொடுத்துக் கொண்டிருக்கின்ற உன்னதமான பணியை ஆற்றி வருகின்றது. தமிழ் அநிதம் தனது நோக்கமாகச் சொல்லுவது யாதெனின்,

    “அநிதம் என்றால் தமிழில் “அளவற்ற தன்மை” (Unlimited) என்று பொருள். தமிழ் அநிதம் இரு மொழிகளைப் பிரதானமாகக் கொண்டு தமிழ் வழிக் கற்றலைப் பரப்பும் நோக்கில் செயல்படுகின்ற ஒரு மின்னூடகம் ஆகும்.”

    இத்தகைய உயர்ந்த நோக்கத்துடன் இதனை இயக்கி வருபவர் திருமதி சுகந்தி நாடார். அமெரிக்காவில் வாழும் தமிழ் ஆர்வலரான திருமதி சுகந்தி நாடார், இணையத்தின் வழியே தமிழ் கற்றலை ஊக்குவிக்கும் பெரும்பணியை ஆற்றி வருகின்றார். அவருடன் இந்த முயற்சிக்குச் செயலராக விளங்குகின்ற பேராசிரியர் திரு காமாட்சி அழகர்சாமி அவர்களும் இணைந்து பல இடங்களுக்குச் சென்று இணைய வழி தமிழ் கற்றல் தொடங்கி பல அவசியமான தலைப்புகளில் உரையாற்றி வருகின்றனர். இதன் அடிப்படையில் சென்ற வாரம் தமிழகத்தின் பல கல்லூரிகளுக்குச் சென்று பயிலரங்கங்கள் நிகழ்த்தி, மாணவர்களுக்கு அறிவுசால் ஊக்கம் வழங்கியும் இருக்கிறார்.

    தமிழ்ப் பல்கலைக்கழகத்தின் மொழியியல் துறை, தேனித் தமிழ்ச்சங்கம், கேரளப் பல்கலைக்கழகத்தின் தமிழ்த் துறை, போன்ற தமிழ் வளர்க்கும் பல துறைகளுடன் தமிழ் அநிதம் இணைந்து, தேனி, தஞ்சை, திருச்சி, சிவகாசி, திருவனந்தபுரம் போன்ற பற்பல ஊர்களில் இருக்கும் கல்லூரிகளுக்குச் சென்று E Media in Tamil learning and teaching (தமிழ் இணைய ஊடகம், கற்றலும் கற்பித்தலும்), இணையத் தமிழின் பயன்பாடுகள், கணினித் தொழில்நுட்பம் மூலமே தமிழின் சிறப்பு அடுத்த தலைமுறைக்கு, தமிழ் மொழியும், அதன் இணையப் பயன்பாடும், மின்வழித் தமிழ் – கற்றல் கற்பித்தல் போன்ற தலைப்புகளில் பயிலரங்குகள் நடத்தியிருக்கிறார்கள்.

    “எதிர்ப்புகளும் பொறாமையும் நிறைந்த இவ்வுலகில், ஏறத்தாழ 220 பங்கேற்பாளர்கள் (தமிழ்ப் பல்கலைக்கழக மொழியியல், கல்வியியல் மாணவ மாணவிகள், பல்வேறு துறையைச் சார்ந்த பல பேராசிரியர்கள் மற்றும் கோயம்புத்தூர், திருச்சி போன்ற ஊர்களிலிருந்து வந்து கலந்துகொண்ட மாணவ மாணவிகள் உட்பட) மிகமிக ஆர்வமுடன் கலந்துகொண்டு வெகு சிறப்பாக நேற்று நடைபெற்ற ‘கல்வியியலில் மொழித் தொழில்நுட்பத்தின் பங்கு என்ற தலைப்பில் இனிதே நடந்தேறிய ஒரு நாள் பன்னாட்டுப் பயிலரங்கின் நிகழ்வுகளில் ஒருசில. தமிழ் அநிதத்தோடு தமிழ்ப் பல்கலைக்கழக மொழியியல் துறையும் கல்வியியல் மற்றும் மேலாண்மைத் துறையும் இணைந்து நடத்தியது மட்டற்ற மகிழ்ச்சி.”

