எந்தவொரு பெரும் முயற்சிக்கும் அதனைச் செயலாக்க இயன்ற தோள்கள் தேவை. தோள்கள் இல்லாமல் மூளை என்ன சிந்தித்தாலும் அது வெறும் கனவுகளாகவும் சிந்தனைகளாகவும் மட்டுமே நின்றுவிடும். ஒரு குழு, ஓர் அமைப்பு, ஒரு கழகம் என்று எடுத்துக் கொண்டால் அந்தக் குழுக்களின் தீர்மானங்களை வெற்றிகரமாக நிறைவேற்றச் செயல் வீரர்கள் தேவை. அப்படிப்பட்ட ஒரு செயல் வீரர் திரு. விட்டல் நாராயணன் அவர்கள்.

சென்ற வாரம் வானவில் பண்பாட்டு மையம் நடத்திய “வீர சுதந்திரம்” என்ற தலைப்பிலான மாபெரும் கலைக்காட்சி தமிழக அரசின் உதவியுடன் சென்னை கலைவாணர் அரங்கத்தில் மிகவும் விமரிசையாகக் கொண்டாடப் பட்டது. பெரும் பொருட்செலவும், பல உழைப்பாளிகளின் மனம் மற்றும் உடல் உழைப்பால் உருவாகி, வானளாவிய பாரத மாதா திருவுருவத்துடன் நின்றது கலைக்காட்சி. உள்ளே பல நவீனத்துவம் வாய்ந்த கண்காட்சி அமைப்புகள். ஒளிவில்லைக் காட்சிகள்(Slide show), ஒளி ஒலிக் காட்சிகள் (Sound and Light), பரிமாணக் காட்சிகள் (Infographics) மேலும் பாரதி திரையரங்கம் என்று கண் காணும் காட்சிகள் மூலம் கற்றுத்தரும் நிறைய சிறப்பம்சங்கள் அங்கே திகழ்ந்திருந்தன. பல திசைகளில் இருந்து தமிழக மக்கள் அந்தக் கண்காட்சியைப் பார்த்து ரசித்தனர்.

அத்தகு கலைக்காட்சியின் மொத்த செயல் திட்ட வடிவத்தையும் பல ஆலோசனைக் குழுக்களோடு நடைமுறைப் படுத்தியவர் விட்டல் நாராயணன் அவர்கள். தேச பக்தராகவும், பாரதி பக்தராகவும், தமிழ்க் காதலராகவும் விளங்கி வரும் திரு விட்டல் நாராயணன், வடிவமைப்பு இயக்குநர் (Creative director), திரைக்கதாசிரியர் (Script writer) என்று பன்முகத் திறமைகளைக் கொண்டவர். வானவில் பண்பாட்டு மையம் நடத்தி வருகின்ற பாரதி திருவிழாவின் செயல் வீரர்.

மக்கள் கண்டு களிக்க அற்புதமாக கலைக்காட்சி ஒன்றை ஏற்பாடு செய்திருந்த வானவில் பண்பாட்டு மையத்தையும், தமிழ்நாடு அரசின் தமிழ் வளர்ச்சித் துறையையும் வல்லமை சார்பில் மனமாரப் பாராட்டுகிறேன்! “வீர சுதந்திரம்” கலைக்காட்சியோடு சேர்த்து முழு பாரதி திருவிழா ஏற்பாடுகளையும் செவ்வணே செய்த திரு விட்டல் நாராயணன் அவர்களுக்கு வல்லமை மின்னிதழ் சார்பில், வல்லமையாளர் விருது வழங்குவதில் பேருவகை கொள்கிறோம்.

தோளென நின்று தொலைந்த கதையனைத்தும்
நாளிரண்டில் ஊர்காண நல்லதொரு காட்சிதனை
வெல்லும் விதம்வைத்த விட்டல்நா ராயணன்
வல்லமை யாளரென வாழ்த்து!

(“வல்லமையாளர்” என்று நீங்கள் பரிந்துரைக்க விரும்பும் நபர்களைப் பற்றி வல்லமை ஆசியர் குழுவிற்குத் தெரியப்படுத்த tamiludanvivekbharathi@gmail.com அல்லது vallamaieditor@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு எழுதி அனுப்பவும்)

இதுவரை விருது பெற்றிருப்போர் பட்டியலைக் காணக் கீழே சொடுக்கவும்.
https://www.vallamai.com/?cat=955

பதிவாசிரியரைப் பற்றி

1 thought on “இந்த வார வல்லமையாளர் (291)

  1. வல்லமையாளர் விட்டல் நாராயணன் அவர்களுக்கு வாழ்த்துகள். வீர சுதந்திரம் என்ற கலைக் காட்சியை நேரில் கண்டு மகிழ்ந்தேன். சீரிய முயற்சி, சிறந்த ஆக்கம். இத்தகைய ஒரு முயற்சியை இணையத்திலோ, ஏதேனும் கூடத்திலோ நிரந்தரப்படுத்தினால், இன்னும் பயன் மிகும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *