நெல்லைத் தமிழில் திருக்குறள் விளக்கம் – 34
-நாங்குநேரி வாசஸ்ரீ
நெல்லைத் தமிழில் திருக்குறள் விளக்கம்-34
34. நிலையாமை
குறள் 331:
நில்லாத வற்றை நிலையின என்றுணரும்
புல்லறி வாண்மை கடை
நெலச்சி நிக்காத ஒண்ண நெலயானதா நெனைக்க மரமண்ட புத்தி கேடுகெட்டது.
குறள் 332:
கூத்தாட் டவைக் குழாத் தற்றே பெருஞ்செல்வம்
போக்கும் அருவிளிந் தற்று
கொஞ்சம் கொஞ்சமா சொத்து சேருதது கூத்து பாக்க கூட்டம் சேருதது போல, கூத்து முடிஞ்சதும் கூட்டம் கலைஞ்சு போகுதது கணக்கா சொத்தும் பைய பைய கொறஞ்சு ஒண்ணுமில்லாம அழிஞ்சு போவும்.
குறள் 333:
அற்கா இயல்பிற்றுச் செல்வம் அதுபெற்றால்
அற்குப ஆங்கே செயல்
சொத்து எப்பமும் ஒருத்தர்கிட்ட நெலச்சி நிக்காது அதஉணந்து இருக்குதப்போ நெலயான நல்ல காரியத்த செஞ்சுபோடணும்.
குறள் 334:
நாளென ஒன்றுபோற் காட்டி உயிரீரும்
வாள துணர்வார்ப் பெறின்
வாழ்க்கைய நல்லா புரிஞ்சிக்கிட்டவங்க நாள் னு சொல்லுதது நம்ம ஆயுச (ஆயுள) அறுத்து கொறச்சிட்டே வருத அருவான்னு (வாள்) அறிஞ்சுகிடுவாங்க.
குறள் 335:
நாச்செற்று விக்குள்மேல் வாராமுன் நல்வினை
மேற்சென்று செய்யாப் படும்
நாக்க அடக்கி நாம சாவததுக்கு முன்ன நல்ல அறச்செயல்கள வெரசலா (விரைவாக) செய்யணும்.
குறள் 336:
நெருந லுளனொருவன் இன்றில்லை என்னும்
பெருமை யுடைத்திவ் வுலகு
நேத்தைக்கு இருந்தவன் இன்னிக்கு இல்ல ன்னு சொல்லுத நிலையில்லாத தன்ம ங்குத பெருமய கொண்டது இந்த ஒலகம்.
குறள் 337:
ஒருபொழுதும் வாழ்வ தறியார் கருதுப
கோடியு மல்ல பல
புத்திகெட்டவன் உசிரோட இருக்குத இந்த ஒடம்பு நெலையில்லாதது னு புரிஞ்சுகிட மாட்டான். வீணா அவன் மனசுக்குள்ளார கோடிக்கும் மேல ரோசன (எண்ணங்கள்) ஓடிக்கிட்டே இருக்கும்.
குறள் 338:
குடம்பை தனித்தொழியப் புள்பறந் தற்றே
உடம்போ டுயிரிடை நட்பு
ஒடம்புக்கும் உசிருக்கும் உள்ள ஒறவு, முட்டைலேந்து வெளிய வந்த பறவக்குஞ்சு அத உட்டுப்போட்டு வேற எடத்துக்கு பறந்து போகுதது போல.
குறள் 339:
உறங்குவது போலுஞ் சாக்கா டுறங்கி
விழிப்பது போலும் பிறப்பு
சாவு ங்கது ஒறங்குதது போல. பொறப்பு ங்கது ஒறங்கி கண் முழிப்பு தட்டுதது போல.
குறள் 340:
புக்கி லமைந்தின்று கொல்லோ உடம்பினுள்
துச்சி லிருந்த உயிர்க்கு
ஒடம்புல ஒரு மூலைல குடியிருக்க உசிருக்கு இப்பம் வரைக்கும் நெலச்சு தங்குததுக்கு எடம் கெடைக்கலியோ?
(அடுத்தாப்லயும் வரும்….