    என்று பேராசிரியர் காமாட்சி அவர்கள் பதிவிட்டிருந்த முகநூல் பதிவில் இருந்தே அவர்கள் இந்தத் தொண்டை எத்தனை மனநிறைவுடனும் தடைகளைத் தாண்டியும் வெற்றிகரமாக நிகழ்த்தி வருகின்றார் என்பது புலனாகிறது. ஓய்வுபெற்ற பேராசிரியர் அ. காமாட்சி அவர்களுடன் இணைந்து இந்த அருந்தொண்டை ஆற்றி வருகின்ற தமிழ் அநிதத்தின் நிறுவனர் திருமதி சுகந்தி நாடார் அவர்களை இந்த வார வல்லமையாளராகத் தேர்ந்தெடுத்து மனமாரப் பாராட்டுவதில் வல்லமைக் குழுமம் மகிழ்ச்சி அடைகிறது.

    இணையேதும் இல்லாத இனிதான தமிழை
    இருக்கின்ற மக்களெலாம் பயன்படுத்தும் வண்ணம்
    இணையத்தில் வளர்க்கின்ற தமிழநிதம் செய்யும்
    ஈடில்லாப் பணிக்கிங்கே யாம்சொல்லும் வாழ்த்தே!

    (“வல்லமையாளர்” என்று நீங்கள் பரிந்துரைக்க விரும்பும் நபர்களைப் பற்றி வல்லமை ஆசியர் குழுவிற்குத் தெரியப்படுத்த tamiludanvivekbharathi@gmail.com அல்லது vallamaieditor@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு எழுதி அனுப்பவும்)

    இதுவரை விருது பெற்றிருப்போர் பட்டியலைக் காணக் கீழே சொடுக்கவும்.
    http://www.vallamai.com/?p=43179

    Share
  • இந்த வார வல்லமையாளர் (292)

     

    அன்ன சத்திரம் ஆயிரம் நாட்டல்
    ஆலயம் பதினாயிரம் வைத்தல்
    இன்னருங்கனிச் சோலைகள் செய்தல்
    இனிய நீர்த்தண் சுனைகள் இயற்றல்
    பின்னருள்ள தருமங்கள் யாவும்
    பெயர் விளங்க ஒளிர நிறுத்தல்
    அன்ன யாவினும் புண்ணியம் கோடி
    ஆங்கோர் ஏழைக்கு எழுத்தறிவித்தல்!

    இது பாரதியார் வாசகம். இதனைக் கணந்தோறும் நிரூபனம் ஆக்கிக் கொண்டிருக்கும் ஓர் உன்னதமான அமைப்பு, சேவாலயா. தேச பக்தி நிறைந்த மாணவர்களை மகாத்மா காந்தியடிகள், சுவாமி விவேகானந்தர் மற்றும் மகாகவி பாரதியாரின் வாக்குப் படியும் வாழ்க்கைப் படியும் வளர்க்கும் அரும்பணியில் 30 ஆண்டுகளுக்கும் மேலாகச் சிறப்பாக நடத்தி வருகிறது சேவாலயா. கசுவாய் என்னும் கிராமத்தில் அமைந்திருக்கும் தங்களது கல்வி வளாகத்துக்கு உள்ளேயே இயற்கை விவசாயம், முதியோர் இல்லம், உயர்நிலைக் கல்வி வரையில் பள்ளிகள், தொழில்வழிக் கல்விச்சாலைகள், மருத்துவமனை, கோசாலை என்று எண்ணற்ற கட்டமைப்புகளை ஏற்படுத்தி, அங்கிருக்கும் மக்களுக்குச் சிறந்த வாழ்வாதாரத்தை அமைத்து வருகிறார், இந்த நிறுவனத்தை முன்னின்று மிகுந்த அக்கறையோடும் திட்டங்களோடும் உழைத்து முன்னேற்றும் திரு முரளிதரன்அவர்கள்.

