வல்லமையாளர் 305 – கோமதி மாரிமுத்து
–விவேக்பாரதி
வாழ்க்கை என்னும் ஓட்டப் பந்தயத்தில் எத்தனையோ தடைகளைத் தாண்டி, சுமைகளை ஏந்தி நாம் ஒவ்வொரு நாளும் ஓடிக் கொண்டிருக்கிறோம். வெற்றி தோல்வி என்பதெல்லாம் இல்லாமல் பாதியிலே நாம் பந்தயத்திலிருந்து விலகியும் விடுகிறோம். ஆனால் உள்ளம் முழுவதிலும் சாதிக்கும் திண்ணத்துடன் ஓடும் வீரர்கள் பந்தயங்கள் எத்தனை வந்தாலும் வென்றுவிடுகிறார்கள். அப்படிப்பட்டவொரு வீரரே வீராங்கனை கோமதி மாரிமுத்து.
போதிய அளவு மைதான வசதியோ, பேருந்து வசதியோ கூட இல்லாத முடிகண்டம் என்னும் ஊரிலிருந்து தனது ஒவ்வொரு பயிற்சியையும் திருச்சி அண்ணா விளையாட்டு மைதானத்தில் மேற்கொண்டு ஓட்டம் பயில ஓடி ஓடி உழைத்த கோமதி மாரிமுத்து அவர்கள் கத்தார் நாட்டில் நிகழ்ந்த 23 ஆவது ஆசிய தடகளப் போட்டியில் கலந்துகொண்டு இந்திய நாட்டின் சார்பாக தங்கம் வென்றுள்ளார்.
காலை 3 மணி முதல் தன் நாளின் ஓட்டத்தைத் தொடங்கி, பள்ளி அதன்பின் கல்லூரி என்று தன் இளமைப் பருவம் முழுக்கவும் தன்னை ஓட்டப் பந்தயத்திற்காகவே தயார் செய்த கோமதி அவர்களுக்கு அவரது தந்தை மாரிமுத்து அவர்கள் பின்னால் உந்து சக்தியாக செயல்பட்டு இவரது இன்றைய வெற்றியைக் காண பெரிதும் ஆசைப்பட்டார் என்று சொன்னால் அது மிகையன்று. தன் மகள் வென்றதையே பத்திரிகையாளர்கள் தம் இல்லம் சூழ்ந்ததை வைத்துத் தெரிந்து கொண்ட தாய் “எங்க பாப்பா எப்டியோ ஓடி ஜெயிச்சிட்டா” என்று உருக்கமாக பேட்டியும் அளித்துள்ளார்.
விளையாட்டுப் பிரிவில் தேர்ச்சிபெற்று, பெங்களூருவில் வருமான வரித்துறையில் பணியாற்றிக் கொண்டிருக்கும் கோமதி மாரிமுத்து, தனது மாபெரும் துணையான தம் தந்தையை இழந்த இரண்டாவது ஆண்டில் அவரது கனவை நனவாக்கியுள்ளார். 800 மீட்டர் தடகளப் போட்டியில் அதன் தூரத்தை 2 நிமிடம் 70 நொடிகளில் கடந்து சாதனை படைத்துள்ளார்.
தமிழகத்தில், திருச்சி மாவட்டம் முடிகண்டம் பகுதியிலிருந்து இந்தியா சார்பாக போட்டியிட்டு வென்று இந்தியாவுக்கே பெருமை சேர்த்துத் தந்திருக்கும் வீராங்கனை கோமதி மாரிமுத்து அவர்களுக்கு வல்லமை மின்னிதழ் “வல்லமையாளர்” என்னும் விருதினைப் பெருமையோடு அளித்து இன்னும் பல சாதனைகளை நிகழ்த்த வேண்டுமென்று வாழ்த்துகிறது.