    பல தன்னார்வத் தொண்டு நிறுவனங்களின் உதவிகளைக் கொண்டும், பல உற்சாகம் மிக்க ஆர்வலர் பட்டாளத்தைக் கொண்டும் சத்தமே போடாமல் ஒரு சத்தான உலகைப் படைக்கக் கடமையெனக் கருதி வித்திட்டுக் கொண்டிருக்கும் சேவாலயா நிறுவனம், சென்றவாரம் உண்மையிலேயே உலகம் பசுமையுடன் வாழ நாம் அனைவரும் செய்ய வேண்டிய கடமையான மரக்கன்று நடுதலைச் செய்திருக்கிறது. வருடத்திற்கு 30,000 மரக்கன்றுகள் நடுவதாகத் திட்டமிட்டுக் கிட்டத்தட்ட 1200 மரக்கன்றுகளுக்கு மேல் நட்டிருக்கின்றனர் அவரது பள்ளி மாணவர்கள். சென்ற வாரம் ஞாயிற்றுக் கிழமை இவர்களால் 300 மரக்கன்றுகள் நடப்பட்டன. அதன் புகைப்படங்கள் கீழே,

     

     

     

    நமது நாடு, நமது மண் என்ற மரியாதை உணர்வைப் பிஞ்சிலேயே கருவாக்கும் திரு சேவாலயா முரளி அவர்களின் அரும்பணி மிகவும் பாராட்டுதலுக்கு உரியது. அவர்களது இந்த உன்னதமான இயற்கை வழிபாட்டை மெச்சி வல்லமை மின்னிதழின் சார்பாக வல்லமையாளர் என்னும் விருதினை அறிவித்து மகிழ்ச்சியடைகிறோம்.

    Share
  • இந்த வார வல்லமையாளர் (291)

    எந்தவொரு பெரும் முயற்சிக்கும் அதனைச் செயலாக்க இயன்ற தோள்கள் தேவை. தோள்கள் இல்லாமல் மூளை என்ன சிந்தித்தாலும் அது வெறும் கனவுகளாகவும் சிந்தனைகளாகவும் மட்டுமே நின்றுவிடும். ஒரு குழு, ஓர் அமைப்பு, ஒரு கழகம் என்று எடுத்துக் கொண்டால் அந்தக் குழுக்களின் தீர்மானங்களை வெற்றிகரமாக நிறைவேற்றச் செயல் வீரர்கள் தேவை. அப்படிப்பட்ட ஒரு செயல் வீரர் திரு. விட்டல் நாராயணன் அவர்கள்.

    சென்ற வாரம் வானவில் பண்பாட்டு மையம் நடத்திய “வீர சுதந்திரம்” என்ற தலைப்பிலான மாபெரும் கலைக்காட்சி தமிழக அரசின் உதவியுடன் சென்னை கலைவாணர் அரங்கத்தில் மிகவும் விமரிசையாகக் கொண்டாடப் பட்டது. பெரும் பொருட்செலவும், பல உழைப்பாளிகளின் மனம் மற்றும் உடல் உழைப்பால் உருவாகி, வானளாவிய பாரத மாதா திருவுருவத்துடன் நின்றது கலைக்காட்சி. உள்ளே பல நவீனத்துவம் வாய்ந்த கண்காட்சி அமைப்புகள். ஒளிவில்லைக் காட்சிகள்(Slide show), ஒளி ஒலிக் காட்சிகள் (Sound and Light), பரிமாணக் காட்சிகள் (Infographics) மேலும் பாரதி திரையரங்கம் என்று கண் காணும் காட்சிகள் மூலம் கற்றுத்தரும் நிறைய சிறப்பம்சங்கள் அங்கே திகழ்ந்திருந்தன. பல திசைகளில் இருந்து தமிழக மக்கள் அந்தக் கண்காட்சியைப் பார்த்து ரசித்தனர்.

    அத்தகு கலைக்காட்சியின் மொத்த செயல் திட்ட வடிவத்தையும் பல ஆலோசனைக் குழுக்களோடு நடைமுறைப் படுத்தியவர் விட்டல் நாராயணன் அவர்கள். தேச பக்தராகவும், பாரதி பக்தராகவும், தமிழ்க் காதலராகவும் விளங்கி வரும் திரு விட்டல் நாராயணன், வடிவமைப்பு இயக்குநர் (Creative director), திரைக்கதாசிரியர் (Script writer) என்று பன்முகத் திறமைகளைக் கொண்டவர். வானவில் பண்பாட்டு மையம் நடத்தி வருகின்ற பாரதி திருவிழாவின் செயல் வீரர்.

    மக்கள் கண்டு களிக்க அற்புதமாக கலைக்காட்சி ஒன்றை ஏற்பாடு செய்திருந்த வானவில் பண்பாட்டு மையத்தையும், தமிழ்நாடு அரசின் தமிழ் வளர்ச்சித் துறையையும் வல்லமை சார்பில் மனமாரப் பாராட்டுகிறேன்! “வீர சுதந்திரம்” கலைக்காட்சியோடு சேர்த்து முழு பாரதி திருவிழா ஏற்பாடுகளையும் செவ்வணே செய்த திரு விட்டல் நாராயணன் அவர்களுக்கு வல்லமை மின்னிதழ் சார்பில், வல்லமையாளர் விருது வழங்குவதில் பேருவகை கொள்கிறோம்.

    தோளென நின்று தொலைந்த கதையனைத்தும்
    நாளிரண்டில் ஊர்காண நல்லதொரு காட்சிதனை
    வெல்லும் விதம்வைத்த விட்டல்நா ராயணன்
    வல்லமை யாளரென வாழ்த்து!

    (“வல்லமையாளர்” என்று நீங்கள் பரிந்துரைக்க விரும்பும் நபர்களைப் பற்றி வல்லமை ஆசியர் குழுவிற்குத் தெரியப்படுத்த tamiludanvivekbharathi@gmail.com அல்லது vallamaieditor@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு எழுதி அனுப்பவும்)

    இதுவரை விருது பெற்றிருப்போர் பட்டியலைக் காணக் கீழே சொடுக்கவும்.
    http://www.vallamai.com/?cat=955

    Share
  • இந்த வார வல்லமையாளர் (290)

    -விவேக்பாரதி

     


    வேறெந்த மொழிகளுக்கும் இல்லாத பல தனிச்சிறப்புகளை நம் தமிழ்மொழி தன்னகத்தே கொண்டுள்ளது. அதில் ஒன்று நமது யாப்பிலக்கண அமைப்பு. மக்கள் பேசும் இயல்பான ஒலிகளுக்கும் சொற்களுக்கும் உள்ளே இருக்கின்ற இசையைக் கணக்கிட்டு அறிந்து, செவிகளுக்கு இனிமை பயக்கும் செய்யுள்கள் இயற்றி, அதற்கொரு இலக்கணம் வகுத்தது நம் தமிழ் முன்னோர்களின் சிறப்பான திறன். பொதுவாகவே உயிரைக் கிள்ளி ஒருகணத்தில் நம்மை ஆட்டுவிக்கின்ற சக்தி கவிதைகளுக்கு உண்டு. இன்றைய காலத்தில், வசன நடைக்கவிதைகளும், உரை வீச்சுக் கவிதைகளும், ஐக்கூ, சென்றியு போன்ற வேற்று மொழிக் கவிதை வடிவங்களும் பரிமளித்துக் கொண்டிருக்கும் நவீன காலமாக விளங்குகிறது நமது தமிழ்க் கவிதைச் சமூகம். இத்தகைய நிலையில், அதுவும் நவீனக் கவிதைகள் மிகுந்து குவிந்து கிடக்கும் நம் இணைய வெளிகளில் நமது பாரம்பரிய மரபு செய்யுள் எழுதும் கலையை, அதற்கான இலக்கணங்களைச் சொல்லிக் கொடுத்து, பல தரமான கவிஞர்களை உருவாக்கிக் கொண்டிருக்கிறது ஒரு முகநூல் குழு.

    மூன்று ஆண்டுகளுக்கு முன்னர் யாப்பியல் சிந்தனைகளை மீட்டுருவாக்கவும், யாப்புக் கவிதைகளின் இலக்கணங்களைப் பாடமாக்கிப் பயிற்றுவிக்கவும் உருவாக்கப்பட்ட ஒரு முகநூல் குழு, “பைந்தமிழ்ச் சோலை.” நல்ல கவிதை ஊற்றத்துடன் முகநூலில் எழுதிக் கொண்டிருந்த கவிஞர்களை, யாப்புக் கவிதைகள் கற்றுக் கொண்டு எழுத ஆர்வமாக இருந்த பாவலர்களை இனம் கண்டுகொண்டு அவர்களுக்கு இலக்கணங்களை எளிமையான பாடங்களாக வழங்கி, வருட நிறைவில் “பாவலர் பட்டத் தேர்வு” வைத்து, வெவ்வேறு நிலைகளில் தேர்ச்சிபெறும் கவிஞர்களுக்கு அவர்களது மதிப்பெண்களுக்கு ஏற்றாற்போல் பட்டம் வழங்கியும் வருகிறது இந்த முகநூல் குழு. இவை அனைத்துமே ஒரு தனிமனிதர் எடுத்துவரும் பெரும் முயற்சி என்றால் அது வியப்பு. ஆம், இந்த முகநூல் குழுவை நிறுவி, ஐயங்களைக் களைந்து, பாடங்கள் மூலம் பயிற்றுவித்து, பட்டம் வழங்கித் தாயுள்ளத்தைப் போல இன்பம் கொள்ளும் அந்தத் தனிமனிதர் மரபுமாமணி பாவலர் மா வரதராசன் அவர்கள்.

    தமிழ் இலக்கியங்களில் மீதும் மரபு இலக்கணத்தின் மீதும் தீராத பற்றுடையவராய்த் தனது இளம் வயதுமுதல் கவிதை புனையும் ஆற்றலுடன் விளங்கிய மா வரதராசன் அவர்கள், முகநூலில் நுழைந்த ஒரு வருடத்தில் அதிலே நிரம்பிக் கிடக்கின்ற வசன நடை உரைவீச்சுக் கவிதைகளைக் கண்டு, மரபு இலக்கணத்திற்கும் மறுவாழ்வு கொடுக்கும் எண்ணம் கொண்டதாகச் சொல்லியே அந்தக் குழுவைத் தொடங்கியிருக்கிறார். பலரது ஏச்சுக்கும், வசைகளுக்கும் ஆளாகிப் பின்னாளில் இன்றும் முகநூலில் நிறைய யாப்பியல் அறிந்த பாவலர்களை உருவாக்கி வருகிறார் என்பதிலிருந்தே தமிழன்னை மீது அவர் கொண்டிருக்கும் தீராத பக்தியும் காதலும் புலனாகிறது.

    பைந்தமிழ்ச் சோலை என்ற மின்தளம் உருவாக்கி, பல பாவினங்களுக்கு எளிமையான வடிவில் இலக்கணங்களை அளித்து, இணையத்தில் எங்கு தேடினாலும் கிடைக்கும்படி அரிய பணி செய்திருக்கும் மா வரதராசன் அவர்கள், இந்தத் திங்கள் முதல் முழுக்க முழுக்க தமிழ் மாதங்களின் பெயரிலேயே வெளியாகும் “தமிழ்க்குதிர்” என்கிற மாதாந்திர மின்னிதழையும் உருவாக்கித் தமிழ்த் தொண்டாற்றி வருகிறார் என்பது பாராட்டத் தக்கது.

    அவருக்கே இந்த வார “வல்லமையாளர்” விருதை வல்லமை மின்னிதழ் சார்பில் அறிவிப்பதில் அவரது மாணவனாகப் பயின்ற யான் மிகவும் பேருவகை எய்துகிறேன்.

    சொல்லரும் தமிழர் யாப்பின்
       சுவையினை இணையம் கற்க,  
    வெல்லமாந் தமிழத் தாயும்
       வெல்லவே உழைப்பை நல்கிப்
    பல்கலைக் குழுவைச் செய்த
       பாவலர் வரத ராசன்
    வல்லமை யாளர் என்று  
       வழங்குதல் பொருத்த மாமே!

    (“வல்லமையாளர்” என்று நீங்கள் பரிந்துரைக்க விரும்பும் நபர்களைப் பற்றி வல்லமை ஆசியர் குழுவிற்குத் தெரியப்படுத்த tamiludanvivekbharathi@gmail.com அல்லது vallamaieditor@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு எழுதி அனுப்பவும்)

    இதுவரை விருது பெற்றிருப்போர் பட்டியலைக் காணக் கீழே சொடுக்கவும்.
    http://www.vallamai.com/?cat=955

     

     

    Share